Sunday, April 09, 2023

முதலமைச்சாய் நானிருந்தால் - 2

 இய்யதாகு முதலமைச்சன்


அரசொன்றில் முதலமைச்சாய் ஆவதெனில் எளிதாமோ?

அரசியலில் மற்றவரை அழிக்காமல் ஆளாமோ?

ஆளுவதும் பொருதுவதும் அடுத்தடுத்த நடைமுறைகள்;

நீளனைத்தும் செய்த பின் தான் நெடுங்கட்சித் தலையானேன்;


பார்ப்பதற்கோ நான்எளிமை; பலக்குறுத்தல்(1) அடிப்புறத்தில்;

வேர்த்துவிட மற்றவரை விரட்டுவதில் மேலாளன்;


தடந்தகை(2)யும், வழிதகை(3)யும், தரவுகளின் செயல்தகை(4)யும்

உடன்தெரிந்து உழுவதிலோ உள்ளார்ந்த கோடலன்(5)நான்;

எனை மிகுத்து எவனுமிங்கே அதிகாரி, அமைச்சனிலை;

எனைத் தவிர்த்து எவனுமிங்கே எழுந்திருக்க முடியாது;

எனை விடுத்து ஒருபயலும் இடைநுழைந்து செயலாற்றான்;

எனை விடுத்த எல்லோரும் தொண்டரெனப் படுவார்கள்;

இந்தநிலை கொண்டபின்தான் இந்நிலத்தில் முதலமைச்சாய்

எந்தவொரு தலைவனுமே இருந்திடுவான் இயல்பாக!


நானென்ன விதிவிலக்கா? நான்சிங்கச் சொப்பனம் தான்;

நான் விழிக்க மறந்தாலோ, நட்டாற்றில் கவிழுதற்கு,

இரண்டே நுணுத்தம்(6) தான்; இப்புலத்தில் இது நியதி;


அரண்டுவதும் அரட்டுவதும் அன்றாடம் செய்பணிகள்;

அரசியலில் இதுவெல்லாம் அமைவதுதான் விளையாட்டு;

அரசியலில் அதனால்தான் அத்தனைபேர் நுழைகின்றார்;


முதலமைச்சாய் ஆன முதல், மும்முனைப்பாய் வரும் தேர்தல்

விதப்புகளில் வென்றிடவே வினைகின்ற பரபரப்பை,

நானுலகில் இருக்கு மட்டும் நாளும் தான் மறப்பேனோ?

நானிலத்தில் நல்லரசை நாடுவதும் அப்புறம்தான்;


இத்தனையும் சொன்னதனால் இவன் “தன்னைப் பேணி”யென

வித்தகமாய் நினைப்பீர்கள்; இருந்தாலும் வெள்ளந்தி

நிலையாளன் நானல்லன்; நீளுலகில் தற்பேணல்

குலையாது கொள்ளுவதும் குமுகத்தில் தவறாமோ?


சொந்தநலம் பார்ப்பவனும், சூழ்தேர்வில் வெல்லுதற்காய்,

அந்தந்தப் போதுகளில் அளவாகச் செய்வது தான்;

குமுகத்தில் அது நலமா, கொள்கேடா எனக் கேட்டால்,


"அமைவதெலாம் ஊழ்வினையால் ஆழ்த்து வந்து உருட்டாதோ?"


"அரசியலில் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகாதோ?"

அரசியலின் அடிப்படையே இதுவறிந்த பின்னே தான்

"கல்லென்ற நெஞ்சமிது கனியாது" என நீவீர்

சொல்லிடவே எழுந்தாலும் சொல்லுவது என் கடமை;

நான் கடுசு; இருந்தாலும் நான் மனிதன்; எனக்குள்ளும்

தேன் சுரக்கும்; சில போது திருவினைகள் செய்வேன் தான்;


நீர்வளமா? வேளாண்மை? மரம்வளர்ப்பா? கட்டுமானச்

சீரமைப்பா? செழுங்கல்வி? மருத்துவமா? சிறுசிறிதாய்

அரசினுடை நிர்வாக அமைப்புச்சீர் நடவடிக்கை?

உரசிவிட என் தடங்கள் ஊன்றிடுவேன்; வியந்தீரோ?


இப்படியாய் இரு கலவை இயன்றவன் தான் முதலமைச்சன்;

தப்படியைப் போடாமல், தடுமாற்றம் அடையாமல்

செப்புவது ஐந்தாண்டில் செய்ய நினைக் கும்)செயல்கள்;

இப்புலத்தில் இவை செய்தால் எம்பருவம் பத்தாண்டு.


நீர்வளம்


வளநாட்டை வானத்தின் மேலிருந்து பார்க்கும் போழ்,

அளவைந்தில் ஒரு பாகம் அம்மெனவே சொல்வகையில்

நீர் வளத்தைக் கூட்டுவதே நெடுநாளாய் என் கனவு;

ஆர்வலர்கள் சேர்ந்து வரின் அத்தனையும் மெய்யாகும்;


ஆறோடும் படுகைகளில் ஆங்காங்கே தடுப்பணைகள்,

நீர் கசியும் குட்டைகளும், நிலைப்பதற்கு வழி செய்வேன்;

தடம் அகல்ந்த கொள்ளிடத்தில், தண்பொருநை, வைகையினில்,

இடம் போட்டு நிலமகழும் ஏமாற்றை நிறுத்திடுவேன்;

பாசனத்திற் கேற்ற படிப் பண்ணுதற்கும் வழி செய்வேன்;

பாசனங்கள் ஒருங்கிணைக்க வாய்ப்புக்கள் பெருக்கிடுவேன்;

நிலத்தடிநீர் குறையாமல் நிலைப்பதற்கும் முறை செய்வேன்;

சில துளிகள் எனச் சேர்த்தால் பல வெள்ளம் பெருக்கெடுக்கும்;


சேமுறுத்திய குடிநீரும், சாக்கடை மாசெடுப்பும்:


குடிப்பதற்கு ஒழுங்கான குடிநீரே இல்லாமல்

தடுக்கின்ற மாசு ஒழித்து, தாகத்தைப் போக்கிடுவேன்.

பரு நிலத்தில் சேமுற்ற குடிநீரை(7)ப் பகிர்ந்தளித்து

தருவதற்குத் தூம்புகளை(8)த் தடம் பதிப்பேன்; அதனோடு

பாதாளச் சாக்கடைகள் பள்ளுதற்கும் வழிசெய்வேன்;

ஆதாரச் சென்னையிலோ அந்நீரைச் சேகரித்து,

மூன்றாட்டாய் இழுத்து வைத்து(9) முன்னாலே விழுத்துறுத்தி(10),

சேர்ந்தாட்டு உயிர்வேதிச் செய்முறையில்(11) மாசெடுத்து,

எதிரூட்டோ(12), மின்னிளக்கி எடுவித்தோ(13), துளித்தெடுத்தோ(14),

வித விதமாய் முயன்றிடுவேன்; வேண்டுவது நன்னீரே!


1. பலக்குறுத்தல் = complication

2. தடந்தகை = strategy

3. வழிதகை = tactics

4. செயல்தகை = operationality

5. கோடலன்> கௌடில்யன் = சாணக்கியன்

6. நுணுத்தம் = minute

7. சேமுற்ற குடிநீர் = safe drinking water

8. தூம்பு = tube

9. மூன்றாட்டு இழுத்துவைப்பு = tertiary treatment

10. விழுத்துறுத்தல் = filtration

11. உயிர்வேதிச் செய்ம்முறை = biochemical process

12. எதிர் ஊட்டு, எதிர் ஊடுகை = reverse osmosis

13. மின்னிளக்கி எடுவித்தல் = electro - dialysis

14. துளித்தெடுத்தல் = distillation


No comments: