Monday, November 01, 2021

தென் திசையும், தென் மரமும்

தெற்கு எனும் தென்திசை, தக்கணம் என்னும் இன்னொரு சொல்லோடு உறவு கொண்டது. அதை அறிவதற்குப் பெரிய விளக்கம் ஒன்றும் வேண்டாம். தல்> தள்ளில் இருந்து பிறந்த உறுப்புச் சொல் ’தாள்’. "உடல் உறுப்புச் சொற்கள்" என்ற தலைப்பில் முனைவர் கு. அரசேந்திரன், 2006 இல் ஒரு பொத்தகம் வெளியிட்டிருக்கிறார். (காவிரிப் பதிப்பகம், 6, பெருஞ்சித்திரனார் தெரு, சிட்லப்பாக்கம், சென்னை 64). இதில் கால், அடி, தாள், கழல், பாதம் ஆகியவற்றின் சொற்பொருள் வரலாறுகளைச் சொல்லியிருப்பார். தாளின் தொடர்பான நிலை. அடுத்த வளர்ச்சி, தாள்வு> தாழ்வு என்பதாகும். 

தள்கு>தக்கு>தக்கணம் என்ற வளர்ச்சி எளிதில் புரியக் கூடியதே.  தள்கு என்னும் சொல், தொக்கிய நிலையில், தக்கு என்று ஆகும். பின் அணம் எனும் சொல்லாக்க ஈறு சேர்ந்து தக்கணம் என்று ஆகும். பிறகு கட்டி என்னும் சொல் கெட்டி யாவது போல, பரு>பெரு ஆனது போல, தக்கு என்பது தெக்கு என்று தமிழர் பலுக்கலில் ஆகி, மேலும் இலக்கண மீத்திருத்தம் பெற்றுத் தெற்கு என்று நிலைபெற்றுப் போனது. தெற்கு என்பதைத் தெல்+கு என்று பின்னால் புரிந்து (தல்>தெல்), பின் தெல்+ந்+திசை என்பது தென்திசை ஆனது. தென் என்பது தெல்லின் இன்னோர் உருவமாய்க் கொள்ளப்பட்டது. 

தென்னை என்பது இதே கருத்தில் தோன்றியதல்ல. அது தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தமிழ் நாட்டிற்குக் கொண்டுவரப் பட்ட மரம் என்று புதலியலார் (botanists) கூறுவார். நம்மூரைச் சேர்ந்த பனையைப் போலவே இதிலும் கள் இறக்க முடியும் என்று அறிந்த தமிழன், இதன் சுவை இன்னும் அதிகம் என்பதால் கள் மரம் என்ற பெயரையே இதற்கு இட்டிருக்கிறான். (பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெலாம் வெறியக் காடி - acetic acid யின் வேலை.) தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்கு மரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. தெங்கங்காய் நாளடைவில் தேங்காய் ஆகச் சுருங்கிற்று. தெல் என்பதே இந்தச் சொற்களுக்கெல்லாம் அடிப்படையாகும். 

தெல்லின் நீட்சியாய், அதிலுள்ள வெறியத்தைக் (ethanol) கொஞ்சம் போக்கும் வகையில் அரை நொதிப்பில் உள்ள நீர்மத்தில் சுண்ணாம்பைப் போட்டு அதன் நீர்ம அயனிச் செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமில அரங்கில் (acidic range) இருந்து, களரி அரங்கிற்கு (alkali range) கொண்டு வந்து உருவான பதநீரை, தென்பாண்டி நாட்டிற் தெளிவு என்று சொல்லியும் விற்பார். இதைத் தயக்கம் இல்லாமல், நாட்டுப்புற ஆண்கள், பெண்கள் எல்லோருமே குடிப்பார்; இதைத் தவறு என்று யாரும் அங்கு சொல்வது இல்லை. (பதநீரை பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.) பதநீரில் இருக்கும் வெறியச் செறிவு 2-4% ஆகும். பொதுவாக கள் போன்றவற்றில் 7% க்கு மேல் இருக்கும்.

ஞாவகம் வைத்துக் கொள்ளுங்கள் தென் எனும் திசையைக் குறிக்கும் சொல்லும், தென் எனும் மரத்தைக் குறிக்கும் சொல்லும் வெவ்வேறு சொற்பிறப்பில் எழுந்தவை. ”கள் மரம் என்ற பொருள் குறிப்பதாலேயே, தென்னை என்ற பெயராலேயே, அம் மரம் நம்மிடம் இயல்பாய் எழுந்ததல்ல; இறக்குமதி ஆன மரம்” என்ற கருத்து சட்டென்று புரிந்து போகும். பனை நம்மூருடையது; தென்னை வெளியிருந்து நம் நாட்டில் இறங்கியது. 

தெற்கு பற்றி அறிய என் திசைகள் தொடரின் நான்காம் பகுதியைப் படியுங்கள். http://valavu.blogspot.com/2008/04/4.html

அன்புடன்,

இராம.கி.

No comments: