Friday, February 19, 2021

உபரி, உபகாரம், உதாரணம்

 ஒரு தனிமடலில் நண்பர் ஒருவர், ”மேலுள்ள மூன்றும் தமிழ்ச்சொற்களா?- என்று கேட்டிருந்தார். அவருக்கு அளித்த விடை எல்லோருக்கும் பயன்படும் என்பதால், இங்கு பதிகிறேன். சங்கதத் தாக்கத்திலிருந்து இற்றைத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய் வெளிவரட்டும் என்று எல்லோரும் வேண்டிக்கொள்வோம். 

 முதற்சொல்லாய் வருவது உபரி. இயற்கையாலோ, மாந்த முயற்சியாலோ, ஒருபொருள் விளைந்து, மேல்வருவது உவ்வு-தலாகும். உப்பு-தலுக்கும் அதே பொருள். அளங்களில் உப்பு நீரைத் தேக்கி, சூரிய வெப்பபத்தால், நீரை ஆவியாக்கும் போது, விளைந்து  மேல்வரும் பொருளை உப்பு என்கிறோமே? இதை உவரி (salt) என்றும் சொல்லலாம். (தூத்துக்குடி மாவட்டத்தில் உவரி என்று ஓர் ஊருக்குப் பெயருண்டு.) வேளாண்மையில் விளைந்துவரும் பயிரால் கிடைக்கும் வருமானம், பயிர்விளைப்புச் செலவுக்கும்  மேலிருந்தால், அதையும் கூட உவரி (surplus)என்பர். வேளாண்மையில் பழகும் இச்சொல் சங்கதத்துள் போகையில் ubari என்று பலுக்கப்படும். வகரம் baகரம் ஆவது அங்கு பெரிதும் நடக்கும் இயல்முறை தான். ”உபரி” என்பது சங்கதச் சொல்,  ”உவரி” என்பது தமிழ்ச்சொல்.. 

இரண்டாம் சொல் உபகாரம். உடன் எழுந்துவருவதால், உவ எனுஞ் சொல் துணை என்றும் பொருள்கொள்ளும். உவ்வுதல், உப்புதல் போன்ற சொற்களோடு, உவமம் என்ற சொல்லும் ”எழுந்து பொருந்துவதைக் குறிக்கும்.) உவ>உப என்பதும் உவந்துவரும் (=எழுந்து என்று பொருள் கொள்ளுங்கள். விருப்புப் பொருள் கொள்ளாதீர்கள். )  நிலை. இதைத் துணையென்றும் புழங்கலாம். காரம் = வேலை, பணி, தொழில். இதைக் கருமம்  என்றும் சொல்வோம். கரத்தால் செய்வது காரம். காரன் என்று பல இடங்களில் சொல்கிறோமே? அவற்றைச் சற்று எண்ணிப் பாருங்கள். காரத்தைச் செய்பவன் காரன்,  உவகாரம்= துணைக்கருமம். உதவி என்பது உவகாரத்தின் இன்னொரு தமிழ் வடிவம். இங்கும் வடமொழித் தாக்கால் உவகாரத்தை உbaகாரம் என்று பலுக்குவார். தமிழில் சொல்ல, உவகாரம்ம் உதவி, துணைக்கருமம் போன்றவை போதும்.  

மூன்றாவதாய், உதாரணம். உத்தாஹரண>உதாஹரண எனும்  சங்கதக் கூட்டுச்சொல் மருவியே உதாரணம் என்கிறார். நம் வேர்ச்சொல்லில் தொடங்கி அங்கு போய்த் திரிந்து, மீண்டும் நாம் கடன்வாங்கிப் பழகும் சொல் இதுவாகும்.  கொஞ்சம் ஆய்ந்தால் இதன் தமிழ்முலத்தைக் கண்டுவிடலாம். உத்து>ஒத்து என்பது ஒப்புமைப் (comparison) பொருளில் பயிலும் தமிழுருபு. தொல்காப்பியம் உவமவியலில் இது பேசப்படும். அடுத்து, ஆகு-தல் எனும் தமிழ் வினைச்சொல்லோடு, அணம் எனும் ஈறு சேர்த்து ”ஆகணம்” என்ற சொல்லை உருவாக்கலாம்.”ஆகி வந்தது” என்று அதற்குப் பொருள். ”ஆகணத்தில்” ர்-ஐ நுழைத்து, ஆகணம்> ஆகர்ணம்> ஆகரணம்> ஆஹரணம் என்றாவது சங்கத வழக்கம். உத்து + ஆஹரணம்  என்னும் சொற்கூட்டு  உத்தாஹரணம்>உதாஹரணம் ஆகும். நாம் மீளக் கடன்வாங்கி உதாரணம் என்கிறோம். சங்கதக் கடனைத் தவிர்த்து, உத்தாகணம் என்றோ, எடுத்துகாட்டு என்றோ சொல்லிப் போகலாம்.  

உதாரணம் போன்றே சாதாரணம் என்ற சொல்லும் நம்மூரில் தவறாய் உணரப்படுகிறது. 1930-50 களில் ”குப்பன், சுப்பன்” பெயர்கள் நம்மிடம் அதிகமானது போல், 1000 ஆண்டுகளுக்கு முன் “சாத்தன்” அதிகமாய் இருந்தது. சங்க காலத்தில் கண்ணன், சாத்தன், ஆதன், அத்தன், ஆந்தை, சேந்தன், நாகன், தேவன், பூதன் போன்ற பெயர்களே மிக்கிருந்தன. அக்காலங்களில் சாத்தார மாந்தன் என்பது  எல்லோரும் அறிந்த பொதுவடையாளமாகும். இதன் மிச்ச சொச்சங்களாய், இன்றுங்கூட, திருச்சிக்குத் தெற்கில் தென்பாண்டியில் சாத்தையா, சாத்தப்பன் எனப் பெயரிடுவர். [அதேபொழுது ஒரு முரண்தொடையாய் தமிழரில் பலரும் (நகரத்தில் மட்டுமின்றி, நாட்டுப்புறங்களிலும் சேர்த்து) இஷ்/புஷ் என்று பொருள்புரியாது வடமொழிப்பெயர் இடுகிறார். பெருஞ் சோகமாகுமும்.அவலமுங் கூட ] 

சாத்தாரம்>சாத்தாரணம்>சாதாரணம் என்பது ordinary பொருளைக் குறித்தது. அதேபோல் சமணன் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற 3 நெறிகள் மக்களால் பின்பற்றப் பட்டதால்) என்ற பெயர் சமணன்>சாமணன்> சாமனம்> சாமான்யன் என்றும் பரவியிருந்தது. நீலகேசியில் இரண்டு இடங்களில் சாத்தன் = ordinary person என்பதை உணரலாம். முதல் இடம்,  நீலகேசி 683 - ஆம் பாடலில் (ஆசீவக வாதச் சருக்கம்) , வெளிவரும்.

ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லல னாய்விடின் இச்

சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய

நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலும் நினக்குரைத்தும்

ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ?

Any Tom, Dick and Harry என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் ”சாத்தன் (here denotes common man)” என்ற பெயர் தமிழகத்திற் பொதுப் பெயராக பழகியிருந்தது. பெருமானரே கூடத் தம் ஆசானை உவ ஆத்தன்> உப ஆத்யன்> உபாத்யன்> வாத்யான் என்றழைப்பர். நாளாவட்டத்தில் ஆத்தனுக்கு மாறாய், எதிர்ப்பதமாய், ”சாமான்யம் ஆனவன்” என்ற பொருளும் சாத்தனுக்கு ஏற்பட்டது. காட்டாக , இன்னொரு பாட்டு நீலகேசி மொக்கல வாதம் 413 இல் அமையும், 

ஆத்தன் உரைத்த பொருள் தன்னை அவ்வாகமத்தால்

சாத்தன் பயின்றால் அறியாவிடுந் தன்மை உண்டோ?

வீரத்து இங்குரைத்த பல தம்முள் ஒன்று இன்னதென்ன

ஓத்தின் வகையால் பெயரொடு உணர்வின்மைக்கு என்றாள்.

அன்புடன்,

இராம.கி,


3 comments:

Rathanaswami said...

மிக நல்ல விளக்கங்கள் ஐயா.

tekvijay said...

ஈரோடு, அரச்சலூர் தாள இசைக் கல்வெட்டு (2ஆம் நூற்றாண்டு) கூட ”எழுத்துப் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்றே முடியும்!

சாத்தன் என்ற பெயருடைய சாமானியனும் இசையில் புலமை பெற்றிருந்தான் என அறிய ஒரு சிறந்த ஆவணம் இக்கல்வெட்டு!

தமிழர் இசையின் பண் / பாடல் மட்டுமின்றி தாளத்திலும் சிறந்திருந்தனர். இக்கல்வெட்டு முழுக்க ’த’கர எழுத்துக்களான த தா தை தே இவற்றைக்கொண்டு சொல்கட்டு அமையப் பெற்ரிருக்கும்! தமிழ்மொழியின் பஞ்சமரபு இசைநூல், ”தகர எழுத்தே சொல்கட்டுக்கு சிறந்த எழுத்து” என்பதைக் கூற ஒரு வெண்பா கொண்டுள்ளது. வேறு எந்த எழுத்தும் க ச ப ம ந ர போன்றவை, சொல்கட்டு முழக்க உதவாது, இடறும், வேகமாக முழக்கவும் முடியாது. ஆனால் நுனிநாக்கில் உருவாகும் த கர எழுத்தே சொல்கட்டுக்கு மிகவும் உகந்தது என்பதையும் அன்றே தமிழன் அறிந்திருந்தான் என்பதற்கு இக்கல்வெட்டும் ஒரு அரிய சான்று!

நம்பிக்கை இல்லை என்றால், சான்றுக்கு “தத் தத் தரிகிட தத்தரிகிட தளாங்கு தகதிமி” என்ற முழவுச்சொல்லில் தகரத்துக்குப் பதில் க, ச, ப, ம, ர, ந, போன்ற எழுத்துக்களை இட்டு முழக்கிப்பார்க்கவும், சரியாகவும் வராது வேகமாகவும் முழக்க முடியாது!

இதைவிட பழைய வேறெங்கும் தாளக் கல்வெட்டுக்கள் வேறெங்கும் இல்லை. இத்தனை சிறப்புடைய கல்வெட்டை சாத்தன் எனும் ஒரு தமிழ் எளியோன் முன்னோன் செய்துள்ளது தமிழிசைக்கு பெருமை & சிறப்பு!

tekvijay said...

சற்றே கூகிள் செய்தால் கீழ்கண்ட கொடுமைகளையும் பார்க்கமுடிகிறது!

//https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/
தேவன், சாத்தன் (சாஸ்தா) முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் புழங்கின. வால்மீகி, கண்ணதாசன், காமாக்ஷி, விஷ்ணுதாசன் (கண்ணந்தாயன், காமக்கண்ணி, விண்ணந்தாயன்) என்ற பெயர்கள் புறநானூற்றில் இருப்பதால் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.//

சாஸ்தா, கண்ணதாசன், காமாக்ஷி, விஷ்ணுதாசன் ஆகிய சங்கதப் பெயர்கள்
சாத்தன், கண்ணந்தாயன், காமக்கண்ணி, விண்ணந்தாயன் என்ற தமிழ்ப் பெயர்கள் ஆகினவாம்! கொடுமை.