Wednesday, February 03, 2021

அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 4

கங்கைக்கரையில் வேள்விநெறி பரவியபோது, அரசருக்கும், பெருநிலக் கிழாருக்கும், செல்வந்தருக்கும் நன்மை கொடுப்பதாய்ச் சொல்லி அவரை அண்டியே வேதியர் வேள்விகளைச் செய்தார். அதே பொழுது, பொதுமக்களோ, வேதநெறியில் ஈடுபடாது, தத்தம் ஆளுமைக்குத் தக்க, சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் வணங்கினார். இச் சிவ, விண்ணவ, கொற்றவைப் பரவல் தென்புலத்திலும் நடந்தது.  மேல் தட்டிற்கொன்று, கீழ்த்தட்டிற்கு ஒன்றென ஆனச் சமய இடைவெளி வேதியருக்கு இடைஞ்சல் ஆகியது. பொதுமக்கள் சற்று தள்ளியே அவரை வைத்தார். கி.மு. 600 களுக்குச் சற்றுமுன் (எத்தனை நூற்றாண்டுகள், ஒன்றா, இரண்டா என்பது தெரியாது), மெய்யியல் (philosophy) வரிதியான கேள்விகளுக்கு வேத நெறி உள்ளாக்கப் பட்டது. பொதுமக்களிடையே அற்றுவிகம் (ஆசீவகம்), செயினம், புத்தம் எழுப்பிய தாக்கத்தை அறிந்த அரசரும், மற்றோரும் வேறு வழியின்றி நெறி மாறத் தொடங்கினார். 

அதுவரை தியை (ஒளியுள்ள வானம்- dyas), புடவி (ப்ருத்வி), அதிதி, மாரி (வாரணன்> வருணன்), மித்திரன், அழனி (அக்னி), இந்திரன், உழை (உஷஸ்) எனச் சிறு தெய்வங்களையே பரவிய வேதநெறியார், ஆகமநெறியைப் (ஆகிவந்த நெறி ஆகம நெறி. இதுவும் ஒரு மரபுநெறி தான். ஆனால் தென்புலம், பொதுவான வடபுலம் ஆகியவற்றின் நெறி) பார்க்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாய் இரண்டும் சேர்ந்த கலவைநெறி இந்தியாவில் எழத் தொடங்கிச் சிவநெறி (அதேபோல் விண்ணெறி) பெருந்தெய்வ வணக்கமாய் மாறியது. கலவை நெறி உருவான பின்னரே, குருக்கள்மார் மக்களிடை ஏற்கப்படும் நிலைக்கு வந்தார். [எப்போதுமே வெளியிருந்து திணிக்கப்பட்டு மக்களுடன் ஒன்றாகாத மதம் மக்களிடை நிலைக்காது. உள்ளூர்ப் பழக்கங்களை அணைத்து ஒன்றுபடும் மதமே மக்களை ஈர்க்கும்.] வேதாகமக் கலவைநெறி எழுந்தகதை இதுதான்.

கலவைநெறியை உருவாக்கிய பின்தான், அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகியவற்றை எதிர்த்து, வேதியர் பொதுமக்களைத் தம் பக்கம் திருப்ப முடிந்தது. கி.மு.600 களுக்கு அண்மையில் வட புலத்தில் வேதப்பழக்கம் குறையத் தொடங்கியது. புது விளக்கங்கள் வேத நடைமுறைக்குக் கற்பிக்கப் பட்டன. கீழ்நிற்றங்கள் (உபநிடதங்கள்) எழுதி, மெய்யியற் பொருட்பாடுகள் கூறப்பட்டன. வேதியர் தெற்கே வரத்தொடங்கினார். சங்க காலத்திலேயே பார்ப்பனர் தாக்கம் தமிழகத்தில் இருந்ததே என்று சிலர் கேட்பார்; இதில் பெருமைப்படவும், வெட்கப்படவும் ஒன்றுமில்லை. வேதியர் பெயர்ச்சி தென்னாட்டில் ஏற்பட்டது ஒரு சாத்தாரமான பட்டகை (ordinary fact). அவ்வளவுதான். 

வேத நெறி பின்பற்றும் மரபாளர் தெற்கே கோதாவரிக்கு வந்த பின்னால், அவரின் விதியாளரால் தாலி கட்டிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார். (ஓரளவு பார்ப்பனரல்லாத தென்னாட்டுப் பெண்களையும் அவர் மணஞ் செய்திருக்க வேண்டும் என்றே ஆய்வாளர் எண்ணுகிறார். குறிப்பாக பார்ப்பனர் பழகும் மராட்டியப் புடவைக் கட்டுமுறை அப்படி ஓர்ந்துபார்க்க வைக்கிறது.) முறைப் பெண்ணைத் திருமணம் செய்யும் தென்னாட்டுப் பழக்கமும் அவரிடம் ஏற்பட்டது. பெண்களோடும், வேதம் அறியாதாரோடும் (பெருமானர் அல்லாதாரோடும்) உடனிருந்து விருந்து உண்ண அனுமதிக்கப் பட்டார். பழையது சாப்பிட ஒப்புதல் கிடைத்தது. பெருமானர் விலங்குகள் சாப்பிடுவதில் புதிய பட்டியல் கூட ஏற்பட்டது. இவற்றை ஆபஸ்தம்ப சாற்றமும், பௌதாயண சாற்றமும் (சாற்றம் = சாத்திரம்) விளக்கமாய்க் கூறுகின்றன. 

இப்படி விளங்கங்களை நான் எழுதும் காரணம், வேதியரில் சிலர் ”வேதம் ஏதோ தான்தோன்றியது- சுயம்பு ” என்றெல்லாம் பல மூதிகங்களைக் கிளப்புவதை மறுக்கவே. பொறுமையாக வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு முன் நடந்தவைகளைப் பார்ப்பது, அதிலும் வேதம் போன்றவற்றைப் பார்ப்பது, இன்று மிகவும் அரிதாகிவிட்டது. கொடிமரபை (பரம்பரையை) மறுதலிப்பதே இன்று பலருக்கும் வழக்கமாகிறது. நாவலந்தீவின் பல பண்பாட்டு வழக்கங்களும் இதுபோலத் தென்னாட்டு. வடநாட்டுக் கலவை வழக்கங்களே. 

இன்றைக்குத் தம் தென்னாட்டு (=திராவிட) ஊற்றுகைக்கு வெட்கப்படும் மெத்தப் படித்த மேதாவிகள், வேதத் தன்மையை மட்டுமே நம்முன் வலியுறுத்திப் போகலாம்; ஆனால் உண்மை என்றாவது வெளிவந்தே தீரும். (மேனிலைப் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியுள் நுழையும்போது, தம் நாட்டுப்புறத் தகப்பனையோ, தாயையோ, உடன் படிக்கும் மாணிவரிடை அறிமுகம் செய்துவைக்க வெட்கப்பட்டுத் தன் கொடிவழி பற்றிப் பொய்சொல்லித் திரியும் சில முட்டாள்களையும், தம் தாய்வழிக் கொடி பாண்டித்தமிழரிடம் இருந்தே பிறந்ததென்று "மகாவம்சம்" சொல்வதை வாய்ப்பாக மறந்து, தந்தைவழிக் கொடியான ஆரியத் தோற்றத்தை மட்டுமே விண்ணாரம் பேசி, அதேநேரம் தாய்வழி உறவான தமிழரை ஈழததீவிலிருந்தே விரட்ட முற்படும், சிங்கள முட்டாள்களையும் இங்கே எண்ணாது இருக்க முடியவில்லை.)

இதுபோன்ற பெருமானரின் பரவலை 3 அலைகளாய்ப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் கூறுவார். (The Brahmin in the Tamil Country - Prof. N.Subrahmanian, Retd. Prof.of History, Madurai Kamaraj University, ENNES publications, Madurai, year 1989) கி.மு. 1000-800, கி.மு.500-200, கி.பி 300-500 என்று அவர் பகுப்பார். இந்த அலைகள் இரண்டா, மூன்றா என்பதில் ஆய்வாளரிடையே வேறுபாடுண்டு. ஆனால், குத்தர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் சாரி சாரியாய் பெருமானர் தெற்கே பரவியது கி.பி. 500க்குப் பிறகே. அதற்கு முன் எழுந்த அலையை புத்தர், மாவீரர் காலத்திற்கு சற்று பின்னாலென நான் கருதுகிறேன்.

இந்த அலையின் உயர்ச்சியாய், அதனூடே செயினரும் [குறிப்பாக பத்ரபாகு (இற்றைக் கர்நாடகச் சமண வெள்ளைக்குளத்து -ஸ்ரவண பெள குளா - கோமடேசுரர் சிலையை நினைவுக்குக் கொணர்க), உடன் அரசு துறந்துவந்த சந்திரகுத்த மோரியன், அவன் மகன் பிந்துசாரன் நம் தகடூர் வரை எடுத்து வந்த மோரியர் படையெடுப்பு], புத்தரும் (பிந்துசாரனின் மகன் அசோகன் புத்த மதத் துறவிகளைத் தெற்கிற்கும் ஈழத்திற்குமாய் அனுப்பியது - அதில் அவன் மகனொருவன் கூட இருந்திருக்கலாம்), அதையொட்டி முன்னும் பின்னும் வந்த பெருமானர் எனப் படித்தானத்திலிருந்து தகடூருக்கும், காஞ்சிக்கும் இன்னும் மற்ற தமிழக ஊர்களுக்கும் வந்துசேர்ந்த பயணங்கள் மிகப் பல.

வந்தாரில் பலரும் தமிழ்க் குமுகாயத்தில் இனிதாய் ஏற்கப்பட்டார்; பெருமானருக்குத் தலைநகர்களில் சேரிகளும், மற்ற இடங்களில் ஊர்களும் (பெரும தாயங்கள்; தந்தது தாயம்; பெருமருக்குத் தந்தது பெரும தாயம். பெரும தாயம், ப்ரம்ம தேயமெனத் திரிவு கொள்ளும்) தரப்பட்டன. அவ்வூர்களின் பெயரே அவரவர் பிரிவுக்குப் பெயராயின. காட்டாக இற்றை மரபுப் பெருமானரில் (smartha brahmins) பெருகணப் (ப்ருகச்சணம்) பிரிவினர் கண்டரமாணிக்கம், மலை நாடு, நிலகனூர், மாங்குடி, பலமன் நேரி, மூச நாடு, குளத்தூர், மருதஞ்சேரி, சத்திய மங்கலம், பூரூர் என்ற ஊர்களில் குடியேறினார்; எண்ணாயிரவர் (அஷ்டசஹஷ்ரம்) அத்தியூர், அறிவர்பாடி, நந்திவாடி, அறுகுளம் - shatkulam என்றவற்றில் குடியேறினார். (இன்னும் முகன்மையான வடமர் பெருமளவில் வந்தது குத்தர், பல்லவர் காலத்தில் தான்.)

இதேபோல நம்பூதிகள் கோகர்ணம் (இன்றைய கோவா) வழியாக துளு நாட்டில் நுழைந்து 32 ஊர்களிலும், சேரலத்தில் 32 ஊர்களிலும் குடியேறினார். இவருள் ஏற்பட்ட பிரிவுகளை ஆடு, ஏடு, பிக்சை, பிச்சை, ஓது, சாந்தி, அடுக்களை, அரங்கு, பந்தி, கடவு என்று பத்தாகச் சொல்வார். நம்பூதிகளைப் போலவே பழக்கம் கொண்ட தீக்சிதர் தில்லையிலும், சோழியர் திருக் கடையூர், மடலூர், விசலூர், புதலூர், செங்கணூர், திருமறைக்காடு, ஆவுடையார் கோயில் என்ற ஊர்களிலும் குடியேறினார்.

இன்னும் பல தமிழ்ப் பெருமானப் பிரிவினர் (பொன்முடியார் - hiranya kesis, முக்காணி, கணியாளர், சங்கேதி, குருக்கள், வாத்திமார் எனப் பலர்) உண்டு. இவரெலாம் எப்போது வந்தார், எப்படி இங்கு உருவானார் என்ற மாந்தவியல் விவரங்களை யாரும் சேர்த்து ஆய்ந்து வைக்கக் காணோம். மொத்தத்தில் நல்ல, தொடர்புள்ள வரலாற்றுச் செய்திகள் தொகுக்கப் படாமல், அவரவரிடம் உள்ள மூதிகப் பழக்கங்களால், தொலைந்து போய்க் கொண்டுள்ளன. தமிழர் வரலாறு இவற்றாலும் குறைந்துபோகிறது.

(எப்படி மாலத்தீவில் ஊர்மக்களின் தமிழ்த் தோற்றத்தையும், மற்ற செய்திகளையும் சேகரித்து வைக்காமல், தொல்லியல் கண்டுபிடிப்புக்களைத் தொலைக்க வைத்து, அரபு நுழைவுக்கு முன் தமக்கு வரலாறே இல்லாதது போல் ஆக்குகிறாரோ, அதேபோல் இதைச் சொல்லலாம். மலேசியாவிலும் கூடக் கடாரம், ஜோகூர் மாநிலங்களில் உள்ள கி.பி. 800 முந்திய சின்னங்களை, மலாக்கா சுல்தான் பரமேசுரவர்வன் இசுலாத்திற்கு மாறியதற்கு முன்னிருந்தால் அவற்றைக் கட்டக முறையில் (sytematic) ஒழித்துக் கட்ட மலாயர் முயல்கிறாரோ அதுபோல் இதைச் சொல்லலாம். பெருமானரே கூட "அல்லிருமை - அத்வைதம்” என்ற மெய்யியலைப் பெரிதாகக் கருதி, இந்த வரலாற்றுத் தொலைப்பைப் பற்றிக்  கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆதிசங்கரர் பற்றியும், அவருக்கு முந்தைய வேதம், அரணகம் - ஆரண்யகம், பெருமானம் - ப்ராமண்யம், கீழ்நிற்றம் - உபநிடதம் என்ற கருத்துமுதல் வாதத்தைப் பெருமிதமாகப் பேசுவதே போதுமென அவருக்கு ஆனதுபோலும். மாந்தவியல், குமுகவியல், வரலாறு இன்னபிறவும் பெரும்பாலோருக்குத் பொருட்டாவதில்லை. தம் திராவிடப் பின்புலம் பேசப் பலரும் நாணுகிறார்.)

நம்பூதிகள் மட்டுமே இதில் ஓரளவு விதிவிலக்கு. அவர் வரலாற்றை மாந்தவியல் முறையில் தேடித்தேடி, கூடிய மட்டும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி இணையத்தில் பதிவு செய்துள்ளார். வடமொழிப் பாதிப்பை அவர் உயர்த்தினாலும், தமிழ் வடமொழிக் கலப்பை வெளிப்படையாய்ச் சொல்லிக்கொள்ள அவர் வெட்கப்படுவதில்லை. சங்க இலக்கியத்திலே அவர் சேரலத்தில் தங்கிய முதலூர் (செல்லூர்) சிறப்பாகப் பதியப் பட்டுள்ளது (அகநானூறு 216). (நம்பூதிகள் அதர்வ வேதம் பின்பற்றினார். அதன் காரணத்தாலேயே தக்கணபதத்திற்கு வெகுகாலம் முன்பே, கி.மு. 500க்கு முன்பே, அவர் வந்திருக்கலாமெனச் சில ஆய்வாளர் எண்ணுவார்.) இவர் போலவே உள்ள தீக்சிதர், சோழியர் ஆகியோரும் இங்கிருந்தார். முன்குடுமிப் பார்ப்பனரின் தமிழக இருப்பு நெடுங்காலத்திற்கு முன்னது என்றே பேரா. ந, சுப்பிரமணியம் சொல்வார். விருப்பு, வெறுப்பின்றி தமிழ்ப் பார்ப்பனர் வரலாற்றைப் பார்ப்பது தேவையான ஒன்று.

முடிந்தால், தில்லைத் தொடரையும் குறிப்பாய்த் தில்லை - 5  என்ற இடுகையையும் படியுங்கள் (https://valavu.blogspot.com/2006/08/5.html)

அன்புடன்,

இராம.கி.


No comments: