Tuesday, February 02, 2021

அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 3


முருகனெனுங் தமிழ்க்கடவுள், ”சுப் பிரமண்யனாகவே” இன்று சொல்லப் படுவதை வரலாற்றுக் குளறுபடி எனலாம் ”சிவ பெருமான்” என்ற தமிழ்க் கூட்டுச்சொல்லே வட பலுக்கில் "ஷிவ் ப்ரம்மண்"  என்றாகும்; அப்பனுக்கும் மகனுக்குமாய் இக்கருத்தீடு பிரியும்; முடிவில் "சிவ்" எனும் முன்னொட்டுச் சொல் சு எனும் ஓரெழுத்து ஒருமொழியாய்ச் சுருங்கும். ப்ரம்மண் நீண்டு ப்ரம்மண்யன் ஆவான். முடிவில் நம்சொல்லை நாமே அடையாளம் காண முடியாது தடுமாறுவோம். சு எனத் தொடங்கும் இருபிறப்பிச் சொற்கள் பலவும் சிவ/ red எனும் முன்னொட்டில் கிளைத்தவையே. மஞ்சள்/குங்குமம் அணிந்த சிவ மங்கலி பேச்சு வழக்கில் சு மங்கலி ஆவாள். தாலிக்கு மாறாய் மஞ்சள் அணிவது தென்னாட்டுப் பழக்கமே. அவ்வளவு ஏன்? தாலியணிவதும் தென்னாட்டுப் பழக்கமே.

முருகன் கோயில்கள் பார்ப்பன மயமான பிறகு, அங்கு அணங்காடல் நின்றுபோனது (இக்காலத் தென்பாண்டி நாட்டுச் சாமியாடலும் அக்கால அணங்காடல், வேலனாடலும் அடிப்படையில் ஒன்றானவையே.) ஊருலாவும் (உற்சவமும்), எழுந்தருளப் பண்ணலும் தேரிழுப்பும், தெப்பமும் மட்டுமே இக்காலத்தில் மிஞ்சியுள்ளன. ஊருலாத் திருமேனி புறப்பாடு ஆகுமுன், சூலம்/ வேல்/ அரிவாளைக் கையிலேந்தி சாமி ”திருநிலை” (சந்நதம்) கொள்ளும் தென்பாண்டிச் சாமியாடிகள் கோயில் முற்றத்தில் இன்று ஆடியருளார். ஆனால் ஒரு காலத்தில் இது நடந்திருக்குமெனச் சங்க இலக்கியங்களின் வழி ஊகிக்கிறோம். (வேலேந்தியவன் வேலன் என்பதுபோல், பூசாரியும் வேலன் என்றே ஒரு காலத்தில் சொல்லப்பட்டான்.) காளி, ஐயன், கருப்பன், மாடன் போன்ற இனக்குழுக் கோயில் விழாக்களில் இன்றும் கூடச் சாமியாடல்கள் இயல்வழக்காய் நாட்டுப்புறங்களில் தொடர்கின்றன.

வரலாற்றுத் தொடக்கம் ஏதென்றுணராது, அன்புவழி, பதி-பசு-பாசம், தானம் (=த்யானம்), ஓகம்(யோகம்), தவம், சித்தாந்தமெனச் சிவநெறியார் இன்று மெய்யியல் பேசலாம். அடிப்படையில் சிவநெறிக் கொள்கை, நாட்கழித்துப் பிறந்ததே. மாணிக்கவாசகர் கி.பி.3/4ஆம் நூற்றாண்டினரென நம்புபவன் நான். அவருக்கு அப்புறமே சிவநெறி மெய்யியல் கிளர்ந்திருக்க வேண்டும். ( 9 ஆம் நூற்றாண்டு மணிவாசகர் என்ற கூற்றே சிவநெறியாரை பெரும் நட்டாற்றில் தவிக்கவிடுகிறது. ஆய்விலார் இன்னும் தடுமாறுகிறார்.) 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமூலர் திருமந்திரமே இன்று கிடைத்தவற்றுள் சிவநெறி மெய்யியலின் விவரமான முதல் விளக்கமாகும். அதே நேரம், தமிழரின் சிவ வழிபாடு என்பது வரலாற்றிற்கு வெகுகாலம் முன்பாகவே. இனக்குழு நிலையில் உருவானது. (சிகப்பு-கருப்புப் பண்பாட்டுத் தொடர்பு, முப்பட்டைச் சாம்பற் பூச்சு போன்றவை நம்மில் மட்டுமின்றி, நம் ஆதிகாலப் பங்காளிகளான ஆத்திரேலியப் பழங்குடிகளிடமும் உள்ளன. அது வெறும் தற்செயலல்ல, நமக்கும் அவருக்கும் உள்ள இனக்குழு உறவை ஆய்வு செய்தோர் மீக்குறைவு.)

இடுகாட்டிற் பேய்களோடு தந்தை ஏழுவிதம் தாண்டவமாட, அழகுமகனோ இன்னோர் இனக்குழுத் தலைவன் சூரனைச் சங்காரம் பண்ணிய தெய்வமாகி நம்மை இன்றும் ஈர்க்கிறான். தந்தைக்கு இலிங்கமென நடுகல்லையும், மகனுக்குக் கந்தெனக் கற்றூணையும் அடையாளங் காட்டுகிறோம். (நம் இனக்குழுத் தோற்றத்தை உணர்த்த, .இலிங்கம் ஒன்று போதும்,) காலத் தொலைவால் சேயோன் ஓர் இனக்குழு மூதாதை. [மேலையரின் ஆதன் (Adam) எனும் ஆதிநாதனும் அருகரின் ஆதிநாதனும் அவன் உருவகமே.] மூதாதைக்கு அடையாளமாய் ஒவ்வொரு கோயிலிலும் ஒரு காவல் மரத்தைக் கோயில் மரமாக்குகிறோம். அம்மரத்தில் நம் விழைவை ஓலையிலோ, வேறொன்றின் மூலமோ எழுதிக்கட்டி இறையிடம் தெரியப்படுத்தி இடையீட்டை எதிர் பார்க்கிறோம். வடக்கே இப்பழக்கம் அரிதாகவேயுள்ளது. இதுவும் தமிழர் இனக்குழுப் பழக்கத்தின் அடையாளமே.

பல சிவன் கோயில்களும், அம்மன் கோயில்களும் இன்று பள்ளிப்படைக் கோயில்களாய் உள்ளன. [ஓரிடத்தைப் பள்ளிப் (தோண்டிப்) படுக்கவைத்தது பள்ளிப்படை.] யாரோவொரு ஆண் பெரியார் கல்லறைமேல் இலிங்கம் பதிப்பதையும், பெண் பெரியார் கல்லறைமேல் அம்மனின் முழு/அரை மூலத் திருமேனி இருப்பதையும் பல கோயில்களில் காணலாம். நடுகல்லைக் காவல்காக்க கோரமுக நுழைக்காவலர் (த்வாரபாலகர்) நிற்பதும் இனக்குழு அடையாளங் காட்டும். (நடுத்தரைக் கடலையொட்டிய நாகரிகங்களின் எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, அக்கேடிய, அசீரியக் கல்லறைக் கோயில்களுக்கும், நம் கோயில்களுக்கும் இடையே கூர்ந்துபார்த்தால் வியத்தகும் ஒப்பீடுகளுண்டு.)

அதுமட்டுமல்ல; நடுகல்முன் படைப்பது போலவே, கோயிற் கொடிமரத்திற்கு அருகில் அன்றாடப் பூசையில் பலிபீடத்திற் சோற்றுருண்டை படைக்கிறார். பல்வேறு திருமேனிகளுக்கு சோற்றுக் கட்டிகளை நிவத்திக் (= உயர்த்திக்) காட்டுகிறார். (நிவத்தம் எனும் தமிழ்ச்சொல் சங்கத நிவேத்யமாகி மாயங் காட்டும்.) ஆனாற் அரத்தமும், நிணமும் விரவிய, ஏற்கனவே பொல்லிய விலங்கை (பொல்லுதல்>  பொள்ளுதல்= குத்துதல்; பொலி>பலி) பலிபீடத்திற் படைத்த காலம் ஒரு சமயம் இருந்திருக்கும். (பின்னாற் காட்டு விலங்காண்டி மரபுகளைக் கண்டு வெட்கி அவற்றைத் திரையிட்டு மறைக்குமாப் போல் இப்போது அருகதப் பழக்கம் நமக்குள் நுழைந்தது போலும். பெரும்பாலான இனக்குழுக் கோயில்களில் இன்றும் கிடாவோ, கோழியோ, பன்றியோ என ஒரு விலங்கே வெட்டிப் பலியிடப்படுகிறது.)

மூதாதைக்குச் செய்வது போலவே மாந்தப் பழக்கவழக்கங்கள் இன்றும்  சிவன், பெருமாள் கோயில்களிற் செய்யப்படுகின்றன. (கோஇல் என்பது மூதாதை இறைவீட்டை உணர்த்துகிறது.) தென் பாண்டிநாட்டில் முன்னோரை வழிபடும் வகையிற் ’படைப்பெ’ன்று வீட்டுவிழாக்களின் முன் செய்வர். அதிற் கூடியாக்கி உண்ணும் சடங்குகள் இனக்குழுக் கோயிலிற் பழகுவது போலவே இருக்கும். சங்க இலக்கியத்திற் பெருஞ்சோறென வருவதும் இதுபோன்ற பழக்கமே. பெருஞ்சோற்றைச் சங்கதமாக்கிப் பெருஞ்சாதம்> பெருசாதம்> ப்ரசாதம் என்பார். (சோறு போல் சாதமும் தமிழ்தான். அதைச் சங்கதம் என்று மயங்குவது அறியாமை) நாமும் அதன் உள்ளார்ந்த தமிழ்மை புரியாது சங்கதக் கூட்டுச் சொல்லென வியந்து கொள்வோம்.

இன்றைக்கும் முருகன் விழாவையொட்டி (பாண்டியர்) சாம்பலையும், (சோழியர்) குங்குமத்தையும், (சேரர்) சாரலையும் (சந்தனம்) உடலெங்கும் தனித்தோ, சேர்த்தோ பூசி, கார்த்திகை, பூசம், உத்திரம், விசாகம் எனப் பல்வேறு நாட்காட்டுகளில் அறுபடை வீடுகளுக்குக் கால்கடுக்க நடந்துசென்று, கோயிலிற் பழகும் காவடிகள், பாற்குடங்கள், வெறியாட்டு, தேரிழுப்பு, செடிலாட்டு [நோற்போர் தோலிற் கொக்கிகளைச் செருகியிழுக்கும் வதம். ரகரம் இடைநுழைக்கும் வடமொழி யுத்தியில் வதம் வ்ரதமென்றாகும்], பூக்குழி (நெருப்பின்மேல் நடத்தல்) என்ற தன்வருத்துப் பழக்கங்கள் பழந்தமிழர் இனக்குழு வாழ்வின் மிச்ச சொச்சங்களாய் இருக்கின்றன. இத்தனையாயிரம் ஆண்டுகள் கழித்தும் இனக்குழு மரபுகளும் தொடர்ச்சிகளும் தமிழர், மலையாளி வாழ்விற் திரண்டு செழித்து விளங்குகின்றன. நாம் தாம் நம்மீது போர்த்திய சங்கதக் கட்டில் எதையும் உணராதுள்ளோம்.  

{ஓர் இடைவிலகல். பாண்டியர், சோழர், சேரர் என்பவை இனக்குழுப் பெயர்களே என்று ஏற்கனவே என் “சிலம்பின் காலம்” நூலிற் சொல்லி யிருக்கிறேன். பாண்டு = சாம்பல் > பாண்டியர் (சாம்பல் பூசியவர். நெற்றியில் இடும் திருநீறு இச்சாம்பல் தான்), கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியவர். [மஞ்சட்தூள் காடிச்செறிவிற் (acidic pH) பொன்னிறங் காட்டி, சுண்ணநீர் மீச்சிறிது கலந்த களரிச்செறிவில் (alkaline pH) குங்குமநிறங் காட்டும்], சாரல் = சந்தனம்; சாரலர்>சேரலர்>சேரர் (சந்தனம் பூசியவர்). தாங்கள் பூசிய அடையாளங்களாலே தான் இந்த 3 இனக்குழுக்களும் அறியப்பட்டனர்.

 இற்றைத் தமிழரும், மலையாளிகளும் மேற்சொன்ன மூன்றையும் தனியாக அணியாது கலந்தே பூசுகிறார். அதாவது, இனக்குழு அடையாளங்கள் இவரிடை முற்றிலும் விரவிப் போயின. இந்த அடையாளங்களுக்கும் சநாதன மதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. (ஆனாற் பலரும் இருப்பதாய் எண்ணுகிறார்.) இவற்றை வடநாட்டில் யாரும் தனிவாழ்வில் விரும்பி இந்த அடையாளங்களை அணிவதில்லை. (துறவியர் மட்டும் அங்கு விதி விலக்கு ஆவார்.) பொதுமக்களிற் சிலர் அப்படி அணிந்தாலும் அது தென்னாட்டின் தாக்கமாகவேயுள்ளது. சரியாகச் சொன்னால் தமிழர் இனக்குழுப் பழக்கங்கள் இந்தியப் பழஞ்சமயங்களுள் ஊடுறுவிக் கிடக்கின்றன என்பதே உண்மை.}

மதுரைத் திருமலை நாயக்கருடைய அமைச்சர் இராமப்ப ஐயரின் அரசாணையின் பின், பழனிக் கோயிலிற் பண்டாரப் பூசை நின்றே போயிற்று. (போகர் படிமம் மட்டும் இருக்கிறது. காஞ்சிச் சங்கராச்சாரியர் செயேந்திரர் அதனுட் புகுந்து உலோகத்திருமேனி உருவாக்கச் சொல்லி அதற்கே பூசைகளைச் செய்யப் பணித்து, விரும்பா விளைகள் ஏற்பட, ‘நவபாஷாணத்’ திருமேனிக்கே அடியார் மீளப் போய்விட்டார்.) மற்ற 5 படைவீடுகளிலும் பழனிக்கு முன்பே பண்டாரப் பூசை நின்று, பார்ப்பனப் பூசையே தொடர்கிறது. பல அம்மன் கோயில்களிலும் பார்ப்பனரல்லாக் குருக்கள் மாறிப் பார்ப்பனக் குருக்கள் நடைமுறைக்கு வந்து விட்டார். (சென்னைக்கருகில் பள்ளிப் படையான பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் 25 ஆண்டுகள் முன் பார்ப்பனப் பூசை கிடையாது. இப்பொழுதோ அது நடைபெறுகிறது. எல்லாங் காலத்தின் கோலம்.)

அறிவர், குயவர், வள்ளுவர், பண்டாரமெனப் பல்வேறு வகையார் பார்ப்பன மயமாகாக் கோயில்களின் வழிவழிச் சமயக்குருக்களாவர். எங்கள்பக்கத்தில் வாழ்வின் பெரும்பாலான நல்லவை, கெட்டவைகளுக்கு இக்குருக்களையே நாடுவர். பார்ப்பனவழிப் புரிசைகளுக்கு மட்டுமே பார்ப்பனக் குருக்களை அழைப்பர். சிவகங்கைப் பக்கம் பார்ப்பனரல்லாக் குருக்களை வேளகாரர் என்பர். வேள்வைக் -வேட்பைக்- இடைநின்று கடவுளுக்குச் சொல்வார் வேள காரராவர். வேள்வென்பது தமிழ்ப்பழக்கம். நீரையும், பூவையும் அட்டுவதும், பாக்கள்பாடுவதும் இதில் முகனை. வேள்வி வடக்கிருந்து வந்த பழக்கம். அழனியில் ஆகுதியிடுவதும், சங்கதத்தில் மந்திரம் ஓதுவதும் இதில் முகனை. சிவன் கோயிலில் வேளகாரர் பூசைசெய்தது பல்லவர் காலத்தின் முன் நின்றுபோனது போலும். வரலாற்றில் எப்பொழுது இது நடந்தது, பார்ப்பனக் குருக்கள் சேயோன், மாயோன் கோயிலுள் எப்போது நுழைந்தாரென அலசவேண்டும்.

வேளும்சடங்கு செய்வது வேள்வி. வேள்விசெய்தவர் வேள்தர் (>வேதர்); வேளும் போது (= வேண்டும் போது) கூறிய பரவு (pray) வாசகங்கள் வேள்தம் (>வேதம்., வித் எனும் கருத்துமுதல் வேரில் ”வேதம்” பிறந்ததாகக் கருத்துமுதல் உரையாளர் சொல்லப் புகுவார்; அது பொருந்தப் புகல்வதென நான் சொல்வேன். வேள்தல் (= வேண்டல்) - ஐயே நான் அடிப்படையாகக்குவேன். ஏனெனில், இன்றும் கடவுளை, தெய்வங்களை, வேண்டத்தான் செய்கிறோம். வேண்டல் என்பது வேதநெறியா, சிவநெறியா, விண்ணெறியா எனப் பாராத பொதுச் சொல். வேள்விகளுக்குச் சற்றும் தொடர்பிலா வகையில், இறைவனுக்கு இடையாளனாய் சங்க இலக்கியங்களில் கூறப்படும் வெறியாட்டு வேலனும் (நாட்டுப் புறங்களில் சாமியாடி என்பார்), இன்று வரை வேளன்>வேளான் எனப்படுகிறான்.  

சங்க இலக்கியத்தில் வேள்வி செய்யாது வேறு தொழிலில் ஆட்படும் பார்ப்பாரை வேளாப் பார்ப்பாரென்பார். இச்செய்திகளை ஒருங்கே எண்ணின், வேளுதல்  வினையின் ஆழம் புரியும்.] "வேள்வியின் மூலம் வேளுதல்" என்பது ஒருவகை நெறி. வேள்வி அல்லாது இறைவனை வேண்ட முடிவது இன்னொரு வகை நெறி. முன்னால் சொன்னபடி, மேல்தட்டு வருக்கத்திற்கு மட்டுமே வேள்வி பயன்பட்டது. வேள்வியில் "எஜமானன் - யாகம் ஏற்படுத்துபவன்" என்ற ஒன்று எப்பொழுதுமுண்டு. பொதுமக்கள் பரவுவதாய்ச் சொல்லி யாகத்தைச் செய்ய முடியாது. {yaagam is a structured way of praying; it has series of rites.]

முருகன் கோயிலில் அணங்கு பற்றிப் புறம் 299 பேசுவதால், பார்ப்பனரல்லா நடைமுறைகள் பார்ப்பன மயமான சேயோன் கோயில்களில் ஊடுறுவி நிற்பதைப் பேசும் தேவை யெழுந்தது. அணங்கு பற்றிய தவறான புரிதல் பல மேனாட்டு ஆய்வாளருக்கு உள்ளது. தமிழரிற் சிலரும் நம் மரபுகளைக் கணக்கிற் கொள்ளாது மேலையர் ’கண்டுபிடிப்புக்களைச்’  சிக்கெனப் பிடித்து ’எங்கெழுந்து அருளுவதினியே’ என்று தொங்குகிறார். அணங்கோடு முருகனைச் சேர்த்துப் பொருள் காண வேண்டுமெனில் ”சேயோன், மாயோன் கோயில்கள் தெற்கில் இனக்குழுக் கோயில்களாகத் தோற்றங் கொண்டன, அதன் மிச்ச சொச்சங்கள் இன்னுமிருக்கின்றன” என்பதையும். வடக்கிலும் தெற்கிலும் உள்ள சமய வேறுபாடுகளை வரலாற்று நெறிப் படியும் உணரவேண்டும்.

அன்புடன்,

இராம.கி.


2 comments:

tekvijay said...

// மாணிக்கவாசகர் கி.பி.3/4ஆம் நூற்றாண்டினரென நம்புபவன் நான். அவருக்கு அப்புறமே சிவநெறி மெய்யியல் கிளர்ந்திருக்க வேண்டும். ( 9 ஆம் நூற்றாண்டு மணிவாசகர் என்ற கூற்றே சிவநெறியாரை பெரும் நட்டாற்றில் தவிக்கவிடுகிறது. ஆய்விலார் இன்னும் தடுமாறுகிறார்.)//

இது ஆச்சரியமூட்டும் பார்வை! ஐயா, மாணிக்கவாசகரைத் தொடர்ந்து பிற சமயக் குரவர்கள் காலமும் உங்கள் பார்வையில் கூற முடியுமா? குறிப்பாக சம்பந்தர் & காரைக்கால் அம்மையார்...

திருப்புகழ் அருளிய அருணகிரியின் காலமும் பலபேர் சொல்வதுபோல் 15ஆம் நூற்றாண்டு இல்லை, 13ஆம் நூற்றாண்டு, அவர் புரந்தரதாசருக்கும் முந்தையவர் என Carnatic Music and Tamils எனும் நூலில் TV Kuppuswami சில சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

சிலம்பைத் தொடர்ந்து, இவர்களின் காலக் கணிப்பையும் தாங்கள் இந்த வலைப் பக்கத்தில் எழுத வேண்டுகிறேன், நன்றி ஐயா!

(முகநூலில் எழுதினால் அது ஒரு ஆறென ஓடிக்கறைகிறது, தேவையின்போது சுட்டியை பிடிக்கமுடிவதில்லை, இங்கென்றால் மிகவேகமாக கண்டடைய முடிகிறது)

இராம.கி said...

இதே தளத்தில் மாணிக்கவாசகர் காலம் பற்றிய தொடர் உண்டு. அதுவும் முடிவுபெறாத் தொடரே. அதில் நீங்க்ள் கேட்கும் கேள்விக்கு விடையுண்டு.