Sunday, November 08, 2020

Stationary shop - 1

ஒரு காலத்தில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நாட்களில் சந்தைகள் நடைபெறும். (இன்றும் கூட நம் நாட்டுப் புறங்களில் வாரச் சந்தைகள் நடை பெற்றுக் கொண்டுள்ளன.) ஞாயிற்றுக் கிழமை ஓரூரில், திங்கட் கிழமை வேறூரில், ....... முடிவில் சனிக்கிழமை இன்னோரூரில் எனச்  சுழற்சி முறையில் ஒரு வட்டாரத்தில் சந்தைகள் நடைபெறும். வெவ்வேறு விற்பனையர் தம் பொருள்களை வண்டிகளில் ஏற்றி வருவர், அவருக்கென ஓரிடத்தை சந்தையில் வாடகைக்கு எடுத்து, தம் பொருள்களைப் பரப்பி காலையிலிருந்து மாலைவரை விற்பனை நடக்கும்.  10/12 மணி நேரங்கூட சந்தைகள் நடக்கும். விற்பனையாகாப் பொருள்களை மீண்டும் வண்டியில் போட்டு, மறுநாள் வேறூரில் நடக்கும் சந்தைக்கான புதுப்பொருள்களையும் ஏற்றி வணிகர் கிளம்புவர், மறுநாள் இன்னோர் ஊர், இன்னொரு சந்தை. தொடர்கதையாய் நம்மூர்களில் நடக்கும். கடை என்பது ஏதென்று கேட்டால் அது பெரும்பாலும் அவர்களின் வண்டி தான்.  தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதுபோல் தான் நடந்தது. வண்டியிருக்கும் இடமே கடை. 

இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, வியத்நாம், சீனம், சப்பான், பாரசீகம், அரேபியா போன்ற நாடுளிலும் இதுபோல் நடந்தது. இரோப்பா, அமெரிக்காவிலும் கூட இது நடந்தது. வண்டி வண்டியாய்த் திரண்டு ஊரூராய் விற்றுப் போவதை அக்காலத்தில் சாத்துகள் என்றார். சாத்தன்= சா(ல்)த்துவோன்= விலை சால்த்தி (சாற்றி) விற்கிறவன். (என் ”சாத்தன்” தொடரையும். ”பாசண்டச் சாத்தன்” தொடரையும் படியுங்கள். விற்றலும் சாற்றலும் புரியும்.) நம் சாலுக்கும் ஆங்கிலத்தின் sale க்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு,. சாத்தன் வடக்கே சேத் என்றாவான். நம்மூரில் செட்டி என்போம். நம்மூரில் தொடங்கிய வணிக முயற்சிகளை நாம் அறியாததால் இன்று புறம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் வணிக மொழியாய் ஒரு காலத்தில் தமிழே இருந்தது. தக்கணப் பாதை பற்றியும் நம் பாலைத்திணைப் பாடல்கள் பற்றியும் ஐயனார் தொடர்பான செய்திகளையும் பல முறை சொல்லி விட்டேன். புரிந்து கொள்ளத் தான் பலரும் தயங்குகிறார். https://valavu.blogspot.com/2018/09/liberty-freedom-independence.html. 

ஒவ்வொரு நாட்டிலும் நகரங்கள் ஏற்பட்ட பின், சில குறிப்பிட்ட பொருள்களை விற்கும் கடைகள் சிற்றூர் வாரச் சந்தைகளுக்கு நகர்வதற்கு மாறாகப் பேரூர்களில் நிலைகொள்ளத் தொடங்கின. கோயில் தேர் நிலைகொள்ளும் இடம் நம்மூரில் தேர்நிலை, தேர்முட்டி, தேர் அடை/அடி என்று சொல்லப்படுமே? நினைவு வருகிறதா? நிலையம் (station) என்ற சொல் இப்படி நிலை கொண்டதில் பிறந்தது, இன்றுங்கூட  நம் நகரக் கடற்கரைப் பகுதிகளில் தள்ளுவண்டிகள் நிலைகொண்டு தான் தம் விற்பனையைத் தொடர்கின்றன. தள்ளுவண்டி> நிலை கொள்ளல்> நிலைக்கடை என்பது ஒருவித எவ்வளிப்பு (evolution) வளர்ச்சி. மக்களை நோக்கி விற்போர் போவது முதல் நிலை. விற்போரை நோக்கி வாங்குவோர், நுகர்வோர் போவது அடுத்து அமையும் வளர்ந்த நிலை. 

அழிந்து போகும் காய்கறி, சமையற் பொருள் தவிர, குறிப்பிட்ட காலம் நீடித்து நிலைக்கும் அழியாப் பொருள்களுக்கு (non-perishables), குறிப்பாக, சவளி, தொழில் ஆயுதங்கள், அணிகலன்கள், இருக்கைகள், அறைகலன்கள் போன்றவைகளுக்குப் பெருநகரங்களில் நிலைக்கடைகள் வைக்கத் தொடங்கினர்.  நகரக் கடைத் தெருக்கள் பெரிதாகின. ஒவ்வொரு கடைக்கும், தனிக் கட்டிடம், முத்திரை, இலச்சினை, .கொடி, பதாகை என அடையாளங்கள் ஏற்பட்டன. கப்பல், சாத்துகள் மூலம் இலக்கிப்பு (logistics = ஓரிலக்கைச் சென்று அடைதல்) ஏந்துகள் எளிதாக ஏற்படத் தொடங்கின. இலக்கிப்பும், போக்கு வரத்தும் தொழிலாகின. நகரங்கள் பெரிதாகின. வயிற்றுப் பசிபோக்கும் வேளாண்மைக்கு (subsistence agriculture) மாறாய்  வேளாண்மை இல்லாதோருக்கு அளிக்கும் வகையில் வேளாண் புதுக்கம் (agricultural production) எழுந்தது. 

நெய்தல் திணையே மருதத்திற்கு வழிகாட்டத் தொடங்கியது. செல்வர் எனும் புது வகையார் குமுகத்தில் நிறைய உருவாகத் தொடங்கினார். வெவேறு பண்டங்கள் விற்கும் நிலைக்கடைகள் அந்தந்தப் பண்டப் பெயராலே அழைக்கப் பட்டன. சவளி விற்கும் நிலைக்கடை சவளிக்கடை ஆனது.  அணிகலன்கள் விற்குங் கடை நகைக்கடையானது, இருக்கைகள், அறை கலன்கள்  (furnitures) என வீட்டுப் பண்டங்கள் (household articles) விற்குங் கடை அறைகலன் கடையானது, ஆயுத/கருவிக்கடை என வேறுவகை விரிந்தது. இற்றைக் குமுகாயத்தில் பெரும் பெரும் கட்டடங்களில் இக்கடைகள் இருக்கலாம். ஆனால் அன்றைக்கு இவை மரம், தகரத்தால் செய்யப்பட்ட ”பெட்டிக் கடைகளாவே” இருந்தன.

பெட்டிக் கடை என்பது கூட ஒருவிதப் பேச்சுத்திரிவு தான், அடிப்படையில் அவை பீடக் கடைகள் அல்லது பீடிகைகள். (கோயில் தேர்களை இன்றும் பீடங்களுக்கு/ நிலைகளுக்கு/ முட்டிகளுக்கு/. அடிகளுக்கு அருகில் தான் நிறுத்துகிறோம். அது போல் விற்பனை வண்டிகளை பீடங்களுக்கு (பீடம் = திரண்டது, உயர்ந்தது) அருகில் தான் நிறுத்தினார். நாளடைவில் பீடங்களின் மேலேயே கடைகள் எழத் தொடங்கின. (கோயம்பேட்டில் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் காய்கறிக் கடைகளைப் பார்த்திருக்கிரீர்களா? கடைகள் பீடங்களில் தான் இருக்கும், நாம்  இருபக்கப் பீடங்களுக்கு நடுவில் நடந்துகொண்டு காய்கறிகளைப் பார்த்து வருவோம். காய்கறிக்கு மட்டுமில்லாது பலவகைப் பண்டங்களுக்கும் ஆன பீடங்களையும் கற்பனை செய்யுங்கள். புரியும். ) பீடிகைகள் என்பவை நிலைப்பட்ட கடைகள். விவரம் அறியாதோர் சிறு பீடிகைகளைப் பெட்டிக்கடைகள் என்றார். 

அக்காலத்தில் பெருநகரங்கள் கழிமுகத்திற்கு அருகில், ஆற்றங்கரைக்கு அருகில், நீர் மண்டும் இடங்களில் இருந்தன. அவ்விடங்களில் திடீரென நீர் உள் நுழைந்து விடலாம்  அப்படியாகுமெனில், பீடத்தில் பொருள் வைக்காத கடைகளில் சேமித்த பொருள்கள் அழிந்து விடலாம். எனவே மேடுகளை (பீடங்களை) அமைத்து அவற்றின் மேல் மரத்தாலான கடைகளைக் கட்டியிருப்பார். எங்கள் ஊர்ச் சந்தையில் மண்மேடுகளில் பண்டம் விரித்து விற்பதைக் கண்டுள்ளேன். (இவற்றின் விவரிப்பைப் படிக்க வேண்டுமானால் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களைப் படியுங்கள். இல்லாவிடில், குறைந்தது செய மோகனின் ”கொற்றவைப்” புதினத்தையாவது படியுங்கள். புகார், மதுரை, வஞ்சி போன்றவற்றின் விவரிப்பு புரியும்.) உங்கள் புரிதலுக்காக, சிலம்பில் வரும் பீடிகைக் காட்டுகளைக் கீழே கொடுத்துள்ளேன். 

மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் - புகார்:0/21

பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் - புகார்:5/41

காவல் பூதத்து கடை கெழு பீடிகை

   புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புகார்: 5/67,68

முந்த சென்று முழு பலி_பீடிகை - புகார்:5/78

நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு - புகார்:5/86

மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் - புகார்:6/122

விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை

   கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி - மது: 12/43,44

பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் - மது:15/60

பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண் - மது:16/104

வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி - மது:22/77

பீடிகை பீலி பெரு நோன்பாளர் - வஞ்சி:26/226

சித்திர விதானத்து செம் பொன் பீடிகை

   கோயில் இருக்கை கோ_மகன் ஏறி - வஞ்சி: 27/156,157  

பீடிகைத் தெருவும், பீடிகை மறுகும் (மறுகில் பிறந்த மார்க் என்ற சொல்லை வட புலத்தார் எடுத்துக் கொண்டார்.) மேலுள்ள காட்டுகளால் புரியும். சரி, பல்வேறு கடைகளின் பெயரழைப்பைப் பார்த்தோம். அக்காலத்தில் ”stationary” கிடையாதா, எனில், சற்று விந்தையாய் விடைசொல்ல வேண்டி வரும்.  

அன்புடன்,

இராம.கி.


No comments: