Friday, August 14, 2020

valve = வாவி

valve (n.) என்ற ஏந்து (equipment) பற்றி ஒரு கேள்வி தமிழ்ச் சொல்லாய்வுக் களத்தில் எழுந்தது. ஆங்கிலத்தில் அதன் சொற்பிறப்பை late 14c., "one of the halves of a folding door," from Latin valva (plural valvae) "section of a folding or revolving door," literally "that which turns," related to volvere "to roll," from PIE root *wel- (3) "to turn, revolve" என்று சொல்வார். 

தமிழில் வளைவுப் பொருளிற்குள் நான் செல்லவே இல்லை. மாறாக நீர்ப்பிடிப்பிற்குள் சென்றேன். எங்கள் ஊர்ப்பக்கம் ஏரி, கண்மாய், குளம், ஊருணி என்று பல்வேறு நீர்நிலைகள் உண்டு, எங்கள் பகுதி பாலை நிலம். மழைக்காலத்தில் பெய்யும் நீரைப் பிடித்து வைத்துக்கொள்வோம். மற்ற காலங்களில் அதைப் பயன்படுத்துவோம். கண்மாயிலிருந்து திறந்துவிடும் நீரையும், ஓடைகள், கால்வாய்கள் வழி, சில இடங்களில் மண்ணை உடைத்து, சில இடங்களில் அடைத்துத் திருப்பி விடுவோம். அதாவது ஓடைகளைச் சில இடங்களில் பற்றிக்கொள்வோம். சில இடங்களில் அடைத்துவிடுவோம். இப்படித்தான் அங்கு பாயனம்>பாசனம் நடக்கிறது.valve இன் செயற்பாடும் இது தான். இதற்குப் பெரிய கம்பசூத்திரம் தேவையில்லை. எங்கு பற்றவேண்டும், எங்கு விடவேண்டும் என்று புரிந்தால் போதும். 

தமிழில் வல்வுதல்>வவ்வுதல் என்பது ”பற்றிக் கொள்ளுதல் to take hold of” என்பதைக் குறிக்கும். ”கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி” (அகநா.348.23). "அரசர் செறின் வவ்வார்” (நாலடி 134), “வவ்வித் துழாயதன் மேல் சென்ற” (திவ்.பெரியதிரு. 9,4,4) என்று பல காட்டுகள் இதற்குண்டு. பற்றிக் கொள்ளும் செயலைத் தமிழில் அவ்வுதல், கவ்வுதல், வவ்வுதல் என்று 3 வழிகளில் சொல்வோம். இவற்றில் எது சொன்னாலும் சரியே. 20 ஆண்டுகளுக்கு முன் நான் வவ்வுதலைத் தேர்ந்தேன். அவ்வளவாகப் பயன்படாத சொல் அது என்பதே காரணம். எனவே இதிலிருந்து பெயர்ச்சொல் உருவாக்கி வாவி என்று பயனுறுத்தினேன் வவ்வுதலை அறியாதோர், ”நான் ஆங்கில ஒலியில் சொல் படைக்கிறேன்” என்பார். சொல்லிப் போகட்டும். 

valve இற்குள்ளே ஒரு விளவம் (fluid) வருகிறது. வெளியே அனுப்ப பல்வேறு வழிகள் இருக்கலாம். அவற்றில் ஏதேனும் ஒருவழியைப் பற்றிக்கொண்டு மற்ற வழிகளை அடைக்க வேண்டுவதே valve இன் வேலை. இதற்கான சொல்லைத் தமிழில் ஆக்கும் போது, “பற்றிக் கொள்ளும்” செயலைச் சொல்லியும் சொல் ஆக்கலாம். அடைக்கும் செயலைச் சொல்லியும் ஆக்கலாம். பல வழிகள் இருக்கும் போது பற்றிக் கொள்வதைச் சொல்வது நலம் பயக்கும். சொல் நீளாது, வவ்வும் தொழிலைச் செய்யும் ஏந்து வாவு>வாவி (valve) ஆகும். [படுவது பாடு என்றும் அவ்வுவது ஆவு>ஆவி, கவ்வுவது காவு>காவடி என்றும் ஆவது போல் இதைப் புரிந்துகொள்ளுங்கள்.] valve ஓடு சேர்த்து பல்வேறு கூட்டுச் சொற்களை வேதியாலைகளில் கையாளுவோம். எல்லா valve களின் முடிவிலும் வாவி எனச் சிறு சொல் இருப்பது பயன்கொடுக்கும். ஒருசில வாவிகளைக் கீழே பட்டியலிடுகிறேன். 

அமைப்பால் வழங்கும் சில வாவிகள்: 

ball valve = பந்து வாவி 
butterfly valve = பறவட்ட வாவி (வண்ணத்துப் பூச்சி என்று சொல்லமுடியாது. இது திகிரி-disc-போல் உள்ளது. பறக்கின்ற வட்டம் எனவே பறவட்டம்.) 
choke valve = சொருக்கு அல்லது அடைப்பு வாவி (சொருகு என்றும் சொல்லலாம்; சொருக்கு என்றும் சொல்லலாம்) 
gate valve = கதவு வாவி 
globe valve = கோள வாவி 
knife valve = கத்தி வாவி 
needle valve = ஊசி வாவி 
pinch valve = பிதுக்கை வாவி 
piston valve = பொலுத வாவி (சரியான சொல்லைப் பொது அவையில் சொல்லமுடியாது என்பதால் இடக்கர் அடக்கலாய்ப் பொலுத என்று மாற்றியுள்ளேன்.) 
plug valve = புழுக்கை வாவி 
solenoid valve = சுருள்காந்த வாவி 
spool valve = பொந்து வாவி 

செய்முறையில் வழங்கும் சில வாவிகள்: 

check valve = துழவு வாவி 
flow control valve = விளவக் கட்டு வாவி 
pr.reducing valve = அழுத்தம் குறைக்கு வாவி 
thermal expansion valve = தெறும விரிப்பு வாவி 
safety or relief valve = சேம அல்லது வெளிவு வாவி 
 sampling valve = மாதிரியெடுப்பு வாவி 

ஆனாலும் சிலருக்கு நான் சொல்வது புரிபடுவதில்லை. “வாவி ஆங்கில ஒலிப்புக்கு இணையாக உள்ளது. வாவி என்றால் நீர்நிலை, குளம் என்றும் பெயர் உண்டே?” என்று ஒரு நண்பர் வழக்கம் போற்கேட்டார். 

என் மறுமொழி இது: 

“வாவி = குளம், நீர்நிலை என்ற சொல் எப்படி வந்ததென்று ஒருமுறையாவது எண்ணிப் பார்த்தீர்களா? நீங்களாக ஏதோவொரு ஓரப் புரிதலில் கருத்துச் சொன்னால் எப்படி? அவை நீர்ப் பிடிப்புகள் தானே? பிடித்தலும் பற்றலும், வவ்வுதலும் ஒன்று தானே? நான் வேறு ஏதாவது ஒரு மொழி் பேசுகிறேனா? நீரைப் பற்றிக்கொள்வதை நீரை வவ்விக்கொள்வது என்று எனக்குத் தெரிந்த குறைத் தமிழில் கட்டாயம் சொல்லலாம். எனவே நீர்ப்பிடிப்பும் வாவியானதில் வியப்பில்லை. இன்னொன்றும் பாருங்கள் நீரை நிலைத்துப் பிடிப்பது மட்டுமே வாவியல்ல, ஆற்றோடையும் கூட வாவி தான். ஒரு நல்ல அகரமுதலியில் தேடிப் பாருங்கள். இதெல்லாம் இராம.கி.யின் ஆக்கங்கள் அல்ல, தூக்கித் தள்வதற்கு, “வண்டார் குவளைய வாவியும்” என்பது சீவக 337 இல் வரும் சொல்லாட்சி. 

 ”நீங்களெல்லாம் சிந்தாமணியில் வரும் நீரோடை யை ஏற்பீர்கள்? ஆனால் இராம.கி. அடையாளங் காட்டிய, valve இன் வழி ஏற்படும் நீர்ம ஓட்டத்தைத் தவிர்ப்பீர்கள்? ”என்றால் எனக்கு முற்றிலும் வியப்பே ஏற்படுகிறது. நாம் இந்த உலகில் தான் இருக்கிறோமா? அல்லது இல்லையா? நீங்கள் சிறந்த பழஞ் சொல்லாட்சிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, உங்களுக்குத் தோன்றும் விந்தைப் புரிதலில் சொற்களைத் தேடுவது உங்கள் உகப்பு என்று நான் நகர்ந்து விடுவேன். வாவி என்ற சொல்லை நான் உரிய பொருள் கொண்டே ஆழப் புரிந்து இத்தனை காலம் (20 ஆண்டுகள்) பயனுறுத்தி வருகிறேன். அப்புறம் ஒன்று சொல்லவேண்டுமே? ” இந்த ஆங்கில ஒலிப்பு: என்பதைக் கேட்டுக் கேட்டு எனக்குப் புளித்துவிட்டது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று நேரடியாய்ச் சொல்லிப் போங்கள். அது இருவருக்கும் நல்லது”. 

 இதற்கு நண்பரின் மறுமொழி: 

 “ஐயா, பொறுத்தருள வேண்டுகிறேன், உங்களின் ஆழ்ந்த வேர் சொல்லாய்வு என்னை வியக்க வைக்கிறது. வாவிப் பொருள் மட்டுமே அறிவேன் அதன் ஆழ்ந்த வேரறியேன். இன்று தங்களால் தெளிவாகியது. மிக்க நன்றி ஐயா. Catchment area என்பதற்கு ஏற்ற தமிழ்ச்சொல் நீர்பிடிப்புப் பகுதியை வாவி என அழைத்தலாகும்.” 

 என் மறுமொழி: 

நான் வேரறிந்து சொல்லிப் பலனென்ன? அது யாருக்கு உறைக்கிறது? ”நான் ஆங்கில ஒலிப்பில் சொல்படைக்கிறேன்” என்று யாரோவொரு விவரங் கெட்டவர் சொன்னதை நம்பித் தானே, வாவியை மறுத்தீர்கள்? உங்களிடம் நான் எதைச்சொல்லி என்ன பயன்? அவதூறுகளே நிலைக்கின்றன.

முடிவாக ஒன்று சொல்லவேண்டும். ”தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் இருக்கும் உறவைக் காட்டிவிடக் கூடாது” என்ற தீண்டாமைக் கொள்கைச் சிலரைக் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட வைக்கிறது என்பது நன்றாகவே புரிகிறது.  “அது செய்யக்கூடாது, இது செய்யக் கூடாது” என்று வரும் வாய்ப்புக்களைத் தவறவிட்டு ஒழுமுழ நீளத்திற்கு இன்னும் எத்தனை நாள் சொல்படைப்பார்கள் என்று தெரியவில்லை. வாவி இரண்டெழுத்துத் தான். ”அது வேண்டாம் ஆங்கிலம் மாதிரி இருக்கிறது” என்று சொல்லி நீளச் சொற்களை நாடிப் பலரும் தமிழைக் காப்பாற்றுகிறார் போலும். 

அன்புடன், 
இராம.கி.

No comments: