Friday, August 07, 2020

புனிதம்

இச்சொல் பற்றி தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்கப் பட்டது. அது ”புண்யம் எனும் சங்கதச் சொல் தொடர்பானது” என்று ஒருவர் கூறினார். நானறிந்தவரை அது தவறு. ஒரு சொல்லைச் சங்கதம் என்றுசொல்ல விழைவோர் கூடியமட்டும்  இணையச் சங்கத அகரமுதலிகளில் சொல்லைச் சரிபார்த்துப் பின்னர் சொன்னால் நன்றாக இருக்கும். மாறாக, கேள்விப் பட்டதையெலாம் வைத்துத் தான்தோன்றியாய்ச்  சொல்ல முற்படுவது பலநேரம் முரணாக அமைந்து விடும். மீண்டும் சொல்கிறேன் புண்யத்திற்கும் புனிதத்திற்கும் எத்தொடர்பும் இல்லை. சங்கத அகரமுதலியே அப்படிச் சொல்லவில்லை. புனிதமெனும் சொல் பெரும்பாலும் வேற்றுருவில் தமிழில் எழுந்து சங்கதம் போய்த் திரிந்து, பின் மீண்டும் தமிழுக்கு மாற்றுருவில் வந்தது. 

வேள்வி செய்வதை  நாடும், இறப்பின் பின்னால் உடலை எரிக்கும், ஆரியரின் பண்பாட்டில் படிமைகள் என்பன தொடக்க காலத்தில் கிடையா. தமிழருக்கும் அவர் தொடர்பாளருக்கும் மட்டுமே, இறந்தோர் உடலைப் புதைக்கும் காரணத்தால், நடுகற்களும், படிமைகளும் உண்டு, ஒவ்வொரு நினைவு நாளிலும். நடுகல்லை/ படிமையைக் கழுவித் துடைத்துப் பொட்டிட்டு, துணி கட்டி, அலங்காரம் பண்ணிப் பூச்சூடி, படையலிட்டு வருவது இன்றுமுள்ள நாட்டார் பழக்கம். இப்பழக்கங்களைப் படிமைகளுக்கும் செய்து நாம் அழகு பார்ப்போம். இற்றைக் கோயில்களிலும் இதையே செய்கிறோம். நடுகல் பேணுதலில் வந்த பழக்கம் இதுவாகும். இதற்குச் சொல்லைச் சங்கதத்தில் தேடுவது பொருளற்றது/

படிமையைக் கழுவித் தூய்மை செய்வதை பூசுதல் என்றே தமிழில் சொல்வர். ”நீரான் வாய் பூசுப”-நான்மணிக் கடிகை 35. ”பூசிக் கொளினும் இரும்பின் கண் மாசொட்டும்”-நான்மணிக் 99 . தரை மெழுகுதலும் தமிழில் பூசுதல் எனப்படும். ”புனலொடு விரவியே பூவின் அல்லது” புரலிங். இட்டலிங். 37 . சந்தனம், நீறு போன்றவற்றைப் படிமையில் அல்லது உடலில் தடவுவதும் ”பூசுதல்” எனப்படும் ”நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை” - தேவா.627. ”பூசு” என்பது மற்ற தமிழிய மொழிகளிலும் உண்டு. ம. பூசுக. க. பூசு; கூசு; தெ. பூயூ, து புசுனி, பட. கூசு. இது புல் எனும் பொருந்தற் கருத்தில் எழுந்த சொல். நடுகல் பரப்பில் நீர், சந்தனம், நீறு போன்றவற்றைப் பொருந்திப் பரவுவது. புல்>புள்>புய்>*(பூய்)>பூசு>பூசு-தல் என்று இச்சொல் வளரும். இதன் பெயர்ச்சொல் தான் பூசை. அதைச் சிலர் பூசெய் என்றெலாம் தவறாய்த் திரிப்பார். 

எச்சிலைத் தன் முன்னங்காலால் எடுத்து முகத்தில் பூசிக்கொள்ளும் விலங்கும் பூசை எனப்பட்டது. *பூய்/பூசு என்பது யகர>ஞகர>நகரத் திரிவில் பூசு>பூஞு>பூநு என்று திரியும். பூசுதலின் பெயர்ச்சொல்லான பூசை, படிமங்களுக்குச் செய்யும் கடனோடு நின்றுகொண்டது  பூசை> பூஞை> பூநை> பூனை என்று இயல்பாய்த் திரியும் சொல்லோ விலங்கிற்குப் பயனாகியது, தமிழில் பூசையும், பூனையும் இன்றும் புழக்கத்தில் வெவ்வேறு பொருளைக் குறிப்பன.  ஆனால் சங்கதத்தில் *பூய் என்ற தமிழ்வேர், பூ என்ற தாதுவாய் மலர்ந்திருகிறது  இதில் உருவான சொற்களாய், (https://sanskrit.inria.fr/MW/161.html#puu) மோனியர் வில்லியம்சில் கீழ்க்கண்டவாறு போட்டிருப்பர்.

पू [ pū ] [ pū ]1 Root cl. [9] P. Ā. ( Lit. Dhātup. xxxi , 12) [ punā́ti ] , [ punīté ] ( 3. pl. Ā. [ punáte ] Lit. AV. , [ punaté ] Lit. RV. ; 2. sg. Impv. P. [ punīhi ] Lit. RV. , [ punāhí ] Lit. SV.) ; cl. [1] Ā. ( Lit. xxii 70) [ pávate ] ( of P. only Impv. [ -pava ] Lit. RV. ix , 19 , 3 , and p. gen. pl. [ pavatām ] Lit. Bhag. x , 31 ; p. Ā. [ punāná ] below , [ pávamāna ] see p. 610 , col. 3 ; 1. sg. Ā. [ punīṣe ] Lit. RV. vii , 85 , 1 ; pf. [ pupuvuh ] . [ °ve ] Lit. Br. ; [ apupot ] Lit. RV. iii , 26 , 8 ; aor. [ apāviṣuḥ ] Subj. [ apaviṣṭa ] Lit. RV. ; fut. [ paviṣyati ] , [ pavitā ] Gr. ; ind.p. [ pūtvā́ ] Lit. AV. ; [ pūtvī́ ] Lit. RV. ; [ pavitvā ] Gr. ; [ -pū́ya ] and [ -pāvam ] Lit. Br. ; inf. [ pavitum ] Lit. Br.) , to make clean or clear or pure or bright , cleanse , purify , purge , clarify , illustrate , illume (with [ sáktum ] , " to cleanse from chaff , winnow " ; with [ krátum ] or [ manīṣā́m ] , " to enlighten the understanding " ; with [ hiraṇyam ] , " to wash gold " ) Lit. RV. ; (met.) to sift , discriminate , discern ; to think of or out , invent , compose (as a hymn) Lit. RV. Lit. AV. ; (Ā. [ pávate ] ) to purify one's self. be or become clear or bright ; (esp.) to flow off clearly (said of the Soma) Lit. RV. ; to expiate , atone for Lit. ib. vii , 28 , 4 ; to pass so as to purify ; to purify in passing or pervading , ventilate Lit. RV. (cf. √ [ pav ] ) : Pass. [ pūyáte ] , to be cleaned or washed or purified ; to be freed or delivered from (abl.) Lit. Mn. Lit. MBh. : Caus. [ paváyati ] or [ pāvayati ] ( ep. also [ °te ] ; aor. [ apīpavat ] Gr. ; Pass. [ pāvyate ] Lit. Kāv.) , to cleanse , purify Lit. TS. Lit. Br. Lit. : Desid. , [ pupūṣati ] , [ pipaviṣate ] Gr.: Desid. of Caus. [ pipāvayiṣati ] Gr. ( ( cf. Gk. 1 ; Umbr. (pir) ; Germ. (Feuer) ; Eng. (fire) . ) )
  .           
தவிர,  पुनीत [ punīta ] [ punītá ] m. f. n. cleaned , purified Lit. MBh. என்றும்  கொடுத்து இருப்பர். பூவிலிருந்து புனித எப்படி வந்ததென்று அங்கு சொல்லமாட்டார். தமிழில் சொல்வது எளிது. பூசு-தல் வினையிலிருந்து பூசிதம் என்ற பெயர்ச் சொல் எழலாம். பூசைக்கு உரியவர். பூசிக்கப் படுபவர் என்றதற்குப் பொருள் ஆகும். முன்சொன்ன ய>ஞ>ந திரிவில் அது பூசிதம்>பூஞிதம்>பூநிதம் என்று ஆகும்.  பெரும்பாலும் பூநிதமே வடக்கே கடன் வாங்கப்பட்டு, முதலெழுத்தைக் குறிலாக்கி புநித என்றாகி இருக்கவேண்டும். மீண்டும் தமிழில் கடன்வாங்கிப் புநிதவைப் புனிதம் ஆக்கியுள்ளோம். பேசாமல் பூசிதம் என்று சொல்லலாம். சங்கதத்தில் பூசை, பூசையர் என்பதையும் வேறுவகையில் பூஜ்ய, பூஜ்ய(ர்) என்றாக்குவார். பூஜ்யஸ்ரீ என்பது நம் பூசிதத்திற்கு இணையாகவும் வேறு வகையில் ஆளப்படும். பேரன் தாத்தனுக்கு முந்தி என்று இன்று நம் காதில் சிலர் பூசுற்றிக் கொண்டிருக்கிறார்.  

ஒரு காலத்தில் நான் படித்த St Joseph's college ஐ புனித வளனார் கல்லூரி என்று சொல்வோம். சிலர் தூய வளனார் கல்லூரி என்றுஞ் சொல்வர். மேலே எழுந்த புரிதலுக்குப் பின் பூசித வளனார் கல்லூரி அல்லது தூய வளனார் கல்லூரி என்று சொல்லுமாறு பரிந்துரைக்கிறேன்.       

No comments: