Thursday, August 06, 2020

இராமேசம் - 3

கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப் பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியானது.  இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் எனப் பல்வேறு பொருள்களுண்டு. இல்> ஈல்> ஈர்>  ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக் குடம்= ஓட்டைக் குடம், இல்லப் பட்டது இல். மலைகளிற் குகைகள் உள்ளனவே? இயற்கையாய் இருந்தாலும் சரி, செயற்கையாய் இருந்தாலும் சரி, அவை தாம் முதலில் உருவான இல்கள். மாந்தனாற் கட்டப்பட்ட மற்றவையெல்லாம் அப்புறம் எழுந்தவை. இல்லியது இல். கல்லில் தோண்டியது, துளைக்கப் பட்டது இல். இல்>ஈல்>ஈ என்றாலும் குகைப் பொருளுண்டு. குகையைப் பார்த்தே வீடு, மனைக் கட்டுமானங்கள் எழுந்தன.

”இல்லெனில் இடமென்றும்  பொருளுண்டு. இருத்தல் வினையும் இல்லிலிருந்தே இல்> இர்> இரு எனத் தோன்றியது. இருத்தலுக்குப் பகரியாய் ’குத்த வைத்தல்’ என்பார்.. இருந்தல் = குந்தல்; உள்ளுதலிருந்து உட்கார்தல் எழுந்தது போல் இல்லுதலில் இருந்து இருத்தல் எழுந்தது.” இல் தமிழ்ச்சொல் மட்டுமல்ல, தமிழிய மொழிக் குடும்பச் சொல்லும் தான். ம.இல்; க. இல், இல்லு; தெ. இல்லு; து. இல்லு; கோண். இல், இந்த்; பர் இல், பொதி (கூரை0; நா. எல்ல; கொலா.எல்ல; கூ.இடு; குவி. இல்லு.

இல்>ஈல்>ஈள்; ஈள்தல்>ஈளுதல்>ஈட்டுதலின் கருவிப் பெயர் ஈட்டி. ஈல்தல்/ஈர்தல் என்றால் பிரித்தல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஈல்>ஈர்>ஈ = பிரித்தல், பிளத்தல்”

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின் 
                          - திருக்குறள் 334

இல்> ஈல்> ஈலி. ஈலி எனில் கைவாள் (sword), சுரிகைப் (dagger) பொருள்களுண்டு. ஈர்தல் = இரண்டாக்கல். பனை, தெங்கு, ஈச்சை போன்றவற்றின் ஓலைக் காம்பை இரண்டாய்ப் பிரிப்பதால், ”ஈர்க்கு” எழும். ஈரும் பொருள் நிறைந்த மரம் ஈந்தாகும். பேச்சு வழக்கில் ஈச்ச மரம். ஈர்- இரு- இரள்- இரண்டு என்ற சொற்களும்  இல்- ஈலிற் பிறந்தவையே. ஓர் எண்ணை இன்னொன்றால் வகுப்பதும் ஈல்தலே. வகுத்து வருவதை ஈல்வு> ஈர்வு> ஈவு என்போம். ஓர் ஆறு போகும் வழியில் 2 ஆய்ப் பிரிந்து மீளக் கூடுமெனில்,  நடுத்தீவை அரங்கம் என்பார். *அருத்தது> அறுத்தது அரங்கம். அரங்கம் போல் அமையும் சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார். (ஈழமும் ஈலில் எழுந்ததே.) சிறுபாணாற்றுப்படையில் ஓய்மா நாட்டு மன்னன் நல்லியங் கோடனின் ஊர் மாவிலங்கை. தென்பெண்ணாற்றில் திண்டிவனம் அருகிலுள்ள ஆற்றுத் தீவு.” தமிழ்நாட்டின் தென்கிழக்கிலுள்ள இலங்கைத் தீவும் இப்படிப் பிரிந்ததே.  

ஒரு காலத்திற் கடல்மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது அந்நிலம். ஈழம், இலங்கை என்ற இரண்டுமே நற்றமிழ்ச் சொற்கள். யாரோ புரியாமல் இலங்கையைச் சிங்களமென்று தவறாகச் சொல்ல, சிலர் அது பிடித்துத் தொங்குவார். அந்நாட்டின் பெயரே தமிழ்ப்பெயர் தான். இல்>ஈல் என்பது முகனைச் செய்தி. பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ் நாடு மட்டுமல்ல; இலங்கைத் தீவும் அதன் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் தமிழ்நாட்டில் சேர்ந்தவையே. இற்றைத் தமிழ்நாடு ஈழம் ஆகியவற்றின் இடைப்பட்ட கடற்பகுதியும், குமரியின் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனத் தமிழர் இழந்த நிலப்பகுதி ஏராளம்  கடல்கொண்ட குமரிக் கண்டம் ஒரு கற்பனை. ஆனால் கடல் கொண்ட குமரி நிலம் முற்றும் உண்மை. 

இன்னொரு செய்தியுமுண்டு. ஆங்கிலத்தில் isle உண்டல்லவா? மேலையன் ஈல்>ஈழ் என்று தானே அதைப் பலுக்குகிறான்?. ”சொல் தோற்றம் தெரியாது” என்று அகரமுதலியிற் போடுவார். island இற்கும் ”தண்ணீர் மேலுள்ள நிலம்” என்று சுற்றி வளைப்பார். ஈழம் என்ற சொல் தெரிந்த பின்னும் நாம் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்தில் இருந்து ஈல்ந்தது என்பதில் அறிவியல் உண்மை உள்ளது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், மேலை நாடுகளில் உலகத் தீவுகளைக் குறிக்கும் பொதுப் பெயரானது. அப்படியெனில் தமிழன் கடலோடியது எப்போது? நாமோ ஈல்>ஈழம் என்பதும் இல்> இலங்கு> இலங்கையும் தமிழில்லை எனச் சொல்லித் திரிகிறோம். 

இல்லை என்றவுடன் இன்னொன்று நினைவு வரும். இல்-தல்= துளைத்தல். துளைத்த பின் குறித்த இடத்தில் உள்ளீடு இருக்காது. அதனால் இன்மைப் பொருள் இல் எனும், துளைப்பொருளில் இருந்து, எழும்பியது. மேலே, ”இலம் பாடு” போலும் வறுமைச் சொற்களும் எழும். இலகு போல் நொய்மைச் சொற்களும், இலவு போல் மென்மைச் சொற்களும் இல்லில் எழுந்தன. நூறாயிரங் குறிக்கும் இலக்கமும் நொய்ப் பொருளில் எழுந்ததே. வேர் தமிழிலிருந்து, பின் வடக்கே போய்ப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்குள் கடன்வந்த சொல். 

இன்னொன்றும் உண்டு. இல்லிக் கொண்டே போனால் என்னவாகும்? ஒரு மட்டத்திலிருந்து இறங்குவோம் தானே? இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் எனில் இறங்குதல். இச் சொல் நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும். இழிவெனும் தாழ்ச்சிப் பொருளும் இதில் எழுந்ததே. இழிகுதல்> இயிகுதல்>ஈகுதல்>இகுதல் வளர்ச்சியில் இறங்குதலுக்கு இன்னொரு சொல் எழும். (ழகரம் யகரமாய் மாறுவது வட தமிழ்நாட்டுப் பழக்கம்.) இகுத்தல் எனும் பிறவினை தாழ்த்தற் பொருள் கொள்ளும். இகழ்தல் வினையும் இகுதலின் நீட்சி தான். 

இலங்குதலின் எதிர் இலங்காதிருத்தல். சுள்> சொள்)> சொள்கு>  சொகு> சோகு> சோகம் என்ற சொல் திரண்ட தொடையைக் குறிக்கும். [ஊருவும் கவானும் சோகமும் குறங்கே” திவாகரம் 351]  திகு திகு எனத் திரள்வதாலேயே thigh எனும் இந்தை யிரோப்பியச் சொல் பிறந்தது. இலங்கா சோகம்= பிரியாத் தொடை. இற்றை வட மலேசியாவின் இப் பழம்பெயர். எத்தனை பேருக்குத் தெரியும்? ஜோகூர் வரை தொடை நீண்டு கிடக்கிறது. பொ.உ. 2 ஆம் நூ.வில் காழக(கடார) அரசு இலங்கா சோகத்தில் தொடங்கியது என்பார். இதுவே தென்கிழக்கு ஆசியாவின் முதலரசுத் தொடக்கமாம். 

இலங்கை முகனை நிலத்திலிருந்து இற்றைக்கு 18000-3000 ஆண்டுகள் முன் நிலம் பிரிந்த போது ஒரு துருத்தி மட்டும் நம்மோடு பிரியாதிருந்தது. தமிழ் மக்களின் பொதுப் புத்தியில் அவ்வுண்மை  நிலைத்துப் போனது. ”இலாத” என்பது ”இராத” என்றும் ஆகும். இரா நிலம் = பிரியா நிலமாகி நம்மூரில் அத் துருத்தியை இராமம் என்றே அழைத்திருக்க வேண்டும். இன்று கோயிலையும்  ஊரையும் சேர்த்து. இராமேசம் என்கிறோம். இராமத்தின் ஈசர் இராமேசர்.  சங்கதம் இராமேசத்தை இராமேஸ்வரமாக்கும். 

இலங்கையை உடன்சேர்த்து இராமாயணக் கதைகட்டி, ”சண்டை முடிந்து, இராமர் இங்குவந்தார், ”இராம நாதர்” எனும் மணல் இலிங்கத்தைச் சீதை பிடித்தாள். வடக்கிருந்து அனுமன் கல்கொண்டு வந்தான். “இராமலிங்கம்” செய்தார் - என்பார், இரு இலிங்கங்கள் இன்றும் கருவறையில் உள்ளதற்கு இப்படியாகச் சுவைக்கதை எழும். யாருக்கு உண்மை தெரியும்? சம்பந்தர் கூட இக்கதையை நம்புகிறார். அவரின் இராமேச்சுரப் பதிகம் படித்தால் புரியும். உண்மை எதுவென்று தெரியவில்லை. வால்மிகி இராமாயணத்தை ஆய்ந்தவர், இலங்கையின் இருப்பிடத்தை வேறாகச் சொல்வார். நம்மூர் ஊண்பொதிப் பசுங்குடையார் பாடலில் தொன்முதுகோடிக்கு (கோடிக்கரைக்கு) இராமன் வந்ததாய்ச் சொல்வர். ஆக இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய புலம். இராமேசத்தின் உட்பொருளாய் 

முடிவாக என் கூற்று: ”இரு/ஈர்” என்பது புரிந்தால் இராமம்= பிரியாநிலம் என்பது புரியுமென எண்ணுகிறேன்.  இராமனை விட்டுவிடச் சம்மதியா அந்த ஊர்க்காரர் ஏற்கமாட்டார். 

அன்புடன்,
இராம்.கி.



4 comments:

Unknown said...

eli (rat) illil vaalvadhaal ili enbadhu eliyaaga thirinthirukkalaamallavaa?

Unknown said...

raamnaatil soll valakil makkal ramnaat endre alaikiraargal. ramanaathapuramendru vablogl bloggodu irukkaamal makkalukkum theriyapaduthungal.

இராம.கி said...

இல்லுதல் = தோண்டுதல். வயல்களில் இருக்கும் எலி இல்லிப் பெற்ற வளைக்குள் இருப்பதால் இல்லி>எல்லி>எலி என்றாகியிருக்கலாம்.

இராம.கி said...

உங்களால் தமிழ் எழுத்தில் எழுதமுடியாதா? நான் தங்கிலீசில் எழுதுபவர்களுக்கு பொதுவாக மறுமொழிப்பதில்லை.