Friday, March 31, 2006

கவிநடை

பாவகை எழுதத் தாள்ஒன்று எடுத்தேன்.
பாநடை திருத்தி அவள்ஒன்று தொடுத்தாள்;

"அந்த உணவை நான் இன்று உண்டேன்"
இதுஎன் தொடக்கம்; அவளோ சிரித்தாள்;

கவித்துவம் வீசை விலையறி யாதவன்
என்னிடம் சொல்லுவாள்; குறிப்பும் காட்டுவாள்;

"அச்சச் சோ,இது நாட்குறிப் பெழுத்தோ?
எங்கே இதிலே கவித்துவம் இருக்கு?"

கவிநடை என்றால் ஆற்றுவ*ப் போக்கைக்
காட்டா திருப்பதே சிறப்புடைத் தாகுமாம்!

புரியா தவன்போல் விழித்தே நின்றேன்;
"மற்றந்த வாக்கை, பட்டுவ**ப் போக்கில்:
மாற்றியே போட்டபின் பார்த்தியா?" என்றனள்;

"அந்த உணவு இன்று உண்ணப் பட்டது.....,
என்னால்" எனும்போழ் எதிர்பார்ப்பு இல்லையா?

என்றனள் அவளும், குறுநகை தவழ;
அளவை மீறியே இன்றையக் கவிதையில்
ஆழ்ந்தவள் போலும்; கற்கத்தான் வேண்டும் :-)

மீண்டும் எனக்குள் மேல்வரும் ஓர்மை:
எந்த உணவை உண்டேன், நானென
ஏதோ நினைத்து குறுகிக் குறுகியே
உண்ணல் அவள்க்கு விக்கலைத் தந்ததோ?

அன்புடன்,
இராம.கி.

* ஆற்றுவ வாக்கு = active voice
** பட்டுவ வாக்கு = passive voice

3 comments:

Anonymous said...

i enjoyed reading your blog, though it is too technical and more tough than the tamil i have learnt. i need some assistance.


i recently read that 'iraamki' and team from CIT (Coimbataore Institute of Technology) had made a tamil translation for chemical compound's names. would like to know whether you are the same person referred to here, if so, could you assist me to know the source from where i can get this information.

Please respond to my id p.kumar.n@gmail.com


regards.
pkumar

nayanan said...

அய்யா, வணக்கம்.
தங்களின் "ஒன்று" பற்றிய கட்டுரையை தினமலர் (01/04/06) அறிவியல் ஆயிரம் பகுதியில் பார்க்க முடிந்தது. மகிழ்ச்சி.

இராம.கி said...

அன்பிற்குரிய குமார்,

அதே இராம.கி. தான்.

இதைப் பற்றி திரு.மணிவண்ணன் கேட்ட கேள்விக்கு மறுமொழியாக நான் அந்த மேற்கோள் விவரங்களை என்னுடைய "கணி" என்ற இடுகையின் கீழே வரும் முன்னிகையில் கொடுத்துள்ளேன்; படியுங்கள்.

அந்தத் தொழில்நுட்ப மலர்கள் (1968-70 வரை உள்ள மலர்கள்) இப்பொழுது என் கையில் இல்லை. தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் இங்கு பதிகிறேன்.

அன்பிற்குரிய நயனன்,

நான் இன்னும் அந்த தினமலர் பார்க்கவில்லை. பார்த்தபின் எழுதுவேன். உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.