Saturday, March 18, 2006

சமயம்-5

இந்த இடத்துலே சமணம் பத்தி ஒன்றிரண்டு சொல்லணும்.

இந்தியத் துணைக்கண்டத்திலே முதல்லே ஒருங்கமைப்பு (organization) வகையா, மெய்யியல் (philosophy) பற்றி வாதம் எழுப்பிப் பரவிய மதம் சமணம் தான். அதுவரை சிவநெறி, விண்நெறி, காளி வழிபாடு, சிறுதெய்வ வழிபாடுகள், வேள்வி முறைகள்னு பல வழிபாட்டு முறைகள் இங்கு இருந்தன. ஆனா, மெய்யறிவியல் நூல்கள் உண்டாகலை. முதல்முதலா, உலகாய்தமும், ஆசீவகமும், சாங்கியமும், பின் சமணம், புத்தம் போன்றவைதான் இப்படிக் கேள்விகளே எழுப்பத் தொடங்கின. இதற்கு விடை சொல்ற படிதான், மீமாஞ்சை, உவநிடதம் போன்றவை எழுந்தன. மெய்யறிவியல் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாச்சு.

ஓகி என்பவன் அறிவு சார்ந்தவனாய், மெய்ம்மை காட்டுபவனாய், வழிபாடு மட்டும் அன்றி ஞானம் போதிப்பவனாய் காட்சி யளிக்கத் தொடங்கியது மகாவீரர் காலத்திலே தான். இதில் பலரும் தெற்கத்தி ஆட்களா இருந்தாங்க. பக்குடுக்கை நன்கணியார் (புறநானூற்றுப் புலவர்; இவரைப் பக்குட கச்சாயனார் என்று பாகத நூல்கள் பேசும்), மற்கலி கோசலர், பூரண காயவர், அசித்த கேசக் கம்பலர், கணியாதன், நந்த ஆசிரியன் எனப் பலரும் இங்கிருந்து போனவுகளாகத் தான் காட்சி அளிக்கிறாக. மகாவீரரும், புத்தரும் கூடத் தமிழ் படிச்சாகன்னு அவுகளுடைய வரலாறு கூறுது.

ஏது / ஏரணம் படிக்கக் காஞ்சிக்குப் பலர் வந்த கதை பாகத நூல்களெப் படிச்சாத் தெரியுது. ஒருபக்கம் பாகதத்திலும், மறுபக்கம் தமிழியிலுமாகச் சாதவாகன மன்னன் ஒருத்தன் நாணயம் வெளியிடிருக்கான்னா, தமிழ் என்கிற மொழி நாவலந்தீவுக்குள்ளே ஒரு காலத்துலே பெரிசாப் பரவிய அனைத்துநாட்டு மொழியாக இருந்திருக்கோணும். இந்த உண்மை விளங்காம இன்னைக்குப் பலர் இருக்காக. இந்தியத் தன்மைன்னு சொல்ற பலதுக்குள்ளே தமிழியம்கிற வேர் இருக்கு. அதைக் கண்டுபிடிச்சுப் புரிஞ்சுக்க ஒரு பக்குவம் வேணும்.

சமணரின் தாக்கம் தமிழ்நாட்டிலும் கருநாடகத்திலும் கூடவே இருந்துச்சு; திருஞான சம்பந்தர், அப்பரின் தாக்கத்திற்குப் பிறகும் சமணம் தமிழ் நாட்டுலே மிஞ்சியிருக்கு. குறிப்பாத் திருவண்ணாமலைக்குப் பக்கம்; புத்தம் தான் மாணிக்க வாசகருக்கு அப்புறம் அடியோட தமிழ்நாட்டுலே கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிருச்சு. ஆசீவகம், சாங்கியம் தமிழ்நாட்டுலே இருந்த இடங்கள் நமக்கு இப்பத் தெரியலை; உலகாய்தம் இருபதாம் நூற்றாண்டிலே தான், பெரியார் வழியிலே, மீண்டும் பசக்குன்னு திரும்பி வந்துச்சு.

ஆக, சம்மணித்து ஓகிய நிலை சமண நிலை; மகாவீரர், புத்தரின் சிற்பங்கள் சம்மணித்த நிலையிலே தான் பெரும்பாலும் இருக்கும். "வள்ளுவத்தின் வீழ்ச்சி" என்ற நூலில், வெங்காலூர் குணா குறிப்பிடுவார்:
------------------------------------
"மற்கலி கோசலர் கைகளைத் தூக்கிப் பிடித்த வண்ணம் வெயிலில் நின்ற வாறே தவம் செய்து வந்தவராம். பகவதி சூத்திரம் என்னும் சைன நூலை காட்டி அதைக் குறிப்பிடுவர். அவ்வாறு தவம் செய்கையில் அவர் ஆறு வேளைகள் உண்ணவே மாட்டாராம். மொச்சைக் கொட்டையும் அரிசிக் கஞ்சியும் மட்டுமே அவரது உணவாம். தவத்தைத் தொடங்குவதற்கு முன் ஒரு வாய் நீரை மட்டுமே குடித்துவிட்டு அவர் ஒரு முறை ஆறு திங்கள் வரை கடுந்தவம் செய்தாராம். இதன் விளைவாக, இறுதியில் உக்கிரமான ஓர் ஆற்றலை அவர் பெற்றாராம். ஆசீவகர், சம்மணம் கொட்டிய (கொள்ளுதல் என்பது கொண்டுதல்/கொட்டுதல் என்றும் பலுக்கப் படும்; இன்றைக்கும் எங்கள் ஊர்ப் பக்கம் சம்மணம் கொட்டு என்றுதான் சொல்லுவார்.) நிலையில் தம்மைத் தாமே வருத்திக் கொண்டு கடுந்தவம் புரிந்து வந்தனர். இதை அவர்கள் சம்மணத் தவம் என்றனர்.

பாழி (பாளி), பாகதம் (பிராகிருதம்) முதலான வடமொழிகளில், துறவிகளைப் பொதுவாக 'சமண' என்றழைப்பதே மரபு. ஆனால், 'சிரமண (Sramna) என்னும் சங்கதச் சொல்லில் இருந்தே 'சமணன்' என்னும் தமிழ்ச் சொல் வந்தது என்பது ஒரு தலைகீழ்ப் பாடம். அது போலவே அம்மணமான நிலையில் துறவிகளாக இருந்தவர்கள் அமணர். ஆசீவகத் துறவிகளும் அம்மணமானவர் என்பதாய் "ஆசீவகன் அமணர்களில்" எனச் சிவஞான சித்தியார் கூறும்.(இது உறுதியில்லை. மேற்கொண்டு ஆய்வு வேண்டும்,)

சம்மணத் தவம் போக, முள்படுக்கையின் மீது கிடந்த வண்ணம் ஆசீவகர் செய்து வந்தது முள்தவமாம். ஐந்து நெருப்புகளுக்கிடையில் அமர்ந்த வண்ணம் ஆற்றி வந்த தவம் 'ஐந்தீத் தவ'மாம். பேசாமை, அசையாமை, காலை மடித்துக் குந்தியிருத்தல், கழுத்துவரை மண்ணில் புதையுண்டு நிற்றல் போன்ற கடுந்தவங்களையும் கூட ஆசீவகர் செய்து வந்தனராம். வவ்வால் தவமும் உண்டு. பெருந்தவம் செய்து வந்த ஆசீவகரை மாதவர் என்றனர்."
-----------------------------------------------
முடிவில் சமண நிலைங்குறது பக்குவப் பட்ட, ஒன்றுபட்ட தவ நிலை என்று தான் பொருள் கொள்ளோணும். சமணங்கிறது சைனத்தையும் ஆசீவகத்தையும், (ஓரோவழி புத்தத்தையும்) சேர்த்துச் சொல்ற ஒண்ணு,

ஆசீவகம் என்பது நம்பா மதம். அருகம்(சைனம்) என்பது நம்பும் மதம்.
இதுபோல சாங்கியம் நம்பா மதம்; புத்தம் நம்பும் மதம். உலகாய்தம் நம்பா மதம்; சிவநெறியும் மால்நெறியும் நம்பும் மதங்கள்.

இன்னைக்கு இவையெல்லாத்திலும் ஒண்ணுக்குள் ஒண்ணாய் கருத்துக்கள் புகுந்தும் வெளிப்பட்டும் வந்திருக்கு. மெய்யறிவியல் கலவையாகத் தான் இன்னைய நெறிகள் இருக்கு.

இடையிலே குணாவின் பொத்தகத்திலேர்ந்து தெரிஞ்ச இன்னோரு செய்தி:

பொதுவுடைமைப் பேராளர் காரல் மார்க்சு தன் நூல்களில் ஒரிடத்திலே, கிரேக்க அறிஞர் டெமாக்கிரட்டசு நாடுவிட்டு நாடு திரிஞ்ச போது இந்தியா வந்து இங்குள்ள ஓகிகளைக் கண்டு அவர்களிடம் இருந்து அரிய பலவற்றைக் கத்துக்குனது பற்றிக் கூறுவார்.

இந்த ஓகிகளை gymnosophists-னு கிரேக்க மொழியிலே சொல்லுவாக. அதுக்கு "one of the ancient Hindu (?) philosophic sect going naked and given to contemplation, mystic and ascetic" னு பொருள் கொள்வாக. கிரேக்க மொழியில் gumnos-னா 'அம்மணம்'னு ஆகும்.. திக்கையே அம்பரமாக அடையாகக் கொண்டவகளைத் திகம்பர சமணர்கள்னு நாம சொல்றோமில்லையா? ஆசீவகர்களையும் சமணரின் ஒரு பிரிவாகத் தவறாக எண்ணுவது உண்டு. ஆசீவகம் தமிழ் நாட்டிலேயே எழுந்த ஒரு மெய்யறிவியல் போக்கு. அவுகளும் கோவணாண்டிகள் தான். (அவுகள்லே ஒருத்தர்தான் மகாவீரர் மற்றும் புத்தர் காலத்தைச் சேர்ந்த, மேலே சொன்ன பக்குடுக்கை நண்கணியார்ங்கிற புறநானூற்றுப் புலவர். அதுபோலக் கணியன் பூங்குன்றனாரும் ஓர் ஆசீவகர்தான். பூங்குன்றனாரின் பாட்டான "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"ங்குற புறநானூற்றுப் பாட்டை, ஆர அமரச் சரியாப் படியுங்க, அண்ணாச்சி, ஆசீவகம் என்பது ஓரளவு விளங்கும்.)

குமணம்>சமணம்
குமணம்>gumnos
ஓகிகள் பலரும் உடற்பயிற்சி கூடிய ஓகம் செய்து வந்தாக. அதுனாலே gumnos>gumnosticos

சமணர்கள் பள்ளிகளே தமிழ் நாட்டிலே பாடசாலைகள் ஆச்சுல்லே? அதே போல gumnos>gymnasium ங்குறது இரோப்பாவுலே பள்ளிகளைத் தான் இன்னைக்கும் குறிக்குது. ஒரு விதப்புலே பார்த்தா, gymnasium ங்குற சொல்லு உடற்பயிற்சி சாலையையும் குறிக்கும். ஆசான்ங்குற சொல்லு ஒரு காலத்துலே எல்லாம் சொல்லித் தர்ற ஆசிரியர்; பின்னாடி அதன் பொருளைக் குறுக்கி வெறும் வர்மக் கலை, களரிப் பயிற்று, உடற்கலை - அப்படிச் சொல்லிக் கொடுக்குற ஆசிரியர்னு சுருக்கிறலையா? அதுமாரித் தான் இதுவும்; நம்மூரை நல்லப் புரிஞ்சுக்கோணும்னா, நெல்லை, குமரி, கேரளம், ஈழம்னு பரவலாப் பார்க்கோணும், அண்ணாச்சி. வட தமிழகம் மட்டும் பார்க்கப் பிடாது.

இன்னைக்கும் கிரேக்க முறையைப் பின் பற்றி, மேலையிரோப்பிய நாடுகள்லே, குறிப்பா செருமனி, நெதர்லாந்து போன்ற நாடுகள்லே, முதல்தரமான பாடசாலை, gymnasium-னே அழைக்கப் படுது. அடுத்தது Athenium -னு அழைக்கப் படும். எத்தனை பேருக்குத் தெரியும் அந்தூருப் பள்ளிக் கூடத்தின் பின்னால் நம்மூர்ச் சிந்தனையான சமணம் இருக்குன்னு. நம் ஊரிலும் கூடப் பள்ளிகளின் தொடக்கம் சமணரில் தாங்க. சமணம் தான் மாணாக்கர்களை முதல்லே, ஆசிரியர் போகும் இடத்துக்கு எல்லாம் பின்னாடி மாணவர்கள் போற மாதிரி பள்ளிகளை அமைச்சுது! பள்ளி / gymnasium ங்குற ஒப்புமை எப்படி இருக்கு பாருங்க? வியப்பா இல்லையா?

இன்னொரு வகையிலே பார்த்தா, கோவண ஆண்டிகள், கோமண ஆண்டிகள் ஆவார்கள். கோமணர்கள்> gumnos.

கடைசியா சமயம்ங்குற சொல்லுக்கு வர்றேன் அண்ணாச்சி. சமணத்தின் வளர்ச்சிக்கு அப்புறம், மெய்யறிவியல் என்பது எல்லா நெறிகள்லேயும் வந்ததுச்சு; இல்லறம் துறந்த துறவிகள் தவத்துலே ஈடுபட ஆரம்பிச்சாங்க! ஒருத்தருக்கு ஒருத்தர் "நாவலோ நாவல்" னு வேறே, வாதத்துக்கான அறை கூவல் நடந்துச்சு. (நா.பா.வின் மணிபல்லவம் புதினத்தைப் படிங்க; இந்த நாவலோ நாவலில் தான் புதினமே ஆரம்பிக்கும்.) பட்டி மண்டபம், வழக்காடு மன்றம் எல்லாம் பெருகுனது சமணத்துக்கு (அதாவது ஆசீவகம், செயினம், புத்தம்) அப்புறம் தான். வாதம், வாதம்னு பெருகிப் போனதுலெ இந்தியத் துணைக்கண்டத்துலெ தமிழருக்குப் பெரிய பங்கு உண்டு, அண்ணாச்சி.

கடைசியா, சமக்க அமர்ந்து மனத்தை ஒன்றுபடுத்தும் நிலையாக (இந்த மனத்தை ஒன்று படுத்துறது தான் சமயத்துலே முக்கியமானது.  அதுக்கு மாறா, ஊரம்பூடுக்கு ஆட்களைச் சேர்த்துக்கிட்டு இப்பச் செய்யுற குத்து, வெட்டு வேலையெல்லாம், "நான் தான் சரி; அவன் சரியில்லை"ங்குற பேச்செல்லாம், சமயமே இல்ல, அண்ணாச்சி). மனசை ஒன்றுபடுத்துறதாலே, தவசிகளின் நிலையே சமயம்-னு ஆனது. அந்தத் தவசிகள் சமயி என்றும் ஆனாக. சமயிகளின் கோட்பாடுகள் சமயம் என்றானது; சமயிங்கிறதைத் தான் சாமின்னு ஆக்கிப்புட்டாங்க. சாமியார்களையும் அப்படித்தான் சொல்றோம். கடவுளையும் அப்படித்தான் சொல்றோம்.

மதம்கிற சொல் இன்னும் பழசு; அதப் பத்தி இங்கே விளக்கினா இன்னும் பெருகும். அதனாலே அதைத் தொடலை.

அன்புடன்,
இராம.கி.

No comments: