Saturday, March 18, 2006

சமயம்-5

இந்த இடத்துலே சமணம் பத்தி ஒன்றிரண்டு சொல்லணும்.

இந்தியத் துணைக்கண்டத்திலே முதல்லே ஒருங்கமைப்பு (organization) வகையா, மெய்யியல் (philosophy) பற்றி வாதம் எழுப்பிப் பரவிய மதம் சமணம் தான். அதுவரை சிவநெறி, விண்நெறி, காளி வழிபாடு, சிறுதெய்வ வழிபாடுகள், வேள்வி முறைகள்னு பல வழிபாட்டு முறைகள் இங்கு இருந்தன. ஆனா, மெய்யறிவியல் நூல்கள் உண்டாகலை. முதல்முதலா, உலகாய்தமும், ஆசீவகமும், சாங்கியமும், பின் சமணம், புத்தம் போன்றவைதான் இப்படிக் கேள்விகளே எழுப்பத் தொடங்கின. இதற்கு விடை சொல்ற படிதான், மீமாஞ்சை, உவநிடதம் போன்றவை எழுந்தன. மெய்யறிவியல் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாச்சு.

ஓகி என்பவன் அறிவு சார்ந்தவனாய், மெய்ம்மை காட்டுபவனாய், வழிபாடு மட்டும் அன்றி ஞானம் போதிப்பவனாய் காட்சி யளிக்கத் தொடங்கியது மகாவீரர் காலத்திலே தான். இதில் பலரும் தெற்கத்தி ஆட்களா இருந்தாங்க. பக்குடுக்கை நன்கணியார் (புறநானூற்றுப் புலவர்; இவரைப் பக்குட கச்சாயனார் என்று பாகத நூல்கள் பேசும்), மற்கலி கோசலர், பூரண காயவர், அசித்த கேசக் கம்பலர், கணியாதன், நந்த ஆசிரியன் எனப் பலரும் இங்கிருந்து போனவுகளாகத் தான் காட்சி அளிக்கிறாக. மகாவீரரும், புத்தரும் கூடத் தமிழ் படிச்சாகன்னு அவுகளுடைய வரலாறு கூறுது.

ஏது / ஏரணம் படிக்கக் காஞ்சிக்குப் பலர் வந்த கதை பாகத நூல்களெப் படிச்சாத் தெரியுது. ஒருபக்கம் பாகதத்திலும், மறுபக்கம் தமிழியிலுமாகச் சாதவாகன மன்னன் ஒருத்தன் நாணயம் வெளியிடிருக்கான்னா, தமிழ் என்கிற மொழி நாவலந்தீவுக்குள்ளே ஒரு காலத்துலே பெரிசாப் பரவிய அனைத்துநாட்டு மொழியாக இருந்திருக்கோணும். இந்த உண்மை விளங்காம இன்னைக்குப் பலர் இருக்காக. இந்தியத் தன்மைன்னு சொல்ற பலதுக்குள்ளே தமிழியம்கிற வேர் இருக்கு. அதைக் கண்டுபிடிச்சுப் புரிஞ்சுக்க ஒரு பக்குவம் வேணும்.

சமணரின் தாக்கம் தமிழ்நாட்டிலும் கருநாடகத்திலும் கூடவே இருந்துச்சு; திருஞான சம்பந்தர், அப்பரின் தாக்கத்திற்குப் பிறகும் சமணம் தமிழ் நாட்டுலே மிஞ்சியிருக்கு. குறிப்பாத் திருவண்ணாமலைக்குப் பக்கம்; புத்தம் தான் மாணிக்க வாசகருக்கு அப்புறம் அடியோட தமிழ்நாட்டுலே கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிருச்சு. ஆசீவகம், சாங்கியம் தமிழ்நாட்டுலே இருந்த இடங்கள் நமக்கு இப்பத் தெரியலை; உலகாய்தம் இருபதாம் நூற்றாண்டிலே தான், பெரியார் வழியிலே, மீண்டும் பசக்குன்னு திரும்பி வந்துச்சு.

ஆக, சம்மணித்து ஓகிய நிலை சமண நிலை; மகாவீரர், புத்தரின் சிற்பங்கள் சம்மணித்த நிலையிலே தான் பெரும்பாலும் இருக்கும். "வள்ளுவத்தின் வீழ்ச்சி" என்ற நூலில், வெங்காலூர் குணா குறிப்பிடுவார்:
------------------------------------
"மற்கலி கோசலர் கைகளைத் தூக்கிப் பிடித்த வண்ணம் வெயிலில் நின்ற வாறே தவம் செய்து வந்தவராம். பகவதி சூத்திரம் என்னும் சைன நூலை காட்டி அதைக் குறிப்பிடுவர். அவ்வாறு தவம் செய்கையில் அவர் ஆறு வேளைகள் உண்ணவே மாட்டாராம். மொச்சைக் கொட்டையும் அரிசிக் கஞ்சியும் மட்டுமே அவரது உணவாம். தவத்தைத் தொடங்குவதற்கு முன் ஒரு வாய் நீரை மட்டுமே குடித்துவிட்டு அவர் ஒரு முறை ஆறு திங்கள் வரை கடுந்தவம் செய்தாராம். இதன் விளைவாக, இறுதியில் உக்கிரமான ஓர் ஆற்றலை அவர் பெற்றாராம். ஆசீவகர், சம்மணம் கொட்டிய (கொள்ளுதல் என்பது கொண்டுதல்/கொட்டுதல் என்றும் பலுக்கப் படும்; இன்றைக்கும் எங்கள் ஊர்ப் பக்கம் சம்மணம் கொட்டு என்றுதான் சொல்லுவார்.) நிலையில் தம்மைத் தாமே வருத்திக் கொண்டு கடுந்தவம் புரிந்து வந்தனர். இதை அவர்கள் சம்மணத் தவம் என்றனர்.

பாழி (பாளி), பாகதம் (பிராகிருதம்) முதலான வடமொழிகளில், துறவிகளைப் பொதுவாக 'சமண' என்றழைப்பதே மரபு. ஆனால், 'சிரமண (Sramna) என்னும் சங்கதச் சொல்லில் இருந்தே 'சமணன்' என்னும் தமிழ்ச் சொல் வந்தது என்பது ஒரு தலைகீழ்ப் பாடம். அது போலவே அம்மணமான நிலையில் துறவிகளாக இருந்தவர்கள் அமணர். ஆசீவகத் துறவிகளும் அம்மணமானவர் என்பதாய் "ஆசீவகன் அமணர்களில்" எனச் சிவஞான சித்தியார் கூறும்.(இது உறுதியில்லை. மேற்கொண்டு ஆய்வு வேண்டும்,)

சம்மணத் தவம் போக, முள்படுக்கையின் மீது கிடந்த வண்ணம் ஆசீவகர் செய்து வந்தது முள்தவமாம். ஐந்து நெருப்புகளுக்கிடையில் அமர்ந்த வண்ணம் ஆற்றி வந்த தவம் 'ஐந்தீத் தவ'மாம். பேசாமை, அசையாமை, காலை மடித்துக் குந்தியிருத்தல், கழுத்துவரை மண்ணில் புதையுண்டு நிற்றல் போன்ற கடுந்தவங்களையும் கூட ஆசீவகர் செய்து வந்தனராம். வவ்வால் தவமும் உண்டு. பெருந்தவம் செய்து வந்த ஆசீவகரை மாதவர் என்றனர்."
-----------------------------------------------
முடிவில் சமண நிலைங்குறது பக்குவப் பட்ட, ஒன்றுபட்ட தவ நிலை என்று தான் பொருள் கொள்ளோணும். சமணங்கிறது சைனத்தையும் ஆசீவகத்தையும், (ஓரோவழி புத்தத்தையும்) சேர்த்துச் சொல்ற ஒண்ணு,

ஆசீவகம் என்பது நம்பா மதம். அருகம்(சைனம்) என்பது நம்பும் மதம்.
இதுபோல சாங்கியம் நம்பா மதம்; புத்தம் நம்பும் மதம். உலகாய்தம் நம்பா மதம்; சிவநெறியும் மால்நெறியும் நம்பும் மதங்கள்.

இன்னைக்கு இவையெல்லாத்திலும் ஒண்ணுக்குள் ஒண்ணாய் கருத்துக்கள் புகுந்தும் வெளிப்பட்டும் வந்திருக்கு. மெய்யறிவியல் கலவையாகத் தான் இன்னைய நெறிகள் இருக்கு.

இடையிலே குணாவின் பொத்தகத்திலேர்ந்து தெரிஞ்ச இன்னோரு செய்தி:

பொதுவுடைமைப் பேராளர் காரல் மார்க்சு தன் நூல்களில் ஒரிடத்திலே, கிரேக்க அறிஞர் டெமாக்கிரட்டசு நாடுவிட்டு நாடு திரிஞ்ச போது இந்தியா வந்து இங்குள்ள ஓகிகளைக் கண்டு அவர்களிடம் இருந்து அரிய பலவற்றைக் கத்துக்குனது பற்றிக் கூறுவார்.

இந்த ஓகிகளை gymnosophists-னு கிரேக்க மொழியிலே சொல்லுவாக. அதுக்கு "one of the ancient Hindu (?) philosophic sect going naked and given to contemplation, mystic and ascetic" னு பொருள் கொள்வாக. கிரேக்க மொழியில் gumnos-னா 'அம்மணம்'னு ஆகும்.. திக்கையே அம்பரமாக அடையாகக் கொண்டவகளைத் திகம்பர சமணர்கள்னு நாம சொல்றோமில்லையா? ஆசீவகர்களையும் சமணரின் ஒரு பிரிவாகத் தவறாக எண்ணுவது உண்டு. ஆசீவகம் தமிழ் நாட்டிலேயே எழுந்த ஒரு மெய்யறிவியல் போக்கு. அவுகளும் கோவணாண்டிகள் தான். (அவுகள்லே ஒருத்தர்தான் மகாவீரர் மற்றும் புத்தர் காலத்தைச் சேர்ந்த, மேலே சொன்ன பக்குடுக்கை நண்கணியார்ங்கிற புறநானூற்றுப் புலவர். அதுபோலக் கணியன் பூங்குன்றனாரும் ஓர் ஆசீவகர்தான். பூங்குன்றனாரின் பாட்டான "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"ங்குற புறநானூற்றுப் பாட்டை, ஆர அமரச் சரியாப் படியுங்க, அண்ணாச்சி, ஆசீவகம் என்பது ஓரளவு விளங்கும்.)

குமணம்>சமணம்
குமணம்>gumnos
ஓகிகள் பலரும் உடற்பயிற்சி கூடிய ஓகம் செய்து வந்தாக. அதுனாலே gumnos>gumnosticos

சமணர்கள் பள்ளிகளே தமிழ் நாட்டிலே பாடசாலைகள் ஆச்சுல்லே? அதே போல gumnos>gymnasium ங்குறது இரோப்பாவுலே பள்ளிகளைத் தான் இன்னைக்கும் குறிக்குது. ஒரு விதப்புலே பார்த்தா, gymnasium ங்குற சொல்லு உடற்பயிற்சி சாலையையும் குறிக்கும். ஆசான்ங்குற சொல்லு ஒரு காலத்துலே எல்லாம் சொல்லித் தர்ற ஆசிரியர்; பின்னாடி அதன் பொருளைக் குறுக்கி வெறும் வர்மக் கலை, களரிப் பயிற்று, உடற்கலை - அப்படிச் சொல்லிக் கொடுக்குற ஆசிரியர்னு சுருக்கிறலையா? அதுமாரித் தான் இதுவும்; நம்மூரை நல்லப் புரிஞ்சுக்கோணும்னா, நெல்லை, குமரி, கேரளம், ஈழம்னு பரவலாப் பார்க்கோணும், அண்ணாச்சி. வட தமிழகம் மட்டும் பார்க்கப் பிடாது.

இன்னைக்கும் கிரேக்க முறையைப் பின் பற்றி, மேலையிரோப்பிய நாடுகள்லே, குறிப்பா செருமனி, நெதர்லாந்து போன்ற நாடுகள்லே, முதல்தரமான பாடசாலை, gymnasium-னே அழைக்கப் படுது. அடுத்தது Athenium -னு அழைக்கப் படும். எத்தனை பேருக்குத் தெரியும் அந்தூருப் பள்ளிக் கூடத்தின் பின்னால் நம்மூர்ச் சிந்தனையான சமணம் இருக்குன்னு. நம் ஊரிலும் கூடப் பள்ளிகளின் தொடக்கம் சமணரில் தாங்க. சமணம் தான் மாணாக்கர்களை முதல்லே, ஆசிரியர் போகும் இடத்துக்கு எல்லாம் பின்னாடி மாணவர்கள் போற மாதிரி பள்ளிகளை அமைச்சுது! பள்ளி / gymnasium ங்குற ஒப்புமை எப்படி இருக்கு பாருங்க? வியப்பா இல்லையா?

இன்னொரு வகையிலே பார்த்தா, கோவண ஆண்டிகள், கோமண ஆண்டிகள் ஆவார்கள். கோமணர்கள்> gumnos.

கடைசியா சமயம்ங்குற சொல்லுக்கு வர்றேன் அண்ணாச்சி. சமணத்தின் வளர்ச்சிக்கு அப்புறம், மெய்யறிவியல் என்பது எல்லா நெறிகள்லேயும் வந்ததுச்சு; இல்லறம் துறந்த துறவிகள் தவத்துலே ஈடுபட ஆரம்பிச்சாங்க! ஒருத்தருக்கு ஒருத்தர் "நாவலோ நாவல்" னு வேறே, வாதத்துக்கான அறை கூவல் நடந்துச்சு. (நா.பா.வின் மணிபல்லவம் புதினத்தைப் படிங்க; இந்த நாவலோ நாவலில் தான் புதினமே ஆரம்பிக்கும்.) பட்டி மண்டபம், வழக்காடு மன்றம் எல்லாம் பெருகுனது சமணத்துக்கு (அதாவது ஆசீவகம், செயினம், புத்தம்) அப்புறம் தான். வாதம், வாதம்னு பெருகிப் போனதுலெ இந்தியத் துணைக்கண்டத்துலெ தமிழருக்குப் பெரிய பங்கு உண்டு, அண்ணாச்சி.

கடைசியா, சமக்க அமர்ந்து மனத்தை ஒன்றுபடுத்தும் நிலையாக (இந்த மனத்தை ஒன்று படுத்துறது தான் சமயத்துலே முக்கியமானது.  அதுக்கு மாறா, ஊரம்பூடுக்கு ஆட்களைச் சேர்த்துக்கிட்டு இப்பச் செய்யுற குத்து, வெட்டு வேலையெல்லாம், "நான் தான் சரி; அவன் சரியில்லை"ங்குற பேச்செல்லாம், சமயமே இல்ல, அண்ணாச்சி). மனசை ஒன்றுபடுத்துறதாலே, தவசிகளின் நிலையே சமயம்-னு ஆனது. அந்தத் தவசிகள் சமயி என்றும் ஆனாக. சமயிகளின் கோட்பாடுகள் சமயம் என்றானது; சமயிங்கிறதைத் தான் சாமின்னு ஆக்கிப்புட்டாங்க. சாமியார்களையும் அப்படித்தான் சொல்றோம். கடவுளையும் அப்படித்தான் சொல்றோம்.

மதம்கிற சொல் இன்னும் பழசு; அதப் பத்தி இங்கே விளக்கினா இன்னும் பெருகும். அதனாலே அதைத் தொடலை.

அன்புடன்,
இராம.கி.

Friday, March 17, 2006

சமயம்-4

சகர வரிசைச் சொல்லுக்கும் அகரவரிசை மாதிரி, அதே பொருள் தான். ஆனாப் பயன்பாடுகள் வேறே.

சம்>சம்மதம் = உடன்பாடு, நட்பு, கொள்கை (பல பேர் சம்மதம் வட மொழின்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம்ம வளமே நமக்குத் தெரியலை. மதம் என்பது நெறி.)
சம்>சமம் = ஒன்று படுதல்; ஒரே மாதிரி இருத்தல், ('சமன்பாடு'ங்கிற சொல்லாட்சியைப் பார்த்தீங்கன்னாப் புலப்படும்.)
சம தானம் = ஒரே நிலை; (இதைச் சமாதானம்னு பலுக்கி வடமொழின்னு நினைச்சுப் பிட்டோ ம். சரியாப் பலுக்குனா, அது தமிழாயிடும்.)
சம்மாரம் = அழிவு (இதையும் சம்ஹாரம்னு சொல்லி வடமொழியாப் புரிஞ்சுக்கிறோம். அது பெரிய அவலம் அண்ணாச்சி! சம்மாரங்கிறது கோட்டை, கொத்தளத்தை எல்லாம் அழிச்சுத் தரை மட்டமா ஆக்குறது; திருச் செந்தூரிலே சூர சம்மாரம் நிரம்பச் சிறப்பா நடக்கும்.)
சம்மானம் = உபசாரச் சொல், வெகுமதி, இறையிலியாக விடப்பட்ட நிலம்
சம்மெனல் = கம்பீரக் குறிப்பு
சம்மேளனம் = கலப்பு, கூட்டம்
சமட்டி = தொகுதி (சமஷ்டி -ன்னு வடமொழியிலே போகும்); இந்தக் காலத்திலே கூட்டமைப்புன்னு சொல்லுவாக. (சமளுதல் = ஒன்று போல ஆகுதல். கூட்டுச் சேரும் எல்லோரும் ஒன்று போல ஆன நிலையில் இருக்கும் கூட்டு சமள்+தி = சமட்டி என்று ஆகும்.)

அடுத்தது அம்முதல்>அம்மி போல, அமுக்குதல், துவைத்தல் என்ற பொருள்களைப் பார்க்கலாம்.

சமட்டுதல் = காலாலே துவைத்தல்
சமட்டுவண்டி = மிதி வண்டி (சமட்டு வண்டிங்குற புழக்கம் இப்பவெல்லாம் சுத்தரவாக் கிடையாது. இதுமாதிரிப் பல சொற்கள் எழுந்து பின்னாடி அடங்கிப் போறது எந்த மொழியிலேயும் இயற்கை.)
சமட்டுதல்>சவட்டுதல் = வளைவாக்குதல், மெல்லுதல், விழுங்குதல், அழித்தல், கொல்லுதல், மிதித்தல், வல்லுதல், மொத்துதல்
சம்மட்டி = குதிரையோட்டும் கருவி, சுத்தியல் வகை,
சமட்டு = E. smite, to strike, A.S. smiten, Dut. smijten. சமட்டுவது சமட்டி -சம்மட்டி. -E. hammer, A.S. hamor, Ger. hammer, Ice hamarr, a tool for beating, E.smith, one who smites. (ஒப்பியன் மொழிநூல் - 2, பாவாணர், தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 176)

சவங்குதல் = மனந் தளர்தல், மானம் மழுங்கிப் போதல், உயிர் மெலிதல், வீக்கம் வற்றுதல், மூர்ச்சை போதல்
சவலை = தளர்ந்து போன, துவண்டு போன நிலை
சவளுதல் = வளைதல், துவளுதல்
சவம் = பிணம்

சம்'கிறது போலவே 'சப்'புங்குற ஒலிக்குறிப்பும் பல சொற்களை உருவாக்கிருக்கு.

சப்பட்டை = தட்டை, தட்டையானது, உள்ளீடின்மை, பதர், மடையன், கெட்டவன், சப்பை, சிறகு
சப்படி = தட்டையானது
சப்பரம் = சிறுதேர்; (சப்பரம் கட்டி இறைவன் திருமேனியை அதில் சோடித்து இழுப்பது பல சிவன் கோயில்களில் பழக்கம் தான்.)
சப்பர மஞ்சம் = மேற்கட்டு அமைந்த அலங்காரக் கட்டில்
சப்பரை = மூடன்
சப்பல் தட்டை, சப்புதல்
சப்பளாக் கடை = தாளக் கட்டை
சப்பளிதல் = தட்டையாதல்
சப்பாணி = கைசேர்ந்து கொட்டுதல், அட்டணங்கால் இடுகை, நொண்டி
சப்பாத்தி = சப்பையான கோதுமைப் பண்டம். (வட தமிழிய மொழிகளில் வழங்கும் பெயர்.)
சப்புதல் = மெல்லுதல்
சப்பை = தட்டையானது, தேரின் சக்கரத்துக்கு அடியில் கொடுக்கப் படும் கட்டை

கூடுதல் பொருளில் இன்னொரு பரிமாணம் சகரம் போலவே ககரத்துலே இருக்கு.

கும்முதல் = கூடுதல்
குமிதல்>குவிதல்

இதை விரிச்சா மிகப் பெருகும். அதனாலெ, மீண்டும் சகரத்திற்கே வருவோம்.

சம்>சம்மண்>சம்மணம்= காலை ஒண்ணாச் சேர்த்து தட்டையாக்கி நெஞ்சு நிமிர்ந்து உட்காரும் நிலை.
சம்மணம்>சமணம் = அருகமதம், அம்மணம். (உண்மையிலே பொதுமையாச் சொன்னா, இது செயினம், புத்தம், ஆசீவகம் ஆகிய மூணு நெறியினரையும் குறிக்கும்; இருந்தாலும் விதப்பா, செயினரை மட்டுமே குறிக்கிற புழக்கமும் நம்மூர்லெ இருந்துருக்கு.)

சம்மணத்திலேர்ந்து சமணம் வந்துதுன்னு சொன்னா சிலபேருக்கு வியப்பா இருக்கும். இதுக்கு சான்று எது? அடுத்த மடல்லே பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, March 16, 2006

சமயம்-3

இப்ப சகர வரிசைச் சொல்லைப் பார்க்கலாம்.

அம்>சம்.

இந்த மாற்றத்தை, மற்ற மொழிகளில் எல்லாம் இயல்புன்னு ஒத்துக்கிற மொழியாளர்கள் தமிழ் மட்டும் ஏதோ விதிவிலக்குப் போல சொல்லிக்கிட்டிருக்காக. அதுக்குத் தொடர்ச்சியா, சகரத்துலே தொடங்குற தமிழ்ச் சொல்லெல்லாம் சங்கதத்திலேந்து (சமற்கிருதத்திலேந்து) கடன் வாங்குனதுன்னு இவுக சொல்றாக. சகரத்தை அகரமாக்கும் ஒரு பழக்கம் தமிழுக்கு உண்டுன்னு தலைகீழா வேறே இவுக சொல்றாக. இந்த வாதத்தை யார் கொண்டாந்தாகன்னு தெரியலை; கேட்டா, தொல்காப்பியர்னு அடையாளம் காட்டுறாக. அதாவது,

க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே - தொல். மொழி. 28
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ, ஐ, ஔ என்னும் மூன்றலங் கடையே - தொல். மொழி. 29

என்று தொல்காப்பியர் சொல்றாராம். அதாவது, "க,த, ந, ப. ம ஆகிய ஒலிகள் எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதல் வரும். சகரமும் அப்படித்தான்; ஆனா ச, சை, சௌ - அப்படின்னு ஒரு சொல்லும் தொடங்காது. (அலங்கடைன்னா விதிவிலக்குன்னு அருத்தம்)" - இப்படி இவுக பொருள் கொள்றாக.

"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்; பாடினவன் பாட்டைக் கெடுத்தான்"ங்கிறது பழமொழி. பாவாணர் இதை ஒத்துக்குனது கிடையாது. அவர் "இது பாட வேறுபாடு; எப்பவோ இதை மாத்தி எழுதிப் புட்டாங்க"ன்னு சொல்வார். இதற்கு துடிசை கிழார் சாமி சிதம்பரத்தின் துணையையும் அவர் கொண்டு வருவார். சாமி சிதம்பரம் சொல்ற தொல்காப்பியப் பாடம் இப்படியிருக்கு:

க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே

"அய்யா, சகரக் கிளவி மற்றது மாதிரித்தான்; ஆனா கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல்லே வராது"

மேலே சொல்றபடி பார்த்தா சகரம் மொழி முதல்லே வரும். பாவாணர் எதுனாலே அப்படிச் சொன்னாருன்னா, நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு பழைய மேற்கோள் வெண்பா வருது. அதுலே ஆணித்தரமா, சகரம் மொழி முதல்லெ வரும்னு சொல்லியிருக்கு.

சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி - சவிசரடு
சத்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை

இன்னும் போய், ஒப்பியன் மொழிநூல் - 1 (தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 143-144) - லும், தமிழர் வரலாறு - 2 (தமிழ் மண் பதிப்பகம், பக்கம் 42-44) பல்வேறு சகரச் சொற்களை பாவாணர் எடுத்துக் காட்டுவார். இங்கே நான் கொஞ்சம் தான் காட்டாகக் கொடுத்துருக்கேன். இது எல்லாமே வடமொழியிலேர்ந்து கடனா? - ன்னு பாவாணர் கேட்பார்.

சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சண்டை, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சகர், சரி, சருகு, சருவம், சல்லஒப்பியன் மொடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி-சாட்டி), சவட்டை - சட்டை, சவட்டு - சமட்டு - (சமட்டி - சம்மட்டி), சவடி, சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு-சறுக்கு, சன்னம்

இன்னும் தொல்காப்பியத்துலே, சில மொழியாட்சிகள் விட்டுப் போயிருக்கிறது என்றும் பாவாணர் சொல்லுவார். மேலும் அவர், "தொல்காப்பியம் ஒரு இலக்கண நூலே அன்றி, அகரமுதலி அன்று. அதில் ஒரு சொல் இல்லாவிடில் அது தமிழே இல்லை என்பது மொழியறிவும் உலக அறிவும் இன்மையையே காட்டும்." என்று ஆணித்தரமாக எடுத்துரைப்பார்.

ஒரு தமிழ்-தமிழ் அகர முதலி (சண்முகம் பிள்ளை; தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம்) யை நாம எடுத்துப் பார்த்தால் ககர முதற் சொற்கள் கிட்டத்தட்ட 3200 இருக்குறதைப் பார்க்கலாம். இதே போல சகர முதற்சொற்கள் 1800 க்கும் மேலே இருக்கு. ககரமுதற் சொற்களைப் போல 56 % சகர முதற் சொற்கள் இருக்கும் போது அவற்றைக் கடன் என்று சொல்லுவதை, நம்மாலே நம்ப முடியாமல, அண்ணாச்சி!

நமக்குத் தோணுற கேள்விகள் பல.

சகரம் முதலாகாத மொழி உண்டோ ? உரசொலியும் (ஸ), அதிரொலியும் (ஜ) ஆக பல சகரங்கள் இருக்கும் மற்ற மொழிகளின் ஊடே, சகரம் முதலில் வராது என்று சொல்லப்படும் தமிழ் என்ன ஒரு தனி வகை மொழியா? இத்தனைக்கும் நாகரி எழுத்துக்களை ஆயும் போது அவை தமிழி எழுத்தைப் பின் பற்றியதாக இருக்க வேண்டும் என்று கொள்ளப் பெரும் வாய்ப்பு இருக்கு. அதில் சகர வருக்கம் என்று சொல்லும் போது சகரத்தை முதலில் வைத்தே சொல்லுகிறார்கள்; அப்படி இருக்கும் போது, சகரம் தமிழில் சொல்முதலில் வராதுன்னு சொன்னா, அது பொய்யான தோற்றமாய் நமக்குக் காட்டுது.

மேலும் எகரத்திற்கும் அகரத்திற்கும் உள்ள தொலைவும், ஒகரத்திற்கும் அகரத்திற்கும் உள்ள ஒலியியல் தொலைவு (phonetic distance) நிரம்பக் குறைவுதான். செ, சொ என்ற ஒலிகள் தமிழில் முதலில் வரும் போது, 'ச' என்று மட்டும் முதலில் வராதாம். அது எப்படி? ஆகாரம் முதலில் வருமானால் அகரம் வராது என்பது ஒலியியலுக்கு எப்படிப் பொருந்தும்? பழந்தமிழர்களின் நாக்கு என்ன வளையலையா? "சாவு என்ற சொல்லை ஏற்கலாம், சாவு>சாவம்>சவம் என்ற சொல்லை ஏற்க முடியாது"ன்னா அது என்ன கூத்து? ஈரொலிகள் (diphthongs) மொழிக்கு முன்னே வராதுன்னு சொன்னா, அதிலே பொருள் இருக்கு. (குரவம் - கிற சொல்லைத் தப்பான வகையில் வடமொழிப் பாணியில், ஈரொலி பலுக்கி 'கௌரவம்' னு எழுதுவதை இங்கே பார்க்கோணும். இதே போல, நாய் கவ்விற்று என்றே தமிழில் வரும்; கௌவிற்று என்று வராது.) ஔகாரம், ஐகாரம் போல அகரத்தையும் பார்த்தால் எப்படி? மொத்தத்தில் சகரம் மொழிக்கு முதலில் வராது என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாத கருத்தாக இருக்கு. இப்படி ஒரு விதி தமிழ்லே இருக்கும்னா, மற்ற தமிழிய மொழிகள்லெ ஏன் இல்லை என்ற கேள்வியும் நமக்கு எழுகுது. தமிழ் மட்டும் என்ன ஓர் அலங்கடையா? இல்லாத ஒரு விதியை இருக்குன்னு வச்சுக்கிட்டு, பல தமிழ்ச் சொற்களை ககரத்தில் இருந்து சில அறிஞர்கள் சகரத்துக்குக் கொண்டு வருவாக. இதுக்கு கன்னடத்தெ வேறெ துணைக்கு அழைப்பாக. என்னால் இதை ஒத்துக்க முடியலை.

எனக்குத் தோணுறது:

"ஊசிமுனையின் மேல் கோபுரம் கட்ட முடியுமா? ஒள்ளத்தியோண்டு இடத்துலே அரமணையா கட்ட முடியும்?"

"சகரம் முதல்லே வரலைன்னா, தமிழ்ங்கிற கோபுரம் இடிஞ்சே போகும். கணக்கில்லாத சொற்களின் பிறப்பு நெறி கெட்டுப் போகும். சங்க காலத்திலே இருந்து இன்னை வரைக்கும் இருக்கிற தமிழை வச்சுப் பார்த்தா இது பகுத்தறிவாப் படலை."

இனிப் பெரியவங்களுக்கு விட்டுருவோம். "சம்"மில் இருந்து மொழி முதல் தொடங்கும் என்றே கொண்டு நாம மேலே நடப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, March 15, 2006

சமயம்-2

இந்த 'உம்>அம்'முங்கிற "பொருந்தல் கருத்து" வேர் ரொம்ப வளமான வேருங்க.

ஊம்>ஊமுதல்>உம்முதல்= உறிஞ்சுதல்; (ஊமுதலைத் தொடர்ந்து இடக்கர் அடக்கலா ஒரு சொல் இருக்கு; அதை இங்கே சொன்னாச் சவையிலெ தப்பாயிரும்; தனியாயிருந்தாச் சொல்லலாம்; அதனாலே தவிர்க்கிறேன்.)

உம்மம்>அம்மம் = அம்மாவின் முலைப்பால்; உம்முதல் = வாய் பொருத்தி பாலை உண்ணுதல்; உறிஞ்சுதல்

உம்>அம்>அம்முதல் = பொருந்துதல்
அம்முதல்>அம்புதல்= கூடுதல்
அம்பல் = குவிந்த மொட்டு, சிலர் அறிந்து கூறும் புறங் கூற்று (அம்பலும் அலரும் களவு - தொல். 1085). யாழ்ப்பாணத்துலே அம்பல்ங்கிற சொல்லாலெ இந்தப் புறங் கூற்றைச் சொல்லுவாகன்னு கேள்விப் பட்டிருக்கேன்.

அம்பல்>அம்பலம் = கூடுகிற இடம். அந்தக் காலத்திலே கோயில் தானே, அண்ணாச்சி, கூடுகிற இடம். ஊரிலே நல்லது, கெட்டது எல்லாமே கோயிலை வச்சுத் தான். ஊர்க் கூட்டம் கூட, கோயிலில் தான்; (இது தமிழ்த் திரைப்படத்துலே மட்டும் இல்லை, அண்ணாச்சி; உண்மையும் அதுதான். எங்கூர்லெ ஊர்க் கூட்டத்தைப் புள்ளிக் கூட்டம், கரைக் கூட்டம்னு கூடச் சொல்றது உண்டு.) மலையாளத்திலே கோயிலை அம்பலம்னு தான் சொல்லுவாக. இதே மாதிரி கன்னடம் துளுவிலேயும் கூட இருக்கு.

சிற்றம்பலம்>சிதம்பரம் (வடமொழி எழுத்துப் பெயர்ப்பு); தில்லையிலே இருக்கிற நடவரசன் அம்பலம் ஒரு காலத்துலே சிறு அம்பலம் தான். பின்னாடித் தான் பொற்கூரை வேய்ந்து பொன்னம்பலம் ஆகிப் பேரம்பலம் ஆனது. இன்றைக்குக் கோயில் பரப்பில் பார்த்தால் மதுரை பெரிசா, தில்லை பெரிசான்னு சொல்ல முடியலை. சிலபேர் வீட்டுலே மதுரைதான் பெரிசு; சிலபேர் வீட்டுலே தில்லைதான் பெரிசு. என்ன சொல்றீக?:-)

திருச் சிற்றம்பலம்னு சொல்ல வேண்டிய சிவநெறியாளர்கள் சிதம்பரம்னு புரியாமச் சொல்லி நல்ல சொல்லை மறக்காதீக. தில்லையும் மதுரையும் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பங்கு கொண்டவை. பொன்னம்பலத்துலே தான் சோழர்கள் முடி சூடிக் கொள்றது. வெள்ளம்பலத்துலே (மதுரை வெள்ளியம்பலம்) தான் பாண்டியர்கள் முடி சூடிக் கொள்றது. அம்பலம்னா அரண்மனைன்னும் அருத்தம் உண்டு. அரண்மனையோட தொடர்பு கொண்டவுகளைத் தான் அந்தக் காலத்துலேர்ந்து அம்பலகாரர்னு சிவகங்கைப் பக்கம் சொல்லுவாக.

அம்பாரம் = பெருந் தொகுதி "யானைமேலே அம்பாரம்"னு கேள்விப்பட்டு இருப்பீகளே?

அம்முதல்>அமைதல் = பொருந்துதல். "நல்லா அமைஞ்சிருச்சு" ன்னு சொன்னா சீராகப் பொருந்தியிருக்கிறதுன்னு பொருள். அமைதல்லேர்ந்து வந்ததுதான் அமைதி. ஒன்று பட்டு அமைந்த பிறகு பேச்சுக்கு அப்புறம் எங்கே இடம், அண்ணாச்சி? வெறும் மோனம் தானே? (இதையும் புரியாம, மௌனம் னு பலபேர் சொல்றோம். இந்த ஔகாரமே தமிழுக்குத் தடங்கல் தாங்க. ஔகாரத்திலே வர்ற சொற்களையெல்லாம் கூர்ந்து கவனிச்சா அதுகள்லே நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளெ மறைஞ்சு கிடப்பதைப் பார்க்கலாம். இப்பக் கவுண்டர்னு கோயமுத்தூர் பக்கம் சொல்றாங்க. எருமையூரிலே (மைசூரில்), கருநாடகத்திலே, கவுடர்னு சொல்றாக. ஆனாக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தா கவுண்டர்ங்கிறது கோடரின் திரிபுன்னு விளங்கும். கொங்கு நாடு, மேடான சிறு சிறு குன்றுகள் உள்ள நாடு. கொங்கை என்பதும் இந்த மேட்டுப் பொருளில் வந்தது தான். பழைய கொங்கு நாடு மிக மிகப் பெரிசு. இன்றைய கோவை, ஈரோடு, கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களோடு, தென் கன்னடம், ஏன் கொங்காணம் (Goa) வரைக்கும் கூட அது நீளும். அதே போல கோடு என்பதும் மேடு, குன்று, மலை என்று பொருள் கொள்ளூம். மேட்டு நிலத்து ஆட்கள் கோடர்கள்; நல்லியங் கோடன், செங்கோடன் போன்ற சொல்லாட்சியைப் பாருங்க. கோடர் கௌடர்/கௌண்டர் ஆன கதை இதுதான். இதே போல தான் குரவம் கௌரவம் ஆச்சுது. குரவர்கள்னா, பெரியவங்க, மதிக்கப் படவேண்டியவங்கன்னு பொருள். சிவநெறியிலே சமயக் குரவர்கள் நால்வர்னா, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்னு சொல்லுவாக. கௌரவம்னா மதிக்கப் படவேண்டிய தன்மை தானே! கடைசிலே கௌரவம்னா வடமொழிலேர்ந்து வந்ததுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். அதைக் குரவம்னு மாத்திப் பலுக்குங்க அண்ணாச்சி, நல்ல தமிழாயிடும். மறுபடியும் சொல்றேன். ஔ- ன்னாவிலே இருக்கிற சொற்களை எல்லாம் நல்லாப் பாருங்க!)

அமைதல்>அமைத்தல். இந்தக் காலத்துலே அமைப்பாளர்னு சொல்றோமே; அது 20ம் நூற்றாண்டு சொல்லாட்சி. அதது இருக்குற இடத்துலே பொருத்தி வச்சாத் தாங்க அது அமைப்பு; அப்படிப் பொருத்தி வைக்கிறவர் அமைப்பாளர்; அதைவிட்டு கந்தர கோளமா, போட்டது போட்டபடி கிடந்தா, அமைப்புன்னு எப்படிச் சொல்லுவோம்? திகைச்சுப் போயிற மாட்டோ ம்?

இப்படி ஒழுங்கா, அரச காரியங்களைப் பார்த்து அமைக்கிறவர் அமைத்தர்>அமைச்சர்; வட தமிழிய மொழிகளில் அமைத்தர்>அமாத்தியர் ன்னு ஆவார். அதேபோல அமைத்தர்>அமைந்தர்>அமந்தர் ஆகி மந்திரியும் ஆவார். அமைந்தர் என்பது administer என்று இந்தையிரொப்பிய மொழிகளில் முன்னொட்டுச் சேர்ந்து திரியும். நம்ம என்னடான்னா, administration - க்கு வார்த்தை இல்லைன்னு தடவுறோம். அமைப்புத் துறை தாங்க administration. உங்க நிறுவனத்துலே, இனிமே இதைப் பயன்படுத்துங்க.

அமை>அமையம் = பொருந்திவரும் நேரம்.
அமை>அவை>அவையம்= எல்லோரும் சேர்ந்து சம்முன்னு பொருத்தமா உட்கார்ந்திருக்கிற இடம். அதாவது ஒரு assembly. அரசனின் "அறங் கூறு அவையம்" -- இது போல ஏகப்பட்ட அவையம் எடுத்துச் சொல்லலாம்.

அம்>அமர்தல் = பொருந்துதல். ஒரு இடத்தில் உட்காருதல் என்பதும் பொருந்துதல் தான்
அமர்>அமரிக்கை = அடக்கம். "இருப்பதே தெரியாத படிக்கு அமரிக்கையா இருந்தாருங்க!" - ன்னு சொல்றோமில்லே? அதே நேரத்துலே அமளிங்கிறது ஆரவாரத்தோடு இருக்கிறது. சிலபேர் அமரிக்கையும் அமளியும் ஒண்ணுன்னு நினைச்சுக்கிட்டு மாறிப் பயன்படுத்தியிர்றதும் உண்டு.

விளக்கு அமர்ந்து போச்சுன்னா அடங்கி, ஒடுங்கிப் போச்சுன்னு அருத்தம்
"அமர்த்துடா அவனை"ன்னு சொன்னா "பேச விடாதே"ன்னு பொருள்.
அம்முதல்>அமுங்குதல் = ஒடுங்குதல்; "அவன் குரல் அப்படியே அமுங்கிருச்சு"
அம்முகிற காரணத்தால் அம்மி, (துவையல் அரைக்கிறோம் இல்லெ; அப்ப தேங்காயை அமுக்கி நசிச்சுத் தட்டையாக்கி.... அப்படி வந்த சொல் அது.);
அமுங்கு>அமுக்கு>அமுக்கம்>கமுக்கம் = அடங்கி, செய்தியை வெளியே சொல்லாமல் இருத்தல்
இந்த கமுக்கம் தான், இன்றையத் தமிழில் "கம்முன்னு கிட" என்று வருகிறது. "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்தில் வரும் ஆண்டாளு (மனோரமா ஆச்சி) ஞாவகம் வருதோ?
அம்>அமிழ்>அமிழ்தல் = நீரில் அமுங்குதல்

அம்>அமல்தல் = நெருங்குதல் "வேய் அமல்கல்" - கலித்தொகை 45
அமர்=போர். ஒருத்தருக்கு ஒருத்தர் பொருதுறதுதானே போர். அதனாலே இந்தப் பொருளும் இதற்கு உண்டு. அமர்>அமரம் = போர் மறவருக்கு விடப் பட்ட மானியம்.

அம்>அம்பு>அம்பர் = ஒருவகைப் பிசின்; ஒட்டுதல் பொருள்.
அம்முதல்>அம்புதல்>அப்புதல் = தட்டையாகச் செய்தல், ஒட்டுதல் பொருத்துதல்
அப்புதல்>அப்பளம்>பப்படம். = தட்டையாகச் செய்த உளுந்துப் பண்டம்.
அப்பளித்தல் = தட்டையாக்குதல்

இதோடு அகரத்தை முடிச்சிக்குவோம்.

அன்புடன்,
இராம.கி.

சமயம்-1

"என்ன இது! இப்படியா ஒருத்த இருப்பாக! இருப்புக் கொள்ளாம! சூடு கண்ட பூனையாட்டாம் அங்கும் இங்குமா அலமறிஞ்சு இருக்கீக.......உக்காருங்கய்யா! சம்மணம் போட்டு உக்காருங்க! தாமரையாட்டம் குத்தவைச்சு உங்களை இருக்கச் சொல்லலையே! சம்மணந்தானே போடச் சொன்னாக! அதுக்கே இவ்வளவு சங்கடப் பட்டா எப்படி? உடற்பயிற்சி, ஓட்டம், நடை எல்லாம் உண்டோ ? இல்லை வெறும் சுகவாசியா? ஓகம் பண்ணுறவுக தான் தாமரை, அல்லின்னு அழகு பார்க்கோணும்! உங்களுக்கு என்னாச்சு!"

"வேறெ ஒண்ணும் இல்லைங்க; தரையிலே இருக்காம, குறிச்சிலேயே உக்கார்ந்து பழகியாச்சா, திடீர்னு சொன்னோன்னெ சரவலா இருக்கு. கொஞ்சம் பொறுங்க! ஆமாம், இது சம்மணமா, சப்பளமா?"

"எல்லாம் ஒண்ணுதாங்க! சப்பணம்னு கூடச் சிலர் சொல்லுவாக. சப்பையா உக்காந்தா சப்பளம்னு தஞ்சாவூர்ப் பக்கமும், சம்மணம்னு திருநெல்வேலிப் பக்கமும் சொல்றது தான். சம்முன்னு, சமக்கச் சேர்ந்து உக்காந்தா சம்மணம். சமக்க உக்கார்றதுக்கு விரிக்கிறது தான் சமக்காளம். (புரியாத் தனமா ஜவளி, ஜாமான் ஜவ்வாதுன்னு சொல்றாகல்லே அது மாதிரி ஜமக்காளம்னு சில பேர் நீட்டி முழக்குறதும் உண்டு. அவுங்கள்லாம் ஆஷ்டுக் குஷ்டி ஆட்கள்.) காலை மடக்கி ஒண்ணு மேலே இன்னோண்ணு போட்டு அட்டணக்கால் இடுறமில்ல? அது கூட ஒருவகையான சப்பணம் தான்."

"சில பேர் சம்மணம் போட்டு உக்கார்ற போது கூனிக் குறுகி அசடு வழிஞ்சு.....அதேயேன் கேக்குறீக? முதுகு வளையாம நெஞ்சு நிமிர்த்தி உக்காரணுமில்லே? சவையிலே வேறெ மாதிரி உக்காந்தா குத்தமாயிடாது? பட்டிக் காட்டான்னு சொல்லமாட்டாக?"

"சவையிலெ நெஞ்சு நிமிர்த்தி உக்கார்ற போது, கல்லுப் போல சில போது சமைஞ்சு போயிடுறோம். என்ன பண்றது? இந்தக் காலு மரத்துப் போகுது; சமைஞ்சு போறதை அமைஞ்சு போறதுன்னும் சொல்றது தான். அப்படிச் சமைஞ்சு, அமைஞ்சு இருக்கிற இடம் தான், அரசனுக்கு முன்னாடி இருக்குற திருவோலக்க மண்டபம். "சமை"ங்குறது "சவை"ன்னும் ஆகும்"

"என்ன? ஒரு மாதிரிப் பார்க்கிறீக? இதுக்கெல்லாம் தொடக்கம் வெறும் 'உம்ம்ம்ம்ம்' கிற ஒலிதாங்க! 'அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!' -ங்கிற கம்பன் தொடர் படிச்சிருக்கிகள்லே? அதுலே 'உம்' னு வருது பாருங்க அதுக்குப் பொருள் தாங்க இந்த உடன்பாட்டுப் பொருள். இது ஒருத்தர் கொள்ற காதலில் மட்டும் இல்லெ; காகுத்தன், பிராட்டி என்ற இருவருமே நோக்கிக் கொள்றதுலே உடன்பாடுன்னு கம்பன் புரிய வைக்கிறான்."

இப்ப.... ஒருத்தர் ஏதோ ஒரு கருத்தைச் சொல்றார். நாம் அதைக் கேட்டு, "ஊம்"முன்னு மட்டுமே, சொல்லிக்கிட்டு இருக்கோம். மறு விடையே சொல்லலை. அவருக்கு அய்யம் வந்துருது.

"என்னங்க, நீங்க! ஊம் கொட்டிக்கிட்டே இருந்தா எப்படி? ஒத்துக்கிறீங்களா, இல்லையா?"

விளங்காம அவரு கேட்டாலும், ஊம் கொட்டுதல் - னா ஒப்புக் கொள்ளுதல் - னுதான் அருத்தம். 'ஊம்' கிறது ஈழத்தார் வாயிலெ ஓம்னு ஆகும். தமிழகத்தார் வாயிலெ ஆம்னு ஆகும். வட தமிழிய மொழிகளில் "ஹாங்"னு ஆகும். மொத்தத்தில் உம்முதல்னு சொன்னா உடன்படுதல்னு தான் பொருள்,

உம்முதல்ங்கிறது அம்முதல்னும் திரியும். அம்முதல்னா தெலுங்கிலெ "ஒரு பொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்" னு பொருள் கொள்ளும். இந்த அம்முதல்லெ இருந்து வந்தது தான் தமிழில் இருக்கும் சிறப்புச்சொல்லான அங்காடி. தெலுங்குச் சொல் தெரியாமப் போச்சுன்னு வச்சுக்குங்க, அங்காடி எப்படி வந்ததுன்னே நமக்குத் தெரியாமலே போயிருக்கும்.

உடன்பாட்டுப் பொருள் ஒன்று படுதலையும், பொருந்துவதையும், சேர்தலையும், கூடுவதையும், ஏன் ஒட்டுவதையும், ஒடுங்குவதையும் கூடப் படிப் படியாகக் குறிக்கும்.

"என்னடா இது? வகுப்பு எடுக்குறான்னு பார்க்கிறீகளோ? மன்னிச்சுக்குங்க, அண்ணாச்சி! குமார்னு ஒருத்தர் இந்தொனேசியாவிலெ சாகர்த்தாவுக்குப் பக்கத்துலே (காரவாங்னு நினைக்கிறேன்) இருந்தார். துகிலியல் (textile) வினைஞர். சிவநெறியிலே ஆழ்ந்த ஈடுபாடு. ஒரு தடவை இணையத்துலே "சமயம்" கிற சொல் எப்படி வந்துச்சுன்னு கேட்டார். ஓய்வு நேரத்துல, நமக்கு இதே பொழப்பாப் போச்சா? அங்கேயும் இங்கேயும் தேட ஆரம்பிச்சு, ஊரம்பட்டுக்குச் செய்தி சேர்ந்துருச்சு. அதான் இப்படிக் கானல்லே.....சொல்ல ஆரம்பிச்சேன். வேண்டாம்னா சொல்லிருங்க! நிறுத்திப்புடுவோம்."

"நீங்க ஒண்ணு, நிறுத்திடாதீங்க, சொல்ல வந்ததைச் சொல்லிப்புடுங்க; சொல்லு, பொருளு, பிறப்பு, வளர்ச்சின்னு பேசுனாலே, பத்துப்பேர்லெ ஏழு பேருக்கு ஒருமாதிரியாத் தான் இருக்கும்; மீதி மூணு பேராவது படிக்க மாட்டாகளா!"

"அது சரி, எல்லாம் ஒரு நப்பாசைதான்"

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 14, 2006

ஐந்திணைக் காட்சிகள்

(உரைவீச்சு)

(முன்னால் மடற்குழுக்களிலும், திண்ணையிலும் வெளியானது; இப்பொழுது ஒருசில திருத்தங்களுடன்.)
ooooo

கோடு போட்டாப்புலே,
சாலை போறதுக்கு,
இது என்ன பாலையா?
"மருதங் காணும், மருதம்.....
பொன்னு வெளையுற மருதம்";
வயலும் வயல் சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா?
கும்மோணத்திலேர்ந்து மாயவரம் போறதுன்னா,
அப்படியும் இப்படியும் ஆறு மாரி வளைஞ்சு தான் ஓடும்;
ஆற அமர வேடிக்கை பார்த்துக்கிணு போம்;.
அங்கே பார்த்தீரா, ஓய்?
இறவையைப் போட்டுட்டு குத்தாலம் மாதிரி
தண்ணிக்கடியிலே தொட்டிலே குளிக்குறான்,
இதான்,ஓய் மருதம்!

ooooo

அலையடிச்சு மணல்திரைச்சு
உப்புக்காத்தில், நொரையெழும்ப,
இது என்ன நெய்தலா?
"பாலைய்யா, பாலை.....
பொட்டக் காட்டுப் பாலை";
முல்லையும் மருதமும் திரிஞ்சதாக் கேள்விப் பட்டிருக்கீயளா?
மதுரைலேர்ந்து தூத்துக்குடி போறதுன்னா,
இப்படித் தான் காட்சி திரிஞ்சுகிட்டே போகும்;
பனை, வேலிக் கருவை, புளி, கள்ளி, ஆடா தொடை;
அங்கே பார்த்தீகளா,வே?
வேகாத வெய்யில்லே பதநீரு, நீர்மோரோட
வெள்ளரிப்பிஞ்சையும் நுங்கையும் கூடைலெ விக்கிறான்,
இதான்வே பாலை!.

ooooo

வேங்கையும் கடம்பும்,
பூச்சொரிஞ்சு தடம்போட,
இது என்ன முல்லையா?
"நெய்தல் ஓய், நெய்தல்......
நீலப்பூ நெறஞ்ச நெய்தல்";
கடலும் கடல்சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா?
பிச்சாவரத்துலெ, படகு எடுத்துப் போனீருன்னா,
உப்பங்கழியிலே போயிட்டே இருக்கலாம்;
புன்னை விழுது, எறாலு வலை, செங்கால் நாரை;
அங்கே பார்த்தீரா, ஓய்,
டொக்குன்னு நாட்டுத் துமுக்குச் சத்தம் கேக்குது;
கொக்கைச் சுட்டு டப்புன்னு விழுத்தாட்டுறான், பாரும்
இதாரும் நெய்தல்

ooooo

மஞ்சுதழுவ நெஞ்சடைக்க,
பச்சைபோர்த்திப் படங்காட்ட
இது என்ன குறிஞ்சியா?
"முல்லைய்யா, முல்லை.....
மோகமுள்ள முல்லை";
காடும் காடுசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கியளா?
முண்டந்துறைலேர்ந்து பாவநாசம் போற வழியிலே,
அடர்த்தியாப் பேரு தெரியா மரங்கள்;
புலி, மான், முயல், காட்டுப் பன்னி;
அந்தத் தடத்தைப் பார்த்தியளா,
நேத்து இந்தப் பக்கம் புலி நடமாட்டம்
இருந்துருக்கோணும்; வாசனை தெரியேல்லை?
இதான்வே முல்லை.

ooooo

வைக்கலை அசைபோட்டு,
எருமையாட்டம் சோம்பிக்கிடக்க,
இது என்ன மருதமா?
"குறிஞ்சிங்க, சாமி குறிஞ்சி....
கோடைக்குச் சொகமான குறிஞ்சி";
மலையும் மலைசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?
நிலக்கோட்டைலேர்ந்து கோடைக்கானல் அம்புட்டுக்கும்,
மரமும், வெளியும், தடமும், தேன்கூடும்;
பச்சப்பசேல்னு, நடுவிலே அமைதியாப் பாறையும்,
அந்தப் பச்சை மலை பார்த்தீங்களா,
வளைஞ்சு, வளைஞ்சு மானம் வரைக்கும் போகுதே?
இந்த வருசம் டாண்ணு நீலமாப் பூத்துரும்;
இதாங்க குறிஞ்சி

அன்புடன்,
இராம.கி.

Monday, March 13, 2006

பேரீச்சை

நம்மூரில் பேரிச்சை என்பது மளிகைக்கடைகளில், ஏதோ ஒரு கிளர்ப் புட்டிலில் (glass bottle)* கிடக்கும் பழமாகவே எனக்குச் சிறு அகவையில் தோற்றமளித்தது. அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு (ஒரு உருவாய்க்கு 16 அணா) 7,8 என எங்கள் ஊரில் அவ்வப்போது வாங்கிச் சாப்பிட்டதற்கு மேலாக அது என்னை ஈர்த்ததில்லை. இந்தக் காலத்து Lion dates, விதவிதமான விளம்பரங்கள், எல்லாம் அப்பொழுது நான் அறிந்தது கூடக் கிடையாது.

நாலு ஆண்டுகளுக்கு முன், அலுவல் நிமித்தமாய், சவுதி அரேபியத் தலைநகர் ரியாதில் இருபது மாதங்கள் வாழ நேர்ந்தது. அங்கு, பேரீத்தம் பழத்துக் கொட்டையை எடுத்து விட்டு, அதற்குள் வாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, இன்னும் இது போன்ற பருப்புக்களையும், பல்வேறு இனிப்புக்களையும் உள்ளடக்கிப் புடம் போட்டு, விதம் விதமாக பல்வேறு மேலாடைகளைப் போர்த்தி, பேரிச்சம் பழங்களை அழகு செய்து, சுவிஸ் சாக்லெட்டுகளைப் போல, நல்ல பண்டங்களாய் விலையுயர்ந்த பெட்டிகளில் அடைத்து, ஒய்யாரமாக அடுக்கி, மிக உயர்ந்த விலைக்கு விற்கும் கடைகளை பார்த்து, அசந்து போனேன். என்னடா இது? இந்த ஓரணாப் பேரிச்சைப் பழத்திற்கு, இப்படி ஒரு பட்டுக் குஞ்சலமா, இவ்வளவு காசா என்று எனக்குத் தோன்றியது. பெரிய பெரிய ஈச்சம் பண்ணை வைத்திருப்பவர்கள், இதற்கென்று தனி ஆலை வைத்து, பின்னால் ஈச்சம் பழத்தைப் பதப்படுத்தி, ரியாத் நகரில், இப்படிப் பண்டங்களாய் விற்பார்கள். குறிப்பாக பெருங் கோடைக்குச் (வெம்மை கிட்டத் தட்ட 50 C) சற்று முன்னால், நகரமெங்கும், பேரங்காடி, காய்கறிக் கடைகள், பழக் கடைகள் தோறும் பேரீச்சை குவிந்து கிடக்க, அங்கங்கே "எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பரியாக (free) அளித்து, அரபிகள் விருந்தோம்புவது கண்டு, முதல் முறையாய் எனக்கு ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது.

பின்னால் பரியில் இருந்து, குறைந்த காசுக்குப் பொது வகை, அப்புறம் கூடக் காசுக்குச் சிறப்பு வகை, என்று படிப் படியாக பேரீச்சை மேல் அளவு கடந்த ஆசை எனக்கு அரும்பியது. இனிப்பு எனக்குக் கூடாது என்றாலும், என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ரியாதில் இருந்து ஊருக்கு வரும்போது, வித விதமான பேரீச்சைப் பண்டங்களை வாங்கி வருவேன். அவற்றைச் சாப்பிட்டு, வியந்து போகாத என் நண்பர்கள், உறவினர்கள், சொந்தக்காரர்கள் இல்லை என்றே சொல்லலாம். என் பித்து இன்னும் கொஞ்சம் கூடிப் போனது. மேலும் அது ஆழமாய்ப் போக, ஒரு பேரிச்சம் பண்ணையை பார்ப்பதற்காக, அந்தூர் அரபிகள், சோமாலிகள், சூடானிகள் மூலம், நாட்டுப் புறங்களுக்குப் போகத் தொடங்கினேன். அதுவரை தெரியாத சவுதியின் இன்னொரு பக்கம், எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கத் தொடங்கிற்று. மேலும் மேலும் வியப்பு. நாம் இதுவரை மற்றவர் மூலம் கேட்டது ஒன்று; அறிவது மற்றொன்று என்று ஆனது. அவர்களின் முரட்டுத் தனத்திற்குள்ளும் ஓர் ஈரம்; ஒரு நாகரிகம் இருப்பதை அறிந்தேன். மாந்தர்கள் எங்கிருந்தாலும் அடிப்படையில் ஒன்று போலத்தான் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கியது.

பாறைநெய் (petroleum), பெடூவாய்ன் அரபிகள், களிமண் கோட்டைகள், மெர்சிடசு சீருந்துகள் (cars) என்று ஒரு பக்கச் சார்பாகவே செல்வத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நாட்டின் இன்னொரு பரிமானம் எனக்குப் புரியத் தொடங்கிற்று. பாலைவனத்திலும் ஒரு வேளாண்மை; உலகத்தின் மிகப் பெரிய அல்-மராய் பால் பண்ணை. மறு ஊடகை (reverse osmosis), பல்மடி ஆவியாக்கல் (multi-effect evaporation) ஆகியவற்றின் மூலம் கிடைத்த நல் நீரையும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலத்தடி மண்ணூற்று நீரையும் (நிலக்கரி, பாறைநெய்யை எடுப்பது போலப் புவிக்கடியில் 200, 400 மீட்டர்களுக்கும் கீழ் ஆழக் கிடக்கும் நீர் மண்ணூறல் நீர் - mineral water) கலந்து செய்யும் சொட்டு நீர்ப் பாசனங்கள், நேர்த்தியான முறையில் நகரங்களுக்குள் நடப்படும் தேர்ந்தெடுத்த பாலை மரங்கள், கால் நடைகளுக்காக அங்கு வளர்க்கப்படும் பெரும்மாண்ட புல்வட்டங்கள்; கால்வாய்கள், அணைக்கட்டுக்கள், நீர்த் தேக்கங்கள், 400 கி. மீட்டருக்கு இடப்பட்டிருக்கும் நல்நீர்க் குழாய்கள் - இப்படி அந்த நாட்டின் பாலைவனம் சிறிது சிறிதாய்ச் சோலைவனம் ஆகும் காட்சி என் கண் முன்னே விரிந்தது. பாலையிலும் அழகைக் காணமுடியும் என்று உணர்ந்தேன். எண்ணெயில் கிடைக்கும் பணத்தை ஓரளவு சரியாகத் தான் நாட்டிற்குப் பயன்படும் வேறு வகையில் செலவழிக்க முற்படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

இந்தத் தெரிதலில் நான் அறிந்த பேரீச்சைக் குறிப்புகளை இங்கு தருகிறேன். பேரீச்சை பற்றிய பல செய்திகள் மற்றோரிடம் இருந்து அறிந்து கொண்டவை தான்; இருந்தாலும் இவை தமிழுக்குப் புதியவை; மரங்கள், பழங்கள் பற்றிய ஆதாரங்களை ஆங்கில வலைத்தளங்களில் இருந்தும் உறுதி செய்து கொண்டேன்.

பேரீச்சை பற்றிய தமிழ்ப்பெயர் விளக்கத்தோடு தொடங்குவோம்.
-------------------------------------
பேரீந்து>பேரீந்தை>பேரீத்தை என்பதன் மருவிய பலுக்கமே பேரீச்சை என்று ஆயிற்று. ஈந்தின் மூலம் அந்தப் பழத்தின் நிறத்தில் இருக்கிறது.
ஈல் என்பது ஒளிநிறத்தைக் குறிக்கும் என்பதை இல்>எல் என்ற வேர்மூலத்தில் இருந்து கிளைத்த சொற்களைக் கொண்டு ஓர்ந்து பார்க்கலாம். [நம்மூர் ஈச்ச மரம் பேரீச்சை மரத்தோடு நெருங்கிய உறவு உடையது; ஆனாலும், அதன் காயும், பழமும் வேறு சுவை. நம்மூரில் ஈச்சங்காயில் உள்ள துவர்ப்பான பருப்புக்காகவே, தோலை ஒதுக்கிச் சாப்பிடுவது உண்டு. அங்கோ, கொட்டைகள் சாப்பிடுவதாக, நான் கேள்விப் படவில்லை; ஒதுக்கவே படுகின்றன. நம்மூரிலும் கனிந்த ஈச்சம் பழங்களின் சதையைத் துய்த்து, கொட்டைகள் ஒதுக்கப் படுவது ஓரோ வழி உண்டு. காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி போகும் இருவுள் தடத்தை (railway track) ஒட்டி அவற்றின் இரு பக்கச் செம்மண் மேடுகளில் (அந்த மேடுகளில் ஈச்சையும் பனையும் மிகுதி; இப்பொழுது எல்லாம் அங்கு ஒரே முந்திரிக் காடாய் ஆகிவிட்டது.), நண்பர்களுடன் நெடிய தொலைவுக்கு நடை பழகும் பொழுது, ஈச்சங் காய்களைப் பறித்துத் தின்றது எனக்கு இன்னும் நினைவுக்கு வருகிறது.]

இந்தச் சொற்களுக்கு வேர்ச்சொல் "இல்" எனத் தொடங்கும். அது பின் கொஞ்சம் கொஞ்சமாய்த் திரிந்து தொடர்புள்ள சொற்களை நமக்கு இனங் காட்டும்.

இல்>எல் = ஒளிவிடும் கதிரவன்
இல்>இலகுதல் = விளங்குதல், ஒளி செய்தல்
இலகுதல்>இலங்குதல் = ஒளி விடுதல்

இல்>இலங்கு>இலக்கு>இலக்குமி = ஓளி விடுகின்ற தெய்வப் பெண் = திருமகள்; இதன் காரணமாகத் தான் தாயார் கருவறையில் மஞ்சள் பொற் சுண்ணம் கொடுக்க வேண்டும். விவரம் தெரியாத பட்டர்கள் குங்குமம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். குங்குமம் என்ற செஞ்சுண்ணம் பூதேவி (=அல்லது ஆண்டாள்) கருவறையின் முன் கொடுக்கப் பட வேண்டியது.

இலங்கு>இலிங்கு>இலிங்கம் = ஓளித் தோற்றம் காட்டும் சிவனின் அடையாளம். திருவண்ணாமலையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஓளி தான் சிவனின் முதல் அடையாளம்; ஒளியும் நெருப்புமே இறையின் முதல் அடையாளங்களாய், மாந்தன் உணர்ந்தான். அதை இன்றைக்கு இருக்கும் இலிங்கப் படிமத்தோடு ஒன்று படுத்துகிற தொன்மங்களை இங்கே சொன்னால் கட்டுரை நீண்டு விடும்.

இலங்கு>இலங்கை = ஒளிவிடுகிற இடம்; அங்குள்ள காடெல்லாம் மஞ்சளாகப் பூத்ததோ, என்னமோ, எனக்குத் தெரியாது. கடல் கொண்ட பழந் தமிழகம் (அதன் மிஞ்சிய பகுதிகளில் இன்றைய இலங்கையும் ஒன்றே. யார் ஏற்காவிட்டால் என்ன, நம்முடைய பழைய நிலம் அங்கும் அதற்குத் தெற்கும் இருக்கிறது.) பற்றிப் பேசுகிற போது 49 நாடுகள் தவிர, ஒளி நாடு என்ற ஒன்றும் சொல்லப்படும்.

இலம்>ஈலம்>ஈழம் = இதுவும் ஒளி விடுகிற இடம் தான்.

[ஒளி என்பது போக, இன்னொரு விதமாவும் இந்தச் சொற் பிறப்பைப் பார்க்கலாம். அது ஈல்தல் = பிரித்தல்; ஈலம்>ஈழம் என்பது பெருநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிலம்; ஈலப் பட்ட நிலம் என்றும் சொல்லலாம். ஈல்தலின் நீட்சியாய் ஈள்தலும், அந்த ஈள்தலைச் செய்யும் ஓர் ஆயுதம் ஈட்டி என்பதையும் எண்ணிப் பார்க்கலாம். இதே போல ஓர் ஆற்றின் நடுவே அரக்கப் பட்டது (= பிரிக்கப் பட்டது) அரங்கம். திருவரங்கம் என்ற பெயரின் உட்பொருள் இதுதான். தென்பெண்ணையின் நடுவே, இன்றையப் புதுச்சேரிக்கு அருகில், அந்தக் கால மாவிலங்கை (மா இலங்கை) என்னும் ஊர் இருந்திருக்கிறது. அதில் வரும் இலங்கையும் தென்பெண்ணையின் ஆற்றின் நடுவே வரும் ஒரு தீவு போன்ற அமைப்புத் தான். பிரித்தலைச் செய்வது ஆறாக இருக்கலாம்; கடலாகவும் இருக்கலாம். இன்னும், ஏன்? தீரப் பட்டது தீர்வு>தீவு என்று ஆகும்; தீர்தல் =பிரித்தல். (தீர்த்துவிடு என்பது ஆளை இரண்டாக்கி விடு என்ற பொருளில் தான் முதலில் எழுந்தது.) ஈல்தல் = பிரித்தல், இலங்குதல் = ஒளிவிடுதல் என்ற இரு வினைகளில் எது பொருத்தமாக இருக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப் படாமல் இருக்கிறது. இன்னும் தீவிரமாகத் தரவுகளைத் தேடவேண்டும். இந்த இலங்கை / ஈழம் பற்றிய சொல்லாய்வுகளை நேரம் கிடைக்கும் போது பிறகு பார்க்கலாம்.]

இலகுதல்>இலவுதல்>இலவம்>இலாவம்>இலாபம்; தமிழில் தொடங்கிப் பின் வடமொழிப் பலுக்கைக் கொண்டது; இது ஒரு இருபிறப்பிச் சொல். விளைச்சலிலும், வணிகத்திலும், பொலிவாக, மிகுதியாகக் கிடைக்கிற பொருளை இலாபம் என்று சொல்லுவார்கள். இன்றைக்கும், களத்து மேட்டில் நெல் அளக்கும் போதோ, அல்லது வணிகம் செய்பவர்கள் எண்ணும் போதோ, இலாபம், இரண்டு, மூன்று ... என்றுதான் எண்ணுவார்கள். பின்னாட்களில் பொருளுக்கு மட்டும் அல்லாமல், பொலுவாய்க் கிடைக்கும் பணத்திற்கும் இலாபம் என்ற பெயர் ஏற்பட்டது. பொலுவு, இலவம் என இரண்டுமே profit என்பதைக் குறிப்பன தாம்.

இனி ஈச்சுக்கு வருவோம். இல்>ஈல்>ஈல்ந்து>ஈந்து>ஈத்து>ஈச்சு என்று இது திரியும். ஈல்ந்தம் பழம் = ஒளி நிறத்துப் பழம், பொன்னிறப் பழம்.
அரபு நாட்டுச் செய்திகளுக்கு வருவோம்.

பார்ப்பதற்கு வெள்ளைக் கோதுமை போன்ற ஈச்சாங் குலை, காய்ந்து குலை தள்ளும் போது, பொன்னிற நிறத்தை அடைகிறது. கோடையின் உச்சியில், வெப்பம் சூடேறச் சூடேற, ஒரு மூன்று வார இடைவெளியில், பொன் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக புகர் நிறம் (brown) கொள்ளுகிறது. அரபி மக்கள் "அது புழுங்கி வெக்கையில் கொதிக்கிறது" என்றே சொல்லுவார்கள். [புழுங்குதல் என்பதே boiling என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல். புழுங்குவது புழுங்கல்>புழுக்கல் என்றே சொல்லப் படும். parboiled அரிசி என்பது தமிழில் புழுங்கல் அரிசி என்றே சொல்லப் படுவதைக் காணுக.]

நம்மூரில் வாழைக்குலையை மூடிப் புகையேற்றி பழுக்க வைக்கும் செயலைப் போல், அரபு நாடுகளில் ஈச்சங் குலையையும் பழுக்க வைக்கும் பழக்கம் உண்டு. (ஆனால் அப்படிப் புகைபோட்ட பழங்கள் நல்ல சுவை பெறுவதில்லை.) ஈச்சம் பழத்தை இப்படி வெய்யிலில் போட்டு புழுங்க வைப்பது போதாது என்று சிலவகைகளைத் தேனில் ஊற வைப்பதும் உண்டு.

ஈத்த மரத்தில் ஆண் ஈந்து, பெண் ஈந்து என இருவகை உண்டு. பெரும்பாலும் பண்ணைகளில் ஆண் ஈந்து மரங்களை அளவுக்கு மேல் போகா வண்ணம் அவ்வப்போது வெட்டித் தள்ளிவிடுவார்கள். ஒரு ஆண் ஈந்து இருந்தால் அதைச் சுற்றிலும் பெண் ஈந்து மரங்களை வைப்பது வழக்கம். இந்த மரங்களின் பூப்புக் காலம் பெரும்பாலும் பெப்ருவரி மாத முடிவில் தான் இருக்கும். பூக்களின் குலை மேலே உள்ள இலைத் தோகைகளுக்கு நடுவில் இருந்து கிளைத்து கோதுமை மணிகள் அடங்கிய கதிர் போலக் குலுங்கும். இனிப்பாக இருக்கும் ஆண்மரத்தின் பூவை அப்படியேயும், அல்லது வறுத்தும் அரபிகள் சாப்பிடுவது உண்டு. சில பொழுது அரபிய பருத்துகளில் (bread) இவற்றைச் சுவைக்கெனச் சேர்த்து இடுவதும் உண்டு. பெண்மரத்தின் பூ துவர்ப்பாகவும், சிலபொழுது கசந்தும் கூட இருக்கும். ஆனாலும் பெண் பூக்களில் இருந்து தான் பேரீச்சம் பழம் பிறக்கிறது; இதுவும் ஒருவகை இயற்கையின் விந்தை தான். சில அரபியர்கள் ஆண் பூவில் இருந்து மகரந்தத்தை எடுத்து பெண் மரங்களின் கூந்தல் முடிச்சுகளில் தூவி மகரந்தச் சேர்க்கையைத் தூண்டி விடுவதும் உண்டு. பழங்கள் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பழுக்கின்றன.

ஈத்தை மரங்களில் அவற்றின் கொடி வழி (heredity) கருதி, விலை பேசுவார்கள். வளர்ந்த ஒரு சில உயர் வகை மரங்களை வாங்கி இன்னொரு இடத்தில் நடவேண்டுமானால் சவுதி அரபியப் பணம் 13000, 15000 ரியால்கள் கூட ஆவது உண்டு. ஈத்த மரங்கள் இந்த நாட்டில் பெரும் சொத்தாகவும் கூடக் கருதப் படுகின்றன. ஓரொரு மரங்கள் 50, 100 ஆண்டுகள் கூடப் பலன் தருவது உண்டு.

ஈத்தை மரங்கள் மிகப் பழங்காலத்தில் இருந்து, எகிப்திய நாகரிகம் தொட்டு, வளர்க்கப் படுகின்றன. பழங்களை அப்படியே மரங்களில் இருந்து இனிப்புக் கண்டுகளைப் போலவும், உலரவைத்தும், பழங் காலத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். கொட்டையை எடுத்த பேரீச்சம் பழங்களை ஒன்றாகப் பிசைந்து நம்மூர்களில் செய்யும் கருப்புக் கட்டிகள், புளி உருண்டைகள் போலாக்கிப் பின் நெடுங்காலத்திற்கு வைத்துக் கொள்ளும் பழக்கமும் அரபியருக்கு உண்டு. (நம்மூர்களில் நாட்டுப் புறங்களில், புளி உருண்டைகளை வைத்திருப்பதை நினைவு கொள்ளுங்கள்.) நாட்டுப்புற அரபிகள் (bedouins) கனிந்த ஈச்சங் குலைகளைத் தொங்க வைத்து அவற்றில் இருந்து வடியும் கனிச் சாற்றைச் சருக்கரை (sugar), தேன் போன்ற இனிப்புப் பொருளாகக் கொண்டதும் உண்டு. குளிர் காலத்தில் ஈரம் உள்ளிறங்காமல் இருக்க மரத்தில் கிடக்கும் ஈச்சாங் கூந்தலை ஒன்றாகக் கட்டிவைக்கும் முறையும் இங்கு உண்டு. பின்னால், வெட்டப் பட்ட ஈச்சாங் குலைகளை ஈரத்தோடு, ஈச்சோலைக் கூடைகளில், மூடிவைக்கும் போது, அவை கெட்டு விடாமல் இருக்க, அவற்றின் அளவுக்கு மீறிய சர்க்கரையே கூடப் பாதுகாப்பைத் தரும்.

பேரீச்சங் கனிச் சாற்றை சொட்டுத் தேன் என்று அரபியர் பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. அரபியன் ஒருவன் தன் காதலியை "சொட்டுத் தேனே" என்று அழைப்பதாக ஆயிரத்தொரு அரபிய இரவுகள் கதைகளில் கூறுவார்கள். கருப்ப காலத்திலும், பால்குடிப் பருவத்திலும், தாய்மார்கள் பேரீச்சையைப் பயன்படுத்துகிறார்கள். இரமதான் நோன்பு காலத்தில், ஒவ்வொரு நாளும் நோன்பை முடிப்பது பேரீச்சையும், நீராலும் தான். (அல்லது ஏதேனும் ஒருவகைக் கஞ்சி அல்லது சாறு.) இது போக, நோன்புக் காலத்தில் பேரீச்சையால் ஆன பொரித்த பண்ணியங்களும் (cokkies) உண்டு.

பேரிச்சை என்பது நம்மூர்ப் பனையைப் போல, நூற்றுக்கணக்கான முறைகளில் இந்த நாடுகளில் துய்க்கப் படுகிறது. ஈச்சம் பட்டையை அடித்து, நாராக்கி, பின் அவற்றைக் கொண்டு கயிறாய்த் திரித்து, வடமாய் ஆக்கிப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. ஈர்க் குச்சிகளும் பல்வேறு பயன்களுக்கு ஆளப் படுகின்றன. நம்மூர்களில் தென்னை மரங்களில் கிடக்கும், காய்ந்த தென்னம்பட்டைகளை அவ்வப் பொழுது வெட்டி, மரங்களை ஒழுங்கு செய்கிறார்களே, அதே வகைத் தோரணையும் இங்கு ஈச்ச மரங்களைப் பேணுவதில் உண்டு. இது போன்ற செய்கைகள் எல்லாமே விளைச்சலைப் பெருகவைக்கும் செயல்கள் தான். ஈச்சமரத்தின் அடியில் இருக்கும் சிரட்டை முள்ளுகள், ஈர்க்கஞ் குச்சிகளைச் சேர்ந்த விளக்குமாறு, ஈச்சந் தோகைகளைக் கொண்டு பாய், தட்டு போன்றவற்றை முடையும் கலை, கூரை வேய்வது எனப் பெரும்பாலான செய்திகள் நம்மூர் தென்னை, பனையைப் போன்றவையே.

ஈச்ச மரம் என்பது அரபு நாடுகளில் ஓர் அடிப்படையான மரம். நம்மூர்ப் பனையைப் போல. கற்பகம் கற்பகம் என்று பலரும் சொல்லுகிறோமே, அது நம்மூரில் எந்த மரம் என்று நினைக்கிறீர்கள்? அது கற்பனையான மரம் அல்ல; பனை மரம் தான். பனை தவிர்த்தால், தென் தமிழகம் மற்றும் ஈழம் இல்லை.

அரபுநாடுகளில் ஈச்சமரம் தான் கிட்டத்தட்டக் கற்பக மரம். (வேண்டுமானால் கற்பகம் என்பது கருப்பு நிறத்தைக் குறிப்பதால், மாறாக கிரண மரம் (ஒளி மரம்) என்று சொல்லலாம்.)

அன்புடன்,
இராம.கி.

*ஆங்கிலத்திலும் ஒளிவிடுகிற காரணத்தால் தான் glass என்ற சொல் வந்தது. அதனோடு தொடர்புடைய glare என்ற சொல்லும் ஒளி கிளர்ந்து சொலிப்பதையே காட்டுகிறது. கிளர் என்ற சொல்லடியே, தமிழில் ஆய்ந்து பார்த்தால், இங்கு பொருந்துவதாகத் தெரிகிறது. கிளர் என்றாலே தமிழில் ஒளிதான். ஆனால் அரிதாக இதுவரை பயன்படுத்திய சொல்.

Saturday, March 11, 2006

மரபும் வீச்சும்

யாராவது நாடகக் கலைஞரின் ஆக்கங்களையும், திரைப்படக் கலைஞரின் ஆக்கங்களையும் ஒன்று சேர வைத்து மெய்ப்பாட்டுக் கலையென்று மதிப்பிடுவார்களோ? இன்றையத் தமிழ்த் திரைப்படம், நாடகத்தில் இருந்து பிறந்து வந்திருந்தாலும், நாடகக் கூறுகள் எல்லாம் மறைந்து திரைப்படம் தனி நிலை பெற்றுவிட்டது. அது போலத்தான் புதுக் கவிதை என்று கிளம்பி மக்கள் மனத்தைக் கவர்ந்து புழங்கிவரும் உரைவீச்சும்; என்னதான் இதைச் செய்பவர்கள் இலக்கணம் இல்லையென்றாலும், அதற்கென ஓர் இலக்கணத்தை ஒருசிலர் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதையும் மரபுப் பாவையும் சேர்ந்து மதிப்பிடச் சொன்னால் எப்படி?

பாவிற்கும், உரைவீச்சிற்கும் களம் ஒன்றுதான். பொருள் ஆழம் தேவை.; அதுதான் உள்ளடக்கம்; ஆனால் சொல்லும் முறைகள் வெவ்வேறானவை.

பா என்பது உள்ளடக்கம் பொருந்திய ஒரு கோலம். அது மாக் கோலமாக இருக்கலாம். அல்லது வண்ணம் கலந்த நிறங்கோலியாகக் (ரங்கோலி)கூட இருக்கலாம். அங்கே ஓசை உண்டு; முன்வந்து நிற்கிற மோனை உண்டு; எதிர்கொண்ட எதுகை உண்டு; ஒவ்வொரு சொல்லும், அசையும், தளைப்படுகிற கட்டும் உண்டு. அது ஒரு தேர்ந்த பின்னல் வேலையைப் போன்றது; அழகுணர்ச்சியின் உந்துதலால், மேலும் மேலும், முனைந்து நாம் சோடிக்கின்ற முத்தாய்ப்பு, மரபுப் பா.

பா வடிப்பவர்கள், இசைக்கத் தெரியா விட்டாலும், கேட்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; நாட்டுப்புறத் தெம்மாங்கில் ஈடுபாடு இருக்க வேண்டும்; ஓசையில் கொஞ்சம் ஆழ்ந்து தோய வேண்டும். தந்தனாத் தாளத்தில் இழைந்திருக்கத் தெரிய வேண்டும் (இழைதலைத் தான் வட மொழியில் லயம் என்று பெயர்க்கிறார்கள். இழையம்>லயம்) மொழியின் நெளிவு, சுழிவுகள், மற்றும் சொல்வளம் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் கூடும் போது, தானாகவே மோனை, எதுகை, தொடை, தளை எல்லாம் வந்து விடும். அப்புறம் யாக்கத் தெரிந்தவனுக்கு யாப்பு எதற்கு? எழுதிய பாவை, தனித்திருந்து, குரலை எடுத்து, உயர்த்தி, உரைத்துச் சொல்லிப் பாருங்கள்; ஓசை தட்டுமிடத்தில், தளை தட்டும்; நீங்கள் திருத்தி விடலாம். ஒருமுறைக்கு மும்முறை உங்கள் பாவைப் படியுங்கள்; உங்களுக்கே திருத்தங்கள் தெரியும். அதே பொழுது, ஆனைக்கும் அடி சறுக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்; உங்கள் பா வளம் சிறக்கும்.

பாவின் வளம் சொன்னதால், உரைவீச்சு குறையுள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். யாராவது ஆப்பிளையும் நாரங்கைப் (orange) பழத்தையும் ஒப்பிடுவார்களோ? அது ஒரு விதம்; இது இன்னொரு விதம்; உங்களைச் சட்டென்று களத்துக்குள் கொண்டு வரும் ஓர் உலுக்கல், உரை வீச்சிற்கு உண்டு. இங்கே அழகு என்பது ஒரு பொருட்டல்ல; ஆனால் துடிப்பு என்பது முகன்மையானது. அதனால் தான் இதை வீச்சு என்கிறோம். இதன் ஈர்ப்பில் நாம் கவரப் படுகிறோம். அதே பொழுது, உரைவீச்சு என்ற என் சொல்லைக் கண்டே வெகுண்டு எழுகிறவர்களும் உண்டு. முன்பு எப்பொழுதோ ஒருமுறை உரைவீச்சு / மரபுப் பா பற்றி நான் தமிழ் இணையத்தில் எழுதப் போக, ஈழக் கவிஞர் இரமணிதரன் வெகுண்டு எழுந்தார். ஒரு பத்து மடல்களில் வீச்சும் மரபுமாக வெவ்வேறு புனைப் பெயர்களில் மழை பொழிந்தார்; மனம் மகிழ்ந்தேன் நான்; எப்பேர்ப் பட்ட கவிஞன் இவன் என்று வியந்து போனேன். சிறந்த கவிஞர்கள் அரிதாக இருக்கிறார்கள்.

உரைவீச்சை உணரவேண்டியவர்கள் மரபு ஓவியத்திற்கும், கலவைப் பகுந்தத்திற்கும் (collage painting) உள்ள வேறுபாட்டை உணராதவர்கள்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

என்ற குறளில் சொல்லப்படும் "விழைகின்ற இருவருக்கு இடையே காற்றால் கூடப் பிரிக்க முடியாத தழுவல்" என்ற கருத்தை, ஒரு பகுந்தத்தால் (painting) உணர்த்த வேண்டும் என்றால், அங்கே மரபு ஓவியம் சற்றும் பயன்படாது; ஆனால் கலவை (collage) என்பது மிகச் சிறப்பாக மிளிர்ந்து நிற்கும். ஏனென்றால் சொல்லப் படுவது அதிகப் பட்ட கற்பனை (காற்றால் கூடப் பிரிக்க முடியாத தழுவல்); அதை அதிகப் பட்ட உருவகம் கொண்ட இற்றைக்காலப் பகுந்தத்தால் (modern painting) தான் வரைய இயலும். இங்கே இயற்கைக்கு மீறிய அளவாய், உடலின் வரைவுகள் இருந்தால் தான், சொல்ல வந்ததைக் காண்போருக்கு உணர்த்த முடியும்.

அதைப் போலத்தான் சில உருவகங்களை, எவ்வளவு முயன்றாலும் நாடகத்தில் கொண்டு வர இயலாது; ஆனால், திரைப்படத்தில் கொண்டுவர இயலும். இதே போல, மரபுப் பாக்களைக் காட்டிலும், உரைவீச்சில் சில உருவகங்கள் மிக எளிதாக வெளி வந்து சேரும்.

அதே பொழுது உரைவீச்சு செய்பவர், அந்த "வீச்சு" என்ற கருத்தின் பொருளை உணர வேண்டும். துணுக்கு, துணுக்காகவாவது அங்கங்கே வீச்சு (ஓசையால் அவ்வப்போது வருவது) வரவேண்டும். (முரண் என்பது ஒரு வீச்சு; முரண் மட்டுமே வீச்சு அல்ல; உரையோடை - rhetoric - என்பது ஒரு வீச்சு; ஆனால் அடுத்தடுத்த உரைவீச்சில் அதே விரவி நின்றால் அப்புறம் வீச்சு தெறிக்காது; நமக்கு வெறுத்துப் போய்விடும்.) படிக்கும் போது, உள்ளே ஊடி நிற்கும் வீச்சுத் தான் மனதில் நிறைந்து, முழு ஆக்கத்தையும், மீண்டும் நம் ஞாவகத்திற்குக் கொண்டு வரச் செய்யும். இல்லையென்றால் வெறும் வரிகளை மடித்துப் போட்ட நிலையில், முடிந்துவிடும். (ஒரு காலத்தில் இப்படி மடித்துப் போட்டவற்றைக் கம்பாசிட்டர் கவிதை என்று கேலி செய்வார்கள்.) உரைவீச்சில் தளை இருக்க வேண்டியதில்லை; ஆனால் ஆங்காங்கே மோனையும், சிறிதளவாவது எதுகையும், தொட்டுக் கொள்கிறாற் போல் தொடையும் இருந்தால், அது இன்னும் சிறப்பு.

உரைவீச்சாளர்கள் மொழியில் ஆழ்ந்த கவனம் கொள்ளவேண்டும். "ஜுவாலை, ஸ்வதந்திரம், ஜகம், பிரகாஸம், சூட்சுமம், இப்படியாக ஆங்காங்கே நாலைந்து வட மொழிச் சொல்லாட்சிகளை உள்ளே கொண்டு வந்து விட்டால், உங்கள் வீச்சின் வளம் கூடும் என்று நினைக்காதீர்கள். அது உங்களை, ஏதோ ஓர் இனம் புரியாத சிந்தனையாளனாக வேண்டுமானால் காட்டும்; வீச்சின் வளம் கொண்டவராய்க் காட்டாது. நல்ல தமிழில், உரை வீச்சை எழுத முடியும்; செய்யுங்கள்! உரை வீச்சு என்ற புதிய வடிவம் தமிழுக்கு வந்தது நல்லது தான்.

மரபுப் பா எழுதுவோர்க்கும், உரைவீச்சாளருக்கும் ஒரு பொதுவான வேண்டுகோள்; உங்கள் ஆக்கத்தை படித்து, அது நினைவில் நின்று, ஆறு மாதம் கழித்து படித்தவனால் அதை மேற்கோள் காட்ட முடியுமானால், நீங்கள் வென்றீர்கள் என்று பொருள்; அதை நினைவு கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு இதற்கு மிகத் தேவை.

அன்புடன்,
இராம.கி.

Friday, March 10, 2006

நடைபழகு

தத்தித் தத்தி நடைபழகு - சின்னராசாவே!
தயங்காமல் நடைபழகு - செல்லராசாவே!
பற்றிக்கொள்ளு எந்தன்கையை - சின்னராசாவே!
படிபார்த்து நடைபழகு - செல்லராசாவே!

முத்துதிர முறுவலிடு - சின்னராசாவே!
முகமலரச் சிரித்துவிடு - செல்லராசாவே!
வச்சகண்ணை எடுக்காமல் - சின்னராசாவே!
வளைய வளையச் சுற்றிவிடு- செல்லராசாவே!

பந்தெடுத்துப் போட்டுவிடு - சின்னராசாவே!
பந்தெடுக்க நடைபழகு - செல்லராசாவே!
கற்கநடை வண்டியொண்ணு - சின்னராசாவே!
கைபிடித்து நடைபழகு - செல்லராசாவே!

எட்டிநடை போட்டுஎனைச் - சின்னராசாவே!
ஏறிவந்து பிடித்துவிடு - செல்லராசாவே!
தட்டுத்தடு மாறியினும் - சின்னராசாவே!
தடம்பார்த்து நடைபழகு - செல்லராசாவே!

கட்டிமுயல் மொம்மையிதைச் - சின்னராசாவே!
கட்டிக்கொள்ள நடைபழகு - செல்லராசாவே!
வட்டிநிறைப் பாற்சோறை - சின்னராசாவே!
பரந்தூட்ட நடைபழகு - செல்லராசாவே!

பொட்டிநிறை பொம்மைகளை - சின்னராசாவே!
பொறுக்கெறிய நடைபழகு - செல்லராசாவே!
கட்டித்தங்கம்! கண்ணுக்குட்டி! - சின்னராசாவே!
கன்னத்தில் முத்தமிடு - செல்லராசாவே!

அன்புடன்,
இராம.கி.

Wednesday, March 08, 2006

மணத்திற்கு முன் புணர்ச்சி

பாலுறவு பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை நாடு தழுவ நடத்தி, அதனோடு ஒரு சில குமுகாய ஒளிவட்டங்களிடம் முன்னிகையை (comment) "இந்தியா டுடே" தாளிகை கேட்டது; அப்பொழுது, பேர்பெற்ற ஒரு தமிழ் நடிகை "பால்வினை நோய்கள் தாக்காமலும், தேவையில்லாக் கருப்பம் உண்டாகாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டால், திருமணத்திற்கு முன் ஒரு பெண் பாலுறவு வைத்துக் கொள்ளலாம்; இந்தக் காலத்தில் படித்த ஆண்மகன் ஒருவரும் தன் எதிர்காலத் துணைவி கன்னியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்" என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அப்படிக் கருத்துத் தெரிவித்ததோடு அவர் அமைந்திருந்தால் அந்த இட்டி (issue) பெரிதாகவே ஆகியிருக்காது. அப்படிச் சொன்னது, 'கற்பு, திருமணத்திற்கு முன் உடலுறவு' என்ற வகையில், குமுகத்தில் ஒரு சாரார் கருத்து என்றும், "அந்த கருத்துக் கணிப்பு ஏற்கக் கூடியதா?" என்ற கேள்வியோடு அடங்கிப் போயிருக்கும்.

ஆனால், கருத்துக் கணிப்பிற்கு அப்புறம், ஒரு நாளிதழ் செய்தியாளர் போட்ட தூண்டிலில், அதே நடிகை "திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? (DINAMANI 27/09/2005)" என்று வாய்தவறிச் சொல்லப் போக, அந்தக் கேள்வியின் பரிமானங்களில் ஒரு சிலர் கோவம் கொண்டு கொதித்துக் கேள்வி கேட்டதாய் ஆனது. விளைவாக, "உணர்ச்சி பொங்கும் நேரத்தில் அமைதி காப்பது நல்லது" என்று ஒரு சிலருக்குப் புரியாத நிலையில், ஒரே கூச்சலும் குழப்பமுமாய் மாநிலம் முழுதும் எழுந்துவிட்டது. இந்த விளைவுகளைக் கண்டு பதறிப் போன அந்த நடிகை, "அய்யய்யோ, நான் ஒன்றும் தவறான பொருளில் தமிழ்ப்பெண்களைப் பற்றிச் சொல்லவில்லை" என்று மன்னிப்புக் கேட்க, ஒருவாறு சமதானம் (எதிர் எதிரான இருவர் சமமான தானம் - same stand - எடுப்பது சமதானம்; அதைச் சமாதானம் என்று வடமொழிப் பலுக்கில் சொல்ல வேண்டாம்.) ஏற்பட்டது. அதை அப்படியே விட்டுப் போகாமல், ஒரிரு மாதங்கள் கழித்து, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய், முதல் நடிகைக்கு ஆதரவாய், இன்னொரு நடிகை, "தமிழர் என்றால் கொம்பு முளைத்திருக்கிறதோ?" என்று எடுத்தெறிந்து பேசியவுடன், மீண்டும் பெரிய விவாதமே தோன்றி விட்டது. வலைப்பதிவு உலகத்திலும் இந்த விவாதத்தின் எதிரொலி இருந்தது.

சொன்னவர்கள் இருவரும் தமிழரா, தமிழரில்லையா, அவர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவரா, மாராட்டியமா என்ற பேச்செல்லாம் நம்மைப் போன்றவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனால் அந்த நடிகைகள் இருவரும், முறையே நாளிதழ் செய்தியாளரிடமும், திரைப்படம் சார்ந்த ஒரு கூட்டத்திலும், "தமிழர்கள் பற்றித்தான் பேசினார்கள்" என்பது உண்மை. அப்படிப் பேசிய பின்னால், தமிழர்கள் என்போர் மறுவினையாய் எழுந்தது இயற்கையே. [முதல் நடிகை பொதுவாகச் சொன்னது இந்தியா டுடேயில் உள்ள முன்னிகையில் மட்டும் தான். நாளிதழ்ச் செய்தியாளரிடம் அளித்த முன்னிகை, தமிழரைப் பற்றிய விதப்பான முன்னிகை தான்.]

இந்த விதப்பான முன்னிகைக்குப் பின் "அதெப்படி செருப்பு, விளக்குமாறு, அழுகியமுட்டை, தக்காளி ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டு நடிகைக்கு எதிராக வரலாம்?" என்ற ஒருசிலரின் கேள்வி சற்று விந்தையானது. கையில் கொடிக்கம்பு, பதாகைகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு போராட்டத்திற்குப் போவதும், கத்தியும், சூலமும், கம்பு எடுத்துக் கொண்டு அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு பேரணிக்குப் போவதும், உருவப் பொம்மைகளுக்குச் செருப்பு மாலை அணிவிப்பதும், ஊரில் உள்ள கெட்டவார்த்தைகளை எல்லாம் எடுத்து வந்து ஊர்வலங்களில், மாநாடுகளில் அருச்சிப்பதும், மாநாட்டில் அரிவாள், கத்தி, கவாடங்களை எடுத்துச் சுழற்றிக் காண்பிப்பதும், கண்டனத்திற்கு உரியவர் உயிரோடு இருக்கும் போதே கொடும்பாவி எரிக்கும் கூட்டங்களுமாய் இருக்கும் இந்தத் துணைக் கண்டத்தில், நடிகைக்கு முன்னால் காட்டிய எதிர்ப்பு இன்னொரு வகை; அவ்வளவு தான். இது வன்முறையா, வன்முறையில்லையா என்பதும் கூட அவரவர் அளவுகோலைப் பொறுத்தது. இதையும் "தன்னைச் சார்ந்தோர் பயன்படுத்தினால் அது வன்முறை இல்லை, மறுசாரார் பயன்படுத்தினால் அது வன்முறை" என்று சொல்லுவது தேர்ந்தெடுத்த மறு அருத்தம் (selective re-interpretation) கொடுக்கக் கூடிய செயல்கள். வன்முறைக்கும், வன்முறையற்றதற்கும் இடையே உள்ள கோடு மிக மிக மெல்லியது. அதைப் பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாய் நெகிழ்த்தி, நெகிழ்த்தி, நகர்த்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் மென்முறையாய்த் தெரிந்தது இன்றைக்கு வன்முறையாகவும், வன்முறை மென்முறையாகவும் உருமாறிக் காட்சியளிப்பது மாந்த வரலாற்றில் பலமுறை நடந்திருக்கிறது. "வல், வன்மை, வன்முறை" என்ற சொற்களை இந்தக் கால நடைமுறையில் எல்லாவற்றிற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதனுடைய வரையறை என்ன என்பதில் பலரும் வேறுபடுகிறோம். "எது மென்முறை? எது வன்முறை?" என்பதே வேறொரு விதயம். வன்முறையின் வரையறை பற்றியதல்ல இந்தப் பதிவு.

பொதுவாக நம்முடைய தமிழ்ப் பேச்சுக்களில் தொனி என்பது முகமையானது. பேசப்படும் தொனியைப் பொறுத்து, எதிராளிகளின் மறுவினைகள் அமையும். அந்த நடிகைகள் எந்தத் தொனியில் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள் என்பது நமக்குத் தெரியாது. நாளிதழ், தாளிகை போன்றவற்றில் இந்தத் தொனியைச் சரியானபடி விவரிப்பது செய்தியாளர் தன் கட்டுரையில் பயன்படுத்தும் சொற்களைப் பொறுத்தே அமையும். இதில் செய்தியாளர் கொஞ்சம் விலகினாலும், விரும்பாத பலன் ஏற்பட்டுவிடும். கரணம் தப்பினால் மரணம். ஒரு துளி விலகினாலும் குமுகத்தில் கலகம் தான் மிஞ்சும். இங்கே தவறு செய்தியாளர் பயனாக்கிய சொற்களினாலா, அல்லது அந்த நடிகைகளின் உள்ளார்ந்த கருத்தாலா, என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் ஊரெல்லாம் ஒரே கூச்சலும். விவாதமும் எழுகத் தான் செய்தன.

இந்த விவாதத்தில், தமிழ் உணர்வுகளை நிகராளும் ஒருசாரார் தாளிகையில் வந்த கருத்துச் செய்தியையும், நாளிதழ் செய்தியாளரிடம் சொன்ன நேர்காணற் பேச்சையும் ஒன்றாகப் பொருத்தி அந்த நடிகை தமிழரை மையப்படுத்திப் பேசியதாகவே எண்ணிக் கொண்டு "அது எப்படிச் சொல்லப் போயிற்று? தமிழருக்குச் சொல்லும் தவறான அறிவுரை அல்லவா இது?" என்று கேட்டும், எழுதியும் வந்தார்கள். (தாளிகையில் நடிகை கொடுத்த பொதுவான முன்னிகையை பெரும்பாலானவர்கள் சரியான படி பொறுப்போடு விளங்கிக் கொண்டார்கள் என்று தான் எண்ணுகிறேன். பெரும்பாலானவர்களுக்கு அவர் நாளிதழ்காரருக்குக் கொடுத்த நேர்காணல் வாசகத்தில் தான் கொஞ்சம் இடறல்.)

'தாங்கள் முற்போக்காளர்கள், இற்றைச் சிந்தனை கொண்டவர்கள், அறிவுய்திகள் (புத்திஜீவிகள்- intelligentia)' என்று சொல்லிப் பெருமை கொள்ளும் இன்னொரு சாரார் "இந்தப் பெண்கள் சொன்னது கருத்துச் சுதந்திரத்தின் பாற்பட்டதே; பெண்ணியம் தன் குரலை இப்படி எழுப்புகிறது; இந்தக் குரல்களை ஒடுக்கும் பண்பாட்டு வல்லாண்மை என்பது தமிழருக்குள் எழக் கூடாது" என்று நடிகைகளுக்கு ஆதரவாக பேசியும், எழுதியும் வந்தார்கள். கூடவே இதுநாள் வரை இல்லாத வழக்கமாய், மற்ற எல்லாவற்றிற்கும் பெரியாரைத் திட்டும் முதற் சாரார், இந்த இட்டியில் மட்டும் பெரியாரைத் தங்கள் அணிக்கு ஆதரவாய் இழுத்து வந்தார்கள். [இந்தச் சாரார் நாளிதழ் செய்தியாளரிடம் அந்த நடிகை கூறியதைச் "சொல்லவே இல்லை"யென்று மறுத்து, வெறுமே இந்தியா டுடேயில் பேசியதை மட்டுமே, வைத்துக் கொண்டு மிகவும் சதுரப்பாட்டோ டு வாதம் செய்தார்கள். இப்படி ஒன்றை வைத்துக் கொண்டு இன்னொன்றைத் தவிர்த்துப் பேசுவது தேர்ந்தெடுத்துத் தூரத் தள்ளும் நினைமறதி நோயாக (selective amnesia) த்தான் நமக்குத் தோற்றுகிறது.]

இந்த இருசாராரும் வழக்காடுவது இன்று நேற்று என்றில்லை; பல காலம் பல்வேறு புலனங்களில் எப்பொழுதுமே முரண்பட்டுத் தான் நிற்கிறார்கள். இது இன்னொரு களம், அவ்வளவுதான். இரண்டு பக்கமும் பங்கு பெறும் ஆட்கள் கிட்டத் தட்டக் கால காலமாய், தங்கள் கொள்கைகளில் உறுதியாய் இருக்கும் அதே ஆட்கள் தான். அதே பொழுது, அங்கும் இங்கும் கொஞ்சம் பேர் சற்று அணி மாறி, அந்தந்த இட்டிக்கு (issue) ஏற்ப மாறுவதும் உண்டு. ஆனால் அடியில் இருக்கும் நிகழ்ப்புகள் (agenda) எப்பொழுதுமே ஒன்று தான். இவர் அவரை எதிர்ப்பார்; அவர் இவரை எதிர்ப்பார்.

"எங்கெல்லாம் தமிழ் என்ற உணர்வு எழும்புகிறதோ அதை அடி, விடாதே, கொச்சைப் படுத்து" என்று ஒரு கூட்டம்; அதை எதிர்த்து இன்னொரு கூட்டம்; முதற்கூட்டம் இரண்டாமவரை பொதுக்கையர் (facists) என்று எளிதாகச் சொல்லும்; இரண்டாம் வகைக் கூட்டம் முதற்கூட்டத்தை "வாயளவில் எழுவரல் (liberal) பேசும் போலி முற்போக்காளர்கள் (pseudo-progressives)" என்று சொல்லும். இந்த இரண்டிலும் கலக்காது, மூன்றாவதாய் இடைநின்று, ஒர் இடது சாரிக் கூட்டம் குட்டி முதலாளியத் தன்மையொடு அவ்வப்பொழுது கருத்துச் சொல்வதும் உண்டு. அப்படிச் சொல்லும் போது, இடதுசாரிகள் குமுகாயப் புரட்சி, வர்க்கம், முரண்பாடு என்ற பல்வேறு தேற்றுக்களை(theory)யும், கொள்கைகளையும் பற்றி உரக்க விதந்து பேசுவார்கள்; ஆனால் நடைமுறை என்று வரும் போது "தமிழகக் குமுகாயத்தின் வெளிப்பாடுகளை, தமிழக வரலாற்றை, இவர்கள் என்றாவது ஆழ்ந்து புரிந்து கொண்டார்களா?" என்ற அய்யம் எழும்; இந்த அய்யம் தெலிங்கானாப் புரட்சிக்குப் பின் இடதுசாரிகள் நடந்து கொண்ட முறையில் இருந்தே தமிழ்நாட்டில் பலருக்கும் உண்டு. இடது சாரிகளின் நிலைப்பாடு பல நேரம் நீரின் மேல் கிடக்கும் எண்ணெய் போல தமிழ்க் குமுகாயத்தை ஓட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது.

குழூஉக் குறி வாசகங்கள், கண்மூடி முழக்கங்கள் (jargons) என்பவை தமிழ்நாட்டு அரசியலில் எப்பொழுதுமே மிகுதி. முதற் கூட்டம் (ஆங்கிலம், ஓரளவு தமிழ் என்று விரியும்) மிடையத் (media) துறையில் பெரும் வல்லாண்மை பெற்று இருப்பதால், (எப்படி தமிழீழ விடுதலைப் புலிகளைப் 'போல்போடிஸ்ட்' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லுகிறார்களோ அது போல) "பொதுக்கையர்" என்ற பட்டத்தை வெகு எளிதில் இரண்டாமவருக்குக் கொடுத்து விடுவார்கள். இரண்டாமவரும் தங்களுடைய குழூஉக் குறிகளை முன்வைத்து "ஊரெங்கும் கேடு கெட்ட, போலி முற்போக்குத்தனம் பேசி எங்கள் குமுகாயத்தைச் சீரழிக்காதீர்கள்" என்று முதலாமவர்களைப் பற்றிச் சொல்லுவார்கள்; உடனே முதலாமவர் "இரண்டாமவர் பேசுவது பெண்ணியத்திற்கே எதிரானது; தமிழ்நாடு தான் இந்தியாவில் முனைக்குறை நோயில் (Acquired Immuno Deficiency Syndrome - AIDS; immune = எதிர்கொள்ளுதல்; முனைகொள்ளுதல் = முன்னிருந்து எதிர் கொள்ளுதல்; immuno deficiency = முனைகொள்ளும் திறன் குறைவாக இருத்தல்) முதலிடத்தில் இருக்கிறது; இது பற்றிய குமுகாயப் புரிதல் நமக்கு வேண்டாமா? இன்னும் கற்பு, அது, இது என்று பிற்போக்குத்தனம் பேசிக் கொண்டு முட்டாள் தனத்தில் இருக்கலாமா" என்று திருப்பி விட்டு, முதலாமவர்கள் மட்டும் தான் ஏதோ பெண்ணியத்தைக் காப்பாற்றுவது போலவும், "ஆணுறை, பால்வினைநோய் பரவுதல்" போன்ற புலனங்களில் அவர்கள் தான் குமுகாய நலத்தில் அக்கறை கொண்டவர்கள் போலவும், மற்றவர்கள் எல்லாம் கால காலத்திற்கும் பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பது போலவும், இரண்டாமவர் தமிழகத்தைக் கற்காலத்திற்கே இட்டுச் செல்கிறவர்கள் என்பது போலவும் சொல்லுவார்கள்.

பொதுவாக இரண்டாம் வகைக் குழுவினரைப் பற்றி "அறிவற்ற மண்ணாங்கட்டிகள், ஆட்டு மந்தைக் கூட்டம், கோமாளிகள்" என்ற பம்மாத்தை உருவாக்கி, நக்கல், ஏளனம் மூலம் ஓர் உள்ளார்ந்த அரசியலை முதலாமவர்கள் காட்டுவார்கள். வெளியில் இந்திய அளவிலும், உலக அளவிலும் இந்தப் பம்மாத்து நன்றாகவே செயற்படும்; செயற்படுகிறது. இந்தப் பம்மாத்து எந்த அளவிற்கு விரவியிருக்கிறது என்றால், "தமிழ், திராவிடம் என்று சொல்லும் எந்தக் கட்டுரையையும் ஒதுக்கு; வடமொழி, ஆரியம் என்றால் கூர்ந்து படி" என்று சொல்லும் அளவிற்கு மேலை பல்கலைக்கழகங்களில் இருக்கும் இந்தியவியல் (Indology) அறிஞர்களில் பெரும்பான்மையோர் தவறான வழியில் திருப்பப் பட்டுக் கிடக்கிறார்கள். "தமிழ் என்ற அடையாளம் தள்ளத் தக்கது" என்ற கருத்து நிலையை ஆணித்தரமாகச் சொல்லி, இரண்டாமவரைப் பண்பாட்டுத் தீவிரவாதிகளாகக் காட்டுவது முதலாமவர்களுக்கு என்றுமே உகப்பானது. "இந்தியா என்பது ஒரு தேசம்; அது பல்தேச நாடு அல்ல; தமிழ்தேசம் என்ற ஒன்று கிடையவே கிடையாது" என்ற நிலைபாடு முதலாமவர்களுக்கே உரியது. இதைச் சாதிப்பதற்காக, எதை வேண்டுமானாலும் வளைப்பது அவர்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.

மற்றவனை முட்டாள் என்பதும், அதனால் "ஒரு சாராரே ஆளப் பிறந்தவர்கள்" என்பதும் இன்று நேற்றா நடக்கிறது? கால காலத்திற்கும் களப்பாளர் காலந்தொட்டு தமிழ்கூறும் நல்லுகத்தில் நடந்து தான் வருகிறது. இந்தத் தொடர் மேலாண்மை தான், தமிழகமெங்கும் கோயில் கோயிலாகக் கல்வெட்டைப் படித்தால் தெரிகிறதே? இந்த அரசியல் நிரம்ப நாளாக நடந்திருக்கிறது என்பது வரலாற்றை ஒழுங்காகப் படித்தவருக்குப் புரியும். "யாருக்கு மங்கலம் மங்கலமாய் ஊர்கள் கிடைத்தன? யார் நிலக்கிழார்களாக, அரையர்களாக மாறினார்கள்? யார் தேவரடியார்களைப் பேணினார்கள்? யார் பெரும்பாலான கல்வெட்டு வாசகங்களின் முடிவில் இழிவு செய்யப் பட்டார்கள்?" என்பதெல்லாம் கல்லின் மேல் எழுத்தாய்ப் புரிந்துகொள்ளலாம். வரலாறு படிக்க முற்படாதவர்களுக்கு வேண்டுமானால், இது விளங்காமல் இருக்கலாம்.

நான் ஒன்றும் நொதுமலாளன் (neutral person) அல்லன். என் சார்பு ஒருவகையில் இரண்டாமவர் பக்கம் தான்; அதே பொழுது கண்ணை மூடிக் கொண்டு வறட்டுத் தமிழ்ப்பெருமையையும் நான் பேசவில்லை. தமிழரின் ஒருசில குறைகள் என மற்றவர்கள் சொல்லுவது எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. நான் அந்தக் குறைகளுக்குச் சப்பைக் கட்டு சொல்ல வரவில்லை. இந்தப் பதிவு 'கற்பு, திருமணத்திற்கு முன் உடலுறவு' என்ற புலனம் பற்றியது. நான் இந்தப் புலனத்திற்குள் வந்து எழுத வேண்டும் என்று முதலில் எண்ணவில்லை. ஏனென்றால், இந்த வாதங்கள் எழுந்த சில நாட்களுக்குள், ஊரெங்கும் வெள்ளம்; பரிதவிப்பு; உயிர்ச்சேதம்; பயிர்நாசம்; அக்டோ பரில் இருந்து திசம்பர் வரை, ஆறேழு முறை அடை மழை வந்து மாநிலத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது. அப்பொழுது பெய்த மழை, மாநிலத்துள் கரந்து கிடந்த உள்கட்டுமானச் சிக்கல்களை எல்லாம் பூதகரமாக (பூதாகரம் அல்ல; தமிழ்ப்பலுக்கின் படி இது பூதகரமே.) வெளிக் காட்டியது. இவை யெல்லாம் சரிசெய்யப் பட வேண்டும். நாட்டில் கிடக்கும் பணிகள் ஏராளமானவை. இந்த மழை அடங்கும் வரையில், கூடவே பொங்கியெழும் உணர்வுகள் கொஞ்சம் அடங்கும் வரை, "கற்பு, திருமணத்திற்கு முன் உடலுறவு" என்ற விதயத்திற்குள் போகக் கூடாது என்று பொறுத்திருந்தேன்.

ஆனாலும் "தமிழர்கள் வல்லாண்மை உணர்வுக்காரர்கள், கருத்துச் சுதந்திரம் பாராதவர்கள், நன்னெறிக் காவல் (moral police) வேலையைப் பார்க்கிறார்கள்" என்றெல்லாம் ஒரு சிலர் பொரிம்பு வேலை (branding) பார்க்கத் தொடங்கியதையும், நக்கல், வெடிச் சிரிப்பு, பட்டங்கள் கொடுப்பது, மாற்றானை முட்டாளாக்கும் சதுரப்பாடு (சாமர்த்தியம்) என ஒரு சாரார் தோற்றம் காட்டத் தொடங்கியதையும் பார்த்த பின்னால், இந்தப் பதிவை இனியும் தாழ்த்த வேண்டாம் என்ற எண்ணம் கொண்டேன். "கற்பு, பழந்தமிழர் வாழ்வு, அந்த நடிகைகள் கூறியவற்றில் எது தமிழுணர்வாளர்களுக்குக் கோவத்தை எழுப்பியது?" என்ற புலனங்களில் இருக்கும் ஒருசில தவறான புரிதல்களை மட்டுமே இந்த இடுகையில் எடுத்துக் கூற முற்படுகிறேன்.

தமிழிலக்கியத்தின் (குறிப்பாகச் சங்க இலக்கியத்தின்) புரிதலின் படி, கற்பு என்பது பெண்ணின் இரு தொடைகளுக்கு இடையில் இருப்பதாக எங்குமே சொல்லப் படவில்லை. "தமிழர் பெண்தொடைகளுக்கு நடுவே கற்பைக் காண்பதாக," திரும்பத் திரும்ப இல்லாததை இருப்பதாக, முதலாமவர்கள் ஏன் சொல்லுகிறார்கள் என்று நமக்குப் புரிவதில்லை. (பெண் தொடைகளுக்கு இடையில் கற்பைத் தேடும் புரிதல் மனு சாத்திரத்தில் எண்வகை மணத்தில் "கன்னிகா தான" முறையை ஒட்டி எழுந்த பிழைபட்ட புரிதல். பெண்தொடைக்கு நடுவில் கற்பைத் தேடுவது மனு சாத்திரத்தின் வழிவந்த புரிதலே ஒழிய, அது தமிழரின் புரிதல் அல்ல. இன்னும் சொல்லப் போனால், அது இருக்கு வேதத்தின் வழிவந்த புரிதல் கூட அல்ல. தமிழர் மணம் என்பது வேறு வகை. அது பாணர் என்னும் காந்தருவர் வழிப்பட்டது என்றுதான் வடமொழிச் சாத்திரங்களும் பழந்தமிழ் இலக்கியங்களும் குறிக்கும்.)

கற்பு என்பது பழைய தமிழ் இலக்கியங்களில் 'சொல்லித் தருவது, கற்பிப்பது' என்ற பொருளிலேயே ஆளப் படுகிறது. கரணத்திற்கு (திருமணத்திற்கு) அப்புறம், "இரு முது குரவோரும் (இரண்டு வீட்டுப் பெரியவர்களும் - அதாவது பெற்றோர்களும்), கணவனும் சொல்லித் தந்த ஒழுக்கத்தின் படி வாழ்க" என்ற வகையில் கற்பிக்கப் படுவது கற்பு. (இதற்கு உரிய தொல்காப்பிய நூற்பாக்களையும், உரையாசிரியர்களின் விளக்கங்களையும் எடுத்து இங்கே விரிவாக ஓதலாம்; ஆனால் கருத்து இதுதான்.)

இந்தக் கற்பித்தலில் "முது குரவோர் என்பது சரி; கணவன் எங்கே வந்தான்?" என்று கேட்டால், பொதுவாக கணவன் என்பவன் மனைவியை விட அகவையில் மூத்தவனாகவே அந்தக் கால குமுகாய வழக்கத்தில் இருந்ததால் வந்தான். சிலம்பில் தலைவன் அவன் மணத்தின் போது ஈரெட்டு ஆண்டு அகவையானாகவும், சிலம்பின் தலைவி அவள் மணத்தின் போது ஈராறு ஆண்டு அகவையானவளாகவும் இருந்ததை இங்கே ஓர்ந்து பார்க்கவும். (சிலம்பின் தலைவன் அந்தக் கதையில் சீரழிந்தது வேறு புலனம்.) ஓரிரு விழுக்காடு புறனடையாய் இருந்தாலும் வழமையில் கணவன் என்பவன் தமிழர் வழக்கில் மனைவியைக் காட்டிலும் மூத்தவனே.

களப்பாளர் காலத்திற்கு முன் "கன்னிகா தானம்" என்ற கருத்து, குறிப்பாக இள அகவையில் திருமணம் என்பது தமிழ் இலக்கியத்தில் எங்குமே சுட்டப் படவில்லை. அகவைக்கு வந்த, பூப்படைந்த பெண்ணிற்குத் தான் தமிழர் திருமணம் செய்து வந்தனர். பூப்பு விழா என்பது தமிழர் குமுகாயத்தில் இன்றுவரை விதப்பாகச் சொல்லப்படும் விழா; தாய் வழிக் குமுகாயமாய்த் தமிழர் நெடுநாள் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவின் வெவ்வேறு சான்றுகளில் இந்த விழாவும் ஒன்று. (எப்படி வரலாற்று மொழியியல் வளருதற்கு சங்கத மொழியாய்வு தூண்டுகோலாய் இருந்ததோ, அதே போல தமிழரின் சில பண்பாட்டுக் கூறுகள் மாந்தவியல் வளருதற்கு தூண்டுகோலாய் இருந்தன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பூப்பு விழா அந்தப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று.)

ஒழுங்காகப் புரிந்து கொண்டால் "தமிழ் வழக்கப் படி", சொல்லித் தந்த கற்பு என்பது இரு பாலருக்கும் பொது தான். பெண்ணுக்கு கணவனையும் சேர்த்து மூவர் சொல்லித் தந்தார்கள்; ஆணுக்கு இருவர் சொல்லித் தந்தார்கள். ஏனென்றால், சங்க காலக் குமுகாயம் என்பது ஓரளவு ஆணாதிக்கக் குமுகாயமே. (இந்த ஆணாதிக்கம் பற்றிப் பேசுவது தனிப் பதிவாகத்தான் இருக்க முடியும்.) அதற்காகப் "பெண்கள் எல்லாம் அடிமைகளாக இருந்தார்கள், அவர்களுடைய கருத்துக்கள் சங்க காலத்தில் ஏற்கப் படவே இல்லை" என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது.

அடுத்தது மணத்திற்கு முன் புணர்ச்சி என்பது தமிழர் வாழ்வில் ஏற்கப் பட்டிருந்ததா என்றால் "ஓரிரு கட்டியங்களில் (conditions) ஏற்கப் பட்டிருந்தது" என்றே சொல்ல வேண்டும். களவியற் புணர்ச்சி என்பது பெரிதும் நம் இலக்கியங்களில் சொல்லப் பட்டதுதான். களவு என்பது தலைவனும் தலைவியும் வெளியோர் அறியா வகையில் பழகுவது என்றே அறியப் பட்டது. அந்தப் பழக்கத்தில் புணர்ச்சி நடந்திருக்கலாம்; நடக்காமலும் இருந்திருக்கலாம். அந்தக் களவு வெளிப்பட்ட நிலையில் (அப்படி வெளிப்படுவதை அலர், அம்பல் என்றெல்லாம் அந்த இலக்கியத்தில் சொல்லுவார்கள்), அவர்களுடைய ஈடுபாட்டைப் பெற்றோர் ஒப்புக் கொள்ள மறுக்கும் நிலையில், தலைவனும் தலைவியும் உடன்போக்காக வேறு இடம் சென்று தாங்களாகவே அங்கு மணம் செய்து கொள்ளுவது உண்டு. பின்னால் அதைப் பெற்றோர் ஏற்றுக் கொள்ளுவதும், ஏற்றுக் கொள்ளாததும் உண்டு.

அதே பொழுது களவியற் பழக்கம் என்பது வெறும் பதின்ம அகவை ஈர்ப்பாக இருந்து விடாது ஒரு பொறுப்பும் சேர்ந்ததாகக் கருதப்பட்டது. வெறுமே புணர்ச்சிக்கு ஆளாகி பின் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகியதாக சங்க இலக்கியத்தில் ஒரு பாட்டுக் கூடக் கிடையாது. புணரத் துணிந்தால் பின் அதன் விளைவைச் சந்திக்கும் உறுதி தலைவன் - தலைவி ஆகிய இருவருக்கும் இருக்க வேண்டும் என்றே அந்தக் குமுகம் எதிர்பார்த்தது. சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் கூட வரைமுறை இல்லாத புணர்ச்சி (promiscous intercourse) தலைவனுக்கும் தலைவிக்குமாய் சொல்லப் பட்டதே கிடையாது. (நடிகை குறிப்பால் உணர்த்தியது வரைமுறை இல்லாத புணர்ச்சி மற்றும் அதன் விளைவைத் தடுக்குமாப் போல ஆணுறை போட்டுக் கொள்ளச் சொல்லும் புணர்ச்சி. இரண்டாமவர் சினந்து எழுந்தது, இந்தப் புரிதலை ஒரு பொறுப்புள்ளவர் சொல்லுகிறாரே என்பதால் தான்.)

அந்தக் காலக் குமுகாயத்தில் வரைவில் மகளிர் (வரைவு இல்லாத மகளிர் - திருமணம் என ஒன்று இல்லாத மகளிர்) இருந்தார்கள்; அந்த வரைவில் மகளிருள், விலை மகளிர் என்பாரும் இருந்தார்கள், இன்னொரு வகையாய் இற்பரத்தைகளும் இருந்தார்கள். பரத்தை என்ற சொல் இந்தக் காலத்தில் தவறாகப் பலரால் புரிந்து கொள்ளப் படுகிறது. "பரந்து பட்டுப் பலரையும் சாருகின்ற பெண் பரத்தை" என்ற விளக்கம் விலை மகளிருக்கு மட்டுமே சரியாக இருக்கும். வரைவிற்கு வெளியே (பரந்து = வெளியே), திருமணத்திற்கு வெளியே, ஆனால் ஒருவனின் இல்லைச் (family) சார்ந்து இருக்கும் பெண் இற்பரத்தை எனப்படுவாள். (இற்பரத்தை என்பவள் திருமணத்திற்கு வெளியே இருப்பவள்; ஆங்கிலத்தில் இவளைக் concubine என்றும், வழக்குத் தமிழில் வைப்பாட்டி என்றும் சொல்லுவார்கள்; இல்லத்தியைப் போல இவளும் ஒரு இல்லை சார்ந்தவள் தான். பெரிய வீடு, சின்ன வீடு என்று கேலி பேசுகிறார்களே அது இது தான்.) மாதவி என்பவள் இற்பரத்தை; விலைமகள் (prostitute) அல்லள். அந்த இற்பரத்தைக்கும் ஒரு சில ஒழுக்கங்கள் உண்டு. சங்க இலக்கியப் பாடல்களில் பரத்தை பற்றிப் பேசும் இடங்களில் மிகப் பலவும் இற்பரத்தை பற்றிப் பேசுகின்றனவே ஒழிய, விலைமகளைப் பற்றி அல்ல. அதே பொழுது போகின்ற போக்கில் விலைமகளிர் அந்தக் குமுகாயத்தில் இருந்தார்கள் என்பதையும் அந்த இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. விலைமகளிர் பொதுவாகச் சங்க இலக்கியங்களில் விதந்தோதப் படவில்லை. சங்க காலக் குமுகாயம் என்பது தன்னுடைய உரியல் நிலை (reality) உணர்ந்ததாய்த் தான் இருந்திருக்கிறது.

அந்தக் குமுகத்தில் மக்கள் பலதிறப் பட்டவராய் இருந்திருக்கிறார்கள். நல்லதும் நடந்திருக்கிறது; கெட்டதும் நடந்திருக்கிறது. ஆனால், "ஒழுக்கம் என்பது குமுகாயம் கட்டுவதற்கு அடிப்படை" என்றே அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் விளைவாய், "விலைமகளிர் ஒழுக்கமும் அதற்கு அடிப்படையான ஒரு சில ஆண்களின் தீயொழுக்கமும்" அடக்கியே வாசிக்கப் பட்டிருக்கிறது. ஒழுக்கம் என்பதின் வரையறையில் நாம் வேறுபடலாம்; ஆனால் ஒழுக்கம் தவறிய நடைமுறையை நம் இளையருக்குக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்றே அவர்கள் நினைத்திருக்கிறார்கள். வரைமுறை இல்லாத புணர்ச்சி என்பது ஒழுக்கம் தவறிய நடைமுறை என்பதே பழம் இலக்கியங்களில் பெறப்படும் தெளிவு.

வரைமுறை இல்லாப் புணர்ச்சி என்பது தமிழ்க் குமுகாயம் சீரழிவதற்குச் சொல்லப் படும் யோசனை. அப்படிச் சொல்லுபவர்களின் குறிக்கோள் பெண்ணியத் தன்னாளுமை அல்ல; வரைமுறை அற்ற முறையில் கலவியைப் பெருக வைத்து தமிழர் என்ற இனத்தை நோயுள்ள இனமாக மாற்றுதற்கு ஆன கருத்து அடித்தளம் போட்டுக் கொடுப்பதே. "பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டு" என்ற சொலவடை போல, ஒருபக்கம் வரைமுறை இல்லாப் புணர்ச்சியைச் சரி என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் ஆணுறை அணிந்து கொள்ளுங்கள் என்பது சரியான அறிவுரையாகத் தெரியவில்லை. தேர்ந்தெடுத்த பித்தலாட்டமாகத் தெரிகிறது. நம் வீட்டுப் பையன் நிக்கோட்டின் நிறைந்த சுருட்டைப் பிடித்துக் கொண்டு நெஞ்செல்லாம் நீர்க் கோர்த்து இருமிக் கொண்டு இருக்கிறான்; அவனிடம் "தம்பி, சுருட்டுப் பிடிப்பதை நிறுத்து என்போமா? நிக்கோட்டின் இல்லாத சுருட்டைப் பிடி என்போமா? ஆணுறை அணிந்து திருமணத்திற்கு முன் கலவியில் ஈடுபடுங்கள்" என்று சொல்லுவது கிட்டத்தட்ட இது போலத்தான். என்னைக் கேட்டால், அது தவறான நெறிமுறை. அதைச் சொல்லுபவர்கள் குமுகாயத்தைச் சீரழிக்கிறார்கள்.

கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிற இவர்கள், "திருமணத்திற்கு முன் உடலுறவு: தமிழர் மரபுக்கு எதிரானதா? சங்க இலக்கியங்களில் பேசாத களவியல் காதலா? பெரியார் சொல்லாத கருத்தா?" என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெட்டி ஒட்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் மாலன், கனிமொழி என்று ஒருசிலர் சங்க காலக் குமுகாயத்தையும் கூடத் தவறாக எடுத்துக் காட்ட முனைகிறார்கள். சங்க காலத் தமிழர் குமுகாயம் என்பது "யாரும் யாரையும் கூடும் ஒரு கட்டற்ற ஆதிகாலப் பொதுவுடைமைக் குமுகாயமாக (primitive communistic society) இருக்கவில்லை. அது இனக்குழுக்கள் நிறைந்த அய்ந்திணை வாழ்க்கையாகவே இருந்தது." அதில் வாழ்வோருக்குக் ஒரு சில கட்டுகள் உறுதியாக இருந்தன.

பண்பாடு என்பது கூட்டத்திற்குக் கூட்டம் வேறுபட்டது. இதில் முற்போக்கு, பிற்போக்கு என்பதும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. நம்மூரில் அத்தை மகள், மாமன் மகளை மணப்பது என்பது அண்மைக் காலம் வரை விலக்கப் படாதது. அதே பொழுது சித்தப்பா மகளை, சித்தி மகளை மணப்பது என்பது மிக மிகக் குறைந்தவரைத் தவிர்த்து மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப் படாதது. இன்னொரு குமுகத்தில் இது மாறி இருக்கலாம். அதற்காக இது சரி, அது சரியல்ல என்பது பொருளில்லை. இது நம்மூரில் ஏற்கப் படும், அது ஏற்கப் படாது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஓரளவு பழகிய நிலையில் ஓர் ஆணும், ஒரு பெண்ணும், ஏன் ஒரு பெண்ணும், இன்னொரு பெண்ணும், அல்லது ஓர் ஆணும் இன்னோர் ஆணும் கன்னத்தோடு கன்னம் தொட்டு போய் வருவதாகச் சொல்லிக் கொள்ளுவது, மேலைநாட்டில் உள்ள பழக்கம்; வெறுமே கைக்கூப்பி, ("போறேங்க" என்று கூடச் சொல்லாமல்) "அப்ப, போயிட்டு வாரேங்க" என்று சொல்லுவது நம்மூர் வழக்கம்.

நம்மில் ஒருசிலர் நெருங்கிய பெண்ணுறவை (அவர் அம்மா, அக்கா, தங்கை என எவராகவும் இருக்கலாம்.) உரிமையோடு "அடி" என்று அழைப்பார்கள். நம்மில் இன்னும் சிலர் அதே நெருங்கிய பெண்ணுறவை "அம்மணி, அம்மா" என்று கொஞ்சம் விலகினாற் போல் அழைப்பார்கள். இதில் இது சரி, அது சரியில்லை என்று சொல்ல முடியுமோ? ஆனால் "அம்மணி" என்று அழைக்கக் கூடிய வீட்டில் "அடி" என்று சொன்னால் அது சரியில்லை என்று தானே சொல்லுவோம்? எந்தப் பழக்கம் எங்கு ஏற்கப் படும் என்று அறியாமல் அறிவுரை சொன்னால் எப்படி?

ஒரு சில வீடுகளில் அகவைக்கு வந்த பெண்ணை அவர் தங்கை, அக்கா என்றாலும் கூடத் தொட்டுப் பேசுவது தவறென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இன்னொரு வீட்டில் இந்தக் கட்டுப்பாடு எல்லாம் இருக்காது. தொட்டுப் பேசும் வீட்டினர் முற்போக்கு என்றும், கட்டுப்பாடு இருக்கும் வீட்டினர் பிற்போக்கு என்றும் கூறமுடியுமா?

இத்தனையும் ஏன் சொல்லுகிறேன் என்றால், குமுகப் பழக்கம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடும்; அது காலத்திற்குக் காலம் கூட மாறுபடும். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் எந்த அரங்கில் உட்கார்ந்தாலும் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் உட்காருவார்கள். இந்தக் காலத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டு வருகிறது. இருபாலரும் பொது அரங்குகளில் பெரும்பாலும் கலந்தே உட்காருகிறார்கள். இப்படிப் பழக்கங்கள் மாறுவதும் உண்டு. ஆனால் இது போன்ற பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் மாறுகின்றன. இங்குமே இது சரி, அது சரி என்ற பொருளில்லை. இது பழக்கம்; அது பழக்கமில்லை; அவ்வளவு தான். அதற்கு மேல் அங்கே ஆழமாய் அருத்தப் படுத்திக் கொண்டு இருக்க முடியாது.

"சொத்துரிமை என்பது வாரிசு உரிமையாக ஆனபோது திருமணம் என்பது வற்புறுத்தப் பட்டிருக்க வேண்டும்; (பெண்ணின் இருதொடைகளுக்கு நடுவே) கற்பைத் தேடுவது அப்பொழுதுதான் ஏற்பட்டிருக்க வேண்டும்" என்ற பொருள்பட திரு. மாலன் தன் வலைப்பதிவில் சொல்லுகிறார். (பிறைக்கோட்டிற்குள் கொடுத்தது என் விதப்பு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.) இடதுசாரிப் புரிதலில் இந்தக் கருத்து பொதுவாகச் சொல்லப்படும். நானும் இதை ஒப்புக் கொள்பவன் தான். ஆனால் ஒவ்வொரு கட்டுப்பாட்டையும், "வச்சாக் குடுமி, சிரைச்சா மொட்டை" என்றபடி இரண்டு எகிறிய நிலையிலே (extreme position) பார்க்க வேண்டுமா, என்ன? ஒரு பக்கம் கற்பு என்பது பெண்ணின் இரு தொடைகளுக்கு நடுவில் இருக்கிறது என்ற புரிதல்; இன்னொரு பக்கம் அதற்கு முற்றிலும் மாறாக, வரைமுறை அற்ற புணர்ச்சி. இடைப்பட்ட நிலையில், ஓரளவு கட்டுப்பாட்டோ டு, தமிழ்க் குமுகாயத்தை உருவாக்க வேண்டுமானால், இளையருக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும் என்று பார்க்க வேண்டாமா? இத்தனைக்கும் நெறிமுறை தவறிச் செல்வதற்குப் பல வாய்ப்புக்கள் கூடி இருக்கும் இந்தக் காலத்தில் ஒரு பெற்றோர், பொதுவாழ்வில் இருப்பவர், என்ன அறிவுரை சொல்லவேண்டும்? "தம்பி, தங்கைகளா, வரையற்ற புணர்ச்சிக்கு ஆளாகாதீர்கள்; அப்படி புணர்ச்சி ஆகிவிட்டாலும், ஒருவரை ஒருவர் ஆதரவு கொடுங்கள்; இல்லாவிட்டால் அதில் ஏற்படும் விளைவுகளை எதிர் கொள்ளுங்கள்; விலகி ஓட நினைக்காதீர்கள்; பொறுப்பு உள்ளவர்களாக இருங்கள்" என்று சொல்ல வேண்டாமா?

திரு. மாலன் தன்னுடைய வலைப்பதிவில் கூறும் ஒருசில கருத்துக்களை என்னால் ஏற்க முடியாது. அவற்றிற்கான என் முன்னிகைகளை மட்டும் இங்கு குறிப்பிட விழைகிறேன்.

1. களவு வழிக்கு எதிராக "கற்பு" வழி வலியுறுத்தப் பட்டது சமணமதத்தால் என்பது கோடுகளுக்கு நடுவில் வாசிக்கும் நிலையைப் போன்றது. சமணம் என்ற நெறி தன் போதனைகளில் இதைச் சொன்னதாக எங்கும் இல்லை.
2. மணிமேகலையில் (அது புத்த காப்பியம், சமண காப்பியம் அல்ல) வரும் உட்கதையை, இது போல மதம் சொன்னதாக மாற்றிப் புரிந்து கொள்ளுவது கற்பனையே ஒழிய, உண்மை அல்ல. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் எங்கும் தொலைந்து போகவில்லை. இன்றும் இருக்கிறது. அதில் வரும் ஒருசில நூற்பாக்கள் இடைச்செருகலாய் இருக்கலாம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள்.
3. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் காணாமற் போனதால், இறையனார் அகப்பொருளுரை, வைதீக சமயம் எழுந்த போது உருவானது என்பது ஒரு கருதுகோளே. சான்றுகள் எதுவும் கிடையாது. இறையனார் அகப்பொருள் எழுந்தது பற்றிய தொன்மத்தை வைத்துக் கொண்டு ஒரு வரலாற்றை உருவாக்கக் கூடாது.
4. "திருமணத்திற்கு முன் புணர்ச்சி என்பது சங்க காலத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதே" என்று சொல்லுவது ஒருவகையான அரைப் புரிதல். அப்படிப் புணர்ச்சி கொண்டவர்களின் ஒழுகலாறும் சங்க இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. அந்த ஒழுகலாற்றில் வரைமுறை அற்ற புணர்ச்சியில் ஈடுபடச் சொல்லி எங்கும் உரைக்கவில்லை.

குமுகாயத்தில் பொறுப்புள்ளவர்கள் திருமணத்திற்கு முன் புணர்ச்சி என்பதில் தான்தோன்றித் தனமாக ஏதேனும் சொல்லி இளையரைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லக் கூடாது.

இது ஒரு தமிழ்ப் பொதுக்கையனின் கூற்றென்று பலரும் சொல்லுவார்கள் என்று அறிந்தே இந்தப் பதிவை இங்கு இடுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Friday, March 03, 2006

புங்கம்

முன்பு ஒருமுறை நண்பர் நாக. இளங்கோவன் ஒரு தனிமடலில் பெண்கள் தன்னுதவிக் குழுவால் ஏற்பட்ட, புங்க எண்ணெயின் புதிய பயன்பாடு பற்றி ஒரு சுட்டி எனக்கு அனுப்பியிருந்தார். http://in.rediff.com/news/2004/aug/16nadar.htm அந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது எனக்குப் பெருமையாக இருந்தது. இதுபோன்ற செய்திகள் தமிழ்நாட்டில் பெருக வேண்டும் என்று நான் நினைத்தேன். புங்க எண்ணெய் போட்டுச் சரக்குந்துகள் நகரும் நாள் கூடிய விரைவில் வரட்டும் என்றும் எண்ணினேன். நம் நாட்டுப்புற மக்கள் முன்னேறும் பொழுது பெருமிதம் ஏற்படத்தானே வேண்டும்? இந்தச் செய்தியைப் படித்ததோடு அமையாமல், அதை 2004 செப்டம்பரில் அரையர் குழும்பிற்கும் தமிழ் உலகத்திற்கும் புறவரித்திருந்தேன். (forward). ஒரு சில பின்னூட்டுக்கள் இதற்கு எழுந்தன. (புங்கத்தை விட்டுக் காட்டு ஆமணக்கு - Jetropha - பற்றியும் ஒரு சில எழுந்தன. காட்டு ஆமணக்கு வெளிநாட்டில் இருந்து நம்மூருக்கு வந்தது; புங்கம் நம்மூரிலேயே உள்ள ஒரு மரம்.) பின்னால் இகாரஸ் பிரகாஷ் கேட்டதற்கு இணங்க, புங்கமரம் பற்றி அரையர் குழுமத்தில் ஒரு நீண்ட மடல் எழுதினேன். அதன் படி தமிழுலகத்திற்கும் போனது.

பழையதைப் புரட்டிக் கொண்டு இருந்தபோது, இதை வலைப்பதிவில் மீண்டும் பதித்துக் காக்கவேண்டும் என்று எண்ணியதால் இங்கே இது:
--------------------------------------------------------
புங்க மரத்தின் தாயகம் இந்தியா தான். குறிப்பாக தெக்கணத்தில் (தெற்கனம்>தெக்கணம்) இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை தோன்றியிருக்க வேண்டும் என்று புதலியலார் (botanists) அனுமானிக்கின்றனர். ஏற்கனவே அறிந்த புங்க மரத்தின் பயன்கள் போக, புங்க எண்ணெயின் புதிய பயனை மேலே புறவரித்த செய்தி தெரிவித்தது. அந்தப் பயன் பற்றிய விவரம் அறிந்து, ஆட்களை அனுப்பி, கர்நாடகத்தில் விவரம் கற்றுவரச் செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், புங்க விதைகளைச் செக்கில் ஆட்டி எண்ணெய் பிழியும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மகளிர் தன்னுதவிக் குழு, இந்தச் செயலின் மூலம் தங்களுடைய பொருளியல் நிலையைக் கூட்டிவிடலாம் என்று ஈடுபட்ட அந்த மகளிரின் உறுதி - இவை பற்றியெல்லாம் பேசி, இன்னும் இது போன்ற புது முயற்சிகளை மற்ற இடங்களில் கேட்டறிந்ததை நண்பர்கள் மடற்குழுவுக்கு எழுதுவார்கள் என்று எதிர் பார்த்தேன். நடக்க வில்லை; எனவே மறுபடி புங்கம் பற்றிய வேறு சில செய்திகளை இங்கு தொகுத்துச் சொல்ல முற்படுகிறேன்.

புங்க மரத்தின் புதலியல் (botany) பெயர் Derris indica; Derris என்றால் தோலால் மூடப்பட்டது என்று பொருள். அது விதையின் கடினத் தோலைக் குறிக்கிறது. இந்தப் புதலியல் பேர் ஒருவித வகைப்படுத்தத்தில் (classification devised by Bennet) எழுந்தது. இன்னொரு வித வகைப்படுத்தத்தில் இதற்கு இணையான வேறு பெயர்கள் உண்டு; அவை Pongamia glabra அல்லது Pongamia pinnata எனப்படும். glabra என்றால் வளவளப்பு என்ற பொருள் (smooth and without hairs); இது புங்க இலைகளின் வளவளப்பைக் குறிக்கும். pinnata என்பது சிறகை என்று தமிழில் சொல்லப்படும். பறவையின் சிறகுகளைப் போல, இலைகள் கொப்புகளில் இருப்பதைக் குறிக்கும். (தண்டு-->கிளை-->கொப்பு = இலைக்கொத்து) pongamia என்ற பெயர் தமிழ், மற்றும் தமிழிய மொழிகளை வைத்தே இந்த மரத்திற்குப் பெயரிடப் பட்டிருக்கிறது.

(பலநேரம் நம்மூர் மரங்களின் பெருமை நமக்கே தெரிவதில்லை. மேல்நாடுகளில் வளரும் பைனையும், பீச்சையும், தேவதாருவையும், மேப்பிளையும் பற்றி எல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிறோம், ஆனால் நம்மூர் இயற்கை வளத்தை விட்டுவிடுகிறோம் என்ற ஆதங்கம் எனக்கு நெடுநாள் உண்டு. நம்மூர்ப் படிப்பில் ஏதோ ஒரு குறை இப்படித் தீர்க்கப் படாமலே இருக்கிறது. நம் சுற்றுச்சூழலை நாமே அவதானிக்க மாட்டேன் என்கிறோம். யாரிடம் போய்ச் சொல்லிக் குறைப் பட்டுக் கொள்வது? நம் வீட்டுப் பிள்ளைகளை 7-12 அகவைக்குள் நம்மைச் சுற்றி உள்ள மரங்களையும் செடிகளையும் காட்டி, இலையை, பூவை, காயை, கனியைக் காட்டிப் பெயர் சொல்லிப் புரிய வைத்து, அவற்றின் நுணுக்கங்களைச் சொல்லி, நிலத்திணைப் பகுதிகளை ஒரு நோட்டப் பொத்தகத்தில் பாடம் பண்ணி வைத்து, புதலியல் அறிவைச் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை, நாம் என்று ஏற்றுக் கொள்ளுவோம்? 80-களில் கொஞ்ச காலம் நெதர்லாந்தில் நான் இருந்த போது அங்குள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இப்படிச் செய்வதைப் பார்த்து மிகவும் வியந்து போனேன். நம்மூரில் மட்டும் ஏன் இப்படிச் செய்ய மாட்டேன் என்கிறோம்? ஏன் இப்படிச் செய்முறை தவிர்த்து மனப்பாட வாந்தியிலேயே ஆழ்ந்து போனோம்? சொல்லிக் கொடுப்பது என்பது பள்ளியில் மட்டும் தானா?)

இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கும் ஆசுத்திரேலியாவிற்கும், அவாய்க்கும், அமெரிக்காவில் உள்ள வுளோரிடாவிற்கும் இந்த மரம் பரவியிருக்கிறது. தமிழில் இதற்குப் புதலியற் பெயரை இடும் போது, "பொரிப்பூம் புன்கு" என்றே, "தமிழ்நாட்டுத் தாவரங்கள்" என்ற பொத்தகம் (ஆசிரியர்: ச.சண்முகசுந்தரம் ஆண்டு: 2002, வெளியீடு: மெய்யப்பன் தமிழாய்வகம்) பெயர் சொல்லுகிறது. சங்க இலக்கியம் பல இடங்களிலும் இந்தப் பொருத்தமான பெயரிலேயே புங்க மரத்தை அழைக்கிறது. ஆனால் புங்கு என்று எழுதாமல் புன்கு என்றே அங்கு பலுக்கப் படுகிறது (பலுக்குதல் = spelling; உயிர்தரிப்பு>உயிர்ச்சரிப்பு>உய்ச்சரிப்பு>உச்சரிப்பு = vocalization); சொற்பிறப்பின் படி பார்த்தால் புங்கு>புன்கு என்பது நால்கு>நான்கு என்பது போல் ஒரு மீ திருத்தமாகவே தென்படுகிறது. அதன் விளக்கத்தைச் சற்று கீழே பார்ப்போம்.

இந்த மரம் பொதுவாக 15 மீட்டர் உயரம் வரையிலும், அதே பொழுது கோணல் மாணலாகவும் வளரக் கூடியது. புங்க மரம் கோடையின் தொடக்கத்தில் இலையுதிர்த்து, பின் சூன் மாதம் வரை பூத்துக் குலுங்கும். வேனிலின் உச்சம் தணியும்பொழுது பூக்கள் அவ்வப்போது உதிர்கின்றன. பூக்களின் நிறம், பெரும்பாலும் வெண்ணிறமாக, விதப்பான வகைகளில் வெள்ளையின் ஊடே சேதா (இளஞ்சிவப்பு) நிறமும், நீல நிறமும், பல போதுகளில் செந்நீலமும், வரிவரியாய் விரவி இருக்கலாம். வெள்ளை நிறமே பொதுவாய் இருந்தாலும், இந்த நிறங்கள் பூவிதழ்களில் ஊடுறுவி நிற்பது காணக் கூடியதே.

பொதுவாக சங்க இலக்கியத்தில் ஒரு மரம் குறிப்பிடப் படும் போது, கண்ணில் தோன்றும் காட்சியில், எது அந்த மரத்தை சட்டென்று அடையாளம் காட்டுகிறதோ, அதை வைத்தே பெயர் அழைப்பார்கள். புங்க மரத்தின் சிறிய வெள்ளை நிறப் பூக்கள், மற்ற பல மரங்களும் காய்ந்து போன நிலையில், வேனிற் காலத்தில் மிகுந்த எடுப்பாகக் காட்ச்஢ அளிக்கும். (புங்கம் மருதத்திலும், பாலையிலும், மிக அரிதாக நெய்தலிலும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் படுகிறது.) பூவின் தோற்றமே அந்த மரத்திற்குப் பெயர் கொடுத்திருக்கிறது.

இந்த வெள்ளை நிறச் சிறு பூக்கள் செந்நெல் பொரி சிதறி விழுந்தாற்போல (அரிசிப் பொரி, சோளப் பொரி போன்றவற்றை மனத்தில் கொள்ளுங்கள்) தோற்றம் அளித்ததே நம் பழந்தமிழனுக்கு விதப்பாய்த் தெரிந்திருக்கிறது. மருதம் பாட வந்த கோப் பெருஞ் சோழன் குறுந்தொகை 53-ல் அப்படியே படம் பிடித்துச் சொல்லுகிறான்.

"எம் அணங்கினவே, மகிழ்ந! முன்றில்
நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை"

"முற்றத்தின் வெள்ளிய மணற்பரப்பில், வேலனால் அமைத்த வெறியாட்ட இடம் தோறும், முதிர்வுற்ற புங்க மர மலர்கள் உதிர்ந்து பரந்து, செந்நெல்லினது வெள்ளிய பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தருகின்றன." "செந்நெல்லின் வெள்ளிய பொரி" என்னும் போது "சேதா வரி ஊடு வரும் வெள்ளை நிறம்" என்ற கருத்துப் புலப்படுவதைக் காணலாம்.

இதே போல மருத நீர்த்துறையின் கரையில் "பொரி எனப் புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய" என்று அகநானூறு 116 பாட்டில் பரணர் சொல்லுகிறார்.

மருதத் திணையில் மட்டுமல்லாமல், பாலைத்திணையிலும் புங்கு பற்றிய சித்தரிப்பு இதே போல் இருக்கிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ கலித்தொகை 33 -ல் "பொரிஉரு உறழ புன்கு பூ உதிர" என்று தெளிவாகச் சொல்லுகிறான். சங்கம் மருவிய காலத்தில் எழுந்த கணிமேதாவியாரின் திணைமாலை நூற்றைம்பது நூலிலும் பாலைத்திணையில் இதே விதச் சித்தரிப்பு எழுகிறது.

எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்கு ஈடில்
பொரிசிதறி விட்டன்ன புன்கு.

அதாவது, "முருக்க மரங்கள் (புரசை மரங்கள்; இவை தான் ஆங்கிலத்தில் flame of the forest என்று சொல்லப் படுபவை. புரசைவாக்கம் என்ற பெயர் இந்தப் புரசைக் காட்டால் ஏற்பட்ட பெயர்.) தீயைச் சிதற விட்டாற் போல பூத்தன. புங்க மரங்கள் கனம் இல்லாத அரிசிப் பொரிகளைச் சிதறியது போல மலர்களை உகுத்தன".

சிலம்பின் வேட்டுவ வரியிலும், உரைப்பாட்டு மடையில், இளங்கோ அடிகள்

"செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்
கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு இளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே."

என்று கொற்றவையின் முன்றிலில் கொட்டிக் கிடந்த பூக்களைப் பாட்டில் காட்டுகிறார்.

நெய்தல் திணையிலும் புன்கின் அழகு சொல்லப் படுகிறது; குறுந்தொகை 341-ல் மிளைக்கிழான் நல் வேட்டனார்,

"பல் வீ பட்ட பசு நனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅக்
சினை இனிது ஆகிய காலையும்"

எனப் பசிய அரும்புகளும், பூக்களுங் கொண்ட குரவ மரக்கிளைகள், நெற்பொறிப் பூக்களைக் கொண்ட புங்கின் கிளைகள் என நிறைந்த சோலை அழகைப் பற்றிச் சொல்லுகிறார்.

இனிப் புங்கம் என்ற சொல்லின் பிறப்பைப் பார்ப்போம். தமிழில் புழுங்குதல் என்பது நீரில் அவித்தலை (boiling)க் குறிக்கும். நீரில் கொதிக்கும் போது நீரை உரிஞ்சி அரிசி பருக்கிறது; இப்படிப் பிறந்த சொல் தான் அரிசிப் பருக்கை என்ற சொல்; மூடி இருந்த (அரிசியை மூடியுள்ள உமி இங்கு சொல்லப் படவில்லை; உமிக்கும் கீழே, அரிசியின் மேலே, சுற்றிக் கிடக்கும் மெல்லிய படலம் இங்கு சொல்லப் படுகிறது) அரிசி அவிழ்ந்து விரிகிறது; அவிழ்த்தல் என்ற சொல்லே திரிவால் அவித்தல் என்று ஆனது. அவிழ் என்ற சொல் கூட சங்க இலக்கியத்தில் சோற்றைக் குறிக்கப் பயன் பட்டிருக்கிறது. இந்தக் காலத்திலும், புழுங்கல் அரிசி என்பது par-boiled rice என்பதைக் குறிக்கும். புழுங்கு/புழுக்கு என்ற சொல்லும் சங்க இலக்கியத்தில் சோறான அரிசியையே குறிக்கும். [குறிப்பாக நிணம் (mutton) கலந்த அரிசிச் சோற்றைப் புழுக்கு என்ற சொல் குறிக்கும். இந்தக் கால briyaani என்ற சொல்லிற்கு அது இணையானது.] (புழுங்கல் - பொருந.114, பெரும்பாண். 101, 474) புழுக்கும் போது ஏனத்தின் மூடியிருக்கும் தகரத்தின் அடியில் ஈரத் துளிகள் ஏற்படுகிறதல்லவா? அதனால் ஈரம் கூடி, நம் தோல் மேல் வியர்வை கோத்துக் கொண்டால், அதை ஒட்டியுள்ள காற்று நிலையை புழுக்கம் (humidity) என்றே இந்தக் காலத்தில் சொல்லுகிறோம். நாம் ஏதோ கொதிக்கின்ற ஓர் அண்டாவிற்குள் இருப்பது போன்ற சூழ்நிலை.

புன்கு என்ற சொல்லிற்கே, சோறு என்ற பொருள் வரும்படி உள்ள சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் இரண்டு இடங்களில் வருகிறது. வெள்ளை நிறத்தில் அரிசிப் பொரி போல, சோற்றுப் பருக்கைகளைப் போல, பூக்களை மலர்க்கும் மரம் புங்க மரம். அகநானூறு 237-ல் பாலைத்திணை பாடிய தாயங்கண்ணனார்,

..................................................கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்திணைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு

"மிக திறனோடு எரியும் செந்தீயில் இட்டு வதக்கிய நிணத்தின் கொழுந்துண்டுகளைத் திணையரிசிச் சோற்றுத் திரளில் சொரிந்த கலத்துடன்" என்னும் போது சோற்றுத்திரள் என்ற பொருள் ஆளப் படுகிறது.

இதே போல அகநானூறு - -ல், பாலை பாடிய மாமூலனார், "குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்" என்று சோற்றுத்திரளைப் புன்கம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

புங்க மரத்தில், பூக்கள் மட்டும் சிறப்பல்ல; இந்த மரங்களில் பளபளக்கும் தாம்பர நிறத்தில் உருவாகும் தளிர்களை மாலையாக ஆக்கி, மார்பில் அணிவதையும் சங்க இலக்கியம் சொல்லுகிறது.

ஐங்குறுநூறு: 347-ல்,

"அவரோ வாரார்; தான் வந்தன்றே
எழில் தகை இளமுலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர்ப் பொழுதே"

"அழகு தகைந்த இளங்கொங்கை பொலிவு அடையுமாறு, பொரிப்பூம் புன்கின் தளிர்களை அணிகிற வேனிற் காலம் வந்ததே அன்றி, அப்பருவத்தில் வருவேன் என்று தெளிவு படுத்திப் போன தலைவர் வரவில்லையே" என்று சொல்லுகிறாள் தலைவி.

நற்றிணை 9ல், பாலை பாடிய பெருங்கடுங்கோ,

பொரிப்பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிறி

என்று சொல்லுகிறான். "பொரிப்பூம் புன்கின் அழல் தகைந்த ஒள்ளிய தளிர்களை, உன் தேமல் படர்ந்த அழகிய கொங்கைகளில் அழகு உண்டாகும் படி பூட்டிக் கொள்க" என்று சொல்லுகிறான்.

கோடையின் கடுமை தொடங்கிய நிலையில், பூக்களைச் சொரிந்து, தளிர்களெல்லாம் கரும்பச்சை இலைகளாய் மாறி, நல்ல நிழல் தரும் சூழ்நிலையும் சங்கப் பாட்டுக்களில் பதிவாகி இருக்கிறது. பூக்களை உதிர்த்து, மரத்தினடியில் ஒரு மலர்ப்படுக்கையை ஏற்படுத்தி, பாதசாரிகளின் களைத்த பாதங்களுக்கு இதம் தரும் சூழ்நிலையும் சொல்லப் பட்டிருக்கிறது.

ஐங்குறுநூறு 368, ஓதலாந்தையார், பாலைத்திணை
.......
எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்மலர்
பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்
தண்பத வேனில் இன்பநுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும!

நீர்நிலைகளின் கரைகளில் இந்த மரம் வளர்ந்திருந்ததும் தெரிகிறது. ஆக, குறைந்தது 2300 ஆண்டுகள் நம் இலக்கியத்தில் இந்த மரம் பதிவாகி இருக்கிறது. இப்பொழுது, இந்த மரங்கள் கிழக்குக் கடலோர மாவட்டங்களின் எல்லா நிலங்களிலும், ஆற்றுக் கரையோரங்களிலும் (தாம்பர பெருநையின் கரையில் இது இருப்பது வியப்பில்லை), உள்நாட்டில் ஓடை, குளக்கரைகளிலும், ஏன் சாலை மரங்களாகவும் கூட, வளர்க்கப்படுகின்றன.

ஆக புங்கின் சொற்பிறப்பு புல்>புய்>பொய்>பொய்சு>பொசு>பொசுங்கு என்பது வெப்பப் பொருளைக் குறித்து எழுந்தது. வெம்மைக் காலத்தில் மலரும் மரம் புய்ங்க மரம். புல்>புய்>புய்ங்கு>புங்கு>புன்கு என்பது நால்கு>நால்ங்கு>நாங்கு>நான்கு என்பதைப் போன்ற ஒரு சொற்திரிவு.

புங்கத்திற்கு இன்னொரு பெயர் கரஞ்சம். (ககர சகரப் போலியில் சரஞ்சம் என்றும் எழுதப்படும்.) வடமொழியில் கரஞ்சம் என்றே எழுதப் பெறும். இதை இந்தி மற்றும் வங்காள மொழிகளில் karanj, kanji என்று அழைப்பார்கள். இதன் சொற்பிறப்பும் நம்மூரில் தான். வேனிலின் உச்சியைச் சொல்லும் பொழுது வெய்யில் பொசுக்கிறது என்பது போல் வெய்யில் கருக்குகிறது என்றும் சொல்லலாம் அல்லவா? கருத்தல் என்பது இங்கே வெம்மை கூடியதைக் குறிக்கிறது. வெம்மையில் பொசுங்குவது போல் உள்ள இன்னொரு வினை கருங்குவது அல்லது கரிஞ்சுவது. குரு என்ற சொல்லும் வெம்மையைக் குறிக்கும்; சுரம் என்ற சொல்லும் வெம்மையான பாலையைக் குறிக்கும். கரிஞ்சு>கரிஞ்சம் என்று இன்னொரு சொல்லும் புங்கிற்கு வெம்மைப் பொருளிலேயே ஏற்பட்டது.

புங்க மரத்தை மேல்நாட்டு Beech- என்னும் மரத்தோடு இணைப் படுத்தி Indian Beech என்று அழைப்பதும் உண்டு. அப்படிச் செய்வதற்கு ஒரு காரணமும் உண்டு. இந்த மரத்தின் இலைகள் தளிராய் இருக்கும் போது தாம்பர நிறத்திலும், பின் முதிர்கின்ற போது கரும்பச்சை நிறத்திலும் இருப்பது மேல்நாட்டு Beech மரங்களை நினைவு படுத்துகிறது. இரண்டு மரங்களும் வெவ்வேறு நிலத்திணைக் குடும்பங்களைக் குறித்தாலும், வெள்ளைக்காரன் இந்த ஒப்புமையைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். இந்தியர்களில் பலருக்கும் வெள்ளைக்காரனோடு ஒப்பிட்டால் தானே உச்சி குளிர்கிறது. :-)

கரஞ்ச மரத்தோடு தொடர்புறுத்திக் கரஞ்சத் தீவு என்ற ஒன்று மும்பைக்கு அருகில் மராட்டியத்தில் இருக்கிறது. ஈழத்தில் இருக்கும் புங்குடுத் தீவு புங்க மரத்தின் பெயராலே ஏற்பட்டதா என்று தெரிந்தவர்கள் ஆராய வேண்டும். தமிழ்நாட்டிலே திருப் புன்கூர் என்பது சோழநாட்டில் காவிரியின் வடகரையில் வைத்தீசுவரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. வடமொழியில் கஞ்சாரண்யம் என்று சொல்லுவார்கள். இது சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம். திருவருட்பாவிலும் இந்தத் தலம் பேசப்படுகிறது. திருபுன்கூர் இறைவர் பெயர் சிவலோக நாதர்; இறைவி பெயர் சொக்க நாயகி; இங்குள்ள தல மரம் புங்க மரம்; இந்த ஊரின் சிறப்பு திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு ஈசன் பணித்த தலம். கோபால கிருட்டிண பாரதியின் "சற்றே விலகியிரும் பிள்ளாய் - சந்நிதானம் மறைக்குதாம் - நீ நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கின்றார்" என்ற பேர் பெற்ற கீர்த்தனை இந்த நிகழ்ச்சி பற்றித்தான் எழுந்தது.

பூவையும் தளிரையும் பேசிய தமிழ் இலக்கியம் ஏனோ, புங்கங் காயைப் பற்றிப் பேசவில்லை. ஒருவேளை சித்த மருத்துவ நூல்கள் பேசியிருக்கலாம்; எனக்குத் தெரியாது; அலசிப் பார்க்க வேண்டும். தமிழராகிய நாம் விட்டுத் தொலைத்த செய்திகள் ஏராளம், ஏராளம். இவற்றையெல்லாம் என்று நாம் மீட்டுக் கொண்டு வரப்போகிறோமோ, தெரியவில்லை.

இந்தக்காலப் புதலியல் வழி அறிந்தவற்றை இனிச் சொல்லுகிறேன். இந்த மரம் பூத்து முடியும் தருவாயில், அதனுடைய நெற்றுக் (nuts) காய்கள் தகடையாக, அவரை விதைகளைப் போல் நீள்வட்ட வடிவில், உரமான தோடுகளாக (காயின் மேல் காய்ந்த தோலாய் இருப்பது தோடு), 1.5 அணுங்குழை (inch) யில் இருந்து 2 அணுங்குழை வரை சனவரி, பிப்ரவரி மாதங்களில் உருவாகும். இந்த நெற்றுக்களில் (nuts) ஒன்று அல்லது இரண்டு விதைகள் சிவப்பத் தொலி (skin; விலங்கிற்கு இருப்பது தோல்; விதையின் மேல் இருப்பது தொலி. தோல், தோடு, தொலி போன்றவற்றின் வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.) போர்த்திய நிலையில் இருக்கும். ஆண்டொன்றுக்கு நன்கு வளர்ந்த மரமொன்று, 90 கிலோ வரை, விதை கொடுக்கும். விதையில் 5% தொலி, 95% பருப்பு இருக்கும்.

விதையில் உள்ள சத்துக்கள்:
ஈரம் - 19%
எண்ணெய் - 27.5%
புரதம் - 17.5%
மாவுப்பொருள் - 6.6%
மாழை உப்புக்கள் - 2.4%
(metallic salts)

மற்றும் விதையில் நுண்ணிய அளவில் ஒரு தைலமும், ஒரு வழவழப்புப் பொருளும் உள்ளன. விதையில் பல சுவையன்களும் (flavinoids) உள்ளன.

நன்கு உலர்த்திய விதையில் 27-39% அளவில் எண்ணெய் உள்ளது. நாட்டுச் செக்கில் பிழியும் போது 18-22% அளவில் எண்ணெய் கிடைக்கும். வெளியெக்கியின் (expeller) மூலம் 24-27.5% எண்ணெயைப் பெறலாம். நன்கு வளர்ந்த 40 மரங்களில் இருந்து 373 கிலோ எண்ணெய் பெறலாம்.

புங்க எண்ணெய் பிழிந்தெடுக்கும் போது மஞ்சள் தழுவிய நாரங்கை (orange) நிறத்தில் இருக்கும்; பின்னர் பழுப்பு நிறம் பெற்று, கடுமையாக மாறும். இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக் காடிகளாவன:

ஓலியிக் காடி (oleic acid) 44.5% - 71.8%
லினோலியிக் காடி (Linoleic acid) 10.8% - 13.3%
எய்கொசெனாயிக் காடி (eicosanoic acid) 9.5% - 12.4%

இது போன எண்ணெய்கள் புங்க மர விதைகளில் மட்டுமல்ல, பல எண்ணெய் வித்துக்களில் இருந்தும் பெறலாம்; ஏன் அரிசி உமியில் இருந்து கூடப் பெறலாம். ஆனால் எது பயன்படும் என்பது கிடைப்பு (availability), விளைச்சல் (production), பொருளியல் (economy), கொளுதகை (cost), நுட்பியற் சிக்கல்கள் (technological difficulties) போன்றவற்றைப் பொறுத்தது. இந்த எண்ணெய்கள் (காட்டாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்) போன்றவற்றை வெளிச்சம், சமையல் போன்ற துறைகளுக்கு மட்டுமே நாம் இது காறும் பயன்படுத்தி வந்தோம். அவற்றை உள்ளெரிப்பு எந்திரங்களில் (internal combustion engines) பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குவது இதுகாறும் பொருளியற் படி சரிக்கட்டி வரவில்லை.

ஒரு கணக்குச் சொல்லுவார்கள்; என்றைக்கு பாறைநெய்யின் (petroleum) விலை ஒரு பீப்பாய் 25/27 அமெரிக்க வெள்ளிக்கு மேல் வருகிறதோ அப்பொழுது இயற்கை வழிப் பெறும் எண்ணெய்கள் உள்ளெரிப்புக்குப் பெரிதும் பயன்படும் என்று சொல்லுவார்கள்; இப்பொழுதுதான் பாறைநெய் விலை $45க்கும் மேல் $60, 70 என எகிறிவிட்டதே? இனி இயற்கைவழிப் பெறும் எண்ணெய்கள் பெரிதும் உள்ளெரிப்புக்குப் பயன்படலாம்.

புங்க எண்ணெயைப் பற்றி இன்னும் ஆழமாய் அறிவதற்கு முன்னால், பாறைநெய்ச் செலுத்தங்கள் (petroleum processes) பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுவது நல்லது. பாறைநெய்யை சூழ்அழுத்தத் துளித்தெடுப்பின் (atmospheric distillation) மூலம் பிரிக்கும் போது துளித்தெடுப்புக் கோபுரத்தின் (distillation tower) மேலே வருவது நீர்ம எரிவளி (Liquid Petroleum Gas), அடுத்து, அதற்குச் சற்றுக் கீழே வருவது கன்னெய் - கல்நெய் - (petrol or gasoline), அடுத்து இன்னும் கீழே வருவது நடுவத் துளித்தெடுப்புகள் (middle distillates) ஆன மண்ணெயும் (மண்ணெய் என்றே சொல்லலாம்; மண் எண்ணெய் என்று நீட்ட வேண்டாம். அதன் உள்ளே கிடக்கும் எள்ளைத் தூக்கி எறிந்து விடலாம்.), டீசலும்; முடிவாகக் கீழே வருவது வளிநெய் (gas-oil).

இப்படி இயல் பாறைநெய்யை (crude petroleum) முதலில் சூழ்அழுத்தத்தில் துளித்தெடுத்து (distilled at atmospheric pressure), அந்தக் கோபுரத்தின் அடியில் கிடைக்கும் வளிநெய்யை, பின்னர் குறை அழுத்தத்தில் மீண்டும் துளித்தெடுக்கலாம் (distilled at low pressure; இதை வெறுமத் துளித்தெடுத்தம் = vacuum distillation என்றும் சொல்லுவார்கள்.). இந்த இரண்டு துளித்தெடுத்தங்களுமே (distillation) கொதிநிலை (boiling points) வேறுபாட்டைப் பயன்படுத்திப் பாறைநெய்யைப் பிரித்தெடுக்கும் செலுத்தங்கள் (separating processes) ஆகும். வெறுமத் துளித்தெடுப்புகளைப் (vacuum distillates) பின்னர் ஒரு பாய்மப் படுகையில் (fluidized bed) அனுப்பி, வினையூக்கி உடைப்பைச் (catalytic cracking) செய்யலாம்; அல்லது நீர்மத்தோடு (hydrogen) வினைகூட்டி நீர்ம உடைப்பையும் (hydrocracking) செய்யலாம்.

நீர்ம எரிவளி என்பதற்குள் பெரும்பாலும் C3,C4 அடங்கிய நீர்மக்கரியன்களே (hydrocarbons) இருக்கின்றன. கன்னெயில் பெரும்பாலும் C8,C9 என்ற நீர்மக்கரியன்களே செறிந்திருக்கும். மண்ணெயில் C10-C16 வரை உள்ள நீர்மக்கரியன்களும், டீசலில் C12-C19 வரை உள்ள நீர்மக் கரியன்களும் இருக்கும். இது போகச் சூழ்அழுத்தத் துளித்தெடுப்பான நெய்தையில் (நெய்தை = naphtha - "inflammable liquid distilled from petroleum," 1572, from L., from Gk. naphtha "bitumen," perhaps from Pers. neft "pitch," or Aramaic naphta, nephta, but these could as well be from Gk. Naphthalene was coined 1821 by Eng. chemist John Kidd (1775-1851) from naphtha + chem. suffix -ine + -l- for the sake of euphony.) இருந்து வினையூக்கி மறுவாக்கம் (catalytic reforming) முலம் எட்டக எண்ணை (octane number) கூடியுள்ள கன்னெய்யை உண்டாக்கலாம்.

வெறுமத் துளித்தெடுப்புக் கோபுரத்தின் (vacuum distillation tower) அடியில் கிடைப்பதைப் பிசுக்கைப் பொருள் (pitch (n.) - "tar," O.E. pic, from L. pix (gen. picis) "pitch," from PIE base *pi- "sap, juice" (cf. Gk. pissa, Lith. pikis, O.C.S. piklu "pitch," related to L. pinus, see pine (n.)) என்று சொல்லுவார்கள். இந்தப் பிசுக்கைப் பொருளைத்தான் கீல் என்றும், ஆங்கிலத்தில் tar என்றும் சொல்லுகிறோம். சாலைகள் போடப் பயன்படுவது இதுவே. இதே போல நிலக்கரியில் இருந்தும் ஒருவித வேதிச் செலுத்தத்தில் கரிப்பிசுக்கையைப் (coal-tar) பெறலாம். பாறைநெய் கிடைக்காத காலங்களிலும், இடங்களிலும் கரிப்பிசுக்கை முகன்மையான இயல்பொருளாகிறது. அதை உடைத்து மீண்டும் நடுவத் துளித்தெடுப்புகளை (middle distillates) உருவாக்குவார்கள். காட்டாகத் தென்னாப்பிரிக்காவில் இது போல செய்யப் படுகிறது.

இப்படி பாறைநெய்த் துளித்தெடுப்பில் வெவ்வேறு பொருட்கள் கிடைப்பது போல புங்கநெய் உருவாக்கத்தில் மற்ற துணைப் பொருட்கள் கிடைக்குமா என்றால் கிடைக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.

பாறைநெய்யில் இருந்து பிரிக்கப்படும் டீசல் போன்றவற்றைப் பார்க்கும் போது இயல் எண்ணெய்கள் அதிகம் பிசுக்குமை (viscosity) கொண்டவை. தவிர, இயற்கை எண்ணெய்களில் செறிந்துள்ள கொழுப்புக் காடிகள் தனித்து இருப்பதில்லை; பெரும்பாலும் அவை களிக்கரை(glycerol)யோடு பிணைந்து கூட்டுப் பொருளாகியே இருக்கின்றன. புங்க எண்ணெயில் உள்ளவையும், முன்னே சொன்னது போல் களிக்கரையோடு (glycerol) பிணைந்த கொழுப்புக் காடிகளே; கொழுப்புக் காடிகளை வெறியங்களோடு (alcohol) பிணைத்துக் கிடைக்கும் பொருள்களை கொழுப்புக் காடி அத்துகள் (fatty acid esters) என்று சொல்லுவோம். ஒவ்வொரு நிலத்திணை எண்ணெயிலும் பெரும்பாலும் இருப்பவை கொழுப்புக்காடி அத்துக்களே. இவற்றை அப்படியே உள்ளெரிக்கப் பயன்படுத்தலாம் தான்; இல்லை எனில் அவற்றின் பிசுக்குமையைக் (viscosity) குறைக்க, அவற்றின் பாய்மை (fluidity) யைக் கூட்ட, இந்த அத்துக்களில் இருந்து வேதிவினை மூலம் களிக்கரையைப் பிரித்து (அப்படிப் பிரிப்பதால் கிடைக்கும் களிக்கரை வெகுவிரைவில் கடல்போல் பெருகிவிடும்; அத்தனை களிக்கரையை வைத்துக்கொண்டு வேறு என்ன பொருள் செய்வது என்று நுட்பியல் உலகம் இன்னும் முடிவு செய்யவில்லை.) பின் கொழுப்புக் காடியில் இருக்கும் காடித்தன்மையை எடுத்து, முடிவில் நீர்மக்கரியன்களாக (hydrocarbons) மாற்றி உள்ளெரிப்புக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இதற்கெல்லாம் ஏகப்பட்ட செலவு ஆகும். உள்ளெரிப்பின் நேர்த்தித்திறன் (efficiency) பற்றிக் கவனிக்கின்ற போது இந்தப் புதிரிகளுக்கு (problems) நுட்பியல் விடை சொல்லும் என்று எண்ணுகிறேன். அதுவரையில் அப்படியே இயலாக (raw) எரிப்பது தான் இப்பொழுது உள்ள நடைமுறை. நேரடியாக டீசல் எந்திரத்திற்குள் போட்டு உள்ளெரிக்க வேண்டியதுதான். போயே போயிந்தி.

மேலே சொன்ன புங்க எண்ணெய்ப் புனைகளின் (components) செறிவைக் (concentration) குறிப்பிட்ட போது, மூன்று காடிகளைக் குறிப்பிட்டிருந்தேன். முதலிற் சொன்ன ஓலியிக் காடி ஒரு தெவிட்டாத காடி (தெவிட்டுதல் = to saturate; தெவிட்டாத காடி = unsaturated acid; தெவிட்டாமை = unsaturation); அதை [CH17H33COOH] என்றோ, அல்லது விரிவாக CH3[(CH2)7]CH=CH(CH2)7COOH என்றோ, குறிப்போம். ஒலியிக் காடியின் வாய்பாட்டு நடுவில் (=) என்ற இரட்டைப்பிணை (double bond) இருப்பதால் அது ஒரு தெவிட்டாத காடியாகும். நம்மூர் ஆமணக்கு விதையில் இருந்து பெறப்படும் எண்ணெயில் ரிசினோலியிக் காடி அதிகம் இருக்கும். அதை CH3(CH2)5CHOHCH2CH=CH(CH2)7COOH என்று குறிப்போம். லினோலியிக் காடி என்பது தெவிட்டாமை இன்னும் கூடியது. அதில் இரண்டு இடங்களில் இரட்டைப் பிணை இருக்கும்; CH3[(CH2)4CH=CHCH2]CH=CH(CH2)7COOH என்று குறிக்கப்படும். எய்கொசெனாயிக் காடி என்பது CH3(CH2)18COOH என்று குறிக்கப்படும்.

புங்க எண்ணெய் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. புங்கப் பிண்ணாக்கு உரமாகப் பயன்படுகிறது; கால்நடைகளுக்குக் கொடுப்பது நல்லதல்ல. புங்கக் குச்சியைப் பல்துலக்கப் பயன்படுத்தலாம்.

இணையத்தில் இப்பொழுது கிடைக்காத செய்திகள் நம்மூர் நிலத்திணைகள் பற்றித்தான். அருமையான சில பொத்தகங்களை இங்கு உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

1. வளம் தரும் மரங்கள் - 5 பொத்தகங்கள் அடங்கிய ஒரு தொகுதி, ஆண்டு: 1992-94, ஆசிரியர்: திரு. பி.எசு.மணி, வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தகாலயம்
2. Flowering Trees - 1983; 8th Reprint 1996, M.S.Randhawa, National Book Trust
3. Common Trees - 1966; 7th Reprint 1999, H.Santapau, National Book Trust
4. தமிழ்நாட்டுத் தாவரங்கள் - 2002; ச.சண்முகசுந்தரம், மெய்யப்பன் தமிழாய்வகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் -608001

இவை எல்லாம் நம் வீட்டு நூலகங்களில் வைத்துக் கொள்ளவேண்டிய பொத்தகங்கள்.

இந்த மடலுக்குப் பின்னூட்டில் பிரகாஷ் எழுதியது:

தகவலுக்காக சில விஷயங்கள். bio-fuels தொடர்பாக, சில தனிச்சுற்று தாளிகைகளை, கிண்டியில் இருக்கும் TN PCB நூலகத்தில் பார்க்க நேர்ந்தது. வேறு குறிப்புகள் எடுக்க வேண்டியிருந்ததால், அத் தாளிகைகளை படிக்க வில்லை. தாவர எண்ணை எரிபொருள் பற்றி பரவலாக கட்டுரைகள் வரத் துவங்கி உள்ளன. அதைப் போல டாடா எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்டியூட் நிறுவனம், ஒரு மாதாந்திர இலவச மின் இதழை வெளியிடுகின்றது. அதிலும், சில இதழ்களில் தாவர எரி பொருள் பற்றிய கட்டுரைகளை பார்க்க நேர்ந்தது. ஆர்வமிருப்பின் பெற்றுக் கொள்ளலாம். (முகவரி : http://www.teriin.org/terragreen/subscribe.htm) அன்புடன் பிரகாஷ்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. மடலாடற்குழுக்களிலும், வலைப்பதிவுகளிலும் இலக்கியம், அரசியல், திரைப்படம் போன்றவை நடு இடத்தைப் பெற்றாலும், ஓரத்தில் இப்படி அறிவியல், நுட்பியல், பொது அறிவு பற்றிய செய்திகளைத் தமிழில் பரிமாறிக் கொள்வது நல்லது; அப்படிச் செய்யும் போது, அது கூடவே நம்முடைய தமிழ்நடையை வளர்க்கும். தயங்காமல் தமிழில் எதையும் சொல்லப் பழகலாம். மேலே எழுதியதை மிக எளிதில் தமிங்கிலத்தில் எழுதிவிடலாம் என்றாலும் அது எதிர்காலத்தை நசுக்கி விடும் என்று தமிழில் எழுதுகிறேன். நாம் முயலாவிட்டால் நம் மொழிவளம் பெருகாது.

பொக்கீடு

budget என்பதற்கு இந்திய நாட்டில் எப்பொழுதுமே ஒரு பெரிய எதிர்பார்ப்பு உண்டு; மற்ற நாடுகளில் இவ்வளவு உண்டா என்று தெரியவில்லை; எனக்குத் தெரிந்து நான் சில காலம் வாழ்ந்திருந்த நெதர்லாந்திலும், கனடாவிலும் அவ்வளவு முகன்மை கொடுப்பதில்லை. (சவுதியில் அரசுக்கு உள்ளேயே இது அடங்கி விடும். செய்தித்தாள்களில் மேலோட்டமாய்த் தான் வெளிவரும்.) பாராளுமன்ற நடைமுறைகளில் இந்தியாவின் முன்னோடி என்று நாம் சொல்லிக் கொள்ளும் ஆங்கிலேயப் பாராளுமன்றில் கூட இத்துணை ஆரவாரம் இருக்குமா என்று தெரியவில்லை.

budget என்பது இந்தியாவில் ஒரு பெரிய கவனிப்பு; அலசல்; ஆழ்ந்த ஆராய்ச்சி. ஆனால் இவை எல்லாம் ஆங்கில நாளிதழ்களில் தான்; ஆங்கில நாளிதழ்கள் ஆழ்ந்து பேசுகின்ற அளவுக்கு தமிழ் நாளிதழ்கள் budget பற்றிப் பேசுவதில்லை. இன்னும் சொன்னால், budget என்ற சொல்லைக் கூடத் தவறான முறையில் நிதிநிலை அறிக்கை (financial statement) என்று நம்மூர்த் தமிழ் நாளிதழ்கள் மொழி பெயர்க்கின்றன.

உண்மையில் budget என்பது வெறும் நிதிநிலை அறிக்கை அல்ல. அது அதற்கும் மேற்பட்டது. இந்த ஆண்டு இந்த இனத்தில் இவ்வளவு செலவழித்தோம்; இந்த வகையில் இவ்வளவு வருமானம் இருந்தது என்பது வரவு செலவுக் கணக்கு. வரவு செலவு அறிக்கை என்பது ஒரு நிறுவனத்தில் பொலுவு-நட்ட அறிக்கையைப் (profit and loss statement) போன்றது. பொலுவு-நட்டம் போக, நம் அரசுப் பணங்கள் எவ்வளவு எந்த வகையில் முதலிடப் பெற்று இருக்கின்றன? எவ்வளவு கடன் இருக்கிறது? எங்கெங்கு கடன் வாங்கியிருக்கிறோம்? நாட்டின் நிதிகள் எங்கு இருக்கின்றன என்றும் சேர்த்துச் சொல்லுவது நிதிநிலை அறிக்கை (financial statement). இது ஒரு நிறுவனத்தின் ஐந்தொகைச் சிட்டையைப் (balance sheet) போன்றது.

budget என்பது இதற்கும் மேலானது. இந்த budget-ல் ஒரு நாட்டின் நிதி அமைச்சர் நடந்து முடிந்த கணக்கை மட்டும் சொல்லாமல், வரும் ஆண்டில் தன் துறைக் கணிப்பில் "எந்த இனங்களில் எவ்வளவு வருமானம் நாட்டிற்கு வரும்? எந்த வகைகளில் எவ்வளவு செலவழிக்கப் போகிறோம்? இந்த வரவு செலவில் பற்றாக் குறை இருந்தால் மேலும் வரவைக் கொண்டுவர என்னென்ன செய்யப் போகிறோம்" என்று விவரமாகச் சொல்லுகிறார். இதில் முகன்மையானது, "எந்த வகையில் செலவு செய்யப் போகிறோம்?" என்பதைக் கோடிட்டு வகுத்துக் காட்டுவதே.

சரி, budget என்பதை ஆங்கிலத்திலேயே சொல்லிக் கொண்டிருக்காமல், எப்படித் தமிழில் செல்லுவது?

"தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்" என்ற தலைப்பில் ஆகசுடு 1985 வெளிவந்த முதற் பொத்தகத்தில் பக்கம் 121-ல் "கொப்புளம்" பற்றிய சொல்லை விவரித்துச் சொல்லும் போது சொல்லறிஞர் அருளி சொல்கிறார்.
------------------------------------------------------------
பொக்கு> பக்கு = பை
பொக்கு+ அணம் = பொக்கணம் = பை
பொக்கு> (French) Bouge = leather bag
Bouge + Ette> bougette = small leather bag
இட்டு>இட்டி = சிறுமை, இட்டிது = சிறிது "அகாறளவு இட்டிது" - (குறள் 478:11)
இட்டி> Ette = small
>O>F: Bouge = a small leather bag or wallet; a skin bottle
Bouget = A representation of an ancient water vessel (earlier spelling of budget)
(F) Bougette>(English)Budget = A pouch, bag, wallet, usually leather
>Budget = to put in a budget or wallet, to store-up
>Budgetless = without a budget, presenting no finacial statement
---------------------------------------

ஆக budget-ற்குத் தொடர்பான சொற்கள் எல்லாம் பொக்கணம், பொட்டணம், பொட்டலம், பொதி போன்றவையே. budget என்பது நம் பண்பாட்டிலும் உள்ள ஒரு நடைமுறை தான். நம் ஊர்களில் ஏதாவது ஒரு கோயிலுக்கு நேர்ந்து கொண்டு தாய்மார்கள் முடிந்து வைப்பார்கள்; "முடிந்து வைத்ததை அந்த உண்டியலில் போடு" என்று சொல்வார்; ஒரு குறிப்பிட்ட செலவுக்கு என்று எடுத்து வைத்து அதைத் தனியே பொட்டணம் கட்டிவைப்பார்; மண்பானையில் பொதிந்து வைப்பார்; பொதுவாக, பொக்கணம் = முடிச்சு; பொட்டணம் = சிறு மூட்டை; பொட்டலம் = சிறு மூட்டை; பொதி = மூட்டை என்ற சொற்கள் நாட்டுப் புறக் குடும்பப் பொருளாதாரத்தில் மிகவும் தலைமையானவை. இப் பெயர்ச் சொற்களின் வினைமூலம் என்ன?

பொக்குதல், பொக்கித்தல், பொக்கிடுதல்
பொட்டுதல், பொட்டித்தல், பொட்டிடுதல்
பொத்துதல், பொத்தித்தல், பொத்திடுதல்
பொதிதல், பொதித்தல், பொதியிடுதல்

இவை எல்லாமே உள்ளடங்கலை, முடிச்சுப் போட்டு ஒதுக்கிவைத்தலை, பொதியிட்டு வைத்தலைக் குறிக்கும் சொற்களே. பொட்டுதல், பொத்துதல் என்பவற்றை நீட்சியாய்ப் பார்க்கும் போது இன்னும் வேறு சில பொருட்களை உணர்த்துவதால், அவற்றை விலக்கி, இங்கு பொக்கிடுதல் என்ற வினையையே கையாள முற்படுகிறேன். அதன் மூலம் இச் சொல்லுக்குப் புதிய ஆட்சி கிடைக்கும். (சொல் பழையது தான்; புதிய ஆட்சியில் பொருள் நீட்சி கொடுக்க முற்படுகிறோம். பொக்கிடுதல் = முடிந்து தனியே வைத்தல்)

to budget = பொக்கிடுதல்
budget(n) = பொக்கீடு
budget speech = பொக்கீட்டுரை
They have allocated Rs.200 Cr. towards education in this year's budget = இந்தாண்டுப் பொக்கீட்டில், ரூ.200 கோடியைக் கல்விக்கென ஒதுக்கியிருக்கிறார்

என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, March 02, 2006

சோறூட்டு

முன்னிரவு நேரம்; பூரணநிலா;
வானமெங்கும் பொறிமீன்கள்;
வீடெல்லாம் போக்குக் காட்டி,
உறவைக் காட்டித் "தென்றல்"
குழந்தைக்குச் சோறூட்டத்
தாய் பாடும் பாட்டு
----------------------------------------------------------------
"சோறூட்டு"

தங்கக் குட்டி சிரிச்சதுக்கு - ஒரு வாயி
தாவிவந்து அணைச்சதுக்கு - ஒரு வாயி
நங்கி நங்கி நடந்ததுக்கு - ஒரு வாயி
நாவை நீட்டித் தொறந்ததுக்கு - ஒரு வாயி

பொங்குநிலா பார்த்ததுக்கு - ஒரு வாயி
பொறிமீன்கள் புடிச்சதுக்கு- ஒரு வாயி
தங்குமடி அமர்ந்ததுக்கு - ஒரு வாயி
தவ்வியெனை உவந்ததுக்கு - ஒரு வாயி

செங்கமல இதழுக்காக - ஒரு வாயி
சிறியமுத்துப் பல்லுக்காக - ஒரு வாயி
எங்கேஉந்தன் கையைநீட்டு - ஒரு வாயி
எடுத்துள்ளே போட்டுவிடு - ஒருவாயி

எங்கவீட்டு தென்றலுக்காய் - ஒரு வாயி
எதுத்தவீட்டு அக்கைக்காக - ஒரு வாயி
பங்குதரும் சித்தப்பாவுக் - கொரு வாயி
பரிசுதரும் சித்திக்காக - ஒரு வாயி

அங்கேவரும் அப்பாவுக்காய் - ஒரு வாயி
ஆடுகட்டில் கிட்டுத்தாத்தா - ஒரு வாயி
இங்கேபாரு சாலாபாட்டி - ஒரு வாயி
இனியஅம்மா எனக்காக - ஒரு வாயி

சங்கூதும் நேரமாச்சு - ஒரு வாயி
சாமிகோயில் மூடுறாங்க - ஒருவாயி
தங்கக்கட்டி சாப்பிட்டாச்சு - ஒருவாயி
சோறெல்லாம் முடிஞ்சுபோச்சு - செல்லக்கண்ணே!

என் செல்லம்! என் தங்கம்! என் ராசாத்தி!
என் தென்றல் பெண்ணே! ம்ம்ம்! உச்!
----------------------------------
தாயின் கொஞ்சலில் நாம் இடையூறலாமோ?
கிளம்பலாம், வாருங்கள்

அன்புடன்,
இராம.கி.