Tuesday, January 02, 2024

Gig workers = கறங்குழையர்

”ஏன் கிக் தொழிலாளர் என்று பெயர்வைக்க வேண்டும்? அலுவல் சாராத் தொழிலாளர் எனலாமா?அல்லது வேறுசொல் வழக்கில் உண்டா?” என 3 நாட்கள் முன் திரு.Neechalkaran Raja “ தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” குழுவில் கேட்டார். என் பரிந்துரை கீழே: 

அதற்கு முன், ”காலங்கள்” தொடரில் 2 ஆம் பகுதி ”புவியாடும் கிறுவாட்டம்” எனும் இடுகையைப். (https://valavu.blogspot.com/2003/09/2.html) படித்து விடுங்கள்.  அதிலிருந்து தேவையானதை வெட்டிக் கீழே ஒட்டியுள்ளேன். 

--------------------------------

பத்து, பன்னிரண்டு அகவையில் பம்பரம் விளையாடி இருக்கிறீர்களோ?

அட நீங்க ஒண்ணு, யாருங்க இப்பவெல்லாம் பம்பரம் விளையாடுறா? இப்பத்தான் எங்கு பார்த்தாலும் மட்டையும் பந்துமா, ஆங்கிலக் கிட்டிப்புள் அல்லவா ஆடுகிறார்?

”எத்தனை இளையருக்குப் பம்பரம் சொல்லித் தருகிறோம்? " - என்கிறீரோ? நீர் சொல்வதும் சரிதான், மொத்தத்தில் இன்னொரு பண்பாட்டுச் சின்னம் போயே போச்சு!

பம்பரத்தை நூலோடு பிணைத்து சொடுக்கித் தரையில் குத்தும் போது, 4 வித இயக்கங்களைக் காட்டும். முதலில், கூரான அச்சில் இருந்தவாறே தன்னைத் தானே உருட்டிக் கொள்ளும். (பம்முதல் = நூலோட்டுதல்) 2 ஆவதாகத் தரையில் பரவி (பம்புதல் = பரவுதல்) ஒரு முழு வலயமோ, பாதியோ போடும். இதுபோக 3 ஆம் இயக்கமும் காட்டும். கிறுவாட்டம் (gyration) எனும் இதை வாழ்வின் பல காலங்களில் பார்த்துள்ளோம். கீழே விவரமாகப் பார்ப்போம். 4 ஆம் இயக்கம் தலையாட்டுவது; அதை நெற்றாட்டம் (nutation) என ஆங்கிலத்தில் குறிப்பர்.

சில போதுகளில் தலை கிறுகிறுக்கிறது என்கிறோம் அல்லவா? குறிப்பாக உருளைக் கூட்டைகளில் (roller coaster) ஏறியிறங்கிச் சுற்றி விளையாடி , அது முடிந்தபின் ஏற்படும் கிறுகிறுப்பு இக் கிறுவாட்டத்தால் ஏற்படுகிறது. (கிர்ரென்று சுற்றுகிறது, கிறுவுதல், கிறுக்கு, கிறுக்காட்டம், கிறங்கு, கறங்கு போன்றவை இதனோடு தொடர்புடைய சொற்கள்.)

ஊரிலே தென்னம் பாளையைக் குடத்திலிட்டு அம்மனுக்கு மதுக்குடம் எடுக்கிறார்; இதுபோல, முருகனை நினைந்து பழனிக்குப் பால்குடம், காவடியாட்டம் எடுத்துப் போகிறார்; இப்பொழுதுகளில் சிலருக்கு மெய்ம்மறந்த நிலையில் கிறுவாட்டம் வருகிறது; தன்னினைவு உள்ளபோது ஆடமுடியாத கிறுவாட்டம் மெய்ம்மறந்து முருகனை நினைக்கையில் தன்னுளே ஈடுபட்டுச் சட்டென வந்துவிடும். அதிலேதோ துரித கதி, தாளக் கட்டு, மொத்தத்தில் ஒரு கிறுகிறுப்பு. இக் கிறுகிறுப்பிலும் குடம் கீழே விழாது நிற்கிறது.காவடி அசராது நிற்கிறது.

கிறுவாட்டத்தில் கூடக்குறையத் தலையாட்டுவதைத் தான் நெற்றாட்டம் என்கிறோம். (நெற்று = nut, இந்த nut -ல் இருந்துதான் nucleus, nuclear science எல்லாம் பிறந்தன. தமிழில் நெற்றுழை என்ற சொல்லே nucleusஐ மிகச் சரியாகக் குறிக்கும். தேங்காய் நெற்றை எண்ணிப்பார்த்தால் நான் சொல்லிம் நெற்றுப்பொருத்தம் புலப்படும். நெற்றுழை அறிவியல் = nuclear science. நெற்றுவதைத் தான் பேச்சுத்தமிழில் நொட்டுவது என்கிறோம்.)

சூரியனைச் சுற்றி வரும் புவியும் தன்னுருட்டல், வலைத்தல், கிறுவாடல், நெற்றாடல் என 4 இயக்கங்கங்களைக் காட்டுகிறது.

---------------------

இனி gig இற்கு வருவோம். ஆங்கிலத்தில் 2 விதப் பொருள்கள் சொல்வர். ஒன்று பம்பரம் பற்றியது. gig (n.1):"light, two-wheeled carriage, usually drawn by one horse" (1791), also "small boat," 1790, perhaps imitative of bouncing. There was a Middle English ghyg "spinning top" (in whyrlegyg, mid-15c.), also "giddy girl" (early 13c., also giglet), from Old Norse geiga "turn sideways," or Danish gig "spinning top." Similar to words in continental Germanic for "fiddle" (such as German Geige); the connecting sense might be "rapid or whirling motion."

அடுத்தது இன்றுள்ள பொருள். Definitions of gig - a job, especially a temporary job. type of: business, job, line, line of work, occupation.

இதன் தொடர்ச்சியாய் Gig workers are independent contractors, online platform workers, contract firm workers, on-call workers, and temporary workers. Gig workers enter into formal agreements with on-demand companies to provide services to the company's client என்றும் சொல்வார்.

இதில் அடிப்படையைப் புரிந்துகொள்வது.  குறிப்பிட்ட வேலையைக் கிறுகிறு என்று சுற்றிச் சுழன்று கருமமே கண்ணாய் இருந்து சட்டுப்புட்டென அதே பொழுதில் குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதாய்ச் சொல்லும் வேலை gig ஆகும். நாம் பம்பரத்தைப் போல்மமாக்கி இச்சொல்லைக் ”கறங்கு” எனலாம். எச் சிக்கலும் பயன்பாட்டில் எழாது ஆங்கிலச் சொல்லின் சாற்றை ”கறங்கு” என்பதால் கொண்டுவந்து விடலாம்.

gig workers: கறங்கு உழையர் = கறங்குழையர்.  (தொழிலாளர், உழைப்பாளர் என நீட்டுதற்கு மாறாய் உழையரென்று சுருங்கச் சொல்ல விழைவேன்.)




No comments: