Tuesday, September 19, 2023

தமிழில் நுல்லியத்திலும் (million) பெரிய எண்கள்

 iLangoo pitchandi  என்பவர் கீழ்வரும் கட்டுரையை  அவரின் முகநூல் பக்கத்தில் இட்டிருந்தார். 

...........................................

மில்லியன், பில்லியன், டிரில்லியன் போன்ற சொற்களுக்குச் சமமான தமிழ்ச் சொற்கள்!

-------------------------------------------------------------------

1995ஆம் ஆண்டிலேயே மேற்கூறிய ஆங்கில எண்ணுப் பெயர்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கினேன். எட்டு  ஆண்டுகளுக்கு முன்பு நான் உருவாக்கிய தமிழ் சொற்களை இணையத்தில் கூகுளில் ஒரு நண்பர் சேர்த்திருந்தார்.

மில்லியன் = எண்ணம் 

பில்லியன் = இரட்டம் 

டிரில்லியன் = மூவ்கம் 

குவாட்ரில்லியன் = நாவகம் 

குவின்டில்லியன் = ஐவகம்

செக்ஸ்டிலியன் =  அறுவகம் 

செப்டில்லியன் = எழுவகம்

ஆக்டிலியன் = எண்மகம்

நானில்லியன் = தொட்டகம் 

டெசில்லியன் = பத்தகம்.

undecillion = பதினொன்றகம் 

duodecillion = பன்னிருவகம் 

இப்படியே தொடரும். தமிழ்த்தொண்டு என்றால் இதுதான்! தமிழ் தமிழ் என்று போலியாகக் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கும் குட்டி முதலாளித்துவக் கபோதிகள் இச்சொற்களை மக்களிடையே பரப்புவார்களா? ஒருநாளும் செய்ய மாட்டார்கள்!பெ மணியரசன் உயிரோடு இருக்கிறாரா?இருந்து என்ன பயன் என்கிறீர்களா?தமிழ் தேசியம் பேசும் தற்குறி சீமானுக்கு இதெல்லாம் ஏதாவது புரியுமா? செக்ஸ்டிலியன் என்பதற்கு அறுவகம் என்று தமிழாக்கி இருக்கிறேன். செக்ஸ்டிலியன் என்றால் சீமானின் அகராதியில் என்ன பொருள்?

தமிழை நான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும்.எத்தனை பேரால் இப்படிச் சொல்ல முடியும்?

*************************************************

நண்பர் சிலர் இந்த இடது சாரியார் இடுகையை எனக்குச் சுட்டிக் காண்பித்திருந்தார். வேறு பொழுதுகள் எனில் இது போன்ற அரைகுறை இட்டியை படித்துவிட்டு நகர்ந்திருப்பேன். வசவும் சூளுரையும் பொதிந்த கட்டுரையைப் பார்த்தவுடன், ”விடைதராது நகரக்கூடாது” என்று தோன்றியது. என் விடையை ”வளவில்” இட்டு, சுட்டியை என் முகநூல் பக்கத்தில் தனி இடுகையிலும், அவர் பக்கத்தில் முன்னிகையாகவும் கொடுத்துள்ளேன். 

_____________________________________

நண்பரே! யாரோடு கத்திச் சண்டை போடுகிறீர்? - என எனக்குப் புரியவில்லை. நான் உம் எதிரி அல்ல. குட்டி முதலாளித்துவக் கபோதி  எனும் வசவைப் (கண்போகி> கண் போதி> குருட்டுப்பயல்) பார்த்தபின் சும்மா இருக்கத் தோன்றவில்லை. முதலில் திருக்குறளில் வருவதை நினைவு கொள்க. 

யாகாவார் ஆயினும் நா காக்க. காவாக்கால் 

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.  

ஒரு மார்க்சீயருக்கு இவ்வளவு ஆற்றாமையா? தமிழ்த் தேசியரான திரு. மணியரசனையும், திரு. சீமானையும் பற்றி நாலாந்தர மொழியில் அவதூறு பேசும் தேவை உமக்கிருப்பின் அதை வேறு இடுகையில் செய்துகொள்க. ஒரே இடுகையில் என்னையும் அவரோடு இணைத்துப் பேச முயல்வது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நான் உமக்கு முள்ளாய் இருந்துள்ளேன் போலும். சில நண்பர்கள் உம் இடுகையில் என் பெயரைக் கனிவாய்க் கூறி என்னை உசுப்பிய காரணத்தால் உந்தப்பட்டு, இங்கு வந்தேன்.

1995 இலேயே ஒரு சில எண்ணுப் பெயர்களுக்கான தமிழ்ச் சொற்களை நீர் பரிந்துரைத்து இருந்தால் அதற்கு என் பாராட்டு. அதேபொழுது, எந்தக் காலத்தில் என் பரிந்துரைகளைச் செய்தேன் என உரைத்து உம்மோடு குழாயடிச் சண்டை போடவேண்டிய தேவை எனக்கில்லை. நீரோ அல்லது நானோ தமிழைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிக் கொள்வது போல் வேயம் (வேசம்) கட்டவும் வேண்டாம். 

இதுவரை நான் பரிந்துரைத்த ஆயிரக்கணக்கான சொற்களை மட்டுமே  எல்லோரும் பயில வேண்டுமென நான் எங்கும் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். எது நிலைக்குமோ அது நிலைக்கட்டும். எது அழியுமோ அது அழியட்டும். தமிழுக்கென்று உருவான கொம்பு முளைத்த மொழி ஆணத்தி (authority or commissar) நானல்லன். சட்டாம்பிள்ளைகளுக்கும் எனக்கும் என்றும் ஒத்துக் கொள்ளாது. எப்போதுமே ஏழரை நாட்டுப் பொருத்தம் தான். உம் பதிவின் மூலம் ஒரு சட்டம்பிள்ளையாய் உம்மைக் காட்டிக் கொள்ள முயல்வதால் உம்மை நான் மறுக்க வேண்டியுள்ளது. இனி உம் முன்னிகைக்கு வருவோம்.  

நீர் பரிந்துரைத்த எண்களை வைத்து ஒரு சில வாக்கியங்களை எழுதிப் பார்க்கலாமா? பொருத்தம், பொருந்தாமை அதில் தெரிந்துவிடும்.முதலில் மில்லியனுக்கு நீர் பரிந்துரைத்ததை வைத்து ஒரு தொடர் எழுதிப் பார்ப்போம்.. 

--------------------------

“இவ்விரண்டு எண்களையும் கூட்டினால்  4 எண்ணம் (million) வருமோ?” என்ற எண்ணம் (thought) எனக்கு எழுந்தது. 

--------------------------

வெவ்வேறு பொருள்கள் கொண்ட ஒரே சொல் இருமுறை ஒரு வாக்கியத்தில் வந்தால் குளறுபடி ஆகாதோ? உம் பரிந்துரையின் பொருந்தாமை புரிகிறதா?  பிறைக் கோட்டினுள் வரும் ஆங்கிலச் சொல் இல்லாவிடில் இவ் வாக்கியம் படிப்போருக்குப் புரிபடுமோ?  

அடுத்தது பில்லியன் பற்றிய கேள்வி:

--------------------------

”இரட்டம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது ? இரு மில்லியனா? அல்லது  இராட்டிரகூடரின் பெருநிலப் பகுதியா? > அல்லது  ”இரட்டியது” என்று பொருள்படும் இரட்டைக் கிளவியா? 

--------------------------

தமிழில் ”ஒரே மாதிரி முன்பகுதி இருந்து ஈறு மட்டும் மாறுபடும் சொற்கள்” பலவுண்டு. அம் எனும் ஈறு பெற்ற சொற்களுக்கும் ஐ எனும் ஈறு பெற்ற சொற்களுக்கும் பெரும்பாலும் ஒரே பொருள் அமையலாம். இரட்டம் என்ற சொல்லின் பொருந்தாமை இப்போது உமக்குப் புரிபடுகிறதா? இனி மூன்றாவதாய் டிரில்லியன் என்பதைப் பார்ப்போமா? 

--------------------------

இதை மூவகம் என்று சொன்னால் 3 வீடுகளா? 3 தேசமா? அகம் என்றால் மில்லியமா? இல்லியமா. இல்லியம் எனில் ”ஒன்றும் இல்லாதது” என்று பொருளாகுமே? அகம் என்ற சொல்லிற்கு மில்லியன் என்னும் பொருள் உண்டா? எந்த ஆவணத்தில் வருகிறது?

--------------------------

நாலாவது குவாட்ரில்லியன். 

--------------------------

உம் பரிந்துரையான நாவகத்தில், நாவு என்றால் நாலா? எங்கு இப்படித் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்? நால்வு என்றால் நாலு, நான்கு, நான்மம் எனும் சொற்களோடு ஒரு தொகுதியாய் ஒத்துவரும். அது என்ன நாவு? வாயில் தொங்கும் சதையா? நாவு என்றால் 4 என்று 70 ஆண்டுகளுக்கு முன் 1953 இல் என் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. அகம் என்ற சொல்லிற்கு எண்ணிக்கைப் பொருள் இருப்பதாய் எந்தத் தமிழ்நூலில் தேடினும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, 

அப்புறம் எப்படி ஐவகம், அறுவகம், எழுவகம், எண்மகம், தொட்டகம், பத்தகம்,பதினொன்றகம், பன்னிருவகம் - என்று தொடர்வது? உங்களின் முதல் 4 சொற்கள் இடுகுறியாய்த் தென்படுகின்றன.

இந்த எண்களை தமிழாக்குவதற்கு முன்னால், இரோப்பிய, அமெரிக்க, இங்கிலாந்தியப் பயன்பாட்டின் அடிப்படைகளைச் சற்று அறிந்து கொள்க.  பில்லியன் என்பது தொடக்கப் பயன்பாட்டின் படி இங்கிலாந்தில் 10^6*10^6 என்றும், அமெரிக்காவிலும் இரோப்பாவிலும் 10^3*10^6 = 10^9 என்றும் பொருள். இப்போது பலரும் அமெரிக்க முறைக்கு மாறி வந்துகொண்டுள்ளார். இங்கிலாந்திலும் கூட இப்போது மாறுகிறது. கீழே வருவதை  (https://en.wikipedia.org/wiki/Billion) விக்கிப் பீடியாவிலிருந்து எடுத்து, ஓரிரு பத்திகளை மட்டும் வெட்டியொட்டியுளேன். முழுதும் படிக்கவேண்டின் விக்கிப்பீடியாவின் அப் பக்கத்தை அணுகுங்கள்.  

Billion is a word for a large number, and it has two distinct definitions:

1,000,000,000, i.e. one thousand million, or 109 (ten to the ninth power), as defined on the short scale. This is its only current meaning in English.

1,000,000,000,000, i.e. one million million, or 1012 (ten to the twelfth power), as defined on the long scale. This number, which is one thousand times larger than the short scale billion, is now referred to in English as one trillion. However, this number is the historical meaning in English for the word "billion" (with the exception of the United States), a meaning which was still in official use in British English until some time after World War II.

American English adopted the short scale definition from the French (it enjoyed usage in France at the time, alongside the long-scale definition).The United Kingdom used the long scale billion until 1974, when the government officially switched to the short scale, but since the 1950s the short scale had already been increasingly used in technical writing and journalism. 

இனித் தமிழுக்கு வருவோம். mill என்பதற்கு அயிர/ஆயிர என்பது போக நுல்லு என்றும் தமிழில் சொல்லலாம். நுல்லில் பிறந்த சொற்கள் பலவுண்டு. நுல் என்பது நுணுகு, நூகு எனப் பல சொற்களுக்கும் வேராக அமையும். மகர நகரப் போலி பற்றி முன்னால் என் கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன்.10^3*10^3 என்பதில் முதலில் வரும் 10^3 ஐ mill என்றும் பின்னால் வரும் 10^3 ஐ ion என்றும் கொண்டு அமெரிக்க முறையில் million என்பார். million எனும் எண் தொகுதியை நுல்லியம் என்றே தமிழில் சொல்லலாம். 

இனி (10^3*10^3)*10^3 ஐயை bill-ion என்றார். 10^9 ஐத் தான் இருமநுல் என்கிறோம். (ஏற்கனவே நெய்தல் (10^5), இலக்கம் (10^5), குவளை(10^7), கோடி (10^7), ஆம்பல் (10^9), சங்கம் (10^12), தாமரை (10^13), வெள்ளம் (10^14) என்ற எண்கள் சங்க நூல்களில் உண்டு). இரும நுல்லியம் என்பதைப் பழகப் பழகப் பெயரடை பயில்வதைத் தவிர்க்கலாம் தான். அந் நிலையில் இருமநுல்லியத்தை ஈர்- இல்லியம் எனலாம். அது போல் (10^3*10^3*10^3)*10^3 என்பதை trill-ion என்று படிப்படியாய்ச் சொல்லிப் போகலாம். அதாவது பழகப் பழக மூ-இல்லியம் மூவில்லியம் ஆகலாம். 

மொத்தத்தில், நுல்லியத்தின் மடங்குகளைக் குறிக்க, இரும நுல்லியம் (billion) அல்லது ஈரில்லியம், மும்ம நுல்லியம் (trillion) அல்லது மூவில்லியம். நால்ம நுல்லியம் (quadrillion) அல்லது நாலில்லியம், ஐம நுல்லியம் (quintillion) அல்லது ஐயில்லியம், அறும நுல்லியம் (sechstiliion) அல்லது ஆறில்லியம், எழும நுல்லியம் (septillion) அல்லது ஏழில்லியம், எண்ம நுல்லியம் (octillion) எண்ணில்லியம், தொண்ம நுல்லியம் (nanillion) அல்லது தொள்ளில்லியம் என்றே பழகலாம். பன்மடங்கு நுல்லியத்தை (zillion) பன்ம நுல்லியம் என்றே சொல்லலாம்.


No comments: