Wednesday, August 23, 2023

மேகம்

In meteorology, a cloud is an aerosol consisting of a visible mass of miniature liquid droplets, frozen crystals, or other particles suspended in the atmosphere of a planetary body or similar space. பல்வேறு வகை நீர்மத் துளிகளும், உறைந்துபோன மீச்சிறு கட்டிகளும், அலைபடும் தூசுகளும் நிறைந்து, ஊதும அழுத்தத்திற்குச் (atmospheric pressure) சற்று மேல் அழுத்தம் கொண்டு, கூவளைப் (convex) பேறு கொண்ட கோளப் பொதியைத் தான் aerolsol என்பார். இதைத் தமிழில் காற்றுக் கரைவு என்று சொல்லலாம்.  

இக் காற்றுக் கரைவுகள்  புவிப் பரப்பிற்குச் சற்றுமேல் இருக்கும். நாம் வானைப் பார்க்கையில் ஊதுமக் கோளத்தில் காற்றுக் கரைவுகள் நகர்ந்து கொண்டே இருப்பதைக் காணலாம். இவற்றல் நீர் மட்டுமின்றி. மற்ற நீர்மங்களும் இருக்கலாம். கடலின் மேல் இக் கரைவுகள் வரும் போது கடலிலிருந்து வெளிவரும் நீராவி இக் கரைவுளுக்குள் புகுந்து, அவற்றின் நீர்ச்செறிவை கூட்டும். நிலத்தின் மேல் வரும்போது ஏதோவொரு வெதணத்தில் (climate) கரைவுகளில் இருந்து நீர் வெளிவரலாம். இப்படி நீர் வெளிவருவதைத் தான் மழை என்கிறோம். 

நீர்க்கரைவுகள் எப்போதும் நமக்கு மேலேயே தனித்துத் தெரிவதால் மேகம் என்ற பெயரைப் பெற்றன. ”மேகச்” சொற்பிறப்பு விளக்கத்தைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, 7 ஆம் மடலம், 3 ஆம் பாகம், 54 ஆம் பக்கத்தில் காணலாம். நம்மில் பாதிப்பேர் மேகத்தை megam என்று தவறாய் ஒலிப்பதால், மேகம் வடசொல் ஆகிவிடாது. உண்மையில் ஈருயிர்களுக்குள் இடையில் (intervocalical) வரும் ககரத்தை ”ha” என்று ஒலிக்க வேண்டும். 

சரி, மேகம் என்ற சொல் எப்படி எழுந்தது? 

மீ> மே> மேல் என்பது உள்ளிற்கு எதிரான கருத்தைக் குறிக்கும். ”மேல்” இன்னும் திரிந்து மேல்> மேல்வு> மேவு> மேகு  என்ற சொற்களை உருவாக்கும். (வகரமும் ககரமும் தமிழில் போலிகள்). இனி, மேகு+அம் = மேகம் என இன்னொரு சொல்லும் பிறக்கும். மேகம் அடிப்படையில் வெள்ளைத் தோற்றம் காட்டும். வெவ்வேறு அளவில் ஈரம் மேகத்தில் செறியும் போது காற்றுக்கரைவுகள் கொஞ்சங் கொஞ்சமாய் கறுத்து வரும். கருப்புப் பொருளால், மேகம் என்ற பெயர்ச்சொல் எழவில்லை. மேலே இருப்பதால், மேகம் என்ற சொல் எழுந்தது.  

இனி ஈரம் ஏற ஏற மேகம் என்பது கருமேகம் ஆகும். கருமேகத்தை முகில் என்கிறோம்.

No comments: