Monday, February 21, 2022

தெலுங்கர், கன்னடர், துளுவர், மலையாளர்

"மலையாளி எனும் சொல் மலை+ஆள்/ஆள்பவர் என்று பொருள்படுகிறது. இதுபோல தெலுங்கர்/கன்னடர்(கன்னடிகா)/துளுவர் ஆகியவருக்கான பெயர்க்காரணம் ஏதேனும் (அந்த மொழியிலாவது) உண்டா?" என்று திரு. தாமரைச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் கேட்டார். பலருக்கும் இக்கேள்வி இருக்கிறது போலும். ஆனால் சரியான வரலாறு தெரியாத  வெறும் உன்னிப்பு விடையே பலரும் அளிக்கிறார். என் கட்டுரைகளில்  வேறு செய்திகளுக்கு இடையில் ஆங்காங்கே இதுபற்றிக் குறிப்பாய் நான் தந்துள்ளேன். ஒருமுறை தனியே ஒருமுகமாய்த் தருவது நல்லது என்று இங்கு விவரிக்கிறேன். 

முதலில் தெலுங்கர். தமிழருக்கு வடக்கிலுள்ள அவரை வடுகர் என்றது சங்க கால வழக்கமாகும். வடுகர் என்போர் அப்போது பேசிய மொழி ஒரு வட்டாரத் தமிழ். தமிழில் தொடங்கி முதலில் பிரிந்தது அவரே. வடவருக்கும் நமக்கும் இடையே இருந்தவர்/இருப்பவர் இவர் தான்.  வடக்கருக்கு தெற்கில் இவர் உள்ளதால் இவர் வடவர் நோக்கில் தெனுகர்/தெலுகர் எனப்பட்டார். தென்/தெல் என்பது தெலுகின் பெயர்ப் பகுதி. (தெற்கு என்னும் நம் சொல்லில் தெல் எனும் பகுதி உண்டு.) தெலுங்கு என்பது தமிழரின் பலுக்கு. தெலுகின் வடவருக்கும் வடுகருக்கும் அடையாளக் குழப்பம் ஏற்படக் கூடாது எனச் சங்க காலத்திற்கு அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாய், அவர் பெயரைத் தெலுங்கர் என்று சொல்லத் தொடங்கினோம். சாதவா கன்னர் காலத்தில் தெலுகெனும் பெயரே நிலைத்தது,  நம் தெலுங்கு, கன்னடப் பங்காளிகளின் தொடக்கம் சாதவா கன்னரில் உள்ளது. சங்க இலக்கியத்தை ஒழுங்காய் ஆய்ந்தால்தான் அது விளங்கும்.

சாதவா கன்னர் (நூற்றுவர் கன்னர்) நாட்டின் தொடக்கம் அடிப்படையில் மாராட்ட மாநிலம். (மா = பெரிய. ராட்டம்> ராட்ட> ராஷ்ட்ர = நாடு. இன்று மகாராஷ்ட்ர என்று இப்பகுதி சொல்லப் படுகிறது, (பஞ்ச திராவிடத்தில் அவரும் ஒருவர் தான். இன்று அவரும் மறந்தார். நாமும்  மறந்தோம். (கூர்ச்சரரும் - குசராத்தியரும் - ஒரு கால் திராவிடரே!) 2000 ஆண்டுகளுக்கு முன் கன்னர் நாட்டில் 2 மொழிகள் ஆட்சியில் இருந்தன. ஒன்று பாகதம் இன்னொன்று தமிழ். மகாராஷ்ட்ர என்பது அந்நாட்டிற்கான பாகதப் பெயர். சாதவா கன்னர் காலத்தில் பேசப்பட்ட பாகதத்திற்கு ”மகாராஷ்ட்ரீ” என்று பெயர். எல்லாப் பாகதங்களிலும் மிக இனிமையாய், பாட்டிற்கும், ஓசைக்கும் பெயர் போன மொழி மகராஷ்ட்ரீ ஆகும். (இற்றை மராட்டி இதன் தொடர்ச்சி. கொஞ்சம் பரிதாவ நிலை அதற்கு இன்று ஏற்பட்டது வருத்தம் தருகிறது.) மகராஷ்ட்ரீ பற்றி நிறைய எழுதலாம். பெயர் பெற்ற அகம் எழுநூறு (Gāhā Sattasaī; in Sanskrit: Gāthā Saptaśatī) என்ற அருமையான நூல் நம் அகநானுறு போலவே அங்கு எழுந்தது. இது பற்றியும் மிக எழுதலாம். நம் உறவுள்ள நூல். 

கன்னரின் முதல் தலைநகர் கோதாவரியின் வடகரையில் இருந்த படித்தானம் ஆகும். இது இன்று Paithan எனப்படும். ஔரங்காபாதின் அருகில் உள்ளது. இங்கிருந்து அஜந்தா, எல்லாரோவிற்கு வழியுண்டு. கன்னர் நாட்டின் தென்கிழக்கு இற்றைத் தெலிங்கானம். தெலுங்கு ஆந்திரத்திற்கும் பின் விரிந்தது. (தொடக்கத்தில் ஆந்திரம் முழுதும் காடு. தமிழகம் தொட்டு நெய்தல் ஆந்திரம் (Coastal Andhra) வழி கலிங்கம் வரை அன்று காடு தான். தெலுங்கரின் முதல் புழக்கம் தெலிங்கானாவில் தொடங்கியது. முடிவில் கிழக்குக் கடற்கரை வந்தார். பொ.உ.மு. 250 வரையிருந்த கன்னர், தம் கடைசி 150, ஆண்டுகளில்  நாடு சுருங்கியபோது, மாராட்டத்தைக் கைவிட்டு ஆந்திர அமராவதி நகரைத் தலைநகர் ஆக்கிக் கொண்டார்.  பிந்தையக் கன்னர் பாகதம் சேர்ந்த தமிழைப் (இதுவே தெலுங்கு) பேசினார்.

மகாராஷ்ட்ரத்திற்கு இன்னொரு பெயர் தமிழில் இருந்தது. அது கல்+ + நாடு = கன்னாடு>கன்னாடம்>கர்நாடம். கல் = பெரிய. நாடு = ராஷ்ட்ரம். சாதவா கன்ன அரசின் வடக்கே மகராஷ்ட்ரீ மொழியும், தெற்கே தமிழும் பேசப்பட்டன, அதனால் தான் அதை மொழிபெயர்த் தேயமென்று மாமூலனார் அழைத்தார். நம்மில் பல தமிழறிஞர் அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை. மாரட்டரும் உணர்ந்தாரில்லை. சங்க இலக்கியத்தில் இது நிறையப் பேசப் பட்டுள்ளது. மொழி பெயரும் தேயம் = மகாராஷ்ட்ரம் + கர்நாடகம். பெயர்தல் = மாறுதல். 

கன்னர் அரசு அழிந்து, அடுத்த அரசுகள் வந்தபோது முன்னால் சொன்னது போல் அவர்நாடு உடைந்தது, அவரின் தென்மேற்குப் பகுதியின் தமிழ் கொஞ்சங் கொஞ்சமாய்த் திரிந்து கன்னடம் என்ற புதுமொழி பிறந்தது.  கன்னடம் பேசப்பட்ட பகுதி கன்னாடு>கன்னடம்> கன்னாடம் எனபட்டது. இன்றும் கன்னடர் திரிவுகளோடு சேர்ந்து தம் இனப்பெயராய்த் தமிழ்ப்பெயர் தான் கொண்டுள்ளார். தம் தமிழ் மூலம் அறியாது, தமிழரோடு சண்டை இடுவது இன்றும் நடக்கிறது, பழங்கன்னடத்திற்கும் (ஹளே கன்னடாவிற்கும்) சங்கத்தமிழுக்கு அடுத்துவந்த தமிழுக்கும் மிக வேறுபாடு காண முடியாது. அதனால் தான் கள அப்ரர் (கருப்பு ஆயர்> கருபு யாதவர்) எளிதில் தமிழ்நாடு நுழைந்து நம்மை ஆளமுடிந்தது. 

துளுவர் பற்றியும் சங்க இலக்கியம் நான்மொழிக் கோசர் என்று பேசும். ”தோகை காவின் துளுநாட்டு அன்ன” என்பது அகம் 15/5 படியுங்கள்.  துளிர்த்தல்>துளுத்தல் = தளிர்தல், செழுத்தல்/, மேலெழும்புதல்.. துளுவு = மழை. துளுநாடு/ துளுவநாடு - மழைநாடு. துளுவும் ஒரு வட்டாரத் தமிழாய்த் தான் தொடங்கியது.  

அடுத்தது மலையாளி. சாரல் - சந்தனம் நெற்றியில் சாரல் பூசிய தமிழ்ப் பேரினம் சாரலர் ஆகும். சாரலர்> சேரலர் ஆவார். அவரைக் கேரலர்>கேரளர் என்றும் சொல்லலாம். நெற்றியில் சாம்பல் = பாண்டு பூசிய பேரினம் பாண்டியர் ஆவர். மஞ்சள்= குங்குமம் = கொழு>கோழ் பூசியவர் கோழியர்= சோழியர் எனும் பேரினம் ஆவர். சாரல்>சாரம்>ஆரம் என்பதும் சந்தனமே. ஆளம்>ஆரம் என்பதும் சந்தனமே. மலை ஆளம் பூசிய சாரலர் மலையாளர்> மலையாளி. அவர் மலையை ஆள்பவர் எல்லாம் இல்லை. 

நண்பர்களே! உன்னிப்புச் சொற்பிறப்பைத் தூக்கியெறியுங்கள்.

5 comments:

Karthikeyan said...

வணக்கம் ஐயா சிறப்பான விளக்கம்

Sundar.P said...

சிறப்பான ஆய்வு. நன்றி ஐயா...

thamizhar koodu - Prakasam said...

பலநூறு வரலாற்று குழப்பங்கள் தீர்ந்தன! நன்றி ஐயா.

mani said...

Excellent effort. Keep up your great work.

Anonymous said...

கருப்பு யாதவர்? களப்பிரர் இது குறித்து விரித்து எழுதி விளக்க வேண்டும்.