Monday, February 21, 2022

காஷ்ட

அண்மையில் திரு. ஆறுமுகத் தமிழனின் முகநூல் பக்கத்தில், :காஷ்டீக மௌனத்தைக் கட்டை மோனமென்று சொல்லி விளக்கினார், அப்போது, ”கட்டை என நாம் சொல்வதை காஷ்ட என்று சங்கதத்தார் சொல்வர். யாருடையது முதற்சொல் என்பதில் இருவருக்கும் சண்டை எழும்” என்றார். நான் இச்சொற்களின் கால எழுச்சியைக் கண்டு அதைப் பல முன்னிகைகளில் தெரிவித்தேன். Star Trek தொலைக்காட்சிச் சரத்தை, அமேசானில் தொடர்ந்து பார்த்துக் கொண்டே, இச்செய்திகளையும் ஒருங்கு சேர்த்து எழுதுவதில் கொஞ்சம் நேரமானது..

மொத்தத்தில் அங்கு ஒரு சுவையான உரையாடல் நடந்தது. அதில் ஒரு சிலவற்றை மட்டும் தொகுத்து இங்கு தனிப்பதிவாய் இடுகிறேன். 

------------------------

காஷ்ட என்பது சங்கத அகரமுதலியில் பயன்பாட்டுப் பொருளில் மட்டுமே உண்டு. சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சில் தாது எதுவென்று சொல்லவில்லை. அதில் கொடுத்துள்ள முதல் 3 பொருள்கள் வருமாறு: (Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary.) 1) Kāṣṭha (काष्ठ):—m. Name of one of Kubera’s attendants, [Mahābhārata ii, 415]. 2) n. a piece of wood or timber, stick, [Śatapatha-brāhmaṇa; Kātyāyana-śrauta-sūtra; Manu-smṛti] etc. 3) wood or timber in general. இன்னும் பல பொருள்கள் அதிலுண்டு. ஆனால், நமக்குத் தேவையான wood or timber இதில் வந்துவிட்டது.

மேற்சொன்ன கட்டைப் பொருளின் பயன்பாட்டு ஆவணங்களில், சதபத பிராமணத்தின் காலம் பெரும்பாலும் பொ..உ. மு. 600 - 300. (The Shatapatha Brahmana (Sanskrit: शतपथब्राह्मण Śatapatha Brāhmaṇa, meaning 'Brāhmaṇa of one hundred[a] paths', abbreviated to 'SB') is a commentary on the Śukla (white) Yajurveda. It is written by the Father of the Indian philosophy saint Yajnavalkya. Arthur Berriedale Keith states that linguistically, the Shatapatha Brahmana belongs to the later part of the Brāhmaṇa period of Vedic Sanskrit (8th to 6th centuries BCE, Iron Age India). M. Witzel dates this text to the 7th-6th centuries BCE. Jan N. Bremmer dates it to around 700 BCE. J. Eggeling (translator of the Vājasaneyi mādhyandina recension into English), dates the final, written version of the text to 300 BCE, although stating some elements 'far older, transmitted orally from unknown antiquity')

இரண்டாவதான காத்யாயன ஸ்ரௌத்ர சூத்ரத்தின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 300. மனு சுமிர்தியை இங்கு ஒதுக்கிவிடலாம். அதன் காலம் பொ.உ. 200. வடமொழியில், எங்கு நோக்கினும் இதற்குச் சொற்பிறப்பு சொன்னதில்லை. பாவாணரின் ”வடமொழி வரலாற்றில்” பக்கம் 101 (தமிழ்மண் பதிப்பகம்) இல், கள்>கட்டு>கட்டை என்று சொற்பிறப்பும் சொல்லி ”திரண்ட மரத்துண்டு, திரண்ட விறகு” என்ற பொருளும் சொல்வார். வடமொழியில் திரட்சிப் பொருள் இல்லை கட்டை, கம்பராமாயணத்தில் தான் இலக்கிய வழக்கில் முதலில் வருகிறது, பேச்சு வழக்கில் இன்றுவரை உண்டு. இதன் தொடர்பான பல சொற்கள் மற்ற தமிழிய (திராவிட) மொழிகளிலும் உண்டு. தமிழில் கள், கட்டு எனும் சொற்பிறப்பு முந்தைச் சொற்கள் 2500 ஆண்டுகள் இருந்துள்ளன. கட்டையும் இருந்திருக்கும். பர்ரோ- எமெனோவின் அகரமுதலி (DED) இதைத் திராவிடச் சொல் என்றே சொல்கிறது.

தமிழில் இருந்த எல்லாச் சொற்களும் இலக்கியங்களில் பயின்றதாய்ச் சொல்லமுடியாது. மறந்து விடாதீர். சங்க இலக்கியம் என்பது ஓர் அகரமுதலியில்லை.

------------------------------

மேலிருந்த என் முன்னிகையைப் பார்த்து, வடமொழி அன்பர் ஒருவர், “இலக்கியங்களில் பயிலாத சொற்களெல்லாம் புழக்கத்தில் இருக்கும் என்ற வாதம் வட மொழிக்கும் பொருந்துமே. காற்றில் கரைந்த சொற்களைக் கண்டுபிடித்த பின் தான் வாதம் செய்ய இயலும் போல” என்று எழுதினார். எனக்குச் சற்று சினம் வந்துவிட்டது.

-------------------------------

”உம் வாதம் போன்றதைத் தான் முரண் வாதம் என்று விடாது சொல்கிறேன். நான் சொல்வது ஏற்க முடியாதெனில், அம்மொழியில் இருக்கிறது என்று சொல்லாதீர். அந்த இலக்கியத்தில் வழக்கு இருக்கிறது என்று சொல்க. மொழியை விட்டு விடுக. அந்த இலக்கியம் முதல் இலக்கியமா? மொழி பெயர்ப்பு இலக்கியமா? - என்று பார்க்க வேண்டாமா

சங்கதப் பஞ்ச தந்திரம் 11/12 ஆம் நூற்றாண்டு இலக்கியம். அதற்கு முன்னால் எம்மொழியில் பஞ்சதந்திரம் முதலில் இருந்தது என்று உமக்குத் தெரியுமா? சங்கத அகரமுதலியில்” பஞ்ச தந்திரத்தில் குறிப்பிட்ட சொல் பழகுகிறது. எனவே சங்கதம் முதல்” என்பார். இதுபோல் பல்வேறு உருப்படியிலாத முரணான கதைகளைக் கேட்டுவிட்டேன். வேலையற்றுத் தேடிப்போய், ஞாயமாய் இங்கு பேசினால், “காற்றில் கரைந்த சொற்கள்” என்று கீழறுப்பு வாதம் வருகிறது. ”65000 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்தவன் கட்டை, தடி கூடத் தெரியாமல் ஊமையாய் இருந்தான். 9000 ஆண்டுகளுக்கு முன் எங்கோ இருந்தவன் இங்கு வந்துசொல்லிக் கொடுக்கும் வரை கட்டைச்சொல் இல்லாமல் இருந்தான்” என்ற நம்பிக்கை உமக்குப் போதும் போலும்.

பர்ரொ-எமெனோ ”தமிழியச் சொல்” என்று சொன்னது தவறா? கட்டை என்ற சொல்லின் சங்கதச் சொற்பிறப்பு என்ன? வேறு இந்தை யிரோப்பியனில் ”காஷ்ட” இருக்கிறதா? அது சங்கதத்தில் ஏன் கடன் சொல் ஆகக் கூடாது? (இப்போதையத் தொல்லியல் அறிவின் படி) பொ.உ.மு. 600 இல் எழுத்தில் நுழைந்த தமிழ் இலக்கியம் போல் அன்றி பொ.உ.150 வரை சங்கத இலக்கியம் எழுத்தில் இல்லை. அதுவும் அதுவரை ”காற்றில் கரைந்த இலக்கியம்” தான். உணர்க. கட்டையோடு தொடர்புற்ற கற்றை என்ற சொல் பெரும்பாண் ஆற்றுப்படையிலும், நற்றிணையில் இரண்டு இடங்களும் உண்டு. நற்றிணை சங்க இலக்கியத்தின் தொடக்க நூல்களில் ஒன்று. அது தெரிவித்த வாழ்க்கை பொ.உ.மு.300க்கு முற்பட்டது. கறி என்ற சொல்லையும் தேடலாம். நான் இன்னும் ஆய்வில் ஆழ்ந்து தேடினால், பலவும் கிட்டும். பொழுது வேண்டுமே? றகரம் என்ற எழுத்து டகரத்தையும் தகரத்தையும் ஒன்றின் கீழ் எழுதி உருவாக்கிய எழுத்து. இதனால் கற்றையின் முந்தை வடிவம் கட்டை தான். ஆய்வே இல்லாது நம்பிக்கையின் பாலிருந்து பேசுவோர் சங்கியர் காலத்தில் கூடி விட்டார்”

---------------------------------

என்று முன்னிகைத்தேன். அவர் மறுமொழியாய், அவர், “ஐயா, 65000 ஆண்டுகளுக்கு முன் நாம் இங்கிருந்தோம். அவர்களும் எதோ ஒரு மூலையில் இதே உலகில்தானே இருந்தார்கள். இடையில் எங்கிருந்தோ வந்திருந்தாலும் அனைத்து மனிதர்களுக்கும் மூலம் ஒன்றுதானே. என் இனம்தான் மூத்தது என்று யாருமே சொல்ல முடியாதே. சங்கத பஞ்சதந்திரம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்த தமிழ் சம்ஸ்கிருத சண்டை தேவையா என்பதே என் கேள்வி. சண்டையிடும்போது அடுத்தவர் குறைகள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். அடுத்தவரின் வலிமை பெருமைகளை உணர்ந்து அதை பயன்படுத்திக் கொள்வதுதான் எல்லோருக்குமே நல்லது. சாதாரண மனிதர்கள் பிற மொழிகளை கேலி கிண்டல் செய்து குறை கூறிக் கொண்டு களிக்கலாம். உங்களை போன்று ஆறுமுகம் ஐயா போன்ற அறிஞர்களும் அதே பாதையில் செல்லலாமா?” என்று சொன்னார். 

நான் மீண்டும், 

----------------------------------

இங்கே “காற்றில் கரைந்த சொற்கள்” என்று முதலில் சொன்னது யார்? அது சாத்தாரச் சொல்லா? நான் ஆய்வுப் பார்வையில் ”காஷ்ட” பற்றி ஞாயமாய்த் தானே சொன்னேன்? கீழறுப்புச் சொற்களைச் சொல்லிவிட்டு இப்போது சமதானம் பேசவருவது ஏன்? இதுபோல் தான் சங்கத ஆட்கள், “ சிசுன தேவனைக் கும்பிடுவோர், மிலேச்சர், தஸ்யூக்கள், அகல மூக்கர்” என்று எம்மை வித விதமாய்ச் சொல்லிவிட்டு 3200 ஆண்டுகள் நஞ்சை விதைத்தார். இன்று வரை, எம் மொழியை ”நீசமொழி” என்று தான் சொன்னார். “சாமி, ஏதோ தெரியாமல் சொல்கிறார்” என்று பேசாமல் தான் நாங்கள் இருந்தோம். கொஞ்சம் எமக்கு அறிவு வந்த பின் உள்ளதை உள்ளது படி அறிவியல் ஞாயம் தவறாமல் கூறுகிறோம். அவ்வளவு தான். 

65000 ஆண்டு என்பது ஆப்பிரிக்கர் அல்லாத மாந்தர்க்குரிய ஆண்டுகள். அதில் பிரிந்து, பின், மாந்த ஏற்ற இறக்கம் பேசியவருக்கு மறுமொழியாய் என்னை போன்றவரும் பேசவேண்டியதாகிறது, ஒருவருக்கு வெளிப்பட்டால் அரத்தம், இன்னொருவருக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? இனிமேல், “காற்றில் கரைந்த சொற்கள்” என்று அறியாமல் சொல்லாதீர்.

---------------------------------


என்று முடித்தேன். 


No comments: