Friday, January 07, 2022

ஊடகமா? மிடையமா?

2005 இல் இராதாகிருட்டிணன் என்பார், ஓரிடுகையில், “media என்பதற்கு இணையாக மிடையம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்; ஊடகம் என்று சொல்லப்படுவது பொருத்தமானதில்லையா? (இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தால் சுட்டி கொடுங்கள்)” என்று கேட்டார். அவருக்கு அளித்த மறுமொழி கீழேயுள்ளது. .

----------------------

ஊடகம் என்பதில் எனக்குள்ள குறை சிறியது. ஊடு போவது என்பது உள்ளே போவது. ஒன்றின் வழியாகப் போவது. ஊடுதல் = உள்ளுதல். துகிலியலில் (textile science) நெசவில் ஊடு நூல் என்பது weft yarn யைக் குறிக்கும். ஊடுதல் என்பது இன்னொரு கருத்தாய்க் காதலருக்குள் உள்ள பொய்க் கோவத்தைக் குறிக்கும். ஊடுசெல்லுதல் என்பது osmosis என்பதையும் குறிக்கும். இவை எல்லாவற்றிலும் உள்ளே சென்று புகுந்து போவது என்ற கருத்து இருக்கும். 

media என்பது அப்படி அல்ல. அது நடந்ததற்கும் நமக்கும் இடையில் இருப்பது. நாம் எந்த media -விற்குள்ளும் (இதற்குப் புறனடை இடையாற்று மிடையம் - interactive medium) போவது கிடையாது. ஆங்கிலத்தில் interactive என்ற சொல்லைப் போட்டுத்தான் medium என்ற பொதுப்பொருளை விதப்பாக மாற்ற முடிகிறது என்னும் போது medium என்பதற்கு ஊடுதல் என்ற பொருள் வரமுடியாது என்பது புரிகிறதா? மிடையம் என்பது தனித்து நிற்கும் போது பட்டுமையானது (stand alone medium is passive); அது ஆற்றுமையானது அல்ல (it is not active).மிடையம் என்பது ஒரு கண்ணாடி என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம். இடை என்ற பொருள் வரும்படி மிடையம் என்று சொல்கிறேன். அகநானூற்றில் ஒரு பகுதி மணிமிடைப் பவளம். மணிகளுக்கு நடுவில் பவளம் என்றும், மணிகள் மிடைந்த (பொருந்திய) பவளம் என்றும் பொருள் கொள்ளும். 

ஆழ ஓர்ந்து பார்த்தல் மிடைதல் என்பதற்கும், ஊடுதல் என்பதற்கும் வேறுபாடு புரியும்.

No comments: