Wednesday, July 07, 2021

சாப்பாடு - 1

இது 2017 இல் நடந்த சூடான உரையாடல். என் வலைப்பதிவில் இடவில்லை. மடற்குழுக்களில் மட்டும் இருந்தது. இப்போது நாட்களாகின. ஆறிபோன கஞ்சி. எங்காவது ஒரு நிலைத்தடத்தில் இருக்கட்டும் என்று வலைப்பதிவில் சேர்க்கிறேன். 

"சாப்பாடு, சாப்பிடு என்பவை தமிழ்ச்சொற்களா?" என Lalitha Raja என்பவர் 2017 சூலையில் முகநூற் சொல்லாய்வுக்குழுவில் ஒரு கேள்வி எழுப்பினார். (சண்டைகள் அந்தக் குழுவில் மீறிப் போனதால் அதிலிருந்து வெளியே வந்தேன்.)  நம்மிற்பலரும் நன்கறிந்த நண்பர் மணிவண்ணன் ”இல்லை” என்று தன் கருத்தைச் சொன்னார்..”ஓசையின் அடிப்படையில் பிறந்த சப்பு என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானவையே சாப்பிடு, சாப்பாடு முதலான சொற்கள். அறிமுகமில்லாத நுட்பச்சொற்களில் நாம் ஊகத்தில் குறிக்கலாம். ஆனால், பயன்பாட்டிலுள்ள சொற்களுக்கு அவ்வாறு கருதுகையைத் தெரிவிப்பது தவறானகருத்தை விதைப்பதாகவும் பரப்புவதாகவும் அமையும்” என்று திருவள்ளுவன் இலக்குவனார் கூறினார். Raveen S. Nathan என்பார் “Chapad is IA” என்று கூறினார்.

”உண்ணும்போது நாக்கினாலும் உதடுகளாலும் ’சப்’ என்ற ஒலியை உண்டாக்குகிறோம். ’ஒன்றை மெல்லாது நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையிலிட்டு நெருக்கி அதன்சாற்றை மெல்ல உறிஞ்சுதல் அல்லது அப்பொருளைச் சிறிதுசிறிதாகக் கரைத்தல்’ என்று பாவாணர் அதற்கு விளக்கஞ் சொல்வார். சப்பு>சப்பிடு>சாப்பிடு>சாப்பாடு என்று இச்சொல் பொருளில் வளரும். இறைச்சியை சப்பிச் சிறு துண்டுகளாய்க் கறித்து உண்கிறோம். சாப்பாடும் கறியும் அப்படி வந்தவை. சப்புதலும், உண்ணுதலும் ஒன்றிற்கொன்று தொடர்பானவை. ஒன்றைத் தமிழென்று சொல்லி இன்னொன்றைத் தமிழில்லை என்பது சொல்பவருக்கே அடுக்காது. சப்புதலென்ற சொல்லின் இணை கிட்டத்தட்ட எல்லாத் திராவிட மொழிகளிலுமுள்ளது. வேண்டுமானால் அத்தொகுதியைத் தருகிறேன். தவிரப் பாலி மொழியிலும் ’சப்பெதி’ என்ற வினை அதே பொருளிலுண்டு. மேலையிரோப்பிய ஆங்கிலத்திலும் சப் என்ற சொல்லுண்டு. 

sup (v.2) "to sip, to take into the mouth with the lips," Old English supan (West Saxon), suppan, supian (Northumbrian) "to sip, taste, drink, swallow" (strong verb, past tense seap, past participle sopen), from Proto-Germanic *supanan (source also of Old Norse supa "to sip, drink," Middle Low German supen, Dutch zuipen "to drink, tipple," Old High German sufan, German saufen "to drink, booze"), from PIE *sub-, possibly an extended form of root *seue- (2) "to take liquid" (source also of Sanskrit sunoti "presses out juice," soma; Avestan haoma, Persian hom "juice;" Greek huetos "rain," huein "to rain;" Latin sugere "to suck," succus "juice, sap;" Lithuanian sula "flowing sap;" Old Church Slavonic soku "sap," susati "suck;" Middle Irish suth "sap;" Old English seaw "sap").

இப்படி இந்தையிரோப்பிய மொழிக்குடும்பத்தில் வருவதால் திராவிட மொழிக் குடும்பத்தில் சப்பும் வினை இல்லையென ஆகிவிடுமா? இரு குடும்பங்களுக்கும் முன் ஏதோவொரு தொடர்பு பெரும்பாலும் இருக்கலாமென்று பலமுறை சொல்லிவிட்டேன். இவ்வுறவை Nostratic studies என்ற துறையிற் படிக்கிறார்கள். இத்துறையில் ஆர்வமுள்ளோர் பாவணரின் தேவையை உணர்கிறார்கள். ஆனாலும் அதை மறுத்து மாக்சுமுல்லர் தான், வில்லியம் சோன்சு தான், கால்டுவெல் தான் சரி, வையாபுரியார் சொன்னதே வேதவாக்கென்று சொற்களை அணுகி, திறந்த மனத்தோடு பாராது 19 ஆம் நூற்றாண்டுத் தேற்றையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் என்னசொல்வது?! மொத்தத்தில் எல்லாவற்றையும் ”தமிழில்லை” என்பது இப்போதெல்லாம் சிலருக்கு நளினமாகி விட்டதென்று நகர வேண்டியது தான். சாப்பாட்டையே தமிழில்லையென்றால் அப்புறம் எப்பாடு தமிழில் நிற்கும்? இந்தத் தமிழை என்றைக்குக் தொலைத்து முழுகலாம்? அதைச் சொல்லுங்கள்” என்று நான் அழுத்தமாய்க் கூறினேன். 

இதற்குச், “சாப்பாடென்ற சொல் அவ்வளவு அடிப்படையான தமிழ்ச்சொல்லாக இருந்திருந்தால் அது எண்ணற்ற கல்வெட்டுகளிலும் இலக்கியவழக்கிலும் வந்திருக்கும். குறைந்தது ஏனைய திராவிட இலக்கியங்களிலாவது பதிவாயிருக்கும். அப்படிப் பதிவாயிருப்பதாகத் தெரியவில்லை. தக்காளி, மிளகாய் போன்ற சொற்கள் இன்று பண்டைத்தமிழ்ச் சொற்களாகத் தோன்றினும் அவை போர்த்துக்கீசியர் வருகைக்குப் பின்னரே தமிழில் தோன்றிய சொற்கள். சாப்பாடென்பது சப்பும் உணவுக்கு மட்டுமாவது அடையாளமாக இருந்தால் சொற்பிறப்பியலுக்கு ஏதாவது பொருளிருக்கும். இது பட்டம் விடுவது போலத் தோன்றுகிறது. பாவாணர் சொன்னாரென்பதால் மட்டும் சாப்பாடென்பது தமிழ்ச்சொல்லாகி விடுமா? சான்றுகளில்லாமல் சொற்பிறப்பியல் என்ற கற்பிதத்தின் மீது மட்டும் அமர்ந்திருக்கும் இச்சொல் முற்றிலும் நிறுவும் வரை ஐயத்துக்கிடமான அயற்சொல் என்பது என் கணிப்பு.” என்று மணிவண்ணன் மறுமொழி கூறினார். 

”கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ அகராதி ஆகா. எல்லாச்சொற்களையும் இலக்கியத்தில் தேடினால் கிடைக்காது. பானையோடுகளில் காணப்படும் பெயர்கள் அனைத்துமா சங்க இலக்கியத்தில் உள்ளன?” என்று இரா. செந்தில் கேட்டார். ”Compare சாப்பாடு - கூப்பாடு, சாப்பிட்டேன்-கூப்பிட்டேன், சாப்பாடு போடு-கூப்பாடு போடு. கூப்பாடென்ற சொல்லின்வேர் "கூவு" எனலாம். அதுபோல சாப்பாடென்பதன் வேர் "சப்பு"ஆகவோ "சாறு"ஆகவோ இருக்கலாம்”, என்று Kingsley Jegan Joseph கூறினார்.

மணிவண்ணனின் மறுமொழியைப் பார்த்த நான், ”வெறுமே இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் மட்டும் தேடிக்கொண்டிராமல் பர்ரோ எமனோவின் A Dravidian Etymological Dictionary யையும் போய்த் (பக்கம் 152 இல்) தேடிப்பாருங்கள்.1927 என்ற எண்கொண்ட பதிவில் சப்பென்ற தமிழ்ச்சொல்லைப் போட்டு, இதற்கான மற்ற திராவிட இணைச்சொற்களையும் போட்டிருப்பார். இத்தனை மொழியாரும் போர்த்துகீசியரிடமிருந்தோ, பிரெஞ்சுக் காரரிடமிருந்தோ, ஆங்கிலேயரிடமிருந்தோ சப்புதற் சொல்லைக் கடன் வாங்கினாரா? சரி, வழக்கம்போல, ”விவரங்கெட்ட” தேவநேயப் பாவாணரை நம்பவேண்டாம். (பாவாணருக்கு மதிப்புக் கொடுப்பது பெருந்தவறல்லவா? இருக்க இடங்கொடுத்தால் படுக்க இடங்கேட்பாரே? எனவே அவரை ஒதுக்குவோம்.) தமிழருக்கெல்லாம் மகராசராய்ப் பட்ட, மகாகனம் பொருந்திய, தண்டனிட்டு வணங்கத்தக்க, வெள்ளைக்காரத் துரைகளை நம்பவேண்டும் அல்லவா? தம் பொத்தகத்தில் துரைமார் சொல்கிறாரே, இது திராவிடச்சொல் என்று? என்ன செய்வது? அந்தக் கூற்றையும் தூக்கிக் கடாசலாமா?

தொடர்பில்லாமல் இருந்தாலுங் கேட்கிறேன். தமிழிலக்கியங்களும், கல்வெட்டுக்களும் தமிழிலிருக்கும் எல்லாச் சொற்களையும் கொண்டுள்ளனவா? Are they repositories of all Tamil words? அவை என்ன அகரமுதலிகளா? எங்கோ ஒரு வினையிருக்கலாம், பெயரிருக்கலாம், இடைச்சொல்லிருக்கலாம், உரிச்சொல்லிருக்கலாம், வேரிருக்கலாம். இவற்றைக் கொண்டு கொஞ்சம் ஏரணத்தோடு ஓர்ந்து பார்த்து மற்றதை ஊகிக்கத்தான் வேண்டும். எல்லா வடிவங்களையுமா இவற்றில் எடுத்துப் போட்டிருப்பார்கள்? ’சப்’ என்ற ஒலிக்குறிப்பு (onomatopoeic sound) இந்தையிரோப்பியனுக்கு மட்டுமா வரும்? ஒரு திராவிடனுக்கு வரவே வராதா? நாமென்ன ஊமையா? சப்பென்பதற்கு மாறாய் ’உள்’ என்றா நாம் நாக்காற் சப்பிக்கொண்டிருப்போம்? ஏன் இப்படியோர் விதப்பான சிந்தனை வருகிரது? 

பொது அவையில் இப்படிக் கேட்கக்கூடாது தான். இருப்பினும், இடக்கரடக்கற் சொற்களான கெட்ட வார்த்தைகள், பாலுறுப்பைக் குறிக்கும் சொற்கள் என்றவையெல்லாம் தமிழ் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் வந்துள்ளனவா? சரி, இவை வேண்டாம், பொதுப்படையான, எங்களூர்ப்பக்கம் புழங்கும், இலக்கியங்களில் வந்தேயிராத, சொற்களைப் பட்டியலிடவா? நண்பர்களே! நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். ”அது தமிழில்லை, இது தமிழில்லை” என்று சொல்லி, இருப்பதையும் தொலைத்துவிட நாமேன் இவ்வளவு முனைப்போடு இருக்கிறோம்?” எனக் காரமாய்க் கூறினேன். 

காரம் பேசியதைக் குறைத்து அக்காரம் சேர்த்திருக்கலாம். ஆனாலும் வந்துவிட்டது. ”எதையெடுத்தாலும் தமிழில்லை” என்போரின் தாக்கம் இணையத்திற் கூடுவதைக் கண்டெழுந்த சினம் எல்லைமீறிய போது காரங்கூடிவிட்டது. மேற்சொன்ன தாக்கத்தில் தமிங்கில இளைஞர் இன்று தடுமாறுகிறார். பட்டிமன்றம், பாட்டரங்கம், பேச்சரங்கமென்றே கதியாகிப்போன தமிழறிஞர் பலரும் ஆய்வுப் புலங்களிலும், இணையத்திலும் கணிசமான பங்களிப்புக் காட்டாதுள்ளார். காலம் மாறிவிட்டதை தமிழையாக்கள் இன்னும் உணரவில்லை. இன்னும் 1960/70 களிலேயே இருந்தாலெப்படி? சரியான தலைமை இன்று இல்லாது போனதால், ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சக்கரை போல என்போன்ற அரைகுறைகள் “தமிழில்லை” என்போருக்கு மறுமொழி சொல்லவேண்டியுள்ளது.  

”அருள்கூர்ந்து இனவெறி சொட்டும் ’வெள்ளைக்காரத் தொரைமார்’ போன்ற சொற்றொடர்களை இந்தக் குழுவில் புழங்குவதைத் தவிருங்கள். பேரா. எமனௌ அவர்களை நான் அறிவேன். அவர் அமெரிக்கர். பிரித்தானியத் துரைமார் பட்டியலில் அவரை இடுவதைக் கேட்டிருந்தால் நொந்திருப்பார். அவர் நூறு வயதுக்கும் மேல் வாழ்ந்த பெருமகனார். தம் வாழ்வு முழுவதும் தமக்குத் தெரியாத மொழிகளைக் கற்று அவற்றை ஆய்ந்து பதிவுசெய்வதிலேயே முனைப்பாயிருந்தவர். இப்படிப் போகிற போக்கில் சாணியடிக்கும் அளவுக்குத் தாழ்ந்தவர் அல்லர். ஆம். எனக்குப் பாவாணர் முறை மீது சற்றும் நம்பிக்கையில்லை. அவரது சொற்பிறப்பியல் முறை எப்படியாவது தமிழை ஞாலத்தின் முதல்மொழி என்று காட்டுவதன் அடிப்படையில் எழுந்தது.

தமிழ் மற்ற எல்லா மொழிகளையும் போல மனிதர்களின் மொழி. புனிதமானது அல்ல. பிறக்கும்போதே செம்மொழியாகப் பிறந்ததல்ல. ஆனால் ஒரு கட்டத்தில் செம்மொழியாக மலர்ந்தது. மற்ற எல்லா மொழிகளையும் போல அதிலும் பழையன கழிந்தன, புதியன புகுந்தன. தமிழிலிருக்கும் எல்லாச் சொற்களும் அதன் வேரிலிருந்து வந்தவை அல்ல. அதில் பல இரவற் சொற்கள் இருக்கின்றன. திருக்குறளிலிருக்கும் எல்லாச்சொற்களும் தமிழே என்ற சமய நம்பிக்கை கொண்டவர்களுடன் வாதாடுவது கடினமே. சமஸ்கிருதம் போலச் செம்மொழித்தமிழும் காலத்தில் உறைந்து மறைந்திருந்தால் அதன் சொற்களைப்பற்றி எப்படி ஆய்ந்திருப்போம்? 

நாம் இன்று எழுதிப்பேசும் தமிழ் செம்மொழித் தமிழல்ல. தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் தெருவிலும் புழங்கும் தமிழ் செம்மொழியல்ல. அது வாழும் மொழி. ஏனைய வாழும் மொழிகளைப் போல அது இயல்பாகப் பிறமொழிச் சொற்களை எடுத்துக் கொள்ளும். அப்படி அது எடுத்துக்கொண்டதற்கான அடையாளங்களைக் கல்வெட்டுக் காலத்திலிருந்தே பார்க்கிறோம்.

சப்பு என்பதிலிருந்து சாப்பாடு, சாப்பிடு என்பவை வந்தன என்பது ஊகம் மட்டுமே. அதற்குச் சான்றுகளில்லை. பெருஞ்சோறென்று எழுதத் துணிந்தவர்கள் கல்யாணச் சாப்பாடு என்று ஏன் 15 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தில் இடவில்லை என்பது எளிதாகக் கடந்து செல்லக் கூடிய கேள்வியல்ல. உண்பது என்பது அடிப்படைச் செயல். சப்புவதிலிருந்து சாப்பாடு வந்தது கற்பனை என்பது என் கருத்து. தண்ணீர் சப்பு, குடிநீர் சப்பு, என்று ஏதாவது ***எழுத்தில்*** இலக்கண வழக்கில் இருந்தனவா?

பாவாணரின் மரபு சொற்பிறப்பியல் என்பது ஊனமுற்றவர்களின் ஊன்று கோல் போல். அதை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்பதுதான் அதன் பெருங்குறை. விரும்பிய படியெல்லாம் விதிகளைக் கூட்டிக்கொண்டு எந்தவித நெறிமுறையுமில்லாமல் எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இட்டுச் செல்லும் என்பதால் அதன் மீது எனக்கும் நம்பிக்கையில்லை.

சாப்பாடு, சாப்பிடு என்பவை உறுதியாகச் செம்மொழித் தமிழில் வழக்கில் இருந்ததற்கு எந்தச் சான்றுமில்லை. ஊகங்கள் மட்டுமே சான்றுகளென்றால் நாமும் சமஸ்கிருதப் பண்டிதர்கள் போலத் தெய்வ மொழியிலிருந்து எல்லாமே வந்தன என்று பூசிக்கலாம். அது பொருளற்றது” என்று திரு. மணிவண்ணன் எனக்கு நீண்ட பாடம் படித்தார்.

அன்புடன்,

இராம.கி.


No comments: