Sunday, April 05, 2020

பைம்புலத்தார் - 3

ஆங்கிலத்தில் people (n.) c. 1300, peple, "humans, persons in general, men and women," from Anglo-French peple, people, Old French pople, peupel "people, population, crowd; mankind, humanity," from Latin populus "a people, nation; body of citizens; a multitude, crowd, throng," a word of unknown origin. Based on Italic cognates and derivatives such as populari "to lay waste, ravage, plunder, pillage," Populonia, a surname of Juno, literally "she who protects against devastation," the Proto-Italic root is said to mean "army" [de Vaan]. An Etruscan origin also has been proposed. The Latin word also is the source of Spanish pueblo, Italian popolo. In English, it displaced native folk என்று சொல்வார். ஆக, a word of unknown origin என இங்கும் சொல்கிறார்.

”பைம்புலரும் people உம்” எனக்கு நெருக்கங் காட்டுகின்றன. ஆங்கிலச் சொற்பிறப்பியலில், “எப்படி?” என்ற கேள்வியை யாருங் கேட்க மாட்டார். தமிழில் பாவாணர் கேட்பார். அதுவே மாற்றார்க்கு வியப்பாகும். பாவாணர் வழி மேலையர் வழியிலிருந்து வேறுபட, இந்த “எப்படி”தான் காரணம். 

இங்கு என் ஒரே ஐயம்  2000 ஆண்டுகளுக்கு முன் தமிழரோடிருந்த யவனத் தொடர்பு ஆகும். தொடர்ந்து அவரிங்கு வணிகம் செய்தார், நம் வேந்தரின் கோட்டைக் காவலில் கூட அவர் ஈடுபட்டார். படையில் இருந்தார். அவர் குடியிருப்புகளும், கோயில்களும் கூட இங்கு இருந்துள்ளன. ஆனால், தமிழ்ச் சொற்களைத் தம் தேசத்திற்கு அவர் கடன்கொண்டு போகவில்லை என எப்படிச் சொல்கிறோம்? எவ்வளவு கிரேக்க நூல்களை நாம் படித்துள்ளோம்? எவ்வளவு பழங்கிரேக்கச் சொற்களை நாம் ஆய்ந்துள்ளோம்? எதையும் சங்கத வழி காண்பதே நமக்கேன் வழக்கமாயிற்று?  இப் புரிதல் வந்துவிட்டாலே, ஆய்வு தொடங்கி விடும். இப்போதைக்கு நான் மேலே சொன்னதைக் கருதுகோளாய் வைத்து, இணைச் சொற்களைத் தருகிறேன்.

public health = பைம்புலக் கொழுமை,
public duty = பைம்புலக் கடமை.
republic = குடியரசு, பைம்புலம், (ப்ரதேஷ் என்பதற்குப் பைதிரம் என்று பாவாணர் பரிந்துரைப்பார்.)
publication = பைம்புல ஆற்றம்,
publicist = பைம்புல ஏற்றுநர்,
publicity = பைம்புல ஏற்றம்,
publicize = பைம்புலத்தில் ஏற்று,
publically = பைம்புலமாய்,
public spirit = பைம்புல உணர்வு

[இங்கே ஓர் இடைவிலகல். நலம் என்னாமல், எங்கும் அச்சொல் பயிலப் பட்டுங் கூட, health இற்கு இணையாய்க் ”கொழுமை” சொல்லக் காரணம் உண்டு. well-being என்பது நலம். goodness உம் நலந்தான். health என்பது வெறும் well-being ஆ? goodness ஆ? இல்லையே? அதற்கும் மேலல்லவா? நலத்தை விடக் கொழுமை விதப்பானது. உடல்நலம் என நீட்டிச் சொல்லாது விதப்பாக, சுருக்கமாகக் ”கொழுமை” புழங்குவது நம் பேச்சில் துல்லியங் கூட்டும். ஏன் இப்படிக் கூர்மையின்றி மொழுங்கையாய் நாம் பேசுகிறோம்? கொழுமைப் பயன்பாடு தமிழில் இல்லாமல் இல்லை; "கொழு கொழு என இருக்கிறான், அவனுக்கு என்ன குறை?" என்கிறோமே? அது நலப் பொருளில் தானே? அதை நீட்டுவதில் தவறென்ன? ஆனால் கொழுமை மிஞ்சினால் கொழுப்பு (அளவுக்கு மிஞ்சின் அமுதமும் நஞ்சு). கொழுமையை கொழுப்பெனின் வேறு பொருள் வந்து விடும். எனவே மைகார ஈற்றைக் கவனமாகப் பலுக்குக.] இதேபோல்,

publish = பைம்புலத்து இடு,
publisher = பைம்புலத்து இடுவார்,
populous = பைம்புல,
population = பைம்புலத்தார் (பன்மை) / பைம்புல நிறைப்பு,
populace = பைம்புலத்தார்,
populate = பைம்புல நிறை-த்தல்,
populist = பைம்புலத்தார் (மதிப்புக் கூடிய தனி ஆள்),
popular = பைம்புல

சரி நான் ஏன் பைம்புலம் என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறேன்? பல்வேறு ஆங்கிலச் சொற்றொடர்களைப் பாருங்கள்  அவற்றின் நுணுக்கமான விவரிப்பும் விதப்பும் அலாதியானவை. வெறுமே ”மக்கள், பொது” என்ற சொற்களை வைத்து முன்னொட்டும் பின்னொட்டும் பெய்து பைம்புலத்தைச் சொல்ல முற்படுவது tautology இல் தான் வந்து முடியும். அது என்ன  tautology?[எங்களின் முதலாண்டுப் பொறியியல் படிப்பில் குடிமைப் பொறியியல் (civil engineering) சொல்லிக் கொடுக்க ஓர் ஆசிரியர் வந்தார். அருமையான ஆசிரியர், ஆனால் ஆங்கிலம் அவ்வளவாக அவருக்கு வராது,

ச(/ஜ)ல்லியை விளக்க வேண்டிய கட்டம் வந்தது. ஆங்கிலத்தில் இதை road metal என்பார். எங்கள் ஆசிரியர், ”Road metal is ......"என்று சொல்லிவிட்டுக் கம்பீரமாய் எங்களை ஒரு சுற்றுப் பார்த்தார். பிறகு குரலை உயர்த்தி”.... road metal” என்றார். அவ்வளவு தான் அடுத்த செய்திக்குப் போய்விட்டார். ஏனெனில் சல்லியை விளக்கியாயிற்றாம். அதாகுவியல் (tautology) என்பது இது தான். The saying of the same thing twice over in different words, generally considered to be a fault of style e.g. they arrived one after the other in succession.] முன்னொட்டு, பின்னொட்டு, ஈறுகள் வைத்துச் கலைச்சொல் படைக்கையில் பெரும்பாலும் இதுவே நடக்கிறது. நான் அதாகுவியலைப் பெரிதும் மறுப்பவன்,

முன்னொட்டு, பின்னொட்டு வேலை என்பது செருமானிய மொழியில் அதிகம். ஒரு வாக்கியம் சொல்லும்போது முன்னொட்டைப் பிரித்து வாக்கியத்தின்  கடைசியில் கொணர்ந்து வைப்பார். பழக்கமில்லாதவர் இதுகண்டு தடுமாறிப் போய்விடுவார். தமிழைச் செருமானிய மொழி போல் ஆக்கவேண்டுமா? வியக்கிறேன். ஆழ்ந்து ஓர்ந்தால், தீநுண்மி, முள்தொற்றி போன்ற சொற்கள் எதையுமே நமக்கு விளக்கவில்லை. அவை வெறும் இடுகுறிப் பெயர்களாய் நிற்கின்றன. வெருவி என்பது கொஞ்சமாவது virus ஐ விளக்கும். அது போல் ”பொது பொதுமக்கள், பொதுமைய” என்பனவும் பெரிதாய் public, common, general என்பவற்றை விளக்கி விடா.  நீர்வீழ்ச்சி வேண்டுமா, அருவி வேண்டுமா? மகிழுந்து வேண்டுமா. சகடு வேண்டும? நேர்மின்னி, எதிர்மின்னி வேண்டுமா? முன்னி, மின்னி வேண்டுமா? நான் நூற்றுக்கணக்கான சொற்களை அடுக்கிப் போகலாம்.

public, popular, common, general, civic, national, known, communal எனப் பல சொற்களை ஆங்கிலத்தின் Roget's Thesaurus சிற்சில வேறுபாடுகளுடன் பட்டியல் இடும். இதே வேலையைத் தான் திவாகரம் முதற்கொண்டு நம்மூர் நிகண்டுகள் காலங் காலமாய்ச் செய்தன. யானைக்கு 37 பெயர்களைச் சூடாமணி நிகண்டு பட்டியலிடும். இதற்கு மேலும் சில சொற்களை மற்ற நூல்கள் சொல்லும். அவை நம் மரபில் கிளைத்தவை. பொதுவாக நம் மரபில் உள்ளவற்றிற்கு நம்மிடம் சொற்கள் அதிகமாவே இருக்கும். நம் மரபில் இல்லாதவற்றிற்கு, சொற்கள் குறைவாய் இருக்கும்.  எதைச் சரி செய்ய வேண்டும்? குறைவான சொற்களின் இருப்பைத் தானே?

கடந்த 250 ஆண்டுகளில் நம்மிடம் அறிவியல் வளர்ச்சி குறைவு. வரலாற்றுக் குளறுபடிகளால் ஒரு பெரிய இடைவெளி நம் மொழியில் எற்பட்டு விட்டது. அதைச் சரிசெய்யாது, குறைச்சொற்களை நிரப்பாது அறிவியலில் நாம் வளரவே முடியாது. இதைச் செய்ய முயல்வதே எனக்குப் பொல்லாப்பு ஆகிறது. ”பாமரச் சொற்களை விடுத்து ஏதோ இலக்கியம் படைக்க முற்படுகிறார். கவிதை படைக்க முயல்கிறார். அகரமுதலி வைத்துக்கொண்டா தமிழில் அறிவியல் படிக்க முடியும்?” என்றெல்லாம் சாடல்கள் எழும்.  என் கேள்வி எளிமையானது.  அகரமுதலி வைத்துக் கொள்ளாமலா, ஆங்கிலத்தில் அறிவியல் படிக்கிறீர்?

எனவே நம்மரபு எவ்வளவு தொலைவு வந்தது? எங்கு இடைவெளி ஏற்பட்டது? - என்பதில் நமக்கு ஓர் ஆழ்ந்த தெளிவு வேண்டும். நமக்கு இன்று தெரிந்த 3000 சொற்களை வைத்து, முன்னொட்டு, பின்னொட்டு, ஈறுகள் சேர்த்தால் 250 ஆண்டு இடைவெளியைச் சரிசெய்து விடலாம் என்பது வெறும் கற்பனை. ஒரு வகையான களிமண் குதிரையில் பயணம் செய்யும் போக்கு. ஒரு மழையில், காற்றில் அது கரைந்துவிடும். கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுன்றம் போக ஆசைப்பட்டானாம். அண்மைக் கால அறிவியல் வளர்ச்சி  மேலும் மேலும் விதப்பித்தல் (speciation), வகைப் படுத்தல் (classification) என்பதில் தான் வளர்ந்தது. நாமும் விதப்பித்தல், வகைப்படுத்தல் மூலம் நம் சொல் தொகுதியைக் கூட்டினால் தான் மேலே வளரமுடியும். இதைச் செய்ய  ”பொது பொதுமக்கள், பொதுமைய” என்ற பாதை சரிவராது.

ஆங்கில எழுத்தாளர் சியர்ச்சு ஆர்வெல் தன் ”1984” புதினத்தில் இது போன்ற ஒரு மொழியை விவரிப்பார். good, supergood, plusgood, doubleplusgood என்று  முன்னொட்டுகளால் சொற்களைப் படைக்கும் தந்திரத்தை அங்கு  சொல்லி யிருப்பார். அது ஓர் இயந்திர மொழியையே உருவாக்கும். தீநுண்மி, முள்தொற்றி போன்றவை  supergood, plusgood, doubleplusgood என்ற வகைச் சொற்களைச் சார்ந்தவை. அப்படிச் சொற்களைத் தமிழில் உருவாக்கினால் ஒரு நாளும் தமிழில் அறிவியல் பரவாது. நாம் காலத்திற்கும் அடிமையாய் இருப்போம்.

அந்தத் தடந்தகை  (strategy) நம்மைக் கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம், கேளிக்கை தவிர வேறு எதற்கும் வல்லமையுள்ளதாய் ஆக்காது. நான் சொல்வது சிலருக்கு வலிக்கலாம். ஆனாலும் என் கருத்தை என் பக்கத்தில் சொல்ல எனக்கு உரிமையுண்டு. பழம் இலக்கியங்களைப் படிக்காமல், வட்டார வழக்குகளை அறியாமல், மற்ற தமிழிய மொழிகளைச் சேர்த்துக் கொள்ளாது, இந்தையிரோப்பிய மொழிச் சொற்களுக்கும், நம் சொற்களுக்கும் உள்ள உறவுகளை ஆய்வு செய்யாது, மொழித்திரிவு விதிகளை அறிந்துகொள்ளாது, புதுச்சொல்லாக்கம் செய்வது குதிரைக் கொம்பே என்பதில் நான் தெளிவாய் இருக்கிறேன்.  என் சொல்லாக்க முறையின் அடிநாதம் அதுதான். ”ஆங்கில ஒலிப்பில் சொல் படைக்கிறேன்” என்பது அறியாப் பேச்சு. I have stated my case.

முடிப்பதற்கு முன் 2 வாக்கியங்களை உங்களுக்குப் படிக்கத் தருகிறேன். ”The general opinion in the society is that most of the common people do not adhere to the lock-down” என்ற வாக்கியத்தை, “பொதுமக்களில் பெரும்பாலோர் ஊரடங்கோடு ஒட்டுவதில்லை என்பது குமுகத்தில் நிலவும் பொதுக்கருத்தாகும்” என்ற மொழிபெயர்ப்பை விட, ”பொதுமக்களில் பெரும்பாலோர் ஊரடங்கோடு ஓட்டுவதில்லை என்பது குமுகத்தில் நிலவும் கணக் கருத்தாகும்” என மொழிபெயர்த்தால் இன்னும் தெளிவான பொருள் தருவதாய் நான் நம்புகிறேன்.   அதேபோல் ”popular democracy is more preferable to the totalitarian rule" என்பதை, “பைம்புல மக்களாட்சி  முற்றாளுமை ஆட்சியை விட அதிகம் உகந்தது” என்பது எனக்குச் சிறந்ததாய்த் தெரிகிறது.

அன்புடன்,
இராம.கி.

No comments: