Monday, May 27, 2019

நாத்தி - 2.

இராம.கி.யின் இரண்டாம் விளக்கம்

நுந்துதல் என்பது முந்துதலின் போலி. முன்வருதல்/முன்தள்ளுதல் என்று பொருள். நுந்துதல்>நந்துதல் என்ற அடுத்தவளர்ச்சியில், வளர்தல், தழைத்தல், பெருக்குதல். விளங்குதல், செருக்குதல், என்றும் பொருள்கள் பெருகும். நாளும் வீட்டில் வளர்ந்த நம் மகன் நந்தன் எனப்படுவான். நாளும் வளர்ந்த நம் மகள் நந்தனி/நந்தனை எனப்படுவாள் (அகரமுதலிகளைத் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் சொல்கிறேனென நம்பவேண்டாம்.) நந்தினியை நந்தி என்றாலும் பொருள் வந்துவிடும். பெருத்து, முன்வந்திருக்கும் வயிற்றைக் கொண்ட மாடு நந்தி/நந்து. நந்துகளை மேய்ப்பவன் நந்தன். நந்தனுக்கு இடையனென்றும் பொருளுண்டு. திருநாளைப் போவாரான நந்தனார் கூட ஓர் இடையனாகலாம். திருப்பாவையின் முதல்பாட்டில் ”சீர்மல்கும் ஆய்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்” என்பது ஒரு வரி. நந்தகோவன் இங்கே நந்தகோபனாகிறான். (நந்தர்களின் தலைவன்.) நந்தல்= வளர்க்கப்படுதல் நந்தல்வனம்>நந்தவனம்= மாந்த முயற்சியில் வளர்க்கப்பட்ட வனம் (நந்தவனத்தையும் வடசொல் எனச்சிலர் எண்ணுவார். பாதிக்கு மேலான தமிழ்ச்சொற்களை போகிற போக்கில் வடமொழிக்குத் தானமளிப்போர் நம்மில் அதிகம் எனும்போது, பேசாது இருந்தால் தப்பு.)

இப்போது நந்தனுக்கு/மகனுக்குக் கல்யாணமாகிறதென வையுங்கள். வந்துசேரும் மருமகள் தன்கணவனின் தமக்கை/தங்கையை உளப்பாட்டுப் பன்மையில் ’நம்’ போட்டு நம்நந்தி>நந்நந்தி என்றழைத்தால் தவறா? (ஈழத்தலைவர் பிரபாகரனை அவருக்கு உறவிலாத எத்தனையோ பேர் தம்பி என்றாரே? அது தவறா?) நந்நந்தி>நந்நாந்தி>நந்நாந்த்ரி என்று சங்கதத்தில் ஆவதும், நநந்தா எனப் பாலியில் ஆவதும், நநத் என்று சூரசேனி/ காரிபோலி/ இந்தியில் ஆவதும் நம்மைக் குழப்பிவிடுமா? அவற்றின் வேரை மோனியர் வில்லியம்சு எங்காவது குறித்திருக்கிறதா? இல்லையே? நாந்தி நீண்டு நந்நாந்தி ஆனதா? அல்லது நந்நாந்த்ரி திரிந்து நாத்தி ஆனதா? இதற்குச் சான்று எங்கே? அதெப்படி முதல் நந்நை வெட்டி நம் சொல்லை ஆக்கமுடியும்? அது ஏரணத்திற்குப் பொருந்தி வருமா? தலைகீழாய் ஓர்ந்துபார்த்தால் பொருந்துகிறதே? ஏனிப்படிக் கொஞ்சமும் பெருமிதமின்றி நடந்து கொள்கிறோம்? நம் வீட்டுச்சொல்லை வெளியார்சொல் என்று சொல்வதில் அவ்வளவு நாட்டமா? (வடமொழிக் குழப்பத்தைக் கீழே விளக்குவேன்.)

மேற்சொன்ன 2 விளக்கங்களின் படி பார்த்தால், நாத்தனார் என்ற சொல் தமிழ் தான். இனி இராம.கி.யின் மூன்றாம் விளக்கத்திற்கு வருவோம். இதற்குள் போகுமுன் கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம். ஈ என்பது தன்மையையும், ஊ என்பது முன்மையையும், ஆ என்பது படர்க்கையையும் குறிக்கும் தமிழ்ச் சுட்டடிகளாகும். இச்சுட்டடிகள் நெடிலாய் மட்டுமின்றிக் குறிலாயும் பயன் படுகின்றன தன்மைச் சுட்டடியான ஈ>இ யோடு, அங்காத்தல் ஒலியான அகரஞ்சேர, பேச்சுவழக்கில் அது ஏ>எ எனத்திரியும். தவிர, இகர உயிரோடு யகரமெய் ஏறிப் போலியாய் ஒலிக்கக்கூடிய காரணத்தால், இகர/ஈகார/ எகர/ஏகாரங்களோடு, யகரமெய் முன்னூர்வதும் தமிழர்க்குள்ள பழக்கமே. நாளடைவில் ஆகாரஞ் சேர்ந்த யகரமும், எகர உயிருமே தன்மையை உணர்த்தின. இவற்றின் ஈற்றில் மூக்கொலியேறி யான், என், யாம், எம் போன்ற சொற்கள் எழுந்தன. னகரவீறு ஒருமையையும், மகரவீறு பன்மையையும் குறிக்கும். ய்>ஞ்>ந் எனுந்திரிவும் தமிழிலுண்டு. யான் என்பது ஞான், நானெனத் திரிவது இதுபோல் திரிவாற்றான். மலையாளத்தில் பயிலும் ”ஞான்” தமிழில் வழக்கற்றுப்போனது. ”யாம்” நாமெனவுந் திரியும். ”யாம்” இயல்பான தன்மைப்பன்மையையும், ”நாம்” உளப்பாட்டுப் பன்மையையும் குறிக்கும்..

ஊ>உகார முன்மைச் சுட்டடியில் மூக்கொலிசேர, நூ>நு, நூன்>நுன் எழுந்தன. நூ, நூன், நூம் என்பன நீ, நீன், நீம் எனவும் திரியும். நாளடைவில் நுகர உயிர்மெய் வந்தாலே முன்னிலை உணரப்பட்டது. பல்வேறு உறவுச் சொற்களில் இதைக் காணலாம். நும்பின்>நும்பி>நொம்பி, நுமந்தை>நுவந்தை>நுந்தை>நொந்தை, நுமண்ணன்>நுவண்ணன்>நுண்ணன்>நொண்ணன், நுமையன்>நுமயன்>நுவயன்>நொய்யன் = உம் தமையன், தந்தை, தலைவன், நுமக்கை>நுவக்கை>நுக்கை>நொக்கை (நொக்கா என்றுஞ் சொல்லப்படும்.)  நுமங்கை>நுவங்கை>நுங்கை>நுவ்வை= உன்தங்கை போன்றன எடுத்துக்காட்டுகளாகும். (அக்கை = தன்னில் பெரியவள். அங்கை = தன்னில் சிறியவள்.) நிங்ஙள் மலையாளம்; க,து, கோத = நிம்; தெ. ஈறு, மீறு; து இரு, மிரு; கொலா நிர், நா. நிர்; பர் இம், கட இம்; கோண் இம்மக் நிம்மக், நிமெக்; கூ ஈறு; குவி மீம்பு, குரு நீம்; மால நம் பிரா நும். மேற்சொன்ன சொற்கள் ஞுகரப்போலியிலும் வரலாம். இன்னுஞ் சிலர் இதை ஙுகரமாய்ப் பலுக்குவதுண்டு.

பேச்சுவழக்கில் நொப்பா/ஞொப்பா/ஙொப்பா என்றும், நொம்மா/ஞொம்மா/ஙொம்மா என்றும், நோத்தா/ஞோத்தா/ஙோத்தா என்றும், நொ(/ஞொ/ஙொ)ண்ணன் என்றும், நொ(/ஞொ/ஙொ)க்காள் என்றும் முன்னிலையில் இருப்பாரின் உறவினர் அழைக்கப்படுவது தென்பாண்டியில் மிகுதி. நும்வீடு என்பது நுவ்வீடென்றும், நுன்நாடு என்பது நுன்னாடென்றும் மெய்ம்மயக்கங் கொள்வதும் இவ்வழிப்பட்டதே. தன்மையையும் முன்னிலையையும் சேர்த்து உளப்பாட்டாய்ப் பேசுகையில், எம்மும் நும்மும்  நம்மாய் மாறும். நாமும் (முன்மையும், தன்மையும் சேர்த்த.) உளப்பாட்டுப் பன்மையைக் குறிப்பதே. யாயும் ஞாயும் யாராகியரோ? - என்பதில் வரும் யாய் என்பது என் தாயையும், ஞாய் என்பது உன் தாயையுங் குறிக்கும்.

அடுத்து, ’அகம்’ என்ற சொல் பற்றிப் பார்ப்போம். நம் வீட்டில் பிறந்த மகளுக்கும், மகனின் மனைவியாய் வந்துசேரும் மருமகளுக்கும் (அவள் மருவிய/தழுவிக்கொண்ட மகள்) பொதுவான அகம் என்பது வீட்டைக் குறிக்கும். அகத்தின் வேர்ச்சொல் அள் என்பதே. மாந்த வாழ்வின் தொடக்க காலத்தில் மலையிலோ, மண்ணிலோ பள்ளம் பறித்தே வீடு கட்டினார். தொள்ளல்= துளைபடல். அள்கு>அகு; அகுதல்= தொள்ளுதல்; அகுத்தல்= தோண்டுதல்; அகம்= தோண்டப்பட்ட இடம். எம்மகம், உம்மகம், நம்மகம் என்பன சுட்டடிசேர்ந்த கூட்டுச்சொற்கள்.

அடுத்து, பேச்சுவழக்கில், சொன் முதல், இடைகளில் வரும் மகரமானது வகரமாய் மாறுவது பல சொற்களில் நடந்துள்ளது..பெரும்பாலான வகரச் சொற்களின் வேர் கூட மகரத்திலேயோ, பகரத்திலேயோ தொடங்கும். தவிர யாப்பு விதிகளின் படி, மகரச் சொற்களுக்கு வகரச் சொற்களை மோனை ஆக்கலாம். ம>வ>0 (மகரம் வகரமாகிப் பின் இல்லாது போவது) என்பதும் ப>வ>0 என்பதும் மொழியியல் சொல்வளர்ச்சியில் ஒரு விதப் போக்கு. எனவே தன்மைப் பன்மையில் எம்மகம்>எவ்வகம் என்றும், உம்மகம்>உவ்வகம் என்றும், நம்மகம்>நவ்வகம் என்றுந் திரிவது தமிழ்ப்பழக்கமே. இச்சொற்களின் வளர்ச்சியைக் கீழே பார்ப்போம்.

ஒரே அகத்தைச் சேர்ந்த மருமக்களை ஓரகத்திகள் என்பது போல், நவ்வகஞ் சேர்ந்தவள் நவ்வகத்தி. (மகர ஈற்றுச் சொற்கள் புணர்ச்சியில் அத்துச்சாரியை பெறும்.) நவ்வகத்தி, நம்வீட்டின் மகளாவாள். மருமகள் பார்வையில் இவள் கணவனின் சோதரி. அத்தையின் மகள். நகரத்தார் குல மருமக்கள், கணவன் சோதரியை அத்தைபெண்டிர் (= அத்தை மகள்)> அயித்தைபெண்டிர்> அயித்தியாண்டி என்பார். கொள்ளல் வினை கொழுதலாகும். கொண்டவன் கொளுநன்>கொழுநன். கொழுநவன் என்ற சொல்லே  கொணவன்> கணவன் ஆகிறது. கொழுநன், கணவன் என்ற சொற்கள் ஆணாதிக்கக் குமுகாயச் சொற்களே. மனைவி தன் கணவனை அத்தான் என்பாள். அ(ய்)த்தையை ஒட்டிவந்தது. அ(ய்)த்தையன். பின்ளாளில் அய்த்தான்> அத்தான் ஆயிற்று. இன்று சில வட்டாரங்களில் இது அத்தை மகனையுங் குறிக்கும். கொழுநனின் உடன்பிறந்தான் கொழுந்தன். (அதாவது கொழுநன் ஆகக் கூடியவன்). இதேபோல் ஆண்மகன் தன்மனைவி சோதரியைக் கொழுந்தி என்றழைப்பான். (அதாவது மனைவி ஆகக் கூடியவள்.)

இங்கே நம் என்பது மருமகளும், அவளல்லா வீட்டு உறுப்பினருஞ் சேர்த்த உளப்பாட்டுப் பன்மையைக் (inclusive plural) குறிக்கிறது. முடிவில் நவ்வகத்தி> நவத்தி>நாத்தி என ஆவது பலுக்கல் எளிமை கருதியாகும். நம்மில் ஒரு சிலர் அகத்தை ஆம் என்கிறாரே? அதைநினைந்தால் இதுபுரியும் பகல்>பால், அகல்> ஆல் என நூற்றுக்கணக்கான சொற்களுண்டு..,நான் புரிந்துகொண்ட வரை நாத்தி என்பது தமிழே. vadina என்று தெலுங்கிலும், nadini என்று கன்னடத்திலும், naththuun என்று மலையாளத்திலும், சொல்லப்படும். நாத்தனார், நாத்தூண் நங்கை என்ற சொற்கள் இதிலிருந்து எழ, மேலே முதலிரு விளக்கங்களில் நான்சொன்னதைப் படியுங்கள்.

மேற்சொன்ன இராம.கி.யின் 3 விளக்கங்களிலும் முதலிரு விளக்கங்களைப் பெரிதும் பரிந்துரைப்பேன். மூன்றாம் விளக்கத்தை நுணவ உகப்பில் (minority choice) கொள்ளலாம். இந்த இடுகைத்தொடரில் முதலில் சொன்ன மற்றோரின் 4 விளக்கங்களுக்கான கிடுக்கத்திற்கு (criticism) வருவோம். ”ஒரு குடியிற் பிறந்த பெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபு ஆகும்” என்று சொல்வதே ஆண் ஆதிக்கம் ஏற்பட்டு, இதே போன்று, ஒரு குடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாள் ஆதலின், ’நாற்று அன்னார்’ எனும் பொருண்மையிற் கூறல் ஏன் பொருந்தாதென்று பார்ப்போம். இதையறிய பழந்தமிழர் வாழ்க்கை முறைகளை அறிய வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

ந.குணபாலன் said...

ஙொப்புராணை சத்தியமா நா காவல்காரேன் என்ற பாடலில் வரும் முதற் சொல்லின் சரியான விளப்பம் இப்போது தெரிந்துகொண்டேன்.

ஈழத்துப் பேச்சுவழக்கில்;

கொப்பன்/கொப்பர்/கொய்யா/கொப்பா
கோச்சி/கோத்தை/ கொம்மா
கொண்ணன்
கொக்கை/கொக்காள்/கொக்கா
கொம்பி
கொங்கச்சி
கொம்மான்
கொத்தார்/கொத்தான் என்று புழங்கும் சொற்களெல்லாம் ஒருகாலத்தில் "ஙொ" என்று ஆரம்பித்து பின் "கொ" என மாறியிருக்க வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தாயை ஆச்சி என்றும், தகப்பனை அப்பு என்றும் அழைத்தனர். தண்டவாளக் தடவைகளில் " கோச்சி வரும் கவனம்" என்ற எச்சரிக்கப் பலகை நட்டிருக்கும். அதில் "கொப்பரும் வருவர் கவனம்" என்று பகிடியாக எழுதப்பட்டும் இருந்திருக்கிறது.