Thursday, February 14, 2019

தானம் தவமிரண்டும்

"தியானம், தவம் இவ்விரண்டும் தமிழ்ச்சொற்களா? 'தானம் தவம் இரண்டும் தங்கா'வென வள்ளுவர் குறிப்பிடும் சொற்கள் மேற்கண்ட சொற்களுக்கு இணையானவை தானா?" என்று சொற்களம் முகநூல் குழுவில் கேள்வி யெழுந்தது. இதற்கான என் மறுமொழி நீண்டது. தவிர,

”தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
 வானம் வழங்காது எனின்”

என்ற, நீத்தார்பெருமையின், 19 ஆம் குறளுக்குப் பெரும்பாலான நூல்களிற் கொடுக்கப்படும் உரையிலிருந்து நான் வேறுபடுவேன். முதலில் தானம், தவமென்பவற்றின் சொற்பிறப்பைப் பார்ப்போம்.

பட்டறியும் காட்சிகளைச் சில அடையாளங்களோடு பொருத்தி நாம் மூளையின் நினைவகத்தில் பதிகிறோம். மூளையென்பது, மேல் அடி எனும் பகுதிகள் கொண்டது. மேல்மூளையில் நினைவகமும், அடிமூளையிற் கட்டுமையமும் உள்ளன. மூளைப்பதிவுகளை மீள்கொணர்வதே (முன்>) முன்னல், (உல்>உள்>) உள்ளல், (முன்>உன்>உன்>) உன்னல், (உல்>ஒன்> ஒன்று>) ஒன்றல், (உள்>ஒர்>ஓர்>) ஓர்தல், (கள்>கண்>) கண்ணல், (கல்>கரு> கருது>) கருதல், (செ>செத்து>சித்து>சிந்து>) சிந்தனை, (துல்>துன்>) துன்னல்/துன்றல், (முன்>நுன்>நின்>) நினைதல் போன்ற சொற்களால் உணர்த்தப் படுகிறது. பொதுவாகப் பொருந்தலையும், விதப்பாய் வேறுபொருள்களையும் இவற்றடிப் பிறந்த பன்னூறு சொற்கள் குறிக்கும். இவை எல்லாவற்றையும் சங்கதப்படுத்தியே பொருள்காண்பது நம்மை அடிமைத்தனத்திற்கே இட்டுச் செல்லும். எது முந்தி என்பதில் ஒரு சிலர் குடுமிப்பிடிச் சண்டை போடலாம். அது வேறு கதை.

மோனியர் வில்லியம்சு பார்த்தால், ஆத்மனே பாதப் படி, மந்நெனும் சங்கதத் தாது 8.4 ஆம் வகை சேர்ந்ததென்றும், பாணினியின் தாதுபாடப் படி, xxx, 9; xxv, 670 இன் வகைப்பட்டதென்றுஞ் சொல்லும். இதன் பொருள் to think, believe, imagine, suppose, conjecture என்பதே. இதன் வழி சங்கதச்சொற்கள் பல. மந, மநந, மநஸ், மநு, மநுஷ், மநோ, மந்த்து, மந்த்ர, மந்த்ரி போன்றவையும் பிறவுமாகும். மந்நுக்கும் முந்தையதாய் முல்*>முன்>மன் எனும் வேரைத் (முன்-னல் வினையைத்) தமிழ்ச் சொற்பிறப்பியல் சொல்லும். (”வேறு பல முன்னிய விரகறி பொருந - பொருநராற்றுப்படை 3) கன்னடத்திலும் முந்நு உண்டு. ஞாவகம் கொள்ளுங்கள். தமிழின் மொழியீற்று னகரம், நகரத்தின் போலி. ”வெரிந்” தவிர்த்து சொல் முடிவில் னகரமே ஈற்றாகும். இதுபோல் மு-வும் நு வும் சொல்தொடக்கப் போலிகள்.’ மன்>மன்னு, மனம்/மனசு, மனனம், மன்>மான்>மாந்து, மாந்தன், மந்திரம், மந்திரி என்பவற்றைத் தமிழென்றே கொள்ளலாம். மன்னுந் திரம்(>திறம்) தமிழில் மந்திரமாகும்.

முன்சொன்னதுபோல் துல்>துன்>துன்னல்>துன்றல், பொருந்தலைக் குறிக்கும். துல்>தல்லு-தல்= பொருந்தல், புணர்தல். துல்>தல்>தல்லை>தலை = உடம்போடு பொருந்தியது. ஒரு நீளத்தண்டில் 2 பக்கம் இருப்பதும் தலையே. முகமுள்ள தலை கவனம் பெறும். வாலிருப்பது கவனம் பெறாது. பொருந்தலால், தலைக்கு இடமென்றும் பொருளுண்டு. “வளித்தலைஇய தீயும்- வளியின் பாற்பட்ட தீயும்” என்பது புறம் 2:4; ”மலிர்புனல் தலைத் தலைஇ”- பரி. 6:3; ”நனந்தலை நல்லெயில்”- புறம்.15, அருவா வடதலை என்பது இற்றை வேலூர், சித்தூர், நெல்லூர் மாவட்டங்களைக் குறிக்கும். சீத்தலைச் சாத்தனார், சீத்தலையைச் சேர்ந்தவர். பேட்டைவாய்த் தலை= சிராப்பள்ளிக்கு அருகிய ஊர். ”தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்தாங்க”- கம்பன் பாட்டு. துல்>தல்>தல்லம்>தலம், இடத்தைக் குறிக்கும். பல வளங்கள், மக்கள், விலங்குகள் பொருந்தியவிடம், தலம் எனப்படும். இது ஸ்த்லமென வடக்கே திரியும். தலம், தளமுமாகும். தளத்தைத் தளியென்பார். கோயிலெனும் விதப்புப் பொருளும் பெறும்.

தலவாடம்>தளவாடம்= குறிப்பிட்ட வேலைக்குப் பொருந்துங் கருவி (tool). ஒன்றை இன்னொன்றோடு பொருத்துவது/கட்டுவது தளைத்தல். யாப்பில் விதவிதமாய்ச் சீர்கட்டுவது தளை. தல்லு>தழுவு-தல்= பொருந்தல்; ’தமிழ் தழீய சாயகவர்’- சீவக, 2026. தல்>தருகு-தல் என்பது ஓரிடத்தில் பொருந்துவது. தல்>தல்ங்கு>தங்கலைக் (= இருத்தல், வைகல்) குறிக்கும். நாம் ஒன்றில் மேல் தங்குகிறோம். அது நம்மைத் தங்குகிறது. தங்கு>தாங்கு>தாங்கல்; தங்கு> தஞ்சு>தஞ்சம்= அடைக்கலம். பொருந்திய பின் அதற்கும் மேம்படல் தருக்கல் ஆகும். தல்>தருக்கு= மேம்படல், மிகுத்துக் கூறல். தருக்கு>தருக்கம்= சொல்லால்/பொருளால்/பேச்சால் ஒருவர் இன்னொருவரில் மேம்படுவது. தள்>தள்>தள்+ந்+து= தண்டு>தண்டல்= சேர்த்தல், திரட்டல், இணைத்தல்; இதே போல் தாணுதல் = நிலைபெறுதல்;

தானு>தானித்தல் (அல்லது தானு>தாணு>தாணித்தல்)= பதித்தல்; த(ல்)ந்து> தந்து= கயிறு. தல்+ம்+பு= தம்பு>தம்புதல்= கட்டுதல். தம்பு>தம்பம்>ஸ்தம்பம்= (ஏதோவொரு விலங்கை அல்லது பொருளை நகர விடாது) கட்டும் தூண். தல்>தலு>தறு>தறு-தல்= கட்டல் தறு>தறை>தறை-தல்= ஆணியடித்து இறுக்கல். தன்னுதல், தன்றுதல், தான்றுதல் போன்றவையும் பொருந்தல் பொருள் கொண்டவையே. தன்>தனை என்பது எண்ணிக்கை, அளவைப் பொருத்திச் சொல்வது. இது எத்தனை மணங்கு?, எத்தனை படி, எத்தனை சதுர அடி, எத்தனை மாத்திரி (metre), எத்தனை எண்ணிக்கை என விதவிதமாய் விரியும். இத்தனை. அத்தனை என்றுஞ் சொல்கிறோம். இனித் தான்>தானம் என்பது இடங்குறிக்கும் சொல். இது பூதி (physical) இடத்தையும் சிந்தனை இடத்தையும் குறிக்கும்.

[ஆங்கிலத்தில் வரும் think (v.) Old English þencan "imagine, conceive in the mind; consider, meditate, remember; intend, wish, desire" (past tense þohte, past participle geþoht), probably originally "cause to appear to oneself," from Proto-Germanic *thankjan (source also of Old Frisian thinka, Old Saxon thenkian, Old High German denchen, German denken, Old Norse þekkja, Gothic þagkjan) என்பதுங்கூட நம்முர்த் துன்னலோடு தொடர்புடையதாய்த் தெரிகிறது/] .

ஒரு எண்ணைக் குறிக்கும்போது ஒன்றாம் தானம், பத்தாம் தானம், நூறாம் தானம் .....என்று பலவாறாய்ச் சொல்கிறோமே அந்த place இற்கும் இதே சொல் தான். இன்னும் போய் இந்துத்தானம் (hindustan), பாக்கித்தானம் (Pakisthan) என்றெலாம் சொல்வதும் இதே பொருள் தான். (இந்தத் தானத்தோடு ஈகை, கொடை என்று பொருள்தரும் தானத்தை அருள்கூர்ந்து குழப்பிக் கொள்ளாதீர். இரண்டும் வேறுபட்டவை. இரண்டையும் குழப்பிக்கொள்ளும் வேலையய்த் தான் பெரும்பாலான உரையாசிரியர் செய்துள்ளார்.) சிந்திப்பது தொடர்பாய், இதே பொருந்தற் பொருளில் தானமென்ற தமிழ்ச்சொல்லின் இடையே யகரஞ் சேர்த்துத் த்யானம் என்று சங்கத்தில் சொல்வார். (ஊற்றுச்சொல் எதுவெனத் தெரியாது இது சங்கத வழிப் பட்டதென எண்ணிக் கொள்வோம்.) ஒரு குறிப்பிட்ட சிந்தனையிடத்தில் ஆழ்வது என்றே பேச்சுவழக்கில் த்யானம் புரிந்துகொள்ளப் படுகிறது. காட்டாக சிவனை நினைத்து, “நமசிவாய” என்றோ, ”சிவசிவ” என்றோ திரும்பத் திரும்பச் சொல்லி எண்ணிக் கொண்டிருப்பதும் த்யானம் தான்,. அலைபாயும் மனத்தை வெவ்வேறு சிந்தனைகளில் மூழ்கவிடாது குறிப்பிட்ட சிந்தனையில் நிலைநிறுத்துவதும் தானித்தலே. (சங்கதத் தாக்கத்தில் இதைத் த்யானிப்பது என்பார்.)

[அடுத்த வளர்ச்சி சற்று நுணுக்கமானது உடல் என்பது ஐம்பூதங்களால் ஆனது ”இந்த உடலின் இயக்கமே உயிர்” என்பது பொதுவான உலகாய்தப் புரிதல். ”உடல் வேறு, உயிர் வேறு. இரண்டுஞ் சேரும்பொழுதே இயக்கம் நடை பெறுகிறது” என்பது ஆதனியற் (ஆன்மீகப்)_ பார்வை  ஆதன் = உயிர் = ஆன்மா) தமிழர் நெடுநாட்கள் முன்னேயே ஆதனியற் பார்வை கொண்டுவிட்டார்.. உயிரும் மெய்யும் பொருந்தியது தல்>தன் எனப் படும். அதாவது தன்மைப் பொருளைத் தாமரையிலை நீர் போல் படர்க்கைப் பகரப்பெயராய்ச் சொல்லப் படும். யான்/ஞான்/நான் என்பது முதல்நிலைப் பகரப்பெயர். தன்>தான் என்பது யான்.ஞான், நானைப் படர்க்கைப் பார்வையில் சொல்லும் பகரப்பெயர். தன்+உ என்பது தனுவாகித் தன்னுடலைக் குறிக்கும். இன்னும் விரிந்து தன்மை/தனம் என்ற சொற்கள் இயல்பு, குணம் போன்றவற்றைக் குறிக்கும். தன்/தனு என்று உயிர்/உடலைப் பிரித்தபின் தனித்தலுக்குப் பிரித்தல் பொருளும் வந்துவிடும்.]

இனித் தவத்திற்கு வருவோம். துல்>துள்>தள்>தள>தளதளப்பு என்பது ஒளிரலைக் குறிக்கும். துல்>துலகு>துலங்கு>துலக்கு>துயக்கு என்பதும் விளக்கம் தான். இவ்வரிசையில், லகரம் ளகரமாயினும் அதே பொருளே. இனித் தள்>தள>தழ>தழலாகும். இது உள்>அள்>அழல் போன்றதே. தழல் இன்னும் திரிந்து தணலும் ஆகும். அடுத்து தழல்> தழலி>தகலி>தகழி>தகழிச்சி என்பது கருப்பூரத்தைக் குறிக்கும். குழ>குக, மழ>மக என்பது போல் தழதழ என்பது தகதக என்றும் பலுக்கப்படும். துல்கு>துகு>திகு>திகழ் =என்பது திங்களைக் குறிக்கும். திகழ்>திகழி>திகதி என்பது சூரியமானக் கணக்கின் படி ஒளிதரும் நாட்களைக் குறிக்கும். வேறுவகையில் சந்திரமானக் கணக்கில் ஒரு திங்களுக்கு 2 பக்கம், அதை சொக்கொளிப்பக்கம் (Suklapaksha), கருநப்பக்கம் (krishnapaksha) என்று இரண்டாய்ப் பிரிப்பர். ஒவ்வொரு பக்கத்திற்கும் 15 திதிகளாய்ச் சொல்வர். திகழ்>திகழி> திகதி>திதி என்று இச்சொல் வடிவு கொள்ளும்.

துள்>து(ல்)கு>துகு>தகு>தகதக என்பது முன்னால் சொன்னதுபோல் ஒளிர்வதற்கு மட்டுமின்றி எரிவதற்கும், வெப்பத்திற்கும் கூடப் பயன்படும் ஒலிக்குறிப்பாகும். துள்>தெள்>தெறூ>தெறுதல் என்பது சுடுதலையுங் குறிக்கும். (குறள் 1104). தகம்= வெப்பம், தகநன்= நெருப்புக் கடவுள்; எரிவு, நீர்வேட்கை; தகவு கொண்ட கல் கல்(ந்)தகம் ஆகும். கந்தகம் காந்தும் (வெப்பங் கொடுக்கும்.) ஆங்கிலத்தில் இதை sulphur என்பார். தகல்= ஒளி;  தகன்= தீ; தகனம்= எரிக்கை; தகனித்தல்= எரித்தல். தகா= பசி, நீர்வேட்கை. தகி= எரி, வெப்பஞ்செய்தல் தகதக>தக>தகு>தகி என இது இன்னும் விரியும். தகிப்பு= எரிப்பு, சுடுகை. தகு> தகம்>தங்கம்= ஒளியால் விளங்கும் மாழை ”சுடச்சுடப் பொன் ஒளிரும்” என்பார்.

மொழியிடையில் ககரமும் வகரமும் போலிகளாகும். நாகற்பழம் நாவற்பழம் என்று சொல்லப்படுகிறதே? தகு>தகம்>தவமாகும். உடலில் வெப்பத்தை உருவாக்கிக்கொள்ளும் செயலான ’தவம்’ தமிழே. பசியிருக்கும் வயிறு சுடும். அதனுட் சுரக்கும் இரப்பைக்காடி எந்தவுணவையும் செரிக்காததால், வயிற்றுச் சுவரைத் தின்று எரிச்சலைக் கொடுக்கும். எரிச்சல் நீள, உடல் வெம்மை கூடும். மற்ற கெடுதல்கள் ஏற்படும். தவு>தவம்= உடலை எரித்தாற்போன்ற துறவறப் பயிற்சி. வெப்பத்தால் உடல்வருத்தி ஐம்புலனை அடக்கல் தகு> தவு>தவம்= உடலை வருத்திக்கொள்வது. இப்படி வருந்துகையில், மனத்தை ஒருநிலைப் படுத்துவது தானம்>த்யானம். தானமும் தவமும் ஒன்று சேர்ந்து அமைவதே துறவியரின் வழி. “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” என்பது வள்ளுவம். வடக்கே போகப் போக, வகரம் baகரமாகும். தவம்>தபம் ஆவதும் வடபுல வழக்கமே. தவு> தபு>தபஸ் ஆவதும் வடபுலத்திரிவே. தவு>தவி>தவித்தல்= இல்லாமைக்கு வருந்தல். நீர்வேட்கை உண்டாதல் தவு>தவி>தவிப்பு= வருந்துகை, வேட்கை, தவு>தாவு>தாவம்= நீர் வேட்கை; தகு>தகை> என்பதும் தகு>தாகு>தாகம் என்பதும் நீர்வேட்கை தாம்.

தானம் என்பது சிந்தையில் தங்குவது, தவம் என்பது உடலில் தங்குவது. தானம் என்பது கொடையானால் (இத்தானமும் தமிழே.) அது தங்காது. நகர்ந்து விடும். தங்கும் என்ற வினைபற்றியே முன்சொன்ன 19 ஆ குறளுக்கு நான் வேறுபட்டுப் பொருள் சொல்கிறேன். இதுவரை நான்பார்த்த எந்த உரையாசிரியரும் தானத்தைத் த்யானத்தோடு பொருத்தமாட்டார். அந்தளவிற்கு ’த்யானம்’ வடமொழிச்சொல் என்ற கருத்து இங்கு பலர்க்கும் ஊறிவிட்டது. நீத்தார் பெருமையின் குறள் ஒழுங்காய் விளங்க வேண்டும் எனில், இங்கு தானத்தைக் கொடையென்று சொல்லல் தவறு.

”தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
 வானம் வழங்காது எனின்”

என்ற குறளால், ”இந்த உலகில் மழை பெய்யாதிருந்தால் பின் தானமும் (தியானமும்) தவமும் தங்காது” என்றும், :”மழையில்லையெனில் மாந்தம் அழிந்துவிடாதா? - என்றும் உணர்த்துகிறார் வள்ளுவர்.

மழையிலா உலகில் தானமும், தவமும் செய்யமுடியுமா?

அன்புடன்,
இராம.கி.

6 comments:

Ayan said...

அழகு அருமை அற்புதம் ஐயா

இரா. செல்வராசு (R. Selvaraj) said...

அருமை ஐயா. நல்விளக்கம்.

R.Shanmugham said...

அருமை ஐயா..

பாக்கியராஜ் said...

தப என்றால் கெடுதல் என்று சொற்பி றப்பு அகர முதலி சொல்கிறது. தப - வெம்மையால் கெட்டு அழிதலா ? ஐயா

இராம.கி said...

தப்பு!-தல் என்பதற்குத் தபு அடிச்சொல் என்று சொற்பிறப்பியல் அகரமுதலி கொடுத்தது தவறு, இப்படிப் பல தவறுகள் அதிலுண்டு. என் கருத்து வேறு. தள்>தள்ளுதல் = ஒன்றுவிட்டு இன்னொன்று போதல். தள் என்னும் அடி வெறும் உகரத்தைச் சேர்ப்பதற்கு மாறாய் தள்பு-தல் என்றும் ஆகி ஆதே பொரூளைத் தரலாம். அகப்புணர்ச்சியில் தள்பு>தட்பு ஆகிப் பின் மெய்ம்மயக்கத்தில் தப்பு ஆகும். தள்ளு என்பதும் தப்பு என்பது ஒரே பொருளைக் கொடுக்கும். ”தவறுதல்” பொருள் நீண்டு “கெடுதலைக்” குறிக்கும். மேலே கடுரையில் குறிக்கும் தவம்>தப (thaba) என்பதும் இந்தத் தப்பும் வெவ்வேறு சொற்கள். இருவேறு வேரில் கிளைத்தவை. தவத்தலும் தப்புதலும் வெவ்வேறானவை.

தமிழநம்பி said...

இரா.இளங்குமரனார் தானம், தவம் தமிழே என்பார்.