Saturday, January 04, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 5

தமிழ்கூறும் நல்லுலகில் இற்றைக் குமுகாயம்(society)> குமுகங்கள்(communities) என்பவை தேசிய இனம்(nationality)> இனக்குழுக்கள்(tribes) எனும் பழங்கட்டுமானத்திற் பிறந்தவையாகும். குமுக/குமுகாய நினைவுகூரல்கள் மூதாதைக்கு அமைவதால், இனக்குழுக்கோயில், பெருங்கோயில்களின் நிறுவன உருமானங்களாக (institutional manifestations) நிலைகொள்ளும். அப்படி உள்ளவையே திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகமென நடைபெறும் முருக விழாக்களாகும். அதேபொழுது முன்னோர் படைப்புகள் வேறு மாதிரி. மிஞ்சினால் இவை 7 தலைமுறைக்கு மேல் நீளாது. குலம்(clan)> கரை(giant family that started 7 generations ago)> வளவு (paternally related joint families living around a quadrangle)> குடும்பம்(joint family)> குடும்பு(nuclear family) என்றே சிவகங்கைப்பக்கம் குமுக அலகுகளமைவதால், முன்னோர் படைப்பும் அதே அலகுகளிற் கடைப்பிடிக்கப்படுகிறது.

படைப்பென்பது தனியார் குடும்பில் நடக்கும் நிகழ்ச்சியன்று; தந்தைவழி உறவினர் சேர்ந்து, கூடியாக்கியுண்டு, (பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தல்) முன்னோரை நினைவுகூரும் இது வீட்டுப்படைப்பு, பொதுப்படைப்பென இருவகைப்படும். பொதுப்படைப்பு குலம்/கரை அளவில் நடைபெறுவது. வீட்டுப்படைப்பு வளவு/குடும்ப அளவில் நடைபெறும். படைப்பிற் கலந்து கொள்வோர் முன்னோரிடம் விதப்பாக வேண்டுவதும், வேண்டியது நடந்துமுடிந்தால் செய்வதாக ஏற்றவற்றைச் செய்துமுடிப்பதும் இயல்பானவை. முன்னோரைத் தொழுவது ஒரு தனிப்பட்ட தெய்வத்தைத் (personal god) தொழுவதாகிறது. முச்சந்தி கண்டவிடமெலாம் இற்றைநகர மக்கள் பிள்ளையார் வைத்துக் கும்பிடுகிறார்களே அதுபோல அச்சப் படுவதற்கும், வேண்டுதல் கேட்பதற்குமாய் அணங்கெனும் கருத்தீடு, நாட்டுப்புற மக்களுக்கு வாய்ப்பாக அமைந்தது போலும்.

பொதுவாகப் படைப்பிற்குரிய தந்தைவழி உறவினர் அனைவரையும் கட்டாயங் கலந்துகொளப் பணிப்பர். (அனைவரும் கூடியவரை பணிவர். முன்னோர் ஆசிதரும் நிகழ்வில், அணங்கோடு ‘விவகாரம்’ வைக்கலாமா?) ஆண்கள் வீட்டுப்படைப்பில் மட்டுங் கலந்துகொள்வர். தாய் வீட்டுப்படைப்பிலோ, மாமனார் வீட்டுப்படைப்பிலோ பொதுவாகக் கலந்து கொள்ளார். பெண்கள் புகுந்தவீட்டில் மட்டுமன்றி, பிறந்த வீட்டுப்படைப்பிலும் கலந்துகொள்ள முடியும். பொதுவாக மகன் வழியினர் தான் படைப்பது வழக்கம். அரிதாகப் மகள்வழியினர் வேண்டிக்கொண்டு தாய்வீட்டில் வந்து படைப்பதுமுண்டு.

புதன், வியாழன், வெள்ளி ஏதேனுமொன்றில் படைப்பு நடைபெறும். அன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று அருச்சனைசெய்து வழிபட்டுத் தெளித்தமும் (=தீர்த்தமும்), திருநீறும் பெற்று வருவர். வேளகாரர் வீட்டில் காலையில் விதைநெல் கொடுத்தால், அவர்கள் அதைப்பெற்றுப் படைப்புக் காரருக்குத் திருநீறு கொடுப்பார். அதைக்கொணர்ந்து படைப்புவீட்டிற் திருநீற்று மடலிற் போட்டுவைப்பர். படைப்பின் போது விழுந்து கும்பிட்டு அத்திருநீற்றைப் பூசிக்கொள்வர்.

முன்னோர் நினைவாய், (கோடித் துணியோ, 1,2 ஆண்டு முந்தியதோ) பருத்தியாலான வேட்டி, துண்டு, தலைப்பாகையாகும் உருமாற் துண்டு, சேலை ஆகிய ஆடைகளையும், முன்னோர்
எச்சங்களான உருத்திராக்க மாலை, தூவல் (பேனா), சட்டைப்பொத்தான், கண்ணின்அணியாடி, திறவிக்கொத்து, பொடிப்பேழை, சுருட்டு - வெற்றிலைப் பெட்டிகள் எனச் சிறு விதப்புப் பொருள்களை ஓர் ஓலைப்பேழையுள் (கடகத்துள்) போட்டு வீட்டுச் சாமியறையில் உத்தரத்திற்/வளையத்திற் தொங்கவிட்டிருப்பார். வார வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றும்போது இப்பேழைக்கும் பூப்போட்டு வழிபடுவதுண்டு.

பிற்பகல் 2 மணியளவில் ஆண்கள் மட்டும் உத்தரத்திற் தொங்கும் பேழையைக் கீழிறக்கி, நினைவெச்சங்களைப் பேழைக்குள்ளேயே வைத்துத் துணிகளைமட்டும் தனியேயெடுத்து ஆறு, ஏரி, கண்மாய், ஊருணி (அல்லாக்கால் வீட்டுக்கேணி) நீரில்நனைத்து அலசிப்பிழிந்து பின் தரையிற்படாமற் துணியைக் காயப்போட்டு மடித்தெடுத்துப் பேழைக்குள் சேர்ப்பர். (இத்துணிகளை முன்னோர் விரும்பி அணிவதாய்க் கொள்வர்.) துணிகள் காய்கையில் ஒருதடவை தரையிற் பட்டாலும், மீளத் தூய்மைப்படுத்துவர். காயும் துணிகளைத் தாண்டக்கூடாதென்பதும் ஒரு மரபாகும். இந்தத் தூய்மைப்பணி ஆண்களுக்கு மட்டுமேயுரியது.
அடுத்துப் படைப்பறை முன்னுள்ள முற்றத்தில் மண்பரப்பி மகளிர் விறகடுப்பிற் சமைப்பர். (இதில் ஆண்கள் உதவியுண்டு.) செய்யும்போது சுவை பார்க்காது, எச்சிற் படாது அச்சத்தோடும், ஆழ்ந்த பற்றி(பக்தி)யோடும் செய்வர். வாழைக்காய், பலாக்காய், அவரைக்காய்ப் பொரியலும், புடலங்காய்க் கூட்டும், வெண்டைக்காய், மாங்காய்ப் பச்சடியும், கத்திரி, கருணைக்கிழங்கு, பரங்கிக்காய்க் குழம்பும் என காய்கறிவகைகளைச் செய்வர். (மேலைக்காய்கறிகள் சுற்றரவாகப் பங்குபெறாது. தக்காளி, மிளகாய் மட்டும் விதிவிலக்காகும். அந்தக் காலமானால், புளியும், மிளகும் பகரியாய் இருந்திருக்கும்.) இவற்றோடு கற்கண்டு வடை, உழுந்து வடை, கருப்பட்டிப் பாற்சோறு, பாயசம் வைப்பது உண்டு. கருப்பட்டிப் பாற்சோறு படைப்பிற் கட்டயமாய்க் கொடுக்கப்படும் பெருஞ்சோறாகும் (=ப்ரசாதம்). படைப்பிற்குரிய முன்னோர் கறி விழைவுள்ளவராய் இருந்தால் ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ சேர்ந்துகொள்ளும். மீன் வைக்கமாட்டார்.

இரவு 7 மணியளவில் ஆண்கள் படிம அலங்காரஞ்செய்வர். (இதிலும் மகளிர் தொடமாட்டார்.) காய்ந்த வேட்டி, துண்டு, உருமாற் துண்டு, சேலையைக் கொய்து, விசிறிமடிப்பாக்கி, நுனியில் முடிச்சிட்டு பெரியவர் கட்டுவதுபோல் வைப்பார். உருமாற்துண்டை தலைப்பாகையாய்க் கட்டுவர். இவ்வாறன்றித் துணிகளை அடுக்காக ஒன்றின்மேலொன்றாக வைத்தும் படைப்பதுண்டு. முன்சொன்ன விதப்புப் பொருள்களை அருகேவைத்து முன்னோரை நினைவுபடுத்துவர். ஆண்முன்னோருக்கென உருத்திராக்கமாலை, சிவகண்டிமாலை போன்றவற்றைத் தலைப்பாகையைச் சுற்றிப் பொருத்துவர். பெண்முன்னோருக்காக கழுத்திரு, தாலி, மோதிரம், கால்மிஞ்சி போன்ற நகைகளையும் சேலைத் துணிமேல் அணிந்திருப்பதுபோல் வைப்பார். ஆண்முன்னோர் சுருட்டு, புகையிலை விரும்பியிருந்தால், அவற்றிலும் ஒன்றிரண்டு அருகேவைப்பர். இவற்றோடு பால், பழம், சிறுசெம்பில் எண்ணெய், சிகைக்காய் உருண்டை, அரைத்த மஞ்சளுருண்டை ஆகியவற்றையும் வைப்பர். யாருக்குப் படைப்போ, அவர் ஒளிப்படத்தை நடுவில் வைத்து ஊதுவத்தியேற்றி சாம்பாணிப் (சாம்ப்ராணி) புகை கமழவைப்பதுமுண்டு.     

படிம அலங்காரத்தின் எதிரில் ஒன்றோ, மூன்றோ, ஐந்தோ வாழையிலைகளைப் போட்டு அனைத்துக் காய்கறிகளையும், கறிகளையும் பரிமாறிச் [பரிமாறுவதே ஒரு கலை; இலையில் எதை எங்கு வைக்கவேண்டுமென்பதும் ஓர் அழகு அடவு (design) தான் இலைகளில் பாற்சோறு வைப்பது கட்டாயமாகும்.] சோறுபோட்டு, பருப்பு, நெய்யூற்றி, தெளித்தத்தால் நீர்விளாவி நிவத்தி, கற்பூரங்காட்டி வழிபடுவர். கொடிவழி, முத்தோர், பார்த்து வரிசைப்படி ஆண்களும் பின்னாற் பெண்களும் பற்றியுடன் விழுந்து வணங்கி நெற்றியில் திருநீறும், குங்குமமும் இட்டுக்கொள்வர்.
இது நடந்துகொண்டிருக்கும் போதே (ஆணோ, பெண்ணோ) குறிப்பிட்டவரின் மேல் முன்னோர் ஆவி ஏறி (அணங்கி) வரலாம். அணங்காடி மூசுமூசென அழுவதிலோ, வெடவெடவென அசைவதிலோ, குலுங்கிக் குலுங்கி ஆட்டம்போடுவதிலோ இவ்வுணர்வு வெளிப்பாடு முதலில் நடைபெறலாம். கூடியிருப்பவரில் ஒருவரே அணங்கைக் கட்டுப்படுத்தும் பூசாரியாய் மாறுவார். வருவது ஆணணங்கா, பெண்ணணங்கா என்பதைப் பொறுத்து இது அமையும். சிலபோது அணங்கு பேசுவதாய் உரையாடலமையும். பலபோது கூடியிருப்போர் கேள்விகேட்கவும் செய்வர். வீட்டுச் சிக்கல்கள், முன்னோரின் வழிகாட்டுதல்கள், விடைதெரியாத, உகக்க முடியாத, கேள்விகள் எனவெல்லாமே கேட்கப்படும்.

சிலபோது உரையாடல் நீளூம். சிலபோது சுருங்கும். பூசாரியின் திறமையான வழிநடத்தலைப் பொறுத்து உரையாடலும் அணங்காடலும் நிகழும். எழுந்த வேகத்தில் அணங்காடல் சட்டென நின்று மலையேறலாம். மலையேறும்போது சாமியாடி நெற்றியில், பூசாரி திருநீறு பூசுவதும், கூடியிருப்போர் சாமிவந்தோர் காலில் விழுந்து ஆசி பெற்று (முன்னோர் ஆசிகொடுத்ததாகவே எல்லோரும் உணர்வர்.) திருநீறு பூசிக்கொள்வர். நானறிந்து, சாமியாடல் (அணங்காடல்) என்பது 10க்கு 6/7 படைப்புக்களில் நடப்பதாகவே இருக்கிறது. அதேபொழுது சாமியாடலின்றி அமைதியாக நகர்ந்ததையும் கண்டிருக்கிறேன். இதுதான் நடக்கும், இது நடவாது என்று சொல்லமுடியாச் சூழ்நிலையைப் படைப்பு நிகழ்வுகளிற் கண்டிருக்கிறேன்.

[படைப்பு நிகழ்ச்சியை இங்கு விவரித்ததே சாமியாடலைப் (அணங்காடலைப்) பற்றிச் சொல்லத்தான். இது தென்பாண்டி நாட்டில் மிக இயல்பானது. வளவு/குடும்பு அளவிலும், குல,/கரை அளவிலும் இது முற்றிலும் சாத்தாரமாய் நடைபெறுகிறது. இதை எழுதுவதற்கு, என் பட்டறிவு போக ‘நகரத்தார் கலைக்களஞ்சியம் பக்.405-406, மெய்யப்பன் தமிழாய்வகம், வெளியீடும் துணையாக நின்றது. படைப்பு என்பது நகரத்தார் குமுகத்தில் மட்டும் நடைபெறுவதில்லை. கள்ளர் குமுகத்திலும் நடக்கிறது. மற்ற குமுகங்களிலும் இருக்கலாம். ஆனால் அவை இன்னும் பதிவு செய்யப்படவில்லை. நம்மிற் பலரும் நாட்டுப்புற வழக்கங்களை வெளிச்சொல்ல வெட்கப்பட்டு இவற்றைப் பதிவுசெய்யாது போகிறோம். பார்ப்பனமயமான பழக்கவழக்கங்களே வெளியிற் பதிவு செய்யப்படுகின்றன. மேலை ஆய்வாளரும், இந்தியரில் பல ஆய்வாளரும் ”தமிழ்நாட்டு மரபு பார்ப்பன நடைமுறையே” என்று எண்ணிக் கொள்கிறார். இது குமுகம்/ குமுகாயம் என்ற அளவில் ஏற்படும் பெரிய இழப்பாகும்.]

எல்லோரும் படைப்புப் படிமத்தின் கீழ்விழுந்து கும்பிட்டுத் திருநீறு பூசிக்கொண்ட பிறகு, வீட்டுப் பெரியவர்கள் படைப்பு இலைகளிற் சாப்பிட மற்றவர்கள் தனியிலைகளில் சமைத்தவற்றைப் பரிமாறிச் சாப்பிடுவார்கள். அனைவரும் சாப்பிட்ட பிறகு படைத்த பாலும் வழங்கப் பெறும். படைத்துச் சாப்பிட்ட இலைகளை வீதியில் எறிவதில்லை. பழங்காலத்தில் மண்னை வெட்டிப் போட்டு அதிலெறிந்து மூடிவிடுவார்களாம். இப்பொழுது மறுநாள் வெளியே எறிகிறார்கள். படைத்த சாமியறைக் கதவை இரவு சாத்திப்பூட்டிவிட்டால் மறுநாள் காலையிற்றான் திறப்பார்கள். சிலவீடுகளில் மறுநாள் காலையில் நீர்ச்சோற்றுப் படைப்புப் படைப்பார்கள்.

இரவு கொய்துவைத்த துணிகளை மறுபடியும் எடுத்துதறிக் காயப்போட்டு மடித்துப் பேழைக்குள் வைத்துவிடுவார். ஒவ்வொரு படைப்பின் போதும் உறவினர் புதுத்துணிகளை பேழைத் துணிகளோடு சேர்த்துவைத்து வழிபடுவர். பழைய துணிகள் கிழிபட்டிருந்தால் அவற்றை எடுத்துவிடுவார். பேழையிலிருந்து எடுக்கப்படும் துணிகளை யார் வைத்தாரோ, அவர் எடுத்துக் கொள்வது பெருவழக்கம். பேழையைப் பழையபடி முன்னிருந்தது போல வீட்டுக்குள் கட்டி வைத்துவிடுவர்.

படைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள் உண்டு. பெண்ணணங்கு பெண்மேல் ஏறி வந்தாலன்றி நேரடி வினையில் (பூசாரியாகப்) பெண்கள் ஈடுபட மாட்டார். பேழைத் துணிகளைத் தூய்மை செய்யும் பணியும், படிம:அலங்காரமும் எப்பொழுதும் ஆண்களின் பொறுப்பேயாகும். பெண்கள் சமையற் பொறுப்பைத் தவிர ஏதொன்றையும் தொடமாட்டார். இது  ஆணாதிக்கக் குமுகாயம் என்று கொண்டாலுஞ் சரி, அல்லது அணங்கு போன்ற இன்னொரு ஆதனைக் கையாளுவதில் பெண்கள் வலுக்குறைந்தவர்கள் என்று உளவியல் பார்த்துக் கொண்டாலுஞ் சரி, காலகாலமாய் இந்தப் பங்களிப்புகள் மாறவில்லை. முன்னோர் படைப்பு என்பது 7 தலைமுறை அளவிற்குத் தான் என்றால் அதற்கு முன், இன்னும் முந்தைய முன்னோருக்கான படைப்பைச் செய்திருப்பார்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. (7 தலைமுறைக்கு அப்புறம் நினைவுகள் மங்கும் என்பார்கள் அல்லவா?) முடிவாகச் சொன்னால், ”முன்னோர் படைப்பு என்பது எப்பொழுதும் இருந்திருக்கும். எந்த முன்னோன் என்பதிற்றான் இந்தத் தலைமுறை மழுங்கல் இருக்கிறது”.

ஆனால் மூதாதை என்பவன் நினைவில் அச்சாணியாக இருக்கிறான். சேயோன் பற்றிய நினைவு கூரல் குமுகாயத்தில் இன்னும் ஆழமாய் இருக்கிறது. முருகனைப் பற்றிய நினைவு கூரலில் தைப்பூசம் என்பது மிகப் பெரியதாய்க் கொள்ளப் பெறுகிறது. காவடி, பாற்குடம், அணங்காடல், செடிலாடல், பூக்குழி போன்ற தன்வருத்துப் பழக்கங்களை அடுத்த பதிவிற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.    


 

1 comment:

Indian said...

மிக்க மகிழ்ச்சி ஐயா. கருத்துச் செறிவான இடுகைகள்.

கோவைப் பகுதியில் படைப்பு (பேச்சு மொழியில் அமாவாசைக்கு படப்பு போட்டு சாமி கும்புடறது) ஆடி,புரட்டாசி, தை அமாவாசை மற்றும் தந்தை/தாய் மறைந்த (நட்சத்திர)நாட்களில் நடக்கும். புதுத்துணி (பொதுவாக வேட்டி, துண்டு) வைத்து ஓரிலை (அல்லது மூன்று இலைகளில்) படைப்பு வைத்து, தேங்காய் உடைத்து, நீர் சுற்றி, ஆரத்தியுடன் வழிபாடு நடக்கும். வீட்டின் மூத்த ஆண் பூசை நடத்துவார். அனைவரும் வழிபட்ட பின், தீபம் அணைந்தவுடன் படப்பு இலைகளில் இருந்து சிறிது உணவுப் பண்டங்களை எடுத்து தட்டில் வைத்துப் பிசைந்து வீட்டுக் கூரையின் மீதோ அல்லது மாடிக்கு எடுத்துச் சென்று ஆளுக்கு ஒரு கை எடுத்து வைப்பர். மூத்தோர் காகமாக வந்து உணவை ஏற்பதாகக் கொள்வர். காகம் உணவு எடுக்கும் வரைக் காத்திருக்க வேண்டும். காகம் வராவிட்டால் மூத்தோர் மனம் கோணும்படிக்கு வீட்டில் எதுவோ, யாரேனும் நடந்திருப்பரோ என்ற பேச்சு எழும்.

மற்றபடி மூத்தோர் பொருட்களை பாதுகாக்கும் வழக்கமில்லை.

மேலும் அணங்கும் செயல் நடந்து கண்டதேயில்லை.

மூத்தோருக்கு படைத்து வழிபடும் செயல் காலப்போக்கில் அருகி வருகிறது. என் தந்தை தொடர்ந்து செய்கிறார். நான் செய்வேனா என்று யோசிக்கிறேன்.