Thursday, January 02, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 3

இற்றை வழக்கில் அணங்கெனும் சொல்லைத் தமிழர் புழங்காததாலும் (12 ஆம் நூற்றாண்டுப் பெரியபுராணம் வரை பதிவாகியது, எப்பொழுது வழக்கிற் குறைந்ததென்று தெரியவில்லை), அகர முதலிகளில் முதற் பொருள் குறிக்காது ”வருத்தம், அச்சம், நோய், தெய்வம், தெய்வமகள், தெய்வத்தன்மை, அழகு, அழகியபெண், வடிவு, மையல்நோய், ஆசை, வெறியாட்டு, சிவ ஆற்றல், பேய், பேய்மகள், சண்டாளன், ஆளியின் குட்டி”யென வழிப்பொருள் கொடுத்துள்ளதாலும், உரையாளர் வழிப்பொருளால் மட்டுமே (குறிப்பாக வருத்துதலெனும் பொருளாலே) விளக்குவதாலும், அணங்கு பற்றிய குழப்பம் நீள்கிறது. அது புனிதப் புயவா (sacred power)? தெய்வச் செயலா? மீமாந்தச் செயலா? அதன் தூண்டலாற்றான் முலை திருகி எறிந்து கண்ணகி மதுரையை எரித்தாளா? - என்ற கேள்விகளெழுகின்றன.    

’தமிழிலக்கியச் சொல்லடைவு’ என்ற தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் ’அணங்க, அணங்கல், அணங்கலின், அணங்கான், அணங்கி, அணங்கிய, அணங்கியோய், அணங்கியோள், அணங்கியோன், அணங்கிற்று, அணங்கின, அணங்கினள், அணங்கு, அணங்குக, அணங்குதல், அணங்கும், அணங்குற்றனை’ என்று 158 சங்கநூற் காட்டுக்களையும் ‘அணத்து, அணந்த, அணந்து, அணர், அணல், அணல, அணலோன், அணவந்து, அணவர, அணவரும், அணவும்’ என்ற 32 காட்டுக்களையும் படித்தால் முதற்பொருள் வெளிப்படும். (அணிதலையொட்டி இன்னும்பல சொற்கள் சங்கநூல்களிற் பயின்றுள்ளன.) இத்தனை சொற்கள் அணங்கையொட்டி எழுமானால் அதற்கோர் எளிய பொருட்பாடு இருக்கவேண்டுமே? வருத்தமெனும் உணர்ச்சிப் பொருள் முதற்பொருளாக முடியாது. அந்த முதற்பொருளை மட்டும் உய்த்தறிய முடியுமானால், ஒவ்வொரு கூற்றுக்கும் அந்த முதற்பொருளிலிருந்து வழிப்பொருள் கொணர்ந்து இடத்திற்கு ஏற்பப் புரிந்துகொள்ள முடியும். சங்க இலக்கியம் எங்கணும் அத்தகை இடங்களையெல்லாம் (158+32 = 190) ஆயக் கடின உழைப்பு தேவை. அதையுஞ் செய்யவேண்டும். 

தவிர, ”அணங்கெ”னும் தலைப்பில் அருமையான தெளிந்த கட்டுரையொன்றை (http://www.letsgrammar.org/Anangku-Rajam.pdf) பேரா. இராசம் படைத்திருக்கிறார். (மேலே சொன்ன 190 இடங்களில் பாதிக்கு மேலானவற்றை அவர் அலசிப் பார்த்திருக்கிறார்.) அவரிடமிருந்து சற்று விலகி என் கருத்தமைகிறது. என் கட்டுரையைப் படிப்போர், (அணங்கு, கலம் தொடா மகளிர் என்ற) அவரின் இரு கட்டுரைகளையும் படிப்பது நல்லது. 

அண் என்பது ’மேல் அல்லது மேற்பக்கத்தைக் (upper part)’ குறிக்கும் வேர்ச்சொல்லாகும். ”சங்க இலக்கியச் சொல்லடைவில்” காட்டப்படும் 190 இடங்களுக்கும் அதுதான் வேர்ச்சொல். பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில், உ>உண்>ஒண்>அண் = மேல், மேல்வாய் என்றுதான் சொல்வார்கள். மலையாளம், கன்னடத்திலும் இச்சொல் வழக்கிலிருக்கிறது. தெலுங்கிற் தேடவேண்டும். ”அண்”ணிற் கிளைத்த சொற்கள் மிகப்பல.  

அண்ணம் = மேல்வாய்ப் புறம், (ம.அண்ணம்; க.அங்கல, அண்ணாலிகெ; தெ. அங்கிலி; து.அண்ண; நா.அங்குல; பட.அங்குல.) 
அண்ணல் = மேலோன், தலைவன், அரசன், கடவுள் (ம்.அண்ணல்; க.அண்ணலெ; தெ.அண்ணு.)
அண்ணன் = மேலோன், மூத்தோன், தமையன் (ம. அண்ணன்; க.,பட.,குட. அண்ண; தெ.,குவி. அன்ன; து.அண்ணெ; கோத. அண்ணன்; இரு.,குரு.,துட. ஒணென்; கொலா. அணுக்; கோண். தன்னால்; கொர.ஆண்; எரு. அண; சப். அண்ணா)
அண்ணி = அண்ணன் மனைவி
அண்ணாத்தல் = தலையெடுத்தல், தலைதூக்குதல் (ம. அண்ணா; க.அண்ணெ; து.அண்ணாவுனி, அணாவு)
அண்ணாந்து பார்த்தல் = தலைதூக்கி மேல்நோக்கிப் பார்த்தால்
அண்பல் = மேல்வாய்ப் பல்
அணத்தல் = மேல்நோக்குதல் “நெற்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை” (குறிஞ்சிப் 35) (து.அணவு, அணாவுனி)  
அணர்தல் = மேனோக்கி எழுதல் .
அணர், அணரி = மேல்வாய்ப் புறம்
அணவுதல் = மேல்நோக்கி எழுதல்
அணிதல் = உடம்பின்மேல் இடுதல் (to put on)
அணிகலன் = உடம்பின்மேல் இடுங்கலன் 

எனச் சிலசொற்களை இங்கு கட்டியிருக்கிறேன். (நெருங்கற் பொருள் சுட்டும் அண்ணுதல் வினை வேறுபட்டது.) 

மேல், மேலுதல், மேலெழுதல் என்ற பொருள்தரும் ’அண்’ எனுஞ் சொல் இன்னொரு மொழிக்குடும்பத்திலும் இருக்கிறது. கால்டுவெல்லிற்கு 138 ஆண்டுகள் முடிந்த பின்னும் ஒப்பீட்டு மொழியியலார் (comparative linguistics) ஒப்பீட்டு மொழியியற் படியேற்றங்களை (applications) வைத்து ”முன்னிலைத் திராவிடச் சொற்றொகுதியை” உருவாக்குவதிற் தடுமாறும் நிலையில், இங்கு செய்யக் கூடாதை செய்ய விழைகிறேன். ’அண்’ணிற்குத் தொடர்பான இந்தையிரோப்பியச் சொற்களைக் கீழே பட்டியலிடுகிறேன். [அதெப்படி திராவிடச் சொற்களுக்கு அருகில் இந்தையிரோப்பியச் சொற்களைப் பட்டியலிடலாம்? இரண்டும் ஒன்றிற்கொன்று நெருங்காத, தீண்டாத குடும்பங்கள் ஆயிற்றே?:-))) எனப் பறைந்து, ஒப்பீட்டு மொழியியல் போற்றும் (பாவாணரை ஏற்காத) சிலர் இராம.கி.யை வசை பாடலாம்].  

E. on, prep - ME, fr. OE, on, an, rel. to OS. an, ON, aa, Du. aan, OHG. ana, MHG. ane, G. an, Goth. ana, 'on, upon', and gogn. with Avestic ana, 'on', Gk, ana, oSlav, na, OPruss, no, na, 'on, upon'.

E. on, n. the on or leg side of the field

Fr. on, adj 

[ஒப்பீட்டு மொழியியலையும், (வேர்ச்சொற்களின் பொருட்பாட்டைப் பார்த்துக் குறைந்த திரிவுகளிற் சொற்பிறப்பை வரையறுக்கும்) பாவாணர் வழிமுறையையும், establishment vs heretic என்று பகையாய்ப் பார்த்து சேவற்போரிடாது, ஒன்றிற்கொன்று துணையாக்கினால் மொழியியலில் எவ்வளவோ உருப்படியாக வேலை செய்யலாம். இரண்டிலும் வளர்ச்சிக்கு வேண்டியன இருக்கின்றன. (இந்த அண் அதற்கொரு தொடக்கம்.) யார் செய்யப்போகிறார்கள் இதை? பாவணரை வைத்து ”இலெமூரியா, அது, இது” என்று வசை பாடுவதையும், புகழ் பாடுவதையும் நிறுத்தி இதைச் செய்யலாம். புரியவேண்டியவருக்குப் புரிந்தாற் சரி. (ஐசக் நீயூட்டனை அவருடைய இதள்வேதியல் (alchemy) பணிக்காக யாராவது திட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா?)]

இனி அணங்கெனும் தமிழ்ச்சொல்லிற்கு வருவோம். அணவுதல் என்னும் வினைச்சொல் வகர, ககரப் போலியில் அணகுதல் என்றுமாகும் (இதுபோன்ற போலிகள் தமிழில் மிகுதியும் உள. தவிரப் போலியாதல் தமிழில் மொழியியல் விதிபோலவே அமைகிறது. தமிழிற் பாவற் காய் பாகற் காயாகும்; நாவற் பழம் நாகற் பழமாகும்; குடவம் குடகமாகும்; குணவம் குணகமாகும்.) அணக்குதல், அணகுதலின் பிறவினையாகும். அணங்குதல், அணக்குதலிலிருந்து பின்னுருவெடுக்கும் (back-formation) முறையிற் திரிந்து மீண்டும் தன்வினையில் இன்னொரு வினையை உருவாக்கும். இம்முறையிற் தமிழிற் பலசொற்கள் உருவாகியிருக்கின்றன.  

*இணத்தல்>இணகுதல்>இணக்குதல்>இணங்குதல், 
உணத்தல்>*உணகுதல்>உணக்குதல்>உணங்குதல், 
குணத்தல்>குணகுதல்>குணக்குதல்>குணங்குதல், 
சுணத்தல்>*சுணகுதல்>சுணக்குதல்>சுணங்குதல், 
நுணுத்தல்>நுணுகுதல்>நுணுக்குதல்>நுணுங்குதல், 
*பிணத்தல்>பிணகுதல்>பிணக்குதல்>பிணங்குதல், 
முணத்தல்>முணகுதல்>*முணக்குதல்>முணங்குதல், 
*வணத்தல்>*வணகுதல்>வணக்குதல்>வணங்குதல், 

என்பவற்றைக் காட்டாகக் காணலாம். அணகுதலின் இறந்தகாலப் பெயரெச்சம் அணங்கிய என்றேயமையும். முடிவாகச் சொன்னால் இதன் பொருள் ’மேலேறிய’ என்பதுதான். அதென்ன, மேலேறியது? எதன் மேல் எது ஏறியது? - என்ற கேள்விக்கு விடையறிய தமிழரின் தொன்மங்களைப் பற்றிய சிந்தனைக்குப் போகவேண்டும்.

அன்புடன்,
இராம.கி. 

1 comment:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

சில இடங்கள் என் சிற்றறிவுக்கு எட்டாவிட்டாலும் பெரும்பாலும் புரிந்தது. தங்கள் ஒவ்வொரு கட்டுரையும் தமிழின் கருவூலம்! நன்றி ஐயா!

//குணத்தல்>குணகுதல்>குணக்குதல்>குணங்குதல்// - அப்படியானால், 'குணம்' என்பது தமிழ்ச் சொல்தானா ஐயா?