Tuesday, January 23, 2007

தானமும் கொடையும் - 2

"தானத்தின் வேர்ச்சொல் விளக்கத்திற்கு போகலாமா?" என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேன். பூங்கா வலையிதழுக்காக "பொங்கலோ பொங்கல்!" என்ற கட்டுரை எழுதியதிலும், சென்னையில் பொத்தகக் காட்சிக்கு போய்ப் பொத்தகங்கள் வாங்கி வருவதிலுமாய் பொழுது போய், நான் சொன்ன அடுத்த பகுதி, மேற்கொண்டு தொடராமலே நின்று போனது. மீண்டும் இழுத்துப் பிடித்து வந்திருக்கிறேன். தொய்வு ஏற்பட்டதற்கு மன்னியுங்கள்.

[தொய்வுறுதல் என்பது to get slackened / to lag என்ற பொருள் கொள்ளும்; "கொஞ்சம் தொய்ஞ்சு போச்சு! இனிமெ இழுத்துப் பிடிச்சுருவோம்" என்பது எங்களூர் பேச்சு வழக்கு; இதற்கு, இன்னொரு வட்டாரச்சொல் delay என்ற பொருளில் உள்ள சுணங்குதல் என்பதாகும்; தா(ழ்)மதம் என்னும் வேறொரு சொல் ஓர் இருபிறப்பி. அதன் உள்ளே இலங்கும் தாழ்தல் என்னும் வினை தமிழ்; தாமதம் என்ற முடிப்பு மட்டும் வடமொழி. கூடிய மட்டும் வெவ்வேறு தமிழ்ச் சொற்களை புழக்கத்தில் கொண்டு வர என் இடுகைகள் மூலமாய் நான் பரிந்துரைக்கிறேன். நாம் அறிந்த தமிழ்ச்சொற் தொகுதிகளைச் சிறிது சிறிதாய்க் கூட்டிக் கொள்ளுவோம்.]

"வாழை மரம் குலை தள்ளியது" என்ற வழக்கைக் கேட்டிருக்கிறீர்களா? இங்கு வாழை மரம், குலை ஈன்றதைத் தான், தள்ளியது என்று சொல்லுகிறோம். வாழைக்குலை மட்டுமல்லாமல், வாழைக்கன்று தாய் வாழைக்குப் பக்கத்தில் மண்ணிலிருந்து எழுந்தால் கூடத் தள்ளியது என்றே நாட்டுப் புறங்களில் சொல்லுவார்கள். தென்னை மரம் பாளை விடுதலைக் கூடப் பாளை தள்ளுதல் என்று சொல்லுவார்கள். இது போல, நெற்கதிர் தோன்றுவதைக் கதிர் தள்ளியது என்பார்கள். இப்படியெல்லாம் பயிலும் தள்ளுதற் சொல் தருதல் என்றே பொருளையே சுட்டும். நம்மை உலகிற்கே தருபவளைக் கூடத் "தள்ளை" என்று பழந்தமிழில் சொல்வார்கள். [தாய் குழந்தையை பிறக்கச் செய்வதோடு (பிரிதல் கருத்தின் நீட்சி பிறத்தல்) நம்மைத் தரவும் செய்கிறவள் தானே தள்ளை? தள்ளை>தய்யை>தாய் என்று கூட இதன் வளர்ச்சியாய் ஒரு சாரார் சொற்பிறப்புக் காட்டுவார்கள். இன்னொருவரோ த(ம்) ஆய் என்று பிரித்து இனம் காட்டுவார்கள். நான் இன்னும் தாய் பற்றிய சொற்பிறப்பில் தெளியாமல் இருக்கிறேன்.] இதே சொல்லை, மலையாளத்தில் தள்ள என்றும், தெலுங்கில் தல்லி என்றும் சொல்லுவார்கள். (தெலுங்கு நடிகை விசயசாந்தி தெலிங்கானா மாநிலம் உருவாக வேண்டி நடத்தும் கட்சியைத் தல்லி தெலிங்கானா என்று சொல்லுகிறார்கள்.)

தள்ளுதற் சொல்லைப் போன்றே, இரு திணைக்கும் பொதுவாக ஈனுதற் சொல்லும் ஆளப்படும். ஈன்றாள் என்பவள் தாய்; வாழை குலை ஈன்றது. ஈன் என்ற சொல்லை வைத்து ஈனியல் (genetics) என்ற புதுச் சொல்லை உருவாக்குவார்கள். ஈன் = gene; ஈனுதல் = தருதல்.

துள் என்னும் வேரில் இருந்து, தள் என்னும் சொல்லடி பெறப்படும். துள்ளுவது என்பது முன்னே வருவது. ஒரு நீர்ப்பரப்பில் துள்ளி வருவது என்பது நீரின் அசைவால் தெறித்து ஒரு சிறு கூறு மேலே எழுவது ஆகும். அந்தத் தெறிப்பைத் துளி என்று கூறுகிறோம். துளிப்பு என்பது துளிதுளியாய் ஏற்படுகின்ற நிலை. மேலை மொழிகளில் drop என்ற இணைச்சொல்லை ஒட்டிப் பல சொற்கள் அமையும். நம்முடைய துளிப்புக்கும் அவர்களின் drop ற்கும் உள்ள தொடர்பைக் கவனித்தீர்களா?

நாம் குதிப்பது கூடத் துள்ளுவது என்றே சொல்லப் படும். "ஒரேயடியாகத் துள்ளாதே!". துள்ளுதலில் இருந்து துளும்புதலும், தளும்புதலும் எனப் பல்வேறு வினை நீட்சிகள் ஏற்படும். எல்லாமே ஓர் அசைவாக, நீர்ப்பரப்பு முன்னே வருவதைக் குறிக்கும். துள் என்னும் வேரில் பிறந்த சொற்கள் பலவும் இப்படி முன் வருவதைச் சீராகக் காட்டும்.

துள்>துருதல்>துருத்தல் என்ற வளர்ச்சியில் இருக்கும் "முன்வருதல்" பொருளைப் புரிந்து கொண்டால், தள்ளுதல் என்ற சொல்லின் போக்கும் கூட நமக்குப் புரிந்து போகும். துருத்தி என்பது ஆறு, ஏரி, கடலோரம் ஆகிய நீர்நிலைகளை ஒட்டி, முன்னே வந்திருக்கும் ஒரு நிலப்பகுதி. சோழநாட்டில், திருப்பூந்துருத்தி என்ற ஊர், கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில், காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில், ஆற்றுத் துருத்தியில் உள்ள ஊராகும். இதே போல மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலத்திற்கும் திருத்துருத்தி என்ற பெயர் உண்டு. இந்த ஊர்க் கோயிலின் வடபுறத்தில் காவிரியாறு ஓடுகிறது. இப்படி நீருக்குள் துருத்திக் கொண்டிருப்பது துருத்தி. (அண்மையில் pier என்பதற்கு இணையான ஒரு சொல்லை நண்பர் சுந்தரவடிவேல் கேட்டிருந்தார்; துருத்தி என்றே அதற்கு இணைச் சொல் தரமுடியும்.)

உலைத் துருத்தி (foundry blow pipe bag), ஊது துருத்தி (Scottish blow pipe) போன்ற பயன்பாடுகளையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம். "பாரேன், அந்தப் பெண் எவ்வளவு துருதுருப்பாய் இருக்கிறது" என்னும் போது துருதுருப்பு என்ற சொல்லால், ஒருவர் முன்வரப் பார்க்கும் போக்கைக் குறிக்கிறோம். இன்னும் போய், ஒரு படை அல்லது ஊர் அல்லது நாடு ஆகியவற்றின் முன்னால் வந்து நிற்கும் தலைவனைக் கூடத் துரை என்றே சொல்லுகிறோம். (கண்டவன் எல்லாம் துரை ஆகி விடமுடியாது. மற்றவரில் இருந்து துருத்தி, எழுந்து, முன் வந்தவன் துரை ஆவான்.) இது போலத் துரவிக் கொண்டு (முன்தள்ளிக் கொண்டு) போவது துரத்தல். அப்படித் துரவுவது/துரத்துவது driving; துரவி drive; துரவர் driver; துரவியதால் கடப்பது தூரம். பலரும் முன் தள்ளுவதால் சாலையில் ஏற்படும் முட்டுப் போக்கு நிலை துரப்பு (traffic). இப்படித் துரவில் இருந்து பல சொற்கள் கிளைக்கும். (அவற்றையெல்லாம் சொன்னால், இந்தக் கட்டுரை இன்னும் விரிந்து போகும் என்பதால் நிறுத்திக் கொண்டு, அடுத்த செய்திக்கு நகர்கிறேன்.)

துருத்தி என்ற சொல்லில் இடைக்குறை ஏற்பட்டுத் துத்தி>தத்தி என்று ஆகி நாயனத்திற்கு பின்னால் ஒலிக்கும் ஒத்துக் கருவியைக் குறிக்கும். (உண்மையில் ஒத்து என்பவர் ஓர் இசையின் பின்னால் இருப்பவரல்ல; அவர்தான் அந்த இசைக்கே அடிப்படையானவர்; ஆதாரமானவர். அவருடைய அடிச் சுரத்தின் மேல் தான், நாயனக்காரர் பண் எழுப்பி இசைக்கிறார். ஆகத் துத்தி என்பவர் முன்வந்து நிற்கும் ஓர் ஆயக்கால் - reference - போன்றவர். நம் ஊர்ப்பக்கங்களில், ஊருலாத் திருமேனியைத் - உற்சவரைத் - தூக்கிச் செல்லும் போது வாகனத்திற்கு அடியில் போடும் கட்டைக்கு ஆயக்கால் என்னும் பெயருண்டு. அந்த ஆயக்காலின் மேலே தான் ஊருலவரின் திருமேனி நிற்கிறது. reference என்பதும் அப்படித்தான். ஆயக்கால்களின் மேல்தான் ஒரு கட்டுரையில் நாம் சொல்லும் கருத்துக்கள் நிற்கின்றன.)

இதே போலத் துருத்தம் என்ற சொல், இடை குறைந்து, துத்தம் என்று ஆகிக் குரல் என்னும் முதல் ஓசைக்கு (சட்சத்திற்கு) அடுத்து, சற்றே முன் வந்து நிற்கும் இரண்டாம் சுரத்தைக் காட்டும் (துத்தம் என்னும் இந்தத் தமிழிசைச் சுரம் வ்ரிஷபம்< விஷபம்< விடபம்< விடைவம் என்று இன்றைக்குக் கருநாடக இசையில் சொல்லப் படுகிறது. விடைத்து இருப்பதை, முன்வந்து பெருத்து இருப்பதாகவே நாம் கொள்ளுகிறோம். "என்ன ஆச்சு, பெரிசு விடைச்சுக்கிணு இருக்கு? கோவமோ?" பொதுவாய் விடைத்து இருக்கும் ஒரு விலங்கு, விடை என்னும் வ்ரிஷபம் ஆகும்.)

இதே போல, முன் வந்தாற்போல் காட்சியளிக்கும் ஊதுகொம்பைத் துத்தரி என்றும், இன்னொரு வகை ஊதுகொம்பைத் துந்துபி என்றும் சொல்லுவார்கள். சில பழங்கோயில்களில் துந்துபி விழாக் காலங்களில் ஒலிக்கும். வரலாற்றுத் திரைப்படங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள்.

இன்னொரு விதமாய், விண்ணவர்கள் தங்கள் நெற்றியின் முன்னே இட்டுக் கொள்ளும் திருமண்ணுக்கும் கூடத் துத்தி என்ற பெயருண்டு. (இந்தக் காலத்தில் நாமம் என்றே சொல்லிப் பழகியவர்களுக்கு துத்தி என்று சொல்லுவது புரியாது.)

உடம்பில் துந்திக் கொண்டு (முன் தள்ளிக் கொண்டு) இருக்கும் வயிற்றுக்குக் கூடத் துந்தி>தொந்தி என்ற சொல்லாட்சி உண்டு. தொந்திக் கணபதியைத் தெரியாதார் யார்? துந்தியின் நடுவில் இருக்கும் கொப்பூழுக்கும் கூட தலைக் குறைவாய் த் என்னும் ஓசையை ஒழித்து, உந்து>உந்தி என்ற சொல் உருவாகும். உந்துதல் என்ற ஆழமான வினைச் சொல்லுக்கும் கூட முன்தள்ளுதல் என்ற பொருள் உண்டு. பேருந்து, சீருந்து, மகிழுந்து, சரக்குந்து, துள்ளுந்து இப்படிப் பல்வேறு சொற்களும் கிளைத்தது இந்த உந்தென்னும் வினையில் இருந்து தான்.

இனி, யானையின் முன் தள்ளிய கை துதிக் கை. (அதையே வேறுவிதமாய், மூன்று தோலும், இரண்டு துளையுமான தோற்றத்தால், துயிக்கை என்றும் சொல்லுவது உண்டு. துய்>துயி = துளை; துயி என்பது வடமொழிப் பலுக்கில் வழக்கம் போல் ரகரம் நுழைந்து, துய்ரி>த்ரி என்று ஆகும் (மோனியர் வில்லிம்சு இதற்கு வேர்ச்சொல் தரவில்லை. வடமொழியைப் பற்றி நம்மவர் கொண்டுள்ள பல்வேறு நம்பிக்கைகளும் இப்படித்தான் இருக்கின்றன. ஏரணம் - logic - பார்த்து ஆழம் போனால், அடிப்படை மாறிப் போய் விடுகிறது). மூன்று என்ற தமிழ்ச் சொல்லும் கூட மூ என்னும் மூக்கு வேரில் இருந்துதான் கிளைத்தது. மூக்கைக் (மூன்று தோல்; இரு துளை) குறுக்காய்ப் படம் போட்டால் மூன்று என்ற எண்ணும் சொல்லும் வந்துவிடும்; எண்களின் சொற்பிறப்புக்களை இன்னொரு வேளையில் பார்க்கலாம்.)

முன் வந்து நின்று, இறைவனைப் பரவுவது (to pray) துதிப்பது ஆகும். (துதிப்பது என்பது, பூதிகமாய்ப் - physical - பார்த்து, ஒரு வரிசையில் முன்வந்து நிற்பது அல்ல. பலரும் கூடியிருக்கும் போது, அவர்களின் சார்பாய் முன்வந்து பாடுவது; இறைவனின் பெயர்களைச் சொல்லி வேண்டுவது) துதித்தலின் பெயர்ச்சொல் துதித்தம். அது திரிந்து துயித்தம்>தொயித்தம்>தோத்தம்>தோத்ரம் என்று வடமொழியில் போய்ச்சேரும். அதை மீண்டும் கடன் வாங்கி, நம் மூலமே தெரியாது, தோத்திரம் என்று தமிழில் சொல்லுவோம். (அது என்னவோ தெரியவில்லை, பத்தொன்பதாம் நூற்றாண்டு மணிப்பவளத் தமிழ் இன்றைக்கும் கிறித்துவ தேவாலயங்களில் ஆழமாக நிலை கொண்டு இருப்பதால், அங்கு "தோத்திரம், தோத்திரிக்கிறோம்" என்ற கரடு முரடான சொல்லாட்சி மிகுதியாகவே இருக்கிறது; நல்ல தமிழில் "தேவனே! உம்மைத் துதிக்கிறோம் அய்யா!" என்று எல்லா இடத்தும் சொல்ல அவர்கள் ஏனோ தயங்குகிறார்கள். மறைமலை அடிகளாருக்கு அப்புறம் நாமெல்லாம் பழகிய இந்தக் காலத் தமிழில், விவிலிய நூலை யாராவது நடை பெயர்த்தால் நன்றாக இருக்கும். செய்வார்களோ?)

துல்>துள் என்னும் வேர் தல்>தள் எனத் திரிந்து மேலும் நீண்டு, தரு>தார்>தா>த எனப் பலவாறாய்த் திரியும். இந்தத் திரிவுகளில் பல்வேறு தமிழ்ச் சொற்கள் கிளைத்துள்ளன. [இதே போல வள் என்னும் வேர் கூட வரு>வார்>வா>வ என்று திரியும். எந்த வளைவும் நெருங்கியதைக் குறிக்கும். வருதலும் நெருங்குதலே. வள் என்னும் வேர் தமிழுக்குக் கொடுத்த சொற்கள் மிகப் பல. மூன்றாவது காட்டாய் கள்>கரு>கார்>கா>க என்ற திரிவும் ஓசை எழுப்புதலைக் குறிக்கும். கர் என்று ஓசையிடுவது காருதல், கத்தல் போன்ற சொற்களை உருவாக்கும்.]

தள்ளி வந்த வாழைக் குலையைத் தார்/தாறு என்று அழைக்கிறோம். கமுகுத் தாரும் இதே போல சொல்லப்படும். கடலில் கிடைக்கும் அரும் பண்டத்தைத் தார் என்னும் திரிபின் அடியாகப் பிறந்த தாரம் என்ற சொல் குறிக்கும். (புறநானூறு 30ஆம் பாட்டில் வரும் கடற் பல் தாரம் = கடற் பஃறாரம் என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள்.) முன்வந்து தயக்கமில்லாமல் தருவது தார ஆளம்; அதாவது தாராளம். தவத்தின் நீட்சியான தபுதார நிலை பற்றியும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

தார் என்னும் அடியோடு அம் என்னும் ஈற்றைச் சேர்த்து, முற்றிலும் பெரிதாய், ஓங்கி முன்வந்த சுர நிலையை, ஏழு சுரங்களில் இருக்கும் உச்ச சுரத்தைக் குறிக்கும். அதை நிஷாதம் என்று கருநாடக இசையில் குறிப்பார்கள். ஆகத் தமிழில் இரண்டு சுரங்களின் பெயர்கள் (துத்தம், தாரம்) இப்படித்தான் துரு, தரு>தார் என்பதில் கிளைத்தன.

தரவு, தருமம் போன்ற சொற்களைப் பற்றி இந்தக் கட்டுரையின் முதற்பகுதியில் கூறினேன். இது போகத் தரகு என்ற ஒரு சொல்லும் உண்டு; அது trade என்ற பொருளில் வரும். தரகர் என்பவர் பொருடகளைக் கொண்டு விற்பவர் அல்லது வாங்கி விற்பவர். இடைத் தரகர் என்பவர் தரகிற்கு நடுவில் இருப்பவர் ஆவார். [இந்தக் காலத்தில் தரகு என்ற சொல் ஏதோ இழிபொருள் கொண்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. வேண்டுமானால், தரகிற்கு மாறாய்த் தருதை = trade என்றும், தருதையர் = trader என்று சொல்லிப் பார்க்கலாம். அப்படியாவது புழக்கம் ஏற்படட்டும். பொதுவாக, நல்ல நல்ல சொற்களை எல்லாம் நம்முடைய அடிமை வரலாற்றின் தொலைத்துவிட்டு, இன்றைக்கு வணிகர், வர்த்தகர் என்ற சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு, அதன் விளைவாய்த் "தமிழில் மாறுகை (commerce) பற்றிச் சொல்ல முடியாது" என்று பலரும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். புகாரில் பல்வேறு பண்டங்களை புலியிலச்சினை பொருத்தி ஏற்றி இறக்கிக் கொண்டிருந்த நம்மிடம் சொற்கள் இல்லாமற் போகுமா? ஈடுபாட்டோடு முயன்றால் மாறுகைத் தொழிலில் ஏதொன்றையும் தமிழில் சொல்ல முடியும். "பிழை என்பது நம்மிடம் இருக்கிறது; மொழியிடம் அல்ல" என்று எத்தனை தரம் தான் சொல்லுவது? தமிழை எங்கும் பயன்படுத்த முதலில் நமக்கு விருப்பம் வரவேண்டும்.]

தருநன் என்ற சொல்லும் தருமன் என்ற சொல்லும் தருபவன் என்ற பொருளையே குறிக்கும். அதே போல, தருமம் என்ற சொல் தருகின்ற செயலைக் குறிக்கும். இதையும் முட்டாள் தனமாய், dharumam என்று பலுக்கி அது வடமொழியோ என்று ஐயுற்றுத் தடுமாறுகிறோம்.

இனித் தருவின் இன்னொரு திரிவாய் இருக்கும் தா என்ற வினை வேரில் இருந்து கிளைத்த சொல் தான் தானம் என்பதாகும். (தானம் என்ற சொல்லைப் போலவே ஈறு கொள்ளும் கானம், ஞானம், மானம் என்ற வேறு சொற்களை எண்ணிப் பார்த்தால் தானம் என்ற சொல்லின் தமிழ் இயலுமை புரியும்.)

தரு/தா என்ற சொல்லடியில் இருந்து இரு வேறு சொற்கள் இவை போன்று கிளைத்தாலும், தானம் என்ற சொல் கேளாமல் தருவது என்ற பொருளையும், தருமம் என்ற சொல் கேட்டுத் தருவது என்ற பொருளையும் கொள்ளும். தான தருமம் என்ற கூட்டுச் சொல்லைப் பழகுவதே, இந்த இரண்டு விதப் பொருள்களையும் சட்டென்று ஒரே பொழுதிற் சுட்டிக் காட்டும். [இரண்டிற்கும் ஒரே பொருள் இருக்குமாயின் இது போன்ற ஒரு கூட்டுச்சொல் ஏற்பட்டே இருக்காது.]

தள்ளியதன் விளைவால் ஏற்படும் கூலக் கதிர்களையும் கூடத் தானம் என்றே தமிழில் குறிக்கிறோம். (இந்தகைய தமிழ்த் தானத்தை வழக்கம் போல் யகரம் நுழைத்து வடமொழிப் பலுக்காக்கிப் பலரும் தான்யம் என்பார்கள். நாமும் அது எப்படி வந்தது என்று தெரியாமல் திருதிருவென்று விழிப்போம்.) தானம் என்பது நாம் கேளாமல், கூலக் கதிர்கள் தானாகவே தந்தது. cereal என்பதற்கு தானம், கூலம் போன்ற சொற்களை இன்றைக்கு ஆளுகிறோம். முல்லைத் திணையில் மிகச் சிறிதாய்த் தொடங்கிய வேளாண் தொழில், பின்னால் மருதத் திணையில் மேலும் பெருகிச் சிறந்தது. அப்படிச் சிறந்த பின், தானங்களைச் சேர்த்துத் தேக்கி வைத்து வறட்சிக் காலத்தில் பண்டமாற்றுச் செய்ய முடியும் என்ற காரணத்தால், செல்வத்தைச் சேர்த்து வைப்பதற்கு இணையாய்த் தானம் என்ற சொல்லும் கருதப்பட்டது. முடிவில் தானம் என்பது திரிந்து தனத்தையும் (=செல்வத்தையும்) கூடக் குறித்தது. பின்னால் மற்ற செல்வங்களுக்கும் தனம் என்ற சொல்லே பெயராகியது. இனி, அரசின் தனத்தை ஆளுகிறவன் தன அதிகாரி என்று சொல்லப்பட்டான். கோயிலுக்குக் கொடுத்த தானத்தை ஆள்பவர் (அதிகாரி) தானக்காரர், தானத்தார் என்று சொல்லப்பட்டார். தானங்களை வரவு வைத்துக் கோயிலில் கணக்குப் பார்ப்பவர் தானக் கணக்கர் (donation accountant) என்று அழைக்கப்பட்டார்.

தானம் என்ற சொல்லின் இலக்கிய ஆட்சிகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


அன்புடன்,
இராம.கி.

4 comments:

கோவி.கண்ணன் [GK] said...

இராமகி ஐயா,

நன்றாக விளக்கி இருக்கிறீர்கள். ஐயம் தெளிந்தேன்.

நன்றி !

இலவசக்கொத்தனார் said...

//இப்படி நீருக்குள் துருத்திக் கொண்டிருப்பது துருத்தி.//

நீண்டு முன் வந்திருக்கும் பல்லைக் கூட துருத்திக் கொண்டு இருக்கிறது என்றுதானே சொல்கிறோம்.

இன்னும் ஒரு ஐயம். புத்தகம் தவறான பாவிப்பா? நீங்கள் பொத்தகம் என எழுதியிருக்கிறீர்களே என்று கேட்டேன். இது பற்றி தாங்கள் முன்னமே எழுதி இருந்தால் படிக்காமல் விட்டு விட்டேன். மன்னிக்கவும்.

Anonymous said...

ஐயம் தெளிந்தேன், என்ன ஒரு நடை , என்ன புலமை, எத்தனை புது கருத்துக்கள்,
தமிழ் போல வாழ்க, தமிழ் போல வளர்க.

சேவற்கொடியோன் said...

...திரிபுவனச்சக்கரவர்த்தி குலசேகரத்தேவர்க்கு யாண்டு கோநாடான, கடலடையாத இலங்கை கொண்ட சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்துக் கொடும்பாளூர் உடையார் திருமுதுகுன்றமுடைய நாயனார் கோவில் தானத்தார், தளக்கா ஊராளிகள், 'தேவன் திருநெல்வேலி உடையார்க்கு' குடி நீங்கா தேவதானப்பிரமாணம் பண்ணிக்கொடுத்த பரிசாவது, கொடும்பாளூர் கைக்கோளன், வீரன் தொண்டனான விக்கிரம பாண்டிய பண்மர், கோவிலின் அர்த்தயாம பூசைக்கு கொடை அளித்த இலுப்பைக்குடியாகும்..

தென்னிந்திய கல்வெட்டுகள் : 23, எண், 136

"தானத்தார்" என்ற சொல்லாட்சியுள்ள ஒரு சிறு எடுத்துக்காட்டு அய்யா..