Tuesday, January 02, 2007

பாலை - தொடர்ச்சி - 1

"பாலையும் பண்ணும்" என்ற என் முந்தையப் பதிவிற்கு வந்த பின்னூட்டுக்கள் பலவும் பாலை மரங்களைப் பற்றியே எழுந்தன. பண்களைப் பற்றிய செய்திகளில் யாருக்கும் விழைவு ஏற்படாததில் எனக்கு வருத்தமே. இருந்தாலும் கேட்டவற்றிற்கு மறுமொழிக்க வேண்டும் எனத் தனியாக மரங்கள் பற்றி இங்கு பதிகிறேன்.

எப்படி நம்முடைய பண்பாடு, கலைகள் பற்றிய அறிவு தமிழ்மக்களிடையே கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து வருகிறதோ, அதேபோல, சென்ற 50 ஆண்டு காலமாய், தமிழகச் சுற்றுப்புறம் பற்றிய புதலியல் (botany) அறிவும், இயற்கை அறிவும் நமக்குக் குறைந்து வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. தமிழர்கள் என்போர் சிறிது சிறிதாய் மறைந்து, அவர்களுக்குப் பகரியாய் (substitute) தமிங்கிலர்கள் என்போர் உருவாவதன் உட்புலம், இந்த அறிவுக் குறைவிலும் அடங்கியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். எங்கெங்கோ வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் இருக்கின்ற பைன், தேவதாரு போன்ற மரங்களைப் பற்றியெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுகிற நாம், நம்மூர் மரங்களையும், உயிரிகளையும் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டேம் என்கிறோம். நம்முடைய பள்ளிப் பாடத்திட்டங்களும், கொஞ்சம் கொஞ்சமாய் "தமிழம்" என்ற உணர்வைக் குறைத்து, வெறுமையாக்கி, அதில் இந்தியம், உலகம்" என்ற பெரிய உணர்வுகளை மட்டுமே நிறைத்துக் கொண்டிருக்கின்றன. (இதைப் படிக்கும் ஒரு சில மீநிலைத் தேசப் பற்றாளர்கள், "ஆகா, இங்கே பார், ஒரு தேசத் துரோகி" என்று உடனே ஓடிவரக் கூடும். அவர்களுக்குச் சொல்லுவது இதுதான். "நான் ஒன்றும் இந்தியத்திற்கோ, உலகத்திற்கோ எதிராளி அல்ல. தமிழம் என்பதை அறியாமல் ஒதுக்கி, மற்றதை மட்டுமே பேசி, என்னை ஓர் உள்ளீடு அற்றவனாக, ஆக்கிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை; அவ்வளவு தான். என்னைத் தமிழன் - இந்தியன் என்றே அடையாளம் கண்டு கொள்ளுகிறேன். தேசப்பற்று குறைந்தவன் என்று சிலர் கருதினால், இருந்துவிட்டுப் போகிறேன். பர்வா நஹிங்" :-))

அண்மைக் காலங்களாய் இந்திய (குறிப்பாகத் தமிழக) மரங்களைப் பற்றிப் பல பொத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பட்டியல் இட்டு இந்தத் தொடர்முடிவில் கொடுக்க எண்ணியுள்ளேன். பொங்கலுக்குச் சற்று முன்னால் சென்னையில் நடக்கும் பொத்தகக் கண்காட்சி / சந்தையில், இது போன்ற பொத்தகங்களை வாங்கிப் பயனுறும் படி பதிவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இவற்றை வாங்கி உங்கள் வீட்டு நூலகத்தில் வைத்து, அவ்வப்போது படித்துப் பார்த்து, நாம் போகும் இடங்களில் உள்ள மரங்களை அடையாளம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நம்மூர் இயற்கை அதன் வழியே புரியும். நம்மூர் என்ற பெருமிதமும் கூட அந்த அறிவால் வந்து சேரும். தமிழன் என்ற உணர்வுக்கு இந்த அறிவும் பெருமிதமும் ஒரு தேவையே. (இதே போல ஈழத்து மரங்கள் பற்றிய பொத்தகங்களும் தமிழ்நாட்டில் வந்து பரவினால் மற்றோரும் தெரிந்து கொள்ளலாம். தமிழக - தமிழீழச் செய்திப் பரிமாற்றம் இன்னும் கூடவேண்டும். அருகருகில் இருந்துகொண்டு உணர்வால் இப்படி இருவரும் விலகி நிற்பது நல்லதல்ல.)

இயற்கை அறிவுக் குறைச்சலுக்கு (என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.) இந்தப் பாலை மரமும் ஓர் எடுத்துக் காட்டு. கீறினால் பால் வரும் பல மரங்களுக்கு தமிழன் வைத்த பொதுப் பெயர் பாலையாகும். இலத்தீன் வழியே பெயரிடும் புதலியற் பெயரைப் போன்றது தான் இது. ஆனால் அதற்குச் சமமானதல்ல. பாலை என்ற சொல்லை இசையில் மட்டுமே பழந்தமிழன் கையாளவில்லை; திணைக்கும் கூடக் கையாண்டிருக்கிறான். நாலைந்து மரக் குடும்பங்களுக்கும் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்று சிலப்பதிகாரம் 11ம் காதையில் 60ம் வரியில் இருந்து பாலை நிலம் பற்றிய வரையறையை இளங்கோவடிகள் சொல்லுவார். முல்லை, குறிஞ்சி மட்டுமல்லாமல் மருதமும் கூடத் திரிந்து இன்றைக்குப் பாலைத் தோற்றம் காட்டுகின்றன. ஓராண்டிற்கு 8 மாதங்கள் கூடப் பாலைத் தோற்றம் காட்டும் நிலங்கள் தமிழகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. "பாலை தான் இன்றையத் தமிழகத்தின் முகமோ?" என்று கூடச் சிலபோது எனக்கு மருட்டாய்த் தோற்றுவது உண்டு.

உங்களுக்குத் தெரியுமா? சங்க இலக்கியத்தில் மிகுதியான பாட்டுக்கள், பாலைத்திணையில் தான் வருகின்றன. நானும் கூட ஒரு பாலைநாட்டான் தான். எங்கள் ஊர்ப் பக்கத்தில் இருக்கும் நிலத்தைப் பாலைநாடு என்றே நாட்டார்கள் (இவர் பெரும்பாலும் முக்குலத்தோர்) பெயரிட்டுச் சொல்லுவார்கள். இரண்டு பகுதி கொண்ட எங்கள் ஊரின் ஒரு பகுதிப் பெயர் கூடப் பாலையூர்/பாலையப்பட்டி தான் (இன்னொரு ஊர்ப் பகுதி கண்டனூர்). ஆனாலும் பாருங்கள் பாலையை அவ்வளவு கூர்ந்து அறியாமலேயே மேம்போக்காய் என் இளம் பருவத்தைக் கழித்திருக்கிறேன். இப்பொழுது அகவை முற்றிய நிலையில் ஓர்ந்து பார்த்தால், வெட்கமாக இருக்கிறது. கண் கெட்ட பிறகு, சூரிய வணக்கமாய் பாலை பற்றிப் பேசுகிறேன். எதற்கும் ஒரு காலம் வேண்டுமோ, என்னவோ? :-)

பல்வேறு பாலை மரங்கள் பற்றி இங்கு பேசவதாக இருக்கிறேன். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

பாலை என்று சொன்னவுடன், முதலில் நினைவிற்கு வருவது பாலைத் திணையைக் குறிக்கும் மூன்று மரங்கள்; ஒன்று. உலக்கைப் பாலை. (இதை மஞ்சப் பாலை என்றும் சிலர் சொல்லுவார்கள்). இரண்டாவது, குடசப்பாலை (Holarrhena antidysenterica). மூன்றாவது வெட்பாலை (Wrightia tinctoria.). பாலைத்திணையில் இந்த மூன்று அடிப்படை மரங்கள் போக அங்கு ஓமை, ஞெமை, மரா, குரா, யா எனப் பல மரங்களும் உண்டு. அவற்றின் தமிழ்ப்புலம் பற்றியும், அவற்றிற்கான ஆங்கிலப் புதலியற் பெயர்களையும் இங்கு பேசினால் பதிவு பெரிதும் நீண்டு போகும் என்பதால் அவற்றை விடுக்கிறேன்.)

உலக்கைப் பாலையை ஆங்கிலத்தில் Manilkara Hexandra அல்லது Mimusops hexandra என்று சொல்லுவார்கள். (பெரும்பாலும் Minusops என்பதையே புதலியலில் இப்பொழுது வழங்குகிறார்கள். Mimusops என்ற சொல்லுக்கு 'மாந்தக் குரங்கைப் போல' என்று பொருள். Wedge-leaved ape-flower என்ற பெயர் அதன் பூவிற்கு அப்படி வந்ததோ, என்னவோ? பூவில் ஆறு மகரந்தத் தண்டுகள் இருப்பதால், பின்னால் உள்ள hexandra என்ற பெயர் எழுந்தது.). தமிழில் புதலியல் ஒழுங்காய் வளர வேண்டுமானால், புதலியல் முறையில் அவற்றிற்குத் தமிழில் இரட்டைப் பெயரிட வேண்டும் என்று ஒரு சீரான முறையில், "தமிழ்நாட்டுத் தாவரங்கள்" என்ற பொத்தகத்தில், முன்னாள் தமிழக வனத்துறைத் தலைவர் ச.சண்முகசுந்தரம் இந்தப் பாலையைக் கணுப்பாலை மகிழம் என்று புதிய புதலியற் பெயர் வைத்து அழைப்பார்.

மகிழம் என்ற பொதுப்பெயர் ஏற்கனவே இன்னொரு வகையான இளஞ்சி மகிழத்தைக் (Mimusops elangi) குறிப்பிடும். இளஞ்சி மகிழத்தின் பூவும் அதன் நறுமணமும் பெரும் புகழ் கொண்டவை. நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் ஆழியூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணங்குடி பெருமாள் கோயிலின் தலமரம் இந்த இளஞ்சி மகிழம் தான். (இளஞ்சி மகிழத்தைக் காயா மகிழ் என்று திருமங்கை ஆழ்வார் சிறப்பிப்பார்.) மகிழத்தை வடமொழியில் பகுள / வகுள என்று அழைப்பார்கள். நம்மாழ்வாருக்கு, வகுள ஆபரணர் (= மகிழத்தை அணிந்தவர்) என்ற பெயரும் உண்டு. ஒருவேளை பாலை>பால என்ற சொல், பகுல>பகுள>வகுள என்று வடபுலத்தில் ஆகி மீண்டும் தமிழகத்தில் நுழையும் போது மகிழம் என்ற பொதுப் பெயர் பெற்றதோ என்று விளங்கவில்லை. இன்னும் சான்று தேடிக் கொண்டு இருக்கிறேன். பகுத்தது பால் என்று தமிழில் திரிவதை எண்ணிப் பார்த்தால், நான் சொல்ல வருவது புரியும்.

இதே Mimusops மரக் குடும்பத்தில், மேலே சொன்ன இரு வகைகள் போக, இன்னும், இரு வகைகளாய் Mimusops kauki (வெளிரிய இலை கொண்ட மரம் kauki), Mimusops littoralis (திருமரைக்காட்டிற்கு அருகில் கடற்புறத்தில் பரந்து கிடந்ததால் இது littoralis) ஆகியவற்றையும் சொல்லுவார்கள். (மறுபடியும் ஓர் இடைவிலகல். அந்த ஊர் மறைக்காடு அல்ல; மரைக்காடு தான். கால காலமாய் நாம் எழுத்துப் பிழை செய்து, அதை வடமொழியிலும் முட்டாள்தனமாய் மொழிபெயர்த்து, வேதாரண்யம் என்று சொல்லி, எத்தனை நாள் தடுமாறிக் கட்டிக் கொண்டு, அலையப் போகிறோமோ தெரியவில்லை, உருப்படியாகப் பழைய பெயரை, இனிமேல் கையாளத் தொடங்கலாமே? அலையாத்திக் காடுகளில், மரை மான் மிகுதியாய் இருந்ததால், இது மரைக்காடு. பாடல் பெற்ற கோயில் என்பதால் திரு மரைக்காடு.)

மாராட்ட (Maharashtra) மாநிலத்தில் கொங்கணப் பகுதியிலும், கூர்ச்சர (Gujarat) மாநிலத்தில் காந்தேஷ் பகுதிகளிலும் உள்ள உலர்காடுகளிலும், தக்காணத்தில் கர்நாட்டிக் பகுதிகளிலும் இந்தப் பாலை மரங்கள் அதிகமாக உள்ளன. (கர்நாட்டிக் என்பது ஒரு வெள்ளைக்கார சொல்லாட்சி. கர்நாடக மாநிலத்திற்கும் அதற்கும் தொடர்பே இல்லை. விசாகப் பட்டினத்தில் தொடங்கித் தெற்கே கிழக்குக் கடற்கரை முழுக்க, குமரிமுனை வரைக்கும் உள்ள, பகுதியைத் தான் கர்நாட்டிக் என்று குழப்பமான வகையில் புவிவரைவில் - geography - அழைக்கிறார்கள். இதைச் சோழமண்டல / கோரமண்டலக் கடலோரம் என்றும் அழைப்பதுண்டு.)

கடல்மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயர்பகுதி வரை புதர்க் காடுகளில், உலக்கைப் பாலையும், குடசப் பாலையும் வளர்கின்றனவாம். ஒரு காலத்தில் எங்கள் காரைக்குடிப் பகுதியில் இந்த மரங்கள் மிகுதியாக இருந்தன; இன்று அவை பெரும்பாலும் வெட்டப்பட்டு, மறைந்து வருகின்றன. கரும் புரசு (Chloroxylon swietenia) வளருகின்ற இடங்களில் எல்லாம் இந்தப் பாலை மரங்களைக் காணலாம். முன்னே சொன்ன, மரைக்காட்டுக் கடற்கரைப் பகுதியில் உள்ள இன்னொரு கடினமான பாலை மரத்தை Manilkara littoralis என்பார்கள். இதனை அந்தமான் துப்பாக்கிக் குண்டு மரம் (andaman bullet wood) என்றும் சொல்லுவது உண்டு.

கன்னடத்தில் பொதுவாகப் பாலையைப் பாலெ/ஹாலெ என்று அழைப்பார்கள். தெலுங்கிலும் இது போன்ற பெயரே உண்டு. மலையாளத்திலும் இதே பெயர். வடபுலத்தில் Ranjana என்று அழைப்பார்கள். "பாலை நின்ற பாலை நெடுவழி" என்று சிறுபாணாற்றுப் படை 11 - ஆம் வரியிலும், "பாலை சான்ற சுரம்" என்று மதுரைக் காஞ்சி 314 - ஆம் வரியிலும் காட்டுவார்கள். ஐங்குறு நூறு 317 - ஆம் பாட்டில்,

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சே நீடிய பொருளே

"சூழ்ந்து வா தோழி! பசுமை இல்லாது வெந்து பாழ்பட்ட கொடிய பாலைக்காட்டு அருஞ்சுரத்தில் போன தலைவரிடம், தூதாய்ச் சென்ற என் நெஞ்சு விரைந்து திரும்பி வராது இருக்கிறது; காலமும் நீள்கின்றது. இதன் பொருள் என்ன வென்று தெரியவில்லையே? அதை ஆராய்வோம், வா" என்று தோழியிடம் உரைத்தாளாம். பொதுவாகப் பாலை நிலத்து மரங்கள் இப்படி ஒரு வெறுமை விதர்ப்பைக் காட்டுவதைச் சங்க இலக்கியம் நெடுகவும் அறியமுடியும்.

பெரும்பாலான பாலை நிலத்து நிலத்திணைகள், மேலே சொன்ன தமிழகக் கிழக்குக் கடற்கரையில் இருப்பதைப் போலவே தமிழீழக் கடலோரமும் இருக்கப் பெரும் வாய்ப்பு இருப்பதால், ஈழத்து நண்பர்களும், திரு.சுந்தரவடிவேலும், பாலை என்று முந்தையப் பதிவின் பின்னூட்டுக்களில் தெரிவித்த மரம் இந்த Mimusops மரங்களில் ஒன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். (குறிப்பாக எந்தப் பாலை என்று என்னால் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. ஈழத்து நண்பர்களில் புதலியலாளர் யாரேனும் இருந்தால் உறுதி செய்யலாம்.)

[ஒரு கட்டுரை எழுதினால், இடை விலகிக் கொண்டே இருப்பது எனக்குப் பழக்கமாய் ஆகிவிட்டது. செய்திகள் ஓடிவந்து "சொல், சொல்" என்று ஆணையிட்டால், என்ன செய்வது? இதோ, இன்னொரு இடைவிலகல்.

இன்றைய கடல்வரைவியல் (oceanography), புவியியல் (geology) ஆய்வுகளைச் சங்க இலக்கியச் சான்றுகளோடு பொருத்திப் பார்த்தால், இந்தப் பக்கம் இராமேசுரம் தொடங்கி, மரைக்காடு முடியும் நிலப்பகுதிக்கும், அந்தப் பக்கம் தலைமன்னார் தொடங்கி யாழ்ப்பாணத்திற்குச் சற்று மேல் வரை முடியும் நிலப்பகுதிக்கும், இடைப்பட்டு, இதே போல நீரில் பாக் நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும், இடைப்பட்ட கடல், ஆழம் குறைந்திருந்த காலங்களில் நிலமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை ஓர்ந்து பார்க்க முடியும். அப்படி நிலமாய் இருந்த காலத்தை உறுதி செய்வதில் தான் ஆய்வாளர்களிடம் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருசில ஆய்வாளர்கள் அது 2500/3000 ஆண்டுகள் முன்னர் என்றும், இன்னும் சிலர் அது 8000 ஆண்டுகள் முந்தியது என்றும் சொல்லுகிறார்கள். எது சரி என்று இன்றைக்கு அறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் கடலுக்குள் அழிந்த இந்த நிலம் பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. பாண்டியன் முடத் திருமாறன் தன் காலத்துக் கடல்கோளுக்கு அப்புறம், சோழனிடம் வவ்விக் கொண்ட முத்தூர்க் கூற்றம் என்பது, அழிந்து போன இந்தப் பகுதிக்கு அடுத்திருக்கும் இன்றைய ஆவுடையார் கோயில், தொண்டி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை அடங்கியுள்ள பகுதியே.

அழிந்து போன இந்த நிலத் தொடர்பு இல்லையென்றால் ஈழத்தீவிற்கும், இந்தியத் துணைக்கண்டத்திற்குமான முற்று முழுதான தொடர்பைச் சரியாக விளக்க முடியாது. பாலை மரம் இரண்டு பக்கமும் பரவியது இந்தப் பழந்தமிழக நிலத் தொடர்பால் தான். ஆயிரம் தான் மற்றவர் சொன்னாலும், பழந்தமிழகத்தில் ஈழத்தீவும் ஒரு பகுதியே.]

அடுத்த பகுதிக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

முகில் said...

சைவக்குரவர்களின் காலம் எனக்குச் சரியாக ஞாபகமில்லை.

ஆனால் ஒரு எண்ணம் எழுகின்றது - அப்பரோ/சம்பந்தரோ திருக்கோணேஸ்வரரை நினைந்து பாடியதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் ஈழத்தீவுக்கு வந்திருக்கிறார்களா, அப்படியானால் என்ன பயணமுறையால்(நிலத்தொடர்பா அல்லது கடல் வழியா) (இவர்களல்லாத வேறு பயணிகளைக் கூட ஆராயலாம்)எனத் தேடினால் அத்தகவல்கள் ஒரு வேளை தமிழகத்திலிருந்து இலங்கைத் தீவு பிரிந்த கால கட்டத்தைக் கணிக்க உதவக் கூடுமல்லவா?

இராதாகிருஷ்ணன் said...

மரம், செடி முதலான இயற்கை வளங்களைப் பற்றிய பார்வைகள் (குறிப்பாகத் தமிழில்) அருகி வரும் காலகட்டத்தில் இதுபோன்ற பதிவுகள் மகிழ்வை உண்டாக்குகின்றன. (இசை குறித்த தங்களது முந்தைய பதிவுகளைப் பிறிதொரு சமயத்தில் வாசிக்கிறேன்).

இப்பதிவின் ஆரம்பப் பத்திகளில் சொல்லப்பட்டுள்ள கருத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள தாவரங்களைக் குறித்த அறிவு மட்டுப்பட்டுக் கொண்டே வருவது வருத்தமாயும் உள்ளது. காட்டாக, பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்தென்று பரிந்துரைக்கப்பட்ட தேநீர் (Brennesseltee) ஒன்றின் செடியை எங்கேயோ பார்த்தது போலிருந்தது; ஆனால் தமிழில் அச்செடியின் பெயர் தெரியவில்லை. கடைசியில் ஒரு வழியாக தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பக்கத்தின் உதவியுடன் அதைச் "செந்தொட்டு, பூனைக்காஞ்சொறி" என்று கண்டறிந்தேன். இவற்றைக் குறித்த மேல் விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளவேண்டுமென்றால் வேற்று மொழிப் பக்கங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அச்சிடப்பட்ட விவரங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. (தேநீர் என்றால் தேயிலையில் இருந்து கிடைப்பது மட்டுமே என்று கிணற்றுத் தவளையாக இருப்பதால் வேறு தாவரங்களின் வாயிலாகத் தயாரிக்கப்படும் தேநீர் குறித்த செய்திகள் சில சமயம் ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது :( ).

ஒவ்வொரு முறையும் மரம், செடி, விலங்குகள் தொடர்பான புத்தகங்களைக் காண நேரும் போதும், தமிழில் இவ்வளவு தரமான நூல்கள் என்றைக்கு வருமோ என்று ஏங்குவதுண்டு. கொள்வாருக்குப் பஞ்சமாக இருப்பதால் கொடுப்பாரும் எத்தனிப்பதில்லையோ? முன்புபொருமுறை தங்களது புங்கை மரம் குறித்ததான பதிவொன்றில் 'வளம் தரும் மரங்கள்' பற்றி வாசித்ததாக நினைவு. அப்புத்தகத் தொகுப்பை சென்ற ஆண்டு கோவை நி.செ.பு.ஹ-ல் விசாரித்துப் பார்த்தபோது, தொகுப்பின் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே ஏதோவோர் ஓரத்தில் தூசியும் அழுக்கும் நிரம்பி அவற்றில் ஒரு சில செல்லரித்தும் காணப்பட்டது. யாரை நொந்து கொள்வது? தமிழகம் முழுவதும் தேடினாலும் இத்தொகுப்பிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் நல்ல நிலைமையில் வாங்குவது மிகவும் ஐயத்திற்குரியதே என்று கடைக்காரர் தெரிவித்தார். ஒரு சில புத்தகங்கள் மறுபதிப்புக்காகக் காத்திருக்கிறது என்ற தகவலும் கிடைத்தது.

பதிப்பகத் துறையில் இன்று பலமாற்றங்கள் நிகழ்ந்து நல்ல தரமான வடிவில் புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இச்சூழலில் மேற்படியான புத்தகங்கள் நல்ல முறையில் அச்சிடப்பட்டு வெளிவந்தால் நன்றாக இருக்கும். இன்னொன்றையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இதுபோன்ற முயற்சிகளை ஒருசில பதிப்பகங்களே (எ-கா. மெய்யப்பன் தமிழாய்வகம்) செய்கின்றன, அதுவும் தனியார்வத்தின் பேரால். இவ்வகையில் 'நேஷனல் புக் டிரஸ்ட்'டும் பாராட்டிற்குரியது.

தாவரங்களைப் பற்றி எழுதப்படும் புத்தகங்களில் பல கோணங்களில் தெளிவான படங்கள் இருப்பது மிகவும் அவசியமானதென்று கருதுகிறேன். நான் பார்த்த ஓரு சில புத்தகங்களில் இவை காணக்கிடைக்கவில்லை.

ஒரு வேண்டுகோள்: //சென்னையில் நடக்கும் பொத்தகக் கண்காட்சி / சந்தையில், இது போன்ற பொத்தகங்களை வாங்கிப் பயனுறும் படி பதிவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.// இயலுமெனில், இவ்வாண்டு அங்கு நடக்கும் காட்சியில் தாங்கள் காணும் நல்ல புத்தகங்களின் பட்டியலை இப்பதிவில் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வெளியில் இருக்கும் என்னைப் போன்றோருக்கு மிகவும் உதவியாயிருக்கும்.

பாலை மரங்கள் தொடர்பான இப்பதிவில் சில படங்களைச் சேர்த்தால் இன்னும் நன்றாயிருக்கும் (இரண்டாவது பாகத்தில் படம் வரவில்லை).