Friday, July 07, 2006

ஒப்பந்த மானுறுத்தலாய்க் காட்சிதரும் கல்வி வாணிகம் - 2

கல்வி என்பது இன்றைய நடைமுறையில் வணிகத்தின் சில கூறுகளையும், மானுறுத்தலின் சில கூறுகளையும் கொண்டு ஒரு கலவையாய் பொதினத்தின் இழிந்த நிலையாய்க் காட்சியளிக்கிறது. இங்கே மாணவன் என்பவன் பள்ளியில் முதலில் நுழையும் போது இயல்பொருளாகவும், பின் பல்வேறு செலுத்தங்களால் (குறிப்பாக கல்விச் செலுத்தத்தால்) பண்பட்டு புதுக்கம் அடைந்து ஒரு விளைபொருள் போலவே வெளிவருகிறான். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், அவனுக்கு நடப்பது எல்லாம் அவன் பட்டகை (fact) சேகரிக்கும் அறிவில் நடக்கும் புதுக்கம் மட்டுமே. சுருங்கச் சொன்னால் அவன் அறிவு ஓரளவு மேம்படுகிறது. எனவே இது அறிவூட்டும் தொழில்; நம்முடைய பழைய உணரலில் தெரிந்த கல்வி அல்ல. [அறிவு என்பது இன்றைய அளவில் புதிரிகளைச் சுளுவி எடுக்கும் (to solve problems) வகையில் பல்வேறு நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுப்பதாய் இல்லை; மாறாக வெறும் விதயங்கள் மற்றும் பட்டகைகளை கொண்டு வந்து போட்டு மூட்டையாகக் கட்டித் திணிக்க வைக்கும் வேலையாகவே இருக்கிறது. ஏரணம் (logic), ஏதொன்றையும் படித்த அளவிலேயே ஒப்புக் கொள்ளாமல் அதன்மேல் கேள்வி கேட்கும் தன்மை, விடை கிடைக்கும் வரை தேடுகின்ற ஆர்வம், சொந்த உழைப்பு இவற்றையெல்லாம் சொல்லித் தருவதாக இந்த அறிவூட்டும் தொழில் இல்லை.]

இந்த அறிவூட்டும் தொழிலில், அல்லது அறிவு மேம்படுத்தும் தொழிலில், இன்னும் தெளிவாகச் சொன்னால் அறிவூட்டும் பொதினத்தில், நாம் இயற்கையாய் எதிர்பார்க்கும் தரம் கடைப்பிடிக்கப் படுகிறதா என்பது பெரும்கேள்வி. சரி, வணிகம் என்று சொல்லுகிறோமே, அது எங்கு நடக்கிறது? அதை அறிய மானுறுத்தத் தொழிலில் இப்பொழுது எங்கணும் பரவிவரும் ஒரு முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைச் சவர்ப்புக் கட்டி (soap) விளைவிப்பவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள். இவர்களில் மிகப் பெரிய பொதினக்காரர்கள் தங்கள் வயம் மானுறுத்தலைப் பெரும்பாலும் வைத்துக் கொள்ளுவதில்லை. மாறக, வேறொரு மானுறுத்தருடன் இவர்கள் ஆண்டு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுவார்கள்; காட்டாக ஒரு வலிய பொதின நிறுவனம் ஏதோ ஒரு சவர்ப்புக் கட்டியை 1000 டன்கள் விளைவிக்க எண்ணுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோமே! ஒவ்வொன்றும் 50 கிராம் கட்டியாகப் புதுக்கம் நடைபெறவேண்டும்; அப்பொழுது ஒரு டன்னிற்கு 20000 கட்டிகள் வீதம் 20 நுல்லியன் (million) கட்டிகளை விளைவித்துத் தரும் படி தமிழ்நாட்டில் ஒரு மானுறுத்தரிடம் (அந்த மானுறுத்தர் சந்தையில் வலிய பொதினத்திற்குப் போட்டியாளராய்க் கூட இருக்கலாம்.) ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுவார்கள். சவர்ப்புக் கட்டிக்குத் தேவையான பெரிய இயற்பொருட்களை வலிய பொதினக்காரர்களே வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். மற்ற பொருட்களையும் ஊடுழைகளையும் தானே வாங்கிக் கொண்டு, அல்லது விளைத்துக் கொண்டு, வலிய பொதினத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, கட்டியைச் செய்து தருவது ஒப்பந்தக் காரரின் வேலை.

ஒப்பந்தக்காரர் தரும் கட்டியின் கொளுதகையைக் (cost) கூட வலிய பொதினமே நிர்ணயித்து விடும். "இந்தக் கொளுதகையையை ஒப்பந்தத்தில் எழுதிக் கொள்ளுவோம். அதற்கு மீறி ஒரு சல்லிக் காசானாலும் அது உங்கள் பக்கம்; நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோ ம். குறைந்தால் அது உங்கள் பொலுவு (profit); சவர்ப்புக் கட்டியில் இன்னின்ன பொருள்கள் இன்னின்ன செறிவில் இருக்க வேண்டும்; இந்தந்தக் குணங்கள் கட்டிக்கு இருக்க வேண்டும்" என்று புதுக்கங்களின் தரக் கட்டுப்பாட்டையும் (quality control) வலிய பொதினக் கும்பணி ஒப்பந்தந்தில் எழுதிக் கொடுத்து விடும். ஏதேனும் குழறுபடிகள் ஏற்படுமானால் அதற்கு மாற்று வழிகள், தண்டனைக் கட்டணங்கள் என எல்லாமே ஒப்பந்தத்தில் புள்ளிவைத்து எழுதிக் கொண்டுவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தக்காரர் மேல் வலிய பொதினம் போடும் சுருக்குகள் கூடிக் கொண்டே போகும். இத்தனைக்கும் வளைந்து கொடுத்து, ஒப்பந்த மானுறுத்தர் (contract manufacturer) வேலை செய்ய வேண்டும். ஏனென்றால் ஒப்பந்தம் என்பது இருவரையும் ஆழப் பிணைப்பது. இதற்கு ஒத்து வராத ஒப்பந்தக் காரர் தன்னுடைய பொதினத்தை இழந்து விடுவார். மாறுகடையில் (market) அவரில்லை என்றால் இன்னொருவர் என்று போட்டியோ போட்டி. எனவே ஒப்பந்தம் போட்டபின்னால், இது போன்ற ஒப்பந்த மானுறுத்தலில் மீறவே முடியாத ஓர் இணைப்பு.

ஆனால் அறிவூட்டும் தொழிலில் நடப்பது என்ன?

ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன்னால், நாம் அனுப்பும் இயல்பொருள் போன்ற மாணவன் பள்ளியின் உள்ளே போய் புதுக்கமுற்று வெளியே வரச் செய்வதாய் நம்மிடம் சொல்லி, மாணவன் ஆட்கொள்ளும் இடத்தை, அதற்கான பள்ளியின் கொண்மையை(capacity)க் கூவிக் கூவி பள்ளிப் பொறுப்பாளர்கள் விற்கிறார்கள். "உங்கள் பிள்ளை இங்கு வந்து படித்தால், இந்த இடத்திற்கு இவ்வளவு செலவு ஆகும், உங்கள் பிள்ளையின் அறிவு மேம்பட்டு இப்படி வெளியே வரும்; அவன் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்குவான்; எப்படியும் மேல்நிலைப் பள்ளியின் இறுதியில் உயர்ந்த மதிப்பெண்களில் தேர்ந்து பொறியாளர்/மருத்துவர் என ஏதோ ஒன்றாக ஆகிவிடுவான்" என்று வண்ண வண்ணமாய்க் கனவுகளைத் தீட்டி நம் முன்னே காண்பிக்கிறார்கள்; நாமும் அதற்கு ஆட்படுகிறோம். ஆனால் பள்ளியோடு ஒப்பந்தம் போடுகிறோமா என்றால் இல்லை. ஏனென்றால் மக்கள் என்பவர் வலிய பொதினமாய் இருப்பதில்லை. சிதறிச் சிதறி, துண்டு துண்டாய்க் கிடக்கிறார்கள். ஒப்பந்த மானுறுத்தர் என்ன வேண்டுமானாலும் செய்ய முடிகிறது. அவர்கள் வானை வில்லாய் வளைக்கிறார்கள்; மணலைக் கயிறாய்த் திரிக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.

No comments: