Saturday, July 30, 2011

இலக்கியம் - இலக்கணம் - 3

"இன்னுஞ் சொன்னால் ஒருவேளை ஏற்கவே இயலாது போகலாம். இலுத்ததைத் தான் (> இழுத்தது) வெள்ளைக்காரன் இழுத்தர்> எழுத்தர் (letter) என்று சொல்வான். 'அதன் சொற்பிறப்பு எங்கேயிருந்து வந்தது என்று தெரியவில்லை' என்று அவர் அகரமுதலியில் சொல்வார்."

mid-12c., 'graphic symbol, written character,' from O.Fr. lettre, from L. littera (also litera) "letter of the alphabet," of uncertain origin, perhaps from Gk. diphthera "tablet," with change of d- to l- as in lachrymose. In this sense it replaced O.E. bocstæf, lit. "book staff" (cf. Ger. Buchstabe "letter, character," from O.H.G. buohstab, from P.Gmc. *bok-staba-m). The pl. litteræ in Latin meant "epistle, written documents, literature," a sense first attested early 13c. in M.E., replacing O.E. ærendgewrit, lit. "errand-writing." School letter in sports, first awarded by U. of Chicago football coach Amos Alonzo Stagg.

"இதோடு நிறுத்த மாட்டார். 'literature' என்று அவர் ஊரிற் சொல்லுகிறாரே, அதுவும் 'letter' என்பதில் இருந்து எழுந்தது என்று சொல்வார்.

late 14c., from L. lit(t)eratura "learning, writing, grammar," originally "writing formed with letters," from lit(t)era "letter." Originally "book learning" (it replaced O.E. boccræft), the meaning "literary production or work" is first attested 1779 in Johnson's "Lives of the English Poets" (he didn't include this definition in his dictionary, however); that of "body of writings from a period or people" is first recorded 1812.

"நாமோ இலுக்குதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கும், இலுத்தல்>இழுத்தல்>எழுத்து என்ற விரிவிற்கும், இலக்கியம் என்ற சொல்லிற்கும் உள்ள உறவை ஐயப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்." .

இல்லுதல்> இலுங்குதல்> இலுக்குதல்> இலக்குதல்
இலுக்கு> இலக்கு = எழுத்து, குறி
இலக்குகளால் இயன்றது இலக்கு + இயம் = இலக்கியம்

"தம்பி நீ சொல்வது ஒருவேளை உண்மையாயிருக்கலாம். ஆனால் இலக்கியம் என்ற சொல் சங்க இலக்கியத்திலே இல்லையாமே?"

எழுத்து என்ற சொல் இருக்கு அண்ணாச்சி. அந்தப் பெயர்ச்சொல் எங்கிருந்தோ குதித்து வரவில்லை. அது இலுத்தலில் இருந்து ஏற்பட்ட வளர்ச்சி. வேறு எப்படியும் எழுத்தென்ற சொல் எழ முடியாது. இலுத்தலில் இருந்து இன்னொரு வளர்ச்சி ஈல்தல். ஈலின் திரிவு ஈர்த்தல் ஆகும். அந்த ஈர்த்தலும் எழுதல் என்ற பொருள் கொடுக்கும். கலித்தொகையில் ஒரே பாட்டில் இருவேறு சொற்களில் எழுதற் செய்தி வரும்.

நெய்தல் நெறிக்கவும் வல்லன்: நெடுமென்தோள்
பெய்கரும்பு ஈர்க்கவும் வல்லன்’ இளமுலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்;தன் கையில்
சிலைவல்லன் போலும் செறிவினான்; நல்ல
பலவல்லன் தோளாள் பவன்

- (கலித் 143.31-35).”

”இங்கே ஈர்த்தல், எழுதல் என்ற இரண்டு சொல்லும் ஒரே பொருளைக் குறிப்பன. அதோடு இல்> ஈல் உறவையும் குறிப்பன. இல்லில் இருந்து எழுத்தும் இலக்கியம் ஓரெட்டுத் தான்.”
.
"அண்ணாச்சி, பொதுவாய்ச் சொல்கிறேன். சங்க இலக்கியம் என்பது நமக்குக் கிடைத்த தொகுதி. இதைக் கொண்டு தரப் பலர் உழைத்திருக்கிறார். குறிப்பாகத் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவருக்குக் கிடைக்காமற் போனது ஏராளம். கிடைத்தும் தவறவிட்டது எக்கச் சக்கம். சங்க இலக்கியம் என்பதை ஏதோ அகரமுதலி மாதிரி நாமெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது. நம்முடைய ஆகூழ் அவ்வளவு தான். இருப்பதை வைத்து இல்லாததை ஊகிக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் இல்லாது பிற்காலத்திற் புழங்கிய சொற்கள் உருவான காலம் எதுவென்று யாருக்குத் தெரியும்?"

"தம்பி, கடினமான கேள்வியைக் கேட்கிறாய். printed book salvation பார்க்கிறவர் எப்பொழுதும் இருக்கிறார். அவரிடம் உன் ஏரணம் பலிக்காது. ஏதொன்றையும் அச்சிற் பார்த்தாற் தான் அவர் ஏற்றுக் கொள்வார்."

"அப்படியானால் பலவற்றையும் நிறுவுவது கடினம் அண்ணாச்சி. இப்பொழுது, ஒரு வினைச்சொல் சங்க இலக்கியத்திலிருக்கும். அதோடு பொருந்திய பெயர்ச் சொல் இருக்கவே இருக்காது. இயலுமையைப் பார்க்கக் கூடாது என்றால் எப்படி? அதே போலப் பெயர்ச்சொல் இருக்கும். வினைச்சொல் நேரே கண்ணுக்குத் தெரியாது. எப்படி வந்தது என்று ஓர்ந்து பார்க்க வேண்டாமா? வினைச்சொல் இல்லாது பெயர்ச்சொல் எப்படியெழும்? ”மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்பது எப்படி? அப்பொழுது தொல்காப்பியம் தவறா? இலக்கித்தல் என்ற சொல் எழுதற் பொருளில் கி.பி.8 ஆம் நூற்றாண்டுச் சிந்தாமணியில் வந்திருக்கிறது. அதன் பெயர்ச்சொல் இலக்கியம் என்றில்லாது வேறு என்னவாய் இருக்க முடியும்.?"

"இவ்வுருவு நெஞ்செனும் கிழியின் மேலிருந்து இலக்கித்து” - சீவக 180

"எனக்குத் தெரிந்து சிந்தாமணி தான் இலக்கித்தல் வினையை முதலிற் குறிக்கும் எடுகோட்டு (reference) நூல். அதற்கு அப்புறம் 9 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில் இலக்கியம் என்ற சொல் வந்துள்ளது. அதிலும் ”ம்” என்கிற எழுத்துப் பிழை ஏற்பட்டு உதாரணம் என்ற பொருளில் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த எழுத்துப் பிழை இயலுமையைக் கூடப் பலரும் ஏற்க மாட்டேம் என்கிறார். சற்று விளக்கிச் சொல்கிறேன்."

"திவாகரம் 1834 ஆம் சூத்திரத்தில் இருந்து பாருங்கள். ஓர் ஒழுங்குமுறை தென்படும்."

"1834. நூல் என்பதன் பெயர் இங்கு கொடுக்கப்படுகிறது: திவாகரத்தில் இந்நூற்பா தான் மொத்த நூல் பற்றிப் பேசுவது. நூல் என்பது இலக்கியமாகவும் இருக்கலாம்; இலக்கணமாகவும் இருக்கலாம். அதிகாரம் என்ற முதற்சொல் சிலப்பதிகாரம் என்ற நூலின் பெயரில் ஆளப்பட்டிருக்கிறது. ஆரிடம், பனுவல், ஆகமம், பிடகம், தந்திரம் ஆகிய சொற்கள் நூல் பற்றிய வேறு பெயர்களாய்க் குறிப்பிடப் படுகின்றன. இவைகள் எல்லாம் பொதுவான நூல்கள். விதப்பான “இலக்கியம்” என்று சொல்ல முடியாது. அதே பொழுது இலக்கியம் என்பதும் நூல் தான். ஆகமம் என்ற சொல் பாட வேறுபாட்டில் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது."

"1835. பாயிரத்தின் பெயர்: நூலின் முதற்பகுதி. நன்னூல், தொல்காப்பியம் போன்றவற்றில் வரும் முதற்பகுதி. இப்பொழுது நூலுக்குள் வந்துவிட்டோம். அடுத்திருக்கும் நூற்பாக்களில் வரப்போகும் பெயர்கள் நூலுக்குள் உள்ள பகுதிகளின் பெயர்கள். நூலைப் பற்றிய பெயர்கள் அல்ல."

"1836 மூதுரையின் பெயர்; இது பெரும்பாலும் பழைய உரை (commentary) என்றே பொருள் கொள்ள முடியும்."

"1837. பாடத்தின் பெயர்: பாடம் என்பது தான் ஆசிரியர் எழுதிய சரியான உண்மையான உள்ளீடு (proper actual content written by the author)."

"1838 நூற்பா - அகவலின் பெயர்: இது இலக்கணத்தில் வரும் விதப்பான சொல் நூற்பா - சூத்திரம். சூத்திரங்களால் ஆனது பாடம். பாடம், பாயிரம் போன்றவை சேர்ந்தது நூல். நூற்பா என்பது அகவல் யாப்பில் வரும்."

"1839 ஓத்தின் பெயர். இது நன்னூற் பாயிரத்தில் விளக்கப் படும். ஒரு குறிப்பிட்ட வரிசை (அல்லது தலைப்பு) பற்றிய நூற்பாக்களின் தொகுப்பு."

"1840 படலம் எனும் பெயர். இதுவும் நன்னூற் பாயிரத்தில் வரும். வெவ்வேறு தலைப்புக்களின் அடியில் உள்ள நூற்பாக்களின் தொகுப்பு."

"1841 வேற்றிசைப்பா எனும் பெயர். அகவலில் இருந்து மாறி விருத்த நடையில் இருக்கும் பாக்கள். இது சருக்க முடிவிலும் இலம்பக முடிவிலும் வரும் என்று கி.பி.8 ஆம் நூற்றாண்டு, 9 ஆம் நூற்றாண்டு நிலையை/வழக்கத்தைக் கூறுகிறது."

"1842 உரைப்பொருளின் பெயர்: விரித்துக் கூறும் உரைப்பொருள் பற்றியது."

"1843 பொழிப்பு எனும் பெயர்; நூலுக்குள் வரும் நூற்பாக்களுக்கான பொழிப்பு."

"1844. பதிகம் எனும் பெயர்: சிலப்பதிகாரத்தில் வருவது போன்ற பதிகம். கிட்டத் தட்ட உள்ளீட்டுச் சுருக்கம் (content summary)."

"இனி 1845 இல் இலக்கியத்தின் பெயர் வாராது. அது உண்மையில் இலக்கிய உதாரணம். அங்கே ம் என்பது ஏடெடுத்து எழுதுவதில் ஏற்பட்டிருக்கக் கூடிய, இயலுகிற, மீச்சிறிய பிழை."

"இலக்கியம் உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய

என்று படிப்பதற்கு மாறாக,

இலக்கிய உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய

என்று படித்துப் பாருங்கள். முழுப்பொருளும் விளங்கும். இலக்கிய உதாரணம் என்பது இலக்கியத்துள் ஒன்றை எடுத்துக் காட்டலாகும். இந்தக் காலத்தில் உதாரணம் என்று யாரும் எழுதுவதில்லை. எடுத்துக் காட்டு என்பதும் கூடக் காட்டு என்று சுருங்கிவிட்டது. ஞாபகம் என்பதும் எடுத்துக் காட்டைப் போல் அமைவது தான். ஒன்றைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஞாபகம் வர, அதையும் எடுத்துக் காட்டைச் சொல்வது போல விளக்கத்தை வலுப்படுத்தும் நடையாய் அமையும். பிசி என்பது ஒருவகைப் புதிர், சோடிப்பு, விடுகதை. இதுவும் எடுத்துக்காட்டு போலத்தான் ஒன்றை விளக்கும் போது அமையும். (இந்தச் சொல் தென்பாண்டி நாட்டில் அகவை முதியோரிடம் அறியவேண்டிய சொல்.)"

"இந்த எடுத்துக் காட்டல், ஞாபகம், பிசி என்ற மூன்று பொருளும் ஒன்று போல் அமைந்திருக்க, இலக்கிய உதாரணம் என்பது முதற்சொல்லாக நூற்பாவில் “ம்” என்பது இல்லாது போயிருந்தாற்றான் சரியாக வரும். இலக்கியம் என்ற சொல் இங்கு குறிப்பிட்ட நூற்பாவில் பயன்பட்டிருக்கிறது. அந்த வகையில் இது குறிப்பிடத் தக்க பதிவு ஆனால் அது நூல் என்ற பொருளில் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. உதாரணம் என்ற பொருளில் அல்ல. அந்த 1845 ஆம் நூற்பாவை ஒழுங்காகப் புரிந்து கொண்டால் இலக்கியம் என்ற சொல் திவாகரத்தில் எடுத்தாளப் பட்டிருப்பது புரியும்."

"தம்பி, நிறையப் பேர் நீ தொட்டுக் காட்டும் எழுத்துப் பிழையை ஏற்க மாட்டார்."

"அண்ணாச்சி! கிடுகுப் (critical) பொருக்கில் ஒரு நூலைப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் contextual reading என்பார்கள். எழுத்துப் பிழை இங்கு இருந்து இருக்கலாம் என்று நான் உணர்த்துகிறேன். ஏற்பதும் ஏற்காததும் வாசிப்போர் உகப்பு. நான் சுவடியைப் பார்த்ததில்லை. பார்த்தவர் எல்லோரும் வானுலகஞ் சேர்ந்துவிட்டார். இருப்பவர் தான் ஊகிக்க வேண்டும். 'வேண்டுமென்ற இடத்தில் பிழையிருப்பதாகக் கொள்வேன். வேண்டாமென்றால் மறுப்பேன்' என்றால் நான் சொல்ல என்ன இருக்கிறது?"

"சரி விடு. இலக்கியப் படிப்பில் இதுவோர் இக்கு"

"இலக்கியம் என்ற சொல்லிற்கு இன்னோர் இக்கு எடுத்துக் காட்டுகிறேன் அண்ணாச்சி."

"திருவாசகம் 51 பகுதிகள் கொண்டது தில்லை நடவரசன் திருமுன்னில் இறைவனே செப்பேட்டில் எழுதிப் படியில் வைத்ததாய் ஒரு தொன்மமுண்டு. அந்தச் செப்பேடு எங்கு போனதோ, யாருக்கும் தெரியாது. இப்பொழுது நாம் படிக்கும் திருவாசகம் செப்பேட்டில் இருந்து பெறப்பட்டதாய்த் தெரிய வில்லை. காலகாலமாய்ச் சுவடியிலெழுதி 100, 150 ஆண்டுக்கொருமுறை ஏடு பெயர்த்துத் தான் திருவாசகம் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே அதிலும் சில்லேடுகள் செல்லரித்துப் போய், சில பதிகங்கள் குறைப்பாடலோடு வந்து சேர்ந்தன. அதாவது சில குறைப்பாடல்களில் எழுத்துப் பிழைகள் இருந்தோ, எழுத்துக்கள் இல்லாதிருந்து அவ்விடத்தில் எழுத்துக்கள் பெய்தோ, வந்து சேர்ந்திருக்கின்றன. திருமந்திரத்தில் செம்பதிப்பு வந்தது போல சுவடிகள் ஒப்பிட்டு செம்பதிப்பு வெளியிட்ட திருவாசகத்தை நான் பார்த்ததில்லை."

"திருவாசகத்தில் 48 ஆவது பகுதி ’பண்டாய நான்மறை’ எனும் பதிகம் அது ஒரு குறைப்பத்து. ஏழு பாடல்கள் தாம் உண்டு. ஏழாம் பாடல் மிகவும் பேர் பெற்றது ஏனென்றால் அதில் மணிவாசகர் ’மணிவார்த்தை’ என்ற சொல்லால் தன் பெயரை வெளிப்படுத்திக் கொண்டதாய்ப் பலரும் ஊகிக்கிறார். முதலிற் பாடலைப் பார்ப்போம்"

பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து

- திருவாசகம் பண்டாய நான்மறை 48.7

”இப் பாட்டிற்குப் பொழிப்பு என்ன தெரியுமா? ’பேசும் பொருளுக்கு இலக்கிதமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்.’ என்ன சொல்கிறார் மாணிக்க வாசகர்? அதுவென்ன இலக்கிதம்? நானும் துருவித் துருவிப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை. இந்தவொரு பாட்டைத் தவிர இலக்கிதம் என்ற சொல் தமிழில் எந்த நூலிலும் எங்கும் வரவில்லை. அதனாலேயே அகரமுதலிகளில் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பாட்டு அந்த அகரமுதலியில் எடுத்துக் காட்டாய்க் குறிக்கப் பெற்றிருக்கிறது. எந்தப் பொருளும் சொல்லப்படவில்லை. நான் மயங்காது இருக்க முடியவில்லை"

"நான் இளமையில் பொறியியல் முதலாண்டிற் படிக்கும் போது, எங்களுக்குக் குடிமைப் பொறியியல் (civil engineering) சொல்லிக் கொடுக்கும் போது சாலை போடுவதற்கான சல்லிக்கல் (road metal) பற்றிச் சொல்லித் தரவேண்டும். எங்கள் ஆசிரியருக்கு ஆங்கிலம் சற்று வாராது. இப்படித் தொடங்குவார். “Road metal is ......" கொஞ்ச நேரம் இடைவெளி கொடுத்து நிறுத்துவார். திடீரென்று "road metal" என்று முடித்து எங்களைபெல்லாம் பார்த்துப் புன்முறுவல் செய்வார். அவர் road metal என்பதை எங்களுக்கு விளக்கி விட்டாராம். அந்த நிலை தான் இங்கு அகரமுதலியில் இலக்கிதம் என்ற சொல்லைப் பார்த்தால் எனக்கு ஏற்படுகிறது. ”இலக்கிதம் என்பது இலக்கிதம். Road metal is road metal." இப்படி விளக்கம் சொல்வதற்கு ஆங்கிலத்தில் அதாகுவியல் (tautology) என்று பெயர். அதை அதாலே விளக்குவது."

"மாறாக இலக்கிதம் என்பதை எழுத்துப் பிழை என்று கொள்ளுவோமே? தகரத்தை யகரமாய்க் கொண்டால் என்னவாகிறது?"

பேசும் பொருளுக்கு இலக்கியமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து

"இப்படிப் பாட்டிருந்தால் பொருள் என்னவாகும்? ”பேசும் பொருளுக்கு இலக்கியமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்” என்ற பொருள் மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது. பேச்சுக்கு மீறிய மணி வார்த்தைகள், பேசும் பொருளுக்கு இலக்கியமாய், குறிக்கோளாய் அமைகின்றதாம். சிவநெறிக்கு திருவாசகம் இலக்கியமாய் அமைகிறது. பிறப்பறுத்தல் என்றால் வீடுபேறு. அவருடைய சமய வாழ்வின் உச்ச கட்டம். அந்த இடத்தைச் சொல்லும் போது குறிக்கோளைச் சொல்லுகிறார். இலக்கியம் என்கிறார். இலக்கியம் என்ற சொல்லின் முழுப்பொருளும் எழுத்து, குறி (அடையாளம்) ,இயல்பு, ஒழுங்கு எல்லாம் வந்து சேருகிறதே?."

"இப்படிச் சரியான பொருள் கிடைக்கும் போது இலக்கிதத்தை எடுத்துக் கொள்வேனா? இலக்கியத்தை எடுத்துக் கொள்வேனா? தகரமா? யகரமா? - என்று கேட்டால் ”எனக்குத் தெரியாது. யகரமாய் இருந்தால் புது வரையறை தேவையில்லை. இருக்கும் வரையறையை வைத்தே பொருள் சொல்லிவிடலாம்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது. சரி மணிவாசகர் காலம் எதுவென்று சொல்லலாம்?"

"மாணிக்கவாசகர் வரலாற்றைக் குழப்பிக் கொள்பவர் பலர். அவர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்று சொல்லிப் பின்னுக்குத் தள்ளுபவரும் உண்டு. இல்லை அவர் தேவார மூவருக்கும், கல்லாடருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் முந்தியவர் என்று சொல்லி அதை நிறுவ முயன்ற மறைமலை அடிகளாரும் உண்டு. அளவுக்கு மீறிய சிவநெறித் தாக்கம் கொண்டு மறைமலை அடிகளார் சொல்கிறார் என்று அவருடைய மாணிக்க வாசகர் கால ஆய்வைக் குறை சொல்லி ஒதுக்குபவர் பலரும் இதுவரை முடிவான எதிர்ச்சான்று கொடுத்ததாய் எனக்குத் தென்படவில்லை.”

”தமிழாய்வில் மாணிக்க வாசகர் காலம் என்பது இன்னும் முடிவுறாத ஆய்வு. என்னுடைய சாய்வு மறைமலை அடிகளார் பக்கம் தான். மாணிக்க வாசகரின் பாக்களை வைத்து வகைப்படுத்தல் (typology classification) மூலம் அதை நான் நிறுவ முயன்றேன். [அது தமிழ் உலகம் மடற்குழுவிலோ, அகத்தியர் மடற்குழுவிலோ வந்தது. எனக்கு நினைவில்லை. இன்னொரு முறை அதைத் தேடி என் வலைப்பதிவிற் கொண்டு சேர்ப்பேன்.] மாணிக்க வாசகரின் காலம் மூன்றாம் நூற்றாண்டாய் இருக்கலாம். அது களப்பிரர் காலம் என்றே நான் கொள்ளுகிறேன்."

"அப்படிக் கொண்டால், இலக்கியம் என்ற சொல் மூன்றாம் நூற்றாண்டு ஆளப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்."

அன்புடன்,
இராம.கி

இலக்கியம் - இலக்கணம் - 2

”என்ன தம்பி! இல்லுகிற சொற்கள் கூடுகின்றனவே? முடிவில் இலக்கிய இலக்கணம் வந்து விடுவாயா? இலக்கிய இலக்கணத்தை மறுக்க வேண்டுமென்றால் நீ காட்டுகிற சொற்கள் அத்தனையும் சேர்ந்து ஒரு மரபையே மறுக்க வேண்டுமாக்கும். அது கொஞ்சம் கடினம் தான்.”

”ஆமாம் அண்ணாச்சி, துளைத்தலிற் தொடங்கி பொருள் வளர்ச்சி ஏற்பட்டு ஒவ்வொரு சொல்லாக எழுந்த வரலாறு இருக்கிறதே அது மரம் போல. சும்மா இலக்கிய இலக்கணத்தை மட்டும் வெட்டிச் சாய்த்துவிட்டுப் போய்விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். கிடையாது ஒவ்வொரு இலையும், தளிரும், கொப்பும், கம்பும், கிளையும், சினையும், மரமும், வேரும் என்று உய்யும் ஒருங்கிய முழுமை (organic whole), ஆணிவேர் வரைக்கும் இருக்கிறது. மறுப்பதென்றால் இத்தனை சொற்களையும் மறுக்க வேண்டும். பொறுத்துப் பாருங்கள் அண்ணாச்சி!”

”சரி! பொறுமையாகப் போவோம். இகுதல் பற்றிச் சொன்னாய்”

”இகுதல் = மேலிருந்து கீழ் வருதல், இகுதலின் நீட்சியாய் ஈதல் எழும். இல்லாதவருக்குக் கொடுக்கக் கை இறங்குகிறது. ஈதலின் தொழிற்பெயர் ஈகை. வாயில் இகுந்துவரும் வாய்நீர் நாட்டுப் புறங்களில் ஈத்தா/ஈத்தை எனப்படும். பிள்ளை பெறுவதும் இகுதற் செயலே. கருப்பை வாயிலிருந்து பிள்ளை இறங்குகிறதல்லவா? ஒவ்வொரு பிள்ளையிறக்கமும் (=பிறப்பும்), நாட்டுப்புறங்களில் ஈத்து எனப்படுகிறது. "அவள் இவனை ஈன்றாள். இது எத்தனையாவது ஈத்து?". பிறப்பென்பது பிள்ளையின் பார்வையில், ஈத்தென்பது தாயின் பார்வையில், சொல்லப்படுவது. ஈனியல் என்ற சொல்லால் இன்றைக்கு genetics - யைக் குறிக்கிறோமே? ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்லப்பெறும் நிலத்திணை yield - களும் தமிழில் ஈத்தெனப்படுவதை அகரமுதலிகள் வாயிலாய் அறிந்து கொள்ளலாம்.”

”தம்பி, நீ சொல்லச் சொல்ல எனக்கு வியப்பு கூடிக் கொண்டே போகிறது.”

”இகுந்தது (=தாழ்ந்தது) ஈந்தது என்றும் வடிவங்கொள்ளும். இனி, இறக்கமான இடத்தைக் குறிக்க, ஈந்து>ஈந்தம் என்ற பெயரைத் தமிழில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், இக்கால அகரமுதலிகளில் அது பதியப் படவில்லை. இருந்த இடத்தைக் குறிக்கும் ”இருத்தம்” தமிழ் அகரமுதலிகளில் உள்ள போது, ஈத்தம் பதியப்படாதது நமக்கு வியப்பாகவே இருக்கிறது.”

”தம்பி, கிழக்கு என்ற சொல் பள்ளமான இடத்தைச் சுட்டுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.”

”உண்மை. மனையடி சாற்றத்தில் மனை நிலத்தின் அமைப்பு விளக்குகையில், இருப்பதிலேயே உயரமாய் தென்மேற்கு மூலையும், அதற்கு அடுத்த உயரத்தில் வடமேற்கு, தென்கிழக்கு மூலைகளும், இருப்பதிலேயே பள்ளமாய் வடகிழக்கு ஈசான மூலையும் சொல்லப் பெறும். ஈத்து என்ற சொல், கிழக்கைக் குறித்தால் தான், ஈத்தானம்>ஈதானம்>ஈசானம் என்ற சொல் ஆகப் பள்ளமான வடகிழக்கைக் குறிக்க முடியும். [இது பற்றி மேலும் ஆய வேண்டும்; என்னால் உறுதியாக இப்பொழுது சொல்ல இயலவில்லை.] [தமிழ் அகரமுதலிகளில் இல்லாது, அதே பொழுது இருப்பவற்றில் இருந்து தருக்கம் வழியாக உன்னிக்கக்கூடிய சொற்கள் பலவும் உண்டு. ஈந்தம்/ஈத்தம் அப்படிப்பட்டது.]”

”தம்பி, நம்மூர் வடமொழி அன்பர்கள் இதையெலாம் ஏற்க மாட்டார்கள். ஈசானத்துட் புகுந்து அவர் அடிமடியை நீ குலைக்கிறாய்.”

”அவர்கள் பார்வை ஏற்கும்படியில்லை. அதனால் மறுக்கிறேன். மனையடி சாற்றமே தென்னிந்தியப் புவிக்கிறுவத்தை (geography) அடியாய்க் கொண்டது என்று நெடுநாள் ஐயமுண்டு. சரி, சொல்லவந்ததைச் சொல்லுகிறேன். ஈந்தம், ஈத்தம் ஆகியவை தமிழிற் பதியப் படாதிருக்க, வடபுலப் பலுக்கில் உருவான ஈந்தம்>ஐந்தம்> ஐந்த்ரம்> ஐந்திரம் என்பது மட்டும் தமிழ் அகரமுதலிகளில் பதிவாகி இருக்கிறது. எப்படிச் சிவம், சைவம் என வடபுலத் திரிவுற்றதோ, அதைப்போல, ஈந்தம், ஐந்தமெனத் திரிந்து வழக்கம்போல் ரகரம் நுழைந்து ஐந்திரத் தோற்றம் காட்டுகிறது. [மேலை மொழிகளில் east என்னும் சொல்லும் ஈத்து எனும் சொல்லுக்கு இணையாவது கண்டு என்னால் வியக்காது இருக்க முடியவில்லை. பொதுவாய் "த்து" என்னும் மெய்ம்மொழி மயக்கம் மேலைமொழிகளில் "st" என்றே உருப்பெறுகிறது. இதற்குக் கணக்கற்ற எடுத்துக்காட்டுகளுண்டு.]”

”என்ன தம்பி! இப்படியே இல்லி இழித்துக் கொண்டு போகிறாயே?”

”அது மட்டுமில்லை அண்ணாச்சி. பள்ளம் தொடர்புடைய வேறுசில பயன்பாடுகளும் உண்டு. காட்டாக, இலந்தது இலந்தி; அது இலஞ்சியாகிக் குளம் என்ற பொருளைக் குறிக்கும். இலஞ்சி மன்றம் என்று சிலம்பிலும், மணிமேகலையிலும் வருகிறது அல்லவா? இலந்தது இன்னும் வேறு வகையில் திரிந்து இலவந்தி>இலவந்திகை என்றாகி வெந்நீர் நிறைத்துக் குளிப்பதற்காகச் செயற்கையாய்ச் செய்யப் பட்ட குளத்தையும் குறிக்கும். "இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்" என்று ஒரு பாண்டிய மன்னனை புறநானூறு பேசும்”

”இதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்று நினைக்கிறேன்.”

”பள்ளம் பற்றி வேறு விதம் பார்ப்போமா? எழுதுபொருளில் துளைத்த பின், எழுத்தாணியை தரதர என்று ’இழுக்கிறோமே’, அதுவும் இல்லிற் தொடங்கியது தான். இல்லுதல்>இல்லுத்தல்>இழுத்தல். இழுத்ததின் மூலம் கிடை மட்டத்தில் பள்ளம் பறித்துக் கொண்டே போகிறோம். அது கோடாக மாறுகிறது. இலுக்கிக் கோடு போவது நம் தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றிலும் பரவியிருக்கிறது. இழுத்தது எழுத்தாணியோடு மட்டும் நிற்கவில்லை. அதன் பொருள் விதப்புப் பயன்பாட்டிலிருந்து பொதுமைப் பயன்பாட்டிற்கு மேலும் விரியும்.”

”இல்லிலிருந்து இலுக்கா? சரிதான் எனக்குக் குலுக்கிருச்சு.”

”இலுக்குதலின் எதுகையாய் கிலுக்குதல்>கிலுக்கி என்ற சொல் எழும். இது, குத்திக் கிழிக்கும் கருவிக்கு சிவகங்கை மாவட்டச் சொல். ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த வெற்றித் திருநாளில் (விசய தசமியில்) கிலுக்கி/கிளுக்கி தூக்கிக் கொண்டு ஊர்ப்பிள்ளைகள் எல்லாம் வாழை மரத்திற் குத்தப் போகும். அண்ணாச்சி! மொழிச் சொற்களை நாட்டுப்புறப் பண்பாடோடு புரிந்து கொள்ள வேண்டும்.”

”உனக்கு இதே வேலை தம்பி, சுற்றிவளைச்சு சிவகங்கை மாவட்டத்தைக் கொணர்ந்து உங்கூரைச் சொல்லலைன்னா உனக்கு இருப்புக் கொள்ளாது”

”அப்படி இல்லையண்ணாச்சி! ஒன்பான் இராக்கள் தமிழருக்கு வேண்டப்பட்ட திருவிழா. அதில் இப்படியொரு பகுதியும் இருக்கென்று சொன்னேன். ஊர்ப்பாசம் இருக்கக் கூடாதா? ஒரேயடியாய்த் தூக்கி வைத்தாத்தான் அண்ணாச்சி தப்பு!"

"இலுக்குதல்/ இலுவுதல் எல்லாம் இப்படி எழுந்த வினைகள் தான். இலுவிக் கொண்டே போனது வடக்கே (இ)லிபி என்று ஆயிற்று. மகதத்திலே -அதாங்க பீகார், வங்காளத்துலே வகரம் பகரமாயிரும். அசோகர் காலத்துலே எழுத்து பரவியது தெற்கே தமிழகமும் வடக்கே மகதமும் தான். இந்திக்காரன் இன்றைக்கும் லிக் என்றுதான் இலுக்குவதைச் சொல்கிறான். துளையிற் தொடங்கிய இந்த வேர், சொற்பிறப்பு, இந்திய மொழிகளிற் தமிழிற் தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் எழுத்து அசோகன் பெருமியில் இருந்து தான் முதலில் வந்ததாம். நான் என்ன சொல்ல?"

"அதான் சொல்லிட்டியே? அப்புறம் என்ன?"

"இந்திய எழுத்தின் தொடக்கம் கல்வெட்டு. அதன் தொடக்கம் நம்மூரிற்தான். 'அசோகர் கல்லை வெட்டினார்; மற்றோர் அதைப்பார்த்துப் பின்னால் எழுதினார்' என்று கீறல் விழுந்தாற் போற் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மகதத்தைப் பெரிதாய்ப் பேசுகிறவர்கள், அதே காலத் தமிழ்நாட்டைப் பெரிதாய்ச் சொல்வது இல்லை. அவன் பெரிய ஆள் தான். அதற்காக நாங்கள் ஒன்றும் சின்ன ஆள் இல்லை. வரலாற்றை வடக்கிருந்தே பார்த்துப் பழகிவிட்டோம், அண்ணாச்சி. ஒருமுறைதான் தெற்கிருந்து தொடங்கிப் பாருங்களேன். புதிய பார்வை கிடைக்கும்.

"புதிய பார்வையெல்லாம் யாருக்கு வேண்டும் தம்பி? 'அசோகர் சத்திரம் கட்டினார், சாவடி கட்டினார். சாலையின் இருமருங்கும் மரங்கள் நட்டார்' - என்று எழுதினால் வரலாற்றுத் தேர்வில் 2 மதிப்பெண்கள். இப்படிப் படித்தே வரலாற்றைத் தொலைத்தெறிந்தோம். இதைப் போய் நீ மாற்றி எழுதுங்கன்னு சொல்றே. தொலைச்சுருவாங்க தம்பி. தெற்கேயிருந்து தொடங்குவதாவது? தலைகீழாய்க் குட்டிக் கரணம் அடிச்சாலும் அது நடக்காது."

"அண்ணாச்சி! இப்படியே எத்தனை நாளைக்கு அடங்கிப் போறது? இத்தனைக்கும் இந்தியாவிலேயே ஆகப் பழம் பானைக் கீற்றுகள் தெற்கே கொடுமணலிலும், கொற்கையிலும் தான் அகழாய்விற் கிடைத்திருக்கின்றன. சிந்து சமவெளியை விட்டுப் பார்த்தால் ஆகப் பழைய எழுத்து எங்கே கிடைத்திருக்கிறது? வடக்கிலா? தெற்கிலா? தெற்கிற் கிடைத்தது அசோகர் கல்வெட்டிற்கும் முந்திய காலம் என்று இற்றை ஆய்வு மிகத் தெளிவாகச் சொல்லுகிறது.. அதே போல இலங்கை அநுராதபுரத்திலும் ஆகப் பழைய கல்வெட்டு பாகதத்திற் கிடைத்திருக்கிறது. எல்லாமே அசோகருக்கு முந்தியது அண்ணாச்சி. அப்புறம் என்ன அசோகன் பெருமி (பிராமி)? மண்ணாங்கட்டி. வரலாற்றை இனிமேலாவது மாற்றி எழுதுங்கள். செயினர் தமிழருக்கு எழுத்துக் கற்றுத் தரவில்லை. செயினர் இங்கிருந்து கற்றுப் போனார். இதையும் ஆய்வு மூலம் அறுதியிட்டுச் சொல்ல முடியும்."

"தம்பி, நீ என்ன கத்தினாலும் ஏற்கனவே நிலைச்சுப் போன நாட்டாமைக் காரர்கள் இதை ஏற்க மாட்டார்கள்."

"இன்றைக்கு ஏற்கவில்லையென்றால் எதிர்காலத்தில் ஏற்பார்கள் அண்ணாச்சி. ”உண்மையே வெல்லும்” என்று இந்திய அரசு வாசகம் சொல்லுகிறது. தமிழி / பெருமி எழுத்து தெற்கே பிறந்து வடக்கே போனது. இன்றும் ஒருசிலர் இதை மறுத்துக் கொண்டேயிருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு ஐராவதத்தோடு கல்வெட்டுப் படிப்பெல்லாம் முடிந்தது. ”அதுக்கு அப்புறம் ஒன்றுமே நடக்கவில்லை. ஐராவதம் சொன்னது தான் அவர்களுக்கு வேத வாக்கு”. ஆனால் திருச்சிப் பாலத்துக்கும் கீழே காவிரிநீர் புதிதாய் ஓடிக் கொண்டேயிருக்கிறது. கல்வெட்டியல், தொல்லியல் என்பது தொடர்ச்சியான படிப்பு. அகழாய்வாளார்கள் இல்லிக் கொண்டேயிருப்பார்கள். புதிய பழஞ் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. மீளாய்வு தொடர்கிறது."

"அப்ப, இழுத்தது எழுத்துன்னு சொல்றே!"

"உறுதியாச் சொல்கிறேன் அண்ணாச்சி. கல், களிமண், மரம், தோல், ஓலை எல்லாத்திலும் இழுத்தது எழுத்து. கீறியது கீற்று. (inscription என்று ஆங்கிலத்திற் சொல்கிறார்களே, அந்த scribe, graph என்பதும் கிறுவுவது தான். கீற்றுத் தான்.) வரைந்தது வரி."

அன்புடன்,
இராம.கி.

இலக்கியம் - இலக்கணம் - 1

இப்பொழுதெல்லாம் ”செம்மொழி தமிழ்” என்று யாராவது சொன்னால் ”போதும் சவடால்”என்று சொல்லத் தோன்றுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் ”இலக்கியம் இலக்கணம்” என்று தானாய்ச் சொல்லத் தெரியாத ஒரு மொழிக்குச் செம்மொழிப் பட்டம் என்ன வேண்டிக் கிடக்கிறது? ஒட்டுமுடியால் ஒப்பனை செய்வதற்குக் குறைமுடியோடு இருந்து போகலாமே?. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”- என்று சலித்துக் கொண்டார் மொழியார்வலர்.

”அமைதி, அமைதி அண்ணாச்சி, அவ்வளவு சலிச்சுக்காதீங்க. சிலர் சொல்வது போல இலக்கியம் என்ற சொல்லை 1100 ஆண்டுகளுக்கு முன் நேரே பார்க்க முடியாது தான். இலக்கித்தல் என்ற வினையையும் 1200 ஆண்டுகளுக்கு முன்தான் பார்க்கலாம். திருவாசகக் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்னாது மறைமலை அடிகள் தருக்கத்தை ஏற்று 3 ஆம் நூற்றாண்டு என்றால், இன்னும் முன்னால் 1700 ஆண்டுகளிற் பார்க்கலாம்.

ஆனால் இலக்கணம் என்பதைக் குறைந்தது 2300/2700 ஆண்டுகளுக்கு முன் பார்க்க முடியும். இலக்கு, இலக்கம் போன்றவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன் பார்க்கலாம். பொறுமையிருந்தால், இணைச் சொற்கள் இருப்பிலிருந்து தருக்கத்தின் மூலம் இலக்கிய - இலக்கண இயலுமையைக் கண்டு கொள்ளலாம். பொதுவாய்த் தமிழ்ச் சொற்களுக்கு 2000 ஆண்டுப் பதிவு இருக்கிறதா? - என்று கேட்டு, அதன்பின்தான் எவற்றையும் ஏற்கலாமெனிற் பல சொற்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.”

சலித்துக் கொண்டவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ”ஏதோ ஆழ்ந்து சொல்ல வருகிறாய் போலத் தெரிகிறது.”

”கொண்டைக்குள் கிடக்கும் ஈரைப் பற்றிப் பேசினீர்களே? கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப்பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியாயிற்று. இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் என்று பல்வேறு பொருள்களுண்டு. இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக்குடம் பார்த்திருக்கீங்களா? ஓட்டைக்குடம், கடை மாணாக்கன், நன்னூல்”- விளக்கத்தாருக்கு வேறு வேலையில்லை, இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்.

”இல்லப்பட்டது இல். மலைகளிற் குகைகள் இருக்கின்றனவே, இயற்கையாய் இருந்தாலும் சரி, செயற்கையாய் இருந்தாலும் சரி, அவை தாம் முதலில் உருவான இல்கள். மாந்தனாற் கட்டப்பட்ட மற்றவையெல்லாம் அப்புறம் எழுந்தவை. இல்லியது இல். கல்லில் தோண்டியது, துளைக்கப் பட்டது இல். இல்>ஈல்>ஈ என்றால் குகை என்ற பொருளும் உண்டு. குகையைப் பார்த்துத் தான் வீடு, மனை என்ற கட்டுமானங்கள் எழுந்தன.”

’ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர்’
- நாலடியார் 198.

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை’
- திருக்குறள் 41.

”இல்லென்றால் இடம் என்று பொருளும் உண்டு. இருத்தல் என்ற வினையும் இல்லில் இருந்தே இல்>இர்>இரு என்று தோன்றியது. இருத்தலுக்குப் பகரியாய் ’குத்த வைத்தல்’என்றுஞ் சொல்லுவர். இருந்தல் = குந்தல்; உள்ளுதலிருந்து உட்கார்தல் போல இல்லுதலிலிருந்து இருத்தல் எழுந்தது.”

ம.இல்; க. இல், இல்லு; தெ.இல்லு; து. இல்லு; கோண். இல், இந்த்; பர் இல், பொதி (கூரை0; நா. எல்ல; கொலா.எல்ல; கூ.இடு; குவி. இல்லு.

”நிறுத்து. நிறுத்து. இப்பொழுது என்னாச்சு உனக்கு? தமிழில் மட்டுமின்றி பல திராவிட மொழிகளிலும் ”இல்” இருக்கிறதாக்கும். இன்னும் பல சொற்கள் இல்லின் வளர்ச்சியாய் திராவிட மொழிகளில் உள்ளனவாக்கும். எமனோ, பர்ரோ போன்ற வெள்ளைக்காரர்களே சொல்லி விட்டார்களாக்கும்? அப்பொழுது காது கொடுத்துக் கேட்க வேண்டுமோ?”

”ஆமாங்க, அப்படித்தானே தமிழ் செம்மொழியாகியது! ஆர்ட் சொல்லாமல் இந்திய அரசு தலையாட்டலைங்களே! தமிழன் சொல்லி யார் கேட்டார்? பரிதி மாற் கலைஞர், மறைமலையடிகள், இலக்குவனார், பாவாணர் என்று நூறுபேர் சொல்லியிருந்தாலும் வெறியர் என்று விலக்கியிருப்பார்களே? கால காலமாய் அப்படித்தானே நடக்கிறது? வெள்ளைக்காரர் சொன்னதால் தானே இந்தியர் கேட்டுக் கொண்டிருந்தார்? இது நம்மூர் வழக்கம் தானே?”

”இங்க பாரு. உங்கூர் அரசியலுக்குள் நான் வரவில்லை. இல், ஈல் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே! அதை மட்டும் தொடரு. எதுவரை செல்கிறது? - என்று கேட்டுவிட்டுப் போகிறேன்.”

”இனி எடுத்துக் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும் மற்ற திராவிட மொழி இணைச்சொற்கள் வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கொடுக்க வேண்டும் என்றால் அதைத் தேடுவதிலேயே என் பொழுது போய்விடும்.”

”என்ன தம்பி, இப்படிச் சொல்லிட்டே? 10 வகைத் திராவிட இணைச்சொற்கள், 4,5 வடமொழி எடுத்துக் காட்டுகள், 2,3 ஆங்கில மேற்கோள்கள் இல்லையென்றால் எந்த மொழிவிளக்கமும் ஏற்க முடியாது தம்பி. அதுதான் இன்றைய வழமை. தமிழென்றால் எப்பொழுதும் குடைய வேண்டும். இல்லை என்றாற் துளிர்த்து விட மாட்டீர்கள்” - குறும்புப் பார்வையால் குறுகுறுத்தார் மொழியார்வலர்.

”அண்ணாச்சி! வேற்றுமொழி எடுத்துக்காட்டெல்லாம் கொடுத்து எங்களாலும் செய்ய முடியும். அதையெல்லாம் செய்யாமல், நாங்கள் விளக்க முன் வரவில்லை. ’தமிழ் என்று சொன்னாலே தரமில்லை’ என்று சொல்லி இளக்காரம் பண்ணியது போதும், மொத்த உரையாடலையும் கவனியுங்க. அப்புறமாய் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்”- விளக்கத்தார் சற்று உணர்ச்சிவசப்பட்டவர். முணுக்கென்று கோவம் வந்துவிடும்.

”தம்பி! கோவம் கண்ணை மறைச்சிடும். அவுங்க கிடக்காங்க. தமிழ்ச் சான்றுகளை நீ சொல்லு. நான் கேட்கிறேன்.”

”இல் என்றால் இடம் என்றேனா? இருத்தல் வினையும் அதிற் கிளைத்தது என்றேனா?. ஈ என்றால் அம்பு என்ற பொருளுண்டு. இல்>இள்>ஈள்>ஈட்டு என்றால் செலுத்து, குத்து என்று பொருள். ஈட்டுதலின் கருவிப் பெயர் ஈட்டி. ஈல்தல்/ஈர்தல் என்றால் பிரித்தல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஈல்>ஈர்>ஈ = பிரித்தல், பிளத்தல்”

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
- திருக்குறள் 334

”இல்>ஈல்>ஈலி. ஈலி என்றால் கைவாள் (sword), சுரிகை (dagger) என்ற பொருள்களுண்டு. ஈர்தல் = இரண்டாக்கல் என்ற பொருளுண்டு. பனை, தெங்கு, ஈச்சை போன்றவற்றின் ஓலைக் காம்பை இரண்டாய்ப் பிரிப்பதால் ஈர்க்கு என்ற சொல்லும் எழும். அதே போல ஈரும் பொருள் நிறைந்த மரம் ஈந்தெனும் பெயர்பெறும்.. பேச்சுவழக்கில் ஈச்ச மரமாகும். ஈர்-இரு-இரள்-இரண்டு என்ற சொற்களும் கூட இந்த இல்-ஈலிற் பிறந்தவை தான். ஓர் எண்ணை இன்னொன்றால் வகுப்பதும் ஈல்தல் தான். அப்படி வகுத்துவரும் எண்ணை ஈல்வு>ஈர்வு>ஈவு என்று சொல்கிறோமே?”

”இந்த இல், ஈல் சொற்களுக்குள் இவ்வளவு குத்தல், பிரிவு வேலை இருக்கா? துளைப் பொருள் நீண்டு, தமிழில் இவ்வளவு சொற்களா?”

”இன்னும் ஏகப்பட்ட சொற்கள் இருக்கு அண்ணாச்சி! இப்பொழுது ஒரு ஆறு, போகும் வழியில் இரண்டாய்ப் பிரிந்து மீண்டும் கூடுகிறது நடுத் தீவிற்கு அரங்கம் என்று பெயர். *அருத்தது>அறுத்தது அரங்கம். அரங்கம் போலவே இன்னொரு சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார்கள். (ஈழம் என்பது ஈலில் எழுந்தது.) சிறுபாணாற்றுப் படையில் ஓய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன் ஊராய் மாவிலங்கை என்ற ஊர் சொல்லப்பெறும். அது தென்பெண்ணையாற்றில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஆற்றுத் தீவு.”

”தமிழ்நாட்டிற்குத் தென்கிழக்கில் இருக்கும் இலங்கைத் தீவும் இப்படிப் பிரிந்தது தானோ?”

”ஆமாம். இதிலென்ன ஐயம்? ஒருகாலத்திற் கடல் மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது அந்நிலம். ஈழம், இலங்கை என்ற ஆகிய இரண்டுமே நல்ல தமிழ்ச்சொற்கள். யாரோ புரியாமற் சிங்களமென்று தவறாகச் சொல்ல, அதைப் பிடித்துச் சிலர் தொங்குகிறார்கள். அந்நாட்டின் பெயரே தமிழ்ப் பெயர் அண்ணாச்சி. நமக்கங்கு இடமில்லை என்று சிங்களன் சொல்கிறான். நாமோ ஒற்றுமையின்றிக் கோட்டை விடுகிறோம். இல்>ஈல் நமக்கு அவ்வளவு முகனைச் செய்தி.”

”அப்படி என்னப்பா முகனைச் செய்தி?”

”அண்ணாச்சி, பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இலங்கைத்தீவும் அதற்குத் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் அதனோடு சேர்ந்தவை தான். இற்றைத் தமிழ்நாடு ஈழம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட கடற்பகுதியும், குமரிக்குத் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனத் தமிழர் கடலுக்கு இழந்தது ஏராளம் அண்ணாச்சி. குமரிப் பெருநிலம் என்று நாம் சொன்னாற் கேலி செய்பவர்களும், மறுக்கிறவர்களும் கேலி செய்து மறுக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கென்ன வந்தது? ஏமாளியாய் நாம் இருக்கும் வரை ஏமாற்றுக்காரன் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பான்.”

”ஆமாம் தம்பி. ஏமாறலில் இரண்டு பக்கமுண்டு, தெரியுமோ?”

”இன்னொரு செய்தியைப் பாருங்கள். ஆங்கிலத்தில் isle என்ற சொல் உண்டு தானே? அதை வெள்ளைக்காரன் எப்படி எழுதிப் பலுக்குகிறான். ஈல்>ஈழ் என்று தானே? ”சொல்லின் தோற்றம் தெரியாது” என்று அவர்கள் அகரமுதலியிற் போட்டிருப்பார்கள். island என்பதற்குத் ”நீர் மேலிருக்கும் நிலம்” என்று சுற்றி வளைப்பார்கள். ஈழம் என்ற சொல்லைப் பார்த்தாற் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது என்று சொல்வதில் ஓர் அறிவியல் உண்மையிருக்கிறது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், உலகத் தீவுகளைக் குறிப்பதற்கு மேலை நாடுகளிற் பொதுமைப் பெயராய் ஆகியிருக்கிறது. அப்படியெனில் முதலிற் தமிழன் கடலோடியது எப்பொழுது? நாமோ ஈல்>ஈழம் தமிழில்லை என்று சொல்லித் திரிகிறோம். தமிழனைப் போன்ற அடிமுட்டாள் கிடையாது அண்ணாச்சி.”

”இப்பொழுது சொன்னாய் பாரு, அது உண்மை. ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழனைப் போல அடிமுட்டாள் கிடையவே கிடையாது. இல்லையா?”

”அண்ணாச்சி, இல்லை என்று சொன்னவுடன் இன்னொன்று ஞாவகத்திற்கு வருகிறது. இல்-தல் என்று சொன்னால் துளைத்தல் என்று சொன்னேன் அல்லவா? துளைத்த பின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு இருக்காதல்லவா? அதனால் இன்மைப் பொருளும் இல்லிலிருந்து, துளைப்பொருளிலிருந்து, எழும்பியது. இன்மைப் பொருளில் இருந்து ”இலம்பாடு” போன்ற வறுமைச்சொற்கள் எழுந்தன. இலகு போன்ற நொய்மைச் சொற்களும், இலவு போன்ற மென்மைச் சொற்களும் இல்லில் எழுந்தவை தான். நூறாயிரத்தைக் குறிக்கும் இலக்கம் என்ற சொல் நொய்மைப் பொருளில் எழுந்த சொல். வேர் தமிழில் இருந்து பின் வடக்கே போய்ப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்குள் கடன்வந்த சொல். அதை விவரிக்கத் தொடங்கினாற் பெருகும் என்பதாற் தவிர்க்கிறேன். நூறு, ஆயிரம், இலக்கம், நெய்தல், குவளை, கோடி, ஆம்பல், தாமரை, வெள்ளம் போன்ற எண்களைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.”

”சரி எண்களை விட்டிடுவோம். ஆனால் இல்லையென்று சொல்கிறோமே, அதுவும் இல்லிலிருந்து தானா?”

”ஆமாம். இன்னொன்றையும் பாருங்கள். இல்லிக் கொண்டே போனால் என்னாவாகும்? ஒரு மட்டத்திருந்து இறங்குவோம் தானே? இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் என்றால் இறங்குதல். இந்தச் சொல் நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும். இழிவு என்னும் தாழ்ச்சிப் பொருளும் இதில் எழுந்தது தான். இழிகுதல்>இயிகுதல்>ஈகுதல்>இகுதல் என்ற வளர்ச்சியில் இறங்குதலுக்கு இன்னொரு சொல்லும் எழும். (ழகரம் யகரமாய் மாறுவது வட தமிழ்நாட்டுப் பழக்கம்.) இகுத்தல் என்னும் பிறவினை தாழ்த்தற் பொருள்கொள்ளும். இகழ்தல் வினையும் கூட இகுதலின் நீட்சி தான்.”

அன்புடன்,
இராம.கி

Monday, July 18, 2011

வாகை மாற்றங்கள் (phase changes) - 5

இருபுனைக் கட்டகங்களின் வாகைப் படத்தை (phase diagram) விவரிப்பதாய்ச் சொல்லியிருந்தேன். இப்போதையத் தொடக்க நிலையில் முழு விவரிப்பும் தந்தால், ஒருவேளை படத்தின் பலக்குமை (complexity)நம்மிற் சிலரைப் பயமுறுத்தக் கூடும். எனவே கொஞ்சங் கொஞ்சமாய் இதை அவிழ்க்கும் வகையில், நீர்ம - ஆவி வாகைகள் மட்டுமிருக்கும் பகுதியை முதலில் விவரிக்கிறேன். கூடவே விழும வளி (ideal gas), விழுமக் கரைசல் (ideal solution) ஆகியவற்றையும் ஓரளவு பார்ப்போம்.

எளிதில் ஆவியாகும் ஈதைல் வெறியம் (A) போன்றதொரு நீர்மத்தை ஒரு கிளராடிக் குடுவையில் (glass flask)எடுத்துக் கொள்வோம். இந்தக் குடுவைக்குள் நீர்மம் இறங்க ஓர் உள்ளீட்டு வாவியும் (inlet valve), ஆவி வெளியேற ஒரு வெளியேற்று வாவியும் (outlet valve), நீர்மம் கீழிறங்க ஓர் இழி வாவியும் (drain valve), குடுவையின் அழுத்தம் (pressure) வெம்மை (temperature) போன்றவற்றை அளக்க வாய்ப்பளிக்கும் இரு துளைகளும் இருக்கட்டும். இத்துளைகளின் வழியே அழுத்தக் கோலும் (pressure gauge), வெம்மை மானியும் (thermometer) செருகியதாய்க் கொள்ளலாம். வேண்டும் வகையிற் குடுவையைச் சூடேற்ற ஒரு சூடேற்றுக் கட்டகம் (heating system) பொருத்தியிருப்பதாய்க் கொள்ளுங்கள்.

குடுவை, கிளராடியிற் செய்ததால், ”உள்ளிருக்கும் கொள்ளீடு (contents) எம் மட்டு (level)?” என்று நம்மால் அளக்க முடியும். இந்தக் காலக் கிளராடிக் குடுவைகள் ஊதுமக் கோளத்திற்கும் (atmosphere) மேல் 2, 3 மடங்கு அழுத்தம் தாங்கும் வலுக் கொண்டவையாதலால், செய்யும் சோதனைகளைத் தாங்கும் ஏமத் திறன் (safety capability) இவற்றிற்கு உண்டு.

ஊதும அழுத்தத்தில் A யின் கொதிநிலை (boiling point) 78.4 பாகை செல்சியசு என்பதால், இவ்வெம்மைக்கருகில் A யைச் சூடேற்றினால் A ஆவி குடுவையிலிருந்து வெளியேறத் தொடங்கும். கூடவே, குடுவையில் இருந்த காற்றும் வெளியேறும். பெருங்கவனத்தோடு செய்தால் ஆவி கலந்த காற்றை குடுவையிலிருந்து வெளியேற்றி A ஆவி மட்டும் அதன் பின் வெளியேறும்படி செய்ய முடியும். அப்போது குடுவைக் கொள்ளீட்டின் வெம்மை 78.4 ஐத் தொட்டு அதற்கு மேற் போகாது ஆவி மட்டும் வெளியேறும்.

இப்பொழுது, வெளியேற்றும் வாவியை மூடினால் குடுவையுள் அழுத்தம் வெளியைக் காட்டிலும் அதிகரிக்கும். குடுவை வெம்மையும் 78.4 பாகைக்கு மேற் செல்லும். குடுவையின் வெம்மை 85 பாகைக்குப் போகிறதென்று வையுங்கள். சூடேற்றும் கட்டக வழி வெம்மையைக் கட்டுறுத்தி (சூட்டைக் கூட்டியோ, குறைத்தோ) குடுவையின் வெம்மை 85 க்கு மேற் போகாதவாறு தொடர்ந்து செய்யலாம். இந்நிலையில் குடுவையின் உள்ளே A யின் இருப்பை அளக்கலாம். இது எடையால் அளந்து மூலகமாய் மாற்றுவதாகவோ, அன்றி குடுவையுள் தெரியும் மட்டத்தின் வழி வெள்ளத்தைக் கணக்கிட்டு மூலகமாய் மாற்றுவதாகவோ அமையும்.

குடுவையின் கொள்ளீடு எவ்வளவு என்று அறிந்த பின், நீர் (W) போன்ற இரண்டாம் பொதியை (ஊதும அழுத்தத்தில் இதன் கொதிநிலை 100 பாகைச் செல்சியசு) உள்ளீட்டு வாவி மூலம் குடுவைக்குள் இறக்கலாம். இரண்டாம் நீர்மத்தின் கொள்ளீட்டு அளவையும் A யை அளந்தது போல் ”எவ்வளவு?” என்றறிந்தால் நம்முடைய அலசலைத் தொடங்கலாம்.

இப்பொழுது குடுவையின் உள்ளே காற்றுக் கிடையாது. குடுவை 85 பாகையில் இருக்கிறது. A பொதியின் மூலக அளவு mA என்றும் W பொதியின் மூலக அளவு mW என்றும் இருப்பதானால் மொத்த மூலக அளவு [mA + mW] என்றாகும். கொடுத்துள்ள கரைசலில் (solution), ஊட்டு மூலகப் பகுவம் (feed mole fraction)

zA = mA/ (mA + mW) என்றாகும்.
zW = mW/ (mA + mW) = 1- zA என்றமையும்.

A, W என்ற பொருள்கள் இரு வாகைகளுக்குள் எங்கும் எப்படியும் விரவி இருக்கலாம். பொதுவாகச் சூடேற்றும் வேகத்தைப் பொறுத்து நீர்ம அளவும், ஆவியளவும் இருக்கும். சூடேறச் சூடேற நீர்மம் குறைந்து எல்லாம் ஆவியாக மாறியிருக்கும். எந்தக் கணத்திலும் நீர்ம மட்டத்தைக் கொண்டு குடுவைக்குள் நீர்மம் எவ்வளவு என்று தீர்மானிக்கலாம். ஒரு குறிப்பிட்ட கணத்தில் நீர்மக் கரைசல் L மூலகம் இருப்பதாகவும், ஆவிக் கரைசல் G மூலகம் இருப்பதாகவும் கொள்ளுவோம். எல்லாக் கணங்களிலும், mA+mW = L+G என்ற சமன்பாடு இருந்து கொண்டேயிருக்கும்.

தவிர, ஆவியில் இருக்கும் A மூலகப் பகுவமும், நீர்மத்தில் இருக்கும் A மூலகப் பகுவமும் ஒன்றுபோல இருக்காது. வெவ்வேறாக இருக்கும். [அவை குடுவைக்குள் உள்ளிட்ட கரைசலின் மூலகப் பகுவத்திலும் இருக்காது.] ஊதும அழுத்தத்தில் A யின் கொதிநிலை 100 பாகை என்றும், W யின் கொதிநிலை 78.4 பாகை என்றுஞ் சொல்லியிருந்தேன். இப்பொழுது 78.4 பாகையைத் தாண்டியவுடன் எது முதலில் ஆவியாகும்? A என்று எளிதில் விடை சொல்ல முடியும். 85 பாகையில் ஆவி வாகையுள் A அதிகமாகவும் W குறைந்தும் இருக்கும். இப்பொழுது A யின் துலைப்பை (balance; துலை என்ற சொல் கருவியையும் துலைப்பு என்ற சொல் கருவி செய்யும் வேலையையும் குறிக்கும்) மட்டும் பார்ப்போம்.

குடுவையுள் இட்ட A யின் மூலக அளவு = mA = (mA+mW)*zA = (L+G)*zA
ஆவி வாகையுள் இருக்கும் A யின் மூலக அளவு = G*yA
நீர்ம வாகையுள் இருக்கும் A யின் மூலக அளவு = L*xA
A யின் துலைப்பைப் பார்த்தால்,
L*xA + G*yA = (L+G)*zA என்றாகும்.
zA = [L/(L+G)]*xA + [G/(L+G)]*yA

இந்தத் துலைப்பை, வாகை வினையின் இயக்கக் கோடு (operating line of the phase reaction) என்று அழைப்போம். கீழே உள்ள முதற்படத்தைக் கவனியுங்கள்.



இந்தப் படத்திற் கொடுத்திருக்கும் ஊட்டு மூலகத்தில் (feed moles) குறிப்பிட்ட மூலகப் பகுவம் நீர்ம வாகையில் இருக்கிறதென்றால் அதற்குப் பொருந்தும் மூலகப் பகுவம் ஆவி வாகையில் ஏற்பட்டே தீரும். அதை நம் உகப்பிற்குத் தக்கத் தேரவே முடியாது. அது கட்டகத்தில் ஏற்படும் விளைவு. இப்படி அமையும் இரு வாகைச் செறிவுகளையும் ஒக்கலிப்பு வாகைச் செறிவுகள் (equilibrium phase concentrations)என்று சொல்லுவார்கள். இவை ஒன்றிற்கொன்று ஒக்கலித்தவை. ஒரு வாகைச்செறிவு கூடினால், இன்னொன்றும் அதற்குத் தக்க மாறும்.

நீர்ம, ஆவி வாகைகளில் ஒவ்வொரு சிட்டிகை (sample) பொறுக்கியெடுத்து வேதியலாய்வு மூலமோ, பூதியலாய்வின் மூலமோ இந்த ஒக்கலிப்புச் செறிவுகளை ஆயமுடியும். ஒவ்வோர் ஊட்டுச் செறிவிற்கும் தக்கக் குறிப்பிட்ட நீர்ம, ஆவிச் செறிவுகள் அமையும். குடுவையுள் வெவ்வேறு mA, mW மூலகங்கள் எடுத்து zA என்னும் ஊட்டுச் செறிவை சுழியிலிருந்து ஒன்றுவரை வேறுபடுத்திப் பல்வேறு ஒக்கலிப்பு வாகைச் செறிவுப் புள்ளிகளைத் (xA யும் அதனோடு பொருந்தும் yA யும்) தொடர்ச்சியாகப் பெற முடியும்.

அவற்றைக் கொண்டு, கீழேயுள்ள இரண்டாம் படத்தில் உள்ளது போல் ஒரு திணிவுச் சுருவை (condensation curve) யாகவும், ஓர் ஆவிப்புச் சுருவை (vaporization curve)யாகவும் வரைந்து காட்ட முடியும். திணிவுச் சுருவையை துளி நிலைச் சுருவை (dew point curve) என்றும், ஆவிப்புச் சுருவையைக் கொதிநிலைச் சுருவை (boiling point curve) என்றும் சொல்வதுண்டு.



இங்கே குறிப்பிட்டுள்ள படத்தில், நீர்ம வாகை ஒரு விழுமக் கரைசலாகவும் (ideal solution), ஆவி வாகை ஒரு விழும வளியாகவும் (ideal gas) இருப்பது போற் காட்டப் பட்டிருக்கின்றன. இயலான சுருவைகள் (natural curves) விதம் விதமாய் பலக்குமை (complexity) காட்டி வேறு தோற்றம் கொள்ளலாம். அந்தப் பலக்குமைச் சுருவைகளை அடுத்தடுத்த பகுதிகளிற் காணலாம்.

பொதுவாக ஆவியென்றாலே அது கிடுகுப் புள்ளிக்குக் (critical point) கீழிருப்பது தான் என்றாலும், பலநேரம் நுணுகு வேறுபாட்டை மறந்து வளி(gas)யென்றே சொல்வது உண்டு. பொதுவாக நிலைத்த (constant) வெம்மையில் எந்த வளியின் அழுத்தமும் அதன் திணிவுக்கு (density) நேர் வகுதத்தில் இருப்பதில்லை. பெரும்பாலான வளிகள் இயல்பு மிகுந்த வெம்மையில் (very high temperature), அல்லது மீக்குறைந்த அழுத்தத்தில் (extreme low pressure) கீழுள்ளது போல் நேர்வகுத உறவைக் காட்டுவதுண்டு.

P = R*T*(rho)

இங்கே P என்பது அழுத்தம், R = வளிம நிலையெண் - gas constant, T = கெல்வின் அளவுகோலில் அளக்கப்படும் வெம்மை, rho = வளிமத் திணிவு. எந்தவொரு இயல் வளியும் (natural gas) இந்தப் போக்கை நாம் காணும் அழுத்த, வெம்மை அரங்குகளில் (ranges) முழுதும் காட்டுவதில்லை. அதிக வெம்மை, குறைந்த அழுத்தம் ஆகிய விளிம்புகளில் (boundaries) மட்டுமே இப்போக்கு இயல்பாய்க் காணப்படுகிறது. எனவே விழுமிய (=உயர்ந்த, சிறந்த, பின்பற்றத் தக்க) போக்கான இதை ஒரு போல்மம் (model) போலாக்கி விழும வளி என்று பூதியலார் சொல்லுவார்கள். இயல் வளிகள் அத்தனையும் இவ்விழுமிய போல்மத்திலிருந்து சற்று விலகி விழுமாப் போக்கைக் (non-ideal behaviour) காண்பிக்கின்றன

பொதுவாக, ஒற்றைப் புனைக் கட்டகங்களில் (single component sytems) குறிப்பிட்ட வெம்மையில் மொத்த அழுத்தம் என்பது நீர்மத்தின் ஆவியழுத்தமாகவே இருக்கும். காட்டாகத் தனித்த வெறியமாய் அமையும் போது, P = PA என்றமையும். இதே போல W என்ற நீர்மமும் தனித்து இருக்கும் போது, P = PW என்று காட்டும். இனி வெறியமும் நீரும் கலவையாகும் போது,

A யின் பகுதி அழுத்தம் (partial pressure of A) = xA*PA என்றும்,
W யின் பகுதி அழுத்தம் (partial pressure of W) = (1-xA)*PW என்றும்

அமையும். மேலே காட்டிய பகுதி அழுத்தங்களின் நேர்வகுத வரையறை ரௌல்ட் விதி (Rault's law)யாற் தீர்மானிக்கப் படுகிறது. கூடவே மொத்த அழுத்தம் P = xA*PA + (1-xA)*PW என்று அமைகிறது. இப்படி நேர்வகுதத்தில் அமையும் கரைசலைத்தான் விழுமக் கரைசல் என்று அழைப்பார்கள். இந்தக் கோடும் விழும ஆவிப்புக் கோடு (ideal vaporization line)என்று அழைக்கப் படும். இது மூன்றாவது படத்திற் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளது.



உண்மையில் வெறியமும் நீரும் கலந்த கலவை ஒரு விழுமக் கரைசல் அல்ல. விழுமக் கரைசலுக்குக் காட்டு வேண்டுமானால் பென்சீன் - தாலுவீன் (Benzene - Toluene) கரைசலைச் சொல்லலாம். 10 பாகை செல்சியசில் அதன் ஆவிப்புக் கோடு விழுமமாகவே இருப்பதைக் கீழே நாலாவது படத்தில் அறியலாம். [இருவேறு நீர்மங்கள் பூதியற் குணங்களில் (physical attributes) ஒன்று போலவே இருந்து, வேதியியற் தாக்கமும் (chemical impact) ஆகக் குறைவாக இருந்து இன்னொரு வகைப் பொதி இருப்பதை உணராத படி உறழ்ச்சி கொண்டிருந்தால் அதை விழுமக் கரைசல் என்று சொல்லுவார்கள்.]



நீர்ம வாகை விழுமக் கரைசலாய் இருந்து, ஆவி வாகை விழும வளியாக இருக்கும் போது, ஒக்கலிப்புச் சமன்பாடு,

yA = xA*PA/P என்றும்,

ஆவி மூலகப் பகுவத்தின் வழி, மொத்த அழுத்தம், 1/P = yA/PA + (1-yA)/PW என்றும் அமையும். மொத்த அழுத்தச் சமன்பாடு ஒரு செவ்வக மீவளைவுச் சுருவையை (rectangular hyperbolic curve) உணர்த்தும். விழுமத் திணிவுச் சுருவை (ideal condensation curve) இப்படித்தான் தோற்றம் காட்டுகிறது.

மேலேயுள்ள இரண்டாம் படத்தில் P என்பதை குத்துக்கோட்டு (vertical) அளவுகோலாகவும், x/y/z போன்ற மூலகப் பகுவங்களை கிடைக்கோட்டு (horizontal) அளவுகோலாகவும் கொண்டு விழுமத் திணிவுச் சுருவையும் , விழும ஆவிப்புச் சுருவையும் காட்டப் பட்டிருக்கின்றன. இரண்டும் A,W என்ற பொருள்களின் இருவேறு ஆவியழுத்த எல்லைப் புள்ளிகளிற் சந்தித்துக் கொள்கின்றன. மொத்தத்தில் இரு சுருவைகளும் சேர்ந்து ஓர் இலை போலத் தோற்றம் காட்டுவதைக் காணலாம். இரு சுருவைகளையும் குறுக்கே வெட்டுவது போல் ஓர் இயக்கக் கோடும் காட்டப் பட்டிருக்கிறது. இயக்கக் கோட்டைக் குறுக்கு வெட்டும் இன்னொரு குத்துக் கோடும் காட்டப் பட்டிருக்கிறது. இந்தக் குத்துக் கோடு ஒரு குறிப்பிட்ட ஊட்டுச் செறிவோடு ஒரு கலவையை மேலிருந்து கீழே கொண்டுவரும்போது முதலில் முழுக்க நீர்மமாய் இருந்து பின் நீர்ம, ஆவி வாகைகளாய்ப் பிரிந்து வெவ்வேறு ஒக்கலிப்புச் செறிவுகளைக் காட்டி முடிவில் முழுக்க ஆவியான செலுத்தத்தைக் (process) காட்டுகிறது.

இரண்டாம் படத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன். .

அன்புடன்,
இராம.கி.

Wednesday, July 13, 2011

வாகை மாற்றங்கள் (phase changes) - 4

இருபுனைக் கட்டகங்களை (two component systems) விரிவாகப் பார்ப்பதற்கு முன், செறிவு (concentration) என்பது எப்படி அளக்கப் படுகிறது. வாகைவிதி (phase rule) இருபுனைக் கட்டகங்களை எப்படிக் கட்டுப் படுத்துகிறது என்று இந்தப் பகுதியிற் பார்ப்போம்.

பொதிகளைப் பொருட்களாய் (substance) அறிவது அறிவியலில் ஒரு முறை. இம்முறையில் ஆயும் பொருட்களைப் பகுத்துக் கொண்டே போனால் சிறியது, குறுகியது, நுணுகியது, நொசிந்தது என்று முடிவின்றிப் போய்க்கொண்டிருக்கும். ஒரு கரிமப் பொருளைப் பகுத்துக்கொண்டு போனால் கடைசி வரை கரிமமே இருப்பதாய் இம்முறை கொள்ளும். இது தொடக்க காலக் கணுத்த அறிவியலில் (continuum science) பயன்படுத்திய முறை. இந்த முறை தான் கணுத்த மாகனவியல் (continuum mechanics), விளவ மாகனவியல் (fluid mechanics), தெறுமத் துனைவியல் (thermodynamics) போன்ற துறைகளில் பொதுவாய்க் கையாளப் படுகிறது.

இன்னொரு முறை 1900 க்கு அப்புறம் வந்தது, இதிற் பொதிகளை குறிப்பிட்ட அளவு பகுத்த பின்னால் கணுத்தம் (continuity) என்பது போய்விடும். அதற்கும் கீழே அணுக்கூட்டங்கள், மூலக்கூறுச் சட்டக்கூடுகள் (molecular lattices) என்று அமைத்து அணுக்களாய், மூலக்கூறுகளாய் பொருளை அறிய முற்படுவார்கள். அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையில் நுணுகிய அளவில் வெற்றிடம் இருக்கிறது என்றும் கொள்ளுவார்கள். அணுக்கள், மூலக்கூறுகளுக்கு நடுவில் அணுயீர்ப்பு விசைகள் (atomic attractive forces), அணு விலக்கு விசைகள் (atomic repulsion forces) என்று முற்றிலும் புதிய புலத்திற்குள் பூதியல் நுழைந்துவிடும். இந்தப் பூதியலை மூலக்கூற்றுப் பூதியல் (molecular physics), அணுப் பூதியல் (atomic physics)என்று அழைப்பார்கள்.

ஒளி (light), மின்னி (electron), முன்னி (proton), நொதுமி (neutron) போன்றவற்றை அலையுருவாய் (wave form) அறிவதும் துகட்கற்றையாய் (quantum)அறிவதும் எப்படிப் பூதியலில் வெவ்வேறு வழிகளோ, அதே போல பொதிகளைப் பொருட்களாய் (substances) அறிவதும், மூலக்கூறுகளாய் (molecules)அறிவதும் வெவ்வேறு வழி முறைகள். ஒன்று இன்னொன்றைக் காட்டிலும் உயர்த்தி மற்றது தாழ்த்தி, என்று சொல்ல முடியாது. இரண்டிற்குமே வெவ்வேறு பயன்பாடுகள் உண்டு.

மூலக்கூற்று முறைக்கும் பொதிகளைப் பொருட்களாய்ப் பார்க்கும் கணுத்த முறைக்கும் தொடர்பு வேண்டுமெனில் ”வெம்மை”யையே காட்டாய்ச் சொல்ல முடியும். கணுத்தமுறையில் வெம்மை என்பது சூட்டுப் (hotness) பெருணையோடு (primitive) தொடர்புடையது. கடைசிவரைக்கும் இந்தத் தொடர்பை மறுக்கவே மாட்டோம். ஆனால் அணுப் பூதியலில், குறிப்பாக புள்ளி மாகனவியலில் (statistical mechanics) வெம்மை என்பது மூலக்கூறுகளின் சலனாற்றலைப் (kinetic energy) வெளிப்படுத்தும் ஒரு கூறு. மூலக்கூறுகளின் சலனாற்றல் கூடக் கூட அவற்றின் வெம்மை கூடுவதாய் அந்தப் பார்வையிற் கூறுவார்கள். இருவகைப் பார்வைக்கும் அறிவியலில் இடம் உண்டு. ஒன்றை இன்னொன்றாய்ச் சிந்தை பெயர்ப்பதும் உண்டு. இரு பார்வையும் ஒன்றையொன்று ஊடுறுவதும் உண்டு. அப்படியோர் ஊடாட்டத்தை இனிப் பார்ப்போம்.

எடை, வெள்ளம் போன்ற வியற் குணங்களைப் பேசிய நாம் இன்னொரு வியற் குணத்தை விட்டுவிட்டோம். அது எண்ணுதலைப் பொறுத்தது. ஒரு பொருளின் இருப்பு எவ்வளவு?” என்று கேட்டால் சட்டென்று கணுத்த முறையில் எடையைச் சொல்லலாம், வெள்ளத்தைச் சொல்லலாம். கூடவே அணு முறையைக் கொணர்ந்து ”எத்தனை மூலக்கூறுகள் அப்பொருளில் உள்ளன?” என்றுஞ் சொல்லலாம். பொதுவாய், பொருட்களை விவரிக்கும் போது 6.02214179 * 10^23 மூலக்கூறுகளை ஒருக்கிய தொகுதியாய் பொருளின் எடை, வெள்ளம் போன்றவற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும். 6.02214179*10^23 மூலக்கூறுகளின் தொகுதியை மூலகம் (mole) என்று சொல்லுவார்கள்.

1 மூலகம் கரியணுக்கள் என்றால் அதில் 6.02214179*10^23 கரியணுக்கள் இருக்கின்றன என்று பொருள். இதன் எடை 12 கிராம். இருக்கும். இதே போல 6.02214179*10^23 கரியிரு அஃகுதை (carbon-di-oxide) மூலக்கூறுகள் சேர்ந்தால் அதை 1 மூலகம் கரியிரு அஃகுதை என்று சொல்லுவார்கள். அதன் எடை 44. கிராம் இருக்கும். இதே போல 1 மூலகம் நீர் (18.015 கிராம்), 1 மூலகம் வெறியம் - alcohol(46.07 கிராம்), என்று வெவ்வேறு பொதிகளின் தொகுதியை அடையாளம் காட்ட முடியும். இப்படி மதிப்பிடும் மூலகத்தின் எடையை மூலக்கூற்று எடை (molecular weight) என்று சொல்லுவார்கள். கரிமவணுவின் அணுவெடை (atomic weight)12 கிராம்/மூலம் ஆகும்.

எடை, வெள்ளம் ஆகியவற்றைக் காட்டிலும் பொருளளவைக் குறிக்க வேதியியலில் மூலகத்தையே அதிகமாகப் பயன்படுத்துவார்கள். காட்டாகக் கீழேயுள்ள சமன்பாடு,

2 H2 + O2 → 2 H2O

இரு மூலகம் ஈரகத்தோடு (Hydrogen) ஒரு மூலகம் அஃககம் (oxygen) வினைந்து இரு மூலகம் நீரை உருவாக்கியதைக் கூறும். சமன்பாட்டின் இரு பக்கத்திலும் உள்ள வினைப்புகளும் (reactants) விளைப்புகளும் (products) மூலகத்தாலேயே அளக்கப் படுகின்றன. கொடுக்கப்பட்ட பொருளில் எத்தனை அணுக்கள், அயனிகள் (ions) இருக்கின்றன என்று மூலக அளவு சொல்லுகிறது.

ஒரு கரைசலின் செறிவு (concentration) அதன் மூலகையாற் (molarity) சொல்லப் படுகிறது. [ஒரு லிட்டர் கரைசலில் எத்தனை கரைபொருள் மூலகம் அடங்கியிருக்கிறது? - என்பது மூலகையாகும்]

மூலகையைப் போல் அமையும் இன்னொரு செறிவு மூலதை (molality) என்று சொல்லப் படுகிறது. [ஒரு லிட்டர் கரைப்பியில் - solvent (நினைவு வைத்துக் கொள்ளூங்கள், இங்கு வருவது கரைசல் - solution - அல்ல, கரைப்பி - solvent) எத்தனை மூலகம் கரைபொருள் - solute - அடங்கியிருக்கிறது? - என்பது மூலதையாகும்]

இன்னுமோர் வகையாய், மூலகச் செறிவு, மூலகப் பகுவத்தாலும் (mole fraction) சொல்லப் படுவதுண்டு. [எத்தனை மூலகம் கரைபொருள், எத்தனை மூலகம் கரைப்பி என்று கணக்கிட்டு இரண்டையும் கூட்டினால் எத்தனை மூலகம் கரைசல் என்பது வெளிப்படும். மூலகத்தில் அளவிட்ட கரைபொருளை மூலகத்தில் அளவிட்ட கரைசலால் வகுத்தால் மூலகப் பகுவம் கிடைக்கும்.]

மூலகப் பகுவம் என்பது புழக்கத்திற்கு எளிதான அலகாகும். எந்தக் கரைசலையும் (solution), கலவையையும் (mixture), கூட்டுப் பொருளையும் (compound) அதில் எத்தனை புனைகள் இருந்தாலும் மூலகப் பகுவத்தாற் செறிவைக் குறிக்க முடியும்.

இப்பொழுது வெறியமும், நீரும் கலந்த கலவை இருக்கிறதென்று வையுங்கள். இந்தக் கலவைக்கு எடை, வெள்ளம், மூலகம் என்று வியற்குணங்களிற் செறிவை வரையறுக்க முடியும். இது போக அழுத்தம், வெம்மை, வெள்ளம் போன்ற வரையறுப்புகளும் சேர்ந்து கொள்ளும். இந்த வரையறுப்புகளை வேறிகள் (variables) என்று சொல்லுவோம்.

ஒரு கரைசலை வரையறுக்க குறைந்த அளவு எத்தனை வேறிகள் தேவை என்பது ஒரே பொழுதில் எத்தனை வாகைகள் அருகருகில் அடுத்தாற்போல் இருக்கின்றன என்பதைப் பொறுத்தது. முந்திய பதிவில் வாகை விதியைப் பற்றிப் பேசினோமே, நினைவிருக்கிறதா? அந்த வாகை விதியின் படி ஒரு கரைசலில் 2 புனைகள் இருந்தால், ஒற்றை வாகையில் 3 வேறிகளை பந்தப் படா வகையில் நாம் உகந்தெடுக்க முடியும். அவற்றில் பெரும்பாலும்
அழுத்தம், வெம்மை ஆகியவற்றோடு செறிவு என்ற ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.

இதே இருபுனைக் கட்டகத்தில் இரண்டு வாகைகள் ஒரே பொழுது இருந்தால், 2 வேறிகளைத்தான் பந்தப்படா வகையிற் தேர்ந்தெடுக்க முடியும்.

மூன்று வாகைகள் இருந்தால் இன்னும் ஆழ்ந்த கட்டுப்பாடு வந்து விடும். ஒரு வேறியைத் தான் பந்தப்படா வகையில் உகந்தெடுக்க முடியும்.

முடிவில் 4 வாகைகள் சேந்திருந்தால், எந்த வேறியையும் நாம் தேர்ந்தெடுக்க முடியாது ஒரு வேறாப் புள்ளி (invariant point) தானாகவே வந்து சேரும்.

ஆக இருபுனைக் கட்டகத்தின் வாகைப் படத்தின் (phase diagram) எந்தப் புள்ளியிலும் மாகமாய்ப் (maximum) பார்த்தால் 4 வாகைகள் வரை இருக்க முடியும். அவற்றின் இயலுமைகளை இனிப் பார்ப்போம்.

1. ஓர் ஆவி, இரு நீர்மம், ஒரு திண்மம் - இதுவோர் இயலுமை.
2. ஓர் ஆவி, ஒரு நீர்மம், இரு திண்மங்கள் - இது இன்னோர் இயலுமை,

3. ஓர் ஆவி, மூன்று திண்மம் - இது மூன்றாவது இயலுமை;

4. ஒரு நீர்மம், மூன்று திண்மம் - இது நாலாவது இயலுமை

5. இரண்டு நீர்மம், இரண்டு திண்மம் - இது ஐந்தாவது இயலுமை.

6. மூன்று நீர்மம், ஒரு திண்மம் - இது ஆறாவது இயலுமை

இத்தனை பலக்குமைகளையும் காட்டி இருபுனைக் கட்டகங்கள் அமையலாம். 4 வாகை கொண்ட வேறாப் புள்ளிகளுக்கு அருகில் ஒரு பரிமானச் சுருவைகள் (one dimensional curves), இரு பரிமானப் பரப்புகள் (two dimensional surfaces) என்று பல்வேறு இயலுமைகள் வியக்கத் தக்க வகையில் விரியும். அவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, July 03, 2011

வாகை மாற்றங்கள் (phase changes) - 3

வாகை மாற்றங்கள் (phase changes) - 1

வாகை மாற்றங்கள் (phase changes) - 2


மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பதிவுகளில் உள்ளார்ந்த குணங்களையும் (intensive properties), வியல்ந்த குணங்களையும் (extensive properties) வேறுபடுத்திக் கண்டோம். ஒரு குறிப்பிட்ட பொதியின் எடை 1 கிலோ, அதன் வெள்ளம் 1.2 இலிட்டராய் இருப்பதாகக் கொள்ளுங்கள். அதே பொதியை இரண்டு கிலோ எடையெடுத்தால், வெள்ளம் 2*1.2 = 2.4 லிட்டராய்த் தானே இருக்கும்? ஒரே வகைப் பொதியின் பல்வேறு மடங்கு எடைகளுக்கு, அந்தந்த மடங்கு வெள்ளங்கள் அமைவதன் பொருள் என்ன? வியற் குணங்கள் நேர் மேனியில் (direct ratio) உறவு கொண்டுள்ளன என்று தானே பொருள்?

இந் நேர்மேனியின் விளைவாய், ஒரு குறிப்பிட்ட வியற் குணத்தை அடிப்படையாய்க் கொண்டு, மற்ற வியற்குணங்களின் வகுதங்களைக் (ratios) கணக்குப் போட்டால், நமக்கு வெவ்வேறு உள்ளார் குண(க)ங்கள் (factors) வந்து சேருகின்றன. 

காட்டாக, ஒரு குறிப்பிட்ட எடையை அடியாய்க் கொண்டு, வெள்ளத்தை அவ்வெடையால் வகுத்தால் விதப்பு வெள்ளம் (specific volume) என்பது கிடைக்கும். பூதியலில் (physics) விதப்பு வெள்ளம் என்பது ஓர் உள்ளார் குணம் (intensive property) என்பார். விதப்பு வெள்ளத்தின் மறுதலை (opposite)யான திணிவும் (இதை அடர்த்தி என்றும் சொல்வதுண்டு.) ஓர் உள்ளார் குணமே.

பொதுவாய் எந்தப் பொதியின் அழுத்தம் (pressure), வெம்மை (temperature), விதப்பு வெள்ளம் (specific volume) (அல்லது திணிவு) ஆகிய மூன்றிற்கிடையில் ஓர் இடைவிடா உறவு இருக்கும். [ஆவி வாகையில் இது எளிதாய் வெளிப்படும்.] இவ்வுறவு இடைவிட்ட (discontinuous) இடங்களில், வாகை மாற்றங்கள் நடைபெறும். இன்னும் சற்று விவரமாய்ப் பார்ப்போம்.

பொதுவாய் நீர்மம், ஆவி இரண்டிற்கிடையில் மட்டும் வாகை மாற்றம் நடைபெறுவதில்லை. பனிக்கட்டிக்கும் நீராவிக்கும் இடையே கூட வாகை மாற்றம் நடைபெறும். காட்டாகப் ஒரு பனிக்கட்டி 10 பாகை வாரன்ஃகீட்டில் இருக்கிறதென்று வையுங்கள். இதை 32 பாகைக்கும் கீழே மெதுவாய்ச் சூடேற்றினால், மீச்சிறிதளவு பனிக்கட்டி நேரடியாக நீர்மம் ஆகாமலே ஆவியாகி எழும். 

இப்படிப் பனிக்கட்டி எனுந் திண்மத்தில் (solid) இருந்து நேரடி ஆவி எழுவதை ஆவெழுமம் என்று சொல்வார். [இதைத் தான் sublimation என்று ஆங்கிலத்திற் சொல்கிறோம். இப்படி ஆவியாகும் திண்மத்தோடு இன்னொரு பொதி சேர்ந்த கலவைக் கட்டியைப் தூய்மைப் படுத்துவதற்கு sublimation மூலம் திண்மத்தைத் தனியே பிரித்து ஆவியாக்கி ஆவியை வேறு இடத்திற் குளிர வைத்து கலவைக் கட்டியைப் பத(ங்க)ப்படுத்துவார். (சித்த மருத்துவத்தில் இது ஓரோ வழி நடப்பதுண்டு.) எங்களுக்கெல்லாம் பள்ளியிற் பதங்கமாதல் என்ற சொல்லால் இம்மாற்றத்தைச் சொல்லி வந்தார்].

குறிப்பிட்ட கலவைப் பொதி (mixed body) பதங்கப் படுவதால் அதையொட்டிப் பதங்கமாதல் என்ற அருஞ்சொல் முன்னே ஆளப்பட்டு வந்தது. உண்மையில் இச் சொல் குறிப்பிட்ட இரண்டாம் பொதிக்கே சரியாய் இருக்கும். ஆவியாகும் பொதிக்குச் சரிவராது. 

உண்மையில் என்ன நடக்கிறது? அந்தக் கலவைப் பொதி பதங்கமாகிறது ஆவியாகும் திண்மம் பதங்கமாவதில்லை. அது ஓரிடத்தில் ஆவியாகி இன்னோரிடத்தில் மீண்டும் குளிர்ந்து திண்மம் ஆகிவிடும். இப்படித் திண்மத்தில் இருந்து ஆவியெழுவதை திண்மாவெழுமம் என்பதே சரியாக இருக்கும்.

இதுவரை நீர்மம், ஆவி இரண்டிற்குமிடையே வாகை மாற்றம், திண்மம், ஆவி இரண்டிற்குமிடையே வாகை மாற்றம் என்று 2 மாற்றங்களைப் பார்த்தோம். இவை போகத் திண்மம், நீர்மம் ஆகிய இரண்டிற்குமிடையே நடைபெறும் வாகை மாற்றமும் உண்டு. அதை உருகுதல் (fusion) என்பார். பனிக்கட்டி நீராக மாறும் உருகு புள்ளி (fusion point) செல்சியசு பாகையில் 0 பாகை என்று சொல்லப் பெறும். உருகு புள்ளிகளின் தொகுதியாய் உருகுச் சுருவை (fusion curve) என்பது அமையும்.

உருகுச் சுருவை என்பது பொதிவான சரிவு (positive slope) கொண்டிருப்பதே பெரும்பாலான பொதிகளின் தோற்றம். காட்டாக, கரியிரு அஃகுதையின் (carbob-di-oxide) உருகுச் சுருவை பொதிவான சரிவே காட்டும். அதாவது அழுத்தம் கூடக் கூட உருகு புள்ளியும் கூடும். 

ஒரு சில விந்தையான பொதிகள் (நீர் ஒரு விந்தையான பொதி) நொகையான சரிவு (negative slope) காட்டும். அதாவது அழுத்தம் கூடினால் உருகு புள்ளி குறையும். இரண்டிற்கும் பொதுவாய், உருகுச் சுருவை முற்றிலும் நேரான குத்துக் கோடாய் (vertical line) அமைவதும் உண்டு. அதாவது எவ்வளவு தான் அழுத்தத்தைக் கூட்டினாலும் உருகு புள்ளி மாறுவதேயில்லை.

பொதுவாய் எந்த ஒற்றைக் கட்டகத்திற்கும் - singulary system - (ஒற்றைப் பொதிக்கும்) குறைந்தது மூன்று வாகை மாற்றங்கள் உண்டு. அவை:

திண்மம் - நீர்மம் இவற்றிடையே உருகுதல்,
திண்மம் - ஆவி இவற்றிடையே திண்மாவெழுதல்
நீர்மம் - ஆவி இவற்றிடையே ஆவியாதல்

இவையெல்லாவற்றிலும் மாற்றம் நடக்கும் நேரத்தில் 2 வாகைகள் சேர்ந்து இருக்கின்றன. அப்படிச் சேர்ந்திருக்கையில் அழுத்தத்திற்கும் வெம்மைக்கும், இடையே ஓர் உறவு ஏற்படும். காட்டாக 92.1 செல்சியசில் 0.76 பார் அழுத்தம் இருந்தால் நீர்மம், ஆவி என 2 வாகைகள் குடுவையில் இருக்கும். அதற்கு மேல் அழுத்தம் கூடின் ஆவியெலாம் நீர்மமாகிவிடும். இதேபோல் வெம்மை குறையின் ஆவியெல்லாம் நீர்மம் ஆகிவிடும். இந்த வெம்மைக்கு இவ்வழுத்தம் என்று இருந்தாற்றான் ஒரே பொழுதில் 2 வாகைகள் இருக்க முடியும்.

அதாவது 2 வாகைகள் இருக்க வேண்டுமானால் பந்தப் படாத வகையில் (independent manner) நம்மால் அழுத்தம், வெம்மை, விதப்பு வெள்ளம் ஆகிய மூன்றில் ஒன்றை மட்டுமே உகந்தெடுக்க முடியும். மற்ற இரண்டும் முற் சொன்ன உறவால் தீர்மானிக்கப் பட்டு விடும். ஓர் குறிப்பட்ட அழுத்தத்தை (0.76 பார்) தேர்ந்தெடுத்து விட்டால் 2 வாகைகள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் வெம்மையையும், விதப்பு வெள்ளத்தையும் தேர்ந்தெடுக்க முடியாது கட்டகமே அதைத் தீர்மானித்துக் கொள்ளும்.

இதே போல ஒற்றை வாகை (வெறும் ஆவி என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இருக்கும் பொழுதுகளில் பந்தப் படாத வகையில் நம்மால் இரண்டு வேறிகளை (variables) மட்டுமே உகந்தெடுக்க முடியும். மூன்றாவது வேறி கட்டகத்தாலேயே தீர்மானிக்கப் பட்டுவிடும். காட்டாக அழுத்தத்தையும், வெம்மையும் நம் விருப்பம் போல் தேர்ந்தெடுத்தால் விதப்பு வெள்ளம் என்பது அதன் விளைவாற் தீர்மானிக்கப்பட்டு விடும்.

இப்பொழுது ஒரு பொதி, மூன்று வாகைகள் சேர்ந்து இருக்க முடியுமா? - என்று கேட்டால், முடியும் என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் எதையும் பந்தப் படா வகையில் நாம் உகந்தெடுக்க முடியாது. அப்படி 3 வாகைகள் சேர்ந்து அமையும் புள்ளியை மூவாகைப் புள்ளி (triple point) என்று சொல்வார். மூவாகைப் புள்ளி என்பது வேறிக்கொள்ள முடியாத புள்ளி (invariant point) என்றும் சொல்லப் பெறும்.



மேலே ஒரு கிடையச்சை (horizontal axis) வெம்மையாகவும், ஒரு குத்தச்சை (vertical axis) அழுத்தமாகவும் கொண்டு சென்ற 3 பதிவுகளிற் பார்த்தவற்றை வரைபடமாகக் (graph) காட்டியுள்ளேன். இதை இருபரிமான வாகைப் படம் (phase diagram) என்று சொல்வதுண்டு. 

இதில் திண்மாவெழுமம், ஆவியாதல், உருகுதல் என்ற 3 உம் சுருவைகளாகக் காட்சியளிக்கின்றன. திண்மாவெழுதற் சுருவை 0 வெம்மை, 0 அழுத்தத்திற் தொடங்கி மூவாகைப் புள்ளி வரை இருக்கிறது. அந்த இடத்தில் உருகற் சுருவை (முற்றிலும்) குத்துக் கோடாய் எழுந்து நிற்கிறது. ஆவியழுத்தச் சுருவை என்பது மூவாகைப் புள்ளியிற் தொடங்கி கிடுகுப் புள்ளி (critical point) வரை வருகிறது.

கிடுகுப் புள்ளியில் நீர்மத்தின் விதப்பு வெள்ளமும், ஆவியின் விதப்பு வெள்ளமும் ஒன்றாகி ஆவிக்கும் நீர்மத்திற்கும் மாறுபாடு சொல்ல முடியாத வகையில் இரண்டும் ஒன்றாகி விளவம் (fluid) ஆகிவிடுகின்றன. 

இப்படி உருவாகும் விளவத்தை ஆவியென்றுஞ் சொல்லமாட்டார், நீர்மம் என்றுஞ் சொல்ல மாட்டார்; வளிமம் (gas) என்று சொல்வார். பொதுவாக கிடுகுப் புள்ளிக்கு மேலுள்ள வளிம நிலையை கிடுகு மேலுச்ச வாகை (super-critical phase) என்றுஞ் சொல்வதுண்டு. நீரின் கிடுகுப் புள்ளி 647.096 கெல்வின், 220.64 பார், 356 கிலோ/மீ^3 ஆக அமையும்.

இன்னும் கொஞ்சம் ஆழப் போவோருக்கு உதவியாக அழுத்தம், வெம்மை, விதப்பு வெள்ளம் ஆகியவற்றாலான முப்பரி வரைபடத்தை இணைத்துள்ளேன். இந்த முப்பரிமான வரைபடம் வாகைப் படம் என்றும் சொல்லப்பெறும்.



இதுவரை ஒற்றைப்புனையால் (single component) ஆன கட்டகத்தை மட்டுமே பார்த்தோம். இனி இரட்டைப் புனைகளால் (two components) அமைந்த கட்டகங்கள், 3 புனைகளால் (three components) அமைந்த கட்டகங்கள், அதற்கு மேலும் அமைந்த கட்டகங்கள் ஆகியவற்றைப் பார்க்கப் போகிறோம். 

பல்வேறு புனைகளால் அமைந்த கட்டகங்களை இணைக்கும் ஓர் விதியைப் படிவுற்ற வேதியலிற் (applied chemisatry) வாகை விதி (phase rule) என்று சொல்வார்.

எந்தக் கட்டகத்திலும், எத்தனை புனைகள் உள்ளனவோ அதோடு இரண்டைக் கூட்டி ஒரே சமயத்தில் உள்ள வாகைகளைக் கழித்தால் எத்தனை வேறிகளை நம் உகப்பிற்குத் தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கலாம் என்பதைக் கணித்துக் கூறும் விதி இதுவாகும். இப்படித் தேர்ந்தெடுக்கும் வேறிகளை பந்தப்படா பரியைகள் (intependent freedoms) என்று சொல்வதுண்டு

பந்தப்படாப் பரியைகள் = புனைகள் + 2 - வாகைகள்

F = C + 2 - P

ஒரு புனை, ஒரு வாகையிருந்தால் 2 பரியைகள் நாம் உகந்தெடுக்க முடியும். மூன்றாவது வேறி தானாகவே மதிப்புக் கொண்டு வந்துசேரும். நாம் ஒன்றும் கட்டுப் படுத்த முடியாது.

ஒரு புனை, 2 வாகையிருந்தால், 1 பரியையை நாம் உகந்தெடுக்க முடியும். மற்ற இரண்டு வேறிகளும் தானாக மதிப்புக் கொண்டு வந்து சேரும். நாம் அவற்றைக் கட்டுப் படுத்த முடியாது.

ஒரு புனை, 3 வாகையிருந்தால், 1 பரியையும் நாம் உகந்தெடுக்க முடியாது. ஒரே புள்ளியாய் மூன்று வேறிகளும் தானாக மதிப்புக் கொண்டு வந்து சேரும். எவற்றையும் நாம் கட்டுப் படுத்த முடியாது.
.
இனி அடுத்த பதிவில் 2 புனைகள் சேரும் கட்டகத்தைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, May 06, 2011

இறைவன்

தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பெயரியலின் 640 ஆம் நூற்பா ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று புகலும். அதே தொல்காப்பியர் 641 ஆம் நூற்பாவில்,

”பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்”

என்று சொல்லுக்குத் தொடர்பாய்ப் பொருண்மை, சொன்மைப் பின்புலங்களைக் காட்டுவார். காட்டாக, “வந்தார்கள்” - வருதற் பொருண்மை. ”வந்தது” என்ற இறந்த காலக் குறிப்பும், பலர்பாற் குறிப்பும் சொன்மை வகைக்குள் அடங்கும். கள் என்னும் பன்மை “வந்தவர் மதிப்புள்ளவர்” என்றுணர்த்தும். எந்தச் சொல்லோடும் பொருண்மை, சொன்மை ஆகியவற்றை பொருத்தினாற்றான் சொல்லின் முழுப் பொருளும் விளங்கும். சிலபோது வெளிப்படாது போதலும் உண்டு. “போயும் போயும் இவனைக் காளைன்னு சொன்னாங்களே?” என்னும் போது ”தெரிபு நிலை வேறு, குறிப்பு நிலை வேறு.”

”தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே”

என்றும் 642 ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுவார். தமிழின் பன்னூறாண்டுப் புழக்கத்திற் சொல்லின் பொருண்மை எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. அது சங்க காலத்தில் ஒன்றாகவும், சமயகாலத்தில் இன்னொன்றாகவும் இருந்திருக்கிறது. பேரரசுச் சோழர் காலத்திலும், அண்மையிலும், அது இன்னும் மாறியிருக்கிறது. மாறாதும் இருக்கிறது. மாறிய சொல்லான ”இறைவன்” என்பதை இக்கட்டுரையிற் பார்ப்போம்.

”பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல்தவம் செய்திலீர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே”

என்று திருமந்திரம் பாடிய காரணஞ் சொல்வார் திருமூலர் (திருமந்திரம், வரலாறு 63 ஆம் பாடல்). திருமந்திரத்தில் இறைவன், இறையவன் என்ற சொற்கள் ஏராளமாய் ஆட்சிகொள்ளும். ”இறைவனுக்கு” இற்றைக் காலத்தில் கடவுள் (திருமால், சிவன், நான்முகன், அல்லா இன்னும் வெவ்வேறு பெயர்கள்) என்ற பொருளையே கொள்ளுகிறோம். இன்னொரு பொருளான தலைவன் (அரசன், கணவன், மூத்தோன், தமையன், குரு), அகரமுதலிகளில் பதிவாக மட்டுமேயுள்ளது. அன்றாடப் புழக்கிலில்லை. அந்தப் பொருளில் தலைவன் என்ற சொல்லையே இப்பொழுது ஆள்கிறோம்.

ஆழ்ந்து பார்த்தால் கடவுள் எனும் பொருண்மை சங்க கால முடிவிற் தொடங்கி [காண்க: “நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்” - எனும் சிலப்பதிகாரம் ஊர்காண் காதை 7ஆம் வரி - சிவனைக் குறிக்கும் குறிப்பு. நுதல்விழி நாட்டத்துத் தலைவன் எனினும் பொருள் சிவனையே குறிக்கிறது. ], சமய காலத்திற்றான் பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. சங்க காலத்தில் ”தலைவனே” பெரிதும் விரவியது. சங்கம் மருவிய காலத்திலும் தலைவனைக் குறித்தது தொடர்ந்துள்ளது. காலவோட்டத்தில் தலைவன் எனும் பொருளாட்சி நீண்டு, கடவுட் பொருண்மை ஏற்பட்டுள்ளது. [கோயில்/கோவில்  பொருண்மையிலும் இதுபோன்ற குழப்பமுண்டு - அரசன் வீடா, தெய்வ இருப்பிடமா? இதே போலப் பகவன் (lord) என்ற சொல்லும் தலைவனையே முதலிற் குறித்தது. ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றேயுலகு” என்ற குறளில் பகவன் என்பதும் தெய்வம் குறிப்பதாய் ஆய்வாளர் சொல்வதில்லை. அதைச் சற்று கீழே பார்ப்போம்.]

சிலம்பில் கடவுட்பொருண்மை கொஞ்சங் கொஞ்சமாய் விரிகிறது. பார்க்க வழக்குரை காதை 36-40

வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;

இன்னொரு சான்று பார்க்க: அழற்படு காதை 86-87 [வேங்கடசாமி நாட்டார் அழற்படு காதையின் பல அடிகள் இடைச்செருகலென ஐயுறுவார்.]

கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்

மொத்தமாய் எல்லாம் வல்ல பரம்பொருட் பொருண்மை கிட்டத்தட்ட கி.மு.75 க்கு அருகில் இறைவன் என்றசொல்லிற்கு வந்தது போலும். [சிலம்பின் காலம் கி.மு.75 க்கு அருகிலென்று என் முந்தைய ஆய்வில் உறுதிசெய்தேன். பார்க்க: ”சிலம்பின் காலம்” தொடர். சிலம்பிற்கு 25 ஆண்டுகள் கழித்து, கி.மு.50 இல் பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி காலத்தில் பரிபாடல் தொகுக்கப் பட்டிருக்கலாம். பார்க்க: http://valavu.blogspot.com/2010/06/2.html. கலித்தொகையும் சிலம்பையொட்டியோ, சிலம்பிற்குப் பின்னோ தொகுக்கப் பட்டிருக்கலாம்.]

கி.மு.75 -ற்கு முந்தை சங்கப் பாடல்களில் தலைவன் (lord) பொருளே பெரிதும் பயின்று வந்தது. இப்பொருள் நீட்சி கடவுள், பகவன் என்ற சொற்களிலும் ஏற்பட்டிருக்கிறது. கடவுள் என்ற சொல்லும் முதலிற் தலைவனையே குறித்தது. பின் தான் எல்லாம் வல்ல பரம்பொருளைக் குறித்தது. பகவன்(> பகவான்) என்ற சொல் வடபுலங்களில் பெரிதும் ஆளப்பட்ட சொல்; இதுவும் முதலில் சமயத் தலைவனையே குறித்தது. ஆங்கிலத்தில் great lord என்கிறாரே, அதுவும் பகவனும் ஒரே பொருள. புத்தரைப் பகவானென்றே அவரைப் பின்பற்றியோர் அழைப்பர். மகாவீரரையும் இப்படி அழைத்தார். இக்காலத்தில் வடபுலத்தில் ஏராளமான சாமியார்களைப் பகவான் என்றே அழைப்பர். தென்புலத்தில் அப்படி அழைப்பது மிகக் குறைவு. எல்லாம் வல்ல பரம்பொருள் மட்டுமே பகவன் என்று தெற்கே நாம் எண்ணிக் கொள்வோம். இதே போலப்

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்”

என்ற குறளில் இறைவன் என்ற சொல் ”எல்லாம் வல்ல பரம்பொருளைக் குறித்ததா?” எனில், ”அல்ல, சமயத் தலைவனைக் (தீர்த்தங்கரரைக்) குறித்தது” என்று சொல்ல வேண்டியுள்ளது. திருக்குறளை ஆய்ந்தறிந்தோர், அதைச் சமண நூல் என்றே சொல்லுவர். (இது ஆசீவிகம், செயினம், புத்தம் என்றவற்றில் ஏதொன்றாகவோ, அல்லது அவற்றின் கலவையாகவோ இருக்கலாம். அந்த உரையாடலுக்குள் நான் போகவில்லை. ஆசீவிகம் என்று சொல்லப் புகுவதை பல செயினரும் மறுப்பர். அதே நேரம் ஆசீவிகம் என ஆய்வதில் புதுப் பார்வைகள் தோன்றுவதையும் மறுக்க முடியவில்லை.) சமணமென ஏற்கத் தயங்குவோர் குறளைச் சிவநெறி நூல், எம்மதமுஞ் சாராப் பொதுநூல், தமிழர் நூல் என்றெலாஞ் சொல்லுவர். [திருக்குறளின் கருத்தைத் தம்வயப்படுத்தி ஒவ்வொருவருஞ் சொந்தங் கொண்டாடுவதே அதன் சிறப்புப் போலும்.]

ஆசீவிகம், செயினம், புத்தம் எனும் இம்மூன்று நெறிகளும் ”எல்லாம் வல்ல பரம்பொருள் உண்டு” என்பதை நம்பாத அல்லது அக்கேள்வி பற்றிக் கவலாத மதங்கள். அதே பொழுது ”ஆன்மாக்களுக்குத் தனியே இருப்புண்டு” என்று நம்புபவை. (ஆன்மாவை முற்றிலும் மறுத்தது உலகாய்தமும், அதன் வழிவந்த சாருவாகமும், தொடக்ககாலச் சாங்கியமுமே. பிற்றைச் சாங்கியம் ஆன்மாவை ஏற்றது.) ”ஊழ், வினைப்பயன், தவம் என்பதைப் பொறுத்து ஒவ்வோர் ஆன்மாவும் இவ்வுலகில் வெவ்வேறு உடம்போடு மீண்டும் மீண்டும் பிறந்து உழல்கிறது. பிறப்பும், அது தொடர்ந்த மாந்த வாழ்வும் துன்பமானதே. (இன்னாதம்ம இவ்வுலகம். இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே! - ஆழ்ந்த ஆசீவிகப் பாடல். புறநானூற்றிற் பல பாடல்கள் ஆசீவிகத் தோற்றம் காட்டும். அதை இன்னொரு நாள் சொல்வேன். ) மீண்டும் பிறவாமை என்பதே வீடுபேறு” என்று அடிப்படைக் கருத்தை இம்மூன்று நெறிகளும் மிக்குயர்ந்த உண்மையாய் உரைக்கும். நாளா  வட்டத்தில் ”மீண்டும் பிறவாத வீடுபேறு” என்ற கருத்தியல், எல்லாம் வல்ல பரம்பொருளை நம்பும் மதங்களுக்கும் உகந்த கருத்தாய் ஆகிவிட்டது.

எல்லாம் வல்ல பரம்பொருளின் மேல் நம்பிக்கை கொண்ட மதங்களைப் பல்வேறு ஏரணக் கேள்விகள் (logical questions) போட்டுக் கிடுக்கி (criticise), மேலே சொன்ன சமண நெறிகள் தாக்க, அதன் விளைவால் நம்பா மதங்களின் மெய்யறிவியற் தெரியனங்கள் (>தெரிசனங்கள்), கொள்கைகளைத் தமக்குத் தகுந்தாற்போல் நம்பும்மதங்கள் கொஞ்சங் கொஞ்சமாய்த் தன்மயம் ஆக்கிக் கொண்டன. இன்றைக்கு இந்தியச் சூழ்நிலையில் நம்பும் மதங்களில் நாம் பார்க்கும் மெய்யியற் கோட்பாடுகள் பலவும் எதிர்ப் பக்கத்தில் எழுந்து இன்னொரு பக்கம் செரிக்கப் பட்டவையே. தொடக்கத்தில் இருந்தவையல்ல. வேதாந்த உச்சமாய்ச் சொல்லப்படும் உபநிடதங்களின் பார்வை கூட இந்த ஊடாட்டங்களில் உருவான எதிர்வினைப் பார்வை தான்.

காட்டாக, வினைப்பயனை (karma) ஏற்காது, வினையை மறுத்துப் (அகிரியா வாதம்)பேசி, ஊழ் (pre-ordination), சூழ்நிலை (environment), பொதிகளில் நிலவும் அணுவியம் (atomic nature of the bodies) சார்ந்த இயல்பு (inherent quality) ஆகியவற்றை ஆழ்ந்துரைக்கும் அற்றுவிகம் (ஆசீவிகம்) மொத்தம் 84 இலக்கத்தில் வெவ்வேறு வகையான உயிரிகள் (பிறப்புக்கள்) இம்மன்பதையில் உண்டென்னும். 

ஊழைக் காட்டிலும் வினைப்பயனை அழுத்திப்பேசும் செயினம் (தற்செயல், அணுவியம் போன்றவற்றை செயினம் முழுதும் மறுப்பதில்லை.) 84 இலக்கம் பிறப்புக்களை அது மேலோடச் சொன்னாலும், ஓரான்மா புகுந்துசெல்லும் பிறப்புக்களின் எண்ணிக்கையை, வினைப்பயனை, ”கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, அவாவின்மை” ஆகிய 4 யாமங்களாலும், இடைவிடா அணு வதையாலும் (அண்ணுதல் = நெருங்குதல்; அணு = நெருங்கிய; வதை = வதம்>வ்ரதம்) குறைக்கமுடியும் என்னும். 

வினைப்பயன் ஏற்கும் புத்தநெறியோ 84 இலக்கம் பிறப்புகளுக்கு அவ்வளவு முகன்மை தராது. 

நம்பா மதங்களின் இம்முடிபைச் (84 இலக்கம் பிறப்புகளை) சிவநெறியை அழுத்திச்சொல்ல வந்த திருமூலர் கூட ஏற்றுக் கொள்கிறார். திருமந்திரம், சருவ சிருட்டி, 218 ஆம் பாடல் படித்தாற் புரியும்.

நம்பா மதங்களின் 84 இலக்கம் பிறப்புக்கள் பற்றிய செய்தி நம்பும் மதமான சிவநெறிக்குள் (திருமந்திரத்துள்) எப்படி வந்தது? நமக்குப் புரியவில்லை. [இந்திய மெய்யியலில் ”84 இலக்கம் பிறப்புக்களுக்கு ஏன் இப்படி முகன்மை கொடுத்தார்? ” என்பதும் வியப்பாகவே உள்ளது. இப்படித் தாம் சாங்கியக் கொள்கைகள் நம்பா மதத்திலெழுந்து, முடிவில் நம்பும் மதங்களூடேயே உலவத் தொடங்கின. இந்திய மெய்யியற் கோட்பாடுகள் பலவற்றிற்கும் இப்படி இருபுறத் தன்மையுண்டு. ஆழ்ந்து ஆய்ந்தோரே அவற்றின் தொடக்கத்தை அறிய முடியும்.]

”கடவுள் வாழ்த்து” என்ற சொற்கட்டுக் கூடச் சங்க காலத்திற் கிடையாது. சங்க நூல்களில் வரும் கடவுள் வாழ்த்துகள் அவற்றின் தொகுப்புக் காலத்திலோ, அதற்குப் பின்னோ, பின்னொட்டாய்ச் சேர்த்தவை என்றே ஆய்ந்தோர் சொல்கிறார்.

சரி, இறைவன் எனும் சொல்லிற்குத் திரும்ப வருவோம். இறை என்ற சொல்லின் நீட்சியே இறைவனாகும். கடவுள் (திருமால், சிவன், நான்முகன்), தலைவன் (அரசன், கணவன், மூத்தோன், உயர்ந்தோர், தமையன், கணவன், குரு) என்ற பொருட்பாடுகள் ”இறைவனுக்கு” இருப்பது போல் இறை என்ற சொல்லிற்கும் உண்டு. பரம்பொருள், தலைவன் தவிர, ”உயரம், தலை, தலைமை, நடுவு நிலைமை, கடமை, முன்மை” என்ற தலைமைப் பண்பையொட்டிய 2 ஆம் வழிப் பொருள்கள் ”இறைக்கும்” சொல்லப்படுகின்றன. ”இறை என்ற சொல் தலைவனுக்கெப்படி ஏற்பட்டது?” என்று தெரிந்தால், ”2 ஆம் வழிப் பொருள்கள் எப்படி ஏற்பட்டன?” என்பது விளங்கிப் போகும்.

அகரமுதலியில் மேலேயுள்ள பொருட்களை ஒதுக்கிப் பார்த்தால், இறைக்கு இன்னுஞ் சில பொருட்களைச் சொல்வர். அவற்றில் முகன்மையானவை: ”வீட்டின் கூரையிறப்பு, சாதல், தங்கல், இருக்கை” ஆகியன. இவையெலாம் ”இழிதல், சரிதல், இறங்குதல்” வினைகளை உணர்த்தும் பெயர்ச்சொற்கள்.

”உடலுறுப்பின் மூட்டுவாய், கை” என்பன இறுதல் (=முடிதல்) வினையோடு தொடர்புடையன. [சிலம்பு கானல் வரி 29 ஆம் பாடலில் இப் பொருளில் ”இறை” பயிலும்.] விரலிறையளவு என்பது ஒவ்வொரு விரலின் இறுதிக் கணு அளவைக் குறிக்கும். இறுதிக்கணு சிறுத்ததால் சிறுமைப் பொருளும் இறைக்கு உண்டு.

இறுதலின் பிறவினையான இறுத்தலில் இருந்து ”விடை” என்ற பொருள் பிறக்கும்.

அரசன் தன் படையினர்வழி இறுக்கை(force)க் காட்டி அதிகாரஞ் செலுத்தி மக்களிடம் பெறுவது இறை எனப்படும். சுங்கம் (customs tax), உல்கு (excise duty) போன்ற அரசிறைகளின் அடிப்படை வினைச்சொல் இறுக்குதலே. இறுக்கிப் பெறுவது இறை. இறுக்கைக் காட்டி மக்கள் உடன்பாட்டைப் பெறா எவ்வரசும் வரலாற்றிற் கிடையாது.

”இறையின் ஒருபொருளாய் மாமரம் அகரமுதலிகளிற் குறிப்பிடப்படுவது ஏன்?” என எனக்குப் புரியவில்லை. எனவே தவிர்க்கிறேன்.

முடிவில் ஏதோடும் ஒட்டாது தனித்து நிற்கும் ஒரு பொருள் இறகு (feather) என்பதாகும். [இறகும் (feather) சிறகும் (wing) ஒன்றிற்கொன்று தொடர்புடைய ஆனால் புழக்கத்தில் சற்று வேறுபட்டவை.]

அரசன் எனவொருவன் உருவாகுமுன், குடித்தலைவன், குழுத்தலைவன், இனத்தலைவன் என யாரோவொருவன் இருந்ததை மாந்தவியல் புகலும். அவனன்றி எந்தக் கூட்டமும் இயங்காது. குடிமக்கள் கூட்டத்தை வழி நடத்துவோன் இத்தலைவனே. கூட்டத்தின் இடையே இத்தலைவனை அடையாளம் காட்டவேண்டுமே? அதற்கு வழியென்ன? இவரெலாம் தம் தலையிற் கட்டிக் கொண்ட பாகைகளில் (இலை, தழை, தோல் இப்படி ஏதோவொன்றாற் தலையிற் கட்டப்பட்டவை இப்பாகைகள்.) பறவை இறகுகளைச் சூடிக் கொள்வது பழக்கமாய் இருந்தது. ஒரு கூட்டத்தைத் தொலைவிலிருந்து பார்க்கையில் இறகு செருகியவன்(ர்) தலைவன்(ர்) என எல்லோரும் பழக்கத்தில் அறிந்துகொள்வர். இது ஏதோ அமெரிக்கத் திரைப் படங்களில் செவ்விந்தியர் இறகு சூடிக்கொள்ளும் காட்சி மட்டுமல்ல. கணக்கற்ற பழங்குடிகள் இதுபோல் பழக்கங்களை வைத்திருந்தார்.

இன்றைக்கும் செட்டிநாட்டுப் பக்கம் மாப்பிள்ளை அழைப்பில் பார்த்தால் மாப்பிள்ளையின் தலைப்பாகையில் இறகு குத்திக் கொண்டுள்ளது தெரியும். தலைப்பாகையிற் சூடும் நெற்றிச்சூடிகையின் வடிவமும் ஒரு பறவையிறகு போலவே அமையும். மதுரை மீனாட்சி - சொக்கர் கல்யாணத்தில் சொக்க நாதருக்கு அணிவிக்கும் பாகையைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? நாட்டுப்புறங்களில் நடக்கும் கூத்தில் கதைநாயகன் சூடிக்கொள்ளும் தலைப்பாகையையும் பாருங்கள். ஏன் அரசமகுடத்தின் மேலே செருகும் இறகை இங்கு நினையுங்கள். இறகிலாத் தலைவன் எங்காவது உண்டா?முத்து மாலைகளையும், மணி மாலைகளையும் அணிந்து கொண்டு இடுப்பில் ஒரு சிறுதுணியைக் குறுக்கே கட்டிய சுந்தர பாண்டியனை மார்க்கோ போலோ தன் பயணக் கதையில் [The travels of Marco Polo by Aldo Ricci, Rupa& Co; 2002, pp 292- 326] விவரிப்பான். பாண்டியன் தன் மகுடத்தில் இறகு அணியாது இருந்தானோ? தெரியவில்லை. பணங்கொண்டவனையும் மன்னனையும் எப்படி வேறுபடுத்திக் காட்டுவது?

[இறகு குத்திக்கொள்ளா கூட்டத் தலைவர்கள் கொம்பு விலங்குகளின் மண்டையோட்டை தலையிற் கவிழ்த்து மாட்டிக் கொண்டிருந்தார். சிந்து சமவெளி முத்திரையொன்றில் கொம்பு கவிழ்த்த தலைவன் ஒருவன் தாமரை ஆசனம் போட்டு உட்கார்ந்திருப்பான். “இவன் என்ன கொம்பனோ?” என்று தமிழிற் சொலவடையுண்டே, நினைவிற்கு வருகிறதா? கொம்பன் என்றாற் தலைவன் என்றபொருளும் இயற்கையாய் எழுந்தது.]

இறகு அல்லது இறையைத் தன் தலைமுடியியிற் செருகிய தலைவன் இறைவன் எனப்பட்டான். தலைவனின் (lord) நீட்சியாய் எல்லாம் வல்ல பரம்பொருளும் இறைவன் (Great Lord) என்று அழைக்கப் பட்டான்.

இனி ”இறகு என்ற சொல் முதலா? சிறகு என்ற சொல் முதலா?” என்று கேட்டால், "முட்டை முதலா? கோழி முதலா?" என்று திருப்பிக் கேட்க வேண்டியுள்ளது. பின்னால் வரும் எளிதான விளக்கங்களைக் கருதிச் சிறகு என்பதையே முதலாக நாம் கருதுகிறோம். [சிறகு என்பது சிறை என்றும், இறகு என்பது இறை என்றும் செந்தமிழ் வழக்கிற் சுருக்கப்படும்.] சிறகு என்ற சகர முதற் சொல் திராவிட மொழிகளின் இலக்கிய மொழியான தமிழிலும், அதன் நெருங்கிய கிளைமொழியான மலையாளத்திலும் மட்டுமே இருக்கின்றன. மற்றமொழிகளில் இறகும் அதன் திரிவுகளுமே இருக்கின்றன. ம. சிறகு; க. எறகெ, எக்கி, எறங்கெ, றக்கெ, றெக்கெ; தெ.எறக, ரெக்க; து. எதிங்கெ, றெங்கெ; பட. றக்கெ; குட. றெக்கெ, தெறகெ; கோத. ரெக்; துட. தெர்க்ய்; கோண்.ரெக; நா. றெப்ப, ரெக்க; கொலா. றெப்பா; பர். ரெக்க.

இறகுக் கை - இறகால் ஆன கை - இறக்கை ஆனது. [இங்கே இக்கால விதப்புப் பயன்பாட்டைச் சொல்லவேண்டும். சிறகு என்ற சொல் wing இற்கும், இறகு என்ற சொல் feather என்ற உறுப்பிற்கும் இக்காலத்திற் பயன்படுத்துகிறோம்.] இறகின் தொகுதி, குறிப்பாக வாலிறகின் தொகுதி நெல்லின் கதிர்த் தொகுதிபோல் இருந்ததால் குரல் (feather, plumage, கொத்து, திரள்) எனப்பட்டது; குரல் சற்றுநீண்டு கூரலும் (கொத்து) ஆகும். குட்டைத் தொகுதி கூழையும் ஆனது (மயிற் தோகை, வால்), சதம் (அதம் = தொகுதி), சதனம் (அதித்தல், மிகுதியாதல், அதனம் = தொகுதி) என எல்லாமே தொகுதிப்பொருள் காட்டும்.

சிறகு, சிறை, என்ற சொற்களில் சகரம் முன்னெழுந்து இலக்கியத்தில் இறகையும் குறித்தன. தூவி என்ற சொல் (மறுவில் தூவி சிறுகருங் காக்கை ஐங்குறு 139; தூவல், சொக்கின் தூவலும் தேவா. 216, 4, தூர்வு>தூவு = வேரைப் போன்றது) இறகைக் குறிப்பது. தோகை (தொகுதி) என்பதை மயிலை வைத்து நாமறிவோம்.

பக்கம், பத்ரம் என்ற சொற்கள் பறத்தல் வினையையொட்டி எழுந்தவை. பறத்தல் வினையின் சொற்பிறப்பை இங்கு அறிந்தால் பக்கம், பத்ரம் என்ற சொற்கள் விளங்கிப் போகும். பறத்தலின் சுருக்கமாய் இறகிற்குப் பறை என்ற சொல்லும் உண்டு. [பறக்கை “துணைபறை நிவக்கும் புள்ளின மான” மலைபடு.55. இறகு “பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி” நெடுநல் 15 பல்பறைத் தொழுதி - குறுந் 175],

பிஞ்சம் என்ற சொல் பாலியிலும் வடமொழியிலும் பயிலும். தமிழோடும் தொடர்புண்டு. (மயிற் தோகை; க. பிஞ்சிய, பிஞ்சு, பின்செ, பெஞ்செ, பெஞ்செய, skt pin~ccha, புள்>பிள்>பீள் = இளங்கதிர், (பிள்)>பிள்ஞ்சு,பிஞ்சு],

வாசம் என்ற சொல்லும் இறகைக் குறிக்கும்.

சிறகு/இறகு என்ற சொல்லின் பிறப்பை அறிவதற்கு முன் பறத்தல் வினை பற்றி அறிய வேண்டும்.

பறத்தல்வினையை விலங்காண்டி அறிந்தது பறவைகளைப் பார்த்தேயாகும். அவ்வினை மாந்தச்செயலால் அறிவதில்லை. பறவைகளைப் பார்த்தும், அப்படிப் பார்க்கையில் உடனறியும் ஒலிக்குறிப்பாலும் எழுந்த சொல் அது. [மொழிவளர்ச்சியில் ஒலிக்குறிப்புகளை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். ] எந்தப் பொருளும் இடைவிடாது விரைவாய்த் துடிக்கும் போதோ, திரும்பத் திரும்ப விடாது செய்யப்படும் போதோ, டகரம், ரகரம், றகரம், ககரம் வைத்து இரட்டைக் கிளவியாக நாம் சொல்லிக் காட்டும் ஒலிக்குறிப்புகளை இங்கு எண்ணிப் பாருங்கள்.

“படபட” என்று துடித்தது; ”பரபர” என்று விரைந்தான்; ”பறபற” என்று இறைந்தது; ”பக்பக்” என்று அடித்துக் கொண்டது. எல்லாமே விரைவைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொற்கள். பற-த்தல் வினை இந்த ஒலிக்குறிப்பிற் தோன்றிய சொல் தான். படபடத்தலில் எழுந்த சொல் பட்டம். வானத்தில் நாம் அனுப்பிக் கயிறு கொண்டு கட்டுப் படுத்துகிறோமே, அவ்விளையாட்டுப் பொருள். வடமொழியில் அது பத்தம்>பத்ரமாகிப் பறவையையும் குறிக்கும். பக்கு>பக்கம் என்ற சொல் தமிழில் சிறகைக் குறிக்கும்; பின் பக்கு>பக்கி என்றாகிப் பாலி மொழியில் பறவையைக் குறிக்கும். [நமக்குப் பறவை பெரிதும் பயன்படும் சொல்லென்றால் பக்கி பாலிமொழியிற் பெரிதும் பயன்படுஞ் சொல்.] பக்கி என்ற சொல் பக்ஷி ஆகி வடமொழியில் பறவையைக் குறிக்கும். தமிழில் அதை மீண்டும் கடன் வாங்கி பட்சி என்போம். எல்லாம் ஒலிக்குறிப்பால் எழுந்தவை. பக்கு (= சிறகு) என்ற சொல் அதிரொலி பெற்றுத் திரிந்து பகவான் என்ற பாலி மொழிச் சொல்லை உருவாக்கும். அதைத் தமிழிற் கடன்வாங்கி பகவன் என்போம்.

சிலுக்கும் ஒலியும் பறபறத்தலை, படபடக்கும் அசைவைக் குறிப்பது தான். சிலுகு>சிறகு என்றாகி பறக்கும்/அசைக்கும் உறுப்பைக் குறிக்கும். எந்தச் சிறகும் விரித்துச்சுருக்கி, அசைக்கவேண்டும். இம்மூன்றையும் செய்கையில் எழும் சிலுக்கு ஒலியை வைத்தே உறுப்பிற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். ”சறேர்” என விரைந்தான் என்ற விரைவுக் குறிப்பு சிறகுக்கு நெருக்கமானது. மேலை மொழிகளிலும் flug என்னும் ஒலிக்குறிப்பே fly க்குக் காரணமாய் இருந்துள்ளது.

fly (v.1)
"to soar through air," O.E. fleogan "to fly" (class II strong verb; past tense fleag, pp. flogen), from W.Gmc. *fleuganan (cf. O.S., O.H.G. fliogan, O.N. flügja, O.Fris. fliaga, M.Du. vlieghen, Du. vliegen, Ger. fliegen), from PIE *pleu- "flowing, floating" (see pluvial). Notion of "flapping as a wing does" led to noun sense of "tent flap" (1810), which yielded (1844) "covering for buttons that close up a garment." The noun sense of "a flight, flying" is from mid-15c. Baseball fly ball attested by 1866. Slang phrase fly off the handle "lose one's cool" dates from 1825. To do something on the fly is 1856, apparently from baseball.

wing (n.)
late 12c., wenge, from O.N. vængr "wing of a bird, aisle, etc." (cf. Dan., Swed. vinge "wing"), of unknown origin, perhaps from a P.Gmc. *we-ingjaz and ult. from PIE base *we- "blow" (cf. O.E. wawan "to blow;" see wind (n.)). Replaced O.E. feðra (pl.) "wings" (see feather). The meaning "either of two divisions of a political party, army, etc." is first recorded c.1400; theatrical sense is from 1790. Verbal phrase wing it (1885) is from theatrical slang sense of an actor learning his lines in the wings before going onstage, or else not learning them at all and being fed by a prompter in the wings. The verb to wing "shoot a bird in the wing" is from 1802. The slang sense of to earn (one's) wings is 1940s, from the wing-shaped badges awarded to air cadets on graduation. To be under (someone's) wing "protected by (someone)" is recorded from early 13c. Phrase on a wing and a prayer is title of a 1943 song about landing a damaged aircraft.

தமிழுக்கும் பாலிக்கும் இடையான ஊடாட்டம் கூர்ந்து கவனிக்க வேண்டியது.

அன்புடன்,
இராம.கி.

Sunday, March 27, 2011

மொழிநடை

இந்தக் கட்டுரைச் சில ஆண்டுகளுக்கு முன் மடற்குழுக்களில் தகுதரக் குறியேற்றத்தில் (TSCII encoding) எழுதியது. பழையதைப் புரட்டிச் சீர் செய்து கொண்டிருக்கும் போது அகப்பட்டது. இன்றைக்கும் இது பொருத்தமாய் இருப்பது கண்டு ஒருங்குறிக்கு மாற்றி மீண்டும் உங்கள் வாசிப்பிற்கு அனுப்புகிறேன். நம்மைப் போன்ற பலரின் மொழிநடை சீர்பட வேண்டும். அதற்கு இது தூண்டுகோலாய் இருக்குமானால் மிகவும் மகிழ்வேன்.

அன்புடன்,
இராம.கி.

-------------------------------
"மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே? இதை ஏன் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டு இந்தத் தமிழர்கள் காலம் காலமாய்க் கூத்தாடுகிறார்கள்? இந்தக் கூத்தில் “தமிழ்த்தாய்” என்றொரு படிமத்தைக் கொண்டுவந்து தமிழை ஓர் அம்மன் போல ஆக்கி நெய் விளக்கேற்றி ஆலத்தி காட்டிப் பூசை செய்து...... மொத்தத்தில் தமிழர்கள் வெறி பிடித்து அலைகிறார்கள். இவர்களுக்கு இதே பிழைப்பாய் போய்விட்டது; மொழி என்று வந்தால் உணர்ச்சி வயப் பட்டு, அணங்கு வந்தது போல அரற்றுகிறார்கள். தவிர, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயான (?) வடமொழியை எதிர்த்துப் புலம்புகிறவர்கள் இவர்கள் மட்டுமே! இந்தியன் என்ற உணர்வே இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது."

"மொழி என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று தமிழர்களுக்குத் தெரியாதா? மாற்றத்திற்கு ஏற்பப் பழக வேண்டியதுதானே? எப்படிப் பேசுகிறோமோ, அப்படி நடை பழகினால் என்ன? இதில் என்ன தூய தமிழ், தனித்தமிழ், மண்ணாங் கட்டி? இப்படியெல்லாம் அடம் பிடித்தால், அப்புறம் சங்க காலத்திற்குப் போக வேண்டியதுதான்; சங்க காலத்திற் கூட வடமொழி மிகச் சிறிதாவது கலந்துதானே எழுதினார்கள்? இந்த நிலையில் ஆங்கிலம், வடமொழி கலக்காமல் இன்றைக்குத் தமிழில் எழுத முடியுமா? அப்படி எழுதினால் அது செயற்கையாக இல்லையா? ஆங்கிலத்தின் வாயிலாய் எவ்வளவு செய்திகள் சொல்லப் படுகின்றன? அவை ஒவ்வொன்றிற்கும் சொல் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால், வாழ்நாள் தீர்ந்துவிடாதா? மற்றவர்கள் முன்னே போய்விட மாட்டார்களா?"

மேலே கூறிய வகையிற் பேசுபவர்கள் தமிழருக்குள்ளும், தமிழரல்லாத மற்ற இந்தியருக்குள்ளும் இருக்கிறார்கள். காலத்தின் கோலம் இவர்களை வலிந்தவராக, படித்தவராக, மிடையக்காராக, பொதுக் கருத்தை உருவாக்குவதில் பெரும் தாக்கம் உடையவராக மக்கள் நடுவில் இன்றைக்கு ஆக்கி வைத்திருக்கிறது. இதன் விளைவாகத் தமிழ் பற்றிப் பேசுவதே இற்றைத் தமிழகத்தில் இகழ்வானதாய் எண்ணப்படுகிறது. இதற்குத் தோதாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, இது நாள் வரை தமிழ் பற்றித் தமிழகத்தில் வாய் கிழியப் பேசிவந்தவர்கள் பலரும் (குறிப்பாக அரசியலிற் பங்கு கொள்பவர்கள்), கொள்கைப் பிடிப்பிற் தளர்ந்து போய், வாழ்க்கையின் போக்கால் நொய்ந்து, பணம், சொத்து, பதவி என்று எல்லாவற்றிற்கும் ஆட்பட்டு தற்காத்து தற்கொண்டவை மட்டுமே பேணி நீர்த்துப் போனார்கள். தமிழைப் பற்றிப் பேசுவோர் இன்றைக்கு மிகக் குறைந்து போனார்கள்.

இந்த நிலையில் தான் இக்கட்டுரையில் மொழிநடை பற்றி கொஞ்சம் சிறிதளவு அலச முற்படுகிறேன்.

மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக உள்ளதுதான். இதில் யாருக்கும் இரண்டு கருத்துக் கிடையாது. ஆனால் கருத்துப் பரிமாற்றம் எழ வேண்டுமானால் நான் எழுப்பும் ஓசை உங்களுக்குப் புரிய வேண்டும், நீங்கள் எழுப்புவது எனக்குப் புரியவேண்டும் அல்லவா? சரியாகச் சொன்னால், குறிப்பிட்ட ஓசைகளின் படிமங்கள் நம் இருவர் மனங்களின் உள்ளே இருக்க வேண்டும் அல்லவா? இதைப் பற்றி விளங்க ஒரு சில காட்டுகளைப் பார்ப்போம்.

தென்மாவட்டங்களில், குறிப்பாக மதுரைப் பக்கம், சில போதுகளில் நம் மக்கள் குலவையிடுகிறார்கள். இந்தக் குலவைச் சத்தம் ஒரு வாழ்த்துக்கான அறிகுறி, பண்பாட்டின் தொகுதி என்று நமக்கு புரிந்தால் அல்லவா, நாமும் குலவையிடுவோம்? அது தெரியவில்லையெனில் குலவை என்பது ஏதோ ஒரு பொருள் அற்ற கூப்பாடாக அல்லவா தெரியும்?

இதே போல, நம்மிடம் பேசும் போது இன்னொருவரைக் குறித்து "ஆமா, இவுங்க என்னத்தைக் கிழிச்சாங்க?" என்று நண்பர் ஒருவர் சொல்லுகிறார்; இங்கே "எதைச் செய்தார்கள்?" என்றல்லவா அந்த நண்பரும், நாமும் பொருள் கொள்ளுகிறோம். இந்தப் புரிதல் இல்லாத, குறிப்பாகத் தமிழர் அல்லாத ஒருவருக்கு இந்தப் பொருட்பாடு விளங்குமா?

இன்னும் ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். எழுத்தாளர் கி.இராசநாராயணன் பல்வேறு நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு கதை இப்படிப் போகும். தம்பிக்காரன் ஒருவன் ஊர் மணியமாக இருந்தபோது, ஊருக்குள் ஒரு தாய் இறந்த வீட்டில், "உங்களுக்கு மட்டுமா, அவர்கள் தாயாக இருந்தார்கள்? ஊருக்கே தாயாக இருந்தார்கள்" என்று சொன்னதைக் கேட்டு, பிறிதொருநாள் அவனுடைய அண்ணன்காரன் தான் மணியமாக நடந்து கொள்ள வேண்டிய பொழுதில், தங்கள் ஊரில் ஒருவனின் மனைவி இறந்த வீட்டில், "உங்களுக்கு மட்டுமா, அவர்கள் மனைவியாய் இருந்தார்கள்...." என்று சொல்லி அடிவாங்கிக் கட்டிக் கொண்டானாம். "எந்த இடத்தில் எப்படிச் சொல்லுவது? எதைச் சொல்லுவது? எப்படி மொழியைப் பயன்படுத்துவது?" என்று பண்பாட்டைத் தெரிந்தால் அல்லவா, இப்படி அடிவாங்காமல், கிறுக்கன் என்று பெயர் வாங்காமல், இருக்க முடியும்? இடம், பொருள், ஏவல் அறிந்து பேச முடியும்? இதற்கு நல்ல மொழிநடை, பண்பாட்டு மரபுகள் தேவையல்லவா?

நம்மூரில் போய், ஒருவரின் வரவேற்பை "வெதுவெதுப்பாக இருந்தது" என்று சொல்ல முடியுமோ? "இதமாக இருந்தது" என்றல்லவோ சொல்லவேண்டும்? இதற்குத் தமிழ்நடை தெரியத்தானே வேண்டும்?

மொத்தத்தில் சொன்னால், மொழியும், அதன் சொற்களும், இலக்கணமும், நடையும் நம்முடைய நடைமுறையையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. என்னுடைய நடைமுறையும், பண்பாடும், பழக்க வழக்கங்களும் உங்களோடு ஓரளவாவது பொருந்தினால் தானே நான் சொல்லுவது உங்களுக்கும், நீங்கள் சொல்லுவது எனக்கும் புரியும்.

இந்த அடிப்படையைச் சொல்வதற்கும், புரிபடுவதற்கும் தான் இந்தக் காலத்தில் இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. நாம் ஓவ்வொருவரும் மழலைப் பருவத்தில் இருந்து நமக்கென்று ஒரு சொல் தொகுதியைச் சேர்த்து வருகிறோம். இது வாழ்வில் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்தது. இந்தச் சொற்றொகுதி வெறும் பத்தோடு இருக்கலாம்; பத்தாயிரமாகவும் இருக்கலாம்; நிரவலாகப் பார்த்தால், இன்றைத் தமிழருக்குத் தெரிந்த சொற்றொகுதி வெறும் மூவாயிரத்தில் இருந்து நாலாயிரம் என்றே மொழியாளர் சொல்லுகிறார்கள்; இது மிகக் குறைவு. குறைந்தது இரண்டு மடங்காக ஏழாயிரத்தில் இருந்து எட்டாயிரமாகத் தெரிந்தால் தான் எந்தச் செய்தியையும் தமிழில் எளிதாகச் சொல்ல முடியும்; கிரியாவின் இக்காலத் தமிழ் அகரமுதலியிலேயே (முதற்பதிப்பில்) பதினாறாயிரம் சொற்கள் தான் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதுவும் மிகக் குறைவான பதிவீடே!

தமிழ்ச் சொற்கள் நம் வாயில் தடையின்று வரவேண்டி இருக்க. மிகக் குறைந்த அளவே தமிழ்ச் சொற்களை அறிந்திருந்தால், அன்றாட வாழ்வில் நுணுகிய கருத்துக்களை தமிழில் எப்படிச் சொல்லமுடியும்? குண்டுசட்டிக்குள்ளா குதிரை ஓட்ட முடியும்? இதன் விளைவாகத்தான் படித்தவர்கள் ஆங்கிலம் கலந்து பழகுவதும் பண்ணித் தமிழ் பேசுவதும் என இக்காலத்தில் வெளிப்படுகிறது. (அண்மையில் ஒரு பேர் பெற்ற தாளிகையாளர் ஒரு இணைய தளத் தொடக்க விழாவில் பேசினார். அவர் பேசியது முற்றிலும் தமிங்கிலம். கேட்டுக் கொண்டிருந்த பலரும் வியந்து போனோம். இந்தத் தாளிகையாளரை ஆசிரியராகக் கொண்ட தாளிகை தமிங்கிலத்தையே தன் நடைமொழியாகக் கொண்டது வியப்பில்லை தான்.) தப்பு யாரிடம்? நம்மிடமா? மொழியிடமா? இப்படி மெத்தப் படித்தவர் தப்புப் பண்ணப் போக, அதைப் பார்த்துப் படிக்காதவரும் ஆங்கிலம் கலந்த தமிங்கில நடைதான் மதிக்கப் படுகிற நடை என்று ஒரு போலியான நடையைச் சரியென்று கருதி, கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடுவது போலப் பயிலுகிறார்கள். மொத்தத்தில் வாலறுந்த நரியின் கதைதான். எல்லோரும் மடிக்குழைப் பள்ளிக்குப் படையெடுக்கிறார்கள். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?

பிழையை நம்மிடம் வைத்துக் கொண்டு, நாம் அறிந்த தமிழ்ச் சொற்களின் தொகுதியைக் கூட்டிக் கொள்ளாமல், நம்மைச் சுற்றி இருக்கும் உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்களுக்கும் அதைத் தூண்டாமல், ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு "பின் தமிழில் அதைச் சொல்லமுடியாது, இதைச் சொல்ல முடியாது" என்று சொல்ல முனைவது, நம் பிழையை மொழியின் மேல் ஏற்றிச் சொல்வது அல்லவா? நம்மில் எத்தனை பேர் தமிழ்-தமிழ் அகரமுதலியை வாங்கி வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது பயின்று சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளூகிறோம்? ஒவ்வொரு சிறு உரையாடலிலும், தெரியாமல் ஆங்கிலம் பயின்று பின் அதை உணர்ந்து, அடுத்தமுறை தமிழில் அதைப் பழகுகிறோமா? இந்த நடைமுறை ஒன்றும் பல்பெயர்க்கும் புதுச்சொற்கள் அல்ல. எல்லோரும் அறிந்த தமிழ்ச் சொற்களே. வாருங்கள் என்று சொல்ல முடியாமல் come in என்று சொல்லும் தமிழர்கள் எத்தனை? மகிழ்வதற்கு மாறாக enjoy பண்ணுகிறவர்கள் எத்தனை? நன்றி சொல்லத் தயங்கி thanks பண்ணும் தமிழர்கள் எத்தனை? இது சோம்பலா? அறியாமையா? அல்லது வரட்டுத் தனமா? இரண்டு தமிழர் ஒருவரை ஒருவர் காணும் போது செய்யும் உரையாடலில் இன்று 40% தமிழ் இருக்குமானால், இன்னும் ஒருவாரத்தில் 45% தமிழ் இருக்க வேண்டாமா?

தனித்தமிழ் என்பது ஓர் அடையாளம், குறியீடு; அதை நோக்கி நாம் போகிறோம். போகும் வழியில் நல்ல தமிழ் வந்தால் இப்பொழுது போதும். சில பேரால் 95% விழுக்காடு தனித்தமிழ் பேச முடியும்; இன்னொருவரால் 50% விழுக்காடு தான் செய்ய முடியும். இதில் ஒருவர் குறைந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்று எண்ணுவது தவறு. சரியாகப் பார்த்தால், இருவரும் தாங்கள் பேசும் தனித்தமிழ் அளவை இடைவிடாது கூட்ட முயல வேண்டும். அந்த வளர்ச்சி எண்ணம் தான் முகமையானது; எத்தனை விழுக்காடு என்பது ஒரு பொருட்டல்ல. இப்படி வளர்ப்பு முயற்சியே செய்யாமால் வெறுமே வேதம் பேசிக் கொண்டு வெந்நீர் ஊற்றிக் கொண்டு "அது முடியாது, இது முடியாது, தமிழர்க்கு வெறி" என்று மந்திரம் ஓதிக் கொண்டு இருப்பதில் பொருள் என்ன?

மொழியை அம்மன் ஆக்குவது, கூத்தாடுவது என்பதெல்லாம் வெறும் உணர்வு வெளிப்பாடுகள்; அவற்றால் எந்தப் பயனும் கிடையாது தான்; அதே பொழுது பாரத மாதா என்பதும் ஒரு படிமம் தானே? தாய் நாடு, தந்தை நாடு என்பவையும் படிமங்கள் தானே? இந்தப் படிமங்கள் நம் முன்னே வைக்கப் படுகின்றனவே? இப்படி ஒரு வகைப் படிமம் ஏற்றுக் கொள்ளக் கூடியது, இன்னொன்று ஏற்றுக் கொள்ளக் கூடாதது என்பது ஓரப் பார்வை அல்லவா? தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர் என்ற உணர்வை உறுதிப் படுத்துவதற்காகக் கொண்டு வரப் பட்டது. தமிழருள்ளும் மற்ற பிரிவினைகள், குறிப்பாக சாதி, மதம் போன்றவை மேலோங்காது தமிழர் ஓரினம் என்ற படிமத்தை அழுத்துவதற்காக இந்த வாழ்த்துக்கள் எழுந்தன. இந்தியா என்பது பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாடு என்பதை மறுப்போர் மட்டுமே, இந்தத் தமிழ்த்தாய் என்ற படிமத்தை மறுக்கிறார்கள். இந்தக் கேள்வியை இங்கு அலசினால் சொல்ல வந்த பொருள் விலகிவிடும் என்பதால் நான் முற்படவில்லை. இப்பொழுது தமிழ் நடை பற்றி மட்டுமே பேச விழைகிறேன்.

முதலில் கலப்பு நடைக்குச் சிலர் அளிக்கும் சப்பைக் கட்டு.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே!"

என்ற தொல்காப்பிய நூற்பாவையே வைத்துக் கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர் பலரும் உண்டு. இத்தகைய கூற்றும் பொருந்தாக் கூற்றே. இந்த நூற்பா, தமிழில் ஏற்படும் பலுக்கல், சொல், சொற்றொடர், இலக்கணம் போன்ற மாற்றங்களைப் பற்றியதே ஒழிய வரைமுறை இன்றிக் கடன் வாங்குவது பற்றியல்ல.

இந்தக் கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர் தங்களுடைய ஆங்கில நடையில் இப்படிக் கலந்து எழுதுகிறார்களா? அதை அலுவற் புலனங்களிற் புழங்க முடியுமா? வெறுமே ஆங்கிலம் கடன் வாங்குகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிற இவர்கள் I pannified a visit என்று எங்கேணும் எழுதட்டுமே? மற்றவர்கள் நகை தவிர்த்த முறையில் ஏற்கிறார்களா என்று பார்ப்போம்? பிறகு ஏன் ”visit பண்ணினேன்” என்று எழுதுகிறார்கள். இதைத் தமிழில் ஏற்க வேண்டுமோ? ”வந்திருந்தேன்” என்று சொல்லுவது இளக்காரமா? இந்த visit என்ற சொல்லைத் தவிர்த்துத் தமிழில் பேசினால் விளங்காதா? அந்த ஆங்கிலச் சொல்லைத் தமிழர்களுக்குள் பேசும் போது தவிர்த்தால் என்ன? அதை முடிந்த மட்டும் தவிர்த்துப் பாருங்களேன்; அதற்காக முயலுங்களேன்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது நல்லதற்கும் உண்டும்; பொல்லாததற்கும் உண்டு. ஆங்கிலச் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்கலாம்; அதே போலக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டியும் வரலாம். ஒன்றில் நம்மொழி நிற்கும்; இன்னொன்றில் நம்மொழி சிறிது சிறிதாக மறையும். உகப்பு நம்மிடம் தான்.

அடுத்தது வேற்று மொழி ஒலிகளைப் பற்றியது. "இந்த ஒலிகள் எல்லாம் தமிழில் இல்லை; இவையெல்லாம் வேண்டாமா?" என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள். நாம் தமிங்கிலம் பழகப் போகிறோம் என்றால் இந்த ஒலிகள் எல்லாம் தேவையே? தமிழ் ஆளப் போகிறோம் என்றால் இந்த ஒலிகளை பிறைக்குறிக்குள் ஏதோ ஒரு வகையில் குறிப்பது தவறில்லை. ஆனால் அதற்காகத் தமிழில் புதுக் குறியீடுகள் தேவையில்லை. வெறும் 31 எழுத்துக்களையும் ஒருசில குறியீடுகளையும் வைத்து 95 ஒலிகளை நாம் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம். இந்தக் குறியீடுகளைக் கூட்டிக் கொண்டு போவதில் பொருள் இருக்கும் என்று இதுகாறும் எனக்குத் தோன்றவில்லை. அதே பொழுது இதை முடிந்த முடிவாகவும் நான் சொல்லவில்லை. இந்தக் கேள்வி அவ்வளவு முகன்மையில்லாத ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். இதைப் பின்னொரு நாளில் பார்ப்போம்.

அடுத்து, நடை பற்றிய உரையாடலில், பேச்சுத்தமிழ் எழுத்துத்தமிழ் என்ற இரண்டு நடை இருப்பதைக் கூறி "பேசுவதுபோல் எழுதினால் என்ன? என்ற கேள்வி நெடுநாளாக இருந்துவருகிறது. பேச்சுத் தமிழ் என்பது இன்றைக்கு எழுத்தில் இருந்து வெகுதொலைவு விலகித்தான் போயிற்று. இப்படிப் பேச்சுத்தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் இடைவெளி ஏற்பட்டுப் பின் புதிய நடை ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய இலக்கணம் படைப்பதும் வழி வழி வந்ததுதான். அதனால் தான் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், பாரதியும் அவர்கள் காலத்தை ஒட்டி, ஒரு குறியீடு ஆனார்கள். அவர்கள் காலத்தில் மொழி நடையை எளிமைப் படுத்தினார்கள். இப்படி எளிமைப் படுத்திய படிதான் நன்னூல் இலக்கணம் இடைக்காலத்தில் எழுந்தது. இதே போல, மு.வ.வின் இலக்கணப் பொத்தகம் 1960 களில் பெரிதும் பரவியது.

படைப்பாக்கங்களில் முற்றிலும் பேச்சுத் தமிழாகவே எழுதினால் முந்தையத் தமிழோடு அவை தொடர்பற்றுப் போகும். அதே பொழுது முற்றிலும் முந்தையத் தமிழாகவே எழுதினால் படிப்போரோடு நெகிழ்வு விட்டுப் போகும். இதில் சரியான அளவை என்பது நாம் எடுக்கும் வடிவத்தைப் பொறுத்தது. கதை மாந்தர் பேசுவது பேச்சுத் தமிழாகவும், கதையாசிரியன் பேசுவது எழுத்துத் தமிழாகவும் இருப்பது ஓரளவு சரியாக இருக்கலாம். இதுதான் சரி என்று அடையாளம் காட்ட முடிவதில்லை. கூடிய மட்டும் கொச்சைப் பேச்சைத் தவிர்த்து, அதே பொழுது வட்டார வழக்குகளைத் தவிர்க்காமல் எழுத முடியும்; இதற்குப் பயிற்சி வேண்டும்.

அடுத்த கருத்து துல்லியம் பற்றியது. தமிழில் பலரும் நம் நடையில் பூசி மெழுகினாற் போல பொதுச் சொற்களை வைத்து துல்லியம் இல்லாமல் சொல்லி வருகிறோம். சொற்களின் ஆழம், துல்லியம், விதப்பு (specificity) தெரிந்து பயன்படுத்துவது நல்லது. ask, enquire என்ற இரண்டு சொற்களுக்கும் கேட்டல் என்றே இந்தக் காலத்திற் பயன்படுத்துகிறோம். இரண்டும் ஒன்றா? இல்லையே? ஒன்றைக் கேட்டல் என்றும், இன்னொன்றை வினவுதல் என்றும் குறிப்பிட்டுச் சொல்லுவது நம்மில் மிகவும் குறைந்திருக்கிறது. நாம் துல்லியம் பார்க்காவிட்டால், மொழியின் புழக்கம் குறையும்; முடிவில் பண்ணித் தமிழுக்குத் தாவி விடுவோம்.

இன்னொன்று வாயால் ஒலித்துப் பலுக்குவது. ஒரு சொல்லைச் சொல்லுகிறோம். அதன் எழுத்துக்களை பிரித்து ஒலிக்க வைத்துக் காட்டுவதைப் பலுக்குவது என்று சொல்லுகிறோம். ஆங்கிலத்தில் spelling என்கிறார்கள். ஒரு சொல்லை உயிர்த்துக் காட்டுவது உயிர்தருவித்தல் >உயிர்தரித்தல் >உயிர்ச்சரித்தல் >உய்ச்சரித்தல்> உச்சரித்தல் என்று ஆகும்; இதைத்தான் ஆங்கிலத்தில் vocalization என்கிறார்கள். இங்கே மாத்திரைகளின் நீளம் கூடக் குறைந்து காட்டப் படுகிறது. இந்த இரண்டுமே இன்றையத் தமிழர்களிடம் மிகக் குறைந்து இருக்கிறது. அதனால் தான் ரகர, றகரத் தகறாறும், லகர, ளகர, ழகரக் குழப்பமும் இருக்கிறது. இகர, எகரக் குழப்பம், உகர, ஒகர மாற்றம் எல்லாமே உயிர்தருவித்தலின் கோளாறு. நூற்றுக்கு 70 பேருக்கு மேல் நம்மிற் தவறாகப் பலுக்குகிறோம். 20% பேராவது உயிர் தருவித்தலிற் குறைப்படுகிறோம். மொழிநடை பண்பட வேண்டுமானால், இதுவும் மாற வேண்டும்.

அடுத்தது உள்ளடக்கம் பற்றியது. தமிழ் என்றாலே பழமை பேசுவதற்கும், இலக்கியம் உரைப்பதற்கும், கவிதை, கதை படைப்பதற்கும் என்று எண்ணிக் கொள்ளுகிறோம். இந்தக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, நகை எல்லாம் வெறும் வடிவங்கள். இவற்றிற்குள் சொல்ல வரும் செய்திகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ் சவலைப் பட்டுக் கிடக்கிறது என்கிறோம்; ஆனால் அதைக் கவனிக்க முன் வர மாட்டேன் என்கிறோமே? பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் தமிழில் அவை பற்றிய ஆக்கங்களை படைக்க முன் வரவேண்டும். புதிய உள்ளடக்கங்கள் தமிழுக்குள் வரவேண்டும்; நேற்று எழுந்த செய்தி இன்றைக்குத் தமிழில் வரவேண்டும்; வெறுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததை மட்டுமே தமிழில் எழுதி என்ன பயன்? இன்றைய உயிரியலில் ஓர் ஆக்கம்? இன்றையப் பொருளியலில் ஓர் ஆக்கம்? இன்றையப் பூதவியலில் ஓர் ஆக்கம்? இன்றைய ஓவியம் பற்றி ஓர் ஆக்கம்? இன்றைய மாந்தவியல் பற்றி ஓர் ஆக்கம்? இன்றையச் சட்டத்துறை பற்றி ஓர் ஆக்கம்? இன்றைய மின்னியல் பற்றி ஓர் ஆக்கம்? உடற்கூறு பற்றி இன்று வந்த ஓர் ஆக்கம்? இவை எல்லாம் மேலே சொன்ன வடிவங்களில் வரட்டுமே? இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நாம் ஆக வேண்டாமா? வெறுமே ஒரு சிலர் மட்டும் தனிச் சால் போட்டுக் கொண்டு கருமமே கண்ணாயினராய் இருப்பது எந்த வகையிற் சாலும்? அவர்களோடு சேர்ந்து என்ன செய்தோம் என்று நாம் எல்லோரும் எண்ண வேண்டாமா? இதைச் செய்தால் தானே நம் நடையும், மற்றவர் நடையும் வளப்படும். தமிழின் மொழிநடையும் இந்தக் காலப் புலனங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கும்.

மொழி நடை என்பது நம் கையில். அதை ஆற்றுப் படுத்த வேண்டியது நம் பொறுப்பு.

அன்புடன்,
இராம.கி.

Sunday, February 06, 2011

ஒருங்குறி - சொற்பிறப்பு

பொதுவாக எல்லா நிறுவனங்களிலும், (நிறுவனங்களாய் ஆகிப் போன இயக்கங்களிலும் கூட) அங்கொருவர் இங்கொருவராய் சில சட்டாம் பிள்ளைகள், தம் ஆளுமைகளைக் காட்டிக் கொண்டே யிருப்பார். ஏதோ நிறுவனச் சட்ட ஒழுங்கை இவர் மட்டுமே கட்டிக்காப்பது போல் நடந்து கொள்வார். தமிழ் உரிமையைப் பாதுகாக்கும் இயக்கங்களும் கூட இதில் விலக்கில்லை. பிரம்பு வைத்துக் கொண்டிருக்கும் சட்டாம் பிள்ளைகள் “தாங்கள் சொல்வதும், தம் தலைவன் சொல்வதும் தான் சரி” என அடம் பிடிப்பார். மற்றவரைத் தம் கருத்திற்கு வளைக்க எண்ணிவிட்டால், பிரம்பையோ, புளியம்விளாறையோ எடுக்கவும் தயங்க மாட்டார். 

“ஏலேய், இந்தாப் பாரு, கப்சிப்புன்னு இருக்கோணும், தெரியுமா? பேசச் சொன்னாத் தான் வாயைத் தொறந்து பேசணும், இல்லைன்னா, சூத்தைப் பொத்திக்கிட்டு மூலையிலெ உட்காரணும். கேள்வி கேட்க வந்திட்டான் பாரு, கேள்வி. எங்களுக்குத் தெரியாதோ?” என்று அதிகாரம் பண்ணியே பழக்கப் பட்டவர்.

இவர் போன்ற சட்டாம் பிள்ளைகளை இளமைக் காலத்தில் திண்ணைப் பள்ளியில் படித்தபோது நேரடியாகச் சந்தித்திருக்கிறேன். அக்காலத்தில் எங்கள் கண்டனூரில், “அரசுப் பாடத்திட்ட வழி” சொல்லிக் கொடுக்கும் “சிட்டாள் ஆச்சி நினைவு தொடக்கப் பள்ளி” என்ற தனியார் பள்ளியோடு 2, 3 திண்ணைப் பள்ளிகளும் இருந்தன. நான் எங்கள் அத்தை வீட்டிற்கு அருகில் நாலாம் வீதியில் இருந்த ”புளிய மரத்தடித் திண்ணைப் பள்ளியில்” மூன்றாவது வரை படித்தேன். பிறகு அங்கிருந்து மாறி, “அரசுப் பாடத்திட்டத்” தொடக்கப் பள்ளிக்கு மாறிக் கொண்டேன். அகவை முற்றிய ஓர் ஆசிரியர் தான் திண்ணைப் பள்ளியில் முன்று வகுப்பிற்குஞ் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு உதவியாக சட்டாம் பிள்ளை இருப்பார். ஆசிரியர் கையிற் பிரம்பு இருக்கிறதோ, இல்லையோ, சட்டாம்பிள்ளை கையிற் பிரம்பு எப்பொழுதும் இருக்கும்.  ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சுற்றிச் சுழன்று சொல்லிக் கொடுப்பார். அவர் இல்லாத 2 வகுப்புகளை சட்டாம்பிள்ளை பார்த்துக் கொள்வார். பாடஞ் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், பிள்ளைகளைக் கட்டுக்குள் வைப்பதிற்றான் சட்டாம்பிள்ளை ஈடுபடுவார்.

பொதுவாய்ச் சட்டாம்பிள்ளை என்றாலே அக்காலப் பிள்ளைகளுக்குச் “சிம்ம சொப்பனம்”. ஆனாலும் குசும்புகள், ஏமாற்றுகள், விளையாட்டுகள், எதிர்ப்புகள், கேள்விகள், பின் அடிவாங்கல், தண்டனை பெறல் என எல்லாமும் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் நடக்கும். பெற்றோரும் சட்டாம் பிள்ளை தேவை என்பது போல நடந்து கொள்வார். எனக்கும் சட்டாம்பிள்ளைகளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். [இப்படி எதிர்த்தே பழக்கப்பட்டதால் தான் ஒரு வேளை இடதுசாரிச் சிந்தனை என்னுள் வளர்ந்ததோ, என்னவோ?] இடைவிடா முரண்பாடுகளால், எப்போதும் சட்டாம் பிள்ளைகளிடமிருந்து நான் பெரிதும் விலகி நிற்பேன். இவரிடம் தெரியாத்தனமாய்ச் சிக்கிக் கொண்டதில்லை. (எல்லாம் இளமையில் பட்ட அறிவு)

இதுபோற் சட்டாம்பிள்ளைகளை, இளமையில் மட்டுமின்றி, அகவை கூடிய போதும் பல நிறுவனங்களில், இயக்கங்களிற் கண்டுள்ளேன். அப்போதெலாம் அவரை விட்டு விலகியே நான் இருந்துள்ளேன். சட்டாம் பிள்ளைகள் எனக்கு என்றுமே நெருங்கியவராய் ஆனதில்லை. சென்ற வாரம் அப்படி ஒரு சட்டாம் பிள்ளையை மீண்டும் காணவேண்டிய நேர்ச்சி ஏற்பட்டது. இளமைக் கால நினைவுகளை அது மீண்டும் கிளறிவிட்டது.

சனவரி 30 ஆம் நாள், நண்பர் இரா.சுகுமாரனின் அழைப்பில் அவர்களுடைய புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய “தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில்” கலந்து, திரும்பினேன். அம்மாநாட்டில் என் பங்களிப்பைப் பேச்சாக அன்றி, பரத்தீடாக (presentation) அமைத்திருந்தேன்.

பரத்தீட்டின் ஊடே “உலகின் பல்வேறு மொழிகளை எழுதிக் காட்டும் எழுத்துகளுக்கு எண்களைக் கொடுத்து அவற்றையெலாம் ஒருங்கு சேர்த்து ஒரே ஆவணத்திற் பயன்படுத்த முடியும் என்ற தீர்வு இயல்பாய் எழுந்தது. இம்முறைக்குத் தான் ஒருங்குறி என்று பெயர். Universal code என்பதை உணர்த்தும் வகையிற் சுருக்கி Unicode என்று பெயரிட்டார். தமிழில் இதே பெயரை ”ஒருமிய, ஒருமுகிற, ஒருமும் குறி” என்ற பொருளில் வினைத் தொகையாய்க் கொண்டு  ஒருங்குறி என்று குறிக்கத் தொடங்கினோம். (இது தன்வினையில் எழுவது.) 

ஒருங்குறி என்ற சொல்லின் பிறப்பிலக்கணம் புரியாது ”சீருரு” என்றுசிலர் தமிழிற் சொல்ல முற்படுவது முற்றிலும் பிழை. This is not a uniform code. (அதே போல சிலர் ஒருங்கு குறி என்றுசொல்ல முயல்கிறார். அதுவும் தவறான புரிதலே. இரண்டு குகரங்கள் இதில் புழங்க வேண்டிய தேவையில்லை. ஒருங்குறியில் வரும் ஒரு குகரம் போதும். ஒரு வாக்கியத்திற் சொற்சிக்கனம் போல சொல்லிலும் எழுத்துச் சிக்கனம் தேவை)” என்று சொல்லிப் பாவணரையும் துணைக்கு அழைத்திருந்தேன்.

வேறொன்றுமில்லை, கொஞ்சநாளாகவே, இதை விளக்கிச் சொல்லித் தவறான சொற்களை முளையிலேயே தவிர்க்க வேண்டுமென்ற முனைப்புத் தான். பொதுவாகத் ”தான் பரிந்துரைத்த சொல்லே நிலைக்க வேண்டும்” என்றென்னும் ஆளல்ல நான். எது நாட்படக் குமுகத்தில் நிலைக்கிறதோ, அது நிலைத்துப் போகட்டும் என அமைந்து போகும் ஆள். ஆனால் ஒரு சொல்லை ஏன் பரிந்துரைத்தேன் என்பதை விளங்கச் சொல்லி விட வேண்டும் என எண்ணுவேன்.

நான் பேசி முடித்து மற்றோரும் பேசி முடித்து, நன்றி நவிலலுக்கு முன் அகவை முதிர்ந்த பழம் தமிழாசிரியர் ஒருவர் மேடைக்கு எழுந்து போய், “ஒருங்கு குறி என்பதுதான் சரி. ஒருங்குறி என்பது தவறு. ஒருங்கு குறி என்று நான்தான் மாற்றியமைக்கச் சொன்னேன். ”கணிஞர் கணியோடு தம் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழென்று வந்தால், அதைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோம், புதுக் கலைச்சொற்களை நாங்கள் உருவாக்குவோம்” என்ற தொனியில் முன்னே நான்சொன்ன கருத்தை மறுத்து நறுக்கென்று ஒரு குட்டை என்மேல் வைப்பது போல் பேசி நகன்றார். எனக்குச் சட்டாம் பிள்ளைகள் பற்றிய நினைப்புச் சட்டென வந்தது.

”சரி, எனக்கும் அகவை கூடிய பெரியவர், போராளி, இவரை மேடையில் மறுத்துப் பேசி இரண்டுங் கெட்டான் நிலை ஆகிவிடக் கூடாது” என  அமைந்து விட்டேன். ஆயினும் வீட்டிற்குத் திரும்பி வரும்போது என்னுட் சிந்தனை ஓடிக் கொண்டேயிருந்தது. ஒருங்குறி என்ற சொல் பழகு தமிழிற் பரவிக்கொண்டு இருக்கும் இந்நேரத்தில் இப்படிச் சட்டாம்பிள்ளைகள் உள்ளே புகுந்து நாட்டாமை செய்தால் எப்படி? [commissor களைக் கண்டாலே எனக்குச் சுரம் ஏறிப் போகும்.]

ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு முன் இயல்பியல் (physics) என்ற சொல்லைக் கோவை நுட்பியற் கல்லூரியில் இருந்து நாங்கள் பரிந்துரைத்து, அது "இயற்பியல்" என்று தப்பும்தவறுமாகத் தமிழ்கூறு நல்லுலகெங்கும் பரவி விட்டது. "இயற்பு" என்ற சொல்லே தமிழிலில்லை என யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை என்ற ஏக்கம் என்னுளுண்டு. ஆயினும் இதைச் சரி செய்ய நான் யார் - என்று அதன் போக்கில் விட்டுவிட்டேன். 

இச்சொல்லும் அப்படியே குதறப் பட்டால் என்னாவது? இச்சொல்லின் பிறப்பை மேலுஞ் சரியாக விளக்கிச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா? தமிழ்கூறு நல்லுலகம் எதை ஏற்கும் என்பது நம் கையிலில்லை. ஆனால் தவறான புரிதல் உள்ளபோது சரிசெய்வது நம் கடமை என்றெண்ணினேன். அதன் விளைவால் ஒருங்குறியின் சொற்பிறப்பை இப்பதிவில் விளக்குகிறேன்.

ஒல் எனும் வேருக்குக் கூடற்பொருள் உண்டு. கூடும் பொருட்கள் தான் சேரும், கலக்கும், பிணையும், இணையும், பொருந்தும். அதனாற்றான் ஒல்> ஒல்லுதல் என்பது பொருந்தற் பொருளைக் குறிக்கும் வினைச்சொல் ஆயிற்று. ஒல் எனும் வேர் ஒர்>ஒரு என்று திரிந்து ஒருதல் எனும் தன்வினையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அத் தன்வினைச் சொல்லை இற்றை மொழியிற் காண்பதில்லை. அதன் பிறவினையான ஒருத்தல் என்பது மட்டுமே இற்றை மொழியிற் தங்கி ஒற்றைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. ஒருத்தலில் பிறந்த பெயர்ச்சொற்கள தாம்  ஒருத்து, ஒருத்தன், ஒருத்தி, ஒருத்தர் ஆகியவையாகும். 

அதே போல ”ஒருப்படுதல் = ஒன்றுபடுதல்” என்ற செயப்பாட்டு வினை இற்றை மொழியில் இருப்பதால், ஒருதல் என்ற செய்வினையும் ஒரு காலத்தில் நம் மொழியில் இருந்திருக்க வேண்டும் என நாம் உய்த்தறிகிறோம். ஒருப்படுதல் வினையில் இருந்து ஒருப்படுத்தல் என்ற இன்னொரு வினைச்சொல் பிறக்கும். ஒருப்பாடு என்ற வினையடிப் பெயர்ச்சொல்லும் நமக்கு ”ஒருதல்  தன்வினை ஒரு காலத்தில் இருந்திருக்கக் கூடும்” என்பதை உணர்த்துகிறது. தவிர ஒற்றுமைப் பொருள்படும் ஒருப்பு என்ற பெயர்ச் சொல்லும் ஒருதல் தன்வினை ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்துகிறது. இத்தனை செய்திகள் உண்மையாக வேணுமெனில் கீழ்வரும் சொற்பிறப்புகள் இயல்பாக இருக்கவேண்டும்.

ஒல்> ஒரு> *ஒருதல்
ஒல்> ஒரு> *ஒருதல்> ஒருப்பு
ஒல்> ஒரு> ஒருத்தல்
ஒல்> ஒரு> ஒருத்தல்> ஒருத்து, ஒருத்தன், ஒருத்தி, ஒருத்தர்
ஒல்> ஒரு> ஒருப்படுதல்
ஒல்> ஒரு> ஒருப்படுதல்> ஒருப்பாடு
ஒல்> ஒரு> ஒருப்படுத்தல்> ஒருப்படுத்துதல்

இனி வாழ்தலில் இருந்து ”வாழும் நிலை”, செய்தலில் இருந்து ”செய்யும் வகை” போன்றவை ஏற்படுவது இயற்கையெனில், “ஒருவும் நிலை” என்பதும் ஏற்படத் தான் வேண்டும். இதன் பொருள் ”ஒற்றுமைப் படும் நிலை” தானே? இதிலிருந்து மேலும் ஒரு வினைச்சொல் திரிவு ஏற்பட்டு ஒருமுதல் (வகர மகரத் திரிவு) என்பது பிறக்கும். இத்திரிவு எல்லாச் சொற்களுக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சில வினைச் சொற்களுக்கே ஏற்படுகின்றன. 

எழுதலில் இருந்து எழும்புதல்/எழுமுதல் என்ற சொற்கள் பிறக்கின்றனவே? அதுபோல இதைக் கொள்ளலாம். ஒருமுதலின் இருப்பை நாம் ஏன் ஏற்கிறோம் என்பதை இன்னொரு வகையிற் பார்க்கலாம். ஒருமுதலின் பிறவினைச் சொல்லான ஒருமித்தல் இருக்கிறதல்லவா? [(ஒருமித்த, ஒருமிக்கிற, ஒருமும்) குறி என்பது பிறவினைச்சொல்லில் அமையும் வினைத்தொகை.] பிறவினைச் சொல் இருந்தால் தன்வினைச் சொல் இருந்திருக்க வேண்டுமே? [அப்படித்தான்  ”ஒருமிய, ஒருமுகிற, ஒருமும் குறி” என்று தன்வினை வழியாக, வினைத் தொகைக் கட்டுமானத்தில் ஒருங்குறி என்ற பெயர் எழுந்தது. கவனியுங்கள். எதிர்காலத்தில் தன்வினை, பிறவினை என்ற இரண்டிற்குமே ஒருமும் என்று அமையும். ] ஒருமுதலிற் பிறந்த பெயர்ச்சொல்லே ஒருமை. ஒருமையை ஏற்பவர் ஒருமுதலை ஏற்காது போவாரோ?

ஒல்> ஒரு> ஒரும்
ஒல்> ஒரு> ஒரும்> ஒருமுதல்
ஒல்> ஒரு> ஒரும்> ஒருமுதல்> ஒருமித்தல்
ஒல்> ஒரு> ஒரும்> ஒருமை

தெள்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

- புறம் 189 திணை பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

ஒருமை என்ற பெயர்ச்சொல்லில் இருந்தும் ஒருமைப்படுதல் என்ற வினைச் சொல் பிறக்கும். பின் ஒருமைப்பாடு என்ற பெயர்ச்சொல் பிறக்கும்.

ஒல்> ஒரு> ஒருமை> ஒருமைப்படுதல்
ஒல்> ஒரு> ஒருமை> ஒருமைப்படுதல்> ஒருமைப்பாடு

ஒருதல் என்ற சொல் ஒருவுதல் என்ற இன்னொரு வினையை உண்டாக்கி ஒருவந்தம் என்ற பெயர்ச்சொல்லையும் ஒற்றுமைப் பொருளிற் காட்டுகிறது.

ஒல்> ஒரு> ஒருவந்தம்

ஒருவுதல் என்பது ஒருகுதல் என்றும் திரிகிறது. அதிலிருந்து ஒருகை என்ற பெயர்ச் சொல்லை அதே ஒற்றுமைப் பொருளில் உருவாக்கியிருக்கிறது.

ஒல்> ஒரு> ஒருகுதல்
ஒல்> ஒரு> ஒருகுதல்> ஒருகை

ஒருகுதலின் பிறவினையாய் ஒருக்குதலும், ஒருக்குதலின் தன்வினையாய் ஒருங்குதலும் உருவாகின்றன.

ஒல்> ஒரு> ஒருகுதல்> ஒருக்குதல்
ஒல்> ஒரு> ஒருங்குதல்

இன்னொரு வளர்ச்சியில் ஒல்> ஒல்+ந்+து> ஒன்று> ஒன்றுதல் என்பதும் ஒற்றுமை என்ற பெயர்ச்சொல்லும் உருவாகும்.

இப்போது சொல்லுங்கள் ஒருங்குதல் மட்டும் தான் வினைச்சொல்லா? ஒருதல், ஒருத்தல், ஒருப்படுதல், ஒருப்படுத்தல், ஒருமுதல், ஒருமித்தல், ஒருவுதல், ஒருகுதல், ஒருக்குதல் போன்ற இத்தனையும் சற்றே மாறுபட்ட அதே பொழுது அடிப்படையில் ஒரே கருத்தை உணர்த்தவில்லையா? இந்த வளர்ச்சியில் ஒரும் குறியை ஒருங்குறி என்று சொன்னால் என்ன குறைந்து போயிற்று? எந்த வகையில் ஒருங்கு குறி என்பது சிறப்புற்றது?

ஒருவுதல்/ஒருகுதல், ஒருங்குதல் என்பது போல் மரு> மருவு> மருகு> மருங்குதல் என்பது தழுவற் பொருளை உணர்த்திச் சொல்திரிவு காட்டும். நெரு> நெருங்கு என்பதும் இதுபோன்ற திரிவு தான். நெரு> நெரி> நெரிசல் என்ற பெயர்ச்சொல் வளர்ச்சியையும் இங்கு நோக்கலாம்.

நண்பர்கள் எந்தத் தயக்கமுமின்றி ஒருங்குறி என்று சொல்லலாம். சட்டாம் பிள்ளைகளின் நாட்டாமையை நாம் பொருட்படுத்த வேண்டாம்.

அன்புடன்,
இராம.கி.