Thursday, August 09, 2007

வேங்கடத்து நெடியோன் - 2

வேங்கட மலையையும், அதில் திருமால் குடிகொண்டுள்ளதையும், அவன் பெயர் நெடியோன் என்பதையும் நமக்குக் கிடைத்தவற்றில் முதலில் பதிவு செய்த ஆவணம் சிலப்பதிகாரம் தான். நாம் கவனிக்க வேண்டியது நெடியோன் என்ற பெயர். 

[அந்தப் பெயரின் விளக்கம், "வாமனத்தின் முடிவில் எடுக்கும் திருவிக்கிரமத் அவதாரத்தால்" என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழ் இலக்கியங்களில் நெடுகவே பயின்று வந்திருக்கிறது. அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு.] 

"நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்" என்று குறிப்பிட்டுக் காடுகாண் காதை 11:148 ல் சொல்லப்படும். இந்த அவதாரக் கதையில் வரும் மாவ(ல்)லி மன்னன் ஒரு சேர அரசனாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

(இன்றைக்கும் மாவல்லி ஒவ்வொரு ஓணத்தன்றும் கேரளத்தில் நினைவு கூரப் படுகிறான்.) அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பில்லை. அரக்கு நிறமும் தமிழர் நிறம் தான். மாந்தளிர் நிறம் அரக்குத் தானே? 

சேரமான் மாவண் கோ, விளங்கில் மாவண் கடலன், மாவண் புல்லி, மாவண் கிள்ளி எனப் பல்வேறு அரசர்களும், வேந்தர்களும் சங்க காலத்தில் சொல்லப் படுகிறார்கள். இந்த மா என்னும் முன்னொட்டு அவன் தமிழ் அரசன் என்று உணர்த்திவிடுகிறது. 

மாவல்லியின் தாத்தன் பெருகலாதன் என்பதும் கூடப் பெருஞ்சேரலாதன்> பெருங்கேரலாதன்> பெருங்கலாதன்> பெருகலாதன் என்ற திரிவில் அமையக் கூடிய பெயரே. அப்படி ஐயுறுவதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று ஆதன் எனும் பெயரீறு சேர அரசர் பலருக்கும் இருந்திருக்கிறது. இரண்டு, மாவலியின் வழியில் வந்தவன், சோழன் மாவண் கிள்ளிக்குப் பெண் கொடுத்ததாக மணிமேகலைக் காவியத்தில் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில் (16:53-55) சொல்லப்படும்/

நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தேவி ------

என்று பதிவைக் கவனியுங்கள்.இதே மாவண் கிள்ளியைச் செங்குட்டுவனின் மைத்துனன் என்று சிலம்பில் இளங்கோவடிகளும் பதிவு செய்வார். செங்குட்டுவனின் தாய் ஞாயிற்றுச் சோழன் மகள் என்று சிலம்பில் காணப் படும். 

ஆனால், பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்திற்கான பதிகத்தில் "குடவர்கோன் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்" என்று மணக்கிள்ளியாக "ஞாயிற்றுச் சோழன்" எனும் செங்குட்டுவனின் தாய்வழித் தாத்தனை உணர்த்தும். இத்தகைய உறவு முறையால் மாவல்லி என்பவன் சேரனாய் இருக்கவே பெரிதும் வாய்ப்புண்டு.

நெடியோன் என்ற பெயர் திருமாலுக்கு சிலம்பின் பல இடங்களிலும் பயிலப்படுகிறது. சிலம்பின் இந்திர விழவூர் எடுத்த காதை 5: 169-174 ல், புகாரில் இருந்த பல்வேறு கோயில்களைப் பற்றிச் சொல்லும் போது

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வண்குடை மன்னவன் கோயிலும்

என்று நெடியோன் பெயரை இளங்கோவடிகள் பதிவு செய்வார். சிலம்பின் கடலாடு காதை 6: 28-31 வரிகளில்

சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சயம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி ---------

என்று சொல்லி வேங்கட மலையும் பதிவு செய்யப் படும். அடுத்து, சிலம்பு வேனிற்காதை 8:1-2 ல்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

என்ற புகழ்பெற்ற வரிகளின் மூலம் வேங்கட மலை என்பது அந்த நெடியோனின் குன்றம் என்றும், சிலம்பின் காலத்தில் தமிழ் வரப்பைக் குறிப்பதில் நெடியோன் குன்றத்தின் பெயர் அழுத்தமாகவே பயன்படும். மேலே நாடுகாண் காதை 10: 9-10 ல்

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டத்து வலஞ்செயாக் கழிந்து

என்று திருவரங்கத்தைப் பதிவு செய்ததோடு நில்லாமல், விரிவாகக் காடுகாண் காதை 11:41-51 ல், திரு வேங்கடமும், செங்கண் நெடியோனும் கீழ்வரும் வரிகளால் விரிவாகச் சொல்லப் படுவார்கள்.

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

இந்த வரிகளில் மிக விரிவாக நெடியோனின் உருவம் வரையப் படுகிறது. வேங்கடத்தில் ஓர் அருவி இருந்ததாகச் சொல்லப் படுகிறது; (வேங்கடம் பற்றிய சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த அருவி குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆனால் இன்று அந்த அருவியைக் காணோம்.) மலையின் உச்சியில் கோயில் இருந்திருக்கிறது. ஒரு பக்கம் ஞாயிறும், இன்னொரு பக்கம் திங்களும் இருக்க, இடைநிலையில் மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லைப் பூண்டு, மேகம் நிற்பது போல சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்ற விவரிப்பைப் படிக்கும் போது, இன்றுள்ள பெருமாளின் திருமேனி அப்படியே நம் கண்முன் தோன்றுகிறது.

இந்தச் சொற்களைப் படிக்கும் போது திருமலையின் நெடியோன் திருமேனி திருவிக்கிரம அவதாரத்தைக் குறிக்கிறது என்றும் (செங்கண் மால் என்னும் குறிப்பு நரசிங்க அவதாரத்திலும், திருவிக்கிரம அவதாரத்திலும் ஆழமாய்க் குறிக்கப் படும் குறியீடுகள். திருமலையில் இருப்பவன் திருவிக்கிரமனே என்ற குறிப்பு சிலம்பில் ஆழவே வெளிப்படுகிறது. முதலாழ்வார் பாடல்களையும் கூர்ந்து படித்தால் இந்தச் செங்கண்மால் என்னும் குறியீடு புலப்படும்.), அந்த அவதாரத்தில் தாயார் உடன் வருவது இல்லை என்பதும் புலப்படும். சிலம்பில் துன்ப மாலை 18: 4 ல் "நெடுமால் அடி" என்ற சொல்லாட்சியும், அழற்படு காதை 22: 60 ல், "உரைசால் சிறப்பின் நெடியோன்" என்ற சொல்லாட்சியும் கூட "நெடியோன்" என்ற பெயரின் ஆழ்ந்த ஆட்சியை உறுதி செய்கின்றன. நெடியோன் என்று இல்லாமல், உயர்ந்தவன் என்ற பெயரில் ஊர்காண் காதை 14:8 ல், "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமம்" என்று வரும் கருத்து வேறு ஒரு பரிமானத்தைக் கொடுக்கும். நெடியோன் தவிர அந்தக் காலத்தில் பெரிதும் பயன்பட்ட பெயர்களை அடுக்கிச் சொல்லுவது ஆய்ச்சியர் குரவை 17: படர்க்கைப் பரவல் 2 ல் வரும் பாட்டாகும்.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!

பெரியோன், மாயோன், விண்ணவன், கரியவன் என்ற பெயர்கள் எல்லாம் வேங்கட மலை பற்றி மட்டுமே சொல்லப் படுவதில்லை. ஆனால் நெடியோன் என்ற பெயர் தான் அங்கு விதப்பாகவே பேசப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 08, 2007

வேங்கடத்து நெடியோன் - 1

அண்மையில் வேங்கடமுடையானின் இற்றைக் காலப் பெயரான "சீனிவாசனைத் தமிழில் சொல்ல முடியாதா?" என்பது பற்றிய உரையாடல் திரு. கண்ணபிரான் ரவிசங்கரின் வலைப்பதிவில் எழுந்தது. அந்தப் பதிவையும், அதில் வந்த பின்னூட்டுக்களையும் படித்த போது, "உடனடியாக எழுதாது, கொஞ்சம் ஆற அமரச் சரிபார்த்து, உறுதி செய்து, பின் எழுதலாம்" என முன்னிகை தருவதைத் தவிர்த்தேன். அச் சரிபார்ப்பு இப்பொழுது ஓரளவு முடிந்த நிலையில், சொல்லாய்வு, முற்கால வரலாறு ஆகியவை சேர்த்து, இந்தப் பதிவில் சொல்கிறேன்.

நமக்குக் கிடைத்த தரவுகளில், வேங்கடத்தை  முதலில் குறிப்பிட்ட சான்று தொல்காப்பியத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகத்து" என்று தொடங்கும் பனம்பாரனாரின் சிறப்புப் பாயிரத்தில் உள்ளது. இதில் வேங்கடம், மலையை மட்டும் குறித்ததா என உறுதி சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டு வடஎல்லையில் இன்றுள்ள வேங்கடமலை ஆயின், அது வடகிழக்கில் மீச்சிறிய இடங் குறித்ததாய் அமையும். தவிர, இற்றை வட எல்லையே சங்க காலத்தில், அதற்கு முந்தைய தொல்காப்பியக் காலத்தில் இருந்ததாய்ச் சொல்ல முடியாது. மாமூலனாரையும், காரவேலன் கல்வெட்டையும் படித்தால், அற்றை வட எல்லை இன்னும் வடக்கே என்றே தோன்றுகிறது. இதுவரை செய்த என்னாய்வில் அது எதுவென என்னால் சொல்ல முடியவில்லை. 

வட எல்லை வடகிழக்கிலுள்ள மீச்சிறு எல்லையைக் குறிக்காது கிழக்கிருந்து மேற்கு வரை ஓர் அகண்ட பட்டையைக் குறித்தால் வட எல்லை என்பதில் நல்ல பொருளுண்டு. தொல்காப்பிய உரை எழுதிய இளம்பூரணர் (11 ஆம் நூ.) தன் உரையில் என்ன காரணத்தாலோ, வேங்கடத்தைத் திருமாலோடு பொருத்திச் சொல்லார். ஆனால் 14 ஆம் நூ. நச்சினார்க்கினியரோ நிலங்கடந்த நெடுமுடி அண்ணலாகிய திருமால் உறையும் மலையாக வேங்கட மலையைக் கூறுவார். 19, 20 ஆம் ஆண்டு உரையாசிரியரும், தமிழாசிரியரும் நச்சினார்க்கினியர் அளவிற்கு இளம்பூரணரை ஓதாக் காரணத்தால் நெடியோன், திருமாலாய் மட்டுமே எண்ணப்படுகிறான். 

திருமாலை மட்டுமின்றி, சிவன், அனுமன், ஏன் சாத்தார நெட்டையன்,  உருவகத்தால் நெடிதுயர்ந்த குன்று-மலை என பல்வேறு உருவரை ‘நெடியோன்’ என்ற சொல் குறிக்கலாம். சிவனை மதுரைக் காஞ்சி , “மழுவாள் நெடியோன்” என்று சொல்லும். அவனை மாதேவன், பெருந்தேவன் என்பது கூட அவனின் நெடுமையாலும், , பெருமையாலும் ஆகலாம். 

வேங்கடம் என்பதைச், சங்கப் பாடல்களில் 14 இடங்களில் (அகம் 27, 61, 83, 141, 209, 211, 213, 265, 393, புறம் 381, 385, 389, 391) காணலாம். உரையாசிரியர்களின் கூற்றுகளைத் தவிர்த்து, பொருள்களை ஓர்ந்து பார்த்தால், இற்றைத்  திருமலை மட்டுமின்றி, வேறொரு  மலைத் தொடரையும், அதை ஒட்டிய பகுதிகளையும் குறித்திருக்கலாம். 

அதாவது வேங்கடம் என்பது மலை, தொடர், அதைச்சுற்றிய பகுதிகள் என விரிந்தே பொருள்கொள்ள வேண்டும். அப்பகுதிகள் எவ்வளவு தொலைவு இருக்கும் என்பது அடுத்த கேள்வி. இற்றை வேங்கடப் பகுதிகள் சங்க காலத்தில் (கி.மு. 600 - கி.பி. 300) நமக்குத் தெரிந்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளன. 

திரையனுக்குக் கீழும் (இவன் தொண்டைமான் இளந்திரையனுக்கு முன்னோன் ஆகலாம்), மாவண் புல்லி என்ற குறுநில அரசனுக்குக் கீழாயும், ஆதனுங்கனுக்குக் கீழாயும் (இவன் மோரிய அரசன் பிந்துசாரனின் படையெடுப்புக் காலத்தில் இருந்துள்ளான். இவன் பற்றிய செய்தி அறதப் பழைய காலம்.) இருந்ததாக அடையாளப் படுகின்றன. இக் குறுநில மன்னரின் தொடர்ச்சி வரிசை நமக்குக் கிட்டவில்லை. எனினும், இப் பகுதிகள் தமிழ் பேசும் பகுதிகளாய் இருந்தன என்றே அறிகிறோம்.

இந்தப் 14 பாடல்களிலும், ஓரிடத்தில் கூட, வேங்கடத்தின் திருமால், திருமால் கோயில் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப் படாதது நமக்கு வியப்பையே அளிக்கிறது. "பரங்குன்றைக் குறிக்கும் போதெல்லாம், விட்டு விடாது, முருகனைச் சேர்த்துக் குறிக்கும் சங்கப் பாடல்கள், வேங்கடத்தைச் சொல்லும் போது மட்டும், கூடவே திருமால், திருமால் கோயிலைக் குறிக்காது போனது ஏன்?" - என்பது நமக்குக் கேள்விக் குறியாய் இருக்கிறது. 

இத்தனைக்கும் வேறு பல இடங்களில் சங்கப் பாடல்கள் மாயோனையும், வாலியோனையும் அழுத்தமாகக் குறிக்கின்றன. முல்லைநிலத் தெய்வம் மாயோன் தானே? (வாலியோன் மாயோனின் அண்ணன்; இவனைக் குறிப்பிடும் வழக்கம் சங்க இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம் தான். வாலியோனை வழிபாட்டிற் சிறப்பிப்பது பழந்தமிழகமும், இன்றைய ஒரிசாவும் தான்.)

பொதுவாகச் சங்க இலக்கியத்தில் பாலைத்திணையில் (சங்க இலக்கியத்தில் இந்தத் திணைப் பாட்டுக்கள் மிகுதியாய் உள்ளன.) பொருள்வயின் பிரிதலைக் குறிக்கும் எல்லா இடங்களிலும், சிலம்பில் (11:63-67) சொல்லப் படுவது போல்,

"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்ற அளவில் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த இடமே பாலை என்பதாக ஒரு தமிழ் நாட்டு வரையறையைக் குறிப்பதாகக் கொள்ள முடியவில்லை. 

அவை வேறு ஏதோ ஒரு நிலைத்த இடத்தை, அதுவும் தமிழ்கூறும் உலகைத் தவிர்த்து, ஒரு மொழிபெயர் தேயமாகவே, குறிப்பதைக் கவனிக்க முடியும். அதோடு வேங்கடம் என்ற சொல், வெறும் மலையை மட்டும் அல்லாது, வெய்யிலில் வேகும் பகுதியையே முதலில் குறித்திருக்க வேண்டுமோ என்றும் ஐயுற வேண்டியுள்ளது.

(இயற்பொருளின் படி, வேகும் கடம் என்பது, வெய்யிலால் சுட்டெரிக்கும் இடம் என்பது, வேங்கடம் என்றாகும்; கடம் என்பதற்கு பாவம் என்ற பொருள் கூறி சமய உணர்வில் விளக்கப் பார்ப்பது வேண்டாத வேலை. எல்லாவற்றிற்கும் சமயத் திருகையே - twist - விளக்கமாய் அளித்துக் கொண்டிருந்தால் வரலாறு என்பது சரியாய் விளங்காமல் போகும். 

பாவம் - புண்ணியம் போன்ற கருத்துக்கள் எல்லாம் மெய்யியல் வழியாக வந்தவை. மெய்யியற் சிந்தனை தமிழ்க் குமுகாயத்தில் அழுந்தியது கி.மு. 200 களுக்கு அப்புறமே. தொடக்க காலத்தில் தெய்வ வழிபாடு இருந்தது; ஆனாற் சமய நெறி கிடையாது. 2300 - 2500 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இடப்பெயர்கள் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்திருப்பதை நாவலந்தீவின் பல இடங்களின் பெயர்களில் பார்க்கலாம்.)

தென்னிந்தியாவிலேயே கோடைகாலத்தில் மிகுந்து வேகும் பகுதி ஆந்திரத்தில் இருக்கும் இராயலசீமைப் பகுதியே ஆகும். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், சங்க இலக்கியத்தில் பாலையாகக் குறிப்பிடப்படும் வேங்கடப் பகுதி, ஒரு பெரிய நிலப்பரப்பாய், குறிப்பாகக் கண்ண பெண்ணை (கிருட்டிணா) ஆற்றில் இருந்து வட பெண்ணை ஆறு வரைக்கும் இருக்கும் இந்தக் கால இராயல சீமைப் பகுதியாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு என்று சில ஆய்வாளர் குறிப்பார். இது மொழிபெயர் தேயம். தமிழும் வடுகும் ஒன்றிற்கொன்று ஊடுறுவிய பகுதி.

தவிரப் பொருள்வயின் பிரிவது என்பதை "வணிகம் கருதியே பிரிந்திருக்க வேண்டும்" என்று கொண்டால், அந்த வணிகம் நிலம்வழி நடந்தது என்றால், அது வடக்கு நோக்கி இருந்திருக்கவே வாய்ப்புண்டு. அவ் வணிகத்தின் வட எல்லை மகதமாகவே கி.மு.600-400 களில் அமைந்திருக்கலாம். 

மகதத்திற்கும், தமிழ்கூறு உலகத்திற்கும், பிந்துசாரன் (= மோரிய அரசன் அசோகனின் தந்தை) காலம் தவிர்த்து, நந்தர், மோரியர் என்று வரும் காலங்களில் கனிவான உறவு குறைபடாது இருந்திருக்கிறது. தவிர, அக்கால மொழிபெயர் தேயமாய் தமிழகத்திற்கு அடுத்தாற்போல இருந்தவை, வட மேற்கே இருந்த நூற்றுவ கன்னரின் (= சாதவ கன்னரின்) அரசும், வடகிழக்கே இருந்த கலிங்க அரசுமே ஆகும்.

நூற்றுவர் கன்னரை தோழமை கொண்ட தமிழரசர் என்றே சிலம்பு பேசுகிறது. கலிங்க அரசன் காரவேலனின் கல்வெட்டும், தமிழ் மூவேந்தரின் நீண்ட காலக் கூட்டணியைப் பகைமை இல்லாததாகவே குறிக்கிறது. எனவே நூற்றுவர் கன்னர் அரசின் வழியாகவும், கலிங்க அரசின் வழியாகவும் மகதம் வரை செல்லும் வாணிகம் நடந்திருக்க வேண்டும். 

குடிலரின் (=கௌடில்யரின்) பொருள் நூல் (=அர்த்த சாத்திரம்) தெரிவிக்கும் ஒரு சில வணிகப் பண்டங்கள் தெற்கிருந்து போனவையாகவே தெரிகின்றன. பொதுவாகச் சங்க இலக்கியங்களில் கிடைக்கும் நந்தரின் அரசுச் செய்திகளும் மகதத்திற்கும் தமிழகத்திற்குமான உறவு மேம்பட்டே இருந்திருப்பதை உறுதிப் படுத்துகின்றன.

பழந் தமிழகத்தில் இருந்து (இது இன்றையத் தமிழகமும், கேரளமும், தென்கன்னடமும் சேர்ந்த பகுதி.) வடக்கே போக 2 வழிகள் தாம் உண்டு. ஒரு வழியில், எருமை நாட்டைக் கடந்து (= மைசூர் நாடு; அதுவும் அன்று முழுமையாய்த் தமிழ் பேசி இருந்த நிலமே. இன்றையத் தென்கன்னட நாடு முழுமையும் அன்றைக்குத் தமிழ் பேசும் நிலமாய்த் தான் இருந்தது. இதைக் கல்வெட்டுக்களும், கன்னடம் வளர்ந்த நிலையும், கன்னட இலக்கியங்கள் பிறந்த வரலாறும் தெளிவாகவே உணர வைக்கின்றன.) 

சமண வெள்ளைக்குளம் (=ஸ்ரவண பெலகுளா) வழியாக இன்றைய ஔரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் இருக்கும் நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகரான படித்தானம் போய் அங்கிருந்து மகத அரசின் தக்கணப் பாதையைப் பிடிக்க வேண்டும். (படித்தானம்> பயித்தானம்> பைத்தான்; நம்மூர் ஆற்றங்கரைகளின் துறைகள் போன்றது தான் படித்தானம். இதற்குச் சற்றருகில் தான் எல்லோராவும், அசந்தாக் குகைகளும் உள்ளன.)

மகத அரசின் தக்கணப் பாதை கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானத்தில் தொடங்கி, அசந்தா, எல்லோரா வழியாக, வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசருக்கு வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, அப்புறம் உஞ்சைக்குப் (உச்செயினி) போய், மேலே பில்சா வந்து, பின்னால் நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையிலுள்ள கோசாம்பிக்கு வந்து, அதற்கு அப்புறம் அயோத்தி என்ற சாகேதத்தில் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேரும். 

(சாவத்தி என்பது கோசலத்தின் தலைநகர். கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்ட நாடுகள். இராமாயணக் கதையில் வரும் கோசலம் இராமனின் தாய் பிறந்த நாடு. மகத அரசின் பேர் பெற்ற முதலரசன் பிம்பிசாரன்; அவன் மைத்துனன் ஒரு கோசலத்து மன்னன் தான். மகத்திற்கும் கோசலத்திற்கும் இருந்த உறவு 18 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுச் சீமைக்கும், சிவகங்கைச் சீமைக்கும் இடையே இருந்த மாமன் - மச்சான் உறவு போன்று தான்; ஒரு சமயம் இழைந்து கொள்வார்; மறு சமயம் அடித்துக் கொள்வார்.)

தெற்கிருந்து வடக்கே போவதற்கு இன்னொரு வழி, வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்த வேங்கடப் பகுதியைக் கடந்து அமராவதி வந்து (புத்த நெறியின் தென் பகுதித் தலைமைப் பீடம் போன்றது.) அங்கிருந்து கலிங்கம் வழி மகதத்துள் வந்து சேருவது. அமராவதியில் இருந்து படித்தானத்திற்குக் குறுக்கில் ஒரு கிடைப் பாதையும் உண்டு.

பழங்கால நாகரிக வளர்ச்சியையும், அரசர்கள் படையெடுத்ததையும், வணிகப் போக்கையும் புரிந்து கொள்ள எண்ணுவோர் இப் பாதைகளின் போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்; இல்லெனில், இந்திய வரலாற்றை ஒழுங்காய்ப் புரிந்துகொள்ள முடியாது.

சங்க கால வேந்தரும், பின்னால் பேரரசுச் சோழரும் கொங்கு நாட்டையும் (>கங்க நாடு), அதிகன் நாட்டையும் (அசோகனின் கல்வெட்டில் குறிக்கப் படும் சத்திய புத்த நாடு) கைக்குள் வைத்துக் கொள்ளாத பொழுது, இவ் வேந்தர் நாட்டு வணிகர், 2 ஆம் வழியான வேங்கடப் பகுதி வழியாகக் கலிங்கம் போய்த் தான் மகதம் செல்ல நேரிடும். 

நாட்டில் செல்வம் கொழிக்க விரும்பிய தமிழக அரசருக்கு மாராட்டியம், கலிங்கம் ஆகிய இரண்டில் யாரோ ஒருவர் இவர் பக்கம் சார்ந்திருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். மகதத்தை நோக்கிய வணிகம் இல்லாமால் தமிழ்நாட்டு அரசுகள் நெடுங்காலம் தரிக்க முடியாது.

முன் சொன்னது போல், வேங்கடப் பகுதியின் வடக்கு என்பது இன்றையத் தெற்கு ஆந்திரத்தையே, அதாவது வடுகு மொழி பெரிதும் பேசும் தேயத்தையே குறிப்பதாகத் தோற்றுகிறது. அக்கால வடுகு நமக்கு வடக்கிலுள்ள மொழி என்றே புரிந்து கொள்ளப் பட்டது. 

அதே பொழுது, பாகத மொழி பேசிய நூற்றுவர் கன்னருக்கு அது தெனுகு (தெற்கு) மொழி ஆனது. தெனுகு (=தெலுகு; தெனுங்கு; தெலுங்கு) பேசும் இடத்திலும் தமிழ் மொழி அங்கங்கே ஊடாகப் விரவி இருந்திருக்க வேண்டும். இன்றேல் நூற்றுவர் கன்னர் தம் காசுகளின் ஒரு பக்கம் தமிழிலும் பொறித்திருக்க மாட்டார் அல்லவா? 

வேங்கடம் என்பது தமிழ்கூறும் உலகிற்கு எல்லையாகுமெனில், அப் பெயரை வைத்து எல்லை ஒட்டிய பகுதிகளைக் குறிப்பது மாந்தருக்குள்ள வழக்கமே. இது எப்படியெனில், இன்றைக்கும் தெலுங்கர் தமிழரை அரவமாடு என்பதைப் போல என்று கொள்ள வேண்டும்.

[தமிழ்நாட்டின் வடபகுதி மண்டலங்களாய் அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று இரண்டைப் பழங்காலத்தில் குறிப்பார். பழைய ஆர்கா நாடு> அருகா நாடு (> அருவா நாடு) தான் இன்றைய வட ஆர்க்காடும், தென் ஆர்க்காடும் சேர்ந்த நிலப்பரப்பு ஆகும். 

ஆர்கா நாடு>ஆர்க்காடு என்றானது. அருவா வடதலை என்பது இற்றை ஆந்திர மாநிலம் சேர்ந்த சித்தூர், நெல்லூர் மாவட்டங்களாகும். (அவை இரண்டும் பெரும்பான்மையர் தமிழ் பேசிய இடங்களாய்த் தான் 1956/57 வரை இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட குழப்பத்தில் இம் மாவட்டங்களையும், இது போலக் கன்னட மாநிலத்திற்கும், கேரள மாநிலத்திற்கும் நாம் இழந்த பகுதிகளும் உண்டு. இப்படிப் பெரிதும் ஏமாளிகளாய் இருந்தாலும், தமிழர் ஏதோ இந்திய இறையாண்மையில் ஒன்று படாதவர் போலவே சித்தரிக்கும் கூத்தும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் உள்ளது.)

அருவா நாடு, அருவா வடதலை நாடு ஆகிய இரண்டுமே தெலுங்கருக்கு அண்மையில் இருந்த காரணத்தால், அருவாளர் என்ற சொல் (அருவம் ஆடு> அரவம் ஆடு = அரவமாடு; ஆடும் ஆளும் ஒரே பொருள் கொண்ட சொற்கள் தான். ஒன்று தெலுங்கிலும், இன்னொன்று தமிழிலும் பரவலாகிப் போனது.) 

மொத்தத் தமிழரையும் குறிப்பிடும் சொல்லாய் இது ஆனது. இதே போல தென்கேரளத்தில் பாண்டி என்ற சொல் மொத்தத் தமிழரையும் குறிக்கும் சொல்லாக அமையும்; திகிளர் என்ற சொல் கன்னடத்தில் மொத்தத் தமிழரையும் குறிப்பதாக அமையும். பொதுவாக எல்லைப் புறத்துச் சொல், மொத்தப் பரப்பாளரையும் குறிப்பதாக அமைவது குமுகவியல், மாந்தவியலில் இயற்கையே.]

அப்பொழுது வேங்கடம் என்பது பகுதிதானா. மலை இல்லையா என்றால், இரண்டும் தான் என்றே விடை சொல்ல வேண்டியுள்ளது.

அன்புடன்,
இராம.கி.

Monday, July 09, 2007

எற்றி நகரல்

டிங்டாங் டிங்டாங் டிங்டாங் கென்றே
திண்'னுன்னு கிணுக்குது கோயில்மணி;
எங்கள் பேரனோ எற்றி நகர்கிறான்,
எங்கள் வளவினில் வலமாக!

தாவி விழுகிறான்; மீண்டு எழுகிறான்;
தந்தனத் தந்தனச் ச(ல)ங்கையொலி;
கூவி அழைக்கிறேன் "இனிய, வா!"வென;
குடுகுடு என்றே காலசைப்பு;

கூறுவோர்களை குமிண்சி ரிப்பினால்
கொள்ளை கொள்கிறான்; என்ன,இது?
ஏறும் மடியினில், மீறி இரங்கலும்
எத்தனை முறைதான் செய்திடுவான்?

வாவிக் கொள்கிறேன்; விரல்க டிக்கிறான்;
வலிக்க வில்லையே? என்ன,இது?
நா,வி தழ்களும் நனையும் அண்ணமும்,
நக்கி உணருதல் எதனாலே?

ஊறும் எச்சிலில் ஒத்தை விரலையே
உறிஞ்சிச் சப்புவ தெதனாலே?
தேறும் பொதியெலாம் தேடி மெல்வதும்,
தெளிந்து அறிந்திட முயலுவதோ?

ஐம்பு லன்களால் உலகம் அறிவதில்,
ஆகும் ஊறு.ஒளி, சுவைக்காலம்;
செய்ம்பு லன்களில் ஓசை, நாற்றமோ,
சேரக் கூர்ந்திடும் வருங்காலம்!

அன்புடன்,
இராம.கி.

Friday, July 06, 2007

தாலி - 7

மஞ்சள் பற்றிப் பல செய்திகளை முன்னே கூறிய நான், ஒரு முகன்மையான மஞ்சட் காய்/பழம் பற்றிச் சொல்ல மறந்துபோனேன். வேறொன்றுமில்லை, மாங்காய்/மாம்பழம் பற்றித் தான் சொல்ல மறந்தேன். மாங்காய் மரத்தை மா என்ற ஓரெழுத்து ஒருமொழியால் இப்பொழுது குறிப்பிட்டாலும் அதற்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்பது ஆய்விற்குரிய கேள்வி. [அது இடுகுறிப் பெயராய் அமையமுடியாது. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே", "மொழிப்பெயர்க் காரணம் விழிப்பத் தோன்றா" என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் வெறும் இடுகுறிப் பெயர்க் காரணத்தை மறுக்கின்றன. பொதுவாக ஓரெழுத்தொரு மொழிகள் எல்லாமே (மனிதனோ, விலங்குகளாக எழுப்பிய) இயற்கை ஒலியாக இல்லையெனில், அவை ஈரெழுத்து அல்லது மூவெழுத்துச் சொற்களின் மரூஉ ஆகத் தான் ஆய்வில் தென்பட்டிருக்கின்றன.]

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

என்பது திருக்குறள் காமத்துப் பாலில் வரும் பாட்டு. அது என்ன "மாலும் என் நெஞ்சு"? என்றால், வேறு ஒன்றுமில்லை, மாலுதலுக்கு மயங்குதல் என்றே பொருள் உண்டு. ["அணங்கு என்று நினைப்பேனா? அழகிய மயில் என்று நினைப்பேனா? தங்கக்குழை போட்ட பெண் என்று சொல்வேனா? என் நெஞ்சு மயங்குகிறது" என்று சொல்லுகிறார் வள்ளுவர்.] சூரியன் மறைகிறான், அது வரை ஒளியோடு இருந்த பகல் இப்பொழுது மயங்குகிறது, வெய்யில் மஞ்சளாய் மாறி கொஞ்சம் கொஞ்சமாய் இருள் கூடுகிறது. (மயங்கலே மங்கலாகி, மஞ்சளாயிற்று என்று முன்னே சொன்னேன் அல்லவா?) ஒளியில் தொடங்கி இருளில் முடியும் நேரத்திற்கு, மாலுகின்ற நேரத்திற்கு, மாலை என்றே தமிழன் பெயரிட்டான்.

மால் என்று ஓர்ந்து பார்ந்தால் மழுங்குதல், மயக்கம், மங்கல், மஞ்சள், மையிருட்டு (= கருப்பு) என்ற பொருட்பாடுகள் அடுத்தடுத்து வந்து சேரும். மால்>மாலம் = மயக்கும் வித்தை, நடிப்பு; மால்>மான்>மான்றல் = மயங்குதல்; மாலை = பல பூக்கள் மயங்கிக் கலந்து கிடக்கும் தொடை. மாலின் நீட்சியாய் மாள் என்பதும், மாழ் என்பதும் அவற்றின் வளர்ச்சிச் சொற்களும் பொன்னைக் குறித்தும் வரும். [மல்>மால்>மாள்>மாழை = பொன், உலோகம்; மல்>மால்>மாள்>மாழ்>மாழை>மாசை = பொன், உழுந்து நிறை அளவுள்ள பொன் நாணயம்; மல்>மால்>மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்; மல்>மால்>மாள்>மாடு>மாடை = பொன், உலோகம், அரை வராகன், ஒரு பழைய நாணயம் - மகத அரசில் புழக்கத்தில் இருந்தது] இது தவிர, மால்>மாழ்குதல் = மயங்குதல்; மாழாத்தல் = மயங்குதல்; மாழை = மருட்சி, மயக்கம் என்ற பொருட்பாடுகளும் மாழ் என்பதை ஒட்டி வரும். மள்>மாள்>மாளம் என்பது கத்தூரி மஞ்சளைக் குறிக்கும்.

இன்னும் நீட்சியாய், மாழை, மாந்தி, மாகந்தம் ஆகியவை மாமரத்தைக் குறிக்கும் சொற்களாகும். மாழை, மாந்தி, மாகந்தம், மா, மாங்காய், மாம்பழம் ஆகிய தொடர்புடைய வெவ்வேறு சொற்களை ஏரணமுறைப்படி பொருத்திப் பார்க்க வேண்டுமானால் *மால் என்ற அடிச்சொல் இருந்திருக்க வேண்டும். (*மால் என்பதற்கு மாறாய் *மா(ம்) என்ற சொல்லையும் கூட இங்கு ஓர்ந்து பார்க்கலாம். தமிழில் மகம் என்றாலும் ஒளி பொருந்திய, மஞ்சளான என்ற பொருட்பாடுகள் உண்டு. மகக் குழை என்றாலே, மாவிலை என்ற பொருளும் வந்து சேரும்; தவிர, மகரம் = மங்கிய சிவப்பு நிறம், மகவன் = இந்திரன், சிவன், மகவின் கோள் = வியாழன், மக உலகம் = மேல் ஏழு உலகினுள் ஒன்று என்று ஒளிப்பொருள் கிடைக்கும் சொற்களும் இது தொடர்பாய் உண்டு. இனி, மகன்>மான் என்று ஆவது போல, மகசி>மாசி என்று ஆவது போல, மகம்>*மாம் என்றும் ஆகலாம். *மாம் என்ற சொல்முடிவில் வரும் மூக்கொலியைத் தவிர்த்து மா என்றும் பலுக்கலாம்.)

*மால்>மாள்>மாழ்>மாழை
*மால் + ந் +தி = மாந்தி
*மால் + கு > மாகு>மாகந்தம்
*மால் > மா
*மால் +ந் +காய் = மாங்காய்
*மால் +ந் +பழம் = மாம்பழம்

"அதெப்படி *மால் என்ற சொல் இந்த மரத்திற்கு இருந்திருக்க முடியும்?" என்று சொற்பிறப்பியல் வழி கேட்டால், இதே போன்ற ஏரணம் இன்னொரு மரப்பெயரிலும் இருப்பதைத் தான் இணை காட்ட வேண்டியிருக்கிறது.

*தெல்+ந்+கு = தெங்கு
*தெல்+ந்+ஐ = தென்னை
*தெங்கின் காய் = தெங்கங்காய்
*தென்னையின் காய்>தென்னையங்காய்>தென்னங்காய்
*தெல்+ந்+காய் = தெங்காய்>தேங்காய்
*தெல்+கு = தெற்கு, வடமரம் (=ஆலமரம்) மிகுந்து இருந்த திசை வடதிசை ஆனது போல், தெல் மரம் மிகுந்து இருந்த திசை தெற்கு என்று ஆனது. தமிழில் கிழக்கும் மேற்கும் மலையை ஒட்டி ஏற்பட்டது போல வடக்கும் தெற்கும் மரங்கள் மிகுந்திருந்த காரணத்தை ஒட்டியே அமைந்தன.
*தெல்+ந்+திசை = தென்திசை
*தெல்>தெள்>தெளிவு = கள்

"சரி, மாலிற்கும் மஞ்சளுக்கும் புதலியல், உயிர்வேதியல் ஆகியவற்றின்படி என்னதான் தொடர்பு?" என்பது அடுத்த கேள்வி. [இந்த புதலியல் / உயிர்வேதியல் எல்லாம் பழந்தமிழனுக்குத் தெரியாது தான். ஆனால் பெயரிடுவதற்கு வாய்ப்பாய்ப் பட்டறிவும் கூர்ந்த அவதானிப்பும் அவனுக்கு இருந்திருக்க வேண்டும்.]

தமிழில் பல்வேறு காய்/கனிகள் தரும் மரங்களைக் குறிக்கிறோம். இவற்றிற்குப் பெயரிடும் போது, தமிழ் மாந்தர்கள், மரத்தில் இருந்து காய்/கனிகள் பெயரிட்டார்களா? காய்/கனிகளில் இருந்து மரத்திற்குப் பெயரிட்டார்களா என்பது ஆய்விற்கு உரிய கருத்து. இருக்கும் தமிழ்ச் சொற்களைப் பார்த்தால், பெரும்பாலும் (முற்றிலும் அல்ல.) காய்/கனியில் இருந்தே மரத்திற்குப் பெயரிட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது. (இன்னுஞ் சொன்னால் பழைய மாந்தனுக்கு காய்க்கும் கனிக்குமே வேறு பாடு தெரிய வாய்ப்பில்லாது இருந்திருக்கலாம்). அவன் காய்/கனியைப் பார்த்தால், அவனைக் கவர்வது அதன் உள் நிறமாகத் தான் இருக்க முடியும். மாவின் தளிர் இளமஞ்சள்; ஓரோவழி சிவப்பு ஊடுறுவிய மஞ்சள்; மாவின் காய் வெளிர் மஞ்சள்; அதன் கனியோ ஆழ்ந்த மஞ்சள். மற்ற பழங்களின் உள் நிறம் ஓரோவழி மஞ்சளாய் இருந்தாலும், மா ஒன்று தான் எல்லா வகை(variety)யிலும் உட்பகுதி மஞ்சளாய் இருக்கிறது. வேறொரு நிறத்தில் மாங்கனி/காய் இன்னும் காணப் படவில்லை.

பழுப்பு அல்லது சாம்பல் கருமை நிறமுடைய, Mangifera indica என்று புதலியலில் (botony) கூறப்படும், மாமரமானது திசம்பர் மாதத்தில் பூக்கிறது. பூக்கும் போது, ஒரு பூங்கதிரில் நிரவலாய் (average) ஆயிரம் மஞ்சள் பூக்கள் இருக்குமாம். இந்தப் பூங்கதிரில் ஆண்பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருந்தாலும் அவை ஒன்றிற்கு ஒன்று என்ற கணக்கில் இருப்பதில்லை. பெண்பூக்கள் மிகக் குறைவாயும் ஆண்பூக்கள் அதைப்போல ஆறு மடங்கிற்கு மேலுமாய் இருக்குமாம். இது தவிர பூங்கதிரில் இருந்து பூக்கள் உதிர்வதும் நடக்கும். முடிவில் ஒவ்வொரு கட்டத்திலும் பூக்கள் உதிர்ந்து ஒரு கிளைக்கு ஒரு கனி கூட நிரவலாய் அமைவதில்லை.

மஞ்சள் என்ற கருத்து மாமரத்தின் பல உறுப்புக்களில் தொடர்ந்தே வருகிறது. பூக்களில் இருந்து நீராவி மூலம் வடித்தெடுத்தால், 0.04% அளவில் பழுப்பு மஞ்சள் நிறத் தைலம் ஒன்றை எடுக்கலாமாம். எனவே, மஞ்சள் இல்லாமல் மாம்பூ இல்லை. துளிர் இலைகளில் அசுகார்பிக் காடி என்னும் சி உயிரூட்டு (ascorbic acid - Vitamin C) அதிகமாக உள்ளது. அசுகார்பிக் காடியும் மஞ்சள் நிறமானதே!. முதிர்ந்த இலைகளில் மாங்கிவெரின் (mangiferin) என்ற குளுகொசைடு (glucoside) உள்ளது. [முதிர்ந்த இலைகளைப் பொதுவாகக் கால்நடைகளுக்குத் தொடர்ந்து கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை கால்நடைகளின் குடலில் நச்சுப் பொருள்களாக ஆகி விடுகின்றன. ஓரோவழி முதிர்ந்த இலைகளை உண்ட பசுக்களின் சிறுநீர் மஞ்சளாகவே போகுமாம்.] இலைகளில் இருந்து 0.1% அளவில் வடித்தெடுக்கும் எண்ணெயும் கருஞ்சிவப்பு நிறத்திலேயே இருக்கும்.

மாங்காய் ஊறுகாயில் சிட்ரிக் காடி அதிகம் உள்ளது. (இதுவும் வெளிர் மஞ்சளே.) வட இந்தியாவில் புளிக்குப் பகரியாக ஊறுகாய் மாங்காய் சில இடங்களில் பயன்பெறுவது உண்டு. அறுவடையின் போது காய்களில் இருக்கும் காடித் தன்மை, பழுத்த பின்பு பெரிதும் குறைந்து விடுகிறது. அதே போல அசுகார்பிக் காடியும் குறைந்து விடுகிறது. பழத்தில் இருக்கும் மொத்தச் சருக்கரையும் பழுத்தபின் கூடுகிறது. (அதிலும் இனிப்புச் சருக்கரை - sucrose - அதிகரித்தால் சுவை மிகவும் அதிகமாகவே கிடைக்கும்.)

மாம்பழத் தோலியில் இருக்கும் குருத்திய வண்ணங்களும் (carotenoid pigments) பழுக்கும் போது அதிகரிக்கும். மாங்காயில் சி உயிரூட்டும் (vitamin C), அது பழுக்கும் போது குருத்தியமும் (carotene) நிறைந்திருக்கின்றன. நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளில், மாம்பழமும் குருக் கிழங்கும் (carrot) குருத்திய (carotene) வண்ணங்களைத் தேக்கி வைத்திருப்பதால், மிகுந்த அழகுத் தோற்றம் காட்டுகின்றன. இந்தக் குருத்தியங்கள் பல வேறுபாடுகளுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்ந்த நரங்கை (orange) நிறம் வரை தோற்றம் காட்டுகின்றன. [பீட்டாக் குருத்தியம் - beta carotene - 30 நுல்லியன் கீழ்ப் பங்கு (நு.கீ.ப. parts per million) இருந்தாலே மஞ்சள் நிறம் ஏற்பட்டுவிடும்; கனிந்த மாம்பழத்தில் இது உண்டு. ஒரு சில வகைகளில், பீட்டாக் குருத்தியம் 30 ppmக்கும் மேலே இருப்பதனால், நரங்கை நிறம் சற்றுத் தூக்கியே தெரியும். தவிரக் கனிந்த பழத்தில், மேலும் நிறம் கொடுக்கும் சாந்தோவில் (xanthophyll) என்ற வண்ணமும் இருப்பது உண்டு.]

பீட்டாக் குருத்தியம் என்பது ஒரு மதிப்புமிக்க, அஃகன எதிர்ப்பிப் (anti-oxidant) பொருளாகும். அதோடு இந்த பீட்டாக் குருத்தியம், கண்பாதுகாப்பிற்கும், திசுக்களை வளர்ப்பதற்கும் உதவியான ஏ உயிரூட்டு (vitamin A) உருவாக்க பயன்படும். பீட்டாக் குருத்தியங்களில் இரண்டுவிதம் உண்டு. ஒருவிதம் இசைக் குருத்தியம் (cis-carotene) என்றும், மற்றது துரன் குருத்தியம் (trans-carotene) என்றும் கூறப்படும். இசை வகை என்பது மாம்பழத்திலும், துரன்வகை என்பது குருக்கிழங்கிலும் அதிகம் உண்டு. தவிரக் குருத்தியமானது, மாம்பழத்தில் சிறுசிறு எண்ணெய்ப் பொட்டுக்களாயும் (oil specks), குருக்கிழங்கில் சிறுசிறு படிமத் துகள்களாயும் (small crystals) இருப்பதால், அவை உடலில் சேர்மானம் ஆவது கூட மாறுபடும். பொதுவாய், சாப்பிடும் போது, குருக்கிழங்கிற் கிடைக்கும் பீட்டாக் குருத்தியத்தைக் காட்டிலும், மாம்பழத்தில் கிடைப்பது எளிதில் நம் உடம்பில் உட்செரிக்குமாம்.

மாம்பழ மஞ்சளின் கதை இதோடு முடியவில்லை. (பட்டுச் சேலை நிறங்களில் மாம்பழ மஞ்சள் என்றே ஒரு வண்ணத்தைக் காஞ்சிபுரத்தில் அடையாளம் காட்டுவார்கள்.) மாம்பழத்தின் கனிவு கூடிவரக் கூடிவர, மாம்பழத் தோலில் கருப்புத் திட்டுக்களும் கூடிவரும். கருமை கூடியிருந்தாலே மிகுந்து கனிந்துவிட்டது என்று பொருள் (மீண்டும் மாலை என்ற சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள், மஞ்சள் கூடிச் சிறிது சிறிதாக இரவு கனிய, கருப்பு கூடும். மஞ்சள் நிறப் பட்டுச் சேலைக்கு கருப்பு நிற விளிம்பும் அழகு கூட்டித் தான் காட்டும்.)

கொஞ்சம் கூட ஐயப்பாடே கிடையாது, *மால்/*மாம் என்ற சொற்கள் மஞ்சள் நிறம் காரணமாகவே இந்த மரத்திற்குப் பெயராகி இருக்கின்றன. மாமை என்பது மஞ்சள்நிறம் அல்லது வெளிர்நிறம் (pale) கூடிய கருப்பைக் குறிக்கப் பயன்பட்ட சொல். அவன் சிகப்பா, கருப்பா என்றால் மாநிறம் என்று சொல்லுகிறோமே? அதன் பொருள் ஒளி கூடிய, களையான, கொஞ்சம் வெளிரிய முகம் என்று பொருள். பெண்ணாயிருந்தால் மஞ்சள் பூசி ஒளி கூட்டிக் கொள்கிறவள் என்று பொருள்.

மாமை என்ற சொல் வடபுலப் பலுக்கலில் ஆமையாகும். ஆம் என்பது மாமின் இந்திப் பெயர்; மற்ற வடபால் மொழிகளிலும் அதே பெயர்தான், அல்லது அதை ஒட்டிய பெயர். சங்கதத்தில் ரகரம் உள்நுழைத்து ஆம்ர என்று வரும். [ஆமை என்ற உயிரி, அதன் ஓடு போன்றவற்றை முன்குறித்த ஆழ்வார் பாடலில் நான் ஏன் ஏற்காது போனேன் என்று புரிந்திருபீர்கள்.]

பெரியாழ்வார் மாமை என்று சொல்லாமல் ஏன் ஆமை என்று தாலிக்கு முன்னால் சொன்னார் என்றால் பாட்டைப் பாருங்கள், மாமை என்று போட்டால், யாப்பு அந்த இடத்தில் சற்று இடிக்கும். ஆமை என்று சொன்னால் பாந்தமாய்ப் பொருந்திக் கொள்ளும். தவிர அவர் பட்டர்பிரான்; அவர் பேச்சு வழக்கில் அந்தக் காலத்திலும் வடசொற் கலந்து தமிழ் இயற்றுவது இயற்கை தான்.

அக்குவடம் உடுத்(து) ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ!

"சங்குமணி மாலையும், மங்கலத் தாலியும் பூண்ட அறிதுயிலான், மணிவண்ணன், வாசுதேவன், தளர்நடை போட மாட்டானோ?" என்று சொல்லுகிறார் ஆழ்வார். வளர்ந்த ஆண், அதுவும் மனைவி அருகிருக்கத் தாலி போட்ட ஆண், தமிழர் மரபில் இருந்திருக்க வேண்டும்.!!

"தாலி ஒரு பெண்ணடிமைச் சின்னம்" என்பது ஆய்வில்லாத அவக்கரப் பேச்சு.

அன்புடன்,
இராம.கி.

(பி.கு. மாமரம் பற்றிய பல கட்டுரைச் செய்திகளை பி.எஸ்.மணி, என்.கமலா நாகராஜன் எழுதிய, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட 1994 ல் வெளியிட்ட "வளம் தரும் மரங்கள் - 5" என்ற பொத்தகத்தில் அறிந்து கொள்ளலாம். வளம் தரும் மரங்கள் என்ற ஐந்து பொத்தகத் தொகுதியுமே வாங்கிப் பேணவேண்டிய தொகுதி.)

Thursday, July 05, 2007

தாலி - 6

சென்ற இடுகையில், 6 மாதத்தில் இருந்து 8 மாதம் ஆகிய குழந்தை, தன் மழலைக்கு நடுவில், வாய்நீர் சிந்தி, ஐம்படைத்தாலியை நனைத்த காட்சியைக் கண்டோம். நம்மூர்த் தாய்மார்களின் அடுத்த எதிர்பார்ப்பு, "8 மாதப் பிள்ளை 8 நடை போடாதோ?" என்பதே. "தன் மகன் கண்ணனும் தளர்நடை நடக்க வேண்டும்" என்று தாய் யசோதை ஏங்குவதாக நாலாயிரப் பனுவலின் முதற் பத்தில் எட்டாம் பதிகத்தின் முதற்பாடலில் பெரியாழ்வார் கூறுகிறார். (பெரிய திருமொழி முழுதுமே அரிய சுவை கொண்டது; மாற்றுக் கருத்து கொண்டார் கூடப் பட்டர்பிரான் தமிழுக்கு இறங்கி வந்துதான் ஆகவேண்டும். :-))

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல
நக்கசெந் துவர்வாய்த் திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக
அக்குவடம் உடுத்(து) ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ!

உண்மையான யசோதைக்கும், யசோதையைப் போல் பாவனை செய்கின்ற ஆழ்வாருக்கும் இடையே உள்ள ஒரு வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான யசோதைக்கோ, "பின்னால் தன் மகன் என்னென்ன செய்வான், எப்படி ஆவான்" என்றெல்லாம் தெரியாது; ஆனால் கதைக்கு அப்புறம் வரும் ஆழ்வாருக்கோ எல்லாமே தெரியும்; தவிர "உலகத்துக்கே அருளும் பெருமாள், இங்கே தாரத்தில் இருந்து (தாரம் = உயர்ந்த நிலை. தாரப் பண் = இற்றைக்கால நிஷாதம்), அவலுக்கு (=கீழுக்கு, புவிக்கு) இறங்கி அவல்தாரமாய் (அவல் தாரம் > அவதாரம்), கண்ணனாய் வந்துள்ளார்" என்ற தொன்மத்தையும் தெரிந்தவர் பெரியாழ்வார். எனவே பெரியாழ்வார் பாடும் தளர்நடைப் பாட்டு, முன்னும் பின்னுமாய், வளர்ந்த நிலையும், குழந்தை நிலையுமாய்ப் பருவங்களையும், நிகழ்ச்சிகளையும், கலந்து கலந்தே தரும்.

இது போன்ற கலவைப் பாட்டுக்களை உரையாசிரியர்கள் கூட சற்று முன்பின்னாக மாறிப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அப்படி உரை மாறிய பாட்டுத் தான் மேலே உள்ளது. மீண்டும் மீண்டும் மீள்வாசிப்பு செய்தால் ஒழியச் சரியான பொருள் நமக்குக் கிடைக்காது. (நான் சொல்லும் பொருளை, ஆழ்ந்த விண்ணவ நெறியில் தோய்ந்தவர்கள், "உனக்கென்ன தெரியும்" என்று தள்ளி ஒதுக்கலாம். பொதுவாகப் பெரியவாச்சான் பிள்ளைக்கு மாறி என்ன பொருள் சொன்னாலும் 'ஆழ்ந்து போன விண்ணவர்கள்' ஏற்க மாட்டார்கள்; வலுதியான - valid - சில காரணங்கள் பற்றியே நான் அவரிலிருந்து இங்கு மாறுபடுகிறேன்.)

மலங்கும் நேரமாகிய மாலை (தமிழர் வழக்கில் 18 மணியில் இருந்து 22 மணிவரை உள்ள நேரம் மாலை எனப்படும். 14 மணியில் இருந்து 18 மணி நேரம் என்பது எற்பாடு ஆகும்.) அப்பொழுது தான் தொடங்கி இருக்கிறது. செக்கச் சிவந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கருத்துக் கொண்டு வருகிறது. கிடக்கை மட்டமான ஒரு மரத்து நுனிக்கொம்பு வழியே நிலவைப் பார்த்தால், அது சிறுபிறையாய் முளைத்துத் தோன்றுகிறது; அதே போன்ற காட்சியை ஆழ்வார் கண்ணனை வைத்து எடுத்துரைக்கிறார்.

"தாயைப் பார்த்து நகைக்கிறான் பிள்ளை; சிவந்த இதழ் திறந்து (செக்கர் வானத்திற்கு ஒப்பு), அதன் வாய் முரணைக்கு (நுனிக் கொம்புக்கு ஒப்பு) மேலே எழும் பல்வரிசை (சிறுபிறைக்கு ஒப்பு) முளைவிட்டு எழுந்து, ஒளி வீசுகிறது."

இதற்கு அப்புறம் "சங்குமணி மாலை (=அக்குவடம்) போட்ட கண்ணன் தளர் நடை போடமாட்டானோ?" என்று சொல்லிவிட்டுப் போகாமல், சட்டென்று பெருமாளின் பாற்கடல் தோற்றத்தை நினைவு கொள்ளுகிறார். முன்னால் சொன்னேனே, அதுபோல ஒரு பருவப் பிறழ்ச்சியில் ஆழ்வார் ஆழ்ந்து போகிறார். கண்ணனை எண்ணிப் பார்த்த கையோடு தொடர்ச்சியாய், "சங்குமணி மாலை போட்டு, ஆமைத் தாலிபூண்ட, முடிவற்ற அறிதுயில் கொள்ளும் தகை சிறந்த மணிவண்ணனை, வாசுதேவனை" நினைவு கூர்கிறார். இரண்டு காட்சிகளையும் பிணைத்து, "தாயார் அமர்ந்திருக்க அருகே கிடந்திருப்பவன் தானே கண்ணனாய் அவதரித்தான்" என்ற புரிதலில், பெருமாளையே தளர்நடை போட்டு வரும்படி பாட்டில் பெரியாழ்வார் கூப்பிட்டு விடுகிறார்.

இதைப் படித்த நமக்குக் கேள்வி சட்டென்று வருகிறது. நாலு பதிகத்தின் முன்னால் தானே (பெரிய திருமொழி 1.4.5)

எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுவ னாய்நின்றான் தாலேலோ!
தூமணி வண்ணனே தாலேலோ!!

என்று சொல்லி ஐம்படைத் தாலி போட்ட கண்ணனுக்கு, அதுவும் கொடைவள்ளல் குபேரன் (மேலே வரும் வயிச் சிரவணன்) தொழுது நிற்கத் தாலேலோ போட்டார்; இப்பொழுது எப்படி ஆழ்வார் வாக்கில் ஐம்படைத் தாலி திடீரென்று ஆமைத் தாலியாயிற்று?

"செக்கரிடை நுனிக்கொம்பில்...." என்ற பாட்டில் "அக்குவடம் உடுத்(து)ஐம்படையே பூண்ட அனந்த சயனன்" என்று சொன்னால் யாப்பு ஒன்றும் குறைபடப் போவதில்லையே? இருந்தாலும் ஆமைத்தாலி என்ற பயன்பாட்டை ஆழ்வார் ஏன் சொல்லுகிறார்? அது என்ன ஆமைத் தாலி? இங்கே ஏன் அது பேசப் படுகிறது? ஆமைத்தாலி என்பது ஐம்படைக்கு அப்புறம் ஆண்மகன் அணிகின்ற ஒரு தாலியா?

இந்தக் கேள்விச் சரங்களுக்கு இடையில், "தாலி பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம், இது காலம் காலமாக பின்பற்றப் படுவதாக சரடு விடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த பதிவு" என்ற மகாவின் முன்னிகையையும், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கேள்வித் தொகுப்பையும் நினைவு கொள்வதைத் தவிர்க்க இயலாது. முற்போக்குச் சிந்தனையாரின் படி தாலி என்பது ஆண் பெண்ணுக்கு அணிவிக்கும் பெண்ணடிமைச் சின்னம் என்ற பரப்புரைக்கு மாறாய் இப்படி ஒரு கருத்து, அதுவும் ஆண்டாளின் தந்தையார் வெளியிடுவது நம்மைத் துணுக்குற வைக்கிறது.

"அய்யய்யோ? ஆண்மகன் தாலி போட்டிருந்தானா? அதுவும் தன் மனையாள் அருகிருக்க, இவன் தாலி போட்டிருந்தானா? அது என்ன முரண்? தாலியை எப்படி ஆண்மகனுக்கு அணிவிக்கிறார்கள்? என்னங்கடா இது கூத்து?"

ஆமை என்ற சொல்லைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வே செய்யாமல், "செக்கரிடை நுனிக்கொம்பில்...." என்ற பாடலின் மூன்றாவது வரிக்கருத்தைச் சட்டென்று பொருள் உணர முடியாது.

நான் சொல்லவரும் பொருள் உரையாசிரியர் கொடுத்த பொருளுக்கு மாறுபட்டது. இதைப் பலரும் ஏற்காது போகலாம். ஆனாலும் ஆழ்ந்து ஓர்ந்து பார்த்த பிறகு தான் சொல்லுகிறேன். மேலே கொடுத்துள்ள பெரிய திருமொழிக்கு உரை செய்யும் போது, உரையாசிரியருக்கும், பாடியவருக்கும் இடையே 600/700 ஆண்டுகள் ஆகிவிட்டன. பொதுவாய் உரையாசிரியர்கள் என்பவர்கள் ஆய்வாளர்கள் அல்ல. அவர்கள் காலத்தில், தங்களுக்குத் தெரிந்த செய்திகள், மரபுகள், பழக்க வழக்கங்களை ஒட்டி, அன்றிருந்த தொன்மங்களையும் கூடக் கொண்டுவந்து, உரை செய்திருக்கிறார்கள். அதனால், மூலத்திற்கும் உரைக்கும் இடையே கருத்துமுரண் ஏற்படலாம்; அது இயற்கை தான்.

காட்டாகத் திருக்குறளில் வரும் சமணக் கருத்தை பரிமேலகர் போன்ற விண்ணவ உரையாசிரியர் மாற்றிப் புரிந்து உரை செய்ய முடியும்; செய்திருக்கிறார். பரிமேலகர் காலத்தில் சமணம் பெரிதும் தமிழ்நாட்டில் வழக்கிழந்து போனது. மிகுந்த முயற்சியில்லாமல், சமணச் சொல்லாட்சிகளுக்கும், சொற்றொடர்களுக்கும் உரை சொல்லுவது கடினம். உரையாசிரியர் தம்மையும் அறியாமல் சிவநெறி, விண்ணவநெறி முறையில் உரை செய்ய முயலுவார். அதே போல ஆமைத் தாலி என்ற சொல்லின் பொருள் பெரியவாச்சான் பிள்ளையின் காலத்தில் பெரிதும் அறியப்படாமலே போயிருக்கலாம்.

எனவே, பெரியவாச்சான் பிள்ளை என்ற விண்ணவ நெறிக்காரர், ஆண் தாலி போட்டுக் கொள்ளும் பழக்கம் முற்றிலும் மாறிப் போன நிலையில், "இது ஏதோ இறைவன் பாற்கடலில் போட்டுக் கொண்ட நிலை" என்று உன்னிப் பார்த்து, ஆமை என்ற கடல்உயிரியோடு தொடர்புறுத்தி, ஆமையோட்டுத் தாலி என்ற தவறான புரிதலில் உரைசெய்யலாம். அது இன்றுவரை தொடர்ந்தும் வரலாம். இந்த உரைகளில் "ஆமையோடு" என்ற பொருட்பாடு "ஓடு" இல்லாமலே எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை. தவிர ஆமையோட்டைப் பெருமாள் பாற்கடலில் அறிதுயிலின் போது ஏன் அணிய வேண்டும்? ஆமையின் சிறப்பு இங்கு என்ன? [கூர்ம அவதாரம் என்று சொல்வதெல்லாம் பொருந்தச் சொல்வதாகவே நான் கொள்ளுகிறேன். அதற்கான தரவுகள் பாடலில் இல்லை.]

பாட்டை ஆழ்ந்து படித்துப் பொருள் கொண்டால், ஆமை என்ற சொல்லிற்கு வேறு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பது புலப்படும். அதைப் புரிந்து கொள்ளுமுன், மஞ்சள் நிறம் பற்றி நாம் இன்னொரு செய்தியைப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 03, 2007

தாலி - 5

தாலி என்ற சொல்லிற்குப் பலரும் "மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்" என்றே விதப்பாகப் புரிந்து கொள்கிறார். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் உண்டு. சரியாகச் சொன்னால், "வளமை (prosperity), பிறக்கம் (fertility)" ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், வெவ்வேறு பேர்கள், வெவ்வேறு ஆட்களுக்கு அணிவிக்கும் கலனாகவே தாலி எனும் பொதுச்சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். இச்சொல்லோடு வெவ்வேறு அடைச் சொற்களை முன்சேர்த்து, 'மங்கலத் தாலி, ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' என்றெலாம் பலவிதக் கூட்டுச்சொற்களை பழந்தமிழர் உண்டாக்கியுள்ளார்.

[இங்கே பேச்சு வழக்கில் பொதுமை/ விதுமைச் சொற்கள், ஓர் எழுகைச் சுற்றாக (helical) மாறி  மாறி, எழும் விதம் பற்றிச் சொல்லவேண்டும். நெய்/எண்ணெய் பற்றிச் சொன்னபோது, முன் ஒரு முறை இதை விளக்கியுள்ளேன். விலங்குக்கொழுப்பின் வழியாக நெய்ப்பொருளை அறிந்திருந்த பழந்தமிழன், எள்ளைக் கடைந்த போது வெளிப்பட்ட பிசிபிசுப்பு நீர்மமும், நெய் போலவே தோற்றமளிக்க, அதை எள்நெய்> எண்ணெய் என விதப்பாகச் சொல்ல முற்பட்டான். இவ்வழக்கில் நெய் என்பது முதலில் விதப்பாயிருந்து, பின்னால் விலங்கு, நிலத்திணை ஆகிய இரண்டிலும் பெறப்படும் பொருளுக்கு பொதுமைச் சொல்லாய் மாறி நிற்கும். அப்புறம் அப் பொதுமையில் இருந்து, எள்நெய் என்ற சொல்லாட்சியில் இன்னொரு விதப்புச் சொல் உருவாகும்.

அடுத்த சுற்றில், எள்நெய்> எண்ணெய் எனும் விதப்புச் சொல் இன்னொரு பொதுச்சொல்லாகி இன்னும் புதிய விதப்புச் சொற்களை உருவாக்கும். அதாவது, எள்ளிலிருந்து மட்டுமன்றி, கடலை, தேங்காய் போன்ற பொருட்களில் இருந்தும் எள்நெய் போன்ற நீர்மத்தைப் பெறமுடியும் என்றவுடன் எண்ணெய் பொதுமையாகி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என விதப்புச் சொற்கள் உருவாகி விடும். இவ் வளர்ச்சியின் ஊற்றுமூலமான (origin) எள்நெய், நல்ல எண்ணெய் ஆகிவிடும்.

இது போன்று, பேச்சு வழக்கில், ஓர் இயல்மொழியில் ஏற்படும் சொல்லாக்க முறைகளின் அடிப்படையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கருத்தைக் குறிக்கும் ஓரகைச் (unique) சொற்கள் விதப்பாகவே  இயல் மொழியில் முதலில் எழுகின்றன. பின் இதபோன்ற இன்னொரு விதப்பும் அதே கருத்தைச் சுட்டிக்காட்டும் போது, முன் குறித்த விதப்புச் சொல் பேச்சு வழக்கில் சிச்சிறிதாய்ப் பொதுமைச் சொல்லாகி விடுகிறது. அடுத்த சுற்றில், மேலும் ஒரு பெயரடையை அதற்கு முன்கொணர்ந்து இன்னும் பல விதப்புச் சொற்கள் புடைத்து எழுகின்றன.

தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்; பின் செல்வம் படைத்தோரால் அம்மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான் தாலியின் அடையாளம் என நாம் பொருள்கொள்ளக் கூடாது. மஞ்சளே அதன் அடையாளம்.) அடுத்த வளர்ச்சியில் இன்னும் பல விதப்புப் பயன்பாடுகள் பெருகிய பின், 'மணமகளுக்கு மணமகன் அணிவிக்கும் கலனை' விதப்பாய்க்' குறித்த 'தாலி' பொதுமைச் சொல்லாகி, நல்லெண்ணெய் போல், மங்கலத்தாலி எனும் விதப்பு வழக்கை உருவாக்கியிருக்க வேண்டும்.

மற்ற விதப்புப் பயன்பாடுகளாய், 'ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலை), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' போன்றவையும் புழக்கத்திற்கு வந்துள்ளன. அவற்றை முடிந்தவரை இனி விளக்கமாய்ப் பார்ப்போம்.

முதலில் ஐம்படைத் தாலி. இது பெற்றோர் சிறுவருக்கு அணிவிக்கும் ஒரு வகைத் தாலி. இக்குறிப்பை இலக்கியங்கள் மூலமாகவும், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நடைமுறையிலும் நாம் அறியலாம். சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு (=கட்டை> கத்தை> கதை; இதைச் செண்டென்றும் இலக்கியங்கள் குறிக்கும். விழாக்களில் பூச்செண்டு கொடுப்பாரே! அதன் வடிவத்தை ஓர்ந்து பாருங்கள்; கதை போல இருக்கும்), என ஐந்து விதமான படைக் கருவிகளின் சிறு போல்மங்களைச் செய்து அவற்றை ஒரு மஞ்சள் கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் பயன்பாடு புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும், திணைமாலை நூற்றியைம்பதின் 66 ஆம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் கூறப்பட்டுள்ளது.

புறம் 77ம் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் செருவில் தேரூர்ந்து வந்துநின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருதி அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக் குன்றூர் கிழார் பாடுவதை நினைவு கொள்ளுங்கள்.  நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாயும் அன்றி, பெரியவனாயும் அன்றி, ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் இந்த நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் இங்கே எடுத்துரைக்கிறார்.

"கிண்கிணி களைந்து கழலை இப்பொழுது தான் அணிந்திருக்கிறான்; சென்னியில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் இப்பொழுது தான் குடுமி ஒழித்த முடியில் சூடிக் கொண்டிருக்கிறான்; வளையல் தவிர்த்த கைகளில் வில்லைப் பிடித்திருக்கிறான்; இப்பொழுது தேரின் மேல் நிற்கிறான்." என்று சொல்லிய புலவர் மேலும் சொல்லுகிறார்.

"................................................. தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்"

"மாலை அணிந்திருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது உள்ளானே! பால் இலா உணவை இன்றுதான் உண்டிருக்கிறான்." என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயதுச் சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இனி, அகநானூற்றில் வினைமுடித்து மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகற்குச் சொல்வதாய் வரும் பாட்டைப் பார்ப்போம்,

"முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால்" என
விலங்க அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே

இவ்வரிகள், மகனுக்காகப் பொய் சொல்லி நிலாவை அழைக்கும் தாய் நிலையைத் தேர்ப்பாகனுக்குத் தந்தை உரைப்பதாய்க் காட்சி காட்டும். "முகிழ்த்து ஒளிகாட்டும் மூன்றாம் பிறை நிலவே! பொன்னால் ஆன ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என் மகனோடு விளையாட நீயும் வந்தால் உனக்குப் பால் தருகிறேன் என்று புதல்வனுக்காக பொய்யுரைக்கிறாள் என் காதலி" - என்று சொல்கிறது இந்த வரிகள்.

ஆகப் பதின்மப் பருவத்திலும் இளைஞன் அணிந்துகொள்ளும் ஐம்படைத் தாலி, பால்குடிப் பருவத்திலே அவனுக்கு அணிவிக்கப் பட்டுவிடுகிறது. இனி திணை மாலை நூற்றைம்பதைப் பார்ப்போம். (இது சங்கம் மருவிய காலத்தில் கி.பி. 300-400 களில் எழுந்த நூல்)

வல்வருங் காணாய் வயங்கி முருக்கெலாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொன்தாலி பாஅய்த்
திகழக்கான்று இட்டன தேர்ந்து.

"செல்வச் சிறுவர்கள் அணியும் பொன் தாலியில் பொற்கொல்லர் பவளம் இட்டுப் பொலிவித்தது போல, ஒளிவீசும் முருக்க மரத்தில் மலர்கள் பூத்துள்ளன; பார்த்துக் கொள்ளம்மா! வேனிற் காலம் வந்தாயிற்று; இனிமேலும் நம் தலைவன் வேறிடத்தில் தங்கான்; உனைத் தேடி வந்துவிடுவான்" 

என்று தோழி தலைவிக்குச் சொல்கிறாளாம். இப்பாட்டின் மூலம் செல்வச் சிறாரின் தாலிகளில் சிவந்த பவளத்தைப் பொதிப்பதையும் அறிந்து கொள்கிறோம். (மஞ்சளில் குங்குமப் பொட்டிடுவது இயற்கையில் நடக்கக் கூடியதேஎ. இன்றும் சில பெண்கள் கோயிலில் குங்குமத்தை எடுத்துத் தாலியில் இட்டுக் கொள்கிறார்.)

முடிவில் மணிமேகலையில் மலர்வனம் புக்க காதையில் 137-138 ஆம் வரிகள் முருகன் கோயில் திருவிழாவின் கால்கோள் காணப் புகும் தாய்மார் தங்கள் செல்வச் சிறாரை யானை முதுகில் வைத்து வரும் காட்சியைச் சொல்கின்றன. பொதுவாய் 5, 6 மாதங்களில் இருந்தே, பிள்ளைகளுக்கு வாய்நீர் கொட்டும். [ஏதொன்றையும் சுவையுணர்வால் அறியும் பருவம் அது.] காட்சியில் சொல்லப் படும் குழந்தைகள் பிறந்து 8 மாதம் ஆகியிருக்க வேண்டும். பேசத் தொடங்கும் நிலை. "எட்டு மாதத்தில் குளறிக் குளறி மெய் பெறாத மழலையிலும் வாய்நீர் கொட்டுவதால், அப்படிக் கொட்டும் வாய்நீர், பிள்ளைகள் போட்டிருந்த ஐம்படைத் தாலியை நனைக்கிறதாம்." என்றபடி இவ்வரிகள் அமைகின்றன.

"செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப"

ஆக, 8 மாதக் குழந்தை கூட, மணிமேகலை காலத்தில் (கி.பி.200) ஐம்படைத் தாலி போட்டிருக்கிறது. இதேபோலப் பெரியாழ்வார் (கி.பி. 690-775), முதல்பத்து, திருத்தாலாட்டு 5 ம் பாட்டில் "எழிலார் திருமார்புக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு" என்று சொல்லித் தாலப் பருவத்திலே ஐம்படை அணிவதைச் சொல்வார். இன்னும் நிறைந்த முறையில் பெரிய திருமொழி 1:6:10 -இல், மங்கல ஐம்படை என்றே சொல்லி மஞ்சள் நிறத்தோடு பெரியாழ்வார் ஐம்படைத் தாலியைத் தொடர்புறுத்திச் சொல்வார்.

ஆக, அகநானூற்றின் காலத்தை வைத்துப் பார்த்தால், தாலி என்ற சொல்லின் பொதுமைப் பயன்பாடு, 2400 ஆண்டுகளுக்கும் முந்தியே பதிவு செய்யப் பட்டுள்ளது. கி.மு.400 ல் இருந்து கி.பி.800 வரைக்கும் ஏறத்தாழ 1200 ஆண்டுகள் ஐம்படைத் தாலிப் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதற்கு அப்புறமும் இலக்கியச் சான்றுகளைக் காட்ட முடியும். (அப்புறம் எப்படி 10 ஆம் நூற்றாண்டில் தான் தாலி எழுந்தது என்று கூற்றுச் சரியாகும்?) இந்த ஐம்படைத்தாலிப் பழக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்வரை கூட, சிவகங்கை மாவட்ட நகரத்தார் குமுகத்தில் ஆண் சிறாருக்குத் தொடர்ந்து வந்துள்ளது. (இக்காலத்தில் ஐம்படைத் தாலி என்பது தென்மாவட்டங்களில் வெறும் பொற்சங்கிலியாய் மாறியதும் உண்டு.)

பொதுவாய்த் தற்காப்புக் கலைகள் பயின்று வெளிவரும் வரை, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறமை ஓர் இளைஞனுக்கு வரும் வரை,  ஐம்படைத் தாலி அக்காலத்தில் அணிவிக்கப் பெறும். இனிக் கலைகள் பயின்று வெளிவரும் நாள் என்பது எப்போது? அந்த நாளின் எச்சங்களும், சடங்குகளும் இன்றும் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மீந்து கிடக்கின்றன.

இதை அறிந்து கொள்ள மீண்டும் சிவகங்கை மாவட்டத்திற்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஒவ்வோர் ஆண்டின் கார்காலத்தில் (புரட்டாசி மாதத்தில்) ஒன்பான் இரவுகளுக்கு (நவராத்திரி) அப்புறம் வரும் பத்தாம் நாள் நிகழ்ச்சியில் ஐம்படைத் தாலி அணிந்த ஒவ்வொரு இளைஞரும் கிலுக்கி எடுத்து வாழையில் குத்தும் சடங்கு சிவகங்கை மாவட்டத்தில் உண்டு. (வடமொழியில் இந்தப் பத்தாம் நாளை விசயதசமி என்பார். சிவகங்கைப் பக்கமோ இதை மகார் நோன்பு என்பார். காரைக்குடிக் கவிஞர் முடியரசன் இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். காரைக்குடியில் மகார் நோன்புப் பொட்டல் என ஊர்நடுவில் ஒரு பொட்டல் இருக்கிறது. மக்கார்> மகார் என்ற சொல்லிற்கு இளையவரென்ற பொருளுண்டு. இவரில் இளம்பெண்களுக்கான சடங்குகள் பற்றி இங்கு நான் சொல்லப் போவதில்லை. கன்னி ஞாயிற்றில் கன்னியர் இறைவியை வழிபடுவது ஒருவகை. இங்கே நான் சொல்லப் புகுவது ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொதுவான இளையர் பற்றியது.)

ஒன்பான் இரவுகள் புரட்டாசி மாதம் அமையுவா (அமாவாசை) யில் தொடங்கி 10 ஆம் நாளில் ஊரில் உள்ள ஊருவலத் திருமேனிகள் (உர்ச்சவ விக்ரகங்கள்) அம்பு போடும் திருவிழா நடைபெறும். ஒன்பான் இரவின் முதல் நாளைக் கிளுக்கியெடுப்பு என்று சொல்வார். கிளுக்கி என்பது குஞ்சம் வைத்த ஈட்டி/அம்பு போலத் தோற்றம் காட்டும் படையாகும். இது செல்வநிலைக்குத் தக்க மரக்கிளுக்கியாக, பட்டுக்குஞ்சம் கட்டிய மரக்கிளுக்கியாக, இரும்புக் கிளுக்கியாக, வெள்ளிக் கிளுக்கியாக, ஏன் தங்கக் கிளுக்கியாகக் கூடவும் இருக்கலாம். மகார் நோன்பு விழா தொடங்கும் கிளுக்கியெடுப்பு நாளில் குடும்பத்திலுள்ள இளையோர் (குறிப்பாக ஆண்பிள்ளைகள்) கையில் கிளுக்கியை எடுத்துக் கொண்டு சென்று கோயிலில் வழிபட்டுத் திரும்புவர்.

இந்தக் கிளுக்கி பள்ளி செல்லும் சிறார்கள் ஒன்பானிரவுக் காலத்தில் ஒலித்துக் காசு திரட்டும் கிலுகிலுப்பையாகவும் பயன்படும். கிலுகிலுப்பை என்பது கிலிகெ (க), கிலுக(தெ); சிலிகெ (பட) என்று பல்வேறு மொழிகளில் கூறப்படும். கிளுக்கியின் அடிப்பொருள் குத்துதலே.

(குல்> குள்> கிள்; கிள்ளுதல் = குத்துதல்;
கிள்> கிள்ளி> கிளி = கூரிய அலகினால் கொத்தும் பறவை வகை; இதை மலையாளத்தில் கிள்ளு என்றும், கன்னடம், தெலுங்கில் கில்லு என்றும், தெலுங்கில் சிலுக்க என்றும் சொல்வார்.
கில்> கீல்; கீலுதல்> கீளுதல் = கிழித்தல் (சூடா)
கெல்லுதல் = தோண்டுதல்
குற்றி = தண்டு;
குந்தம் = வேல்.
என்ற சொற்களை அறிந்தால் கிளுக்கியின் சொற்பிறப்பு புலப்படும்.)

கிளுக்கியை வைத்து மகார் நோன்பு - 10 ஆம் நாளில் வாழை மரத்தில் இளையோர் குத்துவார். இங்கே வாழை மரம் என்பது விலங்குகளுக்குப் பகரியாய்ப் பயன்படுகிறது. (ஒருகாலத்தில் வேட்டைக்குப் போய் வெற்றி பெற்று விலங்கைக் கொன்று வந்ததை இங்கே நடாத்திக் காட்டுகிறார். இவர் வழிபடும் திருமேனிகளும் குதிரையில் எழுந்தருளி அம்பு போட்டு வெற்றியை விளம்பிக் காட்டுவதை ஓர்ந்து பார்க்கலாம்.)

காரின் கடைசிப் பாதி புரட்டாசி மாதம். இதில் வரும் ஒன்பது நாட்களைப் போலவே பின்பனியிலும் ஒன்பது நாட்கள் உண்டு. இந்தப் பின்பனிக் கால ஒன்பது நாட்களின் முடிவில் அக்காலத்தில் பூந்தொடை விழா நடைபெறும். படைக்கலம் பயின்ற மழவ வீரர் அரங்கேறும் விழா என்பதே பூந்தொடை விழா எனப் படுகிறது. அகநானூறு 187-ல் படைக்கலப் பயிற்சி விழாவான பூந்தொடை விழா பேசப்படும். தொடை என்பது இங்கே அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர் கருதித் தொடுக்காமல் பயிற்சி கருதித் தொடுப்பதனால் இது பூந்தொடை விழா ஆயிற்று. இளைஞரின் திறமை ஊரார் அறியச் பூந்தொடை விழா என்ற ஒன்றில்தான் சோதனை செய்யப்படும். அதைக் கொஞ்சம் விளக்கமாய்ப் பார்ப்போம்.

அக்காலத்தில் ஆசான்கள் வழி நடந்த திண்ணைப் பள்ளிக் கூடங்களில் எண்ணும் எழுத்தோடு, களரிப் பயிற்று, வருமக்கலை, வில், வாள், சிலம்பம் போன்ற படைக்கலப் பயிற்சிகளும், பச்சிலை மருத்துவம் போன்ற இன்ன பிறவும் கூடச் சிறாருக்குக் கற்றுக் கொடுத்தார். இப்பயிற்சியைத் தொடங்கும் முகமாய் "கார்த்திகைப் புதுமைச் சடங்கை" நடத்தி, அதை ஊருக்குச் சொல்லி, பயிற்சிக் கூடத்திற்குப் பெற்றோர் சிறாரை அனுப்பி வைப்பார். குறிப்பிட்ட காலம் கலைகளைக் கற்ற இளையோர், சில ஆண்டுகள் கழிந்த பின்னால், பின்பனிக் காலத்தில் வரும் ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த நாளில் நடைபெறும் பூந்தொடை விழாவில், தம் திறமைகளை வெளிப்படுத்துவார்.

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ தோழி!

"பூந்தொடை விழாவின் முதல்நாளைப் போல புதுமணல் பரப்பிய திருநகர் முற்றம் தனிமையடையுமோ தோழி?"

இங்கே தொடை என்பது அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர் கருதித் தொடுக்காமல் பயிற்சி கருதித் தொடுப்பதனால் புதிய தொடுப்பு இங்கே பூந்தொடை என்றாயிற்று. அதாவது "புதிய அம்பு தொடுக்கும் விழா, அம்பெய்கை" என்பது பூந்தொடை விழா ஆகும். பூ என்ற முன்னொட்டின் பொருட்பாட்டை இன்னும் இரு கூட்டுச் சொற்களின் மூலம் அறியலாம். பூங்குட்டி = ஈன்று சிறிது நேரமே (அல்லது நாட்களே) ஆன குட்டி; பூங்குழந்தை = பிறந்து சில நாட்களே ஆன குழந்தை. [தன் பயிற்சி அறிவைக் காட்டுதற்கு மாறாய், இளம் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு தொடங்கும் நாளாகவும் இந்தப் பத்தாம் நாள் அமையலாம்.]

பூந்தொடை விழாவையும் ஐம்படைத் தாலியையும் சேர்த்து எண்ணுமாப் போல, (பதின்ம வயது கூட அடையாத) இளைய வயதுக் கண்ணனை முன்னே காட்டித் தன்னை யசோதையாய் உருவகம் செய்து கொண்டு, பெரியாழ்வார் (கி.பி.690- 775) நாலாயிரப் பனுவலில் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் ஆறாம் திருமொழியில் முதற்பாட்டில் சொல்வார்.

கண்ணன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிற பையன்; மற்ற பிள்ளைகள் மாட்டு மந்தைகளை ஓட்டிச் செல்கிறார்; தானும் போகவேண்டும் என அன்னையிடம் மாட்டுக்கோலைக் கேட்கிறான். "தான் பார்க்க வளர்ந்த பிள்ளை இப்போது வீரக் கலைகளைக் கற்றுக் கொண்டாலும், வீட்டில் மாடு மேய்க்கும் கோல் எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாதுள்ளானே?" என்ற நக்கலோடு, குறும்புத் தனத்தோடு, "விளையாட்டு வில்லில் ஏற்றுதற்காய் வேலிக் கோலை ஒடித்து அம்பாக்கி, சின்ன ஐம்படைத் தாலியை (கொழுந்துத் தாலி - குழந்தைத் தாலி - பொன்நிறத் தாலி) பெரிய கழுத்தில் பூண்டு, தன் வாரி முடிந்த சிகையில் பின்பக்கமாய் மயிலிறகைச் செருகி, காலிகளை(கால்களால் இயங்கும் விலங்குகள் காலிகள்) ஓட்டிப் போக விரும்பும் இவனுக்கு, காக்கையே! கோலை எடுத்துக் கொண்டுவா! என் கருப்புப் பையனுக்குக் கோலை எடுத்துக் கொண்டுவா!" என்று கூரையில் கூடியிருக்கும் காக்கையைக் கூப்பிட்டு யசோதை பொய் விளையாட்டு ஆடுகிறாள். பாட்டில் கண்ணனைப் பற்றிய விவரிப்பு நம்மைக் கொள்ளை கொள்ளுகிறது. (வேறொன்றும் இல்லை, யசோதைக்கு தன் பிள்ளையின் பெருமை பிடிபடவில்லை.)

வேலிக்கோல் வெட்டி விளையாடும் வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்தில் பூண்டு
பூலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப்பின் போவார்க்கோர் கோல்கொண்டு வா
கடல் நிற வண்ணற்கோர் கோல்கொண்டு வா

ஐம்படைத் தாலி பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் தொட்டுப் பல இலக்கியங்களில் இருக்கின்றன. அவற்றை மேலும் எடுத்துச் சொல்லலாம்; கட்டுரை தான் விரியும். எனவே இனி, நாம் அடுத்த தாலி பற்றிப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, June 28, 2007

free trade / fair trade - 2

இனி முகுந்திற்கு எழுதிய மடல். இது தமிழ் உலகம் மடற்குழுவில் வந்தது என்று எண்ணுகிறேன்.
---------------------------------------
அன்பிற்குரிய முகுந்த்,

[பின் குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ப free software-க்கு சரியான தமிழ் பதம் உருவாக்கித்தருமாறு, தமிழ் சான்றோர்களை, தமிழ் free software நிரலாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ]

என்று கேட்டிருந்தீர்கள். நேற்று, எழுவுதி-பரியுடைமை-விடுதலை பற்றிய என் முந்தைய மடல்களை முன் வரித்திருந்தேன். அதைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இவை ஒட்டிய மற்ற சொற்கள் எல்லாம் தனித் தனித் துறைகளில் மட்டுமல்லாமல் பொதுப்புலத்தில் வருபவை. இதை மறந்து, நாம் ஒவ்வொருவரும் (நம் துறைகளில் ஆழ்ந்து போவதால்) மிக விதப்பாக (over-specialized) ஆகிவிடுவதால், துறைவிட்டுத் துறை ஆளக் கூடிய சொற்களை ஒதுக்கி நமக்கே நமக்காய் நம் துறைக்குக் கலைச் சொற்களை உருவாக்க முற்பட்டு விடுகிறோம். இதன் விளைவாய் வருதை (ordinary) யான சொற்களையெல்லாம் கூடக் கலைச் சொற்கள் ஆக்கிவிடுகிறோம். இந்த "free" என்பது ஒரு வருதைச் சொல்லே.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழில் வருதையான சொற்களில் கூட நுணுகிய வேறுபாட்டில் இரண்டு சொற்கள் அருகருகே இருக்கும். அந்த வேறுபாட்டை நுணுகி அறிந்து துல்லியமாகச் சொல்லும் கலையை நம்மில் பலரும் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம். நம் வட்டார வழக்குகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மாட்டேம் என்கிறோம். கற்ற சொற்களைப் பயில மாட்டேம் என்கிறோம். அண்மையில் நண்பர் இரா. முருகனின் அரசூர் வம்சம் என்ற தொடர்கதையை திண்ணை வலையிதழில் படித்துவருகிறேன். அதில் நம்பூதிரிப் பெண்ணொருத்தி தமிழ்ப் பார்ப்பனப் பெண்ணிடம் பேசுவதாக அவர் மலையாளங் கலந்த தமிழில் ஓரிடத்தில் எழுதுவார். அதில் திரக்கு என்ற சொல்லை மிகுந்த கூட்டம் என்ற பொருளிலும், தன்னேர்ச்சி என்ற சொல்லைத் தானாக நடந்த 'அசம்பாவிதம்' என்ற பொருளிலும் எழுதியிருப்பார். பாருங்கள் இங்கே மலையாள வட்டார வழக்கு எப்படி இருக்கிறது? நான் ஏதோ ஆழ்ந்து அறிந்ததாக இங்கு தமிழுலகம் வந்து "துரக்கு" என்ற சொல்லை கூட்ட நெரிசல்/ traffic என்ற பொருளிலும், தன்னேர்ச்சி என்பதை accident -ற்கும் பயன்படுத்தினேன். அவர் ஆளுகையைப் படித்தவுடன், வட்டார வழக்கு நம்மைக் காக்கிறது என்று மனத்திற்கு ஒரு மகிழ்வு ஏற்பட்டது. அதே பொழுது இதை முன்னே அறியாது போய்விட்டோ மே என்ற வெட்கமும் ஏற்பட்டது. ஆக, நல்ல விருதையான சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. விவரம் அறியாமல் புதுப்புதுச் சொற்களைத் தெரிந்தவற்றிற்குக் கூட உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கூடவே, இந்தக் கால வாழ்வில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதனோடு கிட்ட நெருங்கி வரும் இன்னொரு கருத்தைச் சொல்லிச் சொற்குழப்பம் ஏற்படுத்தி ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கு போனாலும் chaltha hai என்று ஆகிவிடுவது நம் கவனக் குறைவினால் தானே!

இனித் தளையறு/விடுதலை மென்பொருட்கள் என்பதற்கு வருவோம்.

அடிமைப்பட்டிருந்த நாடு தன் தளையறுத்து விடுதலையானதை நினைவு படுத்தி உருவான இரண்டு முழச் சொற்கள் இவை. நம்முடைய சிந்தனை அளவை நாமே கட்டுப் படுத்திக் கொண்டு உருவாக்குகின்ற சொற்கள் இவை. மானகையியலில் (management science) எப்படியும் ஒன்பது புள்ளிப் புதிரைப் பற்றிப் படித்திருப்பீர்கள். கையை எடுக்காமல் ஒன்பது புள்ளிகளை நாலே நேர்கோட்டில் சேர்க்க வேண்டும் என்பார்கள். நம்மை அறியாமல் அந்த ஒன்பது புள்ளிகளின் வரம்பாக வெளியில் உள்ள எட்டுப் புள்ளிகளைக் கொள்ள நினைப்போம். உண்மையில் அந்த எட்டுப் புள்ளி வரம்பை உடைத்து வெளியே வந்தால் தான் இந்தப் புதிரைச் சுளுவி எடுக்க (சுளுவியெடுத்தல் - to solve) முடியும். அதுபோல ஒரு 50, 60 ஆண்டுகாலச் சிந்தனையில் இருந்து வெளிவந்து நாட்டுவிடுதலை என்பதற்கும் மீறிச் சிந்தித்தால் தான் free என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மாந்த வரலாற்றில் free ஆக இருந்த காலமும், அடிமையாக இருந்த காலமும் ஒரு இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன். எகிப்திய, சுமேரிய நாகரிகங்களில் அடிமை முறை இருந்தது. நம்மூர்ச் சிந்து சமவெளியிலும் இருந்திருக்கக் கூடும். தமிழ்க் குமுகாயத்திலும் இருந்திருக்க வேண்டும். சங்க காலம் என்பது பொற்காலம் அல்ல. அது ஒரு காலகட்டம். என்ன, நம்மால் ஓரளவு அறியப்பட்ட ஒரு கால கட்டம். அவ்வளவு தான்.

பரி(free)யாய் இருத்தல், பரியுடைமை (freedom) பற்றி முன்மடலில் சொல்லிவிட்டதால் அதை மீண்டும் இங்கு சொல்லவில்லை. மறுபடியும் ஆங்கிலச் சொல் ஒப்புமையா என்ற குற்றச் சாட்டு எனக்கு வந்து சேரும். வந்துவிட்டுப் போகிறது.:-) சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வந்துசேரும்? தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தொடர்பு அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற என் எண்ணம் வலுப் பெறுகிறதே ஒழியக் குறையவில்லை. அதன் சரியான பரிமாணத்தை நம் நண்பர்கள் பலர் புரிந்து கொள்ளவில்லை. frei, free, ப்ரிய, prijos போன்றவை ஒப்புமைச் சொற்கள் என்றால் பரி என்ற தமிழ்ச் சொல்லும் ஒப்புமையாகத் தான் இருக்க வேண்டும். இதில் நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?

free software - பரிச் சொவ்வறை, பரி மென்கலம்,
open source software - திறவூற்றுச் சொவ்வறை,
licenced software - உரி(ம)ச் சொவ்வறை
shared software - shareware - பகிர் சொவ்வறை, பகிர்வறை

பரி என்ற சொல்லில் இலவயம் என்ற பொருளும் அடங்கும். ஒருவருக்கு இலவயமாகக் கொடுக்கும் போது நம்மைச் சார்ந்தவர் என்ற பரிதல் உள்ளே இருக்கிறது. அவருக்குப் பரிந்துதானே இலவயமாகத் தருகிறீர்கள்? தன்னாளுமை (சுதந்திரம்), விடுதலை, தடையற்ற என்ற பொருள்களும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி,
-----------------------

இனி fair என்பதற்கான இணைச்சொல். பலரும் "நேர்மையான, நேரிய, செவ்விய, கவினிய, தகவுடைய" என்ற சொற்களையே பயிலுகிறார்கள். பாத்தி (compartment) பாத்தியாகப் பார்த்தால், இந்தச் சொற்கள் அந்தப் பயன்பாட்டிற்குச் சரியாகத்தான் தோன்றுகின்றன. ஆனால் அந்தப் பயன்பாட்டின் மூலம் ஒப்பேற்றும் உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. பலகாலமாய், இணைச்சொல் துல்லியம் பற்றி நான் சொல்லி வந்திருக்கிறேன். ஒரு பொருளை உணர்த்த, நெருங்கிவரும் இன்னொரு சொல்லால் சொல்லுவது கவிதைக்குச் சரிப்பட்டுவரும்; அறிவியலுக்குச் சரிப்பட்டு வராது என்பது என் கொள்கை. தமிழைக் கவிதை மொழியாகவே எத்தனை நாள் வைத்திருப்பது?

முதலில் fair என்பதை ஆங்கிலச் சொற்பிறப்பியல் வழி பார்ப்போம்.

O.E. faeger "beautiful, pleasant," from P.Gmc. *fagraz (cf. O.N. fagr, O.H.G. fagar "beautiful," Goth. fagrs "fit"), from PIE *fag-. The meaning in ref. to weather (c.1205) preserves the original sense (opposed to foul). Sense of "light complexioned" (1551) reflects tastes in beauty; sense of "free from bias" (c.1340) evolved from another early meaning, "morally pure, unblemished" (c.1175). The sporting senses (fair ball, fair catch etc.) began in 1856. Fair play is from 1595; fair and square is from 1604. Fair-haired in the fig. sense of "darling, favorite" is from 1909. Fairly in the sense of "somewhat" is from 1805; it earlier meant "totally." Fairway (1584) originally meant "navigational channel of a river;" golfing sense is from 1910. First record of fair-weather friends is from 1736.

இதில் free from bias, morally pure, unblemished, favorite, somewhat, totally என்ற பொருட்பாடுகள் எல்லாம் வழிநிலைப் பொருள்களாய் அமைந்தவை. முதற்பொருள் beautiful என்பதில் இருந்தே கிளைத்திருக்கிறது. beauty / அழகு என்ற கருத்தோ ஒளிநிறைந்த தோற்றத்தில் தான் முதலில் எழுந்தது. ஆழ ஓர்ந்து பார்த்தால் fair என்பதற்கு ஒளிநிறைந்த என்ற பொதிவுப் பொருளே (positive meaning) அடிப்படையாய் இருக்கமுடியும்.

தமிழில் வயத்தல், வியத்தல் என்ற இரண்டு வினைச்சொற்களுமே ஒளிசெய்தல், விளங்குதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். வயங்குதல் என்பதும் கூட ஒளிசெய்தல், விளங்குதல் என்று உணர்த்தும். வய மீன் என்பது உரோகினி நாள்காட்டைச் சுட்டும். ஒளிநிறைந்த மீன் என்ற பொருள்.

ஒரு பெண்ணைப் பார்த்து, "அவள் சிவப்பும் இல்லை, கருப்பும் இல்லை, ஆனால் fair" என்று ஆணாதிக்கக் குமுகாயத்தில், பொதுவாகச் சொல்லும் போது, "முகம் களையாக ஒளிநிறைந்து இருக்கும், நிறம் இங்கே பொருட்டில்லை" என்று தானே வழக்கில் பொருள் இருக்கிறது?

வியத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த வியப்பு என்ற சொல்லும் கூட முகம் மலர்ந்த, ஒளிகூடிய தோற்றத்தையே உணர்த்தும். இனிப் பெருமைப் பொருள் இதனின்று அடுத்துக் கிளைப்பதும் இயற்கை தான், விய, வியல், வியன், வியக்கம் ஆகிய சொற்கள் எல்லாம் பெருமை, சிறப்பு என்ற பொருட்பாடுகளைக் கொண்டு வந்து தரும். கூடவே வியல் என்ற சொல் பொன்னையும் குறிக்கும். வியலன்>வியாழன் என்பதும் பொன்னிற Jupiter யைக் குறிப்பது தான். வியந்துதல் என்பது ஒன்றை விளக்கும் வினையாகி, மேலும் சகரப் போலியில் வியஞ்சுதல் என்றாகி, வியஞ்சகம் என்ற பெயர்ச்சொல்லை "விளங்கும்படி செய்கை" என்று பொருளில் காட்டும். ஒரு பொருளை விளக்கி உணர்த்துவதை வியக்கனம் என்றே தமிழில் சொல்லுவார்கள். வியக்கனம்>வியாக்கணம் ஆகி மேலும் வியாகரணம் என்று வடமொழியில் திரிந்து, விளக்க நூல்களைக் குறிக்கும். நாம் தான் சொற்பிறப்பு தெரியாமல் இதை வடமொழி என்று மயங்கிக் கிடப்போம்.

வியத்தல் என்ற வினையில் எழும் வியவு என்ற சொல் fairness (brightness, beauty) போன்ற பொருட்களைத் தெளிவாகவே குறிக்கும். கீழே பல்வேறு கூட்டுச் சொற்களை வியவு என்ற சொல்லாட்சி வைத்துக் காட்டியிருக்கிறேன். ஆங்கிலத்தில் இப்பொழுது fair என்பதற்கு என்ன பொருளெல்லாம் சொல்லுகிறார்களோ, அதை ஒரே சொல்லால், பெரும்பாலும், கொண்டுவர இயலும். இதில் கட்டற்ற, தளையற்ற என்ற பயன்பாடுகள் அந்த அளவிற்கு வாய்ப்பாக அமையாது.

fair comment = வியவு முன்னிகை
fair competition = வியவுப் போட்டி
fair copy = வியவுப் படி
fair dealing = வியவு அணுகை = வியவணுகை
fair margin = வியவு வரந்தை
fair market value = வியவுச் சந்தை மதிப்பு, வியவு மாறுகடை மதிப்பு
fair play = வியவு ஆட்டம் = வியவாட்டம்
fair price = வியவு விலை
fair rent = வியவு வாடகை
fairs and festivals = வியந்தைகளும் விழவுகளும் (இந்த fair யை காட்சி என்றே தமிழாக்கி வருகிறோம்; என்னைக் கேட்டால் வியந்தை என்றே சொல்லலாம். ஒரு fairக்குப் போனால் அங்கிருக்கும் காட்சிப் பொருட்களைப் பார்த்து வியந்துதானே வருகிறோம்? வியந்தை என்பது ஒரே சொல்லாக சொல்லுதற்கு எளிதாய் அமைந்து விடுமே?)
fair trade = வியவு வணிகம்
fair treatment = வியவு நடத்தை
fair valuation = வியவு மதிப்பீடு
fair wage = வியவுக் கூலி
fair weather = வியவு வானிலை
fairy tale = வியவுக் கதை

ஆக, நீங்கள் கேட்ட சொற்களுக்கு,

fair trade = வியவு வணிகம்
free trade = பரி வணிகம்

என்பதே என் பரிந்துரை.

free trade / fair trade - 1

அண்மையில் நண்பர் ஒருவர் தனிமடலில் free trade, fair trade என்பதற்கான இணைச்சொற்களைக் கேட்டிருந்தார். பின்னால், அவருக்கு மறுமொழித்திருந்தேன். இது பொதுவிலும் பயன் படட்டும் என்ற கருத்தில் இங்கு பதிகிறேன்.

trade என்பதற்கு வணிகம் என்றே சொல்லலாம். free என்பதற்குப் பரி என்றே முன்னால் நான் பரிந்துரைத்திருந்தேன். பலரும் "கட்டற்ற (non-joint), தளையற்ற (non-binding)" என்ற சுற்றிவளைத்த சொற்களைப் புழங்கிக் கொண்டு, பரியைப் புழங்க ஏனோ தயங்குகிறார்கள்; அதே பொழுது ஒரு சிலர் இதை ஏற்றுப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். கட்டு, தளை என்ற சொற்களை அடிப்படையாய் வைத்துக் கொண்டு "அது அல்லாத" என்னும் போது, anti-negative என்ற பயனாக்கம் ஏற்படுகிறதல்லவா? அது மொழி வளர்ச்சிக்குப் பயன் தருமோ? (கிட்டத் தட்ட George Orwell இன் 1984 புதினம் நினைவிற்கு வருகிறது. அதில் இது போன்ற சுற்றி வளைத்த சொற்கள் பலவும் வரும். ஒரு செயற்கை மொழியில் இதுபோன்ற சொற்கள் அமையலாம். அங்கு ஏரணம் மட்டுமே முகன்மை; நளினம் முகன்மையானது அல்ல. மொழி என்பது வெறும் ஏரணமா? ஒரு இயல் மொழியில் நேரடியாக free என்பதைத் சொல்ல வேண்டும் அல்லவா? மூக்கை நேரே தொடாமல் சுற்றிவளைத்துத் தொடுவது என்ன பழக்கம்?) முன்னால் அகத்தியத்திலும், அப்புறம் நண்பர் முகுந்தராசுக்கும் எழுதிய இருமடல்களின் படியைக் கீழே கொடுத்துள்ளேன்.

பரி என்று சொல்லுவதன் காரணத்தை இவற்றின் வழி புரிந்து கொள்ளலாம்.
-----------------------------------------
அன்புள்ள அகத்தியர்களுக்கு,

மரு.செயபாரதி எழுதியிருந்தார்:

"விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. Liberty, Freedom, Independance ஆகியவற்றிற்கும் இடையே வித்தியாசம் உண்டு.
சிந்தனைக்கு...."

சென்ற மடலில் liberal பற்றிய என் முன்நாள் மடலைத் திருப்பி அனுப்பியிருந்தேன். இனித் தொடர்ச்சி.

எழுவரல் என்பது liberal என்பதற்கு ஆவது போல் எழுவுதி என்பதே liberty என்பதற்குச் சரிவரும். இங்கே எழுவுதி என்பது எழ முடிகிற தன்மை; தாழாத தன்மை; யாராலும் தடுத்து நிறுத்த முடியாத தன்மை. ஆனால் இந்தச் சொல்லிற்கு ஈடாகச் சுதந்திரம், விடுதலை என்று பலரும் மாறி மாறிப் பயன்படுத்துகிறார்கள். துல்லியம் கருதினால் சொல்லாட்சிகளை மாற்றவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.

சில ஆங்கில வாக்கியங்களைப் பார்ப்போம்.

I have the liberty to do it.
அதைச் செய்ய எனக்கு எழுவுதி உண்டு.
They lost the liberty and became slaves.
எழுவுதியை இழந்து அடிமைகள் ஆனார்கள்.
Liberty is in-alienable birth right.
எழுவுதி என்பது என்னிடம் இருந்து அயலிக்க முடியாத பிறப்புரிமை.

இனி freedom என்ற சொல்லைப் பார்ப்போம். சொற்பிறப்பியலின் படி,

freedom:

The prehistoric ancestor of free was a term of affection uniting the members of a family in a common bond, and implicitly excluding their servants or slaves - those who were not 'free'. It comes ultimately from Indo -european *prijos, whose signification ' dear, beloved' is revealed in such collateral descendents as Sanskrit priyas ' dear', Russian 'prijatel' 'friend', and indeed English friend. Its Germanic offspring *frijaz, displays the shift from 'affection' to 'liberty,' as shown in German frei, Dutch vrij, Sweedish and Danish fri, and English free. Welsh rhydd 'free' comes from the same Indo-European source.

இந்த விளக்கத்தின் படி "தமிழில் உறவின்முறை என்று தென்மாவட்டங்களில் சொல்லுகிறார்கள் பாருங்கள், அந்த உறவின்முறையில் உள்ளவர்கள் எல்லாம் free; மற்றவர்கள் free இல்லாதவர்கள்". இந்த உறவின் முறையில் உள்ள நம்மவர்கள் எல்லாம் பரிவுள்ளவர்கள்; பரிவுக்கு உரியவர்கள். மற்றவர்கள் பரிவுக்கு உள்ளுறாதாவர்கள். "பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்ற பாட்டை எண்ணிப் பாருங்கள். பரிதல் என்பது உற்றவருக்கு உரியது. இந்தப் பரிவு நம் உறவுக்கும், வகுப்பினருக்கும், இனத்தவருக்கும், மொழியினருக்கும் நாட்டினருக்கும் மட்டும் அல்ல, மாந்தனாய்ப் பிறந்த எல்லோருக்கும் உரியது என்பது இன்றையச் சிந்தனை. இதில் பரியுடைமை என்பதே freedom. (பரிவுடைமைக்கும் பரியுடைமைக்கும் வேறுபாடு கொண்டால் நன்றாக இருக்கும்.) தமிழ் உடைமை கொண்டாடுவது தமிழுடைமை - tamildom; அரசன் உரிமை கொண்டாடுவது அரசனுடைமை - kingdom. இறைவர் எல்லோர் மேலும் உடைமை கொண்டவர் ஆதலால் அவர் உடையார். தஞ்சைப் பெருவுடையார் என்ற சொல்லை ஓர்ந்து பாருங்கள். அதைப் போலப் பரியுடைமை.

"அவனுக்குப் பரிந்து நீ கேள்வி கேட்க வருகிறாயே?" என்றால் அவன் பரியுடைமையை நானோ, என் பரியுடைமையை அவனோ விட்டுக் கொடுக்க இயலாது என்றுதானே பொருள்? "நான் பரியாமல் வேறு யார் பரிவார்கள்? நான் அவன் உறவுக்காரன்; அவன் ஊர்க்காரன்; அவன் நாட்டுக்காரன்; அவன் மொழிக்காரன்; அவனும் மாந்தன் நானும் மாந்தன்" என்று இந்தப் பரியுடைமை நமக்குள்ளே விரியும். பரிதன்மை தான் freeness. பரிதன்மையை உடைமையாகக் கொண்டால் அது பரியுடைமை. இந்தப் பரியுடைமை என்பது நம்மோடு கூடப் பிறந்தது தான். இதைத் தான் விட்ட வெளித் தன்மை என்றும் விடுதலை என்றும் மொழி பெயர்க்கிறோம். ஒருவகையில் அது சரியென்றாலும், அடிப்படைப் பொருளை, விட்ட வெளித் தன்மை / விடுதலை என்பது, தனித்து நின்று, கொண்டு வரவில்லை என்றே நான் எண்ணுகிறேன். ஒரு குறுகிய அரங்கை (range) மட்டும் பார்த்து இந்தச் சொல் 19ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டுகளில் எழுந்திருக்கிறது. குறுகிய அரங்கு என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் விடுதலை எண்ணும் போது நாம் முன்னர் அடைபட்ட நிலை உள்ளே தொக்கி நிற்கிறது. அடைதலைக்குப் புறந்தலையாக விடுதலை என்று எண்ணும் போது ஏதோ ஒரு குறை, ஒரு எதிர்மறைச் சொல் போலத் தொனிக்கிறது. பரியுடைமை என்பது நேரடியாக பரிந்து வரும் போக்கைச் சுட்டுகிறது.

எழுவுதியும் பரியுடைமையும் ஒன்றா என்றால் கிட்டத்தட்ட ஒன்றுதான்; ஆனால் ஒரு நுணுகிய வேறுபாடு உண்டு. எழுவுதியில் தன்முனைப் போக்கு முகமையானது. பரியுடைமையில் சுற்றியிருப்போரையும் கருதும் போக்கு முகமையானது. அடிமைத்தளையில் இருந்து பரியுடைமை நிலைக்கு வருகிறோம். இதைச் செய்ய எனக்கு எழுவுதி வேண்டும். எழுவுதியை நிலைநாட்டி அதன் மூலம் பரியுடைமையை அடைகிறோம்.

அடுத்து independence:

புடலங்காய் பந்தலில் இருந்து தொங்குகிறது.
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தற்கீழ் மாலை மாற்றினர் மன்.

இப்படிச் சொல்லும் போது, பந்தல் என்பது மேலே இருந்து தொங்குகிறது என்று புரிந்து கொள்ளுகிறோம். பந்தல் என்பது காலில் நிற்கலாம். மேலே மோட்டு வளையில் முட்டுக் கொடுத்தும் தொங்கலாம். பந்துதல் என்பதன் அடிப்படைப் பொருள் கட்டுவதே. அந்தக் கட்டுமானத்திற்குப் பெயர் பந்தல்/பந்தர். பந்தர் என்பது ஒலை, துணி, தகரம் எனக் கட்டும் பொருளுக்குத் தக்க அசையும்; ஆடும்; உயரும்; தாழும். இத்தகைய இயக்கம் மேலும் இல்லாமல், கீழும் இல்லாமல் நடுத்தர நிலையில் இருப்பதால் அது பந்தரித்தல் என்றும் பந்தரம் என்றும் பின்னால் அந்தரம் என்றும் உருத் திரியும். பந்தப் படுவது என்பது கட்டப் படுவதே. ஒன்றைச் சார்ந்து அல்லது அடுத்து, பந்தப் படுவதே depend எனப்படுகிறது. அதாவது பந்தடுத்து அல்லது பந்தப்பட்டு நிற்பது என்பதே இந்த depend என்ற நிலை. பந்தப்பட்ட நிலை என்பது dependent status. பந்தப்படா நிலை = independent status. அதாவது இன்னொன்றைச் சாராநிலை. இதைத் தன்காலிலே நிற்கும் நிலை என்று பொருள் கொண்டு வடமொழி வழியே சுவ தந்திரம் என்று மொழிபெயர்த்தார்கள். தனிப்பட்ட, தனிநிற்றல், தன்னாளுமை என்றே நல்ல தமிழில் இதை மொழிபெயர்த்திருக்கலாம். வெறுமே independent என்று சொல்வதில் பொருள் வராது. independent of what என்ற கேள்வி உடனெயெழும். பல இடங்களில் இதற்கான விடை தொக்கி நிற்கலாம். இப்படித் தொக்கி நிற்கும் இடங்களில் விடுதலை என்பது சரியாக அமையக் கூடும்.

சில ஆங்கில வாக்கியங்களைப் பார்க்கலாம்.

India became independent in August 15, 1947.

இங்கே independent of British rule என்பது தொக்கி நிற்கிறது. எனவே இந்தியா 1947 -ல் ஆகசுடு 15 -இல் விடுதலை அடைந்தது என்று சொல்லலாம். அல்லது 1947- ஆகசுடு 15- இல் பந்தம் விடுத்தது என்றும் சொல்லலாம்.

There are 4 independent producers other than the MNC's for this drug in India.
இங்கே விடுதலையும் சரிவராது; சுதந்திரமும் சரி வராது. தனித்த, தனிப்பட்ட, சாராத, பந்திலாத போன்றவைதான் சரி வரும். தனிப்பட்ட/ தனித்த என்பது மிகச் சரியாகப் பொருந்தும். "இந்தியாவில் இந்த மருந்திற்கு பன்னாட்டுக் குழுமங்களைத் தவிர்த்து 4 தனித்த விளைப்பாளிகள் உள்ளனர்."

independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

freedom என்பதற்கும் independence என்பதற்கும் ஒற்றுமைகள் நிறைய இருந்தாலும் நுணுகிய வேறுபாடும் உண்டு.

காட்டாகப் பரியுடைமை என்பது இனி இந்தியாவைப் பொறுத்த வரையில் எதிர்காலத்துக்கும் உண்டு; அதை எந்நாளும் கையாளலாம்; கூடவே அதைக் காப்பாற்ற வேண்டும். தன்னாளுமை என்பது வந்து சேர்ந்து விட்டது. இனி இழக்காத வரையில், அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்.

இதுவரை கூறிய விளக்கங்கள் போதும் என்று எண்ணுகிறேன். துல்லியம் கருதி கீழ்க்கண்ட சொற்களைத் தமிழில் புழங்கலாம் என்பது என் பரிந்துரை.

Liberty = எழுவுதி
freedom = பரிவுடைமை
independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

அன்புடன்,
இராம.கி.

Tuesday, June 19, 2007

தாலி - 4

இவ்வளவு நீண்டு, மங்கலம்/மஞ்சள் பற்றி முன் இடுகைகளிற் பேசிய நாம், அடுத்து, ஒளிப்பொருள் கொடுக்கும் வேர்ச்சொற்கள் ஆன "கொல், பொல், இல், எல், அல், ஒல், சுல், முல், வல்" போன்றவற்றையும், அவற்றில் இருந்து கிளைத்த நூற்றுக் கணக்கான சொற்களையும், முன்பு நான் எழுதிய கொன்றை பற்றிய கட்டுரையில் காணலாம்.

அந்த வரிசையில் துல் என்னும் வேரை அங்கு சொல்லாது விட்டிருந்தேன். இப்பொழுது அதைப் பார்ப்போம்.

புல் (>புலம்) என்பது போல துல் (>துலம்) என்பது ஒளியைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல் தான். துலமெனும் பெயர்ச்சொல்லில் இருந்து மேற்கொண்டு உருவான துலங்கல் என்னும் வினைச்சொல்லும் ஒளி தெரியும் நிலையைத் தான் உணர்த்துகிறது. கரிதட்டிப் போன ஏனத்தைக் கழுவி விளக்கித் துலக்குவது அதைப் பளிச்சென்று ஒளி நிறைந்ததாய் ஆக்குகிறது அல்லவா? துலக்குதல் என்பது துலங்குதலின் பிறவினை. துலங்குதல் என்ற வினைச்சொல் துளங்குதல் என்றும் திரிந்து ஒளி தரும் செயலைக் குறிக்கும். கேட்டை என்ற நாள்மீனைத் துலங்கொளி (எடுப்பாகத் தெரியும் ஒளி) என்று அகரமுதலிகள் கூறும்.

துளங்கின் திரிவாகத் துளங்கு>தளங்கு>தயங்கு>தயக்கம் என்ற அளவில் விளக்கம் எனும் பொருளை உணர்த்தும். துள் எனும் வேரின் நீட்சியாய் துள்>(தள்)>தளவு>தளவம் என்ற சொல் செவ்வரி படர்ந்த செம்முல்லையைக் குறிக்கும். (இப்பொழுதெல்லாம் சென்னையில் முல்லை என்றால் செம்முல்லை தான் கிடைக்கிறது. வெண்முல்லை கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.)

துல் என்னும் வேரில் இருந்து துல்குதல்>துகுதல்>தகுதல் என்ற திரிவில், சொலிக்கின்ற தன்மையைச் சுட்டுவார்கள். "தகதக என்று சொலிக்கிறது" என்பது பேச்சு வழக்கு. "தளதள" என்பது கூட, சொலிக்கும் தன்மையைக் குறிக்கும். "அவள் உருவம் தளதள என்று இருந்தது."

தகுதல்>தகுத்தல்>தகித்தல் என்பது சுட்டு எரிக்கும் வினையைக் குறிக்கும். தகித்தல் என்பது இன்னும் சற்றே திரிந்து தவித்தல் என்று ஆகி, ஈரம் உலர்ந்து போய் ஏற்பட்ட தொண்டையில் ஏற்படும் வறட்சியைக் குறிக்கும்.

தகுவின் நீட்சியாய் தகு>தங்கு>தங்கம் என்ற பொருள் ஒளி பொருந்திய மஞ்சள் நிற மாழையைக் (metal) குறிக்கும். தகுவின் நீட்சியாய் தகை என்ற சொல் உருவாகி விளக்கம், அழகு என்ற பொருளைக் கொடுக்கும்.

அழகு என்பதுகூட ஒளி, மஞ்சள் ஆகியவற்றின் பின்புலத்தைக் குறிக்கும் ஒரு சொல் தான். [கொன்றை பற்றிய என் முன்னாள் கட்டுரையில் அல்>அலங்கல் என்றசொல் ஒளி விளக்கத்தைக் குறிப்பதையும், அலங்கல்>அலங்காரம் போன்ற சொற்கள் ஒளிநிறைந்த சோடிப்பைக் குறிப்பதையும், அல்> அழு> அழல் என்பது நெருப்பைக் குறிப்பதையும், அல்> அழு> அழுகு என்ற வினைச்சொல் அப்புவதைக் குறிப்பதையும், அழுகு> அழகு = மஞ்சள் பூசியது என்ற பொருளையும் விளக்கியிருப்பேன். அழுகு>அழுக்கு என்ற நீட்சி அப்படியே எதிர்ப்பொருளைக் கொண்டுவருவது அப்பிக்கிடக்கும் செயலால் தான்.

பொதுவாக, 'அழகு என்றாலே ஒளி விடுவது போல் bright -ஆக இருக்க வேண்டும் என்று தமிழர் எதிர்பார்க்கிறார்' என்றும், 'beauty என்பதை அப்படித்தான் தமிழ் மக்கள் புரிந்து கொள்கிறார்' என்றும், 'அழகிய முகம் என்ற கூட்டுச்சொல்லின் முன்னொட்டான அழகிய என்பது ஒரு வினைச்சொல்லச் சுட்டவேண்டும்' என்றும், 'அவ் வினைச்சொல் அழகுதல் என்றே அமையும்' என்றும், 'அச் சொல்லுக்கு மஞ்சள் பூசுதல் என்ற பொருளே அமைய முடியும்' என்றும், 'மஞ்சளைப் பூசிக்கொண்டால், அதை அழகாகத் தமிழர் கருதிக் கொள்கிறார்' என்றும் அக்கட்டுரையில் சொல்லியிருப்பேன்.]

இனித் துல்குதல்> துகுதல் என்பதன் நீட்சியாய், (துகு)> (திகு)> திகழ் என்ற சொல் திங்கள், நிலாவைவைக் குறிப்பதையும் ஓர்ந்து பார்க்கலாம். திகு> திங்கு> திங்கள் என்ற சொல் கூட ஒளிநிறைந்த நிலவைக் குறிக்கும் முகமாக எழுந்தது.

தமிழர் வானியல் வழி அறிந்த இன்னொரு செய்தியையும் இங்கு குறிப்பிட வேண்டும். அமைந்த கணக்கின் படி, சந்திரமான மாதங்கள் அமையுவாவில் (அமாவாசையில்) தொடங்குகின்றன. அமையுவாவில் இருந்து பூரணை (பௌர்ணமி) வரை உள்ள காலத்தைச் சொக்கொளிப் பக்கம் (சுக்ல பக்ஷம்) என்றும், பூரணையில் இருந்து திரும்பவும் அமையுவா வரும்வரை உள்ள காலத்தைக் கருவின பக்கம் (க்ருஷ்ண பக்ஷம்) என்றும் நம்மூரில் அழைப்பார். மேலும், ஓர் ஆண்டைச் சூரியமானத்தில் அறவட்டாக 12 பகுதியாய்ப் பகுத்தது போல நிலவுபோகும் வட்டப் பாதையையும் அறவட்டாக 30 பகுதியாகப் பிரிப்பார்கள். இதில் ஒவ்வொரு பகுதியும் 12 பாகை கொண்டது.

இப்படிப் 12 பாகையாய்ப் பிரித்த ஒவ்வொரு பகுதியிலும் நிலவு ஒவ்வொரு தோற்றம் காட்டித் திகழ்கிறது, அல்லது ஒளி தருகிறது. இப்படி ஒளி தரும் பகுதிகளுக்குத் தமிழில் திகழிகள் என்று பெயர். திகழி மறுவித் திகதி ஆகி, அது இன்னும் திரிந்து, வடமொழியில் திதி என்று சொல்லப் படும். சந்திர மானக் கணக்கின் படி நிலவின் சுற்று என்பது 30 திகழி/ திகழ்தி/ திகதி/ திதி கள் அடங்கியது. ஒரு சூரிய மான மாதத்திற்கும் கிட்டத்தட்ட 30 நாட்கள் என்னும் போது, பெயர்ப் பிறழ்ச்சியில் திகதி தேதியாகி சூரிய மானத்து நாட்களையும் குறிக்கத் தொடங்கிற்று. ஈழத்தார் இன்னும் திகதி என்ற சொல்லைக் காப்பாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் தேதி என்றே சொல்லிவருகிறோம். ஈழத்தார் சொல் இல்லையேல், இச் சொற்பிறப்பை நாம் கண்டறிந்திருக்க முடியாது.

திகழி, திகதி, திதி = ஒளி நிறைந்த சந்திரமான நாள்.
திகழ்தல் = ஒளி தருதல்.

திகழ்தல் என்ற சொல் *துகு என்ற சொல்லடியில் இருந்தே கிளைத்திருக்க முடியும். இனிக் ககர, வகரப் போலியில் துகு என்ற சொல்லடி துவு என்று ஆகிக் கீழே உள்ள சொற்களை உருவாக்கும்.

துவர் = சிவப்பு (துவரம் பருப்பு = சிவப்புக் கலந்த மஞ்சள் பருப்பு)
துவரி = காவி, இலவம் பூ
துவரித்தல் = செந்நிறம் ஊட்டுதல்
துவரை = செம்பயறு
துவரை>தோரை= செங்காய்ப்பனை, அரத்தம்
துவர்>தோர், நெய்த்தோர் = அரத்தம்
துவர்>துகிர் = பவழம்
துவள்>துவண்டை = காவியுடை

துல் என்னும் வேர் ஒளிகூட்டுவதைச் சொல்ல இன்னொரு திரிவையும் உன்னித்துப் பார்க்கலாம்.

துல்>தெல்>தென்>தென்படுதல் = தெரிதல்
துள்>தெள்; தெள்ளுதல் = விளங்குதல்; தெளிவு = விளக்கம்
துலம்>துலவம் = பருத்தி
தெளிதல்>தெரிதல்

தெல்லில் தோன்றிய சொற்கள் ஏராளம். அவை எல்லாவற்றிலும் ஒளி எனும் கருத்து உள்ளூடி நிற்கும்.

இச்சிந்தனையில் எண்ணிப் பார்த்தால், துல்> துகு> தகு> தகல் எனும் சொல் அகரமுதலிகளின் படி, ஒளிப் பொருளை உணர்த்துகிறது. மேலும் தகல்தல் என்று சொல்லுக்கு ஒளிதல் மட்டுமல்லாது எரிதல் என்ற பொருளும், முன்னே சொன்ன தகதக என்ற புடைப்புச் சொல்லால் சுடுதல் பொருளும் இருக்க வேண்டும். [தகல்தலின் நீட்சியாய் உள்ள தகல்நம்>தகனம் என்ற பெயர்ச்சொல் எரிதலைக் குறிக்கிறது.]

தமிழில் நூல்கள் அழிந்து போனதன் குறைவே இதுதான். ஏரண அறிவோடு பார்த்தால் தோன்றும் பொருட்பாடுகளில், இங்கொரு வினைச்சொல்லும், அங்கொரு பெயர்ச்சொல்லுமாய் இடைவெளி விட்ட சொற்களே தென்படுகின்றன. அதைவைத்தே, தமிழில் "இது கிடையாது, அது கிடையாது" என்று சொல்லப் புகுந்து விடுகிறார் மொழி புரியாத சிலர். வெள்ளத்திற்கும், நெருப்பிற்கும், சிதலுக்குமாய் நம் நூல்களைப் பறிகொடுத்து, இன்று ஒவ்வொன்றிற்கும் ஆழ்ந்த ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. மொழியாய்வு என்பது மொழி அகழாய்வாகவே சிலபோது ஆகிப் போய்விடுகிறது.

இனிப் பகல்>பால் ஆனது போல, அகல்>ஆல் ஆனது போல, மகன்>மான் (மகள்>மாள்) ஆக முடிவது போலத் தகல்>தால் என்றும் ஆக முடியும். தகல் என்னும் ஒளிப்பொருள் தாலுக்கும் வந்து சேரும். தாலின் பலுக்க வேறுபாடான "டால்" என்னும் ஒலிக்கூறு இன்றைக்கும் இந்தியப் பேச்சில் ஒளி என்ற பொருளைத் தருகிறது அல்லவா? "அந்தச் சங்கிலியைப் பாரேன்! டாலடிக்கிறது" எனும்போது ஒளிகூடிச் சிறக்கின்ற நிலையைத் தானே குறிக்கிறோம்? (ராரீரோ என்னும் ஒலிக்கூறு தாலேலோ என்று திருந்திய தமிழில் ஆகித் தாலாட்டைக் குறிப்பது போல், டால் என்னும் ஒலிக்கூறு தால் என்னும் நல்ல தமிழ்ச்சொல்லை நமக்கு உணர்த்தலாம்.)

தால் என்ற சொல் தால் என்னும் இயல்பையும் (மஞ்சள் நிறம்), தால் எனும் இயற்பொருளையும் (மஞ்சள் பொருள், பொன் போன்றவை) குறிக்கலாம். இனி, வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலி. மீண்டும் சொல்கிறேன்; இத் தாலி பொன்னாய் இருக்கவேண்டியது அல்ல. ஒளிநிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.

தகல்>தால்>தாலி

தகல்>தால் என்று சொல்லுதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தாலின் நீட்சியாய் எழுந்த தாழ் என்ற சொல், தாழம்பூ என்ற மஞ்சள் நிறப் பூவை நம்முன் கொண்டுவந்து சான்று கூறும். தகதக, தங்கம், தகை, திகழ்தல், திகழி, திங்கள், துவு வழிச் சொற்கள், தெல் வழிச் சொற்கள், தாழம்பூ ஆகியவற்றை ஒருங்குற எண்ணிப் பார்த்தால் தால் எனும் சொல் தமிழில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். டால் எனும் பலுக்கற் பிறழ்ச்சி கூடத் தாலைத் தான் குறிக்கிறது என்றும் சொல்ல முடியும். ஏரணவியலின் துணைப் படி ஆய்ந்துபார்த்தால், தாலி என்பது மஞ்சள்பொருள் கட்டிய கயிறு என்றே பொருள் கொள்ள முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, June 15, 2007

தாலி - 3

சரி, மஞ்சள் என்ற கருத்துப் புரிகிறது, மஞ்சட்பொருள் திருமணத்தில் எப்பொழுது வந்தது?

முன்சொன்னது போல், இக்காலத்தில் நாம்காணும் தாலிகட்டுப் பழக்கம் தமிழருள் எப்போது ஏற்பட்டது என உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. (கிடைத்திருக்கும் சான்றுகளைப் பார்த்தால், பெரும்பாலும் சங்கம் மருவிய காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். அதுபற்றிக் கீழே பார்ப்போம்.)

சிலம்பில் வரும் மங்கலவாழ்த்துப் பாடல் என்னும் முதற் காதையே "மங்கல வாழ்த்து" என்ற சொற்றொடரால் "திருமண வாழ்த்தை"த்தான் குறிக்கிறது. குறிப்பாக, மங்கலம் என்றசொல் இங்கு திருமணத்தையே குறிக்கிறது. சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில்,

"முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது"

என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருகிறது; அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். "முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்தது" என்று உணர்த்துகிறார்.

[19ம் நூற்றாண்டு வரையிலும் நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுதில்லை. இன்றைக்கு இருக்கும் காலைநேரத் திருமண நடைமுறை 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதே! தவிரவும் திருமணங்கள் பெரும்பாலும் பூரணையும் (பௌர்ணமி), சகட நாள்காட்டும் (உரோகிணி நட்சத்திரம்) கூடிய இரவில்தான் நடந்தன. (நிலா வெளிச்சத்தில் வெண்குடைகள் எழுவது அலங்காரமாய் தோற்றமளிக்கும்.]

அது என்ன, மங்கல அணி என்ற சொல்லாட்சி? அது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிய மிஞ்சிக்கிடக்கும் இன்றையப் பழக்கம் தெரிந்தால் போதும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு திருமணத்திலும், "கெட்டிமேளம், கெட்டிமேளம்" என்ற குரலெழுந்து மேளமதிர்ந்து, சில இடங்களில் சங்கு முழங்கி [குறிப்பாகச் சிவகங்கைப் பக்கம் சில ஆண்டுகள் முன்பு வரை சங்கு முழக்கம் திருப்பூட்டும் போது (தாலிகட்டும் போது) இருந்தது], அரசாணைக் காலுக்கு அருகில் எல்லோரும் எழுந்து நிற்க, வந்தவர் தொட்டு வாழ்த்தப் பெற்ற தாலி, அகலுள் எழத் தான் செய்கிறது. (அகல் = hall; இதற்கு அப்புறமும் தமிழ் இந்தியிரோப்பியனுடன் தொடர்பற்றது என்று சொல்வது எனக்குச் சரியென்று தோன்றவில்லை.) 

எனவே, சிலம்பில் மங்கல அணி என்றசொல் தாலியைத்தான் மிகத் தெளிவாகக் குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. அப்புறம் தாலி என்ற சொல் வரவில்லையே என்று சிலர் கேட்கக்கூடும். "தாலி என்ற சொல்லால் குறித்தால் தானா? அதை வேறுசொல் கொண்டு குறிக்கக்கூடாதா, என்ன?" என்பதே நம் மறுமொழி. 

தாலிப் பழக்கம் கி.பி. 100/150 அளவில் இருந்திருக்கிறது என்று சிலம்பை வைத்து அறுதியிட்டு உரைக்க முடியும். அச்சில் உய்வு (printed salvation) தேடும் வறட்டுக்காரரைத் தவிர மற்றவர் இந்த உண்மைப் பொருளை நன்றாய் உய்த்துணர்வார். [அதேபொழுது, சிலம்பில் குறிக்கப்படும் மேட்டுக்குடித் திருமணம் தமிழர் வழக்கத்தையும், ஆரியர் வழக்கத்தையும் கலந்து விரவியே குறிக்கிறது என்பதையும் இங்கு அழுத்திச் சொல்ல வேண்டும்.]

அடுத்த மங்கல அணி என்பது மனையறம் படுத்த காதையிலும் பேசப் படுவதைச் சொல்லலாம். நகரத்தார் வழக்கத்தில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது ஓரோவழி மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார். இப்படித் தனிக் குடித்தனம் வைத்தலை "வேறு வைத்தல்" என்றும் சொல்வார். இளங்கோவடிகளும் கூட "வேறு வைத்தல்" என்ற சொல்லாட்சியையே சிலம்பில் ஆளுகிறார். மகனைப் பெரிய வீட்டில் (பெற்றோர் வீட்டில்) இருந்து வேறு வைத்தலைத் தான் "மனையறம் படுத்தல்" என்று சொல்வார்.

மனையறம் படுத்த காதையில் "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே" என்றெல்லாம் கோவலன் சொல்லுவதைப் பலரும் ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார். அது தவறு. அந்த உரை வேறுவைக்கும் சடங்கு நடைபெறுவதற்கு முதல்நாள் இரவு நடந்ததாகும். அந்த ஓராண்டில் அவருக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில்தான், கோவலன் கண்ணகியைப் பலவாறு பாராட்டுகிறான். அப்படிப் பாராட்டுவதில் கீழே வருவதும் ஒரு பாராட்டாகும்.

நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்

"மணம்வீசும் மலர்சூடிய பெண்ணே! உன்நலம் பாராட்டுவோர், குறையில்லாத மங்கல அணியைத் தவிர வேறு அணி சூடவில்லையே, அது எதனால்?"

என்று கேட்கிறான். வேறொன்றும் இல்லை; பல்லாண்டு மங்கலமாய் வாழ்ந்து பலபேறும் பெற்ற வாழ்வரசிதான் தனித்துவாழப் போகிறவளை வாழ்த்த வேண்டும் என்பது மரபு. இங்கும் மங்கல அணி என்பது தாலியையே குறிக்கிறது. இக்காலத்தில் சுமங்கலி என்ற இருபிறப்பிச் சொல்லால் இது போன்ற வாழ்வரசிப் பெண்ணைக் குறிப்பார். சிவ மங்கலி என்னும் நல்ல தமிழ்க்கூட்டுச் சொ தான் திரிந்து சுமங்கலி என்றாகி வடமொழியாய்ப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. இன்றும் இறைவியின் முன்னிலையில் பெற்ற குங்குமத்தைத் தாலியின் மேல் இட்டுக்கொள்ளும் பழக்கம் தமிழ்ப் பெண்களுக்கு உண்டு. குங்குமம் பொற்றாலியில் ஒட்டாது; ஆனால் மஞ்சள் பொருளில் நன்றாய் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது அது சிவமங்கலியாய் ஆவதில் வியப்பொன்றும் இல்லை.

இன்னும் பார்த்தால், மங்கலம் என்ற சொல் சிலம்பு 5:146, 151 வரிகளிலும் பயில்கிறது. இனி நடுகற் காதையில் வேண்மாளைக் குறிக்கும்போது வரும் வரிகளைப் (சிலம்பு 28:51) பார்க்கலாம்.

தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணம் காணிய வருவழி

வதுவை வேண்மாள் என்பது வதுவுற்ற அரசி வேண்மாளைக் குறிக்கிறது. வதுவை = wedding; இங்கே வதுவுற்ற என்பது wedded என்ற வினைச்சொல்லைக் குறிக்கிறது. மங்கலமடந்தை என்ற பெயர்ச்சொல் கண்ணகியைத் தான் குறிக்கிறது. "நிலவு எழுந்தபொழுதில் பொன்மாளிகையில் உள்ள புனைமணி அரங்கின் ஊடே மங்கல மடந்தையைக் காணவரும் வழியில்" என்ற பொருளை இங்கு கொள்ளவேண்டும்.

ஆகக் கணவன் இறந்தபின்னும் கூடக் கண்ணகி மங்கல மடந்தை என்றே சிலம்பிற் சொல்லப் பெறுகிறாள். இன்றைக்கும் கேரளத்தில் கண்ணகி கோயில் மங்கலதேவிக் கோயில் என்றே சொல்லப்பெறுகிறது. "கணவன் இருப்பதால் தான் மங்கலச் சிறப்பு" என்ற முட்டாள் தன மூதிகங்களைக் குறிக்காமல், இங்கு தனித்த முறையில் மங்கல மடந்தை என்று கண்ணகி சொல்லப்பெறுவது முற்போக்காளர் சிந்தனையில் தைக்கவேண்டும். மங்கல வாழ்வு என்பது, முழுமைபெற்ற வாழ்வு, அவ்வளவு தான். பொதுவாய் வேறு வைத்துத் தனிக்குடித்தனம் நடத்தும் எந்தப் பெண்ணுக்கும் குமுகத்தில் தனி ஆளுமை கிடைத்துவிடுகிறது. அப்படி ஆளுமை கிடைத்த எவளும் மங்கல மடந்தை, வாழ்வரசி என்றே அழைக்கப்படுவாள். (இன்றைக்கு முட்டாள் தனமாகக் கணவனை இழந்தோரை வாழ்வரசு அல்லாதவள் என்று கூறினாலும்) பழைய புரிதலில் கண்ணகியும் மங்கல மடந்தையே. (இச் சொல்லாட்சி சிலம்பு 28:51, 30:53, 50:88 ஆகியவற்றிலும் பயிலும்.) நிறைவு வாழ்க்கையை கண்ணகி நடத்தியதை மனையறம் படுத்த காதையின் முடிப்பு வரிகளில்,

"வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பருங் கேண்மையொடு அறப் பரிசாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்
காண் தகு சிறப்பில் கண்ணகி தனக்கென்"

என்று சொல்லி யாண்டு சில கழிந்ததை இளங்கோ உணர்த்துகிறார். இன்னொரு சொல்லாட்சியாய் நீர்ப்படை காதையில் (27:163) மாடலன், மங்கல மறையோன் என்று சொல்லப் பெறுவான்.

எங்கோ வேந்தே வாழ்கென்று ஏத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்

இன்றைக்கும் பெருமானரில் 2 வகையை இனங்காட்டுவார். ஒருவர் மந்திரங்களிலும், வேள்விகளிலும் தேர்ந்தவர், இன்னொருவர் தந்திரங்களில் (கோயில் பற்றிய புரிசைகளில்) தேர்ந்தவர். முதல்வகை ஆளே இன்றைக்கும் திருமணங்களின் ஊடே வரும் பார்ப்பனராவார். இரண்டாம் வகையைச் சேர்ந்த தந்திரி, ஓரோ வழி முதல் வகையாருக்கு உதவிசெய்யும் தோதாய் வரக்கூடும். இருந்தாலும் முதல் வகையாரையே, பெருமானர் சடங்குகள் நடத்த நாடுவர். மாடலன் முதல்வகை மறையவன்; அவன் மங்கல மறையோன் = மங்கலக் காரியங்களை நடத்திவைக்கும் பார்ப்பனன் என்றே சொல்லப் படுகிறான். அதாவது "கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்து வைக்கும் வாத்திமார்".

மங்கல அணி என்ற தமிழ்க் கூட்டுச்சொல் மங்கலம்> மங்கல்யம்> மாங்கல்யம் என்று சுருங்கிப்போய் இருபிறப்பியாய் மாறியது.  இதுவொன்றும் வியப்பான செயல் அல்ல.

{காட்டாக, "ஜல சமுத்ரம்" என்ற இருபிறப்பிச் சொல் இன்று "சமுத்ரம்" என்று சுருங்கச் சொல்லப் பட்டு பொருள் புரிந்துகொள்ளப் படுகிறது. சமுத்ரம் என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பை அறியத் தமிழில் வராமல் முடியாது. கும்> கும்முதல்> குமிதல் என்ற தமிழ்வினையடி சேருதல் பொருளைத் தரும். குமிதல் தன் வினை. குமித்தல் பிறவினை. குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்து வைத்ததைக் குறிக்கும் பெயர்ச்சொல். தென்மொழி/வடமொழிப் பரிமாற்றங்களில் (இவை இரு வழிப் பரிமாற்றங்கள்; ஒரு வழி மட்டுமே அல்ல.) குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம்முடைய குமுகம் அவருடைய சமுகமாக உருமாறும். அப்படித் தான் குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம்போல ரகரம் ஊடுருவி சமுத்ரமாகும்.

இனி, ஜலம் எனும் சொல்லும் தமிழ்மூலம் காட்டும். சலசல என்று ஓசை எழுப்பும் நீர் சலம்> ஜலம் என்ற பெயரைக் கொள்ளும். (இது போன்ற ஓசை வழிச் சொற்கள் பல மொழிக்குடும்பங்களிலும் காணக் கிடைக்கும். ஒரு குடும்பம் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.) ஜலம் எனும் சொல்லும் சமுத்ரம் எனும் சொல்லும் சேர்ந்து வடமொழியில் ஜலசமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லை உருவாக்கும். நாளாவட்டத்தில் புழக்கத்தின் காரணமாய் ஜல என்பது தொகுக்கப்பட்டு சமுத்ரம் மட்டுமே தனித்து நின்று, கடலைக் குறித்தது. ஜல சமுத்ரம் போல ஜன சமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லையும் ஊன்றிக் கவனியுங்கள். 

அன்புடன்,
இராம.கி.

தாலி - 2

இனி மகாவின் முதற் கூற்றுக்கு வருவோம்.

1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.

வேர்ச்சொல்லை இனங்காண்பது ஒருவேளை பேரா.தொ.பரமசிவனுக்கு வாய்க்காது போயிருக்கலாம். ஆனால் ஆய்வு அவரோடு நின்றுவிடுவது இல்லை. அவருக்கு அப்புறமும் நடக்கும். தாலிப்பழக்கம் தமிழரிடம் ஆழ்ந்து காணப்படுகையில், அதன்வேர் தமிழரிடமின்றி, வேற்று மொழியினரிடம் இருக்குமோ? கொஞ்சம் ஆழப்போனால், தாலியின் வேரை தமிழிலேயே அடையாளம் காணமுடியும். அதற்குத் தேவையானது, நம் மரபுகளைப் புரிந்து கொள்ளுவதே!

தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவதும் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத்தான் விரலிமஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள், விரலிமஞ்சள் ஆகும். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்.) தாலியின் சூழ்க்குமம் "மஞ்சள், கயிறு, கட்டுதல்" ஆகியவற்றில் அடங்கியுள்ளதே ஒழிய, பொன், பணம், சங்கிலியில் அல்ல.

அப்படி என்ன, திருமணத்தில் மஞ்சளுக்கு முகன்மை வந்தது, என்பது புரிய வேண்டும்? அவ்வளவுதான்.

மஞ்சளுக்கும் திருமணத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு தமிழர் மரபில் என்றென்றும் உண்டு. மல் என்னும் வேரில் கிளைத்த மல்குதல் என்ற சொல்லிற்கு பொலிதல் (to become fertile), அதிகப் படுதல் (to grow, to increase) என்ற பொருளுண்டு. மல்>மலர்>மலர்தல் என்ற வளர்ச்சியில் பொலிவு, பூ விரிதல் என்ற பொருட்பாடுகள் வந்துசேரும். அதுமட்டுமல்ல. "பொன், உலோகத்தைக் குறிக்கும் மாழை, மாடை" என்ற சொற்களும் கூடப் பொலிவுப் பொருளில் கிளைத்தவை தான். கத்தூரி மஞ்சளைக் குறிக்கும் சொல்லான மாளம் கூட இந்த வழி வந்தது தான்.

மல்>மால்>மாழை = பொன், உலோகம்
மல்>மள்>மளி>மளிகாரம் = வெண்காரம்
மள்>மண் = புழுதி, சுண்ணச் சாந்து, தரை
மள்>மாள்>மாளம் = கத்தூரி மஞ்சள்
மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்
மாடு>மாடை = பொன், அரை வராகன், உலோகம்

மல்கின் விரிவாய் எழுந்த மலிகுதல் என்ற சொல்லும் பெருகுதற் (to grow) பொருளைக் குறிக்கும். மல்கு>மலுகு>மலிகு= பெருகுதல்

அடுத்து மங்கல் என்ற சொல் எழுந்ததும் இதே வழியில் தான். இருள் மிகுந்த பின்புலத்தில் ஒளிபாய்ந்து பெருகும்போது அது மங்கலாய்க் காட்சியளிக்கும்.

மலிகு>மலிங்கு>மயிங்கு>மய்ங்கு>மங்கு>மங்கல் என்ற சொல் மங்கல் ஒளியைக் குறிக்கும்.

மங்கலின் திரிவே தமிழர் மரபில் மஞ்சள் நிறமாகும். மங்கல்>மங்கள்>மஞ்சள் = நிறம், மஞ்சள் பொருள். ஙகர, ஞகரப் போலி என்பவை தமிழில் மிகுதியானவை. மங்கலின் இன்னொரு வளர்ச்சி அம் என்னும் பெருமை விகுதியைப் பெற்று மங்கலம் என்றாகும். மங்கல்>மங்கலம் = சிறப்பான நிகழ்வு, பொலிவு. மங்கலமான மணப்பருவம் எய்திய பெண்ணைக் குறிக்கும் சொல்லான மங்கையும் கூட மங்கு என்ற சொல்லிலிருந்து தோன்றியது தான். மங்கு>மங்கை = மங்கல(மாகிய மண)ப்பருவம் அடைந்த பெண்.

நாம் செவ்வாய் என்பது, வடவர் கணிப்பில் மஞ்சள் தோற்றமே காட்டும். (மஞ்சட்பொருள் காடித்தன்மையில் (acidic nature) மஞ்சள்நிறம் காட்டுவதும், களரித் தன்மையில் (alkaline nature) சிவப்புநிறம் காட்டுவது இயற்கையறிவு. காடி சேர்த்த மஞ்சள் பொற்சுண்ணம் என்று சொல்லப் படும்; பெருமாள் கோயில்களில் தாயார் முன்னிலையில் பொற்சுண்ணம் கொடுப்பார்; களரி சேர்த்த மஞ்சள் குங்குமம் எனப்படும். அதை ஆண்டாள் முன்னிலையில் கொடுப்பார்.) மங்கலம்> மங்கல வாரம் = வட மொழியில் செவ்வாய்க் கோள் (மங்கல் என்பது இங்கே சிவப்பு என்ற பொருளில் வந்திருக்கிறது.)

மங்கலத்தின் இன்னொரு நீட்சி மங்கலம்> மங்கல்யம்> மங்கலியம் = பொன்; மங்கலியம்> மாங்கலியம் = பொன்னாலான தாலி, மஞ்சள் நிறைந்த தாலி

மஞ்சள் எனும் சொல் கீழ்க்கண்டவாறு இன்னும் திரியும்.

மஞ்சள்>மஞ்சுளம் = அழகு
மஞ்சு>மஞ்சுதல் = மஞ்சள் நீரால் முழுக்காட்டுதல்
மஞ்சுதல்>மஞ்சனம் = நீராட்டு. (பெருமாள்கோயிலில் திருமஞ்சனம் என்றே சொல்வார்; சிவன்கோயிலில் இது அப்பு இழிகம்> அப்பிஷேகம் > அபிஷேகம் என்று வடமொழிப்படுத்தி ஆளப்படும். தமிழர் வழக்கில், அகவைக்கு வந்த பெண்ணுக்குச் செய்யும் நீராட்டும் மஞ்சள் நீராட்டு என்றே சொல்லப்படும். தென்பாண்டி நாட்டில் இச்சடங்கு இன்றும் பெரிதாய்க் கொண்டாடப்படுவதே.)
மஞ்சுதல்> மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீராட்டுதல், அலங்கரித்தல்
மண்ணுநீர் = மஞ்சன நீர்
மண்> மணிகம் = நீர்க்குடம்
மணம் = கல்யாணம்

என்ற சொற்கள் எல்லாமே மஞ்சளை உணர்த்தும். இக்காலத்தில் மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலிகட்டுவது தான் கல்யாணம் என்று நாம் நினைத்துக் கொண்டு உள்ளோம். ஆனால், சங்க காலத்தில், அப்படியல்ல;  தாலியைப் பற்றிய பேச்சு அங்கில்லை. (பேச்சில்லை என்றவுடன், பழக்கமே இல்லையென்று கூற முடியாது. நம்மால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால் சங்கம் மருவிய காலத்தில் சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் இருந்திருக்கிறது. அதைப்பற்றிக் கீழே காண்போம். இப்பொழுது சங்க கால விவரிப்பை அகநானூற்றின் வழியாய்ப் பார்ப்போம்.)

அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை

இதன் விளக்கம் என்ன?

"தலை உச்சியில் குடத்தை வைத்துக் கொண்டுள்ள பெண்கள்,
புது மண்பாண்டம் (உருண்டையான பாண்டம்; அதற்கு மண்டை என்று பெயர்.) வைத்திருக்கும் பெண்கள்,
ஆரவாரமாய்ச் சடங்குசெய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள்,
என இவரெல்லாம் ஒவ்வொரு பொருளையும் எடுத்துத்தர,
பிள்ளை பெற்றெடுத்த 4 வாழ்வரசிகள் (பசலை போட்டிருக்கும் அவர் நகைகள் அணிந்திருக்கிறார்)

"அம்மாடி, பெண்ணே, சொல் திறம்பாமல் (சொன்ன சொல் மாறிவிடாதே), எல்லார்க்கும் உதவி செய்து, கொண்டவன் விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்பவளாய் இரு"

என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்; அதோடு கல்யாணம் முடிகிறது. அவ்வளவு தான்!

மொத்தத்தில் மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் எனப்படும் மணமாகிறது. பொதுவாக பூ, நெல் சொரிவதோடு, முளைப்பாலிகை என்ற இன்னொன்றையும் கலந்து கொள்வார். [திருமணத்திற்கு முதல்நாள், நெல்லோடு பல கூலங்களையும், சில பயறுகளையும் கலந்து ஈரத்தோடு முளைக்க விட்டு, அதைப் பாலோடு கலந்து வைப்பதற்கு முளைப் பாலிகை என்பார்.] இம் முளைப்பாலிகையையும், பாலில் பூவிதழ்களைப் பிய்த்துப்போட்டு வைப்பதையும் தான் மணமக்கள் மேலே சொரிவதற்குப் பயன்படுத்துவார்.

முல்>முல்ங்குதல்>முங்குதல் = இறங்குதல்; நீருள் முங்கி எழுதல்
முல்ங்குதல்>முல்ஞ்சுதல்>மல்ஞ்சுதல்>மஞ்சுதல்>மஞ்ஞுதல்>மண்ணுதல் = நீர் இறங்குதல்
மஞ்சனம்>மஞ்ஞனம்>மண்ணனம் = நீர் இறைக்கும் செயல்
முல்>முழு>முழுகுதல்>முழுக்குதல் = நீருக்குள் இறக்குதல்
மண்ணுதல்>மண்ணம்>மணம் = நீருள் இறங்கும் செயல்.

அக்காலத் தமிழர்மணம் என்பது கூடியிருப்போர் வாழ்த்துக் கூற நடக்கும் மங்கல நீராட்டே ஒழிய வேறெதுவும் அல்ல. அகநானூற்றில் சொல்வது போல திருமணத்தில் மஞ்சள்நீர் ஆடும் சடங்கு இன்றைக்கும் நாட்டுப் புறங்களில் பல இடத்தும் (குறிப்பாக சிவகங்கைப் பக்கம்) முகன்மையாகத் தான் உள்ளது. முன்சொன்னது போல், மணமென்ற சொல்லுக்கே மஞ்சள்நீர் ஆடுதல் என்று தான் பொருள்வரும். அதேபோல 60-ஆம் ஆண்டு மணி விழாக்களிலும் மஞ்சள் நீராடுவதே (கும்பஞ் சொரிவதே) பெருஞ்சடங்காகத் தமிழ்நாடு எங்கணும் கொள்ளப் படுகிறது. (வடக்கிலிருந்து தெற்கேவந்து தமிழரோடு கலந்துபோன பார்ப்பனர் கூட மஞ்சள் நீராட்டுச் சடங்கைத் தங்கள் திருமணங்கள், மணிவிழா போன்றவற்றில் சேர்த்துக் கொள்வார்.) ஆக அகநானூற்றுப் பழக்கம் குறைந்தது 2300 ஆண்டுகள் இக்குமுகாயத்தில் தொடர்ந்து வருகிறது. இதே பழக்கம் கோபுரக் கலசங்களை நீராட்டுவதிலும் தொடர்கிறது.

இது போன்ற மஞ்சள் நீராட்டு வழக்கை தொல்காப்பியம் புறத்திணையியலில் உழிஞைத்துறை பற்றிப் பேசுமிடத்தில் இயல்பு, இலக்கணம், துறைகள் ஆகியவைபற்றிப் பேசியபின்பு, நொச்சி பற்றிப் பேசுமிடத்தில் தொல் 1014: 10 வது வரி பேசும். மாற்றுநாட்டுக் கோட்டையைப் பிடித்தபின் அக்கோட்டைக் கோபுரத்தின் கும்ப உச்சியில் குடமுழுக்கு செய்வதைக் குறிக்கும் முகமாக "குடுமி கொண்ட மண்ணுமங்கலம்" என்ற சொல்லாட்சி வரும். ஆக, மஞ்சள் நீராட்டு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 2700 ஆண்டுகளாய் இப்பழக்கம் இருந்துள்ளது.

"திருக்குட நீராட்டு என்பது சமயப் பழக்கமல்ல; அது இனக்குழுப் பழக்கமே" என்பதற்குத் தொல்காப்பியமே முற்று முழுதான சான்று. இதேபோன்ற திருக்குட நீராட்டு கோபுரத்திற்கு நிகழுமானால், பின் ஆண்பெண் இருவருக்கும் அவருடைய வாழ்க்கையின் குடும்பத் தொடக்கத்திலும், பெண்ணானால் அவள் அகவைக்கு வந்த பின்னும், பின்னால் ஆணுக்கு 60 அகவை முடிந்த போதும், குடநீராட்டு நடப்பது நெடுநாள் மரபாய் இருந்திருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். வெற்றி ஏற்பட்டால், நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால், ஏதொன்றையும் கொண்டாட வேண்டும் என்றால், தமிழருக்கு மஞ்சளும், மஞ்சள் நீரும் வாழ்வில் ஊடுவந்து விடுகின்றன என்றே சொல்லலாம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, June 14, 2007

தாலி - 1

அண்மையில் "நந்தவனம்" என்ற வலைப்பதிவில், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ''பண்பாட்டு அசைவுகள்'' என்ற பொத்தகத்தை மேற்கோள் காட்டி, பதிவர் மகா, கீழ்க் கண்ட செய்திகளைக் கூறியிருந்தார்.
--------------------------
1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.
2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
4. 'கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது' - வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
5. 'பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை' - பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
6. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
7. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
8. கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
9. இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
10. பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
--------------------------------
இவை போக மேலும், "தாலி பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம், இது காலம் காலமாக பின்பற்றப் படுவதாக சரடு விடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த பதிவு" என்றும் பதிவர் மகா குறித்திருந்தார்.

அவர் பதிவைப் படித்த போது, இதற்கு ஒரு மறுமொழி தரவேண்டும்; ஆனால் பொறுமையுடன் தரவுகளைச் சேகரித்துத் தரவேண்டும் என்று விழைந்தேன். திரு. மகா தந்திருப்பது போன்றவொரு முன்னிகை (comment), வீட்டிற் கிடக்கும் ஓலைச்சுவடிகளை, அவற்றின் உள்ளடக்கம் அறியாமல், குப்பை என்று கருதிக் கொண்டு, அள்ளி வீசியெறியும் (sweeping) பாமரத்தனத்தைச் சேர்ந்தது. கால காலமாய், பதினெட்டாம் பெருக்கின் போது காவிரியில் (அது போல மற்ற ஆறுகளில்) சுவடிகளை வீசியெறிந்தும், பொங்கலுக்கு முதல்நாள் நெருப்பிற்கு இரையாக்கியும், குப்பையில் மக்கிப் போயும், செல்லரித்துப் போகும் விதமாய்க் கரையானுக்கு உண்ணக் கொடுத்தும், தமிழர் தொலைத்த சுவடிகளும், அதிலிருந்த செய்திகளும் ஏராளம், ஏராளம். இப்பொழுது எஞ்சியுள்ள செய்திகள் நம்முடைய பண்பாட்டு மிச்சங்களிலும், மொழியிலும் தான் புதைந்து கிடக்கின்றன. இவற்றையும் அழித்து விட்டால், நாம் பண்ட்டு (bantu) மக்களைப் போல ஆகிவிடுவோம். தாலி பற்றிய மகாவின் கூற்று அந்த நிலைக்கே நம்மை இட்டுச் செல்லும். அப்படிச் செல்லும் போது, இவர் போன்ற "முற்போக்குச்" சிந்தனையாளர்கள் மிகவும் மகிழ்ந்து போகக் கூடும்!

மகாவைப் போன்ற இற்றைக்காலத் தமிழர்கள், தவறான புரிதலில் இருப்பதோடு, அதை நயந்து கொண்டு, தாலி என்ற சொல்லின் பொருளறியவும் முயலாது, கண்மூடித் தனமாய் பேசிக் கொண்டு இருப்பது பெரிய சோகம். இவர்களைப் பார்த்து கேட்கக் கூடியது ஒன்றுதான்.

"தமிழன் என்று பெருமிதத்தை இழந்தபின் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பெருமிதம் தொலைத்த அமெரிக்கக் கருப்பர்களின் நிலை உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? "தமிழராகிய எங்களிடம் எதுவும் கிடையாது, நாங்கள் வெறும் மண்ணாங்கட்டி" என்று நிலை நாட்டுவதில் நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் பாராட்டும் சீனக்காரன் கூட அவன் மரபைத் தொலைக்காமல் முற்போக்கை நாடுகிறானே என்று என்றாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?"

இப்படி, தமிழரின் வரலாற்றைச் சரியாய் உணராது, அதில் மேலோட்டமாய்த் தெரியும் மூதிகங்களை எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு, (அவற்றை விட்டொழிக்காமல்,) நம்முடைய மரபுகளையே தூக்கிக் கடாசி, அந்த இடத்தில் வெளிநாட்டிலிருந்து கீழிறக்கிய ஒட்டுண்ணி முற்போக்குச் சிந்தனை (அல்லது) இடதுசாரிச் சிந்தனையைப் பரிந்துரைப்பதே வழக்காய்க் கொண்ட இவர்கள் தாலியை மறுத்துரைப்பதன் மூலம் தங்களின் அறிவுய்தித்(intellectual)தனத்தை நிலைநாட்டிக் கொள்கிறார்களா? [தமிழில் பெரும்பாலும் வலது சாரிச் சிந்தனையை மட்டுமே கிடுக்கிக் (criticize) கொண்டு இருக்கிறோம். வறட்டுத் தனமான இடதுசாரிச் சிந்தனையும் கிடுக்கப் படவேண்டியதே!]

(தாலி கட்டுவது அடிமைத் தனம் என்று சொல்லுகின்ற இவர்களுக்கு, அதே பொழுது, வெள்ளைக்கார முறையில் மோதிரம் மாற்றுவது மட்டும் முற்போக்காய்த் தெரிவது தான் வேடிக்கை; திருமண முறிவு வரை தாலியைப் போல, மோதிரத்தைக் கழட்டாமல் தான் அங்கு பெரும்பாலும் இருக்கிறார்கள். "தாலிக்குள் முடங்கிக் கிடக்கும் மூதிகங்களை விட்டொழித்துப் பார்த்தால் மோதிரத்திற்கும் தாலிக்கும் வேறுபாடு ஒன்றும் பெரிதாய்க் கிடையாது" என்று கூட அறியாது முற்போக்காளர்கள் இருப்பார்களோ? :-) "வெள்ளைக்காரன் மரபு ஒசத்தி, நம்முடையது மட்டும் தாழ்த்தி" என்ற முடிவிற்கு இவர்கள் வருவதே ஓர் அடிமைத்தனம் அல்லவா?)

[உடனே "தமிழரிடம் இருக்கும் குறைகளை நான் மூடி மறைக்கிறேன்" என்று வெவ்வி வரத் துடிக்கும் இடது சாரியாளருக்கு, ஒரு சொல்: "நானும் உங்களைப்போல் ஆற்றைக் கடந்து தான், இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். கீழை நாட்டுப் போராட்டங்களை விவரமாய் ஒரு காலத்தில் அறிந்தவன் என்ற முறையிலும் சொல்லுகிறேன். உங்கள் பண்பாட்டுப் புரட்சியின் போக்கு நம்மைச் சரியான வழிக்குக் கொண்டு போகுமா என்பதை ஆழ்ந்து ஓர்ந்து பாருங்கள்."]

இவர்களுக்கும் விளக்கும் முகமாகத் தான் இந்தத் தொடரைப் பதிகிறேன்.

"தாலி என்ற அணிகலனைப் பெண்ணுக்கு அணிவிப்பது சரியா? இதற்குள் கிழாரியம் (feudalism), ஆணாதிக்கம் (male chauvanism) ஆகியவற்றின் கூறுபாடுகள் இல்லையா? இதைத் தவிர்க்காமல், ஆண்-பெண் இருவரும் வாழ்க்கை ஒப்பந்தம் செய்யவே முடியாதா?" என்று உரையாடலுக்குள் நான் போகவில்லை. (போக முடியாது என்றில்லை; போக முடியும், ஆனால் அந்த உரையாடலைச் செய்யப் பலரும் முன்வருவார்கள்; அதை நான் இருந்து செய்யவேண்டியது இல்லை. அப்படிச் செய்தாலும் "அந்தப் பழக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்" என்ற விழைவில் நான் மாறுபடுபவனும் அல்லேன்.)

இங்கு என்னுடைய குறிக்கோள் தாலிப் பழக்கத்தைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக, மொழியியல், வரலாற்றுச் சான்றுகளைத் தந்து, தாலி என்பது இனக்குழு (tribal) சார்ந்த பழக்கமாய்த் தமிழரிடம் எழுந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தி, மகா கூறிய செய்திகளில் இருக்கும் சில புரிதற் பிழைகளைச் சுட்டுவது மட்டுமே என் குறிக்கோள் ஆகும்.

உண்மையில், தமிழரிடம் இனக்குழு சார்ந்த பழக்கங்கள் இன்றும் எத்தனையோ மிஞ்சிக் கிடக்கின்றன; (காட்டாக, திருநீறு இட்டுக் கொள்ளுவது, மஞ்சள்/குங்குமம் வைத்துக் கொள்ளுவது, சந்தனம் பூசிக் கொள்ளுவது ஆகியவை எல்லாம் சமயம் சார்ந்தது என்று பலரும் எண்ணிக் கொள்கிறார்கள்; ஆனால் ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், அவையெல்லாமே சேர, சோழ, பாண்டிய, போன்ற இனக்குழுச் சிந்தனைகள் வழியே, இன்றைய சிவ/விண்ணவ நெறிகளுக்குள் புகுந்த வழக்கங்கள் என்பது புலப்படும். அதைச் சொல்லப் போனால் இந்தத் தொடர் பெரிதும் நீண்டுவிடும். இன்னொரு நாள் அதைச் சொல்லப் புகுவேன்.) "அவற்றில் தாலியும் ஒன்று" என்று நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தொடர் மெதுவாக வரும். படிப்பவர்கள் பொறுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். (வேறொன்றும் இல்லை; சொந்த வேலைகள் அழுத்துகின்றன. இணையத்தில் நீண்ட நேரம் இருக்க முடிவதில்லை.)

அன்புடன்,
இராம.கி.