Friday, July 06, 2007

தாலி - 7

மஞ்சள் பற்றிப் பல செய்திகளை முன்னே கூறிய நான், ஒரு முகன்மையான மஞ்சட் காய்/பழம் பற்றிச் சொல்ல மறந்துபோனேன். வேறொன்றுமில்லை, மாங்காய்/மாம்பழம் பற்றித் தான் சொல்ல மறந்தேன். மாங்காய் மரத்தை மா என்ற ஓரெழுத்து ஒருமொழியால் இப்பொழுது குறிப்பிட்டாலும் அதற்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்பது ஆய்விற்குரிய கேள்வி. [அது இடுகுறிப் பெயராய் அமையமுடியாது. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே", "மொழிப்பெயர்க் காரணம் விழிப்பத் தோன்றா" என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் வெறும் இடுகுறிப் பெயர்க் காரணத்தை மறுக்கின்றன. பொதுவாக ஓரெழுத்தொரு மொழிகள் எல்லாமே (மனிதனோ, விலங்குகளாக எழுப்பிய) இயற்கை ஒலியாக இல்லையெனில், அவை ஈரெழுத்து அல்லது மூவெழுத்துச் சொற்களின் மரூஉ ஆகத் தான் ஆய்வில் தென்பட்டிருக்கின்றன.]

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

என்பது திருக்குறள் காமத்துப் பாலில் வரும் பாட்டு. அது என்ன "மாலும் என் நெஞ்சு"? என்றால், வேறு ஒன்றுமில்லை, மாலுதலுக்கு மயங்குதல் என்றே பொருள் உண்டு. ["அணங்கு என்று நினைப்பேனா? அழகிய மயில் என்று நினைப்பேனா? தங்கக்குழை போட்ட பெண் என்று சொல்வேனா? என் நெஞ்சு மயங்குகிறது" என்று சொல்லுகிறார் வள்ளுவர்.] சூரியன் மறைகிறான், அது வரை ஒளியோடு இருந்த பகல் இப்பொழுது மயங்குகிறது, வெய்யில் மஞ்சளாய் மாறி கொஞ்சம் கொஞ்சமாய் இருள் கூடுகிறது. (மயங்கலே மங்கலாகி, மஞ்சளாயிற்று என்று முன்னே சொன்னேன் அல்லவா?) ஒளியில் தொடங்கி இருளில் முடியும் நேரத்திற்கு, மாலுகின்ற நேரத்திற்கு, மாலை என்றே தமிழன் பெயரிட்டான்.

மால் என்று ஓர்ந்து பார்ந்தால் மழுங்குதல், மயக்கம், மங்கல், மஞ்சள், மையிருட்டு (= கருப்பு) என்ற பொருட்பாடுகள் அடுத்தடுத்து வந்து சேரும். மால்>மாலம் = மயக்கும் வித்தை, நடிப்பு; மால்>மான்>மான்றல் = மயங்குதல்; மாலை = பல பூக்கள் மயங்கிக் கலந்து கிடக்கும் தொடை. மாலின் நீட்சியாய் மாள் என்பதும், மாழ் என்பதும் அவற்றின் வளர்ச்சிச் சொற்களும் பொன்னைக் குறித்தும் வரும். [மல்>மால்>மாள்>மாழை = பொன், உலோகம்; மல்>மால்>மாள்>மாழ்>மாழை>மாசை = பொன், உழுந்து நிறை அளவுள்ள பொன் நாணயம்; மல்>மால்>மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்; மல்>மால்>மாள்>மாடு>மாடை = பொன், உலோகம், அரை வராகன், ஒரு பழைய நாணயம் - மகத அரசில் புழக்கத்தில் இருந்தது] இது தவிர, மால்>மாழ்குதல் = மயங்குதல்; மாழாத்தல் = மயங்குதல்; மாழை = மருட்சி, மயக்கம் என்ற பொருட்பாடுகளும் மாழ் என்பதை ஒட்டி வரும். மள்>மாள்>மாளம் என்பது கத்தூரி மஞ்சளைக் குறிக்கும்.

இன்னும் நீட்சியாய், மாழை, மாந்தி, மாகந்தம் ஆகியவை மாமரத்தைக் குறிக்கும் சொற்களாகும். மாழை, மாந்தி, மாகந்தம், மா, மாங்காய், மாம்பழம் ஆகிய தொடர்புடைய வெவ்வேறு சொற்களை ஏரணமுறைப்படி பொருத்திப் பார்க்க வேண்டுமானால் *மால் என்ற அடிச்சொல் இருந்திருக்க வேண்டும். (*மால் என்பதற்கு மாறாய் *மா(ம்) என்ற சொல்லையும் கூட இங்கு ஓர்ந்து பார்க்கலாம். தமிழில் மகம் என்றாலும் ஒளி பொருந்திய, மஞ்சளான என்ற பொருட்பாடுகள் உண்டு. மகக் குழை என்றாலே, மாவிலை என்ற பொருளும் வந்து சேரும்; தவிர, மகரம் = மங்கிய சிவப்பு நிறம், மகவன் = இந்திரன், சிவன், மகவின் கோள் = வியாழன், மக உலகம் = மேல் ஏழு உலகினுள் ஒன்று என்று ஒளிப்பொருள் கிடைக்கும் சொற்களும் இது தொடர்பாய் உண்டு. இனி, மகன்>மான் என்று ஆவது போல, மகசி>மாசி என்று ஆவது போல, மகம்>*மாம் என்றும் ஆகலாம். *மாம் என்ற சொல்முடிவில் வரும் மூக்கொலியைத் தவிர்த்து மா என்றும் பலுக்கலாம்.)

*மால்>மாள்>மாழ்>மாழை
*மால் + ந் +தி = மாந்தி
*மால் + கு > மாகு>மாகந்தம்
*மால் > மா
*மால் +ந் +காய் = மாங்காய்
*மால் +ந் +பழம் = மாம்பழம்

"அதெப்படி *மால் என்ற சொல் இந்த மரத்திற்கு இருந்திருக்க முடியும்?" என்று சொற்பிறப்பியல் வழி கேட்டால், இதே போன்ற ஏரணம் இன்னொரு மரப்பெயரிலும் இருப்பதைத் தான் இணை காட்ட வேண்டியிருக்கிறது.

*தெல்+ந்+கு = தெங்கு
*தெல்+ந்+ஐ = தென்னை
*தெங்கின் காய் = தெங்கங்காய்
*தென்னையின் காய்>தென்னையங்காய்>தென்னங்காய்
*தெல்+ந்+காய் = தெங்காய்>தேங்காய்
*தெல்+கு = தெற்கு, வடமரம் (=ஆலமரம்) மிகுந்து இருந்த திசை வடதிசை ஆனது போல், தெல் மரம் மிகுந்து இருந்த திசை தெற்கு என்று ஆனது. தமிழில் கிழக்கும் மேற்கும் மலையை ஒட்டி ஏற்பட்டது போல வடக்கும் தெற்கும் மரங்கள் மிகுந்திருந்த காரணத்தை ஒட்டியே அமைந்தன.
*தெல்+ந்+திசை = தென்திசை
*தெல்>தெள்>தெளிவு = கள்

"சரி, மாலிற்கும் மஞ்சளுக்கும் புதலியல், உயிர்வேதியல் ஆகியவற்றின்படி என்னதான் தொடர்பு?" என்பது அடுத்த கேள்வி. [இந்த புதலியல் / உயிர்வேதியல் எல்லாம் பழந்தமிழனுக்குத் தெரியாது தான். ஆனால் பெயரிடுவதற்கு வாய்ப்பாய்ப் பட்டறிவும் கூர்ந்த அவதானிப்பும் அவனுக்கு இருந்திருக்க வேண்டும்.]

தமிழில் பல்வேறு காய்/கனிகள் தரும் மரங்களைக் குறிக்கிறோம். இவற்றிற்குப் பெயரிடும் போது, தமிழ் மாந்தர்கள், மரத்தில் இருந்து காய்/கனிகள் பெயரிட்டார்களா? காய்/கனிகளில் இருந்து மரத்திற்குப் பெயரிட்டார்களா என்பது ஆய்விற்கு உரிய கருத்து. இருக்கும் தமிழ்ச் சொற்களைப் பார்த்தால், பெரும்பாலும் (முற்றிலும் அல்ல.) காய்/கனியில் இருந்தே மரத்திற்குப் பெயரிட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது. (இன்னுஞ் சொன்னால் பழைய மாந்தனுக்கு காய்க்கும் கனிக்குமே வேறு பாடு தெரிய வாய்ப்பில்லாது இருந்திருக்கலாம்). அவன் காய்/கனியைப் பார்த்தால், அவனைக் கவர்வது அதன் உள் நிறமாகத் தான் இருக்க முடியும். மாவின் தளிர் இளமஞ்சள்; ஓரோவழி சிவப்பு ஊடுறுவிய மஞ்சள்; மாவின் காய் வெளிர் மஞ்சள்; அதன் கனியோ ஆழ்ந்த மஞ்சள். மற்ற பழங்களின் உள் நிறம் ஓரோவழி மஞ்சளாய் இருந்தாலும், மா ஒன்று தான் எல்லா வகை(variety)யிலும் உட்பகுதி மஞ்சளாய் இருக்கிறது. வேறொரு நிறத்தில் மாங்கனி/காய் இன்னும் காணப் படவில்லை.

பழுப்பு அல்லது சாம்பல் கருமை நிறமுடைய, Mangifera indica என்று புதலியலில் (botony) கூறப்படும், மாமரமானது திசம்பர் மாதத்தில் பூக்கிறது. பூக்கும் போது, ஒரு பூங்கதிரில் நிரவலாய் (average) ஆயிரம் மஞ்சள் பூக்கள் இருக்குமாம். இந்தப் பூங்கதிரில் ஆண்பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருந்தாலும் அவை ஒன்றிற்கு ஒன்று என்ற கணக்கில் இருப்பதில்லை. பெண்பூக்கள் மிகக் குறைவாயும் ஆண்பூக்கள் அதைப்போல ஆறு மடங்கிற்கு மேலுமாய் இருக்குமாம். இது தவிர பூங்கதிரில் இருந்து பூக்கள் உதிர்வதும் நடக்கும். முடிவில் ஒவ்வொரு கட்டத்திலும் பூக்கள் உதிர்ந்து ஒரு கிளைக்கு ஒரு கனி கூட நிரவலாய் அமைவதில்லை.

மஞ்சள் என்ற கருத்து மாமரத்தின் பல உறுப்புக்களில் தொடர்ந்தே வருகிறது. பூக்களில் இருந்து நீராவி மூலம் வடித்தெடுத்தால், 0.04% அளவில் பழுப்பு மஞ்சள் நிறத் தைலம் ஒன்றை எடுக்கலாமாம். எனவே, மஞ்சள் இல்லாமல் மாம்பூ இல்லை. துளிர் இலைகளில் அசுகார்பிக் காடி என்னும் சி உயிரூட்டு (ascorbic acid - Vitamin C) அதிகமாக உள்ளது. அசுகார்பிக் காடியும் மஞ்சள் நிறமானதே!. முதிர்ந்த இலைகளில் மாங்கிவெரின் (mangiferin) என்ற குளுகொசைடு (glucoside) உள்ளது. [முதிர்ந்த இலைகளைப் பொதுவாகக் கால்நடைகளுக்குத் தொடர்ந்து கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை கால்நடைகளின் குடலில் நச்சுப் பொருள்களாக ஆகி விடுகின்றன. ஓரோவழி முதிர்ந்த இலைகளை உண்ட பசுக்களின் சிறுநீர் மஞ்சளாகவே போகுமாம்.] இலைகளில் இருந்து 0.1% அளவில் வடித்தெடுக்கும் எண்ணெயும் கருஞ்சிவப்பு நிறத்திலேயே இருக்கும்.

மாங்காய் ஊறுகாயில் சிட்ரிக் காடி அதிகம் உள்ளது. (இதுவும் வெளிர் மஞ்சளே.) வட இந்தியாவில் புளிக்குப் பகரியாக ஊறுகாய் மாங்காய் சில இடங்களில் பயன்பெறுவது உண்டு. அறுவடையின் போது காய்களில் இருக்கும் காடித் தன்மை, பழுத்த பின்பு பெரிதும் குறைந்து விடுகிறது. அதே போல அசுகார்பிக் காடியும் குறைந்து விடுகிறது. பழத்தில் இருக்கும் மொத்தச் சருக்கரையும் பழுத்தபின் கூடுகிறது. (அதிலும் இனிப்புச் சருக்கரை - sucrose - அதிகரித்தால் சுவை மிகவும் அதிகமாகவே கிடைக்கும்.)

மாம்பழத் தோலியில் இருக்கும் குருத்திய வண்ணங்களும் (carotenoid pigments) பழுக்கும் போது அதிகரிக்கும். மாங்காயில் சி உயிரூட்டும் (vitamin C), அது பழுக்கும் போது குருத்தியமும் (carotene) நிறைந்திருக்கின்றன. நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளில், மாம்பழமும் குருக் கிழங்கும் (carrot) குருத்திய (carotene) வண்ணங்களைத் தேக்கி வைத்திருப்பதால், மிகுந்த அழகுத் தோற்றம் காட்டுகின்றன. இந்தக் குருத்தியங்கள் பல வேறுபாடுகளுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்ந்த நரங்கை (orange) நிறம் வரை தோற்றம் காட்டுகின்றன. [பீட்டாக் குருத்தியம் - beta carotene - 30 நுல்லியன் கீழ்ப் பங்கு (நு.கீ.ப. parts per million) இருந்தாலே மஞ்சள் நிறம் ஏற்பட்டுவிடும்; கனிந்த மாம்பழத்தில் இது உண்டு. ஒரு சில வகைகளில், பீட்டாக் குருத்தியம் 30 ppmக்கும் மேலே இருப்பதனால், நரங்கை நிறம் சற்றுத் தூக்கியே தெரியும். தவிரக் கனிந்த பழத்தில், மேலும் நிறம் கொடுக்கும் சாந்தோவில் (xanthophyll) என்ற வண்ணமும் இருப்பது உண்டு.]

பீட்டாக் குருத்தியம் என்பது ஒரு மதிப்புமிக்க, அஃகன எதிர்ப்பிப் (anti-oxidant) பொருளாகும். அதோடு இந்த பீட்டாக் குருத்தியம், கண்பாதுகாப்பிற்கும், திசுக்களை வளர்ப்பதற்கும் உதவியான ஏ உயிரூட்டு (vitamin A) உருவாக்க பயன்படும். பீட்டாக் குருத்தியங்களில் இரண்டுவிதம் உண்டு. ஒருவிதம் இசைக் குருத்தியம் (cis-carotene) என்றும், மற்றது துரன் குருத்தியம் (trans-carotene) என்றும் கூறப்படும். இசை வகை என்பது மாம்பழத்திலும், துரன்வகை என்பது குருக்கிழங்கிலும் அதிகம் உண்டு. தவிரக் குருத்தியமானது, மாம்பழத்தில் சிறுசிறு எண்ணெய்ப் பொட்டுக்களாயும் (oil specks), குருக்கிழங்கில் சிறுசிறு படிமத் துகள்களாயும் (small crystals) இருப்பதால், அவை உடலில் சேர்மானம் ஆவது கூட மாறுபடும். பொதுவாய், சாப்பிடும் போது, குருக்கிழங்கிற் கிடைக்கும் பீட்டாக் குருத்தியத்தைக் காட்டிலும், மாம்பழத்தில் கிடைப்பது எளிதில் நம் உடம்பில் உட்செரிக்குமாம்.

மாம்பழ மஞ்சளின் கதை இதோடு முடியவில்லை. (பட்டுச் சேலை நிறங்களில் மாம்பழ மஞ்சள் என்றே ஒரு வண்ணத்தைக் காஞ்சிபுரத்தில் அடையாளம் காட்டுவார்கள்.) மாம்பழத்தின் கனிவு கூடிவரக் கூடிவர, மாம்பழத் தோலில் கருப்புத் திட்டுக்களும் கூடிவரும். கருமை கூடியிருந்தாலே மிகுந்து கனிந்துவிட்டது என்று பொருள் (மீண்டும் மாலை என்ற சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள், மஞ்சள் கூடிச் சிறிது சிறிதாக இரவு கனிய, கருப்பு கூடும். மஞ்சள் நிறப் பட்டுச் சேலைக்கு கருப்பு நிற விளிம்பும் அழகு கூட்டித் தான் காட்டும்.)

கொஞ்சம் கூட ஐயப்பாடே கிடையாது, *மால்/*மாம் என்ற சொற்கள் மஞ்சள் நிறம் காரணமாகவே இந்த மரத்திற்குப் பெயராகி இருக்கின்றன. மாமை என்பது மஞ்சள்நிறம் அல்லது வெளிர்நிறம் (pale) கூடிய கருப்பைக் குறிக்கப் பயன்பட்ட சொல். அவன் சிகப்பா, கருப்பா என்றால் மாநிறம் என்று சொல்லுகிறோமே? அதன் பொருள் ஒளி கூடிய, களையான, கொஞ்சம் வெளிரிய முகம் என்று பொருள். பெண்ணாயிருந்தால் மஞ்சள் பூசி ஒளி கூட்டிக் கொள்கிறவள் என்று பொருள்.

மாமை என்ற சொல் வடபுலப் பலுக்கலில் ஆமையாகும். ஆம் என்பது மாமின் இந்திப் பெயர்; மற்ற வடபால் மொழிகளிலும் அதே பெயர்தான், அல்லது அதை ஒட்டிய பெயர். சங்கதத்தில் ரகரம் உள்நுழைத்து ஆம்ர என்று வரும். [ஆமை என்ற உயிரி, அதன் ஓடு போன்றவற்றை முன்குறித்த ஆழ்வார் பாடலில் நான் ஏன் ஏற்காது போனேன் என்று புரிந்திருபீர்கள்.]

பெரியாழ்வார் மாமை என்று சொல்லாமல் ஏன் ஆமை என்று தாலிக்கு முன்னால் சொன்னார் என்றால் பாட்டைப் பாருங்கள், மாமை என்று போட்டால், யாப்பு அந்த இடத்தில் சற்று இடிக்கும். ஆமை என்று சொன்னால் பாந்தமாய்ப் பொருந்திக் கொள்ளும். தவிர அவர் பட்டர்பிரான்; அவர் பேச்சு வழக்கில் அந்தக் காலத்திலும் வடசொற் கலந்து தமிழ் இயற்றுவது இயற்கை தான்.

அக்குவடம் உடுத்(து) ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ!

"சங்குமணி மாலையும், மங்கலத் தாலியும் பூண்ட அறிதுயிலான், மணிவண்ணன், வாசுதேவன், தளர்நடை போட மாட்டானோ?" என்று சொல்லுகிறார் ஆழ்வார். வளர்ந்த ஆண், அதுவும் மனைவி அருகிருக்கத் தாலி போட்ட ஆண், தமிழர் மரபில் இருந்திருக்க வேண்டும்.!!

"தாலி ஒரு பெண்ணடிமைச் சின்னம்" என்பது ஆய்வில்லாத அவக்கரப் பேச்சு.

அன்புடன்,
இராம.கி.

(பி.கு. மாமரம் பற்றிய பல கட்டுரைச் செய்திகளை பி.எஸ்.மணி, என்.கமலா நாகராஜன் எழுதிய, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட 1994 ல் வெளியிட்ட "வளம் தரும் மரங்கள் - 5" என்ற பொத்தகத்தில் அறிந்து கொள்ளலாம். வளம் தரும் மரங்கள் என்ற ஐந்து பொத்தகத் தொகுதியுமே வாங்கிப் பேணவேண்டிய தொகுதி.)

5 comments:

Anonymous said...

சொக்கா சொக்கா!

ஊரிலிருந்து வரேக்கை ரண்டு மாம்பழம் கொண்டு வந்திருந்தால் இராமகிக்கு ஒன்று எனக்கொன்று என்று பகிர்ந்திருக்கலாமே சொக்கா. இப்ப நான் என்ன செய்வேன்.

பிள்ளையார் முருகனிடம் மாம்பழத்தை ஏன் திருடினார் என்று இப்பத்தானே விளங்குது சொக்கா...

அய்யோ இந்த நேரம்பார்த்து சொக்கனைக் காணோமே..

Anonymous said...

//"தாலி ஒரு பெண்ணடிமைச் சின்னம்" என்பது ஆய்வில்லாத அவக்கரப் பேச்சு.//

அப்டின்னா தாலியை முந்தி ஆண்களும் அணிந்தார்களா அல்லது ஆண்கள் பெண்கள் இருவரும் தற்போது சங்கிலி அணிவதுபோல் அணிந்தார்களா?

புவியீர்ப்பைச் சமன்செய்ய உதவிய கடுக்கனை ஆண்கள் அணிவது குறைந்துவிட்டது (தமிழ் ஆண்கள்). தற்போது வெளிநாடு செல்லும் நம்மவர்கள் ஏதோ புதிதாகக் கண்டெடுத்த புதையல்போல் கடுக்கனை அணிகிறார்கள், வெள்ளியில். இதுபோல் தாலியும் வழக்கொழிந்து போயிருக்குமா?

வேளைக்குப் பதில்சொன்னால் திருமணத்திற்கு இரண்டு தாலியை வாங்கலாம். :D

இராம.கி said...

"மங்கலத் தாலியை ஆண்கள் அணிந்தார்களா?" என்பதற்கு வேறு காட்டுக்களை இப்பொழுது தர என்னால் முடிய வில்லை; இன்னும் தேட வேண்டும்; அதே பொழுது பெரியாழ்வாரின் பாடல் ஆண்கள் அணிந்ததைச் சுட்டுகிறது என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

இப்ப எல்லாம் தாலியில் காசு கோர்க்கிறார்கள். மேலும் ஏதோ ஒன்றைக் காசுகளுக்கு நடுவில் தொங்க விடுகிறார்கள், அது எல்லாம் எவ்வாறு வழக்கத்திற்கு வந்தது?

இ.பு.ஞானப்பிரகாசன் said...

பேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும் உரிய ஐயா, நேச வணக்கம்!

தாலி அகற்றும் போராட்டம் பற்றிய கருத்துக்களும் வாதங்களும் பற்றியெரியும் இவ்வேளையில் இது பற்றித் தாங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள் என்று பார்க்க வந்தேன். வியப்புக்குரிய வகையில் தாங்கள் தாலி கட்டும் வழக்கத்தை ஆதரித்தே எழுதியிருக்கிறீர்கள். அதற்கு ஏராளமான அரிய சான்றுகளையும் எடுத்துக்காட்டித் தாங்கள் படைத்திருக்கும் இந்தத் 'தாலி' தொடர், தமிழர் வரலாறு பற்றித் தாங்கள் வழங்கியிருக்கும் இன்னோர் அரும்பெரும் ஆய்வுக் கருவூலம் என்பதில் ஐயமில்லை.

ஆனால் ஐயா, எனக்கோர் ஐயம்! தாங்கள் கூறுவது போல் 'தாலி' தமிழர் வழக்கமாகவே இருந்தாலும், அது தாங்கள் எடுத்துக்காட்டுவது போன்ற அந்நாளைய வழக்கத்தின்படி இன்று கடைப்பிடிக்கப்படுவதில்லையே! ஒரு காலத்தில் ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதாக இருந்த தாலி கட்டிக் கொள்ளும் வழக்கமானது, இன்று பெண்களுக்கு மட்டுமானதாகத்தானே உள்ளது? பெண் மட்டும் காலமெல்லாம் தான் மணமானவள் என்பதை உலகுக்குக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும், ஆண் அப்படி இருக்க வேண்டியதில்லை என்பது, ஏதோ பெண் மட்டும்தான் ஒழுக்கக்கேடான குணங்கள் உடையவள் என்பது போன்ற தோற்றத்தைத்தானே தருகிறது?

இதை எதிர்வாதமாகக் கருதாமல், அறியாச் சிறு பிள்ளையின் ஐயமாக மட்டுமே ஏற்றுப் பதிலளிக்க வேண்டுகிறேன்!