Tuesday, October 27, 2020

மானகை (Management)

"Management-ஐ முகாமைத்துவமென ஈழத்தில் சொல்வோம். இதன் வேர்ச்சொல் விளக்கமென்ன? ”வளவில்” உங்கள் பதிவுகள் படித்ததிலிருந்து முகன்மை {தலைமை} + அமைத்துவம் {நிருவாகம்} என்பன வேர்ச்சொற்களாய்க் கொள்கிறேன். சரியா ? " என்று திரு. இலங்கநாதன் குகநாதன் கேட்டிருந்தார்.  ”அது சரியல்ல” என்று அவருக்குச் சொல்வேன். இதுபோன்ற கேள்வி இன்னும் பலருக்கு இருக்கலாம். நம்மிடை உலவும் தவறான மொழிபெயர்ப்புகளில் இதுவும் ஒன்று.

”முகாமைத்துவம்” என்ற சொல் ஈழத்திலும், ”மேலாண்மை” என்பது தமிழ்நாட்டிலும் பயில்வதை நானறிவேன். இருவேறு பின்புலங்களை நிறைவு செய்வதாய் தமிழ் விக்கிப்பீடியாவும்  ”அல்லது” என்று போட்டு இவற்றைப் பயிலும். இச்சொற்களை ஏற்காத நானோ இணையத்தில் வேறொரு சொல் பரிந்துரைத்தேன்.  நான் பரிந்துரைத்ததைத் தமிழ் விக்கிப்பீடியா ஏற்றதும் இல்லை. நானே கூட அங்குபோய் அதற்காக வாதாடியதும் இல்லை. ஆனாலும் முகாமை, மேலாண்மை ஆகிய சொற்களின் போதாமையைப் பொது வெளியில் எங்கோ சொல்லத்தான் வேண்டும். இங்கே நண்பர் கேட்டதை இதற்கென வாய்ப்பாய்ப் பயன்படுத்தி விளக்க முற்படுகிறேன். 

”முல்” வேரில் பிறந்த ”முகுதல்” என்பது ”தோன்றல், முன்வரல், முன்னிருத்தல்” என்று பொருள் கொள்ளும். முல்> முல்கு> முகு> முகம்; முல்கு>முகு> முக்கு; முல்கு> முகு> முக்கு> மூக்கு;  முல்கு>முகு> முகர்> முகரை; முல்கு> முகு> முகுஞ்சி> மூஞ்சி;  முல்கு> முகு> முகன்> முகனை> மோனை,  முல்கு> முகு> முகப்பு; முல்கு> முகு> முகவர், முல்கு> முகு> முகம்+வரி = முகவரி, இப்படிப் பல சொற்கள் ”முல்லில்” இருந்து கிளைக்கும். இதே போக்கில் முகலும் தன்மை ”முகன்மை ” ஆகி, தவறான பலுக்கலில் முகாமையாகும். அருகண்மை> அருகாமை போன்ற தவறான திரிவு இதுவாகும், பேச்சுவழக்கில் எப்படியோ இது ஒட்டிக்கொண்டது. முல்> மு(ல்)ந்து> முந்து> முது> முதல் என்ற திரிவும் முன்வந்த பொருளைக் குறிக்கும். ”முதன்மை/ தலைமை” என்பன முகாமையைக் குறிக்கலாம். இப்போது, தமிழ்ப்பொருளில் இருந்து இணை ஆங்கிலச் சொல்லைத் தேடினால் என்னவாகும்? 

முகாமைக்கு ஈடாய், Being first, headship, superiority, pre-eminence, precedence என்ற பொருட்பாடுகளை அகரமுதலிகள் தரும். இவை. management ஓடு ஒத்துவருமா? - என எண்ணிப் பாருங்கள். முகாமையாளர் = first person எனில், எல்லா manager உம் first person ஆவாரா? அவருக்கு மேல் சிலரும், அவருக்குக் கீழ் வேறு சிலரும் இருப்பாரே? எப்படி first person என்பது சரிவரும்? முகாமைத்துவம் என்பது முகாமைத் தத்துவத்தின் சுருக்கம். வடசொல்லான தத்துவத்தின் பொருள் கொள்கை (policy) அல்லது மெய்யியல் (philosophy) என்பதாகும். முகாமைத்துவம்   என்பது policy/philosophy relating to being the first person என்றாகும். இதுவும் management உம் ஒன்றா? ஒரு காட்டைத் தருகிறேன். பாருங்கள். இலங்கை அதிபர் கோத்தபாயா இராசபட்சேயும், ஒரு சாத்தார manager உம் ஒன்றா? எங்கோ பொருளில் இடிப்பது நமக்குப் புரியவில்லையா? நாம் ஏன் ஒப்புக்குச் சப்பாணியைத் தேடுகிறோம்?

சொல்லாக்கத்தில் நம்மிடமுள்ள சிக்கலே மொழிபெயர்ப்புச் சொற்களில் துல்லியம் பாராதது தான். கிடைத்ததை வைத்து ஒப்பேற்றுவது நம்மில் பலருக்கும் உள்ள வழக்கம். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வந்தாலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் போனாலும் (இதுபோல் தமிழ், இன்னொரு மொழி) பொருட்சிதைவு ஏற்படக் கூடாதென்பதை நாம் கவனிப்பதில்லை.. 

manage (v.) என்பதை 1560s, "to handle, train, or direct" (a horse), from the now-obsolete noun manage "the handling or training of a horse; horsemanship" (see manege, which is a modern revival of it), from Old French manège "horsemanship," from Italian maneggio, from maneggiare "to handle, touch," especially "to control a horse," which ultimately from Latin noun manus "hand" (from PIE root *man- (2) "hand") என்று வரையறுப்பார். குதிரையைக் கையாளும் திறமை இதில் குறிக்கப் பெற்றாலும், குதிரைக்கு முன், வேறு உடமித்த விலங்குகளை மாந்தர் கையாண்டிருக்க வேண்டுமே? - என்ற சிந்தனை எழுகிறது. 

ஏனெனில், உலகில் ”உடமித்த விலங்குகள் (domesticated animals)” எனுங் கருத்து 15,000 ஆண்டுகள் முன் ஆசியாவிலும் வேறிடங்களிலும் நாய்களைப் (Canis familiaris; வீட்டு நாய்கள் ஓநாய்களால் (wolves;Canis lupus) உருவாயின)  பழக்கியதில் தொடங்கியது,  அடுத்து,  10,000 ஆண்டுகளுக்கு முன், நடுக் கிழக்கில் ஆடுகள் ( Ovis aries) பழக்கப் பட்டன. 8,000 ஆண்டுகளுக்கு முன், நடுக்கிழக்கிலும், சீனத்திலும் பன்றிகள் ( Sus scrofa) உடமிக்கப் பட்டன. அதே காலத்தில் திமிலில்லா மாடுகள் ( Bos taurus) நடுக்கிழக்கிலும், திமில் உள்ள மாடுகள் (Zebu Cattle; Bos indicus) மேலும் 2000 ஆண்டுகள் கழித்து சிந்து வெளியிலும்  பழக்கப் பட்டன. இதே 6,000 ஆண்டுகளின் முன், நடு ஆசியாவில். குதிரைகள் (Equus caballus) உடமிக்கப் பட்டன, முடிவில் 4500 ஆண்டுகளுக்கு முன், பெருவில் லாமாக்கள் ( Llamas; Lama glama) பழக்கப்பட்டன. 

வரலாற்று வளர்ச்சியில் குதிரைக்கும் முன், மற்ற விலங்குகளைக் கையாள மாந்தனுக்குத்  தெரிந்திருக்கும். manage இன் ஆங்கில வரையறுப்பில் man கையைக் குறிக்காது விலங்குப் பொதுச்சொல்லான மான் (man)ஐக் குறிக்குமோ என ஊகிக்கிறோம். (http://valavu.blogspot.com/2005/06/blog-post_26.html) சரி.  கையாளுதல் என்பது விலங்குகளைச் செலுத்தல் தானே? அதற்கும் ஒரு சொல் வேண்டுமே? அது என்ன? தமிழில் அகைதல் (த,வி) என்பது, “செல்லுதல்; உகை> அகை;  to go forth, proceed” என்ற பொருள் கொள்ளும்; அகை-த்தல் எனும் பிற வினைச்சொல், “1. செலுத்துதல் (சூடா) - to drive, cause to go, send forth 2. இழுத்தல் to draw towards” என்று பொருள் கொள்ளும்.. தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  ag (ak) to drive. urge, conduct; Gk.agein, ago; L ag-ere, to drive; Icel ak-a (pt.t.aak), to drive; Skt. aj. to dive; (Skeat's Etymological Dictionary of English Language) என்று போட்டிருப்பர்.   

www. etymonline, com எனும் தளத்தில், *ag- Proto- Indo-European root meaning "to drive, draw out or forth, move" என்பதற்கு, It forms all or part of: act; action; active; actor; actual; actuary; actuate; agency; agenda; agent; agile; agitation; agony; ambagious; ambassador; ambiguous; anagogical; antagonize; apagoge; assay; Auriga; auto-da-fe; axiom; cache; castigate; coagulate; cogent; cogitation; counteract; demagogue; embassy; epact; essay; exact; exacta; examine; exigency; exiguous; fumigation; glucagon; hypnagogic; interact; intransigent; isagoge; litigate; litigation; mitigate; mystagogue; navigate; objurgate; pedagogue; plutogogue; prodigal; protagonist; purge; react; redact; retroactive; squat; strategy; synagogue; transact; transaction; variegate.

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Greek agein "to lead, guide, drive, carry off," agon "assembly, contest in the games," agogos "leader," axios "worth, worthy, weighing as much;" Sanskrit ajati "drives," ajirah "moving, active;" Latin actus "a doing; a driving, impulse, a setting in motion; a part in a play;" agere "to set in motion, drive, drive forward," hence "to do, perform," agilis "nimble, quick;" Old Norse aka "to drive;" Middle Irish ag "battle." 

என்று விளக்கம் சொல்வர். எனவே man-age ஐ, ”மான் அகை-த்தல்> மானகை-த்தல்” என்று துல்லியமாய்ச் சொல்லலாம். மானகை (management) என்ற பெயர்ச் சொல்லும் உருவாகும். விலங்குகளைக் கையாள்வதில் தொடங்கி, அடுத்து உடன் மாந்தரைக் கையாண்டு, பின் எல்லா வளங்களையும் ஊற்றுகளையும் (resources) சேர்த்துக் கையாளும் பொருளுக்கு இச்சொல் நீட்சி பெற்றது.

இனி,  

மானகர் (புதுக்கம்/விளைப்பு) = Manager (production), 

மானகர் (பொறியியல்) = Manager (engineering), 

மானகர் (அடவு) = Manager (design), 

மானகர் (மாறகைப்பு) = Manager (marketing), 

மானகர் (அமைப்பு) = Manager (administration), 

மானகர் (நிதி) = Manager (finance), 

மானகர் (அளவை) = Manager (legal), 

முதல் மானகர் = Chief Manager, 

கண மானகர் = General Manager  

என்று நாம் விதவிதமாய் விரித்துச் சொல்லலாம். மானகை என்ற சொல்லை நான் பரிந்துரைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் புழக்கம் கூடவில்லை. மேலாண்மையும். முகாமையுமே இதுநாள் வரை பொருள் சரியாய்த் தெரியாமல், புழங்கப் படுகின்றன. ”மேலாண்மை”யிலும் நான் குறையை உணர்வேன். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு over-rule என்பது தான். 40 ஆண்டு காலம் பல்வேறு படிநிலைகளில், manager ஆக வேலை பார்த்த எனக்கு, மேற்பார்வையர் / கண்காணி (supervisor) மேஸ்திரி ( master) அதிகாரி ( ruler) என்ற ”மேலாண்மையின்” நேரடிப் பொருள்களில் உடன்பாடில்லை. 

[நெறியாளரான director என்பதை இயக்குநர் (operator) என்று சிலர் தவறாய் மொழிபெயர்த்தை ஒக்கும்.] அந்தந்தச் சொல்லின் துல்லியத்தை நாம் தவறான மொழிபெயர்ப்புகளால் இழக்கலாமா? தவிர ஆண்மை என்ற சொல் ஆளர் என்றிலாது அமைகையில், ஆணாதிக்கக் குறைப்பொருளையே ஒருபால். குறிக்கிறது. இக்காலத்தில் பெண்களும் மானகர் ஆகலாமே? இணைச் சொற்கள்  ஒத்த பொருளைத் தரவேண்டாமோ? ”இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்பது சொற்களுக்கும் பொருந்தும் அல்லவா? அப்புறம் அவரவர் உகப்பு,  

அன்புடன்,

இராம.கி.

Wednesday, October 14, 2020

சதயம்

நண்பர் ஒருவர் சதயத்தின் பொருள் கேட்டிருந்தார். ஒருவேளை அந்த நாட்காட்டில் (நட்சத்திரத்தில்) அவர் பிறந்தாரோ, என்னவோ? (இப்படிப் பலரும் கேட்கிறார். எனக்குத் தான் விளக்கம் சொல்லப் பொழுதில்லை. ஒவ்வொரு விளக்கத்திற்கும் நான் அலையவேண்டியுள்ளது. வழக்கம் போல் தமிழ், சங்கதம் என இருவகையிலும் அலையவேண்டும்.) இனிச் சதயம் பார்ப்போம்.  27 விண்மீன் கூடங்களில் இது 24 ஆவது. இதை சங்கதத்தில்   Shatabhishak அல்லது Shatataraka என்பார். தமிழில் இதைச் சுருக்கிச் சதயம் என்பார். சதம் = நூறு  bhishak = பண்டுவர்.  Śatabhiṣak means “comprising a hundred physicians.” 

உடையக்கூடிய (கல் போன்ற) ஏதோவொன்றைக் கீழே போடுகையில் ஒன்று பலதாவதுபோல், வலிந்து கீழிட்டு நுறுக்கும்> நொறுக்கும் போது நூறாகிறது. பொடிப்பொடியாகிறது. நூறெனும் சொல்லிற்கு சங்க இலக்கியங்களில் இப்பொருள் நெடுகவுள்ளது. நூறு>நீறு=பொடி. நுறுக்குவதற்கு இன்னொரு சொல் சதைத்தல்> சதாய்த்தல். “போட்டு சதாய்ச்சிட்டான்பா” என இன்றுஞ் சொல்வோம். சதைத்தலின் இன்னொரு வடிவம் சாத்துதல். சதைத்தலிலெழுந்த வடசொல் சதம். சங்க காலத்தில் தமிழருக்கு வடக்கே (இற்றை மராட்டியக் கோதாவரிக் கரையில் ஔரங்காபாது அருகில்) படித்தானத்தைத் (Paithan) தலைநகராய்க் கொண்ட நூற்றுவர் கன்னர் (பாகதத்தில் சதகர்ணி) ஆண்டார். தமிழகத்தையும் மகதத்தையும் வணிகத்தால், இடையாற்றங்களால், இணைத்தவர் இவரே. எதிரிகளை நூறும் அடைப்பெயரை இவர் பெற்றார். கன்னர் (= கருநர்) என்பது சேரர்/சோழர்//பாண்டியர் போல் ஓர் இனக்குழு அடையாளம். 

தமிழிய, வடவிந்திய மொழிகளிடையே எண்களில் இணைச்சிந்தனை நிலவியது நெடுகவும் உண்மை. அவை தனித்தனியே தேர்ந்துகொண்ட சொற்கள் தாம் வேறு. மேலைச்சொல்லும் நூறுதல். சதைத்தல் போலவே அமையும்..100 க்கான மேலைச்சொற்கள் கொத்தற் கருத்தில் எழுந்தவை. ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலி பொருள்கூறாது வெறுமே சொல் இணைகளை மட்டுங் காட்டும். Old English hundred "the number of 100, a counting of 100," from Proto-Germanic *hundratha- (source also of Old Frisian hundred, Old Saxon hunderod, Old Norse hundrað, German hundert); first element is Proto-Germanic *hundam "hundred" (cognate with Gothic hund, Old High German hunt), from PIE *km-tom "hundred," reduced from *dkm-tom- (source also of Sanskrit satam, Avestan satem, Greek hekaton, Latin centum, Lithuanian simtas, Old Church Slavonic suto, Old Irish cet, Breton kant "hundred"), suffixed form of root *dekm- "ten. கொத்தலும் சாத்தலும் ஒருபொருள் கொண்டன. சகரமும் ககரமும், ஹகரமும் மேலைமொழிகளில் போலிகள். ஒரு பக்கம் ககரம் சகரமாக, இன்னொரு பக்கம் ககரம் ஹகரமாகும். பொருள் ஏதோ ஒன்றுதான்.

அடுத்து bhishak என்பதை Bhiṣaj என்னும் சங்கதச் சொல்லில் இருந்து எடுப்பர். இதன் விளக்கம் கீழே.

Bhiṣaj (भिषज्) refers to a “physican” or “doctor”, as defined in the 13th-century Raj Nighantu or Rājanighaṇṭu (an Ayurvedic encyclopedia). Accordingly, “A physician (bhiṣaj) capable of diagnosing a disease, after consulting this treatise (Rājanighaṇṭu), analysijng the various signs, symptoms, examinations etc., can select an appropraite drug (auṣadha) of choice for his patient. As, now, he is in a position to know all about the drugs and their characteristics. ‘Hence this Nighaṇṭu-Rāj is superior to all’. [...] A physician (bhiṣaj) coming across with the names of the drugs , having multiple meanings such as Śiva, Śyāmā, Samaṅgā etc. should decide about an appropriate drug on the basis of reference, action, rasa, vīrya, its use in a particular recipe et.c Above all,m a physician is also advised to use his common sense for accepting a particular drug by its particular synonym”.

Source: Shodhganga: The Caraka Saṃhitā and the Suśruta Saṃhitā

Bhiṣak (भिषक्) or Bhiṣaj.—In the Caraka and the Suśruta Saṃhitās, the physician is addressed as bhiṣak, vaidya or cikitsak and these terms are used interchangeably. However, the term bhiṣak is of relatively more frequent occurrence. The term vaidya, which is derived from “vidya” or knowledge, is generally used for the learned. It also implies one who is a follower of the Vedas or well-versed in them. The physician increasingly came to be known as vaidya from the time of the Epics. A.L. Basham points out that since the word is related to Veda, the term vaidya has religious overtones which the term bhiṣaj lacks.

Bhiṣaj  என்பதை (ab)bhi - saj என்று உடைத்துப் பிரித்து (ab)bhi என்பதில் வலிந்து (ab) ஐச் சேர்த்து ”மேல்” என்ற பொருளைச் சொல்வர். saj என்பதற்குக் ”பூசு” என்று பொருள் சொல்வார். அதாவது ஏதேனும் காயம் ஏற்பட்டால் புண்ணின் மேல் மருந்து பூசி, பச்சிலை வைத்துக் கட்டுபவரைக் குறிக்கும் என்று சுற்றி வளைத்துப் பொருள் சொல்வார். இச்சொல் இருக்கு வேதத்தில் பயின்று வருகிறது என்றும் சொல்வார். இப்படிச் சொல்லை மூன்றாய் உடைத்துப் பொருள் சொல்வது நமக்குச் சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவது போல் இருக்கிறது. இதற்கும் தமிழ் ஆதாரமோ என்ற எண்ணம் வந்துவிடுகிறது. பேசாமல் ”பூசகர்” எனும் தமிழ்ச் சொல்லைச் சொல்லிப் போகலாம். மூன்று விதப் பூசகர் நடைமுறையில் உண்டு. முதலில் வருபவர் கோயிலில் இறைவன் திருமேனிக்கு நெய், (ஒரு காலத்தில் அரத்தம், கொழுப்பு), எண்ணெய். சந்தனம் போன்ற பூசைப் பொருள்களைப் பூசுபவர். திருமேனியைக் குளிப்பாட்டி அழகு செய்பவர். பூவுஞ் சூடுபவர். பூசித்தல், பூசை, பூசாரி போன்ற சொற்களைச் சங்கதத்தில் தேடுவது வீண்வேலை. ஆகுதியிட்டு வேள்வி நடத்தும் அவருக்கு, பூசை கிடையாது, அதைத் தென்னிந்தியாவில் தான் கற்றார். அடுத்தவர் ஒப்பனைப் பொருள் பூசுபவர், ஆணுக்கும் பெண்ணுக்கும் செய்பவர்,. இன்று திருமணங்களுக்கு முன்னால் ஒப்பனை வேலை கனக்க நடக்கிறது. மூன்றாமவர் மருந்துப் பொருள்களைப் பூசி பச்சிலை காட்டுபவர். பூசகர்>பிசாரகர் ஆவார். (பூசலார் நாயனார் எந்தவகை என்று தேடவேண்டும்.) தமிழ்நாட்டில் பண்டுவரின் ஒரு வேலையாய்ச் சொல்லப்படும்.

மருந்துப் பூசகர் வித்தகருக்குச் (வைத்தியருக்குச் (https://valavu.blogspot.com/2020/07/blog-post_13.html) சற்று கீழானவர் என்றே குமுக நடைமுறை உள்ளது.. மலையாள ஆயுர்வேதத்தில் பிஷாரடி என்று சொல்வர். கொடிவழியாய் வருங்கலை. குமரிமாவட்டத்திலும் உண்டு. 

Shatabhishak = நூறு பூசகர். நூறுபூசக நாட்காட்டில் (சதய நட்சத்திரத்தில்) இராசராசன் பிறந்தானாம். அதனால் தஞ்சைப் பெரியகோயிலில் சதயத் திருவிழா நடைபெறும்.  

நூறு பூசகர் குழுமியதுபோல் கொசகொச என்று இருந்ததால் இந்த வீண்மீன் கூட்டத்திற்கு இப்படிப் பெயர் வைத்தார் போலும். வானியலார் தான் விடை சொல்லவேண்டும். இதன் படம் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது.  



Tuesday, October 13, 2020

சில பட்டங்கள் (degrees)

”இவைபோன்ற பட்டங்களை தமிழில் எப்படி எழுதுவது? “ என்று ஒரு பட்டியலைக் கொடுத்து நண்பர் Ingersol Selvaraj கேட்டார். அதில் கொடுத்த பல பட்டங்கள் தமிழில் ஏற்கனவே அறியப்பட்டவை தாம்.  இருப்பினும் பலவும் தவறாய் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. துல்லியம் கருதி வேறுசில சொற்களை நான் பயன்படுத்துவேன். என் பார்வையில் இப்பட்டங்களின் தமிழாக்கத்தைக் கீழே தந்துள்ளேன். இவற்றை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உகப்பு. 

Bachelor of Arts = B.A  இளங் கலையியல் (இதில் மொழி, பொருளியல், வரலாறு போன்றவை வந்து சேரும்.)

Bachelor of Business Administration = BBA இளம் பொதின அமைத்தியல்

தமிழில் business என்பதைப் பலரும் வணிகம், வியாபாரம், பிசினெசு, நிர்வாகம் என்றெலாம் எழுதுவர், அப்படி எழுதுவது நம்மைப் பெரிதும்  வளர்க்காது, business என்பதற்கு ஒரு தனிச்சொல் தேடாது, வேறு சொற்களை வைத்து நாம் நெடுங்காலம் ஒப்பேற்றி வருகிறோம். 20 ஆண்டுகளுக்கு மேல், ஒரு தனிச்சொல்லை இதற்காக நான் புழங்கி வருகிறேன். இதுவரை எந்தச் சிக்கலும் நான் அதில் காணவில்லை. என் கட்டுரைகள் படித்தவருக்கு அது தெரியும். அதே பொழுது பரவலாய் இச்சொல் புழங்கவில்லை தான். இனி விளக்கத்திற்கு வருவோம்..   

ஆங்கிலத்தில் business (n.) Old English bisignes (Northumbrian) "care, anxiety, occupation," from bisig "careful, anxious, busy, occupied, diligent" (see busy (adj.)) + -ness. The original sense is obsolete, as is the Middle English sense of "state of being much occupied or engaged" (mid-14c.), the latter replaced by busyness. Johnson's dictionary also has busiless "At leisure; without business; unemployed." Modern two-syllable pronunciation is 17c.

Sense of "a person's work, occupation, that which one does for a livelihood" is first recorded late 14c. (in late Old English bisig (adj.) appears as a noun with the sense "occupation, state of employment"). Sense of "that which is undertaken as a duty" is from late 14c. Meaning "what one is about at the moment" is from 1590s. Sense of "trade, commercial engagements, mercantile pursuits collectively" is first attested 1727, on the notion of "matters which occupy one's time and attention." In 17c. business also could mean "sexual intercourse."

என்று சொல்வார். busy (adj.) என்பதைக் கீழக்கண்டவாறு வரையறுப்பார்.Old English bisig "careful, anxious," later "continually employed or occupied, in constant or energetic action" cognate with Old Dutch bezich, Low German besig, but having no known connection with any other Germanic or Indo-European language. Still pronounced as in Middle English, but for some unclear reason the spelling shifted to -u- in 15c.

busy என்பதில் sense of occupied என்பதே முகன்மை. தமிழில் ஒரு குறிப்பிட்ட  விதயத்தில் பொதிந்து கிடப்பதாய்ச் சொல்வது occupation தான். பொதிதல் = நிறைதல், சேமித்தல், உள்ளடக்குதல், மறைத்தல், பிணித்தல். கடைப்பிடித்தல், to occupy என்று பொருள்கொள்ளும்.. பூரித்தல் என்பதும் கூட நிறைந்து கிடத்தலே. பொதிநம் என்பது பொதிந்து கிடக்கும் நிலை, (கொங்குநாட்டில் பேச்சுவழக்கில் முசுவாய் இருப்பதாய்ச் சொல்லுவர்.  முழுதிக் கிடப்பது முழுது>முழுசு>முய்சு>முசு. சிவகங்கைப் பக்கம் மும்முரமாய் இருப்பதாய்ச் சொல்லுவர். முழுகிக் கிடப்பது மும்முரம் ) ஒரு business இல், (அது நிறுவனம், சிறு வணிகம், செய்யும் வேலை என எதுவாய் இருந்தாலும்) வேலை செய்வோர் அவரவர் கருமமே கண்ணாய் இருப்பார். நிறுவனம் என்பது சட்டதிட்டங்களால் நகர்கிறது. அவரவர் பொதிந்து கிடப்பதால் இது நடக்கிறது. பொதிநம் என்ற பெயர்ச்சொல் தொழிலையும், நிறுவனத்தையும் குறிக்கும் . பலநேரம் நகர ஓசையை, னகர ஓசையாய் மாற்றி ஒலிப்போம்.  அதன்படி, இங்கு பொதிநம்> பொதினம் ஆயிற்று.

 அதேபோல் administration என்பதைப் பலரும் நிர்வாகம் என்றே சொல்லிவருவர், அது நிறுவாகத்தின் மறு வழக்கு. to institute என்பதே அதன் பொருள். அதன் பொருளை மாற்றி நிர்வாகம் என்று இப்போது பயில்கிறார். அதுவும் தவறான சொல். administration இற்கெனத் தமிழ்ச்சொல் ஏற்கனவே தமிழில் உண்டு. அதை மீண்டும் புழங்கலாம். 2000 ஆண்டுகள் முன், அமைச்சர் என்ற சொல் இக்கால இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/அதிகாரிகள் (IAS) போன்றோரையுங் கூடக் குறிக்கும். இதே சொல் பாகதம்/பாலியில் அமாத்ய என்றழைக்கப் படும். 

மேலை மொழிகளில் வரும் administer என்ற சொல்லும் அமாத்ய என்பதோடு தொடர்புள்ளதே. அசோகன் ஆட்சியில் 2000 க்கும் மேற்பட்டு அமாத்யர்கள் இருந்தாராம். இற்றைத் தமிழில் அமைச்சர் என்றதன் பொருளைக் குறுக்கி மந்திரியென்றே புரிந்து கொள்கிறோம். அரசு இயந்தரத்தைக் கட்டி அமர்த்தப் பட்டவர் (அமைத்தியவர்) அமைத்தர்>அமைச்சர். இன்னொரு வகையில் அமைத்த>அமாத்ய. அமர்த்தல் = இருத்தல். அமை>அவை>சவை.>சபை எல்லாம் இவற்றோடு தொடர்புடைய சொற்கள். தமிழ் ஏதோ தனித்தது; ”பாகதம்/பாலி/சங்கதத்திலிருந்து இது கடன் வாங்கியது” என்று கொள்ளாது, மேற்கூறிய சொற்களோடு ஒருங்கே பார்த்தால் நான்சொல்லும் தொடர்புகள் புரியும்.  அமைத்தம் = administration. 

Bachelor of Science = B.Sc இளம் அறிவியல்

Bachelor of Commerce = B.com. இளம் மாறுகையியல். இது தொடர்பாய் marketing பற்றி ஒரு இடுகையிட்டேன்.  https://valavu.blogspot.com/2019/02/marketing.html. அதைப் படித்தால் commerce இற்கான சொல் கிடைக்கும். எல்லாவற்றையும் வணிகம் என்பது சரிவராது.

Bachelor of Computer Applications - BCA = இளம் கணிப் படியாற்றவியல்

”இப்படிச் செய், அப்படிச் செய்” என்பதில் வரும்படி என்பது செய்முறையைக் குறிக்கும். படி ஆற்றுதல் என்பது ஒரு குறிப்பிட்ட செய்முறையைத் திருப்பி ஆற்றுவது. apply, application என்பனவாகும். to apply = படியாற்று, application = படியாற்றம். app = படியம். இதைச் செயலி என்று சொல்லுவது IT துறையில் சரியாகலாம். பொதுவாகச் சரியாகாது.

Bachelor of Fine Arts - BFA = இளம் நுண்கலையியல்

Bachelor of Laws - LLB = இளம் அளவையியல் 

“இதற்கு இது அளவு” எனும் போது எல்லைகள்பற்றிப் பேசுகிறோம். ஆங்கிலத்தில் limit / boundary என இதைச்சொல்வர். law என்பது அளவுகளோடு (limit / boundary) தொடர்புடையது. இன்னின்ன செயல்களுக்கு இது எல்லை; இவ் வெல்லை மீறினால் இன்ன தண்டனை என்பது law வின் பகுதிகள். இதற்கு அளவை, விதி என்ற சொல்லை பழந்தமிழர் பயன்படுத்தினர். விதியை pre-determined என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தும் நாம் அளவையை மறந்தே விட்டோம். அளவையோடு தொடர்புற்றது அளகை = logic. இதற்கு ஏரணம் என்ற மற்றொரு சொல்லுண்டு. law விற்கும் logic -ற்கும் நிறையக் கணுக்கம் (connection) உண்டு. அளவையர் = lawyer. வழக்கறிஞர் என்ற சொல் நான் கேள்விப் பட்டதில்லை. advocate என்பதற்கு வழக்குரைஞரே போதுமானது.

Bachelor of Technology - B.Tech = இளம் நுட்பியல்

Bachelor of Education - B.Ed = இளம் அறிவுயர்த்தியல். https://valavu.blogspot.com/2007/02/1.html என்ற இடுகையைப் படியுங்கள். 

Bachelor of Medicine, Bachelor of Surgery - MBBS இளம் மருத்துவயியல், இளம் பண்டுவயியல். https://valavu.blogspot.com/2020/07/blog-post_13.html படியுங்கள்.

Bachelor of Architecture - B.Arch = இளம் கட்டிடவியல்

Master of Arts  - M.A. முதுக் கலையியல்

Master of Social Work  - MSW = முதுக் குமுகப் பணியியல்

Master of Business Administration  - M.B.A. முதுப் பொதின அடுமுனையியல் 

Master of Computer Applications  - M.C.A. = முதுக் கணிப் படியாற்றவியல்

Master of Engineering  - M.Eng. = முதுப் பொறியியல் 

Master of Philosophy  - M.Phil. = முது மெய்யியல்

Master of Science  - M.Sc. = முது அறிவியல்

Master of Technology  - M.Tech. = முது நுட்பியல்

Master of Statistics  - M.Stat. = முதுப் புள்ளியியல்

Master of Laws  - LL.M. = முது அளவையியல்

Master of Commerce  - M.Com. = முது மாறுகையியல்

Master of Architecture  - M.Arch. = முதுக் கட்டிடவியல்

Master of Veterinary Science  - MVSc = முது  பழகுவிலங்கு அறிவியல்

veterinarian (n.) "animal doctor, one who practices the art of treating disease and injuries in domestic animals," 1640s, from Latin veterinarius "of or having to do with beasts of burden," also, as a noun, "cattle doctor," from veterinum "beast of burden," perhaps from vetus (genitive veteris) "old" (see veteran), possibly from the notion of "experienced," or of "one year old" (hence strong enough to draw burdens). Another theory connects it to Latin vehere "to draw," on notion of "used as a draft animal." Replaced native dog-leech (1520s).

domestic animals = பழகு விலங்குகள்  உடன்வதி(யும்) விலங்குகள்

Master of Philosophy - M.Phil = முது மெய்யியல்

Doctor of Philosophy - Ph.D = மெய்யியல் முனைவர்.


Saturday, October 10, 2020

Closed circuit television

கைலியை மூட்டுதலென்று புழங்கியிருக்கிறீர்கள் அல்லவா? மூட்டுதல் என்பதற்கு to close என்றுதான் பொருள். கதவை மூடென எப்படிச் சொல்வோம்? மூடுவது தன்வினை; மூட்டுவது பிறவினை. மூடவைப்பதைத் தான் மூட்டுதல் என்று சொல்லுகிறோம். இங்கு தொலைக்காட்சியைக் கணுக்கி(connect) இருக்கும் சுற்றை (circuit) மூட்டி வைப்பதால், (மின்)சுற்று மூட்டிய தொலைக் காட்சி என்றானது. இதுபோன்ற கூட்டுச்சொற்கள் புழங்கப் புழங்கப் பழகிப் போகும். முடிந்தால் http://valavu.blogspot.com/2007/04/blog-post.html  இடுகையைப் படித்துப் பாருங்கள். அது எழுத்தாளர் மாலனோடு செய்த உரையாடல்.

surveillance (n.) = மேல்விழிப்பு; 1802, from French surveillance "oversight, supervision, a watch," noun of action from surveiller "oversee, watch" (17c.), from sur- "over" (see sur- (1)) + veiller "to watch," from Latin vigilare, from vigil "watchful" (from PIE root *weg- "to be strong, be lively"). Seemingly a word that came to English from the Terror in France ("surveillance committees" were formed in every French municipality in March 1793 by order of the Convention to monitor the actions and movements of suspect persons, outsiders, and dissidents). 

CCTV surveillance = சு.மூ.தொ.கா. மேல்விழிப்பு

Wifi area = wide fidelity area = அகற்பிடி(ப்பு)ப் புலம்

fidelity (n.) early 15c., "faithfulness, devotion," from Middle French fidélité (15c.), from Latin fidelitatem (nominative fidelitas) "faithfulness, adherence, trustiness," from fidelis "faithful, true, trusty, sincere," from fides "faith" (from PIE root *bheidh- "to trust, confide, persuade"). From 1530s as "faithful adherence to truth or reality;" specifically of sound reproduction from 1878.

camera = ஒளிக்கூடு 

CCTV camera = சு.மூ.தொ.காட்சி ஒளிக்கூடு (மூடிய சுற்றுத் தொலைக்காட்சி ஒளிக்கூடு) இப்படிச் சுருக்கெழுத்து ஆங்கிலச் சொற்களைத் தமிழிற் சொல்லுவதற்கு இன்னும் ஒரு செந்தர வழிமுறை தமிழில் உருவாகவில்லை. இப்பொழுதெல்லாம் இந்தச் சுருக்கெழுத்துக் கூட்டில் முதலில் வரும் சொற்களில் முதலெழுத்தை எடுத்துக் கொண்டு, அதன் கடைசியில் வரும் தமிழ்ச்சொல்லை அப்படியே சொல்லுவது சரியாக இருக்குமோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. தமிழ்மொழி ஆங்கிலம் போல் முற்றிலும் முன்னொட்டு பழகும் மொழியல்ல. அதில் முன்னொட்டும் பின்னொட்டும் சேர்ந்தே இடத்திற்குத் தகுந்தாற்போற் புழங்கும். இந்நிலையில் CCTV என்பதை மூடிய சுற்றுத் தொலைக் காட்சி என்று நீளமாய்ச் சொல்லாது சு.மூ.தொ.காட்சி என்றால் மொழிமரபும் காக்கப் படுகிறது; புதிய பயனாக்கமும் ஏற்படுகிறது. எனவே இப்படி எழுதுகிறேன். 

projector = பரத்திடுவி 

server room = சேவையர் அறை

அன்புடன்,

இராம.கி.


Wednesday, October 07, 2020

சில நிறங்கள் - சொல்லொப்புமைகள்

ஆங்கிலம் - சங்கதம் - தமிழ்

Red. रक्त . Rakta அரத்தம்

Green. हरित . Harita குருந்து, கீரை

Blue. नील . Nīla நீலம்

Black. श्याम , काल. Śyāma, Kāla யாமம், காளம்

White. शुक्ल , श्वेत. Śukla, Śveta = சுலவம், வெள்ளை

Grey. धूसर . Dhūsara = தூசரை 

Brown. श्याव . Śyāva = யாவம்

Pink. पाटल . Pāṭala = பூங்கை, 

Yellow. पीत . Pītaḥ = பித்தம்

Orange. नारङग . Nāraṅga = நாரங்கை

Crimson. शोण . Śoṇa = சொன்னம்

Reddish Brown. अरुण . Aruṇa = அருணம்

Tuesday, October 06, 2020

அனைத்தும், எல்லாம்

“இவ்விரு சொற்களுடையே ஏதேனும் பொருள் வேறுபாடு உள்ளதா?" என்று தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் ஒரு கேள்வி எழுந்தது. இரண்டும் ஒன்றல்ல. சற்று நுணுகிய வேறுபாடு இவற்றிடையே உண்டு, அதேபொழுது அகரமுதலிகள் அவ்வேறுபாட்டை நேரடியாய்ச் சொல்வதில்லை. ஒன்றை இன்னொன்றிற்குச் சமமாகவே கொடுத்திருப்பர். சற்று நுணுகிய தேடல் இருந்தால் மட்டுமே வேறுபாடு புலப்படும்.

“அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப,

என்ன, மான, என்றவை எனாஅ-

ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க ,

என்ற, வியப்ப, என்றவை எனாஅ-

எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப,

கள்ள, கடுப்ப, ஆங்கவை எனாஅ-

காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள,

மாற்ற, மறுப்ப, ஆங்கவை எனாஅ-

புல்ல, பொருவ, பொற்ப, போல,

வெல்ல, வீழ, ஆங்கவை எனாஅ-

நாட, நளிய, நடுங்க, நந்த,

ஓட, புரைய, என்றவை எனாஅ-

ஆறு-ஆறு அவையும், அன்ன பிறவும்,

கூறும் காலைப் பல் குறிப்பினவே ”

என்று தொல்காப்பியம் உவம இயலில் 11 ஆம் நூற்பா சொல்லும்.  ”அன்ன” என்னும் உவம உருபில் தொடங்கினவே அ(ன்)னைத்து, அ(ன்)னைய, அ(ன்)னையன், அ(ன்)னையள், அ(ன்)னையர், அனைவர் போன்ற சொற்களாகும். ஒன்றைப் போல் (அன்ன) உள்ள இன்னொன்று, சிலதைப் போன்ற மற்றவை, ஒருவன்/ ஒருத்தி/ ஒருவர் போல் இன்னொருவர்/ இன்னொருத்தி/ இன்னொருவர் என்ற ஒக்குமை வகுப்பிற்கு (equivalence class) உள்ள சொற்பயனாக்கம் ”அனைத்து, அனைய, அனையன், அனையள், அனையர், அனைவர்” என்பதாகும். இந்த ஒக்குமை வகுப்பை சொல்லப்படும் உவமம் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். அதற்குக் கொஞ்சம் ஓர்மம் வேண்டும். யாரார் ஒக்குமை என்பது மெய்யியல், பொது அறிவு, நாகரிகம் சார்ந்து அமையும். சிந்தனையின்றி இதைச் சொல்லமுடியாது. ஒக்குமை இல்லாதவர் யாரும் இந்த ”அனைக்கும்” வகுப்பில் வரமாட்டார். எனக்கு ”அனைப்பு” என்பது உங்களுக்கு ”அனைப்பு” ஆகாது போகலாம். சிலபோது நாம்கொண்ட கருத்தாக்கம் (idealogy) கூட ஊடுவரலாம்.

ஆனால் எல்லா என்பது ஒக்குமை பார்க்காத ஒரு விளிப்பெயர். எ/ஏலா, எ/ஏலே, எ/ஏலி, எ/ஏடா, எ/ஏடே, எ/ஏடி, ஏய் என்று தென்பாண்டியில் சொல்வது ஒக்குமை பார்த்தா வருகிறது? இதன் தொடர்பாய் இந்தையிரோப்பியனில் பழகும் hello, hey, hi என்பதிலும் கூட யாரும் ஒக்குமை பார்ப்பதில்லை. அது ஒரு விளிப்பெயர்.  அவ்வளவுதான். கூப்பிடலாமா, கூப்பிடக் கூடாதா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. வெறும் மாந்தநேயம் நமக்கு இருந்தால் போதும், கூப்பிட்டுவிடுவோம். கூப்பிடப்படுபவன்/ள்/ர்/து/வை எந்தப் பால் என்று மட்டும் பார்த்துக் கூப்பிட்டு விடுவோம். ஆங்கிலத்தில் இதை to yell என்று வினையாக்குவார். தமிழிலும் எல்லுவது ”விளி-த்தல்” என்று சொல்லப்படும்.   ”எல்லா, எல்லாம், எல்லார், எல்லீர், எல்லோர்” என்ற சொற்களுக்குத் தரம் பார்க்கும் தேவையில்லை. ஆழ்ந்த மாந்த நேயம் நமக்கிருந்தால் போதும்,  

[ஆங்கிலத்தில் வரும் all கூட நம் எல்லா, எல்லாம், எல்லார், எல்லீர், எல்லோர் கூடத் தொடர்புள்ளது என்று சொன்னால் யார் கேட்க அணியமாயுள்ளார் சொல்லுங்கள்? இந்த இராம.கி.க்கு வேறு வேலையில்லை என்று நகர்ந்து விடுவார். அனைத்து என்பது ஆங்கிலத்தில் எங்கெல்லாம் inter என்று வருகிறதோ, அங்கு பயன்பாட்டில் கட்டாயம் வரும்.]  

அனைத்தும் என்பது சற்று வெளித்தள்ளும் தன்மை கொண்டது (exculsive). எல்லாம் என்பது முற்றிலும் உட்கொள்ளும் தன்மை கொண்டது (inclusive). வேறுபாடு இப்போது புரிந்ததா?

அன்புடன்,

இராம.கி.     .


Sunday, October 04, 2020

தமிழ்

 ”தமிழ் என்ற சொல் எப்படி எழுந்தது? அதன் பொருளென்ன?” என்பது இணையத்தில் பலமுறை கேட்கப்படும் கேள்வியாகும். ஆர்வத்தின் காரணமாய்ப் பலரும் இப்படிக் கேட்கிறார். முன் ஒரு முறை இதே உரையாட்டு முகநூலில் நடந்தது. அப்பொழுது விதப்பாய் நான் மறுமொழித்திருந்தேன். இவ்வுரையாட்டு எத்தளத்தில் நடந்தது என்று இப்போது சரியாக நினைவுக்கு வரவில்லை. ஆனாலும் இவ்வுரையாட்டை என் கணியில் சேமித்து வைத்தேன். இப்போது கணியில் சேமித்ததை ஒரு வடிவிற்குக் கொணர்ந்து இவ் இடுகையைத் தொகுக்கிறேன்.  முதலில் பெயர்விளக்கம், சொற்பிறப்பியலின் படி பார்ப்போம். இந்திய அரசின் Technology Development of Indian Languages (TDIL) என்னும் இந்திய அரசின் நிறுவனத்திற்காக, நம்மூர் தமிழிணையக் கல்விக் கழகத்தின் வழியாக, உருவாக்கிய  Script Grammer of Tamil பணியில் நானும் நண்பர் நாக. இளங்கோவனும் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தோம், அது ஓர் ஆங்கில ஆவ்ணம். அதில் நான் கொடுத்ததை இங்கு முன்வரிக்கிறேன். 

 Mollal (முல்லல்>மொல்லல்) and mozhithal (மொழிதல்) denote speech arising from movement of jaws, lips and tongue with air-blowing. Eg., அவனேன் வாய்க்குள் மொல்லுகிறான்? வாய்திறந்து சொல்லலாமே? Mellal (முல்லல்> மல்லல்> மெல்லல்) is grinding within a mouth through jaw movement. Mollu (மொல்லு) is a sound raised with self-beating of hands and legs in a fight. Molumolenal (மொலுமொலெனல்), molumoluththal (மொலு மொலுத்தல்) are un-interrupted speaking, shouting or murmuring. Morumoru (மொருமொரு) and moramora (மொரமொர) are frictional sounds. MolErenal (மொலேரெனல்) denotes fish-jumping out of water. Munungkal (முல்லல்*>முள்ளல்*> முணல்*> முணுங்கல்) is whisper. Moonam (முணுமுணு> முனுமுனு> மோனம்> மௌனம்) is silence. 

MizhaRRal (முழல்*>மிழல்>மிழற்றல்) is sweet talk. Mazhalai (மிழல்>மிழலை>மழலை) is baby talk. முல்>முழு> முழவு = drum. முல்>முழ>முழங்கு = Speak in a high tone, with emphasis. There are still more words to connect with sounds, speech. etc. Mozhi (முல்> மொல்>(மொள்)> மொழி) is language. Thamizh (தம்மொழி> தமிழி>தமிழ்) means their language, emphasizing ownership as in thanthai (தந்தை-father), thaay (தாய்-mother), thamaiyan (தமையன்–elder brother), thamakkai (தமக்கை–elder sister), thampin [தம்பி(ன்)–younger brother], thangai (தங்கை-younger sister) and thangkaL (தங்கள்–their). Semthamizh = reformed Tamil. 

Further, kaththal (கத்தல்) = oosai ezhupputhal (ஓசை எழுப்புதல்–raising sound). Kathaththal (கதத்தல்) / kathaiththal (கதைத்தல்) = speaking and story-telling. Kadham (கத்து> கத்தம்> கதம்) = speech. Paagadam (பா+கதம்) = பாகதம்>ப்ராக்ருதம்>Prakrit = wide speech. Sam (சம்) kadham (கதம்) > Sangadham (சங்கதம்) = mélange of regional dialects. Sem (செம்)+ kadham (கதம்)> செங்கதம்> செங்க்ருதம்>Sanskrit = reformed speech; maa (மா)+ gadhi (கதி) = மாகதி = great speech of Magdh.

முகநூலில், இதைப் படித்த ஒரு நண்பர், “அருமை. மொல்>(மொள்)> மொழி மற்றும் என்றானதாக பாடம் கற்கும்போது ல/ளகரம் ழகரமாயிற்று என்று சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி. தமிழ் என்ற சொல்லிலும் அதுவே நடந்தது என்று நினைத்தே தங்களிடம் வினவினேன். இருப்பினும் மொள்>மொழ் என்று முதற்படி திரிந்து, பின் மொள்>மொளி>மொழி என்றுதிரிந்ததாக நினைக்கிறேன். என் ஐயம் சரியா? 2)தம் மொழி>தமிழி>தமிழ் என்று பாடம் படித்தேன். அதில் தம்+மொழி என்று பிரிக்கின்றீர்கள் இது இடுகுறிப்பெயராக யாரோ பெயர் வைத்தது போல் தோன்று கிறது.மூத்த தமிழுக்கு இடுகுறிற்றாக தம்முடையயொழி தம்மொழி என்றில்லாது;தமிழுக்கான வேறு அடிச்சொல் உண்டா? என ஆராய்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டார். அவருக்கு விடை சொல்லும் முகமாய், கீழ்க்கண்டவாறு சொன்னேன். 

”ஒரு தமிழர் இன்னொரு தமிழரோடு பேசும்போது தான் தமிழில் பேசுவதாய்ச் சொல்லமாட்டார். வெறுமே பேசுவதாய்த் தான் சொல்வார். மாற்று மொழிக் காரரிடம் பேசும் போதுதான், தன்னை வேற்று மொழிக்காரன் என்று உணர்த்த வேண்டும். தமிழன் தன் நாட்டைவீட்டு வெளியே போன இடத்தில், இன்னொரு தமிழரைப் பார்த்தாரென வையுங்கள். இருவரும் பேசிக் கொள்கிறார். இதை மூன்றாமவர்,(வேற்று மொழிக் காரர்) பார்க்கிறார். அப்போது அந்த வேற்று மொழிக் காரர், “நீங்கள் என்ன மொழியில் பேசிக் கொண்டீர்கள்?” என்று அவருடைய மொழியில் கேட்கிறார். அப்போது, நீங்கள், “எங்கள் மொழியில் பேசிக்கொண்டோம்” என்று கூறுவீர்கள். அவ்வளவு தான் தமிழின் பொருள். தம் மொழி>தம்மொழி> தம்மிழி>தமிழி>தமிழ். நம்மொழிக்கு இடத்தை வைத்து ஒரு விதப்புப்பெயர் கிடையாது. ஐயா. அதனால் தான் இதைப் பழம் மொழி என்று சொல்லமுடிகிறது, It had generic name used in a specific way. 

அப்படித்தான் பாகதம், சங்கதம் போன்ற சொற்களும் கூட எழுந்தன. இவை யெல்லாமே மொழியால் ஆட்களுக்கு ஏற்பட்ட பெயர்கள். தமிழால் தமிழர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆங்கிலம் அப்படியில்லை. செருமனியில் ஆங்கில் என்ற இடத்தில் வாழ்ந்தோர் ஆங்கிலர் எனப்பட்டார். அவர் இங்கிலாந்தில் குடியேறினார். ஆங்கிலர் பேசியது ஆங்கிலம் என்று ஆகியது. அதேபோல் பாளி என்பது பள்ளியில் (புத்தப் பள்ளியில்) பேசிய பேச்சு. ஆங்கிலம்போல் இடத்தால் மொழிக்கு ஏற்பட்ட பெயர். தவிரப் பலுத்தது பாலியாயிற்று. மாகதி = நிறையப் பேர் பேசிய பேச்சு. அருத்த மாகதி = பாதி மாகதி. நம்மூர் மொழிகள் இப்படி ஓர் இயல்பான பெயரையே கொண்டிருந்தன. இதில் இனிமை, காதல், அது இது என்று கற்பனைப் பொருள்கள் கூறுவதில் பலனேயில்லை. பல தமிழாசிரியர் இப்படிக் கருத்துமுதல் வாதத்தில் பொருள்சொல்வர். அதில் உண்மையில்லை. ஆழ ஓர்ந்துபார்த்தால் எல்லாருக்கும் அவரவர் மொழி இனிமை தான். அவரவர் மொழியின் மேல் காதல் தான்” என்று நான் மறுமொழித்தேன்..

இதற்கு அப்புறமும் ஐயம் தீராது, “நன்றி ஐயா. அப்படியாயின் "எங்கள் மொழி" எம்மொழி தானே ஆகும் "தம்மொழி"எப்படி ஆகும் ஐயா?” என்று நண்பர் கேட்டார்.

”தமிழர் தம் நாட்டில் இப்படி நடந்துகொள்வார்” என்பது படர்க்கைப் பேச்சு. ”தமிழர் தம்மொழியில் பேசிக் கொண்டார்” என்பதும் படர்க்கைப் பேச்சு. எங்களுக்குள் என்பது உளப்பாடு இல்லாத தன்மைப் பன்மை. (exclusive first person plural) நங்களுக்கு என்பது உளப்பாட்டுப் பன்மை. (inclusive plural comprising the first and second persons) எல்லா உறவுப் பெயர்களும் (தகப்பன், தாய், தமக்கை, தங்கை, தம்பின் என எல்லாமே) படர்க்கையில் உருவானவை தான். அவையெல்லாம் உருவாக எந்த மொழிப்பார்வை காரணமோ, அதே பார்வை தான் ”தம்மொழி” என்று உருவானதற்கும் காரணமாகும்.. ”அவர் எம்மொழி பேசினார்” என்று ஒரு மகதன் பேசமுடியுமா? அப்போது தமிழர் மாகதி பேசினார் என்று ஆகிவிடுமே? ”தமிழர் தம்மொழி பேசினார்” என்று ஒரு மகதர் சொல்வது தான் சரி. 

வேறொரு செய்தியும் உண்டு. மாகதி என்பது அடிப்படையில், 2800 ஆண்டுகளுக்கு முன்னர், தொடக்கத்தில் இருந்தது, வட திராவிடம் தான். (புத்தர் தமிழ் கற்றார் என்பது புத்தநூல்களில் உண்டென்பர். அந்த வரலாற்றுக் குறிப்பைத் தேடவேண்டும்.) வேதமொழி இந்தியாவினுள்ளே வந்து வட திராவிடத்தோடு கலக்கக் கலக்க வட திராவிடம் இந்தை யிரோப்பியன் தோற்றங் கொள்ளத் தொடங்கியது. இன்றைக்கும் ”நான் அவனுக்குப் பொத்தகம் கொடுத்தேன்” என்பது தான் கரிபோலியின் (இந்தியின்) அடிப்படை வாசக அமைப்பு. இன்னும் திராவிடக் கட்டுமானத்தை அது தொலைக்க வில்லை. இந்திய மொழிகள் பலவற்றிலும் உள்ள மொழி அடிப்படைக் கட்டுமானம் தமிழ் போன்றே உள்ளது. எப்படித் தமிழ்க் கட்டுமானத்தில் சங்கதம் வந்து உட்கார்ந்து மலையாளத்தை உருவாக்கியதோ, அப்படியே வேதமொழி வந்து உட்கார்ந்து, வடதிராவிடத்தை மாற்றியது. இது இன்று நேற்று நடப்பதில்லை. 3000 ஆண்டுகளாய் நடப்பது” என்று மேலும் சொன்னேன்.

நண்பர் இன்னும் தன் ஐயத்தை விட்டுவிடவில்லை. ”ஐயா, மகதர் " தமிழர் தம்மொழி பேசினர்"என்று மகதமொழியில் தானே சொல்லமுடியும்? அதே போல் ஏனைய மொழியினரும் அவரவர் மொழியில் தான் "தமிழர் தம்மொழி பேசினர்" என்று அவரவர் மொழியில்தான் கூறமுடியும். ஆனால் தமிழ் என்று தமிழ்மொழியில் அவர்கள் பெயர்வைக்க முடியாது. தமிழ் என்ற சொல் தமிழ் மொழிச்சொல்லே.ஆகவே தமிழரல்லாதார் அப்பெயரை வைக்க முடியாது அல்லவா? எல்லா மொழி பேசுனரும் அவரவருக்கு அததது "தம்மொழியே" இருப்பினும் தம்மொழி என்ற பொருளிலா அம்மொழிப்பெயரே வழங்குகிறது?? மற்றைய தங்கள் கருத்துபற்றி வேறொரு வாய்ப்பில் கேட்டுத்தெளிகிறேன்” என்று உரையாட்டை முடித்துக் கொண்டார். 

இது சற்று நெருடலான புரிதல். இதே கேள்வியை  தந்தை, தாய், தமையன், தமக்கை, தம்பி(ன்), தங்கை, தங்கள்  என்ற சொற்களுக்கும் தொடுக்க முடியும். ஆனாலும் நாம் தொடுப்பதில்லை. ஏன்? தன்/தம் என்னும் பகரப்பெயர் (pronoun) சேர்த்துக்கொண்டு அதற்குமுன் என், உன், அவன்/அவள்/அவர் என இன்னொரு பகரப்பெயரை நாம் ஏன் சேர்க்கிறோம்?  வேறு ஒரு கேள்வியும் பார்ப்போம். அவர் படிக்கிறார் என்றாலே பன்மை வந்துவிடுமே? பின் ஏன் பேச்சுவழக்கில் இரட்டைப் பன்மையிட்டு, “அவர்கள் படிக்கிறார்கள்” என்கிறோம்? நம்பூதிரி மனைவியை, மற்றோர், “தம்பிராட்டி (=தம்பெருமாட்டி)” என ஏனழைக்கிறார்? நம்பூதிரியை ஏன் “அத்தேகம்” என்கிறார்?  சிவநெறி ஆதீனமடங்களில், தலைவரை ஏன் “தம்பிரான்/தம்பெருமான்” என்றழைக்கிறார்? சமயக் குரவரான சுந்தரைத் :தம்பிரான் தோழர்” என்று ஏன் அழைக்கிறார்? தம்மவன் (=சுற்றத்தான்), தம்முன் (=அண்ணன்), தமப்பன் (=தகப்பன்), தமர் (உற்றார்) என்ற சொற்கள் ஏன் அப்படியுள்ளன?  இதுபோல் விளக்க முடியாத பல சொற்கள் ஏராளமாய்த் தமிழிலும் மலையாளத்திலும் உண்டு. படர்க்கையில்  ஏன் உறவுப் பெயர்கள் தொடங்குகின்றன? - என்பது அப்படி ஒரு கேள்வி, அதற்கு விடை கண்டால் தமிழில் வரும் தம் என்பதற்கும் விடை காணலாம்.  

   

Delusion, Illusion, Hallucination

ஒரு நண்பர், Delusion, Illusion, Hallucination என்பவற்றிற்கான தமிழாக்கம் கேட்டிருந்தார். நான் நேரடிச் சொல்லைச் சொல்லாது சற்று சுற்றி வளைக்கிறேன். இதனுள்ள இணைகளைப் பார்த்துப் பின் வழக்கிற்கு வருவோம்.   

Delusion இழியிழுத்தம்;  இழுத்தம் = வேறொரு கருத்திற்கு இழுத்துப் போதல். இழுத்தத்திற்கு மாறாய் இழுப்பு/ இழுவை/ என்றுஞ் சொல்லலாம். இழிநிலைக்கு இழுத்துப் போவது இழியிழுத்தம் . இழி>இயி>ஏ என்றும் இம்முன்னொட்டு தமிழிலமையும். disappointment = ஏமாற்றம் என்பதில்வரும் ”ஏ” முன்னொட்டுக் கூட இப்படியானது தான்.  இழியிழுத்தத்தை ஏயிழுத்தம் என்றுஞ் சொல்லலாம். இன்னுஞ் சுருக்கி ஏய்ப்பு என்று பேச்சுவழக்கில் நாம் அழைக்கிறோம். என் பரிந்துரை அது தான். delude (v.) இழியிழு. மேற்சொன்ன காரணங்களால் ஏய்-என்றுஞ் சொல்லலாம். "deceive, impose upon, mislead the mind or judgment of," c. 1400, from Latin deludere "to play false; to mock, deceive," from de- "down, to one's detriment" (see de-) + ludere "to play". delusory இழியிழுத்துறு>ஏய்த்துறு; ludicrous decription இழியிழுக்கும்/ஏய்க்கும் விவரிப்பு; self-deluded = தானே இழுந்துகொள்ளல். தான் ஏய்த்தல்

அடுத்தது illusion (n.) உள்ளிழுத்தம் / உள்ளிழுப்பு. = உள்ளேய்ப்பு. உள்ளே இருக்கும் ஏய்ப்பு. mid-14c., "mockery, scorning, derision;" late 14c., "act of deception; deceptive appearance, apparition; delusion of the mind," from Old French illusion "a mocking, deceit, deception" (12c.), from Latin illusionem (nominative illusio) "a mocking, jesting, jeering; irony," from past-participle stem of illudere "mock at," literally "to play with," from assimilated form of in- "at, upon" (from PIE root *en "in") + ludere "to play" (see ludicrous). .

முடிவில் hallucinate (v.) அலையிழுத்தம் /அலை ஏய்ப்பு.  மாறி மாறி ஒன்றிலிருந்து இன்னொன்று என அலைப்படுத்தும் ஏய்ப்பு. "to have illusions," 1650s, from Latin alucinatus (later hallucinatus), past participle of alucinari "wander (in the mind), dream; talk unreasonably, ramble in thought," probably from Greek alyein, Attic halyein "wander in mind, be at a loss, be beside oneself (with grief, joy, perplexity), be distraught," also "wander about," which probably is related to alaomai "wander about" [Barnhart, Klein]. The Latin ending probably was influenced by vaticinari "to prophecy," also "to rave." Older in English in a rare and now obsolete transitive sense "deceive" (c. 1600); occasionally used 19c. in transitive sense "to cause hallucination." hallucination = அலை ஏய்ப்பம்; hallucinatory = அலை ஏய்ப்புறு