Wednesday, May 01, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 1

”எழுத்துத் தமிழும், பேச்சுத் தமிழும் ஒன்றல்ல, அவை வெவ்வேறு மொழிகள்” என்று சிலர் அரற்றுவதும், மற்றோர் அதை மறுப்பதுமாய் ctamil@services.cnrs.fr மடற்குழுவில் ஆங்கில உரையாடல் ஒன்று நடந்தது. மறுப்போர் கூற்றுக்கள் தமிழ்மன்றம் மடற்குழுவிலும் தமிழில் வந்தன.

“வெவ்வேறு மொழிகள்” என்போர் இருவகையினராவர். முதல்வகையினர் தமிழ் விழையும் மாணவர்க்கு மொழி கற்பிக்கும் பேராசிரியர். இன்னொருவர் எழுத்துத் தமிழுக்கும் (LT), பேச்சுத் தமிழுக்கும் (ST) இடையே ஒட்டுறவை உடைத்து, ’அகண்ட பாரதக் கருத்தோட்டத்துள்’ தமிழை அடக்கிச் ”சங்கதத்தாக்கு சரிந்ததால், ஆங்கிலத்தாக்கை அணைக்கும்” அரசியல் குசும்பராவர். இரண்டாமவரின் அரசியற் புரியாது, ”தம் பேச்சு எங்கு பயனுறும்?” என்றும் விளங்காது, முதல்வகைப் பேராசிரியர் தடுமாறுகிறார். ”இரு தமிழுக்கும் தோற்ற வேறுபாடிருப்பினும், அவை அடிப்படையில் உறவுள்ளவையே, சீரான நிரலிகளால் இவ்வுறவை நிறுவலாம்” என்போர் முன்சொன்ன இருவரோடு சேரா, மூன்றாங் கருத்தராவர். முதல்வகைப் பேராசிரியரோடு கனிவும், பொறுமை உரையாடலும் தேவை. உள்ளொன்று வைத்துப் புறம்பேசுங் குசும்பரோடு உரையாடுவது வெட்டிவேலை. அதிற் கொஞ்சமும் பொருளில்லை.

இதற்கான ஆங்கிலப் பங்களிப்பை ctamil மடற்குழுவிற் செய்ய வேண்டும். அது ஒரு புறமாக, நொதுமருக்கும் (neutral persons) இவ்வுரையாடல் தெரிய வேண்டி, ஆர்வலர் தமிழ்க் களங்களில் எழுதவேண்டும். தமிழாயும் அறிஞர் இதனால் உந்துற்று தமிழாய்வுக் களங்களில் உரையாட முன்வந்தால் பலருக்கும் நல்லது. (ஆங்கிலம் புழங்கும் களங்களில் ஈழச்சிக்கலை எடுத்துரைத்து இனக்கொலை, இராச பக்சேவை நயமன்றம் இழுத்தல், நாடு விழைத் தேர்தல், தமிழீழம் என்று ஆழ்ந்து பேசினாற் பற்றாது, 10 கோடித் தமிழரைக் கிளர வைப்பதும் நம் போன்றோர் கடமைதான். அதுபோலத் தமிழாய்வுச் செய்திகளை ஆங்கிலக் களங்களில் அடுக்கினால் மட்டும் பற்றாது. தமிழ்க் களங்களிலும் அறிவுறுத்த வேண்டும்.)

பட்டிமன்றம், பாட்டரங்கம், பேச்சரங்கம் என வந்தாலும் வந்தது, தமிழ்ப்பேச்சு நம்மூரிற் களியாட்டாய் ஆனது. உருப்படியான பரிமாற்றம் தமிழில் அரிதே நடக்கிறது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சீராட்டிய பட்டி மன்ற மரபு, பேரா. சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி ஆகியோர் கூத்துக்களால் சிரிப்புத் தோரணங்கள், துணுக்குகள், கேளிக்கைகள் என்றாயிற்று. ஆழமான சான்று தரும் கட்டுரைகள் தமிழிற் அருகி, ”தரமான கட்டுரைகளா? ஆங்கிலம் தாவு” என்ற அவலத்திற்குத் தமிழர் தள்ளப் பட்டிருக்கிறார். வேலைக்காரரோடு பேச மட்டுமே தமிழை வைத்து, அலுவல், தனியார் உரைகளில் தமிழர் ஆங்கில ஒயிலாட்டமே ஆடுகிறார்; தமிழ்க் களங்கள் சவலையாகித் தமிங்கிலமே கோலோச்சுகிறது. கருத்தாடும் தமிழ்க் களங்கள் சிச்சிறிதாய் உருமாறுகின்றன. தமிழ் மடற்குழுக்களிற் பங்களிப்புக் குறைந்து, முகநூலே பெரிதாகிறது. புதிய வேடந்தாங்கல்களுக்குத் தமிழ்ப்பறவைகள் சிறகடிக்கின்றன.

அறிவுய்திகள் (intelligensia) தமிழ்த் தாளிகைகளில் எழுதாது, ஆங்கிலத் தாளிகைகளிலேயே அகல வரைகிறார். தமிழின் இயலுமையை ஆங்கிலத்தில் வாதாடுவது வழமையாகி இணையம் எங்கும் கூடுகிறது. ”இது செய்யத்தான் வேண்டுமோ?” என்ற அடாவடித் தோற்றமுங் காட்டுகிறது. தமிழைக் காட்டிலும் ஆங்கிலப் பொத்தகங்களே தமிழ்நாட்டு விற்பனையிற் ”சக்கை” போடுகின்றன. திரைப்படம், கவிதை, களியாட்டம், அரட்டை, கிசுகிசு என மடற்குழுக்களிலும், வலைப்பதிவுகளிலும், முகநூலிலும், கீச்சுக்களிலும் (twitter) தமிழ் / தமிங்கிலம் பேசுவோர், ”அறிவியல், நுட்பியல், குமுகாயவியல், பொருளியல், மெய்யியல்...” என்று அறிவுப் புலங்களில் ஆங்கிலமே விழைகிறார்.

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம், களியாட்டங்களுக்குத் தமிழெழுத்துக்களைப் பயன்படுத்துவது கூட தமிழிளைஞரிடம் குறைந்து கொண்டிருக்கிறது. உரோமன் எழுத்தில் தமிங்கிலம் எழுதுவது கூடிக்கொண்டிருக்கிறது. பலரும் “அது சரி” என்று கூட வாதாடுகிறார். “மொழியும், எழுத்தும் வெவ்வேறாம்”- சொல்கிறார். 42 ஆண்டுகாலத் திராவிட ஆட்சியிற் கல்வித்துறையெங்கும் ஊழலைப் பெருக்கி 5000க்கும் மேற்பட்ட ஆங்கில வழி மடிக்குழைப் பள்ளிகளைக் (matriculation schools) கயமையோடு தோற்றுவித்துவிட்டு, அதன் விளைவை, விதியை நாம் சந்திக்க வேண்டுமல்லவா? நட்டது நஞ்செனில், தொட்டது துலங்குமா, என்ன? தமிழரிலிருந்து தமிங்கிலர் என்போர் புற்றீசலாய்ப் புறப்படுகிறார். தமிழ்பேச வெட்கப்படும் தமிழர் ஊரெங்கும் பெருத்துப் போனார்.

இதைக் குறுஞ்செய்தி விற்பன்னரும், மிடையங்களும் (media) ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். நோக்கியா, சாம்சங், ஏர்டெல், ஏர்செல், வோடபோன் போன்ற நகர்பேசி (mobile phones) விற்பனையாளர் தீவிர வாடிக்கையாக்குகின்றனர். [இப்படி நடப்பதை வாகாக மறைத்துவிட்டு, ”தமிழெழுத்தைச் சீர்திருத்தினால் இளைஞர் தமிழைப் புழங்கத் தொடங்கி விடுவர்” என்று போலித் திராவிட வாதம் பேசி, நாசகார எழுத்துச் சீர்திருத்தர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குறுக்குச் சால் போடுகிறார்.] நம்மைச் சுற்றித் தமிழ்ப் புழக்கம் பெரிதுங் குறைவதை ஆழ உணர்ந்தோமில்லை. மீண்டும் ஒரு மறைமலை அடிகளார் 21 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற் புதிதாய் எழவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆங்கிலமே பழகும் போக்கில் நானும் அடியனாகக் கூடாதென்று எண்ணுகிறேன். “ஆங்கிலப் பங்களிப்பைக் குறைக்காதீர்” என்றே நண்பர் சொல்லுகிறார். இருந்தாலும் ”தமிழரிடைத் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் ஆங்கில உரையாட்டை/எழுத்தை அண்மைக் காலமாய் பெரிதுங் குறைத்து வருகிறேன்.

-----------------------------------------------

எழுத்து நடைக்கும், பேச்சு நடைக்கும் நடுவே எவ்வளவென்று சொல்ல முடியா இடைவெளி தமிழில் என்றுமேயுண்டு; அவ்வளவு ஏன்? அக்கால, இக்கால எழுத்து நடைகளுக்கிடையும் வேறுபாடுண்டு. எடுத்துக் காட்டாய் மூன்று முகன்மை வேறுபாடுகளைப் பார்ப்போம்.

முதல் வேறுபாடு வாக்கிய/தொடர்ச் செறிவு பற்றியதாகும். சங்கப் பாட்டில் இது நிறைந்திருக்கும். தேர்ந்த திரைப்பட எடுவிப்பாளர் (movie editor) போல 4,5 காட்சிகளை அடுத்தடுத்து வெட்டி ஒட்டிக் குறும்படமாய்ச் சொற்சிக்கனம் சேரத் தொகுத்திருக்கும். பாட்டின் ஆசிரியர் காட்சிக்குத் தேவையான பெயர்ச் சொற்களோடு, வினைச் சொற்களைப் பொருத்தி விவரிப்பாரே ஒழிய (”கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி.கண்ணே உள” என்ற குறளைச் சொல்லிப் பாருங்கள்.), பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ முதலிற் தொடுத்து, உப்பிற்குச் சப்பாணியாய் உம்மென்று அதற்குப் பின்னிழுத்து, ”ஆகு, இடு, இரு, ஏற்று, கிட்டு, கொள், செல், பண்ணு, மாட்டு, விடு” போன்ற பல்வேறு துணை வினைகளை (auxilllary verbs) அளவு கடந்த சரமாய் ஒட்டி, கட்டியத் தொடர்களை (conditional phrases) வெற்றுப் பேச்சாய் அடுக்கார். [எத்தனை துணை வினைகள் இக்காலம் பயில்கிறோம்? - என்ற கணக்கை யாரேனும் எடுத்தால் நலம் பயக்கும்.]

இக்கால மேடைப் பேச்சுக்களை, குறிப்பாக வீதிமுனைகள், ஊர்ப்பொட்டல்கள், அரங்க மேடைகளில் நடைபெறும் திராவிடக் கட்சிகளின் அரசியல் மேடைப் பேச்சுக்களை, நினைவு கூருங்கள். எத்தனை துணைவினைகள் அவற்றில் விடாது இழைகின்றன? ”துணைவினைகள் இல்லாது தமிழிற் பேசமுடியாதோ?” எனும் அளவிற்கு நோயாய்த் தொடர்கின்றன. ”நான் பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, பொழுது சாய்ந்து விட்டிருந்த போது, அவன் என்னைக் கடந்து சென்றான்” என்பது இற்றைத்தமிழில் படிக்கக் கூடிய ஒரு வாக்கியமாகும். வேற்றுமொழி நடைகளைப் படித்து, அப்படியே தமிழிற் சொல்ல முற்பட்ட விளைவு இதனுள் தெரிகிறதா? ”கொண்டிருந்த வேளையிலே, சாய்ந்து விட்டிருந்த போது” போன்றவை இங்கு தேவையா? ”பொழுது சாய்ந்தது; பார்த்தேன்; கடந்தான்” என்ற செறிவோடு இதே கருத்தைச் சங்கத்தமிழ் சுருக்கும். ”நான், அவன்” - என்ற சுட்டுப் பெயர்கள், ”வேளை, போது”- என்னும் காலக் குறிப்புக்கள், “கொண்டிருந்த, விட்டிருந்த” - போன்ற துணைவினைகள் எல்லாம் அதில் அரியப்பட்டே காட்சியளிக்கும்.

நசை பெரிதுடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி! அவர் சென்ற ஆறே!

என்ற குறுந்தொகை 37 ஆம் பாட்டையும்,

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

என்ற 1317 ஆம் குறளையும் (இதில் ஆகு - துணைவினை) படித்தால் நான் சொல்லுவது விளங்கும். பொதுவாகச் சங்கத்தமிழ் என்பது சொற்சித்திரமாயும், இற்றைத்தமிழ் என்பது ஒரு காண்டிகை விரிவுரையாயும் இருக்கின்றன. சந்தையிற் கிடைக்கும் எந்த உரையைப் படித்தாலும் இது விளங்கும். 12/13/14 ஆம் நூற்றாண்டு உரையில் ஓரளவும், அண்மைக் காலத்தில் இன்னும் பெரிதாயும் இருக்கும். சாறிலாச் சக்கையாய்ச் சொற்களை விரித்துக் கொட்டுவதே இற்றை நடை போலும். இது நம் பிழையேயொழிய மொழிக் குற்றமல்ல. சுருங்கச் சொல்லும் பாங்கு பெருக வேண்டும்.) [ஒரு செய்தித்தாளில் ஏதேனும் ஒரு பத்தியை எடுத்து, அது எந்தப் புலனமானாலும் சரி, துணை வினைகளை வெட்டிச் சுருக்கிப் பார்த்திருக்கிறீர்களா?]

அளவிற்கு மீறிப் பயனாகும் துணை வினைகள் இற்றைத் தமிழைச் சுற்றி வளைத்த மொழியாக்கிச் செயற்கைத் தன்மையாற் கெடுக்கின்றன. பெரும்பாடு பட்டு இப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும். சங்கத் தமிழுக்கும், இற்றைத் தமிழுக்கும் நான் கண்ட பெருத்த வேறுபாடு அளவுக்கதிகத் துணை வினைப் பழக்கமேயாகும். தமிழ் சொல்லிக் கொடுப்போர் இதனைக் கணக்கிற் கொண்டால் நலமாயிருக்கும். வாக்கியச் செறிவை மாணவருக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்க வேண்டும். (என்ன ஆகூழோ, தெரியாது, நன்னடை பயில்விப்பதைத் தமிழாசிரியர் நிறுத்தி மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சிக்கல் தமிழாசிரியரிடமிருக்கிறது. மொழியிலில்லை. தமிழ்நடையை ஆங்கிலநடையாக்குவதும் அதையே சொல்லிக் கொடுப்பதும் சரியா?)

இரண்டாம் வேறுபாடு சொற்செறிவுக் குறைவாகும். இக்காலத்தில் ஓரசை, ஈரசை, மீறி எப்போதாவது மூவசையிற் புதுச்சொற்களைப் படைத்தால் ஏற்கலாம். தமிழ்ச் சிந்தனையைப் சுற்றி வளைத்த பலக்கிய (complex) வழியாக்கி, வரையறை போல நீள நீளச் சொற்களைப் படைத்தால் எப்படி? [கணி என்றாலே வினையாயும், பெயராயும் அமையமுடியும். கணிப்பொறி என்ற சொல்லிற் பொறி தேவையா, என்ன?] இதனாலும் மொழியின் செயற்கைத் தன்மை கூடுகிறதே? ”ஒரு தமிழ்ப் பேச்சிற் சொல்லாட்சியில் நிரவலாய் எத்தனை அசைகள் உள்ளன?” என்று கணக்கிட்டால், சங்கத் தமிழில் ”2, 2 1/4” என்றாகும். இற்றைத் தமிழில் ”3,4”க்கு வந்து விடும். ஒருபொருட் சொற்களான ”அருவி”யையும் ”நீர்வீழ்ச்சி”யையும் ஒப்பிட்டால், செறிவெங்கே வற்றுகிறது? ”தண்மலரையும்”, ”குளிர்ச்சியான மலர்” எனும் விளக்கத்தையும் ஒப்பிடுங்கள். ”ஆனது” என்ற துணைவினை போட்டு நம்மவர் நீட்டி முழக்குவது தெரிகிறதா? அளவுக்கு மீறி அசைகளைக் கொட்டுவதேன்? (தண்ணீரன்றி வேறெதற்கும் ”தண்” பயன்படுத்துகிறோமா?)

சிலநாட்கள் முன்னர் வெனிசுவேலா அதிபர் இறந்தபோது திண்ணை இணைய இதழில் அவர் சொன்னதாக “நான் மரணிக்க விரும்பவில்லை” என்ற வாசகம் வந்தது. ”மரித்தல்” வினையிற் பெற்ற பெயர்ச்சொல் ”மரணம்” ஆகும். மீண்டும் “மரணி” எனத் தமிழில் அதை வினையாக்குவது வியப்பு நடைமுறை. இதேபோல் வழக்காற்றை 10 ஆண்டுகள் முன் பார்த்தேன். ”கற்பித்தல்” வினை. ”கற்பனை” - பெயர்ச்சொல். மீண்டும் அதைக் “கற்பனி” என்றால் எப்படி? இணையத் தமிழறிஞர் ஒருவர் இதை எழுதினார். சொற்செறிவு எங்கே குறைகிறது?
இற்றைத் தமிழிலா? சங்கத் தமிழிலா?

இருவேறு நடைகளுக்கிடையே மூன்றாம் வகை வேறுபாடுஞ் சொல்லமுடியும். இது காட்சிச் செறிவுக் குறைதலாகும். சங்கத்தமிழ் உவமைகள் நிறைந்தது. ("அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் கொல் மாலும் என் நெஞ்சு" என்ற குறளை எண்ணிப் பாருங்கள்.) பொருளைக் காட்சிப்புலனாக்கப் பயன்படும் வகையில், ”போல்மங்கள், படிமங்கள், ஒப்பீடுகள்” அதனுள் விரவிக் கிடக்கும். நேரடி உலர் பேச்சில் இத்தனை செறிவைக் கொண்டுவர இயலாது. இற்றைத் தமிழில் நாட்டுப்புறத்தில் மட்டுமே ”உவமைகள், போல்மங்கள், படிமங்கள், ஒப்பீடுகள்” தொடருகின்றன. நகர்ப்புற நடையிற் செந்தரப் பயன்பாடுகள் தவிர்த்து இவை குறைந்தே கிடக்கின்றன.

நம் மரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் நம்மிளையோர் எங்கே படிக்கிறார்? பைன், தேவதாரு, பனிக்கரடி, பண்டா, அமெரிக்கக் கழுகு என்று வெளிநாட்டையே பாடம் படித்தால் தமிழ்நாட்டு இயற்கை இவருக்கு எப்படிப் புலப்படும்? ”உலகமயமாக்கல்” என்ற பலிபீடத்திற் நம் பிள்ளைகளைக் காவு கொடுத்து, சுற்றிலக்குப் பார்வையைத் (localisation)
அடியோடு தொலைக்கிறோமே? பொதுவாக சூழியல் இயற்கையையும், சுற்றுக் காட்சிகளையும் ஆற அவதானிக்கும் பழக்கம் நம் நகர்ப்புறத்திற் பலருக்குங் குறைந்து போனது.

(ஏராளங் காட்டுகளை நான் தரமுடியும். ஆனைச் சாத்தான் என்பது எத்தனை பேருக்கு விளங்கும்? அந்தக் காலக் கோதை நாச்சியாருக்கு விளங்கும். புங்க மரம் ஏதென்று தெரியுமா? குலவையெழுப்பத் தெரியுமா? ”முதுமக்கள் தாழி, பதுக்கை” என்றால் என்ன? கல்லணையைக் கரிகாலன் எப்படியெழுப்பினான்? சளி பிடித்தால் என்ன சாப்பிடலாம்? வேப்பம்பூப் பச்சடி என்றைக்கு வீட்டில் வைக்கவேண்டும்? கீழாநெல்லிச் செடி எதற்குப் பயன்படும்? பாழாய்ப் போன ”அலோப்பதிக்கே” பணத்தைக் கொடுத்து நம்முடைய பழம் மருத்துவங்களைத் தொலைக்கிறோமே?) எல்லாமே ஒரு வேகம். ”தன் கருமங்கள், தன் முனைப்பு, தன் சாதனை” என்றே நம் வாழ்க்கை ஆகிப் போனது. காட்சிச் செறிவு குறைந்து சூழலை அவதானிக்காது போனதை எல்லோரும் அறிந்த குறுந்தொகைப் பாட்டை வைத்தே சொல்லமுடியும்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே

என்ற பாட்டில் செம்புலம் என்பது செம்மண் நிலமா? அன்றிச் செம்மையான சமதள நிலமா? சற்று ஓர்ந்து பார்க்கோமா? அவதானிப்புக் குறைந்து போனதாற்றானே தவறான உரை கால காலத்திற்கும் பல்வேறு உரையாசிரியரால் மீண்டும் மீண்டும் எழுதப் படுகிறது. [செம்மண் புலத்திற் சிரட்டித் திரிந்தவன் நான். இருந்தாலுங் கேட்கிறேன் :-))))] கரிசல் மண்ணிற் பெய்த நீர் கலக்காதோ? அல்லது சுண்ணச் சம தளத்தில் நீர் ஒன்றுசேர்ந்து ஓடாதா? இங்கு எப்படிச் செம்மண் உயர்ந்தது?

ஆக தொடர்ச் செறிவு, சொற் செறிவு, காட்சிச் செறிவு என மூன்று வகையாலும் இற்றைத் தமிழ் வேறுபடுகிறது. இன்னுங் கூர்த்த வேறுபாடுகளை எடுத்துக் காட்டலாம். நீங்களே தாமாக உணர முடியும். ”அது வேறு தமிழ், இது வேறு தமிழா?” என்றால் ”இன்னும் இல்லை; ஒன்றை மாற்றிச் செய்யும் இன்னொரு வேறுபாடு” என்றே சொல்லுவேன். ”பழையதை விடாது படிக்க வைத்தால், புதியது உடையாது நிற்கும்” என்று உறுதி சொல்வேன். வரலாறு புரிந்தோருக்கு நான் சொல்வது புரியும். முன்னோர் ஆக்கங்களைப் படித்தே நம் நடையை ஒழுங்கு செய்கிறோம். முன்னோர் இலக்கியங்கள் தம் நடையைத் தெரிவிப்பதோடு, நம் எதிர்கால நடை விலகாதிருப்பதற்கு வழித்துணையும் ஆகின்றன. [They remain descriptive of styles in earlier centuries and also prescriptive for our future style.] இதனாற்றான் பழையதை மீளப் படித்து, நம் நடையைப் புதுப்பிக்கச் சொல்கிறோம். மரபை நாம் என்றுந் தொலைக்கக் கூடாது.

என்றைக்குச் சங்க இலக்கியங்களுக்குப் படிப்பாளர் தடை போடுகிறோமோ, அன்றே தமிழ் நடையில் உடைப்பு ஏற்படும். அரசியற் குசும்பர் அதற்கே முயல்கிறார். ”2500 ஆண்டுகள் ஆகியும், தமிழர் மரபைத் தொலைக்காதிருந்தால் இவர் தொடர்ச்சி நிலைத்து விடுமே? அப்படித் தொடர விடக்கூடாதே?”.என்ற கொடிய எண்ணத்திற்றான், ”இரண்டும் வெவ்வேறு மொழிகள்” என்று குசும்பர் கூக்குரலிடுகிறார். மொத்தத்தில் தமிழின் அடிநாடி எதோ, அதைக் குலைக்க விரும்புகிறார். ”இருவேறு மொழிகள்” எனில் அவர் நினைப்பது நடந்துவிடும். அரசியற் புரியாத முதல்வகைப் பேராசிரியர் ஆட்டம் புரியாது, தப்புத் தாளம் போடுகிறார்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Arun said...

I have seen the so called 'haiku' kavidhaigal in vikatan 2 decades ago which promoted such non-sense. Since there is no single authority for the language, everyone takes the right to spoil it.

Imayavaramban said...

அருமை ஐயா! அப்படியென்றால் செம்புலம் என்பது செம்மையான நிலம் என்பதைத்தான் சுட்டி நிற்கிறதா? எனக்கும் அப்படி ஓர் ஐயப்பாடு இருந்தது உண்டு!