Friday, October 21, 2011

மாணிக்க வாசகர் காலம் - 7

குதிரை நரியான திருவிளையாடல்:

பெருந்துறையிலிருந்து நேர்த்தியுடன் வந்த குதிரைகள் அரசனின் பந்தியிற் (லாயம் என்ற உருதுச்சொல்லை இன்று புழங்கி நம் தமிழ்ச்சொல்லை இழந்தோம்) கட்டப்பட்ட இரவிலும் அடுத்த நாளிலும் நடந்தவை குறிக்கும்  இத் திருவிளையாடல் தன்னுடைய விவரிப்பளவில் மிகவும் சிறியதாகும். மதுரை அடைந்த மாயப்புரவிகள் ஒன்றிற்கொன்று தமக்குள் முகம்பார்த்து கீழே வருவதுபோற் சொல்லிக் கொண்டனவாம்:

“நேற்றுநாம் வந்தவழியெலாம் நம்மை ஓட்டியவருக்குக் கோவம் வந்து, வரும் பாதையில் பெரிதும் அடிபட்டோம்; முடிவில் நம் கால்களைக் கயிறுகளாற் கட்டிப் பந்தியில் நிறுத்திவிட்டார். இப்படியே நின்று கொண்டிருந்தால் குருதி வெளிப்பட்டுப் புண்பட்டுப் போவோம். நமக்கு வேண்டிய நிணமும் இங்கு இல்லை. கொள்ளும் புல்லுமே இவர் நமக்குத் தருவார். போனாற் போனதென விட்டால், இவர் நம்மேல் ஏறி விரட்டவும் பார்ப்பார்; நம் உண்மையுருவை இவரிடங் காட்ட வேண்டியது தான்” என்று சொல்லிக் கொண்டனவாம்.

அதே இரவில் தம்மைக் கட்டிய கடிவாளக் கயிறுகளை பல்லால் மென்று கடித்து அறுத்து, மீண்டும் நரிகளாகி, கடைத்தெருக்கள், வாயில்கள், மடங்கள், மன்றுகள், கடிமனைகள், அங்கணங்கள் (= சாக்கடைச் சந்துகள் என்பதற்கான பழஞ் சொல். இன்றைக்கு drainages என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தக் கூடிய சொல்.) எனப் பலவிடங்களிலும் நுழைந்து ஒன்றுக்கு ஒன்று உறுமி, தமக்குள் சள்ளிட்ட பசியால் இகலித்து, ஊரிலுள்ள பழம் புரவிகள், துள்ளும் மறிக்கூட்டம், யானைக் கன்றுகள், ஆடுகள், கோழிகள், பன்றிகள் ஆகியன கடித்துக்குதறி, யாரேனும் நகரிலெழுந்தால் அவரைச் சுழற்றியடித்து விரட்டி, எங்கும் போகாமல் ஆக்கி, ஊளையிடத் தொடங்கின.

இதையெலாம் பார்த்துத் தவித்த குதிரைப் பந்தியாட்கள், என்ன செய்வது என்றறியாது கலங்கி, பொழுது புலருமுன்னர் அரசனிடம் வந்து,  இரவில் கொள்ளுப்பை நிறையப் புல்லும், கொள்ளும், பயறும், கடலையும், துவரையும் இட்டும், அவற்றை உண்ணாப் புதுக்குதிரைகள் என்ன மாயமோ நரிகளாய் உருமாறி கையில் அகப்படாது ஓடிப்போய் ஊளையிட்டதையும், ஊர் விலங்குகளைக் கடித்துக் குதறியதையும் கூறுகிறார்.

அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”இந்நிலை எப்படி வந்தது? யாருக்கு என்ன தீங்கு நாம் செய்தோம்?” என்று தடுமாறுகிறான். அமைச்சரைக் கூட்டி உசாவுகிறான். தன் அன்றாடச் சடங்குகளை முடித்து வந்த வாதவூரரும் உசாவலிற் கலந்து கொள்கிறார். வாதவூரரைப் பார்த்த அரசன் அவர் மேல் பழி சுமத்துகிறான். வாதவூரர் “நேற்று நீங்கள் கைக்கொள்கையில் எல்லாம் சரியாய் இருந்ததே? என மறுமொழிக்கிறார்.

“நரிகளைக் குதிரைகளாக மாற்றி மீண்டும் அவற்றை நரிகளாகச் செய்து எம்மை ஏமாற்றியது நீயே. இப்படி இந்திர ஞாலம் செய்யும் நீயோ சாதி அந்தணனாகவும் ஆகிப்போனாய். உன்னை என்ன செய்வதென்று தெரியாது நிற்கிறேன்; என் பொன்னை அழித்தார் யார்? நற்குடும்பத்தார்க்கு அஞ்சாது, கொடுமை செய்த குதிரைத் தலைவன் யார்? அவனோடு கூடவந்த சாத்துவர் (=வணிகர்) எங்கே? உன் மேனி முற்றும் வாடும்படி உன்னைத் தண்டிக்க வேண்டும் போலும்” என விதப்பாய் அலறுகிறான். ”நீர் வேதம் ஓதியது இக் காரியம் செய்யவோ? உம்மைச் சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழி யில்லை” என்று புலம்பிச் சிறையில் அடைக்கிறான்.

அத்தோடு இச்சிறு திருவிளையாடல் முடிகிறது. அடுத்து மண்சுமந்த திருவிளையாடல் தொடங்குகிறது. அதற்குள் போகு முன் ஒரு கேள்வியை நாம் அலச வேண்டும். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலும், நரி குதிரையான திருவிளையாடலும், குதிரை நரியான திருவிளையாடலும் ஏன் நடந்தன? மணிவாசகரைப் பெருமைப் படுத்தவா? அதனூடே நரி-குதிரை மாற்றங்கள் ஏன் நடைபெற வேண்டும்? 4 ஆந் தொடரும் மண்சுமந்த திருவிளையாடலில் அரசனையும் சேர்த்து ஊரிலுள்ளோர் எல்லோர்க்கும் அடி விழுகிறது. அது நம்மை யோசிக்க வைக்கிறது. இப்படியோர் நடப்பின் மூலம் நமக்கென்ன உணர்த்தப்படுகிறது? இத் திருவிளையாடல்களுள் ஒரு பொருள் இருக்க வேண்டுமே?

இந் 4 திருவிளையாடல்களோடு தொடர்புள்ள வரகுணனுக்குச் சிவலோகம் காட்டின திருவிளையாடல், விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல், உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல், மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் ஆகியவற்றையும் சேர்த்து ஓர்ந்துபார்த்தால், பாண்டி நாட்டின் பொருள்வள நிலைமை மிகவும் மோசமாய் இருந்திருக்ககுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை அது பஞ்ச காலமோ? தவறான அழுத்தங்கள் கொடுக்கப் பட்டு, மக்கள் மேல் நடக்கும் பெருங்கேடுகளைப் போக்கி, சரவல்களைக் குறைத்து, நன்மை விளைவிக்காத அரசன், பஞ்சத்தைக் கவனிக்காத அரசன், இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து அதைப் பற்றிக் கொள்வதில் கவனஞ் செலுத்தி, தன் குதிரைப் படையைக் கட்டுவதிலே பெருங்கவனமாய் இருந்துள்ளான். இப்படிப் பஞ்ச காலத்தில் படையெடுப்பை ஒதுக்கி, நாட்டுமக்கள் பசியொழிய அரசன் வழிபார்த்திருக்க வேண்டாமோ?

”நாட்டின் அவலநிலையை அரசனுக்கு உணர்த்தி தவறான போக்கிலிருந்து அவனைத் திருப்ப ஏந்தாக இத்திருவிளையாடல்கள் பயன்பட்டிருக்குமோ?” என்ற ஓர்மை நமக்கு எழுகிறது. ”இதில் மணிவாசகர் ஒரு முகனக்கருவியாய் அமைந்தாரோ?” என்றுஞ் சொல்லத் தோன்றுகிறது. இல்லாவிடில் இத் திருவிளையாடல்களுக்கு பொருளில்லாது போகிறது.

என்றைக்கு இறைவனே சுந்தர பாண்டியராய் வந்து பாண்டிய இளவரசியான அங்கயற்கண் அம்மையை மணந்து, பாண்டி நாட்டுக் கொடி வழி தொடங்கி வைத்தாரோ, அன்றிலிருந்து அரசிற்கு ஏதேனும் நடந்தால்  அவ்வப்போது அவர் இடையூறுவதாகவே திருவிளையாடற் புராணம் சொல்கிறது.

மாணிக்க வாசகரின் காலம் பாண்டிய அரசிற்கு மிகுந்த சோதனை எழுந்த காலம் போலும். அது பெரும்பாலும் பஞ்சகாலமாய் இருந்திருக்க வேண்டும். அடுத்து மண்சுமந்த திருவிளையாடலுக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

wooddenhead said...

சில காலத்திற்கு முன் உங்கள் பதிவினைக் கண்ட முதல் இடைவிடாமல் படித்து வருகிறேன். உங்கள் ஆராய்ச்சி மிகவும் ஆழமானது. நிரைய தகவல்களை எதிர்பார்த்து அடுத்த பதிவுக்காக வணங்கிக் காத்திருக்கிறேன்..

நன்றி..

-ஆனந்தன்

மதன்மணி said...

மதன்மணி பேசுகிறேன்
நலமா பதிவரே
மிகவும் நன்றாகவுள்ளது

மதன்மணி said...

மதன்மணி பேசுகிறேன்
நலமா பதிவரே
மிகவும் நன்றாகவுள்ளது

மதன்மணி said...

மதன்மணி பேசுகிறேன்
நலமா பதிவரே

R.DEVARAJAN said...

இலக்கிய அகச்சான்றுகளின் துணையோடு எழுந்துள்ள அழகான, அருமையானஆராய்ச்சி; மீண்டும் மீண்டும் வாசித்து மனத்தில்.
பதிய வைத்துக் கொள்ள முயன்று வருகிறேன், நன்றி

தேவ்