Sunday, June 21, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 1

உலகெங்கும் பல்வேறு இனத்தாரின் நீட்டளவைகள் தொடக்கத்தில் மாந்த உடலுறுப்புகளை ஒட்டியே பிறந்திருக்கின்றன. தமிழ் நீட்டளவைகளும் இப்படியே எழுந்திருக்கலாம். இந்த அளவைகளை இற்றைக் கண்களாற் பார்த்தால், அவை வெளித்திட்டாய்த் (objective) தோன்றாது. ஏனெனில் விரல், சாண், முழம் போன்றவை மாந்தருக்கு மாந்தர், ஏன் ஒரே மாந்தனில் அகவைக்கு அகவை, வேறுபாடு கொண்டவை. இருப்பினும், யாரோ ஒரு மன்னனை, அன்றித் தலைவனை, அன்றிச் சாத்தார மாந்தனை, அளவுகோலாக்கி இவை எழுந்திருக்க வேண்டும்.

[சாத்தாரம் எனும் தமிழ்ச்சொல் சாதாரணம் என்ற இருபிறப்பிச் சொல்லுக்கு இணையானது, நீலகேசியின் (ஆசீவக வாதச் சருக்கம், 683 ஆம் பா) வழியாக இச்சொல் நமக்குப் புலப்படுகிறது. இன்றைக்குப் பொதுக் குமுக மாந்தனைத் தமிழிற் சுப்பன், குப்பன் என்பது போல, (ஆங்கிலத்தில் Tom, Dick and Harry என்பது போல,) அன்றைக்குச் சாத்தன் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாவில், ஆத்தன் என்பது தலைவனுக்கும், சாத்தன் என்பது பொது மாந்தனுக்கும் ஆளப்படும். சாத்தன்>சாத்தாரன்>சாத்தாரனம்>சாதாரணம் - இது தமிழ்வேரில் இருந்து வடமொழியிற் புடைக்கும் சொல்வளர்ச்சி. சாத்து>சாத்தார்>சாத்தாரம் என்பது தமிழிற் புடைக்கும் சொல்வளர்ச்சி. சாதாரணத்தைச் சாத்தாரமாய் மீட்டெடுக்கலாம். இதே போலச் சம்மனன்>சமனன்>சாமனன்>சாமான்யன் என்ற வளர்ச்சியையும் ஓர்ந்து பார்க்கலாம். சம்மனன் = சம்மனம் கொட்டிக் கீழமர்ந்து இருப்பவன்.]

இந்த அளவைகள், பழந்தமிழகத்திலும், இந்திய வடபுலத்திலும் ஏறத்தாழ ஒன்றாய் இருந்தாலும், அவற்றிடை சில வேறுபாடுகளும், புரிதற் குழப்பங்களும் இருந்தன. அவற்றை ஆய்ந்து, ஒத்திசை முடிவிற்கு வந்து, தமிழகத்தின் செந்தர நீட்டளவையை மீட்டெடுத்துத் திரு.கொடுமுடி சண்முகம் “பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் - முதல் பகுதி” என்னும் பொத்தகத்தில் (பக் 91) வெளிப்படுத்துவார். அதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

1 பெருவிரல் = 1 3/8 அங்குலம் [கள ஆய்வின் மூலம் கண்ட ஒக்குமை (equality)]
6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 16 1/2 அங்குலம்
2 முழம் = 1 சிறு கோல் = 33 அங்குலம்
4 சிறு கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு = 88 அடி
500 தண்டம் = 1 கூப்பிடு தூரம் = 1 மைல் 220 அடி = 1.675 கி.மீ
4 கூப்பிடு தூரம் = 1 காதம் = 4 மைல் 1 பர்லாங் 220 அடி = 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 16 மைல் 5 பர்லாங் 220 அtடி = 26.82 கி.மீ

இதோடு இன்னும் மூன்று ஒக்குமைகளைச் சேர்த்தால், இந்தியத் துணைக்கண்டம் எங்கணும் பொருந்தினாற்போல் ஒரு முழுமை வாய்ப்பாடு அமையும். அந்த ஒக்குமைகள்

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
2 விரற்கிடை = 1 பெருவிரல் [அதாவது 12 விரற்கிடை = 1 சாண்]
2 சிறுகோல் = 1 கோல் = 5.5 அடி.

ஆகும். இவையும் சேர்ந்த நம்முடைய நீட்டளவை, பெரும் அளவில் ஆங்கில நீட்டளவையோடு இணைந்து போவது வியப்பானது. [50 ஆண்டுகளுக்கு முன், ஆங்கில அளவையைத் தான் நாங்கள் பள்ளியில் படித்திருந்தோம்; எங்களுடைய கல்லூரிப் படிப்பிலும் British Units சொல்லிக் கொடுக்கப் பட்டது. மெட்ரிக் அளவை வந்த பின்னால், இந்தியாவில் பிரிட்டன் அளவை படிப்படியாய்க் குறைந்தது. இரண்டு வாய்ப்பாடுகளின் தோற்றத்தை யாரேனும் வரலாற்றாய்வு செய்தால், பயனிருக்கும்.]

12 அங்குலம் = 1 அடி
3 அடி = 1 கசம் (yard)
220 கசம் = 1 பர்லாங்
8 பர்லாங் = 1 மைல்

என்ற ஆங்கில நீட்டளவைக்கும், தமிழ் நீட்டளவைக்கும் உள்ள உறவைப் பார்த்தால்,

60 தண்டம் = 7.5 கயிறு = 660 அடி = 1 பர்லாங்
480 தண்டம் = 60 கயிறு = 5280 அடி = 1 மைல்
4/11 சிறுகோல் = 1 அடி
12/11 சிறுகோல் = 1. 09090909 சிறுகோல் = 1 கசம்
1 கூப்பீடு = 1 மைல் 1/3 பர்லாங் = 1.0416667 மைல்,
1 கோல் = 0.916666666667 கசம்,
1 கூப்பீடு = 1.0416667 மைல்

என்ற இணைகள் விளங்கும். அதாவது, நம்முடைய சிறுகோலும், ஆங்கிலரின் yard -உம், கிட்டத்தட்ட இணையாய்த் தோற்றும். இதேபோல், நம்முடைய கூப்பீடும், ஆங்கிலரின் மைலும் கிட்டத்தட்ட இணையாய் இருக்கும்.

இந்தத் தொடர் நெடுகிலும், அளவுகள் பற்றி ஆழமாய்ப் பார்ப்போம். குறிப்பாக, விரல், சாண், முழம், சிறுகோல், கோல் (தண்டு), பெருங்கோல் (தண்டம்), கூப்பீடு, காதம், யோசனை ஆகிய அளவீடுகள் பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுவது முகன்மையானது.

அன்புடன்,
இராம.கி.

No comments: