Saturday, March 21, 2009

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3

இப்பொழுது கண்ணகியின் பெயர்க் கரணியம் பார்ப்போம். அவள் கண் பெரியது, கருமையானது, மலர் விரிவது போலக் காட்சியளிப்பது. இதைக் காப்பியம் எங்கணும் திரும்பத் திரும்ப வெவ்வேறு மாந்தர் வழியேயும், தானாகவும் இளங்கோ சொல்லுகிறார். பிறந்தபோதே, குழவியின் உருண்ட, பெருங் கண்கள் மாநாய்கனையும், அவன் கிழத்தியையும், மயக்கிற்றோ என்னவோ, கண்ணகி என்று பெயரிட்டிருக்கிறார்கள். [இன்றுங் கூடக் கண்ணாத்தாள், கண்ணம்மை என்ற பெயர்கள் நகரத்தாரிடையே பெரிதும் புழக்கமானவை. நாட்டரசன்கோட்டைக் கண்ணாத்தாள் கோயில், கண்ணகியை நினைவூட்டுவதாகவே அவர்களிடையே ஓர் ஐதீகம் உண்டு.]

கண்ணகி என்ற சொல்லை மூன்று வகையில் பிரிக்கலாம்.

1. கண் + அகி = கண்ணகி. அகுதல் = உள்ளாதால். (அகம் என்ற பெயர்ச்சொல் அகுதல் வினையில் இருந்து எழுந்ததே. உள்ளுதலில் இருந்து உள்ளம் போல இங்கு கொள்ள வேண்டும்.) விதப்பான கண்ணைப் பொதுமைச் சொல்லால் குறிப்பிடும் வழக்கம் தமிழில் உண்டு. ”காளைன்னா அவந்தாய்யா காளை! கண்ணுன்னா அவள் கண்ணு மாதிரி வருமா?”
2. இரண்டாம் முறையில் கண் + நகி என்று பிரிக்கலாம். நண்பர் வேந்தன் அரசு மின் தமிழ் மடற்குழுமத்தில் இதைக் காட்டியிருந்தார். நகுதல் என்பது மலர்தலாகும். சிரித்தலையும் குறிக்கும். இங்கே கண் மலர்ந்தவள் என்று பொருள் கொள்ளும். இளங்கோ பல இடத்தும் மலர்க் கண்ணி என்று சொல்லுவார்.
3. மூன்றாம் முறையில் ”கண்ணை” என்ற எழுத்துவழக்குச் சொல் (நக்கண்ணை என்ற சங்கப்புலவர் பெயர் நினைவுக்கு வருகிறதா?) பேச்சுவழக்கில் கண்ணகி என்று முதலில் ஆகிப் பின் எழுத்து வழக்கிலும் ஏற்கப் பட்டிருக்கலாம். [புவ்வுதலில் கிளர்ந்த சொல் புவ்வு>பூ என்று செந்தமிழில் ஆயிற்று. ஆனால் தென்பாண்டி நாட்டுப் பேச்சுவழக்கில் இன்றுங் கூடப் பூவு என்றே பலுக்குவர். இப்பொழுதோ, உரைநடையில், மாந்தர் உரையாட்டுக்களைச் சுட்டும் வட்டாரத் தமிழாய் ”பூவு” அப்படியே எழுதப்படுகிறது. இப்படி உகரம் கூடச் சேர்வதை euphonic vowels என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது பலுக்க எளிமையாக்கும் உயிர்கள். இதனூடே உடம்படு மெய்களும் சேர்வது உண்டு (இங்கே வகரம் சேர்வது போல). அண்ணா, அண்ணாவி ஆவது இதுபோலத்தான். பூதம்>பூதகி ஆவதும் இதே முறைதான். பூதம், வட சொல் அல்ல. bhuutha என்று தவறாகப் பலுக்காத வரை அது தமிழ் தான்.]

மேலே கூறிய மூன்றிலும் ”கண்ணகி”யின் அடிப்படைக் கருத்து கண் என்பதே. ”கண்ணால் பெயர் பெற்றவள் கண்ணகி”. இதன் சான்றுகளைச் சிலம்பில் இருந்தே பார்க்கலாம்.

இன்னொரு செய்தி. கண்ணகி என்ற பெயர் சிலம்பிற்கு முன்னேயும், புறநானூற்றின் பின்புலத்திலேயே, பயிலுகிறது. புறம் 142-147 வரை உள்ள பாட்டுக்களில் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பரத்தையின் பால் புறத்தொழுக்கம் கொண்ட பேகனை அவன் மனைவி கண்ணகியோடு சேர்ந்து வாழும்படித் தெருட்டியிருப்பார்கள். கண்ணகி என்ற பெயரை பெருங்குன்றூர் கிழார் “அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை” என்று பெயர்ப்பொருளால் உணர்த்தியிருப்பார். ஆகக் கண்ணகி என்ற பெயர் குறைந்தது 2100 ஆண்டுகளுக்கு முந்திய பழமை வாய்ந்தது; கர்ணகி என்று வடபுலப் பலுக்கலுக்கும் முந்தியது.

சிலம்பிலும் கண்ணகியின் பெயர்ப்பொருள் பலவிடத்தும் வெளிப்படும். மனையறம் படுத்த காதை - 11 ஆம் அடியில் ”கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்” என்று இளங்கோவடிகள் பேசுவார். ”பெருத்த மலர் போன்ற கண்”. ”பெருத்த கண்” என்ற பெயரின் வடமொழியாக்கம் நகரத்தாரிடையே இன்றும் புழங்கும் பெயரான விசாலாட்சி யாகும். [காசிக்குப் போய் விசாலாட்சியை வணங்குகிறோம் இல்லையா? சாலாட்சி, சாலா என்று பேச்சுவழக்கில் சொல்லப்படும்.] மேலே கயல் மலர்க் கண்ணி என்று கொண்டால் அது மீனாட்சியைக் குறிக்கும். [மீனாட்சியும் நகரத்தாரிடையே பெரிதும் புழங்கும் பெயர் தான்.] கயமலர்க் கண்ணி, கயல்நெடுங் கண்ணி, கருந்தடங் கண்ணி, கருங்கயற் கண்ணி, நெடுங்கயற் கண்ணி, தடம்பெருங் கண்ணி போன்ற பெயர்களும், அதன் மடக்குகளும் (permutations), பிணைப்புகளும் (combinations) விசாலாட்சிக்கும், மீனாட்சிக்கும் பல்வேறு விதமாய்ப் பொருந்தும் பெயர்கள் தான். இவற்றைச் சமயப் பெயர்கள் என்று கொள்ளாமல், கண்ணை விதப்பதாகவே கொண்டால், ”கண்ணகி”யின் பொருட்பாடு விளங்கும். அதே மனையறம் படுத்த காதையில் கண்ணகியின் நலம் பாராட்டும் கோவலன்,

அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது (49-52)

என்கிறான்: ”செவ்வேள் தன் நெடுவேலை இரண்டாக்கி, உன் செவ்வரி படர்ந்த மழைக்கண்ணாய் ஆக்கினனோ?” ஆகக் கண்ணகியின் கண்தான் எல்லோரையும் ஈர்த்தது, கோவலனையும் சேர்த்து. இது போன்று, கண்ணைப் பாராட்டிக் கொற்றவையின் உறுப்பாக்குவது தமிழின் நெடிய திணைமரபு. [கொற்றவைத் தோற்றம் அல்லவா கண்ணகி கொள்ளப் போகிறாள்?]

அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில்,

திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரிய
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப
பவள வாள் நுதல் திலகம் இழப்ப
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப 52-56

என்ற வரிகளிலும் கண்ணகியின் கண் ”செங்கயல் நெடுங்கண்” என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. [இங்கே ”திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரிய” என்பது ஒளிர்கிற நிலவைப் போன்ற கண்ணகியின் முகம் வியர்வதைக் குறிக்கிறது; ”திங்கள் வாள்முகம்” என்றவுடன் நம்மையறியாமல் பலரும் பூரணை நிலவையே நினைக்கிறோம். மாறாகத் திங்களின் இடைப்பட்ட மதியை எண்ணுவது நல்லது. அதாவது சற்றே கருத்த, புள்ளி புள்ளியாய் வியர்வை படர்ந்துள்ள ஒளிமுகம். அடுத்து, மாநிறத்தாரின் நெற்றி, அடர்பவள நிறத்தைக் காட்டுவது இயற்கை. மறந்து விடாதீர்கள், மாநிறம் என்பது முற்றிலும் கருப்பல்ல. அது ஒரு கலவை நிறம். தமிழரில் 100க்குத் 90/95 பேர் மாநிறம் தான். மீந்திருக்கும் 5/10 வெள்ளை/சிவப்பால் தான் தமிழ்க் குமுகாயத்துள் பல உளவியற் கூத்துக்கள் நடைபெறுகின்றன.]

நாடுகாண் காதையில் ”கயல்நெடுங்கண்ணி (76)” என்று வரும். காடுகாண் காதையில் ”கருந்தடங் கண்ணி (166)” என்று வரும். வேட்டுவ வரியில் 16 ஆம் பாட்டில், வேட்டுவப் பெண்ணிற்கும் கூடக் “கயமலர் உண்கண்ணாய்” என்ற விவரிப்பு வரும். அடைக்கலக் காதையில் கவுந்தி கண்ணகி பற்றி மாதரிக்குச் சொல்லியது ”கருந்தடங் கண்ணி (128)” என அமையும். கொலைக்களக் காதையில் மாதரி இல்லம் நீங்கி கோவலன் மதுரைக்குள் போகும் போது, கண்ணகியை விட்டுச் செல்வதை ஆசிரியர் ”கருங்கயல் நெடுங்கண் காதலி” (94) என்று சொல்லுவார். துன்ப மாலையில் ”என் கணவன் கள்வனோ?” என்று சூரியனிடம் கேட்கையில், வானில் எழுந்த குரல்:

கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மதராய்
ஒள்ளெரி யுண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் (52-53)

என்று விடையிறுக்கும். ஊர்சூழ்வரியில், இறந்து கிடந்த கோவலன் அருகிற் கண்ணகி அழுது, ஆர்ப்பரித்த பின்னால் நடப்பதை ஆசிரியர்,

என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையார்
சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன் (72-75)

என்றே சொல்லுவார். வாழ்த்துக் காதையில் செவிலித்தாய் கூற்றும்,

மடம்படு சாயலாள் மாதவி தன்னைக்
கடம்படான் காதற் கணவன் கைப்பற்றிக்
குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த
தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர்
தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர் - 3

என அமையும்.

ஆகக் கண்ணால் விதந்தவள் கண்ணகி ஆனாள். இதைச் சிலம்பதிகாரம் நெடுகிலும் காணலாம். அந்தக் கண்தான் அவளைப் பலரும் ஈர்க்கக் கரணியமாய் இருந்திருக்கிறது.

சிலம்பு தவிர்த்த பல்வேறு கண்ணகி-கோவலன் கதைகள், கூத்துக்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாடகங்கள் ஆகியவற்றை இந்தத் தொடரின் முடிவிற் பார்க்கலாம். வால்மீகி இராமாயணத்திற்கு மாறாக எத்தனை இராமயணக் கதைகள் விதம் விதமாய் எழுந்திருக்கின்றன? சீதையை இராவணன் மகளாகச் சொல்லும் இராமாயணம் கூட இருந்திருக்கிறது. அது போலக் கண்ணகியைப் பாண்டியன் மகளாய் உருவகிக்கும் கதைகளும் உண்டு. [சிலம்பிலே கூட வாழ்த்துக் காதையில், "தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில் நல்விருந்து ஆயினன்; நான் அவன்தன் மகள்” என்று ஒரு வாசகம் வரும். அவற்றையெல்லாம் இங்கு பேசமுற்பட்டால் கட்டுரை பெரிதும் நீளும். [வேண்டுமானால் இன்னொரு முறை பார்க்கலாம்.]

திரு.நா.கணேசனின் மடலில் உள்ள வேறு புள்ளங்களுக்கு (points) என் மறுமொழிப்பை இத்தொடரின் முடிவில் தருகிறேன். அதற்கு முன், கோவலனின் பெயர்க்காரணம் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: