Tuesday, December 23, 2008

குடும்பம் - 2

இனிக் குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மைக்கு வருவோம்.

நண்பர் நாக. கணேசன், ”குடிசெயல் வகை” என்னும் திருக்குறள் 103 ஆம் அதிகாரத்தில் இருந்தே

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

என்ற 1029 ஆம் குறளை எடுத்துக் காட்டி திருக்குறளுக்கும் முற்பட்டுக் குடும்பம் என்ற சொல் இருந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார். இக் குறளை திரு.ரெ.கா. கவனிக்க மறந்தார் போலும்! குடிசெயல்வகை எனும் அதிகாரமே, குடும்பம் நடத்தும் வகையைச் சொல்லும் அதிகாரம் தான். அந்த அதிகாரம் முழுதிலும் குடி என்ற சொல் அகன்ற குடும்பத்தையே குறிக்கிறது. இக்கால நெற்றுக் குடும்பத்தையே பார்த்துப் பழகிப்போன நமக்கு (நெற்றுக் குடும்பம் = nuclear family; நெற்று = nut; nuct>nuclear என்ற இந்தையிரோப்பிய வளர்ச்சியைப் புரிந்து கொண்டால் நெற்றை எப்படியெலாம் இக்காலத்தில் தமிழ்வழி நெற்றுப் பூதியலைச் (nuclear physics) சொல்லிக் கொடுக்கும் போது புழங்கிக்கொள்ளலாம் என்பது விளங்கும். நாம்தான் இருப்பது தொலைத்துச் ”சங்கரா, சம்போ” என்று தவிப்பவர் ஆயிற்றே? நுக்லியர் குடும்பம் என்று தமிங்கிலம் பழகிக் கொண்டிருந்தால் எப்படி?) அக்காலக் கூட்டுக் குடும்பம் புரிவதில்லை. குலம், குடும்பு, குடி, குடும்பம் போன்றவை குல் என்னும் வேரில் இருந்து கூட்டப் பொருளில் எழுந்த சொற்கள்.

குல்>குலம்;

குல் என்னும் வேர், லகர/ழகரப் போலியொடு, பலுக்க எளிமை கருதி உகரம் சேர்ந்து, குல்>குழு எனவாகிக் கூட்டத்தைக் குறிக்கும். குழுதல்> குழுவுதல்> குழுமுதல்> குழும்புதல் என்ற வினைச்சொல் வளர்ச்சியை இங்கு எண்ணிப் பார்க்கலாம். குழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட்டப் பொருளையே உணர்த்தும். [ராயர் காப்பிக் கிளப் என்னும் மடற்குழுவை, ஒருமுறை அரையர் குழும்பு என்று நான் சொல்லப் போக, அடித்துக் கிளம்பி, குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டவர் உண்டு. என்ன செய்வது, கிளப் என்று தமிங்கிலம் பழகலாமாம்; குழும்பு என்று சொல்லக் கூடாதாம் :-)).] குழாம் என்ற சொல் கூட குழுமுதலின் வளர்ச்சி தான். கோடைக்கானல் ஏரிக்கரையில் படகுக் குழாம் என்று போட்டிருப்பார்.

பொதுவாக, வினைச் சொல் வளர்ச்சியில் X-தல்> X-வுதல்> X-முதல்> X-ம்புதல் என்னும் வளர்ச்சி தமிழில் பல சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது; இந்த வினைச்சொல் உருவாகும் முறை தமிழுக்கே உரிய ஒருமுறை. இந்த வினைச்சொல் உருவாக்க முறையில், சில சொற்களில் குறை வளர்ச்சியும், சில சொற்களில் மிகுவளர்ச்சியும், ஏற்பட்டது. காட்டாகச் சில சொற்களைப் பார்ப்போம்.

அள்ளுதல்>அழுதல்>..........>அழும்புதல் = செறியக் கலத்தல்; அழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட உண்டு.

எழுதல்> எழுவுதல்> எழுமுதல்> எழும்புதல்; எழுமூர் என்ற பழைய பெயர் இன்றைக்கு எழும்பூர் என்றே சென்னையிற் சொல்லப் படுகிறது..

கெழுதல்> கெழுவுதல்> கெழுமுதல். இது நிறைதல், பொருந்துதல் பொருளை உணர்த்தும். அன்பு கெழுமிய என்று சொல்லுகிறோமே, அது அன்பு நிறைந்த என்ற பொருளை உணர்த்தும். கெழு என்ற சொல் இன்னும் ஆழ்ந்து, நிறத்தை உணர்த்தும். இந்தையிரோப்பிய colour என்ற சொல்லுக்கு அது அப்படியே நிகரானது. கெழிறு என்றாலும் கூடக் colour தான். “பால் வார்பு கெழீஇ” என்ற தொடர் மலைபடு கடாம் 114 ஆம் வரியில் வரும். அதற்கு வரும் உரையில் “கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யணர்த்திற்று” என்று சொல்வார். “தேரோடத் துகள் கெழுமி” என்பது பட்டினப்பாலை 47ஆம் வரியில் வரும்.

இதே போல,
சிலுதல்> ....................................> சிலும்புதல்
செழுதல்>....................................> செழும்புதல்

என்ற சொற்களும்,

துள்> ........தழு> தழுவு> தழும்பு என்பதும் மேற்சொன்ன வினையாக்க முறையை உணர்த்தும்,

இனித் துள்> துளுவுதல் (= துள்ளுதல், துளித்தல் என்ற சொற்கள் இதனோடு தொடர்புடையவை) > துளுமுதல்> துளும்புதல்> தளும்புதல்> தளம்புதல் என்ற வினைச்சொல் நீர் தளும்புதலைக் குறிக்கும். இன்னும் வடபால் ஒலிப்பில் தடும்புதல்>ததும்புதல் என்று கூடத் திரியும். ளகரம் டகரமாகிப் பின் வடக்கே தகரமாகும். மூக்கில் நீர்க் கோத்துக் கொண்டு இருக்கும் நிiீக் கோவையை தடுமன் என்று சிவகங்கைப் பக்கம் சொல்வார். நீர்த்திரட்சியைக் குறிக்கும் சொல்; இதிலும் கூட்டப் பொருள் தான்.

அடுத்து, துல்>துள்>தொள்>தொழுதல்>...................................>தொழும்பு = வணக்கம். (வணங்குதலும் தொழுதலும் ஒன்றுதான். நிலவுடைமை ஆதிக்கத்தில் நில அடிமைகள் தொழும்பர் என்றே சொல்லப் படுவார். தொழும்பரும் தொண்டரும் ஒரே பொருள் தான். அடிமையாய் இருப்பவர் என்று பொருள். ழகரம் மூக்கொலியோடு சேர்ந்து வரும் டகரமாய்த் திரிந்து, தொண்டு என்ற பெயர்ச்சொல் ஏற்படுகிறது..

இதே போன்ற வளர்ச்சி புள்>(பிள்)>பிழு>பிழம்பு பிழம்பு = திரட்சி; பிண்டு> பிண்டம் = திரட்சி, என்பதிலும் உண்டு. பிண்டத்தைப் பிழையாக வடமொழி என்பாருண்டு. [எத்தனை சொற்களைத் தான் வடசொல்லெனச் சொல்வாரோ? எத்தனை எடுத்துக் காட்டுகளைக் காட்டினாலும், மீண்டும் மீண்டும் தம் நம்பிக்கையின் பாற்பட்டே பேசிக் கொண்டு இருப்பவரை என்ன சொல்லி அறிவுறுத்த இயலும்?] .

இதேபோல கூர்ந்த குழாய் கொண்டு கொத்தும் கொதுகு (=கொசுகு; கொசு என்றே இக்காலஞ் சொல்கிறோம்.), மாட்டு ஈ போன்றவற்றிற்கு நுளம்பு என்ற பெயர் உண்டு. அது நுள்>நுளுவுதல்> நுளுமுதல்> நுளும்புதல்> நுளம்புதல் = கூர்த்துக் கொத்துதல் என்ற வினையில் இருந்து கிளம்பும் சொல். [கிளம்புதல் கூட கிளுதல் என்னும் கிளைவிடுத்தலைக் குறிக்கும் சொல்லே.]

...ம்புதல் என்ற சொற்களெல்லாம் உணர்த்தும் வினைமுறை நமக்குப் புரிபடவில்லையா?]

பாறையில் துளைப்பட்ட இடத்தைப் புழை என்கிறோமே அதைப் புழம்பு என்றும் சொல்வார். (குகையைக் குறிக்கும் சொல்.) ழகரம் திரிந்து டகரமாகிப் புடம்பு என்றாகி மீண்டும் குகையைக் குறிக்கும். [உயிரை உள்ளே கொண்டது உடல் எனும் உடம்பு. குடம்பை என்பது கூட்டைக் குறிக்கும் சொல். இங்கு ம்பு என்றுமுடியும் ஈற்றைப் பாருங்கள்.]

ழகரம் டகரமாவதற்கு மேலும் சான்று வேண்டுமெனில் புடலங்காய்க் கூட்டு பற்றாதா? புழல்>புடல் ஆகி புடலங்காய் ஆகும். உள்ளே புழை (=ஓட்டை) இருக்கும் காய் புடலங்காய்.

யாரோ கேட்கிறார், ஏன் இப்படித் தமிழ், தமிழ் என்று புலம்புகிறீர்? வேறு ஒன்றுமில்லை “புலு புலு” என்று ஒலித்தலால், பிதற்றுதலால், அழுதலால், புல்>புலுவு>புலுமு>புலம்பு என்றாயிற்று..

நான் சொல்லிப் போகலாம். ”இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன குழம்பு?” என்னும் போது, மசலைப் (மசிக்கப் பட்ட வாசனைப் பொருள் மசலைப் பொருள். அதை மசாலையெனச் சொல்லிக் கொண்டுள்ளோம்.) பொருள் ஒன்றுசேர்ந்து கலங்கிக்கிடக்கும் சாறைச் சொல்கிறோம், இல்லையா?

குழு என்ற சொல்லின் கூட்டப் பொருள், திரட்சிப் பொருளுக்கு இன்னொரு சான்று குழியம் என்ற சொல்லாகும். அது கூடித் திரண்ட உருண்டை அல்லது கோளத்தைக் குறிக்கும். கோளம் கூடக் குல் எனும் வேரில் பிறந்ததே. குழுவல் = கூடுகை, குழூஉக் குறி = கூட்டத்தினரிடை விதப்பாகக் கையாளும் குறி. குளிகை = உருண்டை எனப் பலசொற்களை கூட்டப்பொருளுக்கு வாகாகச் சொல்லமுடியும்.

குல்> குழு> குழுமு> குழும்பு> குடும்பு> குடும்பம் என்னும் வளர்ச்சியில் மகர ஈற்றுச் சொற்கள் மகரம்/பகரம் சேர்ந்த ஈறாக மாறுவது தமிழில் பெரிதும் உள்ள பழக்கம்[குல்>கொல்(yellow)> கொழு> கொழுது>கொழுதுமை>கோதுமை என்ற சொல்கூடக் கோதம்பை என்று தென்பாண்டி நாட்டில் முதுபெண்டிர் வாயில் இன்றும் பலுக்கப் படும். இதே போலத் தேங்காய்க் குடுமியைத் தேங்காய்க் குடும்பி என்று பலுக்குவார்.] தவிர மகர/பகர இணையீறு தமிழுக்கே விதப்பாக உள்ள ஓர் ஈறு. வடமொழியில் அது மிகமிக அரிதாகவே காணப் படும். மற்ற இந்தை யிரொப்பிய மொழிகளில் காணப் படாதது. {ஏதொன்றையும் வடசொல் என்பார் மற்ற இணையான இந்தையிரோப்பிய மொழிச் சொற்களை, வழக்குகளை உடன்காட்ட முயலாதுள்ளார். நாமோ மற்ற தமிழிய மொழிச் சொற்களைக் காட்டிக் கொண்டு உள்ளோம். வடபுலச் சொற்களையும் முடிந்தவரை இணைகாட்டுகிறோம். வெறும் நம்பிக்கையே போதுமென்ற அளவில் ”வசுதெய்வ குடும்பகம்” என்று சங்கதச் சொற்றொடரை எடுத்துக்காட்டும் போக்கு இனியாவது மறைய வேண்டும். Let us do the linguistic analysis properly instead of just quoting this or that saying to support our assertions.}

இனி குளம்>குளம்பு> குடும்பு> கொடும்பு> கொடும்பை = குளம் என்றபொருளில் வரும் கொடும்பை ஆளூர் >கொடும்பாளூர் என்ற ஊர்ப்பெயரையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

குடும்பின் திரிவான கடும்பு, சுற்றம் என்ற பொருளைச் சுட்டும் வகையை “கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது” என்ற புறம் 68 ஆம் பாட்டின் (சோழன் நலங் கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது) 2 ஆம் வரியில் காணலாம். சங்க காலத்திலேயே குடும்பு இருந்திருக்க வேண்டும், இல்லெனில் கடும்பு என்ற சொல் ஆள முடியாது. சுற்றம் என்ற பொருளின் நீட்சி குடும்பம் தானே?

அவர்கள், இவர்கள் என்று சொல்லுகிறோமே, அந்தக் கள் எனும் விகுதி செறிவு, திரட்சி, கூட்டம் ஆகியவற்றைத் தான் குறிக்கிறது “மீனினங்கள் ஓர் கடும்பாய்” என்று பாகவத புராணத்தில் 9 ஆம் அதிகாரத்தில் .இக்குவாகு 6 -இல் மீன்கள் திரட்சியாய்ப் போவதைக் குறிக்கும்.

புறம் 183 ல் ஆரியப் படை கடந்தநெடுஞ்செழியன் “ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்” எனும் போது ”ஒரு குடும்பத்தில் பிறந்த” என்ற பொருளைத்தான் சொல்கிறான். கொடிவழி என்ற சொல்லைப் பரம்பரை என்ற பொருளில் பிங்கலம் காட்டும். குடிமை என்ற சொல்லால், வள்ளுவரும் ”ஒரு குலத்து ஒழுக்கம்” என்ற பொருளை உணர்த்துகிறார். குடும்பத்தை உணர்த்தும் குடி என்ற சொல் இன்று பொருள் விரிந்து குடியரசு வரை வந்து விட்டது. ஆனாலும் தொடக்கப்பொருள் குடும்பமே. குடும்பு என்ற சொல் பூங்கொத்து, காய்க்குலை ஆகியவற்றையும் குறிக்கும். family பொருளில் பேரரசுச்சோழர்காலக் கல்வெட்டில் “இவ்வாட்டை குடும்பு வாரிய பெரு மக்களும்” [தெ. கல்.தொ.19, கல் 179] என்ற சொற்றொடர் குறிக்கப்பட்டது.

இது போகக் குடும்பு என்றசொல் ஒரு குடும்பம் பயிர் செய்து வாழ்வதற்குப் போதுமானதாகக் கருதப்பட்ட உழவுநிலப் பரப்பை வழிப்பொருளாய்க் குறித்தது. ஒரு குடும்பு = 80 சதுரக் கயிறு. (= 320 காணி = 3.5 ஏக்கர்.)

குடும்பின் முந்தைய நிலையான குழும்பு என்றசொல் களிற்றுக் கூட்டம் அல்லது திரள் (யானை தன் குடும்பத்தைத் தவிர மற்ற யானைகளைக் கூட்டமாய் சேர்க்காது என்பதை நினைவிற் கொள்க.) பொருளில் மதுரைக் காஞ்சி 24 ஆம் அடியில் பிணக்கோட்ட களிற்றுக் குழும்பு என்ற சொற்றொடர் களிற்றுக் குடும்பத்தைக் குறிக்கிறது. ஆகக் குடும்பின் முந்தை வளர்ச்சி சங்க இலக்கியத்தில் காண்கிறது. ழகரம் டகரமாவது தமிழியப் பழக்கம் தான் கோழி தெலுங்கில் கோடியாகும் துளுவில் கோரியும் ஆகும் சோழ மண்டலம் சோர மண்டலம்/ கோர மண்டலம் ஆகவில்லையா? அழிம்பு> அழும்பு> அடிம்பு என்று பலுக்கப் படுவதில்லையா? இதே போல குழி தாழி >குழுதாழி> குழுதாடி (= மாட்டுத் தொட்டி) என்று சொல்லப் படுவது இல்லையா? துளைப் பொருளில் குழி என்ற சொல் குழும்பு என்ற மாற்று வடிவில் ஆளப் பட்டுள்ளது. [“ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர” மதுரைக் 273]

இவை தவிரக் குலை, கலவை, கலம்பம்>கதம்பம், கள், களம், களரி, கழகம், கணம், கட்டு, கருவி, கூளம், கூடல், கூட்டம், கோட்டி, கோடு, கோடி போன்ற பிற சொற்களும் கூட்டற் பொருளைச் சுட்டும். இவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தரலாம் விரிவஞ்சி விடுக்கிறேன்.

அக்காலத்தில் குடும்பம்/குடி என்பது ஏழு தலைமுறை சேர்ந்தது என்பதை நினைவு கொள்ளவேண்டும். [சேயோன், பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் என்ற ஒன்பது தலைமுறைப் பெயரில், சேயோனையும், எள்ளுப் பெயரனையும் தவிர்த்தால் ஏழு தலைமுறையாகும். இந்த அளவிற்கு விரிவாகக் குழப்பம் இல்லாது உறவு முறைப் பெயர்களைக் குறித்திருக்கும் ஒரு பழம் இனமாகத் தமிழினம் தெரிந்ததால், The origin of family, private property and State என்ற பெடரிக் எங்கல்சு (Frederic Engels)  நூலில் தமிழர் உறவுமுறை பற்றிய வியப்புக் குறிப்பு வரும்.]

அக்காலத்தில் ஒரு குடும்பத்தினர் கூடிவாழ்ந்த ஊர் ”குடி” எனப் பட்டது. அக் குடியில் மற்ற குடும்பத்தினரும் பின்னால் கூடிவாழத் தலைப்பட்டனர். நாளடைவில் அரசகட்டளையால் மக்கள் கூடிவாழத் தலைப்பட்ட colony யும் குடி எனப்பட்டது. இந்தையிரோப்பியக் colony யும் தொடக்கத்தில் குலந் தொடர்பான சொல்லே. தமிழ்நாடெங்கணும் விரிந்துகிடக்கும் ’குடி”களைப் பார்த்தால், குடிப்பொருள் விளங்கும். குடியேறுதல் என்பது ஓர் அகன்ற குடும்பம் இடம்விட்டு இடம்புகுந்து வாழ முற்படுவதைக் குறிக்கும்.

[சோழநாட்டிலிருந்து அகதியாய் ஓடிவந்து பாண்டிய நாட்டில் குடியேறிய நாட்டுக்கோட்டை நகரத்தார் முதலில் இளையாற்றங்குடியில் தங்கிப் பின் அரசாணையால், இளையாற்றங்குடி, மாற்றூர், வைரவன்பட்டி, இரணியூர், சூரைக்குடி, இலுப்பைக்குடி, வேலங்குடி என்ற ஏழு ஊர்களில் குடியேறினர். பின்னால் இளையாற்றங்குடியாரில் இருந்து நேமம், பிள்ளையார்பட்டி என்ற இரு குடியினர் பிரிந்தனர். இன்றைக்கு ஒன்பது குடியினரும் ஒன்பது அகன்ற குடும்பத்தார் தான். இவர் ஒன்பது கோயிற் பங்காளிகள் என்றே சொல்லப் படுவர். குடும்பச் சொத்தில் பங்கிருக்கும் தந்தை வழி உறவினரைப் பங்காளிகள் என்றே அழைப்பார்.] குடும்பு/குடும்பம் என்பதும் குடி என்பதும் ஒன்று தான் என்பதற்கு இவ்விவரத்தைச் சொன்னேன்.

குடும்பம் என்பதைத் தமிழில்லை எனில், அப்புறம் மேலேகூறிய பெயர்ச் சொற்களையும், அவற்றோடு தொடுகும் வினைச்சொற்களையும் தமிழில்லை என்று சொல்ல வேண்டும். ”அப்புறம் முடிவெங்கே இருக்கிறது?” என்று எண்ணிப் பாருங்கள். கூட்டப் பொருள் என்பது அடிப்படைப் பொருள். அது இல்லாமல் ஓர் இயல்மொழி இருக்க முடியுமா?

குல் என்னும் வேரில் இருந்து கூட்டப்பொருள் அல்லாமல், வளைவுப் பொருளிலும் சொற்கள் (குடி, குடிகை, குடிசை, குடில் போன்றவை) உண்டு. இது தவிர, இல், மனை போன்றவை துளைப் பொருளில் மாந்தர் வாழும் இடத்தைக் குறிக்கும் சொற்களாகும். [வடமொழி வேர்ப்பொருளாக வளைவுப் பொருள் மட்டுமே மோனியர் வில்லிம்சில் காட்டப்பெறும். கூட்டப் பொருள் வளைவுப்பொருளிலிருந்து எப்படி வந்ததென்று அங்கு விளக்கப் படவில்லை.].

முடிவாகச் சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் பெரிதும் பயில்கிறது. [அதன் பொருளை இன்றையப் புரிதல் கொண்டு பார்க்க முடியாது.] “குடும்பம் என்ற சொல்லும் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும்” என்று மற்ற சூழ்நிலைச் சான்றுகளால் உணருகிறோம். அதே பொழுது ”குடும்பம்” என்ற வடிவிற்குச் சங்க இலக்கியத்தில் நேரடிச்சான்று இல்லை தான். என் செய்வது? எப்போதும் நான்சொல்வது போல ”சங்க இலக்கியம், ஓர் அகர முதலி அல்ல. அது நமக்குக்கிடைத்த இலக்கியப்பகுதி. அது காட்டும் சொல்லாட்சிகள் ஒரு சிலவே. தருக்கவழி உய்த்துணர வேண்டியது ஏராளம்.”

அன்புடன்,
இராம.கி.

2 comments:

தமிழ் said...

/”குடும்பம்” என்ற வடிவிற்கு ஒரு நேரடிச்சான்று இல்லைதான். என்ன செய்வது? எப்பொழுதும் நான் சொல்லுவது போல ”சங்க இலக்கியம் என்பது ஓர் அகரமுதலி அல்ல. அது நமக்குக் கிடைத்த ஓர் இலக்கியப் பகுதி. அது காட்டும் சொல்லாட்சிகள் ஒரு சில தான். தருக்கத்தின் வழி உய்த்து உணர வேண்டியது ஏராளம்.”/

அருமையான விளக்கம்

நா. கணேசன் said...

அன்பின் இராமகி,

ஹூஸ்டனில் இருந்து நா. கணேசனின் வணக்கங்கள்.

தங்கள் தந்தையாரின் எம்பாவை உரையைக் கொஞ்சம்
கொஞ்சமாக ஓரிழை தொடங்கி அதை மின்நூல்
ஆக்கி விடலாமே. பிறகு மதுரைத் திட்டத்திலும்
சேர்த்துவிடலாம்.