Thursday, April 24, 2008

பாவேந்தர் நவின்ற ஈழத்துக் கொள்கைகள்

பாவேந்தரை நினைவுகூர்வது தமிழ்நாட்டுத் தமிழரிடையே கூடச் சிறிது சிறிதாய்க் குறைந்து வருங் காலத்தில், ஈழத் தமிழர் (ஒருசிலரைத் தவிரப்) பெரும்பாலோரிடம் பாவேந்தர் தாக்கம் இல்லாது போவது வியப்பொன்றும் இல்லை. அவர்கள் பாரதி பற்றியாவது ஒருசில அறிந்திருக்கிறார்கள்; ஆனால் பாரதிதாசன் பற்றிய சிந்தனை அவரிடம் குறைந்தே இருக்கிறது. பாவேந்தர் ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவர் என்று எண்ணும் போக்கு, புலம்பெயர்ந்தவரிடம் பெரிதும் இருக்கிறது.

தமிழின மறுமலர்ச்சிக்கு பாரதிதாசன் என்றும் அடிப்படையானவர். அவர் கருத்துக்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டியவை. தெளிவான, சிந்தனை மிகுந்த, ஈழம் பற்றிய, அவரின் அரிய பாடல் இலங்கைத் 'தினகரன்' சிறப்பு மலரில் 11/7/1959 இல் வெளிவந்தது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தப் பாடல் பாரதி தாசன் குயிற் சுவடி 10ல், (அக்டோ பர் 1964) பக்கம் 10 இல் தொகுக்கப் பட்டிருக்கிறது. நான் இதே பாடலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையம் வெளியிட்ட "பாவேந்தர் பாரதிதாசனின் பழம் புதுப்பாடல்கள்" என்ற தொகுப்பில் (முனைவர் இரா. இளவரசு 2005 ஆம் ஆண்டுப் பதிப்பு) கண்டேன். இனித் தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

வெல்க தமிழ், வெல்க தமிழர்!

இலங்கைத் தமிழர் துலங்க எண்ணினால்
அவர்கள் ஒற்றுமை அடைய வேண்டும்;
வேற்றுமை விளைக்கும் ஆற்றல் எவற்றையும்
கான்றே உமிழ்தல் வேண்டும்; கழிவடைச்
சாதி சமயம் என்னும் எவற்றையும்
மதித்தல் கூடாது, மறப்பது நன்று;
தமிழர் நலத்தைத் தாக்கும் கட்சிகள்
எவற்றினும் எவரும் சேர்தல் சரியன்று;
தமிழர் அனைவரும் கூடித் தக்கதோர்
கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்;
தாய்மொழி யான தமிழ்மொழி வாழ்ந்தால்
தமிழர் வாழ்வர்; தமிழ்மொழி வீழ்ந்தால்
தமிழர் வீழ்வர்; தமிழ்தமி ழர்க்குயிர்;
தமிழன் னைக்கொரு தாழ்வு நேர
விடுதலின் உயிரை விடுதல் தக்கது;
சிங்களர்க் குள்ள இலங்கையின் உரிமை
செந்தமி ழர்க்கும் உண்டு! திருமிகு
சட்ட மன்றிலும் பைந்தமி ழர்க்கு
நூற்றுக் கைம்பது விழுக்காடு நோக்கிப்
படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்!
செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்
சிங்களர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலைக விழ்க்க
எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்;
மானங் காப்பதில் தமிழ மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது;
இவைகள் இலங்கைத் தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!
வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே!

5 comments:

வெற்றி said...

ஐயா,
பதிவுக்கு மிக்க நன்றி. தினகரன் நாளேட்டில் பாவேந்தர் இலங்கைத் தமிழர் குறிச்சு எழுதியது இன்று உங்கள் பதிவின் மூலம்தான் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

/* ஈழத் தமிழர் (ஒருசிலரைத் தவிரப்) பெரும்பாலோரிடம் பாவேந்தர் தாக்கம் இல்லாது போவது வியப்பொன்றும் இல்லை. அவர்கள் பாரதி பற்றியாவது ஒருசில அறிந்திருக்கிறார்கள்; */

நீங்கள் சொல்லும் கருத்துடன் உடன்படுகிறேன். மகாகவி பல விடுதலை/சுதந்திர வேட்கைப் பாடல்களைப் பாடியதால், இன்று ஈழத் தமிழினமும் விடுதலை வேண்டி நிற்பதால், பாரதியாரின் தாக்கம் பாவேந்தரின் தாக்கத்தை விட ஈழத் தமிழர்களிடம் உண்டு என்றே நினைக்கிறேன்.

மு. மயூரன் said...

எம்மிடம் பாவேந்தரின் தாக்கம் பாரதியாரை விடக்குறைவாக இருக்கிறது என்றொரு கருத்து ஏற்படுமானால் அதற்கான காரணமாக என்னால் ஊகிக்கக்கூடியதாக இருப்பது வெகுமக்கள் ஊடகங்களே. ஊடகங்கள் பாரதியாரை எடுத்ததுக்கெல்லாம் புகழவும் கூறவும் முற்படுமளவுக்கு பாரதிதாசன் பற்றி எதுவும் பெரிதாகச்சொல்வதில்லை.

ஊடகங்கள் எனும்போது இங்கே ஆதிக்கத்தில் இருப்பது தமிழ்நாட்டு ஊடகங்களே. அப்படியும் மிஞ்சிப்போனால் தமிழ்நாட்டின் கலாசார ஆதிக்கத்தின் கீழ்த்தான் இங்கே உள்ள ஊடகங்களும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பாரதியாரை விட பாரதிதாசன் அதிகம் அறியப்பட்டவராக இருக்கிறாரா?

இதில் இன்னொரு பக்கமும் முக்கியமானது. பாரதியார் பார்ப்பனர்களுக்கும் சாதகமான ஒருவர். பார்ப்பன ஊடகங்கள் அவரை எப்பொழுதும் போற்றிப்புரந்தேத்துவதன் மூலம் தமது சில அரசியல்களைக்கொண்டு செல்கின்றனர். பாரதிதாசன் அப்படி அல்லவே?

ஊடகங்கள், ஊடகங்களின் பின்னிருந்து இயக்கும் அதிகாரம் அனைத்தும் பார்ப்பனர் ஆதிக்கத்தோடு சம்பந்தப்படுவதால் பாரதி அடிக்கடி முதன்மைப்படுத்தப்படுவது இயல்பாகவே நடக்கிறது.

ஈழத்தில் பெரியாரின் தாக்கமே வலு குறைவு.

சினிமாவில் கூட பாரதியார் பெருமெடுப்பில் எடுத்தாளப்பட்டிருக்கும் அளவு பாரதிதாசன் எடுத்தாளப்படவில்லைதானே?


ஊடகங்களும் ஊடக அரசியலும் இந்த விஷயத்தில் பெரிய பங்காற்றுகின்றன.

இராம.கி said...

அன்பிற்குரிய வெற்றி,

உடன் மறுமொழிக்காததற்கு மன்னியுங்கள்.

விடுதலைப பாடல்களை பாரதிதாசனும் ஏராளமாய்ப் பாடியிருக்கிறார். அவருடைய தாக்கம் ஈழத்தில் குறைந்தே இருப்பது அவருடைய பெரியாரியச் சார்பாக இருக்கலாம்; பொதுவாகப் பெரியாரியக் கருத்துக்கள் அண்மைக் காலத்திற்கு முன்னால் ஈழத்தில் பரவாமலே இருந்தன.

அதுபற்றி அரசியல் வரலாறு சார்ந்து ஈழத்தார் தான் சொல்ல வேண்டும். என்னைப் போன்றோருக்குக் கேள்வி மட்டுமே இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி

இராம.கி said...

அன்பிற்குரிய மயூரன்,

சுணங்கிய மறுமொழியைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

மேலே வெற்றிக்கு எழுதிய மறுமொழியையும் படியுங்கள். ஈழத்தில் உள்ள தாக்கம் பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், பாரதிதாசன் பாரதியார் அளவிற்குப் பெரிதும் அறியப்பட்டவரே! பாவேந்தர் பாடல்கள் இங்கு பெரிதும் பரவியிருக்கின்றன.
அதே பொழுது, இன்று அவர் நினைவு தமிழ்நாட்டில் குறைந்து வருவது என்னைப் போன்றோருக்குக் கவலை அளிக்கிறது.

நேற்று அவர் பிறந்த நாளில் மக்கள் தொலைக்காட்சி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. அதே பொழுது, மற்ற தொலைக்காட்சிகள் வணிக நோக்கில் செல்வதால்,
பாரதிதாசனை நினைவு கூரவில்லை தான்.

பாரதிதாசனின் பெரியாரியச் சார்பும் கூட ஒரு சில மிடையக்காரர்களை விலக்கி வைக்கக் கூடும்.

ஈழத்தில் பெரியாரியத் தாக்கம் குறைவு என்று உங்கள் அவதானிப்போடு நிறுத்திவிட்டீர்கள்;
காரணம் ஏதென்று உங்கள் ஈழத்து வரலாறு,அரசியல் வழி பார்த்து அலசினால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
இராம.கி

பிருந்தன் said...

பாரதிதாசன் பாரதியாரை குருவாக வரித்துக்கொண்டவர், சீடனுக்கு இருக்கும் மரியாதையை விட குருவுக்கு இருப்பது இயல்புதானே, தமிழ்நாட்டிலும் இதுதானே நிலை,மேலும் ஒரு பிராமணர் தாழ்த்தப்படவர்களுக்காக உள்ளன்போடு குரல் கொடுக்கும் போது அதன் வலிமை பெரியது, எது எப்படி இருப்பினும் தமிழன் தமிழுக்காக குரல் கொடுக்கும் எந்த இனத்தவனையும் மறந்தது இல்லை.

இங்கு ஒரு பெரியவானொலியில் பிரதான பாடலாக இருப்பது "பொங்கு தமிழருக்கு இன்னல் வந்தால் சங்காரம் நியமென்று சங்கே முழங்கு பாடல்தான்"
புதியதோர் உலம்செய்வோம் பாடலும் முழங்கும் ஒரு பாடல்தான்.

பாரதிதாசனை விட பாரதியார் மேலோங்கி இருப்பது யதார்தமே.

சிலவேளை பாரதியாரின் பாடல் இலகு தமிழில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம், பாடல்களில் இருக்கும் உணச்சி கொந்தளிப்பும் ஒரு காரணமாக இருக்கும். இது எனது புரிதல் மட்டுமே, என்னிடம் இருவரது முழுமையான பதிப்புகழும் இருக்கின்றன ஆனால் நான் அதிகமாக படிப்பது பாரதியார் பதிப்பைதான், பாரதியார் பாடல்களை எத்தனை தடவை படித்தாலும் அது சலிப்பை உண்டு பண்ணுவதே இல்லை. மேலும் மேலும் படிக்க தூண்டுவது.

இது எனது புரிதல் மட்டுமே.