Tuesday, January 29, 2008

காலங்கள் - 7

சூரிய மானத்து ஞாயிறுகள்

இராசிப் பெயர்களை ஆய்ந்து பார்க்கத் தொடங்கி, இதுவரை மூன்று பெயர்களைப் பாத்த்தோம். இந்த இராசிப் பெயர்கள் சூரிய மான வழக்கத்தில் ஞாயிற்று மாதப் பெயர்களாகக் குறிக்கப் படும். பல்லவர், இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுகளாகும். அவற்றில், தைத் திங்கள், சுறவ ஞாயிறு என்று திங்கள் மாதப் பெயர்களும், ஞாயிறு மாதப் பெயர்களும் சேர்த்துக் குறிக்கப்படும்.

[இந்தக் கல்வெட்டுக்களில், பல காட்டுகளில், இங்கு நான் எழுதுவது போலத் தனித்தமிழில் அமையாமல், சங்கத மொழிபெயர்ப்பே மணிப் பவளமாய்ப் பயிலப் படும். அப்படிச் சங்கதம் பயின்றதற்கு காரணம் அன்று பெருமானருக்கு அரசர் கொடுத்த முகன்மையும், அதன் வழியாய் வேதநெறி பெற்ற பலன்களுமே காரணமாகும். காரணமில்லாமல் பிற்கால அரசர்கள் சதுர்வேதி மங்கலங்களைப் பெருமானருக்குத் தானமாய்க் கொடுக்கவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ சென்ற 1800 ஆண்டு காலத் தமிழக வரலாறு கிழாரிய வரலாறு - feudal history ஆகவே இருக்கிறது. அதில் பெருமானர் குமுகாய அறிவுய்திகளாய் - societal intelligentia - இருந்து குமுகாய நடைமுறையைச் சரியென்று சொல்லும் இடைப்பரலியராய் - interpreters - இருந்தனர். முடிவில் சோழராட்சியில் நடந்த இடங்கை, வலங்கைப் போராட்டங்கள், பழக்கங்களுக்கும், இவர்கள் ஆயக்காலாய் இருந்தனர். (கோயிலில் உள்ள ஊருலவுத் திருமேனிகளை வெளியே தூக்கி வரும் போது முட்டுக் கொடுத்து ஆங்காங்கே நிறுத்தும் கால்களுக்கு ஆயக் கால்கள் என்று எங்கள் பக்கம் சொல்லுவார்கள்.) இந்த 1800 கால வரலாற்றைப் புரியாமல், இன்றையப் பெருமானோர் அல்லாதாரின் எதிர்வினைகளை விளங்கிக் கொள்ளவும் முடியாது.]

இனி அடுத்து இன்னும் மூன்று பெயர் விளக்கங்களைப் பார்ப்போம்.,

கடகம்:

வலயச் சுற்றின் நான்காம் பகுதி கடகம், அதாவது நண்டு; பார்ப்பதற்கு நண்டு போல் இந்தத் தொகுதி பழந்தமிழனுக்குக் காட்சி அளித்திருக்கிறது. அதுவும் ஓர் உருவகம் தான். இந்தச் சொல்லின் வரலாற்றைப் பார்ப்போம். குணவுதல், குடவுதல் என்பன தமிழில் குல் என்னும் வேரில் வளைதல் என்ற பொருளில் பிறந்த வினைச் சொற்கள். குடவிக் கிடக்கும் கடல் குடா என்று ஆகும். குடவிக் கிடக்கும் கலம் குடம். குடவுதல் என்ற சொல் திரிந்து குடகுதலும் ஆகும். குடகம் என்பதும் வளைந்து கிடப்பதே. குடகம் கடகம் என்று திரிந்து பெட்டியைக் குறிக்கும். பனையோலைக் கடகம் சிவகங்கைப் பக்கத்தில் பேர் பெற்றது. (அதைப் பேச்சு வழக்கில் கடகாம் என்று அழைப்பர்) கடகம் என்ற சொல், வளைந்த மதில் கொண்ட கோட்டை (இதுவும் வளைந்ததுதான்) என்ற பொருளும் கொள்ளும். அந்தக் கால ஒட்டர நாட்டுத் (ஒரிசாத்) தலைநகரம் கடகம் (இன்று கட்டாக் என்று இது சொல்லப் படுகிறது.) வாள் சண்டை போடுவாரின் மெய்யைக் காப்பாற்றுதற்கான வளைந்த கேடயமும், கடகத்தில் இருந்து பிறந்த சொல் தான். வளைந்த, வட்டமான, கையில் போட்டுக்கொள்ளும் கங்கணத்திற்கும், வளையலுக்கும், அரைஞாணுக்கும் கூடக் கடகம் என்ற பெயர் உண்டு. குடகிக் கிடக்கும் வால் கொடுக்கு என்று ஆகும். நண்டு தன் கால்களையும், கைகளையும் எப்பொழுதும் வளைத்து நிற்பதால் அதற்கும் கடகம் என்றே பெயர். நண்டைப் போல உருவம் காட்டி கையில் உள்ள பெருவிரலைச் சுட்டுவிரல் தொட, மற்ற விரல்கள் உள்நோக்கி வளைந்து நிற்கும் நாட்டிய முத்திரையைக் கடக முத்திரை என்று சொல்லுவர். நண்டு என்ற அடிப்படைச் சொல்லோ தோண்டுதல் என்ற பொருளில் நெண்டுதல் என்ற வினையின் கீழ் பிறக்கும். கடகிய கால்களையும், கைகளையும் கொண்டு மற்றவற்றை கவ்விக் கொள்ளும் உயிரியானதால் கப்பு என்ற பெயரையும் நண்டிற்கு இடலாம். "கப்பித்த காலையுடைய ஞெண்டினது" என்று பெரும்பாணாற்று 208 ம் வரிக்கு உரைகாரார் பொருள்கூறுவார். மேலும் கப்புதல் என்பது தோண்டுதல் என்ற பொருளையும் கொள்ளும். கப்புக் கால் என்பது வளைந்த காலை உணர்த்தும். கப்பு என்ற சொல் மேலை மொழிகளில், வழக்கம் போல் ரகரம் நுழைந்து, crab என்று திரிவுகொள்ளும்.

மடங்கல்:

வலையச் சுற்றின் ஐந்தாம் பகுதி மடங்கல் என்ற சிகையம் அல்லது சிங்கம்; இந்த உருவகத்தை ஏன் கொண்டார்கள் என்று கேட்டால் எனக்குக் காரணம் தெரியாது. ஆனால் மடங்கல்/சிகையம் என்ற சொற்களின் வரலாற்றைக் கோடி காட்டத் தெரியும்; பழந்தமிழன் பார்த்த விலங்குகளில் ஆண்விலங்கு ஒன்று தலையில் முடியோடு, சிகையோடு சிறந்து காட்சியளித்தது. அந்த விலங்கிற்குச் சிகை விதப்பாகத் தெரிந்ததால் அதுவே பெயராயிற்று.; சிகை மா; சிகைமா>சிகமா>சிம்ஹா (metathesis) >சிம்ஹம்>சிம்மம். சிகை மா என்ற விலங்கு நாவலந்தீவில் பெரிதும் பரவியிருந்த விலங்கே. [இருப்பினும் சிந்தாற்றங்கரை (சிந்து நதி) நாகரிகத்தினருக்கு சிகை மாவைப் பற்றியே தெரியாது என்று சொல்லுவாரும் உளர்.] சிகைமா (சிகைக்காய் சீயக்காய் ஆவது போல) சீயமா ஆகிச் சீயம் என்றுஞ் சுருங்கும்; சிகைமாவுக்கு வேறுபல சொற்களும் தமிழில் உள. நீண்டு வளர்ந்த சிகை முடங்கிய குழலாகத் தொங்கும். சிகையைக் குறிக்க இன்னொரு சொல் குழல்/குழை என்பதாகும். இந்தச் சொல் குளை என்றும் திரியும். முடங்கிய குலை முடங்குலை>முடங்குளை என்று இணைந்து பிடரி மயிரையும் பிடரி மயிர் உள்ள சிகைமாவையும் குறிக்கும். முடங்குலை மா >முடங்கல் மா> மடங்கல் மா என்றாகும். இதே போல சிகையின் இன்னொரு பெயரான கேசத்தை முன்னொட்டாக்கி கேச அரிமா>கேசரி மா என்றாகும். சிகைமாவிற்கு இன்னொரு பெயரான அரிமா கொல்லுந் தொழிலாகிற அரிதலை ஒட்டி எழுந்த சொல். வயமா என்பது சிகை மாவின் வலிமை பற்றி வந்த சொல். சிகை மாவின் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிறுத்தை, பூனை போன்றவற்றின் சொற்பிறப்புகள் இன்னொரு இடத்தில் பேசவேண்டியவை; எனவே தவிர்க்கிறேன்.

கன்னி:

வலையச் சுற்றின் ஆறாம் பகுதி கன்னி; இந்த விண்மீன் தொகுதி ஏன் கன்னியாக உருவகிக்கப் பட்டது என்றும் எனக்குத் தெரியாது. ஆனால், கன்னி, கன்னிமை என்ற கருத்துக்கள் அந்தக் கால மாந்தனைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. கன்னுதல் என்பது பழுத்தல், முதிர்தல் என்று பொருள்படும்; ஒரு செடியில் இருக்கும் காய் பழுக்கும் போது அந்தக் காய்க்கு கொஞ்சம் மஞ்சள், சிவப்பு போன்ற பொலிவான நிறம் சேர்ந்துவிடுகிறது. காய் என்பது இயல்பாக, "அடர்ந்தது" என்ற பொருளில் கருத்த பச்சையைக் குறிக்கும். இளங்காய் இளம்பச்சையையும், முற்றிய காய் கரும் பச்சையையும் குறிக்கும். கருத்த பச்சை நிறக் காய் சிவந்து போவதை, அல்லது பொலிந்து போவதைப் பழுத்தல் என்று சொல்லுகிறோம். உள்ளங்கை அழுத்தப் பட்டோ , வெப்பங் கண்டோ , சிவந்து போவதைக் கன்னிப் போயிற்று என்று சொல்லுவதில்லையா? அது போலத்தான் பழம் பழுத்தலும் புரிந்து கொள்ளப் பட்டது. கன்னித்து பழுத்த பொருள் கனி என்று சொல்லப் பட்டது. கனியைப் போலவே உடலால் ஒரு சில மாற்றம் பெற்றுப் பொலிவடைந்து, மகப்பேறு பெறுதற்குரிய முதிர்ச்சியைப் பெறுகிற சிறுமி, கன்னி எனப் பெயர் பெறுகிறாள். கன்னிக்குப் பொலிவு (இங்கு விண்மீனின் வெளிச்சப் பொலிவு - brightness of the star சொல்லப் படுகிறதோ என்ற ஐயப்பாடு உண்டு. விண்ணியலாளர்கள் தான் சொல்ல வேண்டும்.) கணிசமாகவே உண்டு.

பிங்கலம் என்பது தமிழில் உள்ள நிகண்டுகளில் திவாகரத்திற்கு அடுத்துள்ள நிகண்டு. இதன் காலம் 9-ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவார்கள்; அதில் இராசிப் பெயர்கள் பற்றிச் சொல்லியதைக் கீழே தந்துள்ளேன். தமிழ்ச் சொற்கள் வடமொழி முலாம் பூசிக் காட்சியளிப்பதைப் பார்க்கலாம். அந்த முலாமை விலக்கித் தமிழை அடையாளம் காண்பது தஞ்சைப் பெரிய கோயிலில் நாயக்கர் காலத்து ஓவியங்கலை விலக்கிச் சோழர் காலத்து ஓவியங்களை இனங் காண்பது போல என்றே சொல்ல வேண்டும்.

மேட வீதி, இடபவீதி, மிதுனவீதி ஒரு மூன்றே,
அவை தாம் இரு சுடர் முதலிய இயங்கு நெறியே (பிங்.2:182)
இடபம், சிங்கம், மிதுனம், கடகம்
இணைய நான்கும் மேடவீதி (பிங்.2:183)
மீனம், மேடம், கன்னி, துலாமும்
ஆன இடபவீதிக்கு அமைந்தன (பிங்.2:184)
வில்லு, மகரம், குடமே, விருச்சிகம்
சொல்லிய மிதுன வீதித் துறையே (பிங்.2:185)

அடுத்த அதிகாரத்தில் இன்னும் மூன்று இராசிப் பெயர்களைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

இரா.செந்தில் said...

எங்கள் ஊரில் கால் வளைந்து இருந்தால் கப்ப கால் என்று சொல்லுவார்கள்.

Vijayakumar Subburaj said...

> .. தைத் திங்கள், சுறவ ஞாயிறு
> என்று திங்கள் மாதப் பெயர்களும்,
> ஞாயிறு மாதப் பெயர்களும்
> சேர்த்துக் குறிக்கப்படும் ...

தங்கள் கவனத்திற்கு, வேறொரு சுவையான பதிவு..

http://www.geotamil.com/pathivukal/albert_tamilnewyear.html