நண்பர்களே,
மரக்கறி பற்றிய என் இடுகைக்கு வந்த பின்னூட்டுக்களைப் படித்தேன். சிலபொழுது ஒரு சில பின்னூட்டுக்கள் நாம் சொல்ல வந்த கருத்தை மீண்டும் ஆழ்ந்து பார்க்க வைத்துவிடும். இந்த மரக்கறி பற்றிய செய்தியில் முன்னால் மடற்குழுவிலும், இப்பொழுது வலைப்பதிவிலும் எழுப்பிய பின்னூட்டுக்களும் அப்படியே இருந்தன.
வெறுமே படித்துக் கொண்டு மோனமாய் இருப்பதில் என்ன பயன்? வெறுமே படிப்பது திரைக்காட்சி பார்ப்பது போல; பின்னூட்டுத் தருவது தாளிகையின் ஆசிரியருக்கு மடல் எழுதுவது போல. பின்னூட்டு என்பது ஓர் வினையூக்கி (catalyst) என்றே நான் கொள்ளுகிறேன். இன்னொரு விதமாய்ச் சொன்னால், இறைப்பி(pump)யோடு தொடர்பிட்டுச் சொல்லலாம்.
இறைப்பிகளில் இரண்டுவகை உண்டு. ஒருவகையில், இறைப்பியின் பாத வாவியில் (foot valve) இருந்து உள்ளறை (inner chamber) வரை, நிரம்ப நீரைக் கொட்டி, எங்கும் ஒழுக்கு (leak) இல்லாத நிலையில், வெளியீட்டு வாவியின்(discharge valve) வாயில் இருந்து நீரை வரச் செய்து, இறைப்பியின் உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றினால் தான், இறைப்பி தன் வேலையைச் செய்யும். இப்படிச் செய்யும் செயலுக்குப் பெரும்புதல் (priming) என்று பெயர். "கலம் பெருகி ஊற்றுகிறது" என்று சொல்லுகிறோம் இல்லையா? அதே கருத்தை இங்கே பிறவினையில் சொல்லும் போது பெருக்குதல், பெரும்புதல் என்று சொல்லலாம். பெருக்குதல் என்பதற்கு வேறொரு பயன்பாட்டுப் பொருள் உண்டு. எனவே பெரும்புதல் என்பதை நிறைப்பது என்ற பொருளில் ஆளலாம். இந்தக் காலத்தில், அடுக்ககங்களில் இருக்கும் பலருக்கும் பெரும்புகிற வேலை தெரிந்திருக்கும். [பொதுவாக, நம்மூரைப் போன்று ஆண் ஆதிக்கம் இருக்கும் இடங்களில் பெருக்கும் வேலையை மகளிருக்குக் கொடுத்துப் பெரும்பும் வேலையை வீட்டுக்காரர் தன் வயம் வைத்துக் கொள்ளுவார்.]
இன்னொரு வகை இறைப்பி தன்பெரும்பும் வகையைச் (self-priming type) சேர்ந்தது. மடற்குழுக்கள்/ வலைப்பதிவுகளில் இருக்கும் பலருள்ளும் தன்பெரும்பாய் இருப்பவர்களை விரலை விட்டு எண்ணிவிடலாம் :-). பொதுவாக மற்றவர்களால் அவ்வப்போது பெரும்பி நிறைக்கப்படும் போதுதான் நம் கருத்து வெளியீடு ஏற்படுகிறது; எனவே இப்படி ஒருவருக்கொருவர் பெரும்பிக் கொள்ளத்தான் வேண்டும். நானும் ஒரு தன்பெரும்பன் அல்லன். நாலுபேர் கேட்கும் போது தான், "சரி, தேடிப் பார்த்து எழுதுவோமே" என்று என்ற முன்முனைப்புத் தோன்றுகிறது. இது போல் தான் 100க்கு 99 பேர் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். எனவே பின்னூட்டு என்பது மடற்குழுக்களிலும் வலைப்பதிவுகளிலும் இன்றியமையாதது என்பது என் மொழிபு. இல்லையென்றால் இறைப்பியில் இருந்து காற்றுத்தான் வரும். நீர் ஏறாது.
இனி மரக்கறி பற்றி முந்தைய பதிவில் வந்த பின்னூட்டுகளுக்கு என் மறுமொழி.
(கள் என்னும் பன்மை விகுதி, அதைப் புழங்குவதில் இருக்கும் குழப்பம் பற்றி வசந்தன், குமரன், anonymous, ஜி.ராகவன் ஆகியோர் கேட்டிருந்தார்கள்; இன்னொரு முறை வேறொரு இடுகையில் பேசலாம்.)
"அரக்கப் பரக்க" என்ற புழக்கம் பற்றி நண்பர்கள் பிரகாசும், ஞானவெட்டியானும் கூறினார்கள்.
"சைவம் என்ற சொல்லுக்கும், உணவுப் பழக்கத்துக்கும் தொடர்பே இல்லையா? அப்படி என்றால், இது எப்படி புழக்கத்துக்கு வந்தது?" என்ற பிரகாசின் கேள்வியைப் போலவே முன்னொரு நாள் புதிய மாதவி அவர்கள்
"எப்போது மரக்கறி சைவமானது? ஏன்? சைவநெறி விலங்குகளின் பலியிடலை ஏற்றுக்கொண்டதுதானே! நீங்கள் கூட தமிழுலகத்தில் இப்போது சிவன் கோவில்களில் இருக்கும், எலுமிச்சை பழங்களை வெட்டி பலியிடும் பலிபீடம், ஒரு காலத்தில் ரத்த பலிபீடமாகவே இருந்தது என்பதை எழுதியிருந்தீர்கள். (நீங்கள் எழுதியதாகத்தான் நினைவு. தவறு என்றால் மன்னிக்கவும் வாசித்தது தமிழுலகில்தான்) இதில் நிறைய வரலாற்று செய்திகள் புதைந்து கிடப்பது போலிருக்கின்றதே? எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ளும்வண்ணம் எழுதினால் பயனுள்ளதாக அமையுமே?"
என்று தமிழுலகம் மடற்குழுவில் கேட்டிருந்தார். முன்பு கொடுத்த என் நீண்ட விளக்கம் இது (பலிபீடம் பற்றிய செய்தியை இங்கு தவிர்க்கிறேன். அதை எழுதினால் இடுகை இன்னும் நீண்டுவிடும்):
-------------------------------------------
மரக்கறி என்பதைச் சிவநெறியோடு பொருத்தியது ஒருவிதமான எதிர் விளைவு.
சங்க காலத்திலும் கூட சிவநெறி, விண்ணெறி போன்றவை இருந்திருக்கின்றன. இவற்றை ஆதாரம் காட்டிச் சொல்ல முடியும். ஆனால் அந்தக் காலத்தில் மரக்கறி உணவை அழுத்திச் சொன்னதாய் உணர முடியவில்லை. சிவ, விண்ணவ நெறிகளுக்கான மெய்யியல் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். ஆனால் அதைத் தெள்ளத் தெளிவாய் உறுதிசெய்ய நம்மிடம் நூற் சான்றுகள் இல்லை.
நான் கொஞ்சம் மறைமலை அடிகள் வழிப் பட்டவன். சங்கம் மருவிய காலத்தில், களப்பாளர்கள் நுழையத் தொடங்கிய 3ம் நூற்றாண்டில், மாணிக்கவாசகர் இருந்திருக்க வேண்டும் என்ற மறைமலையாரின் ஆய்வை ஏரண வரிதியில் ஒப்புக் கொள்ளுகிறவன். (அதே பொழுது பல இடங்களில் மறைமலையாரிடமிருந்து நான் வேறுபடுவேன். அவர் சொல்லும் எல்லாவற்றையும் என்னால் ஒப்ப முடியாது; இருந்தாலும் மறைமலையார் சொல்லும் மாணிக்க வாசகர் கால முடிபு எனக்கு உடன்பாடே. வரலாற்றில் அக்கறை உள்ள பலரும் மறைமலையாரின் "மாணிக்க வாசகரின் வரலாறும் காலமும்" என்ற பொத்தகத்தைப் படிக்க வேண்டும். அண்மையில் பூம்புகார் பதிப்பகம் ஆகசுடு 2003ல் மறுபதிப்பு செய்திருக்கிறது.) மாணிக்கவாசகர் தான் சிவநெறிக்கு மெய்யியலை முதலில் வரைந்தவர். அவருடைய மெய்யியல் அப்படியே திருமூலரிடமும், கல்லாட ஆசிரியரிடமும், தேவார மூவரிடமும் உண்டு. மாணிக்க வாசகருக்கு முன் சிவநெறி மெய்யியல் நூல்கள் தமிழில் இருந்திருக்கலாம்; ஆனால் அவை நமக்குக் கிடைக்கவில்லை.
விண்ணவ நெறிக்கு உள்ள மெய்யியல், நமக்கு ஆழ்வார்கள் காலத்திற்கு முன் கிடைக்கவில்லை. பரிபாடற் பாட்டுக்கள் மெய்யியலை, ஒரு விளிம்பில் மட்டும் தான் தொடுகின்றன. அவற்றின் முழுமையான உள்ளீடு நமக்குப் புலப்படுவதில்லை.
இது போக ஆசீவகம் என்ற ஊழ்நெறியும், உலகாய்தம் என்னும் இறை நம்பா நெறியும் (உலகை ஆயும் நாத்திக நெறி) நம்மூரில் தான் பிறந்தன. இந்த இரண்டு நெறியின் அடிப்படை நூல்கள் மற்ற நெறியினரால் முற்றிலும் அழிக்கப் பட்டன. இந்தக் கொள்கைகளை மற்ற நெறியினரின் நூல்கள் வழியே பர பக்கமாய் (from another side) மட்டுமே நாம் அறிந்து கொள்ளுகிறோம். இத்தனைக்கும் ஆசீவகப் பாட்டுக்கள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன. (ஊரெங்கும் பரவிய "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றன் பாட்டுக் கூட ஆசீவகப் பாட்டுத்தான். எத்தனை பேர் அதை ஆசீவகம் என்று புரிந்து கொண்டுள்ளார்கள்?) ஆசீவகத்தின் பெருமை நம்மிலக்கியங்களில் கரந்து கிடக்கிறது; தேடி அறிய வேண்டும்.
இனி வடக்கிருந்து நம்மூர் வந்த மூன்று நெறிகள் வேதநெறி, செயின நெறி மற்றும் புத்த நெறியாகும். நம்மூரில் ஆட்சியாளர் நெறி சிவநெறி, விண்ணெறி ஆனது போல், வடபுலத்தில் கி.மு.600க்கு முன் வேதநெறிதான் ஆட்சிநெறி. வேதநெறியால் ஏற்பட்ட நெருக்கடி, மக்களை வேறு வேறு நெறிகளைத் தேட வைத்தது. அரசனை எதிர்த்த நிலை புத்தமும், செயினமும் ஆகிய இந்த நெறிகளை அடிமட்ட மக்களின் நெறிகளாகத் தோற்ற வைத்தது.
கி.மு.5,6-ம் நூற்றாண்டுகளில் மகத அரசு இராச கிருகத்தில் இருந்து விரிய, விரியக் காடுகள் எரித்து அழிக்கப் பட்டன. (இப்படித்தான் இந்தக் கால விகாரை - Bihar, named after Buddha vihara - மாநிலமும், உத்தர - Uttar pradesh - மாநிலமும் உருவாயின.) நாகரிகம் என்பது வடபுலத்தில் மேற்கில் இருந்து கிழக்கிற்கு வரவில்லை. கிழக்கில் இருந்து மேற்கே விரிந்தது. இப்படிக் கிடைத்த நிலங்களில் மக்கள் குடியேற்றப் பட்டனர். அவர்கள் முல்லைத் தொழிலையும் மருதத் தொழிலையும் (slash-burn-plough வெட்டி, எரித்து உழுதல் என்ற வேளாண்மை) அரசன் ஆணையால் செய்யத் தொடங்கினர். தங்களுடைய விளைப்பில் அரசுக்கு 3ல் ஒரு பங்கு என்று வரி கொடுக்கத் தொடங்கிப் பின் அதுவும் சரிந்து 6ல் ஒரு பங்கு என்ற அளவில் பங்கு கொடுத்தார்கள். பொருள்நூலில் இதைப் பற்றிச் சாணக்கியன் மிக நன்றாகவே விவரிக்கிறான். இந்தப் புதிய குடியேறிகளுக்கு மாடு என்பது செல்வம் போன்றது. (நாவலந்தீவு எங்கணும் இதுதான் நிலை. அதனால் தான் மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருள் நம் மொழியில் ஏற்பட்டது. நம் புற நானூற்றில் புறத்திணைகள் பற்றிச் சொல்லும் போது வெட்சித் திணையே ஆநிரைகளைக் கவர்வதாய் முதலில் சொல்லப் படும்.) அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கியோ, அல்லது வலிவு கொண்டு அடித்துச் சென்றோ, யாரோ ஒரு அரசன் அல்லது பெருங்குடிக்காரன் செய்யும் வேள்விக்கு ஆகுதியாய்க் கொண்டு செல்லும் போது, அப்படி அடித்துச் செல்லும் செயல் / தடிமாட்டு விலைக்கு வாங்கும் செயல்/ வரைமுறை அற்று மிகுந்து போன போது, மக்கள் முனகத் தொடங்கினார்கள்; கூக்குரலிட்டார்கள்.
இதே கால கட்டத்தில், ஓர் அமைதிப் போராட்ட நெறியாக செயினம் உருவெடுத்தது. (செகுத்தல் = வெல்லுதல்; கொல்லுவதால் வெல்லுதல்; ககரத்திற்கு யகரம் போலியாகி செகுத்தல்>செகித்தல்>செயித்தல் என்று ஆயிற்று. பின்னால் செயம்>ஜெயம் என்று வடமொழியில் போய்ச் சேரும். இங்கே உணர்வை, ஆசைகளைச் செகுத்த காரணத்தால் இவர் செகுனர்>செகினர்>செயினர்>ஜெயினர்; "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று" என்ற குறளை எண்ணிப் பார்த்தால் செகுத்தலின் உட்பொருள் புரியும்.) அதோடு வேத நெறி சொன்னதையெல்லாம் செயினம் எதிர்த்தது; கேள்வி கேட்டது; ஏதொன்றையும் ஏரணம் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்றது. செயினத்தின் தாக்கம் வடபுலத்தில் மகதத்தைச் சுற்றிலும் அதிகமாகவே இருந்தது.
சரசுவதி ஆற்றங்கரையில் சரியென்று தென்பட்டு, உத்தர பாதை வழியே மகதம் வந்து சேர்ந்த வேத நெறி, இந்தக் கேள்விகளின் காரணத்தால், எதிர்ப்புகளால், கங்கை யாற்றங் கரையில் தடுமாறத் தொடங்கியது; செயினத்தின் நடைமுறைக் கேள்வி உயிர்க்கொலை பற்றியதே. ஆகுதிக்கென உயிர்களைக் கொல்வது தவறென்று அது அழுத்திச் சொன்னது; இந்த அழுத்தம் கண்டு மக்கள் பெரிதும் அசந்து போனார்கள்; ஏனென்றால் மகதம் என்ற பேரரசில், அதையொட்டிய நாடுகளில், நடந்த வேள்விகளில் கணக்கற்ற விலங்குகள் ஆகுதியாய் ஆகின. நாட்டின் ஆநிரை குறைந்ததால், வாழ்வு ஆடிப் போனது. இதைத் தவிர்க்கச் சொன்ன செயினம், போரையும் தவறென்று சொன்னது; விளைவு மக்களை அது ஈர்க்கத் தொடங்கியது. சிறிது சிறிதாக பெருங்குடியினரும், குறுநில அரசர்களும், ஏன் மகதப் பேரரசனுமே முடிவில் செயினத்தின் பக்கம் சாயத் தொடங்கினார்கள். வேள்வி நெறி வடபுல நாட்டில் ஒரு நெருக்கடிக்குள் சிக்கியது; செயினத்தின் கேள்விகளுக்கு மறுப்பாய் உபநிடதங்கள் எழுந்தன. முதல்முறையாக வேதநெறியில் மெய்யியல் தேடல் என்பது உபநிடதங்களின் வழியாய்ப் பிறந்தது செயினத்தின் எதிர்விளைவால் ஏற்பட்டதுதான். இதை மறுக்க முடியாது.
செயினம் உயர்ந்துவரும் போது அதனுடைய கடினமான நெறிமுறைகள் (இங்கு நம்மூரில் எழுந்த ஆசிவகரைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஆசிவகத்தின் நெறிமுறைகளும் கடினம் தான். ஆசீவகம் பற்றித் தனியே எழுத வேண்டும். இங்கு சொன்னால் விரியும்.) மக்களைக் கொஞ்சம் பயமுறுத்தின. எனவே (வேள்விநெறிக்கும் செயினநெறிக்கும் இடைப்பட்ட) நடுப்பாதையாய் புத்தம் எழுந்தது.
சமணம் என்ற சொல் செயினர், புத்தர், ஆசிவகர் என்ற மூவரையுமே குறிக்கும் ஒரு பொதுச்சொல். இன்றைக்குப் பல ஆராய்ச்சியாளரும் இந்தச் சொல்லை செயினருக்கு என விதப்பாய்ச் சொல்லுகிறார்கள். நான் புரிந்து கொண்டவரை, அது தவறு. இந்தத் தவற்றால் ஆசிவகர்களின் செய்திகள் எல்லாம் செயினருக்கு உள்ளதாய், ஆசீவகர்களுக்கென நம் அரசர்கள் ஏற்படுத்திய பள்ளிகள்/படுகைகள் முதற்கொண்டு எல்லாமே தமிழ் வரலாற்றில் மாற்றிச் சொல்லப் படுகின்றன.
செயினரும், புத்தரும், ஆசீவகரும் பொதுமக்கள் பக்கம் நின்றதால் வடநாட்டில் மக்கள் வழக்கான பெருகதத்தைத் (prakrit) தூக்கிப் பிடித்தார்கள். பெருங்குடியினரைச் சார்ந்திருந்த வேதநெறியோ தக்கசீலத்து சந்த (chandas) மொழியைத் தூக்கிப் பிடித்தது. முடிவில் சந்தமும் பெருகதமும் இணைந்து, வெகுநாட்கள் கழிந்து சங்கதம் உருவாயிற்று. பாணினியம் இலக்கணம் வகுத்தது சந்த மொழிக்குத் தானே ஒழியச் சங்கதத்திற்கு அல்ல. சங்கதம் பிறந்தது பாணினியத்திற்குப் பிறகு. இந்த உண்மையை உணர்ந்தால் தான் இந்திய வரலாறு ஒழுங்காய்ப் புரியும். ஆனாலும் பலரும் இதைச் செய்யவொட்டாமல் குழறுபடி செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன நிகழ்ப்போ (agenda-வோ) ?
செயினரும், புத்தரும் தெற்கே வர வர, உயிர்க்கொலை பற்றிய கருத்தும் கொஞ்சம் கொஞ்சமாய் நம்மூரில் மாறத் தொடங்கியருக்க வேண்டும். (ஏனென்றால் சங்க இலக்கியங்கள் உயிர்க் கொலை கூடாது என்று எங்கும் சொல்ல வில்லை; சங்கம் மருவிய காலத்து நூல்கள் தான் முதலில் சொல்லுகின்றன.) முக்கண்ணனைத் தொழுவதும், அவன் வழியான செவ்வேளைத் தொழுவதும், மாயோனைத் தொழுவதும், அதை ஒட்டிய மெய்யறிவுக் கொள்கைகளும், உயிர்க்கொலை பற்றி தமிழர்கள் பொதுவாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், செயினமும், புத்தமும் நம்மூரில் பெரிதும் பரவாமல் இருந்தவரை, அதாவது கி.பி.2ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, நமக்கு இயல்பானவையே.
சங்கம் மருவிய காலத்துச் செயினமும், புத்தமும் இங்கே விரியத் தொடங்கும் போது, அதற்கும் சற்று 200, 300 ஆண்டுகளின் முன் இன்னொரு அலையாய் வேத நெறி நம்மூரில் பரவியிருந்தது. இந்தப் பொழுதில் தான் வடமர் (vadama) என்ற வகையினர் தென்னாடு போந்து நம்மூரில் ஏற்கனவே இருந்த பெருகணப் (brhacchanam) பெருமானர்களோடு (பெருமானர்> brahmins) கலந்தனர். பெருமானர்கள், அவர்களின் கோத்திரங்கள், அவர்கள் தமிழ்நாட்டில் பிற்காலப் பேரரசுகளின் ஆதரவால் பெரிதும் கலந்தமை போன்ற செய்திகள் நம்மூர் வரலாற்றோடு சேர்ந்து அறியப்படவேண்டியவை. அறிந்ததைச் சொல்லுவதற்குத்தான் ஆளில்லை. பெருமானர்களின் வரலாற்றைத் தமிழ்நாட்டு வரலாற்றில் இருந்து விலக்க முடியாது. ஆனால் பெருமானரும், பெருமானர் அல்லாதோரும் ஆகிய இரண்டு வகையினரும் தவறாக விதப்பு (speciality) ஏற்படுத்திக் கொண்டு கூட்டுகை (context) மாற்றிச் சொல்லி வருகிறார்கள்.
சங்கப் பாடல்கள் ஒரு சிலவற்றில் வேத நெறி ஊடுருவி இருப்பது உண்மைதான். பிந்து சாரன் (அசோகனின் தந்தை) தமிழகத்தின் எல்லை வரை படையெடுத்ததற்கு அப்புறமே, வடநாட்டில் ஏற்பட்ட நெரிசலால், தக்கணப் பாதை வழியாக உஞ்சை, நூற்றுவர் கன்னர் தலைநகரான படித்தானம் (Paithan near modern Aurangabad) வரை வந்து பின் அங்கிருந்து ஐம்பொழில் (Aihole - Hampi in Karnataka), தகடூர் வழியாக தமிழகத்தில் வேத நெறி நுழைந்தது. செயினம் நுழைந்ததும் இதே வழிதான். புத்தம் மட்டும் படித்தானம் வரை இப்படி வந்து பின் ஆந்திரத்தில் உள்ள நாகார்ச்சுன மலை அமராவதிக்கு வந்து பின் வறண்ட மாவட்டங்கள் வழியாய் காஞ்சி வந்து தமிழகத்தில் சேர்ந்தது.
தமிழர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, மரக்கறி சாப்பிடப் பெரிதும் முற்பட்டது கிட்டத்தட்ட கி.பி. 300ம் அதற்குச் சற்று முன்னும் பின்னும் தான். ஆனாலும் மரக்கறிப் பழக்கம் இங்கு ஊறுவதற்கு நெடுநாட்கள் ஆனது. சேரலத்தில் பெரும்பான்மையானவர் கறிச் சாப்பாட்டிலும், ஏன் மாட்டுக் கறியிலும் இன்றும் ஆழ்ந்துயிருப்பது இதை நமக்கு உணர்த்தும். மாட்டுக்கறி என்பது நெல்லை மாவட்டத்திலோ, குமரி மாவட்டத்திலோ, இன்றும் கூட நெற்றி நுதலைக் குறுக வைக்காது. வட மாவட்டங்களில் வேண்டுமானால் ஒருவேளை அப்படிச் செய்யக் கூடும். அதே போல விதவிதமான கறிவகைகள், காடை, கவுதாரி எனத் தென்மாவட்டங்களில் கிடைப்பது போல் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருப்பதில்லை. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் மரக்கறிச் சாப்பாடு நமக்கு வடமாவட்டங்களின் வழியே தான் பரவியது. என்று சொல்லத் தான். அது நமக்கு வெளியூரில் இருந்து வந்த பழக்கம் தான்.
இன்றைக்குத் தமிழகத்தில் யாராரெல்லாம் செயினம், புத்தம் ஆகிய நெறிகளில் கி.பி.300 வரை நெருக்கம் கொண்டார்களோ (அவர்கள் பின்னாளில் மீண்டும் சிவம் அல்லது விண்ணவத்திற்கு மாறியிருக்கலாம்) அவர்களின் வழிமுறையினரெல்லாம் மரக்கறிதான். [காட்டு: நாட்டுக் கோட்டை நகரத்தார்கள்; ஒருகாலத்தில் சமணத்தோடு (செயினம், புத்தம், ஆசீவகம் ஆகிய மூன்று நெறிகளோடு) நெருங்கி இருந்து பின் சிவநெறிக்கு மீண்டவர்கள் இவர்கள். இவர்களில் மரக்கறி சாப்பிடுபவர்கள் மிகுதி. ஆனாலும் கணிசமானவர்கள் இன்றைக்கும் கறி சாப்பிடத் தான் செய்கிறார்கள்]. நான் இங்கு கூறுவது நிரவலான பேச்சு. நீங்கள் உடனே "அந்தக் குமுகம் செயினம், புத்தம், ஆசிவகத்திற்குப் போகவே இல்லை, ஆனால் இப்பொழுது மரக்கறி தானே சாப்பிடுகிறார்கள்" என்று ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் காட்டிக் கேட்டால் என்னிடம் மறுமொழி கிடையாது. இந்தச் சிக்கலில் எத்தனையோ இழைகள் பின்னிக் கிடக்கின்றன. நான் பொதுவான செய்தியே சொன்னேன். இருக்கின்ற ஆய்வுச் செய்திகள் குறைவே.
-------------------------------------------
இனி மடற்குழுவில் எழுந்த பின்னூட்டுக்களும் அதற்கு நான் கொடுத்த மறுமொழிகளும்:
மலையாளிகள் மரக்கறியைப் பச்சக் கறி என்று சொல்லுவதாக நண்பர் சாபு முன்பு மடற்குழுவில் சொன்னார். தெரிந்து கொள்ள வேண்டிய சொல் தான்.
இண்டி ராம் என்ற நண்பர் "கறி என்பது மாம்சத்தை குறிப்பிடுவதால் எந்த வார்த்தையும் தன்னுள் "கறி" யை கொண்டிருந்தால் அது சந்தேகத்தை விளைவிக்கும் என்ற எண்ணத்தால் மரக்கறி பிரயோகம் தவிர்க்கப்படுகிறது. பல தமிழர்களின் வாயில் இப்பொதெல்லாம் வெஜ் நான்வெஜ்தான் சரளமாக உழன்று வருகிறது" என்று மடற் குழுவில் சொன்னார். மரக்கறி என்ற சொல் கறியில் இருந்து விதப்பி அறியச் சொன்னது தான். அதன் பொருள் "பெரும்பான்மை மக்கள் கறி சாப்பிட்டார்கள்; சிலர் விதப்பாக மரக்கறி சாப்பிட்டார்கள்" என்பதாகும். இப்பொழுது நெறியையும் சாப்பாட்டு வகையையும் குழப்பிக் கொண்டதால், நாம் புழங்கும் சைவம் என்ற சொல்லில் சைவம் என்பது பெரும்பான்மை; அசைவம் என்பது சிறுபான்மை என்றாகிறது. ஆனால், களத்தின் உண்மை நிலை அதுவல்ல.
அடுத்து அபிராமிப் பட்டர் என்ற நண்பர், "தமிழ் நாட்டில் மரக்கறி என்ற சொல் இல்லாமல் போனாலும், சிங்கையிலும், மலேசியாவி லும் இன்னும் இந்தச் சொல் வழக்கத்தில் தான் உள்ளது. சிங்கையில் உள்ள (இதுவரைக்கும் நான் பார்த்த) தமிழர்கள் மரக்கறி என்று தான் சொல்கிறார்கள். இன்னும் Vegetarian என்ற சொல் புழக்கத்திற்கு வரவில்லை :-)" என்று சொன்னார். இது இயற்கை. குடியேறிகள் பொதுவாக பழைய சொற்களை விடாது புழங்குவர். நீங்கள் தென்னமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டில் உள்ள இந்தியக் குடியினரைப் பார்த்தால் அவர்கள் 19ம் நூற்றாண்டு இந்துத்தானியை இன்னும் புழங்கிக் கொண்டிருப்பார்கள். இந்தியாவிலோ இந்தி மொழி மிகவும் மாறிப் போய்விட்டது. இதில் எது சரி என்பது கடினமான கேள்வி.
இனி பானுகுமார் என்ற நண்பர், "மரக்கறி உணவிற்கு ஆருத உணவு என்ற பெயரும் உண்டு. ஆருகதர்கள் என்றால் சமணர்கள். தமிழ் நாட்டில் சில இடங்களிலும், இலங்கையில் இன்றளவும் ஆருத உணவு என்ற சொல்வழக்கு புழக்கத்தில் உள்ளது என்பார் மயிலையார். இலங்கைவாழ் தமிழர்கள்தான் சொல்லவேண்டும் " என்று சொன்னார். அவருக்கு நான் சொல்ல நினைப்பது சமணர் என்ற பொதுச்சொல் பற்றியது. செயினர் என்பதே விதப்பானது. நம்மில் பலரும் சமணம் என்ற பொதுச்சொல்லை விதப்பாய்ப் புழங்கிக் கொண்டு இருக்கிறோம். துல்லியம் வேண்டின் இந்த விதப்பை விளங்கிக் கொள்ள வேண்டும். மயிலையார் சொன்னது ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன். இன்றைய நிலை அதுவா என்று எனக்குத் தெரியாது. தமிழ்நாட்டில் அப்படிக் கிடையாது என்று அழுத்தமாய்ச் சொல்ல முடியும்.
இனி நா. கணேசன் சொன்னார்: "தமிழகத்தில், (இந்தியாவில் பொதுவாக) முன்பு சாதி பிரமிடு உணவுகோள் மூலம் கட்டப்பட்டது. மாடுண்போர் தாழ்த்தப்பட்டனர், பசு, பன்றி தவிர்த்துப் பிறவுண்போர், சைவ வேளாளர், பிராமணர் என்று 19-ம் நூற்றாண்டில் இருந்தது."
உணவு கொள்ளும் முறையில் சாதிப் பாகுபாடு பார்க்கப் பட்டது என்பது உண்மைதான். ஆனால் சாதியின் அடிப்படை உணவு அல்ல. உணவு என்பது சாதிமுறை என்ற சிக்கலின் ஒரு விளிம்பு.
நண்பர் பூபதி மாணிக்கம் " ஊரில்.. குறிப்பாக புகைவண்டி நிலையங்களில்.. மரக்கறி உணவகம் என்றும் போட்டிருப்பார்களே..!?!" என்று கேட்டிருந்தார். உண்மை தான். ஆனால் அண்மையில் பல இருவுள் (rail) நிலையங்களில் மரக்கறி என்ற சொல் மறைக்கப் பட்டுவிட்டது, இருவுள் நிலைய உணவுக் கடைகளையும் சேர்த்து பெரும்பாலான இடங்களில் "உயர்தர சைவ உணவகம்" தான் மிஞ்சி நிற்கிறது.
நண்பர் பழனி, சிங்கையில் உள்ள சில செட்டிநாட்டு உணவகங்களில் மரக்கறி சாப்பாடு என்று சொல்லுவதாகவும், அவர் வீட்டுக்காரம்மா "மரக்கறி சாப்பாடுதானே உங்களுக்குச் சமைக்கணும்?" என்று கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் சொன்னார். ஏற்கனவே சொன்ன மறுமொழிதான். "நீங்கள் எல்லாம் பண்பாட்டு மிச்சங்கள். பழைய பழக்கத்தைக் காத்து வருகிறீர்கள். பொதுவாக மற்ற நாட்டிற்குக் குடியேறிய தமிழர்கள் தமிழ்ச்சொற்கள் பலவற்றைக் காப்பாற்றி வருவார்கள்."
இனி மருத்துவர் செயபாரதி சீனர்களின் கடைகளில் கறியைப் போல சோயா மாவில் செய்த போலிக்கறி உணவுகள் பற்றிச் சொன்னார். அவர் சொல்லுவது போல், விவரம் தெரியவில்லை என்றால் "ஏதுண்மை; எது போலி" என்று தெரியாத அளவிற்கு அவ்வளவு நுண்ணிய உருவாக்கம் சோயாவில் செய்யும் போலிக்கறி. உணவைச் செய்தவர் சொன்னால் தான் நம்மால் அது மரக்கறி என்று நம்ப முடியும். இதைப் பழனியும் வழிமொழிந்திருந்தார்.
நண்பர் இண்டிராம் சீன புத்தத் துறவிகள் கறி சாப்பிடுவதில்லை என்ற கருத்துத் தெரிவித்திருந்தார். அது சரியா என்று சொல்ல முடியவில்லை. கோதம புத்தரே கறி சாப்பிட்டவர் தான். அவர் இறந்த அன்று கெட்டுப்போன பன்றிக் கறி சாப்பிட்டுத்தான் உணவு நச்சில் இறந்தார். திபெத்திய துறவிகள், தலாய் லாமா முதற்கொண்டு, கறி சாப்பிடுகிறார்கள் தான். சீனப் பெருநாட்டில் புத்தத்துறவிகள் கறி சாப்பிடுவார்கள் என்றுதான் படித்திருக்கிறேன். சிங்களத் துறவிகள் எல்லோருமே மரக்கறியாளர்கள் என்று சொல்ல முடியாது. மரக்கறிதான் சாப்பிட வேண்டும் என்று தம்ம பதம் சொன்னதாக நான் படித்ததில்லை. செயினம் சொல்லியிருக்கிறது. ஆசீவகம் சொன்னதாக நான் படிக்கவில்லை.
உணவுப் பழக்கம் என்பதை "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற மொழியின் படி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
நான் பிறந்த பொழுது மரக்கறிதான். திருச்சி புனித வளனார் கல்லூரி புது விடுதியில் சேர்ந்தபின்னால் சூழ்நிலை கருதி கறிச் சாப்பாடு (அது ஒரு பெரிய கதை; இன்னொரு முறை பார்க்கலாம்.) இப்பொழுது ஓரிரு ஆண்டுகளாய்ப் பெரிதும் மரக்கறி தான். எப்பொழுதாவது கட்டாயத்தின் பேரில் கறிச் சாப்பாடு. இது போலப் பலரும் மரக்கறிக்கும், கறிக்கும் விட்டு விட்டு மாறியிருப்பார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன்.
முடிவில் நண்பர் சாபு துபாயில் மரக்கறி பரவும் செய்தியைச் சொன்னார்; உலகம் எங்கும் மரக்கறி சிறிது சிறிதாகப் பரவிக் கொண்டு இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்.
எனக்கு என்ன வியப்பு என்றால் நான் எதற்காக "மரக்கறி" என்ற தலைப்பில் மடல் எழுதினேனோ அந்தப் பொருளை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பதுதான். பலமுறை ஒருவர் எழுத்திற்கு இப்படி நடப்பதுண்டு. ஒருவர் எதையோ நினைத்து எழுதியிருப்பார். அது பொருட்படுத்தப் படாமல், வேறொன்று அலசப்பட்டுக் கொண்டு இருக்கும். நான் எழுதியது மொழிபெயர்ப்புச் செய்யும் போது எந்த அளவு மாறுகடை உளவியல் (marketing psychology) இங்கே உள்நுழைகிறது என்பதைப் பற்றியது.
மாறுகடையியலின் ஊடுறுவல் இந்தக் கால வாழ்வில் மிகுந்து கிடக்கிறது என்று சொல்ல வந்தேன். முடிவில் "மரக்கறி என்ற சொல் வழக்கிழந்ததே, அதை மீட்டுக் கொண்டு வரமுடியாதா?" என்ற ஒரு ஏக்கத்தைச் சொல்லியிருந்தேன்.
ஏக்கம் நண்பர்களிடம் பற்றிக் கொண்டது. மாறுகடைத்தல் என்ற உள்ளீடு எங்கோ போயிற்று. எனக்கு வியப்புத்தான்.
அன்புடன்,
இராம.கி,
12 comments:
அன்பு நண்பர் இராமகி,
//மாறுகடைத்தல் என்ற உள்ளீடு எங்கோ போயிற்று.//
இது பற்றி நாம் தமிழ் உலகத்தில் இருக்கும்போதே தாங்கள் அளித்தது. அதனால் எனக்கு அது புதியதாய்த் தோன்றவில்லை.
தங்களின் மடல்களிலும் பதிவுகளிலும் நான் விதப்பாய் நோக்குவது தமிழ்ச் சொற்களும் அதன் வேர்களையும். அந்தச் சொற்களை எங்கெங்கு கையாளவேண்டுமோ அங்கே கையாண்டு வருகிறேன். மற்ற நண்பர்களிடமும் சொல்கிறேன். வழக்கிழந்த தமிழ்ச் சொற்கள் கையாளும் முறை பற்றி பரப்புகிறேன்.
ஏதோ! என்னாலானது.
ஐயா பல விஷயங்கள் புரிந்தன இந்தப் பதிவைப் படித்ததில். இதுவரை சமணம் என்றால் அது ஜெயினரை மட்டுமே குறிப்பது என்று எண்ணியிருந்தேன். ஆசீவகம் பற்றி மேலும் அறிய ஆவல். ஏதேனும் சுட்டி இருந்தால் தருகிறீர்களா? இந்தப் பதிவில் நிறையத் தமிழ்ச்சொற்கள் எனக்குப் புதுமையாக இருக்கின்றன. உங்கள் முந்தையப் பதிவுகளைப் படித்தால் அவற்றைப் புரிந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நீங்கள் இந்த வலைப்பக்கம் தவிர வேறு எங்கெல்லாம் எழுதுகிறீர்கள் என்று சொல்லுங்கள். அங்கும் வந்து உங்கள் எழுத்துகளைப் படிக்கிறேன்.
இராம்கி ஐயா, படிக்க படிக்க மனதிற்கு நிறைவாய் இருந்தது. மரக்கறி, பச்ச கறி என்ற இரு சொற்களும் மலையாளப்படங்களில் காதில் விழுந்துள்ளன. புலம் பெயர்ந்தவர்கள் பல நுற்றாண்டுகள் ஆயினும், சில சொற்களை புழக்கத்தில் வைத்திருப்பது எல்லா மொழிகளிலும் உண்டு. ஹிந்தியில் ஹரிபரி என்ற சொல்லைக் கேள்விப்படிருப்பீர்கள், அரக்க பரக்க என்பதற்கு ஈடானது.
இதில் ஹரிக்கு பொருளான வேகம், ஆங்கில சொல் அல்லவா?
இந்தப் பதிவுக்கு நன்றி. ஏறக்குறைய இது போன்றதே என்னுடைய புரிதலாகவும் இருக்கிறது. உங்கள் தமிழ்ச் சொற்கள் வழக்கம் போல அணிசெய்கின்றன. வேதமறுப்பு சமயங்கள் பரவியதற்கான மற்ற சமூகக்காரணங்களை நீங்கள் பதிவின் தொடர்பு கருதி இங்கு தவிர்த்திருக்கிறீகள் என்று நினைக்கிறேன். இந்திய துணைக்கண்டத்தில் இன்று இந்து சமயம் என்ற கருத்தாடலில் வேதசார்பு கொண்ட சமயங்களே அடையாளப்படுத்தப்படுவதன் அரசியல் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தாக்கமே.
ஆசிவகத்தைப்பற்றிய உங்கள் பதிவை/ அல்லது முந்தைய பதிவின் சுட்டியைத் தந்தால் மகிழ்ச்சி.
ஏகப்பட்ட புதிய தகவல்கள். நன்றி.
நீங்கள் குறிப்பிட்ட சமணர் என்கிற பிரிவில், தமிழ்நாட்டில் தமிழ் ஜெயின் என்று சொல்லப்படுபவர்களும் இருக்கிறார்கள் இல்லையா? வந்தவாசி, செஞ்சி போன்ற திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகம் இருக்கிறார்கள். இவர்களுடைய பூர்வோத்திரம் என்ன? நேரம் கிடைக்கும் போது எழுதினால் சரி
//நான் பிறந்த பொழுது மரக்கறிதான். திருச்சி புனித வளனார் கல்லூரி புது விடுதியில் சேர்ந்தபின்னால் சூழ்நிலை கருதி கறிச் சாப்பாடு (அது ஒரு பெரிய கதை; இன்னொரு முறை பார்க்கலாம்.) //
அய்யா, உங்களுக்கும் ragging தொல்லை இருந்ததா? :-)
//எனக்கு என்ன வியப்பு என்றால் நான் எதற்காக "மரக்கறி" என்ற தலைப்பில் மடல் எழுதினேனோ அந்தப் பொருளை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பதுதான்.//
நிச்சயமாக. படித்த போது, மாறுகடையியல் பற்றிய பதிவு என்பது எனக்கு நிதர்சனமாய் தெரிந்தது. மாறுகடையியல் ஊடுருவல் பற்றி எங்கே வேண்டும் என்றாலும் படித்துக் கொள்ளலாம். சைவத்துக்கு மரக்கறி உணவுக்கு உள்ள கள்ளத்தொடர்பு பற்றி இங்கே மட்டுந்தானே கிடைக்கும்.
அன்பிற்குரிய ஞா.வெ.
சொற்களைப் பலவிடத்தும் பரப்புதலுக்கு என் நன்றி. தமிழால் முடியும் என்று பலரும் உணர்ந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. வேரும் சொல்லும் தேடுவது அதை உணர்த்தவே.
அன்பிற்குரிய குமரன்,
சமணர் என்றால் அது செயினரை மட்டுமே குறிக்கிறது எனப் பலரும் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்; அந்தப் பிழை பல ஆராய்ச்சியாளருக்கும் கூட உண்டு. சமணம் / சமயம் பற்றிய வேறொரு இடுகையில் அதைப் பற்றிச் சொல்லுவேன். ஆசீவகம் பற்றிய செய்திகளை அறிவதற்கு தோழர் வெங்காலூர் (நம்ம பெங்களூர் தாங்க; அந்தப் பெயரின் மூலம் கூட தமிழர் அல்லாமல் காட்ட வேண்டும் என்ற விழைவில் குதறிப் புரிந்து கொள்ளுகிறார்கள்) குணா, பேரா. க. நெடுஞ்செழியன் (இப்பொழுது இருவருமே தமிழ்த் தேசியம் காரணமாகக் கர்நாடகா சிறையில் இருக்கிறார்கள்.) போன்றோரின் நூல்களைப் பார்க்க வேண்டும். ஆசீவகம் பற்றிய என் பார்வையை கட்டுரை வடிவில் தர முயல்வேன்.
அன்பிற்குரிய உஷா,
அரக்கப் பரக்க என்பது இரட்டைக் கிளவி. அது தமிழ் தான். நீங்கள் hurry என்னும் சொல்லைப் பற்றிச் சொல்கிறீர்கள். பொதுவாக சில onomotopoeic சொற்கள், அதாவது வெறும் ஒலிக்குறிப்பினால் எழும் சொற்கள், மொழிக்குடும்பம் தாண்டியும் ஒன்றாக இருக்கும். (அ)ம்மா என்ற சொல்லைப் போல.
அன்பிற்குரிய தங்கமணி,
வேத மறுப்புச் சமயங்கள் பரவியதற்கான காரணங்களைப் பேசத் தொடங்கினால், மீண்டும் பெருமானர், பெருமானர் அல்லாதோர் (brahmins, non-brahmins) என்ற வழக்கிற்குள் வந்து சேருவோம். பலரும் வரலாற்றை மறுதலித்துக் கொண்டே, அகத்திட்டாகக் (subjective) கருத்துமுதல் வாதத்தை எடுத்துப் பேசத் தொடங்கி விடுகிறார்கள். இந்த வழக்கை உணர்ச்சி வயப்படாமல் வெளித்திட்டாகப் (objective) பேசுதற்கு நம்மில் பலரும் அணியமாக இல்லை; இதனால் பெரும்பாலும் இதைத் தவிர்க்கிறேன். குறிப்பாக இந்து சமயம் என்ற கருத்தாடலில் எனக்கு ஏகப் பட்ட மாற்றுக் கருத்துக்கள் உண்டு; ஆனால் பலரும் அவற்றைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். நான் அறிந்த வரை சிவநெறி, விண்ணவ நெறி ஆகியவை வேத நெறிக்குப் புறம் பட்டவை. ஆனால் பலரும் இம்மூன்றையும் கலவையாகத் தான் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள்.
அன்பிற்குரிய பிரகாஷ்,
தமிழ்ச் செயினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகுந்து வாழ்கிறார்கள். அவர்களின் தலைமைப் பீடம் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள சித்தாமூரில் உள்ளது. தமிழ்ச் செயினர் பற்றி எழுத முயல்கிறேன்.
ragging தொல்லை புகுமுக வகுப்பில் குறைவு. கோவை நுட்பியல் கல்லூரியில் (Coimbatore Institute of Technology) கூட இருந்தது.
சிவநெறிக்கும் மரக்கறிக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்று சொல்லுவது படிப்பதற்கு ஏதோ போல் இருக்கிறது. மரக்கறியின் முகமை உண்மையிலேயே பிற்காலச் சிவ நெறியரால் அழுத்திச் சொல்லப் பட்டதுதான். இந்த மாற்றங்கள் சமயங்களில் ஏற்படுவது இயற்கையே.
அன்பிற்குரிய வாசன்,
தனிமடலில் தொடர்பு கொள்ளுவேன்.
அன்புடன்,
இராம.கி.
இந்தப் பதிவிற்கு தேசிபண்டிட்-ல் சுட்டி கொடுத்துள்ளேன். ஆட்சேபம் இருக்காது என நம்புகிறேன்.
http://www.desipundit.com/2006/02/01/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf/
நன்றி
//வேத மறுப்புச் சமயங்கள் பரவியதற்கான காரணங்களைப் பேசத் தொடங்கினால், மீண்டும் பெருமானர், பெருமானர் அல்லாதோர் (brahmins, non-brahmins) என்ற வழக்கிற்குள் வந்து சேருவோம்.//
ஆமாம். ஆனால் வேதமறுப்புச் சமயங்களில் பல அந்தணர் (பெருமானர்களும்) களும் நம்பிக்கையுடையோராய் பங்காற்றிஉள்ளனர் என்ற உண்மை புதைக்கப்பட்டு அச்சாதி முழுவதுமே இந்துமதம் என்ற கருத்தாடாலில் ஒருவகை மதமாற்றம் செய்யப்படும் இச்சூழலில் அதைப்பற்றிய பேச்சு இந்தப் பொது அடையாளமாக்கலைத் தடுக்கவும், வேதமறுப்புச் சமயங்களின் இருப்பைஅறிவிக்கும் செயலின் ஒரு பகுதியாகவாவது இருக்குமே!
நன்றி ஐயா.
அன்புள்ள இராம.கி,
வடமாநிலங்களில் மரக்கறி உணவருந்துவோர்
'வைஷ்ணவ்' என்றே அழைக்கப்படுகின்றனர். மரக்கறி உணவகங்கள் 'வைஷ்ணவ் தாபா' என்றே அழைக்கப்படுகின்றன. மரக்கறி உண்போர் பெரும்பாலும் கடைப்பிடிக்கும் நெறிகளே அவர்களின் உணவுப்பழக்கத்துக்கும் பொதுவாகக் கொள்ளப்பட்டது எனவே எண்ணுகிறேன். வடநாட்டில் வைணவர்களும் தென்னாட்டில் சைவர்களும்
பெரும்பாலும் மரக்கறி உண்போராக இருந்திருக்கக்கூடும்.
தங்கள் கருத்தறிய ஆவல்
Hi
You are totally wrong in your comments on vegetarianism of Tamils that is spread over from Northern region. Saint Thiruvalluvar,Tholkaapiyar, and hundreds of saiva saints who lived before 100 A.D. were pure vegetarians. In fact vegetarianism was spread by saint Thirumoolar,Bogar,Adi sankarar and Ramanujar to North India.
sivan
ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பு பிராமணர்கள் ஒருகாலத்தில் விலங்குகளைக் கொன்று வேள்வி செய்தார்கள் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்தவுடன் வேதங்கள்,உபநிடதங்கள்,இதிகாசங்கள்,சுமிருதிகள்,புராணங்கள்,உப புராணங்கள் என சனாதன தரும் தொடர்பான நூல்களைப் படித்தனர்.சமக்கிருத அறிஞர்களை இங்கிலாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்று ஆங்கிலேயர்கள் அவர்களை மிரட்டி சனாதன சமக்கிருத நூல்களில் நஞ்சைப் பாய்ச்சினர்.சனாதனக் கடவுளர்களைப் பற்றிக் கொச்சையாக எழுத வைத்தனர்.நான்காம் வருணத்தாருக்கு எதிரான சொற்றொடர்களை எழுத வைத்தார்கள்.பிராமணர்கள் வேள்விகளில் விலங்குகளைக் கொன்றதாக எழுத வைத்தார்கள்.விலங்குகளைக் கொன்று பிராமணர்கள் வேள்வி செய்தனர் என்று சந்திர சேகரேந்திர சரசுவதி சுவாமிகளும் கூட நம்பினார்.இப்போது நம்மிடம் புழக்கத்திலுள்ள வேதங்கள்,உபநிடதங்கள்,இராமாயணம்,மகாபாரதம்,மனு சுமிருதி,பிற சுமிருதிகள்,புராணங்கள்,அங்கங்கள் குறிப்பாக கற்ப சூத்திரங்கள்,உப புராணங்கள்,அரிவமிச புராணம் என இந்து சமயத் தொடர்புடைய அனைத்து சமக்கிருத நூல்களுமே ஆங்கிலேயர்களால் நஞ்சு பாய்ச்சப் பட்டவை தான். 400 ஆண்டுகளுக்குக் குறைவான வயதுடைய எந்த இந்து சமய சமக்கிருத நூல் ஓலைச்சுவடிகளையும்,அச்சிடப்பட்ட நூல்களையும் முழுவதும் நம்ப முடியாது.மேற்கத்திய நாட்டவரான எட்வின் ஆர்ணால்டு எழுதிய 'The light of ASia' நூலில் பிராமணர்கள் வேள்விகளில் விலங்குகளைக் கொன்றனர் என்றும் கோதம புத்தர் அதைத் தடுத்தார் எனவும் எழுதியள்ளார்.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் அதையே தமழில் ஆசிய சோதி என மொழிபெயர்த்து எழுதினார்.மேற்கத்திய அறிஞர்களின் இந்தியவியல் நூல்கள் நம்பத் தகுந்தவை அன்று.அவர்கள் இந்தியவரலற்றை விவிலியம் சொல்லும் உலகத் தோற்றத்தின் காலமான கி.மு.4000 க்குள் கொண்டு வந்தனர்.ஆங்கிலேயர்கள் நமது புராணங்களிலுள்ள வரலாற்று விவரங்களையும் மாற்றிக் குளறுபடி செய்தனர்.உண்மையான மச்ச புராணத்தில் சிசுநாக மரபு 360 ஆண்டுகள்,நந்தர்கள் 100 ஆண்டுகள்,மௌரியர்கள் 316 ஆண்டுகள்,சுங்கர்கள் 300 ஆண்டுகள்,கான்வர்கள் 85 ஆண்டுகள்,ஆந்திர்கள் 506 ஆண்டுகள் ஆண்டனர் எனவும் குறிப்படப் பட்டுள்ளதாக கிருட்டிணமாச்சாரியர் மற்றும் கோட்டா வெங்கடாசலம் முதலியோர் தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.அதன்படி கௌதம புத்தரின் காலம் கி.மு.19 ஆம் நூற்றாண்டு.மகாவீரர் அவருக்கு முன்பு வாழ்ந்தவர்.உபநிடதங்கள் எல்லாமே மகாவீரரருக்கும் புத்தருக்கும் பிந்தியவை அல்ல.காளிதாசர் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டவர்.காளிதாசர் என ஒருவர் இல்லவேயில்லை.தாசர் எனப் பெயர் கொண்ட மகான்கள் அனைவரும் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டவர்கள் தாம்.பிராமணர்கள் ஒருபோதும் விலங்குகளைக் கொன்று வேள்வி செய்யவில்லை.'பசு வேட்டு நாளும் எரியோம்பும்' என ஞானசம்பந்தர் குறிப்பிடுவது பசு மாட்டைக் கொன்று செய்யும் வேள்வி தான் என்று கூறுவதா?பசு என்பது ஆன்மாவையும் குறிக்கும் அல்லவா?மகாபாரத்திலும் இராமாயணத்திலும் கூட விலங்குகளைக் கொன்று வேள்வி நடத்தியதாக உள்ளது.ஆனால் அவை உண்மையான இராமாயணமோ,மகாபாரதமோ அல்ல.இராமாயண உத்தரகாண்டமும் ஆங்கிலேயர் எழுத வைத்தவையாகத் தான் இருக்கும்.
Post a Comment