Saturday, October 07, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 2

கூத்துன்னு சொன்னவுடனே ஒண்ணு எனக்கு ஞாவகத்துக்கு வருது.

பொதுவா, கூத்துப் பாக்குறவுக்களுக்கு, கூத்தோட கதையெல்லாம் நல்லாவே தெரியும்; இன்னுஞ் சொல்லணும்னா, அதுலே வர்ற உரையாடல், பாட்டு எல்லாமே கூட அவுகளுக்குத் தெரிஞ்சிருக்கும். பின்ன எதுக்கு வருசா வருசம் திருவிழாவுலே கூத்துப் பாக்குறாங்கன்னு நமக்கு ஒரு கேள்வி வரும். வேறெ ஒண்ணுமில்லைங்க, வாத்தியார் படத்தை எதுக்குத் திரும்பத் திரும்பப் பார்க்குறமோ, அதே மனப்பான்மை தான்; கொஞ்சம் கூடச் சலிக்கிறது, இல்லைங்களே?

கூத்துலே ஓவ்வொரு காட்சியையும் திரும்பத் திரும்பச் சுவைக்கிறதுலெ ஏதோ ஒரு மகிழ்ச்சிங்க. அது மாதிரி இந்த எழுத்து, மொழி எல்லாம் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தான்; இருந்தாலும், இதெ நுணுக்கமாப் பார்த்து, "என்ன சொல்றாங்க; இந்தத் தடவையிலே புதுசா ஏதாவது விளக்கம் வருமா? போன வாட்டி சொன்னதையே இந்த வருசம் சொல்லுவாங்களா?" அப்படின்னு ஓர் எதிர்பார்ப்பு ["காயாத கானகத்தே" யிலே புதுசா ஏதாட்டும் பிருகா வருமாங்குற பேராசை.]

இளம்பூரணரும், அவருக்குப் பின்னால் வரும் நச்சினார்க்கினியரும், பொதுவா, எழுத்துங்குறதை எட்டு வகையாலே உணர்த்தோணும்னு சொல்லுவாங்க! முடிஞ்சா, எட்டுக்கு மேல் வகையாலும் உணர்த்தலாமாம்! நாம, எட்டோ ட நிறுத்திக்குவோம். வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவனா, நாம் ஆயிறப் படாது, இல்லியா?

முதல் வகை என்ன? - இது இதெல்லாம் எழுத்துன்னு சொல்லணுமாம். (வேறே ஒண்ணும் இல்லை, எழுத்தை ஒலிச்சுக் காட்டணும்; எழுத்துங்குறது ஒலிக்குப் பகரி-substitute தானே? அது ஒலியைக் குறிக்கலேன்னா, அப்புறம் என்ன எழுத்து? வெறும் பப்படம் ஆயிரும்.)

இரண்டாவது - இது இதுக்கு இன்ன பெயர். முதல் நூற்பாவுலே அழகாச் சொல்றார் பாருங்க, தொல்காப்பியர். அகரத்துலே தொடங்கி னகரம் வரைன்னு பெயரைச் சொல்றார். இதாங்க அந்த எழுத்துக்களுக்குப் பெயரு. TSCII மடற்குழுவுலே TSCII எழுத்துக்களே ஆணையர்கள்ட்டே பதிவு செய்யுறதைப் பத்தி இப்பப் பேசிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பேச்சுலே, இந்த எழுத்துக்களுக்கு என்ன பேரு கொடுக்கிறதுங்குறதுலே ஒரே சண்டை. Printed salvation இருக்கா? பேர்சொல்லி யாரானும் பொத்தகம் போட்டிருக்கானுவளா? 

வேறே எங்கேய்யா போகணும், தொல்காப்பியரும், இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் பத்தாதா? அவுகளுக்கு மேலே யாரு ஆணத்தி? (ஆணத்தி -ங்குறது சோழர் கல்வெட்டுக்கள்லே authority ங்குறதுக்கான சொல்; ஆணை இடக் கூடியவன் ஆணத்தி; நாம என்னடான்னா, அதைத் தொலைச்சிட்டு அதிகாரி, அத்தாரிட்டின்னு தடுமாறிக்கிட்டு இருக்கோம்.)

தொல்காப்பியர் சொன்னபடி பார்த்தா, நம்மோட எழுத்துக்கள் ஒண்ணுக்கும் ஓவ்வோர் பேர் இருக்கு; அகரம், ஆகாரம், இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம், எகரம், ஏகாரம், ஐகாரம், ஒகரம், ஓகாரம், ஔகாரம், அஃகேனம், ககரம், (இதன் விரியை உயிரெழுத்து வரிசையை மேலே சொன்னது போல் எழுத முடியும்; ககர அகரம், ககர ஆகாரம்...... இப்படிப் போகும்.), ஙகரம், சகரம், ஞகரம், டகரம், ணகரம், தகரம், நகரம், பகரம், மகரம், யகரம், ரகரம், லகரம், வகரம், ழகரம், ளகரம், றகரம், னகரம் என்று எழுத வேண்டும். இந்தக் காலத்துலே இந்தப் பேருகள்லாம் மறைஞ்சு, ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா ..... ன்னு புதுப்பெயரைச் சொல்லிக்கிட்டு இருக்கோம். 

எங்களுக்கெல்லாம் 1950 கள்லே, திண்ணைப் பள்ளிக்கூடத்துலே இதே மாதிரி "ன்னா" போட்டுத்தான், சொல்லிக் கொடுத்தாங்க. இப்போதைய சிங்கள மொழிப் பேர்களும் கூட இதே மாதிரித் தான் இருக்கு. (அந்த முட்டாப் பயல்களும் தமிழோட, தமிழனோட, தங்களுக்கு என்ன உறவுமுறைன்னு விளங்கிக்கிடவும் இல்லே. மாமன் முறை, மச்சான் முறைங்க. வரலாற்றின் படி, விசயனும், விசயனோட தோழர்களும் கட்டிக்கிட்டது தென்பாண்டித் தமிழச்சிகள் தான். அவங்க மொழிலே தமிழ் ஊடுறுவாமலா இருக்கும்? பாகதத்துக்கும், தமிழுக்குமாப் பொறந்தது தான் சிங்களம்.) இந்தப் புதுப்பெயர் வரிசை எப்ப வந்ததுன்னு தெரியலே! ஏன் வந்ததுன்னும் தெரியலை.

மூணாவது இன்ன முறைமை (முறைமைன்னா வரிசை. என்ன வரிசைலே எழுத்து இருக்கு? தொல்காப்பியர் சொல்றார்: அ-வுலே ஆரம்பிச்சு ன-வுலே முடி. இதெ விட்டுப் போட்டு, வேறே மாதிரி எழுத்து வரிசை எழுதாதேன்னு சொல்றாரு. ஆனா, இப்ப இருக்குற குறியேற்றக்காரங்கள்லாம் இதையெல்லாம் எங்கே படிக்குறாங்க? கன்னாப் பின்னான்னு ஏதோ ஒரு குறியேற்றத்தைச் செய்ஞ்சு போடவேண்டியது; அப்புறமா, "குறியேற்ற வரிசைங்குறது ஒண்ணு, அணிமுறை (collation) ங்குறது இன்னொண்ணு"ன்னு ஒரு சப்பைக்கட்டு கட்டி, ஒவ்வொரு மொழிக்கும் அணிமுறை ஒழுங்கைக் கொண்டார்றதுக்கு, ஒரு நிரலி எழுதி, சரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஏன்னா, நாமல்லாம் மர மண்டைங்க, பாருங்க.)

நாலாவது இன்ன அளபின (அளபு ன்னா அலகு - ஒரு unit. அகரமா, அதுக்கு ஓரளபு; ஆகாரமா, அதுக்கு ஈரளபு. க் ங்குற மெய்யா, அது அரையளபு, மகரம் சில இடத்துலெ, கால் அளபுன்னு விவரிச்சுக்கிட்டே போவாரு இந்தத் தொல்காப்பியர். அந்த ஒரு unit ங்குறது எவ்வளவு நேரம் ஒலிக்கணுங்குறதை இன்னோர் எடத்துலே வரையறை செய்வார்.)

ஐந்தாவது இன்ன பிறப்பின (இந்த எழுத்துக்கு ஒலி எங்கே பிறக்கோணும்? வாய்க்குள்ளே இருக்குற மேல் அண்ணத்தை எப்படித் தொடணும்? எங்கே தொடணும்? நாக்கு எங்கே? பல்லு எங்கே? எப்படி ஒலியை விடோணும்? எல்லாத்துக்கும் சின்னச் சின்னமா, ஒரு விளக்கம் கொடுப்பார்.)

ஆறாவது இன்ன புணர்ச்சிய (இந்த எழுத்துக்குப் பக்கத்தாலே, இன்னொரு எழுத்து வந்தா, முதல் ஒலி எப்படி மாறும்? இரண்டாவது ஒலி எப்படி மாறும்? கணக்கில்லாத காட்டுக்கள் இருக்கு. எல்லாத்துக்கும் விளக்கம் எழுத்ததிகாரம் தருது. இந்த எழுத்ததிகாரம் மட்டும் இல்லைன்னு வச்சுக்குங்க, கணியிலே பேச்சுத் தெரிப்பு - speech recognition செய்யுறது ரொம்பச் சரவலாய்ப் போயிரும். இன்னார் பேசுறார், என்ன பேசுறார் னு எப்படிங்க பொருள் விளங்கிக்குறது? கேக்குறதெல்லாம் நமக்குப் புரிஞ்சு போகுதுங்களா?)

ஏழாவது இன்ன வடிவின (இந்த எழுத்து என்ன வடிவிலே இருக்குன்னு சொல்றது. இங்கே தாங்க ஒரு டொக்கு. தொல்காப்பியர் காலத்துலே இரண்டு விதமான தமிழி எழுத்து இருந்திருக்கு. இரண்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் சிக்கல் இருந்திருக்கு. ஒரே எழுத்து, இரண்டு வேறே ஒலிகளுக்கு வடிவமா இருந்திருக்கு. (ஒரு தமிழி முறையிலெ, ககர அகரமும், ககர ஆகாரமும் ஒரே மாதிரி கண்ணுக்குத் தெரியும்; இன்னொரு தமிழி முறையிலே, ககரமும், ககர அகரமும் ஒரே மாதிரி கண்ணுக்குத் தெரியும்.) இது போக விந்தியத்துக்குத் தெக்கே கிட்டத் தட்ட ஒரே நேரத்துலே இரண்டு எழுத்து முறை (தமிழி I, தமிழி II) இருந்தா அது குழப்பம் தானே?

இது கல் - ஆ, கால் - ஆ, அப்படின்னு தெரியாம, குழம்பிப் போனா?

சாத்தங்குற இடத்துலே ”த்த” ங்குறதுக்கு புள்ளியில்லாமெ இரண்டும் ஒரே எழுத்தா இருந்தா? தடுமாற மாட்டோம்? "இல்லையில்லை, தமிழ்லெ தத ன்னு வராது; அது த்த என்றுதான் இருக்க முடியும்"னு கொஞ்சம் யோசிச்சிட்டுல்லே சொல்ல வேண்டியிருக்கு. இருந்தாலும் குழப்பம், குழப்பம் தான்.

இப்படி ஒரு குழப்பம் ஊரெங்கும் இருந்தது தொல்காப்பியர் போல படிச்சவங்களுக்கு ஏற்கனவே இருந்த தமிழி I, தமிழி II எனும் எழுத்து முறைகள்லெ ஒருப்பாடு இல்லைங்க. ககரம், ககர அகரம், ககர ஆகாரம் ஆகிய மூன்றிற்கும் வடிவுலே வேறுபாடு காட்டோணும்னு சொல்லி அவுங்க தான் (படித்தவக தான்) புள்ளிங்குற ஒண்ணைப் பரிந்துரைச்சிருக்கோணும்னு இன்னைக்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அதனாலே, இப்படித் தாங்களே சில திருத்தம் சொன்னதாலே, இது தான் வடிவம்னு அழுத்தம் திருத்தமாச் சொல்லாமே, அவரோட ஆட்கள் பரிந்துரைச்ச திருத்தங்களை மட்டுமே தொல்காப்பியத்துலெ எடுத்துச் சொல்லிட்டு, தொல்காப்பியர் கொஞ்சமா வழுவிக்கிறாரு. இந்த ஆளு பெரும் எமகாதனுங்க!

எட்டாவது இன்னின்ன தன்மைய (இந்த எழுத்துக்களுக்கு இன்னின்ன property இருக்குன்னு சொல்றது இந்த எட்டாவது வகை. இதிலும் தொல்காப்பியர் அமைதி காக்குறார்னுட்டு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் சொல்றாங்க.)

ஆகக் கடைசி ரெண்டு வகையிலே "கம்முன்னு கிட"க்கிறார் தொல்காப்பியர். எழுதுற போது அவருக்கென்ன சிக்கலோ? யாரு அவர் கூற்றுகளை எதுத்தாங்களோ, நமக்குத் தெரியலை.

இனி இரண்டாவது நூற்பாவுக்கு வருவோமா?

முன்னாடிச் சொன்ன மூணு அலங்கடை (=exception) ஆட்களைப் பத்திய நூற்பா இது.

2. அவைதாம்
குற்றியல் இகரம் குற்றியல் உகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன.

குற்றியல்னா குறுகி ஒலித்தல்னு பொருள். வேறே ஒண்ணுமில்லை, கூழைக் கத்திரிக்காய் மாதிரி ஒலியிலே சிறுத்தது; ஆனாலும், கடுகு சிறுத்துக் காரம் போகுமா?

குற்றியல் இகரம், குற்றியல் உகரம் எல்லாம் இப்பப் பேச்சுலே இருக்கான்னு கேட்டா, நிரம்பவே இருக்குன்னு தான் சொல்லணும். குறிப்பா, தரும மிகு சென்னையிலும், வட ஆர்க்காட்டுப் பேச்சிலும் நிறையவே இருக்கு; இன்னும் சொன்னாப் புது உருவம் எல்லா எடுக்குது. 

"இன்னாபா, வூட்லெ சொல்ட்டு வண்டியா!"ங்கிற போது, அந்த சொல்ட்டுலே, கடைசியா ஒரு டு வருது பாருங்கோ, அது குற்றியல் உகரம் தான். முழு உகரம் (முற்று உகரம்னு இலக்கணத்துலே சொல்லுவாங்கோ) இல்லை. 

குறைச்ச நேரமே, அரை மாத்திரை நேரமே, ஒலிப்பது சென்னைக்காரர்களுக்கு ஒரு வழக்கம். இங்கே எல்லாமே "போலாம், ரைட்" தான். இனி அப்பாலிக்கி, "வண்டியா"ங்குறதுலே, (vaNdia இல்லைங்க; சென்னைக்காரங்க மாதிரி சொல்லிப் பாருங்க) அந்த டி வருது பாருங்கோ, அது வேறெ ஒண்ணுமில்லை, குற்றியலிகரம். மெய்யாலுமே, அரை மாத்திரை தானுங்க அங்கே வருது.

இன்னும் சொல்லப் போனா, குற்றியல் எகரம் கூடப் புதுசா வந்துரும் போலேருக்கு, இவுங்க பேச்சுலெ. அந்த "வூட்லெ" ங்குறதுலே, லெ - யக்கூட முழுசா பலுக்குறதுக்குச் சோம்பற் பட்டு இவுங்க அரை மாத்திரை ஆக்கிப் புடறாங்கோ. தமிழ் புதுசு புதுசா வளருதுப்பா.

இந்தக் குற்றியல் இகரத்துக்கும், உகரத்துக்கும் இந்தக் காலத்துலே தமிழ்லெ எந்தக் குறியும் இடுறதில்லை. இடம் பார்த்துச் சிலர் புரிஞ்சிக்கிறோம், பலர் புரிஞ்சிக்கிறதே இல்லை. இன்னா, செய்யுறது போங்கோ? நாம மொழியெ என்னைக்குத்தான் புரிஞ்சு காப்பாத்திருக்கோம்? 

ஆனா, மலையாளத்துலே ஓலைக்கட்டுகள்லே, சந்திர பிந்துன்னு ஒண்ணு இட்டதாப் பலரும் சொல்றாங்க. அது என்ன சந்திர பிந்துன்னு முழிக்க வேண்டாம். சந்திரன்னா பிறை. நிலாவோட மூன்றாம் பிறை மாதிரி ஒரு வளை கோடு. அந்த வளை கோட்டுக்கு நடுவுலே ஒரு புள்ளி. புள்ளியைப் பிந்துன்னு வடமொழி சொல்லும். (நெத்தியிலே பொட்டு வச்சுக்கிறோம் இல்லையா? அது பிந்து) ஆங்கிலத்துலே point னு சொல்லுவோம். 

வேறே ஒண்ணுமில்லே. பொள், போழ்-னா தமிழ்லே பிளந்து தள்ளுன்னு அருத்தம். "புள்ளுவதும், பொள்ளுவதும், போழுவதும், பிளப்பதுவும்" எல்லாமே குத்துறதுலே தொடங்குறது தான். புள்ந்தது, பொள்ந்தது, போழ்ந்தது, என்ற வினை புந்து, பொந்து, போந்து, பொட்டு (point) ன்னு பெயரா மாறிப் போகும். ஆக, வேர் தமிழில் இருக்கிறது. நாம தான் கண்ணை மூடிக்கிணு பார்க்க மறுக்கிறோம்.

இப்படி, பிறைப்புள்ளி போட்டு குற்றியல் இகரத்தை (டி போட்டு, மேலே கொஞ்சம் ஒதுங்கினாற் போல், பிறைப்புள்ளி இடவேண்டும்), குற்றியல் உகரத்தைக் காட்டும் பழக்கம் மலையாளத்திலும், நாஞ்சில், குமரி நாட்டுத் தமிழ் நூல்களிலும் உண்டு என்று தான் சொல்கிறார். (எல்லா character க்கும் ஒருங்குறியிலே இடம் கொடுத்திருக்காக்கும், அது ரொம்ப principle ஆனது என்னு பரயும் கணிஞமாரே!, தமிழின் குற்றியல் இகரமும், குற்றியல் உகரமும் உங்க குறியேற்றத்தில் எவிடே போயி? சந்திர பிந்து என்ன குறி காணாது போயோ? :-))

அது செரி, அப்போழ் ஆய்தம்?

முதல்லே ஆய்தம் கிற பெயர் பற்றிச் சொல்லோணும். நூற்றுக்கு, தொண்ணுத்தெட்டு தமிழர் அதை ஆயுதம் என்றே தவறாகப் பேசுகிறார்; எழுதுகிறார். எல்லாம் வடமொழியும், நகரியும் சேர்ந்து செய்த குழப்பம். தமிழாசிரியரும் அதைச் சரி செய்ததாகத் தெரியவில்லை. அது ஆயுதமும் அல்ல, கேடயமும் அல்ல. அது ஆய்தம்; ஆய்வு என்றால் நுணுகித் தேடுவது. கீரையை ஆய்ந்து கொடு என்றால், நுணுகிப் பார்த்து இலைகளைக் களைந்து கொடு என்று பொருள். ஆய்தம் என்பது நுணுகிய ககர ஓசை. அது வடிவில் புள்ளியால் ஆனது. எனவே அது ஆய்தப் புள்ளி.

இந்தக் காலத்துலே ஒரு புதுப் பழக்கம்; நானும் ஒரு காலத்துலே இதுக்கு அடிமைப் பட்டிருக்கேன். இந்த ஆய்தப் புள்ளியை, மந்திரப் புள்ளி போல் நினைச்சு, ப வுக்கு முன்னாடி ஆய்தம் போட்டா, F ங்குற ஆங்கில ஒலி வந்துரும்னு சொல்றோம். இது கொக்கு தலையிலே பனங்காய் வைக்குற மாதிரி. இதெல்லாம் முட்டாப் பயக வேலை. 

நமக்கு F ங்குற ஒலி வேணும்னு நினைச்சா, ஒண்ணு தற்பவமா, கம்பர் பண்ணின மாதிரி பண்ணோனும்; அவரு F-யை வகரமா மாத்திருவார். செருமானிய மொழிகள் பலவற்றிலே, குறிப்பா, டச்சு, விரிசியன் போன்ற மொழிகள்லெ இந்த F-V மாற்றம் நிறையவே உண்டு. அவுங்கள்லாம் அதைத் தப்புன்னு நினைக்கலை. இருக்குறதை வச்சு, இல்லாததைக் காட்டுங்குற மனப்பான்மை; நம்ம தமிழன் மட்டும் ஒரு மாதிரி. வெள்ளைக்காரர்ஒலியை வெள்ளைக்காரரை விடச் சிறப்பா ஒலிச்சுக் காட்டுனாத் தான் அவர் நம்மளைச் சேர்த்துப்பாங்குற வெறியிலே, F ங்குற ஒலியை அப்படியே பலுக்கணும்பான். 

அதை ஒழுங்காச் செய்யணும்னா, "கனடா C.R. செல்வக்குமார் ஒரு முன்னொட்டுக் குறிமுறையை பரிந்துரைச்சார். என்னைக் கேட்டா, வெள்ளைக் காரனை மிஞ்ச நினைக்குற தமிழர் அவர் முறையைப் பின்பற்றலாம்".

எனக்கென்னவோ, கம்பரோட தற்பவ முறையே, இன்னைக்கும் பொருந்தும்னு தோணுது. நானு கொஞ்சம் கருநாடகங்க.

இந்த ஆய்தப் புள்ளிக்கு மூணு புள்ளி வைக்குற முறை இளம்பூரணர் காலத்துலே (கிட்டத்தட்ட 11ம் நூற்றாண்டு) வந்துருச்சு. ஆனா, கால வரிசையாப் பார்த்தா, முப்பாற் புள்ளிங்குறது அதுக்கு முன்னாடி இருந்ததுக்குக் கல்வெட்டுக்கள்லே சான்று கிடைக்கலைங்கண்ணா! இது தான் ரொம்ப வியப்பு. 

இன்னும் சொல்லப் போனா, ஒரு 2300, 2500 ஆண்டுகளுக்கு முன்னாடி, தமிழி எழுத்தின் ஆரம்ப கட்டத்துலேயும், குறிப்பாப் பெருமி(brahmi) எழுத்துலேயும், மூணு புள்ளியை முக்கோணமா இட்டா, அதை இ -ன்னு தான் ஒலிக்கணும். அப்ப, ஆய்தப் புள்ளி எப்படி இருந்திருக்கும்னு கேள்வி கேட்டா, எனக்கு மறுமொழி சொல்லத் தெரியலை. ஏதோ ஒருவிதப் புள்ளியா அது இருந்திருக்கோணும்னு மட்டும் சொல்லத் தெரியுது.

இவ்வளவு விவரத்தை வச்சிக்கிணு, இரண்டாம் நூற்பாவைப் பார்ப்போமா?

அதுலே முப்பாற் புள்ளின்ன உடனே, இளம்பூரணர் முதற்கொண்டு முக்கோணமாய் இருக்குற மூணு புள்ளிங்குற கருத்தையே எல்லோரும் கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்லுறாங்க. ஆனா, கல்வெட்டைப் பார்த்தா ஒரு சான்றையுங் காணோம். எனக்கென்னமோ, முக்கோண மூணு புள்ளிங்குறது சரின்னு படலை. ஆனா, நான் மரமண்டை, நான் சொல்ற கருத்தை யாரு கேட்பா?

முப் பால் புள்ளிங்குற கூட்டுச் சொல்லுலே, பால் என்பதற்குப் பக்கம் என்றே இவர் எல்லாம் பொருள் கொள்ளுறாக. அது ஏன் வகையாக இருக்கக் கூடாது? பால் னா வகையின்னும் பொருள் இருக்கே? ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்னு 5 வகைகளைச் சொல்றோமே? குற்றியல் இகரத்திற்கான பிறைப்புள்ளி ஒரு வகை; குற்றியல் உகரத்திற்கான பிறைப்புள்ளி இன்னொரு வகை; நம்மால் இப்போது இனம் காணமுடியாத, ஏதோ ஓர் உருவம் கொண்ட, ஆய்தப் புள்ளி மூன்றாம் வகை.

நூற்பாவுலே வர்ற கடைசி வரி. எழுத்து ஓர் அன்ன = எழுத்தோடு சேர்ந்தது போல. அன்ன ன்னு சொன்னாப் போலன்னு அருத்தம். அன்னளகை = analogy. அன்னளகையாய் = analogous. அன்னளகைக் கருவிகள் = analog devices.

அடுத்த நூற்பாவுக்கு போறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லோணும். முட்டாத் தனமா, ஒருங்குறிலே ஆய்தமும், நகரிலே வர்ற விசர்க்கமும் ஒண்ணுன்னு எழுதி வச்சிருக்காக. விசர்க்கம்கிறது ஓர் உயிர். அஹ் னு ஒலிக்கும். அது எல்லா மெய்யோடும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கும்.

ஃ என்பது உயிரும் இல்லை; மெய்யும் இல்லை. அது தனிக் கட்டுக்கூறு (category). அது உயிருக்கும் மெய்க்கும் நடுப்பட்டதுன்னு தான் தமிழிக் குறுங்கணக்குலெ நடுவுலே வச்சிருக்காங்க. யாப்புலெ (பாட்டுலே) மட்டும் சில இடத்துலே அது உயிர் மாதிரித் தோற்றம் காட்டும்; சில இடத்துலே மெய் மாதிரித் தோற்றம் காட்டும். கொஞ்சம் சிக்கலான ஒலி. எனக்குத் தெரிஞ்சு அந்த ஒலி, தமிழை விட்டு, டச்சுலேயும், விரிசியன்லேயும் இருக்கு; ஆனா, அங்கே அது மெய்யெழுத்து.

நல்லாக் குழப்பி விட்டுட்டேனோ?

அஃகேனம் கொஞ்சம் கவனமாக் கையாள வேண்டியது. இந்தக் காலத் தமிழ்லே அஃகேனம் முற்றிலும் மறைஞ்சிருச்சுன்னு தான் சொல்லோணும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 06, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 1

கொஞ்ச காலமா, இந்த 16 மடைக் குறியேற்றம் பற்றி எங்கே பார்த்தாலும் பேசிக்கிட்டு வர்றேன். அது தொடர்பான உரையாடல்களிலும் பங்கெடுத்து வர்றேன்.

அந்தச் சமயங்கள்லே, ஒரு சில கணிஞரும்(computer experts), ஆர்வலரும் (enthusiasts) திடீர் திடீர்னு "அவரு சொன்னார், இவரு சொன்னார்"னு நாலஞ்சு குழூஉக் குறி முழக்கங்களை (group jargons) எடுத்து விடுவாங்க; அப்பவெல்லாம் சட்டுன்னு நானு தடுமாறிப் போனதுண்டு. இவுங்க, சொவ்வறை நிரலி (software programme) எழுதுறதைப் பத்தியோ, அதுலே பயன்படுத்தும் நுட்பங்கள் (techniques) பத்தியோ சொன்னா, வாலைச் சுத்தி வச்சிக்கிட்டு ஒழுங்காக் கேட்டுக்கிறது தான்.

நடு நடுவே தொல்காப்பியர் பேரைச் சொல்லி, "அவரு சொல்லியிருக்கார், தமிழுக்கு 30 character தான்; ஆய்தத்தைச் சேர்த்துக்குனா 31 தான். மிச்சதெல்லாம் வெறும் letters. அவரொன்னும் உயிர்மெய் எழுத்தை எல்லாம் கண்டுக்கோணும்னு சொல்லலையாக்கும், அவரோட 17 ஆம் நூற்பாப் படிச்சிருக்கியா? அந்தா, இந்தா"ன்னுட்டு சில கேள்விக்ளை விடவும், "என்னடா இது, இவ்வளவு காலம் தொல்காப்பியத்தை விழுந்து விழுந்து படிச்சமே, ஊர்ப்பட்ட உரைகள்லாம் படிச்சமே, ஒண்ணுமே நம்ம மரமண்டைக்கு விளங்காமப் படிச்சமோ?"ன்னு ஒரு சமுசயம் (அய்யப்பாடு) வந்திட்டுதுங்க!

"சரி, மீண்டும் பர்ணிலேர்ந்து தொல்காப்பியத்தை இறக்குவோம்; கூடவே இளம்பூரணத்தையும், நச்சினார்க்கினியத்தையும் பக்கத்துலே வச்சிக்கிறுவோம். வரிக்கு வரி, திரும்பவும் படிப்போம்"னு நினைச்சேன். அந்தப் படிப்புலே எழுந்தது தான் இந்தப் பதிவு. இங்கே நூன்மரபு பற்றி மட்டுமே சொல்லிக்கிர்றேன்.

"என்னத்தை வெளங்கி, என்னத்தைச் சொல்றது?"ங்கிறவுகளுக்கும், "ஆமா, பொரிச்செடுக்கப் (bore) போறதுக்கு, இவ்வளவு சோடனையாக்கும்?" என்பவருக்கும் ஒரு கும்பிடு. உங்களுக்கு இது புடிக்கலேன்னா, அடுத்த பதிவுக்குப் போயிருங்க.

இத நான் எழுதியே தீரணும். ஏன்னா, கண்டதுக்கெல்லாம் "அவரு சொன்னார், இவரு சொன்னார்"னு பேருவிடுற பழக்கம், நம்மூர்லெ இப்ப ஒரு கெட்ட பழக்கமாவே ஆயிப் போயிருச்சுங்கண்ணா! பாவம், தொல்காப்பியரை இவங்கள்டேந்து தப்புவிச்சுக் கொண்டாரணும். அவ்வளவு தான்.

உள்ளே போகலாங்குளா!

தொல்காப்பியம் எழுத்ததிகாரம். நூன்மரபு. முதல் நூற்பா:

1. எழுத்து எனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே

நூற்பாவோட பொருளைப் புரிஞ்சிக்கிறது முன்னாடி "அது என்ன, எனப்படுப?" என்ற கேள்வி நமக்கு எழுகுது.

நம்ம பேச்சுலே "ஆம்புளைன்னு சொன்னா அவன்தாய்யா ஆம்புளை"ன்னு சொல்றோம் இல்லியா, என்ன பொருளிலே சொல்றோம்? அவன் ஏதோ சிறப்பான செயலைச் செய்திருக்கிறான்" என்ற பொருள் வருது இல்லையா?

"காளைன்னா இதுதான் காளை" - மஞ்சி விரட்டுலே சொல்றோமில்லெ? ஏன், யாராலும் புடிக்கமுடியாத படிக்கு அது உருண்டு திரண்டு வெளியே ஓடிப் போயிருது; ஒரு பயலாலும் அதன் கொம்பையோ, திமிலெயோ புடிக்க முடியுறதில்லை. கட்டிவச்ச பவுன் அப்படியே இருக்கு.

"ஊருன்னா இதுல்லய்யா ஊரு; மிச்சதெல்லாம் ஊத்தை"ன்னு சொல்றோம் இல்லையா? ஏன்? இந்த ஊரு சிறப்பா அமைஞ்சிருக்கு, நமக்குப் பிடிச்சுப் போச்சு; அதனாலே சொல்றோம்.

ஆனாப் பாருங்க, நம்ம பேச்சுலே சிறப்புங்குற சொல்லையே புழங்கக் காணோம். வெறுமே ஒரு பொதுமைச் சொல்லை வச்சுக்கிட்டே, சொல்ற முறையிலே (எனப் படுப) சிறப்புங்குற பொருளைங் கொண்டு வந்துர்றோம். இது தமிழ்ப் பேச்சுலே ஒரு மரபு. பொதுமையைக் (generic) கொண்டு விதப்பை (specific) உணர்த்துவது.

இதைத்தான் இளம்பூரணரும் சொல்றார். (அவர் உரை நச்சினார்க்கு இனியருக்கும் முந்தியது; உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் பல இடங்கள்லே அப்படியே இளம்பூரணரைப் பின்பற்றுவார்; சில இடங்கள்லே மட்டும் வேறுபடுவார்.)

"எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன" - இது இளம்பூரணம்.

அப்படின்னா மிச்சதெல்லாம் எழுத்தில்லையா, என்ன? அவையும் எழுத்துக்கள் தான். இன்னும் மற்ற நூற்பாக்களில் மற்றவற்றையும் எழுத்து என்று தான் தொல்காப்பியர் சொல்கிறார். அதைப் பின்னாடிப் பார்ப்போம். (இளம்பூரணரும் "எனப்படுப என்ற சிறப்பால், அளபெடையும், உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப் பட்டன" என்பார். ஆக எல்லாம் எழுத்துத் தான். ஒண்ணு சிறப்பான எழுத்து; இன்னொண்ணு சிறப்பில்லாத எழுத்து. அம்புட்டுத் தான்.)

இந்தக் காலத் தமிழ்க் கணிஞர்கள் சிலர் character னு ஒரு ஆங்கிலச் சொல்லை உள்ளே கொண்டு வந்து போட்டு, "இதெல்லாம் characters, மற்றதெல்லாம் letters" அப்படிங்கிறாங்க.

எப்படி, எப்படி?

"இது எல்லாம் தங்கம், மற்றதெல்லாம் பித்தளை".

"இது என்ன கூத்துடி அம்மா, இவுகளா எதையோ வச்சுக்கிட்டு, அதைப் போய்த் தொல்காப்பியர் வாயிலே திணிக்கிறது?"

இப்படித்தாங்க தாங்களாகவே ஒரு தேற்றைக் கொள்ளுவது, அதைக் கொண்டு போய், நமக்கு முன்னாடி இருந்தவர் மேலே திணிச்சு, அவரே சொல்லிட்டார்னு திரிச்சு விடுறது. இதுவும் பல தமிழர்களுக்கு வாடிக்கையாப் போயிருச்சு; அன்னைக்கே திருவள்ளுவர் சொல்லியிருக்கார், இளங்கோ சொல்லியிருக்கார், கம்பர் சொல்லியிருக்கார்னு ஆளாளுக்குப் பேரெ அவுத்து விடுறது. எந்தப் பய மூலத்தைப் படிக்கப் போறான், எவன் ஒப்பிட்டுப் பார்க்கப் போறாங்கிற மதப்பு. (திருவள்ளுவர் ஒரு கிறித்தவர், அவர் ஒரு இந்து - இப்படி இல்லாதது, பொல்லாததெல்லாம் சொல்றதை ஒரு சிலர் பெருமைன்னு நினைச்சிக்கிடுறாக.)

சரி. இப்ப, எழுத்துன்னா என்ன?

"இழுத்துக்கிட்டே வந்தது எழுத்து"ம்பார் பாவாணர்.

யோசிக்கிறீகளோ? இப்ப, தாழை மடல் இருக்கில்லையா? அது ஒரு காலத்துலே நம்மோட எழுது கருவி. அதுலே தூரிகை வச்சு மைக்குழம்புலே தோய்ச்சு, கோடாய் இழுத்து, இழுத்துச் சின்னச் சின்னமாப் படம் போடலாம். அந்தச் சின்னப் படங்கள்லே ஒரு சில தான் இன்னைக்கு எழுத்துக்களா மாறிருக்கு. ஆ ங்கிற மாட்டைக் கொம்போட போட்ட படம் தான் இன்னைக்கு அ, ஆ ன்னு மாறிருக்கு. எழுத்துங்குற சொல்லு தமிழ்லே கொஞ்ச காலம் ஓவியத்தையும், பலகாலம் நாம எழுதுகிற எழுத்தையும் குறிச்சிருக்கு.

எழுதும் பரப்புங்கிறது முதல்லே கல், பின்னாடி ஓடு (பானையோடாகவும் இருக்கலாம்), அப்புறம் தாழை, பின் பனை ஓலை, முடிவிலே தாளுன்னு பல விதமாய் வந்து சேர்ந்திருக்கு. இப்படி எழுதுகிற முறைகள்லாம் ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணு வந்ததுன்னு பொருளில்லை. பல காலம் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுது முறைகள் சம காலத்துலே நம்மூர்லெ இருந்திருக்கு.

கல்லுங்குற எழுதுபொருள்ளே உளி வச்சுக் கீறுனாங்க. ஓடுங்கிற எழுது பொருள்லேயும் ஆணி வச்சுக் கீறுனாங்க. இப்படிக் கீறுனது கீற்றுன்னு ஆச்சு. கீற்றுங்கிறது சிலநேரம் பகுதியா நின்னு போயிரும். கீற்றுலே முழுமையானது கீற்றம். கல்லில் கீறிய அந்தக் கீற்றமும் தாழை, ஓலையில் எழுதிய எழுத்தும் ஒண்ணுதாங்க. ஏன்னா, இரண்டும் ஆ ங்கிற ஒரே படத்தைத் தான் காட்டியது. இதே ஆ தான் A என்ற படமா, Phoenician களிடமும், அ என்னும் வடிவா நம்மிடமும் இருக்கு. இந்த எழுத்து ஒப்புமையை விவரிக்கணும்னா வேறேயொரு கட்டுரைத் தொடருக்குப் போகணும்.

மேலை நாகரிகங்களும், நடுக் கடல் நாகரிகங்களும், சீன நாகரிகங்களும் இதே மாதிரித் தான் புரிந்திருந்தன. நமக்குத் தாழை, ஓலை போல, அங்கே மரப்பட்டை, தோல், பட்டுத்துணி இப்படிப் பலவாறு இருந்தன. இவையெலாம் அழிந்து போகக் கூடிய எழுதுபொருட்கள். இன்னொருவகை, கல், களிமண் செங்கல், ஓடு இப்படி நெடுநாள் இருக்கக் கூடிய எழுதுபொருட்கள்.

முதல்லே இழுத்தது நமக்கு எழுத்தாச்சு; அவனுக்கு லிபி, (இ)லத்தர், லித்தொ, லித்தெரேச்சர் (நம்மூரு இலக்கியமும் இழுக்கியது தான்.) பொறுமையா வேர்ப்பொருள் பார்த்தா, ஊரம்புட்டுச் சொல்லு கிடைக்கும்; எல்லாம் இழுத்ததுலே வந்தது தான்.

இரண்டாவதுலே கீறுனது நமக்குக் கீற்றம் ஆச்சு, கீறலாச்சு, பொருளில்லாமப் போனா கிறுக்கிறது ஆச்சு; அவுங்களுக்கோ, script ஆவும், inscription, scribe, scripture, character, graph - இப்படி ஒரு நூறு சொல்லையாவது சொல்லலாம். எல்லாம் கல் மேலெ கீறனதை ஒட்டி வந்த சொற்கள்.

ஆகக் character ங்குறதும், letter ங்குறதும் ஒழுங்கா யோசிச்சுப் பார்த்தா ஒண்ணு தான். இரண்டும் வெவ்வேறு எழுதுமுறைகளிலே எழுந்த, அதேபொழுது ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள்.

எனவே, அன்பிற்குரிய கணிஞர்களே, சும்மா உள்ளே புகுந்து இல்லாத பொருளை எல்லாம் ஊடே கொண்டாந்து புகுத்துற வேலையெலாம் வேணாம்.

நாம, இப்பத் தொல்காப்பியத்துக்குத் திரும்ப வருவோம். இந்தத் தொல்காப்பியரு ஒரு கைதேர்ந்த மேடைநாடகக் காரர். நாடக அரங்குலே குவி விளக்குகள் (focus lights) இருக்கும் பாருங்க. அதைப்போட்டு ஒரு பக்கம் வெளிச்சத்தைக் குவிச்சு, சட்டுன்னு குவி விளக்கைச் சுற்றவிட்டு இன்னொரு பக்கம் கடைசிலே கொண்டுவந்து நிப்பாட்டுவாங்க பாருங்க, அது போல,

அ - வுலே முதலாய் வச்சு, ன ங்குற கடைசி வரைக்கும் இருப்பது சிறப்பு எழுத்துக்கள்னு சொல்லி குவிவிளக்கைச் சுத்தி விடுறார். நாம வாயைப பொளக்குறோம். மொத்தம் 30 ஆட்கள்னு சொல்லுவாங்கன்னுட்டு பின்புலத்தை எடுத்து விடுறார். அப்புறம் "இன்னம் மூணு பேர் இருக்காங்க, இவுங்களைச் சார்ந்தவுங்க, ஆனா அவுங்க கொஞ்சம் அலங்கடை - exception, அப்படி"ன்னு சொல்றார்.

கூத்துப் பார்க்குற நமக்குக் குறுகுறுப்பு கூடிப் போகுது. அடுத்துப் போவோமா?

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 27, 2006

மெய்யுணர்தல்

என்னைத் தூக்கி அந்த நீண்ட தடுக்கில் (stretcher) வைத்து, நகர்த்தி மின்னெழுவைக்குக் (lift) கொண்டு போன போதே முகம் மேல் நோக்கிப் பார்த்தவாறே இருந்தேன்.

"இந்தாய்யா, உன்னையே சரணாகுதின்னு அடைஞ்சு ரொம்ப நாளாச்சு; எல்லாத்தையும் நீ பார்த்துக்குவேன்னு தெரியும். நல்லா முடிச்சுக் கொண்டாந்து சேரு. சேரு என்ன சேப்பே."

அப்புறம் மேலே நாலாவது மாடியில் பண்டுவ அரங்கிற்குள் (operation theatre) கொண்டு போகு முன்னால் ஓரமாய் பத்தியில் (verandah) நகர்தடுக்கை (moving stretcher) சார்த்தி வைத்து ஒரு மார்வின் (morphin) ஊசி போட்டார்கள். அதற்குள் ஏதோ ஒரு அவக்கர கட்டாம் (emergency case); அவக்கு, அவக்கு என்று இன்னொருவரை நகர்த்திக் கொண்டு வந்து என்னைத் தள்ளிவைத்து, அவரை உள்ளே கொண்டு போய் விட்டார்கள். அந்தப் பண்டுவம் (operation) முடிய 2 1/2 - 3 மணி நேரம் ஆகியிருக்கிறது. அப்புறம் மருத்துவர்கள் (doctors), பண்டுவர்கள் (surgeans), செவிலியர்கள் (nurses) ஆகியோர் சாப்பிட்டு ஓய்வெடுத்து, என்னை உள்ளே கொண்டு போன போது பகல் 1 மணி ஆகியிருக்கிறதாம்.

இதற்கிடையில் சுணக்கம் (delay) கருதி இரண்டாவது மார்வின் ஊசியை எப்போதோ கொடுத்திருக்கிறார்கள். நான் சட்டென்று தூங்கிப் போனேன். எப்போது பண்டுவம் தொடங்கினார்கள், எப்படி மயக்கம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு ஐந்து மணி நேரம் கழித்துப் பண்டுவம் முடிந்திருக்கிறது. அப்புறம் என்னை ஈர்க் கவனிப்பு அறைக்குக் (intensive care unit; ஈர்த்த கவனிப்பு - ஈடுபாடு மிகுந்த கவனிப்பு) கொண்டு போயிருக்கிறார்கள்.

முழிப்பு வந்த கதையை அல்லவா சொல்ல வேண்டும்?

திடீரென்று மூடிக் கிடந்த இமைக்கும் வெளியே மங்கலான வெளிச்சம் இருப்பது திரைக்கு நடுவில் கசிவது போல் தெரிந்தது. இமைகளைத் திறக்க முயல்கிறேன். அழிச்சாட்டியம் பண்ணுகிறது.

"ஊகும்", ஒன்றும் நடக்கவில்லை.

"சரி, வலது கை விரல்களை மூடி வத்திருக்கிறேனே, அவற்றைத் திறக்கலாம்" என்று பார்க்கிறேன். வெளிமனத்தில் இருந்து கட்டளை போய் திறக்கச் சொல்லுவதை ஆழ்மனத்தின் வழி உணருகிறேன்.

"ஊகும்", செயன்மை ஒருங்கிழந்து கிடப்பதை உணர முடிகிறது.

என் மன வலிமை எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்து, அந்த விரல்களை விரியச் செய்வதில் ஒன்று படுத்திப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் ஓர் ஒருங்கின்மை (in-co-ordination).

இப்பொழுது தலையை அசைக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். தலை சிறிது சிறிதாக மேலும் கீழும் அசைகிறது. என்னால் அசைக்க முடிகிறது என்பதே பெரிய நிறைவாயிற்று.

அடுத்துப் பக்கவாட்டில் அசைப்பு; அதிலும் கெலிப்பு.

அடுத்தடுத்து, தலை மேலும், கீழுமாய், இடதும், வலதுமாய் அசைக்கத் தொடங்கினேன். என்னால் செய்யமுடியும் என்று தோன்றியது.

இப்பொழுது மீண்டும் வலது கைவிரல்களின் மேல் எண்ணவோட்டத்தைச் செறியவைத்து விரிக்கப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து விட்டன.

இமைகள் இன்னும் திறந்தன.

இத்தனையையும் நான் செய்வதை அங்கு இருந்து ஒரு செவிலி பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். கொஞ்சம் வாய்விட்டுச் சிரிக்கவும் செய்திருக்கிறார்.

ஓரிரு நுணுத்தங்கள் போய், தொண்டையைக் கணைத்து, "இப்பொழுது எத்தனை மணி?" என்றேன். நுணுக்கமாய் என் விளையாட்டைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த செவிலி "இராத்திரி பத்தே முக்கால்; அது என்னய்யா, அவ்வளவு அசைப்பும் ஆட்டமும்; எல்லோருக்கும் நடப்பது தானே! கொஞ்ச நேரத்தில் தானாய் விழிக்கத்தானே செய்யணும். உங்களுக்காக கீழே யார் வந்திருக்காங்க?"

"என் தம்பி"

யாரோ ஆளை அனுப்பி அவனைக் கூட்டிவந்தார். அவன் அருகே வந்து செய்கையாலே "நலமாய் இருக்கிறீர்களா?" என்றான்.

"எத்தனை மணிக்கு வந்தே?"

"எட்டு மணிக்கே வந்துவிட்டேன். மற்றவர்களெல்லாம் ஒன்பது மணிக்குத் தான் போனார்கள்"

அப்புறம் அவனை அங்கிருந்து நகரச் சொல்லி விட்டார்கள். நான் மீண்டும் அயரத் தொடங்கினேன்.

"இந்த உடம்பு என்ற ஒன்று என்னுடைய மனத்தின் கட்டையும் மீறி நிற்கும்" என்று அறிவது கொஞ்சம் திகைக்க வைக்கும் உணர்வு.

இந்த உடம்பு என்பதை நாம் உணருகின்ற நிலை அரிதிலும் அரிதான ஒரு பட்டறிவு.

என் கைவிரல்களை விரிப்பதற்கு விடாது முயன்றேன் பாருங்கள், அப்பொழுது தான் மெய் உணர்ந்தேன். (மெய் = உடம்பு; அது உண்மையும் கூட). அதைச் சொற்களால் விவரிக்க முடியாது.

இதற்கு முன்னால் என்றைக்கு என் உடம்பை உணர்ந்திருக்கிறேன், என்று எண்ணிப் பார்க்கிறேன்; ஒன்று கூட நினைவிற்கு வரவில்லை.

மெய் இருக்கிறது என்று அறிவது வேறு; உணருவது என்பது வேறு. திருமூலர் தெரியாமல் சொல்லவில்லை.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே

உடம்பினை முன்னம் அழுக்கு என்று இருந்தேன்;
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!"

- திருமந்திரம் 717, 718 ம் பாடல்கள்.

"அய்யா, பெருமாளே, எனக்குப் புரியவச்சே பாரு, இனி உடம்பை ஓம்புவேன்."

அன்புடன்,
இராம.கி.

Monday, September 18, 2006

தமிங்கிலம் என்னும் ஒரு நோய்

கீழே வருவது என் நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடற்குழுவில் "புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை" என்ற மடலுக்கு அளித்த பின்னூட்டு; அவருடைய மடலையும் என் மறுமொழியையும் இங்கே உங்கள் வாசிப்பிற்குக் கொடுக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
-----------------------------------------------------------------
நண்பர் ராமகி
தமிழகத்தில் தொழில் நுட்ப, அறிவியல் கருத்தரங்கங்களில் எப்படி ஆங்கிலத்தில் தான் உரையாற்றுகிறார்கள், தமிழில் அல்ல,
என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பொதுவாக தமிழ் மொழி பேசுபவர்களின் இயலாமையை சுட்டிக்காட்டினாலும் மற்ற இந்திய மொழிபேசுபவர்களிடமும் உள்ள குறைபாடுதான் இது ஒரு மொழியின் குறைபாடா அல்லது மொழிபேசுபவரின் குறைபாடா? தமிழ் மொழி காப்பாளர்கள் இம்மாதிரி போக்குக்கு பதில் அளிப்பார்களா? பல மொழிகள் பேசுபவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்)
கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை தங்களது வெளிப்பாடுகளில் குறைவாகப் பயன்படுத்திவருவதை அவதானிக்கலாம்

பழைய மொழிகளெல்லாம் வெறும் அடிப்படை உணர்வு, கருத்து, சிந்தனை வெளிப்பாடுகளுக்குத்தான் அம்மொழி பேசுபவர்களால் பயன் படுத்தப்படுகின்றன. நுணுக்கமான விடயங்களை, தற்கால வாழ்க்கைக்கு தேவையான
விடயங்களை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் எல்லோரும் சகஜமாக ஆங்கிலத்துக்குத்தான் தாவுகிறார்கள்
இந்த நிலமையை பெரும்பாலானோர் (பெரிய படிப்பு படித்தவர்களும், பாமரர்களும் கூட) ஏற்று வருகிறார்கள்.

ஏனெனில் ஒரு மொழி எதற்காக உள்ளது என்பதை ஆராயவேண்டும்? அதாவது தன்னுள் தோன்றும் உணர்வுகளையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும், பிறர்க்கு "தெளிவாகத்" தெரிவிப்பதற்காகத்தான்

பேராசிரியர் குழந்தைசாமி படியகத்திற்கு அருகே சென்று

"உள்ளுரும நுட்பியற் செயலாளருடன்,
உள்ளுருமச் செயலர்,
படியகத்தின் முன்னால்,
தொடக்கச் செற்றம்,
பொது அரங்கு,
நுட்பியச் செற்றம்,
முடிவுத் தொகுப்பு"

என்ற சொற்றொடர்களை பயன்படுத்தி உரையாற்றியிருந்தாரானால், நண்பர் ராமகியைத் தவிர மற்றவர்களெல்லாம் அரங்கத்திலிருந்து ஓடியிருந்திருப்பார்கள் அல்லவா?

லெட் டS பி டுரூத்புல் அண்ட் ரியலிSடிக்
--------------------------------------------------------------------------
நண்பர் திருவரசு குறிப்பிட்ட குறுக்குவழி அறுவை சிகிச்சை என்கிற சொல்லாடல் தற்காலத் தமிழகத்தினரின் வாயிலிருந்தும்
பேனாவிலிருந்தும் இயல்பாக வராது. எல்லோரும் "பைபாS சர்fரி" என்றே சொல்லி எல்லோருக்கும் தெளிவாகத்
தமிங்கிலத்தில் தெரிவித்துவருகிறார்கள். அதே மாதிரி "ஊசிவழியாகக் குருதிக் குழாய்களில் மூன்று சின்னஞ்சிறிய குழாய்களைப்"
என்று சுற்றி வளைத்து சொல்லாமல் மூணு Sடெண்ட் போட்டாங்க" என்று தான் இயல்பாக சுருக்கத் தமிழில் சொல்லி வருகிறார்கள்.

இந்த பிரச்சனை தமிழ் மற்றும் இதர இந்திய மொழியினரையும் பாதித்துவருகிறது. ஆகவே நாம் நம்மவர்களை மட்டும்
குறை சொல்லி மாரடிக்க, தலையில் குட்டுபோட வேண்டாம். இந்த இயலாமை பேராசிரியர் திரு.குழந்தைசாமியையே
பாதித்திருக்கிறாது என்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படித்துவரும் வருங்கால தமிழ்ச் சந்ததியினரிடமிருந்து வருங்காலத்தில்
நாம் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்? எதிர்பார்க்கக்கூடும்?

இன்னும் குறைவானப் பயன்பாடுதான் இல்லையா?இந்த மொழித் தேய்மானத்தை, அழிவு நோக்கி ஓடும் நிலைமையை தடுக்கமுடியுமா? இக்கேள்வி பல மொழியினரின் அடிமனதில் இருந்து உறுத்தி வருகிறது. தங்களது கருத்தென்னவோ?

இண்டி ராம்
-------------------------------------------------------------------------------
அன்பிற்குரிய இண்டிராம்,

மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?

இன்றைய அவல நிலையை யாரும் மறுக்கவில்லை. எந்தவொரு திருத்தமும் செய்யாது சும்மா கிடந்தால், தமிழ் என்பது மெல்ல இனிச் சாகும் என்று நான் உணர்ந்தவன் தான். பல்வேறு தமிழர்களும் உணர்கிறார்கள். எப்பாடு பட்டாவது தமிங்கிலத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் முயலுகிறார்கள். அப்படி முனைப்புடன் செயற்படும் சிலருக்கு நான் ஒரு வினையூக்கி; அவ்வளவுதான்.

இன்றைக்கு 100க்கு 50 விழுக்காடு ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் ஒருவர், இது போன்ற முயற்சிகளால் ஒரு சில காலத்தில் 100க்கு 60 அல்லது 70 விழுக்காடு தமிழ் பேசமாட்டாரா என்ற விழைவில் தான் இதையெல்லாம் நல்ல தமிழில் எழுத விழைகிறேன். உங்களுடைய கருத்துக்களுக்குப் போகுமுன்னால், முந்தா நேற்று, நண்பர் ஒருவரின் வலைப்பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டை இங்கு தருகிறேன். அவர் பெயர் அண்ணா கண்ணன். நல்ல தமிழ் அறிந்த, ஆற்றலுள்ள இதழாசிரியர். தற்போது sify.com வலையிதழின் ஆசிரியர். அவருடைய வலைப்பதிவில் டெரகோட்டா படைவீட்டம்மன் என்று எழுதியிருந்தார். என் பின்னூட்டு:
----------------------------------------------
"என்ன நண்பரே?

நீங்களும் டெர்ரா கோட்டா என்று எழுத வேண்டும்? சுடுமண் மொம்மை, அல்லது சிலை அல்லது திருமேனி என்று எழுதலாமே? "சுடுமண் சிலையாய்ப் படைவீட்டம்மன்" என்று எழுதலாமே? ஒவ்வொரு சொல்லாய் இப்படித் தமிழில் நாம் இழக்க வேண்டுமா? நீங்கள் என்றில்லை, பலரும் சுடுமண் என்று எழுதுவதைத் தவிர்ப்பதைத் தாளிகைத் துறையில் கவனிக்கிறேன்.

1722, from It. terra cotta, lit. "cooked earth," from terra "earth" (see terrain) + cotta "baked," from L. cocta, fem. pp. of coquere (see cook). As a color name for brownish-red,
attested from 1882."

அன்புடன்,
இராம.கி.
----------------------------------------------------
இப்படிச் சுடுமண் பொம்மை என்ற எல்லோரும் அறிந்த சொல்லைக் கூடச் சென்னை போன்ற பெருநகர்களில் பலதரப் பட்ட மக்களும் புழங்காதிருந்தால் எப்படி? என்னைப் போன்றவர்கள் அதைச் சுட்டிக் காட்டுவது தப்பா?

தமிழகத்தில் அறிவியல், நுட்பியல் கருத்தரங்குகளில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்கள் என்று தான் சொன்னேன். (நீங்களே பாருங்கள், நுட்பியல் என்று சுருக்கமாய்ச் சொல்லுதற்கு மாறாக தொழில் நுட்பம் என்ற நீண்ட சொல்லை இன்னும் பழமை மாறாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு எப்படித் தமிழ்நடை வளரும்? சொற்சுருக்கமும், துல்லியமும் கூடாமல் எப்படி அறிவியலும் நுட்பியலும் வளரும்? இது ஒரு இயக்கம், அய்யா! மீண்டும், மீண்டும் நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.) அதே பொழுது ஒருசிலர் மிகுந்த முயற்சி எடுத்துத் தங்களால் இயன்ற அளவில் மேலே சொன்னது போல் 70%, 80% தமிழில் உரைகளைக் கொடுத்துத்தான் வருகிறார்கள். அவர்களைப் போன்று மற்றோரும் முன்வர வேண்டும்.

இது போன்ற கலப்புத் தமிழில் உரையாடுவதற்குக் காரணம் பெரும்பாலும் (95%) பேசுவோரின் சோம்பற் தனம் தான். இவர்கள் தங்களின் தமிழ்ச் சொற்குவையைக் கூட்டிக் கொள்வதில்லை. ஆங்கிலத்தில் உள்ளது போல் துல்லியமாய்ப் பேசத் தமிழ்ச் சொற்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களின் உரை, கூர்மைப் பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் இல்லை. ஏன், தமிழ் அகரமுதலிகளை அவ்வப்போது புரட்டி, புதிய சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது கூட இல்லை.

தமிழ் மொழிக் காப்பாளர்கள் என்று யாருமே தனியாக இல்லை. நீங்களும், நானும், நம்மைப் போன்றோரும் தான் தமிழ்மொழியைப் பேண வேண்டியவர்கள்; நாம் நம் பொறுப்புகளில் இருந்து வழுவுகிறோம், அவ்வளவுதான். பெற்றோரை அகவை கூடிய காலத்தில் தூக்கி எறிவது போல, நாம் தமிழ்ப் புழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுகிறோம்.

"பல மொழிகள் பேசுபவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்)கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை தங்களது வெளிப்பாடுகளில் குறைவாகப் பயன்படுத்திவருவதை அவதானிக்கலாம்"

என்று எழுதியிருந்தீர்கள். இவற்றிற்குச் சோம்பல், முட்டாள்தனம், உலகமயமாக்கல் என்னும் சோதியில் கலப்பதற்காக ஒடிச் சேரும் அடிமைத்தனம், நம்முடைய பெருமிதத்தை உணராமை, எனப் பல காரணங்களை என்னால் கூற முடியும். தமிழை இந்தக் காலத்திலும் காப்பாற்றி விடுவோம் என்று தான் குறியேற்றம் போன்ற செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழுக்குச் சாவு மணி அடிக்க வேண்டுமானால், நாளைக்கு முதல்வர் கலைஞர் ஓர் அரசாணை கொண்டு வந்து, "இனிமேல் தமிழை எல்லோரும் உரோமன் எழுத்துக்களில் தான் எழுதவேண்டும்" என்று சொன்னால் போதும், எல்லாமே "ஓ கயா". நாமெல்லோரும் உலகமயமாக்கலில் ஒன்றிவிடுவோம். இது தான் நமக்குத் தேவையா? தமிழர் என்று ஓரினத்தார் இருந்தார்கள் என்று நூறாண்டுகளுக்கு அப்புறம் சொல்லுவார்கள். செல்டிக் என்ற இனத்தார் அழிந்தபடி, ஐரிஷ் என்று இனத்தார் இன்று அழிந்து கொண்டிருப்பது போல; நான் சொல்லிக் கொண்டே போகலாம். அய்யா, இது அடையாளச் சிக்கல்.

"பழைய மொழிகளெல்லாம் வெறும் அடிப்படை உணர்வு, கருத்து, சிந்தனை வெளிப்பாடுகளுக்குத்தான் அம்மொழி பேசுபவர்களால் பயன் படுத்தப்படுகின்றன"

என்று எழுதினீர்கள். அது தவறு. நான் பார்த்தவரை தமிங்கிலம் பழகியவர்கள் நாவில், முயற்சி ஏதும் இல்லை என்றால், அன்றாடப் பேச்சில் கூட ஆங்கிலம் கூடிக் கொண்டு தான் வருகிறது. அந்த வீட்டினர் தோற்றத்தால் தமிழராய் இருந்து சிந்தனையால் ஆங்கிலராயோ, அல்லது கலப்பராகவோ மாறிப் போகின்றனர். அவர்களின் அன்றாடச் சொற்களும் ஆங்கிலமாய் ஆகிப் பண்ணித் தமிழாய் ஆகிவிடுகிறது. இவ்வளவு ஏன், மேலே சொன்ன சுடுமண் போல, தமிழ்க் காய்கறிகளின் பெயர்களைக் கூட மறந்து கோயம்பேட்டில் ஆங்கிலச் சொல்லைக் கூறியே காய்கறி வாங்குகிறவர்கள் உண்டு. நண்பரே ஒரு பெரிய நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எல்லாமே மாய்ந்து போகும்.

"நுணுக்கமான விடயங்களை, தற்கால வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால்
எல்லோரும் சகஜமாக ஆங்கிலத்துக்குத்தான் தாவுகிறார்கள் இந்த நிலமையை பெரும்பாலானோர் (பெரிய படிப்பு படித்தவர்களும்
பாமரர்களும் கூட) எற்று வருகிறார்கள்."

என்று நீங்கள் எழுதிய நடைமுறை உண்மையை ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் சும்மா கிடப்பதே சுகம் என்ற சோம்பற் தனத்தால் அல்லவா, இது நடக்கிறது? தமிழ் நாட்டில் நடக்கின்ற ஒரு கருத்தரங்கில் மேடையில் தமிழே இல்லையே என்று ஒரு பெரியவர் ஆதங்கப் பட்டது தப்பா? தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுங்கள் என்று கூடச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு அரசுச் செயலருக்குக் கவனக் குறைவா?

"மொழி என்பது தன்னுள் தோன்றும் உணர்வுகளையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும் பிறர்க்கு "தெளிவாகத்" தெரிவிப்பதற்காகத்தான்" என்று எழுதியிருந்தீர்கள். உண்மைதான். ஆனால் "தெளிவாகத்" தெரிவிப்பதற்குத் தமிழில் மூங்கையாய் (ஊமையாய்) இருந்தால் எப்படி? யாரோ ஒரு வெளிநாட்டுக் காரன் போல வெளி மொழிச் சொற்களை அளவிற்கு மேல் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? தமிழ் மறந்தல்லவா போகும்?

"பேராசிரியர்" என்ற சொல் பலருக்கும் தெரிந்த தெளிவுச்சொல் தான் அய்யா!

"படியகம்" என்று நான் சொன்னது podium என்பதற்கு இணையாக நம்முடைய படியின் நீட்சியே (படி>படியகம்) பயன்பட முடியும் என்று சொன்னேன். நம்மில் பலரும் எதையெடுத்தாலும் மேடை, அரங்கு என்று மட்டுமே சொல்லிக் கொண்டு மொண்ணையாக உரையாடிக் கொண்டு இருக்கிறோம். மேடை என்பது stage; அதில் பேசுபவருக்காகப் போட்டிருப்பது படியகம். எண்ணிப் பாருங்கள் இரண்டிற்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்தி, இல்லை என்றால் மேடை, பேசுமேடை என்று சுற்றி வளைத்து சொல்லி, இல்லையென்றால் ஸ்டேஜ், போடியம் என்றே சொல்லி நாம் நம் சிந்தனை வளத்தைக் குறைத்துக் கொள்ளுவது தான் வளர்ச்சியா? அப்படி என்ன முன்னேற்ற ஓட்டத்தில் முடங்கி விட்டோம்? இன்றைக்கு ஒருவர் படியகம் என்றால், நாளைக்கு நாலுபேர் அதைப் புழங்கினால், இது கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைந்து ஊரெங்கும் பரவாதா? பின்னூட்டு என்ற சொல் தமிழ் இணையம், தமிழ் உலகம், அகத்தியர் போன்ற குழுக்களில் தான் முதலில் தொடங்கியது. அங்கு தான் அதை முதலில் உரைத்தேன். இன்றைக்கு உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகம் அந்தச் சொல்லைப் பழகிக் கொள்ள வில்லையா? "1960"களின் முடிவில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரியின் (CIT) தமிழ்மன்ற மலரான "தொழில் நுட்பம்" என்ற இதழில் "இயல்பியல்" என்ற சொல்லை நானும், இன்னும் சிலருமாய் முதலில் உரைத்தோம்; இன்றைக்கு அது தவறாகப் பலுக்கப் பட்டு, இயற்பியல் என்று ஆகிப் போனாலும், மனம் பெருமிதப் பட்டுப் போகிறது. ஏனென்றால் தமிழ்ச்சொல் பரவி விட்டது. ஆக, நாம் நினைத்தால் முடியும், அய்யா.

"உள்ளுருமம், உள்ளுரும நுட்பியல்" பற்றி முன்னே தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதிய நினைவு. தகவல் தொழில்நுட்பம் என்ற சொல், ஆழமான கருத்துக்களைச் சொல்லும் விதமாய், முன்னொட்டாய் வரும் வகையில், அமையவில்லை என்பது என் கணிப்பு. வேண்டுமானால், இன்னொரு முறை விளக்கம் பின்னால் தருகிறேன். ஆனால் தகவல் தொழில்நுட்பம் என்ற சொல் நம்மைக் கடைசி வரை சவலைப் பிள்ளையாகவே வைத்திருக்கும் என்பதில் ஆழ்ந்த உறுதி கொண்டிருக்கிறேன். அந்தச் சொல் மாற வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது.

செற்றம் என்ற சொல்லைப் பற்றி நீங்கள் குறித்ததைப் பார்த்தவுடன் சிறு நகை கொண்டேன். கொஞ்ச நேரம் இந்தச் சொல்லில் செலவழிப்போம். சில்லுதல் என்றால் உடைத்தல். சில் என்பது உடைந்த துண்டு. சில்லுதலின் வழியாகத்தான் சிலர், சிறு, சின்னம் எனப் பலப்பல சொற்கள் தோன்றின. சில்லுதலின் தொடர்ச்சி தான் சிலைத்தல் - சிலை. சில் என்பதில் உகரம் முடிவில் சேராமல் இருந்தால் சில்+தல்>சிற்றல் = சிறிதாக்குதல் என்ற பொருள் கொள்ளும். சிற்றல் சிற்றுதலாகி சிறுதலும் ஆகும். இது போன்ற சொற்கள் ஏற்படுவது மொழியின் வளத்தைக் குறிக்கிறது. சில்லுதல் சில்குதல் என்றும் பலுக்கப் படும் - சின்னஞ் சின்னமாய் ஆகிப் போதல். பின்னால் சில்குதல்>செகுதல் என்றும் திரியும். செகுதல் என்றால் பிரிதல், சின்னாப் பின்னமாய் ஆகுதல். வள்ளுவர் கூட "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று" என்றார். செகுத்தல் = பிரித்தல், to sect (மேலையிரோப்பியத் தொடர்பை அறியுங்கள்.) section = செகுத்தம் = பிரிவு. இதே கருத்துத் தொடர்ச்சியில் தான் செற்றம் = session என்ற சொல் எழுந்தது. எண்ணிப் பாருங்கள், எதற்கு எடுத்தாலும், பிரிவு, வகுப்பு என்ற இரண்டு சொற்களை வைத்துக் கொண்டு மொண்ணையாகத் தமிழில் உரையாடுகிறோம் இல்லையா? second session of the third division of the 14th plenum என்பதைத் தமிழில் சொல்ல சொற்கள் வேண்டாமா? "14வது அரங்கத்தின் மூன்றாவது பிரிவின் இரண்டாம் செற்றத்தில்" என்று சொன்னால் நம் மொழிநடை கூர்மையான நடை என்று சொல்ல முடியும்; அப்படி ஒரு நடையை நாம் தமிழில் கொண்டு வரவேண்டும். ஆங்கிலம் இவ்வளவு வளர்ந்ததிற்குக் காரணம் சொற்களைக் கடன் கொண்டது அல்ல. (பலரும் புரியாமல் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். கடன் வாங்கி வைத்தாலே நமக்கு வளம் வந்துவிடுமா? எதற்கு எதைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையில்லாமல் போனால் எப்படி?) சிந்தனையைக் கூர்மைப் படுத்தி நுணுக்கத்திலும் நுணுக்கம் பார்த்ததால் தான் ஆங்கிலம் என்ற மொழி வளர்ந்தது. அது தான் மொழிநடையை வளர்க்கும். நடுவில் ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்களைத் தாராளமாய்ப் போட்டு எழுதுங்கள்; தவறில்லை; அதுவெல்லாம் நாளாவட்டத்தில் சரியாகிவிடும்; ஆனால் கூடிய மட்டும் நல்ல தமிழில் எழுதுங்கள் என்று தான் சொல்லுகிறேன்.

"நண்பர் ராமகியைத் தவிர மற்றவர்களெல்லாம் அரங்கத்திலிருந்து ஓடியிருந்திருப்பார்கள் அல்லவா?"

என்ற உங்கள் வாக்கைப் படித்துச் சிரித்தேன். நடந்திருக்கக் கூடும். ஆனால் இது போன்ற செய்திகளை நாளா வட்டத்தில் சிரிப்பும், சிந்தனையுமாய், ஆட்களைக் கையாளும் விதத்தில், ஒரேயடியாகத் தமிழைக் கையாளாமல், சிறிது சிறிதாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொன்னால், இத்தனை தமிழ்ச் சொற்களும் பொதுப் புழக்கத்திற்கு வரும்.

"லெட் டS பி டுரூத்புல் அண்ட் ரியலிSடிக்"

என்ற உங்களின் கூற்றிற்கு என் மறுமொழி: நோயாளியின் ஊறுகளைப் புரிந்து, உண்மையை உணர்ந்து அவருக்கு நல்வழி சொல்லிக் கொடுக்கும் மருத்துவர் எனவே என்னைக் கருதிக் கொள்ளுகிறேன். நான் படித்ததை என் உற்றாருக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் எப்படி? நான் ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டாமா? நோயாளியை அருகில் போட்டுக் கொண்டு, "இறைவனே காப்பாற்று" என்று புலம்பும் பெந்தெகொஸ்தக் காரர்களைப் போல் என்னால் இருக்க முடியாது. (பெந்தெகொஸ்தக் காரர்களே, சண்டைக்கு வந்து விடாதீர்கள். உங்கள் வழிமுறைகளைப் புரிந்து கொள்ளுகிறேன். அது உங்கள் நம்பிக்கையின் பாற்பட்டது.)

--------------------------------------------------------------------------
"நண்பர் திருவரசு குறிப்பிட்ட குறுக்குவழி அறுவை சிகிச்சை என்கிற சொல்லாடல் தற்காலத் தமிழகத்தினரின் வாயிலிருந்தும்
பேனாவிலிருந்தும் இயல்பாக வராது எலோரும் "பைபாS சர்fரி" என்றே சொல்லி எல்லோருக்கும் தெளிவாகத்
தமிங்கிலத்தில் தெரிவித்துவருகிறார்கள்"
--------------------------------------------------------------------------
என்று எழுதியிருந்தீர்கள். நாம் என்றைக்குத்தான் மாறுவது? சாலைகளில் போடும் குறுக்கு வழி தெரிகிறது. குருதிக் குழாய்களிலும் குறுக்கு வழி ஏற்படுத்த முடியும் என்ற சிந்தனைப் பொறியைத் தூண்டக் கூடாதா? "குறுக்குவழிப் பண்டுவம் (bypass surgery) செய்து கொண்டேன்" என்று முதலில் சொல்லுவது ஒரு சிலருக்குச் செயற்கையாய்த் தெரியலாம். ஆனால் பத்துப் பேர் விளங்கிக் கொண்டால் அப்புறம், அது மற்றோருக்கும் இயல்பாய் வந்துவிடும்.

அதே மாதிரி stent பற்றியும் ஒரு குறுகிய சொல்லை உருவாக்க முடியும். நண்பர் திருவரசு இருக்கின்ற சொற்களை வைத்து விளக்கம் தருவது போல் எழுதினார்; தவறில்லை.

அன்பிற்குரிய இண்டிராம், நீங்கள் முடிவாகக் கூறிய வாக்கியத்தை நீங்களே படித்துப் பாருங்கள்:
--------------------------------------------------------
"இந்த இயலாமை பேராசிரியர் திரு.குழந்தைசாமியையே பாதித்திருக்கிறாது என்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளில்
படித்துவரும் வருங்கால தமிழ்ச் சந்ததியினரிடமிருந்து வருங்காலத்தில் நாம் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்? எதிர்பார்க்கக்கூடும்? இன்னும் குறைவானப் பயன்பாடுதான் இல்லையா? இந்த மொழித் தேய்மானத்தை, அழிவு நோக்கி ஓடும் நிலைமையை தடுக்கமுடியுமா? இக்கேள்வி பல மொழியினரின் அடிமனதில் இருந்து உறுத்திவருகிறது
தங்களது கருத்தென்னவோ?"
-----------------------------------------

நண்பரே! புண் பெரிதும் புரையோடிப் போயிருக்கிறதல்லவா? அந்தப் புண்ணைச் சொரிந்து கொண்டு ஆதங்கப் படுவோமா? அல்லது புண்ணைத் தீர்க்க வழி பார்ப்போமா? முடிவில் ஒன்று சொல்லி அமைகிறேன். தெறுமத் துனவியல் (thermodymamics) இரண்டாம் விதி சொல்லுகிறது.

"எந்த முயற்சியும் எடுக்காத வரை, தனித்துக் கிடக்கும் கட்டகம் (sytem) சீரழிந்து தான் போய்க் கொண்டிருக்கும்"

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 17, 2006

பெரியார் நினைவாக!

நலங்கூர் நாவினர்

முரசு கடிப்பு உண்ட அரசரும் அல்லர்;
உரை செல் ஆட்சியின் அவரின் ஓங்கியர்.
கோன் முறை திறம்பிக் குடி நிலை திரி முன்
ஆன்று உரை கொளுவும் அமைச்சும் அல்லர்;
நவை தீர் அவையின் நலங் கூர் நாவினர்.
நுரைப் பஞ்சின் நரை தாங்கி
அரி ஏற்றின் அணல் அடர்ந்து
நெறி ஆற்றின் நெஞ்சு படரப்
பாடியும், சேரியும், பட்டினப் பாக்கமும்
ஊரும், குடியும், ஓதை நகரமும்,
வெய்யினும், மழையினும், விதிர்க்கும் பனியினும்,
பொய்யினும், புரையினும், பூட்கை தளராது,
காலையும், மாலையும், கடும்பகல் யாமமும்,
வைகலும், நாடி மெய் கலந்து, புனைவின்றிக்
கொல் வரியின் சொல் பாய்ச்சித்
தொல் குடிமைக் கட்டு அழித்த
ஆரியத்தின் அடி துமித்துப்
பட்டமும், பதவியும், பரவலும், நாடாது,
பழமை கடிந்து, பாழ்மை புலம் காட்டி,
மருளும், இருளும், மறுமையும் போக்கி,
நிகழ் நிலம் ஒன்றே நிறைத்து எனக் காட்டிக்
குலக் கோடு அரிந்து, சமயக் கால் அறத் துணித்துக்
கலக்கு உறு கொள்கைக் கடவுள் மறுத்தே
யாரும், யாவும், யாண்டும் துய்ம் எனப்
புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்
அரியர் ஆகல் இவன் அவரே
பெரியார் என்னும் பெயரி யோரே!

- நூறாசிரியம் 24,
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பொழிப்பு:

குறுந் தடியால் அடிக்கப் பெற்ற முரசை உடைய அரசருள் ஒருவரும் அல்லர்; உரையைக் கட்டளையாகக் கொண்டு செலுத்தப் பெறும் ஆட்சி வன்மையுடைய அவ்வரசரினும் ஓங்கிய ஆற்றல் உடையவர். அரசு முறை மாறு படலால் குடி மக்களும் தம் நிலையின் நின்று கெடல் அறு முன், அவ்வரசர்க்கு அறிவால் அமைந்து அறவுரை கூறி, அதனை மேற் கொண்டு ஒழுகச் செய்ய வல்ல அமைச்சரும் அல்லர்; குற்றம் அற்ற அவ்வமைச்சர் அவையைச் சார்ந்தாரினும், குடிகளின் நலத்தை மிகுதியும் எண்ணி, உரைக்கின்ற நாவினை உடையவர். நீரின் நுரை போலும் மென்மையும், பஞ்சின் இழை போலும் வெண்மையும் கொண்ட நரையைத் தாங்கி, ஆண் அரிமாவின் பிடரியைப் போலும் முகத்துத் தாடியும் மீசையும் அடர்ந்து, மக்களை நெறிப் படுத்தும் வழி முறைகளையே நினைத்து நிற்கும் நெஞ்சின் மீது படர்ந்து தொங்குமாறு, பாடிகள், சேரிகள், பட்டிகள், பாக்கங்கள், ஊர்கள், குடிகள், ஆரவாரம் மிகுந்த நகரங்கள் தோறும், வெயிலிலும், மழையிலும், நடுக்கம் செய்கின்ற பனியிலும், பிறர் தூற்றும் பொய்யுரைகளுக்கும், குற்றஞ் சார்ந்த இழிவுரைகளுக்கும் இடையிலும் தாம் கொண்ட கொள்கைப் பாட்டின் உறுதி தளராமல், காலை என்றும், மாலை என்றும், வெப்பம் மிகுந்த நண்பகல் என்றும், குளிர் மிகுந்த நள்ளிரவு என்றும் பாராது, ஒவ்வொரு நாளும் தாமே நாடிப் போய்த் தம் கொள்கையை வலியுறுத்த உண்மையான செய்திகளையே துணைக் கொண்டு, சொற் புனைவும் கருத்துப் புனைவும் இல்லாது, கொல்லப் பாயும் வரிப் புலியின் வீறு சான்ற சொற்களைக் கேட்போரின் செவி வழி மன வயலில் பாய்ச்சியும், தமிழ்க் குடியின் வன்மையைக் குலைத்து அழித்த ஆரியத்தாரின் கேடுகளை அடியோடு வெட்டிச் சாய்த்தும், பட்டப் பெயர்களையும், பதவி நலன்களையும், பாராட்டுரைகளையும் மனத்தால் விரும்பாமலும், மக்கள் தம் அறியாமையால் கைக்கொண்டு ஒழுகும் பழக்க வழக்கங்களைக் கடிந்து விலக்கியும், அவர் தம்மை வளர்ச்சி இன்றி வெறுமைப் படுத்தும் இழி நிலைகளைச் சுட்டிக் காட்டியும், மக்களின் மயக்கம் உற்ற போக்கையும், அறியாமை இருளையும், பிறவி நம்பிக்கையையும் நீக்குமாறு அறிவுறுத்தியும், கண்கூடான வாழ்வு நலம் ஒன்றே யாவருக்கும் நிறைவானது எனச் சுட்டிக் கூறியும், மக்கள் நலம் எய்த முட்டுக் கட்டைகளாக நிற்கும் குலப் பாகு பாடுகளை வெட்டி வீழ்த்தியும், சமயங்களின் அடி நிலை வேர்களை அறுத்தும், தெளிவற்றுக் குழப்பமான கொள்கை சார்ந்த போலிக் கடவுள் தன்மைகளை மறுத்து உரைத்தும், எல்லா மக்களும் எல்லா நலன்களையும் எவ்விடத்தும் துய்த்தல் செய்யுங்கள் என்னும் புதுமை உரைகளையும் பொழிவித்து, அதன் வழி பொதுமை அறத்தை மக்கள் மனத்தில் தழையச் செய்தும் வருகின்ற அரிய செயல்களுக்கு உரியவர் ஆகலின், அவரே பெரியார் என்னும் பெயர்க்கு உரியவர் ஆவர்.

விரிப்பு

இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது.

கோவை, ஈரோட்டைச் சேர்ந்த வேங்கட இராமசாமி என்னும் இயற்பெயர் கொண்டவர், தம் செயற்கரிய செயல்களால் பெரியார் எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப் பெறும் தன்மையை உறுதிப் படுத்தி, வாழ்த்திப் பாடியதாகும் இப்பாட்டு.

இது பாடாண் திணையும் வாழ்த்தியல் என்ற துறையுமாம்.

Saturday, September 16, 2006

புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை

இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு வியாழக் கிழமை காலை, கைபேசியில் கிணுகிணு என்ற ஒலி.

அந்தப் பக்கம் சிங்கை மணியம்; "அய்யா, எப்படியிருக்கிங்க, எப்பச் சிங்கையிலேர்ந்து வந்தீங்க?"

அவர் நேரடியாக விதயத்திற்கு வந்துவிட்டார்:"வரும் செப்டம்பர் 2 ல், 16 மடைக் குறியேற்றம் பற்றி ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் நடக்க இருக்கிறது, நீங்கள் உறுதியாய்ப் பங்காற்ற வேண்டும்".

அவருடைய அழைப்பிற்கு மறுப்புச் சொல்ல இயலாது. சரி என்று சொன்னேன். அடுத்த நாள் நாக. இளங்கோவனிடம் இருந்தும் ஒரு மின்னஞ்சல்: "நீங்கள் வருவீர்கள் தானே?". அதற்குச் சில நுணுத்தங்களில், பேரா. பொன்னவைக்கோவிடம் இருந்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மின்னஞ்சலும், அதனோடு இணைத்த பேரா. வ.செ.குழந்தைசாமியின் அழைப்பும் கிடைத்தன.

"சரி, இந்த நாள் எங்கும் போகமுடியாது; முழுதும் மாட்டிக் கொண்டேன்" என்று நினைத்தேன். "கருத்தரங்க நிகழ்வுகள் எல்லாம் எவ்வளவு பொறும்?" என்று ஒருபக்கம் இருந்தாலும், "போய்த்தான் பார்ப்போமே! கூடவே, கருத்தரங்க வழிநடத்துநர்கள் நேரம் கொடுத்தால் ஏதேனும் அடிப்படையைச் சொல்லலாம்" என்ற எண்ணத்தில், முதல்நாள் இரவு கூட நேரம் விழித்து, "மொழியியற் பார்வையில் தமிழிற்கான 16 மடைக் குறியேற்றம்" என்ற powerpoint பரத்தீட்டை (presentation) உருவாக்கினேன். (பின்னால் "விழலுக்கு இறைத்த நீர்" ஆக அது ஆனது வேறு கதை!)

அழைப்பிதழை ஒழுங்காகப் படிக்காமல், பார்க் செராட்டன் போய், பின்னால் தவறறிந்து, மடிக்கணியைத் துழாவி, தாஜ் கோரமண்டல் என்றறிந்து போய்ச் சேரும் போது, நேரம் 9.42.

ஊகூம்; தொடங்கியிருக்கவில்லை. நேரம் 10.30க்கு அப்புறம் தான் அமைச்சரும் (தயாநிதி மாறன்), மற்றவர்களும் வந்தார்கள். காலை 8 மணிக்கே அங்கு வந்திருந்த அமைச்சர், திடீரென்று ஏதோ வேலையில் உள்ளுரும நுட்பியற் செயலாளருடன் (Secretary for information technology) வெளியே சென்றதாகப் பின்னால் அறிந்தேன்.

மேடையில், மதிப்பிற்குரியவர்கள் அமர்ந்தவுடன், உள்ளுருமச் செயலர் படியகத்தின் (podium) முன்னால் வந்து,

"Would somebody switch on தமிழ்த்தாய் வாழ்த்து please?" என்று சொன்னார்.

மூன்றாம் வரிசையில் இருந்த இளங்கோவும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோ ம். "நல்ல தொடக்கம் இல்லே? ....படித்த தமிழர்கள் கூடும் போது இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஆகிறது. அது ஒரு சடங்கு, நடந்து போகட்டும்". ;-)

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அப்புறம், 95 விழுக்காடு ஆங்கிலத்திலும், 5 விழுக்காடு தமிழிலுமாய் கூட்டம் நடந்து, தொடக்கச் செற்றம் (inaugural session), பொது அரங்கு (Public forum), நுட்பியச் செற்றம் (Technical session), முடிவுத் தொகுப்பு (final consolidation) என இனிது முடிந்தது. மேடையில் எங்குமே தமிழில்லையே என்று யாரோ ஒரு பெரியவர் சொல்லப் போக, பேரா. வ.செ.கு. மிகுந்த சினம் கொண்டார்; "நாங்களும் தமிழின் மேல் பற்றுக் கொண்டவர்கள் தான்; நீங்கள் ஆகவேண்டியதை இங்கு பேசுங்கள்".

காலையில் பொது அரங்கில் தமிழில் கருத்துச் சொன்ன நான், "ஊரோடு ஒத்து வாழ்" என்ற மூதுரையால், நண்பகல் நுட்பியச் செற்றத்தில் ஆங்கிலத்தில் மாறிக் கொண்டேன். (இந்த அம்மணாண்டி/ கோவணாண்டி கதை எனக்கு அப்பப்ப ஞாபகம் வந்து தொலைக்கும். என்ன செய்யுறது?)

என்ன ஆச்சு?
கூட்டம் முடிந்தது.

பிற்பகல் முழுதும் ஒருவரோடு ஒருவர் தனித்த கலந்துரையாடல்கள் (வேறென்ன? அரட்டை). ஒரு நாலுபேர் மட்டும் ஏற்கனவே அடித்து வைத்திருந்த கருத்தரங்கத் தீர்மானங்களின் ஆங்கில வாசகங்களைத் திருத்திக் கொண்டிருந்தார்கள். மாலையில் சிறுபிள்ளைத் தனமான கையெடுப்புக் கணக்குத் தொடர்ந்தது. எல்லாவற்றையும் எண்ணிக் கொண்டு விழுக்காட்டுக்களாக மாற்றிக் கொண்டார்கள். மொத்தத்தில் "போடு, தாயம்" என்ற கணக்கில், பரமபத விளையாட்டில், பெரும்பாம்பு கடித்து பதினறுமக் குறியேற்றம், எழுபத்திரண்டாம் கட்டத்தில் இருந்து, இரண்டாம் கட்டத்திற்கு வந்தாயிற்று. இரண்டு பக்கத்தாருக்கும் ஒரேயடியாக, மகிழ்ச்சி. "எனக்கு ஒரு கண்ணு போச்சின்னா, அவனுக்கு இன்னொரு கண்ணு கிடந்து துடிச்சிக்கட்டுமே".

ஆக, முடிந்து போன நிகழ்ப்புகளை -agendas- மனத்தில் வைத்துக் கொண்டு, அரங்கை ஏற்பாடு செய்தவர்கள், உப்புக்குச் சப்பாணி ஆட்டம் ஆடினார்கள். என்ன சொல்ல முடியும்? நான் பதினறும மடைக் குறியேற்றமான All Character encoding ற்குப் பெருத்த ஆதரவாளனாய் இருந்தும், கருத்தரங்கு நடந்த முறை, எனக்கு 'காமா சோமா' என்று தான் இருந்தது. It left a lot to be desired. வழக்கம் போல, stated positions by everyone concerned. The anti are always anti; and the pros are always pro. There was no acceptance, even about the basic inadequacy of the existing Unicode for Tamil. இப்படி இரண்டு பக்கமும் தங்கள் கருத்துக்களில் இருந்து இம்மி அளவும் நகராமல், எப்படி முன்னேற்றம் வரும்? சரி, இந்த விவரங்களை எல்லாம் விரிவாக எழுதலாம், கூடவே நம் பரத்தீட்டத்தை தமிழ் உலகம் கோப்புப் பகுதியிலாவது சேர்த்து வைப்போம் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால் நானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது.
---------------------------------------------------
இரண்டு ஆண்டுகளாகவே அவ்வப்பொழுது குறிப்புக் காட்டியிருந்தாலும், நெஞ்சும், அரத்த ஓட்டமும் மிரட்டி, உடம்பு சழக்குப் பண்ணிக் கொண்டிருந்தது.

4 ம் தேதி காலையில் மருத்துவர் சிவகடாட்சத்தைப் பார்க்கப் போய், உடம்பு நிலையைச் சொன்னால், அவர் இரண்டே நுணுத்தத்தில், "உனக்கு ரொம்ப மிதப்பைய்யா? எல்லாவற்றையும் உனக்குள்ளே வைத்துக்கொண்டு, சுற்றியிருப்பவர்களிடம் ஏதும் சொல்லாமல் ... "என்று கோவித்துக் கொண்டார். "உடனடியாக, மூன்று சோதனை செய். X கதிர் படம் எடு; எதிரொலிக் குருதயப் படம் (echo cardiac gram) எடு; தோல்பட்டை நடவையில் நடந்து 'எப்படி உனக்கு இளைக்கிறது?' என்று மின் குருதயப் படத்தைப் பார்" என்றார். எல்லாம் நடந்தது. அன்று மாலையே சொல்லிவிட்டார்: "தம்பி, மூணு குழாயிலே 99% அடைப்பு. நீ இருக்கிறதே அவன் செயலாலேப்பா? நாளைக்கே நெஞ்சாங்குலைப் படத்தையும் (angiogram) எடு" என்றார்.

தலையாட்டினேன். மறு நாள் பிற்பகலில் மூன்று பெரிய குருதயக் குழாய்களில் (குருதயம் என்ற சொல்விளக்கத்தை முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறேன். கூறியது கூறல் இங்கே வேண்டாம் என்று தவிர்க்கிறேன்.) ஆறு அடைப்பு என்று அறிந்தேன். ஆறில் ஐந்திற்குக் குறுக்கு வழி (bye-pass) ஏற்படுத்தித் தான் அரத்த ஓட்டத்தைக் கூட்ட முடியும் என்றார்கள். பண்டுவர் (surgeon) நரேஷ்குமாரும் (பண்டுவர் என்பது நெல்லை வழக்கு; அறுவை மருத்துவர் என்பது நீர்வீழ்ச்சி மாதிரியான வழக்கு.) அதை உறுதி செய்தார்.

தடுமாறிக் கொண்டிருந்த என்னை மனைவியும், மற்றவர்களும், தொலைதூரத்தில் இருந்த மகன்களுமாய்க் கட்டாயப் படுத்தி சென்ற வியாழக் கிழமையே பண்டுவம் செய்து கொள்ள வைத்தார்கள்.

ICU எல்லாம் முடிந்து, மருத்துவ மனை அறைக்கு வந்த பின்னால், பண்டுவர் நரேஷ் குமாருக்கு நன்றி சொன்னேன்.

"நான் என்ன செய்துட்டேங்க? அஞ்சிடத்திலே plumbing job செய்ஞ்சேன்.(புழம்பு வேலை; தமிழில் புழம்பு என்றால் pipe தான்; பார்த்தீங்களா, மறுபடி நம்ம தமிழின் ஆழம் நமக்கே விளங்கலை.) அவ்வளவு தானே? இப்பவாவது செய்ஞ்சுக் கோணும்னு நீங்க ஒத்துக்குனிங்களே" என்றார்.

"உங்களுக்குத் தெரியுமா? வேதிப் பொறிஞர்களை விளையாட்டாகக் கேலிபண்ணிச் சொல்லும் போது புழம்பர்கள் என்றுதான் சொல்லுவார்கள். ஆக, நம்ம ரெண்டு பேருக்குமே புழம்பு வேலை தான்" - இது நான்.

எப்படியோ புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை நடந்து, நேற்று மாலை வீட்டுக்கு வந்தாயிற்று. இன்றைக்கு இணையத்தில் "உள்ளேன் ஐயா!"

முழு ஆற்றலுக்கு வர ஓரிரு மாதங்கள் ஆகலாம். நேரம் கிடைக்கும் போது சந்திப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, August 20, 2006

பஞ்சு

அண்மையில் சம்பந்தம் பற்றி சொல் ஒரு சொல் பதிவில் ஒரு பின்னூட்டு இட்டிருந்தேன். பின்னால் பழைய கட்டுரைகளைக் குடைந்து கொண்டிருந்த போது, 20/10/2001 ல் நண்பர் கணேசனோடு தமிழ் இணையம் (tamil.net) மடற்குழுவில் "பஞ்சு" என்ற சொல் பற்றி உரையாடிக் கொண்டிருந்த இடுகை மீண்டும் கிடைத்தது. அப்பொழுது சவுதியில் இருந்தேன். இப்பொழுது அதைச் சற்றே சரி செய்து இங்கே இடுகிறேன். உங்கள் வாசிப்பிற்கு. அன்புடன், இராம.கி. 

 அன்பிற்குரிய திரு. கணேசனுக்கு, 
-------------------------------------------- 
At 04:53 PM 10/20/2001 +0000, you wrote: 
 பஞ்சு: சொல்லாராய்ச்சி 
------------------------------ 

பஞ்சு என்ற சொல்லுக்குத் திரி, இழை என்றபொருள்கள் உண்டு. விதை நீக்கிய பருத்தியை பந்தாகச் செய்து திரி, நூல், இழை போன்றன செய்யப்படும். பந்து என்ற சொல் பஞ்சு என்பதோடு நெருங்கிய தொடர்புடையது. F. கிட்டெல் என்னும் பாதிரியாரின் கன்னடப் பேரகராதியைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்தன: கன்னடத்தில், 

1) பஞ்சு = A torch (பந்தம் என்னும் தமிழ்ப்பதத்தை ஒப்பிடுக.) 
2)பஞ்சிகெ = The ball or roll of cotton from which the thread is spun. (தமிழின் பந்து என்பதுடன் ஒப்பிடுக). 
தமிழில் பந்து -> பஞ்சு என்றாவதற்கு மேலும் சில சான்று தரலாம். 
விந்தம் (விந்தியமலை) தமிழில் விஞ்சை என்று வரும் (பெருங்கதை), 
ஸந்த்யா என்னும் வடசொல் ஸஞ்ஜெ என்று கன்னடத்தில் ஆகும். 
இது போலவே பந்து -> பஞ்சு என்றானதாகத் தெரிகிறது. 
பந்தி என்றால் இழைபோல வரிசையான அணி. 
பந்திப்பாய் = மிகக் குறுகலான, ஆனால் மிக நீண்ட பாய். 
இந்த பந்து <-> பஞ்சு தொடர்பை வேறொரு சொல்மூலமும் காணலாம். 
<->பஞ்சம் = வரட்சி, வறுமை. 
<->கன்னடத்தில் பஞ்ஜெ என்றால் மலடி/வறடி. 
<->சமற்கிருதத்தில் வந்த்யா என்றால் மலடி. 
<->பூமியைப் பெண்ணாக உருவகம் செய்தல் மரபு. 
<->நிலமகள் அழுத காஞ்சி - புறம்; 
<->நிலம் என்னும் நல்லாள் - குறள். 
<->பஞ்சம் பூமி கொள்ளும்போது, "நிலமகள் மலடுபட்டாள்" என்றல் பொருத்தமே. பஞ்சம், (வரட்சி), பஞ்ஜெ (மலடி) போன்ற சொற்கள் *பந்து என்பதுடன் தொடர்புடையது என்று திருத்தமாகக் காட்டுவது வடமொழிச் சொல்லாகிய வந்த்யா (இது *பந்த்யா என்னும் திராவிடச் சொல்லிலிருந்து வந்திருக்கவேண்டும்). 
<->வந்தி என்னும் வறுமைக் கிழவி பிட்டு விற்றதை மதுரைத் திருவிளையாடல் பேசும். 
<->பந்திலிருந்து இழைத்தெடுப்பது திரி, நூல்; 
<->கன்னடம் துணி வெளுப்போர் திருமணங்களில் பிடிக்கும் பந்தத்தைக் பஞ்சி என்றும், நூல்திரிக்கும் பந்தைப் பஞ்சிகெ என்றும் சொல்வர். 
<->பஞ்சம்(< *பந்தம்) கொண்டு இளைப்பதை வந்தி/பஞ்சை என்ற சொற்கள் காட்டும். குழந்தையில்லாமல் இளைக்கும் தாய் தான் பஞ்ஜெ (மலடி) என்பர் கன்னடியர். 
<->பஞ்சு சொல் பற்றி உங்கள் கருத்தென்ன? 
<->அறிய ஆவல். 
<->அன்புடன், 
<->நா. கணேசன் 
<-> ------------------------------------------------- 
<->
<->பஞ்சு பற்றிய உங்கள் மடல் கண்டேன். ஏற்கனவே பாலாவுக்கு எழுதுவதாக ஒப்புக் கொண்ட பயன்/ஊதியம் பற்றிய மடல் அரைகுறையாகக் கிடக்கிறது. அடுத்து counsel என்பதற்கு என்ன சொல்வது என்று ஆசீப் கேட்டிருந்தார். இதற்கு விடை எழுந்தும், அதை எழுத்தில் வடிக்காது இருக்கிறேன். இயற்கையாகவே உள்ள வேலைப்பளு. (அது தடைப்பட்டுப் போனால், "எதற்காக வந்தாய் இந்தியாவில் இருந்து?" என்ற கேள்வி எழும். சம்பளம் வாங்குகிறேனே!) நடுவே அவ்வப்போது இணையத்தில் சூடான வாக்குவாதங்கள் வரும் போது, மொழியியல் பற்றி எழுதுவது தடைப் பட்டுப் போகிறது. இது மாதிரி மடல்களுக்கு உடன் விடையிறுக்க வேண்டிய கட்டாயம். என்ன பண்ணுவது? உங்களுக்கு விடையிறுப்பதில் சுணக்கம். இனி சொல்லுக்கு வருகிறேன்.
<->
<->தஞ்சைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ப.அருளி தன் "தமிழ், சமற்கிருதம் அற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்" என்ற பொத்தகத் தொடரின் மூன்றாவது தொகுதியில் பந்து என்ற சொல்லைப் பற்றி எழுதியிருக்கிறார். மொத்தம் 5 தொகுதிகள்; படிக்க வேண்டிய, படி எடுக்க வேண்டிய பொத்தகங்கள். சென்னைக் கன்னிமாரா நூலகத்தில் நான் படியெடுக்க முனைந்த போது, என்னால் மூன்றாம் தொகுதியைப் பெறவே முடியவில்லை; மற்ற நான்கை மட்டுமே படி எடுக்க முடிந்தது. பல காலம் முயன்றும், அந்தத் தொகுதி மட்டும் அகப்படவே மாட்டேன் என்கிறது. ஒருவேளை தொலைந்து போனதோ, என்னவோ? எனவே, நானறிந்த வகையில் தொடருகிறேன். 
<->
<-> முதலில் நாம் காணவேண்டிய வேர்ச் சொல் "பல்" இதைப் பற்றி புலவர் இரா. இளங்குமரன் "தமிழ் வளம் - சொல்" என்ற பொத்தகத்தில் எழுதியுள்ளார். 
<->
<->இந்தச் சொல் முதலில் வெண்மைப் பொருளைக் குறித்து, பின் "பல்" என்னும் உறுப்பைக் குறிப்பதாயிற்று. கண்கள் இரண்டு; காதுகள் இரண்டு; பற்களோ நிறையவே இருக்கின்றன. பொருள் நீட்சி பெற்று பல்>பல என்று பன்மைப் பொருளைக் குறிப்பதாயிற்று. பல்லுக்கு நாம் நிறையவே கடன் பட்டிருக்கிறோம். இப்படிப் பல்கிய சொற்கள் பலப் பல. அதில் சில சொற்களை மட்டும் இப்பொழுது பார்ப்போம். 
<->
<-> முதலில் "பத்து" தமிழில் முதல் பத்து எண்ணுப் பெயர்கள் (வட இந்திய மொழிகள், இந்தையிரோப்பிய மொழிகள் ஆகியவற்றிலும் கூட) சில மாந்தனின் உறுப்புக்களில் இருந்து கிளர்ந்தவை தான். (இந்த எண்ணுப் பெயர்கள் பற்றிய நீண்ட கட்டுரை அவற்றின் பெயர்கள், குறியீடுகள், வளர்ச்சி இதையெல்லாம் விவரிக்கும் வகையில் பாதி எழுதப்பட்டதோடு கிடக்கிறது. "இன்று ரொக்கம், நாளை கடன்" என்று கிடக்கும் அந்தக் கட்டுரைக்கு என்று விடிவு பிறக்குமோ? அறியேன். இருப்பினும் இங்கே பத்தை விளக்குமுன், மற்றவை பற்றி கீழே சுருக்கமாக எழுதுகிறேன்; ஒருவேளை புரிபடாமற் போனால், மன்னியுங்கள். முழு விளக்கம் அந்தக் கட்டுரையில் தான் இருக்கிறது.) 
<->
<->முதலில், ஒன்று என்ற எண், ஊனோடு தொடர்பு கொண்டது (மரக்கறிக்காரர் மன்னிக்க! ஊன் தான் மாந்தனை உருவாக்கியது.); 
<->
<->இரண்டு என்பது ஈருவதோடு (துமிப்பதோடு) தொடர்பு கொண்டது; 
<->
<->மூன்று என்பது மூக்கு/துயிக்கை (ஆமாங்க, யானைத் துதிக்கை தாங்க) ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது.(துய்=முக்குத்துளை; துய்ம்பு>தூம்பு = துளையுள்ள குழாய்; தூம்பு>தூப்பு> tube; இரண்டு துளை கொண்ட மூக்கு மூன்று தோல் கொண்டது; குறியீடும் அப்படித்தான்; துய்>த்ருய்>த்ரி என வட மொழியில் மாறும். தமிழில் மூக்கு என்ற சொல்லை ஒட்டியே மூன்று என்ற சொல் கிளர்ந்தது.) 
<->
<->ஐது என்ற சொல் கய்யு (கை)/செய்யோடு தொடர்பு கொண்டது. (செய்கு, சகரம் இழந்து அய்கு/அய் ஆகும். இன்னொரு பக்கம் கன்னடம், துளு வழியே இது பள்>பய்யோடும் தொடர்பு கொள்ளும் பள்>பண்ணு> பண்டு = கை.  பண்டு> பந்து>பஞ்சு = கை. பண்ணு>பாணி = கையில் ஏதோ கொண்டிருத்தல்.  தண்ட பாணி= தண்டத்தைக் கையில் வைத்திருக்கும் முருகன். பள்>பய்=ஹய்=அய். ) 
<->
<->நாலு என்பது நலிந்த (குறைந்த) கையோடு தொடர்பு கொண்டது; நலி+கை> நலிகை>நாலிகை>நாலுகை>நாலு (ஏற்கனவே பலமுறை நான் சொல்லுவது போல, பாமரரிடம் தான் சரியான சொல் இருக்கிறது; படித்தவர்கள் நீட்டி முழக்கி வடிவத்தைக் குலைத்து விடுகிறோம். பொத்தகம் ஒரு எடுத்துக் காட்டு; ககரம் மெலிந்து ஒலித்து, சில பொழுது முற்றிலும் இல்லாமல் போவதற்கு தென் தமிழ்நாடு நல்ல காட்டு: அவுக வர்றாக> அவுஹ வர்றாஹ>அவா வர்ரா)) 
<->
<->ஆறும், ஏழும் எழுந்தவகை உணரச் சற்று நேரம் பிடிக்கும். ஒரு+கை> ஒறுகை> அறுகை> அறுகு> அறு> ஆறு என்று ஆனது (இங்கும் ககரம் காணாமல் போகிறது);
<->
<->இதே போல, இரு+கை> இருகை> இலுகை> எலுகை> எழுகை> எழுகு> எழு> ஏழு என்று ஆனது. (ககரம் மறைந்து போகிறது) 
<->
<->அடுத்தது எட்டு; அய் +துய்>அய்தூ>அய்து>எய்து>எள்து>எட்டு; எள்+ந்+து> எண்டு> எண்ணு அப்புறம் பத்து என்பதைப் பார்ப்போம். அதற்குப் பின் ஒன்பதிற்கு வருவோம். 
<->
<->பல்+து>பல்து>பஃது>பத்து (பல்>பன்; பன்னிரண்டு என்ற எண்ணின் முன்னொட்டு) பத்து>பது; பது+இன்னொன்று = பதினொன்று 
<->
<->தொள்+ந்+பது>தொண்பது (குறைந்த பத்து; தொள்ளுதல் = குறைபடுதல்) தொள்+ந்+து>தொண்டு = குறைந்தது (அதாவது பத்திற்குக் குறைந்தது) தொண்பது> ஒன்பது.  
<->
<->மொத்தத்தில், "ஊன், ஈர், மூ/துய், கய், பல்" இந்த ஐந்தை வைத்துத் தான் முதல் பத்து எண்ணுப் பெயர்கள் தோன்றி இருக்கின்றன. இதே நிலை தான் 
<->
<->இந்தையிரோப்பிய மொழிகளிலும். பல்லில் இருந்து பத்து வந்தது போல தந்தத்தில் இருந்து வந்தது தான் ten. 
<->
<->தொண்டு துவண்டது போல, நொண்டு நுவண்டு போனது; நுவனு>nine ஆனது. 
<->
<->அய்கும் துய்யும் சேர்ந்தது தான் அய்குது>eight. 
<->
<->செய்யும் துவமும் சேர்ந்தது தான் septa; 
<->
<->செய்யும் ஏகமும் சேர்ந்ததுதான் செய்யெக்ஸ்>-six 
<->
<->அய், பய்(பை) (பண்ணுதலின் அடி பய். மேலே பள்>பண்>பண்ணு பற்றிச் சொன்னதைக் கவனியுங்கள்) ஆகி five ஆனது. 
<->
<-> ஊறு ஏற்படுவது குறைவு ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுவது தான். ஊறு>four; 
<->
<->துய்>த்ருய்>த்ரி>three; 
<->துமி>துவி>two; 
<-> ஊண்>ஊணு>ஒண்ணு>one; ஊண்>ஊட்டு>உகட்டு; உள்>ஊண்; உள்> உள்கு> உள்கம்>ஊக்கம்>ஏகம் 
<->
<-> மேலே உள்ளதை விரித்துச் சொல்லாத வரை, நீங்கள் ஏற்கப் போவதில்லை. எனவே, அதைப் பிறிதொருமுறை சொல்லுகிறேன். 
<->
<->இப்பொழுது பல்லிற்கு வருவோம். பல்>பல்து = பெருகுதல் பல்து> பலுது> பருது>பருத்து+இ=பருத்தி = பருத்துக் காணப்படும் பொருள். அதுபோல, பத்து + ஐ = பத்தை, வெள்ளைப் பூண்டில், சுளையாகப் பருத்துக் கிடப்பது பத்தை இதைப் பல் என்று சொல்வாரும் உண்டு. "வெள்ளைப் பூண்டு ஒரு பல்லுக் கொடுங்க" பல்லைப் போன்ற கொட்டையையும், பலவாகச் சுளையும் கொண்ட கனி பலாக் கனி. பலாச் சுளை போல, பருத்தியிலும் பருத்திச் சுளை உண்டு. பருத்தி எடுக்கப் பயன்படும் கொலுக்கு, பல் பல்லாக இருக்கும். இப்படி பல்லப் படுவது தான் ginning and combing. பல்ல(பன்ன)ப் பட்ட பருத்தி பன்னல். (ginned cotton). இதனால், பருத்திக்கே பன்/பன்னு/பஞ்ஞு என்ற பெயர்கள் உண்டு. பஞ்ஞு என்ற பழந்தமிழ்ச் சொல் சேரநாட்டில் ஒரு விதமாகப் பலுக்கப் பட்டு, மற்ற இருநாடுகளிலும் பஞ்சு என்று இன்னொரு விதமாக வழங்கப் பட்டது. இந்தப் பஞ்சையும், மேலே, பண்டிலிருந்து (கையிலிருந்து) விளைந்த பந்து>பஞ்சையும் சேர்த்துக் குழப்பக் கூடாது. பருத்தி ஐந்து பந்துகளாய் வெடிப்பது இணைந்து எழும் இயற்கை விளைவு. அதற்குங் கூடப் பொருளிருக்கலாம். ஆனால் அஞ்சு என்பது கையிலிருந்தே எழுந்தது.

இனிப் பெருகிப் போனது என்பது பொத்தை/பொந்தை என்றும் அழைக்கப் பட்டது. அவன் பொந்தையாக பொதுப் பொது என்று இருக்கிறான் என்றால் பெருத்து இருக்கிறான் என்று பொருள். பொந்து= பெருத்துக் கிடக்கும் தன்மை; பொந்து>பந்து= பெருத்து உருண்டு கிடக்கும் பொருள்; பந்தில் பெரியது பந்தம் (தீவட்டிப் பந்தம்); பந்தம் என்றால் கட்டு, முடிச்சு என்றும் பொருள் (பொன்/பொற்காசு முடிச்சு). இந்தப் பொற்காசு முடிச்சை போட்டியில் வைத்து விளையாடுவதால் அது பந்தயம் ஆயிற்று. பந்து என்ற சொல்லின் அடிப்பொருள் பல்ல(பன்ன)ப் படாத பருத்திக்குப் பொருந்தும். பஞ்சு என்பது விதை எடுத்து சீவி, நூற்பதற்கு அணியமாக உள்ள பொருளைக் குறிக்கும். 

இந்த நுணுகிய பொருள் வேறுபாட்டை நாம் உணர வேண்டும். (பருத்தி raw cotton; பஞ்சு refined cotton). பன்னியது இந்தையிரோப்பிய மொழிகளில் spinning என்றும் ஆயிற்று. (நாம் நூற்றல் என்றே சொல்லுகிறோம்.) பருத்தி, கொட்டை (cotton), பஞ்சு (sponge), நூல், பனுவல், இழை (இது தான் filament, file என்பதோடு தொடர்பு கொண்டது. நாம் file என்பதைத் தமிழ்ப் படுத்த இழையை விட்டுக் கோப்பைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறோம்), திரியீடு (thread), பாவு (warp), ஊடு (weft), துணி இன்னும் நெசவு பற்றிய சொற்களையெல்லாம் உலகத்திற்குக் கொடுத்து, முடிவில் நாம் தொலைந்து நிற்கிறோம்; இனிமேல் தான் மீட்க வேண்டும் 

அய்யா. ஏகப் பட்டது பொருள் தெரியாது போய்விட்டது. பஞ்சைப் பற்றித் தெரிந்த தமிழன், இந்தப் பருத்திப் பஞ்சிழையைக் காட்டிலும், இலகுவான, நொய்வான (denier குறைந்தது) பஞ்சை ஒரு மரத்தில் கண்டான். அது இலவம் பஞ்சாயிற்று. (இங்கே கொட்டை கிடையாது; உடனே பருத்தி வராமல், பஞ்சு என்ற சொல் வந்து விட்டது பாருங்கள்). அந்த மரம் இலவம் பஞ்சு மரம் ஆகி, நாளடைவில் இலவ மரம் ஆனது. 

நீங்கள் சொன்ன பந்திப் பாய். அதுவும் பல்லோடு தொடர்பு கொண்டதுதான். பல்+து>பற்று = கெட்டியாகப் பிடித்துக் கொள் பற்று+இ = பற்றி >பத்தி>பக்தி = இறைமேல் கொண்ட பிடிப்பு; (சிக்கெனப் பிடிப்பேன் எங்கு எழுந்து அருளுவது இனியே!) பல்+ன்+து = பந்து= அடுத்தடுத்த வரிசை (பற்கள் இருப்பதைப் போல) பந்து+அம் = பந்தம்= நமக்கு அடுத்தடுத்து உள்ளவன் = சொந்தக்காரன் பந்து+இ = பந்தி = அடுத்தடுத்து வரிசையாய் இருப்பது; (அந்தத் திருமண வீட்டில் 10 பந்தி நடந்துதான் என்றால் அவ்வளவு வரிசைச் சாப்பாடு நடந்தது என்று பொருள்.) 

பத்தி என்றாலும் வரிசைதான். (சிவகங்கை மாவட்ட வழக்கு. "தம்பி, பத்திலெ உக்காருங்க" - இங்கே பந்தி என்ற பொருள் கிடையாது. இது வேறு வரிசை. செட்டி நாட்டில், வளவில் இருந்து இரண்டாம் கட்டுக்கும் பந்திக் கட்டுக்கும் இடையில் உள்ள குறுகிய இடமும் பத்தி என்றே அழைக்கப் படும்.) பந்திக்குப் போடும் பாய் பந்திப் பாய். 

அடுத்தடுத்து அணிசேர்த்து வரிசையாக்கும் வேலை விரிவாக்கப் பட்டு, ஓலை வேய்வதற்கும் பயன்பட்டது. (வேய்வு>weave; மறுபடியும் பாருங்கள் நெசவுச் சொல்). ஓலை வேயப் பட்ட கொட்டகை, பந்தப் பட்டதால் (கட்டப் பட்டதால்) பந்தல் என்று ஆயிற்று. ஓலையில் வேய்வது ஒரு கட்டு, வரிசை, பிடிப்பு, பற்று; 

இப்படிப் பன்னுவது பின்னுவதும் ஆயிற்று. பின்னல் = embroidery; பந்தனை = கட்டு. அடுத்தது பஞ்சம். இங்கே பேராசிரியர் ப. அருளி தெரிவிக்கின்ற செய்திகளை முதலில் பார்ப்போம். 
 ---------------------------------------------------------- 
"புய்" என்னும் பழம் பெரும் மூல வேரில் இருந்து கிளம்பி "பொய்" என்னும் அரிய கிளை வேர் கிளைத்தது. இதன் பொருள் = துளை என்பதே. புய்+அல் =புயல்= பொழியும் மழை, நீர், முகில், கடுவளி புய்>பெய் = பொழி. புய்> பொய்> பொயி>பொழி = துளை வ்ழி ஒழுகு புய்>பொய்>பொயி>பொசி = துளை வழி ஒழுகு (நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோட புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்) முந்தையத் தமிழ மாந்தன் துளித்துளியாக மேல் நின்று கீழ் வீழ்ந்த மழைத் துளிகளைக் கண்ணுற்று, இத்துளிகள் இவ்வாறு விழ, துளைகள் வழியாகவே ஒழுக்கு நிகழ வேண்டும் என்று தவறாகக் கருதினான் என்ற வரலாற்றை, இச்சொல் தோற்றங்களின் பாங்கு தெரிவிக்கின்றது. பொய் = உள்ளீடின்மை, துளை ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய கிளைவேர் பொய்= துளை, பொந்து, மரப் பொந்து, உண்மையின்மை, பொய் சொல்லுகை, பயன்படாமை, கெடுதல், அவிதல், தவறுதல், வஞ்சித்தல்' 
-------------------------------------------------- 

 இனி நம் சொல்லுக்கு வருவோம். மழை பொய்த்துப் போனது; வானம் பொய்த்துப் போனது. இடம் பொசிந்து போனது (அழிந்து போனது.) பொய்ந்து>பொய்ஞ்சு>பொசிஞ்சு பொய்ஞ்சம்>பொஞ்சம்>பஞ்சம் = அழிந்த நிலை; பயன்படாது போன நிலை; கெட்டுப் போன நிலை; அவிந்து போன நிலை, தவறிப் போன நிலை. இப்படிப் பயிர் விளையாது இருந்த காலமும் பஞ்ச காலம் ஆயிற்று. பயிர் போன்று குழவி பெறாத தாயும் கன்னடத்தில் மலடி என்ற பொருளில் பஞ்சகி என்று அழைக்கப் பட்டாள் போலும். ஆக இந்தப் பஞ்சம் பொய் என்னும் வேரில் கிளைத்தது. மேலே கூறிய விளக்கங்கள் போதும் என்று எண்ணுகிறேன். 
 
அன்புடன், 
இராம.கி.

Saturday, August 19, 2006

காய்கறிகளும் கலப்பு வழக்கமும்

இந்து நாளிதழ் (ஆகசுடு 18) படித்துக் கொண்டிருந்தேன். கோயம்பேட்டில் இன்றையக் காய்கறிவிலை (ஒரு கிலோவுக்கு) கொடுக்கப் பட்டிருந்தது. படித்த போது, ஒன்றிரண்டு காய்கறிகளின் தமிழ்ப் பெயர் குத்துமதிப்பாகத் தான் நினைவிற்கு வந்தது. எங்கு தேடினும் சட்டென்று மட்டுப் படவில்லை. என்ன ஆயிற்று எனக்கு?

கொஞ்சம் கொஞ்சமாய் வேரழிந்து, மரபு தடுமாறிப் போகிறோமோ என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.

ஒரு பக்கம் ஆங்கிலச் சொற்களின் தடுமாற்றம், இன்னொரு பக்கம் இணையான தமிழ்ச் சொற்களைத் தேடுதல் எனக் கொஞ்சம் அலைந்து தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

இந்த அலைச்சலைப் பார்த்த போது, மொத்தத்தில் ஒரு கலப்பு வழக்கத்திற்கு அணியமாகிறோம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

மெல்லத் தமிழ் இனி.......

கத்திரிக்காய் Brinjal Rs 4.00
Common Hedge (இந்தப் பெயரைப் படித்தவுடன் பெருந்தடுமாற்றம். இது முள்ளங்கியாக இருக்குமோ என்று ஓர் அய்யம்.) Rs 5.00
வெள்ளரிக்காய் Cucumber Rs 5.00
அவரைக்காய் Field beans Rs 10.00 (இதை அந்தக் கால ஆங்கிலம்-தமிழ் அகரமுதலிகள் sabre beans என்று அழைக்கின்றன. field beans என்று எப்பொழுது ஆனதென்று தெரியவில்லை.)
புடலங்காய் Snake Gourd Rs 4.00
வள்ளிக் கிழங்கு (அல்லது கருணைக் கிழங்கா தெரியவில்லை; ஏனென்றால் white yam என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்) Yam Rs 7.00
களைக் கோசு Kales root Rs 7.00 (இதுவும் நான் புரிந்தது சரிதானா என்று தெரியவில்லை)
முருங்கைக் காய் Drumstick Rs 6.00
பாகற் காய் Bitter gourd Rs 5.00
கொத்து அவரங்காய் Cluster Beans Rs 5.00
முட்டைக் கோசு Cabbage Rs 4.00
குருக் கிழங்கு Carrot Rs 15.00 (ஆங்கிலப் பெயரையே 100க்கு 99 பேர் பயன்படுத்துகிறார்கள்; உருளைக்கிழங்கு, தக்காளி என்றெல்லாம் புதுப்பெயர் வைத்தவர்கள், இதை ஏன் விட்டார்கள் என்று தெரியவில்லை. குரு = அரத்தச் சிவப்பு)
பச்சை மிளகாய் Green Chillies Rs 10.00
இஞ்சி Ginger Rs 12.00,
விதை அவரை Beans Rs 15.00 (இதையும் ஆங்கிலப் பெயரே சொல்லி அழைக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.)
அக்காரக் கிழங்கு Beetroot Rs 4.00 (பெரும்பாலும் ஆங்கிலப் பெயர் தான் சொல்லி அழைக்கிறார்கள்;அக்காரம் = இனிப்பு)
உருளைக் கிழங்கு Potato Rs 9.00 (தமிழ்ப்பெயர் நிலைத்துவிட்டது.)
பெரிய வெங்காயம் Onion Bellary Rs 5.00 (பெரிய வெங்காயம் என்பதைத் தென் தமிழ் நாட்டில் தான் சொல்லுகிறார்கள். வட தமிழ் நாட்டில் பெல்லாரி தான்.)
சின்ன வெங்காயம் Onion Small Rs 12.00
வெண்டைக் காய் Ladys finger Rs 7.00 (தக்காளி என்பது எந்த மொழிச்சொல் என்று தெரியவில்லை. ஒருவேளை போர்த்துக்கீசியச் சொல்லாக இருக்குமோ?)
சீமைத் தக்காளி Tomato Hybrid Rs 5.00
உள்ளூர்த் தக்காளி Tomato local Rs 4.00
வாழைக் காய் Plantain (100 nos) Rs 200.00

அன்புடன்,
இராம.கி.

Friday, August 11, 2006

தில்லை - 5

"தென்னாடுடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை தானுமைத் தனமாக (auomatic) பல தடவை சொல்லிய  நம்மில் பலர், தென்னாட்டிற்கு மறுதலையாக வரும் "எந் நாடு" எதைக் குறிக்கிறதென ஓர்ந்து பார்த்திருப்போமா என்பது ஐயப்பாடே. தென்னாடு என்பது முன் நான்சொன்ன தக்கணத்தைக் குறிக்கிறது; தென்னாடுடைய சிவன பெயரும் தக்கண மூத்தோனையே குறிக்கிறது. தக்கண மூத்தோன் பற்றிய விவரிப்புகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சங்க இலக்கியத்தில் காட்சியளிக்கின்றன. தென்னாட்டுச் சிவநெறி கொஞ்சம் கொஞ்சமாய் வடபுல நாடுகளில் பரவிய போது, முதலில் இலிங்க வழிபாடு என்ற கருத்தீடு அங்கு ஏற்கப்படவில்லை; சில வேத வாக்கியங்களில் அக்கருத்தீட்டைச் "சிசுனதேவ வழிபாடு" என்று கேலி செய்து முற்றிலும் இழிவு படுத்தியதுமுண்டு. பின் தக்கண மூத்தோன் என்ற மாந்த வகைப் படிமம்/குறியீடு அறிமுகமான போதே, சிவ நெறியைக் கவனிக்கத் தலைப் பட்டார். இன்றும் வடபுலத்தில் அதுபோலும் படிமங்களே பரவியுள்ளன, வடபுலத்தாரைத் தம்வயப்படுத்தும் போக்கிலேயே "எந்நாட்டவர்க்கும்" என்ற சொல்லாட்சி எழுந்திருக்க முடியும்.

[திராவிடம்/தமிழம் என்றாலே முறைப்பும், மனம்நிறை வெறுப்பும், இன்று  சிலருக்கு வருகிறதே, அவர் சிவன்கோயில்களில் எழும் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி" என்ற பதாகை முழக்கத்திற்கு (அது ஏறத்தாழ tribal முழக்கமே; "வெற்றிவேல், வீரவேல்" என்பதும், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்பதும் இக்காலத்திலும் தமிழர், இனக்குடியாரென உணர்வதை நிறுவிக்கொண்டு இருக்கின்றன.), பெருமானக் குருக்கள், ஓதுவார், பத்தரென எல்லோருமாய் எழுப்பும் நிறை முழக்கத்திற்கு, எதிர்ப்புத் தெரிவிப்பாரா, என்ன? திராவிடத்தை ஒழிக்க வேண்டுமெனில், சிவன் கோயிலை அல்லவா இவர் ஒழிக்க வேண்டும்? தக்கண மூத்தோனென்ற கருத்தீட்டை அல்லவா நிறுத்தவேண்டும்? தென்னாடு, தக்கணம், திராவிடம் என்பவையெலாம் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிற்கொன்று தொடர்பு உடையவையே. தென்னாடென்பது தமிழ்ச் சொல்; தக்கணம் இருபிறப்பி; திராவிடம் என்பது தமிழத்தின் பாகதத் திரிவோடு, பின்தொடர்ந்த சங்கதத் திரிவால், ஏற்பட்ட சொல்.]

சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் உருவகித்தவர் தென்னாட்டாரே! வேதங்களிலும், அவற்றின் விளக்க நூல்களிலும், சிவன், விண்ணவன், கொற்றவை (கொற்றவையைத் துர்க்கை என்பார்; கொற்றை = கோட்டை = துருக்கம்; துருக்கம் , துர்க்கை என்ற இருபிறப்பிச் சொல்லை உருவாக்கும்.) எல்லாம் விளிம்புநிலையில் அன்றி முதற் தெய்வங்களாய்ச் சொல்லப் பட்டதேயில்லை. தென்னாட்டின் ஐந்திணைத் தெய்வங்கள் ஆன சேயோன், மாயோன், வேந்தன், வாரணன், கொற்றவைக்கு இணையாகப் பின்னாளில், உருத்திரன்/சுப்ரமண்யன், விண்ணு/விஷ்ணு, வேந்தன்/இந்திரன், வாரணன்/வருணன், போன்ற வடபால் தொன்மங்களோடு பொருத்தினாலும், அவையெல்லாம் விளிம்புநிலைப் பொருத்துகளாகவே இருந்தன. (சுப்ரமண்யன் என்பது கண்டு நாம் மருளவேண்டாம்; சிவ பெருமான் என்ற தமிழ்க் கூட்டுச்சொல்லே வடவர்பலுக்கில் "ஷிவ் ப்ரம்மண்"  ஆகும்; அப்பனுக்கும் மகனுக்குமாய் இக்கருத்தீடு பிரியும்; முடிவில் "சிவ்" என்னும் முன்னொட்டுச் சொல் சு எனும் ஓரெழுத்து ஒரு மொழியாய்ச் சுருங்கும். ப்ரம்மண் நீண்டு ப்ரம்மண்யன் ஆகும். முடிவில் நம் சொல்லையே அடையாளம் காணமுடியாது நாம் தவிப்போம். சு எனத் தொடங்கும் இரு பிறப்பிச் சொற்கள் எல்லாமே சிவ - red- எனும் முன்னொட்டில் கிளைத்தவை. மஞ்சள்/குங்குமம் அணிந்த சிவ மங்கலி பேச்சுவழக்கில் சு மங்கலி ஆவாள். தாலிக்கு மாறாய் மஞ்சளணிவது தென்னாட்டுப் பழக்கமே. அவ்வளவு ஏன்? தாலியணிவதும் தென்னாட்டுப் பழக்கமே.)

வடபுலக் கங்கைக்கரையில் வேள்விநெறி பரவியபோது, அரசருக்கும், பெரு நிலக் கிழாருக்கும், செல்வந்தருக்கும் நன்மை கொடுப்பதாய்ச் சொல்லி அவரை அண்டியே வேதியர் வேள்விகளைச் செய்து இருக்க முடிந்தது; அதே பொழுது, பொதுமக்களோ, வேதநெறியில் ஈடுபடாமல், தத்தம் ஆளுமைக்குத் தக்க, சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் வணங்கினார். இச் சிவ, விண்ணவ, கொற்றவைப் பரவல் தென்புலத்திலும் நடந்தது.  மேல் தட்டிற்கொன்று, கீழ்த்தட்டிற்கு ஒன்றெனச் சமய இடைவெளி வேதியருக்கு இடைஞ்சலாய் அமைந்தது. பொதுமக்கள் சற்றுதள்ளியே அவரை வைத்தார்.

கி.மு. 600 களுக்குச் சற்றுமுன் (எத்தனை நூற்றாண்டுகள், ஒன்றா, இரண்டா என்பது தெரியாது), மெய்யியல் (philosophy) வரிதியான கேள்விகளுக்கு வேத நெறி உள்ளாக்கப் பட்டது. பொதுமக்களிடையே அற்றுவிகம் (ஆசீவகம்), செயினம், புத்தம் எழுப்பிய தாக்கத்தை அறிந்த அரசரும், மற்றோரும் வேறு வழியின்றி நெறிமாறத் தொடங்கினார். அதுவரை தியை (ஒளியுள்ள வானம்- dyas), புடவி (ப்ருத்வி), அதிதி, மாரி (வாரணன்> வருணன்), மித்திரன், அழனி (அக்னி), இந்திரன், உழை (உஷஸ்) எனச் சிறு தெய்வங்களையே பரவிய வேதநெறியார், ஆகமநெறியைப் (ஆகிவந்த நெறி ஆகம நெறி. இதுவும் மரபு நெறி தான். ஆனால் தென்புலம், பொதுவான வடபுலம் ஆகியவற்றின் நெறி) பார்க்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாய்க் கலவைநெறி எழத் தொடங்கிச் சிவநெறி (அதேபோல விண்ணெறி) என்பதாய்ப் பெருந்தெய்வ வணக்கமாய் மாறியது. கலவைநெறி உருவான பின்னரே, குருக்கள்மார் மக்களிடை ஏற்கப்படும் நிலைக்கு வந்தார். [எப்போதுமே வெளியிலிருந்து திணிக்கப் பட்டு மக்களுடன் ஒன்றா மதம் மக்களிடையே நிலைக்காது. உள்ளூர்ப் பழக்கங்களை அணைத்து ஒன்றுபடும் மதமே மக்களை ஈர்க்கும்.] வேதாகமக் கலவைநெறி எழுந்த கதை இது தான்.

வேளும்சடங்கு செய்வது வேள்வி. வேள்வி செய்தவர் வேள்தர் (>வேதர்); வேளும் போது (= வேண்டும் போது) கூறிய பரவு (pray) வாசகங்கள் வேள்தம் (>வேதம்., வித் எனும் கருத்துமுதல் வேரில் ”வேதம்” பிறந்ததாகக் கருத்து முதல் உரையாளர் சொல்லப் புகுவார்; அது பொருந்தப் புகல்வதென நான் சொல்வேன். வேள்தல் (= வேண்டல்) - ஐயே நான் அடிப்படையாகக்குவேன். ஏனெனில், இன்றும் கடவுளை, தெய்வங்களை, வேண்டத்தான் செய்கிறோம். வேண்டல் வேதநெறியா, சிவநெறியா, விண்ணெறியா எனப்பாராத பொதுச் சொல். வேள்விகளுக்குச் சற்றும் தொடர்பிலா வகையில், இறைவனுக்கு இடையாளனாய் சங்க இலக்கியங்களில் கூறப்படும் வெறியாட்டு வேலனும் (நாட்டுப் புறங்களில் சாமியாடி என்பார்), இன்று வரை வேளன்>வேளான் எனப்படுகிறான். காட்டாக, சிவகங்கை மாவட்டத்தில் அய்யனார் கோயில் பூசாரியார், வேளார்>வேளகாரர் என்றழைக்கப் படுவார். அதுபோலச் சங்க இலக்கியத்தில் வேள்வி செய்யாது வேறுதொழிலில் ஆட்படும் பார்ப்பாரை வேளாப் பார்ப்பாரென்பார். இச்செய்திகளை ஒருங்கே எண்ணின், வேளுதல்  வினையின் ஆழம் புரியும்.] "வேள்வியின் மூலம் வேளுதல்" என்பது ஒருவகை நெறி. வேள்வி அல்லாது இறைவனை வேண்ட முடிவது இன்னொரு வகை நெறி. முன்னால் சொன்னபடி, மேல்தட்டு வருக்கத்திற்கு மட்டுமே வேள்வி பயன்பட்டது. வேள்வியில் "எஜமானன் - யாகம் ஏற்படுத்துபவன்" என்ற ஒன்று எப்பொழுதுமுண்டு. பொதுமக்கள் பரவுவதாய்ச் சொல்லி யாகத்தைச் செய்ய முடியாது. {yaagam is a structured way of praying; it has series of rites.]

கலவைநெறியை உருவாகிய பின்தான், வேதியர் அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகியவற்றை எதிர்த்துப் பொதுமக்களைத் தம்பக்கம் திருப்ப முடிந்தது. கி.மு.600 களுக்கு அண்மையில் வட புலத்தில் வேதப் பழக்கம் குறையத் தொடங்கியது. புது விளக்கங்கள் வேத நடைமுறைக்குக் கற்பிக்கப் பட்டன. கீழ்நிற்றங்கள் (உபநிடதங்கள்) எழுதி, மெய்யியற் பொருட்பாடுகள் கூறப்பட்டன. வேதியர் கொஞ்சம் கொஞ்சமாய் தெற்கே வரத்தொடங்கினார். சங்க காலத்திலேயே பார்ப்பனர் தாக்கம் தமிழகத்தில் இருந்ததே என்று சிலர் கேட்பார்; இதில் பெருமைப்படவும், வெட்கப்படவும் ஒன்றுமில்லை. வேதியர் பெயர்ச்சி தென்னாட்டில் ஏற்பட்டது ஒரு பட்டகை (fact). அவ்வளவுதான்.

வேத நெறி பின்பற்றும் மரபாளர் தெற்கே கோதாவரிக்கு வந்த பின்னால், அவரின் விதியாளரால் தாலி கட்டிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார். (ஓரளவு பார்ப்பனரல்லாத தென்னாட்டுப் பெண்களையும் மணஞ்செய்திருக்க வேண்டும் என்றே ஆய்வாளர் எண்ணுகிறார். குறிப்பாக மராட்டியப் புடவைக் கட்டுமுறை ஓர்ந்துபார்க்க வைக்கிறது.) முறைப்பெண்ணைத் திருமணம் செய்யும் தென்னாட்டுப் பழக்கம் ஏற்கப்பட்டது. பெண்களோடும், வேதம் அறியாதாரோடும் (பெருமானரல்லாதாரோடும்) உடனிருந்து விருந்துண்ண அனுமதிக்கப் பட்டார். பழையது சாப்பிட ஒப்புதல் கிடைத்தது. பெருமானர் விலங்குகள் சாப்பிடுவதில் புதிய பட்டியல் கூட ஏற்பட்டது. இவற்றை ஆபஸ்தம்பச் சாற்றமும், பௌதாயணச் சாற்றமும் (சாற்றம் = சாத்திரம்) விளக்கமாய்க் கூறுகின்றன. இப்படி விளங்கங்களை நான் எழுதும் காரணம், வேதியரில் சிலர் ”வேதம் ஏதோ தான்தோன்றி- சுயம்பு ” என்பதுபோல் பல மூதிகங்களைக் கிளப்புவதை மறுக்கவே. பொறுமையாக வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு முன் நடந்தவைகளைப் பார்ப்பது, அதிலும் வேதம் போன்றவற்றைப் பார்ப்பது, இன்று மிகவும் அரிதாகிவிட்டது. கொடிமரபை (பரம்பரையை) மறுதலிப்பதே இன்று பலருக்கும் வழக்கமானது.

நாவலந்தீவின் பல பண்பாட்டு வழக்கங்களும் இதுபோலத் தென்னாட்டு. வட நாட்டுக் கலவை வழக்கங்களே. இன்றைக்குத் தம் தென்னாட்டு (=திராவிட) ஊற்றுகைக்கு வெட்கப்படும் சில மெத்தப் படித்த மேதாவிகள், வேதத் தன்மையை மட்டுமே நம்முன் வலியுறுத்திப் போகலாம்; ஆனால் உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். (மேனிலைப் பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியுள் நுழையும் போது, தம் நாட்டுப்புறத் தகப்பனையோ, அல்லது தாயையோ, உடன் படிக்கும் மாணிவரிடை அறிமுகம் செய்து வைக்க வெட்கப்பட்டுத் தன் கொடிவழி பற்றிப் பொய்சொல்லித் திரியும் சில முட்டாள்களையும், தம் தாய்வழிக் கொடி பாண்டித் தமிழர்களிடம் இருந்தே பிறந்ததென்று "மகாவம்சம்" சொல்வதை வாய்ப்பாக மறந்து, தம் தந்தை வழிக் கொடியான ஆரியத் தோற்றத்தை மட்டுமே விண்ணாரம் பேசி, அதேநேரம் தாய்வழி உறவான தமிழரை ஈழததீவிலிருந்தே விரட்ட முற்படும், சிங்கள முட்டாள்களையும் இங்கே எண்ணாதிருக்க முடியவில்லை.)

இதுபோன்ற பெருமானரின் பரவலை 3 அலைகளாய்ப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் கூறுவார். (The Brahmin in the Tamil Country - Prof. N.Subrahmanian, Retd. Prof.of History, Madurai Kamaraj University, ENNES publications, Madurai, year 1989) கி.மு. 1000-800, கி.மு.500-200, கி.பி 300-500 என்று அவர் பகுப்பார். இந்த அலைகள் இரண்டா, மூன்றா என்பதில் ஆய்வாளரிடையே வேறுபாடுண்டு. ஆனால், குத்தர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் சாரிசாரியாய் பெருமானர் தெற்கே பரவியது கி.பி. 500க்குப் பிறகே. அதற்கு முன் எழுந்த அலையை புத்தர், மாவீரர் காலத்திற்கு சற்று பின்னாலென நான் கருதுகிறேன். இந்த அலையின் உயர்ச்சியாய், அதனூடே செயினரும் [குறிப்பாக பத்ரபாகு (இற்றைக் கர்நாடகச் சமண வெள்ளைக்குளத்து -ஸ்ரவண பெள குளா - கோமடேசுரர் சிலையை நினைவுக்குக் கொணர்க), உடன் அரசு துறந்துவந்த சந்திரகுத்த மோரியன், அவன் மகன் பிந்துசாரன் நம் தகடூர் வரை எடுத்து வந்த மோரியர் படையெடுப்பு], புத்தரும் (பிந்துசாரனின் மகன் அசோகன் புத்த மதத் துறவிகளைத் தெற்கிற்கும் ஈழத்திற்குமாய் அனுப்பியது - அதில் அவன் மகனொருவன் கூட இருந்திருக்கலாம்), அதையொட்டி முன்னும் பின்னும் வந்த பெருமானர் எனப் படித்தானத்தில் இருந்து தகடூரும், காஞ்சியும் இன்னும் மற்ற ஊர்களுக்கும் வந்து சேர்ந்த பயணங்கள் மிகப் பல.

வந்தாரில் பலரும் தமிழ்க்குமுகத்தில் ஏற்கப் பட்டார்; பெருமானருக்குத் தலைநகர்களில் சேரிகளும், மற்ற இடங்களில் ஊர்களும் (பெரும தாயங்கள்; தந்தது தாயம்; பெருமருக்குத் தந்தது பெரும தாயம். பெரும தாயம் பின் ப்ரம்ம தேயம் என்று திரிவு கொள்ளும்) தரப்பட்டன. அவ்வூர்களின் பெயரே பிரிவுக்குப் பெயராயின. காட்டாக இற்றை மரபுப் பெருமானரில் (smartha brahmins) பெருகணப் (ப்ருகச்சணம்) பிரிவினர் கண்டரமாணிக்கம், மலை நாடு, நிலகனூர், மாங்குடி, பலமன் நேரி, மூச நாடு, குளத்தூர், மருதஞ்சேரி, சத்தியமங்கலம், பூரூர் என்ற ஊர்களில் குடியேறினார்; எண்ணாயிரவர் (அஷ்டசஹஷ்ரம்) அத்தியூர், அறிவர்பாடி, நந்திவாடி, அறுகுளம் - shatkulam என்றவற்றில் குடியேறினார். (இன்னும் முகன்மையான வடமர் பெருமளவில் வந்தது குத்தர், பல்லவர் காலத்தில். அவரைப் பின்னால் பார்ப்போம்.)

இதேபோல நம்பூதிகள் கோகர்ணம் (இன்றைய கோவா) வழியாக துளு நாட்டில் நுழைந்து 32 ஊர்களிலும், சேரலத்தில் 32 ஊர்களிலும் குடியேறினார். இவருள் ஏற்பட்ட பிரிவுகளை ஆடு, ஏடு, பிக்சை, பிச்சை, ஓது, சாந்தி, அடுக் களை, அரங்கு, பந்தி, கடவு என்று பத்தாகச் சொல்வார். நம்பூதிகளைப் போலவே பழக்கம் கொண்ட தீக்சிதர் தில்லையிலும், சோழியர் திருக் கடையூர், மடலூர், விசலூர், புதலூர், செங்கணூர், திருமறைக்காடு, ஆவுடையார் கோயில் என்ற ஊர்களிலும் குடியேறினார்.

இன்னும் பல தமிழ்ப் பெருமானப் பிரிவினர் (பொன்முடியார் - hiranya kesis, முக்காணி, கணியாளர், சங்கேதி, குருக்கள், வாத்திமார் எனப் பலர்) உண்டு. இவரெலாம் எப்போது வந்தார், எப்படி உருவானார் என்ற மாந்தவியல் விவரங்களை யாரும் சேர்த்து ஆய்ந்து வைக்கக் காணோம். மொத்தத்தில் நல்ல வரலாற்றுச் செய்திகள் தொகுக்கப் படாமல், அவரவரிடமுள்ள மூதிகப் பழக்கங்களால், தொலைந்து போய்க் கொண்டுள்ளன. (எப்படி மாலத்தீவில் ஊர் மக்களின் தமிழ்த் தோற்றத்தையும், மற்ற செய்திகளையும் சேகரித்து வைக்காமல், தொல்லியல் கண்டுபிடிப்புக்களைத் தொலைக்க வைத்து, அரபு நுழைவுக்கு முன் தமக்கு வரலாறே இல்லாததுபோல் ஆக்குகிறாரோ, அதே போல் சொல்லலாம். மலேசியாவிலும் கடாரம், ஜோகூர் மாநிலங்களில் உள்ள கி.பி. 800 முந்திய சின்னங்களை, மலாக்கா சுல்தான் பர மேசுரவர்வன் இசுலாத்திற்கு மாறியதன் முன் இருந்தால் அவற்றைக் கட்டக முறையில் (sytematic) ஒழித்துக் கட்ட முயல்கிறாரோ அதுபோல் இதைச் சொல்லலாம். பெருமானரே கூட "அல்லிருமை - அத்வைதம்” மெய்யியலைப் பெரிதாகக் கருத, வரலாற்றுத் தொலைப்பைக்  கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆதி சங்கரர் பற்றியும், அவருக்கு முந்தைய வேதம், அரணகம் - ஆரண்யகம், பெருமானம் - ப்ராமண்யம், கீழ்நிற்றம் - உபநிடதம் என்ற கருத்துமுதல் வாதத்தைப் பெருமிதமாகப் பேசுவதே போதுமென இவருக்கு ஆனது. மாந்தவியல், குமுகவியல், வரலாறு இன்னபிற பெரும்பாலோருக்குத் பொருட்டாவதில்லை. தம் திராவிடப் பின்புலம் பேச அவர் நாணுகிறார்.)

நம்பூதிகள் மட்டும் விதிவிலக்கு. அவர் வரலாற்றை மாந்தவியல் முறையில் தேடித்தேடி, கூடிய மட்டும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்திப் பதிவு செய்துள்ளார். வடமொழிப் பாதிப்பை உயர்த்தினாலும், தமிழ் வடமொழிக் கலப்பைச் சொல்லிக்கொள்ள அவர் வெட்கப்படுவதில்லை. சங்க இலக்கியத்திலே அவர் சேரலத்தில் தங்கிய முதலூர் (செல்லூர்) சிறப்பாகப் பதியப் பட்டுள்ளது (அகநானூறு 216). (நம்பூதிகள் அதர்வ வேதம் பின்பற்றார். அதன் காரணத்தாலேயே தக்கணபதத்திற்கு வெகுகாலம் முன்பே, கி.மு. 500க்கு முன்பே, வந்திருக்கலாமென்று ஆய்வாளர் எண்ணுவார்.) இவர் போலவே உள்ள தீக்சிதர், சோழியர் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, August 06, 2006

தில்லை - 4

ஒரு பெருமாள் கோயிலுக்குப் போகிறோம்; மாயவனைச் சேவித்த பின்னால், அங்குள்ள பட்டர், நாம் குனிந்து ஏற்றுக் கொள்ள, சடாரியையை நம் தலையில் வைக்கிறார்; பின்னர் துழாயும், நீரும் தருகிறார். நீரை என்ன செய்கிறோம்? கொஞ்சம்போல் வாய்க்குள் குடித்து, மிஞ்சியதை நாமே நம் தலையில் தெளித்துக் கொள்கிறோம். சிவன் கோயிலுக்குப் போனாலும்,  சிலபோது அங்கு கொடுக்கும் திருநீரை (தெளிநீர் = ஆராதனை செய்யப்பட்ட தூய நீர்) தலையில் தெளித்துக் கொள்வதுண்டு. (சிவனை முழுக்கு விழைந்தோன் - அபிஷேகப் பிரியன் - என்றும் சொல்வார்.) சிவன்கோயிலில் ஏன் இப்படித் திருநீர் (திருநீறு அல்ல) போன்றவற்றைத் தலையில் தெளித்துக் கொள்கிறோம் என ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா?

வீட்டில் பூசை செய்கிறோம். பூசை முடியு முன், இறைப் படிமத்திற்கு முன் வைத்த பூசைநீரை நம் தலையில் தெளித்துக் கொளகிறோம். ஏன்? கோயில் குடமுழுக்கு நடக்கிறது; கும்பத்தில் சொரிந்ததுபோக மீந்ததை, கோபுரத்தில் இருந்த வாக்கில் குருக்கள் தெளிக்கிறார். அத்துளிகள் தம்மேல் படாதா என்று கூட்டம் முட்டி, மோதி, வாங்கிக்கொள்ளப் பார்க்கிறது. தெளிநீரைத் தம்மேல் கொள்ள அவ்வளவு முனைப்பு பலருக்கும் ஏன்? நம் வழிபாடொட்டிய பல நிகழ்வுகளில் நீருக்கு ஏன் இவ்வளவு சிறப்புக் கொடுக்கிறோம்?

இக்கால வேத - ஆகமக் கலவைநெறியில் (இதை இந்துமதம், சனாதன தருமம் என்று பலர் சொல்கிறார்; நான் வேதாகம நெறி என்பேன். அதில் முக்கால் வாசிக்கும் மேல் நம்மூர் தொடர்பு கொண்டது), வேத நெறிப் பழக்கங்களும், ஆகம நெறிப் பழக்கங்களும் பிரித்துப் பார்க்க இயலா வகையில், அதில் பின்னிப் பிணைந்து, கிடக்கின்றன. எவை ஆகம நெறியில் வந்தவை, எவை வேதநெறி வழி வந்தவை என அடையாளம் காணலாம் எனினும், முற்றிலும் செய்வது சரவலே. எல்லாவற்றையும் பிராமணீயம் என்று சொல்லி இழக்க முற்படும் பகுத்தறிவுக் கூட்டம் நம் ஊரை வெற்றிடமாக்கவே முற்படுகிறது. இம்மறுப்பால், வேதநெறி தழைத்தோங்கவே வழி செய்கிறோம்.

பொதுவாக (வேதநெறி மதங்களுக்கு மாறாக உள்ள) சிவநெறி, விண்ணெறி போன்ற ஆகம வழி மதங்களில் நீருக்கு மேலான உரிமை கொடுப்பார். ஆனால், ஊற்றுகை (original) வேதநெறியாரோ, தெய்வத்திற்குப் படைக்க வேண்டின், வேள்விக்குண்டத்தில் "ஆகுதி"யாக இட்டுவிடுவார். (இற்றை மரபாளரில் - ஸ்மார்த்தரில் - ஊற்றுகை வேதநெறியாராய் இருப்போர் மீக்குறைவு. பலரும் கலவை நெறியே பின்பற்றுகிறார். பழம்போக்கில் பார்த்தால், உத்தர மீமாஞ்சை பின்பற்றும் ஊற்றுகை மரபாளர் சிவன் கோயில், விண்ணவன் கோயில் என எக்கோயிலுள்ளும் வரார். கேரளத்து நம்பூதிகள் பூருவ மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்.) (ஆகுதி = ஆகியது, ஆகிப் போனது = ஹோ கயா; வேறெந்தப் பொருட்பாடும் இதற்கு இல்லை. துருவித் துருவி வடமொழியுள் அருத்தம் தேடவேண்டாம்.) நெருப்பெனும் இடையாளி, வேண்டும் தெய்வத்திடம் கொண்டு செல்வதாக வேதக்காரர் விளக்கம் கொடுப்பார். அவருக்கு எல்லாமே நெருப்புத் தான். நெருப்பே எல்லா வற்றையும் தூய்மை செய்கிறது என்பது அவரின் புரிதல். ஐம்பூதங்களில் நெருப்புக்குக் கொடுக்கும் முதன்மை வேதநெறிக்கே உள்ளது.

ஆகம நெறியிலோ, நெருப்போடு மற்ற பூதங்களும் வழிபாட்டில் புகுந்து வரும். ஐம்பூதங்களையும் விடாது வழிபாட்டில் கொண்டு வருவார். குறிப்பாக நீர் எனும் பூதம். ஒரு படையல் செய்தால் தெய்வப் படிமத்தின் முன் காட்டி கொஞ்சமாய் நீரைத் தெளித்து வைத்துவிடுவார். நாம் விழையும் தெய்வம் நம் ஈடுபாட்டைப் பார்த்து அதை மனப்பூருவமாய் எடுத்துக்கொள்வதாய் ஆகமக்காரருக்கு ஐதீகம். பின் அப்படையலை பத்தர்கள் (ஒன்றைப் பற்றி நிற்பவர் பற்றர்கள்> பத்தர்கள்> பக்தர்கள். இச்சொல்லின் தமிழ்வேரைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது போல இது இறைப் பற்று.) எல்லோரும் பங்குபோட்டுக் கொள்வார்.

கருப்பருக்கு ஆடுவெட்டினும்  ஆட்டைப் பலிபீடத்திற்கு (நம் கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதற்கே முதலில் பலிபீடங்கள் இருந்தன. இன்று சில கோயில்களில் கால மாற்றத்தால், விலங்குகளைப் பலியிட வேண்டாம் எனும் எண்ணத்தால் உந்தப்பட்டு, சோற்றையும், மற்றவற்றையும் வைத்துப் "பலி" தருகிறோம்; அவ்வளவு தான். சில நாட்டுப்புறக் கோயில்களில் இன்றும் விலங்குகளைப் பலிகொடுக்கும் பழக்கம் உண்டு.) முன் கொணர்ந்து காட்டி சற்று நீர்தெளித்து அது சிலிர்த்துக் கொண்டவுடன், பலி கொடுப்பார். பலி கொடுத்த விலங்குக் கறியை பின் வெட்டி வேகவைத்து, கூடவே கூட்டாஞ் சோறும் வடித்துக் கருப்பருக்கோ, சூலாயுதத்தின் முன்னோ, படையல் செய்து,  படையல் கொடுத்த எல்லோருமாய்ப் பங்குபோட்டுச் சாப்பிடுவார். ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளியும் சென்னைக்கு வடமேற்கே, பெரிய பாளையம், ஆரணிப் படுகையில், கிடாவெட்டிப் பவானி அம்மனுக்குப் பலியிட்டுக் கூடியாக்கி உண்ணும் காட்சி பரவலாக நடப்பது தான். [கூட்டம் கொள்ளாது; ஒரு தடவை போய்ப் பாருங்கள். நாட்டாரியல் பழக்கங்கள், பண்பாடுகள் என்ன, என விளங்கும்.

பெருமானப் பழக்கம் (braminized practices) இல்லாத கோயில்கள் நாளா வட்டத்தில் பெருமான ஆக்கத்துள் வந்துசேரும் நடைமுறைகளையும் காணலாம். திருவேற்காடும், மாங்காடும் இப்படி முழுதும் மாறிவிட்டன. பெரிய பாளையம் விரைவில் மாறிக் கொண்டுள்ளது. கிடா வெட்டுவது இப்போது கோயிலுக்கு வெளியில் வெகுதொலைவில்; இன்னும் சிறிது நாளில் இப்பழக்கம் நின்றே போகலாம். யாருக்குத் தெரியும்?] அது ஏன் ஆட்டின் மேல் நீர் தெளிக்கிறார்? (சிலர் குறும்புத்தனமாய் ஆட்டின் ஒப்புதல் கேட்பதற்காக தண்ணீர் தெளிப்பதாகச் சொல்வார்:-)).

வேறொன்றும் இல்லை; இறை வழிபாட்டில், ஆராதனை (ஆலுதல் = மேலும் கீழுமாய் வட்டமாய்ச் சுற்றுதல்; தீவம், நீர், இன்னும் மற்ற பொருட்களை இப்படி இறைப்படிம முன் வட்டமாய்ச் சுற்றிக் காட்டுவோம். ஆலாதனை> ஆராதனை ஆகும். இசைக்கச்சேரியில் ஆலாவனை செய்வாரும் ஏற்றி இறக்கி வட்டமாய்ச் சுரம் பாடுகிறார். கோயில்களில்  கருவறையைச் சுற்றிவரும் வழி சுற்றாலை - சுற்றும் வட்டம் - ப்ரகாரம் - எனப்படும்.) செய்யப் பட்ட நீரைத் தெளித்தால், இறைவனுக்கு நேர்ந்து கொண்டதாக அருத்தமாம். அவன் அருளுக்கு ஆளாகி விடுகிறோமாம். இறைப் பணியில் ஈடுபடும் போது, நீர் தெளிப்பது  ஒரு குறியீடு. சில போது, எதற்கும் ஒப்பாமல், விட்டேற்றியாக இருப்பவரைப் பார்த்து "அவரைத் தெளிச்சு விட்டாச்சுப்பா?" என்கிறோம் அல்லவா? அதன் உட்பொருளைச் சற்று ஓர்ந்து பாருங்கள்.

இறைமையை ஒட்டி ஒரு பொருளுக்குப் புனிதம் கற்பிக்க நீர் தெளிப்பது முழுக்க முழுக்கத் தென்னாட்டுப் பழக்கம். [இன்று வடபுலத்திலும் பரவி வருகிறது. காட்டாக வடநாட்டு இலிங்கங்களின் மேல் இடைவிடாது நீர் ஒழுக  வைத்திருப்பார்.] கோயிலுக்கருகில் குளம் வெட்டுவது, கோயில் குளத்தில் முழுகி எழுவது, குளித்துப் பின் சாமி கும்பிடுவது, ஈரத்தோடு கோயிலுக்குள் போவது, என இறை வழிபாட்டில் நீருக்கு முகன்மை கொடுப்போம்.

நீரின் குணங்கள் பல. நீருக்கமைந்த பெயர்களும் ஒவ்வொரு குணத்தால் அமைந்தன. காட்டாக, நீர் என்ற சொல் ஈர்க்கும் குணத்தால், ஈரமென்ற சொல்லின் நீட்சியால் ஏற்பட்டது.  (இதேபோலப் பல குணங்களால் எழுந்த நீர்ப்பெயர்களைச் சொன்னால் சொல்லவருவது தவறிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.) ஒரேயொரு விலக்காய், நீரின் இன்னொரு குணத்தால் ஏற்பட்ட சொல்லை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

நீரின் மேற்பரப்பு, ஏனவடிவிற்குத் தகுந்தாற் போல் உருவம் கொள்ளும்; தவிர மேலே ஏற்படும் அசைவிற்குத் தக்கத் துள்ளும்; துள்ளல் கூடினால் தளும்பும்; பின் தெறிக்கும். துள்ளல் = குதித்தல். துள்ளும்போது துள்ளித்ததால், பரப்புத் தந்த விசையால் (பரப்புத் தந்தம் = surface tension; தந்து = நூல், கயிறு. தந்தித்தல் = நூற்றல்; நூற்கும்போது கொடுக்கும் இழுவிசையைத் தந்தவிசை - tensile force - என்கிறோம். tensile force ஐ மிக எளிதாகத் தந்தவிசை எனலாம்.  compressive force = அமுக்கு விசை.) பல்வேறு பரப்பு விசை, ஈர்ப்பு விசைகளால் துளியாகிப் போகும். துள்ளுவதில் துளி பிறக்கும் கதை இது தான்.

துள்ளல் தளும்புதற்கும், தொளதொளப்பதற்கும் வழிவகுக்கும். தந்த விசை கூடக்கூட இழுபடும் கம்பி, நூல், இன்னும் இது போன்றவை, தொளுங்கிப் போகும். எப்படி நெகிழ்வது நீளலுக்குக் காரணமோ, அதுபோல் தொள்வதும், தந்தவிசையின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படுவதே. துளித்தம்>தெளித்தம் என்ற ஆக்கம் இருபிறப்பிச் சொல். துளிக்கக் கூடிய பொருள் . துளுத்தம்> தூள்த்தம்> தூத்தம் என்று பலுக்கப படும். பொத்தகம் புஸ்தகம் ஆனது போல், மீத் திருத்தத்தில் (hyper correction) தூத்தம்>தீத்தம்>தீர்த்தம் ஆகும்.

தெளிப்பது பிறவினை; தெறிப்பது தன்வினை. (தெறியின் வேர் துல்> துறு> தெறு என்றும், தெளியின் வேர் துல்> துள்> தெள்> தெளி என்றும் விரியும்.) துண்டுதுண்டாகப் பிரிவுதும், பிரிந்தவை கூடி பெரிது ஆவதும் நீருக்கும், நீர்போல் நீர்மங்களுக்கும் உள்ள குணம். இன்று தீர்த்தம் என்றால்தான் பலர்க்கும் புரிகிறது. அதன் தமிழாழம் புரிபடாது போகிறது. வேதநெறியில் தெளிக்கும் பழக்கம் கிடையாதபோது, தெளித்தம்> தீர்த்தம் என்றல்லாது, வேறெப்படித் ”தீர்த்தம்”  தோன்றி யிருக்கும்?

தீர்த்தம் கிடைத்தால் இறைவனின் அருள் பெற்றவராய், அவன் பணியில் இணைகிறவராய் ஆகிவிடுவதாய், நம்மூர்த் தொன்மம் நவில்கிறது. எனவே consecrate பண்ண வேண்டுமானால், (மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலியில் வெறுமே consecrate என்று மட்டுமே போட்டிருக்கும். அதன் மரபுவழித் தொடக்கங்கள் தென்னாட்டில் அல்லாமல் நாவலந்தீவில் எங்கும் கிடையாது.) தெளித்தத்தைத் தெளிக்க வேண்டும். ஆகம வழியில், எல்லாச் சடங்குகளிலும் தெளிப்பதில்லாமல் இல்லை. குருவிடம் மாணக்கன் படிப்பு முடிந்தவுடன் தெளிவிக்கப் பெற்று (இங்கே உள்ள 2 பொருட்பாடுகளையும் எண்ணிப் பாருங்கள்.) தெளிவிக்கை (தீக்ஷை) பெறுகிறான். தெளிவிக்கப் பட்டவன் தீக்ஷிதன் ஆகிறான். தெளிவித்த பின்னால் தான் எல்லாச் சடங்கும் உரைகளும் முற்று முழுதாகின்றன. தீர்க்கம் என்ற சொல்லிற்கு "முற்று முடிவு" என்ற பொருள் சடங்குகளை ஒட்டியே எழுந்தது. (கவனிக்க: தீர்க்க சந்தி, தீர்க்க விராமம் என்ற வடமொழிச் சொற்கள்.)

இவ்வளவு தூரம் தீர்த்தம் பற்றிச் சொன்னதற்குக் காரணமுண்டு, தீக்ஷிதர் என்பவர் வேதநெறியையும் ஆகமநெறியையும் கலந்த சமயநெறியில் உருவானவர். அக்கலவை வடபுலத்தில் உருவாகி இருக்கலாம்; அல்லது தென்புலத்தில் எல்லைநகரான படித்தானத்தில் உருவாகி இருக்கலாம். என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. ஆயினும் அதன்வளர்ச்சியின் உச்சகட்டம் தில்லையில் தான். அவ் வளர்ச்சியின் முகடு (mode) நடவரசன்  கருத்தீடு ....... நாம் இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும்.

"தென்னாடுடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை, குறிப்பாகத் தில்லையில் பலரும் கூறும் வாசகத்தின் உட் பொருள் பார்த்தால், "அதென்ன, எந்நாட்டவர்க்கும்? யாரந்த எந்நாட்டவர்?" என்ற கேள்வி யோசிக்க வைக்கிறது. அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

திருச்சிற்றம்பலம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 02, 2006

தில்லை - 3

தில்லை - 1 எனும் பகுதியில், என் நினைவில் இருந்தபடி 4 புலியூர்களைச் சுட்டி, அவற்றில் 2 பெயர்களை மட்டுமே சொல்லியிருந்தேன். இப்போது, வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட, பு.மா. ஜெய செந்தில்நாதன் தொகுத்த, "திருமுறைத் தலங்கள்" என்ற பொத்தகத்தைப் பார்த்து, விட்டுப்போன புலியூர் பெயர்களையும், நான் செய்த தவறொன்றையும், கண்டுபிடித்தேன். அடுத்த செய்திகளுக்குப் போகுமுன் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.

முதலில் நான் செய்த தவறு. இற்றை மாவட்டத் தலைநகரான பெரம்பலூர் என்பது முன்னாளில் பெரும்புலியூர் எனினும், சிவநெறி குறித்தது இன்னொரு பெரும்புலியூராம். இப் பெரும்புலியூரானது, திருவையாறு - கல்லணை, திருக் காட்டுப் பள்ளி செல்லும் சாலையில் தில்லைத்தானத்தின் வலப்புறம் பிரியும் கிளைச்சாலையில் 4 கி.மீ சென்றால் உள்ள ஊரெனக் குறிப்பிட்டுகிறார். {பெரும்புலியூர்க் குழப்பத்தை மேலும் ஆய்ந்து, தெளிவுபெற வேண்டும்.]

பெரும்பற்றப் புலியூரோடும், பெரும் புலியூரோடும் சேர்த்து காவிரியின் வடகரைப் பகுதியிலுள்ள இன்னொரு புலியூர் ஓமாம்புலியூர். (அது என்னமோ தெரியவில்லை எல்லாப் புலியூர்களும் காவிரிக்கு வடபாலே உள்ளன. வலைப் பதிவுப் பின்னூட்டில் திரு. பா. முரளிதரன் சொன்னது சரி. கொள்ளிடக் கரையில் ஓமாம்புலியூர் உள்ளது.] காட்டுமன்னார் குடியில் இருந்து ஓமாம் புலியூருக்குப் பேருந்துச்சாலை உண்டு. தக்கணமூத்தியாய் உமாதேவிக்கு ஓங்காரப் பொருளை இறைவன் உரைத்ததாய் இங்கொரு தொன்மம் உண்டு. ஓமம் என்பது வேள்வியே; ஓமம் நடக்கின்ற, ஓமம் ஆகின்ற புலியூர் = ஓமம் ஆம் புலியூர்>ஒமமாம் புலியூர், ஓமாம் புலியூரெனத்  திரிந்தது.

இனி நடுநாட்டுப் புலியூர்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று கடலூர்ப் பகுதியாய் இன்றிருக்கும் திருப்பாதிரிப் புலியூர். [வலைப்பதிவுப் பின்னூட்டில் திரு. குழலி சட்டென்று சொன்னார். முற்றிலும் சரி. கடலூரின் பெயர்க்காரணமும் ஒரு மரத்தை ஒட்டியதே. கடையாழல் ஊர்>கடாலூர்>கடலூர்; கடையாழல் >  கடைஞாழல்; ஞாழல் மரம் = புலி நகக் கொன்றை மரம். சிவனுக்கு வேண்டிய மரம். கடை, கொல்லையைக் குறிக்கும்; புழைக்கடை என்கிறோம் அல்லவா?] "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" என்ற அப்பர் பாடல் இங்கு எழுந்தது. அப்பருக்குச் சிறப்பான தலம். செயினம் பெரிதும் ஓங்கியிருந்து பின் அழிந்த தலமும் இதுவே.

நடுநாட்டில் இன்னொரு புலியூர், எருக்கத்தம் புலியூர்; இன்றைய மக்கள் வழக்கில் இராசேந்திரப் பட்டணம் எனப்படுகிறது. விருத்தாசலம் - செயங் கொண்டம் பேருந்துச் சாலையிலுள்ள தலம். சென்னை - தஞ்சை நெடுஞ் சாலையில் சேத்தியாத் தோப்பை அடுத்து திரு முகிழ்நம் (ஸ்ரீ முஷ்ணம்) - விருத்தாசலம் பாதையில் ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ளது. வெள்ளெருக்கம் தலமரம். "வெள்ளெருக்கந் தலைமுடியான் வெப்பெடுத்த திருமேனி" பாடல் நினைவு கொள்ளுங்கள்.

இந்த 5 புலியூர்களையும் இணைப்பது இறைவனின் தக்கண மூத்தித் தோற்றம். நரைத்த சடை (தில்லைப் பூந்தளிர், பாதிரிப் பூ, வெள்ளெருக்கம் பூ என எல்லாமே இதைக் குறிப்பதாம்.) 5 புலியூர்களிலும் வேள்வி பெரிதாகப் பேசப்படும். இவைபோகத் தொண்டை நாட்டிலுள்ள சென்னைக் கோடம் பாக்கம் நண்பர்கள் கமலும், KVR-உம் தில்லை - 1 வலைப்பதிவுக்கு வந்த பின்னூட்டில் சொல்லியிருந்தார். அது தொண்டைநாடு என்பதாலும், பாடல்பெற்ற சிறப்பான சிவன் கோயில் அங்கில்லாததாலும், கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாதென எண்ணுகிறேன்.

இந்த அளவில் சென்ற பகுதியில் எழுப்பிய "இறைவனுக்கு ஏன் வெவ்வேறு தோற்றங்கள்?" என்ற கேள்விக்குப் போவோம்.

இறைவன் ஒருவனே. ஆனாலும் பலவாறாக உருவகஞ்செய்து அழகுபார்ப்பது நாவலந்தீவில் பலருக்குமுள்ள பழக்கம். சேயோனும், மாயோனும் இன்னபிற உருவகங்களும் ஒன்றே என எல்லோர்க்கும் தெரியும். இருந்தும் சேயோனை நுணுகிப்பார்த்து ஒருகாலத்தில் அப்பன், மகன் என இருவராய் உருவகஞ் செய்வர்; பின் அவர் தோற்றங்கள் பலவகை வடிவங்களைக் காட்டும்; கூடவே ஆனைமுகன் வந்து சேர்வான். கொற்றவை தாயாவாள்; மாயோனும் பல தோற்றரவுகள் (அவதாரங்கள்) கொள்வான்;  எல்லாமே நமை ஈர்க்கும் பல் வேறு கருத்தீடுகள்; ஒன்றை, ஈராக, நாலாகப் பலவாக விதப்பிப் பரவுவது (பரவுதல் = to pray) தமிழரில் பலரும் செய்யும் ஒன்று. அவ்வகையில் நடவரசன் கருத்தீடு, தென்னாடுடைய சிவன் கருத்தீட்டிலிருந்து, களப்பிரர் காலத்திற்கு அப்புறம் உருவாக்கப்பட்டதென ஆய்வாளர் சொல்கிறார். எதிலிருந்து குறிப்பாக எழுந்தது எனும் போதே தில்லை வனமும், இற்றைக் கோயிலின் உள்ளிருக்கும் மூலத்தானமும் [நடவரசனின் பொன்னம்பலத்திற்கு வெளியே வடக்கில் (ஆனால் கிழக்குப் பார்த்தாற் போல் திருமுகம்) உள்ளது] நம் சிந்தனைக்கு வருகின்றன.

இறைபற்றிய சிந்தனைகள், சமயக் கொள்கைகள் என்பவை பொதுவாக சமய நெறிகளில் நெடுநாள் கழித்து ஏற்பட்டவை. முதலில் இருந்தவை வெறுமே வழிபாடுகளும், தொன்மக் கதைகள் மட்டுமே. சிவச்சிந்தனை முடிபுகள் (சைவ சித்தாந்தம் : பதி - பசு - பாசம்), சரணாகுதி மெய்யியல் (விண்ணெறிச் சிந்தனை), அல்லிருமை [அத்வைதம் - குறிப்பாக மரபாளர் (ஸ்மார்த்தர்) பின்பற்றுவது], இருமை (துவைதம் - மாத்வர் பின்பற்றுவது), விதப்பு அல்லிருமை (விசிஷ்ட அத்வைதம் - பெரும்பாலான விண்ணவர் பின்பற்றுவது) போன்ற புரிந்துணர்வுகள் எல்லாம் நெடுங்காலம் தமிழர் எண்ணிப் பார்க்காதவையே.

அந்நாளில், சமயக் கேள்விகளைக் கொள்கைவழி கேட்கத்தொடங்கியவர் உலகாய்தரே (உலகை ஆய்பவர் உலகாய்தர் = materialists, rationalists. பலரும் தவறாக லோகயுதர் என்பார். ஆயுதமும் ஆய்தலும் வெவ்வேறானவை. ஆய்தல் = தேடல்) பின்னால் உலகாய்தச் சிந்தனை எழுச்சியில் கேள்வி கேட்கத் தொடங்கியவர் சாங்கியரும், விதப்பியரும் (விஷேசிஷம்), அற்றுவிகரும் (ஆசீவகரும்), செயினரும், புத்தருமே. இம்மாற்றுச் சிந்தனை நெறியாரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லும்படி வடபுலத்தில் உபநிடதங்களும், மீமாஞ்சையும் (பூருவ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை) எழுந்தன. நம்மூரில் ஆகம வழி சாற்றங்கள் (சாற்றம்> சாத்தம்>சாத்ரம்) எழுந்தன (குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு திருமூலரின் திருமந்திரம்; இக்கருத்துகள் முளைவடிவில் திருவாசகத்திலும் உள்ளன.).

பொதுவாக நம்பா மதங்களின் எதிர்வினைகள் கி.மு.6ம் நூ.வில் மிகுத்தது மகதப்பேரரசில் தான். தமிழகம் சிலகாலம் மெய்யியல் உரையாடலில் உள்நுழையாது தொய்வில் இருந்தது உண்மையே. இக்கேள்விகள் கேட்கு முன், வட புலத்தில் வேதநெறிப் பழக்கங்கள் இருந்தன; சடங்குகள் இருந்தன; கூட்டம் கூட்டமாக விலங்குகள் வேள்விகளுக்கு ஆகுதிகள் ஆக்கப் பட்டன. ஆனால் மெய்யியல் அப்போது ஏற்படவில்லை. என்னதான் இன்றைய வேத நெறிக்காரர் காலத்தைக் குழப்பி உபநிடதங்களை முன்கொண்டு போக முயன்றாலும், அவை பெரிதும் ஏற்பட்டது நம்பா மதங்களின் எதிர்வினைக்கு மறுமொழியாகவே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்பும் மதங்களை, நம்பா மதங்களும், மரபு எதிர்ப்பு மதங்களும் கேள்வி கேட்பதோடு மட்டுமன்றி, அரசனையும் பொதுமக்களையும் தம்பக்கம் பேரளவில் அணிதிரட்டத் தொடங்கினார். பேரரசுகளும், குடியரசுகளும் வேதநெறியிலிருந்து மாறத்தொடங்கின. இதனால், அதுவரை வடபுலத்தில் அரசச் சார்போடிருந்த வேதநெறி பெரிதும் ஆடிப்போயிற்று. சாரி, சாரியாக வேதநெறியர் புரவலர்தேடி இடம்பெயரத் தொடங்கினார். இனி வேதநெறியர் தெற்கே வந்த வழியைப் பார்ப்போம்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள், இற்றை ஆந்திரம், ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதும் ஆட்கொள்ளவில்லை. அம்மாநிலங்கள் பெருங்காடுகளாய் அன்றிருந்தன. காடுகள் குறைந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகவே மக்களின் நகர்ச்சியும், வணிகமும் நடந்தன. முகன்மையாக 2 பாதைகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகத்தில் (Rajgir) இருந்து பாடலி, வேசாலி, குசிநாரா, கபிலவத்து, சாவத்தி, அத்தினாபுரம், தக்கீலம் (= தக்கசீலம் = பெஷாவர்) வரை போகும் பாதைக்கு உத்தர பாதை என்று பெயர். இதேபோல் ஏறத்தாழ நேபாள எல்லையிலுள்ள சாவத்தியில் (saavatthi) இருந்து அயோத்தி, கோசம் (kosam), பில்சா (Bhilsa), விஞ்சை (Ujjain - உச்சயினி), எல்லோரா (இப்பாதையிலிருந்து அசந்தா வெகு தொலைவு இல்லை.) வழி,கங்கை, தொழுனை (=யமுனை), நருமதை, தபதி  ஆறுகளைக் கடந்து, கோதாவரி வடகரையிலுள்ள படித் தானம் (prathisthana>paithan) வரை வந்துசேர்வது தக்கணப் பாதை. (இந்தி, மராத்தியில் படித்தானம், பைத்தான் எனப் பெறும்; வடமொழியில் பிரதித்தானம். இக்கால அவுரங்காபாதிற்கு அருகில், ஏறத்தாழ 50 கி.மீ.யில் கோதாவரிஆற்றின் கரையிலுள்ள ஊர் படித் தானம். சிலம்பில் வரும் நூற்றுவர் கன்னர் - சதகர்ணி - களின் தலை நகர் இது. இன்றைக்கும் சுற்றுலா முறையில் அவுரங்க பாத், தவளகிரி, பைத்தான், எல்லோரா, அசந்தா போன்றவற்றை பார்ப்பது நன்றாக இருக்கும்.)

இது தவிர கங்கைக்கரை ஒட்டி மேற்கே செலின் பாடலியிலிருந்து வாரணசி வழி கோசத்தை அடையமுடியும். இதேபோல் இன்னொரு நீட்சி, தெற்கே படித் தானத்திற்கு நேர்மேற்கே துறைமுகமான சோபாரா. [இற்றை மும்பைக்கு நெருக்கமாய்ச் சற்று வடக்கே வந்துசேரும். சோபாரா தான் யூத அரசன் சாலமன் கதையில்வரும் Ophir ஆகலாம் என்பர். அப்படியெனில் சோபராவின் இருப்பு 3000 ஆண்டுகளுக்கு மேலுமிருக்கும். சோபாராவுக்குச் சற்றுமுன்னே வட மும்பையில் இருப்பது கன்னேரிக் குகைகள்.] மகதத் துறைமுகங்களில் சோபாராவும், நருமதையின் புகர்முகத்து பாருகச்சையும் (Bhaarukaccha> Broach) முகன்மை யானவை. நாவலந்தீவின் வடபுல அரசியல், வணிக, பண்பாடு, கலை, மொழி மற்றும் மெய்யியல் போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், மேற்சொன்ன 2 பெரிய பாதைகளையும், பாடலியிலிருந்து வாரணசி போகும் தொலைவையும், படித்தானத்திலிருந்து கடல்நோக்கி சோபாரா / பாருகச்சை செல்லும் வழியையும் அறிந்துகொள்ள வேண்டும். படித்தான முகன்மை நமக்கும் பெரிதே. சிலம்பில் நூற்றுவர் கன்னரைப் பார்த்து, உதவிபெற்றுச் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்றதும் முடிவில் கங்கையின் தென்கரையை முட்டியதும் தக்கணப் பாதை வழிதான்.

மகதமும், அதைச் சுற்றியுள்ளவரும் கொஞ்சம் கொஞ்சமாய் வேத நெறியில் இருந்து மற்ற நெறிகளுக்கு மாறியதால், வேதநெறியர் பலரும் தக்கணப்பதம் (தெற்குப் பாதை) வழி வரத்தொடங்கினார். தென்னகத்தினுள் வேதநெறியர் படித்தானம் வழியாக நுழைந்தார். (படித்தானத்திற்கு அருகில் சிலகாலம் தங்கி வாழ்ந்ததால் தான், கங்கைக்கடுத்து கோதாவரி நம்மூர்ப் பெருமானர் பரவலில் நிறைந்திருக்கும். கோதாவரியும் அவரால் புனிதமான ஆறாகக் கொள்ளப் படும். இன்றைக்கும் வேதநெறிப் பெண்களின் புடவைக்கட்டு, மாராட்டியக் கட்டிற்கு ஒப்பாகும். படித்தானமருகில் ஓரிரு நூற்றாண்டுகள் ஆவது அவர் தங்கியிருந்திருக்க வேண்டும். விசுவாமித்திரர், பரசுராமர், சுக்கிராச்சாரியர்  கதைகள், அகத்தியர் தெற்கே மக்களைக் கூட்டிவந்த கதை போன்றவை, வேதநெறியாளர் தக்கணம் சேர்ந்து தென் குமுகாயத்தில் ஒன்றுகலந்த செய்திகளைத் தொன்மவழி உறுதிசெய்கின்றன.)

படித்தானத்திலிருந்து கருநாடக மாநிலம் (கடம்பரின் அரசு - முதல் அரசன் மயூர சன்மன்; இவனே நம்பூதிகளைத் தெற்கே கொண்டுவர உறுதுணையாக இருந்தவன்.) வழியாகத் தகடூர் வந்துசேரும் பாதையையும், தகடூரில் இருந்து காஞ்சிவரும் பாதையையும், அதேபோலத் தகடூரிலிருந்து கரூர் வரும் பாதைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இக்கட்டுரை தொடங்கும்போது தயங்கித்தயங்கியே எழுதத் தொடங்கினேன். படிப்பவர் தயவுசெய்து சொல்லும் பொருளைத் தவறாகப் புரிந்து திசை திருப்பாமல், பொதுநலம் நோக்கிப் படிக்குமாறு வேண்டுகிறேன். வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் சொன்னது போல பெருமானர் 3 பெரும் அலையாய் தக்கணம் வந்துசேர்ந்தார். அவரின் உட்பிரிவுகளும் தமிழர் வரலாற்றைப் புரிந்துகொள்ளத் தேவையானவையே. பெருமானரின் 3 அலைகளைப் பற்றியும், தக்கணமூத்தி எனும் கருத்தீடு, ஆடலரசனாய் மாறியிருக்கக் கூடிய வாய்ப்பையும் அடுத்துப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.