Monday, November 29, 2010

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 1

மொழிவது என்பது ஒலிகளின் திரட்சியே. ஒரு மொழியைப் பேசும்போது ஒலித்திரட்சிகளை வெவ்வேறு விதமாய்ச் சேர்த்து வெளிப்படுத்திச் சொல்லாக்கி நாம் சொல்ல விரும்பும் பொருளை அடுத்தவருக்கு உணர்த்துகிறோம். அப்படிப் பொருளை ஒலிமூலம் உணர்த்த முடியாத போதோ, அல்லது ஒலியின் வெளிப்பாடு பற்றாத போதோ, மாற்று வெளிப்பாடு தேவையாகிறது. அப்படி ஒலிகளின் மாற்றாய் அமைந்த உருவுகள்/வடிவுகளே எழுத்துகளாகும்.

ஒரு மொழியின் எல்லாவொலிகளுக்கும் எழுத்துக்கள் மாற்றாகா. அதிலும் ஓரொலிக்கு ஓரெழுத்து என்பது எல்லா மொழிகளிலும் இருப்பதில்லை. ஒருசில மொழிகளில், குறிப்பாகத் தமிழில், பல்லொலிகளுக்கு ஒரெழுத்துகளே இயல்பாகின்றன. அந்நிலையில், ஒலிகளை வேறுபடுத்தியுணர சில விதப்பு ஏரணங்களை (special logics) மொழிபேசுவோர் கையாளுவர். பொதுவாக, எழுத்து - ஒலித் தொடர்பு புரிவதற்கான ஏரணம் மொழி இலக்கணத்தில், அதன் அடவில் (design), அமைந்துள்ளது. இந்த மொழியடவு புரியாது எழுத்துக்களைத் திருத்துவதோ, இன்னொரு மொழிக்கு எந்திரத்தனமாய் எழுத்துக்களைப் பெயர்ப்பதோ, ஒருங்குறி எழுந்த இக்காலத்தில் இடரிற் தான் கொண்டு சேர்க்கும். ஆனாலும் ஒருவித நிகழ்ப்புக் (with an agenda) கொண்டோர் தமிழ் எழுத்துக்களைத் திருத்தவும், தமிழுக்குள்ளும் தமிழிலிருந்து எழுத்துக்களைப் பெயர்க்கவும் முற்படுகிறார்கள். அதே பொழுது மொழிபேசும் பெரும்பான்மையரோ இத் திருகுதத்தம் புரியாது அந்நிகழ்ப்பிற்குப் பலியாகின்றனர்.

சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

கல், ஓடு, மரப்பட்டை, தோல், ஓலை, மாழை (metal), தாள், அச்சு ஆகியவற்றால் எழுத்தை வெளியிட்ட காலம் போய், கணித்திரையில் வெளியிட்டு அச்சடிக்கும் காலம் இன்று வந்துவிட்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் எழுது பொருட்கள் எழுது நுட்பத்தை தமக்கேற்றவாறு மாற்றியிருக்கின்றன. எழுத்து உருவுகளையும் மாற்றியிருக்கின்றன. ஆனால் இம்மாற்றம் தாளோடு நின்று போயிற்று. கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் அச்சுக்காலம் வந்தபோது வடிவுமாறா நிலைப்பேற்றைத் (constancy of the shape) தமிழெழுத்து பெற்றது. இற்றைக் கணிக் காலத்திலோ முற்றுமுழு நிலைப்பேறு (absolute constancy) நிலைக்கு வந்துவிட்டோம். இக்காலத்தில் மொழி மேலுள்ள கவனஞ் சிதைந்து, திருத்தக்காரர்களும், பெயர்ப்புக்காரர்களும் மனம்போன போக்கில் தமிழெழுத்தைச் சிதைக்க விட்டால் அப்புறம் சிதையெழுத்தே நிலைப்பேறு கொள்ளும். [காரணமில்லாது தமிழெழுத்தின் எதிர்காலம் பற்றி நாம் அச்சுறவில்லை. அதிலும் தமிங்கிலம் விரைவாகப் பரவிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், கி.பி. 1400 - 1600 களில் தமிழிலிருந்து மலையாளம் ஏற்பட்டது போல, வேற்றொலிகளை உள்ளிழுத்துக் கொண்டு அவற்றை எழுத்து மூலம் நிலைபெறச் செய்யும் முயற்சிகள் (மலையாளம் விருத்து - version - 2.0) தமிழில் விடாது நடக்கின்றன. இவற்றை எப்படி எதிர்கொள்ளுவது என்பது வேறு புலனம்.]

கல்லில் வெட்டிய காலத்திற் தமிழில் மெய்கள், அகர உயிர்மெய்கள், ஆகார உயிர்மெய்களைப் பிரித்துக் காண்பதிற் குழப்பம் இருந்தது. பின்னால் அடியெழுத்தோடு ஒரு குறுங்கோட்டை மேற் பக்கவாட்டிற் போட்டு, ஆகார உயிர்மெய்யைக் குறிக்கும் பழக்கம் வந்தது. [மேலே போடும் மேற்பக்கக் குறுங்கோடு தான் இப்பொழுது நாம் புழங்கும் கால் குறியீடாக மாறியது.] எந்தக் குறுங்கோடும் ஒட்டிப்போடாத எழுத்து அகர உயிர்மெய்யைக் குறித்தது. புள்ளி போட்ட எழுத்து மெய்யைக் குறித்தது. [புள்ளி போட்ட எழுத்தில் புள்ளியை அழித்து அகரமேறிய உயிர்மெய் உருவானதாய்க் கொள்ளுவதே தமிழ்ப்புரிதலின் அடிப்படையாகும்.]

இதற்கு மாற்றாய் வடபுலத்தில், ஒன்றின்கீழ் இன்னோர் உயிர்மெய்யைப் பொருத்தி மேலதை மெய்யாகவும், கீழதை உயிர்மெய்யாகவும் கொள்ளும் அடுக்குக் கட்டு முறை (stacking method) எழுந்தது. வடபுல அடுக்குக் கட்டு முறை, தமிழ்ப் புள்ளி முறைக்கு (dot method) எதிரானது. இற்றை இந்தியாவில் புள்ளி முறையைக் கையாளும் ஒரே எழுத்து தமிழெழுத்து மட்டுமே. மற்ற மொழியெழுத்துக்கள் எல்லாம் அடுக்குக் கட்டு முறையையே பயன்படுத்துகின்றன. அடுக்குக் கட்டு முறையில் இடம்வலமாய் எழுத்துக்களை வரிசைப் படுத்துவதோடு அல்லாது, எங்கு மெய்யை ஒலிக்கவேண்டுமோ அங்கு எழுத்துக்களை மேலிருந்து கீழாய் அடுக்கி உணர்த்துவார்கள். அடுக்கின் உயரம் நிரவலாக 3 எழுத்துக்கள் வரையிருக்கும். (சில விதப்பான இடங்களில் ஆறு எழுத்துக்கள் வரையும் இருக்கும்.)

அதாவது வடபுலத்து ஆவணங்கள் (தமிழல்லாத தென்புலத்து ஆவணங்களும் இதிற் சேர்ந்தவையே) இரு பரிமானப் பரப்புக் (two dimensional extent) கொண்டவை. தமிழ் ஆவணம் அப்படிப் பட்டதல்ல. தமிழில் 2 மெய்களுக்குமேற் சொல்லிற் சேர்ந்து வருவதே கிடையாது. அவையும் புள்ளி பழகுவதால் ஒரு பரிமானப் பரப்புக் (single dimensional extent) கொண்டு அடுத்தடுத்து இடம்வலமாய் மட்டுமே எழுதப்படும். எந்தத் தமிழாவணமும் இழுனை எழுத்தொழுங்கு (linear orthography) கொண்டதாகவேயிருக்கிறது.

மெய்யெழுத்து என்று சொல்வதிற் கூட வடபுலத்தாரும் (தமிழரல்லாத தென்புலத்தாரும் இதிற் சேர்த்தி) தமிழரும் வேறுபடுவர். தமிழில் மெய்யெழுத்து என்பது புள்ளியெழுத்து மட்டுமே. அகரமேறிய எழுத்து, அகர உயிர்மெய் என்றே சொல்லப்படும். வடபுலத்து மொழிகளில் அகரமேறிய உயிர்மெய்யையே மெய்யென்று சொல்லிவிடுவர். [அவர்களின் வரையறை நம்மில் இருந்து வேறுபடும்.] ஏனெனில் அகரமேறிய மெய்யொன்றின் கீழ் இன்னொன்றை எழுதி மேலெழுத்தை மெய்யெழுத்தாய் அவர்கள் ஒலிக்கிறார்கள் இல்லையா?

ஒரு சில இடங்களில் இப்படி அடுக்காய் எழுதாது (காட்டாக ஆறெழுத்து அடுக்காக வரும் இடங்களில் முதல் மூன்றை ஓரடுக்காகவும், இரண்டாம் மூன்றை அடுத்த அடுக்காகவும்) தனியாக எழுதி முதலடுக்கின் கீழ், மெய்யைப் பலுக்க வேண்டி விராமம் என்ற குறியைப் பயன்படுத்துவர். ”விராமக் குறி” என்பது ஒருவகை இறுமக் குறியாகும் (end marker). அது சொல்லிறுதியைக் குறிக்கும். தமிழில் உள்ளதோ ஒற்றுக் குறி. இரண்டிற்கும் நுணுகிய வேறுபாடுண்டு. அதாவது நம்மைப்போல் சொல்லின் இடை, கடை போன்றவற்றில் புள்ளி வராது, சொல்லின் கடையிலும், ஓர் எழுத்தடுக்கின் கடையிலும் மட்டுமே விராமம் வரும். [கடையில் வரும் காரணத்தாற்றான் அது இறுமக் குறி எனப்படுகிறது.] சொல்லின் முதல், இடையில் அடுக்குக் கட்டு முறையின் மூலமே மெய்யொலி உணர்த்தப் பெறும். (தமிழிலோ சொல்லின் முதலிடத்திற் புள்ளி வரவே வராது.)

வடபுலத்திற்கும் தமிழ்ப்புலத்திற்கும் இடையில் இன்னும் கூட வேறுபாடு உண்டு. தமிழெழுத்தில் வரும் கால், கொம்பு போன்றவை உயிர்மெய்க் குறியீடுகள் - vowelized consonant markers - என்றே தமிழிற் சொல்லப்படும். வடபுலத்திலோ இவை உயிர்க்குறியீடுகள் - vowel markers - என்றழைக்கப்படும். நம்முடைய கெட்ட காலமோ, என்னவோ, வட எழுத்துக்களைக் கையாளும் தமிழ்க்கணிஞர் ஒருசிலரும் வடவர் வரையறுப்பில் மயங்கி நம் வரையறுப்பை ஒதுக்கி vowel markers என்று இவைகளை அழைக்கத் தொடங்கி விட்டனர். [இப்படித்தான் தமிழ்க்காப்பில் பலமுறை நாம் வழுக்குகிறோம். தொல்காப்பியமும், பாணினியமும் குறிக்கும் மொழியமைப்புகள் வேறானவை என்று ஆழப் புரிந்து கொண்டவர் வரையறைக் குழப்பத்துள் விழமாட்டார்.]

ஆக இருவேறு மொழிகள், இருவேறு கட்டுப்பாடுகள். இவற்றை எழுதும் முறைகளும் இருவேறே. இரண்டையும் வலிந்து ஒன்றாக்க முயல்வது சதுரத்தையும் வட்டத்தையும் ஒன்றாக்குவது போலாகும். அடிப்படையில் இரு வேறு எழுத்துக்களை ஒன்றின் அச்சடிப்பாய் இன்னொன்றை வலிந்தாக்குவது பெரும் முட்டாள் தனமும். ஏமாற்றுவேலையும் ஆகும். வடமொழி எழுத்திலக்கணக்கக் கோட்பாடுகளைக் கொண்டுவந்து தமிழிற் புகுத்தும் தவறான செயல் இன்று நேற்றல்ல, 11 ஆம் நூற்றாண்டு புத்தமித்திரரின் வீரசோழியம் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதன் இன்னொரு வெளிப்பாடு தான் 1700 களில் திருநெல்வேலி ஈசான மடம் சாமிநாத தேசிகர் ”ஐந்தெழுத்தால் ஒரு பாடை” என்று நக்கலடித்ததாகும். இப்போது ஒருங்குறி சேர்த்தியமும் சில இந்திய மொழியறிஞரும் இக்குழப்பத்தைத் தொடருகிறார்கள்.

தமிழெழுத்து வேறு, வடபுல எழுத்துக்கள் வேறு என்ற அடிப்படை வேறுபாடு இந்தப் பெரும்போக்குத் தனத்திற்குப் புரிவதேயில்லை. பெரும்பான்மைத் தமிழரும் என்ன நடக்கிறதென்று அறியாதவராய் உள்ளனர். பல்வேறு தமிழறிஞரும் ”கணித்தமிழுக்குள் நாம் என்ன நுழைய? யார் வீட்டுக்கோ வந்தது கேடு ” என்பதாய்த் தனித்து நிற்கிறார்கள். ஓரளவு தெரிந்தவரும் நிலைபுரியாது ஆழ்குழப்பத்தில் கிடக்கிறார்கள். ஒரு சில தமிழார்வலரோ, எதையுஞ் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், அரைகுறைப் புரிதலில் உணர்ச்சி மேலிட்டுத் தெருமுனைக்கு ஓடிவந்து போராடத் துடிக்கிறார்கள். அறிவார்ந்த செயலை, வல்லுநர் கொண்டு வகையறச் சூழ்ந்தாய்ந்து அதற்கேற்ற ஒரு தடந்தகையை (strategy) உருவாக்கி அறிவால் எதிர்க்காமல், உணர்வு கொண்டு துடித்தால் இழப்பு நமக்கல்லவோ வந்து சேரும்? குறளாசான் 465 ஆம் குறளில் அதையா நமக்குச் சொல்லித் தந்தான்?

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.

ஒருங்குறி என்றால் என்ன? அதில் தமிழெழுத்துக்களும் மற்றவையும் எங்குள்ளன? இப்பொழுது தமிழெழுத்தை நீட்டிக்கச் சொல்லி ஒரு முன்மொழிவு (proposal) வந்திருக்கிறதே? இது எதற்காகச் செய்யப் படுகிறது? எங்கு இது வரக்கூடும்? வந்திருப்பது நல்லதா? கெட்டதா? இதேபோலக் கிரந்தத்திற்கான இன்னொரு முன்மொழிவை யார் செய்கிறார்கள்? அம் முன்மொழிவு என்ன? அது தமிழெழுத்தைத் தாக்குமா? தாக்காதா? அந்தத் தாக்கம் இல்லாது, கிரந்தத்தை மட்டுமே முன்மொழிய முடியாதா? - இப்படிப் பல்வேறு கேள்விகளை விவரந் தெரிந்தவரிடம் கேட்டுத் தெளிந்து அவற்றிற்கு விடை கண்டு, வெற்றிபெறத் தக்க தடந்தகையை உருவாக்காது, போராடப் போனால் விளைவு என்ன? இன்னொரு முள்ளிவாய்க்காலா? அது தேவையா? “ஆகா.., எம் அன்னைக்குக் கேடுற்றதே! இதை வீணே பார்த்திருக்க முடியுமா? மறத்தமிழன் போருக்கு அஞ்சுவானா? ஓடிவாருங்கள் தோழர்களே! அன்னையைக் காப்போம்” என்று கூவியழைத்து மானகக் கவணுக்கு (machine gun - இயந்திரத் துப்பாக்கி) முன்னால் அணிவகுத்து நிற்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?

”ஊரெங்கும் தாளில் எழுதுவதை நிறுத்திப் பொத்தான் அடிக்கவைக்கும் காலத்தில் கணிநுட்பியல் பற்றி ஓரளவு புரியாமற் தமிழன் இனி வாழமுடியாது, தாளில் எழுதும் காலம் போயே போயிற்று” என்று நமக்குத் தெரிய வேண்டுமல்லவா?

சரி, தமிழெழுத்துக்கு மீண்டும் வருவோம். கல், ஓடு, மரப்பட்டை, தோல் என்ற எழுதுபொருட்களை விட்டு ஓலைக்கு வந்த காலத்தில் மீண்டும் தமிழிற் புள்ளி போடுவதில் சரவல் ஏற்பட்டது. புள்ளி போடுவதால் ஓலையில் ஓட்டை விழுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கருதி, இடம் பொருள் ஏவல் கருதிப் புரிந்து கொள்ளும் முறையில் மீண்டும் புள்ளி இல்லாது எழுதும் பழக்கம் ஏற்பட்டது. தமிழ்ச்சொல் எழுத்துக்கோவையின் இரண்டக (reduntancy) ஒழுங்காலும், பழக்கத்தாலும், இது அவ்வளவு சிக்கலாய் ஓலையெழுத்தில் உணரப்படவில்லை. ஆனால் அடுத்த எழுதுபொருளான தாளுக்கு நகர்ந்தபோது இச்சிக்கல் பெரிதாய் உணரப்பட்டு புள்ளி போடுவது மீண்டும் பழக்கமாயிற்று.

கல், ஓடு, மரப்பட்டை, தோல், ஓலை, மாழை (metal), தாள், அச்சு ஆகியவற்றில் ஆவணம் வெளியிட்ட வரை யாரும் இவ்வெழுத்துக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட வில்லை. தமிழ்கூறும் நல்லுலகப் பொதுமக்களின் மரபே, பரவலான புழக்கமே, இவ்வொப்புதலை வழங்கிற்று. இன்றோ கணித்திரையில் எழுதி அச்சடிக்கும் காலத்தில் ”இவ்வெழுத்து இப்படி இருந்தால் இது தமிழ், இது வேறுமாதிரி இருந்தால் நாகரி, சித்தம், சாரதா, கிரந்தம், உரோமன்" என்று பிரித்துக் காட்டி எங்கோவோரிடத்திற் செந்தரமாக்கும் (standardization) தேவையும், ஒப்புதல் வாங்கும் கட்டாயமும் ஏற்பட்டு விட்டன. அவ்விதத்தில் தான் தமிழின் தலைவிதியை எங்கோ இருக்கும் (வணிக நோக்குள்ள) ஒருங்குறிச் சேர்த்தியம் நிருணயிக்க முற்படுகிறது. தமிழை அரசுமொழியாய்ப் புழங்கும் வெவ்வேறு அரசுகளும் இவ் விந்தையையுணராது, ஒருங்குறிச் சேர்த்தியத்தின் ஒப்புதலை வேண்டி “ஆமாஞ் சாமி” போட்டுக் கொண்டிருக்கின்றன.

இனிக் கணித்திரையில் எழுத்து வெளியிட்டு அச்சடிக்கும் ஆவணங்களின் பயன்பாடு பற்றிப் பார்ப்போம்.

கணித்திரையில் வெளியிடுவது தட்டச்சில் அடிப்பது போல் ஆனதல்ல. அதன் பயன் வேறுபட்டது. தட்டச்சு ஆவணம் என்பது வெறுமே படிப்பதற்கும், சில நாள் சேமிப்பதற்கும், மட்டுமே உருவாவது. கணி ஆவணமோ [அதனுள் என்னென்ன சொற்கள் பயனுற்றன என்றறிவது, எழுத்துப் பிழைகள் இருந்தால் அவற்றைத் தானாகவே தேடித் திருத்துவது, இலக்கணப் பிழைகள் ஏற்பட்டால் அவற்றையும் திருத்துவது, உருபனியல் அலசல் (morphological analysis) மூலம் மொழிநடையை ஆய்வது, ஆவணம் பற்றிய பல்வேறு புள்ளி விவரங்களைத் தொகுப்பது, ஆவணம் எழுதுபவரின் மொழிநடைக் கைச்சாத்தைக் (style signature) காணுவது, எனப்] பல்வேறு உயர் பயன்பாடுகளைச் செய்யும் வகையில் அமைந்தது. இப்படியெல்லாஞ் செய்ய வேண்டுமானால் ஒரு மொழியின் ஏரணம் கணிக்குக் கற்பிக்கப் படவேண்டும். [அதைப் படிப்படியாகக் கற்பிக்கவும் முடியும்.]

தொடக்க காலத்தில் கணி என்பது எண்களைக் கையாளுவதற்கே பயன்பட்டு வந்தது. எண்களைக் கொண்டு தனக்கிட்ட புதிரிகளைக் (problems) கணிப்பது, ஏரணத்தின் பாற்பட்டு பல்வேறு தீர்வுகளை முடிவெடுப்பது போன்ற செயல்களையே தொடக்கத்தில் கணி செய்தது. அப்படித் தொடங்கிய காலத்தில் எழுத்துக்கள் என்றால் என்னவென்றே கணிகளுக்குத் தெரியாது. பின்னால் மொழிநடை ஏரணத்தை, எண்களின் ஏரணம் போல் பெயர்த்து, உணரமுடியும் என்று அறிந்து, அவ்வேரணத்தைக் கணிக்கும் கற்பிக்குமாப் போல், எழுத்துக்களுக்கு இணையாக தனித்த எண்களைக் கொடுத்து (இவ்வெண்களை - code points - குறிப்புள்ளிகள் என்று கணியாளர் குறிப்பர்.)

எழுத்துகளை உள்ளீடு (character input) செய்தல் -> அவற்றைக் குறிப்புள்ளி எண்களாய் மாற்றல் -> இவ்வெண்களின் மேல் பல்வேறு கட்டளைகள் கொடுத்துக் கணித்தல் -> மீண்டும் குறிப்புள்ளி எண்களை எழுத்துகளாய் மாற்றல்

என்ற முறையில் பல்வேறு எழுத்து ஆவணங்களை உருவாக்கி அலச முடியும் என்ற புரிதல் வந்தது. முதலில் உரோமன் எழுத்திற்கு மட்டுமே இம்முறை எழுந்தது. இதில் வெறும் 2^7 = 128 இடங்களே (அதாவது குறியீடுகளே, அல்லது எண்களே) அமைந்தன. [ASCII என்று சொல்லுவார்கள்.] பின்னால் இரோப்பிய மொழிகளில் இருக்கும் பல்வேறு குறியீடுகளையும், மீக்குறிகளையும் சேர்த்து, ”நீட்டிக்கப் பட்ட உரோமன் (extended Roman)/நீட்டிக்கப் பட்ட இலத்தீன் (extended Latin) எழுத்துமுறை” வந்தது. இதில் 2^8 = 256 குறியீடுகள், அதற்கான எண்கள் அமைந்தன. [இதை extended ASCII என்றும் சொல்லுவார்கள்.]

இதே முறையில் அடுத்து உலகின் பல்வேறு மொழிகளை எழுதிக் காட்டும் எழுத்துகளுக்கும் எண்களைக் கொடுத்து அவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்து ஒரே ஆவணத்திற் பயன்படுத்த முடியும் என்ற தீர்வு இயல்பாய் எழுந்தது. இம்முறைக்குத் தான் ஒருங்குறி என்று பெயர். Universal code என்பதை உணர்த்தும் வகையிற் சுருக்கி Unicode என்று பெயரிட்டார்கள். தமிழில் இதே பெயரை ”ஒருமிய, ஒருமுகிற, ஒருமும் குறி” என்ற பொருளில் வினைத்தொகையாய் ஒருங்குறி என்று குறிக்கத் தொடங்கினோம். ஒருங்குறி என்ற சொல்லின் பிறப்பிலக்கணம் புரியாது ”சீருரு” என்று ஒருசிலர் தமிழிற் சொல்ல முற்படுவது முற்றிலும் பிழை. This is not a uniform code. (அதே போல சிலர் ஒருங்குகுறி என்று சொல்ல முயலுகிறார்கள். அதுவும் தவறான புரிதலே. இரண்டு குகரங்கள் இதில் புழங்க வேண்டிய தேவையில்லை. ஒருங்குறியில் வரும் ஒரு குகரம் போதும். ஒரு வாக்கியத்திற் சொற்சிக்கனம் போல சொல்லில் எழுத்துச் சிக்கனம் தேவை.)

ஒருங்குறியின் தொடக்கத்தில் 2^16 = 65536 இடங்களே (அதாவது எண்களே) இருந்தன. ஆனால் இப்பொழுது 2^11 வரைக்கும் இடங்கள் போய்விட்டன. மெல்ல மெல்ல 16 தட்டுத் தளங்களுக்குக் குறியேற்றம் போய்க் கொண்டிருக்கிறது. ஒருங்குறி 6.0 ஆம் விருத்தில் (version) 93 எழுத்து முறைகளைக் குறித்திருக்கிறார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான எழுத்துமுறைகளைக் குறிக்கும் அளவிற்கு ஒருங்குறிச் சேர்த்தியம் போய்க் கொண்டிருக்கிறது.

சற்று முன்னே சொன்ன படிதான் உலகில் உள்ள பல்வேறு எழுத்து முறைகள் கணித்திரையில் எழுதுவதற்குத் தோதாய் ஒருங்குற்றன. ஒருங்குறியின் பெரும்பயன் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்து முறைகளை (அதன் விளைவாய் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிப் பனுவல்களை - language texts) ஒரே ஆவணத்தில் காட்டமுடியும் என்பதேயாகும். இதை எல்லோரும் பயன்படுத்தினால் ஒரு செந்தரம் (standard) உருவாகும், ஒரு கணியில் இருந்து இன்னொரு கணிக்கு இணையத்தின் மூலம் ஆவணங்களை அனுப்பி எந்தச் சரவலும் இல்லாது படிக்கவைக்க முடியும் என்ற பயன்பாடு இரண்டாவதாகும். இந்தியாவில் வாழும் எழுத்துக்களைக் குறிக்குமாப் போல தேவநாகரி, சாரதா, பெருமி, தமிழெழுத்து, ஒரியவெழுத்து, குர்முகி, குசராத்தியெழுத்து, மராத்தியெழுத்து, வங்காள எழுத்து, தெலுங்கெழுத்து, கன்னட எழுத்து, மலையாள எழுத்து எனப் பல்வேறு எழுத்து முறைகள் ஒருங்குறியில் இடம் பெற்றுள்ளன.

ஒருங்குறி பற்றித் தெரியாது இந்தக் கட்டுரையைப் படிப்போருக்காக, ஒருங்குறியில் அடித்தளத் தட்டில் (BMP) இருக்கும் நம்முடைய தமிழ்க் குறியேற்றப் பட்டியலைக் கீழே கொடுத்துள்ளேன். [இதில் மொத்தம் 72 குறியீடுகள் இருக்கின்றன. அவற்றுள் தமிழுக்கு வேண்டாத குறியீடுகளையும் (0B82, 0BD7), சமயச் சார்பான குறியீடுகளையும் (0BD0), தமிழெண்கள், விதப்புக் குறியீடுகளையும் (0BE6 - 0BFA) கூடச் சேர்த்திருக்கிறார்கள். அவற்றை ஒதுக்கினால், மொத்தம் 48 குறியீடுகளே தமிழெழுத்துக்களைச் சேர்ந்ததாய் அமையும். இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதியில் இந்த 48 குறியீடுகளுக்கு ஏற்படப் போகும் தாக்கம் பற்றிப் பேசப் போகிறோம். தமிழுக்கு வேண்டாத குறியீடுகளை (0B82, 0BD7) ஆகியவற்றை எடுக்கச் சொல்லி இதுவரை பலரும் கேட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் கேட்கவேண்டும். அவற்றைப் பற்றிப் பேசினால் புலனம் வேறுபக்கம் போகும் என்று தவிர்க்கிறேன்.]



இன்னொரு செய்தியையும் இங்கு சொல்லவேண்டும். குறிப்புள்ளிகள் (code points) என்பவற்றிற்கும் வார்ப்புகள் என்பவற்றிற்கும் உள்ள வேறுபாட்டை ஒழுங்காய்ப் புரிந்து கொள்ள வேண்டும். (வார்ப்புகள் = fonts, இவற்றை ”எழுத்துருக்கள்” என்றே பலரும் குறிக்கிறார்கள். நானோ 400 ஆண்டுகால அச்சு வரலாற்றை விடாது பிடித்துத் தெளிவுறுத்துவதற்காக, வார்ப்படப் பட்டறைகளோடு - foundary workshops - அவற்றைத் தொடர்புறுத்தி ”வார்ப்புகள்” என்றே சொல்லுகிறேன். நம் அச்சு வரலாற்றை ஒதுக்கித் தள்ளி இந்தக் காலக் கணியெழுத்து வரலாற்றை எழுத முற்படலாமோ? நம் அப்பன் இன்றி நாம் ஏது? ”எழுத்துரு” என்பது ”நீர்வீழ்ச்சி” போலொரு கூட்டுச்சொல். ”வார்ப்பு” என்பது ”அருவி” போல் உட்பொருளால் அமையுஞ் சொல். ”எழுத்துரு”வைக் காட்டிலும் ”வார்ப்பின்” பொருள் அகண்டதாய், வரலாற்றை உணர்த்துவதாய், நான் கருதுகிறேன்.)

ககரம் என்பது ஓர் எழுத்து. அதற்கான ஒருங்குறிக் குறிப்புள்ளி U+0B95 ஆகும். அதன் வார்ப்பு வெளிப்பாடாக அலங்காரமான ககரத்திற்கு ஒரு வடிவமும், சாத்தாரக் (=சாதாரணக்) ககரத்திற்கு இன்னொரு வடிவமும் எனப் பல்வேறு ககர வடிவங்களைக் கொடுக்க முடியும். உண்மையில் குறிப்புள்ளிகள் எழுத்துக்களின் வடிவங்களை உணர்த்தவேயில்லை, அவை எழுத்துக்களை மட்டுமே நிகராள்கின்றன.

நாம் தேர்வு செய்யும் வார்ப்பு வரிசைக்குத் தக்க வெவ்வேறு வடிவங்களில் ககரம் என்ற எழுத்தைக் கிட்ட வைக்கலாம். [காட்டாக மைக்ரோசாவ்ட் கணியில் லதா என்ற வார்ப்பில் இருக்கும் ககரமும், ஏரியல் யுனிக்கோடு MS என்னும் வார்ப்பில் இருக்கும் ககரமும் வெவ்வேறு தோற்றம் காட்டும்.]

பின்னால் கிரந்தம், தமிழெழுத்து ஒற்றுமை வேற்றுமை பற்றிப் பேசும் போது இந்த குறிப்புள்ளிகள் - வார்ப்புகள் பற்றிய புரிதல் நமக்குப் பயன்படும். [மறக்காதீர்கள். கணியில் எழுத்துக்களுக்கு அடையாளமாய்க் குறிக்கக் கொடுக்கப்படும் எண்களைக் குறிப்புள்ளிகள் என்கிறோம். வார்ப்புகள் அந்தக் குறிப்புள்ளிகளுக்கு வெவ்வேறு வடிவங்களைக் கொடுக்கின்றன.]

அடுத்த செய்தி, ”மொழி என்பதும் எழுத்து முறை என்பதும் வெவ்வேறானவை” என்பதாகும். (பொதுவான தமிழரிற் பலரும் “எழுத்தும் மொழியும் ஒன்று” என்று எண்ணிக் குழம்பிக் கொள்கிறார்கள்.) உண்மையில் அவை வெவ்வேறானவை. இருவேறு மொழிகளை ஒரே எழுத்துமுறை கொண்டு குறிக்கலாம்.

காட்டாக இசுப்பானியம், ஆங்கிலம் என்ற இருவேறு மொழிகளை உரோமன் என்ற ஒரே எழுத்துமுறை குறிக்கிறது. பொதுவாய், இசுப்பானியம் எழுதப் பயன்படும் உரோமனும், ஆங்கிலம் எழுதப் பயன்படும் உரோமனும் அப்படியே அச்சடித்தாற் போல ஒரே வடிவங்களைக் கொண்டிருக்காது. ஆனால் பெரும் அளவில் ஒன்றுபட்டு இருக்கும். சிறு சிறு மாற்றங்களைத் தெரிவுபடுத்துமாப் போல இரண்டிற்கும் பொதுவான குறிகள் கொண்ட பெருங்கொத்தை (super set) உருவாக்கி அதைவைத்து இசுப்பானியத்தையும், ஆங்கிலத்தையும் ஒரே ஆவணத்தில் எழுத முடியும். உரோமன் என்ற பெருங்கொத்து இன்று இசுப்பானியம், இத்தாலியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, செருமன், தேனிசு, டச்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் பெருங்கொத்தாகி எழுதப் படுகிறது.

எந்தெந்த மொழியெழுத்துக்களை ஒன்று சேர்த்து ஓர் எழுத்துப் பெருங்கொத்து உருவாக்கலாம் என்பதற்கும் வரம்பு இருக்கிறது. காட்டாக உருசிய மொழி எழுத்திற்கும், ஆங்கிலேய மொழி எழுத்திற்கும் கூடச் சில ஒப்புமைகள் இருக்கின்றன. இவ்விரு மொழிகளை எழுதும் போதும் a என்ற எழுத்து ஒன்று போலத் தான் இருக்கிறது. இது போல பல எழுத்துக்களை உருசியனுக்கும் ஆங்கிலத்திற்கும் இணை காட்ட முடியும் தான். இருந்தாலும் உருசியன் எழுதும் போது ஆங்கிலத்தில் இல்லாத பல எழுத்துக்களை எழுதவேண்டிய வேறுபாடுகளும் இருக்கின்றன.

வேறுபாடுகளையும், ஒப்புமைகளையும் மொழியமைப்பு அளவிற் சீர்தூக்கி அவற்றைத் தனித்தனிக் கொத்தாகவோ, ஒரே பெருங்கொத்தாகவோ அமைக்கிறார்கள். உருசியன், பல்கேரியன், உக்ரேனியன் போன்ற சுலாவிக் மொழிகள் சிரில்லிக் என்ற எழுத்து முறையையே தம் பெருங்கொத்தாகக் கொள்ளுகின்றன. உரோமன் என்ற பெருங்கொத்திற்கும் சிரில்லிக் என்ற பெருங்கொத்திற்கும் இடையே ஒற்றுமைகள் சிறிது காணப்பட்டாலும், வேற்றுமைகள் விதந்து காணப்படுவதால் அவற்றை ஒன்று சேர்க்காமல் தனித்தனிப் பெருங்கொத்தாகவே மொழியாளரும், அவர் வழிக் கணியாளரும் கொள்ளுகிறார்கள்.

உரோமன் என்னும் பெருங்கொத்து உருவானது போல ”இந்திக்” என்னும் பெருங்கொத்தை 1980-90 களில் உருவாக்க முயலாது, இந்திய நடுவணரசு அளித்த எண்மடைக் (8 bit) குறியீட்டிற்கான ISCII போல்மத்தை (model) ஒருங்குறிச் சேர்த்தியம் அடிப்படையாகக் கொண்டதால், இந்திய மொழியெழுத்துக்களை ஒருங்குறிக்குள் கொண்டுவருவதில் தொடக்கத்தில் இருந்தே அதற்குப் பெருஞ்சரவல் இருந்தது. [அது காலம் வரை அகரவரிசை (alphabet) அரிச்சுவடிகளை ஒழுங்கு செய்த குழுவினர் இந்திய எழுத்துக்கள் அசையெழுத்து அரிச்சுவடிகள் என்று சரியாக உணரத் தவறினார்கள்.]

இப்படி ஏற்பட்ட முதற்கோணல் முற்றுங் கோணல் ஆயிற்று. [மிக அழகாக அப்பொழுதே இந்திக், தமிழ் என்று இரு (பெருங்கொத்துப்) போல்மங்களை - models - உருவாக்கி இச்சிக்கலைத் தீர்த்திருக்கலாம். ஒரு நல்ல வாய்ப்பு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தவறிப்போயிற்று.] ISCII இல் இருந்த குறைபாட்டை இங்கு நான் பேசவரவில்லை. அது வேறு எங்கோ நம்மை இழுத்துப் போகும். நடந்து போனவற்றைக் கிளறாமல், தமிழெழுத்து, கிரந்தத்துள் தமிழெழுத்து என்பது பற்றி மட்டுமே இப்பொழுது பார்க்கிறோம்.

[உலகில் உள்ள மொழிகளின் ஒலிகளை யெல்லாம் ஒன்று சேர்த்து அவற்றிற்கான international phonetic association குறியீடுகளைக் கொடுத்து பொதுமையைக் கொண்டுவரமுடியும் தான். அது பொதுமக்களை மீறிய அறிவார்ந்த மொழியாளருக்கு மட்டுமே புரியக் கூடியது என்றெண்ணி அதை ஒருங்குறிச் சேர்த்தியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.]

தமிழெழுத்தும் கிரந்தவெழுத்தும் தமிழகத்தில் உருவாக்கப் பட்டவை. இரண்டும் இருவேறு மொழிகளைக் குறிக்க எழுந்தவையாகும். இரண்டுமே இந்தியாவில் தோன்றிய தமிழி, பெருமி (brahmi) ஆகிய எழுத்தமைப்புகள் ஒன்றிற்கொன்று ஊடுருவி உருவான எழுத்துக்களாகும். (தமிழி தமிழுக்கும், கிரந்தம் சங்கதத்திற்கும் எழுந்தவை). பின்னால் இவ்வெழுத்துக்கள் தனியிருப்புக் கொண்டு மாற்று மொழிகளைக் குறிக்க முற்படுகின்றன. காட்டாக உரோமன் எழுத்தோடு சில மீக்குறிகளையும், மரபுகளையும், சேர்த்து தமிழ் மொழியை இக்காலத்தில் எழுதுகிறோம் இல்லையா?

இது போல தமிழெழுத்துக்களோடு சில மீக்குறிகளையும், மரபுகளையும் சேர்த்து ஆங்கில மொழியை எழுத முடியும். இதேபோல சங்கத மொழியை, கன்னடத்தை, தெலுங்கை, மற்ற மொழிகளை தமிழெழுத்துக் கொண்டே எழுத முடியும். [இம்மீக்குறிகள் பற்றிய செந்தரத்திற்கு இன்னும் தமிழ்க் கணிமையர் வந்து சேரவில்லை.] ஆனால் இதுவரை மீக்குறிகள் தனியாகவும் எழுத்துக்கள் தனியாகவும் அடுத்தடுத்துச் சரமாகத் (sequence) தான் எழுதப்பட்டு வந்தன. யாருமே மீக்குறிகள் இணைந்த அணுக்குறிப் புள்ளிகளாய் (atomic code points) ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் கேட்கவில்லை.

இதுவரை நான் சொன்னது பாயிரம் தான்; இனிமேற் தான் கட்டுரையின் உள்ளீட்டிற்கு வருகிறேன். அடுத்த பகுதிக்குப் போகலாம், வாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, November 27, 2010

பெருமாள் - தொடர்ச்சி

முதலாம் ஆதித்த சோழன் வரைக்கும் வந்த நாம் அதற்குச் சற்று முன்னும் சேரர் வழி பார்த்தாற் போகமுடியும். முதலாம் ஆதித்த சோழனின் காலம் கி.பி. 871-907. இவனுக்குச் சமகாலத்துச் சேர அரசர் இருவர். ஒருவர் (ஸ்)தாணு இரவி கி.பி. 844-885. இன்னொருவர் (ஸ்)தாணு இரவியின் மகன் இராமவர்மன் கி.பி. 885-917. இராமவர்மனின் மகள் ஆதித்த சோழனின் மகனான முதற் பராந்தகனுக்கு மணம் செய்துவிக்கப் பட்டாள். (ஸ்)தாணு இரவி காலத்தில் சோழருக்கும் சேரருக்கும் இடையே நல்லுறவே இருந்தது. [இராசராசன், இராசேந்திரன் காலத்திற் தான் உறவு பாழ்பட்டது. சேரர் குலம் அழிந்தது. அதன் விளைவே தமிழரோடு தொடர்பறுத்த கேரளம் உருவாகியது. சோழப் பேரரசு என்ற கருத்தீடே கேரளம் என்ற இன்னொரு மாற்றுக் கருத்தீடு ஏற்படக் காரணம் ஆகியது. இல்லாவிட்டாற் முப்பெருந் தமிழகம் என்ற கருத்தீடு நிலைத்திருக்கும்.]

(ஸ்)தாணு இரவியின் பாட்டன் குலசேகர வர்மன் (கி.பி.800-820). பின்னாளில் குலசேகர ஆழ்வார் என்று போற்றப்பட்ட விண்ணவப் பெருந்தகையாவார். இவருக்குத் தான் சேரமான் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. பல்வேறு சேரர் குடும்பக் கிளைகள் சேரல நாடெங்கணும் குறு அரசுகளை நிருவகித்த காலத்தில் அவர்களையெல்லாம் தம் அதிகாரத்தாலும், உறவாலும், ஒறுத்தலாலும் ஒன்று சேர்த்து ஒரு வலுவான ஒருங்கிணைந்த சேர நாட்டை உருவாக்கிய பெருமை குலசேகரரையே சாரும். இவருடைய தலைநகர் கொடுங்களூர் எனப்படும் மகோதய புரம் (பழைய வஞ்சிக்கு அருகில் இருந்த ஊர்.) எல்லாச் சேரமான்களுக்கும் மேலே பேரசராக [பேரரசர் என்ற பொருளை அப்படியே தரும் சொல் தான் பெரும் ஆள் (big ruler) = பெருமாள்] ஆகி மீண்டும் அவர் நாட்டைக் கட்டியதாகக் கேரளோத்பத்தி என்னும் வரலாற்று நூல் பகரும். இவர் கொல்லியையும், கோழியையும், ஆண்டதாகவும் கொங்கு நாட்டைக் கைப்பற்றியதாகவும், கூடலின் தலைவனாக இருந்ததாகவும் தன் பாசுரங்களில் கூறிக் கொள்கிறார். கோழி என்னும் உறையூரைக் கைப்பற்றியது விசயாலயன் (கி.பி.848-881) தஞ்சாவூரைக் கைப்பற்றியதற்கு முன்னால் இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அழிந்து கொண்டிருந்த பல்லவரிடமிருந்து உறையூரை குலசேகரர் கைப்பற்றியிருக்கலாம். கூடல் என்பது மதுரையைக் குறிக்கும். இவர் காலத்தில் பாண்டியரும் வலுக் குறைந்தே இருந்தனர்.

அப்பேர்ப்பட்ட சேரமான் பெருமாள் தம் அரசு துறந்து விண்ணவ நெறியில் ஆழ்ந்து ஆங்காங்கே விண்ணவக் கோயில்களுக்குச் சென்று இறைவனைப் பற்றித் திருமொழி பாடினார். அதனாற்றான் அவருடைய திருமொழி, விண்ணவ நாலாயிரப் பனுவலில் பெருமாள் திருமொழி (பேரரசர் திருமொழி) என்று சொல்லப்பட்டது போலும். அவருக்கு முன்னால் பெருமாள் என்ற சொல் இருந்ததா என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் பெருமாள் என்ற பட்டம் ஒருங்கிணைந்த சேரல அரசை உருவாக்கிய குலசேகரருக்கு முற்றும் பொருந்தும்.

சேரமான் பெருமாள் குலசேகரர், தன் மகன் இராசசேகர வர்மனைப் பட்டத்திற்குக் கொண்டுவந்து (கி.பி.820-844) ஆழ்வார் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும். இருபத்து நாலு ஆண்டுகள் ஆண்ட இராசசேகர சிம்மனோ தானுமே அரசு துறந்து அதே பொழுது தன் தந்தையின் நெறிக்கு மாறாய்ச் சிவநெறியிற் சேர்ந்து பணி செய்திருக்கிறான். [பழஞ்சேரர் சிவநெறியாளரே. செங்குட்டுவன் நிலையைச் சிலம்பில் அறியலாம்.] இராச சேகரனுக்குப் பின் அரசு செய்தவன் தான் மேலே சொன்ன அவன் மகன் (ஸ்)தாணு இரவி (கி.பி.844-885). இராச சேகர வர்மன் தான் பின்னாளில் தேவார மூவரில் கடைசியான சுந்தரமூர்த்தியாருடன் சேர்ந்து கைலாயம் வரை போன சேரமான் பெருமாள் நாயனார். சேரமான் பெருமாள் என்ற பட்டம் தந்தையிடம் இருந்து மகனுக்கு ஒட்டிக் கொண்டது போலும். இருவேறு நெறிகளில் இறைப்பணி செய்து பேர்பெற்ற மன்னர்கள் சேரமான் பெருமாள்கள். பெருமாள் என்ற சொல்லின் மதஞ்சாராப் பொருள் ஆட்சி கருதியே ஏற்பட்டிருக்க வேண்டும்.

(ஸ்)தாணு இரவி சிவநெறியாளனாய் இருந்த போதும் அரசு துறக்கவில்லை. ஆனால் அவர்களின் குலத்திற்குச் சேரமான் பெருமாள் என்ற பட்டம் நிலைத்துப் போனது. குலசேகரருக்குத் தான் முதலில் பெருமாள் என்ற பட்டம் ஏற்பட்டதா? அவருக்குமுன், வேறு யாருக்கும் இருந்ததா? - என்பது ஆய்விற்குரியது. அதே போல கி.பி.800க்கு வந்து சேர்ந்த நாம் ”பெருமாள்” என்ற சொல்லின் வரலாற்றை (குறைந்தது 1210 ஆண்டுகள்) அதற்கு முன்னும் தேடவேண்டும். [ஒருவேளை பல்லவரின், பாண்டியரின், களப்பாளரின் காலத்தில் இருந்ததா என்று தேடவேண்டும்.]

இராம வர்மனின் மகன் கோதை இரவி வர்மன் காலத்தில் (5 தலைமுறைகளில்) முழுக் கேரளமும் சேரமான் பெருமாள் குலத்தினருக்கு அடிபணிசேரர்ந்தது. பழைய சேரரின் விரிவு வந்து
சேர்ந்தது.

அன்புடன்,
இராம.கி.

Monday, November 22, 2010

பெருமாள்

அண்மையில் கண்ணபிரான் இரவிசங்கர் ”பெருமாள் என்ற சொல் எங்கு, எப்பொழுது எழுந்தது?” என்று ஒரு மடற்குழுவில் ஐயம் எழுப்பியிருந்தார். திருமால் (=நெடுமால், மாயவன், நெடியோன்) என்ற சொல் தானே சங்க காலத்தில் இருந்தது? அது எப்படிப் பெருமாளாகப் பொதுவழக்கில் மாறியது? ஒருவேளை ஏதேனும் மரபு சார்ந்த குழு வழக்கில் பெருமாள் என்ற சொல் இருந்ததா? ஒருவேளை பேச்சுவழக்கில் மதில்>மதிள் போலப் “பெருமால்” பெருமாளாயிற்றா?- என்ற கேள்விகளும் அவர் கேட்பில் அடங்கியிருந்தன. ஆழமான கேள்வி. சட்டென்று விடை சொல்லிவிட முடியாது. கொஞ்சம் துழாவியபின் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது. அறுதியான முடிவிற்கு இன்னும் வரமுடியவில்லை. ”நமக்குத் தெரிந்ததைக் கோடி காட்டுவோம். இது சரியா, தவறா என்பதை மற்ற அன்பர்கள் தொடரட்டும்” என்று எழுதுகிறேன். (பெருமால்>பெருமாள் என்ற திரிவு நடந்திருக்க வாய்ப்பில்லை. நெடுமால் என்ற புழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் பெருமால் என்ற சொல்லை நான் சங்க இலக்கியத்தில் எங்கணும் கண்டதில்லை. யாரேனும் கண்டிருந்தாற் சொல்லுங்கள்.)

[”குழு வழக்கு” என்ற சொல்லை திருவிண்ணவர்கள் ”பரிபாஷை” என்றே தமக்குள் சொல்லிக் கொள்வது ஏன் என்றும் புரியவில்லை. ”இதற்குள் மெய்ப்பொருள் அடங்கியிருக்கிறது; பரிபாஷை என்றசொல்லை வேறு மாதிரிச் சொல்லக் கூடாது” என்று ”வியாக்கியானம்” பண்ணுவதும், ”meta language" என்று மொழிபெயர்ப்பதும், எனக்கு விளங்கவில்லை. இது போன்ற வியாக்கியானங்களால் குழுத்தன்மை தான் காப்பாற்றப் படும். நல்லதமிழ்ப் பயன்பாடு அழிந்து போகும்.

தமிழிற் பரிமாற்றம், பரிவட்டம், பரிவாரம் என்ற சொற்களுண்டு. பரிமாற்றம் என்பது ஒருவருக்கொருவர் தம்மிடையே கொடுத்துக்கொள்ளும் மாற்றம். ஒருவருக்கொருவர் என்னும் போது ஒரு குழுவில் அடங்கியவரைக் குறிக்கும். அதோடு பரி(வு)யுள்ளவர் ஒரு குழுவில் தான் இருப்பர். பரிதல் என்பது குழுவிற்குள் இருப்போர் மீது நேயம் (பரிவு) காட்டுதல் என்றே பொருள் கொள்ளும். பரி என்ற சொல் சுற்றி வளைத்து ஒரே கருத்தும் உறவும் கொண்ட குழுவைத்தான் குறிக்கும்.

பரிவட்டம் என்பது தலையைச் சுற்றிக் கட்டும் துணி வட்டம். இங்கு பரிதல் என்பது சுற்றுதல்.

பரிவாரம் என்பது அரசன் அரசியர்க்கு (இந்தக் காலத்தில் தலைவன்/தலைவியர்க்கு) எப்பொழுதும் உடனிருந்து பணி செய்பவர்களின் குழு/தொகுதி

”குழு வழக்கு” என்பது ”பரிபாஷை”க்கு நிகரான நல்ல தமிழ். அதைப் பயன்படுத்த விரும்பாது ”பரிபாஷை” என்ற இரு பிறப்பிக் கூட்டுச்சொல்லைப் பிடித்துத் தொங்குவர்க்கு என்ன சொன்னாலும் புரியப் போவதில்லை. அவர்கள் குழு வழக்கு அவர்களுக்கு என்று விட்டுவிடலாம். கொச்சை வழக்கு, நூல் வழக்கு எனவிருந்தால் குழு வழக்கு என்ற சொல் இருக்கக் கூடாதா, என்ன? திருவிண்ணவ மரபின் குழு வழக்கு - ஸ்ரீவைஷ்ணவச் சம்ப்ரதாயப் பரிபாஷை.]

முன்னாற் சொன்ன மடற்குழுவில் பேரா. இராசம் அவர்கள் குலோத்துங்க சோழன் உலாவில் இருந்தும் பல்வேறு பிற்காலச் சோழ, பாண்டிய, குறுநில மன்னர் கல்வெட்டுக்களில் இருந்தும் சில மேற்கோள்களைக் எடுத்துக் கொடுத்திருந்தார்கள். முழுமை கருதி அவற்றை அப்படியே இங்கு வெட்டியொட்டியிருக்கிறேன். அவர் சுட்டிய சான்றுகள் கி.பி.1035 வரைக்கும் போகின்றன. அதற்கும் மேல் எவ்வளவு காலம் போகும் என்பதை இதற்குக் கீழே பார்ப்போம்.

----------------------------------
குலோத்துங்க சோழன் உலா

சேயினும் நல்ல பெருமாள் திருத்தடந்தோள்
தோயினும் தோய மனம் துணியும்
ஆயினும் (கண்ணி 167)

..............................................ஓதிமமே
எங்கள் பெருமாளை இங்கே தருவான், நீ
உங்கள் பெருமானுழைச் செல்வாய் (கண்ணிகள் 202-203)

.......................................உலகில்
பெரிய பெருமாள் பெரும் பவனி வீதி
இரிய எதிர் ஏற்று இழந்தாள்
வரி வளை (கண்ணிகள் 207-208)

பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி
எழுச்சி முரசு ஓர்ந்திருந்தாள் (கண்ணி 276)

..................................திரு உலாப்
போதும் பெருமாள் புகுதும் அளவும் இங்கு
யாதும் பயிலாது இருத்துமோ (கண்ணிகள் 301-302)

...................................பெருமாளும்
கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்று அனைய
வெற்றிக் களி யானைமேல் வந்தான் (கண்ணிகள் 329-330)

......................................... ஞாலத்தோர்
தெய்வப் பெருமாளும் சேவடி முன் குவித்துக்
கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் (கண்ணி 357-358)
++++++++++++++++++++++++++++++++++++++

கல்வெட்டுச் சான்றுகள் ”சாசனமாலை” என்ற கல்வெட்டுக்கள் அடங்கிய நூலில் தேடியபோது கிடைத்ததாக பேரா. இராசம் சொல்லியிருக்கிறார்கள்.

தென் ஆர்க்காடு ஜில்லா, திருக்கோவலூர்த் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் உள்ளது. (ராஜேந்திரன் 1, கி. பி. 1035-1036)

சரவணப்பெருமாள் பட்டர் "ரக்த காணிக்கை நிலம்: தெங்கால் புரவில் அம்மாபாகத்துக்குத் தெற்கு, மதுரை பாதைக்கும் குளத்துக்கரைக்கும் கிளக்கு, வீரப்பபிள்ளை தெப்பக்குளத்துக்கு
மேற்கு, தெப்பக்குளம் வாய்க்காலுக்கு வடக்கு, - இன்னாங்கெல்கைக்கு உள்ப்பட்ட திருத்தல் நிலம் ஒருமாவும், கிர்ஷ்ணாபுரம் குடியிருப்புக்கு மேற்கு, சுந்தரபட்டர் ஆண்டிச்செய்க்கி கிழக்கு, சரவணப்பெருமாள்பட்டர் திருத்தலுக்கும் வாய்க்காலுக்கும் தெற்கு, மதுரைப் பாதைக்கும் வடக்கு, இன்னாங்கெல்கைக்கு உள்ப்பட்ட ஊரடிநிலம் ஒருமாவும், ஆக ரெண்டுசெய்யும்..." (கர்நாடக நவாப்பு, கி. பி. 1793)

ராஜராஜன் - 3, கி. பி. 1231-32 தென் ஆர்க்காடு ஜில்லா, கூடலூர் தாலுகா திருவகீந்திபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது.

இவை இவ்வூர் கணக்கு செருந்திவனப் பெருமாள் எழுத்து.
... ... ...
இவை விஞ்சத்தரையர் சைந்த்ராதன்மைக்கு இவை பெருமாள்ப் பிள்ளை எழுத்து.
... ... ...
இது அண்ண[ல்] வாயில் உதையப் பெருமாள் எழுத்து (ஜடாவர்மன் வீர பாண்டியன் - 2, கி. பி. 1266)

இவ் ஊரில் நாயனாற்குப் பங்கு இரண்டும், உகந்தருளப் பண்ணுகிற பெருமாளுக்கு பங்கு இரண்டும் ... இறையிலியாகவும்... (சம்புவராயன்)

...முத்தமிழ் மாலை முழுவதும் உணர்ந்த சித்திர மேழிப் பெரியநாட்டோம் வைத்துக்குடுத்த பரிசாவது -- ... எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண் பூமிச் சித்திர மேழி விண்ணகரான
திருவிடைகழி நின்றருளின பெருமாள் கோயில் அனாதியாக மேழித் திருத்தோரணமும் ஸ்ரீ பூமிதேவியும் ப்ரதிஷ்டை பண்ணி... (சித்திர மேழிப் பெரிய நாட்டவர், தென் ஆர்க்காடு ஜில்லா,
திருக்கோவலூரில் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் உள்ளது.)

இப்படிக்கு சொக்க ஞானசம்பந்தன் பெருமாள் எழுத்து (ஸுல்தான் ஆட்சிக்காலம். திருச்சிராப்பள்ளி ஜில்லா, திருமெய்யம் தாலுகா, ராங்கியம் பூமீச்வரர் கோயிலில் உள்ளது.)

முன்னாள் பெருமாள். எம்மண்டலமும் கொண்ட பெருமாள். சுந்தர பாண்டிய தேவர் நாளில்... (இராஜநாராயண சம்புவராயர், கி. பி. 1342)

...பணிமாருமிடத்து பெருமாளுக்கு முதலியார்க்கும் பதியிலார் முன்பும் தேவரடியார் இவர்கள் பின்புமாக பணிமாரக் கடவார்களாகவும்... ... ... (இராஜநாராயண சம்புவராயர், கி. பி. 1342)

...உடையார் விக்ரமபாண்டீச்வரமுடைய நாயனார் தேவதானமும் நயினார் திருவிருந்த பெருமாள் திருவிடையாட்டமும், ஸ்ரீக்ருஷ்ணன் திருவிடையாட்டமும்...முகந்தானத்து நாராயண
ஸ்ரீபாதங்கள் மடப்புறமும்... இராசகுலரா ... காலுக்கு நயினார் திருவிருந்த பெருமாள் திருவிடையாட்டமான ஆகவராம...துக்கும்...(அரிகேஸரி பராக்கிரம பாண்டியன், கி. பி. 1452)

பெருமாள் அரிகேஸரி தேவர் என்று திருநாமம் உடைய பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டிய தேவர்... எங்கள் கர்த்தர் பெருமாள் அரிகேஸரி தேவர் என்று திருநாமமுடைய பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்ட்ய தேவர் ...(அரிகேஸரி பராக்கிரம பாண்டியன், 1462)

பெருமாள் சீபத்மனாப பெருமாளுக்கு நாம் கல்ப்பித்த சங்கர நாராயண மார்த்தாண்டன் பூசை னடக்கும் சீபத்மநாபன் திருமடத்தில் பூசைக்கும் நமக்காரம் உள்பட்ட வகைக்கும்...(முதலியார் ஓலைகள், கி. பி. 1467)

அறந்தாங்கி அரசு அச்சமரியாத பெருமாள். அலவிலஞ்சாத பெருமாள், ... ஆட்டுக்கு ஆனை வழங்கும் பெருமாள், ஏழுநாளையில் ஈழந்திறை கொண்ட பெருமாள்,கோன் பாட ...யாத
பெருமாள், ... ஏகப் பெருமாள் தொண்டைமானார் புத்திரன் ...(கிருஷ்ணதேவ மஹாராயர், கி. பி. 1518)

+++++++++++++++++++++++++++++++++++

இனி நாம் கண்ட சான்றுகளுக்கு வருவோம். மேலே கொடுத்த சான்றுகளுக்கும் முற்காலத்தில் ஒரு சான்றைத் திருப்பதி-திருமலையிற் காணலாம். இதைத் திருமலைக் கோயிலில் முதற்சுற்றாலையின் வடக்குச் சுவரில் பல்லவ அரசன் பார்த்திபேந்திர பல்லவன் காலத்துக் கல்வெட்டிற் பார்க்கலாம். இந்தக் கல்வெட்டின் காலம். கி.பி.966 ஆகும். கல்கியின் ”பொன்னியின் செல்வனில்” வல்லவரையன் வந்தியத்தேவனோடும், கந்தமாறனோடும் சேர்ந்து சோழ இளவரசன் ஆதித்திய கரிகாலனுக்குத் தோழனாய் வரும் பார்த்திபேந்திர பல்லவன் தான் இவன். சுந்தரசோழன் காலத்தில் சோழருக்கு அடங்கிய அரசப் பொறுப்புக் கொண்ட இவனுக்கும் கீழ்ப்பட்ட சத்திவிடங்கக் காடவராயன் என்பவன் மனைவியாகிய சாமவை என்னும் பெருந்தேவி மூலவருக்குச் சில திருவாபரணங்களும், வெள்ளியால் ஊருலவர் திருமேனியும் படைத்து ஊருலவருக்கு மணவாளப் பெருமாள் என்றும் பெயரிட்டு திருப்பணி செய்திருக்கிறாள். (காலப்போக்கில் இப்பொழுது திருமலையில் 4 ஊருலவத் திருமேனிகள் உண்டு.) கிரந்தமும் தமிழும் கலந்த அந்தக் கல்வெட்டில் இருந்து கூடியமட்டும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். [இது திருமலை-திருப்பதித் தேவத்தானம் 1998 இல் வெளியிட்ட “Early Inscriptions" என்ற நூலில் 13-14 ஆம் பக்கங்களில் இருக்கிறது.]
------------------------------------
1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பாத்ரமஹேந்த்ரபன்மருக்கு யாண்டு 14 வது சத்திவிடங்கனாகிய ஸ்ரீகாடபட்டிகள் தேவியார் பல்லவப்பேற்க்கடையார் மகள் சாமவையாகிய காடவன் பெருந்தேவியேன்
ஸ்ரீவேங்கடத்து எழுந்தருளி நின்ற பெருமானடிகளுக்கு கர்ம்மார்ச்சனை கொண்டருளி திருவி(ள்)ளங் கோயிலில் எழுந்தருளுவித்த வெள்ளித் திருமேனியின் திருமுடி-

2. யில[ழுத்தின] வயிரம் 23 ம் பருமுத்து 16 நாயகமான மாணிக்கம் 2 ம் தடவிக் கட்டின மாணிக்கம் 3ம் ஆக மாணிக்கம் 5 னால் திருமுடி ஒன்றும் திருக்காதில் பொன்னின் மகரம் இ[ர]ண்டும் பவழத்தின் கோப்பு ஒன்றும் திருக்கழுத்தின் மாலையிலேறின வயிரம் 14 ம் மாணிக்கம் 3 ம் பருமுத்து 11ம் நேர்முத்து பல[வும்] இட்டுக் கட்டின மாலை [4]ம் பொன்னின்
உதரபெந்த[ன]ம் 1 ம் திருவரைப்பட்டிகை 1 க்கு ஈடுக்கட்டின மாணிக்கம் 4 னால் பட்டிகை 1 ம் பாகுவலையம் 2 க்கு தடவிக் கட்டின மாணிக்-

3. கம் 2 ம் தடவிக் கட்டின மாணிக்கம் 2 கட்டின திருச்சந்தம் 4 ம் திருக்கழுத்தின் வளையில் 4 ம் திருக்காலுக்கழுத்தின காறை 2 ம் இடையிட்ட பொன்னின் மணியும் பவழமும் முத்தும்
ஆக உரு 52 பாதசாயலம் 2 ம் வெள்ளிப்ரபையில் ஏறின நாயகமான மாணீக்கம் [1] இத்தனை ஆபரணங்களும் இட்டு செய்த பொன் 47 கழஞ்சும் இத்தனையும் கொண்டு அபிஷேகமும்
செய்வித்து எழுந்தருளுவித்த மணவாளப்பெருமாளுக்கு ஸ்ரீவேங்கட கோட்டத்து திருக்குடவூர்நாட்டு திருச்சுகனூர் சபையார் பக்கலும் மடமுடை-

4. ய இலக்ஷுமணநம்பி பக்கலும் பொன்குடுத்[து] விலை கொண்டு திருவிளங்கோயில் பெருமாளுக்கும் பொன் கொடுத்து இறை இழித்திக்கொண்ட நிலமும் சபையார் பக்கல் கொண்ட
நிலமும் நந்தி எரிப்பட்டியும் மடுப்பூட்டையும் இலக்ஷுமணநம்பி அடைகொண்ட நிலமும் மதுசூதன் ஆவியரையும் புருஷோத்தமன் பட்டியும் ஆக மூன்று பட்டி நிலமும் கடிகைக் கோலால்
அளந்து பதினறுசாண்கோலால் மூவாயிரம் குழி விலை கொண்டு சபையாற்கும் தேவ[ற்]கும் விலை பொன் குடுத்து இறை இழித்[தி] மணவாளப் பெருமாளுக்கு நிமந்த-

5. த்துக்கு வைத்தபடியாவது நிமந்தம் நானாழி அரிசி திருவமுதும் திருனந்தாவிளக்கு ஒன்றும் இரண்டு அயநசங்க்ராந்தியும் இரண்டு விஷுசங்க்ராந்தியும் திருமஞ்சனம் புகுவிப்பதற்கும் புரட்டாதித் திருநாள் எழுந்தருளிப் பொதுகைக்கு [விழா]வெழுந்தருளுமன்றுமதன் முன்பும் இரண்டுநாள் திருவிழா எழுந்தருளுவிப்பதா[க]வும் சித்திரை முதலாக திருமுளையட்டி
ஒன்பதுநாள் திருவிழாவெழுந்தருளிவிக்கவும் இத்தனையுஞ் செய்விப்பார் திருவேங்கடத்து மாடாபத்தியஞ் செய்வாரேயாகவும் இந்நிலம் இறைகாத்து விட சபையார் இரக்ஷிப்பாராகவும்
இப்பரிசு சந்த்ராதித்தவரை நிற்பதாக

6. செய்தேன் சத்திவிடங்கனாகிய காடவன் பெருந்தேவியார் பல்லவப்பேற்க்கடையார் மகள் சாமவையாகிய காடவன் பெருந்தேவியேன் இத்தன்மம் இரக்ஷிப்பார் ஸ்ரீபாதம் என் தலைமேலது ஸ்ரீவைஷ்ணவர்கள் இரக்ஷை [.] இவை சாத்தந்தை எழுத்து.
------------------------------------

இதே போல சென்னையிலிருந்து மாமல்லபுரம் போகும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் இருக்கும் திருவிடவெந்தை வராகப் பெருமாள் கோயிற் கருவறைடின் வடக்கு அடித்தானத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டும் அங்கிருக்கும் மணவாளப் பெருமாள் பற்றிச் சொல்கிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 979. [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி III பகுதி III இல் 125 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரிபன்மர்க்கு யாண்டு ஆறாவது ஆமூர் கோட்டத்துப்
2. படுவூர் நாட்டு திருவிடவந்தை ஊரோங் கையெழுத்து. சோணாட்டு
3. வடகரை இந்நம்பர்கி[ழா]ந் நக்கன் ஏநாதி கையா[ல் யா]ங்கள் கொ[ண்டுகடவ] பொ
4. ந் முப்பதின் கழஞ்சு இப்பொந் கொண்டுகடவோம் இப்பொன் முப்பதின் கழஞ்சு பொந்நுக்கு இ(வ்)வுர்-
5. ருடைய மணவாளப் பெருமாளுக்கு நந்தாவிளக்கு ஒன்றிநுக்கு நிச்சம் உழக்கெண்ணைப்படி தொண்ணூ-
6. ற்று நாழி எண்ணை அட்டுவோமாகவும் ஒட்டிக்குடுத்து பொந் கொண்ட்டோ-
7. ம் இப்பொந்நால் எண்ணை சந்த்ராதித்தவர்க் கட்டுவோமாகவும் பொன் கு-
8. டுத்து பொலியூட்டு சொல்லப்பெறாதோமாகவும் ஒட்டிக்குடுத்தோ[ம்] ]ஊ]-
9. ரோம். இதற்றிறம்பில் உண்டிகையும் பட்டிகையும் காட்டி தந்மாஸனத்திலே நிச்-
10. சம் நாலேகாற்காணம் படுவோமாகவும் அ[ன்]றாள் கோவுக்கு நித்தம் மஞ்சாடி
11. பொன் மந்றுபாடு இறுப்போமாகவு[ம்] இத்தண்டமு[ம்] மன்றுபாடும் இறுத்-
12. து இவ்வெண்ணை முட்டாமைத் திருவுண்ணாழிகை வாரியர் வசமே எரி-
13. க்க அட்டுவோமாக இட்டுக்குடுத்தோ[ம்] [ஊ]ரோம்.

இதே திருவிடவெந்தைக் கோயிலில் கி.பி.960 ஐச் சேர்ந்த பார்த்திபேந்திர பல்லவனின் கல்வெட்டும் இருக்கிறது. அதிலும் மணவாளப் பெருமாள் பற்றிய குறிப்பு வருகிறது. [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி III பகுதி III இல் 186 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

1. ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியநைத் தலைகொண்ட கோவிராஜ மாராயர்க்கு யாண்டு எட்டாவது ஆமூர்க் கோட்டத்துப் படுவூர் நாட்[டுத் தேவதாநத் தி]ரு-
2. விடவந்தை ஸபையோமும் ஊரோமும் கைய்யெழுத்து. தலைசயநப் புறமாகிய தைய்யூர் வைய்யொடுகி[ழா]ந் வைகுனடிகளும் இவந் தம்பி தாழி எருமாநும்
3. இவ்விருவரும் திருவிடவந்தை ஸ்ரீவராகஸ்[வாமி]களுக்கு அட்டுவித்த திருமேநி மணவா[ள]ப்பெருமாளுக்கு ஈவிருவருங் குடுத்த பொந்.............[சு இப்] பொந்(ப்) ப[தி][னை]ங்க-
4. ழஞ்சும் (இப்பொன்) கொண்டு கட[வோம்] இப்பொந்னுக்குப் பலிசை அட்ட இதற்க்கு சந்த்ராதித்தவற் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்ட ஆண்டுதொறும் அளக்க-
5. க்க்[ட]வ நெல்லு ஐம்பத்தறுநாடி கு[ட்டை] நெல்லும் பங்குநி சித்திரையுமகப்பட ஈரமும் பதரும் நீக்கி துய்வாக்கி எண்ணாழிக் காலா[ல்] அட்டுவோ[ம்]மா-
6. நோம் [அ]ட்டாத ஆண்டுதொறும் ஐம்பத்தறு நாடி குட்டை நெல்லுங் கைக்கொன்உ அளந்து குடுக்கக் கடவோமாநோம் இதற்றிறம்பில் த[ன்மா]ஸநமுதலாக-
7. த் தாந்வேண்டு கோவு[க்]கு நி[ச]தி [அ]ரைக்கால் பொந் மந்றப்பெறூவதாகவும் இத்தண்டப்பட்டும் இந்னெல்லு வழுவாமே அளந்து குடுப்பதா-
8. கவூம் இதற்க்கஹிதஞ் சொன்னார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார் கொள்ளவும் இத்தநம் ரக்ஷி-
9. ப்பார் ஸ்ரீபாதம் எந் தலைமேலநவாக இப்பரிசு ஒட்டிக்குடுத்தோம் முற்சொல்லப்பட்ட திருவிடவந்தை ஸபையோமும் ஊரோமும் ஆக இரண்டு திறத்தோம்.

மேலே சொன்ன மூன்று கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.960க்கு வந்துவிட்டோம். இனி இதற்கும் முன்னால் போகமுடிகிறது. அது முதற் பராந்தகன் ஆதித்த சோழன் காலத்தது. அது திருக்கோவலூர் வட்டத்தைச் சேர்ந்த கீழூர் வீரட்டனேசுவரர் திருக்கோயிலில் உள்ள சுற்றாலைப் பாறையில் இருக்கும் கல்வெட்டாகும். அது சற்று சிதைந்து காணப்படுகிறது. [எனவே கல்வெட்டை இங்கு நான் பெயர்த்து எழுதவில்லை.] இதில் 7வது வரியில் “பெருமாளுக்கு” என்ற சொல் வருகிறது. அதை இறைவன் திருமேனியைக் குறித்ததா, மாந்தரைக் குறித்ததா என்று சொல்லமுடியவில்லை. முதலாம் ஆதித்த சோழனின் காலம் கி.பி.871-907 ஆகும். இந்தக் கல்வெட்டு அவன் ஆட்சியின் 13ஆம் ஆண்டில் வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது கல்வெட்டின் காலம் கி.பி. 884 ஆகும். [இது தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி IV இல் 927 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.]

ஆக ஒன்பதாம் நூற்றாண்டு வரை வந்துவிட்டோம். இதற்கு முன்னால் விசயாலயன் காலமும், பல்லவர் காலமும் தான் ஆய்வு செய்யவேண்டும். என்னிடம் இந்தக் கல்வெட்டு விவரங்கள் இல்லை. இவை இருப்பவர் தேடிப் பார்க்கலாம்.

இனிப் பெருமாள் என்ற சொல்லிற்கு வருவோம். பல்லவர் காலத்தில் இருந்தே (களப்பாளர் காலம் ஆயவேண்டும்.) இறைவன்/இறைவி, அரசர், அரச குடும்பத்தார், அரசகுடும்பத்திற் பிறந்து அரசு பெறாது வாழும் பெரியோர் ஆகியோர் பெருமானடிகள் என்று தான் அழைக்கப்பட்டனர். அது நிலவுடைமைக் குமுகாய வழக்கம். எப்படி நம்பூதிரிகளை அவர்கள் இவர்கள் என்று அழைக்கக் கூடாதோ, ”திருமேனி” “அத்தேகம்” என்று மிகப் பணிந்து அழைக்க வேண்டுமோ அதுபோல இந்தத் தலைவர்கள் பெருமான் அடிகள் என்று அழைக்கப் பட்டார்கள். அதாவது ”ஸ்ரீபாதம்” என்று வடமொழியில் அழைக்கும் முறை. அந்தப் பாதங்களை வணங்குதல் முறை என்றே உணரப்பட்டது. சரணாகுதி மரபும் இந்த நிலவுடைமைக் குமுகாயத்தில் தான் விண்ணவநெறியில் எழுந்தது. சரணாகுவதற்கு பாதம்/ அடிகள் முகன்மையானதல்லவா? இந்த அடிகள் என்ற பயன்பாடு சிலம்பிலேயே தொடங்கிவிட்டது. ஆணாதிக்கக் குமுகாயத்தில் வளர்ந்த கோவலனை மதுரையில் மாதரி வீட்டில் ”அடிகள்” என்றுதான் கண்ணகி அழைப்பாள். இளங்கோ அடிகள் என்பதை வைத்து அவர் துறவி என்று சொல்வதைக் காட்டிலும் பெருந்தனக்காரர்/அரச குடும்பத்தார் என்பதே பெரிதாக இருந்திருக்கலாம்.

இந்தப் பெருமானடிகளின் சுருக்கமாய்த்தான் பெருமான் என்றசொல் எழுந்தது. ஆலமர் செல்வனைச் சிவபெருமான் என்றழைப்பது இப்படித்தான். (இன்னொரு வகையில் இறைவனைப் பெருமானர் (=பார்ப்பனர்) கூட்டத்தோடு ஒன்றுபடுத்தி அழைக்கும் போக்கும் உள்ளமைந்து இருந்தது. பல்லவர், பேரசுச் சோழர் காலத்து நிலவுடைமைக் குமுகாயத்தில் பெருமானர் பெரும்பங்கு கொண்டவர். ஊர் ஊராகச் சதுர்வேதி மங்கலங்கள் கொடுக்கப்பட்டன. இறைவன் பெயர் பெருமான் ஆகியது வியப்பில்லை.

அடுத்து பெருமாள் என்னும் சொல்லிற்கு வருவோம். இதுவும் பெருமானடிகள் என்பதன் இன்னொரு வகைச் சுருக்கம் தான். முதலில் ஊருலவத் திருமேனிகளுக்கு ஏற்பட்டுப் பின்னால் மூலவருக்கும், மாந்தருக்கும் பயன்பட்டது போலும். [மணவாளப் பெருமாளுக்கும் திருமலை சீனிவாசப் பெருமாளுக்கும் கல்யாண வேங்கடேசருக்கும், உறையூர் அழகிய மணவாளனுக்கும், திருவரங்க ஊருலவரின் அழகிய மணவாளன் என்ற பெயருக்கும், திருவிடவந்தை நித்ய கல்யாணப் பெருமாளுக்கும் இருக்கக் கூடிய தொடர்பை இன்னொரு கட்டுரையிற் பேசுவோம். இங்கு பேசினால் பொருள் விலகிப் போகும்.] அடிகள் எப்படிப் ஆட்சியைக் குறித்ததோ அதே போல ஆள், ஆளி, ஆளன், ஆள்வான், ஆண்டவன் போன்றவை ஆட்சி செய்யும் தலைவனைக் (ruler) குறித்தன. ஆளன்>ஆடன்>ஆதன் என்று வளர்ச்சி பெற்றதையும் பாவாணர் வழி சொற்பிறப்பியலால் உணரலாம். ஆள், ஆளி, ஆளன், ஆடன், ஆடவர் போன்ற சொற்களை உரையாசிரியர் பல இடங்களில் வெறும் ஆண்மக்கள் என்றே பொருள் கொண்டிருக்கின்றனர். அதைக் காட்டிலும் சில இடங்களில் ஆட்சி செய்பவர் என்று பொருள் கொள்ளுவது இன்னுஞ் சிறப்பான பொருளைத் தரும். காட்டாக புறம் 187 ஔவையார் பாடிய

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

என்ற பாடலில் ஆடவர் என்ற சொல்லிற்கு ruler என்னும் பொருள் கொண்டால் ஆழமான பொருள் கிடைக்கும். அதே போல பெருமாள் என்ற சொல்லில் ஆள் என்பதற்கு மாந்தன், ஆண் என்ற பொருள் கொள்ளாது பெரும் ஆள் = பெருமாள் (big ruler) என்ற பொருள் கொண்டால் நம்மை ஆளும் தலைவனைக்/இறைவனைக் குறித்தது புரியும். இது விதப்பாக விண்ணவத்திலும், பொதுவாக மற்ற இடங்களிலும் இறைவர், மாந்தர் ஆகியோரைக் குறித்திருக்கிறது. பெருமாள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்புக் குறைவு. அது நிலவுடைமைக் குமுகாயம் கொஞ்சங் கொஞ்சமாய்த் தோன்றிக் கொண்டிருந்த காலம். வளர்ந்து ஓங்கி நின்ற காலமல்ல. அது ஓங்கி உயர்ந்தது பேரரசுச் சோழர் காலத்திற்றான் ஆகும். இருந்தாலும் பல்லவர், களப்பாளர் காலத்து ஆவணங்களை ஆழ ஆய்வது சரியான விளக்கத்தை அளிக்கும்.

பெருமானடிகள் என்ற சொல் முற்றிலும் மறைந்த காலம் எப்பொழுது என்றும் நான் ஆய்ந்து பார்க்கவில்லை. யாராவது செய்து பார்ப்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும்.

ஆள்வான் என்ற சொல்லின் நேர் எதிரானது ஆழ்வான் என்ற சொல்லாகும். தலைவன் ஆள்வான், அடிமை ஆழ்வான். இதையும் விளக்கத் தொடங்கினால் விண்ணவத்தின் சரணாகுதிக் கொள்கை முற்றிலும் புரியும். சரணாகுதல் குரங்கு முறையா, பூனை முறையா என்பதில் தான் வேறுபாடு கொள்ளமுடியும். [தென்கலை, வடகலை வேறுபாடு மெய்ப்பொருள் அடிப்படையில் அதில் மட்டுமே தென்படும்.]

காலம் மாறிவிட்டது. குமுகாயங்களும் மாறிவிட்டன. நிலவுடைமை ஒருபக்கம் அழிந்து கொண்டிருக்க முதலியம் வந்து சேர்ந்து விட்டது. இந்த மாற்றங்களையும் மீறி பெருமாள், ஆண்டவன் போன்ற சொற்கள் இப்பொழுது புழங்குகின்றன. புதுப் பொருட்பாடு பெருகின்றது. எந்த மாந்தனையும் பெருமாள் என்று மிகு மரியாதை வைத்து அழைப்பதாகத் தெரியவில்லை. [பெருமாள் என்ற இயற்பெயர் சில மாந்தருக்கு இருக்கலாம்.] இறைவனுக்கு மட்டுமே, கூறிப்பாக விண்ணவனுக்கு மட்டுமே, இந்தக் காலத்திற் பெருமாள் என்ற சொல் பயில்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 26, 2010

காலும் காற்று

அண்மையில் வெள்ளிவீதியார் எழுதிய, பாலைத்திணையைச் சேர்ந்த, குறுந்தொகை 130 ஆம் பாட்டைப் பற்றிய, உரையாட்டொன்று தமிழ்மன்றம் மடற்குழுவில் எழுந்தது. அதில் வரும் ”கால்” என்ற சொல்லுக்கு ”உடலுறுப்பு” என்றே பல்வேறு உரையாசிரியர்கள் பொருள் கொண்டிருக்க, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் செ.வை.சண்முகம் மட்டும் ”அதைக் காற்று என்று கொண்டது சரியா?” என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இந்தப் பாட்டில் கால் என்ற சொல்லிற்குக் காற்று என்று பொருள் கொள்ளுவதே சரியென்று எனக்கும் படுகிறது.

கால்தல் என்பதற்கு இயங்குதல் என்றே சொல்லாய்வர் கு.அரசேந்திரன் பொருள் சொல்லுவார். அப்படிக் கொள்ளுவது பொருத்தமாகவே எனக்குத் தென்படுகிறது. நிலம், நீர், காற்று, தீ, வான் என்னும் ஐம்பூதங்களைச் சொல்லும் போது இயங்குதல் இயல்பே காற்றிற்குக் கற்பிக்கப் படும். இற்றை அறிவியலின் படியும், இயங்காக் காற்று, அசையா வளி என்பது முற்று முழுதான சுழிய வெம்மையிற் (absolute zero temperature) தவிர்த்து வேறெங்கும் காணமுடியாது. ”காலும் காற்று” (கால்தல் = இயங்குதல்; இயங்கும் காற்று) பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்து பாட்டின் பின்புலத்தில் இழையும் அக்கால மெய்யியற் கற்பிதம் பற்றியும் இங்கு பேச விழைகிறேன்.

கல் என்னும் வேருக்குக் கருமை, கூட்டம், செலவு, கூர்மை, வெப்பம், துளை ஆகிய ஆறு அடிப்படையான பொருட்பாடுகளை முனைவர் கு.அரசேந்திரன் தன்னுடைய “உலகம் தழுவிய தமிழின் வேர் - கல்” என்ற பொத்தகத் தொகுதியிற் பேசுவார். அவற்றிற் செலவுப் பொருளை (=இயக்கப் பொருளை) மட்டுமே இங்கு கோடி காட்டுகிறேன். (மல்>மால், பொல்>போல் என்பது போல் கல்>கால் என்ற விரிவு அமையும்.) கூட்டக் கருத்து மிகுதிக் கருத்தையும், மிகுதிக் கருத்து செலவுக் கருத்தையும் தோற்றுவிக்கிறது என்பதை அழகாக பல்வேறு சொற்களின் மூலம் அவர் பொத்தகத்தில் விளக்குவார். கால்தல் என்ற சொல்லிற்குத் தோன்றுதல், வெளிவருதல், பாய்தல், ஓடுதல், பரவுதல், வீசுதல் என்ற பொருட்பாடுகள் உண்டு.

இயற்கையிற் பல இடங்களில் பொதுள் ஆற்றலே (potential energy) துனைவாற்றலாக மாறுகிறது. (dynamic energy. ”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியல் 798 ஆம் நூற்பா.) பொதுளாற்றல் என்பது கூட்டப் பொருளை ஒட்டியது. ஓர் அணையில் நீர்ச் சேகரிப்புக் கூடக் கூட நீர் மட்டம் உயர்ந்து, மதகைத் திறந்துவிடும் போது நீர் வெளிவரும் கதி கூடும். (கூட்டம் -> உயரம் -> பொதுளாற்றல் கூடுதல்.) குறிப்பிட்ட இடத்துள் மந்தைகளை மேலும் அடைக்க, அவை முட்டி மோதிக்கொண்டு அடைப்பைத் திறந்தவுடன் வேகமாய் வெளிவரும். வெள்ளை மேகத்துள் நீராவி கூடக் கூடக் கருமை நிறம் கூடி, ஒரு குறிப்பிட்ட அளவில் நீர்ச்செறிவு (water concentration) தெவிட்டிப் போய் (gets saturated) நீர்த்துளிகளை வெளியிட்டு மழையாய்க் கொட்டும். மழை இயக்கமும் நீராவிக் கூட்டமும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஏதொன்றும் கூடினால் தான் கூட்டத்துள் அடங்கிய உறுப்புகளின் முரண்பாட்டால் நுண்ணியக்கம் (micromotion) ஒருப்பட்டு, பேரியக்கம் (macro motion) வெளிப்படும் என்பதை இயற்கையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் உணரலாம். இவ்வியற்கை மாற்றத்தை தொடக்க கால மாந்தனும் பல்வேறு பட்டறிவுகளால் உணர்ந்திருந்தான்.

இது தவிர கூட்டம் கூடும்போது கூட்டவுறுப்புக்கள் சும்மா இருக்க முடிவதில்லை. அவை இயங்கிக் கொண்டே இருக்கும் தேவையேற்படுகிறது. மேய்ச்சல் நிலத்தில் இரைதேடும் விலங்குகள், தம் அருகேயிருக்கும் தீவனம் கரைந்த பிறகு, மேய்வதன் தொடர்பாய் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இயக்கம் இல்லாது அவை வாழ்வதில்லை. மேய்ச்சலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நடை காலு நடை>கால்நடை என்றாகும். ஒருபக்கம் மேய்ச்சல் இன்னொரு பக்கம் காலுதல். இரு தொழில்களும் ஒன்றோடொன்று பிணைந்தவை. கால்தல் இல்லா மேய்ச்சல் கற்பனை செய்ய முடியாதவொன்று.

எப்படி மாந்தவுடம்பிற் கொள்ளும்/கொய்யும் உறுப்பு (இன்னொரு விதமாய்ச் சொன்னால் கவ்வும் உறுப்பு) ”கொள்>கொய்>கை”யாயிற்றோ (கிணற்றின் மேல் இருக்கும் உருளையைக் கொண்டிருக்கும் கை = கொண்டி என்றே சொல்லப்படும். கொள்ளுதல் = to have) அது போல காலுதற்கு உதவும் உறுப்பு கால் ஆயிற்று. வண்டிகளில் இயங்கும் சக்கரமும் கூட தொழிலொப்புமை கருதிக் கால் என்றே தமிழிற் சொல்லப் படும். காலும் தடம் காற்றடம் ஆயிற்று. காலுகின்ற (=ஓடுகின்ற) நீரை உடைய இயற்கை வாய் கால்வாய் ஆயிற்று. அதே ஓட்டத்தைச் செயற்கையாய் அமைக்கும் போது அது வாய்க்கால் ஆயிற்று.

காலிக் கொண்டே இருக்கும் காரணத்தால், இயங்கும் வளியும் கால்+து = காற்று எனப்பட்டது. காலுகின்ற காற்றால் பேரோசைகள் ஏற்பட்டன. காற்றுவளியின் கதிக்குத் (velocity) தக்க பேர்விசைகள் உருவாகின. இதே காலை gale, gal, என்று மேலை இரோப்பிய மொழிகள் சொல்லும். வழக்குத் தமிழில் இன்று சூறைக் காற்று, சூறாவளி என்று சொல்லுவோம். சூறை என்பது மிகுபடச் சொல்லும் ஒரு முன்னொட்டு..

நாற்பரிமானக் காலவெளியில் (four dimention space-time) மூன்று பரிமானங்கள் இடத்தைக் குறிக்க, நாலாவது பரிமானம் காலத்தைக் குறிக்கும். இந்தப் பரிமானத்திற்கு மட்டும் தொடக்கம் என்று நிலையை இற்றை அறிவியல் காட்டும். பருவம் என்பதைக் குறிக்கும் இந்தக் காலமும் கூட கால்தல் பொருளில் உருவான சொல் தான். காலப் பெருவெளியைக் குறிக்கத் தொல்காப்பியத்தில் இரண்டு நூற்பாக்கள் உண்டு. ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் அந்த நூற்பாக்களின் வரையறுப்பு நம்மை வியக்கவைக்கும்.

”ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப”

என்று “கருமம் நிகழ்வது ஒரு களத்தில் (you need a place for an occurrence to happen).” என்று தெளிவாக வரையறுக்கும். [தொல்.செய்யுளியல் 1457 ஆம் நூற்பா.] இடமும் களமும் ஒன்றுதானே? அடுத்த நூற்பாவில் (செய்யுளியல் 1458)

“இறப்பே நிகழ்வே எதிரது என்னுந்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளபே
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்”

காலம் என்ற கருத்தீட்டை வரையறுப்பார். (occurrence of an event is proscribed by time.) இங்கு கூறிய இரண்டு நூற்பாவும் இற்றைப் பூதியலில் (physics), குறிப்பாகக் காயவியலில் (cosmology) கால-வெளி (space - time) என்று கூறும் கருத்தீட்டை விளக்குவதற்கு மிகவும் பயன்படக் கூடியவையாகும். இயக்கமின்றேல் காலத்தை யாராலும் உணரமுடியாது. ஓர் இயக்கத்தை இன்னோர் இயக்கத்தின் மூலம்தான் ஒப்பிட்டு ”இது விரைவு, இது சுணக்கம்” என்று சொல்ல முடியும். அடிப்படையில் விரைவான துடிப்பைக் கால அளவாய்க் கொண்டு, அதன் மடங்காகவே மற்ற இயக்கங்களை (இது நடந்து முடிப்பதற்குள் இத்தனை அடிப்படைத் துடிப்புகள் நடந்துவிட்டன) இற்றை அறிவியல் காலத்தை அளக்கிறது. நுண்ணிதாகச் சிந்தித்தால் கால்தல் என்ற இயக்க வினை காலம் என்னும் சொல்லுக்குள் ஆழ்ந்து புதைந்திருப்பதை உணரமுடியும். காலம், காலை, கால் என்ற சொற்கள் எல்லாமே time என்ற கருத்தீட்டைத் தமிழில் உணர்த்தி நிற்கின்றன.

இனிக் காற்று என்ற பொருளை மட்டும் ஆழ்ந்து பார்ப்போம். நீரைக் கடப்பதற்கு வெறும் துடுப்பு உதவியையும் நீரோட்டத்தையும் மட்டுமே மாந்தன் பயன்படுத்துவதில்லை. அவையெல்லாம் குறைந்த தொலைவைக் கடக்கவே பயன்படுகின்றன. நீண்ட தொலைவைக் கடப்பதற்குப் படகிற் பாய்மரங்கள் நட்டு அவற்றில் பாய்களைக் கட்டிக் காற்றுவிசை மூலம் கலஞ்செலுத்தும் நுட்பம் எப்பொழுது கண்டுணரப் பட்டது என்பது ஓர் ஆழ்ந்த ஆய்வாகும். அந்த நுட்பியல் சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் அறிந்திருக்க வேண்டும். இப்பாட்டில் அந்த நுட்பம் இரண்டாம் வரியால் உய்த்துணரப் படுகிறது. முந்நீரில் யாரும் கால் என்று உடலுறுப்புக் கொண்டு நடப்பதில்லை. ஒருவேளை மீமாந்தத் தந்திரம் அறிந்தோர் அதைச் செய்யமுடியலாம். பொதுவான மாந்தர் கால் என்னும் காற்றைக் கொண்டு கலஞ் செலுத்தியே முற்காலத்திற் கடந்திருக்கிறோம். முந்நீரைக் கடத்தல் என்றாலே இந்த நுட்பம் பயன்பட்டதாகத்தான் அன்று பொருள். இற்றை நாளில் கால்நுட்பம் இல்லாது பொறி நுட்பம் கொண்டு, நீருக்குள் ஓட்டத்தைக் கிளப்பிக் கலத்தை முன்செலுத்த வைக்கும் நுட்பம் வந்துவிட்டது. அதனால் நாம் கால்நுட்பத்தின் நெளிவு சுளிவுகளை, அதன் வீச்சை உணராது போகிறோம். கால்நுட்பத்தின் வழியும், கடலில் இருக்கும் இயற்கை நீரோட்டத்தின் வழியும் உலகையே பழம் மாந்தன் வலம் வந்திருக்கிறான். அதை இற்றை நாளில் நடத்திக் காட்டி (demonstrate) பல முன்னோட்டாளர்களும் நம்மை உணரவைக்கிறார்கள்.

சரி, கால் என்ற சொல் இயக்கம் என்ற பொருளில் மட்டும் தான் வந்ததா? - என்றால் இல்லையென்று சொல்லவேண்டும். இதே வெள்ளி வீதியார் குறுந்தொகை 44 இல் உடலுறுப்பு என்ற பொருளில் கால் என்னும் சொல்லைப் பயன்படுத்துவார். அந்தப் பாட்டு செவிலித்தாய் பாடுவதாய் அமையும். தலைவனோடு, தலைவி உடன்போக்காய்ச் சென்று விட்டாள். இருவரும் எங்கு சென்றார்கள் என்று செவிலித் தாய்க்குத் தெரியவில்லை. வருவோர் போவோரிடம் கேட்டுப் கேட்டுப் பார்க்கிறாள். அலைந்து திரிகிறாள். கால்களின் இயக்கம் தொலைந்து மரத்துப் போகின்றன. (பரி = இயக்கம்) கண்கள் ஒளி குன்றி பூத்துப் போகின்றன. பெரிய இருள் வானில் தெரியும் மீன்களைக் காட்டிலும் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று; தன் மகளையும் அவள் கொழுநனையும் மட்டும் எங்கும் காணவில்லை. சோர்ந்து போகிறாள் செவிலித்தாய்:

காலே பரி தப்பினவே கண்ணே
நோக்கி நொக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே

ஆனால் குறுந்தொகை 130 ஆம் பாடலில் வரும் கால் உடலுறுப்பு என்ற பொருளில் வரவில்லை. செலவு/இயக்கம் என்ற பொருளிலேயே வந்திருக்கிறது. இதே போல இன்னும் இருபாடல்கள் அதே குறுந்தொகையில் கால் என்ற சொல்லாட்சியைச் செலவு/இயக்கம் என்ற பொருளிற் காட்டும்.

இன்றே சென்று வருதும் நாளைக்
குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்
கால் இயல் செலவின் மாலை எய்தி,
சில்நிரை வால்வளைக் குறுமகள்
பல்மாண் ஆகம் மணந்து உவக்குவமே

-குறுந்.189 மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

பரல் அவற் படுநீர் மாந்தித் துணையொடு
இரலை நல்மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அலவைக், கால் இயல்
கடுமாக் கடவுமதி பாக! நெடுநீர்ப்
பொருகயல் முரணிய உண்கண
தெரிதீம் கிளவி தெருமரல் உயவே

- குறுந்.250 நாமலார் மகன் இளங்கண்ணனார்

இனிப் பாட்டினுள் அடங்கியிருக்கும் மெய்யியற் கற்பிதம் பற்றிப் பார்ப்பொம். முதலிற் பாட்டின் சூழலைச் சற்று ஆழமாய்ப் பார்ப்போம். ”வணிகத்தின் மேற்சென்ற தலைவன் எங்கு போயிருக்கிறான்?” என்று தலைவிக்கும் தோழிக்கும் தெரியாத நிலையில், ”அவன் திரும்பி வாரானோ, என்னவாயிற்றோ?” என்று அலமருந்து, பிரிவாற்றாமை மேம்படத் தலைவி புலம்புகிறாள். அவள்துயரைப் பொறாத தோழி, ஆற்றுவிக்கும் முகமாய்,என்ற இப்பாட்டைச் சொல்லுகிறாள்:

நிலம் தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ நம் காதலோரே

”ஏனடி, கவலைப் படுகிறாய்? நம் காதலர் நம் நாட்டில் இல்லையென்றால், நாவலந் தீவினுள் வேறெதோவொரு நாட்டில், ஊரில், குடியில் தான் இருக்க வேண்டும். நாடு நாடாய், ஊரூராய், குடி குடியாய்த் தேடின் அவர் தென்படாமலா போவார்? காற்றுவழி செல்லும் பாய்மரக் கப்பலில் ஏறி விலகிக் கிடக்கும் இரு பெருங்கடலிலும் ஏதேனும் ஒரு தீவுக்கு அவர் சென்றவரில்லையே? வானுலகும் போயிருக்க மாட்டாரே?. புவிக்கடியில் உள்ள பா(ள்)தல உலகத்திற்கும் சென்றிருக்க மாட்டாரே?” என்று அன்றைக்கிருந்த இயல்பான மெய்யியற் புரிதலோடு (philosophical understanding) தோழி இயம்புகிறாள்.

[பாளப்பட்ட தலம் பா(ள்)தலம். பா(ள்)தலம்>பாதலம்>பாதளம்>பாதாளம் என்பது நல்ல தமிழ்ச்சொல் தான். இங்கே நிலம் தொட்டுப் புகுதல் என்பதால் பாதலம் குறிக்கப் படுகிறது. தொடுதல் = பள்ளுதல், பாளுதல், பறித்தல், தோண்டுதல். இது ஏதோ ஒரு வடமொழிச்சொல் என்று நம்மிற் பலரும் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் வடமொழியில் இதற்குச் சரியான வேரில்லை. இந்தச் சொல் முதன்முதலாய் மிகப் பிற்கால உவநிடதமான அருணேய உவநிடதத்திலும், மாபாரதத்திலும் தான் ஆளப்படுகிறதாம். அதோடு பாத = விழுதல் என்ற சொல்லே மூலமாக மோனியர் வில்லியம்சில் குறிக்கப் படுகிறது.

”நம் தலைவர் மூவேந்தர் அரசுகளைத் தவிர்த்து நாவலந்தீவினுள் தான் சென்றிருப்பார். எத்தனையோ வணிகக் குழுக்கள் இப்பாதைகளில் சென்று வருகின்றனவே? அக்குழுக்களின் மூலம் நம் காதலர் எங்கு போயிருக்கிறார் என்று உறுதியாக நாம் அடையாளம் காணலாம்” என்று அவள் காலத்துப் புரிதலை முன்வைத்துத் தோழி தலைவியை ஆற்றுப் படுத்துகிறாள். அப்படிச் சொல்லும்போது அந்தக் காலத் தமிழரின் உலகப் பார்வையும் (world view) நம்முன் அவிழ்ந்து விழுகிறது. பாட்டெழுந்த காலத்தையும் ஓரளவு நம்மால் ஊகிக்க முடிகிறது. அன்றைய மூவேந்தர் அரசுகளை விட்டு ஒருவன் வெளியே போவதாய் இருந்தால், அடுத்தடுத்த கடினப் பாங்குடன், நாவலந்தீவில் உள்ள மற்ற நாடுகள், கடற் பயணத்தின் வழி செல்லக் கூடிய தீவுகள், வானம், பாதலம் என்ற வரிசையிற் தான் பயணம் செய்ய முடியும். இப்படி அறுதியாக உரைப்பது ஒருவித மெய்யியற் பார்வையைச் சார்ந்தமட்டும்து. இந்தப் படிமானத்தைப் பாட்டின் முதல் நாலு வரிகள் கடினமான உகப்பில் (choice) இருந்து எளிதான உகப்பு வரை சொல்லுவதாய் தோழி அடுக்குகிறாள்.

இத்தகைய உலகப் பார்வை காட்டுவிலங்காண்டி காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் இல்லை. பாதலம் என்ற மெய்யியற் கட்டுமானம் சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் இருந்ததா என்று உறுதியாகச் சொல்ல நமக்கு ஆதாரங்கள் இதுவரை கிடையா. இருக்கு வேதத்தில் (கி.மு.1500) கூடப் பாதலம் என்று கருத்தியல் இருந்ததா (வான உலகம் என்ற கருத்தியல் அந்தக் காலத்தில் இருந்தது.) என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. (திரிபுரங்கள், மூவுலகங்கள் என்ற சிந்தனை இதைக் குறித்ததோ என்ற ஐயம் உண்டு.) வேத நெறியை மறுத்து எழுந்த சாருவாகம் / உலகாய்தம், தொடக்க காலச் சாங்கியம் போன்றவை (கி.மு.800-600) மூவுலகக் கருத்தியலை முற்றும் ஏற்காதவை கண்ணுக்குத் தெரியும் காட்சியுலகை மட்டுமே உண்மை என்று அவை விளம்பின. ஆனால் அதே காலத்திலும் அவற்றிற்குச் சற்று முன்னும் (கி.மு.800களில்) எழுந்த உவநிடதச் சிந்தனைகளிலும் கி.மு.600 களில் எழுந்த வேத மறுப்பு இயக்கங்களான சமண நெறிகளிலும் (ஆசீவகம், செயினம், புத்தம்) ”நாம் வாழும் நிலம், நமக்கு மேலே உள்ளதாகக் கொள்ளப்பட்ட வானுலகம், நமக்குக் கீழுள்ளதாகக் கொள்ளப் பட்ட பாதல உலகம்” என்ற மெய்யியற் கருத்தீடு தோன்றிவிட்டது. இந்தக் கருத்தீடு தோன்றியது தென்னகமா, வடபுலமா என்பது கேள்விக்குரியது.

பூருவ நுண்ணாய்ஞ்சையைப் (பூர்வ மீமாஞ்சையைப்) புறந்தள்ளி உயர் நுண்ணாய்ஞ்சையைத் (உத்திர மீமாஞ்சை) தன் கொள்கையாக வேதநெறியினர் கொண்டது கி.மு.800-600 காலமாகும், வேத மறுப்பாளர் வேத நெறியாளரோடு மூவுலக இருப்பில் ஒன்றுபட்டாலும் அவற்றின் ஆக்கத்தில் வேறுபட்டிருந்தார்கள். ”இந்த மூவுலகங்களையும் மாந்தனுக்கு மேம்பட்ட யாரோவொரு இறைவன் தான் படைத்தான்” என்பது உயர் நுண்ணாய்ஞ்சை நெறியின் துணிபு. “இம்மூவுலகங்களும் என்றும் இருந்தன/இருக்கின்றன/இருக்கும். இவற்றை யாரும் படைக்கவில்லை” என்பது சமண நெறிகளின் கூற்று. ஆக முதற் கணிப்பாக இந்தப் பாடல் கி.மு.600 க்கு அப்புறம் எழுந்தது என்று சொல்ல முடியும்.

இனி நாவலந்தீவில் இருந்த வணிகக் குழுக்கள் எளிதாகப் போய்வர உறுதுணையாக இருந்த உத்திர, தக்கணப் பாதைகள் பெரிதும் பயன்பட்டிருந்த காலம் நந்தர், மோரியர் காலமாகும். சங்கத் தமிழிலக்கியங்களிலும் வரலாற்றுக் கால முதல் நிகழ்வாகப் பேசப்பட்டது முதலாம் கரிகாலனின் படையெடுப்பே. அது கி.மு.462 க்கு அருகில் நடந்திருக்க வேண்டும் என்று “சிலம்பின் காலம்” என்ற என் கட்டுரைத் தொடரில் நிறுவியிருந்தேன். அதற்கு அப்புறந்தான் நந்தர் காலத்தில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே வணிக உறவு பெரிதும் செழித்தது. நம் இலக்கியங்கள் அதற்கு அப்புறமே வடபுலத்துச் செல்வ நிலை பற்றிப் பேசுகின்றன. சங்க இலக்கியத்திற் பாதிப் பாட்டுக்கள் பாலைத்திணைப் பாட்டுக்கள். அதிலும் பல பாட்டுக்கள் வடக்கே வணிகம் நோக்கிப் பிரிந்து போன பாட்டுடைத் தலைவர்கள் பற்றிப் பேசுகின்றன. இங்கு வெள்ளி வீதியாரின் தோழியும் அது பற்றிப் பேசுகிறாள். சங்க காலம் என்பது கி.மு.462க்கு அண்மையிற் தொடங்கி கி.பி.200 வரைக்கும் தொடர்ந்தது போலும். இந்த 650 ஆண்டு காலத்தில் எப்பொழுது இந்தப் பாடல் எழுந்தது என்று உறுதியாகச் சொல்ல இயலாது.அதற்கான தரவுகள் பாடலில் இல்லை. அதே பொழுது கிடத்திருக்கும் தரவுகள் மிக எளிதாக இந்த 650 ஆண்டு காலக் கட்டத்துள் பொருந்துகின்றன.

ஐம்பூதங்களை தம் உலகப் பார்வையுள் கொண்டுவருவது சங்கத் தமிழ் இலக்கியத்தில் பெரிதும் நடப்பதாகும். ஐம்பூதப் பார்வை ஒரு சாங்கியப் பார்வை. பின்னால் ஆசீவகத்திலும் அது பெரிதும் தழைத்தது இங்கும், நிலம், வானம், முந்நீர் என்பவை பேசப்படுகின்றன. இதே போன்ற பார்வை தேவகுலத்தார் பாடிய குறுந்தொகை 2 ஆம் பாட்டில் வரும்.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

நாடனுடைய நட்பு நிலத்தினும் பெரிது, வானிலும் உயர்ந்தது, மூந்நீரினும் ஆழமானது. சமண நெறிகளின் தாக்கம் தமிழகத்திற் பெரிதும் இருந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 05, 2010

மோசி கீரனார் - 3

மோசி என்ற சொல் வடபுல மொழிகளிற் தோல்வினைஞரைக் குறிப்பதாகக் கேள்விப்படுவதால், அப்படியொரு பொருட்தொடர்பு ஒரு காலத்தில் தமிழில் இருந்திருக்கக் கூடுமோ என்று ஐயுற்ற காரணத்தால் இக் கட்டுரைத் தொடர் எழுந்தது. தோல்சார்ந்த சொற்கள் தமிழிலெழும் முறையையும், மோசி என்ற பெயர்ச்சொல் தோலைக் குறித்து எப்படி இயல்பாக எழலாம் என்பதையும் இனிப் பார்ப்போம். .

தமிழில் சுட்டடிப் பிறந்த சொற்கள் 75% - ற்கும் மேலே தேறலாமென்று பாவாணர் சொல்வார். அவர் கூற்றின்படி, ஆகாரச்சுட்டு சேய்மைச் சுட்டு ஆகவும், ஈகாரச் சுட்டு அண்மைச் சுட்டாகவும், ஊகாரச் சுட்டு முன்மைச் சுட்டாகவும் தொடக்க காலத்திற் பயன்பட்டன. நாளாவட்டத்தில் ஊகாரச் சுட்டின் முன்மைக் கருத்தினின்று, தோன்றல் கருத்தும், அதனின்று முற்படற் கருத்தும், அதனின்று முற்செலவுக் கருத்தும் பிறக்கும். முற்செலவில் இருந்து நெருங்கலும், நெருங்கலிலிருந்து தொடுதலும், தொடுதலிலிருந்து கூடற் கருத்தும் பிறக்கும். இங்கு நெருங்கல் கருத்தும், (அதனோடு தொடர்புள்ள பொருந்தற் கருத்தும், பற்றற் கருத்தும்) கூடவே தொடுதல் கருத்துமான சொற்களைப் பார்ப்போம்.

ஊ> உ> உல் (செ.கு.வி) = நெருங்கல் to go near, to appoach; தொடுதல் to touch. எல்லா நிலத்திணைகளுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் முதற்புலன் ஊறு என்னும் தொடுவுணர்வே ஆகும். (உல்> உல்+தல்> உற்றல்> உற்றறிதல் = தொட்டறிதல் to feel by touch, to make observation by the sense of touch ”ஒன்றறிவதுவே உற்றறிவதுவே” - தொல்.பொருள் 582. உற்றறிதல் என்பது தொட்டறிதலாகும். உறுதலெனும் வினைச்சொல்லிலிருந்து ஊறு எனும் பெயர்ச்சொல் எழும், “பருந்தூறு அளப்ப” பதிற்றுப் 51.32; ”சுவையொளி யூறோசை” - குறள் 27)

ஊறு என்பதை நெருங்கலின் தொடர்ச்சியாய், உடல் மூடிய தோலால், உணர்கிறோம். ஊறுக்கு அடுத்த புலன் சுவையாகும். ஊறு, சுவை என்ற 2 புலன்கள் கொண்டவை விலங்குகளில் முதல்வகையாகும். (இரண்டறிவதுவே அதனொடு நாவே - தொல்.1526.) படிப்படியாக நாற்றம், ஒளி, ஓசை என்ற புலனறிவுகளை உயர்விலங்குகளுக்கு உரியதாக்குவர். முடிவில் ஆறறிவு விலங்கு மாந்தனாகும். (ஆறறிவதுவே அவற்றொடு மனனே - தொல்.1526.) இப்படி ஆறறிவை வரிசைப்படுத்தி முதலிற் சொல்லியவை வேதமறுப்பு நெறிகளேயாகும்.

உல்(லு)தல் வினை ஊறெனும் அறிவிற்கு மட்டுமன்றி வேறு வினை/பெயர்ச் சொற்களுக்கும் காரணமாயுள்ளது. பல்வேறு விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிட்ட மாந்தர், எலும்போடு பொருந்தியதாலேயே, நிணம், தசை போன்றவற்றை ஊனென அழைத்தார். உல்> ஊல்> ஊன் = பொருந்தியது, பற்றியது. காட்டு விலங்காண்டி நிலையிருந்து நாகரிகம் உருவான போது, உற்றலிலிருந்து மேலும் பல சொற்கள் பிறந்தன. உற்று> உற்றார் = நெருங்கியவர் relatives; உற்று> உறுதல் = தொடுதல் to perceive by touch; உற்றுதல்> ஒற்றுதல் to bring in contact, “பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர” என்பது கலித் 83.2 இல் வரும் சொல்லாட்சி.

றகர ஒலி, பேச்சு வழக்கில் டகரமாயும், தகரமாயும் திரியும். தமிழி எழுத்தில் றகரத்தின் வடிவுகூட டகரம், தகரம் ஆகியவற்றின் பிணைப்பாகவே, (இத் திரிவை விளக்குவது போலவே), எழுதப் பெறும். ஆற்றுதல் என்பது ஆட்டுதல் என்றும், ஆத்துதலென்றும் பேச்சுவழக்கிற் பலுக்கப்படும். அதே முறையில் ஒற்றுதல்>ஒட்டுதல் to slick என்றசொல் பிறக்கும். உடன், ஒடு, ஓடு என்ற மூன்றாம் வேற்றுமையுருபுகள் கூட ஒட்டுப்பொருளிற் பிறந்தவையே. உறு> உடு> உடன் = together; உடு> ஒடு> ஓடு = together. இன்னும் ஒரு வளர்ச்சியில் ஆமை முதுகிலும், ஒருசில முட்டைகளின் மேலும், பாதுகாப்பாய் அமைவதை ஓடு என்கிறோம். அதாவது ஒட்டியிருப்பது ஓடு, as of a tortoise, of an egg. ஒரு சில பழங்கள், விதைகளின் கனமான தோல் கூட ஓடு எனப் படும். hard outer covering, as of a nut (புளியம்பழ ஓடு, நிலக்கடலை ஓடு..... இப்படிப் பல)

அவரையின் மேல் தொலி உறு> உறை, sheath of the beans, என்றழைக்கப் படும். உறைதல் வினைக்கு இறுகுதல் பொருளும் கூட உண்டு, to get firm, to get a skin, to curdle, to freeze. பாலைத் தயிராய் மாற்றுவதை உறைய வைப்பது என்று நாட்டுப்புறங்களிற் சொல்வார். உறுதலின் இன்னொரு வளர்ச்சியாய் ஊன்றுதலெனும் பிறவினைச்சொல் பிறந்து ”பற்றுதல், நிலைகொள்ளுதல்” என்ற பொருட்பாடுகளைக் காட்டும்.

ஒட்டியிருப்பது அட்டியிருப்பது என்றும் திரியும். அட்டுதல் = நெருங்குதல். அட்டுதலின் இன்னொரு பலுக்கற் திரிவாய் அண்டுதல், அண்ணுதல் என்ற சொற்களை அறிவோமில்லையா? அட்டு> அத்து> அது> அதள் = தோல் என்ற வளர்ச்சியும் ஒட்டியதைச் சுட்டி வந்ததே. புறம் 193 இல் அதள் எனும் சொல்லாட்சி உண்டு. [தோலைக் குறிக்கும் க்ருத்தி என்ற சொல்  இரு(மொழி) பிறப்பியாகும். தமிழில் கதுவியிருத்தல் (= பற்றுதல்) என்ற சொல்லுண்டு. கதுவியின் உறவான கத்தி வடபால் வழக்கில் க்ருத்தி ஆகும். தோலைக் குறிக்கும் கேடகம், கேடயம், கிடுகு போன்ற சொற்கள் ஒருவேளை கிட்ட இருத்தலோடு தொடர்புடையனவோ என்ற எண்ணம் எனக்குண்டு.]

உல் போலவே, துல் என்பதும் நெருங்குதல் கருத்து வேராகும். இதுவும் ஒட்டுதல், பற்றுதல் என்ற பொருட்பாடுகளைக் காட்டும். துல்+து = துற்று> துற்றல் = நெருங்கல் to come near, to advance closely, to lie close ”மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற” தேவா. 83.1 “காளை சீறிற் துற்று இவனுளனோ என்பார்” சீவக. 1110. துல்+ந்+து = துன்று> துன்றுதல் = நெருங்குதல் to be close, thick, crowded together “துன்றுக்கு நறுங்குஞ்சி” கம்பரா. குகப் 28, பொருத்துதல் to get attached; to lie “கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர்” திருவாச. 17:10. துன்று>துன்றுநர், friends, as being near. துல்+ந்+நு = துன்னு> துன்னுதல் = தைத்தல் to sew, to stitch, நெருங்குகை to be close together “யாவரும் துன்னல் போகிய துணிவினோன் என” புறநா.23,14 பொருந்துதல், to be fitted, joined, attached, செறிதல் to be thick, crowded, to press close “துன்னிக் குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரமெல்லாம்” நாலடி 167, அணுகுதல் to approach, approximate, adhere to ”யாவரும் துன்னல் போகிய துணிவினோன்” புறநா.23. துன்னியார் = நண்பர் friends, relations, adherents. துற்று> துறு> துறுதல் = நெருங்குதல் to approach; துறு> துறை = நெருங்கும் இடம் place of approach

அடுத்து, உகரத் தொடக்கம் பேச்சுவழக்கில் ஒகரத் தொடக்கமாவது தமிழின் இயல்பான வழக்கமே. அந்த முறையில் துகரம் தொகரமாகலாம். துற்று> தொற்று (தொல்+து)> தொற்றுதல் = தொடுத்தல் “அதன் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி” - ஈடு. 3,1, 10. முன்னே சொன்னது போல் றகரம் இடையில் வருஞ் சொற்கள் டகரமாகவும், தகரமாகவும் பேச்சு வழக்கிற் பலுக்கப் படுவது உண்டு. தொற்று> தொட்டு> தொடு> தோடு = ஓடு. தொற்றுநோய் என்பது ஒட்டுவாரொட்டி நோய் தானே? அதைப் பேச்சு வழக்கில் தொத்துநோய் என்கிறோமில்லையா?

தொற்றின் அடிவேராகத் தொல் எனுஞ் சொல் அமையும். தொல்லுதல் = அருகுதல், ஒட்டுதல், பற்றுதல். பழங்களை மூடியிருக்கும் மெலிந்த தோலைத் தொலி என்பார்கள். இதேபோலத் தொல்> தோல் என்பதும் அமையும். ஆகத் தொல்லிக் கிடப்பது தோல். என்பு, நிணம், தசை, ஊன் ஆகியவற்றிற்கு அடுத்து நெருங்கியது, பற்றியது என்ற வகையிற் தோல் என்னும் சொல் அமைகிறது. புறம் 164 இல் பாலில்லாத முலையின் தோல் சுருங்கி அதன் துளையும் தூர்ந்து போன காட்சி ”பாஅல் இன்மையிற் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை” என்று வண்ணிக்கப்படும். நெருங்கியது, ஒட்டியது, பற்றியது என்ற பொருட்பாடுகளுக்கு அடுத்து தோலோடு பொருந்தியதாய் மூடியது, உலர்ந்தது என்ற பொருட்பாடுகள் வந்து சேரும். மூடியது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் உலர்ந்தது என்பதைப் பார்ப்போம். [நெருங்கியது, ஒட்டியது, பற்றியது, மூடியது, உலர்ந்தது என்ற பொருட்பாடுகளைக் குறிக்காத தோற்சொல்லே தமிழில் நானறிந்தவரை இல்லை. எந்தவொரு சொல்லையும் இப்பொருட்பாடுகளைக் கொண்டு உரசிப் பார்த்தால் ”தோலுக்குத் தொடர்புண்டா?” என்று தெரிந்துவிடும்.]

தோலோடு தொடர்புடைய மற்ற தமிழிய மொழிகளிலும் பரவலாய் இருக்கும் சொற்களை Dravidian Etymological Dictionary இல் பார்க்கலாம்.

3559 Ta. tōl skin, hide; toli (-pp-, -tt-) to strip off (bark), flay, husk, hull; n. skin, rind, husk; tokku skin, bark, rind. Ma. tōl skin, hide; tolikka to skin, peel; toli skin, bark, peel, rind; tukal skin as of fruit; tokku skin. Ko. to·l skin, hide; to·krl small peg used in pegging down hide to dry (to·l + karl [see 1389]). To. tw&idieresisside;s̱ skin, hide. Ka. tōl(u), togal, toval id., leather, skin of fruit. Koḍ. to·l skin, hide; toli- (tolip-, tolic-) to peel, hatch; (Shanmugam) tolip peeling. Tu. tugalů, tolike skin, bark, rind. Kor. (M.) tōru skin. Te. tokka skin, bark, rind; tōlu skin, hide, leather. Kol. (Kin., Haig, Hislop) tōl skin, hide. Nk. tōl skin. Nk. (Ch.) tōl id. Pa. tōl skin, bark. Ga. (Oll.) tōl id.; (S.) tōl skin; tokkā rind of fruit; (S.2) tokka bark. Go. (Tr. A. Y. Mu. W. Ph.) tōl skin, hide; (D. G. M.) tōla skin, bark of tree; (S.) tōl(u) (pl. tōlku), (Ko.) tolka id., skin of fruit (Voc. 1828); (Koya Su.) tōlu skin. Konḍa (BB) tōl, (K.) tōlu skin (of animals); (K.) toko bark, rind. Pe. tōl skin. Kui ṭōḍu (pl. ṭōṭka) buffalo hide (from which bellows or shields are made). Kuwi (F.) tōlū, (S.) tōlu, (Su. P. Isr.) tōlu (pl. tōlka) skin, hide. Cf. 3544 Ta. tōṭu. DED(S) 2937.

நம் உடம்பில் புண் (புள்ளப்பட்டது, குழியானது, புண்) ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். புண்ணிலிருந்து சீழும் அரத்தமும் நீர்மமாய்க் கசியுந் தானே? கசிவைத் துடைத்து மருந்திட, மருந்திடக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சரியாகிறதல்லவா? அதைத் தமிழில் எப்படிச் சொல்கிறோம்? புண் காய்ந்து வருகிறது என்கிறோம். அரத்த வேதிப்பொருள் படிகமாகிக் கட்டப்படும் புரத வலை, புண்ணின் வாயை மூடுகிறது; சீழும், அரத்தமுமான நீர்மக் கசிவு குறைகிறது. கொஞ்சங்கொஞ்சமாய் வலையின்கீழ் புதுத்தோல் உருவாகி நீர்மம் முற்றிலும் நின்றுபோய் உலர்ந்து விடுகிறது. நாமும் புண் காய்ந்தது என்கிறோம். காய்கிறதென்ற வினையை வைத்துப் புண்ணுக்குக் காயம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கி விடுகிறோம். தோல் போர்த்திய முழு உடம்பிற்கே கூடக் காயம் என்ற பெயருண்டு.

உலர்தற் பொருள் ஊ எனும் வேரில் தொடங்குகிறது. ஊ> உ> உல் செ.கு.வி = உள்ளொடுங்குதல் to become lean, emaciate, காய்தல் to dry; உல்> உல>  உலல்> உலர்> உலர்தல் = காய்தல் to become dry, to wither, to be parched up தோலோடு, உலர்தல் வினையைச் சேர்த்தே ஆதி மாந்தன் உணர்ந்திருக்க வேண்டும். தோல் காய்ந்தது, உலர்ந்தது. இதே போல, உல் எனும் வேரில் இருந்து உல்> ஒல்> ஒலியல் = உலர்ந்து போனது, தோல், காய்ந்த தழை என்ற சொல்லும் தழைக்கும். உலர்ந்த தோல் எளிதாக உரிக்க வரும். உல்லின் நீட்சியே உரி. உல்> உர்> உரு> உரி = தோல்.

இதேபோலத் துல் எனும் வேருக்கும் உலர்தற் பொருள் இருந்திருக்கவேண்டும். *துல்லுதல்> *(துல்வுதல்)> *(துவ்வுதல்)> துவல்> துவர் = உலர்நிலை. இப் பெயரிலிருந்து மீண்டுமொரு வினைச்சொல் பிறக்கும். துவல்> துவர்> துவர்த்தல் = உலர்த்துதல்; துவல்> துவள்> துவட்டுதல் = உலர்த்துதல்; துவர்> துவர்க்கு> துவக்கு = தோல்; துவக்கு> தோக்கு> தொக்கு. இனி, துவத்தி> துத்தி> துருத்தி என்பதும் கூட இருபிறப்பிச் சொல் தான். வடமொழிப் பழக்கமான ரகர நுழைப்பு இங்கு ஏற்பட்டுள்ளது.

உல், துல் எனும் வேர்களைப் போலவே, சுல் எனும் வேரும் உலர்தல் பொருளில் சில சொற்களை உருவாக்குகிறது. சுல்> சுர்> சுரு> சுரித்தல் = வற்றுதல், காய்தல், சுருங்குதல். நீர் வற்றியதை நீர் சுருங்கியது என்கிறோம் அல்லவா? இனிச் சுருதல் வினை, சருதலென்றும் திரிந்து உலர்தலைக் குறிக்கும். சரு> சருகு  வளர்ச்சியில் காய்ந்த இலைகளைக் குறிக்கிறோம். ஆனால் இலை மட்டுமா காய்கிறது? பழங்கள், பருப்புகளும் மற்றவையும்  சுரு(ங்)கிக் காய்கின்றன. சுருங்கலும், உலர்தலும், வற்றலும் ஒன்றிற்கொன்று தொடர்பு உள்ளவை. காய்ந்த கறிவாடு (> கருவாடு) வற்றிப் போனதே. [எல்லாக் காலமும் விலங்கின் ஊன் மாந்தனுக்குக் கிடைத்து விடுகிறதா, என்ன? கறிவாட்டுக் குழம்பு சாப்பிடாத நாட்டுப்புறத்தார் மிகக்குறைவு.] வறண்டு போன அரிசிக்குழை வற்றலாகிறது (அரிசி வற்றல்.) உலரவைத்த தசைகள் வறள்> வறள்கம்>  வறகம்> வடகம் என்றானது. இன்று இதன் பொருள் விரிந்து வெங்காய வற்றல்கூட வடகம் எனப்படுகிறது. உலர வைத்த தோலும் வடகம் என்று ஒரு காலத்திற் சொல்லப்பட்டது.

வற்றிப் போனவை நெடுங்காலம் வைத்திருந்தாலும் கெடாது. இன்னுஞ் சில பொருட்கள் மீன்கள், பல்வேறு தசைகள் போன்றவை உப்போடு சேர்த்து உணக்கிப் போட்டுவைத்தால் கெடாது இருக்கும். இப்படிச் சுருங்கிப் போன இயல்பொருட்களைப் பண்டமாற்றிற் பரிமாறிக் கொண்டிருந்ததால் அவை சுருகு> சருகு> சருக்கு> சரக்கு என்றாயின. இன்றோ விலைக்கு விற்கும் எல்லா goods -களுமே சரக்குகள் எனப்படுகின்றன. பல்வேறு சரக்குகளை, வறைகளை (wares) வாங்கும் நமக்கு உலர்தல் வினை நினைவுக்கு வருமோ? .வறண்டுபோன பொருள்களை வைக்கும் கூடத்தை வறைக் கூடம் (ware house) என்கிறோம்.

சுருங்கி உலர்ந்துபோன தோல் சுரு> சரு> சருமம் = உலர்ந்த தோல் என்ற பொருளைக் குறிக்கும். உலர்தோலைக் கொண்டு செய்த மிதியடி சுரு> சரு> செரு> செருப்பு என்றாயிற்று. *செருவைக் கொண்டு தோல் வேலை செய்தோர் செரு> செருமார்> செம்மார் ஆனார். வடபுலத்தில் அவர் செம்மார்> சாமார் ஆவார். செரு எனும் சொல்லடியோடு சேரும் ‘ப்பும் க்கும்’ வெவ்வேறு ஈறுகள் அவ்வளவு தான். செருப்பு தமிழானால், சருக்கும் தமிழியச் சொல்லே. சுரு> சரு> சருக்கு> சருக்கிலி> சக்கிலி என்பது மற்ற தமிழிய மொழிகளிற் பழகி, நமக்கு நாயக்கர் ஆட்சியால் பெரிதும் பரவிய சொல்லாகும்.

தென்பாண்டி நாட்டில் உடம்பை ”மேல்” என்பார். ”மேல் கொதிக்கிறது; மருத்துவரைக் காணவேண்டும்.” உண்மையில் இதனுள் மறைபொருளாகத் தோலும் இருக்கிறது. இப்பொருள் நம் அகரமுதலிகளில் பதிவு செய்யப்படக் கூட இல்லை. ஆனால் மேற்பக்கம் உணர்த்தும் புறணி (=தோல்) என்ற சொல் நிகண்டுகளில் உள்ளது. பிள்> பின்> பிறம்> புறம் = வெளி, வெளிப் பக்கம்; உள்ளும், புறமும், அகமும் புறமும் எனும் தொடர்களால் புறம் என்ற சொல் உட்பக்கத்திற்கு எதிரான வெளிப்பக்கம் என்பதைக் குறிக்கும். மூடின கையின் உட்புறமாய் இருப்பது உள்ளங்கை/அகங்கை என்றும், அதன் வெளிப்புறமாய் இருப்பது புறங்கை என்றும் கூறப்படுதல் காண்க. புறம்> புறணி = மேல், தோல். உடம்பை மூடி வெளிப்பக்கம் இருக்கும் தோலை புறணி என்பது இயல்பான சொல்லாக்கமே.

உடம்பை மூடுவது போல், கோட்டையை மூடும் மதிலையும் தோல், தோடு, கேடயம், கேடகம், கிடுகு என்ற சொற்களால் ஒப்புமைப் பொருளில் அழைத்து இருக்கிறார். புறம் 4, 16, 22 ”புலந்தோட்டு பைந்தும்பை”, 35, 63 ”தோல் கண் மறைப்ப”. வேலிருக்கும் தோலுறையும், தோல்கழி என்ற சொல்லால் கிடுகைக் காம்பும் புறம் 98 இல் விவரிக்கப்படும். இந்த ஒப்புமைப் பயன்பாடு நீண்டு யானைக்கே அதன் வலிய தோலின் கனங்கருதி புறம் 7 இல் “தோல் பெயரிய எறுழ் = யானையைப் பெயர்த்த வலிமை” என்ற வண்ணிப்பு உண்டு.

அதேபோல பொருவிக் கிடப்பது பொருவை> போர்வை என்ற வகையில் மூடிய நிலை குறிக்கும். மூடிக்கிடக்கும் / பொத்திக்கிடக்கும் பொத்து> பொத்தை> பொச்சை> பச்சை என்ற சொல் போர்த்தியதென்று பொருள் படும். பச்சை பற்றிய செய்தி கழாத்தலையாரின் புறம் 288 இல் வரும். கோவூர் கிழாரின் புறம் 308 இலும் மின்னேர் பச்சை எனவரும். புறம் 166 இல் ”புலப் புல்வாய்க் கலைப் பச்சை” என்று கலைமானின் தோல் சுட்டப்பெறும்.

இனி, முள்>மூழ்>மூய் என்னும் வேரில் உருவாகும் மூடுதற் சொற்களைப் பார்ப்போம்.

மூழ்கு> மூகு< மூகம் என்ற சொல் வாய்மூடிய ஊமை நிலை உணர்த்தும். மூழ்கு> மூகு> மூங்கு என்பதுகூட ஊமைநிலையே. மூகை, மூங்கையும் ஊமையை உணர்த்தும் சொற்களாகும். சொல்லின் நடுவில் வரும் மெய் எழுத்தைப் பலுக்காதிருந்தால் அது மூகையெழுத்து (= consonant being mute) எனப்படும்.

மூழ்தலென்பது பற்றுதல் to seize, take hold of  பொருள் கொள்ளும். மூழ்தலின் பிறவினையான மூழ்த்தல் என்பது மூடுதல் to close என்ற பொருட்பாட்டையும், மொய்த்தல் to swarm around என்ற பொருட்பாட்டையும் கொள்ளும். "கதழ்பு மூழ்த்தேறி” என்று பரிபா. 10.18. இல் வரும் சொல்லாட்சி மூடியைக் குறிக்கும் மூழல் என்ற பெயர்ச்சொல்லும் இதே பொருள் தான். ழகரத்திலிருந்து பேச்சு வழக்கில் யகரம் பிறக்கும். ”வாழைப்பழம் வாயப்பயம் ஆகிறதல்லவா?” அதுபோல் பல சொற்கள் திரிந்துள்ளன. மூழ்தல்> மூய்தல் = மூடுதல் [பருமணன் மூஉய் பரிபா 10:4] என்ற பொருட்பாட்டையும், நெருங்கிச் சூழ்தல் to surround closely என்ற பொருட்பாட்டையும் உணர்த்தும். மூய்தலின் பெயர்ச் சொல்லாய் மூய் அமைந்து மூடியை உணர்த்தும். “பொன்பெய் பேழை மூய் திறந்தன்ன” குறுந்.233.

மூய்தலின் இன்னொரு திரிவாய் சகரம் உள்நுழையும். மூசல் = மொய்க்கை swarming, thronging; மூசுதல் = மொய்த்தல், to swarm about, gather around “வண்டு மூசு தேறன் மாந்தி” நெடுநல்.33 “மீஞீறு மூசு கவுள சிறுகண் யானை” அகம் 159.16 “புன்மூசு கவலைய முள்மிடை வேலி” புறம் 116.4 “மூசு வண்டறை பொய்கை யும் போன்றதே” அப்பர் தேவாரம். மூசு = இடவகையில் நெருக்கமாய் இருக்கை, மொய்க்கை “வண்டு மூசு அறா” சீவக. 418 “வியன்பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து” பதிற்று. 31.30 “வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி” புறம் 227.9

மூடியதோடு தொடர்புடைய மூட்டம் (= மூடியிருப்பது), மூட்டுதல் (= சணற் பை, துணி முதலியவற்றில் இரு விளிம்புகளை இணையும்படி சேர்த்தல், சேர்த்துத் தைத்தல் sew together), மூட்டு (= joint), மூட்டு (= மூடுகின்ற பொருள் that which forms a cover, coating, wrapper), மூட்டை/மூடை (= தவசம் நிரப்பப்பட்டு கட்டப் பட்ட தைக்கப்பட்ட சணற்பை sack holding grain), மூடி = cover என்ற சொற்கள் எல்லாம் ஒருங்கு சேர்த்து எண்ணத் தக்கன. மூடு/முட்டாள்/மூடன் என்ற சொற்கள் கூட கல்லுளி மூங்கனாக ஏதொன்றையும் மூடிய தன்மையோடு பார்க்கும் தன்மையுள்ளோரைக் குறிக்கும்.

முய்த்தல்/மூய்த்தலின் திரிவே மொய்த்தல் வினை. ஒரு மலரின் தேனை உறிஞ்சுதற்காகத் தேனீக்கள் மொய்க்கின்றன. அதன்விளைவாக மலரையே மூடிவிடுகின்றன. எப்படி நெருங்கல், தொடுதலுக்கு முந்தை நிலையோ அதுபோல் மொய்த்தல், மூடுதலுக்கு முந்தைநிலை யாகும். மொய்த்தல் = சுற்றிச் சூழ்தல், நெருங்கல் to crowd, press, throng, swarm as flies, bees, ants "வாளோர் மொய்ப்ப” புறம் 13. மொய்த்தல் = நெருங்கிச் சுற்றல் to crowd around, swarm around, மூடல் to cover, to enclose. மொய் = நெருக்கம் press, throng, swarm.

யகரம் சகரமாவதும் பேச்சுத் தமிழில் இயற்கையே. மொய்த்தல்> மொயித்தல்> மொசித்தல் ஆகும். மொசித்தலின் தன்வினை மொசிதல். மொசிதல் = மொய்தல் to swarm.”கடுந்தேறு அறுகிளை மொசிந்தன துஞ்சும்” பதிற்றுப் 71.6 மொசித்தல் வினைக்கு அரிசிற் கிழார் பாடிய புறம் 285 இல் வரும் “விடு கணை மொசித்த மூரி வெண்டோள்” என்ற 8-9 ஆம் அடிகளுக்கு என்ன பொருள் என்று நினைக்கிறீர்கள்? “பகைவர் எய்த அம்புகள் மொய்த்த மூரி வெண்டோள்” இதே போல புறம் 96 (ஔவையார் அதிகமான் பொகுட்டு எழினியைப் பாடிய பாட்டு) இல் ”மையூன் மொசித்த ஒக்கல்” = என்ற சொற்றொடர் வரும். என்ன பொருள்? “ஆட்டுக்கறி சாப்பிடுவதற்காக மொய்த்த சுற்றத்தார்”

ஆக மொசித்தலென்பது மொய்த்தல், மூடுதல் பொருட்பாடுகளைக் குறிக்கும் சொல்லாகும். சரி, இதன் பெயர்ச்சொல் என்ன? மொசிக்கை/மொசிப்பு எனில் அது தொழிற்பெயராகும். மொசியர், தொழில்செய்வாரைக் (மொய்ப்பாரைக்/ மூடுபவரைக்) குறிக்கும். இன்னும் ஆழ்ந்து ஓர்ந்து பார்ப்போம். கருவிப் பெயர் எப்படி அமைய முடியும்? முதலெழுத்து நீண்டு மோசு/மோசி என ஆனாலன்றி வேறெந்த வகையில் கருவிப்பெயர் அமையமுடியும்? [நினைவு கொள்ளுங்கள் விசித்தது வீசியாயிற்று; பசியது பாசியாயிற்று; உசித்தது ஊசியாயிற்று மொசித்தது மோசு/மோசியாகாது போகமுடியுமா?] அப்போது அதற்கென்ன பொருளிருக்கும்? மூடி தானே? உடம்பிற்கு மூடி எது? தோல் தானே? அதாவது ஏரண வழியும், தமிழிற் பெயர்ச்சொல் அமையும் முறையும் பார்த்தால், மோசு/மோசிக்குத் தோலெனும் பொருள் அமையமுடியும். இது ஒருவகை உன்னிப்புத் தான். ஆனால் அதில் தவறென்ன இருக்கிறது?

மேற்சொன்னதை இன்னொரு வழி ஓர்ந்துபார்க்கலாம். இந்தையிரோப்பிய மொழிகளிலும் (இங்கு ஆங்கிலத்தைக் காட்டாகக் காண்கிறேன்.)  மூடுதல் கருத்தில் உருவான hide என்ற சொல் தோலைக் குறிக்கிறதல்லவா? O.E. hyd, from P.Gmc. *khudiz (cf. O.N. hut, O.Fris. hed, M.Du. huut, Ger. Haut "skin"), related to O.E. verb hydan "to hide," the common notion being of "covering," from PIE base *(s)keu- "to cover, conceal" (cf. Skt. kostha "enclosing wall," skunati "covers;" Arm. ciw "roof;" L. cutis "skin," scutum "shield," ob-scurus "dark;" Gk. kytos "a hollow, vessel," keutho "to cover, to hide," skynia "eyebrows;" Rus. kishka "gut," lit. "sheath;" Lith. kiautas "husk," kutis "stall;" O.N. sky "cloud;" M.H.G. hode "scrotum;" O.H.G. scura, Ger. Scheuer "barn;" Welsh cuddio "to hide").

உடனே நம்மிற் சிலர் ”மோசு/மோசி என்ற பெயர்ச்சொல்லை தோல் என்ற பொருளில் நம் அகரமுதலிகள் குறிக்கவில்லை. எனவே மோசு/மோசி தோலாக முடியாது” என்று சொல்லி விடுகிறார். பொதுவாக, வறட்டுவாதம் பேசுவோரிடம் உரையாட ஒன்றுமில்லை. அவர் சொன்னதையேச் சொல்லிக் கொண்டிருப்பார். இடம், பொருள், ஏவல், சுற்றுச் சூழ்நிலை பார்த்து ஏரண வழி பொருட்பாட்டைக் காணார். அகரமுதலிகளில் அப்படியே பதிந்து இருக்குமெனில் இந்த உன்னிப்புக் கட்டுரை (inductive essay) எதற்கு எழுகிறது?

அப்புறம் இன்னொரு நடைமுறையையும் சொல்ல வேண்டும். நம்மிற் பலரும் சங்க இலக்கியம் என்பது ஏதோவொர் அகரமுதலி என எண்ணி விடுகிறோம்.  உண்மையில் அது ஓர் இலக்கியத் தொகுப்பு. அக்கால மொழியின் பல்வேறு இயலுமைகளை அது குறிப்பால் உணர்த்துகிறது. அன்றைக்கிருந்த எல்லாச் சொற்களையும் அது பதிவு செய்திருக்குமா? - எனில் இல்லை. அவை எல்லாமே நம் கைகளுக்குக் கிடைத்தனவா? - கிடைக்கவில்லை. சொல்லின் வினையைக் குறித்து அதேபொழுது பெயரைக் குறிக்காமலும், பெயரைக் குறித்து வினையைக் குறிக்காமலும் அது போயிருந்திருக்கக் கூடாதா? - போயிருக்கலாம். இதுபோல் ஞாயமான சிந்தனைகளை நாம் எப்படியோ வாய்ப்பாக ஒதுக்கி விடுகிறோம்.

எழுத்துக்கு எழுத்து தவறாமல் சங்க இலக்கியத்தில் ஏதொன்றும் இல்லை யெனில் தமிழில் அது இல்லவேயில்லை என்பதில் நாம் என்றும் அணியமாய் உள்ளோம்.:-) மூளையைச் சற்று பயன்படுத்தி பல்வேறு இயலுமைகளை எண்ணிப்பார்க்க மறுக்கிறோம். அப்படித் தொலைத்த தமிழ்ச்சொற்கள் கணக்கில. சங்கத அகரமுதலியான மோனியர் வில்லியம்சு, சங்கத இலக்கிய ஆவணங்களிற் பெயர்ச்சொல் பதிவாகியிருந்தால் வினைச்சொல்லை உருவாக்கியும், வினைச்சொல் பதிவாகியிருந்தால் பெயர்ச் சொல்லை உருவாக்கியும் மொழி இயலுமைகளை நமக்கு உணர்த்தும். அதேபோலத் தமிழ் அகரமுதலிகள் இருப்பதில்லை. தமிழ் மொழியாய்வாளர் பலரும் அதனாலேயே வறட்டுவாதம் பேசித் தமிழை மறுக்கிறார்.

மொசித்தல் வினையைப் பதிவுசெய்த புறநானூறு, பெயர்ச்சொற்களைப் பதிவுசெய்யாது போயிருக்கலாகாதா? மோசு என்பது தோலானால், மோசி, தோல்வினைஞரைக் குறிக்கலாம். மோசி கீரனார், மோசி கொற்றனார், மோசி சாத்தனார், முடமோசியார் என்ற புலவர் தோல்வினைஞராய் இருக்கப் பெரும்வாய்ப்புண்டு என்பதே என்முடிவு.

இதை மெய்ப்பிக்குமாப் போல் மொய் என்ற பெயர்ச்சொல் அத்தி (fig tree), ஆமை (tortoise), யானை (elephant) ஆகியவற்றைக் குறிக்கும். இப் பொருட் பாடுகள் எப்படி வந்தன? அத்தியின் தோலைப் பிரிப்பது கடினம்; அதன் பழமே உடைபட்டுப் பிதுங்கிப் போகும். ஆமை, யானை ஆகியவற்றின் தோல் கனமானது. தோலின் முகன்மை கருதியே இப்பெயர்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். [முன்னால் வலிய யானைத் தோலின் கனங் கருதி புறம் 7 இல் “தோல் பெயரிய எறுழ் = யானையைப் பெயர்த்த வலிமை” என்ற வண்ணித்ததை இங்கு நினைவு கொள்ளுங்கள்.] வேறு எந்த வகையிலும் மொய் என்ற சொல் இப்பெயர்களைக் குறிக்க வழியில்லை.

என் கட்டுரையை இறுதி செய்யுமுன், திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலியிலிருந்து 2 இடுகைகளை எடுத்துக் காட்டுகிறேன். இவற்றில் மூசியை ஒட்டித் தோல்பற்றிய செய்திகளும் திராவிட மொழிகள் சிலவற்றில் ஊடுவருவதை அறிந்துகொள்ளலாம்.

4915 Ta. muccu (mucci-) to cover; mūy (-v- -nt-; mūyi-) to cover, fill, surround closely; n. a cover; moy (-pp-, -tt-) to cover, enclose; ? muyaṅku (muyaṅki-) to embrace, copulate; muyakkam embrace, copulation. Ko. muc- (muc-) to cover; mucaṇ tight-fitting cover. To. muc- (muc&cangle;-) to cover; mucxu· lid, cover. Ka. muccu to close, shut, shut up, cover, conceal; n. shutting; muccaka closing, shutting; muccalu closing, covering, screening; muccaḷa covering, cover, lid; muccike shutting, closing; muccige covering, ceiling of room; muccisu to cause to close; muccuvike shutting, etc.; mucce cover, lid; musuku to cover. Koḍ. mucc- (mucci-) to close; mucci lid, cover. Tu. muccuni to shut, close, cover, screen, shelter; mucca, muccala, mucci, muccu lid of vessel; muccaṇṭe a close mouthpiece; muccāvuni to cause to shut; muccige lid, cover, ceiling. Te. mūyu to cover, cover up, shut, close, conceal, hide, screen; (K. also) be shut, closed, (flower) closes its petals; mū̃ta covering, shutting, a cover, lid, shutter; musũgu, musũguḍu cover, covering, veil; musũgu-vaḍu to be covered, veiled; (K.) muccu to close (intr., tr.); (K.) muncu to cover, envelop. Kol. (SR.) muns- to close, cover. Nk. mus- to cover. Nk. (Ch.) muc- to cover, close, shut (door); muyip- to cover oneself, fill up a hole. Pa. muy- to cover oneself; muypip- (muypit-) to cover (another); mucca shell-covering of the snail. Ga. (Oll.) muy- to cover oneself with wrapper; (S.) mūyk- (mūyt-), mūy- to close, cover. Go. muccānā (Tr.) to wrap something round one's body, put new skins on a drum, (Ph.) to cover; (M.) mucānā, (A. Y.) mucc-, (G. Mu. S.) muc- to cover; (Ko.) muc-, mus- id., put on outer cloak; (Tr.) mucci, (Ph. Mu.) mucce a lid or cover; (Ma.) mucce cover of pot, lid (Voc. 2872); (Koya Su.) mōs- to cover. Konḍa mus- (-t-) to bury (as a corpse), cover (a pit), close (with lid); caus. musis-/muspis-. Pe. muc- (mucc-) to cover, bury; muci lid. Manḍ. muc- to bury. Kui musa (musi-) to cover (a drum with skin or an umbrella with cloth); munja (munji-) to be covered, buried; muspa (must-) to cover, bury; n. burying; (K.) mucc- to shut. Kuwi (Su.) muh- (must-), (F.) mūssali, (S.) muh'nai to bury; (Isr.) muc- (-it-) to cover up. Kur. muccnā to close door or lid, shut; muccō a fishing basket; musugnā to envelop, wrap in, pack into a bundle. Malt. muce to close or shut up; musge to pack up, tie into a bundle; musgre to be closed. Br. must shut, closed. Cf. 5030 Ta. mūcu. DED (S, N) 4025.

5030 Ta. mūcu (mūci-) to swarm about, gather round; n. swarming, thronging; mūcal swarming, thronging; mūr̤ (-pp-, -tt-) to swarm round, surround; mūr̤al a lid; mūkai vast horde; moy (-pp-, -tt-) to crowd, press, throng, swarm, spread as an eruption, crowd round, swarm round, cover, enclose; n. press, throng, swarm, crowd, closeness, tightness, battle, war; moyppu crowd, multitude; moci (-v-, -nt-) to swarm. Ka. musuku, musugu to cover, hide, settle upon as flies, close, swarm or crowd together, spread over or about; n. cover, veil; musuṟ to cover as flies, crows, etc., crowd together, cover, hide; n. cover, veil; musumbu cover, veil; mukaṟu, mukkuṟu, mukkuṟiku to come or fall upon, inclose, cover, besiege, surround; mogasu to cover, fall upon, attack; moge to cover, fall upon, close with. Te. musaru, musuru, mū̃gu, (K. also) mūvu to collect or gather around, settle upon as flies upon any object, infest, surround, crowd, swarm; mū̃ka crowd, multitude, host, swarm, army; (K.) mogiyu to overspread, attack, close witMocikah. Ga. (S.) mūng(i) ēr- to swarm. Go (Tr.) moiānā, moittānā to rush at, close with; (SR.) moyānā to kill (Voc. 2986). Cf. 4915 Ta. muccu and 5034 Ta. mūṭu. DED(S) 4128.

மோனியர் வில்லியம்சில் Mocika = m. a tanner, or shoemaker (cf.Hind.mochii) என்று எழுதிக் கடன்பெற்ற சொல் என்று தெளிவாகக் குறித்திருக்கிறது. எனவே மோசி சங்கதச் சொல் இல்லை. (அப்படிப் பார்த்தால் பார்ப்பனர் கோத்திரம் என்ற வழக்கு தோற்றுப் போகிறது. சங்கதப் பின்புலம் இல்லாத எச்சொல்லும் கோத்திரப் பெயர்களுக்கு அடிப்படையாக ஆவதில்லை.) இந்தியும், பிற வட இந்திய மொழிகளும் இச்சொல்லை வட திராவிடமொழிப் பயனாக்கத்தில் கடன்பெற்றன போலும்.

மோசி கீரனார், மோசி கொற்றனார், மோசி சாத்தனார், முடமோசியார் ஆகியோர் தோல்வினைஞராய் இருக்கவே பெருத்த வாய்ப்புண்டு என மீண்டும் சொல்லி முடிக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, September 21, 2010

மோசிகீரனார் - 2

மோசி கீரனார் எனும் பெயர் சங்க இலக்கியத்திற் புறநானூற்றில் மட்டும் வருவதில்லை. அது குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை ஆகியவற்றிலும் வருகிறது. குறுந்தொகையில் மோசி கீரனார் எனும் பெயர் நேரடியாகவும், ”ஏடு பெயர்த்தெழுதுவோரால் ஒருவேளை கவனக்குறைவால் திரித்துத் தவறாக எழுதப்பட்டிருக்கலாமோ?” என்று எண்ணும் படி திரிந்த வடிவிலும் மொத்தம் 7 இடங்களில் வருகிறது.

குறுந்தொகை 33. மருதம் - தலைவி கூற்று - படுமரத்து மோசிகீரனார்
குறுந்தொகை 59. பாலை - தோழி கூற்று - மோசிகீரனார்
குறுந்தொகை 75 மருதம் - தலைவி கூற்று - படுமரத்து மோசிகீரனார்
குறுந்தொகை 84 பாலை - செவிலித்தாய் - மோசிகீரன்
குறுந்தொகை 376 நெய்தல் - தலைவன் கூற்று - படுமரத்து மோசி கொற்றனார்
குறுந்தொகை 377. குறிஞ்சி - தலைவி கூற்று - மோசி கொற்றனார்
குறுந்தொகை 383 பாலை - தோழி கூற்று - படுமரத்து மோசி கீரனார்

மேலுள்ள பட்டியலில் ”படுமரத்து மோசிகீரனார்” என்ற பெயர் கூர்ந்து கவனிக்க வேண்டியது. இந்தப் பெயர் 3 பாட்டுக்களில் வருவதால் ”மோசி கீரனாரின் ஊர் மோசியூர், மோசிகுடியாக இருக்கலாம்” என உரையாசிரியர் சொல்லும் செய்தி எடுபடாது போகிறது. ஒரே இயற்பெயருக்கு 2 ஊர்ப்பெயர் வராதல்லவா? [இந்த ஊர் மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது என்றும், பேரரசுச் சோழர் கல்வெட்டுக்களின் காரணத்தால் சோழநாட்டில் உள்ளது என்றும், பிற்காலப் பாண்டியர்ள் கல்வெட்டுக் காரணத்தால் பாண்டிநாட்டில் எங்கோ இருக்கிறது என்றும், தமிழிக் கல்வெட்டுக்கள் காரணமாய் செஞ்சிக்குப் பக்கத்தில் இருக்கலாம் என்றும் பல்வேறாக ஐயப்படுவது நமக்குக் குழப்பமே தருகிறது.]

பொதுவாகச் சங்ககாலப் புலவரின் பெயர்கள் ஊர்ப்பெயர், குடிப்பெயர்/தொழிற்பெயர், இயற்பெயர் என்ற வரிசையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கக் காணுகிறோம். இவ்வரிசையில் ஒன்றோ, இரண்டோ வாராமலும் போகலாம். ஆனால் இப்படி வரும் வரிசையில் பெரும்பாலும் மாற்றம் கண்டதில்லை. இங்கே படுமரம் என்பது ஊர்ப் பெயராகவோ, குடிப்பெயராகவோ இருக்கக் கூடும். இன்றும் கூடச் சேரலத்தில் குடிப்பெயர்/குடும்பப்பெயர் “சோலையில்”, ”புன்னையில்” ”அதனில்”, ”இதனில்” என்று அமைவதைக் காணலாம். [தமிழ் நாட்டில் பெருங்குடியினர் தவிர்த்து மற்றோருக்குக் குடிப்பெயர் இல்லை. ஆனால் சேரலத்தில் குடிப்பெயர் பரவலாயுண்டு.] இங்கு படுமரம் என்பது மோசிகீரனாரின் குடிப்பெயராய் இருக்கவே வாய்ப்புண்டு. [பலவாறாக ஓர்ந்து பார்த்தால் மோசிகீரனார் சோழநாட்டார், பாண்டிநாட்டாராய் அன்றிச் சேரநாட்டாராய் இருப்பதற்கே வாய்ப்பு உண்டு. அவர் பாடிய மன்னர் வரிசைகளைப் பார்த்தாலும் அது உறுதிப்படுகிறது. கீழே பார்ப்போம்.] பொதுவாகச் சேரலத்தில் ஊர்ப் பெயரோடு இயற்பெயர் சேர்ந்து வருமானால், முன்னே சொன்னது போல் குடிப்பெயருக்கு முன்வருவதே வழக்கமாகும். ”மடுமரத்து” என்பது இங்கு மோசிக்கு முன்னே வருவதால் மோசி ஊர்ப்பெயராய் இருக்க வாய்ப்பில்லை.

தவிர, மோசி கீரனார், மோசி கொற்றனார் என்று இருவேறு இடங்களில் மாறுபட்டு வருவதால் இரண்டு தொழிற்பெயர்களா? - என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. கீரனைத் தொழிற் பெயராக்கினால் கொற்றனும் தொழிற் பெயராக வேண்டுமல்லவா? கொற்றன் என்ற தொழிற்பெயரைச் சங்க இலக்கியம் எங்குமே கண்டதில்லை. அதோடு, இன்னொரு செய்தியாக அகநானூற்றில் மோசிகீரனார் என்ற பெயர் ஏடுபெயர்த்து எழுதுவோரால் மோசிக் கரையனார் என்றும் எழுதியது நம்மை வேறுவிதமாய் யோசிக்க வைக்கிறது.

அகம் 260 நெய்தல் - தலைவி கூற்று மோசிக் கரையனார்
அகம் 392 குறிஞ்சி - தோழி கூற்று மோசி கீரனார்

கீரனார் என்ற சொல் கொற்றனார், கரையனார் என்றெல்லாம் திருத்தப் பட்டு எழுதப்பட்டதா, அன்றி இவரெல்லாம் வெவ்வேறு ஆட்களா? - என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. மோசி என்பது ஊரானால் அச் சிற்றூரில் இருந்து 3 புலவர் எழுக வாய்ப்புண்டோ? அதேபோல மோசி,  பார்ப்பனக் கோத்திரமானால் ஒரு மீச்சிறு கோத்திரத்தில் இருந்து மூவேறு புலவர்களா என்றும் ஐயுற வேண்டியுள்ளது. [மோசி என்ற பெயரே விக்கிப் பீடியாவில் இருக்கும் தமிழ்ப் பார்ப்பனக் கோத்திரங்களின் பட்டியலில் காண முடியவில்லை. பார்ப்பனர் யாரும் அப்படி ஒரு கோத்திரம் இருந்ததாய் எங்கும் பதிவு செய்யவில்லை.]

கருதுகோள் இன்றி விளக்கவியலா இடங்களில், சுற்றி வளைத்துக் கொள்ளும் 4, 5 பலக்கிய (complex) கருதுகோள்களை விட, நேரடியான, எளிய, 1, 2 பிருக்குக் (parsimony) கருதுகோள் கொள்வது சிறந்ததென அறிவியலார் சொல்வர். அம்முறையில் ஒரே கருதுகோளாய், மோசிகீரனார், மோசி கொற்றனார், மோசிக் கரையனார், படுமரத்து மோசி கீரனார், படுமரத்து மோசி கொற்றனார் என்ற 5 குறிப்புகளும் ”படுமரத்து மோசி கீரனார்” என்ற ஒரே ஆளையே குறிப்பதாய்க் கொள்வது நாம் முன் நகர வாய்ப்பாக இருக்கும்.

அதேபோல சங்கறுக்கும் கீர்ந்தொழிலை ஒருகாலத்தில் தமிழ்ப் பார்ப்பனர் செய்தார் என்ற காரணத்தால் எல்லாக் கீரரையும் பார்ப்பனராக்குவது சரி யாகுமா என்பது அடுத்த கேள்வி. ஏரணவியலில் இது அடிப்படைப் பாடம் அல்லவா? சங்க காலத்தில் சில பார்ப்பனர் கீரராய் இருக்கலாம். கீரர்  தொழிற்பெயராயும், இயற்பெயராயும் இருக்கலாம். ஆனால் எல்லாக் கீரரும் பார்ப்பனராகுமோ? அப்படி முடிவுசெய்வது பிறழ்ச்சியாகாதோ? இத்தனைக்கும் சங்கறுத்து வளையல் செய்பவராய் இன்று ஒரு பார்ப்பனர் கூட (அதே போல பெருஞ்சோழர் காலத்தில் ஒரு சான்று கூட) இல்லையே?

மோசி கீரனார் நற்றிணை 342 இல் பாலைத்திணையில் தோழி கூற்றாக ஒரு பாடலும் பாடியுள்ளார்.

புறநானூற்றில் புறம் 50 இல் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையையும் (இவன் பூழி நாட்டிற் சிறிது காலமும், பின் கொங்குக் கருவூரிற் சிறிது காலமும் ஆண்ட செல்வக் கடுங்கோ வாழியாதனின் மகன் ஆவான். தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பூழிநாட்டு மாந்தரத்திலும், கொங்குக் கருவூரிலும் சில காலம் இருந்திருக்கலாம். இவன் செங்குட்டுவனின் சம காலத்தவன், செங்குட்டுவனுக்குச் சற்று அகவை குறைந்தவனாய் இருக்கலாம் என்றே சிலம்பின் வழி புரிந்து கொள்கிறோம். என் சிலம்பின் காலம் கட்டுரையைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.)

மோசிகீரனார் புறம் 154-156 இல் கொண்கானங் கிழானையும், மேலே சொன்ன அகநானூற்று 392 ஆம் பாடலில் ஏழில்மலை நன்னனைப் பற்றியும் பாடியுள்ளார். ஒரு சில உரையாசிரியர் கொண்கானத்தை நம் கொங்கு நாட்டோடு பொருத்திப் பேசுவர். அதைக் காட்டிலும் சேரலத்தின் வடக்காக மேற்கு கரையில் மங்களூரில் இருந்து இன்றையக் கோவாக் கடற்கரை வரையுள்ள கொண்கானப் பகுதியை எண்ணிப் பார்ப்பதும், அதே போல ஏழில் மலை நன்னன் நாட்டை இன்றையச் சேரலத்தின் வடகிழக்கில் கொண்கானத்திற்கும் கிழக்கில் பொருத்திப் பார்த்தால் மேற்குக் கரையையொட்டிய ஓர் அகண்ட பகுதி நமக்குத் தென்படும். இச்சேரலம், கொண்கானம், கோசர் நாடு, கொங்குநாடு என்று பரந்து விரிந்த பகுதியில் தான் மோசி கீரனார் நகர்ந்து அங்கிருந்த புரவலரிடம் பாடியிருந்தார் போலும்.

புறம் 186 என்பது மோசிகீரனார் பாடிய மெய்யியற் பாட்டு.

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்பது அறிகை
மேல்மிகு தானை வேந்தற்குக் கடனே

இக்கருத்து வரும் பாட்டு ஒரு வேதமறுப்புப் பாட்டு. பூர்வ மீமாம்சத்திற்கும், உத்தர மீமாம்சத்திற்கும் முற்றிலும் பொருந்தாத பாட்டு. அரசனை உயர்த்திச் சொல்லும் பாட்டு. இதைச் சமண நெறியாளர் (ஆசீவகம், செயினம், புத்தம் ஆகிய நெறியாளர்) சொல்லுவதிற் பொருளுண்டு. அவருக்கு “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பது நடைமுறை வாழ்வில் ஏற்கத் தகுந்தது. வேதநெறிப் பார்ப்பனர் இதைப் பாடியிருக்க வழியில்லை. உடனே அக்காலத்தில் ஒருசில பார்ப்பனராவது சமண நெறியாளராய் இருக்கக் கூடாதா என்று கேட்டால் ”இருக்கலாம், ஆனால் வேத மறுப்பாளராய் இருக்கவேண்டும்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

அடுத்து புறநானூற்றில் இன்னொரு மோசியையும் நாம் பார்க்கிறோம். அவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார். இவர் புறம் 13, 127-135, 241, 374, 375 ஆகிய 13 பாடல்களைப் பாடியிருக்கிறார். புறம் 13 சோழன் முடித்தலை கோப்பெரு நற்கிள்ளியைப் பற்றி, சேரமான் அந்துவஞ் சேரல் இரும் பொறையோடு கொங்குக் கருவூரின் வேண்மாடத்து மேலிருந்து பாடியதால், உறையூர் ஏணிச்சேரி முடமோசியாருக்கும், மோசி கீரனாருக்கும் இடையே குறைந்தது 70-80 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும். இதை எப்படிச் சொல்கிறோம்?

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை செங்குட்டுவனின் சம காலத்தவன். பெருஞ்சேரல் இரும்பொறையின் தந்தை செல்வக் கடுங்கோ வாழியாதன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்  காலத்தவன். செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் தந்தை அந்துவஞ் சேரல் இரும்பொறை. இவன் நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ் சேரல் காலத்தவன். ஒரு தலைமுறைக் காலம் 25 என்று கொண்டால் மூன்று தலைமுறை என்பது 75 ஆண்டுகளாகும். [கிட்டத்தட்ட 70-80 ஆண்டுகள் என்று கொள்ளலாம்.] செங்குட்டுவன் காலம் பெரும்பாலும் கி.மு.80 என்று சிலம்பின் காலம் கட்டுரைத் தொடரில் முடிவிற்கு வந்த காரணத்தால், ஏணிச்சேரி முடமோசியார் காலம் கிட்டத்தட்ட கி.மு.150-160 ஆகும். இதைத் துல்லியமான கணக்கு என்று சொல்ல முடியாது. இப்போதைக்கு இத் துல்லியம் போதும். இக்காலம் தான் கடையெழு வள்ளல்களின் காலமாயும் தெரிகிறது.

புறம் 127-135, 241, 374, 375 வழி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கடை யெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் ஆண்டிரனைப் பாடுகிறார். இவர் பாடியதைப் பல ஆண்டுகள் கழித்து, புறம் 158 இல் குமணனைப் பாடும் பெருஞ்சித்திரனார் “திருந்துமொழி மோசி பாடிய ஆயும்” என்று பழங்காலம் சொல்லி நினைவு கொள்ளுகிறார். குமணன் என்னும் வள்ளல் கடையெழு வள்ளல்களுக்குப் பல்லாண்டுகள் கழித்து இருந்ததாகவே சங்க இலக்கியத்தில் அறிகிறோம். குமணனின் காலம், கி.மு.80 க்கும் பின்னால் இருந்திருக்கவேண்டும். இன்னும் அக் காலத்தை என் ஆய்வின் வழி, கணிக்கவில்லை

உறையூர் ஏணிச்சேரி என்பது உறையூரில் உள்ள ஒரு பகுதி. முட மோசியார் என்று சொல்லுவதால் மோசி என்பது தொழிற்பெயராகவோ, இயற்பெயராகவோ இருக்க வேண்டும். இப்புலவரின் பெயரே ”மோசி என்பது ஊர்ப்பெயர், கோத்திரப்பெயர்” என்று சொல்வதைத் தவிடு பொடியாக்கி விடுகிறது. இன்றைக்கும் தமிழக, சேரல நாட்டுப்புறங்களில் தொழிற் பெயரையும், இயற்பெயரையும் வைத்தே நெருங்கிய ஒருவர் ஊருக்குள் அழைக்கப் படுவார். [என்னங்க! அந்த கந்தசாமி ஆசாரியை நாளைக்குக் கூப்பிடுங்க! நம்ம கொல்லன் முருகன் பட்டறைக்குப் போயிட்டு வா! தையற்காரர் மாணிக்கம் எங்கே போனார்?)

இனி புறம் 272 ஆம் பாட்டை மோசி சாத்தனார் என்ற புலவர் பாடியதாகக் குறிக்கப் படுகிறது. மூன்று விதமான புலவர்கள் மோசி கீரனார், உறையூர் ஏணிச்சேரி முட மோசியார், மோசி சாத்தனார் என்று அழைக்கப் படுவதால், மோசி என்றபெயர் தொழிற்பெயராக அமைவதற்கே வாய்ப்புக்கள் அதிகம். முதற்புலவரின் இயற்பெயர் கீரன், இரண்டாமவரின் இயற்பெயர் எங்கும் சொல்லப் படவில்லை. மூன்றாமவரின் இயற்பெயர் சாத்தன். 1930 - 50 களில் குப்பன் சுப்பன் என்ற பெயர் தமிழரிடையே அதிகமாக இடப்பட்டது போல் சாத்தன் என்ற பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன அதிகமாகப் புழங்கிய பெயராக இருக்கலாம். இதை நீலகேசி 683 - ஆம் பாடல் (ஆசீவக வாதச் சருக்கம்) தெளிவாகக் குறிக்கிறது. Any Tom, Dick and Harry என்று ஆங்கிலத்தில் சொல்லப் படுவது போல சாத்தன் (here denotes common man) என்ற பெயர் தமிழகத்திற் பொதுப்பெயராக ஒருகாலத்திற் பயன்பட்டிருக்கிறது.

ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லல னாய்விடின் இச்
சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய
நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலும் நினக்குரைத்தும்
ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ?

சாத்தாரம்> சாத்தாரணம்> சாதாரணம் என்ற சொல் ordinary என்ற பொருளைக் குறித்திருக்கிறது. அதேபோல சமணன் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற மூன்று நெறிகள் மக்களால் பெரிதும் பின்பற்றப் பட்டதால்) என்ற பெயர் சமணன்> சாமணன்> சாமாண்யன் என்று பரவியிருந்தது.

இதுவரை பேசிய செய்திகள் மூலம் மோசி என்பது தொழிற்பெயராய் இருந்தால் மேலே கண்ட படுமரத்து மோசி கீரனார், மோசி கொற்றனார், மோசிக் கரையனார், முட மோசியார், மோசி சாத்தனார் ஆகிய எல்லாப் பெயர்களையும் எந்தக் குழப்பமும் இல்லாது ஊர்ப்பெயர், குடிப்பெயர்/தொழிற்பெயர், இயற்பெயர் என்ற முறையில் ஒத்திசைவாகப் பார்க்கமுடியும்.

இனிச் சோழர் காலத்துக் கல்வெட்டுக்களைக் கொண்டு மோசி என்பது பார்ப்பனக் கோத்திரம் என்று சொல்லும் வாக்குவாதத்தைப் பார்ப்போம். முதற் கல்வெட்டு SII XIV No.9 எங்கள் ஊருக்கு அருகில் உள்ள திருப்புத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தின் முதற் சுற்றாலையில் இருக்கும் கல்லில் வெட்டப் பட்டது (On a slab in the first praakaara of the tiruttalisvara temple). அதில் உள்ள கிரந்தப் பகுதியைத் தவிர்த்து தமிழ்ப்பகுதியை மட்டும் இங்கு தருகிறேன்.

--------------------
கோமாறஞ் சடையற்கு யாண்டு
ஆறு எதிர் நான்கு இவ்வா
ண்டு [அ]ருகத்தூர் கிழார் மகன்
மொசி கண்டஞ் சங்கரன் பி
ராமணி மாறம் பட்டத்தா
ள் திருப்புத்தூர்த் திரு[த்]
தளிப் பெருமானடிகளு
க்கு நொந்தாவிளக் கெரிய [வை]
த்த காசு பத்து [*] இவை காத்தெரி
ப்பா யிரத் தெழுநூற்று
வரடி யென தலை மெல
----------

பாண்டிய அரசன் மாறன் சடையனின் ஆறாவது ஆண்டில் (எதிர் நான்கு எதைக் குறிக்கிறது என்று புரியவில்லை. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதால் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறேன்.) அருகத்தூர் கிழாரின் மகனான மொசிகண்டஞ் சங்கரனின் பிராமண மனைவி மாறன் பட்டத்தாள் திருப்புத்தூர் திருத்தளிப் பெருமானடிகளுக்கு நுந்தா விளக்கு எரிய வைத்து காசு பத்துக் கொடுக்கிறாள். இந்தக் கொடையைக் காப்பதற்கு ஆயிரத்து எழுநூற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் பொறுப்பாக்கப் படுகிறார்.

கல்வெட்டு சற்று தெளிவில்லாது வெளிறிப்போய் இருப்பதால் முடிப்பு சரியில்லாது இருக்கிறது. முழுப்பொருளும் உணர முடியவில்லை. இதில் மொசி கண்டஞ் சங்கரன் என்ற பார்ப்பனப் பெயரை எடுத்துக் கொண்டு தான் ’மொசி’ என்னும் சொல்லைக் கோத்திரப் பெயராகச் சிலர் கொள்கிறார்.

ஏற்கனவே சொன்னது போல் தமிழகப் பார்ப்பனரில் கோத்திரப் பெயராகச் சொல்லப் படுவனவற்றுள் மோசி என்ற பெயர் எங்குமே கிடையாது. அச்சுக் காலத்திற்கு முன்ப வரை உயிர்மெய் ஆகாரம், உயிர்மெய் ஒகரம், உயிர்மெய் ஓகாரத்தில் வரும் கால் குறியீட்டிற்கும், ரகரக் குறியீட்டிற்கும் இடையே வேறுபாடு தெரிந்ததில்லை. இடம், பொருள், ஏவல் அறிந்தே அந்த வேறுபாடு கல்வெட்டுப் படிப்போராற் புரிந்து கொள்ளப் பட்டது என்பதையும், அதே போல உயிர்மெய் ஒகரத்திற்கும், உயிர்மெய் ஓகாரத்திற்கும் (இதே போல உயிர்மெய் எகரத்திற்கும், உயிர்மெய் ஏகாரத்திற்கும்) ஒரே போல ஒற்றைக் கொம்பே வீரமா முனிவருக்கு முன் எழுதப் பட்டது என்ற செய்திகளைக் கவனத்திற் கொள்ளும் போது, மொசி என்பது மெரசி என்றும் படிக்கப் படலாம் என்ற பட்டுமை (possibility) நமக்குப் புலப்படும்.

மரிசி என்ற கோத்திரம் தமிழ்ப் பார்ப்பனரிடையே உண்டு. கட்டி கெட்டியாவது போல பலம் பெலமாவது போல மரிசி என்பது பேச்சுவழக்கில் மெரிசி ஆகலாம். மெரிசியில் இருந்து மெரசியாகத் தோற்றம் அழிப்பது தேய்ந்து போன கல்வெட்டில் பெரிதும் நடக்கக் கூடியதே.

இதே போல கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயிலின் கருவறையின் வெளிப்பக்கம் தெற்குச் சுவரில் கண்ட SII XIX No.347 என்ற கல்வெட்டில் ”மொசி ஒற்றியூரன் கூத்தன்” என்று வருவதுங் கூட மெரிசி ஒற்றியூரன் கூத்தன் என்பதாய் இருக்கலாம்.

எழுத்துப் பிழை/ படிப்புப் பிழை ஏற்படக் கூடிய இக்கல்வெட்டுக்களுக்கு நாம் எந்த அளவு ஏற்பளிக்கலாம் என்பது நாம் காணவிழையும் ஒத்திசைவைப் (consistency) பொறுத்தது. மெரிசி என்று படிப்பது பார்ப்பனக் கோத்திரத்திற்கு ஒத்திசைவாக இரண்டு கல்வெட்டுக்களையும் காட்டுகிறது.

முடிவில் two wrongs cannot make one right என்று சொல்லி, 2 கல்வெட்டுக்களையும் மோசி என்ற பெயரைப் புரிந்து கொள்வதிலிருந்து விலக்கி வைக்கிறேன். மீண்டும் பிருக்குக் காரணமே எனக்கு அறிவுரையாய் அமைகிறது.

அடுத்த பகுதியில் மோசி என்ற சொல்லின் சொற்பொருள் எதாக இருக்கலாம் என்று பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 19, 2010

மோசிகீரனார் - 1

அண்மையில் ctamil மடற்குழுவில் மோசி கீரனார் பற்றிய பேச்சொன்று வந்தது. மோசி பற்றிய குறிப்பு ”மோசியூர்/மோசிகுடி” எனும் ஊர்ப்பெயரைக் குறிக்க'லாம்' என்று புறநானூற்று உரையாசிரியர் கூறுவர். அக்குறிப்பை ஏற்கத் தயங்கிப் பார்ப்பனரில் ஒரு தனித்த கூட்டத்தை (கோத்திரத்தை) ’மோசி’ என்ற சொல் குறித்திருக்கலாம் என்று சிலர் சொல்ல முற்பட்டனர். அப்பொழுது இராதாகிருஷ்ண வாரியர் என்னும் கேரள அறிஞர், ”வடக்கே பல மொழிகளிலும், குறிப்பாக இந்தியில் ’மோசி’ என்பது தோல்வேலை செய்யும் செம்மாரைக் குறிக்கிறது” என்றார். அது உண்மையானால், ”அது சங்கத வேர் கொண்டிராதது” என்று மோனியர் வில்லிம்சு அகரமுதலி சொல்லும் போது, ”தோல்வினைஞரைக் குறிக்கச் செருமார்> செம்மார் என்ற சொல் மட்டும் அல்லாது இன்னொன்றும் தமிழில் இருந்திருக்கலாமோ?” என்று நம்மை எண்ண வைக்கிறது. கூடவே ”சங்க காலத்திற் சாதி இருந்ததா, இல்லையா?” என்ற வாக்குவாதத்திலும் வேறொரு பார்வை ஏற்படுத்துகிறது. தோல் வினைஞருக்கு வேந்தனே சிறப்புச் செய்யும் காட்சி என்பது சாத்தாரமானது அல்லவே?.

எதற்கெடுத்தாலும் சங்கதத்தையே அடித்தளமாக்கும் இந்தியவியல் ஆய்வில், தென்தமிழ்ப் பின்புலங்களும் வடநாட்டுச் சொற்களுக்கு இருக்கலாம் என்பது நம் போன்றோர்க்குப் புதிய செய்தி. வடநாட்டுச் சொற்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், கூர்ந்து கவனிப்பது தமிழாய்வருக்கு நல்ல பயனைத் தரும் என்று சொல்லி, மோசியின் தமிழ்ப் பட்டுமை (Tamil possibility) குறித்துத் தனியே ஒரு கட்டுரை அளிப்பதாய்க் கூறி, மோசி கீரனாரின் புறம் 50 ஆவது பாடலைப் பற்றிப் பேசி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, மோசிகீரனார்க்கு கவரி வீசிய காட்சியை அம்மடற்குழுவிற் சுருங்க விவரித்தேன். அதையுங் கூடச் சிலர் மறுத்தார். இன்னுஞ் சிலர் முரசோடு செருமார்க்குத் தொடர்புற்ற நிலையை மோசி கீரனார் என்னும் புலவர் போல்மைப் படுத்திக் காட்டுகிறார் என்று சுற்றி வளைத்துஞ் சொன்னார். அது என்னவோ தெரியவில்லை, சங்கத் தமிழ்ப் பாக்களுக்கு நேரடியான, பொருத்தமான விளக்கங்கள் சொல்லுதற்கு மாறாகப் பார்ப்பனரை எப்படியாவது உள்ளே கொணர்ந்து சுற்றிவளைத்து பொருந்தச் சொல்லுவதே சிலருக்கு வாடிக்கையாகிறது. இவரின் சிந்தனை இப்படித்தான் இருக்கும் போலும். ஆய்வு என்று வந்தால் பல்வேறு பார்வைகள் எழுவது இயற்கை தான். பொதுவாய், எப்பொழுதும் உரையாசிரியர் கருத்தோடு மட்டுமே அமையாது, மூலத்திலிருந்த படி, இன்றையச் சிந்தனையில் புறப்பாட்டுக்களை மறுவாசிப்பு செய்ய விழைபவன் நான். புறம் 50 பற்றிய என் மறு வாசிப்பு கீழே தரப்படுகிறது.

இப்பாடலுக்குட் சட்டென்று போகாது, முரசின் அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொண்டு போனால் நன்றாக இருக்கும். தமிழிசை பற்றிப் பேசும் போது, வீ.பா.கா. சுந்தரத்திற்குக் கடன்படாமல் நான் என்றுமே எழுதியது இல்லை. வழக்கம் போல அவர் செய்திகளுடன் தொடங்குகிறேன். (இது போக http://www.anothersubcontinent.com/forums/lofiversion/index.php?t6900.html என்ற தளத்திலும் முழவுக் கருவிகள் செய்முறை பற்றி அறியலாம்.)

முழவு என்பது ஒருமுகம் கொண்டது. (முரசு சிறியது, முரசம் பெரியது.) ஒரு முக முழவைப் போல் இருமுக, மும்முக....ஐம்முக முழவுகள் எனவும், குட முழவு எனவும் பல முழவுகள் உண்டு. முழவைப் பற்றிச் சொல்லும் போது பறை பற்றியும் நமக்கு எண்ணத் தோன்றும். முழவு, பறை என்ற இரு தோற் கருவிகளுக்கும் அடிப்படை வேறுபாடுண்டு. (தோல், குடம் இரண்டும் சேர்த்த) முன்னது முழுதும் மூடப்பட்டது. (தோல், உருளைக் கூடு இரண்டும் சேர்த்த) பின்னது திறவையானது. முரசு என்பது முழவு வகை சேர்ந்தது. மத்தளம், உடுக்கை, மேளம் போன்றவைகள் இருமுக முழவுகளாகும். இன்றும் ஐமுக முழவு -பஞ்சமுக வாத்தியம்- என்பது தில்லைச் சிற்றம்பலத்து வழக்கில் உண்டு. அதன் குடம் மண்ணால் ஆனது. பல்முக முழவுகளை இசைப்போர் நம்மூரில் அருகிவிட்டனர். தாள முழக்கம் பற்றிய அறிவு, திறமை, செய்முறை நுட்பம் போன்றவையும் நம்மிடம் குறைந்து வருகின்றன. மேல்நாட்டு இசை மோகத்திற் தமிழிசை நுட்பம் நலிந்து கொண்டிருக்கிறது.)

முரசு  இசைக்கருவி எப்படிச் செய்யப் படுகிறது என்பதைச் சுருக்கமாய்ப் பார்ப்போம். யா (ஆச்சா என்றும் இதைச் சொல்வார்; இதைக்கொண்டு நாகசுரம், புல்லாங்குழல் செய்வார்.) போன்றதோர் கடுமரத்தை வெட்டி யெடுத்து அதை உளியாற் செதுக்கி அரைக்கோளம் ஆக்கி, உட்புறத்தைச் சுரண்டிக் கலஞ்செய்து (கல்லப்பட்டது கலம். இக்கலத்திற்குப் பத்தல்/பத்தர் என்று பெயர் சொல்வார். குடம், தாழி, வயிறு, அகடு, அகளம் என்றும் சொல்லுவதுண்டு), கலத்தின் வாயைத் தோற்போர்வையால் மூடி, அதற்கும் மேல் ஒரு வளையம் வைத்து, பத்தரைச் சுற்றி வார்கொண்டு வளையத்தை இறுகப் பிணைத்துக்கட்டி முரசு உருவாக்குவார். வார்ப்பட்டையால் இறுக்க, இறுக்க, வாயை மூடிய தோலில் இறுக்கம், (விரைப்பு, திணுக்கம் - tension என்றுஞ் சொல்லலாம்.) கூடிக்கொண்டே போகும். தோலைக் கோல்கொண்டு தட்டும்போது ”தம்,தொம்” என்று அதிரொலியெழும்.

முரசைப் பார்த்திராதவர் இக்கால நாகசுர மேளத்துத் தபலைக் கருவியை (தபலை&gt ;தவலை> தவுலை> தவுல்) எண்ணிப் பார்க்கலாம். மேளத் தபலை ஓர் இருமுகக் கருவி. வடநாட்டுத் தபலை (> தபலா) ஒருமுகக் கருவி. நம்மூர் மேளத் தபலை பலாப்பழம் போல் உருளையுருக் கொண்டது. அதன் உட்புறத்தையும் இப்படித் தோண்டிக் கூடாக்கி இருமுக வாய்களிலும், போர்வையாய்த் தோலை விரித்து அவற்றின்மேல் இரு வளையங்களை வைத்து, நீண்ட வார்ப்பட்டை மூலம் இறுக்கிப் பிணைப்பார். பத்தரை மூடிய தோல் எவ்வளவு இறுக்கப் படுகிறதோ, அவ்வளவிற்குப் பிசிறில்லாது வட்டத் தோலின் நடுவிருந்து ஒரு சுரம் பிறக்கும். வட்டத் தோலின் மையத்தில் இருந்து விலகி வெவ்வேறு சுரங்களை ஒலித்துக் காட்டலாம்.

மேளத் தபலையில் இரு வளையங்களை வைத்துப் பிணைப்பது போல் முரசில் ஒரு வளையத்தை வைத்து வார்ப்பட்டை கொண்டு பத்தரைச் சுற்றி வந்து இறுக்கிப் பிணைப்பார்கள். வடநாட்டுக் கருவியான ஒருமுகத் தபலையும், நம் முரசு போலவே கட்டப்படுவது தான். வடநாட்டுத் தபலையின் பத்தல், சில போது மாழையாலும் அமையும். நம்மூர் முரசத்தின் பத்தல் எப்பொழுதுமே உறுதிவாய்ந்த மரத்தால் ஆனது. (வீணைப் பத்தல், பலாவால் அமைந்தது.).

இக்காலத்தில் மத்தளம் போன்ற கருவிகளில் கட்டப்படும் தோல் ஒற்றைத் தோல் அல்ல. அது வெட்டுத் தோல், கொட்டுத் தோல், உட்காரத் தோல் என்ற மூவகைத் தோல்களாய் கன்று, ஆடு, எருமைத் தோல்களைக் கொண்டு ஒன்றின் மேல் ஒன்றாய் வச்சிரப் பசையால் ஒட்டப்பட்டு அதற்கு மேல் வச்சிரமும், இரும்புத்தூளும் காந்தயத் தூளும் (manganese dust) கலந்த மாழைப் பூச்சும் (metallic coating) சேர்ந்து அமையும். (கஞ்சிரா போன்ற சிறுபறை உடும்புத் தோலால் செய்யப்பட்டது.) மத்தளத்தின் தோற் சேர்மானம் எல்லா இடத்தும் ஒரே திண்ணத்தில் (thickness) இருப்பதில்லை. வட்டத் தோலின் நடுவில் சற்று திண்ணம் கூடுதலாகவும், அதன் விளிம்புகளிற் குறைந்தும், நிறம் கருப்பாகவும் இருக்கும். இக் கருவட்டப் பகுதியைத் தான் கரணை என்றும், கரணையின் மேடான மைய இடத்தை அதைப்பிடம் என்றும் சொல்வார். கரணையின் மேலுள்ள மாழைப் பூச்சால் ஒருவித வழவழப்பும் தோற்சேர்மானத்திற்கு ஊட்டப் படுகிறது. பொதுவாக எந்த முழவிலும் தோல் சுரசுரப்பாய் இருக்காது. நாளாவட்டத்தில் வழவழப்பு இருந்தால் தான் அதிர்வொலியும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

இதேபோன்ற முத்தோற் சேர்மானம் (இதைத் தொப்பித் தோல் என்பார்.) முரசில் உண்டா என்று அறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. அதேபொழுது முரசில் பத்தலைப் போர்த்தியது வெறும் ஒற்றைத் தோல் தான் என்றும் சொல்ல முடியாது. இக்காலத்தில் நகரா என்ற பெயரில் சில கோயில்களில் முரசங்கள் உள்ளன. அவற்றின் கட்டுமானம் எப்படி என்பது ஆய்வு செய்ய வேண்டியதாகும். முரசுசெய் நுட்பியலும், அறிவியலும் மீண்டும் சோதனை-வழு (trial and error) முறையில் திரும்பக் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

தொடக்க காலத்தில் முழவிசைக்கத் தெரிந்த பாணர், செருமாரின் (தோல் வினைஞரின்) உதவியின்றி முழவுகளை உருவாக்கியிருக்கவோ, பேணவோ வாய்ப்பில்லை. பாணர் - செருமார் கூட்டுறவில் தான் முழவும், பறையும் தோன்றியிருக்க முடியும், தோல், வார்ப்பட்டை, ஆகியவற்றை உருவாக்கிக் கட்டுதற்குச் செருமார் அறிவும், செய்முறையும் பயன்பட்டிருக்க வேண்டும். இக்கருவிகளில் எக்குறை ஏற்பட்டாலும், அதைத் தீர்க்கச் செருமார் வந்திருப்பர். இன்றும் தோல்வினைஞரிடம் தான் இந்நுட்பம் செறிந்துள்ளது.

இனி ஈர்ந்தண் முழவு என்ற கலைச்சொற் பயன்பாட்டைப் பார்ப்போம். பொதுவாய் எல்லாத் தோல்களிலும் எத்தனை நாட்பட்டாலும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். தோல் என்பது ஈரத்தோடு நிறைந்த புரதம் போன்ற வேதிப் பொருள்களால் ஆனது. ஈரப்பதத்தைப் பொறுத்து ஒலியின் அதிர்வு மாறுபடும். நட மண்டிலத்துச் (நடு ஸ்தாயி) ச எனும் ஒலிக்காகச் சுருதிசேர்த்த முழவு, சற்று ஈரம் கூடினால் மெலிவு மண்டிலத்தில் உள்ள நி - க்கும், முன்னாற் சுருதிகட்டிய நடு மண்டிலச் ச- வுக்கும் இடையில் சுருதி இறங்கிப் போகலாம். பொதுவாக ஈரப்பதன் கூடக்கூடச் சுருதிகள் இறங்கும். சுருதிகளைக் கூட்டவேண்டுமானால், மேலே சொன்னதற்கு எதிராகப் பறையிசைஞர் நெருப்புமூட்டி அதன் கதிர்வீச்சில் (radiation) பறையைக் காட்டி தோலின் ஈரப்பதனைக் குறைப்பார். அப்படிச் செய்வதாற் சாப்பறையைக் கொட்டும் பொழுது கடுவோசை எழும். இறங்கிய சுருதிக்கு ஈர்ந்தண் முழவும், ஏறிய சுருதிக்கு கதிர்வீச்சிற் காட்டிய சாப்பறையும் எடுத்துக் காட்டுக்களாகும்.

ஒரு முழவில் எழும் ஒலி அதன் தோலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இழுவை விசை, தோலின்மேல் போதும் கோலின் அடிப்பு விசை, தோலின் உள்ளகப் புரத அமைப்பு, அதன் ஈரப்பதம் என்று பல்வேறு வேறிகளை (variables) வைத்து மாறுபடும். எனவே ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு சுரத்திற்குத் தக்க சுருதி சேர்க்கப்படும்.

முழவுபற்றிய இவ்வடிப்படைச் செய்திகளோடு நின்றுவிடாமல், ‘மண்ணுதல்’, ’பீலி அணிதல், சேக்கை’ எனும் 3 வேறு சொற்கள் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்வது பாட்டைப் புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

முதலில் மண்ணுதலைப் பார்ப்போம். முள்>* (மள்)> மண்> மண்ணுதல் என்பதற்கு குளித்தல், முழுகுதல் என்றே பொருள். மண்ணுமங்கலம் என்பது அரச நீராட்டு விழா. மண்ணுதல் என்ற சொல் வழக்கிறந்து இன்றைக்குப் பெயரும் துணைவினையுமாக ’மஞ்சனம் செய்தல்’ என்று திரிந்து புழங்கும். பெருமாள் கோயில்களில் நல்லதமிழில் திருமஞ்சனம் என்று சொல்வதைச் சிவன் கோயில்களில் ”அபிஷேகம்” செய்வதாய்ச் சங்கதப்படுத்துவார்.

திருமஞ்சனம் செய்தல் என்பது வெறுமே நீரால் மட்டுமே குடமுழுக்குச் செய்வதில்லை. பற்றியாளன்> பத்தியாளன்> பக்தியாளன் விரும்பும் வகையெல்லாம் பால், தயிர், நெய், தேன், இளநீர், பன்னீர், வித விதமான பழச்சாறு என்று பல்வேறு நீர்மங்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்வார். இன்னும் சொன்னால் சந்தனம், திருநீறு, மஞ்சள், குங்குமம், சவ்வாது, புனுகு, சோறு என்று விதவிதமான பொடி, திண்மக் கலவைகளாலும் திருமஞ்சனம் செய்வதுண்டு. ஒவ்வொரு நீர்மம்/ திண்மம்/ பொடிக்கலவையாலும் திருமஞ்சனம் செய்கையில் இடையே ஒரு முறை நல்நீரால் இறைவன் திருமேனியை முழுக்காட்டுவார். பற்றியாளனின் செல்வ நிலைக்குத் தக்கத் திருமஞ்சனங்கள் 1, 2 மணி நேரங்கள் கூட நீள்வதுண்டு.

அடுத்துத் திருமஞ்சனம்/ குடமுழுக்கு என்பது வெறுமே சிவனுக்கும், விண்ணவனுக்கும் மட்டுமே செய்வதில்லை. கொற்றவைக்கும் (அம்பாளுக்கும்), ஏன் சிறுதெய்வங்களுக்கும் கூடச் செய்வதுண்டு. இன்று நாகரிகம் கூடிப் போன காரணத்தால் வழிபாட்டு முறையில் வன்செயல்கள் கூடாது என்ற காரணத்தால், சில நடைமுறைகள் மாறிப் போயின. சில காலங்களுக்கு முன் இறைத் திருமேனிக்குச் செய்யும் திருமஞ்சனங்களில் அரத்தம், நிணம் போன்றவை கலந்து செய்யப் பட்டதுண்டு. இன்று அவற்றிற்குப் பகரியாய் எலுமிச்சம் பழச்சாறிற் கலந்த குங்குமத்தைப் பயனுறுத்துவார். [நல்ல நாள், பெருநாட்களில் குங்குமம் தடவிய பூசனிக்காயை வீதியில் உடைக்கிறாரே அதுகூட அரத்தம் தெறிக்கும் கபால உடைப்புத் தான்.) இன்றைக்கு 100, 200 ஆண்டுகள் முன்கூட அரத்தம் கொண்டு திருமஞ்சனம் செய்வது பார்ப்பனர் வணங்காத தெய்வங்களுக்கு இயல்பாக இருந்தது. அதுவும் குறிப்பாகக் கொற்றவைக்கு (அவள் பார்ப்பனர் வணங்கத் தயங்கிய தாய்த் தெய்வமாகத்தான் முதலில் இருந்தாள். பின்னால் தான் தயங்கித் தயங்கிப் பார்ப்பனரும் சிவநெறியாளரும் அவளை அம்பாளாக ஏற்றுக் கொண்டார்.) ஓர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னாற் கூட சென்னைக்கு அருகிலுள்ள பெரியபாளையத்து பவானியம்மனுக்கு அரத்தக் குடமுழுக்கு (கோழி, ஆட்டு அரத்தம்) ஆடிவெள்ளியிலுண்டு. காலத்தின் கோலமாய் இன்று எல்லாம் மாறிவிட்டது. பண்டாரப் பூசாரி போய் பார்ப்பனப் பூசாரி கோயிலுக்குள் வந்துவிட்டார்.

இதுபோல் அரத்தக் குளியாட்டு அரசனின் முரசிற்கும் நடைபெற்றிருக்கலாம். ஏனெனில் அரசமுரசம் / போர்முரசம் கொற்றவையின் கூறு. முரசொலி கொற்றவையின் பேரொலி. முரசிற்குக் குளியாட்டுவதைக் கொற்றவைக்குக் குளியாட்டுவதாகவே கொள்ளுவர். அதேபொழுது, அரத்தத்தை அப்படியே முரசுத் தோல்மீது கொட்டிவிடமுடியாது. அரத்தம் சூடாக இருக்கும் வரைதான் உலராது இருக்கும். 8 மணி நேரம் தாண்டினால், குளிர்ந்து போன அரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டிபட்டுப் போகும். அதைக் கொண்டு முரசுத் தோலின் மேல் கொட்டினால் முரசும் கெட்டிதட்டிப் போகும். அப்புறம் அரத்தக் கட்டியைச் சுரண்டித் தான் எடுக்க முடியும். அப்படிச் சுரண்டி எடுத்தால் இசைக்கக் கூடிய தோலின் வழவழப்புக் கெட்டுப் போகும். இசை நாராசமாய் ஒலிக்கும். எனவே முரசொலி எழவேண்டுமானால், முழுக்காட்டப் பயன்படும் அரத்தம் தோலிற் படாது பத்தலின் மேல்தான் கொட்டியிருக்க முடியும். அங்கும் இங்குமாக ஒரு சில அரத்தத் துளிகள் வேண்டுமானால் தோலின்மேற் படலாம். அப்புறம் ”ஏன் முரசின் மேல் அரத்தம் மண்ணினார்?” என்றால் அது கொற்றவையின் மேல் அவர் கொண்ட பற்றியின் அடையாளம்; அவ்வளவுதான்.

இதுபோகத் தோற்கருவி பற்றிய செய்திகள் அறியாத நம்மிற் சிலர் ”அவ்வப்பொழுது முரசை வெறும் நீரால் குளிப்பாட்டி அழுக்கை போக்கினார்” என எண்ணிக் கொள்கிறோம். அது வெறும் கற்பனை. பூசை நேரத்தில் நடக்கும் வெவ்வேறு பொருட்களின் சேர்க்கையை விலக்கித் தூய்மை செய்வது தவிர்த்து வேறு எந்தக் காலத்தும் நன்னீரால் முழவைக் குளியாட்ட வேண்டிய தேவையில்லை. அதாவது முரசின் அலங்காரத்தைக் கலைக்கும் போதுதான் நன்னீர் முழுக்காட்டிற்கு வேலையுண்டு. அப்படி அலங்காரம் செய்வது, போருக்குப் போவது, பூசைக்கு உட்படுவது போன்ற காரணங்களில் மட்டுமே அமையும்.

இனிப் பல்வேறு விதமான அலங்காரங்களைப் பற்றிப் பார்க்கும் போது தான் பீலி அணிதலுக்கு வருகிறோம். இன்றைக்கு முரசத்தில் (நகராவில்) பீலி கட்டுவதை நாம் எங்கும் காணுவதில்லை. ஆனால் மயிற்பீலிச் சுருளைக் காவடியிற் கட்டுவதை இன்றும் பார்க்கிறோம். தைப்பூசம் வந்தால் பழனிக்கு எத்தனை காவடிகள் போகின்றன? நான் எங்கள் சிவகங்கைப் பக்கத்து வழக்கத்தைச் சொல்லுகிறேன். (மற்ற ஊர்களில் நடைமுறைகள் சற்று மாறியிருக்கலாம். ஆனால் பெரிதும் மாறியிருக்க முடியாது.) நான் இங்கு சாத்தாரக் காவடிகள் பற்றி மட்டுமே சொல்லுகிறேன். பல்வேறு விதமான விதப்புக் காவடிகள் பற்றிச் சொல்லவில்லை. அவற்றை உருவாக்கும் விதமே தனிக்கலை.

காவடி எடுக்க விரும்புகிறவர் எல்லோரும் தம் காவடிகளைத் தம் ஊரில் உள்ள “சாமிவீட்டில்” (சாமி வீடு என்பது காவடியெடுப்பவர் எல்லோரும் சேர்ந்து பொதுப்பட முருகபூசை செய்யும் இடமாகும்.) சமர்ப்பித்து, அங்கு விவரம்தெரிந்த, விரதமிருந்த பெரும் பற்றியாளர் சிலர் காவடிகளை நீர் கொண்டு கழுவி திருநீறு, சந்தனம் தடவி, குங்குமம் இட்டு, மயிற்பீலிச் சுருள் கொண்டு காவடியின் 4 பாதங்களோடு சேர்த்துக் கட்டி அலங்கரித்து, காவடியின் விற்புறத்தில் பட்டுத்துணி போர்த்தி மணிக் குஞ்சலங் கட்டி, பூமாலைகளை அணிவித்துக் காவடிகளை அணியமாக்குவர். நம் ஊரில் இருந்து புறப்படும் காவடிகள் எல்லாம் சாமி வீட்டில் வைக்கப்பட்டு பூசையில் அவை முன்னிருக்கும் சாமியாடியால் வாழ்த்துச் சொல்லப்பட்டு காவடி தூக்குபவரின் தோளில் ஏற்றப்படும். பின் பழனி வரை காவடி தூக்கிச் செல்லப் பட்டு பழனி மலையில் கோயிலை வலம் வந்து இறைவனை வழிபட்டுக் காவடிகள் செலுத்தப்பட்டு, பின் பழனியில் உள்ள சாமி வீட்டில் ஒருங்கு சேர்க்கப்பட்டு அங்கும் ஒரு பூசை நிகழ்ந்து அதற்குப் பிறகே அலங்காரம் கலைக்கப் படும்.

இப்படி அலங்கரிக்கப்பட்டு பூசையிற் கலந்துகொண்ட காவடிகளை விரதர், காவடி தூக்குபவர், சாமியாடிகள் தவிர வேறுயாரும் காவடிகளைத் தொடக் கூடப் பயப்படுவார். நாட்டுப்புறங்களில் இருக்கும் எல்லோர்க்கும் இது நன்றாகவே தெரியும். வருவோர், போவோரெல்லாம் காவடிகளைத் தொட்டு விடமுடியாது. இந்த அடிப்படை அறிவில்லாத இற்றைத் தமிழர் இருக்க முடியாது. இதேபோல போருக்கான பூசையில் கொற்றவைக்கு நேர்ந்து கொண்ட முரசத்தை, மயிற்பீலிகள், மணிக்குஞ்சலங்கள் ஆகியவற்றோடு உழிஞைப்பூ சூடிய முரசத்தை, வருவோர் போவோரெல்லாம் தொட்டிருக்க முடியாது. விரதம் ஏற்றுக்கொண்ட இசைக் கலைஞனும், அவனை ஒட்டியோனும் தான் தொட்டிருக்க முடியும். சங்க காலத்தில் இருந்த எந்த சாத்தாரத் தமிழனுக்கும் இது தெரிந்திருக்கும். மோசி கீரனாருக்கும் இந்த அடிப்படை உண்மை தெரிந்திருக்கும்.

நாம் இனிப் பார்க்கவேண்டிய மூன்றாவது சொல் ’சேக்கை’ என்பதாகும். புறப்பாட்டில் ’சேக்கை’ என்ற சொல்லே வருகிறது, ’கட்டில்’ என்ற சொல் வரவேயில்லை. அது பாட்டிற்குக் கீழுள்ள விளக்கக் குறிப்பில் வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் வேண்டுமானால் கட்டிலின் பொருள் ’படுக்கை’  ஆகலாம். அதற்கு முந்தையக் காலத்தில் அதன்பொருள் வெறும் இருக்கை என்பதே. அரசு கட்டில் எப்படி அரசன் படுக்கையல்லவோ (அரசன் அமரும் இருக்கை),  அதுபோல முரசுச் சேக்கை என்பது முரசிருத்தும் இடம். அது படுக்கையல்ல. அரசுகட்டிலில் அரசன் ஏறுவதுபோல முரசிருக்கும் சேக்கையில் மோசிகீரனார் ஏறுகிறார். அதில் ஏறிப்படுத்ததாக நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். அதேபோல முரசின் சேக்கையில் மோசிகீரனார் ஏறியபொழுது முரசு அதன்நடுவில் இருந்ததா? மோசிகீரனார் முரசுச் சேக்கையின் ஓரத்தில் அமர்ந்தாரா? அன்றி அவர் ஏறும்போது முரசே அங்கில்லாது சேக்கையின் முழுதுமாய் ஏறி அமர்ந்தாரா என்பது தெளிவாகப் பாடலிற் புரியவில்லை.

இனிப் புறம் 50 ஆம் பாட்டைக் கவனிப்போம்.

மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபால் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்
அதொனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடைமுழவுத் தோள் ஓச்சித் தண்ணென
வீசீ யோயே வியலிடங் கமழ
இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில் நீ ஈங்கிது செயலே

இங்கு சொல்லப்படும் முரசும் யா போன்ற கருத்த மரம் ஒன்றாற் செய்யப் பட்டிருக்கிறது. அதிற் போர்த்தியிருக்கும் தோல் எந்தத் தொய்வும் இன்றி, எக்குற்றமும் சொல்ல முடியாத அளவுக்குச் சரியான இறுக்கத்தோடு இருக்கிறது. [மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் = குற்றஞ் சொல்ல முடியாதபடி இழுத்துக் கட்டப்பட்ட வாரோடு கரும் பத்தர் இருக்கிறது.- It is tightly lashed with a very long belt that you cannot find fault with.]

அடுத்த 3 வரிகளில் முரசத்தின் மேற்செய்த அலங்காரம் வண்ணிக்கப் படுகிறது. மயிர்ப்பீலிச் சுருளும், ஒளிதரும் மணிக் குஞ்சலங்களும் முரசின் மேல் அணிவிக்கப் பெற்றுள்ளன. பொன்போலும் ஒளிநிறைந்த உழிஞைப்பூ சூட்டப் பட்டிருக்கிறது. [ஒரு கோட்டையைப் பிடிக்கப் போகும் முன்னால் முரசின் மேல் உழிஞைப் பூ சூட்டப் பெறுதல் இயல்பான காட்சியே.]

மேலே கூறிய அலங்கார விவரிப்பு எதிரியின் கோட்டையைப் பிடித்து வெற்றி பெறுவதற்கு முன்னாலா, வெற்றி பெற்ற பின்னாலா என்ற கேள்வி நமக்கு எழும்பும். ‘குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வருதல்’ என்ற வாசகத்தால் அலங்கார விவரிப்பு மாற்றார் கோட்டையைப் பிடித்து வெற்றி பெற்றபின்னால் என்பதைத் தெளிவாகப் புரியவைக்கிறது. ஏனெனில் உழிஞைப் போரில் வெற்றிபெற்ற முரசத்திற்குத்தான் குருதியால் மண்ணுமங்கலம் நடைபெறும். அதாவது குருதி வேட்கை உருகெழுந்து நிற்கும் முரசத்திற்குத் தான் அரத்தத்தால் மண்ணுதல் நிகழும். .

எனவே இங்கு முதல் எட்டு வரிகளில், “கொற்றவைக்குப் பூசை நடத்தி அலங்கரிக்கப் பட்டு உழிஞைப் போருக்குச் சென்று குருதிவேட்கையைத் தணித்து வரும் அரச முரசம் மண்ணி வாரா நிலையில்” என்று “கட்டியக் கிளவி” (conditional clause) சொல்கிறார். அப்படியானால் என்ன பொருள்? போருக்குப் போன முரசும் பொதுவாக அரத்தத்தில் மண்ணி வரும். இப்போதோ, மண்ணிவராது நிற்கிறது. அந்நிலையில், எண்ணெய் நுரை போற் சிதறிக்கிடக்கும் வெண்பூக்கள் நிறைந்த முரசத்தின் சேக்கையில் ஏறி உட்கார்ந்து விடுகிறார். அவர் உட்கார்ந்த போது முரசம் அங்கு இருந்ததா, இல்லாமற் போனதா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இங்கே 2  விளக்கங்கள் தான் இயல்பாகச் சொல்லமுடியும். ஒன்று ஏரணத்திற்குப் பொருந்தாது; இன்னொன்று பொருந்தியது.

முதல் விளக்கத்தின் படி, அலங்கரிக்கப் பட்ட முரசம் உழிஞைப் போருக்குப் போயிருக்கிறது. முரசு கட்டிலில் சிறிய வெண்பூக்கள் தூவிக் கிடக்கின்றன. முரசம் திரும்பி வாராத நிலையில் மோசிகீரனார் முரசுகட்டில் ஏறி விடுகிறார். இவ்விளக்கம் ஏற்பதில் சில சிக்கல்கள் உண்டு. எப்பொழுது வெண்பூக்கள் சேக்கையில் சிதறிக் கிடக்கிறதோ, அப்பொழுதே மோசி கீரனார்க்கு சேர நாட்டு அரசன் உழிஞைப்போரில் ஈடுபட்டிருக்கிறான் என்ற ”சாத்தாரச் செய்தி” தெரியாமலா போயிருக்கும்? இச்சிந்தனை கூட இல்லாது சேக்கையில் மோசி கீரனார் ஏறியது அவரைப் பெரும் முட்டாளாகக் காட்டுகிறது. உழிஞைப் போருக்குச் செல்லும் முரசுக்குச் செய்யவேண்டிய அத்தனை நடைமுறைகளையும் தெள்ளத் தெளிவாக விவரிக்கும் புலவருக்கு அம்முரசு கட்டிலில் ஏறக்கூடாது என்ற கட்டளைமட்டும் தெரியாது போயிற்றா? நம்மால் நம்ப முடியவில்லை.

இனி 2 ஆம் விளக்கத்திற்கு வருவோம். முரசம் அங்கு தான் உள்ளது. ஆனால் கட்டிலில் இல்லை. அலங்கரிக்கப் படாத நிலையிற் கீழே கிடக்கிறது. புலவருக்கு அசதி. (ஏன் அசதி? முரசத்தின் இறுக்கத்தைச் சரிசெய்ய ஒருவேளை செருமாராகிய அவர் அழைக்கப் பட்டிருக்கலாம். முரசத்தைப் பேண வந்தவர் வேலையின் கடுமையில் தன்னை மறந்து மென்பூஞ் சேக்கையில் ஏறிவிட்டார்.) பிறகு ஏன் முரசின் அலங்கார விவரிப்பைப் பாவிற் சொன்னார் என்பது அடுத்த கேள்வி. “மன்னா! அலங்காரஞ் செய்து உழிஞைப் போருக்குப் புறப்பட்டுப் போய் வெற்றி பெற்று மண்ணுமங்கலம் செய்து வரும் முரசம் என்றிருந்தால் நான் சேக்கையில் ஏறியிருக்கவே மாட்டேன். இப்பொழுது முரசம் பேணவந்த நான் அசதி மிகுதியால் கட்டிலில் ஏறி அமர்ந்து விட்டேன். (படுத்ததாய்ப் பொருளில்லை.) ஆனாலும் உன் வீரர் அதைக் குற்றமாய்க் கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது என் களைப்புத் தீரக் கவரி வீசிச் சிறப்புச் செய்திருக்கிறாய்? (தண்ணென வீசியோயே என்பதால் கவரியை நாம் ஊகித்து உணர்கிறோம்.) முரசைப் பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியும் என்று நீ பாராட்டினாய் போலும்! உன் செயல் புகழப்படவேண்டிய செயல் அல்லவோ? - என்று சொல்கிறார். .

இரண்டாவது விளக்கம் அப்படியே இயல்பாகப் பொருந்துகிறது. முரசிற்கான நடைமுறையை விவரிக்கத் தெரிந்தவர் தன் நடவடிக்கையின் உள்ளார்ந்த ஏரணத்தை விளக்குவதாகவும் பாட்டின் அடிகளைக் கொள்ளமுடியும். ”உழிஞைப் போருக்குப் போகாத நிலையில் முரசின் சேக்கையில் நான் ஏறி விட்டேன். இருப்பினும் என் மேல் பழி சொன்னார், நீ பொருட்படுத்தவில்லை? என்னே உன் உள்ளம்?”

”இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்”

என்பவை  செயினம், அற்றுவிகம் (ஆசீவகம்) போன்ற நெறிமுறையார்க்கும் ஒத்த சொற்கள் தாம். இம்மையில் எல்லோருக்கும் பொருத்தமானவராய் இருந்தால் உயர் உலகத்தில் தங்கி உரையும் வாய்ப்புண்டு என்ற சொற்கள் வேத நெறி சேர்ந்தவை அல்ல. அவை வேத மறுப்பு வரிகள். (வேத நெறியில் ஆழ்ந்த பார்ப்பனராய் மோசிகீரனாரைக் கொள்ளமுடியாது என்பதற்கு இந்த வரிகளும் சான்றாகும்.]

ஆகப் பாட்டைப் படித்தால் செருமார் ஒருவர் போர்முரசு இருத்தும் கட்டிலில் தன்னையறியாது அமர்ந்து விடுகிறார். யாரோ சேவகர் இதை ஊறாகக் கொண்டு அரசன்பால் எடுத்துச் சொல்ல, அரசன் அதைப் பொருட்படுத்தாது அங்கு வந்த புலவர் நிலையைப் பார்த்துக் கவரி வீசிப் புலவருக்குச் சிறப்புச் செய்கிறான். செருமாரானாலும் தீண்டத் தகாதவராய் அக்காலத்திற் கருத வில்லை. தமிழறிந்தவர் இங்கு போற்றப்படுகிறார். அரிதில் காணும் காட்சியே இது.

மோசி கீரனாரைப் போலவே இன்னொரு புலவரான உறையூர் ஏணிச்சேரி முட மோசியாரையும், தொண்டூர் கல்வெட்டில் (Early Tamil Epigraphy inscription No.76. presented in in page 427 of Iraavadham Mahadevan) குறிப்பிடப் பட்ட மோசியைப் பற்றியும், செருமார், மோசி என்ற சொற்கள் எப்படித் தோல்வினைஞரைக் குறிக்கலாம் என்ற சொற்பிறப்புப் பட்டுமையையும், அடுத்து வரும் பகுதிகளிற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. இந்தக் கட்டுரையை ctamil mail list இல் வெளியிடுவதற்குத் தோதாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்குச் சில நாட்களாகும். அதற்கிடையில் இங்கு தமிழ்ப் படியை அனுப்பி வைக்கிறேன்.