Tuesday, October 05, 2010

மோசி கீரனார் - 3

மோசி என்ற சொல் வடபுல மொழிகளிற் தோல்வினைஞரைக் குறிப்பதாகக் கேள்விப்படுவதால், அப்படியொரு பொருட்தொடர்பு ஒரு காலத்தில் தமிழில் இருந்திருக்கக் கூடுமோ என்று ஐயுற்ற காரணத்தால் இக் கட்டுரைத் தொடர் எழுந்தது. தோல்சார்ந்த சொற்கள் தமிழிலெழும் முறையையும், மோசி என்ற பெயர்ச்சொல் தோலைக் குறித்து எப்படி இயல்பாக எழலாம் என்பதையும் இனிப் பார்ப்போம். .

தமிழில் சுட்டடிப் பிறந்த சொற்கள் 75% - ற்கும் மேலே தேறலாமென்று பாவாணர் சொல்வார். அவர் கூற்றின்படி, ஆகாரச்சுட்டு சேய்மைச் சுட்டு ஆகவும், ஈகாரச் சுட்டு அண்மைச் சுட்டாகவும், ஊகாரச் சுட்டு முன்மைச் சுட்டாகவும் தொடக்க காலத்திற் பயன்பட்டன. நாளாவட்டத்தில் ஊகாரச் சுட்டின் முன்மைக் கருத்தினின்று, தோன்றல் கருத்தும், அதனின்று முற்படற் கருத்தும், அதனின்று முற்செலவுக் கருத்தும் பிறக்கும். முற்செலவில் இருந்து நெருங்கலும், நெருங்கலிலிருந்து தொடுதலும், தொடுதலிலிருந்து கூடற் கருத்தும் பிறக்கும். இங்கு நெருங்கல் கருத்தும், (அதனோடு தொடர்புள்ள பொருந்தற் கருத்தும், பற்றற் கருத்தும்) கூடவே தொடுதல் கருத்துமான சொற்களைப் பார்ப்போம்.

ஊ> உ> உல் (செ.கு.வி) = நெருங்கல் to go near, to appoach; தொடுதல் to touch. எல்லா நிலத்திணைகளுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் முதற்புலன் ஊறு என்னும் தொடுவுணர்வே ஆகும். (உல்> உல்+தல்> உற்றல்> உற்றறிதல் = தொட்டறிதல் to feel by touch, to make observation by the sense of touch ”ஒன்றறிவதுவே உற்றறிவதுவே” - தொல்.பொருள் 582. உற்றறிதல் என்பது தொட்டறிதலாகும். உறுதலெனும் வினைச்சொல்லிலிருந்து ஊறு எனும் பெயர்ச்சொல் எழும், “பருந்தூறு அளப்ப” பதிற்றுப் 51.32; ”சுவையொளி யூறோசை” - குறள் 27)

ஊறு என்பதை நெருங்கலின் தொடர்ச்சியாய், உடல் மூடிய தோலால், உணர்கிறோம். ஊறுக்கு அடுத்த புலன் சுவையாகும். ஊறு, சுவை என்ற 2 புலன்கள் கொண்டவை விலங்குகளில் முதல்வகையாகும். (இரண்டறிவதுவே அதனொடு நாவே - தொல்.1526.) படிப்படியாக நாற்றம், ஒளி, ஓசை என்ற புலனறிவுகளை உயர்விலங்குகளுக்கு உரியதாக்குவர். முடிவில் ஆறறிவு விலங்கு மாந்தனாகும். (ஆறறிவதுவே அவற்றொடு மனனே - தொல்.1526.) இப்படி ஆறறிவை வரிசைப்படுத்தி முதலிற் சொல்லியவை வேதமறுப்பு நெறிகளேயாகும்.

உல்(லு)தல் வினை ஊறெனும் அறிவிற்கு மட்டுமன்றி வேறு வினை/பெயர்ச் சொற்களுக்கும் காரணமாயுள்ளது. பல்வேறு விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிட்ட மாந்தர், எலும்போடு பொருந்தியதாலேயே, நிணம், தசை போன்றவற்றை ஊனென அழைத்தார். உல்> ஊல்> ஊன் = பொருந்தியது, பற்றியது. காட்டு விலங்காண்டி நிலையிருந்து நாகரிகம் உருவான போது, உற்றலிலிருந்து மேலும் பல சொற்கள் பிறந்தன. உற்று> உற்றார் = நெருங்கியவர் relatives; உற்று> உறுதல் = தொடுதல் to perceive by touch; உற்றுதல்> ஒற்றுதல் to bring in contact, “பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர” என்பது கலித் 83.2 இல் வரும் சொல்லாட்சி.

றகர ஒலி, பேச்சு வழக்கில் டகரமாயும், தகரமாயும் திரியும். தமிழி எழுத்தில் றகரத்தின் வடிவுகூட டகரம், தகரம் ஆகியவற்றின் பிணைப்பாகவே, (இத் திரிவை விளக்குவது போலவே), எழுதப் பெறும். ஆற்றுதல் என்பது ஆட்டுதல் என்றும், ஆத்துதலென்றும் பேச்சுவழக்கிற் பலுக்கப்படும். அதே முறையில் ஒற்றுதல்>ஒட்டுதல் to slick என்றசொல் பிறக்கும். உடன், ஒடு, ஓடு என்ற மூன்றாம் வேற்றுமையுருபுகள் கூட ஒட்டுப்பொருளிற் பிறந்தவையே. உறு> உடு> உடன் = together; உடு> ஒடு> ஓடு = together. இன்னும் ஒரு வளர்ச்சியில் ஆமை முதுகிலும், ஒருசில முட்டைகளின் மேலும், பாதுகாப்பாய் அமைவதை ஓடு என்கிறோம். அதாவது ஒட்டியிருப்பது ஓடு, as of a tortoise, of an egg. ஒரு சில பழங்கள், விதைகளின் கனமான தோல் கூட ஓடு எனப் படும். hard outer covering, as of a nut (புளியம்பழ ஓடு, நிலக்கடலை ஓடு..... இப்படிப் பல)

அவரையின் மேல் தொலி உறு> உறை, sheath of the beans, என்றழைக்கப் படும். உறைதல் வினைக்கு இறுகுதல் பொருளும் கூட உண்டு, to get firm, to get a skin, to curdle, to freeze. பாலைத் தயிராய் மாற்றுவதை உறைய வைப்பது என்று நாட்டுப்புறங்களிற் சொல்வார். உறுதலின் இன்னொரு வளர்ச்சியாய் ஊன்றுதலெனும் பிறவினைச்சொல் பிறந்து ”பற்றுதல், நிலைகொள்ளுதல்” என்ற பொருட்பாடுகளைக் காட்டும்.

ஒட்டியிருப்பது அட்டியிருப்பது என்றும் திரியும். அட்டுதல் = நெருங்குதல். அட்டுதலின் இன்னொரு பலுக்கற் திரிவாய் அண்டுதல், அண்ணுதல் என்ற சொற்களை அறிவோமில்லையா? அட்டு> அத்து> அது> அதள் = தோல் என்ற வளர்ச்சியும் ஒட்டியதைச் சுட்டி வந்ததே. புறம் 193 இல் அதள் எனும் சொல்லாட்சி உண்டு. [தோலைக் குறிக்கும் க்ருத்தி என்ற சொல்  இரு(மொழி) பிறப்பியாகும். தமிழில் கதுவியிருத்தல் (= பற்றுதல்) என்ற சொல்லுண்டு. கதுவியின் உறவான கத்தி வடபால் வழக்கில் க்ருத்தி ஆகும். தோலைக் குறிக்கும் கேடகம், கேடயம், கிடுகு போன்ற சொற்கள் ஒருவேளை கிட்ட இருத்தலோடு தொடர்புடையனவோ என்ற எண்ணம் எனக்குண்டு.]

உல் போலவே, துல் என்பதும் நெருங்குதல் கருத்து வேராகும். இதுவும் ஒட்டுதல், பற்றுதல் என்ற பொருட்பாடுகளைக் காட்டும். துல்+து = துற்று> துற்றல் = நெருங்கல் to come near, to advance closely, to lie close ”மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற” தேவா. 83.1 “காளை சீறிற் துற்று இவனுளனோ என்பார்” சீவக. 1110. துல்+ந்+து = துன்று> துன்றுதல் = நெருங்குதல் to be close, thick, crowded together “துன்றுக்கு நறுங்குஞ்சி” கம்பரா. குகப் 28, பொருத்துதல் to get attached; to lie “கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர்” திருவாச. 17:10. துன்று>துன்றுநர், friends, as being near. துல்+ந்+நு = துன்னு> துன்னுதல் = தைத்தல் to sew, to stitch, நெருங்குகை to be close together “யாவரும் துன்னல் போகிய துணிவினோன் என” புறநா.23,14 பொருந்துதல், to be fitted, joined, attached, செறிதல் to be thick, crowded, to press close “துன்னிக் குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரமெல்லாம்” நாலடி 167, அணுகுதல் to approach, approximate, adhere to ”யாவரும் துன்னல் போகிய துணிவினோன்” புறநா.23. துன்னியார் = நண்பர் friends, relations, adherents. துற்று> துறு> துறுதல் = நெருங்குதல் to approach; துறு> துறை = நெருங்கும் இடம் place of approach

அடுத்து, உகரத் தொடக்கம் பேச்சுவழக்கில் ஒகரத் தொடக்கமாவது தமிழின் இயல்பான வழக்கமே. அந்த முறையில் துகரம் தொகரமாகலாம். துற்று> தொற்று (தொல்+து)> தொற்றுதல் = தொடுத்தல் “அதன் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி” - ஈடு. 3,1, 10. முன்னே சொன்னது போல் றகரம் இடையில் வருஞ் சொற்கள் டகரமாகவும், தகரமாகவும் பேச்சு வழக்கிற் பலுக்கப் படுவது உண்டு. தொற்று> தொட்டு> தொடு> தோடு = ஓடு. தொற்றுநோய் என்பது ஒட்டுவாரொட்டி நோய் தானே? அதைப் பேச்சு வழக்கில் தொத்துநோய் என்கிறோமில்லையா?

தொற்றின் அடிவேராகத் தொல் எனுஞ் சொல் அமையும். தொல்லுதல் = அருகுதல், ஒட்டுதல், பற்றுதல். பழங்களை மூடியிருக்கும் மெலிந்த தோலைத் தொலி என்பார்கள். இதேபோலத் தொல்> தோல் என்பதும் அமையும். ஆகத் தொல்லிக் கிடப்பது தோல். என்பு, நிணம், தசை, ஊன் ஆகியவற்றிற்கு அடுத்து நெருங்கியது, பற்றியது என்ற வகையிற் தோல் என்னும் சொல் அமைகிறது. புறம் 164 இல் பாலில்லாத முலையின் தோல் சுருங்கி அதன் துளையும் தூர்ந்து போன காட்சி ”பாஅல் இன்மையிற் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை” என்று வண்ணிக்கப்படும். நெருங்கியது, ஒட்டியது, பற்றியது என்ற பொருட்பாடுகளுக்கு அடுத்து தோலோடு பொருந்தியதாய் மூடியது, உலர்ந்தது என்ற பொருட்பாடுகள் வந்து சேரும். மூடியது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் உலர்ந்தது என்பதைப் பார்ப்போம். [நெருங்கியது, ஒட்டியது, பற்றியது, மூடியது, உலர்ந்தது என்ற பொருட்பாடுகளைக் குறிக்காத தோற்சொல்லே தமிழில் நானறிந்தவரை இல்லை. எந்தவொரு சொல்லையும் இப்பொருட்பாடுகளைக் கொண்டு உரசிப் பார்த்தால் ”தோலுக்குத் தொடர்புண்டா?” என்று தெரிந்துவிடும்.]

தோலோடு தொடர்புடைய மற்ற தமிழிய மொழிகளிலும் பரவலாய் இருக்கும் சொற்களை Dravidian Etymological Dictionary இல் பார்க்கலாம்.

3559 Ta. tōl skin, hide; toli (-pp-, -tt-) to strip off (bark), flay, husk, hull; n. skin, rind, husk; tokku skin, bark, rind. Ma. tōl skin, hide; tolikka to skin, peel; toli skin, bark, peel, rind; tukal skin as of fruit; tokku skin. Ko. to·l skin, hide; to·krl small peg used in pegging down hide to dry (to·l + karl [see 1389]). To. tw&idieresisside;s̱ skin, hide. Ka. tōl(u), togal, toval id., leather, skin of fruit. Koḍ. to·l skin, hide; toli- (tolip-, tolic-) to peel, hatch; (Shanmugam) tolip peeling. Tu. tugalů, tolike skin, bark, rind. Kor. (M.) tōru skin. Te. tokka skin, bark, rind; tōlu skin, hide, leather. Kol. (Kin., Haig, Hislop) tōl skin, hide. Nk. tōl skin. Nk. (Ch.) tōl id. Pa. tōl skin, bark. Ga. (Oll.) tōl id.; (S.) tōl skin; tokkā rind of fruit; (S.2) tokka bark. Go. (Tr. A. Y. Mu. W. Ph.) tōl skin, hide; (D. G. M.) tōla skin, bark of tree; (S.) tōl(u) (pl. tōlku), (Ko.) tolka id., skin of fruit (Voc. 1828); (Koya Su.) tōlu skin. Konḍa (BB) tōl, (K.) tōlu skin (of animals); (K.) toko bark, rind. Pe. tōl skin. Kui ṭōḍu (pl. ṭōṭka) buffalo hide (from which bellows or shields are made). Kuwi (F.) tōlū, (S.) tōlu, (Su. P. Isr.) tōlu (pl. tōlka) skin, hide. Cf. 3544 Ta. tōṭu. DED(S) 2937.

நம் உடம்பில் புண் (புள்ளப்பட்டது, குழியானது, புண்) ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். புண்ணிலிருந்து சீழும் அரத்தமும் நீர்மமாய்க் கசியுந் தானே? கசிவைத் துடைத்து மருந்திட, மருந்திடக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சரியாகிறதல்லவா? அதைத் தமிழில் எப்படிச் சொல்கிறோம்? புண் காய்ந்து வருகிறது என்கிறோம். அரத்த வேதிப்பொருள் படிகமாகிக் கட்டப்படும் புரத வலை, புண்ணின் வாயை மூடுகிறது; சீழும், அரத்தமுமான நீர்மக் கசிவு குறைகிறது. கொஞ்சங்கொஞ்சமாய் வலையின்கீழ் புதுத்தோல் உருவாகி நீர்மம் முற்றிலும் நின்றுபோய் உலர்ந்து விடுகிறது. நாமும் புண் காய்ந்தது என்கிறோம். காய்கிறதென்ற வினையை வைத்துப் புண்ணுக்குக் காயம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கி விடுகிறோம். தோல் போர்த்திய முழு உடம்பிற்கே கூடக் காயம் என்ற பெயருண்டு.

உலர்தற் பொருள் ஊ எனும் வேரில் தொடங்குகிறது. ஊ> உ> உல் செ.கு.வி = உள்ளொடுங்குதல் to become lean, emaciate, காய்தல் to dry; உல்> உல>  உலல்> உலர்> உலர்தல் = காய்தல் to become dry, to wither, to be parched up தோலோடு, உலர்தல் வினையைச் சேர்த்தே ஆதி மாந்தன் உணர்ந்திருக்க வேண்டும். தோல் காய்ந்தது, உலர்ந்தது. இதே போல, உல் எனும் வேரில் இருந்து உல்> ஒல்> ஒலியல் = உலர்ந்து போனது, தோல், காய்ந்த தழை என்ற சொல்லும் தழைக்கும். உலர்ந்த தோல் எளிதாக உரிக்க வரும். உல்லின் நீட்சியே உரி. உல்> உர்> உரு> உரி = தோல்.

இதேபோலத் துல் எனும் வேருக்கும் உலர்தற் பொருள் இருந்திருக்கவேண்டும். *துல்லுதல்> *(துல்வுதல்)> *(துவ்வுதல்)> துவல்> துவர் = உலர்நிலை. இப் பெயரிலிருந்து மீண்டுமொரு வினைச்சொல் பிறக்கும். துவல்> துவர்> துவர்த்தல் = உலர்த்துதல்; துவல்> துவள்> துவட்டுதல் = உலர்த்துதல்; துவர்> துவர்க்கு> துவக்கு = தோல்; துவக்கு> தோக்கு> தொக்கு. இனி, துவத்தி> துத்தி> துருத்தி என்பதும் கூட இருபிறப்பிச் சொல் தான். வடமொழிப் பழக்கமான ரகர நுழைப்பு இங்கு ஏற்பட்டுள்ளது.

உல், துல் எனும் வேர்களைப் போலவே, சுல் எனும் வேரும் உலர்தல் பொருளில் சில சொற்களை உருவாக்குகிறது. சுல்> சுர்> சுரு> சுரித்தல் = வற்றுதல், காய்தல், சுருங்குதல். நீர் வற்றியதை நீர் சுருங்கியது என்கிறோம் அல்லவா? இனிச் சுருதல் வினை, சருதலென்றும் திரிந்து உலர்தலைக் குறிக்கும். சரு> சருகு  வளர்ச்சியில் காய்ந்த இலைகளைக் குறிக்கிறோம். ஆனால் இலை மட்டுமா காய்கிறது? பழங்கள், பருப்புகளும் மற்றவையும்  சுரு(ங்)கிக் காய்கின்றன. சுருங்கலும், உலர்தலும், வற்றலும் ஒன்றிற்கொன்று தொடர்பு உள்ளவை. காய்ந்த கறிவாடு (> கருவாடு) வற்றிப் போனதே. [எல்லாக் காலமும் விலங்கின் ஊன் மாந்தனுக்குக் கிடைத்து விடுகிறதா, என்ன? கறிவாட்டுக் குழம்பு சாப்பிடாத நாட்டுப்புறத்தார் மிகக்குறைவு.] வறண்டு போன அரிசிக்குழை வற்றலாகிறது (அரிசி வற்றல்.) உலரவைத்த தசைகள் வறள்> வறள்கம்>  வறகம்> வடகம் என்றானது. இன்று இதன் பொருள் விரிந்து வெங்காய வற்றல்கூட வடகம் எனப்படுகிறது. உலர வைத்த தோலும் வடகம் என்று ஒரு காலத்திற் சொல்லப்பட்டது.

வற்றிப் போனவை நெடுங்காலம் வைத்திருந்தாலும் கெடாது. இன்னுஞ் சில பொருட்கள் மீன்கள், பல்வேறு தசைகள் போன்றவை உப்போடு சேர்த்து உணக்கிப் போட்டுவைத்தால் கெடாது இருக்கும். இப்படிச் சுருங்கிப் போன இயல்பொருட்களைப் பண்டமாற்றிற் பரிமாறிக் கொண்டிருந்ததால் அவை சுருகு> சருகு> சருக்கு> சரக்கு என்றாயின. இன்றோ விலைக்கு விற்கும் எல்லா goods -களுமே சரக்குகள் எனப்படுகின்றன. பல்வேறு சரக்குகளை, வறைகளை (wares) வாங்கும் நமக்கு உலர்தல் வினை நினைவுக்கு வருமோ? .வறண்டுபோன பொருள்களை வைக்கும் கூடத்தை வறைக் கூடம் (ware house) என்கிறோம்.

சுருங்கி உலர்ந்துபோன தோல் சுரு> சரு> சருமம் = உலர்ந்த தோல் என்ற பொருளைக் குறிக்கும். உலர்தோலைக் கொண்டு செய்த மிதியடி சுரு> சரு> செரு> செருப்பு என்றாயிற்று. *செருவைக் கொண்டு தோல் வேலை செய்தோர் செரு> செருமார்> செம்மார் ஆனார். வடபுலத்தில் அவர் செம்மார்> சாமார் ஆவார். செரு எனும் சொல்லடியோடு சேரும் ‘ப்பும் க்கும்’ வெவ்வேறு ஈறுகள் அவ்வளவு தான். செருப்பு தமிழானால், சருக்கும் தமிழியச் சொல்லே. சுரு> சரு> சருக்கு> சருக்கிலி> சக்கிலி என்பது மற்ற தமிழிய மொழிகளிற் பழகி, நமக்கு நாயக்கர் ஆட்சியால் பெரிதும் பரவிய சொல்லாகும்.

தென்பாண்டி நாட்டில் உடம்பை ”மேல்” என்பார். ”மேல் கொதிக்கிறது; மருத்துவரைக் காணவேண்டும்.” உண்மையில் இதனுள் மறைபொருளாகத் தோலும் இருக்கிறது. இப்பொருள் நம் அகரமுதலிகளில் பதிவு செய்யப்படக் கூட இல்லை. ஆனால் மேற்பக்கம் உணர்த்தும் புறணி (=தோல்) என்ற சொல் நிகண்டுகளில் உள்ளது. பிள்> பின்> பிறம்> புறம் = வெளி, வெளிப் பக்கம்; உள்ளும், புறமும், அகமும் புறமும் எனும் தொடர்களால் புறம் என்ற சொல் உட்பக்கத்திற்கு எதிரான வெளிப்பக்கம் என்பதைக் குறிக்கும். மூடின கையின் உட்புறமாய் இருப்பது உள்ளங்கை/அகங்கை என்றும், அதன் வெளிப்புறமாய் இருப்பது புறங்கை என்றும் கூறப்படுதல் காண்க. புறம்> புறணி = மேல், தோல். உடம்பை மூடி வெளிப்பக்கம் இருக்கும் தோலை புறணி என்பது இயல்பான சொல்லாக்கமே.

உடம்பை மூடுவது போல், கோட்டையை மூடும் மதிலையும் தோல், தோடு, கேடயம், கேடகம், கிடுகு என்ற சொற்களால் ஒப்புமைப் பொருளில் அழைத்து இருக்கிறார். புறம் 4, 16, 22 ”புலந்தோட்டு பைந்தும்பை”, 35, 63 ”தோல் கண் மறைப்ப”. வேலிருக்கும் தோலுறையும், தோல்கழி என்ற சொல்லால் கிடுகைக் காம்பும் புறம் 98 இல் விவரிக்கப்படும். இந்த ஒப்புமைப் பயன்பாடு நீண்டு யானைக்கே அதன் வலிய தோலின் கனங்கருதி புறம் 7 இல் “தோல் பெயரிய எறுழ் = யானையைப் பெயர்த்த வலிமை” என்ற வண்ணிப்பு உண்டு.

அதேபோல பொருவிக் கிடப்பது பொருவை> போர்வை என்ற வகையில் மூடிய நிலை குறிக்கும். மூடிக்கிடக்கும் / பொத்திக்கிடக்கும் பொத்து> பொத்தை> பொச்சை> பச்சை என்ற சொல் போர்த்தியதென்று பொருள் படும். பச்சை பற்றிய செய்தி கழாத்தலையாரின் புறம் 288 இல் வரும். கோவூர் கிழாரின் புறம் 308 இலும் மின்னேர் பச்சை எனவரும். புறம் 166 இல் ”புலப் புல்வாய்க் கலைப் பச்சை” என்று கலைமானின் தோல் சுட்டப்பெறும்.

இனி, முள்>மூழ்>மூய் என்னும் வேரில் உருவாகும் மூடுதற் சொற்களைப் பார்ப்போம்.

மூழ்கு> மூகு< மூகம் என்ற சொல் வாய்மூடிய ஊமை நிலை உணர்த்தும். மூழ்கு> மூகு> மூங்கு என்பதுகூட ஊமைநிலையே. மூகை, மூங்கையும் ஊமையை உணர்த்தும் சொற்களாகும். சொல்லின் நடுவில் வரும் மெய் எழுத்தைப் பலுக்காதிருந்தால் அது மூகையெழுத்து (= consonant being mute) எனப்படும்.

மூழ்தலென்பது பற்றுதல் to seize, take hold of  பொருள் கொள்ளும். மூழ்தலின் பிறவினையான மூழ்த்தல் என்பது மூடுதல் to close என்ற பொருட்பாட்டையும், மொய்த்தல் to swarm around என்ற பொருட்பாட்டையும் கொள்ளும். "கதழ்பு மூழ்த்தேறி” என்று பரிபா. 10.18. இல் வரும் சொல்லாட்சி மூடியைக் குறிக்கும் மூழல் என்ற பெயர்ச்சொல்லும் இதே பொருள் தான். ழகரத்திலிருந்து பேச்சு வழக்கில் யகரம் பிறக்கும். ”வாழைப்பழம் வாயப்பயம் ஆகிறதல்லவா?” அதுபோல் பல சொற்கள் திரிந்துள்ளன. மூழ்தல்> மூய்தல் = மூடுதல் [பருமணன் மூஉய் பரிபா 10:4] என்ற பொருட்பாட்டையும், நெருங்கிச் சூழ்தல் to surround closely என்ற பொருட்பாட்டையும் உணர்த்தும். மூய்தலின் பெயர்ச் சொல்லாய் மூய் அமைந்து மூடியை உணர்த்தும். “பொன்பெய் பேழை மூய் திறந்தன்ன” குறுந்.233.

மூய்தலின் இன்னொரு திரிவாய் சகரம் உள்நுழையும். மூசல் = மொய்க்கை swarming, thronging; மூசுதல் = மொய்த்தல், to swarm about, gather around “வண்டு மூசு தேறன் மாந்தி” நெடுநல்.33 “மீஞீறு மூசு கவுள சிறுகண் யானை” அகம் 159.16 “புன்மூசு கவலைய முள்மிடை வேலி” புறம் 116.4 “மூசு வண்டறை பொய்கை யும் போன்றதே” அப்பர் தேவாரம். மூசு = இடவகையில் நெருக்கமாய் இருக்கை, மொய்க்கை “வண்டு மூசு அறா” சீவக. 418 “வியன்பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து” பதிற்று. 31.30 “வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி” புறம் 227.9

மூடியதோடு தொடர்புடைய மூட்டம் (= மூடியிருப்பது), மூட்டுதல் (= சணற் பை, துணி முதலியவற்றில் இரு விளிம்புகளை இணையும்படி சேர்த்தல், சேர்த்துத் தைத்தல் sew together), மூட்டு (= joint), மூட்டு (= மூடுகின்ற பொருள் that which forms a cover, coating, wrapper), மூட்டை/மூடை (= தவசம் நிரப்பப்பட்டு கட்டப் பட்ட தைக்கப்பட்ட சணற்பை sack holding grain), மூடி = cover என்ற சொற்கள் எல்லாம் ஒருங்கு சேர்த்து எண்ணத் தக்கன. மூடு/முட்டாள்/மூடன் என்ற சொற்கள் கூட கல்லுளி மூங்கனாக ஏதொன்றையும் மூடிய தன்மையோடு பார்க்கும் தன்மையுள்ளோரைக் குறிக்கும்.

முய்த்தல்/மூய்த்தலின் திரிவே மொய்த்தல் வினை. ஒரு மலரின் தேனை உறிஞ்சுதற்காகத் தேனீக்கள் மொய்க்கின்றன. அதன்விளைவாக மலரையே மூடிவிடுகின்றன. எப்படி நெருங்கல், தொடுதலுக்கு முந்தை நிலையோ அதுபோல் மொய்த்தல், மூடுதலுக்கு முந்தைநிலை யாகும். மொய்த்தல் = சுற்றிச் சூழ்தல், நெருங்கல் to crowd, press, throng, swarm as flies, bees, ants "வாளோர் மொய்ப்ப” புறம் 13. மொய்த்தல் = நெருங்கிச் சுற்றல் to crowd around, swarm around, மூடல் to cover, to enclose. மொய் = நெருக்கம் press, throng, swarm.

யகரம் சகரமாவதும் பேச்சுத் தமிழில் இயற்கையே. மொய்த்தல்> மொயித்தல்> மொசித்தல் ஆகும். மொசித்தலின் தன்வினை மொசிதல். மொசிதல் = மொய்தல் to swarm.”கடுந்தேறு அறுகிளை மொசிந்தன துஞ்சும்” பதிற்றுப் 71.6 மொசித்தல் வினைக்கு அரிசிற் கிழார் பாடிய புறம் 285 இல் வரும் “விடு கணை மொசித்த மூரி வெண்டோள்” என்ற 8-9 ஆம் அடிகளுக்கு என்ன பொருள் என்று நினைக்கிறீர்கள்? “பகைவர் எய்த அம்புகள் மொய்த்த மூரி வெண்டோள்” இதே போல புறம் 96 (ஔவையார் அதிகமான் பொகுட்டு எழினியைப் பாடிய பாட்டு) இல் ”மையூன் மொசித்த ஒக்கல்” = என்ற சொற்றொடர் வரும். என்ன பொருள்? “ஆட்டுக்கறி சாப்பிடுவதற்காக மொய்த்த சுற்றத்தார்”

ஆக மொசித்தலென்பது மொய்த்தல், மூடுதல் பொருட்பாடுகளைக் குறிக்கும் சொல்லாகும். சரி, இதன் பெயர்ச்சொல் என்ன? மொசிக்கை/மொசிப்பு எனில் அது தொழிற்பெயராகும். மொசியர், தொழில்செய்வாரைக் (மொய்ப்பாரைக்/ மூடுபவரைக்) குறிக்கும். இன்னும் ஆழ்ந்து ஓர்ந்து பார்ப்போம். கருவிப் பெயர் எப்படி அமைய முடியும்? முதலெழுத்து நீண்டு மோசு/மோசி என ஆனாலன்றி வேறெந்த வகையில் கருவிப்பெயர் அமையமுடியும்? [நினைவு கொள்ளுங்கள் விசித்தது வீசியாயிற்று; பசியது பாசியாயிற்று; உசித்தது ஊசியாயிற்று மொசித்தது மோசு/மோசியாகாது போகமுடியுமா?] அப்போது அதற்கென்ன பொருளிருக்கும்? மூடி தானே? உடம்பிற்கு மூடி எது? தோல் தானே? அதாவது ஏரண வழியும், தமிழிற் பெயர்ச்சொல் அமையும் முறையும் பார்த்தால், மோசு/மோசிக்குத் தோலெனும் பொருள் அமையமுடியும். இது ஒருவகை உன்னிப்புத் தான். ஆனால் அதில் தவறென்ன இருக்கிறது?

மேற்சொன்னதை இன்னொரு வழி ஓர்ந்துபார்க்கலாம். இந்தையிரோப்பிய மொழிகளிலும் (இங்கு ஆங்கிலத்தைக் காட்டாகக் காண்கிறேன்.)  மூடுதல் கருத்தில் உருவான hide என்ற சொல் தோலைக் குறிக்கிறதல்லவா? O.E. hyd, from P.Gmc. *khudiz (cf. O.N. hut, O.Fris. hed, M.Du. huut, Ger. Haut "skin"), related to O.E. verb hydan "to hide," the common notion being of "covering," from PIE base *(s)keu- "to cover, conceal" (cf. Skt. kostha "enclosing wall," skunati "covers;" Arm. ciw "roof;" L. cutis "skin," scutum "shield," ob-scurus "dark;" Gk. kytos "a hollow, vessel," keutho "to cover, to hide," skynia "eyebrows;" Rus. kishka "gut," lit. "sheath;" Lith. kiautas "husk," kutis "stall;" O.N. sky "cloud;" M.H.G. hode "scrotum;" O.H.G. scura, Ger. Scheuer "barn;" Welsh cuddio "to hide").

உடனே நம்மிற் சிலர் ”மோசு/மோசி என்ற பெயர்ச்சொல்லை தோல் என்ற பொருளில் நம் அகரமுதலிகள் குறிக்கவில்லை. எனவே மோசு/மோசி தோலாக முடியாது” என்று சொல்லி விடுகிறார். பொதுவாக, வறட்டுவாதம் பேசுவோரிடம் உரையாட ஒன்றுமில்லை. அவர் சொன்னதையேச் சொல்லிக் கொண்டிருப்பார். இடம், பொருள், ஏவல், சுற்றுச் சூழ்நிலை பார்த்து ஏரண வழி பொருட்பாட்டைக் காணார். அகரமுதலிகளில் அப்படியே பதிந்து இருக்குமெனில் இந்த உன்னிப்புக் கட்டுரை (inductive essay) எதற்கு எழுகிறது?

அப்புறம் இன்னொரு நடைமுறையையும் சொல்ல வேண்டும். நம்மிற் பலரும் சங்க இலக்கியம் என்பது ஏதோவொர் அகரமுதலி என எண்ணி விடுகிறோம்.  உண்மையில் அது ஓர் இலக்கியத் தொகுப்பு. அக்கால மொழியின் பல்வேறு இயலுமைகளை அது குறிப்பால் உணர்த்துகிறது. அன்றைக்கிருந்த எல்லாச் சொற்களையும் அது பதிவு செய்திருக்குமா? - எனில் இல்லை. அவை எல்லாமே நம் கைகளுக்குக் கிடைத்தனவா? - கிடைக்கவில்லை. சொல்லின் வினையைக் குறித்து அதேபொழுது பெயரைக் குறிக்காமலும், பெயரைக் குறித்து வினையைக் குறிக்காமலும் அது போயிருந்திருக்கக் கூடாதா? - போயிருக்கலாம். இதுபோல் ஞாயமான சிந்தனைகளை நாம் எப்படியோ வாய்ப்பாக ஒதுக்கி விடுகிறோம்.

எழுத்துக்கு எழுத்து தவறாமல் சங்க இலக்கியத்தில் ஏதொன்றும் இல்லை யெனில் தமிழில் அது இல்லவேயில்லை என்பதில் நாம் என்றும் அணியமாய் உள்ளோம்.:-) மூளையைச் சற்று பயன்படுத்தி பல்வேறு இயலுமைகளை எண்ணிப்பார்க்க மறுக்கிறோம். அப்படித் தொலைத்த தமிழ்ச்சொற்கள் கணக்கில. சங்கத அகரமுதலியான மோனியர் வில்லியம்சு, சங்கத இலக்கிய ஆவணங்களிற் பெயர்ச்சொல் பதிவாகியிருந்தால் வினைச்சொல்லை உருவாக்கியும், வினைச்சொல் பதிவாகியிருந்தால் பெயர்ச் சொல்லை உருவாக்கியும் மொழி இயலுமைகளை நமக்கு உணர்த்தும். அதேபோலத் தமிழ் அகரமுதலிகள் இருப்பதில்லை. தமிழ் மொழியாய்வாளர் பலரும் அதனாலேயே வறட்டுவாதம் பேசித் தமிழை மறுக்கிறார்.

மொசித்தல் வினையைப் பதிவுசெய்த புறநானூறு, பெயர்ச்சொற்களைப் பதிவுசெய்யாது போயிருக்கலாகாதா? மோசு என்பது தோலானால், மோசி, தோல்வினைஞரைக் குறிக்கலாம். மோசி கீரனார், மோசி கொற்றனார், மோசி சாத்தனார், முடமோசியார் என்ற புலவர் தோல்வினைஞராய் இருக்கப் பெரும்வாய்ப்புண்டு என்பதே என்முடிவு.

இதை மெய்ப்பிக்குமாப் போல் மொய் என்ற பெயர்ச்சொல் அத்தி (fig tree), ஆமை (tortoise), யானை (elephant) ஆகியவற்றைக் குறிக்கும். இப் பொருட் பாடுகள் எப்படி வந்தன? அத்தியின் தோலைப் பிரிப்பது கடினம்; அதன் பழமே உடைபட்டுப் பிதுங்கிப் போகும். ஆமை, யானை ஆகியவற்றின் தோல் கனமானது. தோலின் முகன்மை கருதியே இப்பெயர்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். [முன்னால் வலிய யானைத் தோலின் கனங் கருதி புறம் 7 இல் “தோல் பெயரிய எறுழ் = யானையைப் பெயர்த்த வலிமை” என்ற வண்ணித்ததை இங்கு நினைவு கொள்ளுங்கள்.] வேறு எந்த வகையிலும் மொய் என்ற சொல் இப்பெயர்களைக் குறிக்க வழியில்லை.

என் கட்டுரையை இறுதி செய்யுமுன், திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலியிலிருந்து 2 இடுகைகளை எடுத்துக் காட்டுகிறேன். இவற்றில் மூசியை ஒட்டித் தோல்பற்றிய செய்திகளும் திராவிட மொழிகள் சிலவற்றில் ஊடுவருவதை அறிந்துகொள்ளலாம்.

4915 Ta. muccu (mucci-) to cover; mūy (-v- -nt-; mūyi-) to cover, fill, surround closely; n. a cover; moy (-pp-, -tt-) to cover, enclose; ? muyaṅku (muyaṅki-) to embrace, copulate; muyakkam embrace, copulation. Ko. muc- (muc-) to cover; mucaṇ tight-fitting cover. To. muc- (muc&cangle;-) to cover; mucxu· lid, cover. Ka. muccu to close, shut, shut up, cover, conceal; n. shutting; muccaka closing, shutting; muccalu closing, covering, screening; muccaḷa covering, cover, lid; muccike shutting, closing; muccige covering, ceiling of room; muccisu to cause to close; muccuvike shutting, etc.; mucce cover, lid; musuku to cover. Koḍ. mucc- (mucci-) to close; mucci lid, cover. Tu. muccuni to shut, close, cover, screen, shelter; mucca, muccala, mucci, muccu lid of vessel; muccaṇṭe a close mouthpiece; muccāvuni to cause to shut; muccige lid, cover, ceiling. Te. mūyu to cover, cover up, shut, close, conceal, hide, screen; (K. also) be shut, closed, (flower) closes its petals; mū̃ta covering, shutting, a cover, lid, shutter; musũgu, musũguḍu cover, covering, veil; musũgu-vaḍu to be covered, veiled; (K.) muccu to close (intr., tr.); (K.) muncu to cover, envelop. Kol. (SR.) muns- to close, cover. Nk. mus- to cover. Nk. (Ch.) muc- to cover, close, shut (door); muyip- to cover oneself, fill up a hole. Pa. muy- to cover oneself; muypip- (muypit-) to cover (another); mucca shell-covering of the snail. Ga. (Oll.) muy- to cover oneself with wrapper; (S.) mūyk- (mūyt-), mūy- to close, cover. Go. muccānā (Tr.) to wrap something round one's body, put new skins on a drum, (Ph.) to cover; (M.) mucānā, (A. Y.) mucc-, (G. Mu. S.) muc- to cover; (Ko.) muc-, mus- id., put on outer cloak; (Tr.) mucci, (Ph. Mu.) mucce a lid or cover; (Ma.) mucce cover of pot, lid (Voc. 2872); (Koya Su.) mōs- to cover. Konḍa mus- (-t-) to bury (as a corpse), cover (a pit), close (with lid); caus. musis-/muspis-. Pe. muc- (mucc-) to cover, bury; muci lid. Manḍ. muc- to bury. Kui musa (musi-) to cover (a drum with skin or an umbrella with cloth); munja (munji-) to be covered, buried; muspa (must-) to cover, bury; n. burying; (K.) mucc- to shut. Kuwi (Su.) muh- (must-), (F.) mūssali, (S.) muh'nai to bury; (Isr.) muc- (-it-) to cover up. Kur. muccnā to close door or lid, shut; muccō a fishing basket; musugnā to envelop, wrap in, pack into a bundle. Malt. muce to close or shut up; musge to pack up, tie into a bundle; musgre to be closed. Br. must shut, closed. Cf. 5030 Ta. mūcu. DED (S, N) 4025.

5030 Ta. mūcu (mūci-) to swarm about, gather round; n. swarming, thronging; mūcal swarming, thronging; mūr̤ (-pp-, -tt-) to swarm round, surround; mūr̤al a lid; mūkai vast horde; moy (-pp-, -tt-) to crowd, press, throng, swarm, spread as an eruption, crowd round, swarm round, cover, enclose; n. press, throng, swarm, crowd, closeness, tightness, battle, war; moyppu crowd, multitude; moci (-v-, -nt-) to swarm. Ka. musuku, musugu to cover, hide, settle upon as flies, close, swarm or crowd together, spread over or about; n. cover, veil; musuṟ to cover as flies, crows, etc., crowd together, cover, hide; n. cover, veil; musumbu cover, veil; mukaṟu, mukkuṟu, mukkuṟiku to come or fall upon, inclose, cover, besiege, surround; mogasu to cover, fall upon, attack; moge to cover, fall upon, close with. Te. musaru, musuru, mū̃gu, (K. also) mūvu to collect or gather around, settle upon as flies upon any object, infest, surround, crowd, swarm; mū̃ka crowd, multitude, host, swarm, army; (K.) mogiyu to overspread, attack, close witMocikah. Ga. (S.) mūng(i) ēr- to swarm. Go (Tr.) moiānā, moittānā to rush at, close with; (SR.) moyānā to kill (Voc. 2986). Cf. 4915 Ta. muccu and 5034 Ta. mūṭu. DED(S) 4128.

மோனியர் வில்லியம்சில் Mocika = m. a tanner, or shoemaker (cf.Hind.mochii) என்று எழுதிக் கடன்பெற்ற சொல் என்று தெளிவாகக் குறித்திருக்கிறது. எனவே மோசி சங்கதச் சொல் இல்லை. (அப்படிப் பார்த்தால் பார்ப்பனர் கோத்திரம் என்ற வழக்கு தோற்றுப் போகிறது. சங்கதப் பின்புலம் இல்லாத எச்சொல்லும் கோத்திரப் பெயர்களுக்கு அடிப்படையாக ஆவதில்லை.) இந்தியும், பிற வட இந்திய மொழிகளும் இச்சொல்லை வட திராவிடமொழிப் பயனாக்கத்தில் கடன்பெற்றன போலும்.

மோசி கீரனார், மோசி கொற்றனார், மோசி சாத்தனார், முடமோசியார் ஆகியோர் தோல்வினைஞராய் இருக்கவே பெருத்த வாய்ப்புண்டு என மீண்டும் சொல்லி முடிக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, September 21, 2010

மோசிகீரனார் - 2

மோசி கீரனார் எனும் பெயர் சங்க இலக்கியத்திற் புறநானூற்றில் மட்டும் வருவதில்லை. அது குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை ஆகியவற்றிலும் வருகிறது. குறுந்தொகையில் மோசி கீரனார் எனும் பெயர் நேரடியாகவும், ”ஏடு பெயர்த்தெழுதுவோரால் ஒருவேளை கவனக்குறைவால் திரித்துத் தவறாக எழுதப்பட்டிருக்கலாமோ?” என்று எண்ணும் படி திரிந்த வடிவிலும் மொத்தம் 7 இடங்களில் வருகிறது.

குறுந்தொகை 33. மருதம் - தலைவி கூற்று - படுமரத்து மோசிகீரனார்
குறுந்தொகை 59. பாலை - தோழி கூற்று - மோசிகீரனார்
குறுந்தொகை 75 மருதம் - தலைவி கூற்று - படுமரத்து மோசிகீரனார்
குறுந்தொகை 84 பாலை - செவிலித்தாய் - மோசிகீரன்
குறுந்தொகை 376 நெய்தல் - தலைவன் கூற்று - படுமரத்து மோசி கொற்றனார்
குறுந்தொகை 377. குறிஞ்சி - தலைவி கூற்று - மோசி கொற்றனார்
குறுந்தொகை 383 பாலை - தோழி கூற்று - படுமரத்து மோசி கீரனார்

மேலுள்ள பட்டியலில் ”படுமரத்து மோசிகீரனார்” என்ற பெயர் கூர்ந்து கவனிக்க வேண்டியது. இந்தப் பெயர் 3 பாட்டுக்களில் வருவதால் ”மோசி கீரனாரின் ஊர் மோசியூர், மோசிகுடியாக இருக்கலாம்” என உரையாசிரியர் சொல்லும் செய்தி எடுபடாது போகிறது. ஒரே இயற்பெயருக்கு 2 ஊர்ப்பெயர் வராதல்லவா? [இந்த ஊர் மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது என்றும், பேரரசுச் சோழர் கல்வெட்டுக்களின் காரணத்தால் சோழநாட்டில் உள்ளது என்றும், பிற்காலப் பாண்டியர்ள் கல்வெட்டுக் காரணத்தால் பாண்டிநாட்டில் எங்கோ இருக்கிறது என்றும், தமிழிக் கல்வெட்டுக்கள் காரணமாய் செஞ்சிக்குப் பக்கத்தில் இருக்கலாம் என்றும் பல்வேறாக ஐயப்படுவது நமக்குக் குழப்பமே தருகிறது.]

பொதுவாகச் சங்ககாலப் புலவரின் பெயர்கள் ஊர்ப்பெயர், குடிப்பெயர்/தொழிற்பெயர், இயற்பெயர் என்ற வரிசையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கக் காணுகிறோம். இவ்வரிசையில் ஒன்றோ, இரண்டோ வாராமலும் போகலாம். ஆனால் இப்படி வரும் வரிசையில் பெரும்பாலும் மாற்றம் கண்டதில்லை. இங்கே படுமரம் என்பது ஊர்ப் பெயராகவோ, குடிப்பெயராகவோ இருக்கக் கூடும். இன்றும் கூடச் சேரலத்தில் குடிப்பெயர்/குடும்பப்பெயர் “சோலையில்”, ”புன்னையில்” ”அதனில்”, ”இதனில்” என்று அமைவதைக் காணலாம். [தமிழ் நாட்டில் பெருங்குடியினர் தவிர்த்து மற்றோருக்குக் குடிப்பெயர் இல்லை. ஆனால் சேரலத்தில் குடிப்பெயர் பரவலாயுண்டு.] இங்கு படுமரம் என்பது மோசிகீரனாரின் குடிப்பெயராய் இருக்கவே வாய்ப்புண்டு. [பலவாறாக ஓர்ந்து பார்த்தால் மோசிகீரனார் சோழநாட்டார், பாண்டிநாட்டாராய் அன்றிச் சேரநாட்டாராய் இருப்பதற்கே வாய்ப்பு உண்டு. அவர் பாடிய மன்னர் வரிசைகளைப் பார்த்தாலும் அது உறுதிப்படுகிறது. கீழே பார்ப்போம்.] பொதுவாகச் சேரலத்தில் ஊர்ப் பெயரோடு இயற்பெயர் சேர்ந்து வருமானால், முன்னே சொன்னது போல் குடிப்பெயருக்கு முன்வருவதே வழக்கமாகும். ”மடுமரத்து” என்பது இங்கு மோசிக்கு முன்னே வருவதால் மோசி ஊர்ப்பெயராய் இருக்க வாய்ப்பில்லை.

தவிர, மோசி கீரனார், மோசி கொற்றனார் என்று இருவேறு இடங்களில் மாறுபட்டு வருவதால் இரண்டு தொழிற்பெயர்களா? - என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. கீரனைத் தொழிற் பெயராக்கினால் கொற்றனும் தொழிற் பெயராக வேண்டுமல்லவா? கொற்றன் என்ற தொழிற்பெயரைச் சங்க இலக்கியம் எங்குமே கண்டதில்லை. அதோடு, இன்னொரு செய்தியாக அகநானூற்றில் மோசிகீரனார் என்ற பெயர் ஏடுபெயர்த்து எழுதுவோரால் மோசிக் கரையனார் என்றும் எழுதியது நம்மை வேறுவிதமாய் யோசிக்க வைக்கிறது.

அகம் 260 நெய்தல் - தலைவி கூற்று மோசிக் கரையனார்
அகம் 392 குறிஞ்சி - தோழி கூற்று மோசி கீரனார்

கீரனார் என்ற சொல் கொற்றனார், கரையனார் என்றெல்லாம் திருத்தப் பட்டு எழுதப்பட்டதா, அன்றி இவரெல்லாம் வெவ்வேறு ஆட்களா? - என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. மோசி என்பது ஊரானால் அச் சிற்றூரில் இருந்து 3 புலவர் எழுக வாய்ப்புண்டோ? அதேபோல மோசி,  பார்ப்பனக் கோத்திரமானால் ஒரு மீச்சிறு கோத்திரத்தில் இருந்து மூவேறு புலவர்களா என்றும் ஐயுற வேண்டியுள்ளது. [மோசி என்ற பெயரே விக்கிப் பீடியாவில் இருக்கும் தமிழ்ப் பார்ப்பனக் கோத்திரங்களின் பட்டியலில் காண முடியவில்லை. பார்ப்பனர் யாரும் அப்படி ஒரு கோத்திரம் இருந்ததாய் எங்கும் பதிவு செய்யவில்லை.]

கருதுகோள் இன்றி விளக்கவியலா இடங்களில், சுற்றி வளைத்துக் கொள்ளும் 4, 5 பலக்கிய (complex) கருதுகோள்களை விட, நேரடியான, எளிய, 1, 2 பிருக்குக் (parsimony) கருதுகோள் கொள்வது சிறந்ததென அறிவியலார் சொல்வர். அம்முறையில் ஒரே கருதுகோளாய், மோசிகீரனார், மோசி கொற்றனார், மோசிக் கரையனார், படுமரத்து மோசி கீரனார், படுமரத்து மோசி கொற்றனார் என்ற 5 குறிப்புகளும் ”படுமரத்து மோசி கீரனார்” என்ற ஒரே ஆளையே குறிப்பதாய்க் கொள்வது நாம் முன் நகர வாய்ப்பாக இருக்கும்.

அதேபோல சங்கறுக்கும் கீர்ந்தொழிலை ஒருகாலத்தில் தமிழ்ப் பார்ப்பனர் செய்தார் என்ற காரணத்தால் எல்லாக் கீரரையும் பார்ப்பனராக்குவது சரி யாகுமா என்பது அடுத்த கேள்வி. ஏரணவியலில் இது அடிப்படைப் பாடம் அல்லவா? சங்க காலத்தில் சில பார்ப்பனர் கீரராய் இருக்கலாம். கீரர்  தொழிற்பெயராயும், இயற்பெயராயும் இருக்கலாம். ஆனால் எல்லாக் கீரரும் பார்ப்பனராகுமோ? அப்படி முடிவுசெய்வது பிறழ்ச்சியாகாதோ? இத்தனைக்கும் சங்கறுத்து வளையல் செய்பவராய் இன்று ஒரு பார்ப்பனர் கூட (அதே போல பெருஞ்சோழர் காலத்தில் ஒரு சான்று கூட) இல்லையே?

மோசி கீரனார் நற்றிணை 342 இல் பாலைத்திணையில் தோழி கூற்றாக ஒரு பாடலும் பாடியுள்ளார்.

புறநானூற்றில் புறம் 50 இல் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையையும் (இவன் பூழி நாட்டிற் சிறிது காலமும், பின் கொங்குக் கருவூரிற் சிறிது காலமும் ஆண்ட செல்வக் கடுங்கோ வாழியாதனின் மகன் ஆவான். தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பூழிநாட்டு மாந்தரத்திலும், கொங்குக் கருவூரிலும் சில காலம் இருந்திருக்கலாம். இவன் செங்குட்டுவனின் சம காலத்தவன், செங்குட்டுவனுக்குச் சற்று அகவை குறைந்தவனாய் இருக்கலாம் என்றே சிலம்பின் வழி புரிந்து கொள்கிறோம். என் சிலம்பின் காலம் கட்டுரையைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.)

மோசிகீரனார் புறம் 154-156 இல் கொண்கானங் கிழானையும், மேலே சொன்ன அகநானூற்று 392 ஆம் பாடலில் ஏழில்மலை நன்னனைப் பற்றியும் பாடியுள்ளார். ஒரு சில உரையாசிரியர் கொண்கானத்தை நம் கொங்கு நாட்டோடு பொருத்திப் பேசுவர். அதைக் காட்டிலும் சேரலத்தின் வடக்காக மேற்கு கரையில் மங்களூரில் இருந்து இன்றையக் கோவாக் கடற்கரை வரையுள்ள கொண்கானப் பகுதியை எண்ணிப் பார்ப்பதும், அதே போல ஏழில் மலை நன்னன் நாட்டை இன்றையச் சேரலத்தின் வடகிழக்கில் கொண்கானத்திற்கும் கிழக்கில் பொருத்திப் பார்த்தால் மேற்குக் கரையையொட்டிய ஓர் அகண்ட பகுதி நமக்குத் தென்படும். இச்சேரலம், கொண்கானம், கோசர் நாடு, கொங்குநாடு என்று பரந்து விரிந்த பகுதியில் தான் மோசி கீரனார் நகர்ந்து அங்கிருந்த புரவலரிடம் பாடியிருந்தார் போலும்.

புறம் 186 என்பது மோசிகீரனார் பாடிய மெய்யியற் பாட்டு.

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்பது அறிகை
மேல்மிகு தானை வேந்தற்குக் கடனே

இக்கருத்து வரும் பாட்டு ஒரு வேதமறுப்புப் பாட்டு. பூர்வ மீமாம்சத்திற்கும், உத்தர மீமாம்சத்திற்கும் முற்றிலும் பொருந்தாத பாட்டு. அரசனை உயர்த்திச் சொல்லும் பாட்டு. இதைச் சமண நெறியாளர் (ஆசீவகம், செயினம், புத்தம் ஆகிய நெறியாளர்) சொல்லுவதிற் பொருளுண்டு. அவருக்கு “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பது நடைமுறை வாழ்வில் ஏற்கத் தகுந்தது. வேதநெறிப் பார்ப்பனர் இதைப் பாடியிருக்க வழியில்லை. உடனே அக்காலத்தில் ஒருசில பார்ப்பனராவது சமண நெறியாளராய் இருக்கக் கூடாதா என்று கேட்டால் ”இருக்கலாம், ஆனால் வேத மறுப்பாளராய் இருக்கவேண்டும்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

அடுத்து புறநானூற்றில் இன்னொரு மோசியையும் நாம் பார்க்கிறோம். அவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார். இவர் புறம் 13, 127-135, 241, 374, 375 ஆகிய 13 பாடல்களைப் பாடியிருக்கிறார். புறம் 13 சோழன் முடித்தலை கோப்பெரு நற்கிள்ளியைப் பற்றி, சேரமான் அந்துவஞ் சேரல் இரும் பொறையோடு கொங்குக் கருவூரின் வேண்மாடத்து மேலிருந்து பாடியதால், உறையூர் ஏணிச்சேரி முடமோசியாருக்கும், மோசி கீரனாருக்கும் இடையே குறைந்தது 70-80 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும். இதை எப்படிச் சொல்கிறோம்?

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை செங்குட்டுவனின் சம காலத்தவன். பெருஞ்சேரல் இரும்பொறையின் தந்தை செல்வக் கடுங்கோ வாழியாதன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்  காலத்தவன். செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் தந்தை அந்துவஞ் சேரல் இரும்பொறை. இவன் நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ் சேரல் காலத்தவன். ஒரு தலைமுறைக் காலம் 25 என்று கொண்டால் மூன்று தலைமுறை என்பது 75 ஆண்டுகளாகும். [கிட்டத்தட்ட 70-80 ஆண்டுகள் என்று கொள்ளலாம்.] செங்குட்டுவன் காலம் பெரும்பாலும் கி.மு.80 என்று சிலம்பின் காலம் கட்டுரைத் தொடரில் முடிவிற்கு வந்த காரணத்தால், ஏணிச்சேரி முடமோசியார் காலம் கிட்டத்தட்ட கி.மு.150-160 ஆகும். இதைத் துல்லியமான கணக்கு என்று சொல்ல முடியாது. இப்போதைக்கு இத் துல்லியம் போதும். இக்காலம் தான் கடையெழு வள்ளல்களின் காலமாயும் தெரிகிறது.

புறம் 127-135, 241, 374, 375 வழி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கடை யெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் ஆண்டிரனைப் பாடுகிறார். இவர் பாடியதைப் பல ஆண்டுகள் கழித்து, புறம் 158 இல் குமணனைப் பாடும் பெருஞ்சித்திரனார் “திருந்துமொழி மோசி பாடிய ஆயும்” என்று பழங்காலம் சொல்லி நினைவு கொள்ளுகிறார். குமணன் என்னும் வள்ளல் கடையெழு வள்ளல்களுக்குப் பல்லாண்டுகள் கழித்து இருந்ததாகவே சங்க இலக்கியத்தில் அறிகிறோம். குமணனின் காலம், கி.மு.80 க்கும் பின்னால் இருந்திருக்கவேண்டும். இன்னும் அக் காலத்தை என் ஆய்வின் வழி, கணிக்கவில்லை

உறையூர் ஏணிச்சேரி என்பது உறையூரில் உள்ள ஒரு பகுதி. முட மோசியார் என்று சொல்லுவதால் மோசி என்பது தொழிற்பெயராகவோ, இயற்பெயராகவோ இருக்க வேண்டும். இப்புலவரின் பெயரே ”மோசி என்பது ஊர்ப்பெயர், கோத்திரப்பெயர்” என்று சொல்வதைத் தவிடு பொடியாக்கி விடுகிறது. இன்றைக்கும் தமிழக, சேரல நாட்டுப்புறங்களில் தொழிற் பெயரையும், இயற்பெயரையும் வைத்தே நெருங்கிய ஒருவர் ஊருக்குள் அழைக்கப் படுவார். [என்னங்க! அந்த கந்தசாமி ஆசாரியை நாளைக்குக் கூப்பிடுங்க! நம்ம கொல்லன் முருகன் பட்டறைக்குப் போயிட்டு வா! தையற்காரர் மாணிக்கம் எங்கே போனார்?)

இனி புறம் 272 ஆம் பாட்டை மோசி சாத்தனார் என்ற புலவர் பாடியதாகக் குறிக்கப் படுகிறது. மூன்று விதமான புலவர்கள் மோசி கீரனார், உறையூர் ஏணிச்சேரி முட மோசியார், மோசி சாத்தனார் என்று அழைக்கப் படுவதால், மோசி என்றபெயர் தொழிற்பெயராக அமைவதற்கே வாய்ப்புக்கள் அதிகம். முதற்புலவரின் இயற்பெயர் கீரன், இரண்டாமவரின் இயற்பெயர் எங்கும் சொல்லப் படவில்லை. மூன்றாமவரின் இயற்பெயர் சாத்தன். 1930 - 50 களில் குப்பன் சுப்பன் என்ற பெயர் தமிழரிடையே அதிகமாக இடப்பட்டது போல் சாத்தன் என்ற பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன அதிகமாகப் புழங்கிய பெயராக இருக்கலாம். இதை நீலகேசி 683 - ஆம் பாடல் (ஆசீவக வாதச் சருக்கம்) தெளிவாகக் குறிக்கிறது. Any Tom, Dick and Harry என்று ஆங்கிலத்தில் சொல்லப் படுவது போல சாத்தன் (here denotes common man) என்ற பெயர் தமிழகத்திற் பொதுப்பெயராக ஒருகாலத்திற் பயன்பட்டிருக்கிறது.

ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லல னாய்விடின் இச்
சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய
நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலும் நினக்குரைத்தும்
ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ?

சாத்தாரம்> சாத்தாரணம்> சாதாரணம் என்ற சொல் ordinary என்ற பொருளைக் குறித்திருக்கிறது. அதேபோல சமணன் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற மூன்று நெறிகள் மக்களால் பெரிதும் பின்பற்றப் பட்டதால்) என்ற பெயர் சமணன்> சாமணன்> சாமாண்யன் என்று பரவியிருந்தது.

இதுவரை பேசிய செய்திகள் மூலம் மோசி என்பது தொழிற்பெயராய் இருந்தால் மேலே கண்ட படுமரத்து மோசி கீரனார், மோசி கொற்றனார், மோசிக் கரையனார், முட மோசியார், மோசி சாத்தனார் ஆகிய எல்லாப் பெயர்களையும் எந்தக் குழப்பமும் இல்லாது ஊர்ப்பெயர், குடிப்பெயர்/தொழிற்பெயர், இயற்பெயர் என்ற முறையில் ஒத்திசைவாகப் பார்க்கமுடியும்.

இனிச் சோழர் காலத்துக் கல்வெட்டுக்களைக் கொண்டு மோசி என்பது பார்ப்பனக் கோத்திரம் என்று சொல்லும் வாக்குவாதத்தைப் பார்ப்போம். முதற் கல்வெட்டு SII XIV No.9 எங்கள் ஊருக்கு அருகில் உள்ள திருப்புத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தின் முதற் சுற்றாலையில் இருக்கும் கல்லில் வெட்டப் பட்டது (On a slab in the first praakaara of the tiruttalisvara temple). அதில் உள்ள கிரந்தப் பகுதியைத் தவிர்த்து தமிழ்ப்பகுதியை மட்டும் இங்கு தருகிறேன்.

--------------------
கோமாறஞ் சடையற்கு யாண்டு
ஆறு எதிர் நான்கு இவ்வா
ண்டு [அ]ருகத்தூர் கிழார் மகன்
மொசி கண்டஞ் சங்கரன் பி
ராமணி மாறம் பட்டத்தா
ள் திருப்புத்தூர்த் திரு[த்]
தளிப் பெருமானடிகளு
க்கு நொந்தாவிளக் கெரிய [வை]
த்த காசு பத்து [*] இவை காத்தெரி
ப்பா யிரத் தெழுநூற்று
வரடி யென தலை மெல
----------

பாண்டிய அரசன் மாறன் சடையனின் ஆறாவது ஆண்டில் (எதிர் நான்கு எதைக் குறிக்கிறது என்று புரியவில்லை. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதால் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறேன்.) அருகத்தூர் கிழாரின் மகனான மொசிகண்டஞ் சங்கரனின் பிராமண மனைவி மாறன் பட்டத்தாள் திருப்புத்தூர் திருத்தளிப் பெருமானடிகளுக்கு நுந்தா விளக்கு எரிய வைத்து காசு பத்துக் கொடுக்கிறாள். இந்தக் கொடையைக் காப்பதற்கு ஆயிரத்து எழுநூற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் பொறுப்பாக்கப் படுகிறார்.

கல்வெட்டு சற்று தெளிவில்லாது வெளிறிப்போய் இருப்பதால் முடிப்பு சரியில்லாது இருக்கிறது. முழுப்பொருளும் உணர முடியவில்லை. இதில் மொசி கண்டஞ் சங்கரன் என்ற பார்ப்பனப் பெயரை எடுத்துக் கொண்டு தான் ’மொசி’ என்னும் சொல்லைக் கோத்திரப் பெயராகச் சிலர் கொள்கிறார்.

ஏற்கனவே சொன்னது போல் தமிழகப் பார்ப்பனரில் கோத்திரப் பெயராகச் சொல்லப் படுவனவற்றுள் மோசி என்ற பெயர் எங்குமே கிடையாது. அச்சுக் காலத்திற்கு முன்ப வரை உயிர்மெய் ஆகாரம், உயிர்மெய் ஒகரம், உயிர்மெய் ஓகாரத்தில் வரும் கால் குறியீட்டிற்கும், ரகரக் குறியீட்டிற்கும் இடையே வேறுபாடு தெரிந்ததில்லை. இடம், பொருள், ஏவல் அறிந்தே அந்த வேறுபாடு கல்வெட்டுப் படிப்போராற் புரிந்து கொள்ளப் பட்டது என்பதையும், அதே போல உயிர்மெய் ஒகரத்திற்கும், உயிர்மெய் ஓகாரத்திற்கும் (இதே போல உயிர்மெய் எகரத்திற்கும், உயிர்மெய் ஏகாரத்திற்கும்) ஒரே போல ஒற்றைக் கொம்பே வீரமா முனிவருக்கு முன் எழுதப் பட்டது என்ற செய்திகளைக் கவனத்திற் கொள்ளும் போது, மொசி என்பது மெரசி என்றும் படிக்கப் படலாம் என்ற பட்டுமை (possibility) நமக்குப் புலப்படும்.

மரிசி என்ற கோத்திரம் தமிழ்ப் பார்ப்பனரிடையே உண்டு. கட்டி கெட்டியாவது போல பலம் பெலமாவது போல மரிசி என்பது பேச்சுவழக்கில் மெரிசி ஆகலாம். மெரிசியில் இருந்து மெரசியாகத் தோற்றம் அழிப்பது தேய்ந்து போன கல்வெட்டில் பெரிதும் நடக்கக் கூடியதே.

இதே போல கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயிலின் கருவறையின் வெளிப்பக்கம் தெற்குச் சுவரில் கண்ட SII XIX No.347 என்ற கல்வெட்டில் ”மொசி ஒற்றியூரன் கூத்தன்” என்று வருவதுங் கூட மெரிசி ஒற்றியூரன் கூத்தன் என்பதாய் இருக்கலாம்.

எழுத்துப் பிழை/ படிப்புப் பிழை ஏற்படக் கூடிய இக்கல்வெட்டுக்களுக்கு நாம் எந்த அளவு ஏற்பளிக்கலாம் என்பது நாம் காணவிழையும் ஒத்திசைவைப் (consistency) பொறுத்தது. மெரிசி என்று படிப்பது பார்ப்பனக் கோத்திரத்திற்கு ஒத்திசைவாக இரண்டு கல்வெட்டுக்களையும் காட்டுகிறது.

முடிவில் two wrongs cannot make one right என்று சொல்லி, 2 கல்வெட்டுக்களையும் மோசி என்ற பெயரைப் புரிந்து கொள்வதிலிருந்து விலக்கி வைக்கிறேன். மீண்டும் பிருக்குக் காரணமே எனக்கு அறிவுரையாய் அமைகிறது.

அடுத்த பகுதியில் மோசி என்ற சொல்லின் சொற்பொருள் எதாக இருக்கலாம் என்று பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 19, 2010

மோசிகீரனார் - 1

அண்மையில் ctamil மடற்குழுவில் மோசி கீரனார் பற்றிய பேச்சொன்று வந்தது. மோசி பற்றிய குறிப்பு ”மோசியூர்/மோசிகுடி” எனும் ஊர்ப்பெயரைக் குறிக்க'லாம்' என்று புறநானூற்று உரையாசிரியர் கூறுவர். அக்குறிப்பை ஏற்கத் தயங்கிப் பார்ப்பனரில் ஒரு தனித்த கூட்டத்தை (கோத்திரத்தை) ’மோசி’ என்ற சொல் குறித்திருக்கலாம் என்று சிலர் சொல்ல முற்பட்டனர். அப்பொழுது இராதாகிருஷ்ண வாரியர் என்னும் கேரள அறிஞர், ”வடக்கே பல மொழிகளிலும், குறிப்பாக இந்தியில் ’மோசி’ என்பது தோல்வேலை செய்யும் செம்மாரைக் குறிக்கிறது” என்றார். அது உண்மையானால், ”அது சங்கத வேர் கொண்டிராதது” என்று மோனியர் வில்லிம்சு அகரமுதலி சொல்லும் போது, ”தோல்வினைஞரைக் குறிக்கச் செருமார்> செம்மார் என்ற சொல் மட்டும் அல்லாது இன்னொன்றும் தமிழில் இருந்திருக்கலாமோ?” என்று நம்மை எண்ண வைக்கிறது. கூடவே ”சங்க காலத்திற் சாதி இருந்ததா, இல்லையா?” என்ற வாக்குவாதத்திலும் வேறொரு பார்வை ஏற்படுத்துகிறது. தோல் வினைஞருக்கு வேந்தனே சிறப்புச் செய்யும் காட்சி என்பது சாத்தாரமானது அல்லவே?.

எதற்கெடுத்தாலும் சங்கதத்தையே அடித்தளமாக்கும் இந்தியவியல் ஆய்வில், தென்தமிழ்ப் பின்புலங்களும் வடநாட்டுச் சொற்களுக்கு இருக்கலாம் என்பது நம் போன்றோர்க்குப் புதிய செய்தி. வடநாட்டுச் சொற்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், கூர்ந்து கவனிப்பது தமிழாய்வருக்கு நல்ல பயனைத் தரும் என்று சொல்லி, மோசியின் தமிழ்ப் பட்டுமை (Tamil possibility) குறித்துத் தனியே ஒரு கட்டுரை அளிப்பதாய்க் கூறி, மோசி கீரனாரின் புறம் 50 ஆவது பாடலைப் பற்றிப் பேசி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, மோசிகீரனார்க்கு கவரி வீசிய காட்சியை அம்மடற்குழுவிற் சுருங்க விவரித்தேன். அதையுங் கூடச் சிலர் மறுத்தார். இன்னுஞ் சிலர் முரசோடு செருமார்க்குத் தொடர்புற்ற நிலையை மோசி கீரனார் என்னும் புலவர் போல்மைப் படுத்திக் காட்டுகிறார் என்று சுற்றி வளைத்துஞ் சொன்னார். அது என்னவோ தெரியவில்லை, சங்கத் தமிழ்ப் பாக்களுக்கு நேரடியான, பொருத்தமான விளக்கங்கள் சொல்லுதற்கு மாறாகப் பார்ப்பனரை எப்படியாவது உள்ளே கொணர்ந்து சுற்றிவளைத்து பொருந்தச் சொல்லுவதே சிலருக்கு வாடிக்கையாகிறது. இவரின் சிந்தனை இப்படித்தான் இருக்கும் போலும். ஆய்வு என்று வந்தால் பல்வேறு பார்வைகள் எழுவது இயற்கை தான். பொதுவாய், எப்பொழுதும் உரையாசிரியர் கருத்தோடு மட்டுமே அமையாது, மூலத்திலிருந்த படி, இன்றையச் சிந்தனையில் புறப்பாட்டுக்களை மறுவாசிப்பு செய்ய விழைபவன் நான். புறம் 50 பற்றிய என் மறு வாசிப்பு கீழே தரப்படுகிறது.

இப்பாடலுக்குட் சட்டென்று போகாது, முரசின் அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொண்டு போனால் நன்றாக இருக்கும். தமிழிசை பற்றிப் பேசும் போது, வீ.பா.கா. சுந்தரத்திற்குக் கடன்படாமல் நான் என்றுமே எழுதியது இல்லை. வழக்கம் போல அவர் செய்திகளுடன் தொடங்குகிறேன். (இது போக http://www.anothersubcontinent.com/forums/lofiversion/index.php?t6900.html என்ற தளத்திலும் முழவுக் கருவிகள் செய்முறை பற்றி அறியலாம்.)

முழவு என்பது ஒருமுகம் கொண்டது. (முரசு சிறியது, முரசம் பெரியது.) ஒரு முக முழவைப் போல் இருமுக, மும்முக....ஐம்முக முழவுகள் எனவும், குட முழவு எனவும் பல முழவுகள் உண்டு. முழவைப் பற்றிச் சொல்லும் போது பறை பற்றியும் நமக்கு எண்ணத் தோன்றும். முழவு, பறை என்ற இரு தோற் கருவிகளுக்கும் அடிப்படை வேறுபாடுண்டு. (தோல், குடம் இரண்டும் சேர்த்த) முன்னது முழுதும் மூடப்பட்டது. (தோல், உருளைக் கூடு இரண்டும் சேர்த்த) பின்னது திறவையானது. முரசு என்பது முழவு வகை சேர்ந்தது. மத்தளம், உடுக்கை, மேளம் போன்றவைகள் இருமுக முழவுகளாகும். இன்றும் ஐமுக முழவு -பஞ்சமுக வாத்தியம்- என்பது தில்லைச் சிற்றம்பலத்து வழக்கில் உண்டு. அதன் குடம் மண்ணால் ஆனது. பல்முக முழவுகளை இசைப்போர் நம்மூரில் அருகிவிட்டனர். தாள முழக்கம் பற்றிய அறிவு, திறமை, செய்முறை நுட்பம் போன்றவையும் நம்மிடம் குறைந்து வருகின்றன. மேல்நாட்டு இசை மோகத்திற் தமிழிசை நுட்பம் நலிந்து கொண்டிருக்கிறது.)

முரசு  இசைக்கருவி எப்படிச் செய்யப் படுகிறது என்பதைச் சுருக்கமாய்ப் பார்ப்போம். யா (ஆச்சா என்றும் இதைச் சொல்வார்; இதைக்கொண்டு நாகசுரம், புல்லாங்குழல் செய்வார்.) போன்றதோர் கடுமரத்தை வெட்டி யெடுத்து அதை உளியாற் செதுக்கி அரைக்கோளம் ஆக்கி, உட்புறத்தைச் சுரண்டிக் கலஞ்செய்து (கல்லப்பட்டது கலம். இக்கலத்திற்குப் பத்தல்/பத்தர் என்று பெயர் சொல்வார். குடம், தாழி, வயிறு, அகடு, அகளம் என்றும் சொல்லுவதுண்டு), கலத்தின் வாயைத் தோற்போர்வையால் மூடி, அதற்கும் மேல் ஒரு வளையம் வைத்து, பத்தரைச் சுற்றி வார்கொண்டு வளையத்தை இறுகப் பிணைத்துக்கட்டி முரசு உருவாக்குவார். வார்ப்பட்டையால் இறுக்க, இறுக்க, வாயை மூடிய தோலில் இறுக்கம், (விரைப்பு, திணுக்கம் - tension என்றுஞ் சொல்லலாம்.) கூடிக்கொண்டே போகும். தோலைக் கோல்கொண்டு தட்டும்போது ”தம்,தொம்” என்று அதிரொலியெழும்.

முரசைப் பார்த்திராதவர் இக்கால நாகசுர மேளத்துத் தபலைக் கருவியை (தபலை&gt ;தவலை> தவுலை> தவுல்) எண்ணிப் பார்க்கலாம். மேளத் தபலை ஓர் இருமுகக் கருவி. வடநாட்டுத் தபலை (> தபலா) ஒருமுகக் கருவி. நம்மூர் மேளத் தபலை பலாப்பழம் போல் உருளையுருக் கொண்டது. அதன் உட்புறத்தையும் இப்படித் தோண்டிக் கூடாக்கி இருமுக வாய்களிலும், போர்வையாய்த் தோலை விரித்து அவற்றின்மேல் இரு வளையங்களை வைத்து, நீண்ட வார்ப்பட்டை மூலம் இறுக்கிப் பிணைப்பார். பத்தரை மூடிய தோல் எவ்வளவு இறுக்கப் படுகிறதோ, அவ்வளவிற்குப் பிசிறில்லாது வட்டத் தோலின் நடுவிருந்து ஒரு சுரம் பிறக்கும். வட்டத் தோலின் மையத்தில் இருந்து விலகி வெவ்வேறு சுரங்களை ஒலித்துக் காட்டலாம்.

மேளத் தபலையில் இரு வளையங்களை வைத்துப் பிணைப்பது போல் முரசில் ஒரு வளையத்தை வைத்து வார்ப்பட்டை கொண்டு பத்தரைச் சுற்றி வந்து இறுக்கிப் பிணைப்பார்கள். வடநாட்டுக் கருவியான ஒருமுகத் தபலையும், நம் முரசு போலவே கட்டப்படுவது தான். வடநாட்டுத் தபலையின் பத்தல், சில போது மாழையாலும் அமையும். நம்மூர் முரசத்தின் பத்தல் எப்பொழுதுமே உறுதிவாய்ந்த மரத்தால் ஆனது. (வீணைப் பத்தல், பலாவால் அமைந்தது.).

இக்காலத்தில் மத்தளம் போன்ற கருவிகளில் கட்டப்படும் தோல் ஒற்றைத் தோல் அல்ல. அது வெட்டுத் தோல், கொட்டுத் தோல், உட்காரத் தோல் என்ற மூவகைத் தோல்களாய் கன்று, ஆடு, எருமைத் தோல்களைக் கொண்டு ஒன்றின் மேல் ஒன்றாய் வச்சிரப் பசையால் ஒட்டப்பட்டு அதற்கு மேல் வச்சிரமும், இரும்புத்தூளும் காந்தயத் தூளும் (manganese dust) கலந்த மாழைப் பூச்சும் (metallic coating) சேர்ந்து அமையும். (கஞ்சிரா போன்ற சிறுபறை உடும்புத் தோலால் செய்யப்பட்டது.) மத்தளத்தின் தோற் சேர்மானம் எல்லா இடத்தும் ஒரே திண்ணத்தில் (thickness) இருப்பதில்லை. வட்டத் தோலின் நடுவில் சற்று திண்ணம் கூடுதலாகவும், அதன் விளிம்புகளிற் குறைந்தும், நிறம் கருப்பாகவும் இருக்கும். இக் கருவட்டப் பகுதியைத் தான் கரணை என்றும், கரணையின் மேடான மைய இடத்தை அதைப்பிடம் என்றும் சொல்வார். கரணையின் மேலுள்ள மாழைப் பூச்சால் ஒருவித வழவழப்பும் தோற்சேர்மானத்திற்கு ஊட்டப் படுகிறது. பொதுவாக எந்த முழவிலும் தோல் சுரசுரப்பாய் இருக்காது. நாளாவட்டத்தில் வழவழப்பு இருந்தால் தான் அதிர்வொலியும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

இதேபோன்ற முத்தோற் சேர்மானம் (இதைத் தொப்பித் தோல் என்பார்.) முரசில் உண்டா என்று அறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. அதேபொழுது முரசில் பத்தலைப் போர்த்தியது வெறும் ஒற்றைத் தோல் தான் என்றும் சொல்ல முடியாது. இக்காலத்தில் நகரா என்ற பெயரில் சில கோயில்களில் முரசங்கள் உள்ளன. அவற்றின் கட்டுமானம் எப்படி என்பது ஆய்வு செய்ய வேண்டியதாகும். முரசுசெய் நுட்பியலும், அறிவியலும் மீண்டும் சோதனை-வழு (trial and error) முறையில் திரும்பக் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

தொடக்க காலத்தில் முழவிசைக்கத் தெரிந்த பாணர், செருமாரின் (தோல் வினைஞரின்) உதவியின்றி முழவுகளை உருவாக்கியிருக்கவோ, பேணவோ வாய்ப்பில்லை. பாணர் - செருமார் கூட்டுறவில் தான் முழவும், பறையும் தோன்றியிருக்க முடியும், தோல், வார்ப்பட்டை, ஆகியவற்றை உருவாக்கிக் கட்டுதற்குச் செருமார் அறிவும், செய்முறையும் பயன்பட்டிருக்க வேண்டும். இக்கருவிகளில் எக்குறை ஏற்பட்டாலும், அதைத் தீர்க்கச் செருமார் வந்திருப்பர். இன்றும் தோல்வினைஞரிடம் தான் இந்நுட்பம் செறிந்துள்ளது.

இனி ஈர்ந்தண் முழவு என்ற கலைச்சொற் பயன்பாட்டைப் பார்ப்போம். பொதுவாய் எல்லாத் தோல்களிலும் எத்தனை நாட்பட்டாலும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். தோல் என்பது ஈரத்தோடு நிறைந்த புரதம் போன்ற வேதிப் பொருள்களால் ஆனது. ஈரப்பதத்தைப் பொறுத்து ஒலியின் அதிர்வு மாறுபடும். நட மண்டிலத்துச் (நடு ஸ்தாயி) ச எனும் ஒலிக்காகச் சுருதிசேர்த்த முழவு, சற்று ஈரம் கூடினால் மெலிவு மண்டிலத்தில் உள்ள நி - க்கும், முன்னாற் சுருதிகட்டிய நடு மண்டிலச் ச- வுக்கும் இடையில் சுருதி இறங்கிப் போகலாம். பொதுவாக ஈரப்பதன் கூடக்கூடச் சுருதிகள் இறங்கும். சுருதிகளைக் கூட்டவேண்டுமானால், மேலே சொன்னதற்கு எதிராகப் பறையிசைஞர் நெருப்புமூட்டி அதன் கதிர்வீச்சில் (radiation) பறையைக் காட்டி தோலின் ஈரப்பதனைக் குறைப்பார். அப்படிச் செய்வதாற் சாப்பறையைக் கொட்டும் பொழுது கடுவோசை எழும். இறங்கிய சுருதிக்கு ஈர்ந்தண் முழவும், ஏறிய சுருதிக்கு கதிர்வீச்சிற் காட்டிய சாப்பறையும் எடுத்துக் காட்டுக்களாகும்.

ஒரு முழவில் எழும் ஒலி அதன் தோலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இழுவை விசை, தோலின்மேல் போதும் கோலின் அடிப்பு விசை, தோலின் உள்ளகப் புரத அமைப்பு, அதன் ஈரப்பதம் என்று பல்வேறு வேறிகளை (variables) வைத்து மாறுபடும். எனவே ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு சுரத்திற்குத் தக்க சுருதி சேர்க்கப்படும்.

முழவுபற்றிய இவ்வடிப்படைச் செய்திகளோடு நின்றுவிடாமல், ‘மண்ணுதல்’, ’பீலி அணிதல், சேக்கை’ எனும் 3 வேறு சொற்கள் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்வது பாட்டைப் புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

முதலில் மண்ணுதலைப் பார்ப்போம். முள்>* (மள்)> மண்> மண்ணுதல் என்பதற்கு குளித்தல், முழுகுதல் என்றே பொருள். மண்ணுமங்கலம் என்பது அரச நீராட்டு விழா. மண்ணுதல் என்ற சொல் வழக்கிறந்து இன்றைக்குப் பெயரும் துணைவினையுமாக ’மஞ்சனம் செய்தல்’ என்று திரிந்து புழங்கும். பெருமாள் கோயில்களில் நல்லதமிழில் திருமஞ்சனம் என்று சொல்வதைச் சிவன் கோயில்களில் ”அபிஷேகம்” செய்வதாய்ச் சங்கதப்படுத்துவார்.

திருமஞ்சனம் செய்தல் என்பது வெறுமே நீரால் மட்டுமே குடமுழுக்குச் செய்வதில்லை. பற்றியாளன்> பத்தியாளன்> பக்தியாளன் விரும்பும் வகையெல்லாம் பால், தயிர், நெய், தேன், இளநீர், பன்னீர், வித விதமான பழச்சாறு என்று பல்வேறு நீர்மங்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்வார். இன்னும் சொன்னால் சந்தனம், திருநீறு, மஞ்சள், குங்குமம், சவ்வாது, புனுகு, சோறு என்று விதவிதமான பொடி, திண்மக் கலவைகளாலும் திருமஞ்சனம் செய்வதுண்டு. ஒவ்வொரு நீர்மம்/ திண்மம்/ பொடிக்கலவையாலும் திருமஞ்சனம் செய்கையில் இடையே ஒரு முறை நல்நீரால் இறைவன் திருமேனியை முழுக்காட்டுவார். பற்றியாளனின் செல்வ நிலைக்குத் தக்கத் திருமஞ்சனங்கள் 1, 2 மணி நேரங்கள் கூட நீள்வதுண்டு.

அடுத்துத் திருமஞ்சனம்/ குடமுழுக்கு என்பது வெறுமே சிவனுக்கும், விண்ணவனுக்கும் மட்டுமே செய்வதில்லை. கொற்றவைக்கும் (அம்பாளுக்கும்), ஏன் சிறுதெய்வங்களுக்கும் கூடச் செய்வதுண்டு. இன்று நாகரிகம் கூடிப் போன காரணத்தால் வழிபாட்டு முறையில் வன்செயல்கள் கூடாது என்ற காரணத்தால், சில நடைமுறைகள் மாறிப் போயின. சில காலங்களுக்கு முன் இறைத் திருமேனிக்குச் செய்யும் திருமஞ்சனங்களில் அரத்தம், நிணம் போன்றவை கலந்து செய்யப் பட்டதுண்டு. இன்று அவற்றிற்குப் பகரியாய் எலுமிச்சம் பழச்சாறிற் கலந்த குங்குமத்தைப் பயனுறுத்துவார். [நல்ல நாள், பெருநாட்களில் குங்குமம் தடவிய பூசனிக்காயை வீதியில் உடைக்கிறாரே அதுகூட அரத்தம் தெறிக்கும் கபால உடைப்புத் தான்.) இன்றைக்கு 100, 200 ஆண்டுகள் முன்கூட அரத்தம் கொண்டு திருமஞ்சனம் செய்வது பார்ப்பனர் வணங்காத தெய்வங்களுக்கு இயல்பாக இருந்தது. அதுவும் குறிப்பாகக் கொற்றவைக்கு (அவள் பார்ப்பனர் வணங்கத் தயங்கிய தாய்த் தெய்வமாகத்தான் முதலில் இருந்தாள். பின்னால் தான் தயங்கித் தயங்கிப் பார்ப்பனரும் சிவநெறியாளரும் அவளை அம்பாளாக ஏற்றுக் கொண்டார்.) ஓர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னாற் கூட சென்னைக்கு அருகிலுள்ள பெரியபாளையத்து பவானியம்மனுக்கு அரத்தக் குடமுழுக்கு (கோழி, ஆட்டு அரத்தம்) ஆடிவெள்ளியிலுண்டு. காலத்தின் கோலமாய் இன்று எல்லாம் மாறிவிட்டது. பண்டாரப் பூசாரி போய் பார்ப்பனப் பூசாரி கோயிலுக்குள் வந்துவிட்டார்.

இதுபோல் அரத்தக் குளியாட்டு அரசனின் முரசிற்கும் நடைபெற்றிருக்கலாம். ஏனெனில் அரசமுரசம் / போர்முரசம் கொற்றவையின் கூறு. முரசொலி கொற்றவையின் பேரொலி. முரசிற்குக் குளியாட்டுவதைக் கொற்றவைக்குக் குளியாட்டுவதாகவே கொள்ளுவர். அதேபொழுது, அரத்தத்தை அப்படியே முரசுத் தோல்மீது கொட்டிவிடமுடியாது. அரத்தம் சூடாக இருக்கும் வரைதான் உலராது இருக்கும். 8 மணி நேரம் தாண்டினால், குளிர்ந்து போன அரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டிபட்டுப் போகும். அதைக் கொண்டு முரசுத் தோலின் மேல் கொட்டினால் முரசும் கெட்டிதட்டிப் போகும். அப்புறம் அரத்தக் கட்டியைச் சுரண்டித் தான் எடுக்க முடியும். அப்படிச் சுரண்டி எடுத்தால் இசைக்கக் கூடிய தோலின் வழவழப்புக் கெட்டுப் போகும். இசை நாராசமாய் ஒலிக்கும். எனவே முரசொலி எழவேண்டுமானால், முழுக்காட்டப் பயன்படும் அரத்தம் தோலிற் படாது பத்தலின் மேல்தான் கொட்டியிருக்க முடியும். அங்கும் இங்குமாக ஒரு சில அரத்தத் துளிகள் வேண்டுமானால் தோலின்மேற் படலாம். அப்புறம் ”ஏன் முரசின் மேல் அரத்தம் மண்ணினார்?” என்றால் அது கொற்றவையின் மேல் அவர் கொண்ட பற்றியின் அடையாளம்; அவ்வளவுதான்.

இதுபோகத் தோற்கருவி பற்றிய செய்திகள் அறியாத நம்மிற் சிலர் ”அவ்வப்பொழுது முரசை வெறும் நீரால் குளிப்பாட்டி அழுக்கை போக்கினார்” என எண்ணிக் கொள்கிறோம். அது வெறும் கற்பனை. பூசை நேரத்தில் நடக்கும் வெவ்வேறு பொருட்களின் சேர்க்கையை விலக்கித் தூய்மை செய்வது தவிர்த்து வேறு எந்தக் காலத்தும் நன்னீரால் முழவைக் குளியாட்ட வேண்டிய தேவையில்லை. அதாவது முரசின் அலங்காரத்தைக் கலைக்கும் போதுதான் நன்னீர் முழுக்காட்டிற்கு வேலையுண்டு. அப்படி அலங்காரம் செய்வது, போருக்குப் போவது, பூசைக்கு உட்படுவது போன்ற காரணங்களில் மட்டுமே அமையும்.

இனிப் பல்வேறு விதமான அலங்காரங்களைப் பற்றிப் பார்க்கும் போது தான் பீலி அணிதலுக்கு வருகிறோம். இன்றைக்கு முரசத்தில் (நகராவில்) பீலி கட்டுவதை நாம் எங்கும் காணுவதில்லை. ஆனால் மயிற்பீலிச் சுருளைக் காவடியிற் கட்டுவதை இன்றும் பார்க்கிறோம். தைப்பூசம் வந்தால் பழனிக்கு எத்தனை காவடிகள் போகின்றன? நான் எங்கள் சிவகங்கைப் பக்கத்து வழக்கத்தைச் சொல்லுகிறேன். (மற்ற ஊர்களில் நடைமுறைகள் சற்று மாறியிருக்கலாம். ஆனால் பெரிதும் மாறியிருக்க முடியாது.) நான் இங்கு சாத்தாரக் காவடிகள் பற்றி மட்டுமே சொல்லுகிறேன். பல்வேறு விதமான விதப்புக் காவடிகள் பற்றிச் சொல்லவில்லை. அவற்றை உருவாக்கும் விதமே தனிக்கலை.

காவடி எடுக்க விரும்புகிறவர் எல்லோரும் தம் காவடிகளைத் தம் ஊரில் உள்ள “சாமிவீட்டில்” (சாமி வீடு என்பது காவடியெடுப்பவர் எல்லோரும் சேர்ந்து பொதுப்பட முருகபூசை செய்யும் இடமாகும்.) சமர்ப்பித்து, அங்கு விவரம்தெரிந்த, விரதமிருந்த பெரும் பற்றியாளர் சிலர் காவடிகளை நீர் கொண்டு கழுவி திருநீறு, சந்தனம் தடவி, குங்குமம் இட்டு, மயிற்பீலிச் சுருள் கொண்டு காவடியின் 4 பாதங்களோடு சேர்த்துக் கட்டி அலங்கரித்து, காவடியின் விற்புறத்தில் பட்டுத்துணி போர்த்தி மணிக் குஞ்சலங் கட்டி, பூமாலைகளை அணிவித்துக் காவடிகளை அணியமாக்குவர். நம் ஊரில் இருந்து புறப்படும் காவடிகள் எல்லாம் சாமி வீட்டில் வைக்கப்பட்டு பூசையில் அவை முன்னிருக்கும் சாமியாடியால் வாழ்த்துச் சொல்லப்பட்டு காவடி தூக்குபவரின் தோளில் ஏற்றப்படும். பின் பழனி வரை காவடி தூக்கிச் செல்லப் பட்டு பழனி மலையில் கோயிலை வலம் வந்து இறைவனை வழிபட்டுக் காவடிகள் செலுத்தப்பட்டு, பின் பழனியில் உள்ள சாமி வீட்டில் ஒருங்கு சேர்க்கப்பட்டு அங்கும் ஒரு பூசை நிகழ்ந்து அதற்குப் பிறகே அலங்காரம் கலைக்கப் படும்.

இப்படி அலங்கரிக்கப்பட்டு பூசையிற் கலந்துகொண்ட காவடிகளை விரதர், காவடி தூக்குபவர், சாமியாடிகள் தவிர வேறுயாரும் காவடிகளைத் தொடக் கூடப் பயப்படுவார். நாட்டுப்புறங்களில் இருக்கும் எல்லோர்க்கும் இது நன்றாகவே தெரியும். வருவோர், போவோரெல்லாம் காவடிகளைத் தொட்டு விடமுடியாது. இந்த அடிப்படை அறிவில்லாத இற்றைத் தமிழர் இருக்க முடியாது. இதேபோல போருக்கான பூசையில் கொற்றவைக்கு நேர்ந்து கொண்ட முரசத்தை, மயிற்பீலிகள், மணிக்குஞ்சலங்கள் ஆகியவற்றோடு உழிஞைப்பூ சூடிய முரசத்தை, வருவோர் போவோரெல்லாம் தொட்டிருக்க முடியாது. விரதம் ஏற்றுக்கொண்ட இசைக் கலைஞனும், அவனை ஒட்டியோனும் தான் தொட்டிருக்க முடியும். சங்க காலத்தில் இருந்த எந்த சாத்தாரத் தமிழனுக்கும் இது தெரிந்திருக்கும். மோசி கீரனாருக்கும் இந்த அடிப்படை உண்மை தெரிந்திருக்கும்.

நாம் இனிப் பார்க்கவேண்டிய மூன்றாவது சொல் ’சேக்கை’ என்பதாகும். புறப்பாட்டில் ’சேக்கை’ என்ற சொல்லே வருகிறது, ’கட்டில்’ என்ற சொல் வரவேயில்லை. அது பாட்டிற்குக் கீழுள்ள விளக்கக் குறிப்பில் வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் வேண்டுமானால் கட்டிலின் பொருள் ’படுக்கை’  ஆகலாம். அதற்கு முந்தையக் காலத்தில் அதன்பொருள் வெறும் இருக்கை என்பதே. அரசு கட்டில் எப்படி அரசன் படுக்கையல்லவோ (அரசன் அமரும் இருக்கை),  அதுபோல முரசுச் சேக்கை என்பது முரசிருத்தும் இடம். அது படுக்கையல்ல. அரசுகட்டிலில் அரசன் ஏறுவதுபோல முரசிருக்கும் சேக்கையில் மோசிகீரனார் ஏறுகிறார். அதில் ஏறிப்படுத்ததாக நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். அதேபோல முரசின் சேக்கையில் மோசிகீரனார் ஏறியபொழுது முரசு அதன்நடுவில் இருந்ததா? மோசிகீரனார் முரசுச் சேக்கையின் ஓரத்தில் அமர்ந்தாரா? அன்றி அவர் ஏறும்போது முரசே அங்கில்லாது சேக்கையின் முழுதுமாய் ஏறி அமர்ந்தாரா என்பது தெளிவாகப் பாடலிற் புரியவில்லை.

இனிப் புறம் 50 ஆம் பாட்டைக் கவனிப்போம்.

மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபால் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்
அதொனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடைமுழவுத் தோள் ஓச்சித் தண்ணென
வீசீ யோயே வியலிடங் கமழ
இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில் நீ ஈங்கிது செயலே

இங்கு சொல்லப்படும் முரசும் யா போன்ற கருத்த மரம் ஒன்றாற் செய்யப் பட்டிருக்கிறது. அதிற் போர்த்தியிருக்கும் தோல் எந்தத் தொய்வும் இன்றி, எக்குற்றமும் சொல்ல முடியாத அளவுக்குச் சரியான இறுக்கத்தோடு இருக்கிறது. [மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் = குற்றஞ் சொல்ல முடியாதபடி இழுத்துக் கட்டப்பட்ட வாரோடு கரும் பத்தர் இருக்கிறது.- It is tightly lashed with a very long belt that you cannot find fault with.]

அடுத்த 3 வரிகளில் முரசத்தின் மேற்செய்த அலங்காரம் வண்ணிக்கப் படுகிறது. மயிர்ப்பீலிச் சுருளும், ஒளிதரும் மணிக் குஞ்சலங்களும் முரசின் மேல் அணிவிக்கப் பெற்றுள்ளன. பொன்போலும் ஒளிநிறைந்த உழிஞைப்பூ சூட்டப் பட்டிருக்கிறது. [ஒரு கோட்டையைப் பிடிக்கப் போகும் முன்னால் முரசின் மேல் உழிஞைப் பூ சூட்டப் பெறுதல் இயல்பான காட்சியே.]

மேலே கூறிய அலங்கார விவரிப்பு எதிரியின் கோட்டையைப் பிடித்து வெற்றி பெறுவதற்கு முன்னாலா, வெற்றி பெற்ற பின்னாலா என்ற கேள்வி நமக்கு எழும்பும். ‘குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வருதல்’ என்ற வாசகத்தால் அலங்கார விவரிப்பு மாற்றார் கோட்டையைப் பிடித்து வெற்றி பெற்றபின்னால் என்பதைத் தெளிவாகப் புரியவைக்கிறது. ஏனெனில் உழிஞைப் போரில் வெற்றிபெற்ற முரசத்திற்குத்தான் குருதியால் மண்ணுமங்கலம் நடைபெறும். அதாவது குருதி வேட்கை உருகெழுந்து நிற்கும் முரசத்திற்குத் தான் அரத்தத்தால் மண்ணுதல் நிகழும். .

எனவே இங்கு முதல் எட்டு வரிகளில், “கொற்றவைக்குப் பூசை நடத்தி அலங்கரிக்கப் பட்டு உழிஞைப் போருக்குச் சென்று குருதிவேட்கையைத் தணித்து வரும் அரச முரசம் மண்ணி வாரா நிலையில்” என்று “கட்டியக் கிளவி” (conditional clause) சொல்கிறார். அப்படியானால் என்ன பொருள்? போருக்குப் போன முரசும் பொதுவாக அரத்தத்தில் மண்ணி வரும். இப்போதோ, மண்ணிவராது நிற்கிறது. அந்நிலையில், எண்ணெய் நுரை போற் சிதறிக்கிடக்கும் வெண்பூக்கள் நிறைந்த முரசத்தின் சேக்கையில் ஏறி உட்கார்ந்து விடுகிறார். அவர் உட்கார்ந்த போது முரசம் அங்கு இருந்ததா, இல்லாமற் போனதா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இங்கே 2  விளக்கங்கள் தான் இயல்பாகச் சொல்லமுடியும். ஒன்று ஏரணத்திற்குப் பொருந்தாது; இன்னொன்று பொருந்தியது.

முதல் விளக்கத்தின் படி, அலங்கரிக்கப் பட்ட முரசம் உழிஞைப் போருக்குப் போயிருக்கிறது. முரசு கட்டிலில் சிறிய வெண்பூக்கள் தூவிக் கிடக்கின்றன. முரசம் திரும்பி வாராத நிலையில் மோசிகீரனார் முரசுகட்டில் ஏறி விடுகிறார். இவ்விளக்கம் ஏற்பதில் சில சிக்கல்கள் உண்டு. எப்பொழுது வெண்பூக்கள் சேக்கையில் சிதறிக் கிடக்கிறதோ, அப்பொழுதே மோசி கீரனார்க்கு சேர நாட்டு அரசன் உழிஞைப்போரில் ஈடுபட்டிருக்கிறான் என்ற ”சாத்தாரச் செய்தி” தெரியாமலா போயிருக்கும்? இச்சிந்தனை கூட இல்லாது சேக்கையில் மோசி கீரனார் ஏறியது அவரைப் பெரும் முட்டாளாகக் காட்டுகிறது. உழிஞைப் போருக்குச் செல்லும் முரசுக்குச் செய்யவேண்டிய அத்தனை நடைமுறைகளையும் தெள்ளத் தெளிவாக விவரிக்கும் புலவருக்கு அம்முரசு கட்டிலில் ஏறக்கூடாது என்ற கட்டளைமட்டும் தெரியாது போயிற்றா? நம்மால் நம்ப முடியவில்லை.

இனி 2 ஆம் விளக்கத்திற்கு வருவோம். முரசம் அங்கு தான் உள்ளது. ஆனால் கட்டிலில் இல்லை. அலங்கரிக்கப் படாத நிலையிற் கீழே கிடக்கிறது. புலவருக்கு அசதி. (ஏன் அசதி? முரசத்தின் இறுக்கத்தைச் சரிசெய்ய ஒருவேளை செருமாராகிய அவர் அழைக்கப் பட்டிருக்கலாம். முரசத்தைப் பேண வந்தவர் வேலையின் கடுமையில் தன்னை மறந்து மென்பூஞ் சேக்கையில் ஏறிவிட்டார்.) பிறகு ஏன் முரசின் அலங்கார விவரிப்பைப் பாவிற் சொன்னார் என்பது அடுத்த கேள்வி. “மன்னா! அலங்காரஞ் செய்து உழிஞைப் போருக்குப் புறப்பட்டுப் போய் வெற்றி பெற்று மண்ணுமங்கலம் செய்து வரும் முரசம் என்றிருந்தால் நான் சேக்கையில் ஏறியிருக்கவே மாட்டேன். இப்பொழுது முரசம் பேணவந்த நான் அசதி மிகுதியால் கட்டிலில் ஏறி அமர்ந்து விட்டேன். (படுத்ததாய்ப் பொருளில்லை.) ஆனாலும் உன் வீரர் அதைக் குற்றமாய்க் கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது என் களைப்புத் தீரக் கவரி வீசிச் சிறப்புச் செய்திருக்கிறாய்? (தண்ணென வீசியோயே என்பதால் கவரியை நாம் ஊகித்து உணர்கிறோம்.) முரசைப் பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியும் என்று நீ பாராட்டினாய் போலும்! உன் செயல் புகழப்படவேண்டிய செயல் அல்லவோ? - என்று சொல்கிறார். .

இரண்டாவது விளக்கம் அப்படியே இயல்பாகப் பொருந்துகிறது. முரசிற்கான நடைமுறையை விவரிக்கத் தெரிந்தவர் தன் நடவடிக்கையின் உள்ளார்ந்த ஏரணத்தை விளக்குவதாகவும் பாட்டின் அடிகளைக் கொள்ளமுடியும். ”உழிஞைப் போருக்குப் போகாத நிலையில் முரசின் சேக்கையில் நான் ஏறி விட்டேன். இருப்பினும் என் மேல் பழி சொன்னார், நீ பொருட்படுத்தவில்லை? என்னே உன் உள்ளம்?”

”இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்”

என்பவை  செயினம், அற்றுவிகம் (ஆசீவகம்) போன்ற நெறிமுறையார்க்கும் ஒத்த சொற்கள் தாம். இம்மையில் எல்லோருக்கும் பொருத்தமானவராய் இருந்தால் உயர் உலகத்தில் தங்கி உரையும் வாய்ப்புண்டு என்ற சொற்கள் வேத நெறி சேர்ந்தவை அல்ல. அவை வேத மறுப்பு வரிகள். (வேத நெறியில் ஆழ்ந்த பார்ப்பனராய் மோசிகீரனாரைக் கொள்ளமுடியாது என்பதற்கு இந்த வரிகளும் சான்றாகும்.]

ஆகப் பாட்டைப் படித்தால் செருமார் ஒருவர் போர்முரசு இருத்தும் கட்டிலில் தன்னையறியாது அமர்ந்து விடுகிறார். யாரோ சேவகர் இதை ஊறாகக் கொண்டு அரசன்பால் எடுத்துச் சொல்ல, அரசன் அதைப் பொருட்படுத்தாது அங்கு வந்த புலவர் நிலையைப் பார்த்துக் கவரி வீசிப் புலவருக்குச் சிறப்புச் செய்கிறான். செருமாரானாலும் தீண்டத் தகாதவராய் அக்காலத்திற் கருத வில்லை. தமிழறிந்தவர் இங்கு போற்றப்படுகிறார். அரிதில் காணும் காட்சியே இது.

மோசி கீரனாரைப் போலவே இன்னொரு புலவரான உறையூர் ஏணிச்சேரி முட மோசியாரையும், தொண்டூர் கல்வெட்டில் (Early Tamil Epigraphy inscription No.76. presented in in page 427 of Iraavadham Mahadevan) குறிப்பிடப் பட்ட மோசியைப் பற்றியும், செருமார், மோசி என்ற சொற்கள் எப்படித் தோல்வினைஞரைக் குறிக்கலாம் என்ற சொற்பிறப்புப் பட்டுமையையும், அடுத்து வரும் பகுதிகளிற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. இந்தக் கட்டுரையை ctamil mail list இல் வெளியிடுவதற்குத் தோதாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்குச் சில நாட்களாகும். அதற்கிடையில் இங்கு தமிழ்ப் படியை அனுப்பி வைக்கிறேன்.

Saturday, August 14, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 5

இனி அடுத்த பகுதிக்குப் போவோம்.

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

இந்த 8 வரிகளுள் வடபுலத்து இனக்குழுக்களின் இடையுள்ள முரணும், வடபுலத்தரசர் ஒரு சாரார்க்குச் சார்பாகச் செயற்பட்டதும், இச் செவியுறையிற் குறிப்பாகத் தென்புலத்து அரசனுக்கு உணர்த்தப்பட்டுப் புதுவகை நயன்மை (justice) ஒன்று இங்கு நிலைநாட்டப் படும். அதன் விளைவாக ஆட்சி நடத்தும் நெறி தமிழரிடையே மாறத் தொடங்குகிறது. ஆக, வேத நெறித் தாக்கம் என்பது உதியன் சேரல் காலத்தில் தமிழகத்தில் நன்றாகவே நுழைந்து விட்டது.

இவ்வரிகளைப் புரிவதற்கு இந்தியத் துணைக்கண்டத்துள் நடந்த பல்வேறு மாந்தப் பரவல்களை நினைவுகொள்ள வேண்டும். [கொஞ்சம் பற்றற்ற நிலையில் இச்செய்திகளை அணுகுங்கள். நான் இனச் (race) செய்திகளை எழுத வில்லை. இனக்குழுச் (tribal)செய்திகளைச் சொல்கிறேன்.]

கிறித்துவுக்கு முன்னிருந்த காலங்களில் இந்தியாவிற்குள் குறைந்தது 4 தடவையாவது வெவ்வேறு மாந்தக் கூட்டங்கள் நுழைந்திருக்கலாம் என இற்றை ஈன் அறிவியல் (genetic science) கூறுகிறது. [நான் இற்றைப் புரிதலைச் சொல்கிறேன். நாளைக்கு இன்னும் அதிகமான தரவுகள் கிடைக்கும் போது அறிவியல் முடிவுகள் மாறலாம்.]

இற்றைக்கு 55000/60000 ஆண்டுகளுக்கு முன், முதல் மாந்தப் பரவல் நடந்ததென்று சொல்வார். இது ஆப்பிரிக்காவிற் தொடங்கி எத்தியோப்பியா, சோமாலியா வழியாக அரேபிய ஏமனுக்குள் நுழைந்தது. பின் அங்கிருந்து துபாய் இணைப்பு வழியாக ஈரானுக்குள் நுழைந்து அப்படியே கடற்கரை வழியாக, மகான் (இற்றை கராச்சிக்கு அருகில் உள்ள சிந்து தேசம்), குசராத், மராட்டியம் என்று மேற்குக் கடற்கரை வழியாக இந்தியாவில் நுழைந்தது. 

பின் தெற்கே கன்னடம், கேரளம், தமிழகம் வரை வந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நகர்ந்து ஆந்திரம், கலிங்கம், வங்காள தேசம் போய், பர்மா, தாய்லந்துக் கடற்கரைகள் வழியாகத் தென்கிழக்கு ஆசியா, பாப்புவா நீயூ கினி, ஆசுத்திரேலியா வரை இந்தப் பரவல் நடந்து முடிவில் அங்குள்ள மாந்தர் பழங்குடிகளாயினர். இவர்களைத்தான் நெய்தலார் (coastal people) என்று சுருக்கமாய் அழைப்பார்.

நெய்தலார் எச்சம் நம்மூரிலும் உண்டு. நம் பிரான்மலைக் கள்ளரும் இந்த எச்சத்தைச் சேர்ந்தவரே. நெய்தலாரை ஆண் குருமியங்களின் (male chromosome) அடிப்படையில் M180 என ஈனியலிற் சொல்வார். 

இந்தியாவைப் பொறுத்தவரை நெய்தலாரே முதல்மாந்தக் கூட்டத்தார். M130 என்பது இந்தியாவின் தென்பகுதி, கிழக்குப் பகுதி மாநிலங்களில் (கன்னடம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்கம் போன்ற மாநிலங்களில்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவரிடம் சற்று தூக்கலாய் இருக்கிறது. 

[உடனே மொழிக்குடும்பம் வேறு, இனம் வேறென அச்சடிப்பு முழக்கம் செய்யச் சிலர் முன்வரலாம். ஆனால் விளக்கிச் சொல்ல வேறுவகை எனக்குத் தெரிய வில்லை.] M130 என்போர் இந்தியரிடையே ஏறத்தாழ 10/15% உள்ளார். அவர் பெரும்பாலும் திராவிடமொழி பேசுபவராய், பழங்குடிகளாய் இருக்கிறார்.

இரண்டாம் பரவல் கிட்டத்தட்ட 30000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இவர் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்கே இருக்கும் கணவாய்கள் வழியாக நுழைந்து நம்மூர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் விரவியவர். இவரை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M20 என்று சொல்வார். 

M20 என்பது இந்தியாவெங்கணும் விரவிக்கிடக்கும் ஒரு ஈனாகும். இதை இந்திய ஈன் என ஆணித்தரமாகச் சொல்லலாம். நம்மில் பெரும்பாலோருக்கு இந்த ஈன் இருக்கிறது. இது இல்லாத இந்தியர் குறைவு.

மூன்றாம் பரவல் கிட்டத்தட்ட 9000/10000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவரும் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்குக் கணவாய்கள் வழியே நுழைந்தார். இவரை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M17 என்று சொல்வார். 

M17 என்பது இந்தியாவில் வடமேற்கு மாநிலங்களிலும், நடு மாநிலங்களிலும், மற்ற பகுதிகளில் உயர்சாதி மக்களிடமும் விரவியுள்ளது. M17 என்பது இந்தோ-இரோப்பிய மொழி பேசுகிறவரோடு தொடர்புடையது என்றும் சொல்ல வேண்டும்.

நான்காம் பரவல் வரலாற்றுக் காலத்தில் கிட்டத்தட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இவருக்கும் M17 காரருக்கும் ஈனளவில் வேறுபாடு உள்ளதாய்ச் சொல்ல முடியாது. சில பண்பாட்டு வேறுபாடுகளே இவருள் தென்படுகின்றன.

[நான்காம் பரவல் தொல்லியல், மாந்தவியலின் படி உணரப்பட்டது. ஈனியல் வழி உறுதி செய்யப் பட்டதில்லை. மற்ற 3 பரவல்களும் ஈனியலால் உறுதி செய்யப் பட்டவை. நான்காம் பரவலுக்கும் மூன்றாம் பரவலுக்கும் வேறுபாடு காண்பது கடினம் என்பதை நினைவு கொள்ளுங்கள்.] முன்றாம், நான்காம் பரவலாளர் இந்தியரில் இப்போது 8/10% இருக்கின்றனர்.

இந்த நால்வேறு கூட்டத்தார் தம்முள் கலந்து உருவாகிய இனமக்களே இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் மக்களாவர். எவ்வளவோ கலந்து போன பின், ”இவர்தான் அவர்” என இந்தியருள் அடையாளங் காண்பது மிகவும் சரவல் எனினும் பாழாய்ப்போன சாதி முறைத் திருமணங்களால் கடந்த 4000 ஆண்டுகளில் ஒரு சில வேறுபாட்டுத் தன்மைகள் அறியக் கூடிய அளவில் வேரூன்றி விட்டன. அதனால் ”இந்த ஈன்களின் பரவல் நாடெங்கணும் எப்படி விரவியுள்ளது?” என்று ஓரளவிற்குச் சொல்ல முடிகிறது.

நாலாம் கூட்டத்தார் இந்தியாவிற்குள் நுழைந்தபோது ஏற்கனவே நுண்கல் நாகரிகத்திலும் (neolithic culture), ஓரளவு பெருங்கற்படை நாகரிகத்திலும் (megalithic culture) இருந்த (M130, M20 ஆகிய இரண்டும் கலந்து கிடந்த) பழங்குடிகள் முல்லை, குறிஞ்சி நிலங்களிலும், மாட மாளிகைகள் கட்டி நிலைத்த நாகரிகத்தில் (M130, M20 நிறையவும் M17 கொஞ்சமுமாய்க் கலந்து கிடந்த) அன்றைய மேற்தட்டு மக்களும் (இவர் தான் மூன்றாம் கூட்டத்தை இன்றைக்குப் பகராளுமை - representation - செய்பவர்) இருந்தனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

நாலாம் கூட்டத்தார் நுழைந்தபோது, மூன்றாம் கூட்டத்தார் இயற்கையூறுகள் காரணமாகத் தம் வாழ்விடங்களை இழந்து இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற மருத, நெய்தல் நிலங்களுக்கு நகர்ந்து விட்டார். சிந்து சமவெளி நாகரிகம் அழிந்து போனது. மூன்றாம் கூட்டத்தார் மற்றவிரு கூட்டத்தாருடன் பெரும்பாலும் இணங்கிப் போய்க் கலந்துவிட்டனர்.

அப்படி மூன்றாம் கூட்டத்தார் கலந்ததின் பின் இந்தியாவில் நுழைந்த நாலாம் கூட்டத்தார் முல்லை நாகரிகத்திலேயே ஆழ்ந்திருந்தார். அவரின் வாழிடங்கள் மருதத்திற்கும் முல்லைக்கும் இடைப்பட்டதாய் இருந்ததாகவே, வேத நூல்கள் சொல்கின்றன. 

நகரம், அரண்மனை, பெரும் மாளிகைகள் என்று அவர் மேற்கட்டுமானம் கட்டுவதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகவேண்டிய நிலையில் நாலாம் கூட்டத்தாரின் நகர்ச்சி இந்தியாவின் வடமேற்கிருந்து கங்கைச் சமவெளியை நோக்கி நடைபெற்றது. 

[அதன் வெளிப்பாடு வேதம், ஆரண்யம், ப்ராமணம், உபநிடதம், புராணம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து கொண்டே போகும். இருக்கு வேதத்திற்கு அப்புறம் அவருக்கு எல்லாமே கங்கைச் சமவெளி நோக்கிய பயணங்கள் தான். 

அப்போது, ஆற்றுக்கு நெருங்கிய இடங்களை விட்டால், கங்கைச் சமவெளி பெரிதும் காடாகவே விந்தியமலை வரைக்கும் இருந்தது. இன்னுஞ் சொன்னால் அன்றைக்கு ஆந்திரமும், சத்திசுகரும், பீகாரும், சார்க்கண்டும், மத்தியப் பிரதேசமும், உத்திரப்பிரதேசமும் கூடப் பெரும்பாலும் காடுகள் என்பதை உணரவேண்டும்.

நாலாம் கூட்டம் எனப்படும் ஆரியரும், அதற்கு முன்னிருந்த மூன்று கூட்டத்தாரும் தம்முள் ஓரளவு கலந்தார். ஆனால் சாதிப் பாகுபாடு ஏற்பட்டுப் போன காரணத்தால் இக்கலப்பு முழுமையடையவில்லை. அதனால் மேல் தட்டுக் கூட்டத்தில் நாலாம் கரையினரின் பண்புகள் கூடவும், கீழ்த்தட்டுக் கூட்டத்திலும், பழங்குடிகளிடமும் மற்று 3 கரையினரின் பண்புகள் கூடவும் கலந்து விரவின. புறனடைகள் (exceptions) இரண்டு தட்டுக்களிலும் உண்டு.

வடபுலத்துப் பழக்கமாய் 4 வருணம் என்ற நிலைப்பாடு உருவாகி அது கொஞ்சங் கொஞ்சமாய் இந்தியாவெங்கணும் பரவத் தொடங்கியது. கொஞ்சங் கொஞ்சமாய்க் கீழ்த்தட்டு மக்களின் மொழிகள் மேற்தட்டு மக்களின் மொழியான இந்தோ-யிரோப்பியன் மொழிக்கு முன் சரியத் தொடங்கின. 

மொழிக்குடும்பங்கள் கலக்கத் தொடங்கின. முரண்பாடுகளும் பெருத்து வந்தன. வேதமொழியும் பழந்தமிழும் கலந்து பாகதங்களும், மற்ற திராவிட மொழிகளும் உருவாகின. 

வேதமொழி, பழந்தமிழ் ஆகிய இரண்டும் இரண்டு எல்லைகளாக, இரண்டுக்கும் நடுவில் பல மொழிகளின் பரம்பல் ஏற்பட்டது. தமிழுக்கு நெருங்கிய மொழிகள் திராவிட மொழிகளாயின. வேதமொழிக்கு நெருங்கிய மொழிகள் பாகதங்களாகின. சங்கதம் என்பது பாகதங்களுக்கு இடையே ஒரு கலவை மொழியாக, செந்தரப் படுத்தப்பட்ட படிப்போர் மொழியாக உருவாகியது. 

[சங்கதத்திலிருந்து பாகதம் உருவானது என்ற கொள்கையை நான் ஏற்பவனில்லை. எப்படி வழக்குத் தமிழில் இருந்து செந்தமிழ் உருவானதோ, அதுபோலச் செங்கதம் என்பது ஒரு புலவராக்கம். அதற்கு மேல் அது ‘சுயம்பு, சிவசூத்திரம், உடுக்கையொலிகள், கிளியொலிகள் blah blah.....’ என்ற தொன்மத்தை நான் ஏற்பதில்லை.]

நூலறிந்த பெருமானரே முதலிற் சங்கதத்தை உருவாக்கினர். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் அறுவகைத் தொழில்களைச் செய்யும் வருணத்தோராய் அவர் அறியப்பட்டார். முதல் வருணத்துப் பெருமானருள் முனிவர் என்ற கூட்டம் ஆரியக் குமுக நலத்திற்கு நல்லது என்று சொல்லி அவ்வப்பொழுது வேள்விகள் நடத்தி வந்தது. 

அவ்வேள்விகளில் விலங்குகளைப் பலி கொடுப்பது பெருத்து வந்தது. வேள்விச் செய்முறைகளின் அளவு இருக்க இருக்கப் பெரிதானது. அரசன் செய்யும் ஒவ்வொரு வேள்விக்கும் கொட்டிக் கொடுக்கவேண்டிய பொருட்கள் மலையாய்ப் பெருகின. 

முல்லைநிலத்து நாகரிகத்தில் இருந்து வந்த கீழ்த்தட்டு மக்கள் என்னதென்று செய்யத் தெரியாமல் வேள்விகளைத் தமக்கு ஏற்பட்ட பெரிய இடையூறாகக் கருதத் தொடங்கினர். 

ஒரு மாடு, இரண்டு மாடு பலி கொடுப்பதைப் “போய்த் தொலையட்டும்” என விட்டுவிட்டு பலரும் அமைந்து போகலாம். ஆனால் அது 10, 100 என்று விரியும் போது, பல்வேறு விலங்குகள் என அகலும் போது, ஆகுதியாகும் வெண்ணெய், கூலங்கள் இன்ன பிறவும் கூடும் பொழுது, ஊர்கள், ஊர்களையொட்டிய காடுகளில் இது பெரும் அதிர்ச்சியையும், கலகத்தையும் கொண்டுவரத் தான் செய்யும்.

[இப்பொழுது சத்திசுகர், ஒரிசா, சார்க்கண்ட், வங்கம் போன்ற பகுதிகளில் பழங்குடியினருக்கும் வெளியிலிருந்து வரும் மக்களுக்கும் இடையில் ஏற்படும் தகறாறுகள், உள்நாட்டு வளங்கள் அந்தந்த மக்களுக்குப் பயன்படாது வெளியாருக்குப் பயன்படுதல் போன்ற பொருளாதாரச் சுரண்டல்களை அன்றைய நாகரிக வழக்கங்களோடு சேர்த்து வைத்து எண்ணிப் பார்த்தால் நான் சொல்வதன் பரிமானம் புரியும்.]

புதுக் குடியேற்றத்தாருக்கும், பழங்குடியினருக்கும் இடையே முரண் ஏற்பட்டால் புதுக் குடியேற்றத்தாரின் வேள்விகள் பழங்குடியினரால் சிதைக்கப்படத் தான் செய்யும். அதன் விளைவால் பழங்குடியினர் அரக்கரென்று சொல்லப் படுவார். பழங்குடித் தலைவர் அசுரர் தலைவர் என்று சொல்லப் படுவார். 

நான்காம் கூட்டத்தார் ஆரியர்/தேவர் என ஆவார். ஆரியர்/தேவர் செய்வது எல்லாம் அரசருக்குச் சரியாகவே தெரியும். நிலைமை அப்படி இருந்தது. தங்கள் வேள்விகள் தடுக்கப் படுவதால் தம் இனக் கூட்டத்துத் தலைவனை, தம் அரசனை, இந்த முனிவர் வேண்டத்தான் செய்வார். 

முனிவருக்கு இணங்கி அரசர்கள், தாமோ, தம் படைத்தலைவரையோ அனுப்பி, பழங்குடியினருக்கு எதிராகப் போரிட வைத்து முனிவரின் வேள்விகளைக் காப்பாற்றுவார். வேறு என்னத்தை வடபுலத்து அரசர் செய்திருக்க முடியும்? [கி.மு.1500-இல் இருந்து கி.மு.800 வரைக்குங் கூட it was always ”they and us” between the Aryas and the indigeneous ethnic locals in the Bharatvarsha.]

இத்தகைய வேறுபாடு அப்போது தெற்கில் கிடையாது. ஏனெனில் கி.மு.600 வரைக்குங் கூடத் தெற்கே வேள்விகள் இல்லை “அவர்களும் நாங்களும்” என்ற சிக்கல் கிடையாது. வெவ்வேறு மாந்தப் பரவல்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட நீண்ட காலக் கலப்பில் ஒருவருக்குள் இன்னொருவராய் ஆகிப் போனார். 

முல்லை நிலத்துப் பழங்குடிகளுக்கும், மருத நிலத்து மக்களுக்கும் ஒரே வேந்தன் தான். அதன் விளைவால் ஒருவரைக் கொன்று, அவருடைய பசுக்களைக் கவர்ந்து இன்னொருவர் வேள்வியில் ஆகுதியாக்கும் பேச்சிற்கே இடமில்லை. வெட்சிப் போரும், கரந்தைப் போரும் தென்னகக் குடிமக்களுள் இருந்தன தான். ஆனால் அதற்கான வழிமுறைகளும், அதை ஒழுங்கு செய்யும் நெறிமுறைகளும் கூட வெட்சியார், கரந்தையார் இருபாலருக்கும் தெரிந்தன. 

இந்தப் போர்களைக் கையாளும் முறை தெரிந்திருந்த காரணத்தால் இருவேறு இனக்கூட்டத்து வெறுப்புச் சிக்கல்களை கி.மு.1000/800 களுக்கு அருகில் தென்புலத்து வேந்தர் பார்த்ததில்லை. 

There was law and order. There was no day-light robbery possible. There were ways and means to solve the issues. வடபுலத்து அரசருக்கோ establishing law and order என்பது முகன்மையான பணியாய் இருந்தது. Wherever new immigration takes place by forcible entry, law and order becomes a major issue.

இப்படி ஒரு காட்சியைத் தான் இராமாயணத்தில் விசுவாமித்திரன் வழி நாம் அறிகிறோம். அவன் செய்ய நினைக்கும் வேள்வியைத் தாடகையும், அவள் மக்களும் செய்ய விடாது தடுக்கிறார். தாடகை பக்கத்திலிருந்து கவருவதாய் எத்தனை விலங்குகள், உயிரினங்கள் வேள்விக்காகப் பிடித்து இழுத்துவரப் பட்டு முனிவர் ஆசிரமங்களில் அடைக்கப் பட்டன, 

கூலங்களைக் கொண்டுதரக் கட்டாயப்படுத்தப் பட்டார் என்ற செய்தியை இராமயணம் நமக்குத் தெரிவிக்கவில்லை. தாங்கள் பாதிக்கப் படாமல், தாடகையும் அவள் மக்களும் விசுவாமித்திரன் வேள்வியைத் தடுக்க வேண்டிய காரணம் என்ன? ”அவர் வேள்விக்கு ஊறுசெய்தார், அவர் கொல்லப்பட வேண்டும்” என்று மட்டுமே ஆரியர் பார்வையில் செய்தி தெரிவிக்கப் படுகிறது.

தருவணத்துள் யானியற்றும் தகைவேள்விக்கு
இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் செய்யும் அடைகாம வெகுளியெனும்
நிருதர் இடைவிலக்கா வண்ணம்
செருமுகத்துக் காத்தி

என்று (கம்பனில் சொல்வது போலத்) தயரதனிடம் கேட்டுப் பெற்று இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரன் கூட்டி வருகிறான். காட்டில் தாடகை வதைப் படலம் நடைபெறுகிறது. அதன் பின்

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்

என்று வேள்விப் படலம் சொல்கிறது. தாடகையின் மக்கள் மாரீசனும், சுபாகுவும் கொல்லப் படுகிறார். விசுவாமித்திரன் வேள்வி காக்கப் படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ”மத்திய தேசத்தில், ஆர்யா வர்த்தத்தில்” திரும்பத் திரும்ப நடக்குமானால், கண்ணினைக் காக்கும் இமை போல வேள்விகள் காக்கப் படுமானால், காடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமானால், அடம் பண்ணிக் கொண்டிருந்த தாடகை வழியினர் அடங்கிப் போக மாட்டாரா, என்ன? அப்புறம் விசுவாமித்திரன் போன்ற முனிவர்களின் ஆசிரமங்களிற் கிடக்கும் பெண் புள்ளிமான்கள் அங்குமிங்கும் அலைய வேண்டிய தேவையென்ன? 

பழங்குடிகள் எட்டிப் பார்க்கமுடியாத அளவிற்கு இமையம், பொதியம் போல் எதற்கும் அசையாத போர்த்தலைவர் வழிநடத்தும் போர்ப்படைகள் வேள்வி நடக்கும் பர்ணசாலையைச் சுற்றி இருக்கும் போது எந்தப் பழங்குடிகள் உள்ளே நுழைவர்? மான்கள் நன்றாகவே அமைதியாகத் தூங்கும். முத்தீ நன்றாகவே ஓம்பப்பட்டு வேள்விகள் இனிதே முடிவடையும்.

இன்னொரு செய்தியும் இங்கு சொல்லவேண்டும். முனிவர்கள் பெரும்பாலும் எந்த அரசனுக்கும் அடிபணியாத காட்டு இடைவெளிகளிலேயே இருந்திருக்கிறார். They were on no-man's land like the pioneers in the American wild west. Just like the american Indians and European immigrants got into a conflict, here also conflict arose.

இத்தனை பின்புலத்திற்குப் பின் மேலேயுள்ள கடைசி 8 வரிகளுக்கு வருவோம். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் தன் நாட்டை விட்டு ஆளில்லா நிலவெளிக்கு (no-man's land) வந்திருக்கிறான். யாரோ ஒரு கூட்டத்தாரைக் காப்பாற்றவேண்டும். அப்படிக் காப்பாற்றும் போது தன் நாட்டில் இல்லாத அதே பொழுது காடுகளில் வதியும் (தன் குடிமக்களைப் போன்ற இன்னொரு) இனக்குழுவோடு போரிடும் நிலைக்கு வந்து சேருகிறான். 

சேரலாதன் மனம் தடுமாறுகிறது. தான் செய்வது சரியா? ”யாரோ ஒருவருக்கு வாக்குக் கொடுத்ததற்காக, ஒரு பாவமும் செய்யாத வேற்று நாட்டுப் பழங்குடி மக்களோடு போருக்குப் போகிறோமே?” என்று கலங்குகிறான். ”இது சரி தான்” என்று வடபுலத்து நிகழ்வை எடுத்துக் காட்டி நயன்மை சொல்லப் பார்க்கிறார் முரஞ்சியூர் முடிநாகனார். It appears to be a perverted justification. But still we don't know the truth.

"என்ன நடந்தாலும் சரி கறந்த பால் புளித்தாலும், பகலே இருளாய் மாறிப் போனாலும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் நால்வேத நெறி கூட மாறி போனாலும், உன்னைச் சுற்றிய வீரர் மனந் திரியாது இமையமலை, பொதியமலை மாதிரி அசையாது உயர்ந்து விளங்கியிருக்கும் நிலையைப் பார்! அத்தகைய வரிசையில் ”எப்படி இளமான்களும் துயிலும் வகையில் ஆசிரம வேள்விகளைக் காக்கும் தொழிலை வடபுலத்தரசர் செய்கிறாரோ?” அது போல எம் அரசே! நடுக்கமிலாது நிற்பாயாக! அரச ஒழுங்கைக் காப்பாற்றுவாயாக!”

இந்த ஐந்து பகுதிகளில் பாட்டின் பொருளைச் சொல்லிவிட்டேன். வடநாட்டுத் தாக்கம் கூடிவரும் பருவத்தில் உதியஞ் சேரல் ஆண்டிருக்கிறான். இனக் குழுக்களின் மோதல் தெற்கிலும் தோன்றத் தொடங்கிவிட்டது. Southern Royalty was also getting into brahminised practices.

அன்புடன்,
இராம.கி.

Friday, August 13, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 4

அடுத்துள்ள 4 வரிகள் பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

மேலுள்ளதை ஆழ்ந்து படித்தால் பாண்டவ, கௌரவ பாரதப் போரின் 2 பக்கப் படைக்கும் சேரன் உணவளித்துப் புரந்ததாய் உரைகாரர் சொல்வது நம்ப முடியாததென்று புலப்படும். 

ஏனெனில் இவ்வரிகள், “ஐவரோடு சினமுற்று தும்பைப் போரில் பொருது களத்து ஒழிந்த நூற்றுவருக்கு பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தது” பற்றிச் சொல்கின்றன. 

[அலங்குளைப் புரவி ஐவர் என்ற கூட்டுச்சொல் இங்கு கருத்தாவைக் குறிக்க வில்லை. ”பொலம்பூந் தும்பை ஈரைம்பதின்மர்” என்பது தான் இங்கு கருத்தா. ”பொருது களத்தில் ஒழிதல்” என்பது கருமம் / வினை. அதைப் பின்பற்றும் கருமம்/வினை ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தல்” என்றாகும். மீண்டும் பாடல் வரிகளை ஆழ்ந்து படியுங்கள்.]

வரிகளைப் படித்தவுடனேயே ”அறந் தவறிப் பாண்டவர் நிலத்தைப் பற்றிக் கொண்ட கௌரவருக்கா, பெண்ணை இகழ்ந்து, பழி செய்த கௌரவருக்கா, சேரர் பெருஞ்சோற்று மிகுபதம். கொடுத்தார்?” என்ற நயன்மைக் கேள்வி நமக்குள் எழும். 

”18 நாள் பாரதப் போர் உண்மையில் நடந்ததா?” என்ற கேள்வி பின்புறம் நிற்க, அப்போர் மோரியருக்கும் முன்பு நடந்திருக்கவே வாய்ப்புண்டு என்ற கால நிலையை வைத்துப் பார்த்தால், ”வானவர் அன்பன்” என மோரியரைப் பின்பற்றித் தன்னை அழைத்துக்கொண்ட சேரலாதன் எப்படிப் பாரதப் போர் காலத்திலிருந்தான்? - என்ற கால முரணும் நமக்குள் கேள்வியாய் எழும். 

இக் காலமுரணைத் தவிர்க்க வேண்டுமெனில், ”ஒருவேளை கௌரவர் பாண்டவர் என்று இங்கே அடையாளப் படுத்தியதே தவறோ? இது வேறு வரலாற்றுச் செய்தியோ?” என்ற எண்ணமும் எழும். மொத்தத்தில் ஏரணப்படி (logicaly) பார்த்தால் இங்கே மாபாரதக் கதையைத் துணைக்கு அழைத்ததே தவறானது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.

சண்டைக்கு இழுத்து வஞ்சிப் போரிட்டது யாரோ ஒரு ஐந்து பேர். அவருக்கு எதிராய்த் தும்பைப் போரிட்ட 100 பேரும் இப்போரில் இறந்து போனார். தொன்மத்தில் வேண்டுமெனில் நூற்றுவர் என்பார் கௌரவராகலாம்; வரலாற்றில் நூற்றுவர் வேறொருவராய் இருக்க முடியாதா? அவர் யார்?

நூற்றுவர் என்பது ஏன் ஒரு சொல்விளையாட்டாய் இருக்கக் கூடாது? ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்குப் பொருளென்ன? - என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி ஒரு விளக்கம் தும்பைப் போரியற்றிய, சேரரையொட்டிய ஓர் அரசமரபினர் பற்றிச் சொல்ல முடியும். கொஞ்சம் பொறுமையாகப் பார்க்கலாம்.

பல்வேறு காரணங்களால் செங்குட்டுவனின் கடைசிக் காலம் கி.மு.75க்கு அருகில் என்றே முடிவு கொள்ள வேண்டியுள்ளது. கனகவிசயர் எனும் கன்வர் மேலும், சுங்கர் மேலும், செங்குட்டுவன் படையெடுத்தது ஏறத்தாழ கி.மு.80 ஆக இருக்கலாம். வேறெந்தக் காலமும் இப் படையெடுப்பிற்குப் பொருந்த வில்லை. 

”இளங்கோ பொய் சொல்லவில்லை, வரலாற்றுச் செய்தியை மட்டுமே சொன்னார்” என்று கொண்டால், சிலம்புக் கதை நடந்த காலம் பெரும்பாலும் கி.மு.80க்கு அருகில் தான். [விளக்கம் வேண்டுவோர் ”சிலம்பின் காலம்” என்ற என் தொடரைப் படிக்க வேண்டுகிறேன்.

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html
http://valavu.blogspot.com/2010/05/2.html
http://valavu.blogspot.com/2010/05/3.html
http://valavu.blogspot.com/2010/05/4.html
http://valavu.blogspot.com/2010/05/5.html
http://valavu.blogspot.com/2010/05/6_14.html
http://valavu.blogspot.com/2010/05/7_15.html
http://valavu.blogspot.com/2010/05/8.html
http://valavu.blogspot.com/2010/05/blog-post_20.html
http://valavu.blogspot.com/2010/05/10.html
http://valavu.blogspot.com/2010/05/11.html
http://valavu.blogspot.com/2010/05/12.html

உளுத்துப் போன கயவாகுக் கதையை வைத்துச் சிலப்பதிகாரத்தைக் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு இழுக்கும் போக்கை அங்கு கேள்விக்கு உள்ளாக்குவேன்.]

பதிற்றுப் பத்தின் பதிகச் செய்திகளால் செங்குட்டுவன் அரசு கட்டிலில் வீற்று இருந்தது 55 ஆண்டுகள் என்றாகும்.  அப்படியானால் அவன் பட்டத்திற்கு வந்தது கி.மு.130 என்றாகும். குட்டுவனுக்கு முன் குடக்கோச் சேரனாய் இருந்தது இவன் தந்தை நெடுஞ்சேரலாதனே (மற்ற உறவினரெல்லாம் சேர நாட்டின் பகுதிகளை ஆளுநர் போல் ஆண்டிருக்கிறார். 

மைய அரசை ஆண்டது நெடுஞ்சேரலாதனும் அவன் மகன் செங்குட்டுவனுமே.) நெடுஞ் சேரலாதன் ஆண்டது 58 ஆண்டுகள். நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் செங்குட்டுவனுக்கும் இடையே அரசன் - இளவரசன் என்ற மேற்படுகை ஆண்டுகள் (overlap years) 20 என்று கொண்டால் நெடுஞ்சேரலாதன் குடக்கோ ஆனது கிட்டத்தட்ட கி.மு.168 என்று ஆகும். 

இனி அவனுக்கும் அவன் தந்தை உதியன் சேரலுக்கும் இடைப்பட்ட மேற்படுகை ஆண்டுகள் 20 என்று கொண்டு, உதியஞ் சேரல் தனியே ஆட்சி செலுத்தியது 25 ஆண்டுகள் (ஒரு நிரவல் ஆட்சிக்காலம் - average ruling period) என்று கொண்டால் கிட்டத்தட்ட உதியஞ் சேரல் பட்டத்திற்கு வந்தது கி.மு.193 என்றாகும். 

அதாவது பெரும்பாலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதியஞ் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்ற கருதுகோளை நாம் கொள்வோம். [இக் கருது கோள் 5, 10 ஆண்டுகள் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் போகலாம். இப்போதைக்கு இந்தத் துல்லியம் போதும்.]

அக்காலத்தில் கி.மு..185 ல், மகதத்தில் ஆட்சிபுரிந்தவன் மோரியரின் கடைசி அரசன் பெருக தத்தன் (=ப்ருகத்ரதன்) ஆவான். இவனே, இவன் அமைச்சன் சுங்கன் புஷ்ய மித்திரனால் கொலை செய்யப் படுகிறான். [கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு இம் மகதநாட்டுப் பெருகதத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தவே பாடப்பட்டிருக்கலாம். உரையாசிரியர் இவனை வெறுமே ஆரிய அரசன் என்று சொல்லி வந்துள்ளார்.] 

சுங்கன் இப்படி அரண்மனைக் கொலைசெய்து அரசு கட்டில் ஏறியதை ஏற்காத சாதவா கன்னர் (இவரே மோரியரின் தண்ட நாயகராய், தக்கணப் பாதையின் வாயில்காப்போராய், படித்தானத்தில் - பயித்தான் paithan - அரசு வீற்றிருந்தவர்) சுங்கரை எதிர்த்துப் போரிட்டு வந்தார். 

சுங்கருக்கும் சாதவா கன்னருக்கும் இடையே இருந்த போர் ஒரு வஞ்சி - தும்பைப் போர் தான். சுங்கர் செய்தது வஞ்சிப் போர்; சாதவா கன்னர் செய்தது தும்பைப் போர்.

சாதவா கன்னரே நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரத்தில் அழைக்கப் படுபவர். சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும் பலவிதமாய் அடையாளங் காணுவர். 

”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்ன = மகன் என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர். ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால், ”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்ல முடியும். சிலம்பும் அப்படியே மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்கல்/நூறல் எனும் பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைச் சாத்திட்டான்" என இற்றைத் தமிழ் வழக்கிலும் சொல்கிறோம் அல்லவா?

அச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்கல் எனும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்று பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான் [வடபால் மொழிகளில் பழகும் சொல்]. ஆகச் சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலர் எண்ணுவதுபோல் அவர் 100 பேரல்லர், நூற்றுவர் (= சதைப்பவர்).  ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவு தான். 

[ஆனாலும் சொல்விளையாட்டில் நூற்றுவரை 100 பேர் = ஈரைம்பதின்மர் என இடக்கரடக்கலாய்க் கூற முடியும்.] இன்னும் சிலர் சாதவா கன்னரெனப் படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார். அப்படிச் சொல் பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது. சரியான சொல்திரிவு சதம்> சதவர்> சாதவர்> சாதவா= நூற்றுவர் என்றேயாகும்.

கன்னர் என்பது கர்ணி என்றும் திரியும். இங்கே ”காது, கன்னக் குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் ”கிருஷ்ணன்” விதப்பாகச் சொல்லப் படுவான். 

பாகதத்தில் ”கிருஷ்ண” என்பது ”கன்ன” என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல் ஒரு குடிப்பெயராய் ஆகமுடியும். சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் (சாரல் பூசியவர் சாரலர்> சேரலர், கோழி = பொன்னிறம்-மஞ்சள்/குங்குமம் பூசியவர் கோழியர்> சோழியர், பாண்டில் பூசியவர் பாண்டியர்) சொல்வது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்> கன்னர் என ஆகியிருக்க வாய்ப்புண்டு.

கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 என்று சொல்வார். கன்னரின் முதலரசன் சீமுகன். இவரின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது. சாதகர்ணி I இற்கு முன் தும்பைப் போரில் தோற்று, பலர் இறந்திருக்கலாம்.

சிலம்பைப் படித்தால், சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் நல்ல உறவு நெடுநாட் பட்டு இருந்தது புரிகிறது. 2, 3 தலைமுறைகளாய் உதியன் சேரல் காலத்திருந்தே இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். 

”தம் நண்பருக்கு ஆனது தமக்கானது” எனக் கன்னரின் தொடக்கத் தும்பைப் போர்த் தோல்விகளைச் சேரர் நினைத்திருக்கலாம். தும்பைப் போரில் இறந்தவருக்காகச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். இது வேறெங்கும் பதிவு செய்யப்படாத வரலாற்றுச் செய்தியாய் ஏன் இருக்கக் கூடாது?

இனிப் பெருஞ்சோற்று மிகுபதம் என்பதற்கு வருவோம். பொதுவாகத் தமிழர் வாழ்வில் முன்னோர் வழிபாடு என்றுமுண்டு. ( மற்ற திராவிடர் வாழ்விலும் இருந்திருக்கலாம்.) 

எடுத்துக் காட்டாக இன்றைக்கும் தென்பாண்டி நாட்டில் சிவகங்கைச் சீமையில் வீட்டில் நல்லது நடக்க வேண்டுமானால் [ஒரு திருமணம் என வையுங்களேன்.] தம் முன்னோரை நினைந்து அவரின் ஆசிவேண்டிக் குறிப்பிட்ட விழவிற்கு சில நாட்கள் முன் ”படைப்பு” என்ற ஒன்றைச் செய்வார்

இது முன்னோர் வழிபாடு. முன்னவர் ஆணெனில் வீட்டில் அவர் நினைப்பில் வைத்திருக்கும் கோடிவேட்டியையும், துண்டையும் நீர்நிலையில் அமிழ்த்திக் கசக்கிப் பிழிந்து பங்காளிகள் எல்லாம் அதைக் கொண்டு வந்து உலர்த்திப் பின் மடித்து வேட்டியை படையல் செய்யும் இடத்தில் வைத்து அதற்கு மேல் ஒரு துண்டை தலைப்பாகைக் கட்டுபோல் அழகுற ஆக்கி, கூடவே உருத்திராக்க மாலை அணிவித்து அந்த முன்னாள் ஆவி அங்கு குடிவந்தது போலவே செய்வார். 

இதேபோல இறந்து போன முன்னவர் பெண் (பாட்டி என்று கொள்ளுங்கள்) எனில் கோடிச்சேலையை நீரில் அமிழ்த்திக் கசக்கிப்பிழிந்து பின் உலர்த்தி அவரைப் போல் உருவகம் செய்து தாலி அணிவித்து, முன்னாற் பாட்டி அங்கு எழுந்தருளுவது போலவே செய்து வைப்பார். 

தாத்தனுக்கோ, பாட்டிக்கோ வேண்டப்பட்ட உணவு வகைகளைப் பண்ணி கூடவே படையற் பண்ணிகாரங்களைச் செய்து முன்னோர் ஆவிக்குப் படையலிட்டு பின்னாற் கூடியிருக்கும் சுற்றத்தார் அனைவருக்கும் பெருஞ்சோறு படைப்பார். படைப்புச் சோற்றைத் தான் பெருஞ்சோறு என்பார்.

முன்னோர் படையல் முறை தான் இன்றுங் கூட சிறுதெய்வக் கோயில்களான ஐயனார் கோயில்களிலும், காளி கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், கருப்பர் கோயில்களிலும் திருமேனிகளுக்கு முன் செய்யப்படும் வழிபாட்டு முறையாகும். 

பின்னால் இது ஆகம சமயத்திலும் பரவி பெருமான மயம் ஆக்கப்பட்ட கோயில்களிலும் (Brahminised temples) கூட நடைமுறையானது. நாட்கள் ஆக ஆக ஒவ்வொரு சிறு தெய்வக் கோயிலும் நம் நாட்டில் பெருமானமயம் ஆகிக் கொண்டே வந்தாலும் பெருமானர் அல்லாத (non-brahmin) பழக்க வழக்கங்கள் ஏதோ வகையிற் தொடர்ந்து பின்பற்றப் படுகின்றன. 

ஆக ஒரு இனக்குழு நடவடிக்கை (tribal practice) கொஞ்சங் கொஞ்சமாய் சமய நடவடிக்கை (religious temple practice) ஆகிறது. ”ப்ரசாத்” என வடமொழியில் மொழி பெயர்த்துச் சொல்கிறாரே அதுகூடப் “பெருஞ்சோற்றின்” நேரடிச் சங்கத மொழிபெயர்ப்பே. 

கோயில்களின் ஆகம நெறிமுறைகளுக்கும் வேத நெறிக்கும் எத்தொடர்புங் கிடையாது. இந்து மதம் என்பது வேத நெறியும், ஆகம நெறியும், இனக்குழுப் பழக்கங்களும் கலந்த ஒரு கலவை நெறி. வேத நெறித் தாக்கம் என்பது அதில் ஒரு சிறு பகுதி. எல்லாவற்றையும் வேதவழி பார்ப்பதைப் போல முட்டாள்தனம் கிடையாது. ஆனாலும் பல ஆராய்ச்சியாளர் அம் முட்டுச்சந்திற்குள் போய்ப் போய் விழுகிறார். அரச பாட்டைக்கு வரமாட்டேம் என்கிறார்.

இது போக, முன்னோர் இறந்த, குறிப்பாகத் தந்தை தாயர் இறந்த நாளின் போது (அதாவது அதே நாள்மீன் ஏற்படும் நாளில்) தமிழர் “பிண்டம் மேய பெருஞ்சோறு கொடுப்பதும்” உண்டு. [தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் வஞ்சித் திணை பற்றிய குறிப்பில் 9 ஆம் துறையாக ”பிண்டம் மேயப் பெருஞ்சோற்று நிலை” சொல்லப் பெறும்.] 

பிண்டம் என்பது எள்ளுச் சோற்றுருண்டை. இதை இக்காலத்தில் பெருமான மயச் சடங்குகள் கூடிப் போன காரணத்தால் ”தர்ப்பணம் செய்தல்” ”திதி கொடுத்தல்” என்று சங்கத வழக்கில் மொழிபெயர்த்துச் சொல்வார். அடிப்படை வழக்கம் தமிழர் வழக்கம் தான். 

இதைச் செய்வதிற் பூசாரிதான் மாறிவிட்டார். பழம் அறிவருக்குப் (பறையருக்குப்/ பண்டாரத்திற்குப்/ குயவருக்குப்) பகரியாய் இப்போது பார்ப்பனர் வந்து விட்டார். அதனாலேயே இது பார்ப்பனர் வழக்கம் ஆகி விடாது. [இன்றுங் கூட பெருஞ்சோற்று விருந்தின் முதல் மரியாதை எங்கள் பக்கம் பறையர் எனும் அறிவருக்குத் தான்.]

இன்னொரு விரிவாகத் தென்பாண்டி நாட்டில் பெரும்பகுதியில் ஆடி அமையுவாவின் (ஆடி அமாவாசையின்) போது நீர்நிலைகளுக்கு அடுத்திருந்து (கடல், ஆறு, ஏரி, குளம் இப்படி அது விரியும்) மூன்று தலைமுறை முன்னவர்க்குப் பிண்டம் மேயப் பெருஞ்சோறு கொடுப்பதுண்டு. 

ஆடிமாதம் தமிழ்நாடெங்கணும், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் இது நடக்கும். குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடி அமையுவாவிற் பிண்டங் கொடுத்துப் பெருஞ்சோறு படைப்பது பெரிதுமுண்டு. பெருஞ்சோறு கொடுப்பதற்கு ஒருவன் அரசனாய் இருக்க வேண்டியதில்லை. வசதியிருக்கும் எவனும் இதைச் செய்யலாம். செல்வ நிலைக்குத் தகுந்தாற்போல் பெருஞ்சோற்றின் செழுமை மாறும். அவ்வளவு தான்.

“பெருஞ்சோற்று மிகுபதம்” என்பது இரட்டை வழக்கு. பெருஞ்சோறு என்றாலும் மிகுபதம் என்றாலும் ஒரே பொருள் தான்.

இங்கே நூற்றுவர் கன்னரின் முன்னோருக்கு படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போலத் தான்” என்று ஊருக்கே உணர்த்திச் சேரன் நட்பரசோடு சொந்தம் கொண்டாடுகிறான். அவ்வளவுதான். 

“சேரனே! நூற்றுவர் கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் செய்தாயே? அவன் குலமும், உன் குலமும் ஒன்றென்று பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்வோம்?” என்று புலவர் வியக்கிறார்.

நூற்றுவர் கன்னர் மேல் சினந்து படையெடுத்து வஞ்சிப்போர் செய்த அந்த ஐவர் யார் என்று என்னாற் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் சேரருக்கு வேண்டிய அவந்தியரசராய் இருக்கமுடியாது. பெரும்பாலும் பகையரசரான மகத அரசராகவே இருக்க முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 12, 2010

புறநானூறு 2 ஆம் பாட்டு - 3

முதலில் வருவன கீழுள்ள 8 வரிகள்:
.
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

மேலுள்ள வரிகளுள் சாங்கியம், உலகாய்தம்/ பூதவாதம், அற்றுவிகம் (ஆசீவிகம்) ஆகிய மெய்யியலாளர் சொல்லும் ஐம்பூதத்து இயற்கை விவரிப்பு அடங்கியுள்ளது. இவ்வுலகத்தில் உள்ள பொருட்களும், பொருண்மைகளும் ஐம்பூதத்தால் ஆனவை என்பது நம்பா மதங்களைச் சேர்ந்த மெய்யியலாரின் வாதமாகும். 

பின் எழுந்த நம்பும் மதங்களான சிவ, விண்ணவ நெறிகளும், ஏன் வேத நெறியும் கூட இந்த ஐம்பூதக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதே பொழுது ஐம்பூதத்தைப் படைத்தவன் இறைவன் என்று கற்பித்துக் கொண்டு அமைந்து போயின. 

வேதநெறிக்கு எதிரெழுந்த புத்த, செயின நெறிகளும் கூட ஒரு வகையில் இக்கருத்தை உள்வாங்கின. ஆனால் கி.மு.600 க்கு அருகில் எழுந்த சாங்கியம், உலகாய்தம் / பூதவாதம், அற்றுவிகம் (ஆசீவிகம்) ஆகிய நெறிகளே ஐம்பூதத்து இயற்கை பற்றித் தெளிவாகப் பேசின. 

[ஓர் இடை விலகலாக வேறொன்றைச் சொல்லவேண்டும். ஏதேனும் மெய்யறிவியல் பற்றிச் செய்திகள் சங்க இலக்கியத்தில் வந்தாலே அதை வேத நெறி வழியாகப் பார்ப்பதும், இல்லெனில் செயினம் என்பதுமான அச்சடிப்பு வேலை நெடுநாட்களாகத் தமிழாய்வில் நடந்துகொண்டுள்ளது. 

சங்க இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துக்களும், நம்பா மதங்களான சாங்கியம், உலகாய்தம். பூதவாதம், அற்றுவிகக் கருத்துகளும் அங்கொன்றும் இங்கொன்று மாய் விரவியுள்ளன. அதை ஆய்ந்து முற்காலத் தமிழரின்  மெய்யியலை அடையாளம் காணத்தான் ஆட்களில்லை. Not everything is always black and white. There are lots of grades of grey in between. It takes courage to discern them.]

மண்திணிந்த நிலன்; நிலன் ஏந்திய விசும்பு; விசும்பு தடவும் வளி; வளி தலைப்பட்ட தீ; தீ முரணிய நீர் என்று ஒன்றிற்கொன்று தொடர்புறுத்தி ஐம்பூதத்தைச் சொல்வார்.

[வடநாட்டு உலகாய்தத்தில் ஐம்பூதங்கள் கிடையாது விசும்பு தவிர்த்த 4 பூதங்களே அங்குண்டு. எங்கெலாம் இந்தியக் கொள்கைகளில் 5 பூதங்கள் பேசப்படுமோ, அங்கெலாம் தென்னகத் தாக்கம் இருந்ததாய்ப் பொருள் கொள்ள வேண்டும். 

ஐம்பூதக்கருத்து ஒரு கதைக் குறியீடாகும் (tell-tale sign). ஐம்பூத இயற்கை சங்க இலக்கியத்தில் பல இடங்களிலும் பேசப்படுவது நம்மை வியக்க வைக்கிறது. ஆயினும் ”தமிழரா? - சொந்த மூளையில்லாத விவரங் கெட்டவர்: என்ற வாதம் இடைவிடாது இந்திய அறிவுய்திகளால் - அறிவுஜீவிகளால் - வைக்கப் படுகிறது.] 

ஐம்பூதத்திற்கு இணையாய் முறையே பகைவரைப் பொறுத்தலும், பகை வெல்லுதற்கான ஆலோசனைகளின் அகற்சியும், உடல், மனங்களின் வலிமையும், வலி வழி பெறப்படும் ஒறுத்தலும், கருணையும் சொல்லப்படுகின்றன. ”இந்த ஐம்பெரும் தகைகளை உடையவனே!” என்று சேரன் இப் பகுதியில் புகழப் படுகிறான்.

அடுத்த பகுதியைப் பார்ப்போம். இது

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

என்று அமையும். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் காலத்தில் அவன் நாடு குணகடலில் தொடங்கி குடகடல் வரை விரிந்து பரந்திருந்தது. ”உன் குண கடலில் பிறந்த ஞாயிறு அங்கிருந்து பெயர்ந்து மேற்கே ஏகி வெள்ளிய நுரை பொங்கும் மேற்குக் கடலிற் குளித்துப் புத்துருவம் கொள்ளும் நன்னாட்டின் தலைவனே!” என்று சேரன் மேலும் சிறப்பிக்கப் படுகிறான்.

அதாவது இவன் குறுநிலத் தலைவன் இல்லை. அகன்ற ஆட்சி நிலத்திற்கு உரிய வேந்தன். வடக்கிருந்த எந்த வேந்தனுக்கும் சளைத்தவன் அல்லன். He can challenge anyone up north. He had two seas on both sides of his kingdom. Now this denotes a few things in terms of trade. 

நிலத்தொடர்பால் வடக்கே மகத நாட்டின் தக்கணப் பாதையைப் பிடித்து சாவத்தி (இன்றைய அயோத்திக்கு அருகில்) வரை போய் வடபுல வாணிகத்தை நடத்திக் கொள்ள முடியும். 

[சிலம்பின் காலம் என்ற என் தொடரை வாசகர் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். தக்கணப் பாதை என்பது தமிழக- வடபுல வாணிகத்திற்கு இன்றியமையாதது. இதன் முகன்மையை நாம் இன்னும் உணரவில்லை.] 

மேற்குக் கடல் வழி எகிப்து, பாபிலோனியா, எலாமைத்து, பாரசீக நாடுகளின் வாணிகத்திற் கலந்து கொள்ளவும் முடியும். கிழக்குக் கடல்வழி தென்கிழக்கு ஆசியா, சீனம் ஆகிய நாடுகளுடன் வணிகஞ் செய்யவும் முடியும். இப்படி மூவேறு திசைகளில் வணிகஞ் செய்ய வாய்ப்புக் கிடைத்த நாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் ஒரு சிலவே. அப்படியிருந்தவை வளங் கொழித்துச் சிறந்திருந்தன. சேரனின் வணிகச் சிறப்பைச் சொல்ல இந்த மூன்று வரிகள் சிறப்பானவை அல்லவா?

அடுத்த பகுதி:

வான வரம்பனை நீயோ பெரும

என்று ஓரடியால் அமையும். ”வானவரம்பன், இமையவரம்பன்” என்ற சொற்களுக்கு “வானத்தை எல்லையாகக் கொண்டவன், இமையத்தை எல்லையாகக் கொண்டவன்” என்று பல உரையாசிரியர் பொருள் கொள்வார். 

உண்மையில் எந்நாளும் வானத்தையோ, இமையத்தையோ சேரர் எல்லையாகக் கொண்டவரில்லை. இமையம் வரை சேரர் படையெடுத்துப் போயிருக்கிறார். பாண்டியர், சோழருங் கூட அது போற் செய்திருக்கிறார். அவையெலாம் வஞ்சிப் போர்களே. வடக்கே பல வேந்தரையும், மன்னரையும் தமிழ் வேந்தர் வெற்றி கொண்டுள்ளார் என்பது மட்டுமே உண்மை. வடக்கே எல்லை கொண்டார் என்பது உண்மையல்ல.

“வானத்தை எல்லையாகக் கொண்டவர், இமையத்தை எல்லையாகக் கொண்டவர்” என்பது போன்ற தேவையற்ற உயர்வு நவிற்சி சொல்வது தமிழ் வரலாற்றிற்கு நம்பகமில்லாத் தன்மையையே வரவழைக்கும். 

மயிலை சீனி வேங்கடசாமி இக்கூட்டுச் சொற்களை ஏற்றதில்லை. அவர் “வானவர் அம்பன், இமையவர் அம்பன்” என்று பிரித்து, ”அம்பனை” ”அன்பனின்” பேச்சு வழக்குத் திரிபாகக் கொண்டு 2 சொற்களுமே ”தேவர் அன்பன்” என்று பொருள் படுவதாய்க் கொள்வார். 

இது அசோகர் காலத்திற்குப் பின் மோரியக் குடி வழியினர் “தேவனாம்ப்ரிய” என்று தங்களை அழைத்துக் கொண்டது போல் நாம் கொள்ளலாமென அவர் சொல்வார். சிங்கள அரசன் மூத்த சிவன் மகனான தீசனும் அசோகரின் பாதிப்பால் தன்னை தேவனாம்பிய தீசன் என அழைத்துக் கொள்வான். 

”தேவன அம்பியன்” என்பது ”தேவன் அம்பன்” என்பதோடு தொடர்புறுவதை நோக்கலாம். அன்பன்> அம்பன் என்ற சொல்திரிவு தமிழுக்கும் பாகதத்திற்கும் இடைப்பட்டதாகலாம். நாம் அன்பு என்று அழைப்பது பாகதத்தில் அம்பு ஆகலாம். 

பொதுவாக பேரரசன் அசோகனின் தாக்கம் அவன் காலத்தின் பின் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் இருந்தது போலும். புத்த, செயின, அற்றுவிக மதங்களின் தாக்கமும் தெற்கே பெரிதாக இருந்திருக்க வேண்டும். 

வேத நெறி போலவே, இம் 3 மதங்களும் மாந்த நிலைக்கு மேற்பட்டு தேவ நிலை இருப்பதாகவும் அந்நிலைக்குப் போவது ஆதன்களின் (atmans) முயற்சியால் முடியும் என்ற கருத்தையும் கொண்டிருந்தன.

 ”தேவர்களின் அன்பைப் பெற்றவன்” என்று சொல்லிக் கொள்வதில் அக்கால அரசர் பெருமிதங் கொண்டனர் போலும். “வானவர் அன்பன் நீ தானோ, என் வேந்தே?” என்ற பொருளையே இந்த வரிக்கு ஈடாய் நாம் சொல்ல முடியும்.

அன்புடன்,
இராம.கி.

புறநானூறு 2ஆம் பாட்டு - 2

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
--------------------

இப்பாடல் பாடாண் திணை சேர்ந்தது இதன் துறையைச் செவியறிவுறூஉ என்றும் வாழ்த்தியல் என்றும் இலக்கணத்தில் வகைப்படுத்துவார். இது பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய பாடலாகும்.

அது என்ன பாடாண் திணை? - என்று கேட்டால் நாம் புறத் திணைகளின் வகைப்பாட்டிற்குள் போக வேண்டும். ”வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய ஆறு திணைகளுக்கு அப்புறம் வருவது பாடாண் திணை. வேடுவச் சேகர வாழ்க்கைக்கும் (hunter-gatherer life), பயிர்த்தொழில் வாழ்க்கைக்கும் (feudatory life) பொதுவான புறத்திணைப் பாகுபாடுகள் இங்கு பாவிற்குக் களன்கள் ஆகின்றன.

முதலில் வருவது வெட்சி. இது ஓர் இனக்குழுக் கூட்டத்தின் பசுக் கூட்டத்தை இன்னொரு கூட்டத்தார் கவ்விக் கொள்வதும், அதைத் தொலைத்தவர் மீட்டுக் கொள்வதும் பற்றிய களமாகும். கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த புறப்பொருள் வெண்பாமாலை இப்படி மீட்டுவருவதை ஒரே திணைக்குட் பொருத்தாது, ”கரந்தை” எனத் தனிப்பெயர் கொடுத்து அழைக்கும். தொல்காப்பியம் இரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்துப் பார்க்கும்.

வஞ்சி என்பது மாற்றரசனை அச்சுறுத்திப் போர்செய்தலைக் குறிக்கும். சிலப்பதிகாரத்திற் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்று அங்குள்ள அரசரை அச்சுறுத்தி நடத்திய போர் வஞ்சிப் போராகும். இது வலிமையை நிலை நிறுத்தும் காரணத்தால் நடக்கும் போராகும். இதன் முடிவு கப்பங் கொள்ளுதலும், அடிபணிதலுமாய் அமையும்.

உழிஞை, மாற்றான் கோட்டையை முற்றுகையிடலும் அதைக் கைப்பற்றலும் ஆகும். முன்னே வெட்சியின் எதிராய் கரந்தையைக் காட்டியது போல உழிஞையின் எதிராய் நொச்சித் தனித்திணையை புறப்பொருள் வெண்பா மாலை காட்டும். தொல்காப்பியரைப் பொறுத்தவரை நொச்சி, தனித்திணை அல்ல. அது உழிஞையின் பகுதியே.

தும்பை, வஞ்சிக்கு எதிரானது. தன் வலிமையைப் பொருளாகக் கருதிவந்த அரசனை எதிர்த்துச்சென்று அவனோடு போரிடுவது. தொல்காப்பியம், புறப் பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டுமே தனித்து அடையாளங் காட்டும்.

வாகை என்பது வெறுமே வாளாலும் தோளாலுமன்றி தம் இயல்புகள் ஒட்டிய மற்ற போட்டிகளில் இருவேறு சாரார் பொருதுவதையும் வெற்றிபெறலையும் குறிக்கும்,

காஞ்சி என்பது வாகைக்கு மாறாக, பொருதலை விட்டொழித்து, “இவ்வுலகம் நிலையற்றது, இதில் ஒருவருக்கொருவர் பொருது கொள்ள வேண்டுமா? பொருதாமலேயே நீ நிலைப்பாய்” என நீத்தார் நெறி பற்றிப் பேசுவதாகும்.

பாடாண் என்பது இதுவரை மேலே பேசப்படாத பாடுபொருட்களை, ஆனால் பாடிப் பரவத்தக்க புறத்திணை நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவதாகும்.

இனிச் செவியறிவுறூஉ என்பது என்ன? இதைச் செவியுறை என்பதுமுண்டு. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் 1371 ஆம் நூற்பாவில் செவியுறையின் வரையறை சொல்லப்பெறும்.

செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே

”பெரியோர் நடுவே சினந்து கொள்ளுவதும், தன்னையே வியந்து கொள்ளும் செருக்கும் இன்றி தாழ்ந்து ஒழுகுதல் கடமை” என்று கேட்போன் உளம் கொள்ளுமாறு சொல்வதைச் செவியுறை என்பார். 

இவ்வரையறையை ஆழ்ந்து புரிந்துகொள்வது புறநானூற்று 2 ஆம் பாடலைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். ”அரசனே! நீ செயற்கரிய செயல்கள் செய்தவன், பகைவர் மேற் சினந்துகொள்ள உரிமையுள்ளவன். ஆனாலும் இந்நேரத்தில் அடங்கி ஆக்கமுடையவனாய் இருத்தல் வேண்டும்” என்று முரஞ்சியூர் முடிநாகனார் சொல்லவருகிறார். 

இந்தக் குறிப்போடு பாடற்பொருளைப் பார்ப்போம். பொருள் புரிவதற்குத்  தக்க, இப் பாட்டை 5 பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன்.

1. முதல் 8 வரிகள் “ஐம்பூதத்து இயற்கை போன்றவன் சேரலாதன்” என்று உரைக்கின்றன.

2. அடுத்த 3 வரிகள் “அகன்ற நாட்டிற்கு உரியவன் சேரன்” என்று அவன் ஆட்சியின் அகன்ற தன்மையைக் குறிக்கின்றன.

3. அடுத்த ஒரு வரி “வானவர் அன்பன்” என்று மோரியருக்குப் பின் சேரர் பெற்ற/அழைக்கப் பட்ட பட்டத்தைக் குறிக்கிறது.

4. அடுத்த 4 வரிகள் தாம் நாவலந்தீவின் பெரும் வீரர் கொடிவழியைச் சேர்ந்தவன் என்று சொந்தங் கொண்டாடும் விதத்தில் முன்னோர் நினைவாக “பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்த” சிறப்பைக் குறிக்கின்றன.

5. கடைசி 8 வரிகளில் தான் அரசனுக்கு உணர்த்தப்பெறும் செவியறிவுறூஉ இருக்கிறது. எந்நிலையில் இச் செவியுறை எழுகிறது என நம்மாற் சொல்ல முடியவில்லை. ஆனால் இமயமும் பொதியமும் போல நடுக்கம் இல்லாதவராய் யார் வந்தாலும் எதிர் நின்று வேள்விகளைக் கேட்கக் கூடியவர் போல ஆயத்த நிலையில் இருக்கச்சொல்லும் அறிவுறுத்தல் தெளிவாக நமக்குப் புரிகிறது.

செவியுறை என்பது கிட்டத்தட்ட psychological counselling. ”அரசே! நீ எப்பேர்ப் பட்டவன், அதைச் செய்துள்ளாய், இதைச் செய்துள்ளாய், எல்லாவற்றிற்கும் உகந்தவன் நீ? இருப்பினும் கோவப் படலாமா? செருக்குக் கொள்ளலாமா?  கொஞ்சம் பக்குவமாய்ப் பார்த்துச் செய்யப்பா” என்பது உளவியற் கலந்துரை இல்லாது வேறென்ன?

பாட்டின் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் இன்னும் ஆழமாய்ப் போவோம்.

அன்புடன்,சி
இராம.கி.

புறநானூறு 2ஆம் பாட்டு - 1

ஒரு முறை ctamil மடற்குழுவில் புறநானூற்று 2 ஆம் பாடலை முன்னுறுத்தி, அதில் வடபுலக் கருத்துக்கள் மிகுத்திருப்பதாகவும், அக்கருத்துக்களைத் தமிழர் பெரிதாய்க் கருதிப் பின்பற்றியதாகவும், தமிழருக்குச் சொந்தமான பண்பாட்டுத் துலக்கம் என்பது கிடையாது போலவும், எல்லாமே pan-Indian culture with regional variations என ஒரு சாராரும், ”அப்படியில்லை, ஒன்றிற்கொன்று வளமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட இருவேறு தனிப் பண்பாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தன; இரண்டுஞ் சேர்ந்ததே இந்தியப் பண்பாடு” என இன்னொரு சாராரும் தத்தம் கருதுகோள்களின் அடிப்படையில் உரையாடல்களை எழுப்பிக் கொண்டார். [நான் உரையாடல்களை அப்படியே சொல்லுக்குச் சொல்  இங்கு எடுக்கவில்லை.] இதுபோல் உரையாடல்கள் கால காலமாய் நடப்பவை தான்.

பல வெளிநாட்டுத் தமிழறிஞர் இன்னும் ”துபாஷி/பண்டிதர்” சொன்னதை வேத வாக்காய் எடுத்துக்கொண்டு, “வடக்கு மேடு, தெற்கு பள்ளம். மேட்டில் இருந்தே பள்ளத்திற்கு நீரோட்டம்” என்ற பார்வையை எத்தனை நாட்களுக்குக் கொள்வாரோ? - தெரியாது. Tamil culture and practices are derived from the north எனும் புரிதலையும் என்று தான் மாற்றிக் கொள்வாரோ? - தெரியவில்லை. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை , இந்திய நடுவண் அரசினர் வேறு கொடுத்துத் தொலைத்து விட்டார் :-) அதைக்கண்டும் பலருக்குப் பற்றி எரிகிறது. வேறொன்றுமில்லை.  It is an un-deserved recognition என்ற முணுமுணுப்பும், ”அரசியற் செல்வாக்கால் அடைந்துவிட்டார்” என்ற பொருமலும் ஆங்காங்கே எழுகின்றன.

“அடிப்படையில் வடமொழியும் தென்மொழியும் ஒன்றிற்கொன்று நெடுங் காலம் உறவாடியவையே. இங்கிருந்து அங்கு சில கூறுகளும், அங்கிருந்து இங்கு சில கூறுகளும் ஊடுறுவது இயற்கை” என்ற பார்வையை நடுநெறியர் ஒரு நாளும் மறைத்ததில்லை. மறந்ததுமில்லை. இப்படி ஒரு பக்கச் சார்பாகவே பார்க்கும் பார்வை, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டு வரை மாறாதிருப்பதை எம் போன்றோர் மறுத்துச் சொல்லி வந்தோமே ஒழிய, எல்லாமே தமிழென எக்காளம் இட்டதில்லை. ஆனாலும் எம் கருத்தைத் தனித்தமிழ்த் தீவிரவாதிகள் (pure Tamil extremists), பொதுக்கை வாதிகள் (fascists) என்று சாயம்பூசுவது தொடர்ந்து நடந்துவந்தது. [இப்படிச் சாயம் பூசுவதே வழக்கமாகிப் போன ஒரு மடற்குழுவில் இருந்தே நான் அகன்றிருக்கிறேன்.] மாற்றுக் கருத்தாய் எதை வைத்தாலும் அதை ஒதுக்கித் தள்ளி மேலைத் தமிழறிஞரை ஒருபாற் கோடவைப்பது தொடர்ந்து நடக்கிறது. ”வடக்கே! இதோ என் சாஷ்டாங்க சரணம், நமஸ்காரம்” என்றபடி பலரும் தாசானு தாசராய் ஆகிப் போனது இன்று நேற்று நடப்பதல்ல.

[யாரோ ஒருவர் அழகாய்ச் சொன்னார்: காசுமீரத்தில் நாலு பேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு இந்தியர் இறந்தார்” என்று வரும். இராமேசுரக் கடலில் நாலு பேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு தமிழ் மீனவர் இறந்தார்” என்று வரும், ஏதோ தமிழர் இந்தியர் அல்லாதது போல் சொல்லப் படும். இம்மனப்பான்மை இன்று நேற்று ஏற்பட்டதில்லை. இல்லையெனில் 500க்கும் மேற்பட்ட மீனவர் சுடப்பட்டதற்குப் பொங்காத இந்தியர் மும்பை 2611 என்றால் மட்டும் குதிப்பது ஏன்?]

அரசியலை ஒதுக்கிவைத்து சங்க இலக்கியம் வருவோம்.

கால காலமாக தமிழக வரலாற்றைக் கீழிறக்கித் தள்ளுவதே வேலையாக ஒரு சாரார் இங்கு இருந்துள்ளார். அவருக்கு வேதத்தைத் தூக்கி வைக்கும் பணி உள்ளபோது, ”எல்லாமே சங்கதம்” என முழக்கம் செய்யவேண்டிய நிலை இருக்கும் போது, தெற்கே ஒரு பண்பாடு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுப் பழமையானது என்று சொல்ல எப்படி மனம் வரும்? அதன் காரணமாய் வையாபுரியாரைத் துணைக்கொண்டு சங்க இலக்கியத்தின் காலத்தை தவறாகப் பொருத்துவது இன்றுவரை மாறவேயில்லை;

[வையாபுரியாரின் தற்சார்புக் கருத்துக்களை மறுத்து இவர் எவருமே கேள்வி எழுப்பியதில்லை. வையாபுரியார் முடிவுகளை கமில் சுவலபிலும் மறுத்தது இல்லை. இன்று கமில் சுவலபில்லின் முன்னெடுப்புகளை மற்ற மேலைத் தமிழறிஞரும் மறுப்பதில்லை. ஹெர்மன் டீக்கன் மட்டும் சிலருக்கு இப்போது எதிராளியாகத் தெரிகிறார்.] சங்ககால வாழ்க்கை முறையை Burton Stein வரையறுத்த Segementary State ஆகவே பார்ப்பதும்  மாற வில்லை. [Burton stein கருத்தை நொபுரு கராசிமா மட்டும் வன்மையாக மறுத்தார்; ஆனால் அவர் தன் ஆய்வுக்குட்பட்ட பெருஞ்சோழர் காலத்தோடு இயல்பாய் நிறுத்திக் கொள்வார். நானறியச் சங்ககால மூவேந்தர் அரசுகள் எப்படிப்பட்டவை, அவற்றின் அரசியற் பொருளாதாரம் என்ன? - என ஆய்ந்து பார்க்க யாரும் முன்வந்ததில்லை.]

தமிழ்நாட்டு ஆய்வாளரோ, இதன் ஆழங்காண மறுத்து ”வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள், சங்கரதாசு சுவாமிகளின் நாடகத்திறம், புதுக் கவிதையும் லிமெரிக்கும்” என விளிம்புநிலை ஆய்வுகளிலே கவனஞ் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஆய்வுப்பட்டத் தலைப்புகளைக் கேட்டால் கண்ணீர் வடிக்கவே தோன்றும். ஏதோ 200 ஆய்வுநூற் பக்கங்களை நிறைத்துவிட்டாற் போதும் என்றாற்போல் எத்தனை நாட்கள் சவலைப் பிள்ளையாய், மூளியாய், மூடமாய்த் தமிழாய்வுகள் தமிழ்நாட்டில் நடக்குமோ தெரியவில்லை. இத்தனைக்கும் புதிய தரவுகள் தொல்லியல்வழி வருகின்றன. கல்வெட்டியல் மூலம் எழுகின்றன. நாணயவியல் புது வரலாறு படைக்கிறது. ஆனாலும் தமிழக வரலாற்றைச் சங்க இலக்கியத்தை புத்தொளி கொண்டு மீள் ஆய்வு செய்ய தமிழியலில் யாருமே அணியமாயில்லை. இல்லையெனில் அச்சு அடித்தாற் போல் ”சிலப்பதிகாரம் கி.பி.2 ஆம் நூற்றாண்டின் பின் எழுந்தது” என்று கீறல் விழுந்த இசைத்தட்டுப் போலத் தமிழறிஞரில் 99.9% பேர் இன்னியம் பாடிக் கொண்டு இருப்பாரா?

ஏன் சங்க இலக்கியத்தில் மீளாய்வே நடப்பதில்லை?- என எனக்கும் புரிவதில்லை. இத்தனைக்கும் சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேலான பாடல்கள் பாலைத்திணையில் உள்ளன. அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடல் தலைவர் வடக்கே போனதாய்ச் செய்திகள் வரும். அப்படி வடபுலத்தில் எங்கே தான் வணிகம் செய்யப் போனார்? வடுகர் யார்? தமிழரின் பொருளியல் எதன் அடிப்படையில் இயங்கியது? இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாரமாய் இயங்கியதா? [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே? மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே? இவையெலாம் எங்கே செலாவணியாகின? வடக்கிருந்த மகதத்திற்கும் தமிழகத்திற்கும் இடையாட்டம் கொஞ்சங் கூட இல்லாது போனதா? மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா? வம்ப மோரியர் எனில் மோரியருக்கும் முந்தியவராய் சங்க காலத் தமிழர் இருந்திருக்க வேண்டுமே? அப்படியெனில் சங்க இலக்கியக் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி? ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை நாமே எண்ணிக் கொள்கிறோம்? வடபுலத்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறாரே ஏன்? Are we so worthless? Was every thing here a derived one? Don't we see a conspiracy in it?

மகதப் பேரரசு அளவிற்கு இல்லாவிடினும் அதற்கெதிராய்ச் சூளுரைத்து, தம் பொருளியலையும் அரசியலையும் தனித்து நிலைநாட்டி 3 பயிர்த்தொழில் அரசுகள் (feudatory states) இங்கிருந்தன என்பதையும், கூடவே வேடுவச் சேகர (hunter-gatherer) குமுகாயக்கூறுகளும் இருந்ததையும், அப் பின்புலத்திற் பார்த்தால் தான் சங்க இலக்கியமும் பழந்தமிழ் வரலாறும் புரிபடும் என்று  இந்த வறட்டுவாதிகளுக்குச் (dogmatists) யார் சொல்வது? சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்துணர்வது எப்போது? ”மகத அரசுகள் எப்போதும் தமிழக அரசுகளுக்கு பகையாய், அதேபோது போட்டியரசுகளாய் இருந்தன” என்ற வரலாற்று உண்மையை யார் உணர்த்துவது?

இப்படிக் கேள்விமேற் கேள்விகள் நமக்குள் அடுத்தடுத்து எழுகின்றன. விடை காண்பதற்குத் தான் ஆட்களைக் காணோம். வையாபுரியார் சொன்னது இன்று வரை மேலைத்தமிழறிஞரிடம் அப்படியே அடிபிறழாமல் உள்ளது. நம்முடைய  மாற்றுக் கருத்துக்கள் பொதுக்கையாகவே (fascist) புரிந்துகொள்ளப் படுகின்றன. நாம் என்ன சொல்ல முடியும்? Am I a fascist?

இதற்கிடையில் காவிரியில் எத்தனையோ ஆடிப்பெருக்கும், அமையுவாவும் (அமாவாசையும்) வந்தாயிற்று.

நானறிந்த வகையில் புறநானூற்று 2 ஆம் பாடலுக்கு என் விளக்கத்தை அடுத்த பகுதியிற் தருகிறேன். இதை ஏற்பதும் ஏற்காததும் படிப்போர் உகப்பு.

அன்புடன்,
இராம.கி.