"விமானம் என்றாலே மேலே பறப்பது தானே?.... ஆகாயம்
என்றால் மேல் வெளி.... அப்படியிருக்க விமானத்தை ஏன் ஆகாய விமானம் என்று சொல்ல
வேண்டும்?" என சிங்கையைச் சேர்ந்த
திரு. இளங்குமரன் ஒருமுறை தமிழுலகம் மடற்குழுவிற் கேட்டிருந்தார்.
ஆகாய விமானத்தின்
சொற்பிறப்பறிய நம்மூர்க் கோயில்கள், தேர்களின் கட்டுமானங்கள் பற்றியும் ஓரளவு படிக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்ததை இங்குரைக்க முற்படுகிறேன்.
நம் மரபுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமே?
தமிழிற் ’காய்ந்து கரிந்தது காயமாகும்’; அகல்
காயம், ஒலிப்பு நீண்டு, அகன்ற இருள்வெளியை உணர்த்தி, ஆகாயமாகும். விமானமென்பது தமிழ்,
சங்கதம் என்ற இரு மொழிகளின் கலப்புச் சொல்லாகும்.
ஆகாய விமானமெனுங் கூட்டுச் சொல்லில், சிலவிடத்து ’ஆகாயத்தைத்’ தொகுத்து, ’விமானம்’ என்ற சொல்லைத் தனித்து வைத்து, பறக்கும் ஊர்தியைக் குறிப்பதும் உண்டு. ஆனாற் அப்படி ஒரு தொகுப்பு இருப்பதை அறியாதோர்க்கு விமானம் என்ற சொல் குழப்பந் தரலாம்.
[சில காலம்
முன்பு வரை புரிதல் குழப்பம் வாராதிருக்க, விமானம் என்னும் இருபிறப்பிக்கு மாற்றாய் நல்ல தமிழில் வானூர்தி என்றும் சிலர் புழங்கினர்.
அதிலும் சிக்கலுண்டு. ஏனெனில் ஊர்தல் (செ.கு.வி.) என்ற சொல்லிற்கு ”அடர்தல், நகர்தல், பரவுதல், வடிதல், கழலுதல், சுற்றிவருதல்” என்ற பொருள்களை அகரமுதலிகள் தரும், ஊர்தல் என்பது இரு பரிமான நகர்ச்சி.
இதைக் கொண்டு முப் பரிமான நகர்ச்சியான பறத்தல் வினையை நேரே குறித்துவிட முடியாது. அப்புறம் ”எப்படி வானவூர்தி என்ற சொல் எழுந்தது? ” என்று கேட்டால் ”அது குறைப் புரிதலில் ஏற்பட்ட பயன்பாடு” என்றுதான் சொல்லவேண்டும். (வேறு ஓர் இடத்தில் அதை விளக்குகிறேன்).
நல்ல வேளையாக முப்பரிமானம் தேடுவோரிடையே இப்புழக்கம் குறைகிறது. வானவூர்தியில் இருந்து விலகி எங்களிற்
சிலர் அட்லாண்டா பெரி. சந்திர சேகரன் பரிந்துரைத்த முப்பரிமான நகர்ச்சியைக் குறிக்கும்.“பறனை”யையே சுருக்கம், தெளிவு,
பயன்பாட்டுப் பெருக்கம் கருதிப் பயில்கிறோம்.
(பறவையைப் போல்மாக்கிச் செய்தது
பறனையாகும்.) பறத்தல் வினை என்பது விதப்பானது. முப்பரிமானப் பறத்தல் என்பது மற்ற எளிய இரு பரிமான ஆற்றங்களைப் (actions) பிணைத்து முப்பருமானப் பொருளைப் பெற்றவிட முடியாது.
’சர்வகலாசாலையைச்’
சரித்து, ’பல்கலைக்கழகம்’ என்ற புதுச்சொல் பரவியது போல,
எதிர்காலத்தில் விமானம், வானூர்தி போன்ற சொற்களை விலக்கிப் ’பறனை’யைப் பழகினால் நல்லது.]
’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பதால் ஒவ்வொரு சொல்லிற்கும்
பிறப்பும், பொருள்மரபும் உள்ளன. இத்தொடர்ச்சி அறியாது, சொற்புழக்கம்
புரியாது. ”மொழி என்பது ஒரு கருவி; கருத்துப்
பரிமாற்றத்திற்கு மட்டுமே அது இருக்கிறது” என்னும் வறட்டுப்பேச்சாளர், மொழிமரபு தெரியாது,
நற்றமிழை நக்கலிக்கிறார்; தமிங்கிலத்திற்கும் பரிந்துவருகிறார்.
முகலுங் காலத்தே
(modern times) தமிழ்மரபுகளை மறந்து,
பிழைப்பிற்காக வடநாட்டு மரபுகளையும், சமயத் தூண்டலால் சங்கத மரபுகளையுந் தானே நாம்
விழுந்து விழுந்து கற்கிறோம்? இதற்கு மிஞ்சினால் மேனாட்டுப் படியங்களும் (fashions), நுட்பியல்களும் நம்மை
உருப்படுத்துமென எண்ணுகிறோம். இம்மரபுகளை, படியங்களை, நுட்பியல்களை தேடக் கூடாதென நான் சொல்ல மாட்டேன். அதே போது
பெருமிதமூட்டும் நம் மரபுகளைக் குறைத்தும் எண்ணமாட்டேன்.
(அடித்தானம் என்ற சொல்லைத் திருப்பிப்
போட்டு அதிட்டானம்> அதிஷ்டானம் என்று
சங்கதமாக்கியது வேறொரு கதை. இன்று சிற்ப ஆய்வாளரே கூடத் தடுமாறித் தமிழ்ச் சொல்லறியாது
சங்கதத் திரிவையே ஆள்கிறார். இதனால் மூலத் தமிழ்ச்சொல் முற்றாக அழிகின்றன. தமிழ்-சங்கத
மோதல், திரிவுகளில் இப்படி நாமிழந்த
தமிழ்ச் சொற்கள் ஏராளம். இதை இன்னொரு பொழுதிற் பேசுவோம்.)
’ஜல சமுத்ரம்’ எனும் இருபிறப்பியை
அறிந்தால், ’ஆகாய விமானம்’ புரியும். ஜலமெனுஞ் சொல் தமிழ்மூலம் காட்டுவது தான்.
நீர் மிகுத்தோடும் பொழுது ”சலசல” என ஓசை எழும்பும். (சரசர, சலசல என்ற ஒலிக்குறிப்புகள் பல தமிழ்ச் சொற்களை
உருவாக்கியுள்ளன.) அதன் விளைவாய்ச் சலம்> ஜலம் என்ற பெயர் கொள்ளும். (ஜலம்
வடமொழிச் சொல் என்போர் சற்று பொறுக்க வேண்டும்.
இதுபோன்ற ஒலிக்குறிப்புச் சொற்கள் பல மொழிக் குடும்பங்களிலும் உண்டு. ஒரு
குடும்பம் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது.)
’ஜலசமுத்ரம்’ என்பது இன்று ’சமுத்ரம்’ எனச் சுருங்கிப்
பொருள் கொள்ளப் படுகிறது. ’சமுத்ரம்’ என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பறியத்
தமிழிற்குள் வாராது முடியாது.
கும்> கும்முதல்> குமிதல் என்ற தமிழ் வினையடி சேருதற் பொருள் தரும்.
குமிதல் தன் வினையாகக், குமித்தல்
பிறவினையாகும். குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்துவைத்தது குறிக்கும்
பெயர்ச்சொல்லாகும். தென்மொழி /வடமொழிப்
பரிமாற்றங்களில் [இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருசிலர் சொல்வது போல் ஒருவழி
மட்டுமே அல்ல. சங்கதம் மேடு, தமிழ் பள்ளம் என்போருக்கு ஒரு நிகழ்ப்பு (agenda)
இருக்கிறது.]
குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து
நிற்கும். நம் குமுகம் அவருக்குச் சமுகமாய் உருமாறும். அப்படித்தான் குமுத்தம்
சமுத்தம் ஆகி, அவர் புழக்கில் ரகரம் ஊடுருவிச் சமுத்ரம் ஆகும். ஜலமும் சமுத்ரமும் சேர்ந்து ஜல சமுத்ரம் (நீர்க்
குமிப்பு) என்ற கூட்டுச்சொல் உருவாகும்.
நாளாவட்டத்தில் பழக்கத்தால் ’ஜல’ என்பது தொகுக்கப்
பட்டு ’சமுத்ரம்’ எனத் தனித்து நின்று கடலைக்
குறித்தது. ’ஜல சமுத்ரம்’ போல ’ஜன சமுத்ரம்’ என்ற கூட்டுச் சொல்லையும் ஊன்றிக்
கவனித்தாற் குமித்தல் என்பது புரியும். நீர்க்கடல் என்பதிலும் நீரைத் தொகுத்து கடல் என்றே சொல்கிறோம். குடல்> கடல் என்பது சேர்க்கையைத் தான், குமித்தத்தைத் தான் குறிக்கும். சமுத்ரம் என்பதற்கு நேரிணையான சொல் கடல் என்பதாகும்.
விமானம் என்பது (விதப்புப் பொருள்கொள்ளும்) சங்கத
’வி’ முன்னொட்டும். ’மானம்’ எனும் தமிழ்ச் சொல்லும் சேர்ந்ததாகும். [இதே போல
பூதி/விபூதி, செயம்/விசெயம், ஞானம்/விஞ்ஞானம், வாதம்/விவாதம் எனப் பல வி-முன்னொட்டுச் சொற்கள் இருபிறப்பிகள் ஆகின்றன.
காட்டாக ’விபூதி’யை எடுத்துக்கொள்ளுங்கள். பூழ்தி>பூதி என்ற தமிழ்ச்சொல்
புழுதியின் திரிவாய் நொசிந்த வெண்சாம்பலைக்
குறிக்கும். வி-பூதி என்ற விதப்பான (specific) பூழ்தியை - திருநீற்றை -
சிவன்கோயிலிற் கொடுக்கிறார். ’ஆன்மா நிலைபெற்றது, அதை மூடும் உடம்பு
நிலையில்லாதது; முடிவில் எல்லா மெய்களும்
சாம்பலாய் ஆகின்றன’ என்று குறிப்பது விபூதியாகும். முப்பட்டையாய் நெற்றியிலணிந்து
சிவநெறியாளர் ’நிலையில்லாமையை’ ஊரிற் பறை சாற்றுவர்.
இதேகருத்தில் தான் விண்ணவத்தில் திருமண் அணிகிறார். அதுவும் நிலையில்லாமைக் குறிப்புத் தான். சமயப் புரிசைகள்
ஒவ்வொன்றிற்கும் இதுபோல் உட்கருத்து உள்ளது. இக்காலத்திலோ விவரந் தெரியாது கேலிபேசி
எல்லாவற்றையுந் தொலைக்கிறோம்.]
மானம் என்பது அளவு, மதிப்பென்ற பொருள்களைக் கொள்ளும்.
[மானித்தல் தமிழில் அளத்தற் பொருள் கொள்ளும்.
’செரிமானம் = உணவு செரிக்கும் அளவு,
தன்மானம் = தன்னைப் பற்றிய மதிப்பு,
பரிமானம் = ஒரு பொருளைச் சுற்றும் - பரிக்கும் - அளவு,
பெறுமானம் = பெறும் மதிப்பு,
வருமானம் = வரும் பண அளவு;
*ஆகாறு என்ற சொல் வருமானத்திற்கு இணையாய்க் குறளிற் பயில்வது தெரியுமோ?)’ மேற்சொன்ன சொற்களால், மானத்தின்
பொருள்புரியும். it is a measurable quantity.]
கோயில்களிற் பல்வேறு மாடங்களுண்டு. எல்லாவற்றையும்
சகட்டு மேனிக்குக் கோபுரம் என்பது சரியல்ல. உண்மையில் வாயில்கள் மேலிருக்கும்
உயர்ந்த மாடங்கள் மட்டுமே கோபுரங்களாகும் (கோ புரம் =
இறை மாடம். மடுத்தது மாடம்; இக்காலத்தில் தரைத்தளத்திற்கு மேல் மடுத்ததை மாடியென்று
சொல்ல முற்படுகிறோம். தனி balcony-யும் ஒருவகை மாடந் தான்).
காட்டாக, மதுரைக் கோயிலில் சித்திரைவீதி 4 திசை வாயில்களின் மேல் இருப்பவை
அரச கோபுரங்களாகும். உள்ளே ஆடி வீதியில் சொக்கர் கோயில் வாயில்களில் இருப்பவை
அந்தந்த வாயிற் கோபுரங்களாகும். இதே போல்
மீனாட்சி கோயிலில் ஆடிவீதிக்கு முகங்காட்டும் இரு கோபுரங்கள் இருக்கின்றன. இவை
தவிரச் சில சின்னக் கோபுரங்களும் கோயிலுள் இருக்கின்றன.
ஆனால் கருவறைகளுக்கு மேல் இருக்கும் மாடங்களை
விவரமறிந்தோர் கோபுரம் என்னாது, விமானம் என்றழைப்பர். விமானம், கோபுரம் இரண்டிலும்
3,5,7.. என மாடங்கள் இருந்தாலும் விமானத்திற்கும்
கோபுரத்திற்கும் கட்டுமான வேறுபாடிருக்கும். கோயில் விமானக் கட்டுமானம் “எத்தனை
நிலை மாடம்?” என்று கேள்வி மூலம் உலகோர் வழக்கில் அளக்கப் படுகிறது. காட்டாகச் சீரங்கம் அரச கோபுரம் என்பது 13 நிலை மாடமாகும். மதுரைக்
கோயிலின் தெற்குக் கோபுரம் 160 3/4 அடிகள் உயர்ந்ததாகும்.
பருந்துப் பார்வையிற் பார்க்கின், கோயில்
விமானங்கள் என்பன மூலத் திருமேனிகள் இருக்குமிடத்தைக் குறிக்கின்றன. (எல்லாக்
கோயில்களிலும் அதிகமாய் உயர்ந்த விமானம் 13 நிலையாய் தஞ்சைப் பெரிய கோயிலில் இருக்கிறது. அது அங்குள்ள கோபுரங்களைக் காட்டிலும் பெரியது.)
பழங்காலத்தில் ’இறைவன்’ என்பது கடவுளையும், அரசனையும் சேர்த்தே குறித்தது. ”கோயிற்”
சொல்லிலும், கோயிற் புரிசைகளிலும், நிர்வாக
நடைமுறைகளிலும் இந்த ஒக்குமை (equality) விளங்கும். அரசன் கோவிலும், தெய்வக்
கோயிலும் அக்காலத்திற் பலவகையில் ஒன்று போலிருந்தன. இற்றைக் கோயில் மதில்கள் அற்றைக் கோட்டை மதில்களை மறுபளித்தன.
(என்
வலைப்பதிவில் ஆங்கிலத் தளபதி அக்னியூ காளையார்கோயில் மதிலை முற்றித் தொலைத்ததைத்
தெரிவித்தேன்.) எனவே அரசன் கருவறையும் விமானம்
கொண்டிருக்க வேண்டும். அரசன் ஊருலவும் ஊர்தியும், இற்றைக் கோயிற்றேர் போல் விமானங்
கொண்டிருந்திருக்கலாம். இற்றைக் கோயில் தேர்களையும், கோயில் வையங்களையும்
கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா?
( வையம் என்றவுடன் தடுமாறவேண்டாம்.
வள்> வளை >வயை> வையை> வையம் என்பது சிலம்பிற் பயிலப்படுகிறது. 50 ஆண்டுகள் முன் நாட்டுப் புறங்களிற் கூட்டு வண்டியைக்
குறித்த இச்சொல் இன்று வழக்கற்றுப் போனது.
நம் ’வையமும்’ சங்கத ’வாகனமும்’
பொருளாலும், ஒலிப்பாலும் உறவுற்றவை.
வாகனத்தையொட்டிய இந்தையிரோப்பியச் சொற்கள் (1520s, from Middle Dutch wagen,
waghen, from Proto-Germanic *wagnaz (cf. Old English wægn, Modern English
wain, Old Saxon and Old High German wagan, Old
Norse vagn, Old Frisian wein, German Wagen), from PIE *woghnos, from *wegh- "to
carry, to move" (cf. Sanskrit vahanam "vessel,
ship," Greek okhos, Latin vehiculum, Old Church Slavonic vozu "carriage,
chariot," Russian povozka, Lithuanian vazis "a small sledge," Old Irish fen,
Welsh gwain "carriage, cart;" see weigh) பலவும்
இருக்கின்றன. அடிப்படையில் இழுப்பதற்கே இவ்வாகனங்கள் பயன்பட்டன. இழுக்கும்
வாகனங்கள் ஊர்திகள் என்றுஞ் சொல்லப்பெறும்.
பின்னால் கோயில் விழாக்களில் இழுப்பதற்கு
மட்டுமின்றித் தூக்குவதற்கும் ”வாகனங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். சகடை,
வண்டி, தேர் போன்ற இழுப்பு வாகனங்களும், எருது, அரிமா, மூஞ்சூறு, மயில், கருடன், அனுமார், அன்னம் போன்ற தூக்கு
வாகனங்களுமாய்ப் பல்லுருக் கொள்ளும்.
தூக்குவாகனங்களின் அடியில் மூங்கில்களைக்
கட்டிக் கோயில் விழாக்களில், ”பற்றியோர்” தோள்மேல்
தூக்கிப் போவர். 6”, 8” விட்டங்கொண்ட முரட்டு மூங்கில்களை இப்போது நம்மூர்ப் பயிரிற் சாத்தாரமாய்ப் பார்ப்பதே இயலாது. (இத்தகை முரட்டு மூங்கில்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளைகின்றன, தவிர, சில கோயில்களில் பழம்பொருளாய் இருக்கின்றன.
முரட்டு மூங்கில்களின் வளர்ப்பில் தமிழக அரசு கவனஞ் செலுத்த வேண்டும். மரபு சார்ந்த ஒரு பொருள் நம் கண்முன் அழிந்துகொண்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வாகனச் சொல்லாட்சிகளும், கட்டுமானங்களும்
கோயில் கட்டமைப் பொறியியல் (structural engineering) படியாற்றத்தில் (application)
வெளிப்படும்.
ஊருலவர் திருமேனியைக் கொண்டு செல்வதில் இன்னொரு மரத்
தூக்கு வாகனம் பற்றியும் இங்கு சொல்லவேண்டும். குட்டைமிசை போல அடித்தட்டும்,
அடித்தட்டிற்குக் கீழே 4 கால்களும், மேலே 4
தூண்களும், 4 தூண்களுக்கும் மேலே மூடியதுபோல் ஒரு மேற்றட்டும். மேற்றட்டுப்
பக்கங்களில் 4 தாழ்வாரங்களும் சேர்ந்து
இவ்வாகனமிருக்கும்.
(தாழ்வாரங்களைத் தான் கவோதம் என்பர். கவ்விய உத்தம் = கவ்விய உயர்ச்சி. கவோதம் கபோதமாகத் திரிந்து வடமொழி உருக்காட்டும். நாமும் மயங்கித் தமிழில்லையோ என்று தவிப்போம். கோயிற் தொடர்பான பல சிற்பச் சொற்களை இடைக் காலத்தில் இருபிறப்பி ஆக்கி வைத்திருக்கிறார்.)
(மயிலாப்பூர் அறுபத்துமூவர் திருவிழாவில் 63 நாயன்மார்
திருமேனிகளை இதுபோலும் தூக்கி வருவதை ஒவ்வோர் ஆண்டும்
தொலைக்காட்சியிற் பார்க்கிறோமே, நினைவு வருகிறதா?) ஏராளமான நாட்டுப்புற
வீடுகளிலும், கோயில்களிலும் கவோதக் கட்டுமானம் இருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில்
sun-shade என்கிறாரே? அதுதான் இது. தவிர
மழைத்தூறல்கள் உள்ளிருப்பதை அணுகாதிருக்கவும் இவை வழிசெய்யும்.
ஆக 4 கால்கள், 4 தூண்கள், 1 கீழ்த்தட்டு, 1
மேற்றட்டு, 1 கவோதம் அடங்கிய கட்டுமானத்தில் திருமேனிகளை நிறுத்தி 4 கால்களில்
கயிறால் மூங்கில்களைக் கட்டித் தூக்கிச் செல்ல முடியும். இவ்வாகனத்திற்குச் சப்பரம் என்று பெயர். மேலே கூம்பாது
சப்பையாக இருக்கிறதல்லவா? பெயர்க் காரணம் அப்படி எழுகிறது.
இழுப்பு வாகனங்களில் வெறுமே 4 மரச்சக்கரங்களும்
தேர்க்கால் அச்சுகளும் (தேக்கும், இலுப்பையும் மர வேலைக்குப் பெயர்போனவை) இவை
சேர்ந்த தேர்த்தட்டும் கொண்டது சகடை எனப்படும்.
(இதுவும் இலுப்பையாலானது. சகடை, வண்டி, தேர்செய்ய மரந் தேர்ந்தெடுப்பது பெருங்கலை.
சகடையைப் புரிந்து கொண்டால் தேர்க்கட்டுமானம் புரியும்.)
சகடு என்பது சக்கரத்தையும்,
சகடை இது போல் வண்டியையும் குறிக்கிறது.
சகடமென்ற சொல்லும் சகடையைக் குறித்தது. [இன்று ’சகடம்’ மறைந்து எல்லாமே வண்டியானது.
எத்தனை சொற்களை நாம் இழக்கிறோம், தெரியுமா?
தமிழ்ச் சொற்றொகுதி மறப்பதும் தமிங்கலம் எழக் காரணமாகும்.]
எப்படிக் கோயில் அடித்தானம் பல்லுறுப்புக்களைக்
கொண்டதோ அது போலத் தடித்த தேர்த்தட்டும் பல்லுறுப்புகள் பெற்று சிற்ப வேலைப்பாடு
கூடி, முழுச் சகடையும் ‘தேரடி’ என்ற பெயர் கொள்ளும். தேர்த்தட்டின் பரிவட்டப் (circumference) பரப்பு பல்வேறு
வாகுகளையும், ஒயில்களையுங் காட்டும்.
இது சதுரமாகவோ (நாகர வகை), எண்கோணமாகவோ
(திராவிட வகை), 12, 16 கோணமாகவோ (வேசர வகை)
அமையக் கூடும் தேர்த்தட்டின் தடிமன் இரண்டாள் உயரங் கூட இருக்கலாம். திருவாரூர்
ஆழித்தேரும், சீவில்லிபுத்தூர் தேரும் மிகப் பெரிதானவை. தேர் செய்யும் தாவதி (ஸ்தபதி = பெருந்தச்சன்) பலவும் செய்து பட்டறிவு
கொண்டவராயின் நுணுகிய சிற்ப வேலைகளால், பழனச் (=புராண) செய்திகள் தேர்ச்சிற்பங்களில்
விரவும்.
தேர்த்தட்டைச் சுற்றிலும், இடுப்பளவிற்கு,
விழையுயரமாய் எழும்பும் மதிற்சுவர் கொடிஞ்சி எனப்படும். [கொடு+இஞ்சி = கொடிஞ்சி,
வளைந்த மதிற்சுவர். இதைக் கிடுகென்றும் அழைப்பர். கொடிஞ்சில்/கிடுகு போன்றவற்றால் தேரில் நிற்போர் தம் இடுப்பிற்குக்
கீழுள்ள உடலை ஓரளவு அம்புவீச்சிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
தேர்செய்யும்
நுட்பியல் ஒருசில அகவை முதிர்ந்த தாவதிகளோடு
தங்கிப்போய், இன்று தேர்ப்பாகங்கள் பற்றிய கலைச் சொற்களின் உறுதியான பொருட்பாடு
பலருக்கும் தெரியாது போனது. இணையத்தில் இது பற்றிய செய்திகள் தப்பும் தவறுமாய்க் கிடக்கின்றன. தமிழுக்குப் பணி செய்ய விழையும்
ஆர்வலர் மரபு சார்ந்த நிபுணர்களிடம் பேசித் தெளிவறிந்து இவற்றை இணையத்தில் ஆவணப்
படுத்த வேண்டும்.] இவையெல்லாம் நம் மரபு.
தேர்த்தட்டின் மேலிருக்கும் நடுப்பகுதி துணைப்பீடம்
அல்லது பார் எனப் படும். அதில் நிற்கும் வில்லாளியின் பார்வை, முன்னிருக்கும்
எதையும் நோக்கிச் செயற்படும் வகையில் தடுப்பின்றி இருக்கவேண்டும். துணைப் பீடத்திற்கும் கொடிஞ்சிக்கும் இடையில் தேரோட்டி
நிற்பார். தேர்த்தட்டின் மற்ற இடங்களில் போராயுதங்கள் விரவிக் கிடக்கும்.
தேர்த்தட்டின் கீழே பாதம் என்பது ’வெளித்திட்டு
சிற்பவேலைப்பாடுகளைக்’ (projected sculpt work) கொண்டிருக்கும். கொடிஞ்சிக்கும்
முன்னால் தேரடியில் தேர்நுகம் பிணைக்கப் பட்டிருக்கும்.
தேர்கள் அலங்கார ஊர்தியாக மட்டுமின்றி, போரிலும்
பயன்பட்டன. அலங்கார ஊர்தி கனமாகவும், போர் ஊர்தி எடை குறைந்தும் இருந்தன.
பொதுவாகச் சகடைகள் மாடுகளால் இழுக்கப்படும் போது,
மாந்தர் ஓட்டுந் தேர்கள், குதிரைகளால் இழுக்கப்படும். (இற்றைக் கோயில் தேர்களில் உள்ள குதிரைப் பொம்மைகள் இதையுணர்த்தும்.) தேரோட்டுபவன், தேர்ப்பாகன், தேர்வலவன் என்றும் அழைக்கப்பட்டான்.
தேர்ச்சக்கரங்கள் தொடக்க
காலத்தில் முழு வட்ட மர உருளைகளாய் இருந்தன. சக்கரங்களுக்கு இருப்புப் பட்டை
வார்த்து, இழைத்து, நெரித்து, அணைக்கும் மாழை
நுட்பம், பெருங்கற் காலத்தே, கொங்கிற் கிடைத்த இருப்புக் கனிமத்தாற் தமிழர்க்குத்
தெரிந்தது,
நாட்டுப் புறமெங்கும் கொல்லர் பட்டறைகள் (பட்டடை> பட்டறை என்ற
சொல் எழுந்ததே தேர்ப்பட்டை வேலையை வைத்துத்
தான்.) வாள், வேல் மட்டுமல்ல, பட்டைகளும் செய்து கொண்டிருந்தன. நாளாவட்டத்திற் சங்க
காலத்திலேயே ஆரங் கொண்ட சக்கர அடவுகள் (spoked
wheel design) வந்து விட்டன. சக்கரங்களைத் தேர்க்கால்கள் என்றுங்
குறிப்பர்.
சக்கரங்களும், ஆரங்களும், தேர்க்கால் அச்சுகளும்,
அச்சாணிகளும், தேர்த் தட்டும், பாரும், கொடிஞ்சி/கிடுகும், பாதங்களும், தேர்நுகமும்
கொண்ட தேரடி மொத்தத்தில் ஓர் உறுதியான கட்டமைத்
தொகுவம் (structural integrity) கொண்டிருக்க வேண்டும். இதிற் சிறிது ஆட்டங் காணினும், உறுதியில்லாது போனாலும், தேரடியோடு மேற்கொண்டு சப்பரம், விமானம்
எனும் இரண்டு கட்டுமானங்கள் ஒன்றிணைந்து
உருவாகுந் தேர் தடுமாறிப் போகும்.
நாட்டுப்புறங்களில் கோயில் திருவிழா நடக்கும் போது
சகடைகளில் கடவுள் திருமேனிகளை நிறுத்தி வைத்து, மாடுகளாலோ, மாந்த ஆற்றலாலோ
இழுப்பார். (சகடைகளுக்கு வடங்கட்டியிழுத்ததை நான் எங்கும் பார்த்ததில்லை. தேர்களுக்கே, உராய்வு/இழுப்பு/நகர்ச்சி பொறுத்து 2,4
வடங்கள் கட்டுவது உண்டு.)
சகடை, தேரளவிற்குக் கனமாகவும் மீ எடை
கொண்டதாகவும் இருக்காது. ஆனாலும் தூக்கு
வையத்தையும், அதன் மேலிருக்கும் ஊருலவர் திருமேனியையும் வைத்திழுக்கும் ஆற்றல்
கொண்டதாகவே இருக்கும். இப்பொழுதெல்லாம் சகடைகள் பெரும் நகரக் கோயில்களிலும், மிகுந்த வறிய கோயில்களிலும் இருப்பதில்லை. நடுத்தரச்
செழிப்புள்ள நாட்டுக் கோயில்களிலேயே இருக்கின்றன.
சிலபோதுகளில் கோயிற் சகடையின் மேல் சப்பரத்தை
நிறுத்திக் கயிறுகளாற் பிணைத்துத் திருமேனி உலாக்கள் வருவதுண்டு. செல்வஞ்
செழிக்கும் கோயில்களில் சப்பரமும், சகடையும் மர வேலைப்பாட்டில் சேர்ந்தே உருவங் கொண்டு, கயிற்றுப் பிணைப்பில்லாது
அமைவதும் உண்டு. அதையும் சப்பரம் என்பார். விதந்து சப்பர வண்டி என்பதுமுண்டு.
இழுத்துப் போகும் சப்பரமும்,
தூக்கிப்போகும் சப்பரமும் பயன்முறையால் வேறுபடும். சப்பர வண்டியின் கீழ்த்தட்டுக்
கனமாக இருந்து மரச்சிற்ப வேலைப்பாடு சேர்வதே தேரடி எனப்படுகிறது. தேரடி, கனமாகக் கனமாக மாந்த ஆற்றலில் இழுப்பது
சரவற்படும். 2,4 என வடமிட்டு பலர் தேரை இழுப்பார்.
[புதுக்கோட்டை,
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில்
தேர்த் திருவிழாக்கள் பெரும்பாலும் செவ்வாய்க் கிழமையே நடைபெறும். அதனால்
தேர்த் திருவிழாவை ஊர்ச்செவ்வாய் என்றே சொல்வார். ஊரே திரண்டு கொண்டாடும் விழா இது. ஊர்க்கோயில் வழமையில் சாதிச் சண்டைகள்,
ஊர்ச்சண்டைகள் எழும் அதிரடி அவலமும் உண்டு. ஊர்ச்செவ்வாயில் ஒருவேளை ஊரே
இரண்டுபட்டுக் கூடப் போகலாம். எங்கள் பக்கத்திலுள்ள கண்டதேவி இதற்கோர் எடுத்துக்காட்டு.]
பொதுவாக தேரடிகளின் கீழ்த்தட்டுக் கட்டுமானமும்
சிற்ப வேலைப்பாடுந் தான் இற்றைக் காலத்தில் அவற்றைப் பார்க்க வைக்கின்றன. இந்தத்
தேரடிகளுக்கு மேல் தான் விழாக் காலத்திற் கூம்புகள் [சப்பரத்திற்கு மேலெழும்பும் வெட்டுக் கூம்புகள் (frustum
of a cone; இந்தக் கூம்புகளின் அடிச்சுற்று வட்டமாய் இருக்காது. இவை சதுரமாகவோ,
பல்கோணமாகவோ இருந்து, தேர்த்தட்டோடு இணங்கும்
வகையில் அழகு காட்டி நிற்கும்.)
கொடுங்கைகள் (கூம்புகளின் பக்க முனைகளிற்
பொருத்தப்படும் மரக்கைகள்), கூவிரம் (கூம்புகளுக்கு மேற் குவிந்து பொருந்தும் அரைக்கோளம்), கலசம் (கூவிரத்திற்கும் மேல்
பொருத்தப்படும் கூர்மையான பகுதி; ஒரு காலத்தில் மரத்தாலானது; இந்தக் காலத்தில்
மாழையாகவே பொருத்தப்படுகிறது.) போன்றவற்றை
உறுப்பாகக் கொண்ட விமானத்தை பயன்பாட்டிற்குத் தக்க உயர்த்தியும், குறைத்தும்
எழுப்பித் தேர்களை உருவாக்குகிறார்.
விமானத்திற் கூம்பு கட்டும் வேலைப்பாடு
விமானத்துள்ளே பல தூண்களையும், சட்டங்களையும், உத்தரங்களையும் கொண்டிருக்கிறது.
(முற்றிலும் கட்டமைப் பொறியியல் - structural engineering - தழுவியது கூம்பையும் கூவிரத்தை மூடினாற் போல்
தேர்ச்சீலை வேயப்படுகிறது.
தேர்ச்சீலையில் பல பின்னல் வேலைப்பாடுகளும் ஓவிய
மெருகேற்றலும் கலந்திருக்கும். விமானத்தின்
பரிவட்டத்தில் அழகிய வண்ணந்தீட்டிய ஆல வட்டங்களையும், தோரணங்களையும் தொங்கவிட்டு
அலங்கரித்திருப்பார். (பீடுநடையோடு நகர்ந்துவரும் தேரழகு பார்த்துப்
பருக வேண்டியதாகும். ’திருவாரூர்த் தேரழகு’
என்பது சொலவடை.)
சகடை, சப்பரம், விமானம் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த
கட்டுமானமே ”தேர்” எனப்படுகிறது. (இந்த 3 கட்டுமானங்களுக்கும் பாகங்கள்
உண்டு.) தேர் எனுஞ் சொல்லிற்கு ”உயர்ந்தது” என்ற
பொருளுண்டு. ’த’கரம் இல்லாத சொல்லும் ’ஏல்ந்து, ஏர்ந்து’ காணப்படும். ஒருவகை உயர்மரத்தை தேக்கு என்கிறோமே? நினைவு வருகிறதா? தேர்ந்தது உருவத்திலும்
கருத்திலும் உயர்ந்து நிற்கிறது.
சகடு-சகடை-சகடம் என்ற சொல்லிணை போலவே
உருள்-உருளி-உருளம் என்ற இணையும் உண்டு. இங்கும் முதற்சொல் சக்கரத்தையும்,
இரண்டாம், மூன்றாஞ் சொற்கள் வண்டிகளையும் குறித்தன.
எப்படிச் சோளம்>சோழம் என்பது வடகிழக்கிற் தெலுங்கில்
போய் டகரம் ஆகி (சோடம்; தெலுங்குச் சோடர்கள்) இன்னும் வடக்கே போய்த் தகரமாய்த்
திரிகிறதோ, அது போல உருளம்>உருடம்>(உ)ருதம்
என்றாகி உகரவொலி மறைந்து அகரவொலி ஏறி ரதமாகும்.
தமிழரில் பலரும் ரதம்/தேர்
வேறானவை என்றெண்ணுகிறார். இரண்டும் ஒருபொருட்
சொற்களே. ரதத்தையொட்டி இந்தையிரோப்பியச் சொற்கள் பலவிருக்கின்றன. இன்னும்
பார்க்கின், நம் சக்கரத்திற்கும் மேலை மொழிகளில் இருக்கும் chariot, car
என்பதற்கும் கூட ஆழ்ந்த தொடர்புண்டு.
(மூலந்
தெரியாது சிந்தனை மயங்கிய நிலையில், முரணை பேசாது, car ஐச் சகடை/சகடம் என்றழைக்க
நம்மில் எத்தனை பேர் முன்வருவர்? மரபோடு பொருத்தா விடின், மகிழுந்து என்ற சுற்றி வளைத்துக் கால காலத்திற்கும் புழங்க வேண்டியது தான்; அன்றேல் கார் என்று கடன்வாங்கி
எழுத வேண்டியது தான்.
நம்மூர்களிற் தேரடி
நிலைகொள்ளும் இடங்கள் தேர்நிலைகள், தேர்முட்டிகள் எனப்படும். தேர்நிலையம் என்பதை
இணைப்படுத்தியே பேருந்து நிலையம் என்ற சொல் 60/70 ஆண்டுகள் முன் எழுந்தது. தேரடிகளை தகரம் போட்டு மூடி வைத்திருப்பர்.
விழாக்காலங்களில் தேரடி வீதிகளில் மற்ற கட்டுமானங்கள் சேர்ந்து தேர் உருவாகும்.
(அண்மைக் காலங்களில் திருச்சி பாரத மிகுமின்
நிறுவனத்தின் - Bharath Heavy Electricals Limited - உதவியுடன் பல கோயிலார்
தேர்ச் சக்கரங்களை முழுக்க எஃகாக மாற்றி வருகிறார்.
திருவாரூர் ஆழித்தேரிற்
தொடங்கிய நுட்பம் இன்று பல தேர்களுக்கும்
வந்து விட்டது. கூடவே சக்கரங்களுக்குத் தாங்கிகளையும் (bearings) பொறுத்துகிறார்.
தேர் செல்லும் வீதிகள் கற்காரை (concrete) பாவியும் மாறிவருகின்றன. தேர்களை இழுப்பது இன்று எளிதாகி வருகிறது. இற்றைத்
தொழில்நுட்பம் கொஞ்சங் கொஞ்சமாய் பழைய தேருக்குட் புகுவது சுவையாரமான
செய்தி.)
சிவ, விண்ணவக் கோயில்களில் நடக்கும் தேர்த்திருவிழா
போன்றே, நாக பட்டினம் அன்னை வேளாங்கன்னி, தூத்துக்குடி பனிமய மாதா கோயில் போன்ற
கத்தோலிக்க ஆலயங்களிலும் சப்பரத் திருவிழா
நடைபெறுகிறது.
இவ்வளவு நேரம் தேர்கள், தேரின் பாகங்கள் [தேரடி (இதன் பாகங்களான சக்கரங்கள், ஆரங்கள்,
தேர்க்கால் அச்சுகள், அச்சாணிகள், தேர்த்தட்டு, பார், கொடிஞ்சி/கிடுகு, பாதங்கள்,
தேர்நுகம்), சப்பரம் (இதன் பாகங்களான கால்கள், தூண்கள், கீழ்த்தட்டு,
மேற்றட்டு, கவோதங்கள்) , விமானம் (இதன் பாகங்களான கூம்பு, கொடுங்கை, கூவிரம்,
தேர்ச்சீலை, கலசம்)]பற்றிப் பேசினோம்.
இனி வேறொரு விரிவு பற்றிப் பார்ப்போம். பறவைகள்
மாந்தனை என்றுமே ஈர்த்தவை. சிறகுகளைப் ”பக்பக்” (பக் என்ற ஒலிக்குறிப்புச்
சொல்லிலிருந்தே பக்கி> பக்சி> பக்ஷி> பட்சி என்ற சொற்கள் தமிழிலும் பாகதத்திலுமாய் மாறி மாறிப் புகுந்து உருவாயின.)
என்று அடித்துக்கொள்ளும் செயல் (தமிழில் ’பறபற’ என்ற ஒலிக்குறிப்பே பறவை
என்ற சொல்லை உருவாக்கியது.) பறத்தலுக்குத்
துணையாய் இருப்பதால், தேரில் தேரடியில்லாத சப்பரமும், விமானமும் கொண்ட பகுதியில்
இறக்கைகளைப் பொருத்தி வானத்திற் பறக்க முடியும் என்ற கருத்தீடு பரவத் தொடங்கி விமானம் என்ற சொல்லின் பொருட்பாடு மேலும்
வியல்ந்தது.
சப்பரம் விமானத்துளே பொருந்தியதாயும் அடவு விரிந்தது புட்பக விமானம்,
எந்திர விமானம், மயில் போன்ற அமைப்பு என்ற
தொன்மங்கள் எல்லாம் இப்படி எழுந்தவையே. இவை உண்மையிலே இருந்தனவா, வெறும்
கற்பனையா என்பது ஆய்விற்குரிய விதயம்.
இற்றைப் பறனைகளும் தம் சிறகுகளை விரித்து,
வளித்தாரைகளின் (jet streams) ஆற்றலால் பறக்கின்றன. இவற்றை விமானம் என்பது
பொருத்தந் தான். அதே பொழுது, பறனை என்பது நாம் எளிதாகச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. (சப்பரம் போல் அமைப்பிற்றான்
இப்பொழுது பயனாளர் பயணிக்கிறோம். பயணி இருக்கைகள் பார்/துணைப்பீடத்திற்கு
இணை யானவை. கொடிஞ்சிக்கு அருகில்
தேரோட்டி/தேர்வலவன் இருந்தது போல் இன்று பறனையோட்டி/பறனை வலவன் இருக்கிறார்.
கொடிஞ்சி என்ற சொல் cockpit ற்கு இணையானது. தேர்ச்சீலை போல் இன்று பறனையைச் சுற்றி வனையும் மாழைத்தகடு /
நார்த்தகடு இருக்கிறது. விமானத்திற்குள் உள்ள சட்டகங்கள் இன்றும் கட்டமைத் தொகுவம்
அளிக்கின்றன. அக்காலத்துக் கூவிரம், கலசம்
போலப் பறனையின் வால்ப் பகுதி உயர்ந்து இருக்கிறது. குதிரை / சிறகுக்குப் பகரியாய்
தாரை எந்திரப்பொறி பறனையைப் பறக்கச் செய்கிறது.)
உலகமெங்கணும் தேர்கள், சகடங்கள், உருளங்கள் ஒன்று போலவே காட்சி யளிக்கின்றன. இவையெலாம் எங்கோ ஓரிடத்தில் நுட்பியலாய் எழுந்தன
போலும். பிற்கால வளர்ச்சியான பல்வேறு வண்டிகளும்
பறனைகளும் இத் தேர்களிற் தொடங்கியவையே. இவற்றைச் செய்வதில் நமக்கும் ஒரு
மரபு இருக்கிறது. இது தெரிந்தால் இற்றை நுட்பியலை நம் வயப்படுத்துவதில் உதவியாய் இருக்குமென்றே இக்கட்டுரை எழுதினேன்.
தேர்
நுட்பங்கள் ஏதோ மேலை நாட்டிற் கடன் வாங்கியவை, நாமெங்கோ காட்டு விலங்காண்டிக்
காலத்தில் மாட்டுவண்டி ஓட்டிக் கொண்டிருந்தோம்
என்று தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டாம். (’திராவிடம்’ பேசும் ஒரு சில தமிழர் இத் தாழ்வு மனப்பான்மையை ஊக்குவிக்கிறார். நம் மரபுகளை ஆழ்ந்து ஆய்வு செய்வதற்கு மாறாய் தாம் வேறெங்கோ பெற்ற அரைகுறை அறிவை கிளிப்பிள்ளையாய் வெளிப்படுத்துவதே சிலருக்குக் கடமை ஆகிறது.
கோயில் தொடர்பாய் எது இருந்தாலும் அதை மறுதலிப்பதே சிலருக்கு வாடிக்கையானது.) பழங்காலப் போக்குவரத்துப் பொறியியலில் நம்
பங்களிப்பு கணிசமானதே.
அன்புடன்,
இராம.கி.