Monday, May 29, 2006

மின்னியல் உலகில் தமிழ் - 4

உயிர்மெய் எழுத்துக்கள் எழுந்த காரணம்:

பனை ஓலை நறுக்கால் ஆன இந்த எழுது பொருள், உயிர்மெய் எழுத்தைக் கையாளுவதற்கும் மிகுந்த உதவி செய்தது. இந்தக் காலத்து அச்சில்,

அவனைச் சென்னையிலிருந்த போது பார்த்தேன்

என்று எழுதுவதை,

அவ்அன்ஐச்ச்என்ன்ஐய்இல்இர்உந்த்அப்ஓத்உப்ர்த்த்ஏன்

என்று மெய், உயிர் எழுத்துக்களை அருகருகில் எழுதி நீட்டாமல்

அவனசசனனயலரநதபதபரததன

என்று ஓலையில் எழுதி மேலும், கீழும், பக்கவாட்டிலும் சிற்சில குறியீடுகளைப் போட்டு, வெவ்வேறு உயிரொலிப்பைக் கொண்டு வந்து சொற்றொடர் நீளத்தைக் குறைக்க முடிந்தது. பெரும்பாலும் புள்ளியிடாமலே கூட, ஓலையில் எழுதவும் முடிந்தது. தமிழ்ச் சொற்களில் தனிமெய்யோடு அகரமேறிய மெய் எங்கெங்கு எப்படி வரும் என்ற ஒழுங்காலும், சொற்களும், சீருமாய் நிரையசைகள் எங்கு வரும், நேரசைகள் எங்கு வரும் என்ற ஒழுங்காலும், மெல்-வல் இணைகள் எங்கு வரும் என்பதில் இருந்த ஒழுங்காலும், எழுத்தில் புள்ளியைத் தவிர்ப்பதை நம்மவர் ஒரு பெரிய சிக்கலாய் உணரவில்லை. புள்ளிகள் இல்லாமலேயே ஓலைகளில் பல நூற்றாண்டுகள் எழுதினார்கள். (புள்ளி எப்பொழுது எழுந்தது என்ற வரலாற்றுச் சிக்கலுக்குள் நான் இப்போது போகவில்லை.)

ஓலையில் இப்படி அகரமேறிய மெய்களை எழுதி மேலும், கீழும், பக்கவாட்டிலும் ஒரு கோட்டை இட்டு (இந்தக் கோடே நாளாவட்டத்தில் கொக்கி, கொம்பு, கால், சுழி, கொண்டை எனச் சில குறியீடுகளாய் மாறியது) எழுதுவது, அன்றைய எழுது முறைக்கு ஒரு நேர்த்தியை, குறைந்த இடத்தில் நுணுக்கி எழுதி, நிறையப் புரிய வைக்கும் ஒரு சிக்கனத்தை, உருவாக்கிக் கொடுத்தது. இங்கே சுருக்கம் என்பது அன்றைய எழுது முறைக்கு ஒரு முகமையாகவே இருந்தது. சுருக்கம் கருதியே இலக்கியத்திலும், கல்வெட்டிலும், செப்பேடுகளிலும், சொல்லப் படுபவை பாக்கள் அல்லது பாக்களைப் போலவே ஆயின.

சுருக்கம் கருதியே தமிழ் போன்ற மொழிகளில் உயிர்மெய் எழுத்துக்கள் எழுந்தன. புணர்ச்சி இலக்கணமே, உயிர்மெய் எழுத்துகளுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தது. (இந்தப் புணர்ச்சி இலக்கணம் அகரவரிசை எழுத்துள்ள மொழிகளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.) மொத்தத்தில் எப்படி யோசித்துப் பார்த்தாலும், உயிர்மெய் எழுத்துக்கள் நம் மொழிகளுக்குள் புழக்கத்திற்கு வந்தது நாம் எழுதிய எழுது பொருளால் தான் என்பதை உணர முடியும். இதே வளர்ச்சி இன்னொரு வகையில் வேறு காரணங்களுக்காக, அரபி போன்ற மொழிகளிலும் ஏற்பட்டது. அடிப்படையில் மெய்களையே முன்னிறுத்தி உயிரை ஒட்டுக் குறிகளால் (அரபியில் அவை வெறும் புள்ளிகளும் சிறு கோடுகளும் தான்) குறிக்கும் பழக்கமும், வாக்கியம் அல்லது சில விதப்புச் சொற்களின் முதலில் மட்டுமே, உயிர் எழுத்து தன் உருவத்தைக் காட்டும் பழக்கமும் அந்த மொழிகளிலும் ஏற்பட்டன. (ஒட்டுக் குறிகளைக் கீற்றுக்கள் என்று என் தமிழ் இணையம் 2004 கட்டுரையில் குறித்திருக்கிறேன்.)

ஓலையில் இருந்து தாளுக்கு நகர்வு:

இந்திய எழுத்து முறைகள் எல்லாமும், இப்படி அகரமேறிய மெய்யோடு ஒட்டிய கீற்றுக்களால் அமைந்தன. நாளடைவில் மெய்யைச் சுற்றி இடப் பட்ட சிறுகோடுகள் பின்னிப் பிணைந்து வீச்செழுத்துக்களாய் மாறின. அதோடு இல்லாமல், ஓரெழுத்து இன்னொரு எழுத்தோடு பிணைந்து கூட்டெழுத்துக்கள் எனவும் ஆயின. பின்னாளில் அச்சு நுட்பம் வந்த பிறகு, வீரமா முனிவரின் முயற்சியால் தமிழ் மொழியில் இந்த வீச்செழுத்துக்கள் எல்லாம் அறவட்டாய் வெட்டப் பெற்று, கால், கொக்கி, சுழிக் கொக்கி, கீழ் விலங்கு, கீழ் விலங்குச் சுழி, கொம்பு போன்ற கீற்றுக்கள் அடையாளம் காட்டப் பட்டன. கிரந்தத்தின் நெருக்கத்தால் [கிரந்த எழுத்து நம்மூரில் எழுந்தது தான்; அது வடமொழியை எழுத, (கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டும்; அது வடமொழியை எழுத உருவானது; தமிழை எழுத உருவானது அல்ல; தமிழரில் பலரே இதில் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள்.) நம்மவரால் உருவாக்கப் பட்ட எழுத்து. கிரந்தத்தில் எழுதப்பட்ட வடமொழி நூல்களும் கணிசமானவையே. கிரந்தத்தை இன்றைய இந்தியவியல் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தமிழ்கூறும் நல்லுலகம் தான் காப்பாற்ற வேண்டும்.] கொண்டை, சுழிக் கொண்டை போன்றவையும் ஏற்பட்டன. மேலே சொன்னவை போக, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு, ஔகாரச் சிறகு போன்ற கீற்றுக்களை வீரமா முனிவரே முதன் முதலாய் உருவாக்கினார். ஆக இன்றைக்கு இருக்கும் உயிர்க் குறியீடுகள் வீரமா முனிவரின் தாக்கம் கொண்டவை. அந்த மாற்றங்கள் அச்சுத் தொழிலுக்கு பெருத்த உதவி புரிந்தன; ஏன், புரட்சியே புரிந்தன. நாமும் பெரியார் காலம் வரை அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டோ ம்.

இந்தக் கீற்றுக்களை, அகரமேறிய எழுத்துக்கு அருகில் எழுதத் தொடங்கியவுடன் எழுதும் வரியின் நீளம் கூடியது; இருந்தாலும் நாம் பொருட் படுத்தவில்லை. ஏனென்றால் நீளம் கூடிய காலத்தில், நம்முடைய எழுது பொருளும் அதற்குத் தக மாறி விட்டது; ஓலைக்கு மாறாக நம்மூரில், இதே காலத்தில், தாள் புழங்கத் தொடங்கியது. அச்சுத் தொழிலும் சம காலத்தில் வந்தது; தாளில் நீட்டி எழுதுவது, நமக்கு ஒரு பொருட்டாகவே அப்பொழுது தெரியவில்லை. இப்படி நீட்டி எழுதப்பட்ட மொழி, நடைமுறையில் இன்னும் மாறத் தலைப் பட்டது.

அந்த மாற்றத்திற்குப் போவதற்கு முன் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். எழுத்துக்கள் வெறுமே ஒருவழிப் பாதையாய் அல்லாமல், ஒருவரால் எழுதி இன்னொருவரால் படிக்கப் பிறந்தன. ஊடே வந்த அச்சுத் தொழில் இந்த மாற்றத்தை இன்னும் வேகப் படுத்தியது. வெவ்வேறு கையெழுத்துக்களை, அவற்றின் வீச்சுக் கூடும் போது, ஒழுங்கு முறை தவறி, கந்தர கோளமாய், கிறுக்கலாய் ஆகும் போது, எல்லோராலும் படிக்க முடியாமல் போக வாய்ப்பிருந்தது. இதை அச்சின் மூலம் தவிர்க்க முடிந்தது. ஏனென்றால் அச்சு எழுத்துக்கள் ஒரு செந்தர இடைமுகத்தைக் காட்டின. இப்பொழுது முன்னால் சொன்ன சமன்பாடு வேறொரு விதமாய் விரிந்தது.

எனக்குள் இருக்கும் விழும்பம் --> என் கை எழுத்து --> செந்தர அச்செழுத்து -> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

செந்தர அச்செழுத்து, படிப்புச் சமன்பாட்டின் நேர்த்தியைக் (efficiency) கூட்டியது. தட்டச்சு முறை வந்த பின்னர், எழுதுதல் என்பது கூட பெரும்பாலான இடங்களில் மறைந்து விட்டது; அதற்கு மாறாக தட்டச்சில் உள்ள பொத்தான்களை அமுக்குவதன் மூலமாக, செந்தர அச்செழுத்துக்கள் நேரடியாகத் தாளில் கிடைக்கத் தொடங்கி விட்டன. இப்பொழுது படிப்புச் சமன்பாடு புதிய மட்டத்திற்கு வந்தது.

எனக்குள் இருக்கும் விழும்பம் --> தட்டச்சு --> செந்தர அச்செழுத்து -> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

இந்த மாற்றம் கொஞ்சம் விதப்பான மாற்றம்; இதுவரை இருந்த கையெழுத்து வேறுபாட்டுத் தன்மை முற்றிலும் மறைந்து போயிற்று. முதன் முறையாக உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள ஒட்டுக் கீற்றுக்கள் முற்றிலும் ஒட்டி இருக்கத் தேவையில்லை, சற்று அருகிலும் இருக்கலாம் என்ற நிலை உருவாயிற்று. இந்த நிலையில், அதுவரை கீற்றுகள் ஒட்டியிருந்த ண், ற், ன் ஆகியவற்றின் ஆகார, ஒகர, ஓகார உயிர்மெய் வார்ப்புக்கள்(fonts), இன்னும் ல்,ள்,ன் ஆகியவற்றின் ஐகார வார்ப்புக்கள், ஆகியவற்றின் உருவங்கள் மாறத் தொடங்கின. தந்தை பெரியாரின் முயற்சியால், இந்தக் காலத்தில் உள்ளது போல், இந்த எழுத்து வார்ப்புகள் மாற்றப் பட்டன.

மேலும் ஒரு மாற்றமாய், இந்த வளர்ச்சியில் எல்லா உயிர்மெய் உகர, ஊகாரங்களும் வடிவ மாற்றம் பெற வேண்டும் என்று ஒரு சிலர் நெடு நாளாய்ச் சொல்லி வந்தார்கள். ஆனால் அது கடைசி வரை நடை பெறாமலே போய் விட்டது. இத்தனைக்கும் நமக்கு அருகில் உள்ள மலையாளத்தில், அந்த மாநில முதல்வர் அச்சுத மேனன் காலத்தில், எழுத்துச் சீர்த்திருத்தம் நடந்து உகர, ஊகாரங்கள் அங்கு மாறிப் போயின. இப்பொழுதும் கூட இளஞ் சிறாரைக் கருத்தில் கொண்டு, தமிழில் இந்த உகர, ஊகாரச் சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்லுவார் உண்டு.

அது வேண்டுமா, வேண்டாமா என்பது நுட்பியலைப் பொறுத்தது. இன்றைக்குத் தட்டச்சிற்கு அடுத்த நுட்பியலுக்கு நாம் போய் விட்டோ ம். தட்டச்சில் ணகரத்தையும், ஆகாரத்தையும் சேர்த்து அடித்தால், ணா என்றும் வரவழைக்கலாம்; அல்லது, இன்றையக் கணி வளர்ச்சியில் உருவான கீற்றொட்டு நிரலிகளை (collation programmes) வைத்துப் பழைய ணாகாரத்தையும் கொண்டு வரலாம். அதே போல ¸ (Àì¸ò¾¢ø ƒ¤ §À¡ýÈ ¦¸¡ñ¨¼¨Âô §À¡ðÎì ¦¸¡ûÙí¸û) என்றும் கொண்டு வரலாம்; கு என்றும் கொண்டு வரலாம். இதெல்லாம் கணி செய்யும் வேலைகள். அதாவது செந்தர எழுத்தைக் கணித் திரைக்குக் கொண்டு வரும் வேலையில் எத்தனையோ மாற்றங்களை நினைத்தபடி கொண்டு வரலாம் என்று ஆன பிறகு, உகர, ஊகார மாற்றம் தேவையில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. கணி என்ற ஒன்று, இந்த வேலையைச் செய்ய முடியாது என்றால், திரையில் வரும் உருவங்களைப் பிணைக்க முடியாது என்றால், இந்த உகர, ஊகார மாற்றங்களுக்கு ஒரு பொருள் உண்டு. நாம் தட்டச்சு, அச்சு என்ற நுட்பியலோடு மட்டுமே தேங்கி இருந்திருந்தால், இந்த மாற்றங்கள் தேவை தான். ஆனால், நாமோ கணி என்ற அடுத்த நுட்பியலுக்கு நகர்ந்து விட்டோ ம்; எனவே இந்த உகர, ஊகார மாற்றம் சிறார்களுக்கும் சேர்த்து தேவையில்லை என்பதே என் பரிந்துரை.

சரி இவ்வளவு முன்முகம் காட்டியபிறகு, மின்னியல் உலகிற்குள் தமிழ் என்னும் மொழி எப்படி வந்தது என்ற செய்தியைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

மின்னியல் உலகில் தமிழ் - 3

பல்பொருள் - ஒரு மொழி:

சரி, எழுத்து என்ற கருத்துத் தோன்றியாகி விட்டது. அடுத்த வளர்ச்சி என்ன? மொழிக்கும் எழுத்திற்கும் இடையே நடக்கும் இந்த முரணியக்கம் (dialectics), அடுத்து எந்தக் களத்திற்கு நம்மை இட்டுச் செல்லுகிறது? இதற்கான விடை கொஞ்சம் வியப்பானது, ஏனென்றால் மொழியை நிகராளுவதில் (to substitute) எழுத்து என்பது ஒரு கரு மிடையமாய் (core medium) ஆன பின்பு, அந்த எழுத்து எழுதும் முறை, எழுதப்படும் பொருள் இன்ன பிறவும் கூட, அடுத்து வரும் மொழி வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்குகின்றன.

மாந்தன் விலங்காண்டியாய் இருந்தபோது, மலைப் பரப்புகளும், மண்ணும், குகைச்சுவர்களும் தான் எழுதப்படும் பொருள்களாய் இருந்தன. இந்தப் பரப்புகளில் நார்க் குச்சிகள், மயிர்க் குச்சிகள், இறகுகள் ஆகியவற்றின் மூலம் அரத்தம், நிலத்திணைச் சாயம் ஆகியவற்றில் தோய்த்து விலங்காண்டி மாந்தன் எழுதி வந்தான். இன்னும் கொஞ்சம் போய் சுண்ணாம்பும் கூடப் பயன்பட்டிருக்கிறது. இப்படி எழுதியவற்றில், சில உடனே அழிந்து போயின; சில குறைந்த காலத்திற்கு இருந்த, சில நெடுங்காலத்திற்கு இருந்தன. கணிசமான காலத்திற்கு அழியாதிருந்த எழுத்துக்களைச் செய்ய, மாக்கல்லில் கூர்ங்குச்சி கொண்டு கீறுவதும், கருங்கல்லில் ஆணி, உளி கொண்டு வெட்டுவதும் என இந்தப் பழக்கம் விரிந்திருக்கிறது. கல்லில் கீறியதைக் கல்வெட்டு என்றும், (முழைக்)கீற்று என்றும், கீற்றம் என்றும் சொன்னார்கள் (inscription என்னும் ஆங்கிலச் சொல் கூட கீறுதலை உள்ளுறுத்திக் காட்டுகிறது). இன்னொரு வகையில் கீரப் பட்டது கீர்ந்தம்>கிரந்தம் என்றும் சொல்லப் பட்டது. அடுத்த வளர்ச்சியாய் மரப் பட்டைகளில் எழுதுவது, தோலில் எழுதுவது, ஓலைகளில் எழுதுவது, தாழை மடலில் எழுதுவது என களனும், காலமும் பல்வேறு எழுது பொருட்களையும், எழுது கருவிகளையும் நாவலந்தீவில் உருவாக்கி இருக்கின்றன.

இந்த வளர்ச்சியில் எழுத்துக்கள் என்பவை மாறாமலே இருப்பதாகவும், எழுது பொருட்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்ததாயும், நாம் கொள்ள முடியாது. மாந்த வரலாற்றில் எழுத்துக்களும், எழுது பொருட்களும் ஒன்றை ஒன்று பாதித்திருக்கின்றன. படங்கள் என்பவை முதலில் தொட்டுப் பார்த்து உணரக் கூடிய பூதியப் பொருள்களையே (physical objects) குறித்தன. பின்னால் இரண்டு மூன்று பூதியப் பொருட் படங்களை அருகருகில் வைத்துச் செயல்களையும் (processes), ஆற்றங்களையும் (actions) குறிக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் இந்தப் பூதியப் படங்கள் எளிமைப் படுத்தப் பட்டன; நாலைந்து கோடுகளிலேயே சிறு சிறு படங்களை உருவாக்கிக் கருத்தை வெளியிடத் தொடங்கினார்கள்.

அடுத்து ஒரே ஒலிச்சேர்க்கை கொண்ட இரண்டு மூன்று வெவ்வேறு கருத்துக்களை அவற்றின் இடம் பொருள் ஏவல் தெரிந்து ஒரே படத்தால் குறித்தார்கள். (காட்டாக, வேலின் படம் வேலன், வேளன் என்ற இருவரையும் இடம், பொருள், ஏவல் அறிந்து, அதற்குத் தக, குறிக்க முடிவதை, ஓர்ந்து பாருங்கள்.) இந்தப் பல்பொருள் ஒருமொழி உத்தியை ஆங்கிலத்தில் rebus என்று சொல்லுவார்கள்; ஏனென்றால் இந்தப் பல்பொருள்களிலும் ஏதேனும் ஒரு பொருள் படம் காட்ட வாய்ப்புள்ளதாக இருக்கும். இந்தப் பல்பொருள்-ஒருமொழி என்ற மாற்றத்தை, எழுத்து-மொழி என்ற இரட்டைக் கருவியின் வளர்ச்சியில் ஒரு பெரிய திருப்பு முனை என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். முதன் முறையாக படம் என்பது ஒரு பொருளை, கருத்தைக் குறித்தது போக, ஒலி என்பதற்கும் பகரமாக (substitute) நிற்கத் தொடங்கியது.

இந்தத் தொடக்கம் வியக்கத் தக்கது; புரட்சிகரமானது. குறைந்த அளவுள்ள, எளிய முறையில் வரையக் கூடிய (தமிழில் எழுதுதல் என்பது முதலில் படம் வரைதலையும், கல்லில் கீறுவதையுமே குறித்தது.) ஒரு சில படங்களை வைத்துக் கொண்டு மொழியில் உள்ள அனைத்து ஒலிகளையும் நிகராள முடிந்தது. அப்படி அடிப்படையாய் உணரப்பட்ட ஒலிகளை அசையொலிகள் என்பார்கள்; தமிழில் உயிர், மெய், உயிர்மெய் ஆகிய எல்லாமே அசையொலிகள். இன்னும் சிறப்பாகச் சொன்னால் அவை திறந்த அசையொலிகள். காட்டாகச் சொன்னால், ம, கா, தி, சே, போ, ழு, நூ, ணை என்பவை எல்லாம் திறந்த அசையொலிகள்;

இதற்கு மாறாக மெய்யோசையைக் கடைசியில் கொண்டிருந்த மூடிய அசையொலிகளும் இருந்தன. இவற்றை நேரசை என்று தமிழ் யாப்பிலக்கணம் சொல்லும். அக். மூச், மெஞ், என இதைப் பெருக்கி அடையாளம் காட்ட முடியும். திறந்த அசையொலிகளை மெய்யும், உயிருமாய் யாரும் பிரித்து ஒலிப்பதில்லை. உயிர் ஊடே வரும் போதுதான் மெய்களை எளிதாகப் பலுக்கமுடிகிறது. ஒரு தனியசைக்கு அப்புறம் மெய் வரும் பொழுதெல்லாம் ஏதோ பேச்சைச் சட்டென்று நிறுத்தியது போல, அதாவது புள்ளியது போலத் தோன்றுகிறது. (புள்ளுதல் = நிறுத்துதல்; புள்ளி = நிறுத்தம்; பொறித்தது = நிறுத்தியது = period) பேச்சின் தொடர்ச்சிக்கு திறந்த அசையொலிகள் இயல்பாக உதவி செய்தன. இந்தத் திறந்த அசையொலிகளை அசையெழுத்துக்கள் உணர்த்திக் காட்டின.

தமிழில் அசையெழுத்துக்கள்:

தமிழில் அசையெழுத்துக்கள் என்பவை கிட்டத்தட்ட கி.மு. 1000 க்கும் முந்தித் தொடங்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். (கி.மு.500/600 அளவில் தமிழகத்திலும், இலங்கை அநுராதபுரத்திலும் இருந்த தமிழி மற்றும் பெருமி எழுத்துக்கள் அண்மையில் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. இன்னும் ஒருவகை வறட்டுப் பிடிவாதத்தில் ஒரு சிலர் ஓஅசோகர் சாலையின் இருமருங்கும் மரங்கள் நட்டார். கல்வெட்டுப் பொறித்தார்....ஔ என்று பாராயணம் பண்ணிக் கொண்டு, எழுத்து தோன்றியதற்கும் சேர்த்து, வடநாட்டையே முதற் காரணமாய்க் காட்டிக் கொண்டு இருப்பதை நாம் இனிமேலும் பொருட் படுத்தத் தேவையில்லை. நாவலந் தீவிலேயே பழமையான எழுத்துக்கள் தெற்கே தான் கிடைத்திருக்கின்றன என்று மிக ஆணித் தரமாகச் சொல்லலாம். நாவலந் தீவின் எழுத்தறிவு வரலாற்றை திருத்தி எழுத வேண்டிய காலம் உறுதியாக வந்து விட்டது.) இந்த அசையெழுத்துக்களில் ஓர் அடிப்படை மெய் எழுத்தை வைத்துக் கொண்டு அதில் மேலும் கீழும், பக்க வாட்டிலுமாய் ஒரு கோட்டை இழுத்து மற்ற ஒலிகளைக் கொண்டு வந்தார்கள். இந்த வளர்ச்சிக்கு நம்முடைய எழுது பொருளான ஓலையும் ஒரு காரணமாய் இருந்தது.

படவெழுத்து இருந்த சீனத்திலோ தோலும், பட்டுச்சீலையும், எழுது பொருள்களாய் இருந்தன. அசையெழுத்து இருந்த நாவலந் தீவிலோ, (சமயமோ, வேறு என்னவோ தெரியவில்லை,) முழவுக்குத் தோலைப் பயன்படுத்திய மக்கள், அதை எழுதுவதற்குப் பயன் படுத்தாது விட்டார்கள். பட்டுத் துணியை அல்லது பட்டு நூலைச் சீனத்தில் இருந்து இறக்க வேண்டிய காரணத்தால், அது விரிந்த அளவில் எழுது பொருளாக நம்மூரில் பரவ வில்லை. அதே பொழுது, நம்மூர்ப் பொருளான, பருத்தியில் நெய்த துணியில் கூர்மையாய் எழுதுவது என்பது மிகச் சரவலான வேலையாய் இருந்தது. பருத்தித் துணியில், பஞ்சுக் குழம்பில் தோய்த்து எழுதினால், அது கூர்மையாக இல்லாமல், விரவிக் கசிந்து, பரவி, வண்ணம் துணியெங்கும் அப்பினாற் போல், ஆகி விடும். தவிரப் பருத்தித் துணியும், பஞ்சுக் குழம்பும் வேதியலின் படி, நீர் வினையில் கரைந்து போகக் கூடியவையாக இருந்தன. நீரில் கரையாத வண்ணங்கள், மற்றும் சாயங்கள் உருவாக்க நெடு நாள் சரவற் பட வேண்டியிருந்தது. இந்த நிலையில் பருத்தித் துணியில் எழுதியதை நெடுநாள் காப்பாற்ற முடியாது இருந்தது. இத்தனை ஏன், பருத்தித் துணியில் எழுதியது நம்மூரில் ஒரு மழைக்குத் தாங்காது. ஆக, நம்மூர் வெதணத்திற்கு (வெள்+தணம் என்ற சொல்லின் கூட்டு, வெக்கையும் தண்மையும் இடையாடும் நிலை - climate என்ற சொல்லிற்கு திரு அருளி பரிந்துரைத்த அருமையான சொல்.) பருத்தித் துணியில் எழுதுவது உதவ வில்லை.

இந்த நிலையில் தான் நீண்ட, அகலமில்லாத வெறும் பனையோலை நறுக்கு, நாவலந்தீவின் தெற்கே பயன்பட்டது. ஓலையில் எழுத்தாணியால் கூர்மையாய் எழுத முடிந்தது. ஒவ்வொரு முறையும் எழுதினால் ஒரு பனையோலை நறுக்கு, குறைந்தது 150 ண்டுகளுக்காவது அழியாமல் இருந்தது. மழையில் வெய்யிலில் அதைக் காப்பாற்ற முடிந்தது. எனவே எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எழுது பொருளாய் பனை ஓலை நறுக்கு ஆனது.

அன்புடன்,
இராம.கி.

மின்னியல் உலகில் தமிழ் - 2

மொழியும் எழுத்தும்:

எனக்குள் இருக்கும் விழும்பம் --> வாயொலிச் சேர்க்கை --> கேட்பொலிச் சேர்க்கை --> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

மேலே இருக்கும் நான்கு அலகுகளையும் ஒக்குவல அலகுகள் (ஒன்றோடு ஒன்று ஒக்கும் வலு உள்ள அலகுகள் - equivalent units) என்று சொல்லுகிறோம். இந்த அலகுகளில் எது பிறழ்ந்தாலும் நான் சொல்லுவது உங்களுக்குப் புரியாது. இந்த ஒக்குவலம் (equivalency) என்பது பேசுபவர் - கேட்பவர் இடையே முற்று முழுதுமாய் இருக்கத் தேவையில்லை; கிட்டத் தட்ட இருந்தால் கூடப் போதும். ஆனால் இந்த ஒக்குவலத்தில் ஏற்படும் பிறழ்ச்சி, கூடிவரக் கூடிவர, நான் சொல்லுவது உங்களுக்குப் புரியாமல் போகும்.

இதுவரை கருத்துப் பரிமாற்றத்தில் நானும் நீங்களும் அருகில் இருந்தால் தான், மேலே சொன்ன ஒக்குவல உறவுகள் (equivalent relations) ஏற்படும். ஒருவேளை, நானும் நீங்களும் கேட்கும் தொலைவில் இல்லாமலோ, அல்லது ஒரே பொழுதில் அமையாமலோ இருந்து, அந்த நிலையிலும் உங்களுக்கு ஒரு பொருளை அல்லது கருத்தைப் புரிய வைக்க வேண்டும் என்று நான் எண்ணினால், அதற்கு ஏந்தாக, இன்னொரு ஒக்குவல அலகை உள்ளே கொண்டுவந்து, இந்தச் சமன்பாட்டை நீட்ட முற்படுவேன். அப்படி நுழைக்கப் படும் புதிய ஒக்குவல அலகை, ஓர் இடைமுகம் (interface) என்று கூடச் சொல்லலாம். இந்த இடைமுகத்தால், மேலே காட்டிய சமன்பாடு முற்றிலும் புதிய வகையில் மாறுகிறது.

எனக்குள் இருக்கும் விழும்பம் --> வாயொலிச்சேர்க்கை --> எழுத்து --> கேட்பொலிச்சேர்க்கை --> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

இந்தச் சமன்பாட்டில் உள்ள எழுத்து என்னும் இடைமுகம், சீனம் போலப் பட எழுத்தாய் (pictograph) இருக்கலாம், தமிழைப் போல அசை எழுத்தாய் (syllabic writing) இருக்கலாம், அல்லது ஆங்கிலம் போல உரோமன் அகரவரிசை எழுத்தாய் (alphabet) நிற்கலாம். எல்லாமே உள்ளுருமம் (information) புலப்படுவதற்கு உதவி செய்யும் இடைமுகங்கள் தான். [உள்ளே உருமித்தலைத் தான் உள்ளுருமம் என்று சொல்லுகிறோம்; அதாவது நம் உள்ளுக்குள்ளே உருவைக் (form) கொண்டு வர வேண்டும்; விளையாட்டாய்ச் சொன்னால் படங் காட்ட வேண்டும். உள்ளுருமம் என்ற சொல் இந்தச் செயலை நன்கு விளக்கும். இனியும் தகவல் என்ற உருதுச் சொல்லால் information என்பதைச் சொல்ல வேண்டுமா?]

இதுவரை மேலே எடுத்துக் காட்டிய இரண்டு சமன்பாடுகளைக் கூர்ந்து கவனித்தால் முதற் சமன்பாட்டில் மொழி மட்டுமே இருக்கிறது, இரண்டாவதில் மொழியும் எழுத்தும் சேர்ந்து நிற்கின்றன, தவிர எழுத்து என்பது மொழிக்கு ஓர் இடைமுகமாய், துணையாய் வந்து நிற்கிறது, என்பதும் புரியும்.

படிப்புச் சமன்பாடு:

இப்படி உள்ளுருமச் சமன்பாடுகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு முகமையான கருத்தை இங்கு சொல்ல வேண்டும். எழுத்தும் மொழிகளும் ஒன்றோடு ஒன்றெனத் தொடர்பு கொண்டவை அல்ல. ஒன்றிற்குப் பல, பலவற்றிற்கு ஒன்று, என்ற உறவுகளை எளிதிற் காணலாம். குறிப்பிட்டுச் சொன்னால், ஒன்றிற்கு மேற் பட்ட மொழிகளை ஒரே எழுத்தால் இடைமுகத்திக் காட்டலாம். காட்டாக உரோமன் எழுத்து இன்றைக்கு ஆங்கிலத்திற்கும் இடைமுகமாய் இருக்கிறது; மலாய் மொழிக்கும் இடைமுகம் ஆகிறது. அதே போல ஒரே மொழிக்கு இரண்டுவகை எழுத்துக்களும் இடைமுகமாய் இருக்கலாம். காட்டாக மலாய் மொழியை அரபி எழுத்திலும் எழுதலாம்; உரோமன் எழுத்திலும் எழுதலாம்.

இனிப் பழக்கப் பட, பழக்கப் பட, வாயொலியோ, கேட்பொலியோ இல்லாமல், எழுத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, விழும்பம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாதா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு வரும் விடையும் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது. மேலே உள்ள சமன்பாட்டை இன்னொரு விதமாய்ச் சுருக்கிப் பார்க்கலாம்.

எனக்குள் இருக்கும் விழும்பம் --> எழுத்து --> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

இந்த உள்ளுருமச் சமன்பாட்டிற்குத் தான் இந்தக் காலத்தில் படிப்பு என்று பெயர் (இங்கே நான் என்பது ஆசிரியர். நீங்கள் என்பது மாணவர்). பலரும் இந்தப் படிப்புச் சமன்பாட்டைப் பார்த்தவுடன் ஒலி என்று இது நாள் வரை இருந்ததையோ, அல்லது இருப்பதையோ, மறந்து விடுகிறார்கள். ஏதோ, மொழி என்பது எழுத்துக்களால் ஆனது என்றும், ஒலி என்பது இரண்டாந்தரம் என்றும், இவர்கள் எண்ணத் தொடங்கி விடுகிறார்கள். இது முற்றிலும் தவறான புரிதல். தமிழுக்கு இலக்கணம் வரைந்த ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர் கூட எழுத்து என்ற சொல்லுக்கு ஒலியும் உருவமும் கொடுத்த பிறகு தான் மற்ற இலக்கணங்களை வரையறைக்கிறார். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், எங்குமே ஒலியில்லாமல் மொழியில்லை. படிப்புச் சமன்பாட்டில் பெரும்பாலும் ஒலி என்பது வெளியே தெரியாமல் மறைந்து தொக்கி நிற்கிறது. அவ்வளவு தான். [அந்தக் காலத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் எதையுமே சத்தமாக ஒலிக்க வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் ஒலிப் பழக்கத்தைக் குறைத்து வந்து எழுத்துத் தோற்றத்தைக் கொண்டு வந்து மாணவனை மனத்திற்குள் படிக்க வைப்பார்கள். (ஓஏய், மனசுக்குள்ளே படிச்சுக்கடா? அப்பத் தான் பதியும்ஔ என்ற பேச்சு அப்படித்தான் எழுந்தது.)] எழுத்தை மட்டுமே வைத்துக் கொண்டு கருத்துப் பரிமாறுவதாய் நாம் எண்ணிக் கொள்வது உண்மையில் வெறும் தோற்றம்.

(எங்கள் ஊரில் சிவன்கோயில் குடமுழுக்கு; நான்கு நாட்கள் ஊருக்குப் போவதால், உங்கள் பின்னூட்டுக்களுக்கு நான் மறுமொழி சொல்ல முடியாது போய்விடும். காரிக் கிழமை வந்துவிடுவேன். அதுவரை பொறுத்திருங்கள்.)

அன்புடன்,
இராம.கி.

மின்னியல் உலகில் தமிழ் - 1

மொழியின் முகிழ்ப்பு:

மொழி என்னும் சொல் வாயிதழோடு இதழ் சேர்த்து, மூக்கொலி இழைய, எழும் "ம்" என்ற ஓசைக் குறிப்பில் தோன்றியது. இம்மைப் போலவே "ல்" எனும் இன்னொரு ஓசையும் தமிழில் முகமையானது. இல்லின் எச்சம் இன்றும் கூட நம்மிடையே (குறிப்பாகத் தமிழகத் தென் மாவட்டங்களில்) இருக்கிறது. நாவை மேலும் கீழும் அசைத்து மேல் அண்ணத்தைத் தொடுவதால் எழும் குலவை ஒலிக்கு, இந்த "ல்" என்பதே அடிப்படை. சுற்றத்தார், ஊரார் என எல்லோரும் கூடிக் கலந்து ஓபொலிகஔ என்று வாழ்த்துக் கூறும் தருணங்களில், குதித்து எழும்பும். குலவையை இந்தக் காலத்தில் "லுலுலுலு" என்று எழுத்து வடிவில் குறிப்பிடுகிறோம். லாலாலாப் பாடுவதும் ஆரோராப் பாடுவதும் கூடக் குலவையொலியின் நீட்சி தான்.

அறப் பழங்காலத்தில் இருந்தே, இம்மும் இல்லும் அ,இ,உ என்ற உயிர்களோடு உயிர்தரித்து (உச்சரித்து) வருவதாகவும், உயிரோசையை நிறுத்துவதாகவும், தமிழில் உணரப் பட்டன. இந்த வழியிலேயே இம்மும், இல்லும் உயிரோடு கலந்த சேர்க்கையாய் முல் என்ற வேர் (எப்படி எழுந்தது என்று இன்று விளக்க முடியாத படி) உருவாகி, ஓசை என்னும் பொருட்பாட்டைக் (meaning) குறிக்கத் தொடங்கின. ஓசை என்றவுடன், "அது நமக்குப் புரிவதாய் இருக்க வேண்டியதில்லை, ஆனால் நமக்குக் கேட்க வேண்டும்" என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது கூட "என்னது, இவன் வாய்க்குள்ளே ஏதோ மொல்லுகிறான் (சில பேர் மெல்லுகிறான் என்று கூடச் சொல்லுவார்கள்), ஆனா நமக்கு விளங்கலையே" என்று சொல்கிறோம் இல்லையா? அந்த வாக்கின் பொருள் "சொல்பவனின் மொழி நமக்குப் புரியவில்லை" என்பதாகும். "மொலு மொலுவெனல்" என்பதை, இடை விடாது பேசுதல், தெளிவில்லாது பேசுதல் என்ற பொருட்பாடுகளில் அகர முதலிகள் பதிவாக்கி இருக்கின்றன. முல்>மொல்>மொலு>மொழு>மொழி என்ற வளர்ச்சியை தெளிவோடு பேசுதல் என்ற கருத்துக்கு இணையாக உணர்ந்து கொள்ள முடியும். மொழி என்ற சொல் மிக இயற்கையாக வாயொலிச் செய்கையைக் குறிக்க எழுந்தது.

முல் என்னும் வேரில் கிளர்ந்த சொற்கள் மிகப் பல. மூக்கோசை மிகுந்த ஒலிக் கலவையை, முக்குதல், முணங்குதல், முணுமுணுத்தல் என்ற சொற்களின் மூலமாய் முல் என்ற வேர் விரிக்கும். மொல்லுவது *மில்லுவதாக, மிழலுவதாக, மிழற்றுவதாக, மழற்றுவதாகத் திரிந்து இளங்குழந்தையின் மழலையைக் குறிக்கும். (மொழிக்கும் மழலைக்கும் உள்ள தொடர்பு இப்பொழுது புரிகிறதா?) அந்த முல் என்பதையே வாய் நிரம்ப வலுத்த ஓசையுடன் வெளியிடும் போது அது முழங்குவதாகவும், முழவுவதாகவும் சொல்லப் படும். மாந்த ஓசை மட்டுமல்லாமல், மொல் மொல் என்று மொத்தி வரும் ஓசையின் காரணமாய், ஒரு தோற் கருவி கூட முழவு என்றே சொல்லப் பட்டது.

மொழியின் உட்கிடக்கை:

இனி மொழி என்ற பொருளின் உட் கிடக்கையைச் சற்றே விரிவாகப் பார்ப்போம். மொழி என்பது மாந்தர் இருவருக்கிடையே நேரடியாக பரிமாறிக் கொள்ளும் ஒலிச் சேர்க்கைகளால் ஆனது என்று புரியும். ஆழமாகச் சொன்னால், சொல்ல விழையும் பொருட்பாடுகளை, நினைக்கும் கருத்துக்களை, இந்தச் சேர்க்கைகளின் வழியே ஒருவர் வாயால் வெளியிட, இன்னொருவர் அதைக் காதால் கேட்க, இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுகிறார்கள். இந்தப் பரிமாற்றத்தில் ஒரு புரிதல் கிடைக்க வேண்டுமானால், இருவருக்குமிடையே ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நடைமுறை (practice), ஒரு வழமை (tradition), ஒரு பின்புலம் (background) ஆகியவை இருக்க வேண்டும். நான் எந்தப் பொருளை, கருத்தைத் தெரிவிக்க ஒரு குறிப்பிட்ட வாயொலிச் சேர்க்கையை உருவாக்கினேனோ, அதே போல அந்தப் பொருளுக்கு, அந்தக் கருத்திற்கு நீங்களும் அதே போன்ற ஒரு கேட்பொலிச் சேர்க்கையை உருவாக்கி இருந்தால் தான் நான் சொல்லுவது உங்களுக்குப் புரியும். கேட்பொலிச் சேர்க்கையால் உங்கள் மூளையில் உருவாகும் விழும்பமும் (இந்தச் சொல் தான் பிம்பம் என்று வடமொழி உருவம் காட்டித் திரியும்), வாயொலிச் சேர்க்கையில் நான் எடுத்துக் கூறும் விழும்பமும் ஒன்றே போல் இருக்க வேண்டும்.

இந்த நடைமுறையும், வழமையும், பின்புலமும் ஓர் இனத்தின் நெடிய வரலாற்றால் ஏற்படுபவை. அப்படி ஒரு நடைமுறை, வழமை, பின்புறம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டவர்களை ஒரே மொழி பேசும் கூட்டத்தார், ஓரினம் எனச் சொல்லுகிறோம். எனவே மொழி என்பது ஆழ்ந்து பார்த்தால், இந்தக் காலத்தில் சிலர் விவரம் புரியாமல் சொல்லிக் கொள்வது போல, வெறும் மிடையம், பரிமாற்றம் மட்டும் அல்ல; இந்த ஒலிச் சேர்க்கை நம்முடைய நடைமுறை, வழமை, பின்புலம் ஆகியவை எல்லாம் பிசைந்த ஒரு கலவை. அதில் எது குறைந்தாலும் ஒருவர் சொல்லுவது இன்னொருவருக்குப் புரியாது. எங்கே எந்தப் பொழுதில் குலவை இடவேண்டும் என்பதும், எந்த இடத்தில் எந்த மாதிரிப் பேச வேண்டும் என்பதும், இன்னோரன்ன செயற்பாடுகள் எல்லாமும், ஒரு மொழியில் அடங்கியவை தான். மொழி என்பது வெறும் மிடையம் என்று சிலர் மேம் போக்காகச் சொல்லுவது சரியான கருத்தல்ல; ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் அந்தக் கருத்தின் பிழை நமக்குப் புரியும். இந்தப் புரிதலோடு இனி மொழி பற்றிய சமன்பாட்டைப் பார்ப்போம்:

அன்புடன்,
இராம.கி.

Saturday, May 20, 2006

கருவம்

அன்பிற்குரிய குமரன்,

உருப்படியான செயலைச் செய்கிறீர்கள். வேற்றுமொழிச் சொற்களுக்கு ஈடாகத் தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பது தேவையானது. கூடிய மட்டும் தமிழ்ச்சொல்லைப் பழகுவது நல்லது. தமிழ்ச் சொற்களைப் பழகச் சொல்லி உங்களைப் போன்றவர்கள் பரிந்துரைத்தால், அதற்குப் பிறமொழிச் சொற்களை வெறுத்து ஒதுக்குவது என்று பொருளில்லை. அப்படிச் சிலர் நினைத்தால் நினைத்துவிட்டுப் போகிறார்கள். கருமமே கண்ணாக இருங்கள்.

பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். நம்முடைய சொற் குவையை நாம் புழங்காது வைத்திருந்தால், நாளாவட்டத்தில் நாம் ஒருசிலவற்றை மறந்துதான் போவோம். (இதனால் தான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொன்னார்கள்.) நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு அளவை நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) அதே மேனியில் தொடர்ந்தால், அப்புறம் இன்று இருப்பதில் கிட்டத்தட்ட 15% தமிழ்ச் சொற்கள் பயன்படாது ஒழிந்தே போகும். அப்புறம் அந்தச் சொற்களுக்கு ஈடாய் இன்னொரு மொழிச் சொற்களை அன்றையத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்; முடிவில் மொழி என்பது மாறிப் போகும். இப்படித்தான் தமிழியக் கிளைமொழிகள் எல்லாம் இந்த ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் கொடுந்தமிழில் இருந்து மற்ற மொழிகளாய்க் கிளைத்தன. முடிவில், மகதம் வரை விரிந்திருந்த தென்மொழி, இன்று மாலவன் குன்றத்திற்கும் கீழே குறுகிப் போனது.

நம் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்ததை, 2000-3000 ஆண்டுகள் காப்பாற்றி வந்ததை, நாம் தொலைப்பது அவ்வளவு சரியாகத் தென்படவில்லை. நம் பெற்றோரின் கண்ணுக்கெதிரே தோட்டத் தொழிலாளராய்ப் போன தமிழர்கள் (அது போலத் தெலுங்கர்கள்) போன இடத்தில், ஓரளவு மக்கள் தொகை இருந்தும், தங்களின் அறியாமைப் போக்கால், தங்கள் மொழியைக் காப்பாற்றாது போனார்கள். விளைவு? தமிழும், தெலுங்கும் அந்த இடங்களில் தொலைந்து போயின. முத்தம்மா, முட்டம்மா ஆகி, தண்டபாணி தெண்டாபணி ஆகி, காளிச்சரண் கல்லிச்சரன் ஆகி, சரவணன் சர்வன் ஆகி மொத்தத்தில் தமிழ் அடையாளமே தொலைந்தது. தமிழனுக்குத் தமிழே முகவரி.

உங்களுக்குத் தெரியுமா? ஓலாவ் மொழியைத் தொலைத்த அமெரிக்கக் கருப்பர்கள் (ஓலாவ் மொழி மேற்கு ஆப்பிரிக்க மொழி. ஓலாவ் பேசும் பலர் கருப்பு அடிமையாக அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.) பெருமிதத்தையும் சேர்த்துத்தான் 400 ஆண்டுகளில் தொலைத்தார்கள். இன்றைக்கும் அவர்கள் முகத்தில் பெருமிதத்தைத் தேட வேண்டியிருக்கிறது. மாறாக, மொழியைக் காப்பாற்றியதால், சுரினாம், ஜமைக்கா, மொரிசியசு, பிஜி போன்ற இடங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தி இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது; இந்த இந்திக்காரர்கள் அரசியல், பொருளியல், கல்வி இன்ன பிற துறைகளில் அந்த இடங்களில் முன்னணியில் தான் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் பெருமிதம் (நீங்கள் சொல்லியிருந்த செருக்கு, கருவம்) இன்றும் இருப்பதைக் கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும்.

தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்? வரலாறு அறியாதவர்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.

இனி கருவம் என்ற உங்கள் சொல்லிற்கு வருகிறேன்.

கல் என்னும் வேரில் இருந்து எழுந்த இந்தச் சொல்லுக்கு எத்தனையோ பொருள்களில் (கருமை, கூட்டம், செறிவு, திண்மை, கனம், வெப்பம், கூர்மை, அசைவு எனப்) பலப் பலவாய்ச் சொற்கள் கிளைத்துள்ளன. அந்த விதத்தில், உயரம், பெருமை, பழைமை, செருக்கு, அகங்காரம் போன்ற பொருள்களும் கொண்ட கருவம் என்ற சொல்லும் தமிழ்தான். அது தமிழ் இலக்கியங்களில் அத்துணை புழக்கம் இல்லாத சொல். இருந்தாலும் அது தமிழில் தோன்றியிருப்பதற்கே வாய்ப்புக்கள் மிகுதி. தவிர, வடமொழி அகரமுதலியிலும் அவ்வளவு அகண்டு இல்லாமல் வெறும் ஒற்றைப் பொருளிலேயே அது பழகியுள்ளது. வடமொழியில் பாணினி, மோனியர் வில்லியம்சு ஆகியோர் சொல்லுவதற்கு இறுதியில் வருகிறேன்.

முதலில் தமிழ்ப் புழக்கத்தைப் பார்ப்போம்.

"அவர் சுத்தக் கருநாடகம் அப்பா! இந்தக் காலப் பாட்டெல்லாம் புடிக்காது" என்று சொல்லுகிறோமே? அது எதைக் குறிக்கிறது? சொல்லப் படுபவர் பழைமைப் போக்கு உள்ளவர் என்று குறிக்கிறது. "இந்தச் சரக்கு வெறுஞ்சரக்கு இல்லைங்க, கருஞ்சரக்கு" என்னும் போது கரு என்பது கருமை என்ற பொருளைக் குறிக்கவில்லை, "மேன்மையான சரக்கு" என்றே குறிக்கிறது.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக் குளத்தின் கரையில் மூன்று நிலையுள்ள மாடக் கோயில் ஒன்று உண்டு; மூன்று மாடங்களில் "நின்றான், இருந்தான், கிடந்தான்" என்னும் மூன்று தோற்றத்தில் திருமால் படிமங்கள் இருக்கின்றன. [அந்தக் காலத்தில்  அந்த மாடங்களில் மூன்று புத்த உருவங்கள் இருந்தன. காமாட்சி அம்மன் கோயிலே ஒரு புத்த இயக்கினி கோயில் தான். இன்று இவையெல்லாம் மாறிக் கிடக்கின்றன. தமிழர் வரலாறு தோண்டத் தோண்ட விதவிதமாக உருக்கொள்ளும். மயிலை சீனி வேங்கடசாமியாரின் "தமிழுக்கு வழங்கிய கொடை" என்ற பொத்தகத்தின் மூன்றாவது பகுதியை (வெளியிடுவோர்: எம்.வெற்றியரசி, மனை எண்: 9, கதவு எண் - 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை 600 088, தொலைபேசி: 22455954) பக்கம் 96-100 வரை படியுங்கள், விளங்கும்.] திருவிழாக் காலங்களில் குளக்கரை மாடக் கோயிலின் ஆக மேல்தளத்தில் இருந்து தாவிக் குதிப்பது ஒரு காட்சியாய் நடை பெற்றது. இதற்குக் கருமாடிப் பாய்ச்சல் என்று பெயர். மக்கள் வழக்கில் கருமாடிப் பாய்ச்சல் கருமாறிப் பாய்ச்சல் என்று சொல்லப் படும். காஞ்சிபுரத்தின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று. காளமேகப் புலவர் தனிப்பாடல் ஒன்று இதைக் குறிக்கும்.

"அப்பா குமரகோட்டக் கீரை செவிலிமேட்
டுப் பாகற்காய், பருத்திக் குளநீர் - செப்புவா
சற் காற்று, கம்பத் தடியில் தவம்,கருமா
றிப் பாய்ச்சல் யார்க்கும் இனிது."

கருமாடிப் பாய்ச்சலைக் கருமாறிப் பாய்ச்சல் என்று நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானமும் கூறுவதாய் மயிலையார் கூறுவார். கருமாடி பற்றி நான் அறிந்தது மயிலையார் மூலமே.

கருமாடி என்றால் உயந்த மாடி (topmost floor); மாடியிலே உயர்ந்தது கருமாடி; கருமாடக் கோயில் என்றால் உயர்ந்த மாடங்கள் கொண்ட மாளிகை என்று பொருள் உண்டு. (மாடம் உள்ளது தான் மாளிகை; மாள் என்பது சொல்லடி.) கருமாளிகை = உயர்ந்த கட்டடம். கருமை என்ற சொல்லுக்கே பெருமை என்ற பொருளை (excellence, greatness) திவாகர நிகண்டு (நூற்பா 1363) சொல்லும். கருடன் என்னும் பெயர் பெரிய பறவை என்ற பொருளில் கழுகுக்கு உள்ள பெயர். கருந் திடர் என்றால் பெரிய மேடு என்ற பொருள் உண்டு. கரு மாயம் என்றால் அதிக விலை என்று பொருள்.

இன்னும் இக் கருத்தை ஏற்க மறுத்தால், கருவிற்கு முந்திய சொல்வடிவிற்குப் போகலாம். குல்> குரு> கரு = உயரம். குரு என்பவர் நம்மிலும் அறிவில், பட்டறிவில், இன்னும் பலவற்றில், பெரியவர். நம் ஆசான். குருவம் என்பது ஆசானின் பண்பு, நிலை. குருவர்> குரவர் = ஆசான் நிலையில் உள்ள தலைவர்; தேவார மூவரும், மாணிக்க வாசகரும் சமயக் குரவர்கள். குரவரின் பெண்பாலாகிய குரத்தியர் என்பது பெண் சமணத் துறவிகளைக் குறிக்கும் சொல். குரவம் வடமொழியில் ஒலிப்பு மாறிக் கௌரவம் (= honour) என்று நிற்கும். குருசில்>குரிசில் என்று திரிந்து தலைவனைக் குறிக்க கம்பனில் பயிலும்.

கருவம் என்ற சொல்லிற்குச் செருக்கு, ஆணவம் (= haughtiness, arrogance, pride) என்ற பொருள்கள் உண்டு. அது கன்னடத்தில் க(g)ர்வ என்றும், தெலுங்கில் க(g)ர்வமு என்றும் சொல்லப் படும்.

கரு வலி = மிகுந்த வலி என்ற பொருளில் "கருவலி ......காளையை" என்று சீவக சிந்தாமணி 2269 ல் பயிலும். பருமைப் பொருளில் குரு என்ற சொல் "குரூஉக் களிற்றுக் குறும்புடைத்தலின்" என்று புறம் 97 இல் பயிலும். கனம் என்ற பொருளில், "பசுமட் குரூஉத் திரள்" என்று புறம்.32 ல் பயிலும். (ஆங்கிலத்தில் gravity என்ற சொல்லும் இந்தக் குருவித்த நிலையைக் - கனத்த நிலையைக் - குறிக்கும் சொல் தான். புறம் 32 இல்லாவிட்டால் இப்படி ஒரு பொருள் இருக்கிறது என்று கூட நாம் அறியாமற் போயிருப்போம். கூட்டப் பொருளில் குரல் (= கொத்து, கற்றை குரல் கூந்தல் கலித் தொகை. 72:20) என்பதும் குரவை என்பதும் (= chorus; குன்றக் குரவை -சிலப்பதிகாரம்) பயிலும்.

தலைக்கனம் என்ப்து கருவம் தானே? கருவம் பிடித்தவர் என்பதும் தலைக்கனம் பிடித்தவர் என்பதும் ஒரே ஆட்சிப் பொருள் தான். கரு என்ற சொல்லடி கூட்டம்> செறிவு> திண்மை> கனம் என்ற பொருள் வளர்ச்சியில் பெருமிதம், ஆணவம், செருக்கு என்ற பொருள் கொள்ளும். ஆண் என்பது ஆளுகின்ற தன்மை; ஆணவம் என்ற சொல் எழுந்தது அப்படித்தான். செருக்கு என்பதும் தலை என்பதை ஒட்டியது தான் (சென்னி = தலை; செல் என்பது வேர்.). பெருமிதம் = பெருமித்து இருத்தல். பெருமித்தல் என்பது முன்னிலையில் இருப்பது. பெருமித்து இருந்தவர்கள் பெருமானர் = பிராமணர். பெருமானர் தமிழ்ச் சொல்லே. பெருவுடையார் = ப்ரகதீசர்.

இவ்வளவு ஒப்புமைகளையும், பொருள் வளர்ச்சியும் மோனியர் வில்லியம்சோ, பாணினியின் அஷ்டாத்யாயியோ காட்டாது. தமிழ் இலக்கிய, இலக்கண, நடைமுறை வழக்குகள் அறியாமல் கருவத்தின் உட்பொருளை அறிய முடியாது. பாணினியின் தாது பாடத்தில் 2000 க்கும் மேற்பட்ட வேர்களைப் பாணினி காட்டுவார். அவற்றில் ஒன்று garv = to be proud என்று பட்டியலிடப் படும். அது எப்படி பெருமிதம் என்ற கருத்துமுதற் பொருள் (idealistic meaning) இந்தச் சொல்லிற்கு வந்தது? இயல்மொழியில் (natural language) ஐம்புலனால் உணரக்கூடிய பொருள்முதல் வாதப் பொருள் (materialistic meaning) அல்லவா முதலில் ஏற்படமுடியும் என்று நமக்குக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. சங்கத சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சில் garbe (=honour, glory) என்ற Lithuanian சொல்லையும், gelban, gelf என்ற old German சொற்களையும் இணையாகக் குறித்திருப்பார்கள். garva = pride என்ற பெயர்ச் சொல்லையும், garvaya = to make any one proud, garvaaya = to show pride என்ற துணை வினை சேர்த்த சொற்களையும், garvara = hautiness என்ற இன்னொரு பெயர்ச் சொல்லையும், garvita = proud of என்ற பெயரெச்சத்தையும், garvishta = extremely proud என்ற இன்னொரு பெயரையும் மட்டுமே மோனியர் வில்லியம்சு காட்டும். ஆக பாணினி, மோனியர் வில்லியம்சைப் பார்த்து, garv என்பதின் ஆணி வேர் என்ன என்று வடமொழியின் வழியாக நமக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழில் கூட்டப் பொருளில் இருந்து செறிவு, செறிவிலிருந்து திண்மை, திண்மையில் இருந்து கனம், கனத்தில் இருந்து பருமை, பருமையில் இருந்து எடை என்ற பொருள்முதற் சொற்களும், பிறகு எடையில் இருந்து வலிமை, அதே போலப் பருமையில் இருந்து பெருமை போன்ற கருத்துமுதற் சொற்களும் கிளைக்கும்.

தமிழ்ச் சொற்பிறப்புக்கள் எல்லாமே, ஐம்புலனால் உணரத்தக்க இயற் பொதுக்கை (natural bodies) களில் இருந்து உருவாகி பொருள்முதல் நிலையை வலியுறுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ச்சியடைந்த நிலையில் கருத்துமுதற் சொற்கள் உருவாகும். (எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பிய நூற்பா 640. - பெயரியல், சொல்லதிகாரம்.)

த. கருவம்>skt. garva என்பதில் அய்யப்பாடு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அறியக் காத்திருக்கிறேன். (ருகரப் பலுக்கம் சங்கதம் போகும் போது உகரம் தவிர்த்து மெய்யாகவே போவது இயற்கை. காட்டு. கருப்பம்>கர்ப்பம்; பூருவம் = பூர்வம்)

அன்புடன்,
இராம.கி.

Monday, May 15, 2006

தொங்கலும், பிறவும்

அண்மையில் நண்பர் ஒருவர் வேறொரு வலைப்பதிவில் suspense என்பதை எப்படித் தமிழில் சொல்லுவது என்று கேட்டிருந்தார். திகில் என்ற சொல் இதற்கு இணையாக வராது. அது terror என்பதற்குத்தான் இணையாக வரும். அப்படியானால், suspense என்பதை எப்படிச் சொல்வது?

"நம்மளைத் தொங்கல்லெ விட்டுட்டுப் பொயிட்டான் பார்த்தியா?" என்று வெகு எளிதாகத் தென் தமிழ்நாட்டில் இரண்டுங் கெட்டான் நிலையைப் பற்றிச் சொல்லுவார்கள். தொங்கல் என்பது மேலே உள்ள வளையத்திலோ, முளையிலோ, உத்தரத்திலோ, மரக்கிளையிலோ கட்டப்படும் தொங்கும் ஒரு துணித் தொட்டில் தான். இந்தத் தொங்கல் என்பதைத் தான் ஊஞ்சல், ஊசல் என்றும் சொல்லுகிறோம். தொங்கலின் ஊசலாட்ட நகர்ச்சியால், அது சாய்வது இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று இடங்கொள்ள முடியாதபடி அமைவதையும் கூட தொங்கலில் விடுதல் என்று சொல்லுவது உண்டு. இதே போல செவிமடற் துளையில் இருந்து தொங்குவதையும் தொங்கட்டான் என்றே சொல்லுவார்கள். தொங்கட்டான் என்பதும் இப்படித்தான் இரண்டு பக்கமும் மாறி மாறிப் போய்வந்து கொண்டே இருக்கும். தொங்கற் கதைகளும் (suspense stories) எப்படி முடியும் என்று சொல்ல முடியாத படி போய்க் கொண்டிருக்கும். நம்மைக் குந்தி இருக்க விடாது செய்யும். தொங்கற் புதினங்கள் (suspense novels) படைப்பதும் ஒரு கலை தான். ஆங்கிலத்திலும் suspense என்ற சொல்லுக்குத் தொங்கல் என்றுதான் பொருள்.

suspend

c.1290, "to bar or exclude temporarily from some function or privilege, to cause to cease for a time," from O.Fr. suspendre, from L. suspendere "to hang, stop," from sub "up from under" + pendere "cause to hang, weigh" (see pendant). The lit. sense of "to cause to hang by a support from above" is recorded from c.1440. Suspenders is attested from 1810, Amer.Eng. Suspended animation first recorded 1795.

அடுத்தது திகில். இது திக் என்னும் மொழியறியா ஒலிக்குறிப்பில் தொடங்கி, அச்சப் பொருளை உணர்த்தி, பின் திகு என்ற சொல்லடியில் இருந்து பிறக்கும். இப்படிப் பிறந்தவை திகை, திகில் போன்ற தமிழ்ச் சொற்கள். ஆங்கிலத்தில் வரும் terror என்பதும் கூட இப்படி டிக்/திக் போன்ற ஒரு ஒலிக்குறிப்புச் சொல் தான். இதைப் பயங்கரம் என்று நாம் சொல்ல முற்படுவது பயத்தை உருவாக்கும் செயல் என்பதால் ஆகும். ஆனால், பயங்கரம் என்று இப்படிச் சொல்லுவது மற்ற தொடர்பான சொற்களை இணைத்துச் சுருக்கமாய்க் கூறுவதற்கு வாய்ப்பாக அமையாது. மாறாக அவை நீண்டு ஒலிக்கும். என்னைக் கேட்டால் திகில் / திகை என்ற பெயர்ச்சொல்லோடு துணைவினைகளை வைத்துச் சொல்லுவது விதப்பாக இருக்கும். terrified = திகைந்து போன, திகிலுற்ற; terrorise = திகிலேற்று; திகையூட்டு; terrorist = திகிலேற்றி(யர்), திகையேற்றி(யர்); திகையேற்றம், திகிலேற்றம் = terrorism

மூன்றாவது சொல் sudden. நாம் இதைச் "சட்டென்று" எனச் சொல்லுகிறோம். இதுவும் ஒலிக்குறிப்புத் தான். இதே போலத் தட்டென்று விழுந்தது; டப்பென்ற ஓசை, விடுவிடு என்று நடுங்கினான் - நாம் பல்வேறு விதமாய் ஒலிக்குறிப்புச் சொல்லிக் கொண்டே போகலாம். தட்டென்று ஓசையில் பிறந்தது தான் தடுமாறிப் போதல் என்ற வினை. விடுவிடு என்பதில் எழுந்த வினைதான் விடைத்துக் கொள்ளுதல் என்ற வினை. விடுவிடு என்பது படபட என்றும் சொல்லப் படும். அதில் எழுந்த வினைச்சொல் படபடத்தல் = to tremble. horrer என்பது நம்மை படபடக்க வைக்கும் ஒரு நிகழ்வு. படபட(ப்பு)த் திரைப் படங்கள் = horror movies.

அடுத்து நான்காவது மருமம் என்ற சொல்.
மருள்>மிரள் = பயங் கொள்ளல்
மருள்+து = மருட்டு>மிரட்டு = பயம் உறுத்துதல்
மருள்+ந்+து = மருண்டு>மிரண்டு = பயங் கொள்ளல்
மருள்+மம் = மருமம் = பயந்தரும் செயல், இடம், சூழ்நிலை - இப்படிப் பலவற்றிற்கும் சொல்லலாம்.

ஐந்தாவது சொல் secret. இதைக் குமுக்கம்>கமுக்கம் என்றும், மறைந்து கிடப்பதால் ம(றை)ந்தணம்>மந்தணம் என்றும் சொல்லுகிறோம். ரகசியம் என்பது தமிழல்ல. (இது எங்கிருந்து வந்த திரிவு என்று நான் இன்னும் ஆயவில்லை. எனவே தவிர்க்கிறேன்.)

ஆறாவது சொல் detect
துள்+பு = துப்பு = துளைத்தல்
துப்பு அறிதல் = துளைத்து அறிதல் = detect
துள்>துழு>துழாவு = தேடு
துளைத்தெடு = detect

இன்னும் பல சொற்கள் fear, fright, dread, panic, alarm, dismay, consternation, trepidation என இருக்கின்றன. இன்னொரு முறை பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, May 14, 2006

அம்மணம் - 3

முன்னாற் சொன்னது போல் அடுத்தல் என்பது அருகிருத்தல் பொருளைக் காட்டும். உடம்பிற்கு அடுத்திருக்கும் பொருள் உடம்பை பூட்டுகிறது; மறைக்கிறது; சாத்துகிறது; அடைக்கிறது. அப்படி அடைத்தது ஆடை எனப் பட்டது. அது போல் அண்ணி (அடுத்து) இருப்பது அணம். அட்டி (அடுத்து) இருப்பது அட்டம். இவையும் ஆடைப்பொருள் கொள்ளும்.

அதேபோல் என்னொடு, உன்னொடு என்று வரும் சொற்களிலுள்ள  ஒடு என்ற இடைச்சொல்லும் உடு என்ற வேரில் கிளைத்ததே. உடு என்ற சொல்லில் இருந்து உடன் என்ற சொல்லும் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ள முடியும். மெய்யோடு உடுப்பது (சேர்த்து வைப்பது) உடை/உடுப்பு.

உடம்பு என்ற ஒன்றை மூடி நிற்பது உடை அல்லது ஆடை என்று வந்த பிறகு, சமய நிலையில் நான் என்பதை ஆன்மாவில் பொருத்தி, அந்த ஆன்மாவிற்கு மேற்பட்டதையும் உடு என்ற சொல்லடியில் இருந்தே உடல்/உடர்/உடன்/உடம்பு என்று சொல்லத் தொடங்குவது இயற்கை தான். ஆனால் இந்த உடல் என்ற சொல், நாகரிகம் பெரிதும் வளர்ந்து, மெய்யியல் ஏற்பட்ட பின்னால், அதாவது நெடுநாள் கழித்து ஏற்பட்டிருக்கக் கூடிய சொல்லாகும். தமிழில் உட(ல்)க்குதல் என்பதற்கு உள்ளீடின்றி இருத்தல் என்ற பொருளுமுண்டு. அதாவது உயிர் என்பது உள்ளீடு; உடல் என்பது அதைப் போர்த்தியிருப்பது.

இச்சிந்தனை மெய்யியற் காலத்தில் (கி.மு.800 - 500) ஏற்பட்ட பிறகு, ஆடையற்ற நிலை. நம்மாணம்>நிம்மாணம் என்றால், உடலற்ற வீடு பேற்று நிலையும், தருக்க நெறியின் படி நிம்மாணம் என்ற சொல்லிலேயே சுட்டப் படுவதை உணர முடியும். நிம்மாணம்> நிர்வாணம் = வீடு பேறு என்ற சொல் நிம்மாணம் என்ற ஆடையற்ற நிலையிலிருந்து பெற்ற பொருள் நீட்சியே ஆகும். முதற்பொருள் ஆடையற்ற நிலை; வழிப்பொருள் வீடுபேறு.

அது எப்படி அம்மணர் சம்மணர் என்ற பெயர் பெற்றார்? இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

யம்மணர்>ஸ்யம்மணர்>சம்மணர்>சமணர் என்று ஆனதா? அல்லது முன்னே என்னுடைய சமயம் கட்டுரையில் சொன்னது போல், சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் தானம் பண்ணித் தவம் இருந்ததால் சமணர் பெயரைப் பெற்றாரா என்று சொல்ல முடியாதுள்ளேன். நான் சொல்ல வந்தது இயலுமைகளை (possibility);  எப்படி நடந்தது, நடக்கவில்லை என்பதை இதுவரை நானறிந்த தரவுகளால் சொல்ல முடியவில்லை.

அம்மணர் என்பதற்கு இன்னுமோர் இயலுமை தமிழ்வழியே உள்ளது; அதைச் சங்ககால வழக்குகளில் இருந்தே காட்ட முடியும்.

மூடிக் கிடக்கும் மொட்டு விரியும் நிலை என்பது பூ மலர்தற்குச் சற்று முந்தியது; இதைத் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் அம்பல் என்பார். பாவாணரும், தன் வேர்ச்சொற் கட்டுரைகளில்,
---------------------
உம்-அம். அம்முதல் = பொருந்துதல், கூடுதல், குவிதல், அம்-அம்பு-அம்பல் = குவிந்த அரும்பு "அம்பலும், அலரும் களவு வெளிப்படுத்தலின்" (தொல்.1085) அம்பல்-ஆம்பல் = பகலிற் குவிவதாய்ச் சொல்லப்படும் நீர்ப்பூ. அம்பல்- அம்பலம் = கூடும் கூட்டம், அவை. அம்பரம் என்பது வானத்தைக் குறிக்கும். உம்பரம் என்பதன் திரிபு. அதுவுந் தமிழ்ச்சொல்லே
---------------------
என்பார். இதேசொல் காதலர் இருவரின் களவு நிலை வெளிப்படுவதற்கும் ஒப்புமை வகையில் பயன்படுத்தப் பட்டது. காட்டாக,

அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற (அகநா.70,6)
ஊரன் கேண்மை அம்பல் ஆகற்க என வேட்டேமே (ஐங் 9)

களவொழுக்கம் போன்றவை எல்லாம் மூடிக் கிடக்கும் வரை தான் கமுக்கம்.  ("அவளைப் பார்த்தியா, கமுக்கமாக் கிடக்கா? ஒரு செய்தி வெளியே வருதா? கல்லுழி மங்கி" என்ற பேச்சுவழக்கை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்வது புலப்படும். இப்படிக் கம்மிக் கிடப்பது, கமுங்கிக் கிடப்பது, கமுக்கம் எனப் பட்டது; அம்பலுக்கு நேர் எதிரான நிலை கமுக்கம்.) 

அம்பலின் நீட்சி அம்பலம்; எல்லோரும் பார்க்க, விரிந்து கிடக்கும் வெளியை அம்பலம் என்பார். இறைவன் கோயிலும் அம்பலம் தான். அரசன் இருப்பிடமும் அம்பலமே. உள்ளூரின் பொதியிலும் அம்பலமே. மலையாளத்தில் நாலம்பலம், சுற்றம்பலம் (தமிழர்தான் நற்றமிழை மறந்து பிரகாரம் என்பர் :-)) என்றெலாம் சொல்வார். அப்புறம், மூடிக்கிடப்பதை வெளிக்கொணர்வதை, பலரும் அறியச் செய்வதை, அம்பலப்படுத்தல் என்கிறோமே? அது இன்னுமொரு நீட்சி.

இனி, லகரமும் ரகரமும் தமிழில் போலிகள். கண்ணுக்கு மேலே வியல்ந்து (=விரிந்து) கிடக்கும் வெளியான ஆகாயத்திற்கும் ரகரம் திரிபுற்ற அம்பரம் என்ற சொல்லே புழங்கிற்று. அடுத்த நிலையில் இன்னும் ஒரு நீட்சி ஏற்படுகிறது.

வெளிப்படுதலும் மூடுதலும் இயங்கியல் பார்வையில் முரண் தொடைகளாய்த் தெரியும். வான் என்பது வெளி என்ற அளவில் அம்பரம் என்பர். அதேபொழுது மண் என்று பார்த்தால், வானம் மண்ணுக்கு ஆடை ஆகும். வான் எனும் அம்பரம் ஆடையாகவும் பொருள் கொள்ளும். திகைகளே (=திசைகளே) அம்பரமாகிப் போன செயினத் துறவி திக் அம்பரர் =திகம்பரர் என்று பாகதத்தில் சொல்லப் படுவார்; அப்புறம், அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை என்ற பொருள் நிலை பெற்று, வெள்ளை ஆடை அணிந்த துறவிகள் சுவேத அம்பரர் எனப் பட்டார். 

[சுவேதமும் தமிழ் வேரில் கிளைத்து பெரிதும் திரிவுற்றுப் பாகதத்திலும், சங்கதத்திலும் உருக் கொள்ளும். சுல்>சொல் = ஒளி, சொலிக்கிறது என்ற சொல்லை எண்ணிப் பாருங்கள். சுல்>சுல்லு = வெள்ளி; சுடராக ஒளியாக வெள்ளையாகத் தெரியும் மாழை சுல்லுவம் எனப்படும். சுல்>சுல்வம் = வெள்ளி (இதைத்தான் ஆங்கிலேயன் silver என்று சுருக்கச் சொல்கிறான்.) சுல்வம்> சுல்வதம்> சுவேதம் என்பது வெள்ளையைக் குறிக்கும் பாகதச் சொல். அது தமிழில் சுல்லுவம் என்றே ஒலிக்கும்.]

பல போதுகளில் லகரம் ணகரமாகத் திரிவதும் தமிழர் பலுக்கில் இயற்கை. உலர்த்துவதை உணத்துவது என்று புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாத புரம் மாவட்டத்தினரும், (கொங்கு நாட்டாரும் கூட) பலுக்குவார்; இதே போல பொட்டலம், பொட்டளம் ஆகி முடிவில் பொட்டணம் ஆகும்; சம்மளம்> சம்மணம் ஆகும்; கருமாளம்> கம்மாளம்> கம்மளம்> கம்பளம்> கம்பணம் ஆகும் (கருமாளர்> கம்மாளர்> கம்பளர் என்ற சாதிச் சொல்லையும் பாருங்கள்). இத் திரிவைப் புரிந்துகொண்டால், அம்பலம் அம்பணம் ஆகியும் பொருள் மாறாமல் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

அம்பணம் = அம்படலம் = மரக்கால்; அம்பண அளவை விரிந்து உறைபோகிய ஆர்பதம் (பதிற்றுப். 66,8); அம்பண அளவையார் எங்கணும் திரிதர (சிலப்.14, 209)
அம்படலம் = வெளி
உம்பரம்>அம்பரம் = வெளி
சம்பரம் = ஆடை
கம்பல் = ஆடை "தறைந்த தலையும் தன் கம்பலும்" கலித் 65:6 கரும்பலம்>கம்பலம்
கும்பலம்>கம்பலம் = கருமுடியால் ஆன ஆடை (கும்புதல் = தீய்ந்து போதல், வேதல், எரிதல், to become overburnt; charred; கும்பி = தீ; குமுதம் = அடுப்பு; கும், குய் = எரிதல் கருத்து வேர்; குமைதல் = சமைதல். இந்தச் சொற்களின் பிறப்பைப் புரிந்து கொண்டால், கம்பலம் = கரு முடியாலான ஆடை என்பது புலப்படும். இதை ஒட்டியே கேச கம்பலர் என்றோர் ஆசீவிகத் துறவிக்கும் பெயர் வந்தது. வெறுமே முடியால் ஆன கம்பலத்தைச் சுற்றிக் கொண்டவர் அவர். (ஆசீவிகம் பற்றிய கட்டுரை எழுதுவதாய் முன்னர் சொன்னேன். அது இன்னுஞ் செய்யாது கிடக்கிறது.)

அம்பணம் அம்மணமாய் மாறுவது மிக இயற்கை. தமிழில் வெவ்வேறு வட்டார வழக்குகளில் மெல்வல் இணை, மெல்லிணையாகவும், வல்லிணையாகவும் மாறி ஒலிக்கும். வந்து என்பது வந்நு என்று மெலிந்து ஒலிப்பதையும், செம்பு செப்பு என்று வலிந்து திரிவதையும் எடுத்துக் காட்டாய்ப் பாருங்கள்.

கட்டுரையை முடிக்குமுன் ஓரிரு தனித்த செய்திகளை இங்கு குறிக்கிறேன்.

கிரேக்க மொழியில் gumnos என்றால் அம்மணம் என்றாகும். இதைப் பற்றி என்னுடைய ”சமயம்” என்ற கட்டுரையில் குறித்திருக்கிறேன்.

கழுகு என்ற பறவையின் பெயர் அதன் காள் நிறத்தால் (கருப்பு நிறத்தால்) ஏற்பட்ட பெயரே. சாம்பு>சம்பு என்ற சொல்லும் கருமை நிறத்தையே குறிக்கும். சம்பாதி என்ற சொல் கழுகு அரசனைக் குறிக்கும் சொல். (இராமாயணத்தில் சம்பாதி பற்றிய செய்தி வரும்.) சாம்பர் என்பவர் காவிரியின் வடகரையில் இற்றைத் தென்னார்க்காடு மாவட்டம் முழுக்க வதிந்த மக்கள். இவரும் கருப்பரே. சாம்பர் சாம்புவர்> சம்புவர் என்றும் சொல்லப் படுவர். (சாம்பருக்குக் கழுகு குழு அடையாளமாய் இருந்திருக்கலாம்.) சம்புவரின் அரசர் சம்புவரையர். 

பொன்னியின் செல்வன் நெடுங்கதையின் தொடக்கம் சம்புவரையர் அரண்மனையில் தொடங்குமே நினைவிருக்கிறதா? சம்பரின் பதி சம்பா(ப)தி. இச்சொல் காவிரிப் பூம் பட்டினத்திற்கும், அதன் காவல் தெய்வத்திற்குமாய்ச் சிலம்பிலும், மணிமேகலையிலும் ஆளப்பட்டுள்ளது.

வேடிக்கையைப் பார்த்தீர்களா? காவிரி புகும் பட்டினமும் கருப்பரின் பட்டினம் (சம்பா பதி); அது மறைந்து சோழரின் துறைமுகம் ஆன நாக பட்டினமும் கருப்பர் பட்டினம் தான். (நாகருக்கு நாகம் = snake, ழு அடையாளமாய் இருந்திருக்கலாம்.)

மொத்தத்தில் கருப்பை அவ்வளவு எளிதில் தமிழர் தொலைத்து விட முடியாது.

அம்மணம், நக்கனம், நம்மணம்> நம்மாணம்> நிர்வாணம் எல்லாம் ஆடையிருந்தவர் ஆடை குறைந்து இருந்தவரைப் பார்த்து, அவர் கருப்பாய் இருந்ததாற் கூறிய சொற்கள். அவ்வளவு தான்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, May 13, 2006

அம்மணம் - 2

யா என்ற ஓரெழுத்தொரு மொழிக்குத் தமிழில் கருப்பு என்றே பொருளுண்டு. (இப்பகுதியில் வரும் சிந்தனைப் போக்கிற்கு முன்னாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகச் சொல்லறிஞர் ப.அருளிக்கு நான் கடன்பட்டவன்.) யா எனும் கருமைக் கருத்து வேரிலிருந்து பிறந்த சொற்கள் பலவாகும்; காட்டாக, யாடு, யானை, யாந்தை, யாறு, யாமன் என நிறையச் சொற்களைச் சொல்லலாம்.

யக்கன் என்ற இன்னொரு சொல்லும் அதே பொருளில் யா எனும் வேரில் கிளைத்தது. ”யக்கன்” வடமொழியில் ”யக்ஷன்” ஆவான். யக்கர்/யக்ஷர் என்பவர் அக்கால ஈழத்தின் பழங்குடிகள் என்று இந்தியத் தொன்மங்களும், இலங்கையின் மகா வம்சமும் கூறும். அவர்கள் ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலும் கூடப் பழங்குடிகள் தான். சமண சமயத்துப் பெண்பால் துறவியரைக் கூட இயக்கியர் (யக்ஷியர்) என்றே அழைத்தனர். இயக்கி>இசக்கி என்ற பெயருங்கூடத் தமிழரால் கரும்பொருளில் ஆளப்படும். பதினெட்டாம் படிக் கருப்பரைப் போல, இசக்கியம்மனும் கருப்புத் தான். 

(இயக்கி/இயக்கர் என்ற சொல்லுக்கு இயக்கக் கூடியவர் என்றெலாம் பொருள் சொல்வது கருத்துமுதல் பார்வையாகும். பொதுவாகப் பழைய நாட்டுப்புறப் பெயர்கள் இயற்கைப் பொருள், நிறம், பழக்கவழக்கம் பற்றியே இடப் படும். அவ்வகையில் இயக்கிப் பெயரைக் கருப்புப் பொருளிலேயே கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் கருப்பு என்று சொல்லப் பெரும்பாலான தமிழர் வெட்கப்பட வில்லை. பல தமிழர் பெயர்களின் உட்பொருள் கருப்பு என்றேயிருந்தது. ஆனால், இக்காலத்தில் "கருப்பாயி" என்றபெயரை எத்தனை தமிழ்ப் பெண்கள் வைத்துக் கொள்வார்? தமிழரில், ஆண், பெண் என 2 பாலரில் பலரும் இஷ், புஷ் என்றும், வடமொழிப் பெயரும், வட இந்தியப் பெயரும் அல்லவா தேடுகிறார்?) 

யக்கன் என்ற சொல் அருளியார் முறையில், ய>ஞ>ந என்ற திரிவில், நக்கன் என்று ஆகும். நக்கன் எனில் கருப்பனென்று பொருள் கொள்ளும். நக்கர் இருந்த இடம் (கருப்பர் இடம்; நக்கவரம்; இற்றை நிக்கோபார்). நக்கவரத்தில் குடி இருந்தவரை நக்க சாரணர் என்று மணிமேகலை குறிக்கும். நக்கர் என்று சொல்லுக்கு ஆடையற்றவர் என்ற பொருள், ஒரு வழிப்பொருளே ஆகும். அந்த வழிப் பொருளின் காரணத்தையே மேலே குறித்துள்ளேன்.

யக்கரின் தலைவனாய் குள்ளக் குபேரனை இந்தியத் தொன்மங்கள் குறிக்கும் [குவை = குகை; பள்ளம்; பள்ளத்தில் குவிந்து கிடக்கும் மணி, செல்வம். குவையின் அரன் குவையரன்> குபேரன். (அரன் = காப்பாற்றுபவன்) இங்கும் தமிழ் மூலம் தான் துணைக்கு வரும். இந்தியத் தொன்மங்கள் பலவிற்கும் தமிழே அடிப்படை.] குவையரனைச் செல்வந்தன் என்றது அக்கால ஈழத் தீவில் கிடைத்த மணிகளாலும் மாணிக்கத்தாலுமே ஆகும் (மணிபல்லவம் என்ற தீவின் பெயர் கூட மாணிக்கம் கிடைக்குமிடம் என்பதனால் ஏற்பட்டது தான்).

"இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் நயக்க நின்றவன்" - 5ம் திருமறை சித்தத் தொகை திருக்குறுந்தொகை, 25ம் பாட்டு

நக்கரென்ற பெயரைக் கொஞ்சம் நீட்டித்தான் நம் தமிழர் பிற்காலத்தில்  சொன்னார்.  (நாகரைப் பாம்போடு தொடர்புறுத்தியது வழிப்பொருளால் எனலாம்.) நாகருக்கும், தமிழருக்கும் இடையே நிறைய இன உறவுகள் ஏற்பட்டுள்ளன. (இற்றை நிலையில் ஈனியலால் - genetics - பெரிதும் கலந்து போன தமிழரையும் நாகரையும் பிரித்தறிவது சரவலான செயல். ஆனாலும் ஈனியல் முயன்று கொண்டிருக்கிறது. இதைப் பற்றி இங்கெழுதினால் சொல்ல வந்த செய்தி விலகிப் போகும் என்பதால் தவிர்க்கிறேன்.) 

இந்நாகரே இந்தியாவின் பழங்குடிகள் என இன்று அறியப்படுகிறார். இவர் பேசிய மொழிக்குடும்பம் இன்றைக்கு முண்டாமொழிக் குடும்பம் எனப் படுகிறது. தமிழ் மொழி முதலில் ஏற்பட்ட நிலையில், முண்டா மொழிக் குடும்பத்திற்கும், தமிழிய மொழிக் குடும்பத்திற்கும் ஏதோ தொடர்பு ஆழமாய் இருந்திருக்க வேண்டும். நாகரில் பலரும், தமிழ்பேசிப் புலமையும் பெற்று, சங்க காலத்தில் சிறப்புற்று இருந்துள்ளார். (காட்டாக, முரஞ்சியூர் முடிநாக அரையர் என்பாரை இங்கு சொல்லலாம்.) நாகரின் பெயரால் நாவலந்தீவில் பல ஊர்ப்பெயர்களும், இடப்பெயர்களும் உள்ளன. (காட்டாக, நாகர் கோயில், நாக(ர்) பட்டினம், நாகப்பூர், நாகநாடு போன்றவற்றைச் சொல்லலாம்.)

இதே நக்கர் பெயர்தான் வியப்பூட்டும் வகையில் பல்வேறு இந்தையிரோப்பிய மொழிகளில் negro, nigger எனத் தோற்றம் காட்டுகிறது. அதேபோல நக்கரின் தோற்றமே நக்கெட் (naked) என்று ஆடையற்ற நக்கு நிலையையும் காட்டுகிறது. இந்தையிரோப்பியக் குடும்பம் எனப்படும் வடமொழியிலும்  நக்கனம்> நக்(g)நம் என்றுசொல் நக்குத் தன்மையைக் காட்டும். தமிழிலும் நக்கனம், நக்கு என்பவை அம்மணத்தையே குறிக்கும்.

கீழேயுள்ள மற்ற சொல்தொகுதிகளையும் நோக்குங்கள்.

நக்கன் = அம்மணன், அருகன், சிவன்; ஆடையற்ற நிலையில், அல்லது வெறும் புலித்தோலை அரையில் கட்டிய சிவன் என்ற பொருளில், திருமந்திரத்தில் இச் சொற்றொடர் ஆளப்படும். "நக்கு அரையனை" என்ற தொடர் 5ம் திருமுறை, 22.திருக்குடமூக்கு, 5 வது பாட்டு. "குரக்குக் கா நக்கனை" என்ற தொடர் 5 ம் திருமுறை, 75, திருக்குரக்குக் கா, 4, 8 வது பாட்டுக்கள்

நக்கினம் = பெண்குறி; நக்கினிகை = அம்மணமாய் உள்ள பெண்; (அம்மன் கோயில் கருவறை வாசலில் இருக்கும் இயக்கினிகள் மேலே சிறு கச்சையோடு தான் உருவம் கொண்டிருப்பார்.)

ஆனாலும், நக்கர் என்றசொல்லின் தொடக்கம் தெரியவில்லை என்றே மேலைச் சொற்பிறப்பு அகரமுதலிகள் குறிக்கும்.

O.E. nacod "nude," also "not fully clothed," from P.Gmc. *nakwathaz (cf. O.Fris. nakad, M.Du. naket, Du. naakt, Ger. nackt, O.N. no..kkvidr, O.Swed. nakuder, Goth. naqads "naked"), from PIE base *neogw- "naked" (cf. Skt. nagna, Hittite nekumant-, L. nudus, Lith. nuogas, O.C.S. nagu-, O.Ir. nocht, Welsh noeth). Applied to qualities, actions, etc., from 16c. (originally in naked truth, 1585). Phrase naked as a jaybird (1943) was earlier naked as a robin (1879, in a Shropshire context); the earliest comparative was naked as a needle (1377).

மேற்கூறிய அத்தனை பொருள்களையும் தமிழ்வேர் வழி பொருத்திப் பார்த்தால் தான் உள்ளே ஓடும் ஒருங்குமை, கருப்பு என்ற பொருளில், நமக்குப் புரியும். உறுதியாக, மாந்தனின் தொடக்க நிலைக்கும், முல்லை நில வாழ்க்கைவரை ஏற்பட்ட வாழ்வு முறைகளுக்கும், தமிழுக்குமாய் ஏதோ ஒரு தொடர்புள்ளது; ஆனால் அது என்ன என்று முற்றுமுழுதாக விளங்கவில்லை.

இனிக் கருப்பைக் குறிக்க யா எனும் வேரில் யக்கன் என்ற சொல் பிறந்தது போல, யாவர் என்பதும் பிறக்க முடியும். யாவர்/யாவகர் என்பவரும் கருப்பரே. (இந்தொனேசியாவின் ஒரு தீவான யாவகத் தீவும் கருப்பர் தீவு என்ற பொருளிலே பெயரிடப் பட்டுள்ளது. இந்தொனேசியாவின் மற்ற தீவுகளின் பெயர்களை இன்னொரு இடுகையில் பார்க்கலாம்.)

யாவகர் என்பதன் திரிவான யாவகர்> ஸ்யாவகர்> சாவகர்> ஸ்ராவகர் என்பதையே இல்லறம் ஒழுகும் பொதுமக்களைக் குறிக்கச் செயின நெறி பயன்படுத்தும். செயின நெறி பொதுவாக பெண்மக்களை உயர்ந்த துறவி நிலைக்கு ஏற்றவராய்க் கொள்ளாது. அவரைத் துறவி நிலைக்கு அணுக்கத் தொண்டராய்த்தான் கருதும். அதனால் தான் மக்களின் பெயரான இயக்கரின் பெண்பாலான இயக்கியர் என்பதே பெண்துறவியருக்குப் பெயராய்க் கொள்ளும். யாவக நெறி / சாவக நோன்பு என்பதும் இல்லறம் கடைப்பிடிக்கும் மக்களின் நெறி என்ற பொருள் கொள்ளும்.

அடுத்து, யா எனும் வேரிலிருந்து வேறொரு ஈற்றில் அதே பொருளில் யாமன்> யமன் என்ற சொல் பிறக்க முடியும். யாமம் என்பதும் கருமைப் பொருளையே காட்டுகிறது. சூரியன் மறைந்து பிறகுள்ள நேரம் யாமம் என்றும், குறிப்பாக நள்ளிரவு நேரம் யாமம் என்றும் சொல்லப்படும். (அது வழக்கம் போல் திரிந்து சாமம்> ஜாமம் என்றும் பின்னால் வடமொழியில் பலுக்கப்படும்.) கருப்பு நிறத்தவனான, இறப்பைக் கொண்டு வருபவனாக கருதப்டும் கூற்றுவன், யமன் எனப்படுவான். கூற்றுவனைக் குறிக்கும் காலன் என்ற சொல்லும் கூடக் கருப்பன் என்றே பொருள் கொள்ளும். யமன் ஏறி வரும் விலங்கு கூட கருமை நிறத்து எருமையாகும். யமம் என்ற சொல்லுக்கும் காக்கை, காரி (=சனி) என்ற பொருள்களும் உண்டு. இவை எல்லாமே கருப்புத் தான்.

பொதுவாக யாமன்> யம்மன்> யமன் என்பவன் கருப்பானவனே! கருப்பர் வாழ்ந்ததிசை யாமத்திசை; அதனால்தான் தென் திசை யாம திசை> யமதிசை ஆயிற்று. யமன் எனும் கூற்றுவன் திசை தென் திசையாயிற்று. இறந்தவர் இருள் நிறைந்த உலகத்திற்கு போவதாகக் கொண்ட தொன்மமும், தென்புலத்தார் என்றே சொல்ல வைத்தது.

தென் திசையில் எழுந்த கடற்கோளால் பல இனத்தவர் தெற்கில் அழிந்திருக்கிறார். எனவே முன்னோர் எனப்படுவோர் தமிழர் மரபில் தென்புலத்தார் ஆனார். (பார்ப்பனர் முறையில் தர்ப்பணம் செய்பவர் தென்புலத்தாருக்குத் தான் எள்ளுப்பிண்டம் வைத்து வழிபாடு செய்கிறார்.)

[பார்ப்பனருள்ளும் பல தமிழ் வழக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதை அவரும் அறியாதுள்ளார்; மற்றோரும் அறியாதுள்ளா. அருத்தம் புரியாச் சண்டைகளில் பலவற்றை எல்லோருமே இழந்து கொண்டிருக்கிறோம். எதை எடுத்தாலும் அதற்கு வடமொழி அடிப்படை காட்டும் வழக்கத்தைத் தமிழரில் பலரும் எப்போது விடப்போகிறாரோ, தெரியாது. பெரும்பாலான செய்திகளின் அடிப்படை நம்மைப் பொருத்தவரை தமிழில் தான் உண்டு. பார்ப்பனரில் பல கோத்திரப் பெயர்கள் கூட முற்றிலும் தமிழே. காட்டகப் பெருகச் சனம்>ப்ருகச் சனம் (சிலர் இதை ப்ருகச் சரனம் என்றுகூடச் சொல்வார்) = பெருகிய கூட்டம், பெரிய கூட்டம் என்று பொருள். கூட்டப் பொருள் கொண்ட கணம் என்ற தமிழ்ப் பெயர் தான் சனம் என்று இக்காலத்தில் பலுக்கப் படுகிறது.]

மறுபடியும் மறுபடியும் ஏற்பட்ட தென்திசை அழிவைக் கண்டு (அது ஆழிப் பேரலைப் போன்றதாகலாம்; என்னவென்று சொல்லத் தெரியவில்லை.) அச்சம் உற்றே, தமிழர் தம் நடைமுறையில், இடுகாட்டில் தெற்கே தலையும் வடக்கே காலும் இருக்கும் படி, இறந்தர் முகத்தையும் சற்றே திருப்பி வடக்கு நோக்கி இருக்குமாறும் வைத்துப் புதைப்பார். யாமத்திசை அந்த அளவிற்குத் தமிழரை அச்சுறுத்தியுள்ளது.

மனையடி சாற்றங்களிலும் (சாற்றம்>சாத்தம்>சாத்ரம்) தென்மேற்கு திசையை யம திசை என்றே சொல்வார். தென்மேற்குப் பக்கத்தில் மனைவாயில் கூடாதென மனையடி சாற்றத்தில் சொல்வதற்கும் இந்த ஆயிரமாண்டு அழிவுகளைப் பற்றிய பயமே காரணமாகும். பொதுவாக வடக்கை மங்கல திசை என்பார்; துறக்கம் பெறும் திசை வடகிழக்கு நோக்கியே (குயிலை மலை = கயிலை மலை; குயில்ந்து>குவிந்து உயர்ந்து நிற்கும் மலை குயிலை மலை) என்பதால் தமிழர் வடக்கிருக்கும் நோன்பு கொண்டது இத் தொன்மங்களின் தொடர்ச்சியால் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உயிரை உடலிலிருந்து பிரிப்பவன் கூற்றுவன்; இவன் கரிய நிறம் உடையவன் (புற. 4:10-12) என்ற கருத்தை ஓர்ந்து பார்த்தால் சொல்லவரும் செய்தி புரியும்.

முன்சொன்னது போல யகரச் சொற்கள் யகரம்> ஞகரம்> நகரம் என்று திரிந்தது முதல்வகை என்றால், இன்னும் இருவகைத் திரிவுகளும் தமிழியற் சொற்களில் ஏற்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இரண்டாம் வகையில், யகரம் கெட்டு அகரமாகும் (அதாவது ய>அ);

மூன்றாம் வகையில் யகரத்தின் முன் ஸகரம் சேர்ந்து பின்னால் சகரமாக/ஜகரமாகத் திரித்தொலிக்கும்; (அதாவது ய>ஸ்ய>ச)

முதல் வகைத் திரிவில், யம்மன்>ஞம்மன்>நம்மன்>நம்மண்>நம்மணம் = அம்மணம் என்ற மாற்றமும், இரண்டாம் வகைத் திரிவில், யம்மன்> அம்மன்> அம்மண்> அம்மணம் (=யாமணம்) என்ற மாற்றமும் ஏற்படும்.

நக்கனம், அம்மணம், ஆகியவை தவிர நிர்வாணம், அற்றம் (இலக்கிய வழக்கு; ஒன்றும் இல்லாமல் அற்றுப் போவது அற்றம்.), முண்டம் (தலையிலாது மழுக்கையாவது என்ற பொருளில் தொடங்கிப் பின்னால் ஆடையிலாது போவதையும் குறித்த சொல்; முண்டிதம் = மொட்டை), மொட்டைக் கட்டை (முண்டம் போன்ற பொருளே இதற்குமுண்டு.) போன்றவை கூட ஆடையற்ற நிலையைத் தமிழில் குறிக்கும். தவிர, பிறந்த மேனி என்ற வழக்கும்  தென்பாண்டியில் உண்டு; "பொட்டுக்கு ஓர்ஆடையலாமல், பிறந்த மேனிக்குக் கிடக்கிறான், பாருங்கள்" என்பார்.

மேலே பேரா. தொ.பரமசிவன் கூறியது போல் "சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர், பிறந்தமேனியராய் இருப்பவர்), சுவேதம்பரர் (வெள்ளையாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக் குகைகளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர்கள் திகம்பரத் துறவிகளே. வெள்ளாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர்." இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில், குளிர் கூடிய வடபுலத்திலும், மணல் வாரியடிக்கும் அரச பூதனம் (இராஜஸ்தான்), கூர்ச்சரம் போன்ற இடங்களிலும் சுவேதம்பரரே மிகுதியாய் இருந்தார்; வெய்யில் மிகுந்து காய்ச்சும் தென்புலத்திலோ திகம்பரரே மிகுதியானார். மயிலை. சீனி. வேங்கடசாமியாருடைய "சமணமும் தமிழும்" பொத்தகத்தில் சொல்வது போல, "இப்போதும் தமிழ்நாட்டுச் சமணர் திகம்பர சமணரே". திகம்பர சமணருள்ளும் குருமார் மட்டுமே ஆடையிலாது இருப்பார் என்பதையும், சாவக நோன்பிகள் (இல்லற நோன்பிகள்) ஆடை அணிந்திருப்பார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். "ஏன் திகம்பர சமணம் தெற்கே பெரிதும் பரவியது?" என்பது ஆய்விற்கு உரிய கேள்வி.

இவ்வரிசையில், நிர்வாணம் என்பதைப் பார்ப்போம். இச் சொல்லுக்கு, ஆடையற்ற நிலை என்பது மட்டுமே பொருளல்ல; வீடுபேறு என்பதும் கூட அதன் பொருளாகும். ஆனால் அது வட புலத்தில் ஏற்பட்ட இரண்டாம் நிலைப் பொருள். [அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்முறை நெறியில், சங்க காலத்தின் இறுதி வரை, நாலாவது பொருள் அழுத்தமாகச் சொல்லப் பட வில்லை. இன்னும் கூர்ந்து சொன்னால், அறம், பொருள், இன்பம் என்ற வகையிற் கூட சங்ககால வாழ்க்கை முறை பார்க்கப் படவில்லை. இம் முன்று வகைப் பார்வையே, சங்கம் மருவிய காலத்தில் (அதாவது மெய்யியல் பார்வை தமிழ்நாட்டில் பெரிதும் பரவிய காலத்தில்) ஏற்பட்டது தான். சங்க காலத்தில் வாழ்க்கை என்பது அகம், புறம் என 2 வகைகளாகவே பகுக்கப் பட்டது.]

நிர்வாணம் என்ற சொல் பெருத்த வழக்குப் பெற்றது வேத மறுப்பு நெறிகளால் தான். இச் சொல்லின் ஒலிப்பைப் பார்த்தால், ஒரு சில பொதுக் கருத்துகளைக் கூறலாம். மகரவொலிச் சொற்கள் பலவும் வடக்கே போகப் போக வகரவொலி பெறுவது இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பழக்கம். மகரமும் வகரமும் தமிழிலும் கூட ஒன்றிற்கொன்று போலிகளே. அதே காரணத்தால் அவை ஒன்றிற்கொன்று மோனையாயும் அமையும். காட்டாக, விண்ணைக் குறிக்கும் மானம்> வானமாகும்; அவ்வகையில், நிர்வாணம் என்ற சொல்லின் முந்தைய நிலை நிர்மாணம் என்றூகிக்க முடியும்.

இன்னும் ஆழ்ந்துபார்த்தால், நிர்மாணம்/ நிர்வாணம் என்ற வீடுபேற்றுச் சிந்தனை வேத நெறியில் அவ்வளவு பெரிதாகச் சொல்லப் படுவதில்லை. நிர்மாணம் என்ற கருத்து வேதமறுப்பு நெறிகளில் இருப்பதாகும்.

வேதமறுப்பு நெறிகளின் மொழியான பாகதத்தில் "ர்ம" என்ற எழுத்துக் கூட்டு வருவதில்லை. அதில் "ம்ம" என்றே வரும். ம்ம>ர்ம போன்ற திரிவுகள் பாகதத்திற்கும் சங்கதத்திற்கும் இடையே பரக்கவும் உண்டு. சமணத்தின் மொழியான அறுத்த மாகதியும், புத்தத்தின் மொழியான பாலியும் பாகதத்தின் இரு வேறு பேச்சு வழக்குகள். இரண்டிலுமே  "ர்ம" என்ற ஒலிக்கூட்டு கிடையாது. எனவே நிர்மாணத்தின் முந்தைய நிலை வேதமறுப்பு நெறிகளின் தொடக்க காலத்தை வைத்துப் பார்த்தால், நிம்மாணம் என்பதாகவே இருக்க முடியும். நிர்வாணத்தின் சொற்பிறப்பு நம்மனம்> நம்மானம்> நிம்மானம்> நிர்மாணம்> நிர்வாணம் என்ற முறையிலேயே அமைய முடியும்.

அது எப்படி ஆடையற்ற நிலைக்கும் வீடு பேறுக்கும் ஒரே சொல் ஏற்பட்டது என்பது அடுத்த கேள்வி.

அன்புடன்,
இராம.கி.

Friday, May 12, 2006

அம்மணம் - 1

ஒருமுறை சமயம் எனும் என் தொடர் இடுகையில், பேரா. தொ.பரமசிவன் கூறுவதாக ஒரு மேற்கோளைக் காட்டி, அது பற்றிய என் முன்னிகையைத் தரச் சொல்லி, திரு. ஆறுமுகத் தமிழன் தன் பின்னூட்டில் கேட்டிருந்தார். அப்படிக் கேட்டதற்கான மறுமொழியை ஒரு தனிப் பதிவாக இடுகிறேன்.

முதலில் திரு. ஆறுமுகத்தமிழன் எடுத்துக் காட்டிய பேரா. தொ.பரமசிவனின் கூற்று:
---------------------------------------------------
நிர்வாணம் என்பது வடசொல்லாகும். அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக அம்மணம் என்பது வழங்கப்படுகின்றது. அம்மணம் என்ற சொல் அந்தப் பொருளில் தமிழிலக்கியத்தில் எங்கும் காணப்படவில்லை. 'அம்மணம் பட்டிலா வையெயிற்று ஐயையைக் கண்டாயோ தோழி' எனும் சிலப்பதிகாரம் (வரந்தருகாதை) இந்தச் சொல்லை எடுத்தாளக் காண்கிறோம். இச் சொல் 'குறைவு' என்ற பொருளில் மட்டுமே அக்காலத்தில் வழங்கியுள்ளது. 'ஆடை இன்றி' என்ற பொருளில் மக்கள் வழக்கில் மட்டும்தான் காணப் படுகிறது, இலக்கியங்களில் காணப்படவில்லை.

குறைந்தது கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமண மதம் நுழைந்து செல்வாக்குப் பெற்றுவிட்டதென்று சங்க இலக்கியம் காட்டுகின்றது. ஆனாலும் தமிழிலக்கியப் பரப்பில் சைவ, வைணவ இலக்கியங்களிலேயே ஜைனரைக் குறிக்கச் சமணர், அமணர் ஆகிய சொற்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. சமண மதம் துறவினைப் பெருமைப் படுத்திய மதமாகும். சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர், பிறந்த மேனியராய் இருப்பவர்), சுவேதம்பரர் (வெள்ளாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக் குகைகளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர் திகம்பரத் துறவிகளே. வெள்ளையாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர். அம்மணம் என வழங்கும் சொல் ஆடையிலா அமணர்களைக் குறிக்கப் புதிதாகத் தோன்றுகிறது.

நிர்வாணம் என்ற செயலையும் கோட்பாட்டையும் தமிழ்ச் சமூகம் தனது வரலாற்றில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்திருக்கிறது...'' (தொ. பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு வெளியீடு, பக். 93-94).
------------------------------------------------
இனி இராம.கி.யின் மறுமொழி.

" 'ஆடையின்றி' என்ற பொருள் மக்கள் வழக்கில் மட்டும்தான் காணப்படுகிறது, இலக்கியங்களில் இல்லை" என்று பேராசிரியர் சொல்வது சரியில்லை. தேவாரத்திலும் நாலாயிரப் பனுவலிலும் பயிலும் அம்மணம் என்ற சொல்லில்  ”ஆடையின்றி” என்ற பொருளும் உள்ளே தொக்கி நிற்கிறது. காட்டாக, தேவாரம் 6 ஆம் திருமுறையில், திருஅதிகை வீரட்டாணம் 7வது பாட்டில் (6.3.7), "குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி உண்டி உகந்து அமணே நின்றார்" என்றோர் அடி வரும். இங்கே, "நாணமின்றி" என்று சொல்லிப் பின் "அமணே நின்றார்" என்பதால், ஆடையிலா நிலையையே அப்பர் குறிக்கிறார் என்பது புலப்படும். அதேபோல, "நீ உடனே இருக்கவே, நான் இவ்வமணக் கூத்தெலாம் அடித்தேன்" என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாட்டுக்கு எழுந்த உரையிலும் (தொண்டரடி. திருமாலை 34 வியாக்.ப. 384) ஆடையிலாக் கருத்து சொல்லப் படும். 5ம் திருமுறை, திருப்பூவனூர், 9ம் பாட்டிலும் "ஏவம் ஏது இலா அமண் ஏதலர்" என்ற அடியில் ஆடையிலா நிலை ”அமணி”ற்கு இணையாகத் தான் கூறப்படுகிறது. தேவாரம் எங்கணும், குறிப்பாகச் சம்பந்தர் , திருநாவுக்கரசர் திருமுறைகளில் இப் பொருள் பரக்கவும் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அக்காலச் செயினத் துறவியர் அம்மணராகவே இருந்திருக்க வேண்டும். [தமிழ்நாட்டில் திகம்பர செயினமே ஓங்கி இருந்தது. வெள்ளாடை(சுவேதாம்பர)ச் செயினமோ, உருவிலாத் தொழுகை பழகும் செயினமோ அவ்வளவு பரவவில்லை.] அதனால், ”ஆடை யற்ற” என்ற பொருள், அமணர் என்ற சொல்லின் உள்ளூற இருந்தே வந்தது புலனாகும். இதுபோக சீவக சிந்தாமணி பற்றி எழுந்த ஓர் அம்மானை நூலில் (ப.80) இருந்தும் "அரையில் கலையுடுக்காள் அம்மணமுமாய் இருப்பாள்" என்ற மேற்கோளை பாவாணர் தம் நூலில் எடுத்துக் காட்டுவார்.

அம்மணம் என்பதற்கு "ஆடையின்றி" என்ற பொருள் ஆகிவரக் கூடுவதை 3 வழியில் நாம் காட்ட முடியும். இவற்றில் எது முதலில் தொடங்கியிருக்கும் என்பதை ஓரளவு சொல்ல முடியுமெனினும், முடிந்த முடிபாக ஒன்றைக் கூற முடியாதுள்ளது. ஒவ்வொரு வழியையும் அடுத்தடுத்துக் கீழே பார்ப்போம். கூடவே கி.பி.650க்கு முன்னால், அதாவது பத்தி (இறைவன் அடிகளைப் பற்றுவது பற்றி>பத்தி>பக்தி; தமிழ்த் தோற்றம் தெரியாமலே கிடக்கும் இன்னொரு சொல்.) இலக்கியங்களுக்கும் முன்னே, ஆடையற்ற நிலை பற்றிச் சொல்லுதற்குப் பழகி வந்த சொல்லான நக்கர்/நக்கம், நிர்வாணம் என்ற சொற்களையும், இங்கே அலசிப் பார்ப்போம்.

நாகரிகம் அறியாத விலங்காண்டி காலத்தில், ஆடையற்ற நிலைக்கு, ஒரு தனிப்பெயரை மாந்தன் வைத்திருப்பானா என ஓர்ந்து பார்த்தால், அது அரிது என்றே புலப்படும். ஆடை கொண்டவர் நடுவில் தான், ஆடையிலா நிலை வெட்கப்படத் தக்கதாயும், அதைச் சொல்ல ஒரு பெயர் வேண்டியதாகவும் அமையும். ("அம்மணாண்டிகள் மத்தியில் கோவணாண்டி பைத்தியக்காரன்" என்ற சொலவடையைத் தலைகீழாகப் பொருத்திப் பாருங்கள்; உண்மை புலரும்.)

ஆடை என்பதே, மாந்தனின் சூழமை(environment)வில் ஏற்படும் மாறுதலில், குறிப்பாகப் பெருங்குளிர்க் காலத்தில், உடம்பின் சூட்டைத் தக்க வைத்துக் கொள்ளுதற்காய், விலங்குகளின் தோல், மரத்தழை, உரிகள், இப்படி ஏதோ ஒன்றை, உடம்பில் போட்டுக் கொண்டு, மூடிக் கிடப்பதாய் இருந்திருக்க வேண்டும். (பெருங்குளிர்ச் சூழமைவில் வாழ்ந்தவர் பஞ்சாடைத் துணி போட்டதாக வரலாறில்லை.)

ஏதோ ஒரு காலத்தில் சூழமைவு கருதியும், விலங்குகளிடம் இருந்து தம்மைப் பாதுகாக்கவும் கருதியே, ஆடைத்தேவை மாந்தருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக, குளிர் நாடுகளிலும், மணற்காற்று பெருவாரியாய் அடிக்கும் பாலை நாடுகளிலும், மாந்தர்களின் உடம்பெல்லாம் மூடி இருத்தலையும், மணலை வாரி அடிக்காத வெப்ப நாடுகளில் ஆடை குறைந்து, உடம்பின் மேற்பகுதியில் எதையுமே போர்த்தாது இருப்பதையும் காணலாம்.  ஆடை என்பது குளிர் நாடுகளிலும், மணல்வாரி நாடுகளிலுமே முகன்மை பெற்றது. 

பொதுவாக, குளிர் நாடுகளிலும், மணல்வாரி நாடுகளிலும் காற்றில் ஈரப்பதம் (humidity) குறைந்தேயுள்ளது; உடல்முழுக்கத் துணியைச் சுற்றியிருந்தாலும் அந்நாடுகளில் மாந்த உடம்பில் வேர்வை பெருக்கெடுக்காது. மாறாக, ஈரப் பதம் கூடிய நாடுகளில், அளவுக்கு மீறித் துணியை உடலிற் சுற்றிக் கொண்டால், வேர்த்து விறு விறுத்துப் போகும். ஈரப்பதம் கூடிய நாடுகளில், ஆண்டின் மிகுதியான காலங்களில் (9,10 மாதங்களுக்கு), மீக்குறைந்த ஆடைகளையே, அதுவும் இடைக்குக் கீழ் மட்டுமே, மக்கள் அணிகிறார்.

13ம் நூற்றாண்டில் கொற்கை, காயல் ஆகிய துறைகளின் பக்கம் வந்து, தென்பாண்டி நாட்டு முத்துக் குளிப்பைப் பார்த்த மார்க்கோ போலோ சொல்கிறான்: 

இடுப்புக்குக் கீழே ஒரு குறுக்குத் தார்ப்பாய்ச்சாய் வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டு, இடுப்பிற்கு மேல் நகைகளைத் தவிர ஒரு பொட்டுத் துணியும்அணியாது,  அரசன் சுந்தர பாண்டியன் காட்சியளித்தானாம்; பெண்களும் கூட அக்காலத்தில் தம் மார்பைச் சிறிதளவே சிறு கச்சை கொண்டு மூடியவராய் இருந்தாராம் (ஒரு நூற்றாண்டுக்கு முன் வரை, சான்றார் குலப் பெண்மக்களை மேற்சட்டை போடவிடாது, சாதிக் குமுகாயம் தென்கேரளத்தில் கொடுமைப் படுத்தியுள்ளது. பெண்களின் மேற்சட்டையைக் குறிக்கக் கூடச் சரியான சொல் நம்மிடம் பல காலம் இல்லாதிருந்தது.); எல்லாம் சூழமைவு படுத்திய பாடு தான். (கூடவே வெள்ளையன் உணராத, ஆனால் நம்மூரில் இருந்த, சாதிக் கொடுமை.)

இதுபோன்ற நிலையில், சூழமைவு கருதி குறைந்த ஆடை அணிந்தவராய், இருந்திருக்கக் கூடியவராய் பழைய ஆப்பிரிக்க மாந்தரும் இருந்திருப்பர். இப்படி மேனி திறந்துகிடந்த பலரும், குறிப்பாக ஆப்பிரிக்கரும், பழந்தமிழரும், கருப்பாகவே இருந்தனர். (இற்றைத் தமிழரிலும் மிகப் பெரும்பாலோர் கருப்பரே என்று நம்மில் ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கிடப்பவர் பலர்.) 

மேனி திறந்து கிடந்தவர் கருப்பானதற்கு ஒரு வேதியியல் காரணமுண்டு. வெய்யில் கூடக்கூட, தோலின் மேற்கிடக்கும் மெலனின் என்ற வேதிப் பொருள் தோலின் நீர்மப் பொருளில் கரைந்து போகாது, படிகத் துகள்களாய் திரைந்து போகிறது (திரைப்படுதல்>திரப்படுதல் = precipitation; திரப்பாடு = precipitate(n)). மெலனின் எனும் வேதிப்பொருள் திரையத் திரைய தோல் கருக்கும்; அது நீர்மத்தில் கரையக் கரையத் தோல் வெளுக்கும். ஆக நிறம் என்பது வெறுமே மெலனினுக்கு, தோலிலுள்ள கரைமையைப் (கரைமை = solubility; கரைவி = solute; கரைமம் = solvent) பொறுத்தது. இவ்வேதி வினையை ஊக்கப்படுத்தும் வினையூக்கி (catalyst) ஈரப்பதமும், சூரிய கதிரியக்கமும் (solar radiation) ஆகும். இவ் வேதிவினையால், உடலைச்சுற்றித் துணி போர்த்தியவரின் கொடிவழி பெரிதாகப் பெரிதாக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில், அவர் இருந்த சூழமைவு காரணமாய், வடக்கே போகப் போக மாந்தரில் ஒரு சில இனத்தார் வெளுப்பாக மாறினர்; மொத்தத்தில், வெளுப்பும் ஆடையும் ஒன்றிற்கொன்று தொடர்பு ஆனவை (ஒரு நாணயத்தின் இருபக்கம் போன்றவை).

நாளாவட்டத்தில், சூழமைவுகள் மாறிவர, மாந்தர் குறிஞ்சி வாழ்க்கையில் இருந்து கீழிறங்கிவந்து முல்லை வாழ்க்கையில் நகரத் தொடங்க, வெம்மை நிலக் கருப்பரும், குளிர் நில வெள்ளையரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. உடம்பைப் போர்த்திய வெள்ளையர், உடம்பைப் போர்த்தாத கருப்பரைப் பார்த்து ஏளனம் செய்வதும், அதன் விளைவால் போர்த்தாதவர் வெட்கப்படுவதும் பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும். வெட்க உணர்வு, மாந்தக் குழுக்களின் உறுப்பினர் தொகை பெருகிய பின், வெவ்வேறு நிறங்கொண்ட குழுக்கள் சந்திக்கத் தொடங்கிய போது (ஓரளவு மொழி ஏற்பட்டிருந்த நிலையில்) தான் ஏற்பட முடியும்.

இச் சந்திப்பில், மாந்தரின் பேச்சு வழக்கில், ஆடை தோன்றிய காலத்தில், ஆடையுள்ள நிலைக்கு ஒரு சிந்தனையும் சொல்லும் ஏற்பட்டிருக்குமானால், ஆடையற்ற நிலைக்கும் ஒரு சொல்லும் ஏற்பட்டிருக்க வேண்டுமே என்ற கேள்வி நம்முள் எழும். அப்படி ஒரு சொல் ஏற்பட்டுத்தான் உள்ளது; ஆனால் அது நிறத்தை ஒட்டி ஏற்பட்டிருக்கிறது. 2  வெவ்வேறு குழுக்களும் ஒருவரை ஒருவர் இடையாடும் நிலை ஏற்பட்டுவிட்ட காரணத்தால், அப் பழைய நெடிய காலத்தில், உடம்பைப் போர்த்திய வெளுத்தவர், உடம்பைப் போர்த்தாத நிலையைக் "கருப்பர் நிலை" என்றே சொல்லத் தொடங்கினார். இது எப்படி என்றறிய சில இந்தையிரோப்பியச் சொற்களையும், தமிழியச் சொற்களையும் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, May 03, 2006

தேர்தல் - 2006 : திருப்பு முனையாய் அமையுமா?

இன்னும் ஓர் ஐந்து நாட்கள் தான். ஊரெங்கும் கட்சிகளின் பரத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. (பரல்தல்>பரலுதல் = பேசுதல்; பர>பரையுதல் என்ற திரிவில் இன்னும் மலையாள மற்றும் ஈழ வழக்கில் இருக்கிறது. பரலுதல் என்பது பொதுவாகப் பலரும் அறியப் பரத்திச் சொல்லுவது. ஒருவருக்கு ஒருவர் சொல்லுவது அல்ல. பரல்த்தம்>பரல்த்தாரம்>பரத்தாரம்>பரச்சாரம் ஆகி அது வடமொழிப் பலுக்கில் ப்ரச்சாரம்>பிரச்சாரம் ஆகியிருக்கிறது) வாய்கிழியச் சத்தமாகப் பேசுவதும், அந்தச் சத்தத்தை இயல்பாகக் கொள்வதும், கேட்பதும் தமிழனுக்கே உரிய வழக்கம் தான். ஏதொன்றையும் மெதுவாகச் சொன்னால், தமிழர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; "தம் குரலுக்குத் தாமே மயங்குபவர் தமிழர்" என்று கூட ஒரு சிலர் வேடிக்கையாகச் சொல்லுவது உண்டு.

இதற்கு இடையில், இரண்டு பக்கத்திலும் ஆட்கள் இடம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகள், முன்னணிகள், ஊர்வலங்கள், பேரணிகள், ஒலிபெருக்கிகள், பாட்டுக்கள், வசவுகள், வாக்குறுதிகள், தடந்தகைகள் (strategies), தந்திரங்கள் (tactics), சூழ்ச்சிகள், ஏமாற்றுக்கள், நடிப்புக்கள் என எல்லாமே மக்கள் முன்னால் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மக்களாட்சி என்பது ஒருவகையில் கூத்துப் போலத் தான் இருக்கிறது. ஆனாலும் அது ஒரு சுகமான கூத்தோ, என்னவோ? யார் யாரோடு கூட்டுச் சேர்ந்திருக்கலாம், யார் தேருவார், யார் தேரமாட்டார், யார் தெரிவித்த தேர்தலறிக்கை நம்மைக் கவருகிறது, யாரார் எத்தனை கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்கள், இலவயங்களை வீசியெறிவது எந்தப் பக்கம் கூடுதலாய் நடக்கிறது (நாளைக்கு எப்படி இந்த இலவயங்களைச் சரிக்கட்டுவார்கள் என்பது இன்னொரு கதை) என்ற அலசல்களும், உரையாடல்களும் நடக்கின்றன. இங்கு வலைப்பதிவுத் தளத்திலும் இவை எதிரொலிக்கின்றன.

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணித்துச் சொல்லுவதைக் காட்டிலும், நாடு விடுதலை பெற்ற பின், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நடந்திருக்கும் சில முகன்மையான (முகன்மை = main) நடப்புக்களை, திருப்பு முனைகளை, நினைவுக்குக் கொண்டு வந்து, இன்றையத் தேர்தல் என்ன வகையில் இன்னொரு திருப்புமுனையாய் ஆகமுடியும் என்ற எண்ணத்திலே இந்தப் பதிவை இடுகிறேன்.

1. 1930 களில் சென்னை மாகாணத்தில் இருந்த நயன்மைக் கட்சியோடு (நயம்>நயன்மை; நியாயம் என்ற வடசொல் பிறந்த வகை: நயம்>நாயம்>ந்யாயம்>நியாயம் = justice; நீதி என்னும் வடசொல் பிறந்ததும் அதே தமிழ் அடிச்சொல்லில் தான்; நயம்>நயதி>ந்யதி>நியதி>நீதி = justice; நீதிக் கட்சி - Justice party) மல்லாடிக் கொண்டிருந்த பேராயக் கட்சி (Congress party) 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அப்புறம் அரசியல் அரங்கில் தலைமை நிலை எய்தி, நயன்மைக் கட்சியை ஒரேயடியாகச் சாய்த்து, அன்றைய மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. அதற்கு அப்புறம் விடுதலை வரும் வரை, ஏன் 1957 வரையில் கூட, பேராயக் கட்சிக்கு ஏறுமுகம் தான். பேராயக் கட்சியின் தலைமையில் விடுதலை பெற்றது இங்கு முதல் திருப்பு முனை.

2. அதன் விளைவால், கொஞ்சம் கொஞ்சமாக நயன்மைக் கட்சி அரசியல் களத்தில் இருந்து பின்வாங்கி, குமுகப் போராட்டங்களில் மட்டுமே கருத்துக் கொண்டு, தன்னைத் திராவிடக் கழகம் எனப் பெயர் மாற்றிக் கொண்டு, செயலாற்றத் தொடங்கியது. இதுவும் நம் மாநில வரலாற்றில் ஒரு திருப்பு முனை தான். [இன்றைய இளைஞர்கள் பலருக்கும் திராவிடக் கழகம் (என்ற நயன்மைக் கட்சி) ஒரு காலத்தில் மாகாணத்தை ஆளும் அரசியல் கட்சியாகச் செயல்பட்டது என்பது தெரியாமல் இருக்கலாம். உண்மையில் பேராயக் கட்சி அளவிற்குக் கொடிவழி கொண்டவை திராவிட இயக்கங்கள். அவை நேற்று முளைத்த காளான்கள் அல்ல.]

3. நயன்மைக் கட்சி திராவிடக் கழகமாக மாறிய நேரத்தில், சென்னை மாகாணச் சட்டப் பேரவையில், பொதுவுடைமைக் கட்சியே முகன்மை எதிர்க்கட்சியாய் இருந்தது. ஒரு காலத்தில் பேராயத்திற்குள்ளேயே உட்கட்சியாக இருந்த பேராயச் சமவுடைமைக் கட்சியில் (Congress Socialistic Party), ஒரு சிலர் விடுதலைக்குச் சற்று முன்னால் தனியே பிரிந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை (Indian Communistic Party) உருவாக்கினார்கள்; மற்ற சமவுடைமையாளர்கள்,(Socialists) லோகியா போன்றோரின் முயற்சியில், சமவுடைமைக் கட்சியை (Socialistic Party) உருவாக்கினார்கள். இவர்கள் தான் பின்னாளில் உடைந்து இரண்டாகிப் பின் பலவாகி, மீண்டும் சேர்ந்து, முடிவில், சனதாக் கட்சியாய் மறுவுருவம் பெற்றார்கள். (இந்தியாவின் இன்றையப் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் பேராயக் கட்சியில் இருந்தும், நயன்மைக் கட்சியில் இருந்தும் தான் பிறந்தன). பேராயத்தில் இருந்து பொதுவுடைமைக் கட்சியும், சமவுடைமைக் கட்சிகளும் தனித்துப் போனது இன்னொரு திருப்பு முனை. (இன்றைய பாரதிய சனதாக் காட்சியின் முன்னாள் நிலையும், பேராயக் கட்சியின் வலது சாரி முனையில் இருந்து கிளைத்தது தான்.)

4. தேர்தல் அரசியலில் ஈடுபட்டு, முதலாளிய மக்களாட்சியில் ஈடுபடுவதாக முழங்கிய பொதுவுடைமையர், அவர்களின் செயலாளர் பி.டி.ரணதிவே யின் நிலைப்பாட்டிற்கு மாறி, 1949 தெலிங்கானாப் புரட்சியில் இறங்கினார்கள். இதன் விளைவாய், பொதுவுடைமைத் தலைவர் பலரும் நிலத்தடி (underground) வாழ்க்கைக்குப் போகத் தொடங்கினார்கள். இந்த நிலையில் சட்ட பூருவமான அரசியல் அரங்கில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இது அடுத்த திருப்பு முனை; தமிழ்நாட்டையும், தென்னிந்தியாவையும் பொறுத்த அளவில் இது கொஞ்சம் ஆழமான திருப்பு முனை.

5. பேராயத்திற்கு எதிரான அரசியலில், நாடு விடுதலை பெற்றிருந்த தொடக்க காலங்களில், பொதுவுடைமைத் தலைவர்கள் பெரிதும் மக்களை, குறிப்பாகத் தென்னிந்திய மக்களை, ஈர்த்து இருந்தார்கள். ஒரு காலத்தில் தமிழ் பேசும் பகுதிகளும் மற்ற மொழி பேசும் பகுதிகளைப் போலவே, சென்னை மாகாணத்தில், இடது சாரிச் சிந்தனையில் பெரிதும் ஈடுபட்டு இருந்தார்கள். திடீரென்று பொதுவுடமைத் தலைவர்கள் நிலத்தடிக்குப் போனபின், நிலத்திற்கு மேலிருந்த அவர்களின் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு ஆட்கள் இல்லாமற் போனார்கள். இந்த இல்லாமையைத் தங்களுக்கு வாய்ப்பாய்த் திராவிட இயக்கங்கள் ஆக்கிக் கொண்டன.

6. விடுதலை பெற்று ஒன்றிரண்டு ஆண்டுகளில், திராவிடர் கழகம் அந்தக் கட்சிக்குள் இருந்த உள்முரண் காரணமாய் 1949ல் இரண்டாக உடைந்தது. ஒரு பக்கம் பேராயத்திற்கு எதிராக அதுகாலம் வரை இருந்த திராவிடர் கழகம், இன்னொரு பக்கம் திராவிடக் கழகத்தில் இருந்து எழுந்த கிளை இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் என இருவேறு நிலைப்பாட்டில் கட்சி உடைந்தது. ஆனாலும் ஒரு கிடுக்க அளவைப் (critical size) பெறமுடியாமலே தி.மு.க. நெடுநாள் இருந்தது. நாளடைவில் தி.க. தன்னுடைய பார்ப்பனிய எதிர்ப்பின் காரணமாய், ஆச்சாரியாருக்கு மாறானவரான பெருந்தலைவர் காமராசரைத் தன் முன்னணியாக எண்ணி, பேராயத்தை ஆதரிக்கத் தொடங்கிற்று. தி.மு.க. பேராய எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது. (பின்னாளில் ஆச்சாரியாரின் ஆதரவையும் பெற்றது.)

7. நாடு தன்னாளுமை பெற்ற பிறகு, எங்கணும் பெரும்பான்மை பெற்று ஆண்டு வந்த பேராயக் கட்சி, முற்று முழுதாக நயன்மைக் கட்சியை ஒழித்துவிட்டோம் என்று செம்மாந்திருந்த பொழுதில், நயன்மைக் கட்சி திராவிடக் கழகமாக மாறிப்போன நிலையில், அது சூல் கொண்டு நயன்மைக் கட்சிக்கு ஒரு புதிய மகவு பிறக்கும், அது மீண்டும் ஒருமுறை தங்களைச் சாடும், என்று பேராயக் கட்சியினர் எதிர்பார்த்திருக்கவில்லை. 1949ல் பிறந்த தி,மு.க. கிளைத்துப் பின் 1952ல் சற்றே மலர்ந்து 1957ல் குறிப்பிடத் தக்க வகையில் சட்டப் பேரவையில் உறுப்புமை பெற்றார்கள்.

8. இடையில் பொதுவுடைமைத் தோழர்கள் நிலத்தடி வாழ்க்கைக்குப் போனநிலையில் ஏற்பட்ட வெற்றிடத்தை, தி.மு.க. பற்றிக் கொண்டது. வாய் நிறையப் பொதுவுடைமைக் கொள்கைகளை எடுத்தோதி, தோழர்களுக்கு முகவர்கள் போலவே தி.மு.க. தலைவர்கள் பங்காற்றினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய், பொதுவுடைமையர் மேலிருந்த ஈர்ப்பு இடம் மாறித் தி.மு.க. மேல் மக்களுக்கு ஏற்பட்டது. பின்னால் ரணதிவே பாதையை மறுதலித்து பொதுவுடைமையர் தேர்தல் அரசியலுக்கு வந்த போது தான், "எப்பேர்ப்பட்ட தவற்றைச் செய்தோம், எப்படி ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி, அதில் ஒரு குட்டி முதலாளியக் கட்சியை ஊன்றி வைத்தோம்" என்று உணர்ந்தார்கள் ["காத்திருந்தவன் பெண்டை நேற்று வந்தவன் கொண்டு போனான்" என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு.] ஆனால் பொதுவுடைமையர் அதை உணரும்போது பாலத்தின் அடியில் வெள்ளம் பெருகி ஓடிவிட்டது. அன்று இழந்ததை இன்றுவரை பொதுவுடைமையரால் தமிழகத்தில் கைப்பற்ற முடியவில்லை. (பொதுவுடைமையர் அன்று இழந்ததை திராவிட இயக்கங்கள் எடுத்துக் கொண்டது போல், இன்று திராவிட இயக்கங்கள் இழந்து கொண்டிருப்பதில் கொஞ்சமேனும் தான் எடுத்துக் கொள்ள தே.மு.தி.க. முயலுகிறது.)

9. அன்றைக்கு எழுந்த தாக்கம் 1957ல் நல்ல விளைச்சல் கண்டு, அதன்பின் பத்தே ஆண்டுகளில், குறிப்பாக 1965 க்குப் பின் இரண்டே ஆண்டுகளில் வியக்கத் தக்க வளர்ச்சி பெற்று பேராயக் கட்சியைத் தலையெடுக்க விடாமல் திராவிட முன்னேற்றக் கழகம் 1967ல் சாய்த்தது. 1967ல் நடந்த ஒரு தேர்தல் மாநிலத்தின் தலை விதியையே தலைகுப்புற மாற்றியது. அதன் தாக்கம் இன்றுவரை பெரிது. பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார், பின்னால் அறிஞர் அண்ணாவைப் பற்றி இரங்கற்பா பாடியபோது சொல்லுவார்:

இவன்யார் என்குவீர் ஆயின் இவனே
பேராயம் என்னும் பெரும்பெயர் களிற்றை
ஆரமர்க் களத்தே அலறக் கிடத்தி
ஊராயத் திருத்தி உருக்குலைத் திட்டுத்
தமிழக வரசைத் தலைமுதல் நிறுத்திய
அமிழா நெடும்புகழ் அண்ணாத் துரையே!

உண்மை. பேராயக் கட்சி உருக்குலைந்தது. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அது மீண்டு எழ முடியாமல் இருக்கிறது. அதனால் தான் 1967 தேர்தல் ஒரு முகன்மையான திருப்பு முனை என்று சொல்லுகிறோம்.

10. அறிஞர் அண்ணா கிட்டத் தட்ட 1 1/2 ஆண்டுகளே அரசு கட்டிலில் இருந்தார். அவர் என்ன செய்திருப்பார், எப்படி இந்த மாநிலம் மாறியிருந்திருக்கும், என்றெல்லாம் இன்று சொல்ல முற்படுவது ஒருவகையில் பார்த்தால் கற்பனை வாதமே; ஆனாலும் திடீர் என அவர் உயிர்பிரிந்த போது, மக்கள் அவர்மேல் இன்னதென்று சொல்ல முடியாத ஆழ்ந்த ஈர்ப்பைக் காட்டியது உண்மை. அப்படி ஓர் ஈர்ப்பை அவருக்கும், அவருக்குப் பின்னால் மா.கோ.இரா.விற்கு மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் காட்டினார்கள்.

11. அண்ணாவிற்குப் பிறகு அவர் கட்சியின் மேம்போக்கான, ஆழமற்ற, அரிதாரப் பூச்சுத் தனமும், ஒருவித மரபுசாரா கொத்துப் பாட்டாளி மனப் போக்கும் (non-traditional lumpen proletariat mentality) எப்பேர்ப்பட்ட விளைவுகளுக்குக் கொண்டு சேர்க்கும் என்று யாரும் உணரவில்லை. கட்சியில் இரண்டு அணிகள் எழுந்தன. ஒரு அணி பேராயக் கட்சியோடு சமதானப் போக்கு கொள்ளத் துடித்தது. முடிவில் அந்த அணி வலுவிழந்து அழிந்து போய், பேராயக் கட்சியில் போய்ச் சேர்ந்து கொண்டது. இன்னொரு அணி, கலைஞர் கருணாநிதியால் ஆளுமை செய்யப் பட்டு முன்நிலைக்கு வந்தது. இந்த அணி கொஞ்சம் கொஞ்சமாய் தன் கொள்கைகளை நீர்த்துக் கொண்டே வந்தது; வெறும் ஆரவாரங்களுக்கே தம்மை ஆட்படுத்திக் கொண்டு, தன் இருத்தலைக் காப்பாற்றுவது (self-preservation) மட்டுமே அரசியல் என்ற முறையில் திராவிட இயக்கங்கள் பின்னாளில் மாறிப் போயின. அவற்றிற்குக் கொள்கைகள் என்பவை ஒரு வாய்ப்பாக, ஏந்தாக இருந்தனவே தவிர, மயக்கத்திற்கு ஆட்படாத அடிப்படைகள் என்று கொள்ளப் படவில்லை.

12. கலைஞரின் அணுகுமுறை தொடக்க காலத்தில் சரியாகத் தான் இருந்தது; ஆனால் நாளாவட்டத்தில் அரசின் நடைமுறைகள், பணிகள், அதிகாரிகளின் தூண்டுதல்கள், அரசின் வளர்ச்சிப் பணிகளில் ஊடுவரும் ஒப்பந்தக் காரர்களின் தாக்கம் ஆகியவை கட்சிக்குள்ளும், குறிப்பாக மேலிடத்திலும், பெரிதும் இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் நீர்த்தலும், தன்முனைப்புச் செயல்களும், பணம் ஒன்றே எல்லாவற்றையும் சாதிக்கும் என்ற எண்ணமும் மேலோங்கின. இந்த எண்ணங்கள் மேலோங்கினாலே, அப்புறம் யாருக்கு எது, எவ்வளவு பங்கு, என்ற பிரிவுகள் ஏற்படத்தானே செய்யும்? ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளிலேயே கட்சி மீண்டும் உடைந்தது. மா.கோ.இரா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். இந்த முறை ஏற்பட்ட உடைப்பு சம்பத் காலத்தைக் காட்டிலும் ஆழமாய் தி.மு.க.வைத் தாக்கியது. இன்றுவரை அதன் தாக்கம் நீடிக்கிறது.

13. பொதுவாக, கட்சி கட்டி ஏற்பட்ட இந்தப் பிரிவைப் பலரும் தென்மாவட்டங்களில் இருக்கும் ஒரு குமுகத்தில் அண்ணன்/தம்பிகளுக்கு இடையே ஏற்படும் சண்டைக்கு ஒப்பாகச் சொல்லிப் பேசுவார்கள். காரணம் இல்லாமல் "தேவர்மகன்" படம் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது ஒரு குமுக அரசியல் திரைப்படம். அதில் பெரிய தேவருக்கும், சிறிய தேவருக்கும் ஏற்படும் முரண்பாடுகளும், ஒருவருக்கொருவர் (இதில் பெரியவர் ஒழுங்கு, சிறியவர் மட்டுமே பிறழ்ச்சி கொண்டவர் என்பது ஒருபக்கச் சாய்வானது. இருவருமே ஒருவரின் நிலைப்பு, இன்னொருவருக்கு ஆகாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான்.) ஊறுகள் செய்து கொண்டு, அதன் மூலம் ஊருக்கே கேடு விளைவித்துக் கொண்டிருப்பார்கள்; இந்தப் பங்காளிச் சண்டை, அண்ணன் - தம்பிச் சண்டை அப்படியே தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் நடைப்பெற்றது. கழகங்களுக்கு இடையே 1971-72 தொடங்கிய இந்தச் சண்டை, முன்னரே சொன்னது போல் இன்னொரு திருப்புமுனை

14. இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே, இந்தச் சண்டையின் வீச்சை மா.கோ.இரா. புரிந்து கொண்டார். இதைக் கட்டுக்குள் கொண்டுவர, ஓர் எழுதப் படாத சமதான உடன்படிக்கையை அவர் மேற்கொண்டார். சண்டையின் வெளிப்பாடு வரம்பு மீறி, வஞ்சம் தீர்க்கும் வகையில் போகாதவாறு, பார்த்துக் கொண்டார். எப்பொழுதெல்லாம் அது எல்லை மீறுவதாகத் தெரியுமோ, அப்பொழுது அமைதி நடவடிக்கை எடுத்துச் சண்டையை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொண்டார். இந்த ஏற்பாட்டில் 12,13 ஆண்டுகள் ஓடிப் போனது. எதிர்ப்பது போல் நடந்து கொள்வதும், அது ஓரளவிற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளுவதும் நடைமுறையாயிற்று. அவர் இருக்கும் வரை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை.

15. இந்தக் கட்டுப்பாடான நடைமுறையைப் பின்னால் நெடுநாளைக்குத் தொடர முடியவில்லை. மா.கோ.இரா. விற்கு அப்புறம் ஏற்பட்ட அவர் கட்சிக் குழப்பத்தில் இரண்டு அணிகள் பிரிந்து, ஓரணி அழிந்து, முடிவில் செல்வி செயலலிதாவின் அணி முன்னிலைக்கு வந்தபோது, ஏற்கனவே செய்திருந்த சமதான நடவடிக்கை மறக்கப் பட்டு இரு கழகங்களின் போக்குகளும், வரம்பு மீறின; வஞ்சம் கொள்ளும் நிலைக்கு அவை போய்ச் சேர்ந்தன. ஆங்கிலத்தில் சொல்லுவது போல் "no holds barred" என்ற நிலைக்கு இருவருமே வந்து சேர்ந்தார்கள். புறநானூற்றில் நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் இடையே நடந்த சண்டையில் கோவூர் கிழார் கூறிய வரிகள் இப்பொழுது நினைவிற்கு வருகின்றன.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே

16. இதற்கு இடையில் தி.மு.க.வின் தனி வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு தேர்தலிலும் குறையத் தொடங்கியது. இதே போல பேராயக் கட்சியின் வாக்கு வங்கியும் அதன் உட்குழப்பங்களாலும், திராவிடக் கட்சிக்களின் மேல் பச்சைக் குதிரை ஆடியே பழகியதாலும், குறையத் தொடங்கியது. இந்த நிலையில் எழுந்த ம.தி.மு.க, பா.ம.க., இன்னும் விடுதலைச் சிறுத்தைகள், ஓரளவு புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தங்கள் வாக்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டிக் கொள்ள முயன்றார்கள்.

17. இன்றைக்கு இரண்டு கழகங்கள் தான் பெரிய கட்சிகளாய் இருக்கின்றன. அவர்களின் தலைமையில் தான் அணிகள் உருவாகின்றன. ஆனாலும் இவர்களுடைய பங்காளிச் சண்டையால் 1972- இருந்து 2006 வரை மாநிலம் இழந்தவை மிகப் பல.

18. இவர்களின் சண்டையைத் தங்களுக்கு வாய்ப்பாய்ப் பயன்படுத்திக் கொண்டு அண்டை மாநிலங்களும், நடுவண் அரசும் தமிழ் மாநிலத்தை ஏமாற்றியே வந்திருக்கின்றன. காவிரி நீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு, தெலுங்கு கங்கை, 1972-ல் இருந்து இன்றுவரை நடுவண் அரசின் பெருநிறுவனங்கள் ஒன்றைக் கூட தமிழ்நாட்டில் மானுருவாக்கம் (manufacture) செய்யும் வகையில் கொண்டு வராதது எனப் பல செயற்பாடுகளைச் சொல்ல முடியும். மிக அண்மைக் கால எடுத்துக் காட்டு: இரண்டு நாட்களுக்கு முன் நடுவண் அரசு பாறைவேதியல் ஆர மையங்களை (petrochemical radial hubs) அறிவித்திருக்கிறது. அதில் குசராத்-மகாராட்டிரத்திற்குத் தோதாய் தாகேஜ், கர்நாடகத்தில் மங்களூர், கேரளத்தில் கொச்சி, ஆந்திரத்தில் விசாகப் பட்டினம், ஒரிசாவில் பாரதீப், வங்காளத்தில் ஆல்தியா, பாஞ்சாலத்தில் பானிபட் என ஏழு இடங்களை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து, ஒரு எண்ணுரோ, சென்னையோ, கடலூரோ, தூத்துக்குடியோ ஒன்றுகூட இடம்பெறக் காணோம். இது எப்படி நடந்திருக்கக் கூடும் என்று எண்ணுகிறீர்கள்? "இந்தத் தமிழர்கள் அடித்துக் கொண்டு சாவார்கள், இவர்களில் ஒருவரை ஏவிவிட்டு இன்னொருவரைச் சாய்க்கலாம்" என்ற மிதப்புத் தான் காரணம். பொதுவாக மாநிலத்திற்குள் எத்தனை சண்டை போட்டாலும், மாநிலத்திற்கு வெளியில் ஒரே விதக் கருத்தைத் தான் அண்டை மாநிலத்து அரசியல்வாதிகளோ, இன்னும் மற்றவரோ சொல்லுவார்கள். நம்மவர்கள் சண்டையோ என்றும் மாறாத பங்காளிச் சண்டையாய் இருக்கிறது. விளைவு, எனக்கு ஒரு கண் போனால் மற்றவனுக்கு இரண்டு கண் போக வேண்டும் என்ற வெஞ்சினம் எங்கும் விரவிக் கிடக்கிறது.

19. இரண்டு கழகத்தாரும் தங்களுடைய கல்விக் கொள்கையில் பெரிதும் சரிந்து கல்வி வணிகர்களைப் பெருக்கி மடிக்குழைப் (matriculation) பள்ளிகளை இந்த 20, 25 ஆண்டுகளில் புற்றீசல் போல வர விட்டு தமிழை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள். இவர்களுக்கு பேராயக் கட்சி ஒழுங்கு போலிருக்கிறது. அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஐந்தாவது வரை தமிழைப் பாடமொழியாய் மாநிலம் எங்கும் ஆக்குவோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். தமிழ், தமிழென்று பேசியே தமிழைத் தொலைத்தவர்கள் இந்த இரு கழகங்களே.

20. மாநிலத்தின் நீர்வளம் வெகுவாகக் குறைந்து வருகின்ற காலத்தில் அதை மேம்படுத்தும் வகையில் தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள், காடுவளர்ப்பு போன்றவற்றை மேம்படுத்தாமல், ஒரே பயிராக இல்லாமல் பல்வேறு பயிர்களை மாநிலத்தில் பரப்பி, குறிப்பாகக் காய்கறிப் பயிர்களை பெரிதும் விளைவாக்கம் செய்து அவற்றைக் காப்பாற்றி, அவற்றின் நுகர்பருவத்தைக் (consumption period) கூட்டுமாப் போல குளிர்பதன அறைகளை (cold conditioning rooms) ஒவ்வொரு சிறுநகரத்திலும் ஏற்படுத்தாமல் - மொத்தத்தில் வேளாண் இயலில் எந்த நீண்ட கால முயற்சியும் எடுக்காமல், மக்களை இலவயங்களுக்கு ஏங்க வைத்தது மிகக் கொடுமை.

21. மாநிலத்தின் தொழில்துறையை வளர்க்காமல், இங்கேயே பலவற்றை மானுருவாக்காமல் (தான்நகர்ச்சி - automibiles - வண்டிகள் துறையும், இன்னும் ஒரு சிலவும் வளர்ந்தது ஒரு புறனடை) வெறுமே உள்ளுரும நுட்பியலையும் (information technology) , பொதினச் செலுத்த வெளியூறலை (Business process outsourcing) மட்டுமே நம்பிக் கொண்டிருப்பது ஒரு வீக்கமே ஒழிய வளர்ச்சியல்ல. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தியத் தொழிற்துறைக்கு எந்தச் சேவையும் செய்யவில்லை; இவர்கள் எங்கோ இருக்கும் மேல்நாட்டுத் தொழிற்துறைக்கு சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு மணிக்கு 8 வெள்ளி என்று கூலி பேசும் இவர்கள், நாளைக்கு யாரோ ஒரு நாடு மணிக்கு 7 வெள்ளி என்ற கூலிக்கு ஒப்புக் கொண்டால் எல்லாவற்றையும் இழுத்து மூட வேண்டியிருக்குமே? பழைய மாமல்லபுரம் சாலை அப்புறம் என்ன ஆவது? நம்மூரில் தொழில் வளர்ச்சி ஏற்படாமல், வெறுமே உள்ளுரும நுட்பியல், வெளியூறலில் வளர்ந்து கொண்டிருந்தால் என்ன பலன்? இது பற்றி இரு கழகங்களுக்குமே கருத்து இருப்பதாய்த் தெரியவில்லை.

22. இந்த மாநிலத்தின் நெசவுத் தொழில் மிக முகன்மையானது. இந்தியாவில் விசைத்தறி அளவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஆனால் வெறுமே பருத்தித் துணி நெசவிலேயே தமிழ்நாட்டு விசைத்தறியாளர் இருந்து, பாலியெஸ்டர் நெசவிற்குள் ஆழமாகச் செல்லாமல், இந்த மாநிலத்தின் நெசவுத் தொழிலைச் சரி செய்யமுடியாது. பொதுவாக, இரண்டு கழகங்களுக்குமே நெசவுத் தொழில் பற்றிய நீண்ட கால நோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இதிலும் இலவயங்கள், வரி மாற்றம் என்று செக்கில் சிக்கிய மாட்டைப் போலச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

23. அடிப்படை வேலைகளில் மிகவும் தேவையானது போக்குவரத்து பற்றியது. இதிலும் ஒரு நீண்ட கால நோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக இரண்டு வகை பற்றிச் சொல்ல வேண்டும். ஒன்று நாட்டுப்புறங்களில் பயன்படும் சிறு பேருந்துகளின் சேவை பற்றியது; இன்னொன்று பெருநகரங்களில் இருக்கும் நகரப் பேருந்து சேவை பற்றியது; "கோரப் பசிக்குச் சோளப்பொரி" என்பது போல் தான் இந்த இரு சேவைகளும் இருக்கின்றன.

24. இப்படி ஒவ்வொரு தேவையையும் பற்றிச் சொல்லிக் கொண்டே போவது, இந்தப் பதிவின் நோக்கம் இல்லை. இந்த மாநிலம் முன்னேற வேண்டுமானால், முதலில் இங்கே நிலவும் பங்காளிச் சண்டை நிறுத்தப் படவேண்டும். அதற்கு ஒரே வழி இந்த இரு கழகங்களின் வல்லாண்மை குறைக்கப் படவேண்டும். அதாவது தனித்து இருந்து ஆட்சி அமைக்கக் கூடிய வல்லமை குறைக்கப் படவேண்டும்.

25. எனவே என்னுடைய பரிந்துரை: இன்றைய நிலையில் இரண்டு பெரிய கழகங்களைத் தவிர்த்து மற்ற கட்சிகளை, அதாவது பேராயக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சீயர்), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இன்னும் சிறிய கட்சியினர் வெல்லுவது நல்லது என்றே நான் நினைக்கிறேன். இப்படி நடந்தால், தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆகிய எந்தக் கட்சி முன்னிலைக்கு வந்தாலும் அது தனிப் பெரும்பான்மை பெறமுடியாமல் போகும். அதன் விளைவால் அவர்கள் கூட்டணி அரசிற்கு ஒத்துப் போகும் மனப்பான்மை வந்து சேரும். தமிழர் குமுகாயம் அழிவுப் பாதையில் இருந்து மீண்டு வர ஒரு வாய்ப்புக் கிடைக்கும். பங்காளிச் சண்டை குறையும். அப்படி நடந்தால், இன்றையத் தேர்தல் இன்னும் ஒரு திருப்புமுனை ஆகமுடியும். நடக்குமோ?

அன்புடன்,
இராம.கி.