Monday, March 30, 2020

Bullet

Bullet train ஐத் தமிழில் சொல்லவேண்டி, ”bullet ற்குத் தோட்டாவா, ரவையா?” என்று சட்டெனக் கேட்டால் என் சொல்வது? இதுவென்ன காயா, பழமா விளையாட்டா? (சோழியைத் தூக்கிப்போட்டு, மல்லாக்க விழுந்தால் பழம், குப்புற விழுந்தால் காயென ஆடும் சிறுபிள்ளையாட்டம். பரமபதத் தாயக் கட்டத்தில் 2 பகடைகளுக்குப் பகரியாய்ப் 12 சோழிகளைக் கொண்டு விளை யாடுவது இதன்நீட்சி.) எதிலும் பொறுமையின்றி. சொற்பிறப்பியலையே எள்ளல் பேசி, அதேபொழுது சொற்பிறப்பியல் வழி சொல்லாய்வு செய்வதாய் விளக்கஞ் சொல்வதும் ”சொல்லல்ல, கருத்து வேண்டும்” என்று தன் அளவில் சூடிகை காட்டிக் கொள்வதும் நம்மையெங்குங் கொண்டு சேர்க்காது. சொல்லாய்வு என்பது ஒரு தேடல். சில போது எளிதில் நடக்கும். சில போது இனம்புரியாக் காட்டுள் கொண்டு சேர்க்கும். சரியான சொல்தேடத் தமிழ்ச் சொற்பொருள் வளத்தில் நம்பிக்கை வேண்டும். சூ, மந்திரக்காளி என்று சொல்லி எந்தச் சொல் மரத்திலும் காய்க்குலைகள் தொங்குவதில்லை. சற்று பாடுபடவேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியில் பார்த்தால், தோட்டா, ரவை, குண்டென மூன்றைத் தவிர வேறொன்றுந் தென்படாது. முன்னது இரண்டும் கடன். பின்னது பீரங்கிக் குண்டையுங் குறிப்பிடலாம். துவக்குக் குண்டையுங் குறிப்பிடலாம். அடிப்படையில் குண்டு என்பது கோளத்தைக் குறிப்பிடுகிறது. குண்டை என்றாலும் அதே பொருளே. குண்டை>கொண்டை என்ற சொல் கொண்டைக் கடலையில் பயன்படும். இதே போற் கொட்டையென்ற சொல் கோள வடிவிலுள்ள பழ விதைகளைக் குறிக்கும். குன்றி என்ற சொல் சிறு மணியைக் குறித்தது. குன்றி மணி (Molucca bean) என்றவொன்று கருப்புஞ் சிவப்பும் சேர்ந்தாற்போல் இருக்கும். விளையாட்டுப் பொருளாயும், பொன் ஆசாரிகளிடம் எடையளவாகவும் பயன்படும். சோழர் கல்வெட்டுக்களில் பெரிதும் புழங்குஞ் சொல் அது. தங்கத்தைக் குன்றி மணி நுணுக்கத்தில் நிறுப்பது வழக்கம். குன்றி மணி என்பது குண்டு மணி, குந்து மணி என்றும் திரித்துச் சொல்லப்பெறும். 

’கோலி’ என்பது சிறுகுண்டைக் குறிக்கும். பீங்கானுக்கும், கிளருக்கும் (glass) சொல்லிப் பழகியதால், அதன் பொருள்நீட்சிக்கு மனம் இடங்கொடுக்க மறுக்கிறது. (ஆயினும் இந்தியில் துவக்கு ரவையைக் குறிக்குமாப் போல இந்தப் பொருள் நீட்சி உண்டென்ற மெல்லிய நினைவெழுகிறது.) இதுவரை நடந்த 4 ஈழப்போர்கள் bullet க்கான தமிழ்ச்சொல் இல்லாமலா நடந்தன? புலிகளின் படைக் கருவிக் பெயர்களைக் கையாண்ட பட்டறிவு கொண்டோர் சற்று வெளிப்பட்டால் நாம் கற்றுக் கொள்ளலாம். (புலிகள் ”கோலி”யைப் பயன்படுத்தினாரா? தெரியாது. ஒரு முகமூடி நண்பர் என் வலைப் பதிவில் இதுபற்றிச் சில ஆண்டுகள் முன் கேட்டது நினைவிற்கு வருகிறது. அன்று இதற்காக நேரஞ் செலவழிக்காது விட்டது என் தவறு.) சரி. இப்போது சொற் பிறப்பியலுக்கு வருவோம். நாம் தேடுஞ் சொல் சிறு பருமையையும், விரைவையுங் குறிப்பிடவேண்டும். இத்தேடல் bullet train இக்கு மட்டுமன்றி, bullet க்குஞ் சேர்த்து அமையவேண்டும்..

புல்>பொல் எனும் வேர்ச்சொல் பருமைகுறித்து எழுந்தது. பருத்தது உருண்டும் (spherical), நீளுருண்டும் (cylindrical) வெளிப்படும். நுணுகிய கருவொன்றைப் புல்லிக் கலந்தததால் புற்கலமென்ற சொல் எழுந்தது. புற்கலம்>புக்கலம்> புத்கலம்>புத்கரம் என்ற வளர்ச்சியில் பேரண்டமெங்கும் (Universe) விரவிக் கிடக்கும் matter ஐப் பாகதம் குறிக்கும். புல்லிக் கலந்தது உடம்பென்றும் பொருள் கொள்ளும். (அற்றுவிகம்/ஆசீவிகம், செயினம், புத்தமெனும்) 3 சமண நெறிகளுமே புற்கலத்தை வெவ்வேறு கலைச்சொற்கள் வழி முதற் பொருளாய்க் கொள்ளும். இற்றை அறிவியலும் பொருளென்ற சொல்லை முதற் காரணமாய்க் கொள்கிறது. Matter can neither be created nor destroyed. (matter, meaning என இருவேறு கருத்துகள் ’பொருள்’ என்னுஞ் சொல்லிற்குண்டு.) புல்>பொல்>பொர்>பொரு>பொருள் என்றே இச்சொல் வளரும். இருவேறு எதிர்கள் ஒன்றிற்குளொன்று பொருதியமைவது பொருளென்று மார்க்சிய இயங்கியல் (Marxian Dialectics) வழி பொருள்சொல்வர் (Unity and struggle of opposites)

உட்கருவைச் சுற்றிப் 360 பாகையில் புல்லிக் கிடக்கும் பொருளுணர்த்தும் சொற்களாய் (ஐயனாரைப் புல்லிக் கிடக்கும்) பூரணை, புற்கலை> பொற்கலை என்னும் தேவிப்பெயர்கள் தென்தமிழகம் எங்கும் ஊருக்கு ஊர் விரவி கிடக்கும். (சொல்லவருங் கருத்தை மீறுவதால் இதன் விளக்கந் தவிர்க்கிறேன்.) புல்>புள்>புட்டம்/புட்டி என்பது அரைக் கோளமாய் முழு வளர்ச்சியடைந்த உடம்பின் பின் பகுதியைக் குறிக்கும். புடையென்பது வீங்கு, பெருகு போன்ற வினைச்சொற்களையுங் குறிக்கும். புரு>புரைமை போன்ற சொற்கள் பருமையைக் குறிக்கும். புரு>புரைமை = பெருமை. பருப்பொருள் என்றாலே முப்பரிமானங் குறிக்கும். புருத்தது பருத்து பூரிக்கவுஞ் செய்யும். பூரித்தல், பூலித்தலென்றும் பலுக்கப்படும். புல்லெனும் அடிவேரை விட பொல்லெனும் துணை வேர் ஏராளம் பருமைச் சொற்களைத் தமிழில் தோற்றுவிக்கும்.

புல்>பொல்>பொல்லு= தடி, பருமன். ஒவ்வொரு நெல், தானிய மணியும் பொல்லெனப்பட்டது. முதலில் மணி குறித்து, பின் பொருள் விரிவில் நிறங்குறித்து முடிவில் பொல்>பொன், பொல்>பொலம் என்ற சொற்கள் மாழையையுங் குறித்தன. பொல் கொழித்துவிழைந்ததால் பொலித்து விளைந்ததாய்ச் சொல்லப்பட்டது. பொலிதல்= பெருகுதல். பொலிவு= பருமை. பொலி= தூற்றாத நெற்குவியல். அறுவடையின் போது, “பொலியோ பொலி” என இயல்பான கூச்சல் நெற்களத்தில் வெளிப்படும். இன்றும் போற்றுதல் என்று சொல்கிறோமே? அதுவும் பொலியோ பொலியில் கிளைத்தது தான். பொல்>போல்>போல்+து = போற்று. பொலிப்பாட்டு= அறுவடைப் பாட்டு. பொல்லெனும் விளைச்சல் அதிகமாவதைப் பொலித்தலென்றதால், பொலி என்பது இட்டுமுதலுக்கும் (input) கண்டுமுதலுக்குமான (output) சொல்லானது. பொல்லில் விளைந்தது பொலுவு எனும் profit. பொலிசை எனும் வட்டி (interest). 2 சொற்களும் கல்வெட்டுக்களிலுண்டு. (தமிழில் இவற்றிற்குச் சொற்கள் இல்லை என்று சிலர் தேடுவார்.) .

பொல்லில் விளையும் இன்னொரு சொல் பொருக்கு. அதன் நீட்சி பொருக்கை. (>பருக்கை). அரிசி, சோளப் பொருக்கென ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணி. வரகு, பனிவரகு, தினை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி என விதவிதமான தானிய/கூல மணியைப் பருக்கை என்போம். பொருக்கு வெடித்தலைப் பொரித்தலென்பார். சோளப்பொருக்கிற் கிடைத்தது சோளப்பொரி. பொரித்தது பூத்தது போல் தெரியும். பொரிதல்= பூத்தல், பொருக்கு வெடித்தல். பொருமலென்பதும் பூரித்ததாகும். (மலர்ந்து காணுதல்). தடித்தவள் பொருமலி என்றும் அழைக்கப்படுவாள். பொல்>பொல்+து= பொற்று>பொத்து= அடைப்பு, பொந்தினுள் உள்ளது பொத்து. பொந்தென்ற சொல் ஒரு பக்கம் துளையும், இன்னொரு பக்கம் பருமையுங் குறிக்கும். ஆங்கிலத்திலும் bull (n.2) என்பதற்கு "papal edict, highest authoritative document issued by or in the name of a pope," c. 1300, from Medieval Latin bulla "sealed document" (source of Old French bulle, Italian bulla), originally the word for the seal itself, from Latin bulla "round swelling, knob," said ultimately to be from Gaulish, from PIE *beu-, a root supposed to have formed words associated with swelling (source also of Lithuanian bule "buttocks," Middle Dutch puyl "bag," also possibly Latin bucca "cheek") என்று பொருள்சொல்வர். இலத்தீன், PIE பொருட் பாடுகளைக் கவனியுங்கள்.

பொந்து>பொந்தி எனினும் பருமையைக் குறிக்கும். வீங்கியகால் பொந்திய காலாகும். பொற்று+ஐ= பொற்றை>பொறை என்றசொல் சுமை, கனமென்ற பொருட்களைக் குறிக்கும். இயற்கையாகவே எடைப் பொருள் பெருத்தலுக்கு வரும். எடையையும் பருமனையும் பிரித்தறிய அறிவியலே வழி. பொத்தை= பருமை. சிறுதூறு; பொத்தைக்கால்= பருமைக்கால், யானைக்கால்; பொத்தையன்= தடித்தவன். பொதி = பருமன். பொத்தி என்ற சொல் சோளக் கதிர், தானியக்கதிர் போன்ற மணிவகைகளைக் குறிக்கிறது. பொத்திரம் என்ற சொல் எறியாயுதத்தைக் குறிக்கிறது. பொதுக்கு= மறைப்பு. பொகுட்டு என்ற சொல் தாமரை அல்லது கோங்குப் பூவின் கொட்டையைக் குறிக்கும். பொகுத்தல் ஓட்டை செய்தலையுங் குறிக்கும். பொகில்= அரும்பு. பொட்டு= வட்டக்குறி, இதைத் துளி, துகள். பொடுகு என்றுஞ் சொல்வர். பொல்+ ம் = பொம்; பொம்மிக் கிடப்பது பருமிக்கிடப்பது. பொம்மல்= பருமன், படிமை; பொம்மலாட்டம், பொம்மலில் கிளர்ந்தது.

பொல்லில் சிறுமைப்பொருளுங் கிளர்ந்தது. பொடிசு= சிறியது, பொடி பொட்டு= சிறியது. பொடியன்= சிறுவன், புல்லன், அற்பன்; பொடுகன்= சிற்றுருவமுள்ளவன்; பொடுகு= சிறுமை. பொருக்கென்றாலும் சிறுமைப் பொருளுண்டு. பொருக்கின் இடைக்குறையாய் பொக்கென்றுஞ் சொல்வர். பொக்கு என்பதைப் pixel க்கு இணையாய்ப் பயன்படுத்தி வருகிறேன். பொல்வழி விரைவுக்குறிப்பாய், புலபுலெனல், பொக்குப்பொக்கெனல், பொட்ட, பொட்டெனல், பொடுபொடுத்தல், பொடுபொடெனல், பொரி பொரியெனல், பொருக்க, பொருக்கெனல், பொரேரெனல் என்று பல சொற்களுண்டு.

மேலே பொல்லிற் கிளர்ந்த சொற்கள் இத்தனையையும் பட்டியலிட்டோம். இனி bullet (n.) என்ற சொல்லிற்கு ஆங்கில சொற்பிறப்பியலில் 1550s, "cannonball" (a sense now obsolete), from Middle French boulette "cannonball, small ball," diminutive of boule "a ball" (13c.), from Latin bulla "round thing, knob" (see bull (n.2)). Meaning "small ball," specifically a metal projectile meant to be discharged from a firearm, is from 1570s. Earliest version of the figurative phrase bite the bullet is from 1891, probably with a sense of giving someone a soft lead bullet to clench in the teeth during a painful operation என்ற வரையறை பார்த்தபின், பொல் வழி bullet ஐ எப்படிச் சொல்லலாம்? இத்தனை சொற்களோடு பொருத்திப் பார்த்தால் பொல்லு (=சிறுதடி) என்பதே என் பரிந்துரை.

(வேண்டுமெனில் பொற்று, பொத்து எனத் திரித்துங் கொள்ளலாம். கதவுகளின் தாழ்ப்பாள் போடுமிடத்தில் இருக்குங் குண்டுப் பகுதியைப் பொத்துக்குண்டு எனப் பேச்சு வழக்கிற் சொல்கிறோமே?) ஏற்கனவே train க்குப் பலரும் ஏற்றுக்கொண்ட தொடரி என்ற சொல் இருப்பதால் bullet train = பொல்லுத் தொடரி.

அன்புடன்,
இராம.கி.. 

No comments: