Sunday, March 29, 2020

தமிழரும் தென்கிழக்கு ஆசியாவும்

 அங்கோர் வாட் என்பதைத் தமிழில் நகரவட்டம் என்று ஓர் இதழில் எழுதி யிருந்ததை மறவன்புலவு சச்சிதானந்தம் ஒருமுறை காட்டியிருந்தார். நகரவட்டம் என்று சொல்வதைக் காட்டிலும் நகர வாடி என்பது சிறப்பாக இருக்கும். அதற்கு ஒரு காரணமுமுண்டு. நகர என்பதில் எந்தத் தயக்கமும் வேண்டாம். அது தமிழ் தான். விக்கிப்பீடியாவினருக்கு அது சங்கதமாய்த் தெரிநதால் அது உண்மையாகிவிடாது. (நகரத்தின் தமிழ்மையை வேறோர் இடத்தில் விளக்கலாம்.) நகரம் என்பது கூடகோபுரத்திற்கும் பெரிய ஊருக்கும் சொல்லாகியிருப்பது தமிழிலுண்டு. இதுபோன்ற இயலுமையை வேறுமொழிகளிற் கண்டதில்லை. விண்நகரம் என்பது விதப்பாகப் பெருமாள் கோயில் கோபுரத்திற்கான பெயர். நாலாயிரப் பனுவலைப் படித்தவருக்குப் புரியும்.

வாட் என்பது வாடிக்குத் தொடர்பானது பற்றி விரிவாக விளக்கவேண்டும். அதற்குமுன் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் பங்கு என்றவுடன், பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப் படும் ஒரு பொதுப் புரிதலைச் சொல்லவேண்டும். வரலாற்றில் இந்தோனேசியச் சைலேந்திரரின் கிளை மரபால் கம்போடியா வளர்ச்சி பெற்றது. இந் நாடுகளில் எல்லாம் பெரிதும் போனது தமிழ்வணிகரே. இங்கு சங்கதம் ஒருநாளும் வணிகமொழியாய் இருந்ததில்லை. தமிழ் வணிகரோடு இலக்கியம் நூல், வேதம் படித்த பெருமானர் சிலர் துணையாகப் போயிருக்கலாம். சிலர் தமிழ் அரசரின் சார்பாளராகவும் கூடப் போயிருக்கலாம். அவ்வகையில் தமிழோடு, சங்கதமும் கூடப் போயிருக்கலாம்.

அது அடிப்படையிற் துணை நுழைவே ஒழிய முதல் நுழைவு அல்ல. (ஆந்திரம் கலிங்கம் ஆகிய இடங்களிலிருந்து தென்கிழக்கு ஆசியா போன வணிகருக்கும் ”தமிழே வணிகமொழி” என்பது அங்குள்ள கல்வெட்டுக்களால் நன்றாகவே தெரிகிறது. அது சங்கதம் அல்ல. ஆந்திரர்/கலிங்கர் ஆகியவரோடு தமிழருக்கும் சேர்த்துக் கலிங் என்றே இன்றும் மலேசியாவில் பொதுப்படையான பெயருண்டு. தமிழர்க்கு விதப்பாகச் சோழியர் என்று பெயருண்டு.)

19 ஆம் நூற்றாண்டு இந்தியவியலாரின் தாக்கத்தால் குடியேற்றக்காரரோடு உள்நுழைந்த மேலையாய்வாளர் கல்கத்தாவிலிருந்து கிளம்பிய இந்தியத் தொடர்பாய் தென்கிழக்கு ஆசியாவிற் தெரியும் எல்லாவற்றையும் சங்கத மயமாய்க் காட்டி, (எழுத்து, பேச்சு எனப் பலவற்றில் சங்கதம் ஊடுறுவியதாம் :-))) தமிழ் அடித்தளத்தைக் குறைத்து வண்ணந் தீட்ட முயன்றார். இப்படி 19ஆம் நூற்ராண்டுத் தாக்கங்களை யாருமே மீளாய்வு செய்து தமிழரின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டவில்லை. விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரை தமிழரும் மாற்றுப் பரப்புரையுஞ் செய்ததில்லை.

இற்றை இந்திய ஆட்சியாளர் தமிழைக் குறிப்பிடாது சங்கத உறவையே பெரிதும் அழுத்திச் சொல்வதும், தமிழக ஆட்சியாளரின் மெத்தனமுமே இந்த விட்டேறித்தனமான மூடிகப் போக்கிற்குக் காரணமாகும். தமிழகத்திற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இருந்த உறவை 1947 இலிருந்து தமிழக ஆட்சியாளர் எவரும் அழுத்தங் கொடுத்துப் பேசவேயில்லை. தமிழரைத் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய வற்றிற்குக் கொண்டுபோனதையும், அவரோடு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் எந்தத் தமிழக அரசு பேசியிருக்கிறது? நமக்கென ஒரு வெளியுறவுத் துறைத் தொடர்பு வேண்டுமென நான் பல காலஞ் சொல்லிவந்திருக்கிறேன். அதில் சேர்ந்தது தான் தென்கிழக்கு ஆசியாவிற்கும் நமக்கும் உள்ள உறவை, “நெல்லும் தமிழரும், தென்கிழக்காசியாவும்” என்ற முடிவுறாத தொடரிலும், ”Candi Borobudur- பொதியிலார் சாமிநடையும்,  வைகறையும்” என்ற தொடரிலும் பேசியுள்ளேன். இன்னும் நிறைய எழுதமுடியும்.

தமிழ்நாட்டுத் தமிழர் இதை உணர்ந்தது போல் இல்லை. இல்லையென்றால், இன்னும் சென்னைக்கும், இரங்கோன்/மாந்தளைக்கும், சென்னைக்கும், தக்குவாபாவிற்கும், சென்னைக்கும், ஃப்னோம்பெங்கிற்கும், சென்னைக்கும் சியாம்ரீப்பிற்கும், சென்னைக்கும், சைகோனுக்கும், சென்னைக்கும் சாகர்த்தாவிற்கும், சென்னைக்கும் பலெம்பாங்கிற்கும், சென்னைக்கும் அட்சயமுனைக்கும், சென்னைக்கும், ஹனோய்க்கும்  இத்தனை யாண்டுகளில் பறனைகள் (planes) விட்டிருக்க வேண்டுமே? தமிழக அரசு என்றுதான் விழிக்கும்? 73 ஆண்டுகள் வாய்மூடி மோனியாய் இருப்பதா? நமக்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இருக்கும் உறவைப் புதுப்பிக்க ஏன் தயங்குகிறார்?

புரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

No comments: