Thursday, July 25, 2019

பூரியர் - bourgeoisie

திருவள்ளுவராண்டு பற்றிய https://valavu.blogspot.com/2018/07/3.html என்ற பதிவையோ அல்லது https://groups.google.com/forum/embed/#!topic/minTamil/jLTQAeW5U_U என்ற பதிவையோ அருள்கூர்ந்து பாருங்கள். அவற்றில் பூரியர் என்பது பற்றிப் பேசுகிறேன். அப்பதிவைப் படிக்காமல் நான் சொல்ல வருவது புரியாது. இருப்பினும் தேவைப்பட்டதை இங்கு 2 முன்னிகைகளாகப் பிரித்து வெட்டி ஒட்டுகிறேன்.

முதல் பகுதி:
--------------------------------------------
வரைவில்மகளிர் என்பது நட்பு வகைப்பாட்டின்கீழ் திருக்குறள் பொருட்பாலில் ஏழுறுப்புக் கொள்கையிற் பேசப்படுகிறது. அரசரும் அரசரைச் சேர்ந்தவரும். இன்னின்ன வகையில் நட்பு தொடர்பாய் நடந்துகொள்ளலாம்  என்பது இங்கே உரைக்கப்படுகிறது. அதில் வரைவில்மகளிரின் நட்பு பூரியர்களுக்குக் கூடாத நட்பென்று குறள் சொல்லுகிறது. 

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

இங்கே கள் எனும் விகுதி பூரியருக்கேன் வந்தது? பூரியர் யார்?- என்ற கேள்விகள் எழுகின்றன. துறவறவியலின் முதலதிகாரம் அருளுடைமையின் முதற்குறளிலும் (241) ”பூரியர்” வரும்.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியர் கண்ணும் உள.

இதேபோல், பரிபாடல் ஆறில் 46-50 ஆம் வரிகள் பூரியர் பற்றிச் சொல்லும்.

மாறுமென் மலரும் தாரும் கோதையும்
வேரும் தூரும் காயுங் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்புநலன் அழிந்து
வேறா கின்றுஇவ் விரிபுனல் வரவென

புல்>புர் என்ற வேர்ச்சொல் பொருத்தல், பெருத்தல்/மிகுதியாதல்/உயர்தல், துளைத்தல்/புகுதல்/நிறைத்தல் என்ற பொருட்களைக் கொண்ட பல் சொற்களுக்கு அடிப்படையாகும். இவற்றில் எது இங்கே சரிவரும்? முதல் இரண்டும் பொதிவுப் (positive) பொருள் கொண்டவை, கடைசி நொகைப் (negative) பொருளானது. (13இற்கு முந்தைய நூற்றாண்டுகளைச்சேர்ந்த) மணக்குடவரும், (13ஆம் நூற்றாண்டுப்) பரிமேலழகரும், இவருக்கும் பின்வந்த உரையாசிரியரும், ”கீழ்மக்கள்” எனும் நொகைப் பொருளையே பூரியருக்குச் சொல்வர். பல தமிழ் அகராதிகளிலும் ”இழிந்தவர், கொடியவர்” என்றே சொல்வர்.  "சீரியன வுள்ளிப் பூரியன மறத்தல் வேண்டும்" என்பது. குறள் 1206க்கு மணக்குடவர் உரையில் வரும் ஒரு வாசகம். பூரியர் என்பவர் இழிந்தவர் என்று இங்கு பொருள் கொள்ளப்படுகிறார். "பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தார்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார்" என்பது கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப்படலம் 116 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இங்கே பூரியரென்பது இழிந்தவரென்ற பொருளிலேயே வருகிறது.
.
ஆனால் ”புரையிலாப் பூரியர்” என்கையில் புரையும் பூரியரும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை, அவற்றை மாற்றிக் காட்ட ”இலா” என்ற சொல்ல வந்தது புரியும். 241ஆம் குறளில் ”பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள” என்பதால் பூரியருக்குக் ”கீழ்மக்கள்” என்ற பொருள் பொருந்தாது. பரிபாடல் வரிகளில் “பூரியர் உண்ணும் பொருள்கள் மண்டி வருவதால், சூடிக் களைந்த பின் வாடிப்போன மலரும், ஆண்களணியும் தாரும், பெண்களணியும் கோதையும், வெட்டிவேர் போன்ற மணவேரும், மணமுள்ள தூருங், காயும், கிழங்கும், நார்களோடு உகுக்கும் மணம் அழிந்து வைகையின் விரிபுனல் விவரிக்கப்படுகிறது. அப்படியானால் இந்நிலை கீழ்மக்களால் ஆகியிருக்க முடியுமோ? பெருஞ்செல்வர் உண்ணும் பண்டங்கள், நீர்மங்கள், தேறல் வகைகள் ஆகியவை கூடி ஒருவகை வெறிய (alcohol) நாற்றம் அந்தக் கரையில் ஆற்றுநீரிற் கூடிப்போனதாகவே எண்ணவேண்டும் அல்லவா? அப்பொழுது பூரியருக்கு என்னபொருள் அமையும்? பெருஞ்செல்வர் என்பதுதானே?
------------------------------------
அடுத்த பகுதி:
-------------------------------
புல்>புர்>பர்>பரு>பெரு என்ற திரிவு பருத்தல், பெருத்தல் வினைகளையும்,. புல்>புர்>புரம் என்பது பெருத்த, உயரமான வீடுகளையும், அவைநிறைந்த நகரையுங் குறிக்கும். கவாடபுரம், திருவனந்தபுரம், காஞ்சிபுரமென்ற சொல் ஆட்சிகளை எண்ணிப்பாருங்கள். எத்தனையெத்தனை புரங்கள் தமிழ் நாட்டிலும், இந்தியத் துணைக்கண்டமெங்கினும் உள்ளன? புர், பூர் என்றும் புரி என்றும் திரிந்து இன்னும் பல்வேறு கணக்கற்ற நகரங்களைக் குறிக்கும் அல்லவா?. புரிதலுக்கு பெருத்தல்/உயர்தல் பொருள்போக வளைதற் பொருளும் உண்டு. புரமென்பது கோட்டையில்லாத பெருநகரையும், புரி, கோடையுள்ள நகரையுங் குறித்துப் பின் தம்முள் குழம்பியும் போயின. இதேசொல் சங்கதத்திலும் எடுத்தாளப்பட்டது..இந்தையிரோப்பிய நாடுகளுக்கும் பரவியது burg burgh, bury என்று முடியும் நகர ஈறாகவும் மாறியது. (Brandenburg, Magdeburg, Edinburgh, Hamburg, Strasburg, Canterbury என்ற இரோப்பிய நகரங்களை எண்ணுங்கள்) வடக்கே பல பூர்கள், புரிகள் உள்ளன. புரங்களைக் கொண்ட அகன்ற பரப்புக்கூட borough என்றழைக்கப் பட்டது. புரம், பூர், புரிகளில் இருந்த பெருஞ்செல்வரைப் பூரியர் என்றழைப்பது முற்றிலுஞ்சரி. இதே பொருளில் bourgeois என்றசொல் மேலைமொழிகளில் ஆளப்படும்.
       
bourgeoisie (n.) 1707, "body of freemen in a French town; the French middle class," from French bourgeois, from Old French burgeis, borjois (12c.) "town dweller" (as distinct from "peasant"), from borc "town, village," from Frankish *burg "city" (see borough). Communist use for "the capitalist class generally" attested from 1886.

ஆகப் பூரியர் என்பார் கடைசியிற் பார்த்தால் ஆங்கிலத்திற் சொல்லும் bourgeoisie தான். (நம்மூர் இடதுசாரிகள் எவ்வளவு ஆண்டுகள் இதையறியாது அவர்களின் நூல்களிற் பூர்ஷுவாக்கள் என்றே எழுதியிருப்பார்கள்? தமிழிலக்கியம் படிக்காமல் வறட்டுத்தனமாய் “தத்துவம்” பேசிக்கொண்டு இருந்தால் எப்படி? இப்படிப் பேசித்தானே Burten stein- ஐப் பின்பற்றி, கா. சிவத் தம்பியைப் பின்பற்றிச் சங்க காலத்தை segmentary states காலம் என்று நம்மூர் இடதுசாரியார் சொன்னார்? தமிழகத்தில் CPM/தமிழ்த்தேச மா.லெ. வேறுபாடு ஏற்பட்டதில் இதுவும் ஒன்று தானே? தமிழர் வரலாற்றை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டிருந்தால் தமிழகத்தில் பொதுவுடைமையர் இவ்வளவு பின்தங்கி இருக்க மாட்டார். இன்றுங்கூடத் தமிழ்த்தேச வரலாறு புரியாத மா.லெ. ஆட்கள் நிறையப்பேர் உள்ளார்.)

இப்போது மேலுள்ள 2 குறள்களையும், பரிபாடலையும் படியுங்கள். சரியான பொருள் சட்டென்று வந்து வீழும். வள்ளுவர் பேசுவதும் புரியும். 

அன்புடன்,
இராம.கி.

Wednesday, July 24, 2019

மாம வேவு.

அண்மையில் நண்பர் வினைதீர்த்தான் தன் பேர்த்தி வசந்தாவின் திருமணத்தில் மாம வேவு நடந்ததை ஒளிப்படங்கள் வழி தெரிவித்தார். அப்போது ஒரு நண்பர், 

“மாம வேவு என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்குத் திரு. வினைதீர்த்தான், ”மாம வேவு என்பது தாய்வீட்டுச் சீர்! மகள் வீட்டில் கல்யாணம் போன்ற முதல் சுப நிகழ்வுகளில் அந்தக் காலத்தில் ஓலைப்பெட்டியில் அரிசி, தேங்காய், கத்தரிக்காய் போன்றவற்றையும் பரங்கிக்காய், இலைக்கட்டு போன்ற கல்யாணத் தேவைக்கான பொருட்களையும் தர, அவற்றைப் பெண்வீட்டுப் பெண்பிள்ளைகள் பெற்றுக் கொண்டுள்ளார். தற்காலத்தில் அதன் குறீயீடாக வெள்ளிக் கடகத்தில் அரிசி கத்திரிக்காய், தேங்காய் வைத்து அதனை தாய் வீட்டுப் பங்காளி தலைப் பாகை கட்டி தலையில் வைத்து விளக்கினை நடுவில் வைத்து பெண் வீட்டார் அதனை இறக்கிக் கொள்கிறார். பொருட்களுக்காகத் தாய் வீட்டார் ஒரு தொகையும் கொடுக்கிறார். பதில் மரியாதை தாய் வீட்டாருக்கு மகள் வீட்டாரால் செய்யப்படுகிறது. 

கொடுத்தலும் கொள்ளலுமான மேன்மை உறவுக்கு முன்னோர் கண்ட வழிமுறை இம் மாம வேவு போன்றவையாகும். வேளென்ற வேர்ச்சொல்லும் கூறுகிறார். அறிஞர் திரு Krishnan Ramasamy மேல்விவரம் தரக்கூடும்” என்ற மறுமொழி அளித்தார்.

வினைதீர்த்தான் கேட்டதற்கான விளக்கத்தைச் சட்டெனச் சின்னஞ்சிறிதாய்ச் சொல்லிவிட முடியாது. சற்று நீளும். மாம வேவிற்கு மட்டுமின்றி (பல்வேறு குமுகங்கள் பின்பற்றிய, பொருள் விளங்காது சடங்கு ஆகிப் போன) பெரும் பாலான பழக்க வழக்கங்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டின், சடங்குகள், மரபுகள், சொற்களென எல்லாம் சேர்த்துப் பார்த்தால் தான் அவற்றின் பொருள் விளங்கும். 

முதலில் நகரத்தாரில் உள்ள 23 வகுப்பினரின் ஈனியல் விதப்பையும், அதன் பின் தாய்மாமன் விதப்பையும் (இது நகரத்தாரில் மட்டுமல்ல, பெரும் பாலான தமிழரிடையேயும் உண்டு.) முடிவில் மாம வேவு எனுங் கூட்டுச் சொல்லிலுள்ள பொருளையும் ஆழமாய்ப் பார்ப்போம்.

ஒவ்வொரு மாந்த உயிர்ச் சில்களிலும் (cell) 23 குருமயச் சோடிகள் (Chromosome pairs குருமம்= நிறம்; குருமயம் = நிறப்பொருள்) உள்ளன. 23 ஆம் சோடியைப் பாற்குருமயச் சோடி (pair of sex chromosomes) என்பார். பாற்குருமயச் சோடி யமைவதில் பெண்ணுக்கும் ஆணுக்கும் வேறுபாடுண்டு. 

குழவிக்குத் தாய்வழி வருவதைப் X பாற்குருமயம் என்றும். தந்தைவழி வருவதை Y பாற்குருமயம்  என்றுஞ் சொல்வர். ஒரு பெண் குழந்தையின் பாற்குருமயச் சோடியில் தந்தைக்கென பங்களிப்பில்லை. எல்லாப் பெண்களுக்கும் தாயின் X-ஏ இருபடியாகி XX எனப் பாற்குருமயச் சோடியே அமையும். (அதே போது மற்ற 22 குருமயங்களில் தாயும் தந்தையும் வெவ்வேறு விகிதங்களில் பங்களிப்பது உண்மையே). இது தவிர, தாயிடம் இருந்து அவளின் எல்லாக் குழந்தைகளுக்கும் நீட்குன்றிப் (mitachondria) பொருளும் வந்து சேரும். குன்றி போல் தோற்றி, நீள்வட்ட நூலாய்க் காட்சியளிப்பது நீட்குன்றி ஆகும். இந் நீட்குன்றி நம் எல்லோருடைய சில்களிலும் உண்டு. வேதியல் அடிப்படையில் நீட்குன்றி என்பது ஒரு வித அஃகில் அரப நெற்றுக் காடி (அஃகில் நெக் காடி) [Deoxyribo Nucleic Acid (DNA)] ஆகும். (இவ் வேதியற் பொருளை இங்கு நீளமாய் விளக்கத் தேவையில்லை.)

மேற்சொன்ன பாற்குருமய அமைப்பிற்கு மாறாய் ஆண்குழந்தையின் பாற்குருமயச் சோடியில், தாய்க்கும், தந்தைக்கும் சமபங்குண்டு. எல்லா ஆண்களுக்கும் XY என்றே பாற்குருமயச் சோடியமையும். (அதேபோது மற்ற 22 குருமயங்களில் தாயும் தந்தையும் வெவ்வேறு விகிதங்களில் பங்களிப்பர் உண்டு.) ஒவ்வொரு ஆணுக்கும் அவன் தந்தை, தந்தையின் தந்தை (தாத்தன்/பாட்டன்), தந்தை வழிப் பாட்டனின் தந்தை (பூட்டன்), தந்தை வழிப் பூட்டனின் தந்தை (ஓட்டன்) என ஆண்குருமயமும் (Male Y chromosome), தாய், தாயின் தாய் (தாய்வழிப் பாட்டி), பாட்டியின் தாய் (தாய்வழிப் பாட்டியின் தாய்- பூட்டி), பூட்டியின் தாய் (தாய்வழிப் பூட்டியின் தாய் - ஓட்டி) என X பாற்குருமயமும், நீட்குன்றி அஃகில் நெக்காடியும் வந்து சேரும்.

நகரத்தாரில் 23 வகுப்பினரின் குருமயங்களை ஈனியல் வழி ஆராய்ந்த மதுரைப் பல்கலைப் பேராசிரியர் இராம. பிச்சப்பன் “ஆச்சி வந்தாச்சு” என்ற தமிழிலக்கிய மாதிகையில் 18 வகுப்பாரின் ஆண்குருமய அடையாளத்தையும், எக்காலத்தில் இவ்வகுப்பார் தமிழகம் சேர்ந்திருக்கலாம் எனும் விவரத்தையுங் கொடுத்தார். கவனங் கொள்க! ஈனியல் சொல்வது வரலாற்றுக்கு முற்பட்டது பற்றியாகும். [வரலாற்றுக் காலத்தில், பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் மகன் கோச்சடையன் காலத்தில் (பொ.உ.671-710) தான் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து நகரத்தார் பாண்டி நாடு புகுந்திருக்கலாம் என்பது வேறு ஆய்வுச் செய்தி.] காவிரிப் பூம்பட்டினத்திற்கும் முன்னால் தமிழகத்தில் நகரத்தார் எப்போது அடையாளங் கொண்டார்?- என்பதைத் தான் ஈனியல் இங்கு சொல்ல முற்படுகிறது. இவ்வாய்வின் வழி ”நகரத்தாருள் பல்வேறு கலப்புகள் பல்வேறு காலங்களில் எழுந்திருக்கலாம்” என்பதும் புலப்படுகிறது.

ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவில் முதலிற் குடியேறிய முகன மாந்தரான நெய்தலாரின் (coastal people) அடையாளங்களும் இவருள் விரவியுள்ளது. மேற்கு யூரேசியரின் (west Eurasian) கலப்பும் நகரத்தாரிடம் உள்ளது. ஆத்திரேலோ ஆசியர்களின் (Australo Asiatic. சங்க இலக்கியம் இவரை நாகர் என்னும்) கலப்பும் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மற்ற குமுகங்களுடனும் கூட நகரத்தாருக்கு ஓர் ஒருமை காணப்படுகிறது. கொஞ்சங் கொஞ்சமாய் இப்படிப் பல்வேறு குழுவினர் சேர்ந்து உருவானவரே நகரத்தார் ஆவர். 

தமிழகத்தின் இன்றுள்ள ஒவ்வொரு குமுகமுமே இப்படிக் கலப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டவர் தான். இது. ஈனியல் வழி பெறப்படும் அடிப்படைச் செய்தி. ”பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” எனுங் குறளை ஓர்ந்து பார்த்தால் அதில் ஆழமான பொருள் இருக்கிறது. கீழே 9 கோயில் நகரத்தாரின் வெவ்வேறு வகுப்பினரின் ஆண் குருமய ஈனியல் அடையாளத்தையும் அவர் தமிழகத்தில் உருப்பெற்ற கால ஆண்டுகளையும் கொடுத்துள்ளேன். இதில் பெறப்படும் முடிவுகளை வேறொரு கட்டுரையில் சொல்வேன். கீழுள்ளதில் வியப்பான குறிப்பு எதுவெனில் 23 வகுப்பினருக்கும் தனித்தனி ஈனியல் அடையாளங்கள் இருப்பதே..

இளையாத்தங்குடி: அரும்பாற் கிளையாரான பட்டினசாமி NRY H1a (48000); பெருமருதூர் 35000 NRY Ha-L1a; கிங்கிணிக்கூர் 35000 NRY Ha-L1a; ஒக்கூர் 25000 NRY HG J2a; கழனிவாசற் குடியார் 15000 NRY HG R1a1a; பெருஞ்சேந்தூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை); சிறுசேந்தூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை.)

மாற்றூர்: அரும்பாக்கூர் (55000) NRY HG F1; உறையூர் (48000) NRY H1a; மணலூர் 35000 NRY Ha-L1a; மண்ணூர் (இவரின் ஈனியற்கணிப்பு இன்னும் தெரிய வில்லை.); கண்ணூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை.); கருப்பூர் 15000 NRY HG R2a; குளத்தூர் 10000 NRY HG O2a1

ஏழகப் பெருந்திரு எனும் வயிரவன் கோயில் சிறுகுளத்தூர் 25000 NRY J2b; வயிரவன் கோயில் கழனிவாசல் 25000 NRY J2b; வயிரவன் கோயில் மருதேந்திரபுரம் 25000 NRY J2b

திருவேட்புர் மருதங்குடி இரணியூர் 35000 NRY Ha-L1a;

திருவேட்பூர் மருதங்குடி பிள்ளையார்பட்டி 35000 NRY Ha-L1a

இலுப்பைக்குடி சூடாமணிபுரம் NRY H1a (48000)

சூரக்குடி புகழ்வேண்டிய பாக்கம் 35000 NRY Ha-L1a

நேமம் இளநலம் 25000 NRY HG J2a

வேலங்குடி கழனிநல்லூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை.)

15000 - 55000 ஆண்டுகள் இங்கு விரவியிருந்த நகரத்தாரிடம் சில பழங்குடிப் பழக்கங்கள் மிஞ்சிக் கிடப்பதும், மாமன் (அம்மான் என்றும் எங்கள் பக்கஞ் சொல்வர்) உறவிற்கான சிறப்பு இன்றுங் குறையாதிருப்பதும் ஆழ்ந்து நோக்கத் தக்கன. [சிலம்பைப் படித்தால் இன்றும் சில பழமரபுகள் மாறாதிருப்பது புரியும்,] தமிழ் நாட்டில் எல்லாக் குமுகத்தாருமே மாமனுக்கு (அப்பாவையும் மீறி) ஏன் இவ்வளவு முகன்மையளிக்கிறார்?- என்பதும் வியப்பானது. 

கூர்ந்து காணின் நகரத்தார் திருமணங்களை முன்நடத்தும் உரிமைபெற்றவர் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆன தாய்மாமன்களே. அதே பொழுதில் திருமணங்களில் அப்பாக்களுக்கு எனச் சில சிறப்புகள் உண்டு தாம். ஆனால் அவை சட்டபூருவச் செயல்களுக்கும் வாழ்த்துக்கும் மட்டுமே முகன்மையுறும். சடங்குகளில் அப்பா சற்று ஒதுங்கியே நிற்பார். நகரத்தார் திருமணச் செயற்பாடுகளை இன்றும் நிருவகிப்பது பெரும்பாலும் பெண்களே. திருமண வீட்டு ஆண்கள், பெண்கள் சொல்வதற்குத் தக்க, கூடமாட, நடந்து கொள்வார். அவ்வளவு தான். தாய்வழி உறவினரே திருமணங்களில் முன்னுரிமை பெறுவார். மொய்ப்பணம் எழுதுவதிலும் கூடத் தாய்மாமன் எழுதும் தொகையே அதிகமாகும்.

தமக்குள் ஆண் குருமய உறவுள்ளவர் அனைவரையும் நகரத்தார் பங்காளிகள் என்றழைப்பார். ஆணாதிக்கக் குமுகாயத்தில் சொத்திலும், குமுகப் பொறுப்பிலும் பங்கு கேட்க உரிமை பெற்றவர் பங்காளிகள். (சற்று தொலைவில் உள்ளவர் கோயிற் பங்காளிகள்.) எவ்வளவு உரிமை என்பது வெவ்வேறு குமுகங்களின் மரபைப் பொறுத்தது. பெண்களின் நீட்குன்றி வழியான உறவினர் அனைவரையும் தாயத்தார் எனவும் தாய பிள்ளைகள் என்றும் நகரத்தார் அழைப்பார். தாயத்தாருக்குச் சில விதப்பான உரிமைகள் உண்டு. உண்மையில் தமிழ்க் குமுகங்கள் அனைத்துமே ஒரு காலத்தில் பெண்வழிக் குமுகங்களே. ஆணாதிக்கம் ஏற்பட்ட பிறகே, தந்தைவழிக் குமுகங்களாய் நாம் மாறினோம். சொத்துடைமை ஏற்படாக் காலத்தில் தாயமே முகன்மை கொண்டது. சொத்து என்று வந்த பின்னரே பங்காளுமை, குமுகங்களில் பெரிதாயிற்று.

அப் பங்காளுமைக்குப் பின்னுங்கூட தாய உரிமைகள் இன்று வரை மறுக்கப் படவில்லை. தாய்க்கு, பாட்டிக்கு, பூட்டிக்கு, ஓட்டிக்கு மாறாய் அவரவரின் சோதரர் சடங்குகளில் முகன்றிருப்பார். அதாவது அம்மாவை முன்னிறுத்துவதாய் அம்மான் (அம்மாவின் சோதரன்) நின்றிருப்பார். நினைவு கொள்க. ஒருத்தி தன் மகளுக்கு மட்டுமின்றி மகனுக்கும் கூடத் தன் X பாற்குருமயத்தையும், நீட்குன்றிப் படிமத்தையும் அளிக்கிறாள். அதாவது என் அம்மாவைப்போலவே என் அம்மானும் இவற்றின் படியைத் தம் அம்மாவிடமிருந்து பெற்றிருப்பார். எனவே ஆணாதிக்கக் குமுகாயத்தில் பெண்ணுரிமையை மறைமுகமாய் நிலைநாட்டுவதாய் என் அம்மான் என் அம்மாவிற்குப் பகரியாவது இயற்கை. இனித் திருமணக் கொண்டாடல் என்றால் என்னவென்று பார்ப்போம்.

திருமணத்திற் கூடுவோர்க்கு நல்ல சாப்பாடு கொடுத்து விருந்து வைத்தலும், உறவினர் ஆடிப் பாடிக் குலவுவதும், மணமக்களுக்குச் சீரும் பரிசுகளும் தருவதுமே குமுகக் கொண்டாட்டமாகும். பழங்குடிக் காலத்தில், தாய்வழிக் குமுகக் காலத்தில், திருமணம் (பெண்ணைப் பெற்றவரும், பிள்ளையைப் பெற்றவருங் கொண்டாடுவது), இன்னொரு வீட்டில் தம் பெண் குடிபுகுதல், அப்படிக் குடிபுகுந்த வீட்டில் தம்பெண் பிள்ளை பெறுதல் போன்ற நல் நிகழ்ச்சிகளை தாயத்தார் சிறப்பாகக் கொண்டாடினார். ஏனெனில் பெண் வழியே குடி தொடரும் நிகழ்வுகள் அவையாகும். சொத்துரிமை, ஆணாதிக்கம் ஆகியவை ஏற்பட்ட பின்னுங் கூட இப்பழக்கத்தைத் தமிழர் தொடர்கிறார்.

சரி வேவெனுஞ் சொல்லிற்கு வருவோம். வணிக வருக்கம் என்பது முல்லை நிலத்திலேயே தமிழரிடை எழுந்து விட்டது. முல்லை வாழ்க்கையில் பழங் குடிகள் ஊர் வீட்டு ஊர் வந்து பெண்ணெடுப்பதும், கொடுப்பதுமான பழக்கம் இருந்திருக்கும். நம் வீட்டுப்பெண் இன்னொரு வீட்டிற்குக் குடிபுகுகிறாள் எனும் போது, பெண்ணின் மாமன், பெண்ணின் தாய்க்குப் பகரியாய், மாப்பிளை வீட்டிற்குச் சென்று குடிபுகற் சடங்கைக் கொண்டாடுவான். குடிபுகற் சடங்கைப் பெண்ணழைப்பு என்று நகரத்தார் சொல்வர். மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் இப்பெண்ணழைப்பிற்கு வரும் விருந்தினர் எல்லோருக்கும் பெண் வீட்டாரே விருந்து கொடுப்பதாய் ஓர் ஐதீகம் இதிலுண்டு  சாப்பாடெனில் வாழை இலையில் வெந்த சோறும், குழம்பும் (கத்திரிக்காய், பரங்கிக்காய் போன்றவை இருந்தால் இன்னுஞ் சிறப்பு), (பொரியல், மசியல், வதக்கல் முறைகளில் செய்யப்பட்ட) பல்வேறு காய்கறிகளும் பழங்களும் பாயசமும் இருக்க வேண்டும் தானே? இந்த வேவின் உள்ளார்ந்த பொருளாய், சாப்பாடு கொணர்வதே வெளிப்படுகிறது. எப்படி? .

வெள், வெட்கை> வெக்கை, வெள்> வெய்> வெய்யில், வெய்> வெய்யோன், வெய்> வெயர்> வெயர்வை> வேர்வை, வெய்> வே> வேகு, வேகு> வேகம் = கடுமை. வே> வெந்தை, வே> வேன்> வேனல்> வேனில், வே> வே> வேம்பு, வேம்>வேங்கை, வெய்ம்மை.வெம்மை, வெம்> வெம்பு> வெப்பு, வெள்> வெது> வெதும்பு> வெதுப்பு எனும் சொற்கள் எல்லாமே எரிதல், சூடு தொடர்பானவை. அரிசியை வேக வைக்காது நாம் சாப்பிட முடியுமோ? வேள்வு> வேவு என்பது வெந்த சோற்றுக்கு இன்னொரு பெயர். இதை வேள்வு= விருப்பம், வேய்வு= சூடிக் கொள்வது என்றெலாம் கருத்துமுதல் வாதத்தில் பொருள் சொல்ல முற்படுவது அவ்வளவு சரியென எனக்குத் தோன்றவில்லை. வேவு என்று சுடுசோற்றைக் குறிப்பது இச்சடங்கில் அரிசி கொண்டு வரும் கடகத்தால் புலப்படுகிறது.

இன்றும் ஐயனார் கோயிலிலும், குலதெய்வக் கோயில்களிலும் படைக்கும் போது கூடியாக்கி உண்ண, அண்டா, அண்டாவாய்ச் சோறு வடித்துப் போடுகிறாரே? அதில் மலை மலையாகக் குவிந்து கிடக்கும் சோற்றை அள்ள ஓலைக் குடல், கடகம் போன்றவையே பயன்படும். ஓலைக் கடகத்தில் சோற்றை அள்ளி விருந்து கொடுக்கும் போது தோளிலோ, தலையிலோ சுமக்க முயன்றால் சூடு தாங்கத் துண்டு வேண்டுமே? எல்லா வேவுக் கடகங்களிலும் பழங்குடிக் காலத்தில் சுடுசோறே இருந்திருக்கும். (இன்று சுடு சோற்றைக் கொணராது சடங்கிற்காக அரிசி தூக்கி வருகிறார்). சுடுசோற்றை உணர்த்தும் முகமாய் தலையில் சும்மாடு கட்டித் தலைக்கு மேல் கடகத்தைக் காட்டிப் பின் இறக்குவார். செல்வம் பெருகிய வீட்டில் ஓலைக் கடகம், வெள்ளிக் கடகமாகும்., மற்றோர் வீட்டில் துருவேறா எஃகிலான நிலைவெள்ளிக் (Eversilver) கடகமாகும். பெண்வீட்டு ஆண்கள் கடகத்தைத் தலையில் தூக்கி யிருக்க, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் அதை இறக்குவர். சாப்பாட்டிற்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் (வாழையிலை முதற்கொண்டு) வேவோடு வந்து சேரும். (இக்காலத்தில் பலரும் இந்த உடன்வரும் பொருட்களை மறந்து விடுகிறார். எல்லாம் அவக்கரமாகி விட்ட, செலவாகி விட்ட காலம். மரபுகள் கொஞ்சங் கொஞ்சமாய் குறைகின்றன, மாறுகின்றன, பொருள் புரியாது போகின்றன.) .       

இங்கே 3,4 வேவுகளை விளக்கவேண்டியுள்ளதால், முதலில் ஆயாள், தாய்/அம்மா, மகள் என்ற 3 தலைமுறைகளை விவரிக்கிறேன்.. (அம்மாவின் தாய் எங்கள் பக்கத்தில் ஆயாளென அழைக்கப் படுவாள்.) பெண்ணழைப்பு வீட்டில் பெண்ணின் அண்ணன், தந்தை, சுற்றத்தார் வேவு தூக்க, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் வேவு இறக்குவார். இதைப் பால்வேவு (மாப்பிள்ளை வீட்டில் மணமாகிப் போகும் பெண் முதலில் பால்காய்ச்சினால் இது பால்வேவு), பொங்கல் வேவு (மாப்பிள்ளை வீட்டில் மணமாகிப் போகும் பெண் முதலில் சோறாக்கிப் பொங்கி வடித்தால் இது பொங்கல் வேவு) என்றும் கூறுவார்.

திருமணத்திற்கு முதல்நாளோ, திருமணத்தன்றோ நடக்கும் மாம வேவு திருமணப் பெண்ணின் தாயின் பொருட்டு, ஆயாள் வீட்டிலிருந்து வரும் தாய்மாமன் செய்வதாகும். திருமணவேவு என்பது பெண் வீட்டார் வேவு தூக்க, மாப்பிள்ளை வீட்டார் இறக்குவது. பிள்ளை பிறந்து சற்று வளர்ந்த பிறகு, பிள்ளையின் மாமன் விளையாட்டுப் பொருள்களுக்கான சீர்களுடன் வந்து சோதரியின் வீட்டில் நிகழ்த்துவது விளையாட்டுப் பெட்டி வேவு. எல்லா வேவுகளிலும் வேவுக் கடகங்களின் எண்ணிக்கை ஒற்றைப் படையாகவே இருக்கும், (இரு வேறு பிரிவினர் ஒன்றாகவேண்டும் சடங்கல்லவா? எனவே ஒற்றைப் படை) இதில் இரட்டைப் படை கூடாது. (இரள்தல் - பிரிதல். ஒரு நற்சடங்கில் கூடலே பெரிது, பிரிதல் எழக்கூடாது..). வேவைத் தூக்கி நிற்போருக்கும் இறக்குவோருக்கும் இடையே ஒரு சில்லேட்டு விளக்கும் இருக்கும். இருவரும் ஒரு நடுவீட்டுக் கோலத்தின் மேல் நிற்பார்.


இச்சடங்கு மண்டப வாசலில் நடக்கும் (வருவோர், போவோர் இருப்பதால் அங்கு காற்று சற்று அதிகமாகலாம். எனவே சடங்கில் வைக்கப்படும் விளக்கு அணைந்து விடக் கூடாது என்பதற்காக சில்லேட்டு விளக்கு வைப்பார் (சில்லேடு என்ற சொல் ஏற்பட்டவிதம் சிறப்பு. இற்றைக்கால கிளர்த் தகடுகளுக்கு -glass plates- முன்னால், சில குறிப்பிட்ட கொங்குநாட்டு மண்ணூறல் படிவங்களில் (mineral deposits) இருந்து பிரித்துப் பெறப்பட்ட சில்லேடுத் தகடுகளை பயன்படுத்தியே விளக்கின் சுவாலைக்கு அணைப்புக் கொடுப்பர். நாலு பக்கமும் சில்லேடுகள் பொருத்தப்பட்ட விளக்கு சில்லேட்டு விளக்கு. சில்லேடுகள் ஒளியை ஓரளவு கடத்தும். கொஞ்சம் மழுக்கும். இச் சில்லேடு மேலை மொழிகளில் போய் மீண்டும் வெள்ளையர் ஆட்சியில் நமக்குத் திருப்பி வந்தது..தோற்றுவாய் தெரியாத பலர் இச்சொல்லை மேலைச் சொல் என்பார். [slate (n.) mid-14c., from Old French esclate, fem. of esclat "split piece, splinter" (Modern French éclat; see slat), so called because the rock splits easily into thin plates. As an adjective, 1510s. As a color, first recorded 1813.] சில்லேட்டு விளக்குகள் நகரத்தார் திருமணங்களில் பெரும்பங்கு வகிக்கும்.

இறக்கப்பட்ட கடகங்கள் தூக்கி வந்தவராலும், இறக்கியவராலும் சேர்த்தே பூசையறைக்குக் கொண்டு போய் படையலாய் முன்னோருக்குப் (அவர் சார்பாய் ஒரு விளக்கு அந்த அறையில் இருக்கும்.) படைக்கப் பட்டுப் பின் விருந்திற்குக் கொள்வதாய்ப் புரிந்துகொள்ளப்படும்.

ஒரு காலத்தில் வெந்த சோறு வேவாகியது. இன்று வேகாத அரிசி அதற்குப் பகரியாகிறது.

அன்புடன்,
இராம.கி.

Sunday, July 07, 2019

Smombie

அண்மையில் நண்பர் சிங்கை பழனி, “Smombie எனும் ஆங்கிலச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Smartphone zombie எனும் இரு ஆங்கிலச் சொற்கள் சேர்த்து உருவாக்கப்பட்ட சொல் தான் smombie தங்கள் திறன்பேசியில் பேசுவதில் கவனம் செலுத்தி தங்களைச் சுற்றியுள்ள சூழலில் கவனம் செலுத்தாது செல்லும் பாதசாரிகளைக் குறிக்கும் சொல். Zombie எனும் சொல்லுக்கு இயந்திரன் போன்று இயங்குபவன் என்றும் நடைபிணம் என்றும் பொருள் கொள்வதுண்டு. திறன்பேசி நடை(ப்)பிணம் என்று Smombie க்கு இணையாகச் சொல்லை உருவாக்கலாமா? வேறு சொல் உண்டா?” என்று தன் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார். (https://www.facebook.com/groups/STC.Ilakkiya.Pannai/permalink/2077674829029008/)

நான் திறன்பேசி என்ற சொல்லை ஏற்பவனல்லன். திறன்/திறம் என்ற சொல் ability க்குச் சரிவரும். ”அவன் மிகத் திறமையானவன், திறன்கொண்டவன்” எனும்போது smartness என்று நாம் பொருள் கொள்வதில்லை. ”சமர்த்து” என்று பேச்சுவழக்கில் ஆங்கிலச்சொல்லைக் கையாளும் நாம் ஏற்கனவே நம் வழக்கிலிருந்த நல்ல தமிழ்ச்சொற்கள இழந்துவிட்டோம். சூட்டிக்கை (”சிறு வயதிலேயே அவன் சூட்டிக்கையாக இருந்தான்”, ”வேலைசெய்வதில் அவன் படு சூட்டிக்கை”), சூடிக்கை (சூட்டிக்கையின் தொகுப்பு) எனும்போது நாம் smartness என்ற பொருளைத்தான் குறிக்கிறோம். எம் சிவகங்கை வட்டாரத்தில் இச்சொல்லை இன்றும் புழங்குவதை நான் காண்கிறேன். பாமரர் புழங்குவதை நாம் புழங்கினால் அது கொச்சை என்றெண்ணி யாரோவொரு படித்த அறிவாளி ”திறன்” என்ற சொல்லைப் பரிந்துரைத்திருக்கிறார். என்னைக் கேட்டால், ”இப்பரிந்துரை தவறு. பாமரர் சொல்லும் சூடிக்கை சிறப்பு” என்பேன்.

சூட்டிக்கை என்பது சுடு>சுட்டு>சுட்டி>சுட்டிகை>சுட்டிக்கை>சூட்டிக்கை என்றபடி வளர்ந்த சொல். ஒரே கால நேரத்தில் ஒன்றின் செலவை (செலவு= செல்லும் தூரம்) இன்னொன்றின் செல்வோடு ஒப்பிட்டால், எதோவொன்று முற்படுவதை விரைவு என்கிறோம். இவ்விரைவு தன்முனைப்பாலும். அறிவு சேர்வதாலும், பல்வேறு திறமைகளாலும் ஏற்படலாம். எப்படி ஏற்பட்டது என்பது முகன்மையில்லை. விரைவாகச் செயல்படுகிறதா என்பதே முகன்மை. smartphoneகள் வெறும் phoneகளாக மட்டுமின்றி பல்வேறு செயற்பாடுகளுக்கும் ஆனவையாக இன்று மாறிவிட்டன. பேசுதலென்பது அதன் ஒருபகுதி. எதைச் செய்தாலும், நுட்பியல் வளரவளர, smartphone இன்னும் விரைவாகச் செய்கிறதென்பதே நுணுகி அறியவேண்டியதொன்றாகும்.

தமிழில் விரைவைக்குறிக்க பல ஈரொலிச் சொற்களைக் குறிப்பிடுவோம். பெரும்பாலும் இவை உயிர்மெய்க் குறிலை முதலெழுத்தாகவும், ல/ள/ய/வ. ர, ற/ன, ட/ண, த/ந, ச ஆகிய ஒலிகளை இரண்டாம் எழுத்தாகவும் கொண்டு அமையும். இனி வருவது பாவணரின் ”முதற்றாய்மொழி” நூலிலிருந்து எடுத்தது. (தமிழ்மண் பதிப்பு. பக். 63-67) (ஆங்காங்கே என் திருத்தமும் இருக்கிறது.)
-------------------------------------
காட்டாக ல/ள/யகர எதுகையில் ஒல்லென, ஒய்யென, துள்>துண்>துண்ணென, துல்>துன்>துனை>துனைவு = விரைவு, இயக்கம். thermodynamics தெறுமத் துனைமவியல் என்று பரிந்துரைத்தேன். ப. அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியிலும் துனைமவியல் = dynamics என்பதற்கு ஈடாக வருவதாய்ச் சொல்லப்படும். துவல், பொள், முண்>முண்டு>மண்டு = விரைவு, முள்>முய்> முயல் = விரைவாய் ஓடும் விலங்கு, வல்= விரைவு போன்ற சொற்களைச் சுட்டலாம்.

ரகர எதுகையில் சுரு>சுருக்கு = விரைவு, சுருசுருப்பு = ஊக்கம், சுரு>சரு>சரேல், சுரு>சரு>சர>சரசர, துர>துரை = வேகம் துரத்தல் = முடுக்குதல், (புரு)>பர>பரபர, (புரு)பரு>பரி = வேகம், பரிதல் = ஓடுதல், புரு>பொரு>பொருக்கு> பொருக்கென எழுந்தான். விரு>விருவிரு>விருவிருப்பு = விரைவு, விரு>விருட்டு, விரு> விர>விரை

றகர எதுகையில் குரு>குறுகுறு, குறு>குறும்பு, சுறு>சுறு>சுறுசுறுப்பு,  சுறு> சுறுதி= வேகம், துறு>துறுதுறு, (நுறு)>நொறு>நொறில்= விரைவு, பறு>பறுபறு> பறபற; பற>பறப்பு, பறவை, முறு>முருக்கு= வேகம், துடுக்கு

டகர எதுகையில் (உடு)>ஒடு>ஓடு = விரைந்துசெல், குடு>குடுகுடு> குடு>கடு. கடுத்தல்  விரைதல், கடு>கடுகு>கடுக்கம் = விரைவு, கடு>கடி>கடிது = விரைவு; சுடு>(சுட்டு)>சுட்டி = துடுக்கு, குறும்பு, சுட்டி>சுட்டிக்கை>சூட்டிக்கை = விரைவு, சுடு>சடு>சடுதி = விரைவு; சடு>சடுத்தம் = விரைவு. சடு>சட்டு>சட்டென, சட்டு> சட்ட = விரைவாக; துடு>துடுக்கு = வேகம், துணிவு, குறும்பு, துடு>திடு>திடும்> திடு>திடீர், துடு>துடி>துடிப்பு; (நுடு)>நொடு>நொடுநொடு, நொடு>நொடுக்கு, (புடு)>பொடு>பொடுக்கு, (புடு)>படு>படபட>படபடப்பு;  பட>படக்கு> படக்குப் படக்கு முடு>முடுகு>முடுக்கம்= acceleration; முடுகு வண்ணம், முடுக்கு> மொடுக்கு, முடு>மொடு>மொடுமொடு, முடு>(மடு)>மட>மடமட

தகர எதுகை குது>குதுகுது>குதுகுதுப்பு; குது>கது>கதும், கது>கதழ்>கதழ்வு = விரைவு; கது>கதி= விரைவு, வேகம்;ல் (புது)>(பது)>பதறு>பதற்றம்>பதட்டம், (பது)>பதை>பதைபதை; (முது>(மது)>மத>மதமத, விது>விதுவிது>விதுவிதுப்பு = நடுக்கம், விரைவு; விது>விதும்பு>விதுப்பு; விதும்பல் = விரைதல்,

சகர எதுகை (குசு)>கிழு>கிசுக்கு, புசு>புசுக்கு><பொசுக்கு, புசு>பொசு>பொசுபொசு, விசு<விசுவிசு; விசு>விசுக்கு, விசு>விசை = வேகம். விசை என்றால் force இந்தக் காலத்தில் புரிந்துகொள்கிறோம். அது வேகம், முடுக்கத்தின் வழி, நியூட்டன் விதிகளைப் புரிந்துகொண்டதால் பெற்ற பொருள்.     
------------------------------------

மேலேயுள்ளதைப் படித்தால் சூட்டிகையைச் சூடிதி என்றுஞ் சொல்லலாமென விளங்கும். சூட்டிகைபேசி என்பதில் பேசியை அழுத்தாமல் அதன் பொதுப் பொருளைச் சொல்லவேண்டுமெனில் சூடிதி என்றே அக்கருவியைச் சொல்லி விடலாம். சூட்டிகைக்கு தெலுங்கு, கன்னடத்தில் சூடி என்பது தான் இணைச் சொல். என்னைக்கேட்டால் சூடிதி என்பது smart phone க்கு இயல்பாகவும், மரபாய்ப். பொருந்துவதாயும், சுருக்கமாயும் அமையும்.

அடுத்தது zombie (n.) இதை ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகராதி 1871, of West African origin (compare Kikongo zumbi "fetish;" Kimbundu nzambi "god"), originally the name of a snake god, later with meaning "reanimated corpse" in voodoo cult. But perhaps also from Louisiana creole word meaning "phantom, ghost," from Spanish sombra "shade, ghost." Sense "slow-witted person" is recorded from 1936.Relate entries & more என்று சொல்லும். "reanimated corpse" என்ற பொருளை வைத்துக்கொண்டு யாரோ ஒருவர் நடைப்பிணம் என்றிருக்கிறார். மாறாகச் சாம்புதல் (= உணர்வழிதல், வாடுதல், கூம்புதல், ஒடுங்குதல், கெடுதல், குவிதல், ஒளிமழுங்குதல்( என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டு சாம்பி என்றே சொல்லலாம். Smartphone zombie என்பதைச் சூடிதிச் சாம்பி>சூம்பி (மெலிந்து வாடுபவன்) என்றே சொல்லலாம்.

Smartphone zombie = சூடிதிச் சாம்பி
Smombie = சூம்பி

அன்புடன்,
இராம.கி.

Friday, July 05, 2019

ச‌துரம்

"ச‌துரம் தமிழா? நாற்கோணம் என்பது பொருந்துமா? ச‌துரம் நாற்கோணம் என்றால் செவ்வகம் என்பது தமிழா அல்லது வேறு பெயர்கள் உள்ளனவா?" என்று Prasanna Pna என்பவர் சொற்களம் முகநூல் குழுவில் 2 நாட்களுக்குமுன் ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு மறுமொழிக்கும் விதமாய் நண்பர் கார்த்திக் கரன் (Karthik Karan) http://valavu.blogspot.com/2015/07/4.html?m=1 எனும் என்னுடைய வலைப்பதிவுக் கட்டுரையைச் சுட்டிக்காட்டினார். (நான் ஊர் சுற்றிக் கொண்டு இருந்ததால் இவ்வுரையாடலைச் செல்பேசியில் மோலோடப் படித்ததோடு சரி. முறையாக மறுமொழிக்கவில்லை.) என்கட்டுரையில் சதுரம் பற்றியும், அதன் தமிழ்மை பற்றியும், சொற்பொருளும், சொல்லெழுந்த விதமும் கூறப் பட்டிருந்தது. உரையாடலில் கலந்து கொண்ட பலரையும் அக் கட்டுரை நெகிழ்த்தியது போல் தெரியவில்லை. நாக. இளங்கோவனையும், கார்த்திக் கரனையும் தவிர மற்றோரெலாம் சதுர், வடமொழிச்சொல்லென்றே எண்ணினார் போலும். தமிழின்மேல் அவ்வளவு அவநம்பிக்கை பலருக்கும் உள்ளது. ”இராம.கி.க்கு வேறு வேலையில்லை. இப்படி ஏதோ உளறுவார்” என்றெண்ணி அவரவரின் கருதுகோளுக்கே போய்விட்டார் போலும்..

இதில் வேடிக்கை என்ன தெரியுமோ? வடமொழியெனக் கருதும் பலரும் மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்ப்பதேயில்லை. ஒருசொல் தமிழாவென ஐயுறுவதுபோல் அது சங்கதமாவென ஐயப்படார் போலும். தமிழுக்கு ஒரு ஆய்வுமுறை, சங்கதத்திற்கு இன்னொரு ஆய்வு முறையோ?தம்மை அறியாமலே ”சங்கதம் மேடு, தமிழ் பள்ளம்” எனும் முன்முடிவிற்கு எப்படியிவர் போன்றோர் வருகிறார்? வியப்புத்தான். பொ.உ..250 இலிருந்து பரப்பப்பட்டு வரும் சதுர்வருணக் கொள்கை நம்மை எப்படியெல்லாம் மழுங்கடிக்கிறது? அப்புறமென்ன பகுத்தறிவு பேசுகிறோம்? தமிழ்த்தேசியம் பேசுகிறோம்? நம் சிந்தனைச் செயற்பாட்டிலேயே (thought process)-நாம் அடிமை யுற்றுக் கிடக்கிறோமே? அது எப்படி? மற்றசொற்களைப் போலவே எண்கள் பற்றிய சொற்களிலும் நாம் பிறழ்ந்து கிடக்கிறோம் என்பதே என் புரிதல். ”எல்லாவற்றையும் சங்கதமே கடன்கொடுத்தது. நாம் கடனாளிகள்” என்று நம் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதா, என்ன? எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்தபின்தான் நான் அக்கட்டுரை எழுதினேன். சதுருக்கு எந்த வேரும் மோனியர் வில்லியம்சில் தரப்படவில்லை.

ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியும் கூட எந்த வேரையுங் காட்டாது. (https://www.etymonline.com/), Sanskrit catvarah, Avestan čathwaro, Persian čatvar, Greek tessares, Latin quattuor, Oscan petora, Old Church Slavonic četyre, Lithuanian keturi, Old Irish cethir, Welsh pedwar என்ற இணைச்சொற்களைத் தொகுத்துக் காட்டி,. மொழியியலார் ஏற்றுக்கொண்ட இந்தையிரோப்பிய ஒலிமாற்றங்களைக் கொண்டு ”நாலு” எனும் பொருள் குறிக்கும் முந்தைய இந்தையிரோப்பிய அடிச்சொல்லாக (Proto-Indo-European root) *kwetwer-”ஐக் காட்டி கீழ்க்கண்டவாறு விளக்கம் சொல்லும்.  .

It forms all or part of: cadre; cahier; carillon; carrefour; catty-cornered; diatessaron; escadrille; farthing; firkin; fortnight; forty; four; fourteen; fourth; quadrant; quadraphonic; quadratic; quadri-; quadrilateral; quadriliteral; quadrille; quadriplegia; quadrivium; quadroon; quadru-; quadruped; quadruple; quadruplicate; quarantine; quarrel (n.2) "square-headed bolt for a crossbow;" quarry (n.2) "open place where rocks are excavated;" quart; quarter; quarterback; quartermaster; quarters; quartet; quarto; quaternary; quatrain; quattrocento; quire (n.1) "set of four folded pages for a book;" squad; square; tessellated; tetra-; tetracycline; tetrad; tetragrammaton; tetrameter; tetrarch; trapezium.

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit catvarah, Avestan čathwaro, Persian čatvar, Greek tessares, Latin quattuor, Oscan petora, Old Church Slavonic četyre, Lithuanian keturi, Old Irish cethir, Welsh pedwar. Related Entries: quadri-, quadru-, tetra-, cadre, cahier, carillon, carrefour, catty-cornered, contesseration, diatessaron, escadrille, farthing, firkin, fortnight, forty, four, fourteen, fourth, quadragesima, quadrangle

மேலுள்ளதைக் கூர்ந்துபடித்தால் உங்களுக்கே விளங்கும். க்வெத்தர் என்ற சொல்லின் உள்ளார்ந்த பொருளென்ன? எப்படியது எழுந்தது? - என்று ஏதாவது மேலே கூறப்பட்டுள்ளதா? நாலு என்று கருத்தீடு (concept) இந்தக் க்வெத்தரோடு எப்படி இழைந்தது?.இவர் காட்டுவது தொல்காப்பிய இலக்கணத்தின் படி சொன்மை எனப்படும். பொருண்மை அல்ல. ”நாலு என்ற பொருள் காட்டும் சொல் இப்படி அமையும்” என்று இவர் காட்டுகிறார். ”நாலு என்ற பொருள் க்வெத்தருக்கு எப்படி வந்தது? அதன் பின்புலம் என்ன?” என்ற கேள்வி களுக்கான விடைகள்  எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் விளங்காது.

பல மேலைச்சொற்களுக்கும் இதே நிலைதான். மேலை இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலுக்கும் பாவாணர்வழி சொல்லப்படும் தமிழ்ச்சொற் பிறப்பியலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான். இது தெரியாமல் ”பாவாணர் தவறு, மேலையர் உசத்தி” என்று பலரும் சொல்லிவிடுவார். பத்து உறவுமொழிகளில் உள்ள ஒரு பொருட்சொற்களைத் தொகுத்து முன்கொண்ட விதிகளின்படி இட்டுக்கட்டிய சொல்லாய் ஒன்றைப் படைத்து, அதற்கு முன்னால் ஓர் உடுக்குறியும் போட்டு, இதுதான் முந்தை இந்தையிரோப்பிய மூலச்சொல் என்று ஓதுவதோடு மேலைச் சொற்பிறப்பியல் நின்றுகொள்ளும்.

தமிழ்ச்சொற்பிறப்பியல் அப்படி நிற்காது, ”தமிழிலுள்ள எண்ணுச்சொற்கள் 0, 1, 2, 3, 5, 10, 100, 1000 என்பவற்றை ஒட்டியெழுந்தன மற்ற எண்ணுச்சொற்கள் எல்லாம் இவற்றிலிருந்து பெறப்பட்டவையே” என்ற ஒழுங்கை முதலிற் சொல்லும்..அடுத்து, “நாலு என்பது ஐந்திற் குறைந்த பொருளில் (ஒருவிரல் மடங்கி) நலிந்த கையைக் குறித்து நலிகை>நாலிகை>நால்கை என்றானது” என்று ஒருசொல் பிறந்த பொருளடிப்படையைச் சொல்லும். அடுத்து அதே பொருளின் அடிப்படையில் இன்னொரு சொல் பிறந்ததை இனங் காட்டும். ”நலிதலின் இன்னொருசொல் சொதுத்தல் ஆகும்; சொத்தை/சொட்டையென்ற சொல்லையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். சொடுக்கை/சொதுக்கை = நலிந்த கை, (ஒருவிரல் இங்கும் மடங்கியது. இன்னொருவகையிற் சொத்தாங்கை> சோத்தாங்கை என்றாகும், வலக்கைப் பழக்க ஆதிக்கத்தால் ”குறைந்த கை” என்று பொருள் கொண்டு இடக்கையைக் குறிக்கும்.)” என்று இன்னொரு சொல் வளர்ந்த ஏரணத்தைக் குறிக்கும். இந்த ஏரணம்தான் மேலை முறையில் சொல்லப்படாது. முடிவில் “கையின் இன்னொரு சொல் கரம். எனவே சொதுகரம்>சதுகரம்>சதுரம்” என்று இச்சொல் எழுந்த கதையைச் சொல்லும்.

”எனக்குக் க்வெத்தர் தான் முகன்மை, தமிழ்ச் சதுரம் முகன்மையில்லை” என்பவர் பொருண்மையை ஒதுக்குகிறார். மேலை மொழியாளர் சொல்வதை தலைமேல் கொள்ளுகிறார். பாவாணரைத் தூக்கியெறிகிறார் என்பது விளங்கும். ”இச்சொல் எப்படி எழுந்தது என்பதற்கு அப்புறம் தான் எப்பொழுது எழுந்தது?” என்று பார்க்கமுடியும். இதுதான் அறிவியல் முறை. மேலைச் சொற்பிறப்பியல் முறை பாதிக்கிணறு தாண்டுகிறது.

எங்கள் ஊர்ப்பக்கம் பாதிக்கிணறு தாண்டுவது நம்மை விழுத்தாட்டும் என்பார். கிணற்றைத் தாண்டுவது முகன்மை என்று எண்ணுவோர் பாவணரைப் படிப்பார். அப்புறம் உங்கள் உகப்பு. அடிமையாகவே இருப்போம் என்று நீங்கள் நினைத்தால் நானென்ன செய்யமுடியும்?. உங்களின் பல சொற்களைச் சங்கதத்திற்குத் தானம் செய்துவிட்டு வேறு புதுச்சொற்களைக் கால காலத்திற்கும் தேடிக்கொண்டேயிருங்கள். நீங்கள் வள்ளல் பாம்பரையைச்  சேர்ந்தவர் அல்லவா?!.

அன்புடன்,
இராம.கி.