Friday, September 20, 2019

சிலம்பு ஐயங்கள் - 23

பலருமெழுப்பிய குறுக்குவினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டு, "காட்சிக் காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரியமன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று நாலாங் கேள்விக்கு ஆன நீளவிடையில் தோய்ந்து விட்டேன். படித்தோரின் பொறுமைக்கு நன்றி. அடுத்த கேள்விக்கு வருவோம். ”கானல்வரியில் மாதவி மாலையைப் பாடுவதில் ஏதேனுங்குறிப்புண்டா? ’மாலை’ வசந்தமாலையைக் குறிக்குமா?” என்று திரு.முகுந்தன் ஐயப்பட்டது சரிதான். வசந்தமாலையெனும் முழுப்பெயரன்றி, மாலையெனும் விளிப் பெயர் சொல்லி கானல்வரி முழுக்கச் சிலேடையாய் ”பேறு காலத்தில் நம் வீட்டில் நடந்த கள்ளங்கள் எனக்குத் தெரியும், நீ இப்படிச் செய்யலாமா?” என்று கோவலனுக்குச் சுருக்கென உறைக்கும்படி மாதவி உணர்த்துவாள்.

”மருங்குவண்டு சிறந்தார்ப்ப” என்பதன் பின்வரிகளில், எத்தனை மாலைகள் வரும் தெரியுமா? தவிர, கணவன் எனத் தான் நினைத்தவன் செய்ததைக் குத்திக் கேட்பாள். குட்டு வெளிப்பட்டதைக் கண்டு, கோவலன் முணுக்கெனச் சினந்து போவான். புகார்க் காண்டத்தில் வசந்த மாலையின் சூழ்க்கும இருப்பு மேலோட்டமாய்ப் படிப்போருக்கு விளங்காது. ஆழ்ந்தோருக்கே விளங்கும். இச்சுருக்க மறுமொழியோடு நகர்வதற்கு என் மனம் ஒப்பவில்லை கானல்வரியின் பின்பகுதி விளக்காப் படாவிடில் சிலம்பின் முகனக் காதை புரியாது. அது ஏதோ பாட்டுங் கேளிக்கையுமான பகுதியென்றே பலரும் எண்ணுகிறார். கிடையாது. நெய்தலின் சோகம் அதனுளுண்டு. முன்சொன்ன தமிழாசிரியர் திரு.பழநியைத் தவிர வேறு யாரும் கானல்வரிக்குப் பொருள் எழுதி நான் கண்டது இல்லை. அவர் நூலைப் பார்த்தே நானும் புரிந்தேன். இப்பொருளை நானும் வேறிடத்தில் எழுதியதில்லை.   

வசந்தமாலை, மாதவி என்ற இரு பெயர்களுமே தமிழரை மயங்கடித்த குருக்கத்தியைக் குறிக்கும். 2009 இல் எழுதிய ”கண்ணகி. கோவலன், மாதவி - பெயர்ப்பின்புலம்” என்ற என் கட்டுரைத் தொடரைப் படியுங்கள். (இதுவும் திரு.நா.கணேசனை மறுத்தெழுதியது தான். சிலம்பு பற்றிய கணேசன் மடல்களைப் படித்தால் ஒன்று புலப்படும். சிலம்பை இழித்துரைப்பதில் அவருக்கென்னவோ அவ்வளவு விருப்பம். தான் சொன்னதைச் சரியென நிறுவ, எந்த வானத்தையும் வில்லாய் வளைப்பார். அதிற் பட்டகை (fact), இயலுமை (possibility), ஏரணம் (logic), ஒத்திசைவு (consistency) என எதுவும் பாரார்.)

http://valavu.blogspot.in/2009/03/1.html
http://valavu.blogspot.in/2009/03/2.html
http://valavu.blogspot.in/2009/03/3.html
http://valavu.blogspot.in/2009/03/4.html
http://valavu.blogspot.in/2009/03/5_29.html
http://valavu.blogspot.in/2009/03/6.html

பசந்தத்தில்/வசந்தத்தில் மாலுவது (மலர்வது/மயங்குவது) வசந்த மாலை. இக்கூட்டைச் சுருக்கி வசந்தாள், வசந்தி, வாசந்தி என்றெல்லாம் இன்று பெயர்வைத்துக் கொள்வார். ஆனாற்பலரும் அச்சொற்கள் குருக்கத்தியைக் குறிப்பதை உணரார். வசந்த காலத்தைக் குறித்ததெனக் குறைப்படப் பொருள் சொல்வார். ”ஜலசமுத்ரத்தைச்” சுருக்கி சமுத்ரமென்பார் பாருங்கள். அதுபோற் குறைப்புரிதல் அதுவாகும். மயக்கந்தருபவள் மாதவி; வசந்தத்தில் மால்க்குபவள் வசந்த மாலை. வசந்தாள், வசந்தி, வாசந்தியென்று சுருக்கி விளிப்பது போல் மாலையென்றும் அவள் பெயரைச் சுருக்கலாம். ”மாலை” யெனும் விளிப் பெயரைத் தன் கானல்வரியினூடே இருபொருள் படப் பலவிடங்களிற் பொருத்தி மாதவி கோவலனைக் குத்திக்காட்டுவாள்.

கானல்வரிப் பாட்டிற்கான உரையாசிரியர் விளக்கங்களை வேங்கடசாமி நாட்டார் நூலிற் பார்த்துக்கொள்ளலாம். வசந்தமாலை குறித்தெழும் உட்பொருளை மட்டுமே இங்கு குறிக்கிறேன். குரல்(ச), துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), இளி(ப), விளரி(த) தாரம்(நி) பொருந்திய தமிழிசை அடிப்படை அறிய எழுசுரங்கள் பற்றிய என்தொடரைப் படிக்கப் பரிந்துரைப்பேன்
.
http://valavu.blogspot.in/2008/03/1.html
http://valavu.blogspot.in/2008/03/2.html
http://valavu.blogspot.in/2008/03/3.html
http://valavu.blogspot.in/2008/03/4.html

கோவலன் முதலில் கானற்பாணியில் (முல்லையந்தீம்பாணி -மோகனம்- போல் இதுவும் ஒரு திறப்பண் தான். ச க1 ம1 த1 நி1 என்ற 5 சுரங்களில் இப்பண் அமையும்.) யாழால் கருவியிசை எழுப்பி, பின் “திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுவோச்சி” என்று கானல்வரிப் பாட்டை இசையோடு தொடங்குவான். தன் வரிகளின் உள்ளடக்கமாய், ”என் நடத்தையைக் கண்டு கொள்ளாதே! அப்படி இப்படித்தான் நான் உன்னோடு இருப்பேன்” என்று சொல்வான். அவன் பகுதி வரிகளைத் தவிர்த்து மாதவியின் கானல்வரி மறுமொழிக்கு மட்டுமே இங்கு பொருள் சொல்கிறேன்.

இதுபோல் இரண்டாம் பொருள் (இறைச்சிப் பொருள்) கொள்ளலில் ”காவேரி வழியே மாதவி மனச்சான்றோடு பேசுகிறாள்” என்றே கொள்ள முடியும். அதைக் கோவலனும் புரிந்து கொள்வான். அப்புரிதலில் தான் கோவலனுக்குக் கோவமெழும். கானல் வரி படிக்கும் நாம் உள்ளிருக்கும் உருவகத்தை விடாது பிடித்துக்கொள்ள வேண்டும். முதலில் வருவது 3 தாழிசையால் ஆகும் ஆற்று வரி யென்பர். ஆற்றைப் பாடுவது போல், மாதவி தனக்குத் தெரிந்தவற்றைப் பொதுவிற் போட்டுடைப்பாள். (முந்தைக் கடலாடு காதையின் கடைசி அடிகளின் படி) காட்சியோரத்தில் அமளிக்கு (படுக்கைக்கு) அருகில் வசந்த மாலை வருத்தத்தோடு நிற்கிறாள். (ஏதோ, நடக்கப்போகிறது என்று குறு குறுத்த அவள் நெஞ்சம் வருத்தபடாது என்செய்யும்?

கீழேவரும் தாழிசைகளில் இரு பொருள்கள் உள்ளன. ஒன்று இயற்பொருள். இன்னொன்று இறைச்சிப் பொருள். இயற்பொருள் மாலை நேரத்தையும். இறைச்சிப் பொருள் வசந்தமாலையையுங் குறிக்கும். பாடுவோளுக்கும், கேட்போனுக்கும், அருகிலிருந்து கவனிப்போளுக்கும் புரிந்து தான் பாட்டு வெளிப்படுகிறது. மூவரிடையே நடப்பது ஒரு நாகரிகமான சண்டை. இருவர் தம் கருத்தைச் சொல்கிறார். ஒருத்தி உம்மென்று வருந்திநிற்கிறாள். என்ன இருந்தாலும் மாதவி வசந்தமாலைக்கு இயமானியல்லவா? இனிப் பாட்டினுள் வருவோம்.

வேறு
25.
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.

26.
பூவார்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய்வாழி காவேரி
காமர்மாலை அருகசைய நடந்தவெல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன்வாழி காவேரி

27.
வாழியவன்றன் வளநாடு மகவாய்வளர்க்குந் தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி

”ஏ, காவேரி (மாதவியின் மனச்சான்று), வண்டுகள் பக்கத்தில் வந்து சிறக்க ஒலிசெய்ய, மணிகளையும், பூவாடைகளை போர்த்துக்கொண்டு, கருங்கயற் கண்ணை (இக்கண்தான் முதலிற் கண்ணகியிடமும், பின் மாதவியிடமும் கோவலனைக் கவிழ்த்தது.) விழித்து, அசைந்து, நடந்து வந்தாய். ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன்கணவனின் செங்கோல் (அதாவது நேரொழுக்கம்) வளையாதென்று அறிந்தே..

ஏ காவேரி, பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்களாட, அதுபுரிந்து குயில்கள் இசைபாட, விரும்பத்தக்க வசந்தமாலை (காமர் மாலை) உடன் வந்து அருகே அசைய நீ நடந்தாய், ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? உன் கணவனின் நாமவேற்றிறங் (புகழ்பெற்ற வேற்றிறம்; வேறொன்றும் இல்லை சொல்தவறான் என்று ஊரில் கோவலனுக்கிருந்த மதிப்பு) கண்டு அறிந்தே.

ஏ காவேரி, அவன் குலமகவை வளர்க்கும் தாயாகி (மேகலை பிறந்து ஓரிரு மாதங்கள் ஆனபின் கானல்வரி நடந்தது) அவர்குலம் வாழவைக்கும் பேருதவியில் ஒழியாதிருந்தாய். (கண்ணகிக்குப் பிள்ளையில்லை. மேகலையே கோவலன் குடிக்கு முதற்பிள்ளை, இனியும் பிள்ளைகள் பிறந்து குடி தழைக்கலாம் என உணர்த்துகிறாள்). ஏனப்படிச் செய்தாய் தெரியுமா? ஆழியாளும் வெய்யோன் போன்ற அவன் அருளால் தன் உயிரோம்பும் என்றே.

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 19, 2019

சிலம்பு ஐயங்கள் - 22

இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப் பேர் யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம். இவன்காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பலகாலம் தமிழறிஞர் பிளவுபட்டார். வேடிக்கையென்ன தெரியுமோ? இவன் இயற்பெயர் என்னவென யாருக்குமே தெரியாது. இன்றுங் கூடக் குட்டுவனைக் குட்டனென்றே மலையாளத்திற் சொல்வார். சிறியவனென்று பொருள். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையில் ஒருவன் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும் கூடப் பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் உண்மையில் தம்பியா? இல்லையே? அவர் விளிப்பெயரே பரவலாய் ஈழம் எங்கும் எல்லோருக்கும் பழகிப்போயிற்று. குட்டுவனும் அப்படித்தான். வெல்கெழு குட்டுவன்= வெல்லுங் குணங்கொண்ட குட்டுவன்; செங்குட்டுவன்= செந்நிறக் குட்டுவன். அவ்வளவுதான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது வியப்பேயில்லை சில பெயர்கள் மக்கள் வழக்காற்றில் சட்டென்று பொருந்திக்கொள்ளும்.

(ஆனாலும் ’பெரியார்’ என்றால் சிலருக்கு முட்டிக்கொள்ளும். ’ஈ.வே. இராமசாமி நாயக்கர்’ என்பதே சரியாம். ’பாவாணர்’ என்று சொல்லக் கூடாதாம். ’ஞா.தேவநேயன்’ என்று சொல்ல வேண்டுமாம். ஒருதமிழ் மடற்குழுவில் முன்பொருவர் இதுபற்றி அடம்பிடித்துச் சொன்னார். சிரித்துக் கொண்டேன். என்றாவது புத்தரைத் திரு. சித்தார்த்தன் என்றோ, மகாவீரரை திரு. வர்த்தமானன் என்றோ யாரேனுஞ் சொல்வாரோ? ’மகாத்மா’வெனில் யாருக்கேனும் விளங்காது போமோ? சரி “மகாப் பெரியவா” என்றால்? ...நான்தான் சொன்னேனே? தமிழரிற் குறிப்புப்பெயர்கள் சரளம், ஏராளம்.) 

சென்ற பகுதிகளில் மோரியர், சுங்கர், கனகர், நூற்றுவர்கன்னர், ஆதன்கள், இரும்பொறைகள் என ஆழமாய்க் காலக்கணிப்புக்குள் போனதற்குக் காரணம் உண்டு. வரலாற்றில் பிருக்குமானம் (parsimony) முகன்மையானது. குறைவான ஊன்றுகோள்களில், நிறைவான தரவுகளோடு ஆழமான ஏரணம் இருந்தாற்றான் வரலாறு வழிக்கு வரும். அதைவிடுத்து ஏரணமேயின்றி வரலாற்றுத் தரவுகளை வறட்டுத்தனமாய் அலசினால் ஒருபக்கமும் நகர முடியாது. சேரர் காலக்கணிப்பில் நடக்கும் இருவேறு குழப்பங்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.

குட்டுவன் 55 ஆண்டுகாலம் ஆட்சிசெய்தான். அவன்விறல் வெளிப்பட வெளிப் பட ஒவ்வொருவரும் விதம்விதமாய் அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் புலவர் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல் பிறக்கோட்டிய செயல் அடுத்த சில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச் சொல்வார். கங்கைக் கரை போகையில் செங்குட்டுவனுக்கு 80 ஆனால் பரணர் 105 வயது வரை உயிரோடிருந்து சொல்வாரா? பரணர் சொல்லாததாலே, வெல்கெழு குட்டுவனும் செங்குட்டுவனும் வெவ்வேறு என்போமா? அதுவென்ன ஏரணம்? இப்படியொரு வெட்டிவாதம் இங்கு நெடு நாள் நடந்தது. இல்லையெனில் பதிற்றுப்பத்தின் பதிகம் ”பெருஞ்சோழர் ப்ரசத்தி” போன்றதென்று சொல்லி ஏற்றுக்கொள்ள மறுப்பார்.

என் கேள்வி: ”பெருஞ்சோழர் ப்ரசத்திகளையும் பல்லவர் ப்ரசத்திகளையும்” பின் எப்படி நம்புகிறீர்கள்? அதையும் தூக்கி எறியலாமே? இந்த ப்ரசத்திகளை நம்புவீர்கள், பதிற்றுப்பத்தின் பதிகங்களை நம்பமாட்டீர்கள் என்றால் அது ஓர் ஓரவஞ்சனை தானே? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகள்” இப்படிச் சொல்லிச் சொல்லியே தமிழரைக் காயடித்தார். ”When it comes to assigning importance to Tamils, always create doubts in people's perception”. இது எந்த அளவிற்குப் போனதெனில், தமிழர் கருத்துச் சொன்னாலே, ’இந்தாலஜி’ குழுமத்தில் கேலியும், சிரிப்பும், நக்கலும் எழுந்துவிடும். அவர்கள் ஐராவதம் மகாதேவனையே பொருட் படுத்தமாட்டார். இதெல்லாம் எப்படி நடந்தது? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகளின்” தாசானுதாசப் பணிவு தான் காரணம்.   

இன்னொரு பக்கம் விவரமிலா ஆர்வலர், 58+25+25+55 எனக் கூட்டிச் செங்குட்டுவன் வரை ஆதன்குடிக்கு 163 ஆண்டு இருப்புச் சொல்வர். சரஞ்சரமாய் ஆண்டுகளைக் கூட்டுவது சரியா? தந்தைக்கும், மகன்களுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மேல்மடி (overlap) இருக்காதா? அப்படியொரு கனத்த நூல் (பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்- கணியன் பாலன், எதிர் வெளியீடு) அண்மையில் வெளிவந்தது. அதைப் படிக்கையில் வருத்தமானது. விரிவாய் அலசவும் வேதனையாகிறது. இவ்வளவு பெரிய உழைப்பில் ஏரணங் குறைந்தால் எப்படி? 6 ஆம் ஆண்டு ஆசாமிகள் ஒருமுனையெனில் மேல்மடி கவனியாத இவர்போன்ற ஆர்வலர் இன்னொரு முனை. தமிழர் வரலாறு இந்த இருவரிடமுஞ் சிக்கி அலை படுகிறது. இனிக் காட்சிக்காதை 156-164 வரிகளைப் பார்ப்போம். .

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

இது அமைச்சன் வில்லவன்கோதையின் கூற்று. பொதுவாய்ப் பலரும் ஒரு முறையே செங்குட்டுவன் வடக்கே போனதாய் எண்ணிக் கொள்கிறார். கிடையாது. இருமுறை போயிருக்கிறான். கதைக் காலத்தில் (கி.மு.77க்குச் சற்றுமுன்) பாண்டிய நாடு குழப்பம்/கலகத்திலே இருந்தது. வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் பங்காளிச்சண்டை. இளஞ்சேரலிரும்பொறை நடத்திய போருக்குப்பின், குட்டுவனே 2 வேந்தர், 7 குறுநிலமன்னரோடு பொருதித் தன் மாமன் மகனை சோழ வளநாட்டின் தலைவனாக்குவான். புகார்ச் சோழன் (பெரும்பாலும் 2ஆம் கரிகாலன், அல்லது அவன் மகன்) அதை ஏற்றுக் கொள்ளாது முரண்டு பிடித்தான். இக்காலத்தில் சேரனே பேராற்றல் கொண்டவனாய் இருந்தான். அதனாற்றான் தமிழ்நாட்டின் தனிப்பெருந் தலைவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டான்.

சேரருக்குத் தம்நாட்டின் வடக்கிருந்த கொங்கணரைக் (மங்களூர் தாண்டி மேலைக் கொங்கணம்/கோக(ர்)ணம்/கோவா கடற்கரையை ஒட்டியவர்) கட்டுக்குள் வைப்பது மிகத் தேவை. அப்பொழுது தான் கார்வார் (Karwar) வரை மேலைக் கடல்வணிகத்தைச் சேரர் தம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்கும் மேல் சோப்பாராத் (Sopara; nearer to modern mumbai) துறையிலிருந்து இவரின் நண்பர் நூற்றுவர் கன்னர் பார்த்துக்கொள்வார். சேரரையும், கன்னரையும் மீறி நாவலந்தீவின் மேற்குக்கடற்கரையில் அன்றைக்கு யாரும் எதுவுஞ் செய்ய முடியா நிலையே இருந்தது. அந்தக் காலத்தில் கடல்வணிகம் தமிழர்க்கு முகன்மையானது. கொங்கணரை அடக்கியதற்கும் அதுவே காரணம். கடல் பிறக்கோட்டிய செயலென்பது கடற்கொள்ளையரைத் தொலைத்தது தான். மேலைக் கடல் வணிகம் சேரருக்குத் தேவையானது. மிளகை மேற்குநாடுகளுக்கு ஏற்றி அனுப்பவேண்டாமா? 

அடுத்தது கலிங்கர் (கோதாவரிக்கு மேல் இற்றை ஆந்திரமும் ஒடிசாவுஞ் சேர்ந்த பகுதியர்). இவரைக் கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு வரலாற்றுக் காரணமுண்டு. கதைக்காலத்திற்கு 100 ஆண்டுகள் முன் பொ.உ.மு. 172 இல் கலிங்கத்தைக் காரவேலன் உச்சநிலைக்குக் கொணர்ந்தான். அவனுடைய அத்திக்கும்பாக் கல்வெட்டுத் தமிழர் வரலாற்றை உறுதிசெய்யும். ஆனால் தமிழர் பார்வையில் அதைப் படித்த அறிஞர் மீக்குறைவு. எதிர்காலத்தில் யாரேனுஞ் செய்தால் நல்லது. (Shashi Kant எழுதிய The Hathigumpha inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, D.K.Printworld (p) Lud, 2nd ed 2000 என்ற பொத்தகத்தையும் படியுங்கள்.) பொ.உ.மு. 424 இலிருந்து தொடர்ந்துவந்த .”த்ராம்ர சங்காத்தத்தை - தமிழர் முன்னணியை (இது 252 ஆண்டுகல் இல்லை 1300 ஆண்டுகள் இருந்தது என்பது இன்னொரு நோக்கு. அதையும் ஆராய வேண்டும்.)” பொ.உ.மு.175 இல் குலைத்து கொங்குக் கருவூர் வரை [கல்வெட்டிற் சொல்லும் பித்துண்டா இதுவே என்பது என் கருத்து] உழிஞைப் போரில் காரவேலன் வந்து, கொங்கு வஞ்சியைத் தொலைத்து அந்துவஞ் சேரல் இரும்பொறையைத் தடுமாற வைத்திருக்கிறான்.

அக்காலம் ஆதன்குடியினரும், இரும்பொறைக் குடியினரும் விரிவடையாக் காலம். அத்திக்கும்பா கல்வெட்டு எழுந்து 6/7 ஆண்டுகள் கழித்து நெடுஞ் சேரலாதன் ஆட்சிக்கு வந்தான். அந்துவஞ்சேரல் காரவேலன் தாக்குதலில் இருந்து தப்பி உதியன்சேரலாதனிடம் ஓடிவந்திருக்கலாம். கருவூரைச் சாய்த்ததோடு பாண்டியரையும் காரவேலன் பதம்பார்த்தான். (கரூரிலிருந்து மதுரை வருவது எளிது.) ஏராளம் முத்துக்கள், செல்வங்களையும் கவர்ந்து சென்றுள்ளான். காரவேலன் கல்வெட்டின் (பொ.உ.மு.172) 11,13ஆம் வரிகளை சேர்த்துப் பொருந்திப் படித்தால், தமிழகத்திற்குப் பெரும்படை வந்தது புலப்படும். இதற்குப் பழிவாங்கவே 60/62 ஆண்டுகள் கழித்து கி.மு.112 இல் செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பின் மூலம் கலிங்கத்தைத் தாக்கியிருக்கவேண்டும்.   

[சசிகாந்த் போல் ஒருசிலர் பித்துண்டாவைக் கலிங்கத்திற்குச் சற்றுவெளியே கோதாவரியின் தென்கரை நகரமென்றும் அதைப் பிடித்ததால் கன்ன பெண்ணை (கிருஷ்ணா) வரையிலும் காரவேலன் அரசு விரிந்ததென்றுஞ் சொல்வர். என்னால் அவ்விளக்கம் ஏற்க முடியவில்லை. ஏனெனில் அங்கிருந்து பாண்டியரைத் தாக்க நேரே வரமுடியாது. இடையில் சங்ககாலத் தொண்டைமானும், சோழரும் இருந்திருப்பர். என்னதான் முன்னணி உடைந்தாலும், தம்மை மீறிப் படையெடுத்துப் போவதை சோழர் ஒப்புக் கொள்ளார். தவிர, இவரையும் கடந்து வந்தால் கல்வெட்டில் சோழரைக் கடந்ததாய்ச் செய்தி வந்திருக்கும். ஆனால் அது வரவில்லை. எனவே அன்று நூற்றுவர் கன்னருக்குத் தெற்கே பேரரசாயிருந்த சேரரைக் கருநாடகம் வழி தான் காரவேலன் நெருக்கியிருக்கவேண்டும். தவிரப் பாண்டியர் செல்வங் கவர்ந்தது ”கொற்கைக் கடல்வழி” என்றுந் தோன்றவில்லை. இதுபோல் உழிஞைப்போர் அற்றைநிலையில் கடல்வழி படகுகளைப் பயன்படுத்தி நடக்கமுடியுமா? மிகுந்த ஐயம் வருகிறது.]

கொடுங் கருநாடர் ஒழுங்குமுறையிலா ஆட்சியாளர். இற்றை வட கருநாடகத்தில் இருந்தவர். தென் கருநாடகம் அப்போது தமிழ் பேசிய நாடு. பங்களர், கங்கர், கட்டியராகியோராற் ஆளப்பட்ட பகுதி. கட்டியர் இற்றை வேலூர், சேலம், கோலார்ப் பகுதிகளில் ஆட்சி செய்தார். கங்கர் இற்றைப் பெங்களூரு, மைசூருப் பகுதிகளை ஆண்டார். அற்றை வடகொங்கே பின்னால் கங்க நாடாகியது. பங்களர் நாடென்பது இப்போதையச் சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களைச் சேர்த்தது. இந்த அரசோடும் குட்டுவன் பொருதினான்.

கொங்கணர், கொடுங்கருநாடர், கலிங்கர் ஆகியோர் சிறிதே தமிழ் கலந்த பாகதம் பேசினார். (இரா. மதிவாணன் ”கருநாட்டிற்குப்” பெருநாடென்றே பொருள்சொல்வார். மயிலை சீனியாரும் ”கரு”விற்குப் “பெரு” எனும் பொருளே சொல்வார். பெருநாடு = மகாராஷ்ட்ரம். அடிப்படையில் வட கருநாடும் மாராட்டியமும் ஒரேபொருளென்று இருவருஞ் சொல்வார்.) இவர் பகுதிகளே (modern maharashtra, North Karnataka, Telingana, North Andhra, and Orissa) மாமூலனார் குறிக்கும் மொழிபெயர் தேயமாகும். பங்களர், கங்கரென்போர் அற்றைக்கால, தமிழ் பேசினார். பின் கொஞ்சங்கொஞ்சமாய் 1000 ஆண்டுகளில் இவர் தமிழ் கன்னடமாகியது. கட்டியர் கடைசி வரை (1950 வரை) தமிழராகவே தங்கிப் போனார். இந்திய விடுதலைக்கு அப்புறமே இவர் வலிந்து தெலுங்கராக்கப் பட்டார். இப்பகுதிகளின் வடக்கே பொ.உ.மு.100 அளவில் நூற்றுவர்கன்னர் (சாதவா கன்னர்) ஓரோபொழுது தனியாகவும், மற்றபோதுகளில் மகதப்பேரரசிற்கு அடங்கியுமிருந்தார்.  கொங்கணர்,  கலிங்கர், கொடுங்கருநாடர், பங்களர், கங்கர், கட்டியராகிய அனைவரும் விந்தியமலைக்குத் தெற்கிருந்தவர். வடவாரியர் அம்மலைகளுக்கு அப்பாலிருந்தவர். (தமிழிலக்கியத்தில் ஆரியர் என்றழைப்பதில் விந்திய மலைகளே விளிம்பை வரையறுத்தன.) இந்த எழுவரையும், செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பில் தோற்கடித்தான். இதில் ஆரியர் பெரும்பாலும் விதிசாவில் ஆட்சி செய்த சுங்கராகலாம். அகண்ட மகதத்தை மோரியரிடம் கைப்பற்றிய சுங்கர் வெகுவிரைவிற் சுருங்கினார். பாடலிபுத்தத்தைச் சுற்றிய நிலம் காரவேலன் காலத்தில் சுங்கரிடமில்லை. விதிசா. மகிழ்மதி, உச்செயினி நகரங்களைச் சூழ்ந்தநிலமே அவரிடம் எஞ்சியது. காரவேலன் தன் பாகதக் கல்வெட்டில் ’பகசத்தி மித்தா’ என்றே பாடலிபுத்த அரசனைக் குறிப்பான். (சங்கதத்தில் ’ப்ரகசக்தி மித்ரா’ என்றாகும். பஞ்சதந்திரத்து மகத குமாரர் ”வசுசக்தி, உக்ரசக்தி, அனந்தசக்திப்” பெயர்களை இது நினைவு படுத்தும்) ”மித்ராக்” கொடிவழியார் எத்தனையாண்டு பாடலிபுத்தம் ஆண்டாரெனத் தெரியாது.

”இந்த 7 பேரோடு நடந்த வண்டமிழ் மயக்கத்தில் (போரில்) யானைமேலிருந்து சேரன் செய்த வேட்டை என் கட்புலத்திற் பிரியவில்லை. இவ்வேட்ட முடிவில் கங்கைப்பேர்யாற்றுப் பெருவெள்ளத்தில் எம் “அரசமகளை” (நற்சோணையை) முழுக்காட்டிய அந்நாளில் ஆயிரம் ஆரிய மன்னருக்கு எதிரே நீயொருவனே நின்ற போர்க்கோலம் என் விழியில் அப்படியே நிற்கிறது” என்று வில்லவன் கோதை புகழ்ந்து பேசுகிறான். “இன்னொரு முறை வடக்கே போவோம்; ஆரிய அரசருக்குப் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லாமற் சொல்லுகிறான். இங்கு ஆயிரம் ஆரியமன்னரென்பதை  அப்படியே எண்ணிக்கையிற் கொள்ளக்கூடாது. அதுவொரு சொலவடை. ”ஆயிரம் பேருக்கு முன் செய்துகாட்டினான்” என்று நாம் சொல்வதில்லையா? (ஆயிரம் என்பது தமிழ்வேர் கொண்ட சொல்லே. பேரனைத் தாத்தனாக்கும் வழக்கங்கொண்ட திரு. நா.கணேசன் தலைகீழாய் ஸஹஸ்ரம்>ஸாஸிரம்> ஸாயிரம்>ஆயிரம் என்பார். இவருக்கு மறுமொழி சொன்னால் நீளும்  இருப்பினும் வேறொரு தொடரில் சொல்லியுள்ளேன் (http://valavu.blogspot.com/2018/08/7.html) 

நாலாங் கேள்வியில் நெடுங்காலம் செலவழித்துவிட்டோம். இனி அடுத்த கேள்விக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.