Sunday, March 08, 2020

Pier

”நண்பர்களே, Pier எனும் ஆங்கிலச் சொல்லிற்கு பொருத்தமான தமிழ் சொல் கூறவும். நன்றி” என்று Homeo Jd என்பார் தமிழ்ச்சொலாய்வுக்குழுவில் கேட்டிருந்தார்.

ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில், pier (n.) என்பதற்கு mid-12c., "support of a span of a bridge," from Medieval Latin pera, of unknown origin, perhaps from Old North French pire "a breakwater," from Vulgar Latin *petricus, from Latin petra "rock" (see petrous), but OED is against this. Meaning "solid structure in a harbor, used as a landing place for vessels," is attested from mid-15c என்று போட்டிருப்பர்.

சேரலத்தில்  பலவிடங்களில் குறிப்பாக எர்ணாகுளம், கொச்சி, ஆலப்புழை, கொல்லம் போன்ற இடங்களில், புழை, காயல் இருக்குமிடங்களில், படகில் பயணஞ் செய்வது மிக அதிகம். (தமிழ்நாட்டிலும் ஆறு கடலைச் சேரும் இடங்களில் இப்பழக்கம் உண்டுதான். ஆனால் சேரலத்தைப் பார்க்க நம்மூரில் மிக மிகக் குறைவு.) இந்தப் புழை, காயல் கரைகளில் நீரினுள் நிலம் சற்று துருத்தினாற்போல் வருமானால், அது துருத்தி எனப்படும். (பழைய தஞ்சை மாவட்டத்தில் பல துருத்திகள் உண்டு.) இத்துருத்திகளை ஒட்டினாற் போல் உள்ள இடங்களில் ஆற்றின் வண்டலில் மரத்தூண்களை ஆழ அடித்துப் பொருத்தி அவற்றின் மேல் உத்தரங்களைப் பொருத்தி அதன் மேல் மரப் பலகைகளை இழைத்து, கரையோடு சேர்த்து இணைத்திருப்பர்.  இவ்ற்றைத் தான் ஆங்கிலத்தில்  Pier என்கிறார். இங்கே கட்டுமானம் முக்ன்மையில்லை. ஒருகாலத்தில் மரத்திலும் பின்னால் கல், கற்காரையிலும் இது மாறியது

இங்கு தான் படகுகள், பரிசல்கள், தோணிகள் போன்றவை வந்து சேரும். மக்கள் இடம் மாறுவர்/ ஓரிடத்திலிருந்து புறப்பட்டு இன்னோர் இடம் வந்து சேர்ந்து புகும் இடம் இது. எனவே புகல் ஆனது. (முனைபுகல் புகல்வின் - பதிற்.84,17) இதுதான் ஆங்கிலத்தில்  Pier என்று சொல்லப்படுகிறது, மேலையருக்கு இச்சொல்லின் தோற்றம் எங்கென்று தெரியாமல் unknown origin என்பார். யவன வீரர் நம்மூரில் பலகாலம் வாழ்ந்துள்ளார். உறையூர், புகார், மதுரை, கொற்கை, வஞ்சி, முசிறி, தொண்டி எனப் பலவிடத்தும் கோட்டை காக்கும் தொழிலைச் செய்துள்ளார். நம்மூர்ச் சொற்கள் கிரேக்கம் போயிருக்கலாம். வியப்பில்லை. படகு, கப்பல், வங்கம் செலுத்தும் தொழில் பல மேலைச் சொற்கள் தமிழ்த்தோற்றம் காட்டுவதாய்ப் பாவாணர் சொல்வார். அவற்றை விரிக்க வேறொரு கட்டுரை வேண்டும்.

ஓர் ஆற்றில், கழிமுகத்தில், காயலில், புழையில் வெவ்வேறு புகல்கள் இருக்கும். படகுகள் ஒரு புகல் விட்டு இன்னொரு புகலுக்கு ஏகும். எரணா குளம் மட்டாஞ்சேரி என்பது ஒரு புகல், அங்கிருந்து கொச்சிக் கோட்டை (fort kocchi) இன்னொரு புகல், இப்படி நம்மூரின் இக்கால நகரப்பேருந்து போல், பகிர்தானி (share auto) போல் மக்கள் படகுகளில் பயணித்துக்கொண்டே யிருப்பார். ஆற்றுமுகப் புகல்களும் உண்டு. ஆறு கடலிற்புகுந்து பின் விரியும் போது சங்குமுகப் (கடற்கரை முகப்) புகல்களும் உண்டு. துருத்திகளில் துறுக்கும் (அணையும்) இடங்கள் துறைகள் என்றும் சொல்லப்படும்.  துறையும் புகலும் அடிப்படையில் ஒரே பொருள் தான். இன்று துறையின் பொருளை விரித்து நிருவாகம் குறித்து அழைக்கிறோம். ஆனால் புகல் இன்னும் பயன் குறைத்தே இருக்கிறது. காவிரி கடலுள் புகுமிடத்தில் ஒரு பட்டினம் இருந்ததால் அது காவிரிப் புகும்பட்டினம் ஆனது. பூம்பட்டினமாய்த் திரிந்தது. பூநிறைந்த பட்டினம் என்பது இனிமையான ஆனால் தவறான விவரிப்பு.

புகல்கள் பெரிதாகிப் புகுந்துறை>பூந்துறைகளாய் மாறும். புகல்>புகுடி. புகுதி>புகுர்தி = வாயில் என்பதே  மேலை மொழிகளில் port ஆனது. புகுதல்> புகுர்தல் = நுழைதல். புகுடி = கழி, backwater என்றும் பொருள்கொள்ளும். தமிழில் புகலை வைத்து 30, 40 ஆண்டுகளுக்கு முன் pier, port என்று இரு சொற்களுக்கும் இணைசொன்னோம். கடற்புகலுக்குள் (seaport) புகுவதற்கான பொத்தகம் புகற்கடவுப் பொத்தகம் (passport book) ஆனது. அதே பொத்தகம் வான்புகலுக்கும் (airport) தகுதியானது. நுழைமதி (visa) இருந்தால் தான் நாம் எந்த நாட்டின் எல்லைப் புகலுக்குள்ளும் புகமுடியும். புகற்கடவு நம் அரசு கொடுப்பது, நுழைமதி நாம் போய்ச்சேரும் நாட்டின் அரசு கொடுப்பது. உள்ளூரில் இருக்கும் புகல்களுக்கும் எல்லையில் இருக்கும் புகல்களுக்கும் சற்று நடைமுறை வேறுபாடுகள் இருக்கும். .   

No comments: