Monday, March 24, 2008

ஏழு சுரங்கள் - 4

ஆறாவது சுரம் தைவதம். இதைத் தெய்வதம் என்று சொல்லித் தெய்வத்தோடு தொடுக்கும் சங்கத விளக்கம் தட்டையாகவே தெரிகிறது. அது எப்படி இந்தச் சுரம் மட்டும் தெய்வம் நாடுவதாய் இருக்க முடியும்? மற்றவை எல்லாம் தெய்வத்தால் ஏற்காதவையா? "ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய்......" என்றெல்லாம் பழம் பஞ்சுரப் பண்ணில், சுந்தரர் திருவாரூர் இறைவனை அழைத்திருக்கும் போது, எல்லாச் சுரமும் தெய்வத் தொடர்பு கொண்டவை என்றல்லவா சொல்ல வேண்டும்? இந்தச் சிந்தனை தான், வெளிர்கருப்பு என்ற சொல்லாடல் வழி, என்னைத் துய் என்னும் தமிழ்ச் சொல்லை நோக்கித் தேட வைத்தது.

pure என்ற பொருட்பாட்டைக் குறிக்கும் தூய என்ற சொல் துய் என்ற வேரில் இருந்து கிளைத்தது; அதற்கு வெண்மை என்ற பொருளும் உண்டு. வெள்ளைப் பஞ்சைத் துய் என்று சங்க இலக்கியம் சொல்லும். துய்யித்தல்/துய்வித்தல் என்பது to make it pure என்று வினையைக் காட்டும். துய்ய = கலப்பற்ற, துய்ய மல்லி = 4 முதல் 6 மாதங்களில் விளையக்கூடிய வெள்ளைச் சம்பா நெல், துய்ய பால் = நீர் கலக்காத பால், துய்யன் = வெள்ளி மணல் ஆகிய சொற்களையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

வெள்ளை நிறப் பருத்தியில் ஆன துணி துய்>துய்கு>துகு>துகில் என்று சொல்லப் படும். பருத்தித் துகிலை உலகிற்கு அறிமுகப் படுத்தியது இந்தியத் துணைக் கண்டமாய் இருக்கலாம் என்றே புதலியர் (botanists) கூறுகிறார்கள். துகில் என்ற சொல்லுக்கும் textile என்ற மேலைச் சொல்லுக்கும் சொற்பிறப்புத் தொடர்பு உண்டு. அதன் காரணமாகத் தான் textile science ஐத் துகிலியல் என்று இந்தக் காலத்தில் சொல்லுகிறோம். [வேறு சிலர் textile யை தச்சுதலோடு தொடர்புறுத்துவார்கள்; நான் அவர்களிலிருந்து மாறுபடுவேன். தச்சு வினையை techne என்பதோடு இணைத்துப் பார்ப்பதே பொருத்தமாய் இருக்கும்.]

துகிலில், மைக்குழம்பு கொண்டு எழுதியது text. [துகில் என்னும் எழுதுபொருளின் வாயிலாய், எழுதிய உரைக்கு வந்த பெயர் text. இப்படி ஓர் இயலுமை (possibility) இருந்தும், "சிந்து சமவெளி நாகரிகத்தாருக்கு எழுத்தே கிடையாது, அங்கு கிடைத்த கீற்றுகள் எல்லாம் மொழியையும் பேச்சையும் குறிப்பனவே அல்ல" என்று இந்தக் காலத்தில் ஒரு மேலையாய்வாளர் குழு சொல்ல முற்படுகிறது. என்ன செய்வது? வெள்ளைப் பருத்தித் துணியோ, வெண் பட்டோ கால காலத்திற்கும் நிலைத்திருக்குமா என்ன, ஒரு தலைமுறையில் இற்றுப் போய் விடாதோ?] வெள் நூலைத் துகில் நூல் என்றும், வெண் பட்டைத் துகுலம் என்றும், வெண்காரத்தை (borax) துடங்கணம் என்றும் நம் அகரமுதலிகள் குறித்து வைக்கின்றன.

துய்யின் திரிவாய்த் துல்>துலங்கு>துலக்கு என்ற சொல்லும், அழுக்கைப் போக்கும் வினையைக் குறிக்கும். துலம், துலவம் என்ற சொற்களும் பருத்தியையே குறிக்கின்றன. துல்>துங்கம் என்ற சொல் தூய்மையையும், வெள்ளையையும் குறிக்கிறது. வெள் நுரை பொங்கப் புரண்டு எழுந்து வரும் [கன்ன பெருநையின் (River Krishna)] துணையாறு துங்கப் பெருநை>துங்கப் பெருதை>துங்க பெதுரை>துங்க பத்ரா என்றே இன்று குறிக்கப் படுகிறது. [நாவலந்தீவின் ஆற்றுப் பெயர்களிற் பலவும் தமிழ்த் தொடர்பையே காட்டுகின்றன. ஆய்ந்து பார்க்கத் தான் ஆட்களைக் காணோம்.]

துய்ய நிறத்தில் (வெள்ளை நிறத்தில்) உள்ள நீர்மம் துய்த்தம்>துத்தம் என்றாகிப் பாலைக் குறிக்கும். அதே சொல் வடபுலத்தில் தூத் (dhuuth) என்று ஆகும். வெறுமே குடிக்கும் பால் மட்டும் தூத் என்று வடபுலத்திற் சொல்லப் படுவதில்லை. எங்கெல்லாம் பால்வடியும் மரங்களுக்குப் பாலை என்று நாம் சொல்கிறோமோ, அந்த மரங்களுக்கு dhuthi என்றே ஓர் ஒழுங்கு முறையில் அவர்கள் சொல்லுகிறார்கள். காட்டாக, பால்வடியும் பல்வேறு கள்ளிச் செடிகளும் அதே காரணத்தாற் தூதி என்றே வடபுலத்திற் சொல்லப் படுகின்றன. இதே போல குடசப் பாலை என்னும் மரமும் துத்குரி, துதாரி என்று சொல்லப் படுகிறது. வெட்பாலை என்னும் மரமும் dhudi என்றே சொல்லப் படுகிறது. ஆக, பால் / துத்தி>தூதி என்ற சொற்களிடையே நாவலந்தீவு முழுவதும் ஓர் ஒழுங்கிணை தென்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், துய்ப்பு>துப்பு>துப்பம் என்ற தமிழ்ச் சொற்கள் பாலிலிருந்து கிடைக்கும் நெய்யைக் குறிக்கின்றன. துப்புருவும் (=சுத்தமாக்கும்) செயலில் விளையும் துப்புரவு என்ற பெயர்ச்சொல்லும் தூய்மை செய்தலையே குறிக்கிறது. போரில் பகைவரோடு பொருதும் வீரர்கள் அணிந்து கொள்ளும் சிறிய வெள்ளை நிறப் பூ நம் இலக்கியங்களில் தும்பைப் பூ என்றே சொல்லப் படும். துப்பு>தும்பு என்ற சொல் வெண்மையைக் குறிக்காமல் தும்பை என்ற பூப்பெயர் தோன்ற முடியுமா?

துத்தம் (=பால்) பற்றி இவ்வளவு விரிவாகப் பார்த்த நாம், அது ஒரு பெயரடையாகப் (adjective) பயன்படும் விதயத்தை இனிப் பார்ப்போம். நாகம் என்ற சொல் இரும்பு தவிர்த்த கருநிற மாழைகளைக் (காட்டாக lead, zinc) குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல். பல்வேறு நாக மாழைகளில், கொஞ்சம் வெளிறிய கருப்புக் கொண்ட நாகத்தைத் துத்த நாகம் (=zinc) என்று சொல்லுகிறோம். இதே போல வெள்ளையான படிகாரம் (copper sulphate) ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நீரேற, நீரேற, மயில் நிறத்தைப் (=நீல நிறத்தைப்) பெற்றதால் மயில் துத்தம் என்று சொல்லப் படுகிறது.

இனி வெள்ளை நிறத்தைக் குறிக்கும் துய் என்ற வேரின் இன்னொரு திரிவாய், தய்யில் விளைந்த சொற்களைப் பார்க்கலாம். பாலிற் பிரை குத்திக் (பிரை குத்துதல் = to inoculate) குறிப்பிட்ட நேரம் நொதிக்க (to ferment) வைத்தபின் உருவாகும் பொருள் இன்னும் அதிக வெள்ளை நிறம் பெற்றுத் தயிர் என்றே குறிக்கப் படும். எயிர்>எகிர் ஆவது போல, வயிர்>வகிர் ஆவது போல வடபுலத்தில் இந்தச் சொல் தயிர்>தகிர்>dhahi என்றாகி ஒலிக்கும். ஆனாலும் வெள்ளை நிறப் பொருள் என்ற உண்மை உள்ளே நிறைந்து நிற்கும்.

தய் என்னும் சொல் வெள்ளை நிறம் குறிப்பதை இன்னொரு இலக்கியச் சான்றின் வழியும் பார்க்கலாம். முன்னே "சிலம்பில் வரலாறு' என்ற கட்டுரையில், வெள்ளைச் சாம்பலை (திரு நீறாய்ப்) பூசிக்கொள்வதும், மாலை அணிவதும் ஆகிய பழக்கங்கள் தமிழரைப் போலவே ஆத்திரேலியப் பழங்குடியினருக்கு உண்டு என்பதையும், ஆத்திரேலியப் பழங்குடியினருக்கும், வரலாற்றுப் பழந்தமிழருக்கு முந்திய நிலையில் இருந்த குடியினருக்கும் இடையே இருக்கக் கூடும் ஈனியல் ஓரிமை (genetic uniformity) பற்றியும், மேலோட்டமாய்ச் சொல்லியிருந்தேன். இந்தப் பின்புலத்தோடு, அரக்கர், அசுரர் என்பவரை வடபுலத்துத் தொன்மங்கள் சிவநெறியாளராயும், திருநீற்றுச் சாம்பல் பூசியவராயும் காட்டுவதைப் பொருத்திப் பார்த்தால், ஒரு சில மாந்தவியற் தொடர்புகள் விளங்கும். காட்டாக, கந்த புராணம், தட்ச காண்டம், கயமுகன் உற்பத்திப் படலத்தின் 43 ஆம் பாடலில் மகரந்தம் பொருந்திய பூமாலை அணிந்து, வெள்ளைச் சாம்பலைப் பூசிக் கொண்ட அரக்கரின் தலைவனைக் குறிக்கும் படி,

"தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க்கு இறைபால் எய்தி"

என்ற ஓர் அடி பயிலும். இதிலே அரக்கர்/அசுரர்கள் தயித்தியர் என்றே கூறப் படுகிறார்கள். அடிப்படையில் அரக்கு நிறம் கொண்ட அரக்கர்கள் தங்கள் உடலின் பல பகுதிகளில் சாம்பலைப் பூசியிருந்தால் ஒழிய, வேறு எப்படி தயித்தியர்கள் ஆகமுடியும்?

ஆக விளிரிய தாரத்தில், தாரம் தவிர்த்து விளரி என்று ஆனது போல், இங்கு நிஷாதம் தவிர்த்து தய்வதம் என்று ஆனது போலும். தய்வதம் = விளர்த்தது, வெளிறியது.

கடைசியாக நிஷாதம். இதற்கான வடமொழி விளக்கம், 'ஆறு சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து தன்னிடம் சேரப் பெற்றது' என்ற சுற்றி வளைத்து அமையும். சட்டென்று உப-நி-ஷத் என்ற சொல்லும், 'உடன் - கீழ் - இருத்தல்' என்ற அதன் பொருளும் நமக்கு நினைவு வரலாம். இங்கே நி-ஷாத என்பதை, மற்றவைகளைக் "கீழே இருக்க வைத்த" என்ற வகையில் பிறவினையாகப் பொருள் கொள்ள வேண்டும் போலும்! ஆனாலும் அதன் பொருந்தாமை நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கிறது. இப்படிச் சொற்களை உடைத்துக் கூறுகளாக்கி, அவற்றைப் பின் அலசிப் பெருஞ்சொல்லுக்குப் பொருள் காணுவது மோனியர் வில்லிம்சுக்கும், பாணினி வழியினருக்கும் விடாது இருக்கும் வழக்கம். தமிழில் சொற்களை உடைத்துப் பார்க்கும் வழக்கம் பெரும்பாலுமில்லை. பொதுவாய், உள்ளே துலங்கும் வினைச்சொல் என்ன என்று பார்ப்போம். அடுத்து, உட்பொருள் மாறாமல் பலுக்கத் திரிவு ஏற்படுவதையும், திரிவுக்குப் பின்னால் பொருள் நீட்சி ஏற்படுவதையும் கவனிப்போம்.

காட்டாகத் தருவது என்னும் வினை உருவாக்கும் பெயர்ச்சொல் தார். (வாழைத் தாரை இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்.) தருவது என்னும் வினை முன்னே தருவது, மேலே தருவது என்று இருவகைப் படும். தாரின் நீட்சியான தாரம் என்ற சொல் உச்சம், ஏற்றம் என்ற பொருட்பாடுகளை நேரடியாகக் காட்டும். இன்னும் நீளுதலில், ஏறி உயர்ந்து நிற்கும் தாரகை (star), தாரணி>தரணி (= ஏற்றம் பெற்ற உலகு) என்ற சொற்கள் ஏற்றப் பொருளைச் சரியாகவே குறிப்பதைப் பார்க்கலாம்.

நிஷாத என்பதை நி-ஷாத என்று நறுக்கிப் பார்க்காமல், நிவதம்>நியதம்>நியாதம்>நிஷாதம் என்று பார்க்க முயன்றால் சட்டென்று உள்ளே உள்ள பொருள் விளங்கிவிடும்.

கோயில்களில் மூலத் திருமேனிக்கு முன்னால் குருக்கள்மார் படையலை எடுத்துக் காட்டுகிறார்கள் அல்லவா? அதை வடமொழிப் பலுக்கில் நைவேத்யம் என்று சொல்லுவார்கள். உண்மையில் நிவதம் என்னும் நல்ல தமிழ்ச்சொல் அங்கே திரிந்து ஒலிக்கிறது.

நிவதல் என்பது உயர்தல்; நிவத்தல் = உயர்த்தல். "மாக்கடல் நிவந்து எழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினை" என்பது சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடிய புறநானூறு 4 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இது கடலிருந்து உயர்ந்து வரும் செஞ்ஞாயிற்றின் அழகைக் குறிக்கிறது. இதே போல நீரின் மேலே வரும் தோற்றத்தைக் குறிக்கும் முகமாக "இருஞ்சேற்று ஈர் அளை அலவன் நிவப்ப வழங்குநர் இன்மையிற் பாடு ஆன்றன்றே" என்பது சேந்தன் கண்ணனார் பாடிய அகநானூறு 350 ல் வரும் வரி (நிவப்ப என்பது நீப்ப என்று பாடவேறுபாடாய் வருவதும் உண்டு.) "பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்" என்பது கயமனார் பாடிய குறுந்தொகை 9 ஆம் பாட்டு (பச்சை இலைகளுக்கு மேல் உயர்ந்து தோன்றும் திரண்ட காம்புடைய நெய்தற் பூ). "கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும்" என்பது மீனெறி தூண்டிலார் பாடிய குறுந்தொகை 54 (கான் யானை கைவிட்ட பச்சை மூங்கில் மீன் எறி தூண்டிலைக் காட்டிலும் உயரும்). இன்னும் சிலம்பு, பரிபாடல் போன்ற நூல்களும் உயர்ந்து என்னும் பொருளில் நிவந்து என்ற சொல்லைப் புழங்குகின்றன.

ஆக நிவத்தல் என்பது நல்ல தமிழே. இனி, நிவந்தது நிவதம் எனப் பெயர்ச்சொல்லாய் மாறும். இன்னும் திரிந்து, வடபுலத்தார் நாவில் நிவதம்>நிவத்தம்>நிவத்யம்>நிவேத்யம்>நைவேத்யம் என்று திரியும். நாமும் அதைக் கோயில்களில் கேட்டுக் கொண்டு, இனம் தெரியாமல் மருண்டு, 'நம் குருக்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்' என்று வெள்ளந்தியாக ஏற்று, இன்னொரு தமிழ்ச் சொல்லை இழந்து நிற்போம். இப்படி வடமொழிப் பலுக்கற் திரிவில் தொலைத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம் ஏராளம்.

இவ்வளவு இலக்கியச் சொல்லாட்சிகளை மேலே பார்த்தது போக, உயர்ச்சிப் பொருளில் இசையியலிலேயே ஒன்றைப் பார்க்கலாம். தாளத்தைக் குறிக்கும் எழுவகைத் தூக்குகளில், நிவப்புத் தூக்கு என்ற ஒன்று தமிழிசையில் உண்டு. சிலம்பின் அரங்கேற்று காதையில் வரும் 16 ஆம் வரிக்கு, அடியார்க்கு நல்லார் கொடுக்கும் உரையில், கீழ்வரும் பாடலைச் சொல்லுவார்.

ஒருசீர் செந்தூக்கு இருசீர் மதலை
முச்சீர் துணிபு நாற்சீர் கோயில்
ஐஞ்சீர் நிவப்பு அறுசீர் கழாஅலே
எழுசீர் நெடுந்தூக்கு என்மனார் புலவர்

- சிலம்பு 3.16 உரை

நிவப்பு, நிவதம் என்ற இரு பெயர்ச்சொற்களும் நிவத்தல் என்ற ஒரே வினையில் இருந்து கிளைத்த இருவேறு சொற்கள். நிவப்பு என்பது உயர்ச்சிப் பொருளில் ஒருவகைத் தாளத்தைக் குறிக்கிறது நிவதம் என்பது ஏழாம் சுரத்தைக் குறிக்க முடியும்.

இனி கோவில் என்பது கோயில் என்று திரியுமாப் போல, கயிறு என்பது கவுறு என்றும் சொல்லப் படுமாப் போல, நிவதம் என்பது நியதம் என்றும் திரியும். பின்னால், வடமொழித் திரிவில் நியதம்>நியாதம்>நிஷாதம் என்று ஆவது நடக்கக் கூடியதே. ஆனாலும், உயர்ச்சிப் பொருள் இந்தச் சொல்லுக்கு அடித்தளமாய் இருப்பதை உன்னித்து அறியலாம்.

ஆக இந்த நான்கு பகுதியில் சொன்னதைத் தொகுத்துச் சொன்னால்

குரல் என்பது அடி ஒலி
குரலுக்குத் துத்தம் உயர் ஒலி
குரலுக்குக் கய்க்கிளை (குரலொடு காய்ந்த கிளை) பகையொலி
குரலுக்கு உழை, பக்க ஒலி (அதாவது நள்ளிய ஒலி).
குரலுக்கு இளி இணங்கிய ஒலி
தாரத்திற்கு விளரி வெளிரிய ஒலி
தாரம் குரலுக்கு நீண்ட ஒலி

இதே கருத்து இன்னொரு விதமாய் மணிப்பவள நடையில், சங்கதத்துள் நுழைந்துள்ளது.

குரல் = சத்தம்>சக்தம்>சக்சம்>சக்ஷம்>சட்சம்
துத்தம் = உயர் ஒலி = பெரு ஒலி = விடை ஒலி, விடைமம்>விடமம்>வ்ரிஷமம்>ரிஷபம்
கய்க்கிளை > காய்க் கிளை = பகை யொலி = காய்ந்த ஆரம் = காய்ந்தாரம் > காந்தாரம்
உழை = உள் ஒலி = நட்டுமம் > மத்திமம்,
இளி = இணங்கும் ஒலி = பொஞ்சும் ஒலி = பொஞ்சுமம் > பஞ்சுமம்
விளரி = விளர் ஒலி = தய்வத ஒலி = தய்வதம்
தாரம் = உச்ச ஒலி = நிவந்த ஒலி = நிவதம்>நியதம்>நியாதம்>நிஷாதம்

தமிழிசை பற்றிய வேறு செய்திகளை முனைவர் வீ.பா.க. சுந்தரத்தின் நூல்களில் பார்த்து அறியுமாறு வேண்டுகிறேன். எனக்கு வேறு சிந்தனைகள் உருவாகும் பொழுது மீண்டும் தமிழிசைக்குள் வரக் கூடும்.

அதுவரை அன்புடன்,
இராம.கி.

Sunday, March 23, 2008

ஏழு சுரங்கள் - 3

தமிழ்ச் சுரப்பெயர்கள் காரணப் பெயர்களாய் இருப்பதை முந்தையப் பகுதியிற் பார்த்தோம். இனி, சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் சங்கதப் பெயர்களின் விளக்கத்தை தமிழ் வழியே பெற முயலுவோம்.

முன்பே சொன்னது போல் பல சங்கதச் சொற்களின் தொடக்கம் பாகதத்துள் இருக்கிறது. அதே பொழுதில், சம கால மொழிகளான பாகதத்திற்கும் பழந்தமிழுக்கும் உறவு இருந்திருக்கிறது. நான் தமிழின் பாற்பட்டு, ஒரு பக்கமாய்ச் சொல் நகர்ச்சியை விவரித்தாலும், இருபக்க பரிமாறல் நெடுங்காலம் நடந்திருக்கிறது. குறிப்பாக, ஆசீவக, செயின, புத்த நெறிகளின் ஊடாட்டத்திலும், 'சாரிபுத்தன்' போல ஏது சாற்றம் (Logic) கற்கக் காஞ்சி வந்த கல்விப் பயிற்சியிலும், மகதத்திற்கும் தமிழகத்திற்கும் ஆன வணிகத்திலும், இந்தப் பரிமாற்றத்தைப் பார்க்கவேண்டும். பின்னால் வேத நெறி தெற்கே ஆழமாய்த் தொடர்பு கொண்ட பின்னால், இது படிப்படியாகச் சங்கதம் நோக்கி மாறியிருக்கிறது.

[பல நேரம் சொல்லிணைகளை ஆயும் போது, தமிழோடு பாகதத்தைப் பார்க்காமல், சட்டென்று சங்கதத்துள் நுழைவது, நம்மைக் குழப்பத்திற்கே கொண்டு செல்கிறது. பாகதம் - சங்கதம் என்ற இரட்டையில் பாகதம் முந்தையது; சங்கதம் பிந்தையது. பாணினி இலக்கணம் சொல்லியது சந்தம் என்னும் பாகத வட்டார மொழிக்கே ஒழிய, சங்கதத்திற்கு அல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் பாணினி காலத்தில் சங்கதம் என்ற சொல் கூட ஏற்பட்டிருக்கவில்லை. இதை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன், சங்கதம் என்ற மொழியை யாரும் குறை சொல்லவில்லை; தமிழ், பாகதம் ஆகிய ஊற்றுக்களை முற்றிலும் மறைத்து எல்லாமே சங்கதம் என்று முன்வைக்கும் முற்றாளுமையை மட்டுமே உறுதியாய்க் குறை சொல்லுகிறோம் "பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே, மெய் போலும்மே" என்ற வாக்கை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பல காலம் நான் சொல்லுவது போல தமிழ் என்பது முந்தியது; தொல்காப்பியன் வரையறுத்த செந்தமிழ் என்பது பிந்தியது. "செந்தமிழ் சீரழிந்து, தமிழ்ப் பேச்சு வழக்குத் தளைத்தது" என்று சொல்லப் புகுவது எப்படி முட்டாள் தனமோ, அதைப் போல, "பாணினியின் சந்தமே சங்கதமாகிப் பின் பாகதமாகி, மேலும் அவப் பிரம்சம் ஆகி, முடிவில் இன்றைய வட இந்திய மொழிகள் உருவாகின" என்று சொல்லுவது ஒரு தலைகீழான பேச்சு. பேரனைத் தாத்தன் என்பதும், தாத்தனைப் பேரன் என்பதுமாய் பாகதம் - சங்கதத்திற்கு இடையே தவறான சிந்தனை எப்படியோ இந்திய மொழி ஆராய்ச்சியில் கலந்து விட்டது. இதற்கு மொத்தக் குமுகாயமே காரணமாய் இருக்கும் பொழுது, குறிப்பிட்ட ஒரு சாராரை மட்டும் குறை கூறிப் பயனில்லை. இனிமேலாவது யார் தாத்தன், யார் பெயரன் என்று சரியாகப் புரிந்து கொண்டு ஆய்வுகளைத் தொடர்ந்தால், இந்தியவியலில் இதுவரை நடந்திருக்கும் பல்வேறு குழப்பங்களைத் தீர்க்கலாம்.]

தமிழுக்கும் பாகதத்திற்கும் இடையே காணும் பலுக்கல் திரிவுக்குக் காட்டாக அத்தன் என்ற சொல்லைப் பார்க்கலாம். இது பாகதத்தில் adhdha என்று அதிரொலியில் (voiced) அமையும். அதே போல அச்சன் என்ற சொல்லும் அதிரொலியில் ajja என்று ஆகும். இன்னும் சொன்னால், வர்த்தனம் (வார்த்தையால் ஆனது வார்த்தனம்>வர்த்தனம்; வார்த்தது வார்த்தை; வார்த்தல் என்னும் வினைச்சொல்லைப் பொழிதல் என்னும் வினைச்சொல் போலப் புரிந்து கொள்ளலாம்.) வஜ்ஜனம் (பின்னால் இதுவே வசனம் என்று தமிழில்) ஆகும். இதே போன்ற திரிவுகள் வேத மொழியிலும் நடந்திருக்கின்றன. அதில் முழுகு என்ற சொல் மஜ்ஜ் என்று ஆகும். இதை ஆங்கிலத்தில் merge என்று ஆவதைப் போலக் கொள்ள வேண்டும். எலும்பின் உள்ளே இருக்கும் மாவுக்குழைவு போன்ற மூளைப் பொருள் மஜ்ஜ என்று வேதமொழியில் ஆகும். ஆங்கிலத்திலோ அது marrow என்றும், செருமனில் marg என்றும் ஆகும். இதே போலச் சடை என்பது jadaa என்று ஆவதையும் செரியகம்>சீரகம் என்பது jeera என்று ஆவதையும், சுரம் (=காய்ச்சல்) என்பது jura>jvara என்று ஆவதையும், சொலி>jvali என்று ஆவதையும் புகு puj என்று ஆவதையும் எண்ணிப் பார்க்கலாம்.

இன்னுஞ் சொன்னால், வணிகன் vanij என்றும், வித்து>விதை என்பது viija>biija என்று இருக்கு வேதத்தில் கூட ஆவதையும் எண்ணிப் பார்த்தால், க என்னும் அடைப்பு வெடிப்பொலி (stop plosive) முதலில் ga என்று அதிர் வெடிப்பொலியாய் (voiced plosive) பலுக்கப் பட்டுப் பின்பு இந்தையிரோப்பிய வழக்கத்தில் உள்ள மாற்றொலிப்பில் ஜ எனும் வேறொரு அதிரொலியாய் ஆகுவது முற்றிலும் வடபுலத்து இயற்கையே என்பது புரியும். இதே போலத் தகரம், ஜகரம் ஆகும் வழக்கை விதை>வீஜ என்பதன் வழி புரிந்து கொள்ளலாம். வெள்ளைக்காரர்கள் நம் மதுரையை மெஜுரா என்று பலுக்கியதையும், அதை விவரம் தெரியாமல் போலிக் குரவத்தில் (=கௌரவத்தில்) நம்மவர்கள் 1960கள் வரை தாங்கிக் கொண்டு திரிந்ததையும் (இது போல டூட்டுக்கோரின், ட்ரிச்சி, டாஞ்சூர் என்றெல்லாம் தமிழர் ஒயிலாடிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.) இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

ஆகக் ககரம், சகரம், தகரம் ஆகியவை இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப, வடபுலத்திற் ஜகரமாகத் திரிவது பெரிதும் நடந்திருக்கிறது. இந்த முறையில் சர், சல் என்னும் ஒலிக்குறிப்பின் வழியாக உருவாகிய சத்தம், சருகம் என்னும் தமிழ்ச்சொற்கள் வடபுலத்துப் பலுக்கில் ஷட்ஜம் என மாறுவது கொஞ்சங் கூட வியப்பே இல்லை. முன்னே சொன்னது போலச் சத்தம், சருகம் என்ற சொற்கள் குரல் என்னும் அடிப்படை ஒலிப் பொருளையே குறித்தன. ஆக, இந்தப் பார்வையில், குரலும் சட்ஜமும் ஒரே பொருளையே உணர்த்துகின்றன. "ஆறு சுரங்களை உருவாகக் காரணமாகியது" என்றெல்லாம் பொருந்தப் புகல வேண்டியதில்லை. செவ்வியல் இசையில் இருக்கும் தமிழ்த் தொடர்பை முற்றிலும் மறுக்க வேண்டிய தேவையிருப்பவர்கள் மட்டுமே ஆறு சுரங்கள் பற்றி இட்டுக் கட்டிப் பொருந்தப் புகல்வார்கள்.

இனி ரிஷபம் என்ற சுரத்தைப் பார்ப்போம். ரிஷபம் என்றால் காளை என்றே வடமொழியில் பொருள். அப்படியானால், ரிஷபத்திற்கும் துத்தத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இந்தியக் காளையின் விதப்பான தோற்றங்களாய் இரண்டை விலங்கியலில் குறிப்பார்கள்; ஒன்று அதன் உயர்ந்த திமில் (சிந்து சமவெளி முத்திரைகளில் கூட எருத்தின் திமில் சிறப்பாகக் காட்டப் பட்டிருக்கும்,) இன்னொன்று காளையின் பெருத்த வயிறு. காளையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களான எருது, ஏறு போன்றவை, உயர்ந்த திமிலை வைத்தே எழுந்தன. விடை, நந்தி போன்ற சொற்கள், தொந்தி முன்தள்ளிப் பருத்து விடைத்து இருப்பதையே குறிக்கின்றன. விடைமா என்ற சொல்லில் வரும் 'மா'வெனும் விலங்குப் பெயரைத் தவிர்த்து விடவம் என்றும் காளையைச் சொல்வதுண்டு. இனி, முன்வந்து கிடக்கும் பெருவயிறு துந்தி>தொந்தி (அதே போல நுந்தி>நந்தி) என்று சொல்லப்படுகிறதல்லவா? துந்துதலின் பிறவினைச்சொல்லான துத்துதலும் முன்வந்து கிடத்தலையே குறிக்கும்; துருத்துதலும் முன்வந்து கிடத்தல் தானே? துருத்தல் துரித்தலாகியும் அதே பொருளைக் குறிக்கும். துரியம், துரந்தரம், தூரியம், தூர்வகம் போன்ற இருபிறப்பிச் சொற்கள் எல்லாம் பொதியெருதைக் குறிக்கும் சொற்களே. தூரி என்ற சொல்லும் கூடப் பொதுவான எருதைக் குறிக்கும். துத்தம் என்ற சொல் உயர்ந்தது, முன்தள்ளிப் பெருத்தது என்று அதன் இயல்பை உணர்த்துதற்கு மாறாய், துத்தம் என்ற பருப்பொருளையே (முதலில் பெருவயிற்றைக் குறித்துப் பின்னால் எருதைக்) குறித்து அதை விடவம்>விடபம்>விஷபம்>வ்ரிஷபம்>ரிஷபம் என்ற இயல்புத் திரிவில் வடபுலத்தில் புரிந்துகொள்ளப் பட்டது போலும்.

மூன்றாவது சுரப் பெயரான காந்தாரம் என்பது சங்கதம் விரவிக் கொண்ட நல்ல தமிழ்ப்பெயரே! காய்ந்த ஆரம்>காய்ந்தாரம்>காந்தாரம். (ஆரம் என்பது ஒலி; ஆர்தல்>ஆரித்தல் என்பது ஒலித்தல் வினையையும், ஆர ஆரித்தல் என்பது நிறைந்து ஒலித்தல் என்ற பொருளையும் சுட்டும்.) உள்ளிருக்கும் யகரத்தைத் தொகுத்த காரணத்தால், காந்தாரத்தின் மூலம் நமக்குச் சட்டென்று தெரியாமல் போகிறது. காய்ந்தாரம் என்ற சொல்லே எனக்குப் பகையொலி என்ற பொருளில் கைக்கிளையைக் காய்க்கிளை>கய்க்கிளை என்று சொல்லுவதில் பொருள் இருக்குமோ என்ற அய்யப்பாட்டை உருவாக்கியது. காய்க் கிளை (>கய்க்கிளை) = காய்ந்த ஆரம் = காய்ந்தாரம் = பகை யொலி. [காந்தாரம் என்ற சொல் சுரத்திற்கு மட்டுமல்லாமல் ஒரு தமிழ்ப்பண்ணுக்கும் பெயராய் இருக்கிறது.]

நாலாவது சுரம் மத்யமம். முன்னே சொன்னது போல, உழை என்ற சொல்லிற்கு ஒலி, பக்கம், என்பவை போக, உள்ளிருத்தல் என்ற பொருளும் உண்டு. உள் என்னும் கருத்தை நள் என்ற சொல்லும் தமிழில் உணர்த்தும். நள்+து = நட்டு>நடு; நட்ட நடு என்று சொல்லுகிறோம் இல்லையா? நடுவில் இருப்பது நட்டுமம். மத்ய அரசு என்று சொல்லாமல், நடுவண் அரசு என்று சொல்லும் இந்தக் காலப் புழக்கத்தை எண்ணிப் பார்த்தால், இதைப் புரிந்து கொள்ளலாம். நகர/மகரப் போலியாலும், வடக்கே போகப் போக, அதிர்வுப் பலுக்கல் கூடும் என்ற காரணத்தாலும், நட்டுமம்>மத்திமம் என்று ஆவதில் வியப்பில்லை. மத்திமா எனும் பாகதச் சொல் மத்யமா என்றே சங்கதத்தில் திரியும். (நடுமம் = median என்ற சொல்லையும் ஓர்ந்து பாருங்கள். centre என்பதற்கு நடுவம் என்ற சொல்லைப் புழங்காமல் மையம் என்றோ, கூர்ந்தம் என்றோ பயிலலாம். "கிடைத்ததை அள்ளிப் போட்டு மொழிபெயர்ப்பு வேலையை முடித்துக் கொள்" என்ற அவக்கர நாட்டத்தால், தமிழ்நடையைப் பெரிதும் தடுமாற வைக்கிறோம். 'இயக்குநர்' என்ற சொல் இந்த நாட்டில் ஏற்படுத்திய குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் 'நெறியாளர்' என்பதின் மூலம் குறைந்து கொண்டிருக்கிறது அல்லவா?)

ஐந்தாவது சுரம் பஞ்சமம் என்று சொல்லப் படும். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்ற பழமொழியைப் போல, 'ஐந்து என்பது பஞ்ச' என்று பொருந்தப் புகல்வதைக் காட்டிலும், இளிதல் = இணங்குதல், ஒன்றுதல் என்ற பொருளோடு தொடர்புடைய 'பொஞ்சுதலோடு' பொருத்திப் பார்த்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். பொஞ்சுதல் என்பது பொந்துதலின் பேச்சுவழக்கே. பொந்துதல் என்பது பொருந்துதல் என்றும் தமிழில் வழங்கும். பொந்திகை = இணக்கம், மன நிறைவு, பொருந்தாமை = இணக்கமின்மை போன்ற சொற்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம். பின்னால் ஐந்தாவது சுரம் என்று குறிக்கும் பஞ்சமம் என்ற சொல் எதுகையாய் ஒலிக்க, இணங்குதல் கருத்து மறைந்து ஐந்தாவது என்னும் கருத்து நிலைப்பட்டிருக்கலாம். (பொக்குளம் என்ற சொல் metathesis முறையில் கொப்புளம் என்றும், குமுடி என்ற சொல் குடுமி என்றும் மாறுவது பேச்சுவழக்கில் இயற்கையே. குமுடிமூலை என்பது தில்லைச் சிவனடியார் ஆறுமுகசாமியின் ஊர். வட்டியைக் - interest - குறிக்கும் பொலிசை என்ற சொல் பலிசையாய்ப் பல்லவர் சோழர் கல்வெட்டுக்களில் மாறியதையும் இங்கு எண்ணிப் பாருங்கள்.)

அன்புடன்,
இராம.கி.

Wednesday, March 19, 2008

ஏழு சுரங்கள் - 2

சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களுக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயர்களுக்கும் உள்ள உறவைச் சட்டென்று ஆய்வின்றிச் சொல்ல முடியாது இருக்கிறது. சட்ஜம் என்பது குரல் என்றும் (இப்படிச் சொல்வது மேவுதிப் போக்கு - majority trend), இல்லையில்லை சட்ஜம் என்பது இளியே என்றும் (இப்படிச் சொல்வது நுணதிப் போக்கு - minority trend), இருவேறு கருத்துக்கள் தமிழிசையாளரிடம் உண்டு. நான் இந்தக் கேள்வியை ஆய்வு செய்தவனில்லை. மேவுதியாரோடு இணங்கி, பெயர்க்காரணங்களை மட்டும் இங்கு நான் சொல்ல முற்படுகிறேன்.

இசையறிஞர் முனைவர் வீ.பா.க. சுந்தரம் தன்னுடைய ஆய்வில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற பெயர்கள் எப்படி எழுந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். [தமிழிசையில் ஆர்வம் கொண்டு, ஆய்வுக் கண் கொண்டு பல்வேறு செய்திகளை அணுக விழைவோர், கீழ்வரும் அவருடைய நான்கு நூல்களையும் உசாத் துணையாய்க் கொள்ளுவது நல்லது. தவிர, இசைத்தமிழ் பற்றி அறிவது, இயற்கையைச் சுவைக்கவும், கலைநுகர்வைப் பெருக்கவும், உதவி செய்யும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 79, பிரகாசம் சாலை (பிராடுவே) சென்னை 108, வெளியீட்டு ஆண்டு 1986

தமிழிசை வளம், பதிப்புத் துறை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை 625 021, வெளியீட்டு ஆண்டு 1985

தமிழிசையியல், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 005, வெளியீட்டு ஆண்டு 1994

தமிழிசைக் கலைக் களஞ்சியம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி 620 024 - 4 மடலங்கள், வெளியீட்டு ஆண்டுகள் 1992, 1994, 1997, 2000]

அதே பொழுது சங்கதப் பெயர்களுக்கு காலங்காலமாய்ச் சொல்லிவந்த விளக்கத்தையே அவர் எடுத்துரைக்கிறார். இந்த இரு வரிசைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்ற சிந்தனையில், இங்கே என் முன்னீடுகளை எடுத்து வைக்கிறேன்.

முதலில் தமிழ்ச் சுரப் பெயர்களைப் பார்ப்போம். இங்கே வீ.பா.க.சு. வின் ஆய்விற் பெரிதும் சார்ந்து, இரண்டே சுரங்களில் மட்டும் ஓரளவு வேறுபட்டு, நான் சொல்ல முற்படுகிறேன்.

குரல் என்பதைப் 'ஒன்றோடு ஒன்றின் சேர்க்கை அதாவது பற்றுதல்' எனும் பொருளில் எழுந்த சொல்லாகவே அவர் உரைப்பார். (அவர் கூறிய விளக்கத்தில், குரவை என்பது கைப்பற்றி ஆடும் ஆட்டம்; குரால் என்பது தாய்ப்பற்றுடைய குட்டி; குரவர் என்பவர் பற்றுடைய குரு, பெற்றோர்.) நானோ, குரலைக் குர் என்னும் ஒலிக்குறிப்பில் எழுந்த சொல்லாகவே காண்கிறேன். ஒலி என்னும் பொருளில் எழும் அடியோசைக்குக் (voice) குரல் என்றே பெயர். குரத்தம் (= ஆரவாரம்), குரம் (= ஒலி), குரவை>குலவை (= மகிழ்ச்சியொலி), குருமித்தல் (= பேரொலி செய்தல்), குரைத்தல்>குலைத்தல் (= ஆரவாரித்தல்), குலிலி (= வீராவேச ஒலி), குழறுதல்/குளறுதல் (= பேச்சுத் தடுமாறல்), குளிறுதல் (= ஒலித்தல்), குறட்டை (= உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி) என வரும் பல்வேறு தொடர்புடைய சொற்களையும் குரலோடு எண்ணிப் பார்த்தால், குர் என்னும் ஒலிக்குறிப்பே குரலுக்கு அடிப்படை என்பதை உறுதிசெய்யும். தவிர சிவநெறியாளரின் பதினோராம் திருமுறையில், தேவார மூவர்க்கும் மூத்தவரான காரைக்கால் அம்மையாரின்,

துத்தம் கைக்கிளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடி
.....................
அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
அப்பன் இடம் திரு ஆலங்காடே

என்னும் பாடலில் ஓசை என்ற சொல்லே குரல் என்னும் சுரத்தைக் குறிக்கிறது. பொதுவாக மற்ற சுரங்கள் குரலில் இருந்து கிளைத்தவையாகவே இசையியலாளர்கள் சொல்லுவார்கள். இது சங்க இலக்கியமான மலைபடுகடாத்தில்,

குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பு

என்று வரும் 23 ஆம் அடியால் உறுதி செய்யப் படுகிறது.

அடுத்து, துத்தம் என்ற சொல்லுக்கு உயர்ந்தது என்ற பொருளையே வீ.பா.க.சு காட்டுவார் (துத்துதல் = உயர்த்துதல்; துத்தியது துத்தம். துத்தின் விரிவான துருத்து என்பதும் உயர்ந்ததை, வெளிவந்ததைக் குறிப்பதே. துத்து, துருத்து என்பதில் இருந்து பல்வேறு சொற்கள் கிளைக்கும்.) துத்திய குரல் = உயர்ந்த குரல் என்பதில் குரலை உள்ளார்ந்து வைத்து வெறுமே துத்தம் என்று சொல்லுவது ஏற்புடைத்தே. உயர்ந்தது என்பதோடு 'முன்தள்ளிப் பெருத்தது' என்றும் துத்தத்திற்குப் பொருளுண்டு. மொத்தத்தில், அவர் விளக்கத்தை அப்படியே மறுப்பில்லாமல் நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்.

மூன்றாவதாக, கைக்கிளை என்பதற்குக் கிளை = உறவு என்ற பொருளில் 'சிறுமை ஒலி உறவு' என்று அவர் அமைதி காணுவார். செவ்வியல் இசையில் இயல்புத் தொனிப்பில் (just intonation) ஒவ்வொரு சுரமும் படிப் படியாக அதற்கு அடுத்ததோடு ஒத்திசைப் புறக்கூட்டில் (harmonic progression) இருந்தாலும், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவும் போது, சில பொருத்துகள் ஒத்திசைந்தும், சில ஒத்திசையாமலும் அமைவது, எந்த இனிமையைத் தேடிக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்தது. பொதுவாய் முதற்சுரமும், நாலாம் சுரமும், அதே போல முதற்சுரமும், ஐந்தாம் சுரமும் கேட்பதற்கு இனிமையாய் மிகுந்த ஒத்திசை கொண்டன என்பார்கள். இதற்கு மாறாய், முதற்சுரமும், மூன்றாம் சுரமும், முதலும் ஆறாம் சுரமும், அவ்வளவு ஒத்திசையாமல், குறைந்து இருப்பதாகவே இசையிலாளர் கொள்ளுவர்.

முனைவர் வீ.பா.க.சு.வில் இருந்து சிறிதே மாறுபட்டு, கைக்கிளை என்ற சொல்லைச் சிறுமைக் கிளை என்று கொள்ளாமல் (கை என்னும் முன்னொட்டு சிறு என்னும் பொருளைத் தமிழில் உணர்த்தும். கைக்குட்டை என்னும் சொல்லை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்), அதைக் காய்க்கிளையின் மரூஉ என்றே நான் புரிந்து கொள்ளுகிறேன். [இப்படிச் சொல்வதற்கு மணிப்பவளச் சொல்லான காந்தாரம் என்பதும் கூட ஒரு காரணம். அதைக் கீழே விளக்குவேன்.] சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் நட்பாய் இருப்பதை பழம் என்றும், எதிராய் இருப்பதைக் காய் என்றும் சொல்லும் பரந்த வழக்கை ஓர்ந்து பார்த்தால், காய்க்கிளை என்று சொல்லுவதில் உள்ள சீர்மை புலப்படும். கிளை என்பதற்கு ஒலி என்றே பொருள் கொள்ளலாம்.

கிளவுதல் என்ற பழைய வினை தமிழில் ஒலித்தல் என்றே பொருள் கொள்ளும். (இரட்டைக் கிளவி என்று சொல்லுகிறார்கள் அல்லவா?) இன்னும், கிளவி என்ற சொல்லைக் clause என்பதற்கு இணையாய்ப் பொருள் கொள்ளுவதையும், பேசிக்கொண்டே ஆடும் ஆட்டத்தைக் கிள்ளாக்கு என்று சொல்லுவதையும், கிளி, கிள்ளை (= பேசும் கிளி) போன்ற பெயர்ச் சொற்களையும் கூர்ந்து பார்த்தால் கிளத்தல்>கிளை என்பதில், ஒலித்தல்>ஒலி என்ற பொருளும் இருந்திருக்க வேண்டும் என உணரலாம். அந்த வகையில் காய்க் கிளை என்பது காய்ந்த ஒலி என்றும், பொருந்தா ஒலி என்றும், பகையொலி என்றும், பொருள் கொள்ளும்.

அடுத்து உள்ள நாலாவது நரம்பு உழையாகும். உள்>உளை>உழை என்று இந்தச் சொல் ஒலிப்பொருளில் விரியும். உளைதலின் திரிபான ஊளை என்பதும் பேரொலி என்ற பொருளைக் கொடுக்கும். howl என்ற மேலையர் சொல்லையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம். தவிர உழை என்பதற்குப் உள்ளாதல், பக்கம் என்றும் பொருளுண்டு. இந்த நரம்பை, குரலோடு சேர்ந்த உள்ளிருக்கும் நட்பு நரம்பு என்றே இசையியலார் சொல்லுவார்கள். குரலுக்குப் பக்கத்தில் நெருங்கி, நள்ளி இருக்கக் கூடிய உள்நரம்பு உழை நரம்பு ஆகும். (நள்ளுவது நட்பு. உள்ளிருத்தல் நடுவில் இருத்தல்.) இதில் முனைவர். வீ.பா.க.சு.வுடன் முழுதும் உடன்படுகிறேன்.

ஐந்தாவது இளி என்னும் நரம்பு. ஒன்று இன்னொன்றோடு இணங்குதலை, அதாவது ஒன்றுதலை, தமிழில் இளிதல் என்ற வினையால் சொல்லலாம். இளி நரம்பை, கிளை நரம்பு என்று கூடத் தமிழிசையிற் சொல்லுவதுண்டு. (தென்மாவட்டங்களில் இவனுக்கு இவன் கிளைகாரன் என்று சொல்லி சுற்றத்தையும், நண்பரையும் ஒருங்கிணைத்தாற் போற் குறிக்கும் சொல்லாட்சி உண்டு.) இதிலும் என் கருத்து வீ.பா.க.சு. கருத்தே.

ஆறாவது நரம்பிற்குப் போவதற்கு முன்னால் ஏழாவது நரம்பின் பெயரைப் புரிந்து கொள்ளுவது நல்லது. ஏழாவது நரம்பு, தாரம் என்று சொல்லப் படும். இது ஒரு சுரவரிசையில் இருக்கும் ஏழு நரம்புகளிலேயே, மிக உயர்ந்த, நீண்ட, உச்ச நரம்பு ஆகும். 'உச்சம் தாரம் ஓங்கும் வல்லிசை' என்று திவாகர நிகண்டின் நூற்பாவை வீ.பா.க.சு. குறிப்பார். தார் என்பதற்கு மேலோங்கியது, நீண்டது என்ற பொருள் உண்டு. (தாராளம் என்ற சொல்லை இங்கு நினைவு கூருங்கள்.)

ஆறாவது நரம்பான விளரி என்பது, தாரத்தோடு ஒப்பிடத் தன் அதிர்விற் சற்று குறைந்தது. பேச்சு வழ்க்கில் கொஞ்சம் குறைந்த கருப்பை வெளிர்கருப்பு என்று சொல்லுகிறோம் அல்லவா? வெளிர்தலும் விளர்தலும் ஒரே பொருளுள்ள சொற்கள் தாம். எனவே தாரத்தில் விளர்த்தது விளர் தாரம். இங்கு தாரம் என்ற ஈற்றுச் சொல்லை உள்ளார்ந்து வைத்துக் கொண்டு விளரி என்றே சுருங்கச் சொல்லப் படுகிறது. (ஏற்கனவே மூன்றாம் சுரத்தை குரலுக்குக் காய்க்கிளை என்று சொல்லிய காரணத்தால், இன்னொரு காய்ந்த சுரமான ஆறாம் சுரத்தையும் குரலோடு பொருத்தாமல், வேறு வகையில் தாரத்தோடு பொருத்திச் சொல்லியிருக்கிறது.)

ஆகச் சுருங்கச் சொன்னால், தமிழ்ப்பெயர்களின் பெயர்க்காரணம் கீழ்வருமாறு அமையும்.

குரல் என்பது அடிப்படை ஒலி
குரலுக்குத் துத்தம் என்பது குரலுக்கு உயர்ந்த ஒலி
குரலுக்குக் காய்க்கிளை என்பது குரலொடு காய்ந்த கிளை, அதாவது குரலுக்குப் பகையொலி
குரலுக்கு உழை என்பது குரலுக்குப் பக்கமான ஒலி = குரலுக்கு நள்ளிய ஒலி (நள்ளுதல் = நெருங்குதல்)
குரலுக்கு இளி என்பது குரலுக்கு இணங்கிய ஒலி
தாரத்தின் விளரி என்பது தாரத்திலும் வெளிரிய ஒலி
தாரம் என்பது குரலைப் பார்க்க மிக மிக நீண்ட ஒலி

ஒரு சுரவரிசையை வட்டம், மண்டிலம், தானம், தாயி என்ற சொற்களால் தமிழிசையில் குறிப்பார்கள். இவை அத்தனையும் தமிழ்ச் சொற்களே. ஒரு மண்டிலம் முடிய, அடுத்த மண்டிலம் வந்து விடும். மண்டிலம் என்ற சொல்லை சிலம்பில் ஆய்ச்சியர் குரவை 13 ஆம் அடிக்கு ஆன அடியார்க்கு நல்லார் உரை கீழ்க்கண்டவாறு உரைக்கும்.

வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓரேழ் தொடுத்த மண்டிலம் ஆகும்

வட்டி வருவது வட்டம் (வட்டுதல் = வளைதல்); மண்டித்து வருவது மண்டிலம் (மண்டலம் = region என்ற சொல்லும் நிலம் குறித்த வட்டம் தான். சிவகங்கைப் பக்கம் வட்டகை என்ற சொல் மண்டலத்தைக் குறிக்கும். மண்டிலம் என்ற கருத்தீட்டு வட்டத்திற்கும். மண்டலம் என்னும் பருப்பொருள் வட்டகைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை உணர்ந்து கொள்ளுவது தமிழ்நடை சிறக்க வழிவகுக்கும். (இசையில் வரும் மண்டிலம் போல யாப்பில் ஒருவகைப் பாவினத்திற்கும் மண்டிலம் என்ற பெயர் உண்டு. காட்டாக, காய் - காய் - மா - தேமா எனும் ஒழுங்கு முறை வாய்பாட்டில், 4 சீர்களையும் 8 அரையடிகளையும், அதோடு எதுகை மோனை அழகுகளையும் சேர்த்து, மீண்டும் மீண்டும் மடித்துக் கொண்டு வரும் பாவினம், எண்சீர் ஆசிரிய மண்டிலம் என்று சொல்லப் படும். பின்னால் மண்டிலம் என்ற சொல்லைப் புழங்காது வட்டம்>வ்ருத்தம்>விருத்தம் என்ற இருபிறப்பிச் சொல்லையே நம்மவர்கள் புழங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு விருத்தம் என்றால் புரிந்து, மண்டிலம் என்றால் மரபுக் கவிஞர்கள் கூடத் தடுமாறலாம். அந்த அளவிற்கு வடமொழி/மணிப்பவளச் சொற்கள் நம்மிடையே ஊடுருவியிருக்கின்றன. ஆங்கிலத்தில் verse என்று சொல்லுவது விருத்தத்தோடு தொடர்புடையது தான்.)

தமிழிசையில் ஒவ்வொரு பண்ணிற்கும் மண்டிலம் சொல்லும் போது ஆரோசை (=ஆரோகணம், ஏறிவரும் ஓசை), அவரோசையில் ( = அவரோகணம், அவல்ந்து வரும் ஓசை; அவல் = கீழ்) சுரங்களைச் சொல்லுவார்கள். மண்டிலத்தின் இன்னொரு சொல்லான தானம் என்பது, தண்டு கொண்டு நிலைத்து நிற்பது என்று பொருள் கொள்ளும். (சங்கத மயக்கத்தில் உள்ளவர்கள் தானத்தையும் தமிழில்லை என்பார்கள்.) வட்டம், மண்டிலம், தானம் என்பது போகத் தாயி என்ற சொல்லும் இதே கருத்தைக் குறிக்கத் தமிழில் உண்டு. தாயக் கட்டம் என்ற ஆட்டத்தில் தாயம் என்ற சொல்லை உன்னிப் பார்த்தால் தங்கும் இடம் என்ற பொருள் புரிபடும். தாயித்தல் என்பது தங்குதல். (தாயி என்பதோடு முன்னால் ஸ் என்பதைச் சேர்த்து ஸ்தாயி ஆக்கி வடமொழி பயின்று கொள்ளும். தானம் என்பது வேறொரு வகையில் ஸ்தானம் ஆகி நிலத்தைக் குறிப்பது போல இதைப் புரிந்து கொள்ளலாம். இந்துஸ்தானம் < இந்துத்தானம் < சிந்துத்தானம் = சிந்து ஆறு பாயும் நிலம்)

ஓர் இசை மண்டிலத்தை மொத்தம் 22 சுருதிகளாய்ப் (அலகுகளாய்ப்) பிரிப்பது தமிழர் மரபாகும். அதோடு எழு சுரங்களுக்கும் 4,4,3,2,4,3,2 என்று அலகுகளைப் பிரிப்பர். இந்த ஏழு சுரங்களும் ஒன்றின் பின் ஒன்றாய்க் கிளைத்தது இயல்பான வளர்ச்சியே. எப்படி நீரின் உறைநிலை (freezing point), கொதிநிலை (boiling point) ஆகியவற்றைக் கொண்டு செல்சியசு, வாரன்ஃகீட் போன்ற வெம்மை அளவுகோல்கள் எழுந்தனவோ, அது போலக் குரல் தாரம் என்று இரு ஈறுகளை வைத்துக் கொண்டு மற்ற சுரங்களை அடையாளங் காட்டும் நடைமுறை இது. இசை வளர்ச்சியில், ஏழு சுரங்களைப் பன்னிரண்டு அரைச் சுரங்களாய் நீட்டி அவற்றில் சிலவற்றை வெவ்வேறு வகையில் உகந்தெடுத்து, பெருமடக்கு (permutation), கூம்பிணைப்பு (combination) முறைகளில், ஆரோசை, அவரோசை வரிசைகளை அமைப்பதைப் பண்ணுவது என்பார்கள். பண்ணிய இசை பண்ணாயிற்று.

பன்னிரண்டு அரைச்சுரங்களுக்கான தமிழ்ப்பெயர்களையும், இணை கொண்ட வடசொற்களையும், மேலைக் குறியீடுகளையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

குரல் - சட்ஜம் - C
மென் துத்தம் - சுத்த ரிஷபம் - D flat
வன் துத்தம் - சதுஸ்ருதி ரிஷபம் - D
மென் கைக்கிளை - சாதாரண காந்தாரம் - E flat
வன் கைக்கிளை - அந்தர காந்தாரம் - E
மெல்லுழை - சுத்த மத்யமம் - F
வல்லுழை - ப்ரதி மத்யமம் - F sharp
இளி - பஞ்சமம் - G
மென் விளரி - சுத்த தைவதம் - A flat
வன் விளரி - சதுஸ்ருதி தைவதம் - A
மென் தாரம் - கைசகி நிஷாதம் - B flat
வன் தாரம் - காகலி நிஷாதம் - B

காட்டாக, முல்லையாழ் என்றும், செம்பாலைப் பண் என்றும் பழங்காலத்தில் சொல்லப் பட்ட பண்ணை அரிகாம்போதி என்ற அராகமாக இன்று சொல்லுவார்கள்.

அதன் ஆரோசை ச ரி2 க2 ம ப த2 நி ச்
அதன் அவரோசை ச நி த2 ப ம க2 ரி2 ச்

இப்படிப் பல்வேறு பண்கள் வெவ்வேறு சுரங்களைக் கொண்டு அமையும்.

ஒவ்வொரு சுரத்தையும் அதன் அதிர்ச்சிப் பருவெண்ணால் (vibrational frequency) ஒலித்துக் காட்ட முடியும். 12 அரைச்சுரங்களின் ழுழு அரங்கும் (full range) ஒரு மண்டிலமாகும். இசையியலில் மெலிவு மண்டிலம் (மந்த்ர ஸ்தாயி), சமன் மண்டிலம் (மத்திய ஸ்தாயி), வலிவு மண்டிலம் (தார ஸ்தாயி) என மூன்று மண்டிலங்களைச் சொல்லுவார்கள் காண்க, - சிலம்பு அரங்கேற்று காதை 93-94 ஆம் அடிகள்.

வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமையோனுடன்

ஒவ்வொரு மண்டிலத்திலும் ஒரு குரற் சுரம், ஒரு துத்தச் சுரம் ....... முடிவில் ஒரு தாரச் சுரம் என அமையும். அதே பொழுது, சமன் மண்டிலத்தில் வரும் குரற் சுரத்தின் பருவெண் மெலிவு மண்டிலத்தில் வரும் குரலின் பருவெண்ணைக் காட்டிலும் இரண்டு மடங்கு இருக்கும். இதே போல வலிவுக் குரல், சமன் குரலைப் போல் இருமடங்குப் பருவெண் கொண்டது. சிலம்பின் வழி இசையாய்வு செய்த சென்னைப் பல்களைக்கழக முன்னாள் பூதியற் பேராசிரியர் திரு. வீரபாண்டியன், ஒரே மண்டிலத்துள் இருக்கும் 7 சுரங்களுக்கு, கீழ்க் கண்ட பருவெண் மடங்குகளை இருவேறு முறைகளில் குறிப்பார்.

http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R

இயல்புத் தொனிப்பு முறை (Just intonation)

ச ரி2 க2 ம1 ப த2 நி2 ச்
1 9/8 5/4 4/3 3/2 5/3 15/8 2

சிலம்பில் வரும் ஆராய்தல் தொனிப்பு முறை

ச ரி2 க2 ம1 ப த2 நி2 ச்
1 9/8 (9/8)^2 4/3 3/2 27/16 (4/3)^2 2

ஆகத் தமிழில் வரும் சுரப் பெயர்கள் எல்லாம் தானாய் எழுந்ததாய்த் தெரியவில்லை; இசையியலை நன்கு புரிந்து இசையடவு (musical design)செய்த ஒருவர் வேண்டுமென்றே ஆராய்ச்சிப் பொருளோடு இட்டிருக்கும் காரணப் பெயர்கள் என்றே தெளிவாகத் தெரிகிறது. அதோடு, சங்கதப் பெயர்களுக்குக் கொடுத்த விளக்கங்கள் போலத் தான்தோன்றித் தனமாய் அல்லாமல், உள்ளார்ந்த ஏரணத்தோடு இவை இருப்பதையும் உணருகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 18, 2008

ஏழு சுரங்கள் - 1

தொய்வில்லா நாரை ஒரு கவட்டையிற் கட்டி, வலிந்து இழுத்தால் சுர்ர்ர்.... என்று அதிருமே, அந்த அதிர்ச்சி ஒரு மொழிசாரா ஒலிக்குறிப்பு; (நார் என்ற சொல் கூட நுர்>நர்.... என்னும் ஒலிக்குறிப்பில் கிளைத்தது தான்.) இது போன்று வெவ்வேறு நிகழ்வுகளில் ஏற்படும் ஒலிக்குறிப்புகளைக் கொண்டு இயல் மொழிகள், தம் இயல்புக்கு ஏற்ப, ஒலிப் பொருளை உணர்த்தி, விதப்பான சொற்களை அமைத்திருக்கின்றன.

நாரை வலித்து இழுப்பதைத் தெறித்தல் சுண்டுதல் என்று சொல்லுகிறோம். தொல்காப்பியத்திற்கான இளம்பூரணரின் உரையும், தெறித்து அளத்தல் என்ற முறையைக் கூறும். ஒவ்வொரு சுண்டும் (அல்லது தெறிப்பும்) தெறிப்பு விசை (defelective force), நாரின் நீளம், நாரின் தந்தத் திகை (tensile stress of the wire) ஆகியவற்றைப் பொறுத்து, விதப்பான ஒலியை உண்டாக்குகிறது.

[தந்தத் திகை என்ற சொற்கூட்டு பார்ப்பதற்குப் புதிய தோற்றம் காட்டினாலும், உள்ளே இருக்கும் செய்தி பழையது தான். 'திகையாக இருக்கு, இந்த நடைக்கே இப்படித் திகைஞ்சு போனா, எப்படி?' என்று தென்மாவட்டங்களில் stressed-க்கு இணையாகத் திகையுறுதலைப் பயில்வார்கள். (திகைக்கு இருக்கும் மற்ற பயன்பாடுகளை நான் இங்கு குறிக்கவில்லை.) தந்து என்பது நூலையும், மெல்லிய கயிற்றையும் குறிக்கும். தந்தின் நீட்சியான தந்தி என்பது மாழைக் கம்பியைக் (metal wire) குறிக்கும். கம்பு>கம்பி என்பது போல் தந்து>தந்தியைப் புரிந்து கொள்ளலாம். தந்தித்தல் என்பது நூற்றல் என்றாகும். நூற்பது என்பது நாம் கொடுக்கும் இழுவிசையால் - drawing force - ஏற்படுவது. இழுவிசை என்ற சொல் பொதுமையாக நாம் கொடுக்கும் விசையையும், தந்த விசை என்பது தந்தின் உள்ளே துலங்கும் விதப்பான tensile force ஐயும் குறிக்கும். சுருக்கமாய் tension என்பதைத் தந்தம் என்றே சொல்லலாம். தந்த விசைக்கு எதிரான compressive force ஐ அமுக்கு விசை என்று தமிழில் சொல்லுகிறோம். ஒருசிலர் பயன்படுத்துவது போல, tensile force என்பதை இழுவிசை என்றே சொல்லுவது சரியான மொழியாக்கமாய் இருக்க முடியாது. பொதுமைச் சொற்களை விதப்பு நிகழ்வுகளுக்குப் புழங்குவது தமிழை அறிவியல் மொழியாய் வளப்படுத்தாது; அதை மொண்ணையாகவே வைத்திருக்கும்.]

சுர் என்னும் ஒலிக்குறிப்பு வேறு வகையிலும் ஏற்படும்; காய்ந்த இரும்பில் நீரைச் சுண்டும் போது எழும் ஒலிக்குறிப்பும் சுரீர் என்றே சொல்லப் படுகிறது. சொர்ரென்று தாரை/தாரையாக பெய்யும் மழையைச் 'சொரிகிறது' என்கிறோம். சுர்>சர் என்ற திரிவில் சரசர, சரேர், சரக் என்றும், ரகர/லகரத் திரிவில் சலசல, சலேல் என்றும், இன்னும் கலவையாய் சரேல் என்றும் கூட ஒலிக்குறிப்புச் சொற்கள் தமிழில் உள்ளன. சர என்பதில் கிளைத்த சரகம் என்ற சொல் தேனீயையும், வண்டையும், அவை எழுப்பும் சர்ர்ர்ர்...... என்னும் ரீங்காரத்தையும் கூடக் குறிக்கும்.

சுர் எனும் குறிப்பில் கிளைத்த சுரல் வினை, சுரம் என்ற பெயர்ச் சொல்லை உருவாக்கும். (இதே போலக் குரல் என்னும் சொல்லும், நரல் என்னும் சொல்லும் குர், நுர் எனும் ஒலிக்குறிப்புக்களில் உருவானவையே. 'கொர கொரப் பேச்சு, நரநரவென்று பல்லைக் கடித்தான்' என்று சொல்லுகிறோம் அல்லவா?) இன்னொரு வகையில் சுரல், சுருதலாகி, சுருதி என்ற சொல்லை உருவாக்கும். மொழிப் பயன்பாட்டில், சுரம் என்பது பெரியது; சுருதி என்பது சிறியது. (இன்றைய இசையியலில் சுருதி என்ற சொல் pitch என்பதற்கு இணையாகவும் பயன்படுகிறது.) சுருதியைத் தொகுத்து வரும் சுதி எனும் சொல், இன்னொரு வகையில் நீண்டு, வண்டைக் குறிக்கும் சூதவம் என்ற சொல்லை உருவாக்கும். இதேபோல அரசனின் புகழை இசையாற் பாடும் பாணர்கள் சூதர்கள் எனப் படுவார்கள். சுருதலின் இன்னொரு நீட்சியாய்ச் சுரும்புதல், சுரும்பித்தல் என்ற வினைகளும் எழும். முடிவில் சுரும்பு என்ற பெயரும் கூட வண்டைக் குறிக்க எழும்.

கல்தல் வினை, கத்தலாகிக் கத்தம்>கதம் என்ற சொல்லை உருவாக்குவது போல (பா கதம் = பரந்த பேச்சு, நாவலந்தீவின் வடபுலத்திற் பெரிதும் பரவியிருந்த பேச்சு, சம் கதம்>சங்கதம் = கலப்புப் பேச்சு = நாவலந்தீவின் பல மொழிகளில் இருந்தும் சொற்களையும் இலக்கணங்களையும் எடுத்துக் கலந்து புனைந்த பேச்சு, செங்கதம்>செம்மையான பேச்சு, standardized speech, செந்தமிழ் போல), சர்>சல் என்னும் திரிவில் சல்தல் வினை எழுந்து சத்தம் எனும் பெயரை உருவாக்கும். கல்தல்>கத்தல் என்பது தமிழென்றால், சல்தல்>சத்தல்>சத்தம் என்பதும் தமிழ் தான். சரகமும் சத்தமும் ஒரே பொருளைக் குறிக்கும் ஒலிச்சொற்கள். அதே போல சத்தத்தில் சகரம் தவிர்த்த அத்தம் என்ற சொல்லும் சுருதியைக் குறிக்கும் சொல் என்று சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் பூதியற் (physics) பேராசிரியர் வீரபாண்டியன் நிறுவுவார்.

http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R

இனி, மேலும் உள்ள தமிழ்த் திரிவில், சுர் என்பது சுல்>சில் என்று ஆகிச் சிலம்புதல், சிலைத்தல் என்ற வினைச் சொற்களையும், அவையொட்டிய பெயர்ச் சொற்களையும் உருவாக்கும். சிள்வண்டைக் குறிக்கும் சில்லி (இது வடமொழியில் ஜில்லி ஆகும்), சில்லிடுதல், சில்லெனல், சில்லி, சில்லிகை (= சிள்வண்டு, வடமொழியில் ஜில்லிகா), சில்லூறு (= வண்டு) போன்ற சொற்களையும் கூட இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

இன்னும் வேறுவகையில், சுல்>சொல் என்னும் திரிவையும் கூர்ந்து பார்க்கலாம். மொல்லும் ஓசை எப்படி மொழிதற் சொல்லை உருவாக்கியதோ, அதைப் போலச் சொல்லுதல் இங்கே உருவாகிறது. இன்னொரு வளர்ச்சியில் சொல்ந்தது சொன் என்றும் திரியும். இதே ஒலிப்பில் வரும் anglo norman சொல்லான soun, Latin சொல்லான sonus, சங்கதச் சொல்லான svan ஆகியவற்றையும் இங்கு ஒப்பு நோக்கலாம். (இது போன்ற இந்தையிரோப்பியச் சொல்லிணைகளை எடுத்துக் காட்டினால், அவற்றை ஏற்பதற்குப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்; உயர்ந்த குடும்பச் சொற்களோடு, தாழ்ந்த தமிழியச் சொற்களை ஒப்பிடலாமோ? என்ன ஓர் அவச்சாரம்? :-) அந்த அளவிற்கு ஒரு மாயத்திரை நம் கண்ணைக் கட்டி வைத்திருக்கிறது.)

சுல்>சல் எனும் திரிவில் திமிலைப்பறையைக் குறிக்கும் சல்லரியும், தாள ஒலியைக் குறிக்கும் சல்லகத்தையும் (வடமொழியில் ஜல்லகம்), சல்லரை என்னும் இசைக்கருவியையும் (சல்லரை, வடமொழிப் பலுக்கில் ஜால்ரா என்று ஆகும்.) இனங் காட்ட முடியும்.

தவசங்களைக் குந்தாணியில் போட்டு உலக்கையால் குற்றும் பொழுது எழும் ஓசைக்குறிப்பு சலுக்கு மொலுக்கு என்று சொல்லப்படும். தவிர, சள்ளட்டி, சளப்பு (ஜ்ல்ப் என்று வடமொழியாகும்.), சளபுள, சளக்குப் புளக்கு (நீர் அசையும் போது ஏற்படும் ஒலி), சளசள (அருவிநீர் கீழே விழும்போது ஏற்படும் ஓசை) போன்ற ஒலிக்குறிப்புகளும் உண்டு. இந்த ஒலிக்குறிப்புகளின் வழியாகச் சரகம் (=தேனி, வண்டு), சலம் (=ஓசையிடும் நீர்; சலம் தமிழே, அதை ஜலம் என்று ஒருசிலர் தவறாகப் பலுக்குவதால், வடமொழியோ என்று பலரும் எண்ணிக் கொள்கிறார்கள்), சலங்கை (ஓசையிடும் காலணி), சலித்தல் (=ஒலித்தல்), சள்ளுவாயன் (=ஓயாது பேசுபவன்) என்ற சொற்களும் உருவாகும். லகரம் தகரமாகும் போலியில், சலங்கை சதங்கையாகவும் ஆகும். கிண்ணங்களில் நீரை நிரப்பி, அவற்றைக் கோல் கொண்டு தட்டி ஓசை எழுப்பும் சல தரங்கம் என்ற கருவியையும் (அதுவும் தமிழ் தான்) இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்,

சுர் எனும் ஒலிக்குறிப்பு இத்தோடு இருப்பதில்லை. இன்னும் நீட்சி பெற்று, சகரம் தவிர்த்த வினைச்சொல்லாய் உர்தல், உருமுதல், உரைத்தல் என்ற விதப்பான வினைச்சொற்களை எழுப்பும்.

இவ்வளவு சொற்களை நீட்டிச் சொன்னதற்குக் காரணம், 'சுரம், சுருதி என்பவை முற்றிலும் தமிழே' என்று நிறுவத் தான். ஒரு சிலர் ஸ்வரம், ஸ்ருதி என்று வடமொழிப் பலுக்கில் சொல்லுவதாலேயே அவை வடசொற்கள் ஆகிவிடா. [பல தமிழ்ச் சொற்களில் வகரத்தையும் ரகரத்தையும் நடுவில் நுழைத்து, வேறு தோற்றம் காட்டி, நம்மை மழுங்கடித்து, வேண்டுமானால் எழுதாக் கிளவியையும் கொண்டுவந்து மருட்டி, தமிழை இல்லை என்று சொல்வது நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதேபொழுது, பாகதத்தில் வகர, ரகர உள்நுழைவு பெரும்பாலும் ஏற்படாது. பாகதம் சங்கதத்திற்கு முந்தியது என்ற அடிப்படையை மூடி மறைத்து, 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற கொள்கையில் சங்கதத்தைத் தூக்கிவைப்பவர் எங்கிருந்தாலும் தம் வேலையைச் செய்து கொண்டிருப்பர். :-)]

சுரம் என்னும் ஒலி முன்னே சொன்னது போல், தெறிப்பு விசை, நாரின் நீளம், நாரின் தந்தத் திகை ஆகியவற்றைப் பொறுத்து, ஒவ்வொரு தெறிப்பிற்கும், தன் அளவில் மாறு கொள்ளும். இருந்தாலும் அவற்றை 12 சுரங்களாயும், 7 சுரங்களாயும் பட்டறிவில் உணர்ந்து அடையாளம் காட்டுவது தமிழிசையின் மரபு. செவ்வியல் இசையில் சுருதி என்பதைச் சுரங்களைக் காட்டிலும் நுண்ணிய அளவீடாகக் குறிப்பார்கள். சுருதி கூடுதலா, குறைச்சலா என்னும் போது அதிர்ச்சியின் பருவெண் (frequency) கூடுதலா, குறைச்சலா என்றே பார்க்கிறோம். (பருவெண்ணைச் சிலர் அதிர்வெண் என்று குறிப்பர்; அது சரியல்ல. அதிர்ச்சியைக் குறிக்காத பருவெண்களும் பல்லாயிரக் கணக்கில் அறிவியலில் உண்டு.)

இந்தியச் செவ்வியல் இசையில் எழு சுரங்கள் என்றவுடன் பலருக்கும் ச,ரி,க,ம,ப,த,நி என்ற குறியீடுகளே நினைவுக்கு வருகின்றன. (இதற்கு இணையான குறியீடுகளை ஆங்கிலத்தில் C,D,E,F,G,A,B என்றும், மேலைச் செவ்வியல் இசையில் Do, Re, Me, Fa, So, La, Ti என்றும் சொல்லுவார்கள்.) இன்னும் ஆழமாய்க் கேட்டால், அந்தக் குறியீடுகளுக்கு ஆன சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களை எடுத்துச் சொல்லுவார்கள் (இந்தப் பெயர்களை ஆழப் பார்த்தால் அவை முழுதுமே சங்கதம் அல்ல. சில தமிழாயும், சில இருபிறப்பியாயும் தோற்றமளிக்கின்றன. இருந்தாலும் பழக்கம் கருதிச் சங்கதப் பெயர்கள் என்று சொல்லுகிறேன். இந்தச் சுரங்களின் பெயர்களுக்கு இணையாய் மேலையிசையில் Tonic, Supertonic, Mediant. Subdominant, Dominant, Submediant, Leading notes என்று சொல்லுவார்கள். அவை தமிழ்ப்பெயரோடு பெரிதும் பொருந்தியிருக்கின்றன.) அதோடு,

சட்ஜம் என்பதற்கு 'இன்னும் ஆறு சுரங்கள் பிறக்க ஏதுவாக அமைந்தது' என்ற பொருளையும்,
ரிஷபம் என்பதற்கு காளைமாட்டின் ஒலி என்றும்,
காந்தரம் என்பதற்கு இன்ப சுகம் தரும் காந்தர்வ ஒலி என்றும்,
மத்திமம் என்பதற்கு நடுவில் உள்ளது என்றும்,
பஞ்சமம் என்பதற்கு ஐந்தாவது என்றும்,
தைவதம் என்பதற்கு தெய்வத் தொடர்புடையது என்றும்,
நிஷாதம் என்பதற்கு 'ஆறு சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து தன்னிடம் சேரப் பெற்றது' என்றும்,

விளக்கம் சொல்லிப் பொருந்தப் புகல்வார்கள். மோனியர் வில்லிம்சு அகரமுதலியோ, இன்னும் மேலே போய், சட்ஜம் என்பதை ஷட்ஜம் என்றே குறிக்கும். எந்தவொரு செவ்வியல் இசைக்காரரும் ஷ என்று சுரம் பாடி நான் கேட்டதில்லை. ஆனாலும் அப்படித்தான் மோனியர் வில்லியம்சு குறிக்கிறது. தவிர ஷட்ஜம் என்பது 'நாக்கு, பல், அண்ணம், மூக்கு, தொண்டை, நெஞ்சு என்ற ஆறு உறுப்புக்கள் சேர்ந்து ஒலிக்கும் ஓசை' என்றும் அது குறிக்கிறது. "இப்படி ஆறு உறுப்புக்கள் சேராமலா மற்ற சுரங்களை ஒலிக்கிறோம்?" என்ற கேள்வியும் அதைப் படிக்கும் நமக்குச் சட்டென்று எழுகிறது.

ஷட்ஜத்தின் ஒலி மயில் அகவலையும், ரிஷபத்தின் ஒலி காளைக் கத்தலையும், காந்தார ஒலி ஆட்டுக் கனைப்பையும், மத்யம ஒலி பெருங் கோட்டான், கொக்கு, நாரை போன்றவற்றின் ஒலியையும், பஞ்சம ஒலி குயிற் கூவுலையும், தைவத ஒலி குதிரைக் கனைப்பையும், நிஷாத ஒலி யானைப் பிளிறலையும் உணர்த்துவதாக மோனியர் வில்லிம்சு சொல்லுகிறது. வெவ்வேறு ஆசிரியர்கள் இது போன்று வெவ்வேறு உயிரினங்களின் ஒலிகளை இந்தச் சுரவொலிகளுக்கு ஈடாகச் சொல்லுவதுண்டு. அவற்றையெல்லாம் படிக்கும் போது தெளிவு கிடைப்பதற்கு மாறாய் நமக்குக் குழப்பமே மிஞ்சும். அதோடு மோனியர் வில்லியம்சு சொல்லுவது போலச் சுரக் குறியீடுகளும் முதலெழுத்தைக் குறிப்பதாய் இருந்தால், ஷ, ரி, ga, ம, ப, தை, நி என்றல்லவோ இருந்திருக்க வேண்டும்? மாறாக, ச, ரி, க, ம, ப, த, நி என்றல்லவா நடைமுறையில் சொல்லப்படுகின்றன? (தைவதத்தை தய்வதம் என்று எழுதித் தகரக் குறியீடு எழுந்ததாகச் சொல்வதும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.) சுரங்களின் நடைமுறைக்கும் மோனியர் வில்லிம்சு விளக்கத்திற்கும் இடையே நெருடலும், தான்தோன்றித்தனமும் புலப்படுகின்றன.

இனி 'ஆறு சுரங்கள் பிறக்க ஏதுவானது சட்ஜம்' எனும் விளக்கத்தையும் அலசிப் பார்ப்போம். இராம காதை நாயகனுக்கு, தசரதன் மகன் என்ற கருத்தில், தாசரதி என்றொரு பெயர் உண்டு. இதே போல மா பாரதத்தில் பீஷ்மருக்கு கங்கைமகன் என்ற பொருளில் காங்கேயன் என்பார்கள். இப்படிப் பெற்றோர், தாத்தன்/பாட்டி வழியிற் பிள்ளைகளுக்குப் பெயரிடுவது உலக வழக்கம் தான். இந்த வழக்கத்திற்கு மாறாய் 'நாலு மக்களைப் பெற ஏதுவாக அமைந்தவன்' என்று தசரதனுக்குச் சதுர என்று பெயரிடுவார்களோ? அதே போல, பீஷ்மனைப் பெற்றவள் என்ற பொருளில் பீஷ்மை என்று கங்கைக்கு பெயரிடுவார்களோ? அப்புறம் எப்படி 'ஆறு சுரங்கள் பிறக்க ஏதுவாக அமைந்தது சட்ஜம்' என்று சொல்லுகிறார்கள்? மொத்தத்தில் சரியான பெயர்க்காரணம் அறியாமல், தான்தோன்றி விளக்கமாய் இருக்கிறதல்லவா?

இதில் வேடிக்கை என்னவென்றால், இது போன்ற தான்தோன்றி விளக்கங்கள், காலங் காலமாய்ச் சொல்லப் பட்டு, அவையே நிலைத்து, மற்ற உருப்படியான விளக்கங்கள் மறைந்து போவதும் உலகில் உண்டு. காட்டாக, மரைக்காடு என்று ஊரின் பெயரை, சோழர் கழிக்கானப் (backwaters) பகுதியில் (அலையாத்திக் காடுகள் இருக்கும் பகுதி) யாரோ ஒருவர் தவறான எழுத்துக் கோவையில் மறைக்காடு என்று எழுதப் போக, அதை அப்படியே வேதாரண்யம் என்று மொழி பெயர்த்து, அந்தப் பெயரும் நிலைபேறு கொண்டு, சமயக் குரவர்களின் பாட்டுகளிலும் கூட ஆவணமாகி இருக்கிறது. "வேதங்கள் வந்து பூசித்த காரணத்தால் வேதாரண்யேஸ்வரர்" என்றெல்லாம் கதைகட்டுவதும் நாம் அறியாததல்ல.

மேலே கூறிய சுரங்களின் சங்கதப் பெயர்கள், நமக்கு இதுவரை கிடைத்த சான்றுகளின் படி, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திர பல்லவனின் குடுமியான்மலைக் கல்வெட்டில் தான் முதன்முதலில் ஆவணப் பட்டன. கல்வெட்டுத் தவிர்த்து இதே கருத்தை, நமக்குக் கிடைத்த நூல்களில், 7- ஆம் நூற்றாண்டு நிகண்டான சேந்தன் திவாகரம் (இதை 8 ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவாரும் உண்டு),

சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை
ஏழும் அவற்றின் எழுத்தே யாகும்

எனப் பதிவு செய்யும். வடமொழி நூலான 'நாரத பரிவ்ராஜக உபநிடதம்' என்ற நூலில் (இது எந்த நூற்றாண்டுப் பொத்தகம் என்று எனக்குத் தெரியவில்லை) முதன்முதலாக ச,ரி, க, ம, ப, த, நி என்ற சுரக்குறியீடுகள் குறிக்கப் பட்டதாக, 'சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள்' என்ற பொத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. (டாக்டர் சேலம் எஸ் செயலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 2000 பக்கம் 288).

மேலும், 11 ஆம் நூற்றாண்டில் சிலம்பிற்கு எழுந்த அடியார்க்கு நல்லார் உரையில்,

சரிகம பதநிஎன்(று) ஏழெழுத்தால் தானம்
வரிபார்த்த கண்ணினாய் வைத்து - தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை

என்ற வெண்பா (இது பஞ்ச மரபின் வங்கிய மரபு, குழலியல் வந்த முதல் வெண்பா) எடுத்துக் காட்டப் பட்டிருக்கும். இந்தச் சொல்லாட்சியைக் குடுமியான் மலைக் கல்வெட்டோடு பொருத்திப் பார்த்தால், பஞ்ச மரபு என்ற நூல் பெரும்பாலும் பல்லவர் காலத்தில் இருந்த ஒரு பாண்டிய மன்னனை முன்னிறுத்தியே எழுந்திருக்க வாய்ப்புண்டு. (இந்தக் காலக் குறிப்பிலும் சில இசையறிஞர்கள் மாறுபடுவார்கள்.)

இதற்கு மாறாய், சிலம்பின் மதுரைக் காண்டம் ஆய்ச்சியர் குரவையில் சங்கதப் பெயர்களை முன்னிறுத்தாது செந்தமிழ்ப் பெயர்களே இருக்கும். காட்டாக, ஆய்ச்சியர் குரவையில் ஏழு கன்னியரைக் குரவையில் நிறுத்தி அவருக்கு ஏழிசைப் பெயர்கள் இட்டுச் சொல்லும் இடத்தில், எடுத்துக் காட்டு என்னும் தலைப்பின் கீழ்,

குடமுதல் இடமுறையாக் குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே

என்ற வரிகளில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஏழு சுரங்களின் தமிழ்ப்பெயர் தரப்படும். இதே பெயரைப் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டும் (இதை 9 ஆம் நூற்றாண்டு என்பாரும் உண்டு),

குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை
ஏழும் யாழின் இசைகெழு நரம்பே

என்று வரிசைப் படுத்தும். இதே சுரங்களுக்கு சரிகமபதநி என்று சொல்லாமல்,

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ வெனும்
இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய

என்று திவாகர நூற்பா பழைய குறியீடுகளைச் சுட்டிக் காட்டும். ஆகச் சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் பெயர்களும், அவற்றிற்கான குறியீடுகளும் பல்லவர் காலத்தில் முற்றிலும் மாறிப் போய்விட்டன என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, March 06, 2008

சுழற்சி மீப்பேறு

அண்மையில் cyclical repair என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தமிழுலகம் மடற்குழுவில் திரு. Jai Simman R. Rangasamy என்பவர் கேட்டிருந்தார். அதற்கு அளித்த மறுமொழி:

பொதுவாக repair என்பதைத் தமிழில் நேரடியாகச் சொல்லாமல், சுற்றிவளைத்துப் பழுது பார்த்தல் என்றே சொல்லுகிறார்கள். பழுது பார்த்தல் என்பது to rectify faults என்பதற்கே சரியாக வரும். பெரும்பாலான இடங்களில், repair என்பது to rectify faults என்ற பொருள் தான் கொள்ளும் என்றாலும், நாம் சுற்றி வளைத்துச் சொல்லுவதை உணர முடியும். இன்னொரு வகையில், to maintain என்பதைப் பேணுதல் என்றே சொல்லுகிறோம். (பராமரிப்பு என்ற இருபிறப்பிச் சொல்லையும் maintenance க்கு இணையாகச் சிலர் சொல்லுவார்கள். அதுபற்றிக் கீழே பார்ப்போம்.) ஏனென்றால், பழுது வராமலேயே, ஒரு கருவி அல்லது பொருளைப் பேணமுடியும். அப்படிச் செய்வதுதான், நுட்பியல் வரிதியில், நல்ல பேணுகை (maintenance) என்று சொல்லுவார்கள்.

அப்படியானால், repair என்பதற்கு ஈடாகத் தமிழில் நேரடியாக எப்படிச் சொல்லுவது? அதற்கு முன் repair உடன் தொடர்புடைய pare, parent, prepare போன்ற சொற்களின் பிறப்பையும் பார்த்துக் கொள்ளுவோம்.

முதலில் வருவது:

pare:
"to trim by cutting close," c.1320, from O.Fr. parer "arrange, prepare, trim," from L. parare "make ready," related to parere "produce, bring forth, give birth to," from PIE base *per- "to bring forward, bring forth" (cf. Lith. pariu "to brood," Gk. poris "calf, bull," O.H.G. farro, Ger. Farre "bullock," O.E. fearr "bull," Skt. prthukah "child, calf, young of an animal," Czech spratek "brat, urchin, premature calf"). Generalized meaning "to reduce something little by little" is from 1530.

மேலே குறிப்பிட்டிருப்பதில் PIE base *per- "to bring forward, bring forth" என்பதுதான் முகன்மையானது. தமிழில் பெறுதல்/பெறல் என்பது தன் வினையில் to obtain என்ற பொருள் கொள்ளும். அதே சொல் பிற வினையில் பெற்றுதல்/பெற்றல் என உருவங் கொண்டு to cause to obtain = to bring forward, bring forth என்ற பொருளை உணர்த்திக் காட்டும். பெற்றலின் பெயர்ச்சொல்லாய் எழும் பெற்றோன்/பெற்றோர் என்ற சொற்களை நாம் அனைவரும் அறிவோம். மேலைமொழிகளிலும் *per என்னும் PIE வேரே பெற்றோருக்கு இணையான சொல்லை ஏற்படுத்தும்.

parent:
1185, from O.Fr. parent (11c.), from L. parentem (nom. parens) "father or mother, ancestor," noun use of prp. of parere "bring forth, give birth to, produce," from PIE base *per- "to bring forth" (see pare). Began to replace native elder after c.1500. The verb is attested from 1663. The verbal noun parenting is first recorded 1959 (earlier term had been parentcraft, 1930).

தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் எப்பொழுதோ ஒரு காலத்தில் உறவு இருந்திருக்க வேண்டும் என்று நான் சொல்லுவதைப் பலரும் அவ நம்பிக்கையோடே பார்க்கின்றனர். ஆனாலும் என்கடன் பணி செய்து கிடப்பதே. ஆயிரத்திற்கும் மேல் பல இணைச் சொற்களைக் காட்டி வருகிறேன்; இன்னும் காட்டுவேன். (மேலே காட்டிய fault = பழுது என்பது கூட இன்னொரு இணை தான். இது போல வேரில் பழுத்துத் தொங்கும் பலாச்சுளைகள் பல; பலாவைப் பறிக்கத்தான் ஆளில்லை. அந்த அளவிற்கு வடமொழித் தாக்கம் காட்டும் மாக்சு முல்லரின் கருதுகோள் பலரையும் அலைக்கழிக்கிறது. வடமொழியா, இந்தையிரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது; தமிழிய மொழிகளா? ஊகூம்...... எவன் சொன்னான்?) நான் அறிந்தவரை, உறுதியாக *per>pare>parent என்பதற்கு இணையாகப் பெறு>பெற்று>பெற்றோர் என்ற தமிழ்ச் சொற்பிறப்பைச் சொல்ல முடியும்.

இந்த வரிசையில் அடுத்த சொல் prepare/preparation என்பதாகும்.

1390, "act of preparing," from L. praeparationem (nom. praeparatio) "a making ready," from praeparatus, pp. of praeparare "prepare," from prae- "before" + parare "make ready" (see pare). Meaning "a substance especially prepared" is from 1646. Verb prepare is attested from 1466, from M.Fr. preparer, from L. praeparare; slang shortening prep is from 1927. Preparatory is first recorded 1413, from L.L. praeparatorius, from L. praeparatus. Applied from 1822 to junior schools in which pupils are "prepared" for a higher school.

prae என்ற முன்னொட்டுக்கு இணை, அப்படியே புற என்ற தமிழ் முன்னொட்டோ டு பொருந்திவரும். நமக்கு முன்னால் இருப்பது புறத்தில் இருப்பதே. வீட்டிற்குப் புறத்தில் இருக்கும் பொருளைப் பேசும் நானூறு புற நானூறு. வீட்டிற்கு அகத்தில் (=உள்ளே) இருக்கும் பொருளைப் பேசும் நானூறு அக நானூறு.

இந்த நிலையில், புறப்பெற்றம் = preparation என்று சொல்லுதற்கு ஏதோ நாணிக் கொண்டு, "என்ன இது இராம.கி வெறுமே ட்ரான்ஸ்லிட்டெரேட் பண்ணி சொல்லைப் பரிந்துரைக்கிறார்?" என்று கேலியும் பேசிக் கொண்டு, தய்யார் செய்தல் என்று உருதுச் சொல்லைப் புழங்க முன்வருவோம். இந்த தேவையற்ற நாணத்தை மட்டும் தூக்கி எறிந்தால், தமிழின் அடிப்படை புலப்படும். (வடமொழி என்ற திரையும் நம்மிடமிருந்து விலகும்.) தமிழில் புழங்க ஒரு நல்ல சொல்லும் கிட்டும். (அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை.)

இனி அடுத்தது repair. இங்கே எழுத்துக் கூட்டு மாறினாலும், உள்ளே re-pare என்பது இனங் காட்டி நிற்கிறது.

"to mend, to put back in order," 1387, from O.Fr. reparer, from L. reparare "restore, put back in order," from re- "again" + parare "make ready, prepare" (see pare). The noun is attested from 1595.

மீள் பெற்றல் என்பது வினைச்சொல்லாகவும், மீள் பேறு>மீட்பேறு>மீப்பேறு என்பது பெயர்ச்சொல்லாகவும் அமையும்.

என் பரிந்துரையை முடிக்குமுன், பெற்றலின் தொடர்புடைய இன்னொரு வினையையும் கூறுகிறேன்.

பாரித்தல் = ஆயுத்தப் படுத்தல், to prepare "பாயியவெழுந்த வேங்கை பாரிக்கும் அளவில்" (சூளாமணி. துற.19)
பாரித்தல் = வளர்த்தல்; to foster. "பண்பின்மை பாரிக்கும் நோய்" (குறள்851)
பாரித்தல் = அமைத்துக் கொடுத்தல், to cause to be obtained, "பரமபதம் பாகவதர் அனைவருக்கும் பாரித்தானால்" (அரிசமய. பத்திசா.98)
பாரித்தல் = உண்டாக்குதல் to make, form, construct, create (வின்சுலோ அகராதி)

பராவரித்தல்>பராமரித்தல்>பராமரிப்பு என்ற இருபிறப்பிச் சொல் இந்தப் பாரித்தலின் வழியாகப் பிறந்தது தான். பராமரிப்பு என்பதன் இருபிறப்பியைத் தவிர்த்து, பாரிப்பு என்றே நல்ல தமிழில் சொல்லலாம். இந்தச் சொற்களின் அடிப்படையில் "மீண்டும் ஆயுத்தப் படுத்தலை, மீண்டும் அமைத்துக் கொடுத்தலை, மீண்டும் உண்டாக்குதலை, மீண்டும் வளர்த்தலை", மீள் பாரித்தல் என்று சொன்னாலும் தவறே இல்லை.

எனவே cyclical repair என்பதற்குச் சுழற்சி மீப்பேறு அல்லது சுழற்சி மீள்பாரிப்பு என்று எதை வேண்டுமானாலும் பயனாக்கலாம். தமிங்கிலமே கதியென்று இருப்பதால் சொல்லத் தயங்குபவர்கள், சுழற்சி ரிப்பேர் என்று பேஷிக் கொள்ளலாம். (:-))

அன்புடன்,
இராம.கி.